Search This Blog

1.10.15

காந்தி பார்ப்பானுக்கு மகான்! எனக்கு அவர் சாதாரண மனிதன்!-பெரியார்

முப்பெரும் கேடுகள்!


இப்போது உள்ளபடி நானும், நீங்களும் கீழ்ஜாதி. இந்த இழிநிலை நீங்க, கிளர்ச்சி நடந்து தீரவேண்டும். ஆகவே இப்போது எனக்கு அளித்த வரவேற்பு எல்லாம் நாம் எல்லோரும் மீண்டும் சிறை செல்ல வழியனுப்பு உபசாரமே என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது! சிறை மீண்ட பெரும்பாலான நம் தோழர்களும், மீண்டும் சிறை ஏறத் தயார்! போராட்டத்துக்குத் தேதி கொடுங்கள்! என்று சொல்கிறார்கள்.

சிறை சென்றவர்களில் சில பேர் செத்தனர், இவர்களெல்லாரும் சாகாதிருந்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கா இருக்கப்போகிறார்கள்? நோயால் தூக்குப் போட்டுக் கொண்டா செத்தோம்? இல்லை! பின் எதற்காக? இலட்சியத்திற்காகச் செத்தனர். எனக்கும் உங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும். எந்த நேரத்திலேயோ சாகும் நாம் இந்த உயர்வான இலட்சியத்துக்காகச் சாவோமே! செத்தவர்களைக் கண்டு நாம் வெட்கப்பட வேண்டும். நாமும் இலட்சியச் சாவு பெறத் துணிய வேண்டும்.

நமது இயக்கப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிப் படிக்க வேண்டும். காரணம் விளங்கினால்தான் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்!

தோழர்களே! இந்த நாட்டிலே மனித சமுதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்! மக்கள் நன்மை தீமை உணர இவற்றை ஒழித்தாக வேண்டும்.

முதலாவதாக மேல்ஜாதி.... கீழ்ஜாதி; ஒருவன் பார்ப்பான், கடவுளுக்குச் சமமானவன்! அவன் சாமி! பிராமணன் என அழைக்கப்பட வேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந்தவர்கள்.

மனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில்லையே!

மேல்ஜாதி என்பது பாடுடாத சோம்பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ்ஜாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் ஜாதி. பாடுபட்டதைச் சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது.

இரண்டாவதாகப் பணக்காரன், ஏழை. இது எதற்காக? பணக்காரன் - ஊரார் உழைப்பை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளையடிப்பவன்! ஏழை பாடுபட்டுப் பணக்காரனிடம் கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுபவன்; ஏன் இப்படி? அவசியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்ன பாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?

மூன்றாவதாக - ஆண் எஜமானன்! பெண் அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணியானாலும் சரி பெண் அடிமைதான்! சில நிர்பந்தம், அடக்குமுறை ஆண்களுக்குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங்களில் கூட இருக்கலாம். அவைகளுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண் எசமான்; பெண் அடிமை; இந்த வேறுபாடு தேவையில்லாதது. அக்கிரமமானதுங்கூட; பொருத்தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.

இங்கு மூன்று பேர் மேல் ஜாதி; 97-பேர் கீழ்ச்ஜாதி! அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97-பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மையினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள்.

காரணம் 1-கடவுள்; 2-மதம் - சாஸ்திரம்; 3-அரசாங்கம்.

கடவுள் பெயரால் ஏன் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றால் மதம் சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழியவேண்டுமா? வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும் வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல்லாம் நினைக்கிறார்கள் திராவிடர் கழகத்தைத் தவிர?

திராவிடர் கழகம் என்றால் கடவுள் இல்லை, மதத்தை எதிர்க்கிறது, நேரு அரசாங்கம் ஒழிய வேண்டுமென்பது தானா? என்கின்றனர்.

பாடுபடாத சோம்பேறிக் கொள்ளைக்காரன்களுக்கு அனுமதி அளிக்க இந்த மேல் சாதி பாதுகாப்பென்றால் ஏன் இவற்றை ஒழிக்கக் கூடாது? சூழ்ச்சி சுயநலக்காரன் வாழவே இந்த ஆட்சி; இதை ஒழிக்கப் பாடுபடாவிட்டால் நமக்கும், மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்? இவற்றை ஒழிக்க நாம் மனிதத் தன்மையை அடைய முடியாதபடி செய்ய, இம்மூன்று தன்மைகளும் மக்களை ஏமாற்றி துப்பாக்கி, இராணுவம் பேரால் மிரட்டுகின்றன.

இதற்குக் கிளர்ச்சி என்பது சாதாரணமானது; போதாது. இரத்த ஆறு ஓட வேண்டும் நேர்மையை நிலைநாட்டச் செய்ய வேண்டும். இந்த மாதிரியான நிலை ஏன் ஏற்பட்டதென்றால் நமக்குக் கோழைத்தனம் அறிவில்லாத தன்மையால் ஏற்பட்ட குறைகள்! பின் எதற்காக இம்மாதிரி வேறுபாடுகள் இருக்க வேண்டும்? மத - சம்பிரதாயங்களால்தான் இந்த வேற்றுமைகள் ஏற்படுகின்றன. இவை ஒழிய, ஆணும், பெண்ணும் பாடுபட வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் இக்காரியத்தில் இறங்க வேண்டும்.

உலகத்தில் 30-கோடி மக்களைக் கொண்ட ரஷ்யா, 65-கோடி மக்கள் உள்ள சைனாவில் கடவுள், மதமில்லை! சாஸ்திர சம்பிரதாயமில்லை! ஆண், பெண் பேதமில்லை! உத்தியோகத்தில், பட்டாளத்தில், போலீசில் இரு பிரிவினரும் சமம். அங்கு ஆண்கள் செய்யும் வேலையைப் பெண்கள் பார்க்கிறார்கள். அங்கெல்லாம் எப்படி இந்த நிலைமை வந்தது?

இராஜாவைப், பாதிரியை வெட்டி வீழ்த்தினார்கள்; கோயில்களை இடித்துத் தள்ளினார்கள்! எனவே அங்கு ஆண் எசமானுமில்லை. பெண் அடிமையுமில்லை.

இந்த நிலையிலே ஒன்று நீயா! அல்லது நானா! என்பதுதான் நமது முடிவாக இருக்க வேண்டும். இந்த இழிநிலையை நீக்க எல்லோருமே தான் சாவோமே! என்ன முழுகி விட்டது? கடவுள் அப்படிச் சொன்னார்! சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது? என்றெல்லாம் மனிதன் பயங்காளிப் பழக்க வழக்கத்தில் ஊறிப்போய்விட்டான்.

இம்மாதிரி முயற்சி, நமது கிளர்ச்சி ஜாதி ஒழியவேண்டுமென்பது. இதற்கு எவ்வளவு தூரம் போக வேண்டும்? முதலாவது ஜாதியைப் பாதுகாக்கும் கடவுளை ஒழிக்க வேண்டும்.

நாம் ஏன் 4-வது 5-வது ஜாதி? ஏன் பறையனென்றால் கடவுளையும், மதத்தையும் நம்புகிறான். இதை நம்புவனெல்லாம் ஜாதியில் பறையன், எனவே நாம் ஜாதியையும், கடவுளையும் ஒழிக்க வேண்டும். "நீ என்ன மதம்" என்று கேட்டால், "நான் அறிவு மதமென்று" சொல்ல வேண்டும். "கடவுள் இல்லை, சாஸ்திரமில்லை" என்று சொல்ல வேண்டும்; கடப்பாறையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடித்தால் போதுமா? ஏன் என்று கேட்க வேண்டாமா? மதம், கடவுள் இப்படி! இதைப் பாதுகாக்க இப்படி அரசாங்கம் ஒன்று இருக்கிறதென்றால் இதை ஒழிக்க வேண்டாமா?

காந்தி இவற்றையெல்லாம் நினைத்திருப்பாரா? இல்லையே, இதனால்தான் காந்தி பார்ப்பானுக்கு மகான்! எனக்கு அவர் சாதாரண மனிதன்! சாணியையும், கல்லையும் கடவுளாக்குபவன் மனிதனை மகாத்மா என்றால் நம்பத்தானே செய்தான்? இதை எதிர்க்க திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எவன் பாடுபட்டான்? சொல்லப் பயப்படுகிறானே? சொல்பவைனைச் சிறையில் போடுவதும், கொடுமைப்படுத்துவதுமா அரசாங்கம் என்பது? மக்களை நேர்மையாக ஆள்வதல்லவா அரசாங்கம்!

பணக்காரனைக் காப்பாற்றுவதற்குத்தான் அரசாங்கம் உள்ளது. சட்டதிட்டம் மீறினால் போலீஸ், பட்டாளம், ஜெயில் துப்பாக்கியெல்லாம்.

இந்தக் கொடுமைகளை மாற்ற வேண்டுமென்று ஒருவனும் சொல்லவில்லை. பாடுபடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்தர் சொன்னார்! சொன்னவரை ஒழித்தார்கள்! புத்த நிலையங்களைக் கொளுத்தினர். திருவள்ளுவர் இவையெல்லாம் அக்கிரமமென்றார். அவர் சொல் இன்று குப்பையில்! இராமாயணம், கீதை முதலிய கசுமாலம் (மலக்கழிவு) இம்மாகாணத்தில் முன்நிற்கின்றன. இவற்றைக் கொளுத்து என்று சொல்ல ஒருவனுமில்லை, திராவிடர் கழகத்தைத் தவிர! இவனில்லையென்றால் உங்கள் கதி இன்று எப்படி இருக்கும் என்று நினையுங்கள். வேறு எவன் இதைச் சொல்லி இருக்கிறான்?

காங்கிரஸ்காரன் அவ்வளவு பேரும் கடவுளை நம்பணும், மதத்தை நம்பணும், அதைக்காப்பாற்ற அரசாங்கம் தேவை என்பவர்கள். கடவுள், மதம் வேண்டுமென்கிற காங்கிரசை எதிர்ப்பவன், எதிர்க்கிற எதிர்க்கட்சி என்று கூறி, காங்கிரசுக்காரனுக்குப் பாதுகாப்பான சட்டசபையில், பார்லிமெண்டில் (நாடாளுமன்றத்தில்) இருந்து கொண்டு வயிறு வளர்க்கிறான். வெளியிலும் சொல்லிக் கொண்டுமிருக்கிறான். திரு. ம.பொ.சிவஞானம் நம்மை எதிர்த்துப் பார்ப்பானிடம் பொறுக்கப்போகிறார். 'நாம் தமிழர்' என்னும் கட்சிக்காரர்கள். கடவுளைச் ஜாதியைப் பற்றிப் பேசினால் வாய் சுட்டுவிடும் என்கின்றனர்! ஆனால் ஒரு காரியத்தில் - தனிநாடு தேவை என்பதில் ஒத்து வருகிறார்கள் பாடுபடுகிறார்கள்.

கண்ணீர்த்துளிகள் பார்ப்பானைப் பற்றி, கடவுளைப் பற்றி, சாமியைப்பற்றி மூச்சு விடுகிறார்களா? பார்ப்பான் தயவில் ஓட்டுப் பிச்சைப் பெற்றுப் பதவிக்குப் போக வேண்டுமென்றே கட்சி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிஸ்டும் அப்படியே; தலைவர்கள் பார்ப்பான்! (சிரிப்பு) அங்கு வேறு என்ன இருக்க முடியும்? மதத்தைக் காப்பாற்றணும், கட்சியைக் காப்பாற்றணும், பார்ப்பனரல்லாத பணக்காரனை மாத்திரம் ஒழிக்க வேண்டும் என்கிறான்.

காங்கிரஸ் கருதுவதோ பார்ப்பானுக்குச், ஜாதிக்குக், கடவுளுக்கு, மதத்துக்குக், காங்கிரசுக்குப் பாதுகாப்பு தந்து, பதவி ஒன்றே போதும் என்கிறது. கடவுள், சாஸ்திரம் ஒழிய வேண்டுமென்று கூற வேறு யார் இருக்கிறார்கள்? நாங்கள் இல்லாவிட்டால் பள்ளர், பறையர், சூத்திரன், பார்ப்பான் காலில் விழுவார்கள். அவன் நட்ட கல்லில் முட்டிக் கொள்வார்கள். எவனாவது இனி கடவுள் மதத்தைப் பற்றி பேசினால் ஒழிக்க வேண்டாமா?

கொள்ளையடிக்கிறார்கள், கொடுமை செய்கிறார்கள். இம்மாதிரி செய்பவர்களே கீழ்ஜாதி - அயோக்கியனென்பதானால் அது பார்ப்பானைத்தான் பெரிதும் சொல்ல வேண்டும்; நோகாமல் வஞ்சித்துச் சாப்பிடுகிறான். மனிதனுக்குத் தேவையான காரியங்களை நாம் செய்வது. அதன் பலனை நாம் அனுபவிப்பதில்லை. ஆனால் இவை ஒன்றும் செய்யாத பார்ப்பான்தான் அனுபவிக்கிறான். ஆகவே பர்ப்பான்தான் கீழ்ச்சாதியாகும். வலுத்துவன் இளைத்தவனைச் சுரண்டாமல், உதைக்காமல் பாதுகாத்தலே அரசாங்கக் கடமை. இப்போது அப்படி இல்லாமல் வலுத்தவனுக்காத்தானே அரசாங்கமிருக்கிறது! அறிவு உணர்ச்சி இருக்கிறவர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டிய நிலையில், நாம் அறிவிலிகள், உணர்ச்சியற்றவர்களாதலால் சும்மா இருக்கிறோம்.

புத்தி மானம் உள்ளவர்கள் கடவுள் நம்மைக் காப்பாற்றுமென்று நினைக்கலாமா?..... பார்ப்பான் மேல் ஜாதியா? அவன் கடவுள், சாஸ்திரத்தைக் காப்பாற்ற வேண்டுமா? அதற்குப் பாதுகாப்பான அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டுமா? நாம் இவைகளை முட்டாள்தனம் என்று உணர வேண்டும். சைனா, ரஷ்யா மாதிரி ஆகவேண்டும். இவற்றைச் செய்யப் பகுத்தறிவாதியாக வேண்டும்.

மொத்த உலக ஜனத்தொகை 250-கோடி. சைனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாட்டு 100-கோடி மக்களுக்கு மேல் கடவுளில்லை என்பவர்கள். அவர்கள் மற்றும் 100-கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்குக் கடவுள் உண்டு; மதமுண்டு அவர்கள் கடவுள் எப்படி இருக்கிறதென்றார்கள்?

நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் கடவுளை? அன்பு, ஒழுக்கமான, நேர்மையான ஒரு கடவுள்; அதற்கு உருவமில்லை, அது ஒன்றும் வேண்டாத கடவுளென்கிறார்கள்.

இந்துக்களையெடுத்துக் கொள்ளுங்கள். குரங்கு, பாம்பு, கழுகு, பன்றி, குதிரை, ஆடு, மாடு, எலி, மரம், ஆறு, குளம், அசிங்கக் குட்டை எல்லாம் கடவுள். (பைத்தியக்காரனுக்கு கள் ஊத்தினது மாதிரி கடவுள்கள்)

செருப்புக் கடவுள் - கரூர் பக்கம் சக்கிலி, கதவு அளவு செருப்பு செய்து அதற்குச் சூடம் காண்பிக்கிறான்.

கடவுளுக்குப் பெண்டாட்டி, வைப்பாட்டி வேறு எந்த நாட்டுக்காரனாவது செய்கிறானா? நமதென்கிற கடவுளுருவத்தைத் துலுக்கன் உதைப்பான். பார்ப்பான் சுங்கம் வசூலிக்கவே தவிர வேறு எதற்கு? அவனுக்குக் கடவுள் பக்தி உண்டா உங்களைப் போல்? இந்த இராமன், சிவன், கிருஷ்ணன் நம் கடவுள்களா?

எல்லாம் வடநாட்டில் இருந்து பார்ப்பான் கொண்டு வந்த கடவுள்களே! இவற்றை நம் நாட்டில் கொண்டு வந்து வைத்துள்ளான். உதைத்து நம்பவைத்து, காசு பறிக்கிறான். இராமன், கிருஷ்ணன் எவனுக்கோ பிறந்து செத்தவன்களை நமக்குக் கடவுளென்றால் பிறந்தான், செத்தான் என்றால் கடவுள்களா அவன்கள்? இறப்பு, பிறப்பு இல்லாதவன் கடவுள் என்று கிறிஸ்தவர், முஸ்லிம்கள் கூறுகிறார்கள். பாகவதத்தில் கிருஷ்ணனுக்கு இலட்சம் பெண்டாட்டிகள், பல லட்சம் வைப்பாட்டிகள்! பல பெண்களை அவமானப்படுத்திக் கெடுத்தவன். அவன் படத்தை நம் பெண்கள் துடைப்பத்தால் அடித்துக் காறித்துப்ப வேண்டாமா? ஆண்களுக்குத் தான் புத்தியில்லை என்றால், பெண்களாவது நினைத்துப் பார்க்க வேண்டாமா? அவன் படத்தை வீட்டில் வைக்கலாமா?

கொலைகாரனைக், கொள்ளைக்காரனைக் கடவுளென்று அவன் அயோக்கியத்தனத்தைப் போற்றிக் கும்பிட்டால் பார்ப்பான் நம்மை சூத்திரன், பறையன், பள்ளனென்று ஏன் சொல்லமாட்டான்? இராமாயணமும், பாரதமும் மனித சமுதாயத்துக்குப் பித்தலாட்டத்துக்கு ஆதாரம். இவை கடவுள் கதைகள். இவற்றை இராசகோபலாச்சாரியும், சங்கராச்சாரியும் வானளாவப் புகழ்ந்து இவை கடவுளால் கொடுக்கப்பட்டவை என்கிறார்கள். அது அந்தச் ஜாதியின் ஒழுக்கம். திரௌபதி அய்ந்துபேர் போதாதென்று ஆறாமவனையும் காதலித்தவள்! சீதை இராவணனுடன் போனவன். அவள் "சினையானது" இலங்கையில்! இராமன் பிள்ளைத்தாய்ச்சியுடன் கூட்டி வந்தான். அகலிகை ரிஷி பெண்டாட்டி தேவகுரு பெண்டாட்டி இருவரும் (தாரை அகலிகை) விபசாரத்தனம் செய்து தடயம் கண்டுபிடித்து கேசு (வழக்கு) ருசுவாகித் தண்டனையும் ஆகியுள்ளது. இம்மாதிரி ருசுவான கேசுள்ளவர்களுக்குப் பதிவிரதைப் பட்டம் என்பது டாக்டர் இராஜனுக்கு மந்திரி வேலை கொடுத்தது போல் அல்லவா? அவர்கள் மோசமான ஜாதி. ஆனதால் அவர்களுக்கு அந்த ஒழுக்கம் பொருத்தம். நாம் அப்படி சொல்லலாமா? புத்தி மானம் இல்லாவிட்டால் இவ்வளவு அவுசாரிகளைக் (விபசாரிகளை) கும்பிட்டால் ஏன் நம்மைச் சூத்திரன் என்று கூறாமலிருப்பான்? இவற்றைக் கண்டிக்க வேண்டும். இவற்றைக் கும்பிடலாமா? இந்தப் புத்தியை நாம் மாற்ற வேண்டாமா?

கிறிஸ்தவனில் ஜாதி உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம்களில் பார்ப்பான், துலுக்கன், பறை துலுக்கன் இல்லை. ஒரே பைபிள்; ஒரே குர்ஆன்; ஒரே ஏசு. ஒரே நபி தலைவன். உனக்கு (திராவிடனுக்கு) யார் தலைவன்? இராசகோபாலாச்சாரி, சங்கராச்சாரி உனக்குத் தலைவனா? இப்பொழுது நடைமுறையிலுள்ள ஆண்டு எண்ணிக்கைக்கு அவர்களுக்கு ஆதாரம் உண்டு. உனது ஆண்டுக்கு ஆதாரம் ஏது? இராமாயணமா? பாகவதமா? உன்னை அதில் அரக்கன், சூத்திரன், தேவடியாள் மகன் என்கிறான் - ஏற்கலாமா நீ? அதன்படி இந்த ஆட்சிக்காரன் சட்டத்திலும் சூத்திரன் என்கிறான்.

ஆகவே தோழர்களே! முதலில் கூறிய மூன்று கேடுகளையும் ஒழிக்க வேண்டாமா?

மணியம்மை திருவண்ணாமலை பஸ்ஸில் வரும்போது நான்கு பார்ப்பனர்கள் "இந்த இராமசாமி ஆரம்பத்தில் ஈரோட்டிலிருந்து செல்லாக்காசாகி, திருச்சி வந்து, நான்கு ஏக்கர் நிலம் வாங்கிக் கொண்டு, பல லட்சம் பணம் திரட்டிக் கொண்டிருக்கிறார். நமது நேரு வந்து 4000- பேர்களை உதைத்து, ஜெயிலில் போட்டு ஒழிக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதனால் ஒழித்தார்கள்" என்று பேசிக் கொண்டு வந்தார்களாம். இதிலிருந்து நம்மை ஒழித்துக்கட்டி விட்டதாக அவர்களுக்குள் எண்ணம்.

தீபாவளி பண்டிகை விமரிசையாக நடப்பதாக எண்ணி நம்மைக் கிண்டலாக 'தினமணி'க்காரன் எழுதுகிறான். இந்தக் கதைப்படி உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளிந்தானென்றும், கடவுள் பன்றி அவதாரம் எடுத்து மீட்டு, அசுரனைக் கொன்று, தேவர்களைக் காப்பாற்றினான் என்றும் கூறுகிறான். இது எப்படி என்றால் "உன் அப்பன் எங்கே என்றானாம்?" ஒருவன். "என் அப்பன் வானம் ஓட்டையாகிவிட்டது. ஆகையால் எறும்புத் தோலை உரித்து அடைக்கப் போயிருக்கிறான்" என்றானாம்! இதைப் போன்று பெரும் புளுகு அல்லவா அந்தக் கதை? அடுத்து வரும் கிளர்ச்சிக்கு அறிகுறியாக அதிகமான பேர் தமிழ்நாடு நீங்கிய இந்தியநாடு படத்தைக் கொளுத்தத் தயாராயிருக்க வேண்டும். நம் நாட்டை நாம் பார்த்துக் கொள்வோம். அவனவன் நாட்டை அவனவன் பார்த்துக் கொள்வான். அரசாங்கத்துக்கு வாய்தா கொடுப்போம். நீங்கள் நிறைய ஆதரவு தரவேண்டும்.

----------------------------- 12.11.1958-அன்று மேலவாளாடியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”, 07.01.1959

0 comments: