Search This Blog

26.10.15

இல்லாமைக்குக் காரணம் ஜாதி இழிவுதானே!-பெரியார்

இல்லாமைக்குக் காரணம் ஜாதி இழிவுதானே!

நாட்டில் நீண்ட காலமாக இருந்துவருகிற பழைமை, தெய்வீகம் என்பவைகள் நம் மக்களை அடிமைப்படுத்திவிட்டன. எந்தச் சங்கதியும் சாஸ்திர சம்பந்தமானது என்றால் தடை சொல்லக்கூடாது என்கின்ற தன்மையிலே மக்கள் ஆக்கப்பட்டுவிட்டார்கள். அந்த நிலை இப்போது சிறிதுசிறிதாக மாறிக்கொண்டு வருகிறது. இந்த நாட்டில் திராவிடர் கழகத்தின் எதிரிகளைக் கண்டு கூட, நீங்கள் சூத்திரனா? தேவடியாள் மகனா? என்றால் ஒத்துக் கொள்ள மாட்டான். எதற்காகச் சொல்லுகிறேன் என்றால் மக்களுடைய உணர்ச்சியிலே ஒரு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த சாஸ்திரப்படி வைக்கப்பட்டுள்ள நிலைமையைச் சொன்னால் ரோஷப்படும்படியான ஒரு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நம்மை அந்தப்படி கீழ்ஜாதியாக, சூத்திரனாக மதிக்கின்ற சாஸ்திரம், மதம், என்பவைகளை நாம் குறை கூறினால் அதற்கு மட்டும் கோபிக்கும்படியான நிலையில் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். அப்படி இருப்பதால்தான் நாம் கீழ்ஜாதி மக்களாக, பஞ்சமர்களாக இருந்து வருகிறோம். நம்மைக் கீழ்ஜாதி என்று குறிப்பிடுகிறார்களே! என்ன ஆதாரம். அடையாளம் நம்மைக் குறிப்பிடுவதற்கு இருக்கிறது? பள்ளிக்கூடத்தில் 1-ஆவது படித்தால் அதற்குண்டான திறமை இருக்கும். எஸ்.எஸ்.எல்.சி (S.S.L.C) படித்தால் அதற்குண்டான Certificate (சான்றிதழ்) இருக்கும். அதைப் போல சூத்திரன் என்பதற்கு என்ன அடையாளம் இருக்கிறது? ஆதாரமே இல்லாத காரியம் ஆயிரக்கணக்கான வருஷமாக இருக்கிறதென்றால் நம் அறியாமைதானே காரணம்?


கடவுளே அந்தப்படி சொல்லிவிட்டது. நீ சூத்திரன் தானென்றால் அதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டுமா? சாஸ்திரம் சொல்லுகிறது நீ சூத்திரன் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமா? சாஸ்திரம் சொல்கிறதென்றால் அந்த சாஸ்திரப்படி எவன் நடக்கிறான்? கடவுள் அந்தப்படி நம்மை ஆக்கி வைத்துள்ளது என்றால் கடவுள் கோட்பாடு என்று சொல்லப்படுபவைகளின்படி எவன் நடக்கிறான்? எத்தனையோ அயோக்கியத்தனம் கடவுள் எதிரிலேயே நடைபெறுகின்றனவே! கடவுள் சேலையை, அதுவும் பெண் கடவுள் சேலையை அவிழ்ப்பது என்றால் எந்த நியாயத்தின்படி சரியாகும்? அல்லது எந்தக் கடவுள் தன்மைக்கு ஒப்புக் கொள்ளக் கூடியது ஆகும்? சூத்திரன் என்று நம்மைப் பார்ப்பான் சொல்லுகிறபோது ரோஷப்படுவதில்லை; ஆனால் அதே அர்த்தங்கொண்ட, நீ அவனுக்குப் பிறந்தவன், இவனுக்குப் பிறந்தவன் இவனுக்குப் பிறந்தவன் என்றால் ரோஷம் வருவதென்றால் இதற்கெல்லாம் காரணம் நாம் பகுத்தறிவைக் கொண்டு சிந்திப்பது கிடையாது என்பதுதானே ஆகும்!


இந்த ஒரு நாட்டைத் தவிர உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் 3000  வருடமாக சூத்திரன் என்று ஒரு வகுப்பான் இழிவுப் படுத்தப்பட்டது கிடையாது. இந்த நாட்டில் தான் பார்ப்பான், சூத்திரன் என்ற வித்தியாசம் இருக்கிறது. ரஷ்யாவிலோ, சீனாவிலோ ஒரே ஜாதிதான். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஏன்? நீக்ரோக்களிலும் கூட இன்னும் மனிதனையே வெட்டித்தின்னும் காட்டுமிராண்டிக் கும்பலில் கூட பார்ப்பான், பறையன் என்ற வித்தியாசம் இருக்கிறதா? இல்லையே! மகாவிஞ்ஞானிகள், ரேடியோ, சினிமா, டெலிவிஷன் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர் நாட்டிலும் இந்த வித்தியாசம் கிடையாது. காட்டுமிராண்டிகள் வசிக்கும் இடத்திலும் கிடையாது. இங்குதான் இருக்கிறது. அவன் நம்மை எப்படி ஏமாற்றுவது என்று சிந்தித்து அந்தப்படி நம்மை ஏமாற்றுகிறான். ஆனால் கீழ்நிலையில் இருக்கிறவர்கள் தங்கள் அறிவை உபயோகித்து முன்னடையவில்லை என்றால் என்ன அர்த்தம்?

தோழர்களே! நீங்கள் நன்றாக உணரவேண்டும். எதற்காக இவைகளையெல்லாம் சொல்லுகிறேன் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் நமக்குத்தான். பார்ப்பான் எவனுக்காவது இந்தப்படி கஷ்டமுண்டா? ஏன் அப்படிப்பட்ட நிலைமை இருக்கிறது? ஒரு நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி யென்றால் எல்லோருக்கும் இருக்க வேண்டாமா? இது என்ன நியாயம்? கஞ்சித்தொட்டி வைத்திருக்கிறார்கள் என்றால் அய்யர், சாஸ்திரியா அங்கேபோய்க் கஞ்சி குடிக்கிறார்கள்! இல்லையே! நம் மக்கள்தான் எந்தப் பார்ப்பானாவது பார்ப்பனத்தியாவது கஞ்சித் தொட்டியில் க்யூ வரிசையில் நிற்கிறார்களா? ஏன் அவன் குடிக்கவில்லை? அவன் மேல் ஜாதி. வீதியிலே பட்டினிப் பட்டாளம் போகிறது. அதில் எத்தனை பார்ப்பான் - பார்ப்பனத்தி? பட்டினிக் கொடுமையால் 5, 6-குழந்தைகளைக் கிணற்றில் தள்ளித் தாங்களும் குதித்து மாள்கிறார்கள் என்று பத்திரிகையில் அடிக்கடி பார்க்கிறோமே? இதில் எத்தனை பார்ப்பான் வேலையில்லாத் திண்டாட்டத்தில் கஷ்டப்படுகிறான்? நம் பிள்ளைகள்தான் பதறுகின்றன. பார்ப்பானில் வேலை செய்ய ஆளில்லாமல் நொண்டி, நுடம், கிழடுகளைக் கூட வலிந்து வேலையில் அமர்த்துகிறார்கள். பார்ப்பானில் வேலை செய்ய வேறு ஆள் சிக்கவில்லை; ஏன் இந்த நிலைமை; மேல் ஜாதியாயிருப்பதால் அவனுக்கு அந்த வசதியும் கீழ்ஜாதியாயிருப்பதால்; நமக்கு இந்த இழிவும்.

கம்யூனிஸ்டுகள் பேசுவார்கள், இவர் சாஸ்திரம், மதம், புராணம் பற்றியே பேசுகிறார். பட்டினி, பஞ்சம், கஞ்சிக்கில்லை என்பது பற்றி கவலைப்படுவதில்லையென்று. தோழர்களே! நீங்கள் உணரவேண்டும். யாருக்குக் கஞ்சிக்கில்லை? நமக்கு வழியில்லை? எந்தப் பார்ப்பானாவது நெய்யில்லாமல் சாப்பிடுவானா? 'பார்ப்பான் நெய் ஊத்தாது சோறு தின்னால் தோஷம்' என்று எழுதியிருக்கிறான். யாருக்குத் துணியில்லை? நமக்கு 4, 5- முழம் அதுக்கும் வழியில்லை. பார்ப்பானோ 10, 6-இடுப்புக்குப் பத்து, மேலுக்கு ஆறு, மூணு பேருக்கு ஆகும். பார்ப்பனத்திக்கோ 16-முழம். இன்னும் கொஞ்சம் வாட்ட சாட்டமாயிருந்தால் 18-முழம். பாடுபடுகிறவனுக்கு உணவில்லை. இடுப்பார, மானமார துணியில்லை. இவனுக்கு இதெல்லாம் எப்படி முடிந்தது? நமது முட்டாள்தனத்தினால்தானே? இதைப் பற்றி ஒருத்தனும் பேசுவதில்லை. நாம் இதைப்பற்றிச் சொன்னாலே வகுப்புவாதம் என்கிறான். பிற்போக்கு சக்தி, குறுகிய நோக்கம் என்கின்றான். இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாப்பாட்டுக்கில்லை என்று கூப்பாடு போடுவதென்றால் எவனுக்கில்லை? எத்தனை பேர் அஜீர்ணத்துடன் அவஸ்த்தைப்படுகிறான்? அதைக் கவனிக்க ஆளில்லையே! கண்டிப்பாக வேலையில்லாத் திண்டாட்டம், அது இது என்று பேசுபவன் நெ.1 (ஒன்றாம் எண்) அயோக்கியன். அல்லது முட்டாளாயிருக்க வேண்டும்.

ஏனிப்படிச் சொல்லுகிறேனென்றால் உள்ளது இரண்டு ஜாதி. பார்ப்பான் ஜாதி; சூத்திர ஜாதி என்பதுதான். நாயக்கர், நாயுடு, செட்டியார் என்றால் அவையெல்லாம் ஒன்றுதான்; யார் பட்டினி கிடக்கிறார்கள்? யாருக்கு வேலையில்லை? இவர்களெல்லாரும் ஒரு ஜாதி. அதாவது சூத்திரஜாதி. மற்றவனெல்லாம் நெய் பருப்போடு சாப்பிடுகிறவனெல்லாம் பார்ப்பன ஜாதி. இவன் பாடுபட்டும் பிச்சையெடுக்கிறான்! அவன் பாடுபடாமல் உண்டு கொழுக்கிறான்! என்ன அநியாயம்? கேட்டால் நீ போன ஜென்மத்தில் செய்தவினை; அவனவன் தலைவிதி என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறான்.

மற்ற நாடுகளிலும் உள்ளபடியே பட்டினி, பஞ்சமுடையவர் உண்டு. ஆனால் மற்ற நாட்டிலெல்லாம் இங்குள்ள மாதிரி ஒரு ஜாதியில் மட்டும் பட்டினி, பஞ்சமுடையோர் இருக்க மாட்டார்கள். இங்கு மட்டும் ஏன் இந்த நிலை? கம்யூனிஸ்டுகளைப் போல் வாய்ப் பேச்சில் மட்டும் இதை ஒழித்து விட முடியாது. ஏன் முடியாதென்றால் ஏழையும், பிச்சைக்காரனும் இன்றா இருக்கின்றார்கள்? மனித சமுதாயம் என்று தோன்றிற்றோ அன்று முதல் உடையவன் இல்லாதவன் இருக்கின்றான். சத்திரம் - சாவடி எப்போது வந்தது? உலகம் தோன்றிய காலம் முதல் உழைக்கிறவன், கொழுக்கிறவன் என்ற நிலை இருந்து கொண்டு தான் வந்திருக்கிறது. இன்றைக்கு மட்டுமல்ல. எப்படி இந்த முறை ஒழியும் என்றால், இந்தப் பேதத்துக்கான அடிப்படை என்ன என்று ஆராய்ந்து, அதற்குக் காரணம் கண்டு பிடித்து, அம்முறையில் முயற்சி செய்தால்தான் இந்த நிலை ஒழியும், நமக்குக் காரணம் தெரியும். இந்த இழிந்த நிலையெல்லாம் கீழ்ஜாதி காரணமாக ஏற்படுகிறது. இதுதான் அடிப்படையாகும். மேல்ஜாதி காரணமாக அவனுக்கு இதெல்லாம் இருப்பதில்லை. இதற்குப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்தால்தான் விளங்கும். பகுத்தறிவு தேவையில்லையென்று கம்யூனிஸ்டு தோழர்கள் கூறுகிறார்கள். 100, 200-வருடங்களுக்கு முன்பே நாம் ஆராய்ந்து பார்த்திருந்தால் இன்றைய தினம் அநேக சங்கதிகள் மாறிவிட்டிருக்கும். ஏன்? இன்றுகூட முயற்சியெடுத்துக் கொண்டால் ஒரு 10- வருஷத்திற்குள் மாறுதல் ஏற்படும். அதனால்தான் நான் கூறிக்கொண்டு வருகிறேன். ஜாதி ஒழிந்தால்தான் கொஞ்ச நஞ்சமாவது கஷ்டங்கள் ஒழியும் என்று. அதற்குப் பார்ப்பான் ஒழியவேண்டும் அவனுக்குள்ள சாதனங்கள் ஒழிய வேண்டும்.

வேண்டுமானால் நான் இப்படிச் சொல்லுவது இன்றைத் தினம் உள்ள சட்டத்திற்கு விரோதமான காரியமாக இருக்கலாம். சட்ட விரோதந்தான்; அந்தச் சட்டம் நமக்கு விரோதம் தான்; அந்தச் சாஸ்திரம் நமக்கு விரோதமாக இருந்தால்? மனிதவிரோதம் தான்; சாஸ்திர விரோதந்தான். அந்த மதம் நமக்கு விரோதமாக இருந்தால்? எனவே நிலைமைகளைக் கவனிக்கிற போது அவைகளை ஒழித்தாக வேண்டும்; மனுஷனுக்கு நோய் வருவது இயற்கைதான்; அந்தத் துன்பத்தை ஏற்றுக் கொள்ளுவது போல் இந்தப் பிரச்சினையில் என்ன கஷ்டம் ஏற்பட்டாலும் துணிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னொருவன் வாழ்வு ஒழிய வேண்டுமென்பதல்ல நமது எண்ணம். நம்முடைய வாழ்வுக்கு இடையூராக இருப்பவைகளை ஒழித்துக் கட்ட ஏன் தயங்க வேண்டும்?

----------------------------- செங்கற்பட்டு மாவட்டத்தில் காஞ்சியில் மத்திய திராவிடர் கழக முதலாம் ஆண்டு விழா 28.02.1954- தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை", 06.03.1954

0 comments: