Search This Blog

30.12.11

பூணூல் - என்பது இடுப்புக் கோவணம்


கேள்வி: கர்மம் (யாகம்) செய்யும்போது மார்பில் குறுக்காக ஒரு வஸ்திரத்தைக் கட்டிக் கொள்வது சம்பிரதாயம் என்றும், பின்பு அது சில அசௌகரியங்களைக் கருதி நூலாகப் போட்டுக் கொண்டனர் என்றும், பூணூல் குறித்த வரலாறாக ஒரு நூலில் படித்தேன். இது சரியா?


பதில்: பூஜைகள் செய்யும் போது, முகத்தில் வியர்வை வழிந்தால், அது கண்களில் விழாமல் தடுத்து உறிஞ்சி விடுவதற்காக, நெற்றியில் பூசப்பட்ட சாம்பல்தான், பிற்காலத்தில் விபூதி என்று ஆகிவிட்டது

- இப்படி நான் ஒரு கயிறு திரித்து, விபூதிக்கு ஒரு டுபாக்கூர் பகுத்தறிவு விளக்கம் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது, நீங்கள் கூறியிருப்பது.

-------------------------(துக்ளக் - 28.12.2011)

எப்பொழுதுமே சோ ராமசாமியின் தர்க்கம் என்பது இப்படித்தான் இருக்கும். கேட்ட கேள்வி என்ன? பதிலென்ன? கேள்வியில் தவறு இருந்தால்.. அதனைச் சுட்டிக்காட்டி, இதுதான் உண்மை விவரம் என்று கூற வேண்டியது தானே? அப்படி சொல்ல வக்கில்லாமல் வீணாகப் பகுத்தறிவுவாதிகளைச் சீண்டு வானேன்?

பகுத்தறிவுவாதிகளைச் சீண்டுவது ஒருபுறம் இருக்கட்டும்.

இவர்களின் இந்து மத அதிகப் பிரசங்கி - அமெரிக்கா வரை சென்று முழங்கு முழங்கு என்று முழங்கி வந்தாரே வீரத் துறவி என்ற அடை மொழிக்காரர்.

அந்த விவேகானந்தர் தன் சிஷ்யரிடம் பூணூலைப் பற்றி என்ன சொல்லு கிறார்? இதோ:

சுவாமிஜி மேலும் சொல்கிறார்: முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும், துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.

--------------------(ஆதாரம்: சுவாமிவிவேகானந்தர் சம்பாஷணைகள்)

இதே சோ ராமசாமி தான் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதை எதிர்த்து சண்டப் பிரசண்டம் செய்தார். அந்த விவேகானந்தர்தான் பூணூல் - என்பது இடுப்புக் கோவணம் என்றுகூறி விட்டார். சோ நாக்கைப் பிடுங்கிக் கொள் வாரா?

----------------- மயிலாடன் அவர்கள் 30-12-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5 comments:

தமிழ் ஓவியா said...

படக்காட்சியில் காமச்சுவை!


காட்சி என்ன கண்ணோடு வருகிறதா? என்று கிராமப் புரத்து மக்கள் கேள்வி எழுப்புவர். ஆனால் படக்காட்சியிலே பாமரர்களின் உள்ளம் படிந்துதான் கிடக்கிறது.
கடலன்ன காமங் கொண்டாலும் மடலேறா மாண்பு மங்கையொருத்திக்கு உண்டென்பான் வள்ளுவன்.

விரிந்து, பரந்து கிடக்கும் கடலைக் கண்டால் புலவர் பெருமக்கள் பழம் பனுவல்களையெல்லாம் பாழும் வயிற்றில் பதுக்கிக் கொண்டாயே என்று புழுங்கி ஏங்குவர். நீலக்கடலின் நீள்கரையில் நின்று, கடல்நீர் நீலமாக இருப்பதேன்? என்று அறிவியல் உலகம் வினா எழுப்பி விடை கண்டது.

அலைக்கும் கடல் முத்துக்களைக் கொடுத்து தமிழர்களின் சொத்துக்களைப் பறித்துக் கொண்டது என பழங்கால வரலாற்றைப் பாங்குற அறிந்தோர் பகர்வர்.

பாம்பின் படங்கண்டும், விடங்கொண்ட பார்ப்பானை விரைந்து அடி, பாம்பு தப்பினாலும் பரவாயில்லை என்றார் தந்தை பெரியார்.

கடலையும், நிலத்தையும் பாம்பு தாங்குவதாக மூடத் தனத்தின் முழுமுதற்கருத்தை தமிழ் மண்ணில் விதைத்தனர்.

பெண்ணைப் பேரின்பப் பொருளாக்கி பேரிடியைத் தமிழர் வாழ்வில் விழ வைத்த பேதை மனிதர், மூடப்பழக்கத்தைப் புகுத்தியன்றோ தமிழர்களின் தன் மானத்தை இழக்க வைத்தனர்! ஒன்றா இரண்டா, ஓராயிரம் அன்ன உன்மத்தர் களால் உலா வந்தன பாடல் உருவிலே. ஆண்ட இனம் ஆரியத்திற்கு அடிமைப்பட்டது அதனாலன்றோ? கோள்கள் தங்களின் ஈர்ப்புச் சக்தியால் இயங்கி வருகின்றன என்பது அறிவியல் கண்ட கண்டுபிடிப்பு. ஆனால், ஆத்திகர்களோ கடல், நிலச்சுமையைப் பாம்பு தாங்குவதாகப் பொய்யையே புனைந்து வைத்துத் தமிழர்களை மாய்க்க, இன்பத்தை ஊட்டினர்.

ஆயிரந்தலைப் பாம்பு படமெடுத்து மூடியதைப் போல, பெண்ணொருத்தி தன் மறைவிடத்தை மேகலை எனும் ஆபரணங் கொண்டு மறைத்தாள் என்று பிரபுலிங்க லீலையில் பேசப்படுகிறது. பெண்ணின் உறுப்பைப் பெரிதாக்கி பாம்பின் படம் அதற்கு உவமை என்பர் புலவர் பெருமக்கள். ஆனால், லிங்கத்தின் லீலையை பாடவந்த புலவன், மறைவிடத்தை நீள அகலங்கண்டு மீளமுடியாமல் - ஆயிரந்தலைப் பாம்பின் படங்களைக் கொண்டு மூடி அழகு பார்க்கிறான் - அளவு போடுகிறான் ஆத்திகப் புலவன். என்னே கடவுள் பக்தி! பக்திச் சுவையைப் பாட வந்தவன் பாவையின் படம் பற்றி சுவையொழுகப் பாடுகிறான். பக்தி வருமா? புத்தி அழியுமா? பாடலை மனப்பாடம் செய்யும் பக்தர்களே! பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது, உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்குகிறதன்றோ!
பாடலையே தருகிறோம். படித்தின்புறுங்கள்.

பாயும் வெண்திரைக் கருங்
கடல் நிலச்சுமைப் பாம்பின்
ஆயிரம் படங்களுந்திரை
யிட்டன வனைய
மீயி லங்கொளி விரிமணி
மேகலை வேய்ந்தாய்
மாயை மங்கைத னல்குலி
னொருதிரு மடந்தை
(பிரபு லிங்கலீலை, பக்கம். 67)

- தஞ்சை ஆடலரசன் --"விடுதலை” 30-12-2011

தமிழ் ஓவியா said...

கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?

(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.

(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?

ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ்தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின்றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரியவில்லையா? (ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978இல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)

தகவல்: ர.பார்த்தசாரதி, சென்னை - 34 --”விடுதலை” 30-12-2011

தமிழ் ஓவியா said...

நாத்திகம் பற்றி வினோபா


திரு. வினோபாபாவே அவர்கள் 22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடுதுறையிலுள்ள திருமுறைக் கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்ட சில கருத்துக்களை இங்கே தருகிறோம்:-

நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல, எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன். ஆத்திகனால் சேவை செய்ய முடியாது. உதாரணமாக, ஒருவன் பீடி குடிக்கிறானென்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது. அவனுடைய மனத்தை மாற்றி பீடி குடிப்பதை நிறுத்துவது தான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால்தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.
-----------"விடுதலை” 30-12-2011

தமிழ் ஓவியா said...

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!


செல்லும் ஆண்டு (2011) பல்வேறு அதிர்வுகளையும், வேதனைகளையும் மக்களுக்குத் தந்த சோதனை மிக்க ஆண்டாக அமைந்தது.

வருகின்ற புத்தாண்டு (2012) அனைவருக்கும் அனைத்தும் தரும், அன்பு பொழியும் ஆண்டாகவும், மனிதனின் பகுத்தறிவு ஆக்கத்திற்கே தவிர, அழிவுக்கல்ல என்பதை வரலாற்றில் பதிய வைக்கும் சாதனை பொங்கும் ஆண்டாக - மனிதநேயம் மலர அமையட்டும்; அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
”விடுதலை” 31-12-2011

தமிழ் ஓவியா said...

செய்திச் சிதறல்கள்

கடந்த 43 ஆண்டுகளில் பல முறை லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டும், அது நிறைவேற்றப் படவில்லை.

பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு என்றாலும் ஊழல் ஒழிப்பு மசோதா என்றாலும் காலம் கடத்தப்படுவதற்கு முக்கிய காரணம் முறையே ஆண்கள் ஆதிக்க சுயநலமும், அரசியல் பிழைப்புமேயாகும். இது கூடவா புரியாது?

மும்பையில் நடத்தப்பட்ட பட்டினிப் போராட்டம் ஏன் தோற்றுப் போனது? தோல்விக்கு யார் காரணம்? என்பதை ஹசாரே தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே கூறி இருக்கிறார்.

இது கூடவா தெரியாது? தன்னைப்பற்றி ஹசாரேக்கு அதிக நினைப்பு என்பது ஒரு காரணம்? இவர் ஊழல் ஒழிப்புக்காரர் அல்ல - இவர் வெறும் பொம்மைதான். பொம்மையை ஆட்டி வைப்பவர்கள் திரையின் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளார்கள் - அது அம்பலமாகிவிட்டது; ஒழுங்காக ஒரு கட்டத்தோடு (கையை மூடிக் கொண்டு இருந்த வரை) நின்றிருந்தால் பிள்ளை கொஞ்சம் பிழைத்திருக்கும்.

விளக்கெண்ணெய்க்குக் கேடாக முடிந்து விட்டது - அவ்வளவுதான்!

ஒரு யூனிட்டுக்கு 75 காசு, 85 காசு என்றிருந்த மின்கட்டாயம் இப்பொழுது 2 ரூபாயாகி விட்டது. இதனால் ஏழை - எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மின் கட்டண உயர்வை அனுமதிக்கக் கூடாது என்று சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

நல்ல கோரிக்கையே! மக்களின் அன்றாட தேவை - பால், பேருந்து, மின்சாரம் இவற்றில் கை வைத்தால் பாதிக்கப்படுபவர்கள் யார் என்பது தானே முக்கியம்!

இதே காரியத்தை தி.மு.க. அரசு செய்திருந் தால், அ.இ.அ.தி.மு.க. வரவேற்று இருக்குமா?

மாற்றம் - நல்லதை நோக்கி நடக்க வேண் டுமே தவிர ஏமாற்றத்தை நோக்கி இறக்கையைக் கட்டிக் கொண்டு பறக்கக் கூடாது.
வாக்களித்த மக்கள் கவனிக்காமலா இருக்கப் போகிறார்கள்?

சபரிமலையில் மகர விளக்குப் பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.

மகர விளக்கு என்பது பித்தலாட்டம் - பொய் - மின்சார ஊழியர்கள் ஏற்றுகிறார்கள் என்று அரசே ஒப்புக் கொண்ட பிறகு - இந்தச் செய்தி வருகிறது என்றால் இதன் பொருள் என்ன?

மதத்தின் பெயரால், பக்தியின் பெயரால் எந்தப் பித்தலாட்டத்தையும் செய்யலாம் என்பதுதானே?

ஒழுக்கக் கேட்டுக்கு மறுபெயர் மதம் - பக்தி என்பது விளங்கி விட்டதா, இல்லையா!

தானே புயலினால் தமிழ்நாட்டில் 40 பேர் களுக்கு மேல் பரிதாபகரமாக மரணம் அடைந்தனர்.

இவற்றையெல்லாம் நேரில் கண்ட பிறகாவது கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் - அவர் தயாபரன் என்ற எண்ணம் இருக்கலாமா? இந்த இயற்கைப் பேரழிவு சக்திகளுக்கு மட்டும் கடவுள் காரணம் இல்லையா?

இயற்கையின் இந்தக் கேடுகள் குறித்து ராபர்ட் இங்கர்சால் மிக அதிகமாகவே பேசுகிறார்.

புயல்கள் வீசலாம் - மக்கள் மரணம் அடையலாம் எரிமலைகள் வெடிக்கலாம் - மக்கள் மாண்டு போகலாம் குழந்தைகளைப் பாம்புகள் தீண்டலாம் - மரித்துப் போகலாம் எல்லாவற்றிற்கும் காரணம் கடவுள் என்பவர்கள் இங்கு மட்டும் வழுக்கி ஓடுவதேன் என்று வினா தொடுக்கும் நாத்திக அறிஞர் இங்கர்சாலை நினைத்துப் பாருங்கள். (நூல்: கடவுள்).
---”விடுதலை” 31-12-2011