Search This Blog

9.9.13

ஆரியக் கடவுள்கட்கு ஓர் அறைகூவல்! - அறிஞர் அண்ணா

புலித்தோல் போர்வை - அறிஞர் அண்ணா

இந்து மதத்திலே உள்ள இழுக்குகளைப் போக்கத்தான் வேண்டும் -_- அழுக்கு மூட்டைகளை ஒழிக்கத்தான் வேண்டும். ஜாதி பேதங்களைப் போக்கத்தான் வேண்டும் _- பழைய ஏற்பாடுகளை ஒழிக்கத்தான் வேண்டும். - இந்து மதத்திலே உள்ள கறைகளைப் போக்க வேண்டுமேயல்லாமல், அதையே ஒழிப்பது, அல்லது, நான் இந்து அன்று என்று கூறுவது கூடாது என்று சிலர் போவதுண்டு.

இஸ்லாமியருக்கு இடங்கொடுக்கக் கூடாது என்று எச்சரிப்பர், இந்து மார்க்கத்திலே பார்ப்பன ஆதிக்கம் இருப்பின் அதை ஒழிக்க முனைவோம், ஆனால், இந்து மார்க்கத்தை விட்டுவிடக் கூடாது என்று பேசுவர். இந்துக்களுக்கே இந்தியா சொந்தம்; -இந்தியாவில் இந்துக்களின் ஆட்சியே ஏற்படவேண்டும் என்று முழக்கமிடுவர். இவர்கள் வீரசவர்க்காரின் இராமசேனையினர்.
பாகிஸ்தானை எதிர்க்கப் படை திரட்டும் இவர்கள், தமதிஷ்டம் போல், இந்துஸ்தான் ஆட்சி ஏற்படுத்தினால், என்ன காண்போம் என்பதற்கு, இதுபோது ஓர் அருமையான எடுத்துக்காட்டுக் கிடைத்திருக்கிறது.
தந்திரத்தால் ஊரை ஏமாற்றித் திரிந்த ஒருவன், கழுதைமீது புலித்தோலைப் போர்த்து, இரும்புச் சங்கிலியால் கட்டி வீட்டுக்குள் வைத்துக்கொண்டு, வீதியில் வருவோர் போவோரிடம், புலியைக் கட்டிப்பழக்கும் என்னிடம் எந்தப் போக்கிரிப் பயலாவது வாலாட்ட முடியுமா? என்று கூறி மீசை முறுக்கி வந்தானாம். நெடுநாட்கள், அவன் கூறினதை நம்பினர் மக்கள். ஓரிரவு பூர்ணசந்திரன் அழகுடன் பிரகாசித்தான். வீதியிலே போன பெண் கழுதை தன் பெருத்த குரலெடுத்துப் பாடிற்று. உள்ளே புலித்தோல் போர்த்துக்கிடந்த ஆண் கழுதைக்குக் குஷி பிறந்துவிட்டது. அவ்வளவுதான், அது ஆரம்பித்தது பதில் கீதம்பாட. தந்திரக்காரன் தடிகொண்டு தாக்கினான். கீதம் அதிகப்பட்டது, கும்பல் கூடிவிட்டது, உள்ளே சிலர் சென்று பார்க்க, புலித்தோல் கீழே புரளக் கழுதையின் முதுகில் தடியடி நடந்திடக் கண்டு, தந்திரத்தால் ஊரை ஏய்த்தவனைக் காதைப் பிடித்திழுத்துக் கன்னத்திலறைந்தது. ஏடா போக்கிரி, புலித்தோல் போர்த்திய கழுதையைக் கொண்டா ஊரை ஏமாற்றி வந்தாய் என்று கண்டித்தனர் என ஒரு கதை கூறுவர்.
இந்த மார்க்கத்தைப் புனிதமாக்க, அவ்வப்போது தோன்றிய அடியார்கள், மகாத்மாக்கள், மகரிஷிகள், பாஷ்யக்காரர்கள், ஆச்சார்ய புருஷர்கள் ஆகியோர் செய்ததைவிட, அதிமேதாவித்தனமான காரியத்தைச் செய்யும் திறமை தமக்குண்டு என்று பேசிக்கொண்டுள்ள, இந்து மகாசபைத் தலைவருள் ஒருவரான பாய் பரமானந்தர் சின்னாட்களுக்கு முன்பு, டில்லி சட்ட சபையிலே, சட்ட மெம்பர், சர். சுல்தான் அகமத், இந்துக்களிலே பெண்களுக்கும் சொத்துரிமை தரப்படவேண்டும் என்ற மசோதாவை ஆதரித்துப் பேசுகையிலே, இந்து மார்க்கத்தைப் புனிதமாக்கி, இஸ்லாமியரின் ஆதிக்கத்தை ஒடுக்கப்போவதாக ஓங்காரக்கூச்சலிடும் பரமானந்தர், மிகுந்த சோகமுற்று, முகத்தைச் சுளித்துக் கொண்டு, மார்பிலே அடித்துக்கொண்டு அழுது, அத்தீர்மானத்தை எதிர்த்தார். பெண்களுக்குச் சொத்துரிமை கூடாதாம்! ஜாதி பேதமெனும் பித்தத்துடன், மாதரை இழிவு செய்யும் மடைமையும், இந்து மார்க்கமணியின் ஒளியன்றோ, அதை எங்ஙனம், பரமானந்தர் கைவிடுவார்? ஆளப்பிறந்தவன் ஆண் மகன், அவனிஷ்டத்துக்கு, ஆடிப் பிழைக்க வேண்டியவள்தானே பெண்.
அதோ, தலைமீது கூடையுடன் செல்லும் தையல் யார் தெரியுமோ? மகா உத்தமி, பெயர், நளாயினி.
கூடையிலே என்ன தெரியுமோ? அவள் புருஷன், அவனோர் ரிஷி, குஷ்டத்தால் வாதாடுகிறான், எனவே, அவனை அப்பத்தினி கூடையில் உட்காரவைத்துத் தூக்கிச் செல்கிறாள். தேவாலயத்துக்கா? இல்லை. திருக்குளத்துக்கா? இல்லை. வேறோர் ரிஷியின் பர்ணசாலைக்கா? இல்லை, இல்லை, அவருடைய தாசி வீட்டுக்கு!!
இந்து மார்க்கம் புனிதமானதாகச் சோலைகளிலே பர்ண சாலைகளும், அங்கு வேத ஒலியும் வேள்விப் புகையும் இருந்த அந்த நாட்களிலே, பெண்களின் நிலைமை, எப்படி இருந்ததென்பதற்கு, நளாயினி கதை ஓர் எடுத்துக்காட்டு. புருஷனின் மனதின்படி நடப்பதன்றி வேறு உரிமை கிடையாது. அத்தகைய அதியற்புதமான மார்க்கத்தின் தலைவர், மாதருக்குச் சொத்துரிமையா தருவார்.
அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு ஏன்? கல்லென்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன். பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்தால், பேராபத்து வருமே, என்ற இன்னோரன்ன கூற முடியாதல்லவா, பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்து விட்டால், உயர்வகுப்பென்று உறுமிக் கொண்டு, பிறரை அடக்கியாள்வதும், ஆண் என்று ஆர்ப்பரித்துப் பெண்ணை இழிவு செய்வதுந்தானே, பரப்பிரம்ம சொரூபிகளின் புனித இந்து மார்க்க நீதிகள். அதை இழக்க எப்படிப் பரமானந்தர் துணிவார், பாவம்.
1943இல், உலகு அதிவிரைவில் முன்னேறிய பிறகு, இந்த நாற்றத்தை, நாலாறு பேர் முன்னிலையில், வெட்கமின்றிப் பேசிட முன் வந்தாரே இந்த இந்து மகாசபை வீரர், இவரை எந்தக் கண்காட்சிச்சாலைக்கு அனுப்புவது, இந்து ஆட்சியிலே மாதருக்கு இதுதான் கிடைக்கும்.
ஒரே குடும்பத்தின் மணிகளிலே, ஒன்று மாணிக்கமாக்கப்பட்டு, மற்றொன்று, மண்ணாங்கட்டி-யாக்கப்படுகிறது. சொத்துத் சுதந்திரம் ஆணுக்கு. சமையற்கட்டிலே வேகவும், சயனக் கிரஹத்திலே சாயவும், பெண். இந்த அநீதியை நீக்கி, பெண்களுக்குச் சொத்துரிமைதர, சீர்திருத்தவாதிகள், நீதிவான்கள், வற்புறுத்திப் பேசத்தொடங்கி, ஆண்டுகள் பலவாயின. இன்று, இதை எதிர்க்கும் அவ்வளவு பஞ்சாங்கப்புத்தி படைத்தவராகத்தான், இந்து மகா சபைத்தலைவர் இருக்கிறார், இதைத் தீவிரவாதிகள் கவனிக்க வேண்டுகிறோம்.
வாதாடினார் அவ்வேதியர். விசித்திரமான வாதம், பெண்களுக்குச் சொத்துரிமை தந்தால், குடும்பச் சொத்துரிமை தந்தால், குடும்பச் சொத்துப் பங்கிடப்பட்டுச் சிதறுமாம், எவ்வளவு பேதைமை பாருங்கள். ஒரு குடும்பத்திலே எட்டு ஆடவர் பிறந்து சொத்துரிமையால், பாகப்பிரிவினை செய்து கொள்கின்றனர். ஏர் ஒருவனுக்கு, எருமை ஒருவனுக்கு, இடுப்பொடிந்த பசு மற்றொருவனுக்கு, கூரை கெட்டவீடு ஒருவனுக்கு, கரம்பான வெளி மற்றொருவனுக்கு, என்று சொத்துப் பிரிவினை நடக்கிறது, பாய் பரமானந்தரின் வாய் அது சமயம் மூடிக்கிடக்கிறது. ஆணுக்குத் தருவதுபோலப் பெண்ணுக்கும் சொத்துரிமை தர வேண்டும் என்று கேட்டால், தேள் கொட்டிய மந்தியின் தந்தினம் போல் ஆடுகிறார். மாதரை இழிவு செய்யும் இம்மகானுபவருக்கு, அங்கேயே ரேணுகா எனும் அம்மையார் சரியான சவுக்கடி கொடுத்தார். இந்து மகாசபையின், யோக்யதை எப்படி இருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர்; புலித்தோல் கீழே வீழ்ந்ததும், தந்திரக்காரனின் சூது, ஊராருக்குத் தெரிந்த கதை போல்.

ஆரியக் கடவுள்கட்கு ஓர் அறைகூவல்!

மூவரே! தேவரே! சூரியசந்திராதியரே! இந்திரனே, வாயு வருண அக்னியாதிகளே! கந்தா, விநாயகா! காளி! வீரபத்திரா! நாரதா! மற்றுமுள்ள ஆரியக் கடவுள்களே! உங்கள் அனைவரையும், சுயமரியாதைக்காரர்கள், கண்டிக்கிறார்கள், மூடமதியிலே முளைத்த காளான்கள் என்று கூறுகின்றனர், ஆரியருக்காக கற்பிக்கப்பட்ட கரையான்கள் என்று செப்புகின்றனர், மக்களுக்குள் பேதத்தையும் பிளவையும் உண்டாக்கி, ஓர் இனம் உண்டு கொழுத்து ஊராள உற்பத்தி செய்யப்பட்ட உதவாக்கரைக் கருத்தோவியங்கள் என்று உங்கள் அனைவரையும் உரைக்கின்றனர்.

உங்களுக்கும் உக்கிரம் பிறக்கக்கூடுமானால், ஓடி வாருங்கள் பூலோகத்துக்கு, காளைமீது ஏறு, கருடனைத் தேடு, அன்னத்தை நாடு, மயிலைப்பிடி, காக்கையைக் கூப்பிடு என்று உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள வாகனாதிகளை வர்ணிக்க இங்கு காகிதாதிகள் இல்லை. ஆகவே, தத்தம் வாகனமேறி தயக்கமின்றி வாருங்கள்! பாருங்கள், அசாமிலே குண்டு விழுந்து விட்டது! நீங்களோ, நெருப்பைக் கக்கும் கண், நீண்ட சூலம், சக்கரம், கதை தண்டம், வாளாயுதம் வேலாயுதமாகிய ஏதேதோ தாங்கி நிற்பதாக ஏடுகள் கூறுகின்றன. எடுங்கள் உமது ஆயுதத்தை, விடுங்கள் ஜப்பானியர் மீது! ஆமாம்! பிரிட்டிஷாருக்கும், அமெரிக்கருக்கும், சீனருக்கும், இந்நாட்டுச் சேனையினருக்கும், ஏன் வீண் சிரமம், கிளம்பி வாருங்கள், வானவீதியிலே நின்று உமது ஓங்காரக் கூச்சலைக் கிளப்புங்கள், ஓட்டுங்கள், வேட்டுக்காரரை!
இல்லையேல், பிரிட்டிஷ் அமெரிக்க சீன, இஸ்லாமிய, திராவிட நாட்டவரின் வேட்டுகள் வேலைசெய்து, அதன்பின்னர் விரோதி ஓடிய பிறகு, நீங்கள் அதிர்வேட்டு கிளப்பு, அக்கார வடிசல் போடு, ஆடும் அணங்குகளைக் கொண்டுவா, ஆறுகால பூசையைச் செய்து வா, ஆனைவாகன உற்சவம் செய், ஆபரணாதிகளைப் பூட்டு, என்று மட்டும் கேட்டு, ஆரியரை _ எதிரிகளை ஓட்ட என்ற அவசரத் தபாலை எழுதி, தரலோகம், பிரம்மலோகம், இந்திர லோகம், கைலாயம், வைகுண்டம் என்ற விலாசமிட்டு தபால்களிலே சுயமரியாதைக்காரர்கள் போட்டால், இப்படி ஊர்களும் இல்லை, பேர்களும் கிடையாது என்று போஸ்ட் மாஸ்டர் கூறி, குப்பையில் போட்டார் கடிதத்தை. ஆனால் குளித்து முடித்ததுமோ, குளத்தங்கரைக்குப் போகும்போதோ, குளிக்கும் முன்போ, குடல்சரியத் தின்றபிறகு சம்போ மகாதேவா! முருகா! விநாயகா! என்று அவரே அழைக்க அப்படி ஓர் ஆசாமியும் இல்லை, இருப்பதாகக் கூறப்படுவதும் கிடையாது என்பது அறியாமையா? என்று சுயமரியாதைக்காரன் கேட்பல் வேதசாஸ்திர இதிகாசங்கள், படித்துவாழும் வேதியக்கூட்டம் என்ன பதில் கூறும்?

                                     ----------------------- அறிஞர் அண்ணா (திராவிடநாடு - 8.11.1942)

35 comments:

தமிழ் ஓவியா said...


இரயிலைத் தவற விட்டார் பெரியார்

தந்தை பெரியார் அவர்களுடன் நான் என்னுடைய பதினெட்டாவது வயதிலிருந்து தொடர்பு கொண்டு தொண்டாற்றியவன் என்றால் அது மிகையாகாது. என்றாலும் காலத்தை கண் இமைபோல் காப்பதில் மிகவும் அக்கறை கொண்டவர். சீமானாக வாழ்ந்தவர் என்றாலும் அவர்கள் பொதுத் தொண்டிற்கு வந்தபின்பு, மிகவும் சிக்கனமாகவும், எளிய வாழ்வு வாழ்ந்தும் காட்டியவர் ஆவார்கள் ஒரு சமயம் 4-0 ஆண்டுகட்கு முன்பு நானும் தந்தை பெரியாரவர்களும், திருக்க்யிலூர், திருவாளர் மா.நா. குமாரசாமிப் பிள்ளை அவர்களின் இறுதி முடிவுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தோம். அதன்பின், அங்கிருந்து திருக்கோயிலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து காலை 4 மணிக்கு புறப்படுகிற வண்டிக்காக ஸ்டேஷனில் தங்கினோம். நாங்கள் இருவரும் தூங்கி விட்டோம். வண்டி வந்து புறப்பட்டு விழுப்புரம் சென்று விட்டது; விடிந்து காலை 4 மணிக்கு எழுந்தோம்.

வண்டி சென்று விட்டது தெரிந்ததும் அய்யா அவர்கள் என்னை பார்த்து காளியப்பா என்னுடைய வாழ்நாளில் ரயில் வண்டியை தவற விட்டது இதுதான் முதல் தடவை இதுதான் கடைசித் தடவையாகவும் இருக்கும் என்றார். அடுத்த ரயில் வண்டியில் புறப்பட்டு விருத்தாசலம் வழியாக சேலம் சென்றோம்; அங்கு பொது மக்கள் கொடுத்த வரவேற்பில் கலந்து கொண்டு, ஈரோடு பயணம் ஆனோம். இந்த நிகழ்ச்சியை ஒரு பாடமாக பெரியார் தன் வாழ் நாளெல்லாம் கொண்டிருந்தார். அடிக்கடி அய்யா இதை சொல்லு வார்கள். கடிகாரம் பார்த்து ரயிலுக்கு போகக் கூடாது. ரயில் புறப்பட ஒரு மணி நேரத்திற்கு முன்பு போக வேண் டும் என்பார்கள். அந்த அறிவு மொழியை நான் இன்றும் பின்பற்றி வருகிறேன். இதை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

-_ நாகை என்.பி. காளியப்பன்

தமிழ் ஓவியா said...


புத்துலகக் குழந்தையின் பெயர் என்ன?


அய்யா
வாழ்ந்தபோதும்
ஜீவ நதி நீ;
மறைந்த நிலையிலும்
ஜீவித்திருக்கும் நீ;
சித்தாந்தத்தின்
இரகசியம் என்ன?
இன எதிரிகளின்
அணுக்களில் எல்லாம்
நித்தம், நித்தம்
சூடு போடுகிறாயே!
எப்படி? எப்படி?
எதிரும், புதிருமாய்
இருக்கும் இரு முனைகள்கூட,
தவிர்க்க முடியாத
அழுத்தத்தின் பிதுக்கலால்
உமது தொலைநோக்கு
முத்திரை அடிகளுக்கு
முத்தம் பொழியும்
முகாமை என்ன?
காரணம் தெரிகிறது
உன் தத்துவ மூலிகை
காயங்களுக்கு
மருந்தாகிறது
தவித்த வாய்களுக்கு
தண்ணீர்ப் பந்தல்!
அறியாமை இருட்டில்
அகப்படுபவர்களுக்கு - உன்
அறிவுச் சுடர்
உதவும் கரம்!
நம்பிக்கை இழந்த
நரம்புகளுக்கு - தன்
நம்பிக்கை என்னும்
தாது புஷ்டி!
உன்னை ஒதுக்க
முடியவில்லை
ஒதுக்கினால், அவர்கள்
ஒதுக்கப்படுவார்கள்
எந்தப் பிரச்சினையையும்
எடை போட,
ஈரோட்டுத் தராசைத்
தேடுகிறார்கள்
பெரியார் சொல்லி இருக்கிறார்
என்று சொன்னால்போதும்
ஆவேசப் புயல்களும்
அடங்கி விடும்
அப்படி ஒரு அங்குசம்
நீங்கள்!
அப்படி ஒரு
சித்தாந்தம் நீங்கள்!
அமெரிக்கா செல்லவில்லை
நீங்கள்
ஆனாலும் அங்கு
அய்யா விழா!
ஆப்பிரிக்காவிலும்
பெரியார் ஃபவுண்டேஷனாம்
ஆஸ்திரேலியாவிலும்கூட
உங்கள் பேரர்கள்
பெரியார் என்னும்
உயிர் மெய்யெழுத்துக்களை
போதிக்கிறார்கள்
மதம் ரொம்பவே
படுத்துகிறது!
நதிகள் எல்லாம்
மனித ரத்தத்தால்
நிரம்பி, நுரைதள்ளி,
ஓடுகின்றன.
போதுமடா சாமி!
மதத்திற்கு விடை கொடு!
மதமற்ற புத்துலகை
மனம் தேடுகிறது
அங்கு அன்பு நதி உண்டு
அறிவு ஒளி உண்டு
பேதச் சரக்குகள்
விற்பனைக்குத் தடை!
எல்லார்க்கும்
எல்லாம்
சண்டை ஏது?
சழக்கு ஏது?
பொறாமை ஏது?
புகைச்சல் எது?
தொண்டறம் எனும்
தூயமணம் எங்கும்
எல்லார்முகத்திலும்
புன்னகைப் பூக்கள்!
சமநிறை சமன்முறை
சமத்துவ மூச்சுக் காற்று!
அந்த உலகக் குழந்தைக்கு
அய்யா உங்கள் பெயர்தான்
பெரியார் ஈ.வெ.ரா.!

-கவிஞர்
கலி.பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


அப்பாடி ஈ.வெ.ரா. தொலைந்தார்!


நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் உடல் நலம் இல்லாமல் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக் கிறார்கள் என்பதை அறிந்தவுடன் மனிதத் தன்மையற்ற பேடிகள் சிலரும் சிவநேசர்கள் என்றும் தேசியவாதிகள் என்றும் சைவப் பெரியார் என்றும் பெயர் வைத்துக் கொண்டிருக் கும் அயோக்கியர்கள் சிலரும் ஈ.வெ.ராமசாமி இப்படியே எப்பொழுதும் ஓய்வெடுத்துக் கொண்டு வேறு உலகம் போய்விட வேண்டும். போய்விட் டால் நாடு நன்மை அடை யும் என்று முட்டாள் தனமாகவும் சிறிதும் உலக ஞானமில்லாமலும் பத்திரிகைகளில் எழுதினார்கள். தங்கள் சாமிகளை வேண்டிக் கொண்டார்கள். பிறகு ஈ.வெ.ராமசாமி அய்ரோப்பா சுற்றுப் பிரயாணம் போயிருக்கின்றதை அறிந்ததும் அப்பேடிகள் ஆனந்தக் கூத்தாடி னார்கள். நமது இயக்கம் செத்துப் போய் விடும். தங்கள் வயிற்றுப் பிழைப்பு நாடகத்தை யாதொரு விக்கினமும் இல்லாமல் நடத்திப் பொது ஜனங்களை ஏமாற்றலாமென்று கும்மாளம் போட்டார்கள். இதனால் இத்தகைய பேட்டிகளின் அடிவயிற்றில் நெருப்பு எரியும்படி நமது மகாநாடு சென்னையில் வெற்றிகரமாக பொது ஜனங்களின் தாராளமான ஆதரவுடன் நடைபெற்றது. இதி லிருந்தாவது நமது எதிரிகளாகிய வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் நமது இயக்கம் பொது ஜன இயக்கம் என்பதையும் தலைவர்கள் சுயநலத் திற்கான இயக்கம் அல்லவென்பதையும் உணர்ந்து வாயடங்கு வார்களென்று நினைக்கிறோம்.

(ஈ.வெ.ரா. அவர்கள் அய்ரோப்பா சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது சென்னை மகாநாடு சிறப்புற நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது).

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியின் புகழாரம்


தந்தை பெரியாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியின் புகழாரம்

2009 டிசம்பர் 11 அன்று தந்தை பெரியார் சிலை அமைக்க அனுமதித்து அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு மாபெரும் தலைவரின் சிலையை வைப்பதால் மட்டுமே பள்ளிக் குழந்தை கள் தாங்களாகவே நாத்திகர்களாக மாறி விடுவார்கள் என்று மனுதாரர் எவ்வாறு கூறமுடியும்? என்று தனது வியப்பைத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு

அதற்கு மாறாக, பெரியாரின் வாழ்க்கை மற்றும் அவரது சேவை பற்றி பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இதனால், தனித்தன்மை வாய்ந்த ஒரு தலைவரின் கோட்பாட்டை, தத்துவத்தை நன்கு புரிந்து கொள்வது, அரசமைப்பு சட்ட 51-கி பிரிவில் வலியுறுத் தப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், கேள்வி கேட்டு ஆராயும் உணர்வு, சீர்திருத்தம் ஆகிய வற்றை வளர்க்கும் அடிப்படைக் கடமையை ஆற்ற மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என்று நீதியரசர் கூறினார்.

2008 செப்டம்பர் 4 அன்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்த பிறகுதான் சிலை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். ஆனால் உள்ளூர் பா.ஜ.கட்சித் தலைவர்கள்தான் பெரியார் சிலை அமைப்பதை எதிர்த்தனர். ஆர்.எஸ்.எஸ். தோற்றுநர் ஹெட்கேவரின் சிலையை அங்கே வைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத் தினார்கள். அதனால், மனுதாரர் இந்த மனுவை ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலால்தான் தாக்கல் செய்துள்ளார் என்பதும், இந்தக் கட்சியினர் நேரடியாக வழக்காட முன் வராமல், சட்டப்படி செல்லத் தகாதது மட்டுமல்லாமல், இந்த நீதிமன்றத்தால் எப்போதுமே ஏற்றுக் கொள்ளப்பட இயலாத காரணங்களைக் கூற மனுதாரர் போன்றவர்களை நிர்ப்பந்தித்து உள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. பொதுமக்களுக்கோ, பள்ளி மாணவர் களுக்கோ எந்த இடையூறும் இன்றி, வெண்கலச் சிலை ஒன்றை நிறுவி, அதனை பராமரிக்க ஒரு தனியார் அமைப்புக்கு அனுமதி அளித்து இந்த அரசாணையை பிறப்பித்ததன் மூலம் அரசு எந்த தவறையும் சட்டத் திற்குப் புறம்பாகச் செய்து விடவில்லை.

உண்மையைக் கூறுவதானால், சமூக அடக்குமுறையை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதிலும் போரிட்ட ஒரு மாபெரும் மனிதருக்கு அரசு பெரிய மரியாதை செய்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பெரியாரின் போதனைகள் பற்றி மனுதாரர் தனது மனுவில் தெரிவித்தி ருப்பவையே, தமிழ் சமூகத்தைப் பல வழிகளிலும் மறு மலர்ச்சி பெறச் செய்வதில் ஒரு மாபெரும் தலைவர் ஆற்றிய பெரும் பங்கினை அறியாதவர் என்பதைக் காட்டிக் கொடுக்கின்றன என்று நீதியரசர் கே. சந்துரு கூறினார்.

(காவேரிப்பட்டினம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் பெரியார் சிலை நிறுவுவது தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு)

தமிழ் ஓவியா said...


புரியாத புதிர்


பிள்ளையாருக்கு வடநாட்டில் இரண்டு மனைவிகள்!

தென்னாட்டில் கல்யாணம் ஆக வில்லை! என்கிறது ஆரியம்!

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

எப்படி என்று கேட்டால்?

ஆத்திகர்களிடம் இருந்து அது அப்படித்தான் என்று பதில். ஆத்திக அன்பர்களே!

ஒருவன் வடநாட்டில் இரு திருமணம் அல்ல.

ஒரு திருமணம் செய்து கொண்டு வந்து,

தென்னாட்டிலும் திருமணம் செய்ய விரும்பினால், உங்கள் பெண்ணையோ, உங்களுக்குத் தெரிந்த பெண்ணையோ திருமணம் செய்து கொடுப்பீர்களா?

- ம. சீனிவாசன், பிள்ளையார் தோப்பு, இலுப்பூர்

தமிழ் ஓவியா said...


எரிதழலாய்ப் பெரியார் வந்தார்- பாவலர் பெரு. முல்லையரசு

பாராண்ட தமிழ்மறத்தை வீழ்த்து தற்குப்
படைகொண்டு பகைமுறிக்க இயலா தென்றே
போராட வக்கற்ற பேடி யர்கள்
பொய்விரித்து மெய்விரித்துக் கடைவி ரித்தார்!
யாராண்டால் நமக்கென்ன என்றி ருந்த
ஏமாளித் தமிழர்க்குள் சண்டை மூட்டி
போராட்டக் களத்தினிலே குளிரும் காய்ந்தார்
போக்கற்ற பேதையராய் மகிழ்ந்தார் நெஞ்சம்!

ஆண்டவனின் பெயராலே ஏய்த்த வர்கள்
அஞ்சாமல் அறச்செயல்கள் பலவ கற்றி
ஆண்டிட்ட தமிழ்மரபை அடிமை கொள்ள
அன்றாடம் நிகழ்த்திவரும் நச்சு வேலை
மாண்டிட்டு மண்மூடிப் போதல் வேண்டி
மறத்தமிழர் இனவெழுச்சி கூட்டி இங்கே
மூண்டெழுந்த எரிதழலாய்ப் பெரியார் வந்தார்
முழங்கிட்டார் தன்மானம் எழுச்சி பொங்க!

ஆர்த்தெழுந்த பெரியாரின் எழுச்சி யாலே
அணிதிரண்டார் தன்மானத் தமிழ ரெல்லாம்
ஈர்த்திட்ட பெரியாரின் கொள்கை யிங்கே
எத்தர்களை முனைமழுங்க வைத்த தய்யா!
போர்ப்பரணி பாடிட்ட பெரியார் பின்னே
பைந்தமிழர் படைகிளம்பிப் புயலாய் மாறி
பார்வியக்கப் பகையொடுங்க முரசு கொட்டிப்
பாய்ந்ததுவே பகுத்தறிவு இயக்கம் இங்கே!

தமிழ் ஓவியா said...


பெரியார் பெரியாராகவே இருக்கட்டும்!


- எஸ்.கே. கங்கா

ரசூல், வணக்கம்! உங்களுடைய பெரியார்தாசன் பற்றியக் குறிப்புகளைப் படித்தேன். பெரியார்தாசன் என்ற சமூகப் பண்பாட்டுப் போராளிக்கு உரிய மரியாதை உங்கள் அஞ்சலி வாசகங்கள். அவருடைய ஆளுமையின் பன்முகப் பரிமாணத்தை அழகாகச் சித்திரப்படுத்தியுள்ளீர்கள்.

எனினும் பெரியாரைப்பற்றிய உங்களின் ஆதங்கம் என்னைக் கேள்வி கேட்க வைத்திருக்கிறது இன இழிவு நீங்க இஸ்லாத்தில் இணையுங்கள் என முழக்கமிட்ட பெரியார் இறுதி வரை இஸ்லாத்தில் இணையவில்லை. ஆனால் பெரியாரின் பெயரைச் சூடிக் கொண்ட பெரியார்தாசன் இஸ்லாத்தில் இணைந்தார் என நீங்கள் ஒப்பீட்டுள்ளீர்கள். இந்த ஆதங்கத்துக்கு காலப் பொருத்தம் இருக்கிறது என நினைக்கிறீர்களா?

இந்தியத் துணைக் கண்டத்தில் இருபதாம் நூற்றாண் டில் எந்த முன்னுதாரணமும் இல்லாத மகத்தான பேராளுமை என ஜெர்மன் பேரறிஞர் வால்டர் ரூபன் வியந்து பாராட்டிய பெரியார் இனமான சுயமரியாதைக் காரராக வாழ்ந்தவர். பகுத்தறிவுப் பகலவனாக பரிணமித்தவர். பார்ப்பனியத்துக்கு எதிராக இறுதிமூச்சு வரை வியூகம் அமைத்த பெரும் போராளி. எல்லாவற்றுக்கும் மேலாக எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காத முழு நாத்திகராக வாழ்ந் தவர் இந்த பெரியார் இஸ்லாத்தைத் தழுவவில்லை என ஆதங்கப் படுவதில் வரலாற்று நியாயம் ஏதேனும் இருக்கிறதா?

ரசூல், பெரியார் பெரியாராகவே இருக்கட்டும்! அந்தப் பேரொளி இன்றைக்கும் என்றைக்கும் நமக்கு வேண்டும்!

(கவிஞர் ஹெக் ஜி. ரசூல் பெரியார்தாசன் பற்றி முகநூலில் 20.08.2013 அன்று எழுதிய குறிப்புகள் மீதான ஒரு எதிர்வினை).

தமிழ் ஓவியா said...


மதுரைக் கோவிலுக்குள் புரட்சி!நேற்றிரவு 8 மணிமுதல் நடுராத்திரி 12 மணி வரை ஸ்ரீ மீனாக்ஷியம்மன் கோயிலின் வாயிற் கதவுகள் எல்லாம் மூடப்பட்டு பலமான போலீஸ் பந்தோபஸ்துகளும் வைக்கப்பட்டிருந்ததினால் நகரில் எங்கும் மிகுந்த பரபரப்பேற்பட்டிருந்தது. அந்நேரங்களில் வழக்கமாக நடக்க வேண்டிய பூஜைகளும் இதர கோயில் காரியங்களும் நடவாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீமான் ஜே.என். ராமநாதன், பிள்ளையார் கோயில் அர்த்தமண்டபத்திற்குள் சென்று கோயில் பட்டர்களுடைய (அர்ச்சகர்களுடைய) ஆட்சேபனையையும் கவனியாமல் கணேசருக்குத் தாமாகவே தேங்காய் உடைத்து கற்ப்பூர ஹ--ரத்தி செய்ததாகவும், பிறகு அவர் தமது நண்பர்களுடன் ஸ்ரீ மீனாக்ஷி கோயிலுக்குச் சென்றதாகவும், பிறகு அவர்கள் ஸ்ரீ மீனாக்ஷியம்மனின் கர்ப்பக் கிரஹத்திற்குள்ளும் நுழைவார்களென்று அஞ்சி பட்டர்கள் அதன் கதவுகளை மூடிவிட்டார்கள். மேலும் ஸ்ரீமான் ராமநாதனும், அவரது நண்பர்களும் பிராமணரல்லாதார் வழக்கமாக நின்று தொழும் இடமாகிய அர்த்த மண்டபத்திற்கு வெளியே தேங்காய் உடைத்து கற்பூர ஹாரத்தி எடுத்தார்கள். அவர்கள் கோயில் அர்ச்சகர்களின் ஆட்சேபணைகளைக் கவனிக்கவில்லை. இதனால் மிகுந்த பரபரப்பேற்பட்டது. வெளியிலுள்ள பெரிய கோபுர வாயிற்கதவுகளும் உள்பட எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. ஸ்ரீமான் ராமநாதன் உள்ளிட்ட உள்ளிருந்தவர்கள் இரவு 9.30 மணி வரை வெளியே வர முடியவில்லை. நிற்க. வெளியிலிருந்தவர்கள் இரவு 12 மணிவரை உள்ளே செல்ல முடியவில்லை. போலீஸார் விசாரணை செய்தார்கள். ஸ்ரீமான் ராமநாதன் வெளியே வந்தபொழுது வெளியே கூடியிருந்த பெரும் ஜனக் கூட்டத்தினர் அவரைக்கண்டு சந்தோஷ ஆரவாரம் செய்து அவருக்கு மாலை போட்டார்கள். அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். சுதேசி ஸ்டோருக்கு அருகில் இரவு 12.30 மணிக்கு நடந்த கூட்டத்தில் ஸ்ரீமான் ராமநாதன் கோயிலுக்குள் நடந்த விஷயங்களை விளக்கி உபந்நியாசம் செய்தார். _ குடிஅரசு 6.2.1927 பக்கம் 8

தமிழ் ஓவியா said...

அடுத்த வீட்டு அகிலாண்டம்

அடுத்த வீட்டு அகிலாண்டம் கட்டிக் கொண்ட தாலி, எட்டாம் மாதம் அறுக் கப்பட்டது. அவளை மணந்த வருக்கு இருமல் நோய் என்று ஊராருக்குத் தெரியும். ஆசாமி மெத்த இளைத்து, மேனி கருத்துத் தள்ளாடி நடந்து, தடி தூக்கி நின்றான் என்பது கண்ணால் கண்ட காட்சி. ஆனால் சாதகம் பார்த்த அய்யர், ஜாம் ஜாமென முடிக்கலாம் முகூர்த்தத்தை. ஜாதகப் பொருத்தம் பேஷாக இருக்கு. பெயர் ராசிக்கும் பார்த்தேன், பூ வைத்தும் கேட்டேன்! என்று கூறினார். கலியாணம் முடிந்தது. களிப்புக் கொஞ்சம் ஆடிற்று, அதனால் களைத்தார், நோயாளி மாப்பிள்ளை! சனிக் குற்றம் என்றார் அய்யர், விளக்கேற்றிப் பார்த்தார்கள். வீண் சிரமமே கண்ட பலன்! விண்ணுலகம் சென்றார் வயோதிகர். விம்மி விம்மி அழுகிறாள் விதவை.

இதைக் கண்டீர்கள் கண்ணால். எத்தனையோ பொருத்தம் பார்த்தாரே சோதிடர், எல்லாம் என்னாயிற்று என்ற கருத்துக்குச் சிறிது வேலை கொடுத்தீர்களா? இல்லை! வீட்டிலே மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறந்ததும் சோதிடரை நாடுகிறீர்கள். அவர் வந்த... கண்ணால் கண்டு பேசுகிறீர்கள் முன்பு பார்த்தது என்ன ஆயிற்று என்று கேட்டீர்களா? கண்ணால் கண்டீர்கள். கருத்திலே தெளிவு கொண்டால்தானே கேட்பீர்கள், அதுதானே இல்லை. அய்யோ தோழரே!

அய்யர் பார்த்த சோதிடம் அவருக்குத் தட்சணை தந்ததேயன்றி, சோதிடம் கேட்பவருக்குப் பலன் தரவில்லையே என்று யோசிக்கிறீர் களா? இல்லையே! வழியிலே குடியி ருப்பது தெரிந்தும், அவ்வழி நடப்பவர் விழியற்றவர் என்று உரைப்பர். உங் களின் கருத்து குருடானதைக் கூறி னாலோ கடுங்கோபம் கொள்கிறீர்; தெரிந்தும் தெளிவு கொள்ள மறுக்கிறீர்!

- அண்ணா
(திராவிட நாடு இதழ் - 10.1.1943)

தமிழ் ஓவியா said...


விநாயகப் புராணம்


விநாயகனுக்கு எத்தனையோ பெயர்கள் உண்டு - அதில் ஒன்று பிரளயம் காத்த விநாயகராம்; கும்பகோணம் அருகே திருப்புறம் பியத்தில் இப்படி ஒரு விநாயகர் இருக்கிறார்.

இருக்கட்டும்! இருக்கட்டும்! சுனாமி வந்து பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்தபோது - இந்தப் பிரளயம் காத்த விநாயகர் எங்கே போனாராம்.

சுயம்பு விநாயகர்

வேலூர் அருகே சேண்பாக்கம் என்னும் ஊரில் விநாயகர் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் சுயம்பு 11 விநாயகர்கள் இருக்கிறார்களாம்.

சுயம்பு என்றால், தானாக பூமியை வெடித்துக் கிளம்புவது என்று பொருள்.

சென்னை தியாகராய நகரில் சிவா விஷ்ணு கோயில் அருகில் 1970 செம்டம்பரில் இப்படித்தான் திடீர் விநாயகர் என்று பொய்யை முதலீடாக வைத்து, புரளியைக் கிளப்பி உண்டியல் வசூல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அந்த இடத்திலேயே பொதுக் கூட்டம் போட்டுப் பேசுவேன் என்று தந்தை பெரியார் அறிவித்தார். அந்தக் கால கட்டத்தில் கலைஞர் அவர்கள் பொருத்தமாக முதல் அமைச்சராக இருந்த காரணத்தால் உடனே தலையிட்டு உண்டியலையும் பறி முதல் செய்து, அந்தப் பித்தலாட்டத்துக்கும் மூடு விழா நடத்தினர்.

விசாரணையின் போது தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.எம். சுப்பிரமணியம் என்ற பார்ப்பனரின் தூண்டுகோல்படி செல்வராஜ் என்ற போலீஸ் கான்ஸ்டபுள்தான் பூமியில் இரவோடு இரவாக, பிள்ளையாரைப் புதைத்து, பூமிக்குள் பருத்திக் கொட்டையையும் தண்ணீரையும் ஊற்றி, வெளியில் வரச் செய்த பித்தலாட்டம் வெளியானது.

இதில் வெட்கக் கேடு என்னவென்றால், அந்தத் திடீர் பிள்ளையார் சுயம்புவானது உண்மைதான் என்று அன்றைய சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பொய் சொல்லிக் காப்பாற்ற முற்பட்டதுதான். அந்தப் பகுதியில் மசூதி கட்ட ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தது. அதனை தடுக்கத்தான் இந்தப் பித்தலாட்டம்.
வேலூர் சேண்பாக்கம் 11 சுயம்புப் பிள்ளையாரிலும் இது போன்ற சதிகள் இருக்கவே செய்யும்.

கடலில் கரைப்பது ஏன்?

கடலில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்குத் தத்துவார்த்தம் கூறுகிறார்கள். விநாயகருக்குப் பார்வதி எப்படி அன்னையோ, அதுபோல கங்கையும் ஒரு அன்னைதானாம் அதனால் அவரோடு அய்க்கியமா கிறாராம். அக்னி பகவானுக்கு விநாயகர் என்ன உறவு! நெருக்கமான உறவு இருந்தால் எரித்திருப்பார்களோ?

கடல் நீர் உப்பு கரிப்பதற்குக் காரணம் விநாயகன் சிறுநீர் கழித்ததுதான் என்று புராணம் கூறுகிறது.

கடல் நீரைக் குடிநீராக்க பன்னூறு கோடி ரூபாய் செலவு செய்து சுத்திகரித்துக் கொண்டு இருக்கிறார்களே. இது விநாயகன் செயலுக்கு விரோதம் என்று விநாயகப் பக்தர்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை?

தேங்காய் உடைப்பது ஏன்?

அகங்காரம் என்னும் ஓடு சுக்கல் நூறாகி அமிர்தம் என்ற இளநீர் கிடைக்குமாம். அதுதான் தேங்காய் உடைப்பதன் புடலங்காய் தத்துவமாம்.

தேங்காய் உடைத்துக் கொண்டிருக்கிற பக்தர்கள் எல்லாம் ஆணவம் அற்றவர்களா?

நான் ஆயிரம் விவேகானந்தருக்கு மேலே என்று காஞ்சி சங்கராச்சாரியார் (?) ஜெயேந்திர சரஸ்வதி சொல்கிறாரே - இது ஆணவம் அல்லாமல் வேறு என்னவாம்?

இவர் தேங்காய் உடைப்பது இல்லையா? பிள்ளையா ருக்கு நான் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும் என்று அவர் சொன்னால் அதுவும் ஆணவம் தான்! பிள்ளை யாரையே கருப்புச்சட்டைக்காரர்கள் வீதிக்கு வீதி போட்டு உடைத்தார்களே - உண்மையில் அவர்கள் தான் ஆணவம் அற்றவர்கள்.

வினை தீர்க்கும் விநாயகளாம். அவனுக்காக சென்னையில் பத்தாயிரம் போலீஸ் பாதுகாப்பாம்!

பேஷ்! பேஷ்!! இதைவிட விநாயகன் சக்தியை எப்படி கேலி செய்ய முடியும்? 9-9-2013

தமிழ் ஓவியா said...


விநாயகன் பிறந்தானா?

கடவுள் பிறந்தார் என்று சொன்னாலே மதவாதி கள் சொல்லும் கடவுள் தத்துவம் அடிபட்டு, ஆயிரம் அடிகளுக்கும் கீழ் புதைந்து விடுகிறதே.

கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்கிற சங்கதியும் சகட்டுமேனிக்குப் பெரும் பொய் என்பதும் புலப்படவில்லையா?

ராம நவமி என்பதும், கிருஷ்ணஜெயந்தி என்பதும் இந்த ரகத்தைச் சார்ந்ததுதானே.

இன்று விநாயக சதுர்த்தியாம். இவன் உரு வத்தைப் பார்த்து புராணக் கடவுளான சந்திரனே கேலி செய்தான் என்று எழுதி வைத்துள்ளனர். விநாயகன் உருவத்தைப் பார்ப்பவர் யார்தான் கேலி செய்யாமல் இருப்பார்கள்?

பார்வதியின் அழுக்குருண்டையில் பிறந்தவன் இந்தப் பிள்ளையார் என்றால் மனிதன் காட்டு விலங் காண்டிப் புத்தியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது தான் இந்தக் கடவுள் வகைகள் என்பது விளங்கவில்லையா?

இப்பொழுது விநாயக ஊர்வலத்தில் விநாயகன் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து கார்கில் விநாயகர் என்று பெயர் கொடுப்பதிலிருந்து ஓர் உண்மை வெளிப்பட்டு இருக்க வேண்டுமே! மனிதன்தான் அந்தந்த காலத்தின் பக்குவத்துக்கு ஏற்ப இந்தக் கடவுள்களைக் கற்பித்தான் என்பது விளங்கிடவில்லையா?

கடவுள் ஒருவர் பிறந்தார் என்று வாதத்திற் காகவே ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள் வோம். அதற்கென்று எதாவது ஒன்றே ஒன்றைச் சொன்னாலாவது பிழைத்துப் போகட்டும் என்று விட்டுத் தொலைக்கலாம்.
விநாயகன் பிறப்புக்கு எத்தனை எத்தனைக் கதைகள்! கழுதை களமாடும் குப்பைத் தொட்டிகூட வெட்கப்படும் அளவுக்கு அசிங்கமாகவும் ஆபாச மாகவும் உளறிக் கொட்டி வைத்துள்ளார்களே.

சண்டை போட்டது கடவுள், எதிரிகளைக் கொன்றது கடவுள், கற்பழித்தது கடவுள் என்றால் அதன் யோக்கி யதைதான் என்ன? கருணை உடையவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லி விட்டு, இன்னொரு பக்கத்தில், தன் சகோதரன் சுப்பிரமணியனுக்காக விநாயகன் சண்டை போட்டு எதிரிகளைக் கொன் றான் என்றும், வல்லபை என்ற அரக்கக் குலப் பெண்ணின் குறியிலிருந்து உற்பத்தி யாகி வந்த அசுரர்களை தம் துதிக்கையால் பெண் குறியை அடைத்துத் துவம்சம் செய்தான் என்றும் அதனாலே வல்லபைக் கணபதி என்று பெயர் பெற்றான் என்றும் சொல்லுவதற்கு, எழுதுவதற்குக் கொஞ்சம்கூடக் கூச்சப்படவில்லையே!

தருமபுரி மாவட்டம், மத்தூர் கோயிலில் பெண் குறியில் விநாயகன் தன் துதிக்கையை வைத் திருக்கும் பிரம்மாண்டமான சிலை வைக்கப் பட்டுள்ளதே.

கோயில் தேர்களிலும் இந்தக் கண்ணராவிக் காட்சியைக் காண முடியுமே! தம் வீட்டுப் பிள்ளை களைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் போது, இந்தக் காட்சியைக் காட்டி இது என்ன? என்று கேட்டால் பெற்றோர்களின் நிலைமை என்னவாகும்?

இந்து மதம் என்று எடுத்துக் கொண்டால் எதைத் தொட்டாலும் இந்த ஆபாசம்தான் - அசிங்கச் சாக்கடைதான்.

இதைப் பகுத்தறிவாளர்கள் எடுத்துச் சொன் னால் சிந்திப்பதற்குப் பதிலாக சிறீ விழுகிறார்கள் என்றால் பக்தியின் பெயரால் இவர்களின் புத்தியும் நாசமாகப் போய் விட்டது - ஆபாசத்தில் இலயித்து விட்டது என்று தானே பொருள்?

இந்த விநாயகனுக்காக ஒரு பண்டிகை. அதற்கு அரசு விடுமுறையாம்! இந்த விநாயகன் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது என்றால் இது என்ன நிலைப்பாடு?

மும்பையில் இந்து மதவெறியை ஊட்டுவதற்கும் பாலகங்காதரர் கிளப்பி விட்ட இந்தச் சதித் திட்டம் இப்பொழுது வேறு பகுதிகளில் பரவி, பொது மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது. மதக் கலவரங்களுக்கு இந்த ஊர்வலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

கடவுளை உண்மையில் நிந்திப்பவர்கள் இந்தப் பக்தர்கள்தான் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

விநாயகன் பிறப்பு - அவனைப்பற்றிச் சொல்லப்படுகிற புராண சங்கதிகள் இவற்றைப் பார்க்கும்பொழுது இந்து மதவாதிகளும், சனாதனி களும் தான் கடவுளைக் கேவலப்படுத்துகிறார்கள் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பது எளிதில் விளங்குமே!

அழுக்குருண்டைப் பிள்ளையாரு ஆண்டவனா சொல்லுங்க; பிள்ளையார் போல் பிள்ளை பிறந்தால் கொஞ்சுவோமா சொல்லுங்க என்று திராவிடர் கழகப் பேரணியில் முழங்கிச் செல்லுவதற்கு இதுவரை பதில் இல்லையே!
9-9-2013

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்


ஆசிரியருக்குக் கடிதம்

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்

மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, வணக்கத் துடன் எழுதிக்கொண்டது. கடந்த 25.8.2013 விடுதலை நாளிதழில் தங்கள் அறிக்கையைப் படித்தேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

பகுத்தறிவாளர் நரேந்திரதபோல்கர் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மராத்திய மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதைப் போல தமிழ் நாட்டிலும் அச்சட்டம் கொண்டு வரவேண்டும். மத்திய அரசும் அச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளீர்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மானமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சமூகசீர்திருத்தக்குழு ஒன்றை உரு வாக்கினார். அதிமுக ஆட்சியில் அந்தத்துறை செயல்படவே இல்லை. பின்னர் எப்படி தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வருவார்?

தாங்கள் கூறியவாறு மத்திய அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டு வந்தால், இந்தியா முழுவதும் பெண்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கிடைக்கும். நரபலிகள் தடுக்கப்பட்டு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் ஆகியவற்றில் அறிவுக்குச் சற்றும் பொருத்தமற்ற, மூடநம்பிக்கை பிரச்சாரம் தடுக்கப்படும் நிலை உருவாகும். ஆகவே அச்சட்டம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வாய்ப்புள்ளது. செயல்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.

அச்சட்டத்தால் மொத்தத்தில் மனித சமுதாயத்தில் தெளிவான மாற்றங்கள் ஏற்பட்டு, தந்தை பெரியார் கூறியவாறு மனிதன் மனிதனை நினைப்பான்.

இச்சட்டம் கொண்டு வருவதற்காக ஒரு தீவிரப்பிரச்சாரத் திட்டத்தினை திராவிடர் கழகம் விரைவில் அறிவிக்கும் என்பதை தெரிவித்துள்ளீர்கள்.

மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

- எஸ்.என்.அசோகன் (திமுக மாவட்ட பிரதிநிதி)
நகராட்சி நியமனக் குழு உறுப்பினர், திருவாரூர்

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)

தமிழ் ஓவியா said...


புற்றுநோயைக் காட்டிக் கொடுக்கும் கண்கள்


புற்றுநோயைக் காட்டிக் கொடுக்கும் கண்கள்

கண்களை உடம்பின் கண்ணாடி என்று எவ்வளவு அர்த்தத்துடன் கூறியிருக்கிறார்கள் என்பதை இதை படித்ததும் தெரிந்து கொள்வீர்கள். உடலுக்குள் எங்கே என்ன கோளாறு என்றாலும் அதைக் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். அந்த வகையில் புற்றுநோயின் அறிகுறிகளையும் கண்களில் கண்டுபிடிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம் உடலின் எந்த பாகத்தில் புற்று நோய் வந்தாலும் அதன் அறிகுறிகள் கண்களில் பிரதிபலிக்கும் என்கிற, விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம் அது பற்றி விரிவாக பேசுகிறார்.

கண்களில் பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசியறது, விழித்திரை பிரச்சினை இப்படி வயசான வர்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும்பாலும் முதுமையோட அறிகுறிகள்னு அலட்சியப்படுத்தற வங்கள் தான் அதிகம்.. வயசானா பார்வை மங்கறதும் பூச்சி பறக்கறதும் சகஜம் தான்னு விட்டுருவாங்க. ஆனா அதெல்லாம் அவங்க உடம்புல எங்கேயே புற்றுநோய் தாக்கி யிருக்கிறதுக்கான அறிகுறியா இருக்கலாம்னு யாருக்கும் யோசிக்கத் தோணாது.

நடுத்தர வயதுக்கு பிறகு பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் தாக்கிற வாய்ப்புகள் அதிகம். திடீர்னு தென்படற கட்டி, எடை குறையறது, கழிவறைப் பழக்கங்கள் மாறிப்போறது, இருமல் ரத்தத்தோட வெளியேறும் சளி இப்படி புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகளைத் தாண்டி கண்களிலும் அதை கண்டுபிடிக்கலாம்.

மனித உடம்புல அதிகப்படியான ஆக்சிஜன், ரெட்டினானு சொல்லற விழித்திரைக்குத்தான் போகுது. அந்த ஆக்சிஜன் விழித்திரைக்குப் பின்னாடி உள்ள கோராயிடுங்கிற பகுதி மூலமா தான் விழித்திரைக்குப் போகும்.. உடம்போட ரத்த ஒட்டம், உடல் முழுக்க ஒன்றோடு ஒன்று இணைஞ்சு போகும். அதனால் ரத்தத்துல உள்ள புற்றுநோய் செல்கள், கோராயிடு மூலமா விழித்திரைக்கும் போகும். விழித்திரையில தண்ணீர் கசிஞ்சி விழித்திரை முன்னாடி வரும்.

தமிழ் ஓவியா said...

திடீர் பார்வை குறைபாடு தான் இதோட அறிகுறி..சிலருக்குன்னு சொல்லக்கூடிய ரத்த புற்றுநோய் இருக்கும். கண்கள்ல பூச்சி பறக்கிறது. வெளிச்சம் அதிகமாக தெரியறதையும் முதுமையோட அறிகுறி களாகவும், மறதி, நடக்கும் போது ஏற்பட்ட பிரச்சி னைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்பு படுத்தி பார்த்து வேற வேற சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணரால்தான் அதை சரியாக கண்டுபிடிக்க முடியும்.

பி ஸ்கேன் மூலமாக விழித்திரையைப் பரிசோதிச்சு, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கிருந்து வந்ததுங் கிறதை உறுதி செய்து அப்படி உறுதியானா, அதுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கணும் என்கிற, டாக்டர் வசுமதி கண்களில் தென்படுகிற எந்த சிறு பிரச்சினைகளையும் அலட்சியப்படுத்துவது ஆபத்தானது என முடிக்கிறார் முத்தாய்ப்பாக.

தமிழ் ஓவியா said...

திடீர் பார்வை குறைபாடு தான் இதோட அறிகுறி..சிலருக்குன்னு சொல்லக்கூடிய ரத்த புற்றுநோய் இருக்கும். கண்கள்ல பூச்சி பறக்கிறது. வெளிச்சம் அதிகமாக தெரியறதையும் முதுமையோட அறிகுறி களாகவும், மறதி, நடக்கும் போது ஏற்பட்ட பிரச்சி னைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்பு படுத்தி பார்த்து வேற வேற சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணரால்தான் அதை சரியாக கண்டுபிடிக்க முடியும்.

பி ஸ்கேன் மூலமாக விழித்திரையைப் பரிசோதிச்சு, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கிருந்து வந்ததுங் கிறதை உறுதி செய்து அப்படி உறுதியானா, அதுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கணும் என்கிற, டாக்டர் வசுமதி கண்களில் தென்படுகிற எந்த சிறு பிரச்சினைகளையும் அலட்சியப்படுத்துவது ஆபத்தானது என முடிக்கிறார் முத்தாய்ப்பாக.

தமிழ் ஓவியா said...

இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா?

இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் இதயம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம். இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? எடையை குறையுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிருங்கள், டென்சன் படாதீர்கள் என்று எல்லா மருத்துவர்களும் அட்வைஸ் செய்கின்றனர்.

உண்ணும் உணவு பழக்கத்தை சத்துள்ளதாக மாற்றிக்கொண்டால் இதய நோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் அலுவலக வேலைக்கு செல்லும் போது சிறிது தூரம் காலார நடைபயிற்சி செய்யுங்கள். தினசரி வைட்டமின் ஈ யை உணவில் எடுத்து கொள்பவர் களுக்கு இதயநோய் வர வாய்ப்பில்லை என்று ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 400யுனிட் வைட்டமின் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதயநோய்களே வருவ தில்லையாம். வைட்டமின் டி உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், கோதுமை மாவு, முளைக்கட்டிய தானியங்கள், கொட்டை உள்ள உணவுகள் கீரைகள், கடுகு, தாவர எண்ணெய் போன்றவைகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் ஆசிட் நல்ல இதயநோய் தடுப்பாக செயல்படுகிறது. ஒமேகா3 உடலில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மீன் உணவு, வால்நட், பருப்பு, சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளில் ஒமேகா 3 இருப்பதால் இதயநோய் வரும் வாய்ப்பை குறைக்கலாம். டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், இவைகளை உபயோகித்து செய்யும் உணவுப் பண்டங்களை தவிர்க் கவும். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பாலாடை கட்டி, அய்ஸ்கீரிம் போன்றவற்றை குறைவாகவே உபயோகி யுங்கள். இதனால் இதயநோய் வரும் வாய்ப்பும் குறையும் என்கிறது ஆராய்ச்சி. அதிக உப்புள்ள ஊறுகாய், சமையலில் மசாலா பொருட்கள் சோடா ஆகியவற்றை, முடிந்தவரை தவிர்ப்பது நல் லது. உப்பிற்கு பதிலாக வெங் காயம், எலுமிச் சை, பூண்டு, சேர்த்த உணவு கள் தரமானவை. அளவோடு உண்பது, நேரத்துடன் உணவு உட்கொள்வது போன்றவை இதயத்திற்கு நன்மை பயக்கும். எப்போதும் புதியதாக தயாரித்த உணவுகளே சிறந்தவை.

புதிய பழங்கள், ஓட்ஸ். கைக்குத்தல் அரிசி, தவிடு நீக்காத கோதுமை மாவு சப்பாத்தி எல்லாமே இதயநோயை தடுக்கும். மாதுளம் பழச்சாறு இதயத்திற்கு வலுவூட்டும் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. நமது உணவு பழக்கங்கள் உடலுக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும். உணவே நோயை தருவதாக இருந்துவிடக் கூடாது. நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந் தெடுத்து இதயத்தை காப்போம்.

தமிழ் ஓவியா said...


அல்லவே அல்ல!


மதங்களுக்கு உயிர் நாடியாயிருப்பது பிரச்சாரமும், பணமும் அல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.
(விடுதலை, 1.4.1950)

தமிழ் ஓவியா said...


உ.பி. குஜராத் ஆகிறதா?உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுபான்மை யினருக்கு எதிரான கலகம் தொடங்கப்பட்டு விட்டது. இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனராம். கலவரத்தை அடக்க இராணுவம் களத்தில் இறக்கி விடப் பட்டுள்ளது.

முசாபர் நகர் மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கம்பெனி இராணுவம் மற்றும் துணை இராணுவ அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரம் தொடர்பாக பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்கள் ஹூக்கும் சிங், சங்கீத் ஷோம், சுரேஷ் ரானா, பர்தேண்டு சிங் ஆகியோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலவரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறிய கருத்துக் கவனிக்கத்தக்கது.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. அதற்கு முன்பாகவே உத்தரப் பிர தேசத்தில் பா.ஜ.க.வினர் கலவரத்தைத் தூண்டி விடத் தொடங்கி விட்டனர்.

உத்தரப்பிரதேசத்தைக் குஜராத்தாக மாற்ற பா.ஜ.க.வினர் துடிக் கின்றனர். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறாது.

இதே கருத்தினை சமாஜ்வாடிக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நரேஷ் அகர்வாலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் சிறு பான்மை அல்லாதார் என்று உத்தி பிரிக்கும் வேலை யில் (Polarisation) இறங்கி அதில் வெற்றி பெற்றதன் அறுவடையை நரேந்திரமோடி அனுபவித்துக் கொண்டுள்ளார். கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு நிகழ்வை அதற்குச் சாதகமாக மிகத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இரயில் பெட்டி எரிப்பில் மரணம் அடைந்தவர் களின் உடல்களை அவரவர்கள் ஊர்களுக்குக் கொண்டு செல்லவிருந்த திட்டத்தை மாற்றி, அனைத்து உடல்களையும் அணி வகுக்கச் செய்து அகமதாபாத் நகரில் ஊர்வலம் நடத்தச் செய்ததன் பின்னணி நோக்கம் எளிதிற் புரிந்து கொள்ளத் தக்கதே!

எதற்கும் எதிர் விளைவு உண்டு என்ற நியூட்டன் தத்துவத்தை அதற்கு எடுத்துக் காட்டினார். அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த சிறுபான்மை மக்களை மிகவும் கேவலமான முறையில், கொச்சைப் படுத்தும் வகையில் தங்கள் ஜனத் தொகையைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினார்.

இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயியை குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் கேட்டுக் கொண்டும், பிரதமர் வாஜ்பேயி செவி சாய்க்கவில்லை. இத்தகவலை கே.ஆர். நாராயணன் அவர்களே பிற்காலத்தில் கூறி, தம் வருத்தத்தைப் புலப்படுத்தினார்.

பாபர் மசூதி இடிப்பு நடந்து 21 ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த நிகழ்வுக்குப் பிறகே இந்தியாவில் மதக் கலவரங்கள் மிகவும் கூர்மையாயின. அதற்குக் காரணமான குற்றவாளிகள் - பிஜேபியில் உள்ள பெரிய மனிதர்கள், சங்பரிவார்த் தலைவர்கள் தண்டிக்கப்படாத காரணத்தால் அவர்களுக்கு மேலும் மேலும் முரட்டுத் துணிவு ஏற்பட்டு விட்டது.

காவி பயங்கரவாதம் குறித்து உள்துறை அமைச்சர் சொன்னபோது எகிறிக் குதித்தனர்; உள்துறைச் செயலாளரோ, காவிகள் கலவரத்தின் பின்னணியில் உள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் அரசு வசம் உள்ளன என்று அதிகார பூர்வமாக தெரிவித் துள்ளார்.

மாலேகான் குண்டு வெடிப்பில் தொடக்கத்தில் சிறுபான்மையினர் மீது கண்கள் பாய்ந்தன. பலர் கைது செய்யவும் பட்டனர். பிறகுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. காவிப் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி சந்தேகத்துக்குரிய வகையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின் மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொம்பைச் சீவிக் கொண்டு புறப்பட்டுள்ளனர். இதனை இந்திய வாக்காளர்கள் அடையாளம் காணாவிட்டால் அதற்கான விலையைப் பிற்காலத்தில் கொடுக்க நேரிடும் - எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...


வேப்பமரத்துக்கும், அரச மரத்துக்கும் டும் டும் டும்!


கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியாரும், அவர்தம் கருஞ்சட்டைத் தோழர்களும் சொன்னால் சுர்ரென்று மூக்குப் புடைக்கும் ஆசாமிகள் இதற்கு என்ன பதில் சொல்லு வார்களாம்?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரை யடுத்த டி.எடையார் கிராமத்தில் மாணிக்க விநாயகர் கோவில் அருகே வேப்பமரமும், அரச மரமும் பின்னிக் கொண்டு இருக்கிறதாம்.

விட்டுவிடுமா புரோகிதம்? சுரண்டலுக்கு மறு பெயர்தானே பக்தியும் - அதன் தகப்பனாகிய புரோகிதமும்?

இது ஓர் அபூர்வ காட்சி - இந்த இரண்டு மரங் களுக்கும் கல்யாணம் செய்து வைத்தால் ஊரே சுபீட்சம் அடையும் என்றனர் குருக்கள் பார்ப்பனர்கள்!

குருக்களே சொல்லிவிட்டார் - வேறு அட்டி யென்ன? மேளதாளத்துடன் கல்யாண திருக்கோலம் - புரோகிதர்கள் தட்டுகளை மாற்றிக் கொண் டார்களாம் - மொய் எழுதப்பட்டது - உண்டியலும் நிரம்பி வழிந்தது.
மொட்டை சாமி தலையில் உட்கார்ந்த காக்கை எச்சமிட்டால் அதிலிருந்து விழும் விதையில் மரம் முளைப்பது இயல்பான ஒன்றுதானே. இதில் என்ன அதிவிசேஷம் வாழுது?

இந்தப் பார்ப்பனர்களுக்குச் சொல்லிக் கொடுத்தவன் கவுடில்யன் என்னும் இவர்களின் முன்னோரான மற்றொரு பார்ப்பனன்.

அவன் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில், அரசன் எப்படியெல்லாம் வருமானம் ஈட்டலாம்? வரி போடலாம்? என்று விலாவாரியாக எழுதி வைத்து விட்டுச் சென்றான்.

ஒரு மரத்தில் பிசாசு தோன்றிவிட்டதாக முதலாவது பொது ஜனங்களிடையே பீதியை உண்டு பண்ணிவிட வேண்டும். இந்த மரத்துக்குள் ஒருவனை நுழையச் செய்து பயங்கரமான கூச்சல் இடும்படியாக அரசன் ஏற்பாடு செய்யவேண்டும். இந்தத் துஷ்ட தேவதையைச் சாந்தப்படுத்தி அனுப்பாவிட்டால் ஊருக்குப் பெருங்கேடு ஆகும் என்று கூறி மக்களை நம்ப வைக்கவேண்டும். அரசரது ஒற்றர்கள் சந்நியாசிபோல வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து குடிகளிடம் பணம் வசூல் பண்ணவேண்டும்.

பிசாசு நகரத்தைவிட்டுப் போய்விடுகிறது. பணம் அரசனின் பொக்கிஷத்தைப் போய் அடைகிறது.

அதேபோல, அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் அகாலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்தால், அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது மக்களிடம் காட்டிப் பிரசித்திப்படுத்த வேண்டும். அல்லது ஒரு கிணற்றில் அனேக தலைகளை உடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடம் பணம் வசூலிக்கலாம் என்கிறான் கவுடில்யன்.

எந்தப் புரட்டையாவது செய்து குடிமக்களை ஏமாற்றி அரசன் பணம் பறிக்கலாம் என்னும் வஞ்சக தந்திரங்களை கூடை கூடையாக எழுதி வைத்துச் சென்று இருக்கிறான் சாணக்கியன் என்று கூறப்படும் கவுடில்யன் தன் அர்த்தசாஸ்திர நூலில்!

இன்று அரசன் இல்லை; ஆனால், அதேநேரத்தில் அர்ச்சகப் பார்ப்பான் இருக்கிறான் சுரண்டிக் கொழுக்க - திடீரென்று ஒரு நாள் பிள்ளையார் பால் குடித்தார் என்று புரளி கிளப்பவில்லையா? ஒரு நாள்தான் குடித்தானா? ஏன் மறுநாள் குடிக்கவில்லை? குட்டு வெளிப்பட்டு உள்ளி மூக்கு உடைந்துவிட்டது. அதன் பின்னணியில் ஆர்.எஸ்.எசும், சந்திராசாமியும் இருந்தனர் என்று பிறகு அம்பலமாகிடவில்லையா?

பிள்ளையார் பால் குடிப்பார் என்றால், கொழுக்கட்டை சாப்பிடமாட்டாரா?

பிள்ளையார் பால் குடித்தார் என்று நிரூபித்தால் ஒரு லட்சமும், கொழுக்கட்டை தின்பதாக நிரூபித்துக் காட்டினால் இரண்டு லட்ச மும் ரூபாய் பரிசு என்றும் சென்னை அண்ணா சாலையில் (23.9.1995) திராவிடர் கழ கத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் டாம் டாம் அடித் தாரே - அந்தச் சவாலை யாராவது ஏற்றார்களா?

பக்தியின் பேரால் மோசடி செய்யும் பேர்வழிகளைக் கைது செய்து சிறையில் தள்ளவேண்டாமா?

மகாராட்டிர மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டப்படி எடுத்த எடுப்பிலேயே பில்லி சூன்யக்காரர் ஒருவரைக் கைது செய்துள்ளார்களே!

அண்ணா பெயரைச் சொல்லிக் கொள்ளும் இந்த அரசு செய்யுமா? எங்கே பார்ப்போம்!

குறிப்பு: சாணக்கியனின் மோசடிகளை மேலும் தெரிந்து கொள்ள தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களால் எழுதப்பட்ட - கழக வெளியீடான கோவில்கள் தோன்றியது - ஏன்? என்ற நூலை வாங்கிப் படியுங்கள்!

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம். (விடுதலை, 24.9.1950)

தமிழ் ஓவியா said...


19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!


கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டுள்ள நிலை, உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுக்கு எதிரான தீர்ப்பு, எய்ம்ஸ் போன்ற உயர்நிலைக் கல்வி நிறுவனங் களில் ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை - இவற்றை எதிர்த்தும், கண்டித்தும் வரும் 19 ஆம் தேதி தஞ்சாவூரில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

கருநாடக மாநில அரசைப் பொறுத்தவரையில் எந்தவித சட்ட திட்டங்களுக்கும், தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை! உச்சநீதிமன் றத்திற்கு நிகரான காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எல்லாம்கூட கருநாடகம் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டு வருகிறது. நீதிமன்ற அவமதிப்பைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் வருகிறது. மத்திய அரசும் கண்டுகொள்வதில்லை. உச்சநீதிமன்றமும் கண்டு கொள்வதில்லை.

எந்த ஓர் அணையைக் கட்டுவதானாலும் கீழ்ப்படுகையில் உள்ள மாநிலத்தின் ஒப்புதலையும், மத்திய அரசின் அனுமதியையும் பெற்றுத்தான் செய்யவேண்டும்.

ஆனால், 1959 இல் கபினி அணையையும், 1965 இல் சுவர்ணவத் அணையையும் கட்டியதே கரு நாடகம் - எந்தச் சட்டம் அம்மாநிலத்தின் கழுத்தை நெரித்தது?

இப்பொழுதும் அதே பாணியில் அணைகளைக் கட்ட முடிவெடுத்துவிட்டது, கருநாடகம். தேசிய நீரோட்டம் என்பதெல்லாம் காகிதக் கப்பலோட்டம் தான். மாநிலக் கட்சிகள் பேசினால் பிரிவினை வாதம் - அதைத்தானே தேசிய கட்சிகளும் செய் கின்றன - அது என்ன வாதம் - பக்கவாதமோ!

1924 ஆம் ஆண்டு ஒப்பந்த காலத்தில் கருநாடகத்தில் காவிரி பாசனப் பகுதி 6 லட்சம் ஏக்கராக இருந்தது. இப்பொழுது அது 25 லட்சம் ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா? 25 லட்சம் ஏக்கர் என்ற நிலை மாறி இப்பொழுது வெறும் 14 லட்சமாகத் தேய்ந்து கருவாடாகி விட்டது.

விவசாயம் இனி கைகொடுக்காது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டனர் தமிழ் நாட்டு மக்கள். விவசாய நிலங்கள் எல்லாம் கூறு போட்டு விற்கப்பட்டு வருகின்றன. ஒரு கால கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங் களுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட நிலை மாறி, இன்று வெளி மாநிலத்தை நோக்கிக் கையேந்தி நிற்கும் அவலம்.

கருநாடக மாநிலத்தில் காவிரி ஓடும் தூரம் 320 கிலோ மீட்டர்தான். தமிழ்நாட்டிலோ தலைக் காவிரியில் புறப்பட்டு 800 கி.மீட்டர் பயணம் செய்து பூம்புகார் கடலில் சங்கமம் ஆகிறது.

இதிலிருந்தே நியாயப்படி அதிக பலன் தமிழ்நாட்டிற்கே என்பது வெளிப்படையாகும். கருநாடகத்தில் மழை பெய்து வெள்ளம் வந்து அணைகள் உடையும் நிலை ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிப் பிழைப்பதற்காக தமிழ்நாட்டை வடிகால் பகுதியாகக் கருநாடகம் பயன்படுத்திக் கொள்கிறது.

உள்நாட்டிலும், தமிழர்களுக்கு வஞ்சனை; இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் தமிழர் களுக்கு வஞ்சனைதானா என்ற கேள்விதான் மிஞ்சுகிறது.

இந்த வஞ்சனையை எதிர்த்துப் போராடித்தான் தீரவேண்டும். தொடர்ந்து திராவிடர் கழகம் குரல் கொடுத்துக் கொண்டும், பிரச்சாரம் செய்து கொண்டும், போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் வருகிறது.

பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப் படுவதையொட்டி, தமிழ்நாடு அளவில் தொடர் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறோம்.

வருகின்ற 19 ஆம் தேதி நன்செய் பூமியாம் தஞ்சையில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப் பாட்டம்! கழகத் தோழர்களே, விவசாயப் பெருங்குடி மக்களே அணிதிரள்வீர்! திரள்வீர்!!

தமிழ் ஓவியா said...


எளிமை, சிக்கனம், நாணயம், ஒழுக்கம், மனிதநேயம் இவைதான் பெரியார் கொள்கை

பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி இல்லம் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை

பேராவூரணி, செப்.11- பேராவூரணியில் 8.9.2013 அன்று காலை பேராசிரியர் கிருட்டிணமூர்த்தியின் புதிய இல்ல அறிமுக விழா மிகச்சிறப்பாக நடை பெற்றது. இவ்விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக் கூடிய இந்த புதிய இல்ல அறிமுக விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி, ஜெயராமு ஆகியோருடைய இந்த இல்லம் புதுமனையாக நல்ல அளவிற்கு கட்டி அதை அறிமுகப்படுத்தி இது எங்களுடைய இல்லம் என்று எல்லாருக்கும் அறிமுகப்படுத்துகின்ற இந்த விழா விற்கு தலைமை ஏற்று இருக்கக்கூடிய மாவட்ட தலைவர் ஆர்பிஎஸ் சித்தார்த்தன் அவர்களே, பெரியார் பெருந்தொண்டர் தலைமை செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு அவர்களே, கழக பொதுச் செயலாளர் ஜெயகுமார் அவர்களே, கழக அமைப்புச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்களே, தோழர் சிதம்பரம், நீலகண்டன் அவர்களே மற்றும் கழக பொறுப்பாளர்களே, அனைத்து இயக்கங்களை சேர்ந்தவர்களே, பொதுமக்களே, பேராசிரியர் கிருட்டிணமூர்த்தியின் அன்பு சகோதரர் அவர்களே மற்றும் இந்த நிகழ்ச்சியை இணைந்து அமைத்துள்ள பாப்பம்மாள் அவர்களே, கார்த்தி கேயன், சரோஜா, டாக்டர் சிவசங்கரி அவர்களே, அவருடைய குடும்ப பிள்ளைகள் பார்கவி, செய மூர்த்தி, சித்தார்த்தன் அவர்களே, பெரியோர்களே, உற்றார் உறவினர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

வரவேற்புரை ஆற்றிய சகோதரர் மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் சிறப்பாக ஒன்றை சுட்டிக் காட்டினார். நல்ல சீரிய பகுத்தறிவாளரான இல்லத் திற்கு உரியவர்களாக இருக்கக்கூடிய பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி, இந்த இயக்கத்தின் கொள்கை களை பின்பற்றிய காரணத்தாலே இன்றைக்கு தலைசிறந்து நான் முன்னேறி இருக்கிறேன் என்று அறிமுகப்படுத்துகின்ற விழாதான் இது. (கைதட்டல்) இந்த விழா என்பது வீட்டுக்காக மட்டுமல்ல. வீட்டுக்கு வந்து விட்டாலே அறிமுகமாகி விடும். விழாவிற்கு வந்திருக்கும் உங்களுக்கெல்லாம் அறிமுகமாகிவிட்டது. பெரியார் கொள்கையை ஏற்றவர்கள் தாழ மாட்டார்கள். அவரும் அவரது சகோதரரும் இந்த அழைப்பிதழை எவ்வளவு சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். மாணவர் பருவத்திலிருந்து கிருட்டிணமூர்த்தி அவர்கள் எனக்கு அறிமுகம். அவர் மாணவர் பருவம், கல்லூரி பருவம், பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியராக இருந்து இப்போது பேராசிரியராக ஆகி இருக்கிற வரை இவ்வளவு வளர்ந்துள்ள காலம், இன்று வரை இவர் என்ன ஜாதி என எனக்கு தெரியாது. இதன் பெயர் தான் திராவிடர் கழகம். அதுதான் பெருமை.

நாங்கள் எல்லாம் ஒரே கொள்கை உடையவர்கள். இது ஜாதி, இரத்த உறவை விட ஆழமானது. பிரிக்க முடியாது. இந்த கொள்கையை ஏற்று எளிமை, சிக்கனம், வருவாய்க்கு உட்பட்டு வாழ்வது, நாணயமாக வாழ்வது, ஒழுக்கமாக வாழ்வது, பிற மக்களுக்கு தொண்டாற்றுவது இதுதான் பெரியார் கொள்கை. கடவுளை மற என்ற பெரியார் மனிதனை நினை என சொன்னார். மனிதனை நினை என்பதில் எல்லாமே அடக்கம். இந்த குடும்பம். நல்ல பல்கலைக் கழகமாக இருக்கிறது. நம்முடைய பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி அவர்கள் ஆய்வில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். பெருமையாக உள்ளது.

அவரின் வாழ்விணையர் ஜெயராமு நிறைய டிகிரி வாங்கியுள்ளார். பெரியார் பிறந்திருக்காவிட்டால் திராவிடர் கழகம் தோன்றியிருக்காவிட்டால், சுய மரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த இயக்க கொள்கை பரவாமல் இருக்குமானால் இன்றையக்கு ஜெயராமு இத்தனை டிகிரி பெற்றிருக்க முடியுமா? அதைவிட இந்த குடும்பத்திலே கார்த்திகேயன், சரோஜா ஆகியோரின் குழந்தைகள் டாக்டர் க.சிவசுந்தரி எம்டி., படிக்கிறார். அடுத்த பெண் எம்.இ. படிக்கிறார்.

அனைவரும் சிறப்பாக படித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த குடும்பத்திலே டாக்டர், பொறியா ளருக்கு பஞ்சமில்லை, பேராசிரியருக்கு பஞ்சமில்லை. இவ்வளவும் தந்தை பெரியார் அவர்களின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. கல்யாணத்தை பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என பயமுறுத்தி விட்டான் - கிருட்டிணமூர்த்திக்கு இரண்டையும் நாம் பண்ணிட்டோம். திருமணத்தையும் நாம்தான் நடத்தி வைத்தோம். வீட்டையும் நாம்தான் இப்போது அறிமுகப்படுத்தி யுள்ளோம். நல்ல பகுத்தறிவாளராக இருப்பவர் முன்னேற முடியும். இந்த இல்லம் கிருட்டிணமூர்த்தி இல்லமாக இருந்தாலும் பெரியார் இல்லமாக அமைந்திருக்கிறது என மிகுந்த மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன்.

முன்னதாக புதிய இல்லத்தினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார். அனைவரையும் வரவேற்று மதியழகன் உரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் இராச கிரி கோ.தங்கராசு, ஆர்பிஎஸ் சித்தார்த்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான கழக தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக் கிறார்கள்!

(விடுதலை, 11.9.1972)

தமிழ் ஓவியா said...


உயர் நிலைக் கல்வியிலும் தேவை இட ஒதுக்கீடு


வரும் 19ஆம் தேதி காலை தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டு பிரச்சினைகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலை மையில் நடைபெற உள்ளது. கருநாடகத்தில், காவிரியின் குறுக்கே அணை கட்டப்படுவது குறித்து நேற்று எழுதி இருந்தோம்.

ஆர்ப்பாட்டத்திற்கு இரண்டாவது காரணம் - உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது - பேராசிரியர்கள் நியமனத்தில் டில்லி எய்ம்ஸில் இடஒதுக்கீடு கிடையாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இவ்வார்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் தாழ்த்தப்பட்டவரும், பிற்படுத்தப்பட்டவரும் மற்றும் சிறுபான்மையினரும் ஆவார்கள்.

நீண்ட காலமாக இந்தப் பெரும்பான்மை மக்களுக் குக் கல்வி மறுக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாக, சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இடஒதுக்கீடு போராடிப் போராடிப் பெறப்பட்டது.
மாநில அளவில் இந்த இடஒதுக்கீடுகள் இருந் தாலும் மத்திய அரசு துறைகளில் இடஒதுக்கீடு கிடைக்கப் பெறவில்லை.

அதற்காகவும் திராவிடர் கழகம் பெரும் அளவில் போராடி வந்திருக்கிறது. ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துக் கொண்டு போராடி வந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் கால கட்டத்திலிருந்து 1990 வரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் கல்வியில், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதானது மாபெரும் சமூக அநீதியாகும்.

மண்டல் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள் 42, போராட்டங்கள் - 16.

1990இல் பிரதமராக இருந்த சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் காலத்தில்தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் (கல்வியில் அல்ல) 27 சதவீதத்திற்கு வழி செய்யப் பட்டது. அதனை எதிர்த்தும் உயர் ஜாதிப் பார்ப்பனர் கூட்டம் நீதிமன்றம் சென்று முடக்கியது. 1992-க்குப் பிறகுதான் ஏதோ நடைமுறைக்கு வந்துள்ளது.

20 ஆண்டுகள் கழிந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடங்களும் கிடைக்க வில்லை. 7 சதவீதத்தைத் தாண்டவில்லை.

கல்வியில் இடஒதுக்கீடு 27 சதவீதம் என்பதைக் கூட ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் வழங்குவது என்று தான் கூறப்பட்டது. இதுவரை முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது எந்த வகையில் நியாயம்?

இலையைப் போடுவதற்கு முன்னதாகவே வெளியே தள்ளி விடுவதா? மிகவும் வளர்ந்த நாடு என்று கருதப்படும் அமெரிக்காவில்கூட ஒடுக்கப்பட்ட மக்களான நீக்ரோக்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சங்கம் (National Association for Equal Opportunities) என்ற அமைப்பின் தலைவர் சார்லஸ் லியான்ஸ் என்பவர் (Charles Lyons) சென்னைக்கு வந்தபோது (அவருடன் 10 பேர் வந்தனர்) 1.2.81 அன்று பேட்டி ஒன்று அளித்தார். அச்செய்தி ஏட்டிலும் 2.2.1981 வெளிவந்தது. .

எங்கள் நாட்டில் நீக்ரோக்கள் பிரச்சினையும், உங்கள் நாட்டுத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் பிரச்சினையும் ஒன்றாகவே உள்ளன. இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் இடஒதுக்கீட்டு முறை மிகவும் பாராட்டப்பட வேண்டிய சரியான முறையாகும். நிற அடிப்படையிலேயே வேறுபாடு காட்டக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டம் இருந்தாலும், வாய்ப்புகள் வழங்கப்படுவதில் மிகப் பெரிய இடைவெளி இருந்து வருகிறது என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மேல் நிலைக் கல்வி எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதை நேரில் தெரிந்து கொள்வதற்காகவே வந்த குழு அது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இடஒதுக்கீட்டின் நியாயத்தைப் புரிந்து கொண்டு மேல் நிலைக் கல்வி, உத்தியோகம் உட்பட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிசெய்யும் வகையில் உத்தேச சட்டம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தவே 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
மக்களின் இந்த மக்கள் நாயகக் குரலை மதித்து மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க் கிறோம். இல்லையேல் அகில இந்திய அளவில் போராட்டத்தை நகர்த்தி செல்லும் திராவிடர் கழகம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 19ஆம் தேதி தயாராவீர் தோழர்களே!

தமிழ் ஓவியா said...


வாழ்க முத்தையா!


இன்றைக்குத் தமிழ் நாட்டில் இடஒதுக்கீடு 69 விழுக்காடு; சட்டப்படி இன்றைக்கு மத்திய அரசில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இடஒதுக் கீடு - இவை எல்லாம் இம்மக்களின் வளர்ச்சிக்கு இடப்பட்ட அடி உரம்.

இந்த அடி உரம் தந்த வர்கள் மேன் மக்களே! ஒடுக்கப்பட்ட மக்களின் நன்றிக்கும், போற்றுதலுக் கும் உரிய பெரு மக்களே!

அந்த உன்னத ஒப்பரிய பட்டியலில் பெருந்திரு எஸ். முத்தையா முதலியார் அவர் களுக்கு முன்னுரிமை உண்டு.

ஆண் குழந்தை பிறந் தால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தைக்கு முத் தையா என்று பெயர் சூட் டுமாறு தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்திருந் தார் என்றால், அது என்ன சாதாரணமா?

இதே நாளில்தான் (13.9.1928) டாக்டர் சுப்ப ராயன் தலைமையில் அமைந்த அமைச்சரவை யில் இடம் பெற்ற எஸ். முத்தையா முதலியார் அவர் கள் முதல் வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்து நடைமுறைக்கும் கொண்டு வந்தார். (அரசு ஆணை எண் 744 நாள்: 13.9.1928).

அரசு நியமனத்திற்கும் 12 இடங்கள் உள்ளன என்றால் அவற்றில்

இந்து பார்ப்பனரல்லா தாருக்கு - 5

பார்ப்பனர்களுக்கு - 2
இசுலாமியர்க்கு - 2
கிறித்தவர்களுக்கு - 2

ஆங்கிலோ இந்தியர் உட்பட பிறருக்கு (ஆதி திராவிடர் உட்பட) - 1

இந்த வகையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றது அமைச் சர் முத்தையா அவர்களால் கொண்டு வரப்பட்ட ஆணை.

இந்த வகையில் பார்த் தாலும்கூட 3 சதவீதமுள்ள பார்ப்பனர்களுக்கு 17 சத வீதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் கூடப் பொறுக்காத பார்ப்பன ஏடான சுதேசமித்திரனோ முத்தையா முதலியா ருக்கு வகுப்புப் பித்தம் தலைக்கேறியது என்று எழுதியதே!

முத்தையா முதலியார் செய்தது தேசத் துரோகம், அநீதி, வகுப்புப் பித்தம், மக்கள் இதனைக் கண்டிக் கின்றனர் என்று இந்து ஏடு எகிறியதே!

உண்மையில் இப்படி எழுதிய பார்ப்பன ஏடு களின் எழுத்துக்களே அவர்களுக்கு வகுப்புப் பித்தம் எந்த அளவுக்குத் தலைக்கேறியது என்பதற் கான அளவுகோலாகும்.

முத்தையா அவர்கள் மறைந்தபோது அண்ணா அவர்கள் எழுதியது. தனக் குக் கிடைத்த சந்தர்ப் பத்தை (அமைச்சர்) கித் தாப்புக்கும், திறப்பு விழா வுக்கும் மட்டுமே கிடைத் தது எனக் கருதாமல் திராவிட இன மக்களின் துயர் துடைக்கும் திட்டங் களுக்காகப் பயன்படுத்தி யவர் என்று எழுதியதைப் பதவியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

வாழ்க எஸ். முத்தையா முதலியார்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பொறுத்திருந்து பார்ப்போம்!

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி - பிஜேபி சார்பில் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உயர் ஜாதி ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு இப்பொழுதே மோடி வெற்றி பெற்று பிரதமராகவே ஆகி விட்டதுபோல குதிகால் தரையில் படாமல்கூடக் குதிக்கிறார்கள்.

கோட்டைக்குள் இப்பொழுது குத்து வெட்டுக் கிளம்பி விட்டது. மூத்த தலைவர்களுக்குள்ளேயே முரண்பாடுகள் முற்றி வெடித்து வருகின்றன.

பி.ஜே.பி. பிரச்சாரக் குழுத் தலைவராக, பிஜேபி கோவா செயற்குழுவில் மோடி அறிவிக்கப்பட்ட போதே, பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. அத்வானி தம் எதிர்ப்பை, அதிருப்தியை வெளிப்படுத்தினார். கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன்பின், அத்வானியின் கையில் - காலில் விழுந்து ஏதோ சமாதானம் படுத்தினார்கள்.
உள் காயத்துக்கு மேலே களிம்பு பூசி மெழுகினர் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்குமுன், நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் கட்டளை.

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு பிரதமருக்கான வேட்பாளரை அறிவிக்கலாம் என்பது, அக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி போன்றவர்களின் நிலைப்பாடு.

வயதான காலத்திலும்கூட அத்வானிக்குப் பதவி ஆசை போகவில்லை என்று மோடியின் ஆட்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இப்படியெல்லாம் திட்டமிடு வதில் தான் மோடி (மஸ்தான்) கில்லாடி ஆயிற்றே!

பிஜேபியைப் பொறுத்தவரை, வாஜ்பேயியாக இருந்தாலும் சரி அத்வானியாக இருந்தாலும் சரி, முரளி மனோகர் ஜோஸியாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் உத்தம புத்திரர் என்று அவர்கள் வட்டாரத்தால் புகழப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பேயி லக்னோ பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பதை ஒரே ஒரு முறை நினைத்துப் பார்க்கட்டும்.

நாளை என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. முள்ளின்மீதும் கூரிய கற்களின் மீதும் அமர்ந்தா கரசேவை செய்ய முடியும்? எல்லா வற்றையும் சமன் செய்து அதன் மேல் அமர்ந்துதான் கரசேவை செய்ய முடியும் என்று வாஜ்பேய் சொல்ல வில்லையா? அவர் ஒரு கவிஞர் என்று கூறப்படுவ தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு சமன் செய்து அதன் மேல் கரசேவை நடைபெறும் என்று மறைமுகமாக கூறினார் என்பது சிந்திப்பவர்களுக்குத் தெரியாதா?

நரேந்திரமோடி அளவுக்குப் பச்சையாக சிறுபான் மையினரைக் கொன்று குவிக்கும் அளவுக்கு அவர் களின் அணுகுமுறை மதம் கொண்ட யானைபோல் திமிர் முறித்து எழாது என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

கோத்ரா அளவுக்கு நிலைமையைக் கொண்டு செல்லத் தயங்குவார்கள் என்று வேண்டுமானால் கருதலாம்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அரசியல் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப கொண்டு செலுத்த வேண்டும் என்கிற அணுகுமுறை அவர்களிடம் இருக்கும்.

ஆனால் மோடியோ நேரடியாகவே களத்தில் இறங்கி துப்பாக்கிப் பிடிக்கக் கூடிய அளவுக்குச் செல்லும் வெறித்தனம் தூக்கலான மனப்பான்மை கொண்டவர்.

இந்தியா முழுமைக்கும் மோடியின் பிம்பம் விகாரப்பட்டுப் போயிருக்கிறது. அவரை பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவித்தால் அது எதிர் விளைவை ஏற்படுத்தும் என்பது அரசியல் அனுபவத் தன்மையோடு அத்வானி கூறக் கூடும். ஆனாலும் ஆர்.எஸ்.எஸின் முடிவு தானே இறுதி முடிவு! ஆர்.எஸ்.எஸ். யாரைத் தேர்வு செய்யும்? நரேந்திர மோடி போன்றவர்களைத் தான் தேர்வு செய்யும் என்பது எதிர் பார்க்கப்படக் கூடிய ஒன்றே!

நரேந்திர மோடி நிறுத்தப்பட்டால் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எதிர் விளைவை உண்டாக்கும்; ஒருவகையில் மதவாத சக்தி மத்தியில் ஆட்சியில் வராமல் இருக்க ஒரு வகையில் நல்லது தானே என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. நடக்கட்டும்; பிஜேபிக்குள் இன்னும் என்னென்ன உட்குத்துகளோ!

பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


சித்திரவதைக்கு...நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லா விட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும்.
(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...
விநாயகரை மறந்த இந்து முன்னணி

பாரத் இந்து முன்னணி என்று ஏதோ ஒரு அமைப்பாம். சென்னை புளியந்தோப்புப் பகுதியில் 21 அடி விநாயகர் சிலையை வைத்து அதன் முன்பு யாகம் நடத்தியுள்ளனர். இலஞ்சம் ஊழலுக்கு எதிராக இந்த யாகமாம்!

யாகமும், பிரார்த்தனையும்கூட ஒரு வகையான லஞ்சம்தானே நான் உனக்கு சுண்டல், கொழுக்கட்டை செய்து வைக்கிறேன் எனக்கு இவற்றை எல்லாம் கொடு என்பதும் கையூட்டுதானே! கடைசியாக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்து மதத்தை இழிவு செய்யும் கி.வீரமணியைக் கைது செய்ய வேண்டுமாம்! ஏன் விநாயகரிடம் இந்த வேண்டுகோளை வைக்கவில்லை யாம்? அவர்களுக்குத் தெரியாதா - அது வெறும் களி மண்ணுதான் என்று.

சண்டித்தனம்!

வழக்கம்போல சண்டித்தனம் செய்து தற்காலிக விளம்பரத்தைத் தேடிக் கொள்வதில் ராமகோபால அய்யருக்கு நிகர் அவரேதான். விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் காவல்துறை அனுமதி கொடுத்துள்ள பாதையை புறக்கணித்து ஊர்வலம் தடை செய்யப்பட்டுள்ள மசூதி தெருவிற்குள் ராம-கோபாலன் தலைமையில் 65 பேர் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் இதே வேலை - இதே விளம்பரம்! 15 நாள் உள்ளே வைத்தால் தெரியும் சேதி!

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் சதிபார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும், அவர் களை ஒழித்துக் கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக் கையாக இருந்து வந்திருக்கிறது.
(விடுதலை, 14.7.1961)

தமிழ் ஓவியா said...


திமிர் மஹாவிஷ்ணுவுக்கா? மகாபலிக்கா?


மகாபலி எனும் சக்கரவர்த்தி வீரமும் கொடைக்குணமும் மற்றும் செருக்கும் உடையவனாக திகழ்ந் தான். மகாபலியின் செருக்கை அடக்க, மஹாவிஷ்னு "வாமனன்" அவதாரம் எடுத்து அவனது அரண்மனைக்குச்சென்று தானம் கேட்டார். வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என அறிந்தும் என்ன வேண்டும் என்று கேட்டான் மகாபலி. மூன்று அடி மண் வேண்டும் என்றார் மஹாவிஷ்னு. மகாபலி தானம் செய்து கொடுக்கத் தயாரானான். மஹாவிஷ்ணு ஓங்கி உலகளந்த உத்தம ரானார். அதைக் கண்ட மகாபலியின் மகன் நீங்கள் வந்த குள்ள உருவத்தில்தான் மண்ணை அளக்கவேண்டும் என் றான். மஹாவிஷ்ணுவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியது. உலகளந்த உத்த மனாய் ஒரு அடியில் மண்ணுலகமும் இரண்டாவது அடியில் விண்ணுலகமும் அளந்து மூன்றாவது அடிக்கு மண் எங்கே என்று கேட்டார் விஷ்ணு. இப்படி மகாபலி யின் செருக்கை அடக்கிய நாள்தான் திருவோணம்.

- தினமலர் பக்திமலர்

மண்ணுலகத்தை மஹாவிஷ்ணு எங்கே நின்றுகொண்டு தாண்டினார்?

விண்ணுலகத்தை இரண்டாவது அடியில் தாண்டிய மஹாவிஷ்ணு அடுத்த காலை எங்கே வைத்தார்?.

மண்ணுலகமும் விண்ணுலகமும் அளக்கப்பட்டபோது மகாபலி எங்கே நின்றுகொண்டிருந்தான்?

தினமலருக்கே குழப்பம் ஏற்பட்டதால் தான் மகாபலி தலையில் காலை வைப்பது போல் படம் வரையப்பட்டதா?

அல்லது சத்திரிய, சூத்திர மக்களை இழிவுபடுத்துவதற்காக பூணுல் சகிதமாக மஹாவிஷ்ணு தன் காலை மகாபலி தலையில் வைப்பதுபோல் படம் வரைந்து தினமலர் புளகாங்கிதம் அடைந்திருக் கிறதா?

வாமனன் உருவத்தில் தானம் கேட் டவன் அதே உருவத்தில் மண்ணை அளப்பதுதானே சரி?

இதைத்தட்டிக் கேட்டால் மகாபலி மகன் மீது மஹாவிஷ்ணுவுக்கு கோபம் வருவது சரியா?

- கி. தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...


தி இந்து தமிழ் பதிலளிக்குமா தமிழில்?


தி இந்து தமிழ் நாளிதழுக்கு எனது வாழ்த்துக்கள்.தமிழ் பத்திரிகை உலகில் நல்ல பல அம்சங்களுடன் வெளிவந்திருக்கும் தி இந்துவில் எந்தவித பாரபட்சங்களுமின்றி கருத் துகள் இடம்பெற வேண்டும் என்பது என்னைப் போன்றோர் கருத்து.

நான் தினமும் ஆறு பத்திரிகை களைப் படிப்பவன்.பார்ப்பவனல்ல! ஆங்கில நாளிதழில் பல வெளிவராத செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதை மற்ற நாளி தழ்கள் மொழி பெயர்த்து வெளி யிட்டுள்ளன.

இப்போது ஒரு நெருடலான செய்தி என்னவென்றால் முதல் நாள் வெளிவந்த தி இந்து ஆர்வமாய் வாங்கி படித்தேன். நல்ல பல கட்டு ரைகள். கவர் ஸ்டோரி,விளையாட்டு, இன்னும்பல..ஆனால்தேடி தேடி பார்க்கின்றேன். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செய்தி ஒரு இடத்தில் கூட இல்லை. இது தொடர்பான சைக்கிள்பந்தயம் என்ற ஒரு செய் தியை தவிர.. தங்களின் தலையங்கத் தில் தமிழ் மொழியின் சிறப்பிற்கு மேலும் அழகூட்ட நாங்களும் வந் துள்ளோம் என்று எழுதி விட்டு அன்னை தமிழ் மொழிக்கு எப்படி யெல்லாம் சிறப்பை சேர்க்க முடியுமோ அதையெல்லாம் செய்த தமிழ்த்தாயின் மூத்த குடிமகன் என்று தமிழர்களால் அடையாளம் காணப் பட்ட அந்த அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் செய்தியை விட்டு விட்டீர்களே! அரசியல் கட்சியினர் நடத்தும் அண்ணா பிறந்தநாள் செய்திகள் இடம்பெற வில்லை என்றாலும் ஒரு முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையிலாவது செய்தி வெளியிட்டு சிறப்பை சேர்த்திருக்கலாமே! ஆனால் ஒரு வகையில் நான் எதிர்பார்த்ததுதான் தவறு என நினைக்கின்றேன்.

ஆம். சென்னை உயர்நீதிமன்றத் தில் டி.முத்துசாமி அய்யர் என்ற ஆரியர் ஒருவர் தமிழராக தெரியும் (இன்றைய தலையங்கத்தில் வந்த ஆதாரம்) தி இந்துவிடம் தன் தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அண்ணாவை எப்படி தெரியும்? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.திராவிட இயக்கப் புறக்கணித்தலை கைவிட்டால்தான் தங்கள் நாளிதழை மக்கள் புறக் கணிக்க மாட்டார்கள்.

- தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட தி.க.செயலாளர் காரைக்குடி-630002

தமிழ் ஓவியா said...


துவக்கத்தில் தோடி முடிவில் முகாரி!


- ஊசி மிளகாய்

முன்பு திராவிட நாடு ஏட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் அக்கால காங்கிரஸ் - பார்ப்பனர் கூட்டு பற்றி எழுதுகையில், துவக்கத்தில் மகிழ்ச்சி இன்பம்; முடிவில் துயரம் - துன்பம் - என்ற கருத்து வரும் வகையில்,
ஆரம்பத்தில் அடானா (ராகம்)

முடிவில் முகாரி (ராகம்) என்று தலைப் பிட்டு எழுதுவார்!

அண்ணாவின் எழுத்துக்களை மேலும் மெருகூட்டி வாசகர்களுக்குத் தந்து வசியப் படுத்துவது அவர் தந்த தலைப்புகளேயாகும்!

சீடர் சிலம்பம் எடுக்கிறார்!

இரு கொடி ஏந்திகள்!

அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே!

இது சகஜம் இது சகஜம்

விதைக்காது விளையும் கழனி!

அதிசயம் ஆனால் உண்மை

இப்படி பலப்பல என்றென்றும் நினைவில் நிற்கும் தலைப்புகள் தனி ரகமானவை.

அதுபோல் இன்று ஒரு தலைப்பு இது!

துவக்கத்தில் தோடி, முடிவில் முகாரி

குஜராத் மக்களுக்காகவே சேவை செய்ய 2016 வரை, தம்மைத் தேர்ந்தெடுத்த குஜராத் வாக்காளர்களுக்கே சேவை செய்வேன் என்று பேசி, ஒரு வாரம் கூட ஆகவில்லை; இப்போது, அத்வானிகளின் அங்கலாய்ப்பு களைக் கூட பொருட்படுத்தாமல் திடீரென்று, கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதற்கொப்ப, மோடியை பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ். ஆணையை தலைமேல் ஏற்று அதன்படி ஆடும் - ஆட்டி வைக்கப்படும் ராஜ்நாத்சிங் அறிவித்துவிட்டார்!

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வட்டாரத்தில்தான் இதுகுறித்து பெரு மகிழ்ச்சி வரவேற்பு எல்லாம்!

காரணம், மணி சங்கர்(அய்யர்) கூறிய படி, இதனால் காங்கிரஸ் வெற்றி உறுதி யாகி விட்டது என்று பல அரசியல் வட்டாரங் களில் ஒரு குரலில் ஓசை கேட்கிறது!

ஒரு வாரத்திற்குள் என்னே மனமாற்றம் - மோடிக்கு!

குஜராத்திற்குப் பதில் தேச முழுவ தற்குமே சேவை செய்து, பாரதத்தினை முழுக்க ஹிந்துத்தாயாக இராமன், கிருஷ்ணன் தவிர வேறு எந்த கடவுளுக்கும் இடமில்லாத, இந்த அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மனுதர்மத்தையே மீண்டும் நமது ஹிந்துத்துவ சர்க்காரின் அரசியல் சட்டமாகப் பிரகடனப்படுத்து வதற்கு, மோடியை விட்டால் வேறு யார்தான் கிடைப்பர்?

குறி வைத்து சிறுபான்மையினரான இஸ்லாமிய, கிறித்துவர்களை வேட்டை யாடு, விளையாடு என்று புகுந்து அழித்து, ஒரு தடாவை, பொடாவை யெல்லாம் மிஞ்சும் ஹிட்லரிசதர்பார் நடத்தி நாட்டை இந்து நாடாக்க வருகிறார் மோடி!

பராக்! பராக்!!

ஒரு வாரத்திற்குள் இரு முடிவுகள் அல்லது இரு வகை மோடி வித்தைகள்!

அடடா! என்னே ஜால வித்தை!

இதோ சோ ஒருபுறம், குருமூர்த்திகள் மறுபுறம் புடைசூழ, வரவிருக்கிறார்! சோ அய்யர் கதவு தட்ட கோட்டைக்கே கிளம்பி விட்டார்!

இதற்காக, தமிழ்நாட்டில் திருச்சியில் பண மழை கொட்டுகிறது! விளம்பரங்கள் தூள் பறக்கிறது!

இணைய தளப் பிரச்சாரம் என்ற புது வகை மோ(ச)டிப் பிரச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது!
மீடியாக்கள் எல்லாம் நம்மவாள் தானே - பின் என்ன ஜமாயுங்கள் என்று அவாள் மகிழ்ந்து குலாவிட எல்லாம் துவஜாரோ கணம் நடக்கிறது! ஆலோப ஆரோகரன சங்கீதங்கள் எல்லாம் மோடி பற்றியே!

ஆனால் தோடியில் ஆரம்பிக்கிறது! முடிவில் முகாரியில் முடிந்து விடுவது உறுதி என்கின்றனர். மோடி விளைவுபற்றி தேடி ஓடி, நாடி ஆராய்ச்சி செய்த அரசியல் விற்பன் னர்கள்!

பொறுத்திருந்து பார்க்கத்தானே போகி றோம்; பெங்களூரு - கர்நாடகத் தேர்தல் முடிவில் என்ன பதில்? நினைவிருக்கிறதா?

தமிழ் ஓவியா said...


டில்லி எய்ம்ஸ்' மருத்துவமனையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்


வரவேற்கத்தக்க முடிவு

டில்லி எய்ம்ஸ்' மருத்துவமனையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்

மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

புதுடில்லி, செப்.16- டில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் ("எய்ம்ஸ்') காலியாக உள்ள 148 அதி சிறப்பு (சூப்பர் ஸ்பெஷா லிட்டி) பணியிடங்களை தற்போதைய இட ஒதுக் கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி நிரப்பலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத் தியுள்ளது.

இதுபோன்ற சிறப் புப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டு முறை யைப் பின்பற்றத் தேவை யில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், எய்ம்ஸ்க்கு மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு அறிவுரை

இந்தப் பணியிடங் களை நிரப்புவது தொடர் பாக எய்ம்ஸ் எழுப்பிய சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் சுகாதார அமைச்சகம் இந்த அறிவுரையை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக எய்ம்ஸ் இயக்குநருக்கு மத்திய சுகாதார அமைச் சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப் பிட்டுள்ளதாவது: மருத்துவ உதவிப் பேரா சிரியர்கள், நர்சிங் விரை வுரையாளர்கள் உள் ளிட்ட 148 பணியிடங் களுக்கு ஏற்கெனவே வெளியிடப்பட்ட விளம்பரத்தின்படியும், இட ஒதுக்கீடு அடிப் படையிலும் தகுதியான வர்களைத் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொள்ளலாம். எனி னும், இந்தப் பணியி டங்கள் உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பைப் பொறுத்து அமையும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டில்லி எய்ம்ஸ் உள் பட அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப் படும் சிறப்பு மற்றும் அதி சிறப்பு படிப்புகளுக் கான உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங் களை நிரப்பும் போது, இட ஒதுக்கீட்டுக் கொள் கையைப் பின்பற்றத் தேவையில்லை என உச்ச நீதிமன்றத்தின் முன் னாள் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலை மையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதி சிறப்புப் பணியிடங்களைப் பொறுத்த வரையில் திறமைக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்; இந்த விஷயத் தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கடந்த 1992 ஆண்டைய மண்டல் வழக்கில் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு ஏற்கெனவே தெளிவு படுத்தியுள்ளது. இதற்கு மாறான நிலையை எடுக்கத் தாங்கள் விரும் பவில்லை என்றும் அல் தமஸ் கபீர் தலைமையி லான அமர்வும் உறுதி படத் தீர்ப்பளித்தது.

மறு ஆய்வு மனு!

இதையடுத்து, இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மத்திய அரசு மனு தாக் கல் செய்தது. அதன் பிறகு, மூன்று நாள்கள் கழித்து இந்த மனுவை அவசரமாக விசார ணைக்கு எடுத்துக் கொள் ளக் கோரி, மற்றொரு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை செல் லாததாக்க வகை செய் யும் அரசியல் சட்டத் திருத்த மசோதவை, மத்திய அரசு நாடாளு மன்றத்தில் விரைவில் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு அரசி யல் கட்சிகளும் வலியு றுத்தின. மத்திய அரசும் இத்தகைய மசோதா வைக் கொண்டு வருவ தாக உறுதியளித்தது. ஆனால், மத்திய அரசு இதற்கான நடவடிக் கையை எடுக்கவில்லை.

தற்போதைய நிலை தொடரும்

இட ஒதுக்கீடு தொடர் பான தற்போதைய கொள்கை நிகழ்காலத் துக்கும், வருங்காலத்துக் கும் செல்லுபடியாகும் என மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், அண்மையில் முடிவ டைந்த மக்களவைக் கூட்டத்தில் தெரிவித் தார். மறு ஆய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு அளிக்காவிட்டால், அட்டார்னி ஜெனரலுடன் கலந்தாலோசித்து, இட ஒதுக்கீடுக் கொள்கை வருங்காலத்திலும் செல் லத்தக்க வகையிலான அரசாணையை மத்திய அரசு வெளியிடும் என் றும் அவர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எய்ம்ஸ் மருத்து வர்களின் பதவி உயர்வை எந்தவிதத்திலும் பாதிக் காது என்று, அதை நிர்வகிக்கும் அமைப் பின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மதவெறி சக்திகளை முறியடிக்கும் ஒரே மாமருந்து தந்தை பெரியார்தான்


வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி விழா எடுப்பீர்! தமிழர் தலைவர் வேண்டுகோள்!

மண் புழுவைவிடக், கேவலமாக மதிக்கப் பட்ட மக்களுக்கு விடுதலை உணர்வைப் பெற்றுத் தந்த, தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாளை, திருவிழாவாக வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி கொண்டாடுவீர்! மதவாத சக்திகளை முறியடிக்கும் மாமருந்து, தந்தை பெரியார் என்பதை மறவாதீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாளை (17.9.2013) அறிவு ஆசானின் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா - திராவிடர் இனத்தின் திருவிழா!

மண் புழுவைவிடக் கேவலமாக மதிக்கப்பட்ட அடிமை இனத்திற்கு விடுதலை தேடித் தந்து அவர்கள் மானமும் அறிவும் பெற, தமது 95ஆம் வயதிலும் - தளர்ந்து தள்ளாடிய நிலையிலும், தளரா முயற்சியோடு உழைத்த தகைசால் பெருந்தகைக்குப் பிறந்த நாள் விழா என்பது இனத்தின் மீட்சிக்குரிய தனி விழா - தரணியெங்கும் கொண்டாடப்படுகிறது! உலக நாடுகளில் பற்பலவற்றிலும், பார் போற்றும் பகுத் தறிவுப் பகலவனுக்கு விழா எடுக்கப்படுகிறது. ஆம்; அது நன்றித் திருவிழா! நானிலம் போற்றும் நாயகரின் தொண்டினைத் தொடர சூளுரைத்து சுயமரியாதை உலகு அமைக்க, சோர்விலா உழைப் பைத் தரும் உன்னதத் தொண்டர்களுக்கு, உற்சாக மூட்டும் உயர் தனி விழா!

மதவெறி சக்திகளுக்கு எதிராக...

ஒவ்வொரு ஆண்டும், அவரது வெற்றிகள் பரந்து விரிகின்றன; சிறந்து உயர்கின்றன!

இன்றைய கால கட்டத்தில் இனத்தின் எதிரிகளும், மத வெறி சக்திகளும் கைகோர்த்து களம் வரும் நிலையில், அவர்களின் அதி சக்தி வாய்ந்த கூட்டணியை, முறியடித்து, மனிதநேயம் தழைக்கச் செய்யும் ஒரே மாமருந்து, பெரியார்! பெரியார்!! பெரியார்!!!

பெரியார் என்பவர் தனி மனிதர் அல்லர்; தத்துவங்கள்! கொள்கைகள்!! லட்சியங்கள்!!!

அவற்றை அமுல்படுத்தி, முழுப் புரட்சி - ஆயுத மேந்தாத அறிவுப் புரட்சியை, வன்முறைக்கு இடந்தராத வைக்கம் முறை புரட்சியைச் செய்து, வாகை சூடிடுவர் அவர்தம் வாரிசுகள்!

இது உறுதி! உறுதி!! உறுதி!!!

நமது பணிகள் இரண்டே முனைகளில்; ஒன்று பிரச்சாரம், இரண்டு போராட்டம்!!

வீட்டுக்கு வீடு

சாதிக்க முடியாதவை என்று பிறரால் கருதப் பட்டவைகளைச் சாதித்துக் காட்டி, சரித்திரம் படைக்க நாம் என்றென்றும் உழைப்போம்! வெற்றி பெறுவோம்!!

உறுதி பொங்க, உற்சாகம் மிளிர, உவகை வழிய, பணி முடிக்க வாரீர்! வாரீர்!!

மத விழாக்களை மிஞ்சும் வகையில், வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்கள், புத்தாடை வரை வழங்குவீர்!

பல வழிகளில் பெரியார் தத்துவங்களை மய்யப் படுத்தும் விழாக்கள் செப்டம்பர் தாண்டியும் தொடரட்டும்! தொடரட்டும்!!

தோழர்களே, தோழர்களே! பணி முடிப்பீர்!

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
16.9.2013