Search This Blog

13.10.15

இந்துமத காப்புப் பிரசாரத்திலே பார்ப்பன சர்க்கார் இறங்கியிருக்கிறது!-பெரியார்


இன்றையத் தினம் நாம் ஒரு புரட்சிக் காலத்தில் வசிக்கிறோம்.

இதுநாள் வரையில் இருந்து வந்த முறைகள், அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டுவரும் ஒரு காலத்திலே வசித்து வருகிறோம்.

இதற்கு முந்திய மக்கள் அப்படியல்ல. அவர்கள் எந்தவிதமான சலனமும் அற்று, காட்டுமிராண்டித்தனமாக எண்ணங்களில் மூழ்கி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஏதோ நடைப்பிணங்கள் போல் தங்கள் வாழ்வை நடத்திச் சென்றுவிட்டார்கள்.

இன்றையத் தினம் எப்படியோ காலத்தின் வசதியாலோ, விஞ்ஞானத்தின் தெளிவினாலோ நம்மில் பலருக்குப் புரட்சிகரமான எண்ணங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நாமும் முன்மக்களைப் போலவே எதைப்பற்றியும் கவலைப்படாமல், காட்டுமிராண்டித்தனத்திலே, மவுடீகத்திலே ஆழ்ந்து, நம் நிலை இதுதான் என்று கருதிக் கொண்டிருப்போமேயானால், நமக்கு இந்த உணர்ச்சியும், கிளர்ச்சியும் ஏற்பட்டிருக்காது. இந்த அளவுக்கு வேதனை, இரத்தத் துடிப்பு இருக்காது.

புதுமையான காலத்தில் - புரட்சிகரமான காலத்தில் வாழும் மக்களாக இருப்பதாலேயே நம்முடைய நிலையைக் குறித்து நமக்கு வேதனையும், அவமானமும், ஆவேசமும் ஆக இருப்பதோடு, இப்படிப்பட்ட வாழ்வு எதற்கு ஆக வாழ வேண்டும் என்கிற உணர்ச்சிக்காரர்களாய் இருக்கிறோம். புரட்சிகரமான எண்ணங்கள் உடையவர்களாய் இருக்கிறோம்.

தோழர்களே! உயர்ந்த அறிவின் தன்மைகொண்ட கண்ணோட்டத்தில் பார்த்தால், இது ஒன்றும் பெரிய புரட்சி என்று சொல்லி விடமுடியாது. ஆனால் இதுவரை காட்டுமிராண்டிகளாய், முட்டாள்களாய், மானமற்றவர்களாய், எதைப்பற்றியும் கவலை எடுத்துக் கொள்ளாத மக்களாய் இருந்த நாட்டிலே, இவற்றிற்கெல்லாம் தலைகீழான மாற்ற உணர்ச்சிகள் எண்ணங்கள் தோன்றியிருக்கின்றன என்பதால் இது பெருத்ததொரு புரட்சியாக இருக்கிறது. அதற்கேற்றாற்போலவே இந்தப் புரட்சிக்கு வசதி செய்வதாய்க் காலமும், அதன் அடிப்படையிலே விஞ்ஞானமும் நல்லபடி வசதி செய்து தந்தது.

நமக்குச் சரித்திரம் தெரிந்த காலம் முதல் எந்தச் சரித்திரக் கதையை எடுத்துக் கொண்டாலும் அதில் சொல்லப்படுவது - ஒரு நாடு, அந்த நாட்டிற்கு அரசன் என்பது. இப்படிச் சரித்திரம் தெரிந்த காலத்திலிருந்து நமக்கு அரசர்கள் இருந்து வந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல; சமீபகாலம் வரையிலும் நமக்குச் சக்கரவர்த்தி ஒருவர் இருந்திருக்கிறார். வெள்ளைக்கார அரசர் இந்தியாவின் சர்க்கரவர்த்தியாக (The Emperor India) இருந்து வந்திருக்கிறார்.

உலக இயற்கையே அம்மாதிரி தான் இருந்து வந்தது என்று சொல்லத்தக்க மாதிரியில், எல்லா இடங்களிலும் இருந்து வந்தது. ஆனால் இன்று உலகத்தில் கிட்டத்தட்ட எல்லா பாகங்களிலும் அரசர்கள் என்பவர்கள் ஒழிக்கப்பட்டு விட்டார்கள். சில இடங்களில் பேருக்கு ஏதோ ராஜா என்று வைத்துக் கொண்டு ஆட்சி நடக்கிறது.

தோழர்களே! கடைசியான நமக்கு இருந்த சக்ரவர்த்தியானவர் மிகவும் பலம் பொருந்திய சக்ரவர்த்தியாவார். அந்தச் சக்ரவர்த்தியின் ஆளுகைக்கு உலகத்தின் பெரும் பாகம் கட்டுப்பட்டிந்தது. அதோடுகூட படை பலமும் ஏராளம். 200-வருஷ காலமாக இந்த தேசத்திற்குச் சக்ரவர்த்தியாக இருந்திருக்கிறார்.

இப்படியாக இருந்த பலம் பொருந்தி சக்ரவர்த்தியாரும், அவரது ஆளுகையும் இன்றையத் தினம் எங்கே இருக்கிறது? இந்த நாட்டைப் பொருத்தவரையில் ஒழிந்து விடவில்லையா?

இதற்கு ஆக நாம் எத்தனை பேரைப் பலி கொடுத்தோம்? இல்லையே! ஏதோ நம்முடைய முட்டாள் தனத்தினால் நமக்கு நாமே பலியாகிக் கொண்டோமே தவிர, மற்றப்படி பலி கொடுக்கப்படவில்லை. இது எப்பேர்ப்பட்ட புரட்சி? இந்தப்பபடி பலம் மிகுந்த சர்க்கரவர்த்தியின் ஆட்சியை ஒழித்துக் கட்டியது புரட்சியில்லையென்று யாரவது சொல்ல முடியுமா? பெரிய புரட்சிதான்!

ஆனால் இத்தகைய புரட்சிக்குப் பின்னர் என்ன நிலைமை ஏற்பட்டது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

எவ்வளவோ பலமான மிகப்பெரிய சக்ரவர்த்தியை ஒழித்தோம். ஆனால் அப்படி ஒழிந்தபின் நம்முடைய நிலைமை என்னவாயிற்று என்றால், சக்ரவர்த்திக்கு நேர்மறையான, பலமற்ற, ஒருவித சக்தியுமற்ற அன்னக்காவடி, சவுண்டிப்பார்ப்பனர்களுக்கு இன்றையத்தினம் அடிமையாகி இருக்கிறோம்.

தோழர்களே! சக்ரவர்த்தியை ஒழித்ததோடு மட்டும் நிற்கவில்லை நம்முடைய புரட்சி. நீண்ட காலமாக இந்த நாட்டில் நிலை பெற்று இருந்து வந்த அய்நூற்று சொச்சம் சுதேச சமஸ்தானத்து அரசர்களையும் ஒழித்துக்கட்டி, இன்றையத்தினம் அவர்களையெல்லாம் வெறும் பொம்மை அரசர்களாக ஆக்கி விட்டோம்.

ஆனால் இவ்வளவு பெரிய புரட்சிகரமான காரியத்தைச் சாதித்த நாம் முன்னைய சக்ரவர்த்தியைப் போல், சுதேச அரசர்களைப்போல் பலம் ஏதும் இல்லாதவர்களாய், மாறாகப் பலஹீனமானவர்களான பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருக்கிறோம். இது பெரிய அதிசயமல்லவா? பெரிய பெரிய ராஜாக்களை எதிர்த்து ஒழித்த வீராதி வீரர்கள் எல்லாம் சாதாரணப் பார்ப்பனருக்கு அடிமைப்பட்டிருப்பது என்பது உள்ளபடியே ஓர் அதிசயமான காரியமல்லவா?

எவ்வளவு பெரிய புரட்சியைப் பார்த்தோம்!! எவ்வளவு பெரிய அதிசயத்தைப் பார்க்கிறோம்!!

இதைப் பார்க்கிறபோது புரட்சி, அதிசய காலத்தில் நாம் இருக்கிறோம் என்று தெரிகிறதல்லவா?

சக்ரவர்த்தி - அரசர்கள் என்பவர்கள் எல்லாம் பலமிக்கவர்கள். பிரத்தியட்ச ஆதாரத்தோடு இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு இடமே இல்லாமல் சமீபத்தில் புரட்சியால் ஒழிக்கப்பட்டு விட்டனர்.

ஆனால் இப்பேர்ப்பட்ட மகத்தான, பெரிய புரட்சியைச் செய்திருக்கிற நாம் நம்முடைய சொந்த அறிவில் எவ்வளவு முட்டாள்களாய் இருக்கிறோம். அந்தப்படியான நம்முடைய முட்டாள்தனத்தை, மவுடீகமான எண்ணத்தையாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாவது கருதுகிறோமா? இல்லையே!

மேலே சொன்ன இப்பேர்க் கொத்த புரட்சிகளால் நாம் சுத்தமாய்ப் பார்ப்பனர்களுக்கு அடிமைப்படுத்தப்படுகிறோம்.

எனவேதான், இப்பேர்ப்பட்ட புரட்சியால் அன்னக்காவடி பார்ப்பனர்களுக்கு மக்களை அடிமைப்படுத்துவது என்பது ஈனத்தனம் என்பதாகக் கருதியே, புரட்சி என்பது சகல துறையிலும், அது எந்தத் துறையானாலும் சரி, கடவுள் துறையாகட்டும், மதத்துறையாகட்டும், சாஸ்திரத் துறையாகட்டும், எல்லா துறையிலேயும் அறிவுத் துறையிலேயும் புரட்சி ஏற்பட வேண்டும் என்பதாக முயற்சி செய்கிறோம்.

அரசன் நமக்குத் தேவையில்லை. எதற்காக அரசன் என்ற ஒருவன் நம்மை ஆளவேண்டும்? என்கின்ற எண்ணம் ஏற்படுகிற போது, நமக்கு ஒரு கடவுள் மட்டும் எதற்காக இருக்க வேண்டும்? நமக்கு ஒரு கடவுள் இருக்க வேண்டும் என்பதன் தேவைதான் என்ன? என்ற எண்ணம் வரவேண்டாமா?

ஏன் இந்தப்படியான எண்ணம் வரவில்லையென்றால், ஆட்டுகிறவனிடம் சாமி மாடுகளாக நாம் இருக்கிறோம் என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?

சாமி மாடு கோவணாண்டி, "இதோ இவர் யார் தெரியுமா? எஜமானன் தானே", என்பான். உடனே மாடும் 'ஆமாம்' என்கிற பாவனையில் தலையாட்டும். அது மாதிரிதானே இருக்கிறது நம்முடைய நிலைமையும்.

எப்படியோ, நம்மில் சிலருக்கு இந்தக் காட்டுமிராண்டித்தனங்கள், முட்டாள்தனங்கள் ஒழிய வேண்டும் என்ற உணர்ச்சியும் - புரட்சி எண்ணமும் தோன்றியிருக்கிறது - இந்த உணர்ச்சியானது அழிந்து விடக்கூடாது; கருவிலேயே சிதைந்து விடக்கூடாது. இந்த உணர்ச்சியானது அதாவது இன்றைய பேத அமைப்பு முறை, காட்டுமிராண்டித்தனமான முறைகள், முட்டாள்தனமான நினைப்புகள் - எண்ணங்கள் - நம்பிக்கைகள் ஒழிய வேண்டும் என்கிற உணர்ச்சி மேலும், மேலும் வளர வேண்டும் என்கிற கருத்தின் பேரில்தான் இம்மாதிரியான அதாவது மத ஒழிப்பு, சாஸ்திர ஒழிப்பு, கடவுள் ஒழிப்பு என்பது போன்ற காரியங்களில் நாம் பிரவேசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நீங்கள் கவனிக்க வேண்டும்; ஏதோ ஓர் அளவுக்கு மக்களுக்கு இந்த உணர்ச்சி அதாவது இன்றைய அமைப்பு மாறுதல் கிளர்ச்சி உணர்ச்சி, புரட்சி ஏற்பட்டிருக்கிறது என்றவுடன் இந்த அரசாங்கம் நடத்துவதைப்பற்றிக் கூடக் கவலைப்படாமல், மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற இந்த மாறுதல் புரட்சி உணர்ச்சியானது ஒழியவேண்டும் என்பதற்கு ஆகவும் இனிமேல் கூட இந்த உணர்ச்சி இன்னும் பரவி விடக்கூடாதே என்பதற்கு ஆகவும், மிகமிகத் தீவிரமாக வேலை செய்ய வருகிறது. பிரசாரம் செய்துவருகிறது.

--------------------------------- 10.05.1953-அன்று நடைபெற்ற தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. "விடுதலை", 13.05.1953

0 comments: