வணிக நோக்கில் பத்திரிகைகள் முதலாளிகளின் குரலாக இருக்கின்றன
பத்திரிகையாளர்கள் பாராட்டு விழாவில் விடுதலை ஆசிரியர் கருத்துரை
சென்னை, செப். 26- இன்றைய தினம் பத்திரி
கையில் பணிபுரிவோர் முதலாளிகளின் குரலை ஒலிக்கக் கூடிய அளவுக்கு
பத்திரிகைத் துறை வணிக மயமாகி விட்டது என்று திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி அவர்கள் கூறினார்.
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (ஆருது)
பொன் விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்ச்சி 22.9.2013 அன்று காலை
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சங்க கட்டடத் தில் நடை பெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந் தினராக பங்கேற்று பேசிய விடுதலை ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் உரையாற்றியதாவது:-
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலே
தமிழில் இதழியல் தொடங்கி அதிலே நல்ல பயிற்சி யாளர்களை, இளைஞர்களை
உருவாக்கவேண்டும் என்பதற்கு முன்னோடியாக, இதழியலிலே மிகச் சிறப்பாகப்
பணியாற்றக்கூடிய, பாராட்டத்தகுந்த பத்திரிகையாளர் - அவர்களுடைய கருத்துகள்,
எழுத்துகளிலேயே கூட எங்களைப் போன்றவர்கள் பற்பல நேரங்களில்
மாறுபட்டிருக்கலாம்; அது வேறு செய்தி. ஆனால், நாம் எல்லோரும் ஒரே
குடும்பத்தைச் சார்ந்தவர்கள்; பத்திரிகைக் குடும் பத்தைச் சார்ந்தவர்கள்.
நட்டத்தில் பத்திரிகை நடத்துபவர்கள் நாங்கள்
என்னையும், அருமைத் தோழர் அய்யா ஆர்.என்.
கே. அவர்களையும் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் என்று அழைப்பிதழில்
போட்டிருக்கிறார்கள். இரண்டு இயக்கங்களுக்கும் பத்திரிகைகள் உண்டு.
அவருக்கு ஜனசக்தி, எனக்கு விடுதலை. இரண்டு பத்திரிகைகளும் லாபத்தில்
நடக்காமல், நஷ்டத்தில் நடைபெறக்கூடிய பத்திரிகைகள்தான். இந்த விழா விற்கு
வந்திருக்கக்கூடிய அருமைத் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களே, இந்த
நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய சென்னை பத்திரி கையாளர்
சங்கத்தின் தலைவர் அருமைத் தோழர் இரா.மோகன் அவர்களே, வரவேற்புரையாற்றிய
பொருளாளர் ரகுநாதன் அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கின்ற அருமைத்
தோழர் நூருல்லா அவர்களே, வாழ்த்துரை வழங்க இருக்கக் கூடிய பாபு ஜெயக்குமார்
அவர்களே,
நாத்திகம் பாலு
இந்த விழாவில் பெருமைப்படுத்தப்படவிருக்
கின்ற செய்தியாளர்களாக, பல ஆண்டுகாலம் மூத்த பத்திரிகையாளர்களாக
மற்றவர்களுக்கு வழிகாட்டி யாக இருக்கக்கூடியவர்களாக நாத்திகம் பாலு என்று
அழைக்கப்பட்ட, விடுதலையின்மீது உரிமையுள்ள ஒரு செய்தியாளராக
என்றென்றைக்கும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பார்கள். இன்றைக்கும்
விடுதலையின் சிறப்புச் செய்தியாளராக என்றைக் கும் தொடர்ந்துகொண்டிருக்கக்
கூடியவர்.
அதுபோலவே, நண்பர் தினமணி வி.என்.சாமி
என்று அழைக்கப்பட்டாலும், நான் சொல்கின்ற தகவல் இங்கே இருக்கின்ற ஒரு
சிலருக்குத் தெரியும்; பல பேருக்குத் தெரியாது. விடுதலை நாளிதழில்
இருந்துதான் அவர் தினமணிக்கே சென்றார். பல பேருக்கு நாற்றங்கால் விடுதலை
நாளிதழ்தான். அய்யா பெரியாரின் உரையினை குறிப்பெடுத்து, விடுதலையில்
வெளியிட்டு, அய்யா அவர்களே பாராட்டக் கூடிய அளவிலே திறமை படைத்தவர் தோழர்
சாமி அவர்கள். அன்றைக்குப் பார்த்த சாமி போலவே, இன்றைக்கும் இருக்கிறார்.
மற்ற சாமிகளை நாங்கள் பாராட்டுகிறோமோ இல்லையோ, இந்த சாமியை மறக்கவே
முடியாது. அதுதான் மிக முக்கிய மானது. அந்த வகையிலே அருமைத் தோழர் வி.என்.
சாமி அவர்களே,
அதுபோலவே, தினமலர் விஸ்வநாதன், அழைப்
பிதழில் தினமலர் விஸ்வநாதனைப் பாராட்டுகிறார் கள் என்று போட்டிருப்பதைப்
பார்த்து, என்னிடம் ஒரு நண்பர் கேட்டார், என்னங்க, தினமலர் பத் திரிகையில்
பணியாற்றியவரைப் பாராட்டப் போகிறார்களா? என்று.
தினமலரில் என் பெயர் வராது
தினமலரில் என்னுடைய பெயர் வராது; என்னு
டைய படமும் வராது, அது வேறு செய்தி. வரக் கூடாதவர்கள் பட்டியல் என்று
ஆசிரியர் பகுதியில் வைத்திருப்பார்கள், அதில் என்னுடைய பெயரும் அடக்கம்.
அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. பத்திரிகையாளர் சங்கத்தில் என்னை
அழைத்தார்கள்; யாரையும் பாராட்டுவதற்கு எங்களுக்கு வேறுபாடு கிடையாது.
கருத்துகள்தான் எங்களுக்கு எதிரியே தவிர, நபர்கள் எதிரிகள் கிடையாது.
அவர்கள் பத் திரிகைகளில் பணியாற்று கின்ற பத்திரிகையாளர் களே தவிர,
முதலாளிகள் கிடையாது.
முதலாளிகள் பல விஷயங்களை நிர்ணயிக்
கிறார்கள்; செய்தியாளர்கள் அவர்களுடைய கட மையைச் செய்துவிடுகிறார்கள்; பல
நேரங்களில் அவர்கள் சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள்.
கட்சி, அமைப்பு, தலைமை இவைகளிலெல்லாம்
பார்த்தீர்களேயானால், தொண்டர்கள் சில நேரங் களில் பலிகடாக்களாக
ஆக்கப்படுவார்கள். தலை வர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள். அது போல்,
பத்திரிகை உலகத்திலும் உண்டு. ஆகவே, பாராட்டுவதற்கும், அதற்கும்
சம்பந்தமில்லை என்று அந்த நண்பருக்குக் கூறினேன்.
அதேபோல், தினத்தந்தி ராமஜெயம் அவர்கள்,
தினத்தந்தி எங்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரர். அய்யா ஆதித்தனார்
காலத்திலிருந்தே, தந்தை பெரி யார் அவர்கள் காலத்திலிருந்தே உறவு
இருக்கிறது. என்றைக்கும் மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருக்கக்
கூடியவர்கள். அந்த வகையில் இவர்கள் எல்லோரையும் பாராட் டுவது
சிறப்பானதாகும்.
அதைவிட பல நண்பர்கள், மூத்த பத்திரிகை
யாளர்கள் பாபு ஜெயக்குமார், பகவான் சிங், மணி போன்றவர்கள் எல்லோரையும்
சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் எல்லோரும் எங்களைத்
தாக்கி எழுதியிருப்பார்கள், விமர்சித்திருப் பார்கள். அதில் ஒன்றும் தவறு
இல்லை. ஏனென்றால், கருத்துச் சுதந்திரம் உண்டு.
பெரியார் கூறும் கருத்து
பெரியார் அவர்கள் ஒரு கருத்தினை சொல் வார்கள்; என்னுடைய தலைவர் அவர்கள், வழி காட்டியாக இருக்கக் கூடிய அறிவாசான் அவர்கள்.
என்னுடைய கருத்தை மறுக்க உங்களுக்கு எல்லா
உரிமையும் உண்டு. அதனால், என் கருத்தை வலியுறுத்திச் சொல்ல எனக்கு
உரிமையுண்டு என்று. அதைத்தான் நாங்கள் கடைபிடிக்கின்ற சூழ்நிலை யாகும்.
இங்கே பழைய கட்டடத்தில் நடைபெறுகின்ற
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் பொன் விழாவில், சந்திக்க வாய்ப்பில்லாத
பலரை இங்கே சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கு எல்லோருக்கும்,
வணக்கத்தினையும், வாழ்த்துகளை யும் தெரிவிக்கின்ற இந்த நேரத்தில், இதுபோன்ற
நிகழ்ச்சிகள், மூத்த பத்திரிகையாளர்களைச் சந்திக் கின்ற வாய்ப்புகள்
என்பது அடிக்கடி நடைபெற வேண்டும்.
தமிழ்நாட்டில் மாறுபட்ட கருத்து என்று
சொன் னால், அவர்களை எதிரிகள்போல் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.
விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள எவ்வளவுக்கெவ்வளவு பக்குவம் இருக் கிறதோ,
அவ்வளவுக்கவ்வளவு ஜனநாயகத்தைப் புரிந்தவர்கள் என்று அர்த்தம். மந்தைத்தனம்
என்பது ஆடு மாடுகளுக்குத்தான். ஆனால், மனிதர்களுக்கு மந்தைத்தனம்
இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு பக்கம் சாய்ந்தால், அப்படியே அந்தப்
பக்கமே சாய வேண்டிய அவசியம் இல்லை.
பத்திரிகை சுதந்திரம்
சில நேரங்களில், பத்திரிகை சுதந்திரம்,
பத்திரிகை சுதந்திரம் என்று நாம் பேசுகின்றோம். பத்திரிகை சுதந்திரம்
படுகின்ற பாடு என்னவென்பது மிகத் தெளிவாகத் தெரியும். அதைப்பற்றி விரிவாகப்
பேசி, உங்களையெல்லாம் சங்கடத்திற்கு ஆளாக்க விரும்ப வில்லை. அதைப்பற்றி
பேசுவதற்கு எங்களுக்குப் பல மேடைகள் இருக்கின்றன.
பொதுவாக, ஜனநாயகத்தில் நாம் பெருமைப்படக்
கூடிய ஒரு செய்தி என்னவென்றால், ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள்.
அந்த நாலாவது தூண் அவ்வளவு வேகமாக செயல்பட முடிய வில்லை; இது உலகம்
முழுவதும் இருக்கக்கூடிய சூழல். நம் நாட்டில் இன்னும் அதிகமாக இருக்கிறது.
ஒவ்வொருவரும் பார்த்தீர்களேயானால், ஆழமாக வும், தெளிவாகவும், துணிந்தும்
எழுதக்கூடியவர்கள்; ஆழமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். ஆற்றல் உள்ள வர்கள்;
ஆற்றலில் குறைந்தவர்கள் நம்மவர்களில் யாரும் கிடையாது. காஷ்மீர்முதல்
கன்னியாகுமரி வரையிலும் எல்லாரும் இங்கிருந்து சென்றவர்கள் தான்.
ஆனால், ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால்,
நாளேடுகளாக இருந்தாலும், வார ஏடுகளாக இருந் தாலும், மாத ஏடுகளாக
இருந்தாலும் அதில் பணி யாற்றக்கூடிய பத்திரிகையாளர்கள் தமது கருத்து களை
சுதந்திரமாகப் பதிவு செய்வதற்கு வாய்ப்பே கிடையாது.
தொண்டா? தொழிலா?
ஏனென்றால், பத்திரிகை தொண்டா? தொழிலா?
என்று கேட்டால், தொண்டில்தான் பத்திரிகைகளு டைய கருத்து ஆரம்பமாகிறது.
ஆனால், இன்றைக்கு அது தொழிலாக மாறிவிட்ட காலகட்டத்தில், சுதந்திரத்தை
அவர்கள் வலியுறுத்த முடியாது.
நம்முடைய எழுத்தாளர்களாக இருக்கின்ற
பெருமக்கள் இருக்கின்றார்கள் பாருங்கள், அவர்கள் எல்லாம் மற்றவர்களிடம்
பணியாற்றுகின்ற நேரத் தில், அவர்களுக்கு எந்தளவுக்கு சுதந்திரம் உண்டு
என்பதைத் தெளிவாக எண்ணிப் பார்க்கவேண்டும்.
எங்களைப் போன்றவர்களானாலும் சரி, அய்யா
நல்லகண்ணு போன்றவர்களானாலும் சரி, நாங்க ளெல்லாம் இயக்கப் பத்திரிகைகளை
நடத்து கிறவர்கள். எங்களுக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன. அதனால் லாபம்
வராது; நட்டம்தான் வரும். ஆனால், கொள்கைகளைப் பரப்பி இருக் கின்றோம்;
அதைப் பொதுமக்களிடம் கொண்டு செல்கிறோம் என்ற ஒரு மனநிறைவு.
வணிக நோக்கில் ஏடுகள்
ஆனால், இப்பொழுது வணிக நோக்கத்தோடு
பத்திரிகைகள் நடைபெறுகின்ற நேரத்தில், கார்ப்ப ரேட் குரூப் என்று
சொல்லக்கூடிய பன்னாட்டு நிதியங்கள், பன்னாட்டு அமைப்புகளின் கருத்துக்
கேற்ப, அவர்களின் மனம் கோணாதபடி இருக்க வேண்டும். விமர்சனங்களே
வந்தாலும்கூட, பாம் புக்கும் நோகாமல், பாம்படித்த கோலுக்கும் நோகாமல்
விமர்சனங்கள் இருக்கவேண்டும் என்று சொல்வார்கள்.
நம்முடைய செய்தியாளர்களுக்கும், பத்திரிகை
யாளர்களுக்கும் இருக்கின்ற சிக்கல் என்னவென்றால், மத்தளத்திற்கு இரண்டு
பக்கமும் அடி என்று சொல்வதுபோல, என்னய்யா, நான் அளித்த பேட்டி யில்
சொன்னதைவிட்டுவிட்டு மாற்றி போட்டிருக் கிறீர்களே, பிறகு எப்படி இப்பொழுது
என்னிடம் பேட்டிக்கு வந்திருக்கிறீர்கள் என்று தலைவர் மிகவும் சீரியசாகக்
கேட்பார்.
இல்லீங்க, என்னுடைய முதலாளிதான் போட வேண்டாம் என்று சொன்னார் என்று முதலாளி யையும் காட்டிக்கொடுக்க முடியாது.
அதேநேரத்தில், போடவில்லை என்பதற்குரிய
அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நமக்கே புரியும். சில
பேர் மவுனமாக ஒரு சிரிப்பை சிரித்து அப்படியே மழுப்பி விடுவார்கள்.
ஆகவேதான், இரண்டு பக்கமும் அடி வாங்கக் கூடிய ஒரு தொழில்தான், பத்திரிகை, பத்திரிகையாள ராக இருக்கக்கூடியவர்களின் நிலை.
தொலைக்காட்சிகள்
இப்பொழுது ஊடகங்கள் என்று சொல்லக்கூடிய
தொலைக்காட்சிகள் நிறைய போட்டிக்கு வந்து விட்டன. அதில் உரையாற்றுவதற்கு
ஆட்கள் அதிக மில்லை என்பதால், மீண்டும் மீண்டும் அவர்களே வரக்கூடிய நிலை
இருக்கிறது; ஒரு பிரச்சினையைப் பற்றி முழுவதும் தெரிந்தவர்களோ, தெரியாதவர்
களோ அவர்களை வைத்துதான் தொலைக்காட்சிகள் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆகவே, இந்த வகையில் நெருக்கடியான ஒரு
காலகட்டம் இது. ஒரு பக்கத்தில் பார்த்தீர்களே யானால், கருத்துச்
சுதந்திரம், உரிமை, அடிப்படை சுதந்திரம் இவை அத்தனையும் இருக்கிறது.
ஆனால், அதேநேரத்தில் இன்னொரு பக்கம் பார்த்தீர்களேயானால், சுதந்திரம் இல்லை என்பது மிகவும் முக்கியமாகச் சொல்லப்படவேண்டும்.
ஒவ்வொரு நாளும் பொதுநல வழக்குகள்; நீதி
மன்றங்கள் நாட்டை ஆளுகின்றனவா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
நாட்டை ஆளு கின்றார்களா? என்பதற்கு சுலபத்தில் பதிலளிக்க முடியாத ஒரு
கேள்வி.
நீதி போக்கு!
ஜூடிசியல் ஆக்டிவிசம் என்று ஆங்கிலத்தில்
ஒரு சொல் உண்டு. ஏனென்றால், தயிர் சாதம் சாப்பிடு வதா? சாம்பார் சாதம்
சாப்பிடுவதா? என்பதை நீதிபதி முடிவு செய்து சொல்கிறார். இதுதான் மிக
முக்கியம்.
இன்னும் சில இடங்களில் நீதி போக்கு எப்படி
இருக்கிறது என்றால், யார் நீதிபதி? யார் வழக் குரைஞராக இருக்கவேண்டும்?
என்பதையெல்லாம் நான்தான் முடிவு செய்யவேண்டும் என்று சொல்லக் கூடிய
அளவிற்கு இன்றையக்கு நீதியின் போக்கு சென்று கொண்டிருக்கிறது.
ஆனால், எல்லோரும் பார்வையாளராக இருக்க
முடியுமே தவிர, அதைப்பற்றி எழுதுகின்றவர்களா கவோ, துணிச்சலோடு பதிவு
செய்யக்கூடியவர்களா கவோ, கருத்துரிமை உள்ளவர்களாக இருக்க முடியாது.
எனவேதான், ஒரு 40, 50 ஆண்டுகளுக்கு
முன்னால் இருந்த பத்திரிகையாளர்களுக்கு இருந்த சுதந்திரம், அவர்களுக்கு
இருந்த துணிவு, நெஞ்சுரம் எல்லாம் இன்றைய பத்திரிகைகளுக்கு இருந்தாலும்,
அதனை வெளியே காட்டிக் கொள்ள முடியாத அளவிற்கு அவர்கள் இருக்கின்றனர். எனவே,
இந்த சூழ்நிலை யில், இங்கே பாராட்டப்பட்ட இவர்கள் எல்லோரும் ரோல் மாடல்
ஏன் நாம் அவர்களைப் பாராட்டு கிறோம் என்று சொன்னால், இவர்கள் 40, 50, 60
ஆண்டுகள் பணியாற்றி, அவர்கள் தங்களது கடமை களையும் செய்திருக்கிறார்கள்;
அதேநேரத்தில், மனசாட்சிக்கு விரோதமில்லாத, தங்களுடைய சுதந்திரமான
கருத்துகளை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் செய்திகளை வெளியிட்டிருக்கிறார்
கள்.
நம்முடைய பாலு அவர்களேகூட, எந்தப்
பாராட்டு விழாவிற்கும் வரமாட்டார்; அதிசயமாக வும், மிகவும் பொறுமையாகவும்
இங்கே அமர்ந் திருக்கிறார். நான் சொல்வது அவர் காதில் விழுந்ததா என்பதும்
நமக்குத் தெரியாது; அது ஒரு வகையில் நல்லதுதான். மிகவும் முரட்டுத்தனமான
கருத்தைச் சொல்லக்கூடியவர். நாத்திகம் பாலு சுயமரியாதைக் காரர். செய்திகளை
உற்சாகத்தோடு கொடுப்பார்; மிகவும் பெரிதாகப் போடவேண்டும் என்று சொல் வார்.
எல்லோரையும் வழி நடத்திச் செல்லக்கூடியவர். குடும்பத்தில் மூத்த அண்ணன்
எப்படியோ அது போன்றவர் பாலு அவர்கள்.
சாமி அவர்கள் பாலுவிற்கு நேர் எதிரானவர்.
மிகவும் அடக்கமானவர், அமைதியானவர்; அன் றைக்கு எப்படி இருந்தாரோ,
இன்றைக்கும் அப் படியே இருக்கிறார். அவரைப் பார்த்தபொழுது, எனக்கு மிகவும்
ஆச்சரியமாக இருந்தது. இங்கேயுள்ள மீரான்சாகிப் தெருவில் அன்றைய
காலகட்டத்தில், தந்தை பெரியாரிடம் பணியாற்றி, பிறகு தின மணிக்குச்
சென்றவர்கள்.
மற்றவர்களைப் பற்றி அவ்வளவாக எனக்குத்
தெரியாது. இருந்தாலும், அவர்கள் பத்திரிகையில் பணியாற்றிய வகையில்
பெருமைப்படுத்தப்படக் கூடிய நிலையில் உள்ளனர்.
கருத்துச் சுதந்திரம்
எனவே, நம்முடைய பத்திரிகையாளர்களுக்கு
உரிய கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு பாதுகாப்பு நிச் சயமாகத் தேவை.
பத்திரிகையாளர்கள் சங்கடத்திற்கு ஆளாகும்பொழுது, நம்மைப் போல் உள்ளவர்கள்
வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருக்கக்கூடாது. எனக்கு எதிராக எழுதியவர்தானே;
அவர் எப்படி யாவது மாட்டிக்கொள்ளட்டும் என்று யாரும் நினைக்கக்கூடாது.
அதுதான் மிகவும் முக்கியமானது. அரசுகளை மாற்றக்கூடிய சக்தி
பத்திரிகைகளுக்கு உண்டு. நவமணி பத்திரிகையைப் பார்த்தீர்களே யானால்,
மாறுபட்ட கருத்துகளை வெளியிடுவார் கள். மறைந்த பத்திரிகையாளர் சோலை போன்ற
வர்களாகட்டும், கல்யாணம் போன்றவர்களாகட்டும் துணிந்து கருத்துகளை
சொல்லக்கூடியவர்கள்.
காமராசர் என்ன கூறுவார்!
நம்முடைய மூத்த தலைவர்கள் பெரியார், காமராசர், அண்ணா போன்றவர்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு பேசக்கூடியவர்கள்.
பத்திரிகையாளர்களிடம் காமராசர் உரையாற்
றும்பொழுது, எல்லாவற்றையும்பற்றி பேசுவார்; ரகசியம் என்று ஒன்றும் இல்லை.
ஆனால், பத்திரி கையில் எதைப் போடவேண்டும் என்பதையும் சொல்லிவிடுவார் - ஆஃப்
தி ரெக்கார்டு என்று.
இப்பொழுது ஆஃப் தி ரெக்கார்டு என்பதற்கே
என்ன பொருள் என்று யாருக்குமே தெரியாத அளவிற்கு, எல்லாமே ஆஃபான
ரெக்கார்டாகவே இருக்கிறது. ஆஃப் தி ரெக்கார்டு இல்லை. இப்பொழுது ஆஃப் தி
ரெக்கார்டு ஆக எல்லாவற்றையும் பேசிவிட்டு, அதையே செய்தியாக்கி விடுவது.
செய்தியாக்க வேண்டியவை எல்லாவற் றையும் ஆஃப் தி ரெக்கார்டு ஆக
ஆக்கிவிடுவது. இதுபோன்ற வேடிக்கையான சூழல் நிலவுகிறது. ஏனென்றால், நானும்
பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். நான் செய்தியாளர்களைச்
சந்திக்கும்பொழுது, முக்கியமான செய்திகளுக்காக நான் உரையாற்றும் பொழுது,
உதாரணமாக, மத்திய அரசு திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார்
பெயரை வைக்கவேண்டும் என்று சொன்னால்,
ஒரு செய்தியாளர் என்ன கேட்பார் என்றால்,
இன்று தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கிடையே இப்படி இருக்கிறதே,
அதைப்பற்றி என்ன நினைக் கிறீர்கள் என்று.
நான் உடனே, இந்தக் கேள்விக்கு
இப்பொழுது நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், நான் உங்களை எந்த
நோக்கத்திற்காக அழைத் தேனோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும். நீங்கள்
கேட்ட கேள்விக்கு இன்னொரு சூழலில் பதில் அளிக்கிறேன் என்று சொன்னேன்.
ஆகவே, மிகச் சிறப்பான வகையில் தொண்
டாற்றிய பத்திரிகையாளர்களான இவர்களுக்கு, எல்லா வகையிலும், என்னென்ன
முறையில் ஒத்துழைப்புக் கொடுக்க முடியுமோ, அத்தனையும் நாம் செய்யவேண்டும்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வாருங்கள்
இந்தப் பாராட்டு விழாவிற்கு நம்முடைய
மோகன் அவர்கள் என்னை பங்கேற்க அழைக்கும்பொழுது, நான் ஒப்புக்கொண்டதற்கு
இன்னொரு சுயநல காரணம் உண்டு. அது என்னவென்றால், மூத்த தமிழியல்
பத்திரிகையாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள், எங்களுடைய பெரியார் மணியம்மை
பல்கலைக் கழகத்தில் அடிக்கடி நடைபெறும், தமிழ் இதழியல் பயிற்சிப்
பட்டறைக்கு நீங்கள், உங்களை யெல்லாம் வருகைப் பேராசிரியர்களைப் போல ஆக்கிக்
கொள்ளுங்கள்; அதற்காக எங்களுடைய கதவுகள் திறந்து இருக்கின்றன.
நாங்கள்
உங்களை அன்போடு வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.
மூத்தப்
பத்திரிகையாளர்கள், நல்ல அனுபவம் உள்ளவர்கள் நிறைய இளைஞர்களைத் தயாரிக்க
வேண்டும். உதாரணமாக, தமிழ் தேசியக் கூட்ட மைப்பு இன்றைக்கு மிகப்பெரிய
அளவிற்கு வடக்கு மாகாணத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தச் செய்தியை இரண்டே வரிகளில் போடக்
கூடிய அளவில் இருக்கக்கூடாது. இதனுடைய வரலாறு என்ன? ஈழப் பிரச்சினை என்ன?
இதற்காக நடைபெற்ற போராட்டம் என்ன? என்பதைப் பற்றியெல்லாம்
தெரிந்திருக்கவேண்டும்.
நம்முடைய மூத்த பத்திரிகையாளர்களின்
சிறப்பு என்னவென்றால், அவர்கள் ஒரு கேள்வி கேட்டார் கள் என்றால்,
ஆத்திரமூட்டக்கூடிய அளவில் இல்லா மல், அதேநேரத்தில், தலைவர்களாக
இருக்கட்டும், சிந்தனையாளர்களாக இருக்கட்டும், அவர்களிட மிருந்து
கருத்துகளைப் பெறக்கூடிய அளவிலே அது இருக்கும். அதுமாதிரியான அளவிற்கு,
செய்திகளைக் கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு, செய்திகளைக் கொடுக்கக்கூடிய
அந்தப் பக்குவங்களைச் சொல்லிக் கொடுங்கள். ஏற்கெனவே நீங்கள் அனுபவத்தின்
மூலம் அந்தப் பக்குவங்களைப் பெற்றவர்கள்.
சிறந்த பாடம் அனுபவம்!
அனுபவம் என்பதைவிட சிறந்த பாடம் வேறு கிடையாது. ஏனென்றால், உங்களுடைய அனுபவம் இளைய தலைமுறையினருக்குப் பயன்படவேண்டும்.
இல்லை, இல்லை நாங்கள் தஞ்சாவூருக்கு -
அவ்வளவு தூரம் பயணம் செய்து வர முடியாது என்று நினைத்தால், நாங்கள்
சென்னையில் அந்தப் பட்டறையை ஏற்பாடு செய்து, உங்கள் வசதிக்காக மாணவர்களை
தயாரிக்க தயாராக இருக்கிறோம்.
அதைப்பற்றி கலந்தாலோசித்து எங்களிடம்
சொன்னால், சென்னைப் பத்திரிகையாளர்கள் சங்கத்தை முழுமையாக எங்களுடைய
பணிக்கு உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம். உங்களுக்கு எந்த வகையில்
உதவிகரமாக, பாதுகாப்பாக இருக்கவேண்டுமோ, அந்த அளவிற்கு இருப்போம்.
பிபிசி பற்றி நீண்ட நாள்களுக்கு முன்பாக ஒரு செய்தியைப் படித்தேன்.
செய்தியில் கருத்தை திணிக்கக் கூடாது!
பிபிசி செய்தியில், செய்தியாளர்கள்
செய்தியைச் சொல்லும்பொழுது, பிபிசி நிர்வாகம் அந்த செய்தி ஆசிரியரை அழைத்து
ஒரு விளக்கம் கேட்டு, அவரை பணியில் இருந்து சில நாள் நீக்கி வைத்திருக்
கிறார்கள். எதற்காக என்றால், ஒரு துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது;
போலீஸ் பயரிங்; அதைப்பற்றி பிபிசி வானொலியில் இவர் செய்தி அளிக்கிறார்;
போலீஸ் கேடு டு ஓபன் பயர் என்று.
உடனே, அந்த நிறுவனத்தின் மேலாளராக
இருக்கக்கூடியவர் அந்தச் செய்தியாசிரியரை அழைத்து, பிபிசிக்கு கிரிடிபிலிடி
என்பதை செய்தி யைத்தான் சொல்லவேண்டும். போலீஸ் ஓபன் தி பயர் என்று
சொன்னால், அது செய்தி.
போலீஸ் கேடு டு ஓபன் தி பயர் என்றால்,
துப்பாக்கி சுடவேண்டிய சூழல் வந்தது என்று சொன்னால், அது செய்தியல்ல;
அதற்கு நீங்கள் பொறுப்பேற்கவேண்டும் என்று சொன்னார்.
ஆனால், இன்றைக்கு அந்தச் சூழல் மறைந்து விட்ட நிலை இருக்கிறது. மீண்டும் அந்தச் சூழலை நாம் உருவாக்கவேண்டும்.
தலையங்கத்தில் கருத்துச் சொல்லலாம்
பத்திரிகையில்
எழுதுகின்ற தலையங்கத்தில் கருத்துகளைச் சொல்லலாம்; கட்டுரைகளில் கருத்து
களைச் சொல்லாம். ஆனால், செய்திகளைத் திரித்து போடவேண்டிய நிலை இருப்பது
விரும்பத்தக்க தல்ல. இதுபோன்ற பல செய்திகளை, நம் பத்திரி கையாளர்
சங்கத்தில், நல்ல விவாதங்கள், ஆரோக் கியமான விவாதங்களை உருவாக்கவேண்டும்.
அதற்கு என்றென்றைக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்; பெரியார் திடல்
உறுதுணையாக இருக்கும்; விடுதலை உறுதுணையாக இருக்கும்.
நாம் எல்லாம்
முற்போக்குச் சிந்தனையாளர்களாக இருந்தாலும், இடதுசாரி சிந்தனையாளர்களாக
இருந்தாலும், பெரும்பாலான கருத்துகளில் நாங்கள் உடன்பாடுள்ளவர்கள்.
அரசியலில் மாறுபாடு கருத்துள்ளவர்கள், அது வேறு.
வேண்டாம் ஓய்வு!
மற்ற
பொதுவான நோக்கு என்று பார்க்கும் பொழுது, முற்போக்கு சிந்தனை என்று வரும்
பொழுது மாறுபட்ட சிந்தனை இருக்காது. ஆகவே, உங்களை அன்போடு நான்
கேட்டுக்கொள்வ தெல்லாம், இந்த மூத்தப் பத்திரிகையாளர்களை - ஓய்வு
பெற்றவர்களாகக் கருதாமல் - ஓய்வு என்பது இருக்கிறதே, அதுவே, உடல்நலத்தைக்
குறைக்கும்; அதுவே முதுமையைத் திணிக்கும்.
அவர்களை இங்கே பாராட்டியதினால், ஒரு பெரிய பலன் என்னவென்று கேட்டால், அவர்களு டைய வயதில் ஒரு பத்து வயதைக் குறைத்திருக்கும்.
ஆகவே, எல்லோரையும் பாராட்டக்கூடிய பழக்கம் வரவேண்டும்.
வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
--------------------------"விடுதலை” 26-9-2013