Search This Blog

28.10.15

மனுதர்ம ஆட்சி வேண்டாம்! மனித தரும ஆட்சியே வேண்டும்!!கம்யூனிஸ்ட் கடவுளை ஒழிப்பது என் கொள்கை என்று சொல்வானா?-பெரியார்

மனு ஆட்சிக் கொண்டு வரவே பார்ப்பனரும் எதிர்க் கட்சிகளும் முயலுகின்றனர்!

பேரன்பு மிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இதற்கு முன்பாக இந்த ஊருக்கு ( காரிப்பட்டி) வந்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு முன்பு பேசிய தோழர்கள் சொன்னது போல், சென்ற தடவை வந்து மழையினால் பேசமுடியாது போய்விட்டது. இங்கு வந்த சமயத்தில் பல ஊராட்சிமன்றங்கள் சார்பில் வாழ்த்துப் பத்திரம் எனது தொண்டினைப் புகழ்ந்து வாசித்தளித்தார்கள். அவை எல்லாம் எனது கருத்துக்கு எதிர்காலத்தில் எந்தப் பயமுமில்லை என்கிற துணிவு வருவதால் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஏன்? நான் கடவுள் பக்தனல்ல. தேச பக்தனல்ல. அரசியல்வாதியல்ல.

பெரும்பாலோர் நம்பிக்கைக்குப் பாத்திரமான கடவுள் கதைகளையெல்லாம் சொல்லி அதிலுள்ள ஆபாசங்களை விளக்கிப் போட்டு உடைக்க வேண்டும் என்பவன். ரிஷிகள், மகான்கள் என்பவர்களை எல்லாம் வெங்காயம் என்பவன். எனக்கு ஊர் ஊராகப் பாராட்டுப் பத்திரங்கள் தருகிறார்கள் என்றால் அதிசயமல்லவா? இதுவரைக் கணக்குப் பார்த்தால் ஊராட்சி மன்ற வரவேற்பு 3000- க்கு மேல் இருக்கும். வாரிப்போட்டுள்ளேன். முனிசிபாலிட்டிக்காரர்கள் (நகராட்சி) அழைத்தால் 25- ருபாய் தர வேண்டும் என்கிறேன்! தருகிறார்கள். நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் சிந்திக்க வேண்டும்.

நமக்கு இப்போது என்ன குறைவு? கடவுளுக்குக் குறைவா? முனிவர்களுக்கு மகான்களுக்குக் குறைவா? இல்லை. சந்நிதானம் (குன்றக்குடி அடிகளார்) சொன்னது போல அறிவுக்குத் தான் பஞ்சம் - குறைவு! இன்று அரசியலில் கூட இன்னும் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்கிற அளவு உரிமை கிடைத்துள்ளது. 21- வயது வந்தால் ஓட்டுரிமை கிடைத்து விடுகிறது. நீங்கள் பார்த்தால் தான் காமராசர் ஆட்சிக்கு வரமுடியும். நீங்கள் மனது வைத்தால் தான் இராஜேந்திர பிரசாத் பதவியில் இருக்க முடியும். இதைவிட என்ன வேண்டும்? நாட்டில் நஞ்சை புஞ்சைக்குக் குறைவா? எல்லாத் துறைகளிலும் குறைவில்லை.

ஆனால், அறிவுத் துறையில்தான் நாம் மிகமிகப் பிற்போக்கான நிலையில் உள்ளோம். நான் காங்கிரசில் இருந்து பாடுபட்டவன். 1919- இல் 1920- இல் ஜஸ்டிஸ் கட்சிக்குச் செல்வாக்கு இருந்தது. அவர்கள் பார்ப்பனர்களை வெளுத்து வாங்கி விட்டார்கள். பார்ப்பனர்களுக்கு மேடையில்லை. வீதியில் போக முடியாது. அப்படி இருந்த நேரத்தில் நான் ஏதோ முட்டாள்தனமாகக் காங்கிரசில் சேர்ந்தேன். போனதும் நான் தலைவன் ஆகிவிட்டேன். 'தேசபக்தி' என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். தேசம் என்று ஒன்று இல்லை. எப்படி இல்லாத கடவுளைச் சொல்லுகிறானோ அது போலத்தான் நாங்கள் சேர்ந்து தொண்டாற்ற 2,3- ஆண்டுகள் வெளுத்து வாங்கி ஜஸ்டிஸ் கட்சியை (நீதிக்கட்சியை) ஒழித்தேவிட்டோம்.

கடைசியாக 'மக்களுக்குக் காங்கிரஸ் ஒன்றுதான் கோயில்.' அதுதான் எல்லாம் என்று நினைக்கும்படியாக ஆகிவிட்டது. அந்த நிலை உண்டாகி இப்போது நின்றால் ஓட்டு நமக்குத்தான் என்றதும், காங்கிரசு பார்ப்பனர்கள் தேர்தலுக்கு நிற்க வேண்டும் என்றார்கள். நான் "இத்தனை நாளும் சட்டசபைக்குப் போவதைக் கேலி செய்துவிட்டு இன்று நிற்கிறேன் என்கிறீர்களே!" என்று சண்டை போட்டேன். நாம் பதவிக்குப் போக வேண்டும் என்பதற்காக அல்ல; தேசத் துரோகிகள் ஆட்சிக்கு வரவிடாமல் செய்துவிட வேண்டும் என்று பித்தலாட்டம் பேசினார்கள்.

பிறகு நான் அப்படி நிற்பது என்றால் 50-சதவிகிதம் பார்ப்பனர் அல்லாதாருக்கு (கல்வியிலும், அரச அலுவல்களிலும் இடம்) ஒதுக்கித் தரவேண்டும் என்று தீர்மானம் காஞ்சீபுரம் மாநாட்டில் கொண்டு போனேன். அந்த மாநாட்டுத் தலைவராக திரு. வி.கலியாண சுதந்தரம் தான் இருந்தார். இருந்தும் அவரை மிரட்டி அந்தத் தீர்மானம் கொண்டு வராதபடிச் செய்து விட்டார்கள். அப்போது தான் நான் காங்கிரசை விட்டு வெளியேறி பார்ப்பனரல்லாதாருக்கு வகுப்புவாரி நீதி வழங்குகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

வெளியில் வந்து பிரச்சாரம் செய்தேன். ஆனால் காங்கிரசை முதலில் மக்கள் மனதில் பதிய வைத்து விட்டதால் அதை ஒழிக்க முடியவில்லை. பின் ஜஸ்டிஸ்கட்சியின் தலைவனாக ஆனேன். இந்த வகுப்புவாரி நீதியை ஜஸ்டிஸ் கட்சியைக் கொண்டு சட்டம் செய்தோம். பிறகு பல தந்திரம் செய்து ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்தார்கள். வெள்ளைக்காரரன் போகும்போது காங்கிரசிடத்தில் நாட்டை ஒப்புவித்தான். தமிழர்களுக்கு வகுப்புவாரி ஏற்பாட்டின்படி கிடைத்த கல்வி, உத்தியோகத்தில் சலுகையை ஒழித்தார்கள். அரசமைப்புச் சட்டத்தையே அதற்கானபடி பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்து கொண்டார்கள்.

இவற்றையெல்லாம் எடுத்துக் காட்டித்தான் அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்துச் சிறைக்குச் சென்றோம். தோழர்களே! நீங்கள் சிந்திக்க வேண்டும். இன்று பல கட்சிகள் உண்டு. அவர்களுக்கெல்லாம் சட்டசபைக்குப் போய்ப் பொறுக்கித் தின்னலாம் என்பது தவிர கொள்கை என்பது இல்லை.

கம்யூனிஸ்ட்டைக் கேட்டால், பணக்காரனை ஒழித்து (ஆலை) மில்லைத் தொழிலாளிக்குச் சுவாதீனம் (தனி உரிமை) செய்கிறேன் என்பான். அது முடியாது. பணக்காரன் - ஏழை என்பது சும்மா தூங்கி விழிப்பது போல்.

இன்று பணக்காரன் நாளைக்கு அன்னக்காவடி இன்று அன்னக்காவடி நாளை பணக்காரன். இதை ஒழிக்கிறது என்ன? அது கடைசி வேலை. பார்ப்பான் பிறந்தது முதல் கட்டைக்குப் போகிறவரை எவ்வளவு கேவலமாக இருந்தாலும், என்ன இழிதொழில் செய்தாலும் அவன் பார்ப்பான்தானே? அவனை ஒழிக்கிறேன், ஜாதியை ஒழிப்பதுதான் என் கொள்கை என்று சொல்ல முடியுமா?

கம்யூனிஸ்ட் என்றால் கடவுள் இல்லையென்று அர்த்தம். கடவுளை ஒழிப்பது என் கொள்கை என்று சொல்வானா? பார்ப்பான் என்று வாயில் சொல்வானா? அவனுக்கு அண்ணன் தான் கண்ணீர்துளி! (தி.மு.க) எங்களிடம் இருக்கும் போது பார்ப்பானை அயோக்கியன் என்றவன்! இப்போது கூடிக்குலவுகிறான். சோஷியலிஸ்ட் தான் என்ன? சோஷியலிச பாணி என்று சொல்கிற காங்கிரஸ்காரன் கூட நிற்க யோக்கியதை உண்டா? கம்யூனிஸ்ட்டுக்கு இப்போது பேச வாய் இல்லையே! காங்கிரஸ்காரன் இப்போது காரியத்தில் செய்துவருகிறான். அவன் காரியம் செய்யும் போது அய்யய்யோ என்னடா செய்வது என்று, ஏன் 30- ஏக்கர்? 15- போதாதா? என்று கேட்கிறானே தவிர, வேறென்ன செய்கிறான்? உள்ளபடியே காங்கிரஸ்காரன் இன்று மதரையில் - இப்போது சாதியை ஒழிப்போம் என்று கொள்கை வகுத்துள்ளான். இந்த அளவுக்குக்கூட எதிர்க்கட்டு என்பவன் யார் இருக்கிறான்?

நீங்கள் யோசிக்க வேண்டும்! அரசியல் என்பது எந்தக் காலத்திலும் இல்லை. சேர, சோழ, பாண்டியன் காலம் முதல் அரசியல் இல்லை. காந்தி என்ன சொன்னார் - "வருணாசிரம தருமத்தைக் காப்பாற்ற வேண்டும், வருணாசிரம தருமப்படி நடக்கிற அமைப்புத்தான் எனது இராமராஜ்ஜியம்" என்றார். ஆக பழைய காலம் முதல் வருணாசிரம தருமம் நிலைக்க வேண்டும், மனுநீதி ஆளவேண்டும் என்கின்ற கட்சி- மனுநீதி கூடாது என்கிற கட்சி; இதுதான் அந்தக் காலம் முதல் நேற்று வரை. இது தான் அரசியல். என்ன மனுநீதி? பார்ப்பான் தான் படிக்க வேண்டும். பார்ப்பான் தான் உத்தியோகம் பார்க்க வேண்டும். மற்றவன் அவனுக்கு அடிமையாக வேண்டும். இதுதானே?

இராஜாஜி இப்போ இந்தத் தருமந்தான் கெட்டுவிட்டது. அதற்கான போராட்டத்தில் நான் குதித்துவிட்டேன் என்கிறார். என்ன சொல்கிறார். "பழங்கால முதல் ஆசியாவிலேயே உயர்ந்த - சிறந்த நிருவாகிகள் இன்று இல்லை. மீண்டும் அதை உண்டாக்குவது தான் என் வேலை" என்கிறார். சமீபகாலத்தில் சிறந்த நிருவாகிகள் இல்லை என்பதை எதை வைத்துச் சொல்கிறார், என்ன கேடு வந்தது?

வெள்ளைக்காரன் 1901-இல் இந்த நாட்டில் படித்த மக்கள் 100- க்கு 7- பேர் படித்தவர்கள் என்று கணக்கு வெளியிட்டான். வெள்ளைக்காரன் 15- வருடம் ஆண்ட பிறகு 1911- இல் 100- க்கு 7 1/2 பேர்; 1921 - இல் 9 1/4 பேர்; 01-09-1961 பத்திரிக்கையில் (திணமணி பத்திரிக்கையில் வந்ததை வெட்டி வைத்துள்ளேன்)

1931- இல் 10 1/2 பேர், 1951- இல் 100- க்கு 16- பேர்; அதாவது ஜஸ்டிஸ் கட்சி பதவிக்கு வந்து கல்விக்கு முயற்சி செய்த பின்தான் 100- க்கு 16- பேர் ஆனது என்பதைக் கவனிக்க வேண்டும். மறுபடியும் 1952- இல் காங்கிரஸ் மாநாட்டில் பதவிக்கு வந்தபின், அந்தக் காங்கிரஸ் பதினாறை மீண்டும் 10- க்குக் கொண்டு போக முயற்சி செய்தது.

இராஜாஜி மனுதர்மத்தை மீண்டும் நிலைநாட்ட 6000- பள்ளிகளை தமிழ்நாட்டில் மூடி, இருக்கிற பள்ளியிலும் அரை நேரக் கல்வி இருந்தால் போதும் என்று சொல்லிவிட்டார். பாக்கி அரைநேரம் என்ன செய்வது? அவனவன் சாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்று படம் போட்டு வெளியிட்டார்கள். மனுதருமத்தில் பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் அவன்தான் ஆளவேணடும். சூத்திரன் எவ்வளவு யோக்கியனாக இருந்தாலும் அவனை ஆளவிட்டால் சேற்றில் அழுத்திய மாடுபோல நாடு போகும் என்பது மனுதருமம்.

நான் மனுதருமப்படிதான் ஆள்கிறேன் என்பதைக் காட்ட, காங்கிரசாலேயே அயோக்கியன் என்று ஒதுக்கிவைக்கபட்ட டி.எஸ். இராஜன் என்ற அய்யங்காரை தமிழ்நாட்டு மந்திரியாக்கினார். 5- வருடம் காங்கிரசைவிட்டு விலக்கி வைக்கப்பட்ட இராஜனைக் கார் அனுப்பிக் கூப்பிட்டு மந்திரியாக்கினார். அடுத்தபடி மனுதருமப்படி ஒரு பார்ப்பான் சூத்தரனைக் கொன்றால் பாபமுமல்ல, குற்றமுமல்ல.... அதையும் நிலைநாட்டி, இது மனுதரும ஆட்சிதான் என்பதைக்காட்ட மட்டப்பாறை வெங்கட்ராமய்யர் என்கிற பார்ப்பான் மீது இருந்த கொலை வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டார். கேட்டதற்கு அரசாங்கத்துக்கு வாபஸ் வாங்க உரிமையுண்டு என்று சொல்லிவிட்டார்.

இன்னும் பென்ஷன் வாங்கிக் கொண்டு 10- வருடம் வீட்டில் இருந்தவனுக்கும் கிழடு கிண்டுக்கெல்லாம் - பார்ப்பானுக்கே (தமிழ்நாட்டில்) உத்தியோகம் போட்டார். யார் கேட்டார்கள்? கேட்க நாதியில்லை. சர்வாதிகாரமாக நடத்தினார். அந்த சர்வாதிகாரத்துவம் தான் மனுதர்மம்.

நான்தான் கூப்பாடு போட்டேன். நாங்கள் தான் ஆத்தூரில் "கத்தி வைத்துக்கொள்; சொல்கிற போது சொருகு" - என்ற தீர்மானம் போட்டோம். அதற்குப் பிறகு தான் எதற்கு ரகளை என்று வீட்டுக்குப் போய்விட்டார்.

அதற்குப் பிறகுதான் காமராசரைப் பிடித்தார்கள். அவர் முதலமைச்சர் தேர்தலிலும் நிற்கமாட்டேன் என்றார். இல்லை! இல்லை! என்று பிடிவாதம் செய்து நிற்க வைத்தார்கள். தமிழ்நாடு முதல் அமைச்சராக வந்ததும் அரை நேரக் கல்வி உத்தரவை இரத்து செய்தார். ஜாதித் தொழில் பார்க்க வேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் மூடின பள்ளிக்கூடங்களைத் திறந்து இன்று பள்ளிக்கூடம் முப்பதாயிரம் திறக்கப்பட்டுள்ளன. சம்பளமில்லை, ஒருவேளை சோறு, துணி தருகிறார்கள். என்ன வேண்டும் இதற்கு மேல்? சிந்திக்கணும். 2000- ஆண்டில் இல்லாத கல்வி வெள்ளைக்காரன் காலத்தில் இல்லாத கல்வி வரச்செய்து விட்டாரே!

இன்று படித்தவர்கள் 100- க்கு 35- பேர். எத்தனை ஆண்டுகளில்? 7 - ஆண்டுகளில்! நினைக்கனும். பார்ப்பனரால் - வெகு ஜாக்கிரதையாக திராவிடத்தமிழ் மக்கள் படிக்காமல் பார்த்து கொள்வது தான் ஆட்சியாக இருந்து வந்துள்ளது. காங்கிரசும் மக்களைப் படிக்காமல் செய்வதைத் தான் இராஜாஜி காலம் வரைக் கொள்கையாக தமிழ்நாட்டில் செய்து வந்துள்ளது. ஏதோ சந்தர்ப்பவசமாக காமராசர் வந்தபின்தான் தலைகீழாக மாறியது.

அய்ஸ்கூல் (உயர் நிலைப் பள்ளி) முன்பு 500- தான் இருந்தது. அதற்குமேல் தேவையில்லையென்று கூறிவிட்டார்கள். இவர் காலத்தில் 1200-அய்ஸ்கூல்கள் ஆகிவிட்டன. முன்பு 40-ஆக இருந்தவை காலேஜீகள் (கல்லூரிகள்) இப்போது 61- காலேஜீகள் இருக்கின்றன.

இப்படி தமிழ்மக்கள் கல்விக்கும், உத்தியோகத்திற்கும் மளமளவென்று காமராசர் காலத்தில் வாய்ப்புக் கிடைக்கிறது. அதோடு இன்று தமிழ்நாட்டில் நடக்கிற அரசாங்கம் பொறுப்புள்ள அரசாங்கம். ஒவ்வொரு நாட்டுக்கும் (மாநிலத்திற்கும்) டில்லியிலிருந்து இத்தனை இத்தனைக் கோடி என்று தருகிறான். மற்றவர்கள் கொடுத்ததைச் செலவு செய்ய முடியாமல் திருப்பிப் பணத்தை தருகிறார்கள். நம் தமிழ்நாடு தான் கொடுத்ததைச் செலவு செய்துவிட்டு மேற்கொண்டும் கேட்டது. தமிழ்நாட்டுக்கு 33- கோடி ருபாய் அதிகம் வாங்கியுள்ளார்கள். 33- கோடி செலவானதைச் சொல்ல வரவில்லை. அதில் உள்ள பொறுப்பு எவ்வளவு என்பதைக் கவனிக்க வேண்டும்.

மற்றும் தமிழ்நாட்டில் நிருவாகம் எப்படிச் சிறப்பாக நடக்கிறது என்கிறதைக் கவனிக்க வேண்டும். இங்கு 8- மந்திரிகள். மற்ற எல்லா மாநிலங்களிலும் 15- மந்திரி, 20- மந்திரி, 22- மந்திரி. இப்படி ஜனத்தொகையில் குறைவான இடங்களில் கூட அதிகமான மந்திரிகள். நினைக்க வேண்டும். 30- மந்திரியாயிருந்தும் சண்டை ஓயவில்லை. இங்கு 8- மந்திரிகள் ஒரு தகராறும் இல்லை. இவ்வளவு உணர்ச்சி, விழிப்பு, கிளர்ச்சி ஏற்பட்டன.

இந்த நிலையிலேயே "தர்மம் கெட்டுவிட்டது!" என்று கூப்பாடு போடுகிறார்கள் என்றால், நீங்கள் நினைக்க வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் நடந்து கொள்வதைப் பொறுத்துத் தான் நமது சந்ததியின் தலைமுறையின் வாழ்வு இருக்கிறது. இந்தத் தடவை ஆட்சி பார்ப்பான் கைக்குப் போகவிட்டால் தீர்ந்தது. பின் நமக்கு ஓட்டே இருக்காது. இப்போது ஒரு போலீஸ் கான்ஸ்டேபிள் மகன் அய்.ஏ.எஸ் பெண்கள் கலெக்டராக வந்துள்ளார்கள்! பறையன் கலெக்டராக இருக்கிறான்.

மனுதருமப்படி ஆண்டால் இவையெல்லாம் நடக்குமா? இந்தக் கண்ணீர்த்துளிகள் இன்று ஆச்சாரியார் காலில் விழுகிறார்களே! ஆச்சாரியார் வந்து மனு தருமப்படி தமிழ்நாட்டில் ஆட்சி நடப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அவனவன் ஜாதித் தொழில்தான் செய்ய வேண்டும்! மனுதரும ஆட்சி வந்தால் இதுதானே நடக்கும். ஆகையால் தான் மனுதர்ம ஆட்சி வேண்டாம்! மனித தரும ஆட்சியே வேண்டும் என்கிறோம்.

காங்கிரஸ், பார்ப்பானுக்கு நல்லபடியாக இருக்கும்வரை காங்கிரஸ் வாழ்க! என்றார்கள். நமது சீட்டையும் போட்டுக் குலுக்கி நமக்கும் சில பிரைஸ் (பரிசு) அடிக்கிறது என்றவுடன், பார்ப்பான் காங்கிரஸ் ஒழிக! என்கிறான். நமக்கும் இந்தப் புத்தி வரவேண்டும். ஆகவே நீங்கள் நன்கு சிந்தித்து வரும் தேர்தலில் காமராசரை ஆதரிக்க வேண்டும்?

------------------------- 19.10.1961- அன்று காரிப்பட்டியில் ஈ.வெ.ரா பெரியார் சொற்பொழிவு. ”விடுதலை”, 28.10.1961

0 comments: