கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்
காம்ரேடுகளின் கனிவான கவனத்துக்கு...
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க் ஸிஸ்ட்)யின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் (தீக்கதிர்’ 18.9.2015) அவரது இணையர் பிருந்தாகாரத் (‘தி இந்து’ 10.9.2015) தற்போதைய அகில இந்திய செயலாளர் சீதாராம் யெச்சூரி (கடலூரில் 29.9.2015) ஆகியோர் என்ன காரணத்தினாலோ திராவிடர் இயக்கத்தைப் பற்றியும், நீதிக்கட்சி குறித்தும் சகட்டு மேனிக்குச் சேற்றை வாரி இறைத்துள்ளனர்.
ஒரு கால கட்டத்தில் வருணமா? வருக்கமா? என்ற தத்துவக் கருத்துப் போர் களில் எல்லாம் ஈடுபட்டு, இந்திய சமூக அமைப்பில் இங்கு வருணம்தான் வருக்க மாக இருக்கிறது என்று பொதுவுடைமை வாதிகள் ஏற்றுப் பணியாற்றுங் காலம் மலர்ந்து வந்தது.
கடந்த ஆண்டுகூட தீக்கதிரில் (9.9.2014) ஒரு சிறப்புக் கட்டுரை வெளியாகி இருந்தது. பிரபல திரைப்பட இயக்குநர் ஆனந்த்பட்ட வர்த்தன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை அது.
“இந்தியர்களின் வாழ்வில் கருவிலிருந்து கல்லறை வரை சாதியே தீர்மானிக்கிறது” என்று அக்கட்டுரையில் முக்கியமாக வலியுறுத்திக் கூறப்பட்டு இருந்தது. பிராமணீயமும் முதலாளித்துவமுமே நாட்டின் இரு எதிரிகள் என்று பேராசிரியர் அருணன் அவர்கள் துல்லியமாக கருத்துத் தெரிவித்து வருகிறார்
பழைய தத்துவார்த்த சண்டைகள் எல்லாம் ஓய்ந்து மதச் சார்பற்ற தன்மை - சமூக நீதித் தளத்தில் இடதுசாரிகளும் திராவிடர் இயக்கமும் இணைந்து பணி யாற்றும் ஒரு கால கட்டத்தில் எதற்காக சி.பி.எம். இப்பொழுது - பொது எதிரியை விட்டுவிட்டு - திராவிடர் இயக்கத்தின்மீது துப்பாக்கியைத் தூக்குகிறது என்றே தெரியவில்லை.
இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கியே தீருவோம் என்று மதவாதம் தலைக்கேறி மதம் பிடித்த யானைபோல திமிறிக் கொண்டு துவம்சம் செய்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் தோழன் யார்? பகைவன் யார் என்பதை அறிவதில், கணிப்பதில் ஏன் இந்தத் தடுமாற்றம்?
இந்த நிலையைக் கண்டு “சபாஷ்! சபாஷ்!” என்று மதவாதம் மத்தளம் கொட்டி மகிழ்ச்சித் தேரில் பவனி வராதா?
நீதிக்கட்சி என்றாலே உடனே மிட்டா மிராசுதாரர் கட்சிதானா? அந்தக் கால கட்டத்தில் பார்ப்பன வல்லாண்மையை எதிர்க்க யார் யார் கிடைத்தார்களோ அவர்களை எல்லாம் கணையாக்கிப் பிறவி முதலாளித்துவத்தை எதிர்த்ததில் என்ன குற்றம் கண்டு விட்டது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி!?
அந்த மிட்டாமிராசுகளும் வருண தருமப்படி சூத்திரர்கள் தான்.
கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டு மானால் சென்னை போன்ற நகரங்களுக்கு வந்துதான் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது, பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் எங்கே தங்கிப் படிப்பார்கள்? உணவு விடுதிகளில்கூட (பெரும்பாலும் பார்ப்பன விடுதிகளே) பார்ப்பனர் அல்லாதார் எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்துதான் சாப்பிட வேண்டும் என்ற நிலை இருந்த காலத்தில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கான விடுதியை ஏற் படுத்திய டாக்டர் சி.
நடேசனார் நீதிக்கட்சிக் காரர்தான். அந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பரிணமித்த சிவ சுப்பிரமணிய நாடார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பிற்காலத்தில் வந்த டி.எம். நாராயணசாமி பிள்ளை போன்றவர்கள் என்ற வரலாறு தெரிய வேண்டாமா?
சென்னை மவுண்ட் ரோட்டிலும் ஜார்ஜ் டவுனிலும் இருந்த ‘பிராமணாள்’ உணவு விடுதிகளில் குஷ்டரோகிகளும், நாய்களும், பறையர்களும் உள்ளே நுழையக் கூடாது என்றிருந்த நிலை எல்லாம் உண்டே!
பெரிய வணிகராக இருந்த வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகரத் தலைவராக இருந்து ஆற்றிய அரும்பணிகள் சாதாரணமானதா? மதிய உணவுத் திட்டத்தை முதலில் அறிமுகப் படுத்தியதும் அவர்தானே.
வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்தபோது அவரை வரவேற்க சென்னை மாநகர தலைவராக இருந்த தியாகராயர், கோட்டும், சூட்டும் அணிந்துதான் வர வேற்க வேண்டும் என்று ஆளும் வர்க்கம் வற்புறுத்தியபோது, அதனை மறுத்து தாம் எப்பொழுதும் அணியும் அந்த உடை யுடன்தான் (வெள்ளுடை வேந்தர் அவர்) வரவேற்பேன் என்று சொன்ன சுயநலமற்ற வீரர் ஆயிற்றே - அதே நேரத்தில் வேல்ஸ் இளவரசரை வாழ்த்தி வரவேற்று லாலி பாடியவர் தான் சுப்பிரமணிய பாரதியார்.
மற்றொரு நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் டி.எம். நாயர் அந்தக் காலத்திலேயே லண்டன் சென்று படித்த காது, மூக்கு, தொண்டை, (ணிஸீt) மருத்துவ நிபுணர்; தாம் சம்பாதித்ததை எல்லாம் பொதுத் தொண் டுக்கு அர்ப்பணித்தவர். நீதிக்கட்சியின் மும்மூர்த்திகள் என்று இவர்கள் போற்றப்பட்டனர்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காக லண்டன் வரை சென்று பாராளுமன்றத்தில் சாட்சி சொல்லச் சென்ற இடத்தில் மரணத்தைத் தழுவியவர்.
அவர் மரணம் அடைந்தபோது திருவல் லிக்கேணி பார்ப்பனர் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள பிள்ளையார் கோயிலில் ஆயிரம் தேங்காய்களை உடைத்தனர் என்பது தெரியுமா?
“தென்னாட்டு லெனின்” என்று டாக்டர் நாயரை தந்தை பெரியார் புகழ்ந்து எழுதினார் என்பதை லெனின் விரும்பிகள் அறிவார்களா?
நீதிக்கட்சி வெற்றி பெற்ற நிலையில், முதல் அமைச்சராக கட்சித் தலைவர் என்ற முறையில் வாய்ப்பு இருந்தும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து, சக தோழர் கடலூர் சுப்பராய ரெட்டி அவர்களைப் பரிந்துரைத் தாரே!
அந்த நீதிக்கட்சி ஆட்சியில்தான் பொது வீதிகளிலும், கிணறுகளிலும் தாழ்த்தப்பட் டோர் புழங்கும் உரிமை ஆணை பிறப்பிக் கப்பட்டது. (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924). தொழிலாளர் துறை என்ற ஒன்று உருவாக் கப்பட்டு முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, வீட்டுமனை, பொருளாதார வளர்ச்சி என்கிற திசையில் வேக நடைப் போட்டதே!
ஓர் ஆதி திராவிடரை முதன் முதலாக மந்திரியாக்கிய பெருமை நீதிக்கட்சியையே சாரும். தாழ்த்தப்பட்டோரின் ஆலயப் பிரவேசத்திற்காகத் திருச்சி மலைக்கோட் டையில் தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்ற, பணக்கார உயர் ஜாதிக் குடும் பத்தைச் சேர்ந்த நீதிக்கட்சியின் முன்னணி வீரர்கள் ஜே.என். இராமநாதன், திரு. டி.வி. சுப்ரமணியன் ஆகியோர் பார்ப்பனரின் கைக் கூலிகளால் மலைக்கோட்டைப்படி களில் உருட்டி விடப்பட்டு நையப்புடைக் கப்பட்டனர்.
காங்கிரசு மாநாடுகளில் தாழ்த் தப்பட்டோருக்குத் தனி உணவு வரிசை இருந்த கால கட்டங்களில், நீதிக்கட்சி மாநாடுகளில் சமபந்தி போசனங்கள் நடத் தப்பட்டன. ஆதிதிராவிடர் மாநாடுகளில் கலந்து கொண்டு நீதிக் கட்சித் தலைவர்கள் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பேருந்துகளில் தாழ்த்தப்பட் டோரை அனுமதிக்காமல் இருந்த இழி வினைச் சட்டம் போட்டு நடைமுறையில் ஒழித்துக் கட்டியவர்கள் நீதிக்கட்சியினர்.
“தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காத கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் கிடையாது’ என்று துணிச்சலாகச் சட்டம் போட்டு செயல்படுத்தியவர்கள் நீதிக்கட்சியினர்.
‘ஜஸ்டிஸ் கட்சி என்றால் மந்திரிகளும் பல பணக்காரர்களும் தான் சில மக்கள் ஞாபகத்துக்கு வருகிறதே தவிர, அதன் கொள்கைகள் அது செய்த வேலைகள் ஆகியவை அநேகருடைய ஞாபகத்துக்கு வருவதில்லை’. -
‘குடிஅரசு’ 29.3.1936
“(நீதிக்கட்சி) இந்த முறையில்தான் சமூக சீர்திருத்தத் துறையிலும் தீண்டாமை ஒழிப்பு முதல் தேவதாசிகள் ஒழிப்பு மசோதா விபசாரிகள் ஒழிப்பு மசோதா, தேவஸ்தான பணம் பொது நலமான காரியங்களுக்குப் பயன்படுத்தும் மசோதா, லேவா தேவிக் காரர்கள் மசோதா, இனாம் குடிகள் மசோதா என்பவைகளான பலவற்றில் அடுக்கடுக் காகக் கொண்டு வந்து சட்டங்களாக ஆக்கிக் கொண்டு வரப்படுகிறது.
இந்த மசோதாக்களில் எதையாவது ஒன்றைக் காங்கிரசோ, பார்ப்பனர்களோ ஆதரித்தார்கள் என்றாவது, எதிர்க்கா மலாவது இருந்தார்கள் என்றாவது இன்று யாராவது சொல்ல முடியுமா என்பதோடு அவை எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்கும் இடையில் நிறைவேற்றி சட்டமாக்கிய பிறகாவது அதை உண்டாக்கியவர்களின் உத்தேசப்படி அமல் நடத்தவாவது விட் டார்களா என்பதை யோசித்தால் பார்ப் பனர்களின் யோக்கியதையும், காங்கிரசின் யோக்கியதையும் மூடனுக்கும் நன்றாய் விளங்கி விடும்.
- ‘குடிஅரசு’ 1.3.1936
பார்ப்பனீயத்தைத் தவிர்த்து பகுத்தறிவு சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியதோடு, அதற்குச் சட்ட வடிவம் கொடுத்த சாதனை - சமூகப் புரட்சி தமிழ்நாட்டிலன்றி, 25 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சி புரிந்த சி.பி.எம். மேற்கு வங்கத் தில் சாதிக்க முடியாதது ஏன்?
தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் அதன் வழிவந்த திமுக ஆட்சியில் தானே சட்டம் இயற்றப்பட்டது.
பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் நீக்கும் தீர்மானம் 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதோடு, அந்த மாநாட்டிலேயே ஜாதிப் பட்டத்தை துறந்த ஜாதி ஒழிப்பு வீரர்களை போல இந்தியாவில் வேறு எங்கு பார்க்க முடியும்?
கம்யூனிசம் பேசும் பெரிய தலைவர் களே தாம் பெயருக்குப் பின்னால் தொங் கும் ஜாதி வாலை வெட்டிக் கொள்ளாத பரிதாபத்தை என்ன சொல்ல!
இந்தியாவிலேயே சமூக நீதிக்கு வித் திட்டு வகுப்புவாரி உரிமை என்ற இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தது நீதிக்கட்சி யல்லவா!
இந்தியாவிலேயே பெண்களுக்கு வாக்குரிமை முதன் முதல் அளித்ததும் நீதிக்கட்சி ஆட்சிதான்!
இந்தியாவிலேயே ஜாதி ஒழிப்பை மய்யப்படுத்தி பெரியார் நினைவு சமத்துவப் புரத்தை உருவாக்கியது திராவிடர் இயக்கமான தி.மு.க ஆட்சிதானே?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - தந்தை பெரியார் அவர்களின் கருத்துப்படி அதற்காக சட்டம் தி.மு.க.. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதே - இதற்கு இணையாக கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்காளத்திலேயோ கேரளாவிலேயோ காட்ட முடியுமா?
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பொற் பதக்கம் அளிப்பு முதல் அடுக்கடுக்கான மகளிர் உரிமை முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தானே நிறைவேற்றப் பட்டன. மூவலூர் இராமாமிர்தம் திருமணம் உதவித் திட்டம், ஈ.வெ.ரா. நாகம்மையார் ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்,
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவைத் தாய்மார்களின் மகள் திருமண நிதி உதவித் திட்டம், அன்னைதெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம் - இவை எல்லாம் திமுக ஆட்சியின் முற்போக்கு சமதர்மத் திட்டங்கள் இல்லையா!?
சமூக ஏற்றத் தாழ்வைப் போலவே பொருளாதாரத் துறையில் உள்ள ஏற்றத் தாழ்வினையும் ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைத் தி.மு.க. ஆட்சி வெறும் வாய்ஜாலமாக வைக்காமல் கை வண்ண மாகச் செயலாக்கிக் காட்டியுள்ளதே!
(1) அண்ணா சமர்ப்பித்த முதல் பட்ஜெட் அறிக்கையிலேயே போக்குவரத்துத் துறை யில் 75 மைல்களுக்கு மேற்பட்ட பஸ் ரூட்டுகளை, அவை காலாவதி ஆக ஆக அரசு நாட்டுடைமை ஆக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அது செயலாகியது.
அதனை எதிர்த்துப் பஸ் முதலாளிகள் உயர்நீதி, உச்சநீதிமன்றங்களுக்கு சென்று முயன்றும் தோல்வியடைந்தனர்.
1969 மார்ச் வரை 380 பஸ் ரூட்டுகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. 1969-70-இல் 60 பஸ் ரூட்டுகள் அரசுடைமை ஆக்கப்பட் டன. ஆக சுமார் 440 பஸ் ரூட்டுகள் அரசினரால் எடுத்துக் கொள்ளப்பட்டன.
பஸ் முதலாளிகளையே நம்பிப் பழைய காங்கிரஸ் தேர்தலை நடத்தியது என்ற நிலையில், அவர்களால் முடியாததை விஞ் ஞான பூர்வ சோஷலிசத்தைத் தேர்தல் பிர கடனமாகக் கொண்ட தி.மு.க. செய்து காட்டியது!
2) நில உச்ச வரம்புச் சட்டம் காங்கிரஸ் காரர்கள் காலத்தில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று வைக்கப்பட்டது. அதுவும் காங்கிரசில் அப்போது அமைச்சர்களாகவும் அதற்குத் தேர்தல் நிதி கொடுப்பவர் களாகவும் உள்ள பெரும் நிலப் பிரபுக்கள் பாதிக்கப்படாத வகையில் ஏராளமான விலக்குகள் - மேய்ச்சல்நிலம், கரும்பு நிலம், சவுக்கு நிலம் - இப்படிப் பலவற்றினை மனத்திற் கொண்டே விலக்குத் தந்ததுபோல் செய்தனர்.
தி.மு.க. ஆட்சி நில உச்ச வரம்பினைத் திடீரென 15 ஸ்டாண்டர்டு ஏக்கராவாகக் குறைத்ததோடு, விலக்குகளை நீக்க ஒரு குழுவும் அமைத்து, அதன் அறிக்கைமீது செயல்படக் காத்திருந்தது.
இதன் காரணமாக இங்கு நிலப்பறி இயக்கம் வெற்றி பெற முடியாத நிலை ஏற் பட்டது. சட்டப் பூர்வமாகவே ஆதிக் கத்தைத் தடுக்க முயலுகையில் வன்முறை வளராதல்லவா?
(3) நிலமற்ற ஏழை எளிய மக்களுக்குத் தி.மு.க. ஆட்சி, சுமார் 2லு லட்ச ஏக்கரா விற்கு மேல் பட்டா வழங்கியது.
தி.மு.க. அரசு 4 ஆண்டுகளில் வழங்கியது 2லு லட்சம் ஏக்கர்களுக்கான பட்டாக்கள்.
அதில் சில இடங்களைச் சட்டமன்ற உறுப்பினர்களில் யார் பெற்றிருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டு மென்றும், அந்தப்படி கொடுக்கா விட்டால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ளச் சொல்லி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடும் என்றும் முதல்வர் கலைஞர் கூறியுள்ளார்.
காட்டு நிலங்களில் விவசாயத்திற்குப் பயன்படுத்தாத நிலங்களையும், ஏழைகளுக் குப் பட்டாக்களாக வழங்க வகை செய்யும் வகையில் திருத்தப்படும் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார்.
(4) தமிழ்நாடு 1969ஆம் ஆண்டு பண்ணைத் தொழிலாளர் நியாய ஊதியச் சட்டம்
பண்ணைத் தொழிலாளர்களுக்கு நியாய விகிதங்களில் ஊதியம் கொடுப்பதற்கும், அதற்குத் தொடர்பானவற்றுக்கு வகை செய்வதற்குமான சட்டமாகும் இந்தச் சட்டம்.
இச்சட்டத்தின் மூலம் அறுவடைக்கான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதுடன், நிர்ண யித்த நியாய ஊதியம், கதிரடிக்கப்படுகிற களத்துமேட்டிலேயே கொடுக்கப்பட வேண்டும் என்றும், தொடர்புள்ள பண்ணைத் தொழிலாளர்களுக்கு நியாய ஊதியம் கொடுக்கப்படாமல் களத்துமேட்டிலிருந்த விளை பொருளின் எந்தப் பகுதியையும் அப்புறப்படுத்தக் கூடாது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
உரிய காலத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் விளைவாகப் பண்ணைத் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கிடைக்கவும் தஞ்சை மாவட்டத் தில் ஒழுங்காக அறுவடை நடக்கவும் ஏதுவாயிற்று.
(5) புஞ்சை நிலங்களுக்கு வரிவிலக்கு
வசதிக் குறைவான விவசாயிகட்கு வரிச்சுமையை நீக்கப் புன்செய் நிலங் களுக்கு அடிப்படைத் தீர்வை நில வரி விலக்கு.
(6) 5 ஏக்கரா உள்ள சிறு உழவர்க்கு நஞ்சைக்கும் வரி விலக்கு
கெய்க்வார் கமிட்டி பரிந்துரையை ஏற்று, 5 ஏக்கரா வரை உள்ள விவசாயிகளின் நஞ்சைகட்கு வரி விலக்கு அளிக்க அரசு முனைந்துள்ளது. இதனால், அரசுக்கு அன்று இழப்பு ரூ.6 கோடி.
ரூ.7,000 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது தி.மு.க. ஆட்சி தானே!
மாநில சுயாட்சியைக் கை விட்டு விட்டதாக ஒரு குற்றச்சாற்று வைக்கிறது சி.பி.எம். நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் 33 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற சமூக நீதிக் குரலை திராவிடர் கழகம் போன்ற சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகள் ஒலித்தன.
மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு அவர்களின் கருத்தும் அதாகத்தானிருந்தது ஆனால் சி.பி.எம். மகளிர்ப் பிரிவு அதனை எதிர்த் தது என்பதுதான் வேடிக்கை. இதனைச் சுட்டிக் காட்டி அன்றே ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது (22.7.1998).
இந்தியாவிலேயே இந்திக்கு இட மில்லை இரு மொழியே என்ற சட்டம் நடை முறையில் உள்ளது தமிழ்நாட்டில் தான். அதே நேரத்தில் சி.பி.எம். ஆண்ட மேற்கு வங்காளத்தில் மூன்று மொழிகள் - கேரளாவிலும் அதே நிலைதானே.
இந்தியஅரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம் பெற்ற 22 மொழிகளும் ஆட்சி மொழிஆக வேண் டும் என்று குரல் கொடுப்பது தமிழ்நாட்டில் தான் திராவிடர் கழகம்தான் - திமுக தான்.
தமிழ் செம்மொழி என்ற தகுதியைக் கொண்டு வந்ததும் திராவிடர் இயக்கமான திமுக ஆட்சியே!
கல்வியைப் பொதுப் பட்டியலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வரும் சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகமும், அரசியல் கட்சியான திமுகவும் தானே! இவையெல்லாம் மாநில சுயாட்சிக் கொள்கை இல்லை என்று சொல்லப் போகிறதா சி.பி.எம்.!?
தி.மு.க. முதலாளித்துவ கட்சி என்ற குற்றச்சாற்று சரியானதுதானா? அதே இடதுசாரிகள் இதே திமுகவில் கூட்டணி வைத்துக் கொண்டிருந்ததே - இப்பொழுது திடீர் என திமுக முதலாளித்துவக் கட்சி ஆகி விட்டதா?
முதலாளித்துவ கட்சியா? சோசலிசக் கட்சியா என்ற முத்திரை குத்தும் அதிகாரம் மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளதா!?
பி.ஜே.பி.யும், காங்கிரசு முதலாளித்துவக் கட்சி என்று குற்றச்சாட்டும் சி.பி.எம். காங்கிரஸ் அணியோடு ஆலிங்கனம் செய்து கொண்டு இருக்கவில்லையா? தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் (என்.டி.ஏ.) சி.பி.எம்மைச் சேர்ந்த மூத்த தலைவர் சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகராக இருந்தது எப்படி? புதிய பொருளாதாரக் கொள்கை அமலில் இருந்த கால கட்டத்தில் தானே இவை எல்லாம் நடந்தன.
மாநிலங்களவைத் தேர்தலில் தம் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்வாகும் கால கட்டங்களில் திமுக முதலாளித்துவத்துக்குத் துணை போகும் கட்சியாகக் கண்களுக்குத் தெரியாதா?
அமெரிக்காவோடு அணு ஒப்பந்தத்தை மத்திய காங்கிரஸ் ஆட்சி ஏற்படுத்திக் கொண்டதற்காகக் காங்கிரசோடு துண்டித் துக் கொண்டது தவறானது எனக் காலந் தாழ்ந்து கருத்துச் சொன்னதுதானே சி.பி.எம்.
இடதுசாரிகள் காங்கிரசோடு இணைந் திருந்தால் அது முதலாளித்துவக் கட்சி யில்லை - புதிய பொருளாதாரக் கொள் கைக்கு அப்பாற்ப்பட்டது - அப்படித்தானே
மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு ஆட்சியின் போதும் சரி அதற்குப்பின் புத்ததேவ் பட்டாச்சாரியா ஆட்சிக் கால கட்டத்திலும் சரி - மத்திய அரசு கடை பிடித்து வந்த புதிய பொருளாதாரக் கொள்கையிலிருந்து துண்டித்துக் கொண்டு தனி ஆட்சி நடத்தியதா?
டாட்டா தொழிற்சாலை தொடங்குவ தற்காக விவசாய நிலங்களை பறி முதல் செய்து கொடுத்த ஆட்சி யாருடைய ஆட்சி?
சிங்கூரில் என்ன நடந்தது?
வெகு ஜனப் போராட்டத்தின் காரண மாக ஏற்பட்ட நிலை என்ன? அதற்காகக் கொடுக்கப்பட்ட விலைதானே சிபிஎம் ஆட்சியைப் பறி கொடுத்தது?
தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பிஜேபியோடு கூட்டு சேர்ந்திருந் தனர் என்று குற்றம் சாட்டும் இதே இடதுசாரிகள் இப்பொழுது மதிமுகவையும் சேர்த்துக் கொண்டு “பஞ்ச பாண்டவர் அணி” என்ற ஒரு நிலை இருக்கிறதே - மதிமுக பிஜேபி கூட்டணியில் இருந்த தில்லையா?
ஊழல் ஒரு காரணம் என்றால் அதிமுக வோடு கூட்டணி வைத்த போது அது எங்கு சென்றது?
மற்றவர்கள் மீதெல்லாம் சகட்டு மேனிக் குக் குற்றப் பத்திரிகை படிக்கும் சி.பி.எம். மீது படிக்க வேண்டிய குற்றப் பத்திரிகை யில் இடம் பெற வேண்டியவை ஏராளம் உண்டு. மேற்கு வங்கத்தில் பொதுவுடைமைக் கொள்கையாளரும் பொருளாதார வரலாற் றுப் பேராசிரியருமான அமியா பக்சி இந்து ஏட்டுக்கு அளித்த பேட்டி (31.8.2015)க்கு சி.பி.எம். என்ன பதில் சொல்லப் போகிறது என்பது சுவையான ஒன்றே! (பெட்டி செய்தி காண்க)
திரிபுரா மாநிலத்தில் சமர் ஆச் சார்ஜி என்ற மார்க்ஸிஸ்ட் உறுப்பினர் பண மெத் தையில் புரண்ட செய்தி சாதாரணமானதா? அது பிரச்சினையானதும் அவர் சொன்னது தான் அதற்கு மேலும் ‘கிளைமேக்ஸ்!’ “சில கம்யூனிஸ்டுத் தோழர்கள் நிறைய சொத்து இருந்தாலும் இல்லாதவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள். நான் அப்படி அல்ல” என்று சொன்னாரே பார்க்கலாம். (‘தினத்தந்தி’ 19.10.2013 பக்கம் 11)
கேரள மாநில சி.பி.எம். செயலாளர் தோழர் பினாயி விஜயன் அவர்களின் மகன் கரனின் திருமண வைபவம் பிர்லா வீட்டுத் திருமணம் போல கோலாகலமாக நடந்ததே!
அடுத்து சித்தாந்தப் பிரச்சினைக்குள் வரலாம். மத நம்பிக்கையாளர்கள் மார்க் ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்வ தற்குத் தடையில்லை (Does not bar persons who have religious faith from Joining the party) என்று சொன்னவர்தான் பிரகாஷ்காரத்.
இது இப்படி இருக்க கேரளத்தில் என்ன நடந்தது? சி.பி.எம். நாடாளுமன்ற உறுப் பினர் கே.எஸ். மனோஜ், மதவழிபாடுகளில் பங்கேற்றதை கட்சி எதிர்த்ததால் தனது மத நம்பிக்கையைக் கைவிட முடியாது என்று 2009இல் கட்சிக்கே முழுக்குப் போட்டார் - ஏனிந்த முரண்பாடு?
கேரள மாநில முதல் அமைச்சராக இருந்த ஈ.கே. நாயனார் வாடிகன் போப்பைச் சந்தித்தபோது கீதையைத்தானே நினைவுப் பரிசாகக் கொடுத்தார். கர்மா வினையைப் பற்றிப் பேசும் நூல்தான் கார்ல் மார்க்ஸின் சீடருக்குக் கிடைத்ததா? கொடுத் தது மட்டுமல்ல - அப்படிக் கொடுத்ததில் என்ன தவறு என்று வக்காலத்து வாங்கியது தான் கொடுமை!
மகர ஜோதி என்பது மோசடி என்பது எல்லோருக்கும் தெரியும் அதுபற்றி கேரள மாநில முதல் அமைச்சர் அச்சுதமேனன் என்ன கூறினார்?
“மகர ஜோதியின் உண்மை தன்மை குறித்து உறுதி செய்வதற்காக ஜோதிடர் களிடமோ, அல்லது வானியல் ஆராய்ச்சி யாளர்களிடமோ கேரள அரசு ஆலோ சனை நடத்தாது. சபரி மலையின் கிழக்கே உள்ள பொன்னம்பலமேடு பகுதி முழுவதும் வானில் தெரியும். “மகரஜோதியை” புனிதமான நட்சத்திரமாக லட்சக்கணக்கான பக்தர்கள் கருதுகின்றனர். மக்களின் நம்பிக் கையில் தலையிடுவது தேவையற்றது. (‘தினத்தந்தி’ 21.1.2011 பக்கம் 9)
மற்றொரு முக்கிய தகவல் இந்திய பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்த ஜோசப் எடமருகு அவர்கள் கேரள மாநில முதல் அமைச்சர் ஈ.கே. நாயனார் அவர்களை டெல்லியில் சந்தித்து , மகர ஜோதிபற்றி விளக்கினார்.
‘மகரஜோதி என்பது உண்மையானதல்ல - செயற்கை யாக உருவாக்கப்பட்டதுதான் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இதில் நீங்கள் தலையிடாதீர்கள்’ என்று சொன்னது எந்த வகையில் நாணயம்? (ஜோசப் எடமருகுடன் பேட்டி ‘விடுதலை’ 27.2.1993)
மேற்கு வங்கத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் சுபாஷ் சக்ரவர்த்தி (சி.பி.எம்) கொல்கத்தா காளிக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் கழித்தார் - உண்டியலில் காணிக்கையும் செலுத்தினார் (2006 செப்டம்பர்) மூத்த தலை வரும் அம்மாநில முதல் அமைச்சருமான ஜோதிபாசு அதனைக் கடுமையாக விமர்சித்த போது, அவ்வமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா?
‘நான் முதலில் ஓர் இந்து, அடுத்து பிராமணன், மரபுகளை என்னால் மீற முடியாது. அடுத்து நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று கூறினாரே
கேரளாவில் சாஸ்தம் கோட்டாவில் உள்ள சாஸ்தா கோயிலில் குரங்கு ஒன்று செத்துப் போய் விட்டதாம்; கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என்.கே. பிரேமச்சந்திரன் (சி.பி.எம்) சட்டமன்ற உறுப்பினர் குஞ்சுமேனன் ஆகியோர் செத்துப போன குரங்குக்கு செங்கொடி போர்த்திப் புரட்சி வணக்கம் செய்தது எந்த வகை மார்க்சியம்?).
மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தன் பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத்திய வர்தானே - இந்த லட்சணத்தில் அழைப்புப் போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும் கொடுத்ததுதான் வேதனை!
2010 மே 18இல் ஒரு அதிர்ச்சி- ஆதி சங்கரர் பிறந்த நாளை தத்துவவாதியின் பிறந்த நாளாகக் கொண்டாடியது சி.பி.எம். அரசு. அங்கு வந்த சிருங்கேரி சங்கராச் சாரிக்கு காவல்துறையின் அணி வகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டதே - அது எந்த அடிப்படையில்?
இன்னொரு தகவல் அது சீதாராம் யெச்சூரி சம்பந்தபட்டது.
காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந் திர சரஸ்வதி கொலைக் குற்றத்தில் சம்பந் தப்பட்டார் என்பதற்காகக் கைது செய்யப் பட்டது குறித்து சி.பி.எம். பொலிட் பீரோ உறுப்பினராக அப்பொழுது இருந்த (இப்பொழுது அகில இந்திய செயலாளர்) போது என்ன சொன்னார் தெரியுமா?
The CPI (m) Leader expressed unhappiness over the way the seer was treated.
சங்கராச்சாரியாரை கைது செய்த விதம் தமக்கு வருத்தத்தை அளிப்பதாக மட்டும் சொல்லவில்லை. தனியாக ஒரு மாளிகை யில் வைத்து விசாரித்திருக்க வேண்டும் என்று சொன்னாரே - அது ஏன்? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஒரு மார்க்ஸிஸ்ட் வாதியின் கருத்தாக இல்லாமல் போனது ஏன்?
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவரும் மலைவாழ் குடி மகனாரும், கற்றறிந்த அறிஞரும், அனுபவமிக்கவருமான ஜி.ஜி. ஸ்வெல் அவர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேசிய முன்னணியால் அறிவிக்கப்பட்டார். இந்தத் தேசிய முன்னணியுடன் அதுவரை இணைந் திருந்த சி.பி.எம். என்ன முடிவெடுத்தது தெரியுமா? காங்கிரஸ் வேட்பாளரான சங்கர்தயாள் சர்மாவை அல்லவா ஆதரித் தது! பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆறுமுறை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தபோது, காங்கிரசின் வேட்பாளர் சங்கர்தயாள் சர்மாவின் வெற்றியின் மூலம் நிலை கொண்டது;
அதற்கு துணை போனதுதான் சி.பி.எம். யார் அந்த சங்கர்தயாள் சர்மா? பிராமணர்களிட மிருந்து இடஒதுக்கீடு அடிப்படையில் உத்தியோகங்களை எடுத்துச் செல்லலாமே தவிர, அவர்களின் மூளையை எடுத்துச் செல்ல முடியாது என்று பார்ப்பன ஆண வத்தோடு சொன்னவர் - அவருக்குத்தான் சி.பி.எம். ஆதரவு.
மாநில சுயாட்சி - தேசிய இனப் பிரச் சினையில் சி.பி.எம். நிலைப்பாடு என்ன?
1974ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை காலத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்த மிகப் பெரிய சி.பி.எம். தலைவர் பி. இராமமூர்த்தி
***
ஈழத் தமிழர் வெறுப்பு என்பதில் ஈட்டி முனையாக இருந்த இலங்கை ஜனதா விமுக்தி பெரமுனா என்ற சிங்கள வெறிக் கட்சியின் பிரதிநிதிகள் - சி.பி.எம். கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு அழைக்கப்பட் டனர். அதே போல இலங்கையில் நடை பெற்ற அவ்வமைப்பின் மாநாட்டிலும் சி.பி.எம். பிரதிநிதிகள் கலந்து கொண்ட துண்டு.
2001இல் சிங்கள இராணுவத்தில் ஆனையிறவு முகாமைத் தகர்த்தது விடுதலைப்புலிகள் சேனை! அடுத்த குறி யாழ்ப்பாணம்தான் புலிகளுக்கு; அப் பொழுது தமிழக சி.பி.எம்.இன் மூத்த தலைவரான தோழர் ஆர். உமாநாத் வெளியிட்ட அறிக்கை என்ன? விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைத் தாக்கினால், அதனை முறியடிக்க இலங்கை அரசுக்கு இந்தியா இலவசமாக ஆயுதங்களைக் கொடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டாரே!
மாலை மலர் ஏட்டுக்கு தோழர் டி.கே. ரெங்கராஜன் அளித்த பேட்டியில் என்ன சொன்னார்? இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை இலங்கை அரசு தான் மேற்கொள்ள வேண்டும் என்றாரே!
மாலை மலரின் மற்றொரு கேள்வி; பன்னாட்டு விசாரணையை ஏன் எதிர்க் கிறீர்கள்?
டி.கே.ஆர். பதில்: இலங்கை இறை யாண்மையுள்ள நாடு.
கேள்வி: தேசிய இனங்களில் சுயநிர் ணயப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டு மென்ற மார்க்ஸிஸ்ட் கொள்கையை சி.பி.எம். கட்சி கைவிட்டு விட்டதா?
தோழர் டி.கே.ஆர். பதில்: அதை வெளியிலிருந்து திணிக்கக் கூடாது.
(மாலை மலர் 5.3.2012).
எப்படி இருக்கிறது? வெளியிலிருந்து திணிக்கக் கூடாது என்றால், இலங்கைக்கு வெளியே அந்நாட்டைப்பற்றி எதையும் பேசக் கூடாது. எந்தக் கருத்தையும் சொல் லக் கூடாதே!
இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. இதைப் பற்றியெல்லாம் அம்பலப் படுத்த வேண்டும் என்பது நமது ஆசையும் அல்ல நோக்கமும் அல்ல -
ஆனால் சொல்லும்படி வைத்தவர்கள் பிரகாஷ்காரத்தும், சீதாராம் யெச்சூரியும், பிருந்தாகாரத்தும்தான்.
திமுக என்ற பெயரால், திராவிட இயக் கத்தையும், நீதிக்கட்சியையும் கொச்சைப் படுத்துவதை எப்படி ஏற்க முடியும்?
காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிகளைப் புறக்கணிப்பீர்! மாற்று அரசியல் அணியை ஆதரிப்பீர்!
டில்லியில் நடைபெற்ற தேசிய சிறப்பு மாநாட்டில் பிரகாஷ்காரத் அறைகூவல்.
(‘தீக்கதிர்’ 2.7.2013 பக்கம் 3).
இதன்படி பார்த்தால் திமுகவை வெறுப்பது குற்றமல்லவா?
மற்றுமொரு எடுத்துக்காட்டு
“லாலு பிரசாத் யாதவை எடுத்துக் கொண்டால் அவரோடு ஒருங்கிணைந்த இயக்கங்களில் இடதுசாரிக் கட்சிகள் பங் கேற்றுள்ளன. ஆனால் இதன் விளைவாக இடதுசாரிக் கட்சிகளின் வெகு ஜனபலம் குறைந்துள்து. தமிழகத்தைப் பொறுத்த வரை இரண்டு திராவிடக் கட்சிகளுமே இடதுசாரிக் கட்சிகளுடன் உறவு வைக்கத் தயாராக உள்ளன.
காரணம் தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. ஆனால் இந்தத் தேர்தலில் ஜெயலலிதா இரண்டு கம்யூனிஸ் டுக் கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் மட்டும் தர முன் வந்தார். எந்தவொரு திராவிடர் கட்சிகளும் முன்னெப்போதும் இவ்வாறு கூறியதில்லை.
எங்களுக்குப் பல்வேறு கருத்து வேறுபாடு இருந்த போதும் பா.ஜ.க.தான் உடனடிப் பேரபாயம் என் பதை உணர்த்துவோம். அந்தக் கட்சியை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க சமாஜ்வாதி மற்றும் பல்வேறு ஜனதா தளக் கட்சிகளு டன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளோம். இதுதான் எங்கள் நடைமுறை உத்தியாக உள்ளது.
(‘பிசினஸ் லைன்’ பேட்டி - 14.5.2014 - தமிழில் தீக்கதிரில் 15.5.2014 பக்கம் 3)
லாலு மீதும் ஊழல் குற்றச்சாற்று உண்டு. அவரோடு கூட்டு வைத்துக் கொள்ள லாமாம். ஆனால், தி.மு.க.வோடு கூட்டு வைத்துக் கொள்ளக் கூடாதாம்.
இந்தியாவிலேயே சமூக சீர்திருத்த நோக்கத்தோடு செயல்படும் அரசியல் கட்சி தி.மு.க. தானே - நியாயமாக திமுக தோளில் கை போட வேண்டிய மார்க்ஸிஸ்டுகள் மருண்டு ஓடுவது ஏன்?
என்ன அளவுகோல் காம்ரேடுகளுக்கு என்று கேட்கத் தோன்றுகிறதா இல்லையா?
கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவது புத்திசாலித்தனமல்ல - பொறுப்பானதும் அல்ல அல்லவே அல்ல.
********************************************************************************
0 comments:
Post a Comment