Search This Blog

3.12.11

பல்லக்கில் பார்ப்பனரை சுமக்கவேண்டுமா?


பல்லக்கில் பார்ப்பனரை சுமக்கவேண்டுமா?

கடவுளுக்குமேல் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்பவர்கள் கருதுபவர்கள் இந்தப் பார்ப்பனர்கள். பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே பிராமணர்களுக்குத் தான் என்கிறது மனுதர்மம்.

இதனை நடைமுறைப்படுத்தி உறுதிப்படுத்தும் பல வேலைகளைப் பக்தியின் பெயரால் ஏற்பாடு செய்தும் வைத்துள்ளனர். கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் மட்டும்தான் அர்ச்சகராகப் பணியாற்ற முடியும். பார்ப்பனர்களின் மொழியான சமஸ்கிருதம் தான் தெய்வமொழி - அதனால் மட்டுமே வழிபாடுகள் நடைபெற வேண்டும். கோவிலில் விழாக்களில் உற்சவமூர்த்தியினை (மூலக் கடவுளின் பிரதி) ஊர்வலமாகப் பல்லக்கில் தூக்கிச் செல்லும்போது பார்ப்பனப் புரோகிதரையும் தூக்கிச் சுமக்கும் ஏற்பாடும் இந்த வகைகளைச் சார்ந்ததே!

கருவறைக்குள்ளிருக்கும் கடவுளும் சாமி என்றால் பார்ப்பனர்களும் சாமி என்று அழைக்கப்படும் ஒரு நிலை நாட்டில் இருப்பதைப் புரிந்து கொண்டால், இந்த சூழ்ச்சியின் வேர் எப்படி எல்லாம் பதிந்துள்ளது என்பது எளிதில் விளங்கும். பார்ப்பன சங்கராச்சாரியார்கள் முதல் பண்டார சன்னதிகள் வரை பல்லக்கில் தூக்கிச் செல்லுவதைக் கண்டித்தது - எதிர்த்தது - போராடியது தந்தை பெரியார் கண்ட திராவிடர் கழகமாகும். மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மேனாவில் (பல்லக்கில்) தூக்கிச் சென்றனர். தந்தை பெரியார் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாகச் சங்கராச்சாரியார் மூடு பல்லாக்கு சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார். மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல சொகுசாக உட்கார்ந்து கொண்டு போகிறாரே - இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லா சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரை துறவி என்று எப்படி ஒத்துக் கொள்ள முடியும் என்று பெரியார் முழங்க, அதனைக் காதில் வாங்கிய சங்கராச்சாரியார் அன்று முதல் பல்லக்கில் செல்வதை விட்டு விட்டார் என்று காஞ்சி சங்கராச்சாரியாரோடு 40 ஆண்டு காலம் உடனிருந்து சேவை செய்த லட்சுமி நாராயணன் எனும் பார்ப்பனர் கூறியுள்ளார் (சக்திவிகடன்).

திருவாவடுதுறை சந்நிதானம் பல்லக்கில் தூக்கிச் செல்லப்பட்ட போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்பட்டது. அதன் காரணமாக பட்டணபிரவேசம் என்பது ஒழிக்கப்பட்டு விட்டது. சிறீரங்கம் ரங்கநாதன் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு பிரம்மரத முறை ஒன்றைக் கடைபிடித்து வருகின்றனர். ரெங்கநாதர் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகப் பார்ப்பனர்களான அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசர், பராசரபட்டர் ஆகியோரை கோவில் உள் பிரகாரத்திலிருந்து அவர்களின் வீடு வரை பல்லக்கில் சுமந்துவரும் பழக்கம் இருந்து வந்தது. இதுகுறித்து சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மண்டல மாநாட்டில் (8.11.2010) உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், மனிதனை மனிதன் சுமக்கும் இந்த மனித உரிமைக்கு எதிரான செயல் நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தாவிடின் திராவிடர் கழகம் களத்தில் இறங்கி மறியலில் ஈடுபடும் என்று அறிவித்தார். திராவிடர் கழகத்தின் இந்த அறிவிப்புக்குப் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. பார்ப்பனர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். நீதிமன்றம் அவர்களின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் இவ்வாண்டு, மறுபடியும் பார்ப்பனர்களை பல்லக்கில் சுமந்து செல்லும் பிரம்மரத முறையை செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. அகில பாரத இந்து மகாசபை, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து வெறி அமைப்புகள் இதன் பின்னணியில் உள்ளன. சிறீரங்கம் முழுவதும் பிரம்ம ரத முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளையொட்டியுள்ளனர். மனித உரிமைக்கு எதிராகவும் உயர்நீதிமன்ற ஆணைக்கு மாறாகவும், இந்து மத வெறி அமைப்புகளின் பின்னணியோடு பல்லக்கில் பார்ப்பனர்களை வைத்துத் தூக்கிச் செல்லும் கேவலம் அரங்கேறுமானால், திராவிடர் கழகம் அதனை முறியடிக்கும் - மறியல் செய்யும் என்று சீறிரங்க மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட எச்சரிக்கையை மீண்டும் நினைவூட்டுகிறோம், செயல்படுத்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த 21ஆம் நூற்றாண்டின் தொடக்கக் கால கட்டத்திலும்கூட பார்ப்பனர்களின் உணர்வு எத்தகைய தாக இருக்கிறது என்பதைத் தமிழர்களே புரிந்து கொள்வீர். மீண்டும் நினைவூட்டுகிறோம்.

-----------------------"விடுதலை” தலையங்கம் 3-12-2011

2 comments:

தமிழ் ஓவியா said...

பாம்புப் புற்றில் கைவைக்கும் பார்ப்பனர்கள்

பார்ப்பனர்கள் திமிர் முறித்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது. வரும் 7ஆம் தேதியன்று கைசிக ஏகாத சியை முன்னிட்டு, சிறீ ரங்கம் ரங்கநாதர் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்களைப் பல்லக்கில் தூக்கப் போகி றார்களாம்.

கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி சிறீரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தமிழர் தலைவர் மானமிகு. கி.வீரமணி அவர்கள் எச்சரிக்கை கொடுத்தார்.

இவ்வாண்டு முதல் அனு மதிக்க மாட்டோம். மீறி பார்ப் பனர்கள் பல்லக்கில் ஏறினால் மறியல் செய்வோம் என்றார். அதன்

காரணமாக கடந்த ஆண்டு கைவிடப்பட்டது. உயர் நீதிமன்றம் வரை சென்று பார்ப் பனர்கள் முட்டிப் பார்த்தனர். நீதிமன்றமும் மூக்கறுத்து ஆணை பிறப்பித்தது.

ஆட்சி மாற்றம் காரணமாக இவ் வாண்டு வரும் 7 ஆம் தி மீண்டும் பல்லக்கில் ஏறிடப் பார்ப்பனர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். இந்து முன்னணி வகையறாக்கள் நகர் முழுவதும் சுவரொட்டி அச்சடித்து ஒட்டியுள்ளனர்.

தமிழக அரசே, ஸ்ரீமத் ராமானு ஜரால் ஏற்படுத்தப்பட்டு ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வந்த நடை முறைகளை மாற்றி, நாத் திகக் கும்பலுக்குத் துணை போகும் திருவரங்க கோயில் இணை ஆணை யரை மாற்று என சுவ ரொட்டியில் வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.

திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்று பொது மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

கடந்த ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் எச்சரித்தபடி கழகம் களத்தில் இறங்கும் என்பதுதான் இதற்குப் பதிலடி!

பாம்புப் புற்றில் கைவிடாதீர்கள்

பார்ப்பனர்களே!

மனித உரிமையை மிதிக்கும்

மடமையை முறியடிப்போம்!

முறியடிப்போம் !!
--------"விடுதலை” 4-12-2011

தமிழ் ஓவியா said...

சிறீரங்கத்தில் அர்ச்சகப் பார்ப்பனர்களைத் தூக்கிச் செல்ல மீண்டும் முயற்சியா?


திராவிடர் கழகம் களம் இறங்கிப் போராடும்!

தமிழர் தலைவரின் எச்சரிக்கை - அறிக்கை

சிறீரங்கத்தில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்களைப் பல்லக்கில் வைத்துத் தூக்கும் மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் தொடர்ந்தால், திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

சிறீரங்கத்தில் பிரம்ம ரதம் என்ற பெயரில் ஆண்டுக்கு மூன்று முறை, பார்ப்பன அர்ச்சர்களைப் பல்லக்கில் சூத்திரத் திராவிடர்கள் - தமிழர்கள் மற்றும் அய்யங்கார்கள் தூக்கி பவனி வரும் வழக்கம் நடைபெற்று வந்தது. நமது எதிர்ப்பாலும், மான உணர்ச்சியும், நியாய உணர்ச்சியும் உள்ள திராவிடப் பக்தர்களின் பேராதரவினாலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலமும் இம்முறை நிறுத்தப்பட்டு - அதாவது மனிதர்களை மனிதர்களே சுமக்கும் இழி கொடுமை கைவிடப்பட்டது.

பார்ப்பன அர்ச்சகர்களைத் தூக்கும் கொடுமை

1. வைசீக புராணம் படிப்பவரை (அய்யங்கார்த் திருமேனியை) சாத்தார வைஸ்யரும், சேர்ந்து தூக்கி, கோயிலிலிருந்து வீதிக்கு வந்து வீதி வழியாக அவர் வீட்டில் கொண்டு விடுதல்.

2. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து, இராப்பத்து, முடிவு நாள் அன்று வேதம் ஓதும் அய்யங்காரைத் தூக்கி சுமத்தல்.

3. இராப்பத்துக்கு அடுத்த நாளும் தூக்கி சுமக்கும் வழக்கம்.

இவை கைவிடப்பட்ட நிலையில், இவ்வாண்டு நாளை (7ஆம் தேதி) மீண்டும் நடத்திட (அதாவது மனிதர்களை மனிதர்களே தூக்கி சுமக்கும் கொடுமை) முயற்சிப்பதாக கேள்விப்படுகிறோம். இதுபற்றி விடுதலையில் சில நாள்கள்முன் எழுதப்பட்டுள்ளது.

மீறினால் போராட்டம்!

திருச்சி மாவட்ட கழகத் தலைவர் மு.சேகரும், மாவட்டப் பொறுப்பாளர்களும் சிறீரங்கம் திராவிடர் கழகத் தோழர்களும் சிறீரங்கம் காவல் நிலைய அதிகாரிகளைச் சந்தித்து தங்களது இயக்கத் தலைமையின் ஆணைப்படி, இம்முறை சட்ட விரோதமாக மீண்டும் தொடர்ந்தால் எதிர்த்து அறப்போர் நடத்தத் தயங்கமாட்டோம் என்று கூறியவுடன், அந்த அதிகாரி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியுள்ளார்; அப்படி ஏதும் நடக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் என்றாலும், மீறி நடந்தால் நமது கழகத் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை தமிழக அரசின் காவல்துறையினருக்குத் தெரிவிப்பது நமது மனித உரிமை காப்பு அடிப்படையில் அவசர - அவசியமாகிறது.

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

(முகாம்: திருச்சி 6.12.2011)