Search This Blog

26.8.09

தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆறு கோடி பேரும் இந்தி கற்றுக்கொள்ளவேண்டுமா?


மீண்டும் மும்மொழித் திட்டமா?
தேவையற்ற பிரச்சினையை கிளப்புகிறார் மனிதவள அமைச்சர் கபில்சிபல்


மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ள, பள்ளிகளில் மும்மொழித் திட்டம் அறிவிப்பு வீணான பிரச்சினையை, தலை வலியை ஏற்படுத்தக் கூடிய தாகும். முதலமைச்சர் கலைஞர் இதில் தலையிட்டு தேவையான இணக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. அவரது அறிக்கை வருமாறு:

கல்விக் கண்ணை நாட்டில் உள்ள அனைத்து மக்களும், குறிப்பாக கிராமங்களில் உள்ள ஏழை, எளிய, விவசாய தொழிலாளிகளின் பிள்ளைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களின் பிள்ளைகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் அனைவரும் எழுதப் படிக்கவும், அதற்குமேல் பள்ளிக் கல்வி, கல்லூரி கல்வி போன்றவைகளைப் படிக்கும் ஒரு தீவிர செயல்திட்டம்தான் மத்திய அரசின் அவசர முன்னுரிமைத் திட்டமாக அமையவேண்டும்.

நெருக்கடி காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித் துறை

இப்போதுதான் ஆரம்பக் கட்டாய கல்வித் திட்ட சட்டமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது நாடாளுமன்றத்தில்!

1960 க்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய ஒரு சட்டம் (அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளது) 50 ஆண்டுகளுக்கு பின் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதே வேதனைக்குரிய ஒன்றாகும்.

நெருக்கடி காலத்தில், மாநிலப் பட்டியலில் (State List) இருந்த கல்வி முறை பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டு விட்டது. அதன் விரும்பத்தகாத விளைவுதான் இது!

திடீர் குண்டுகளைப் போடும் மத்திய அமைச்சர் கபில்சிபல்

மத்தியக் கல்வி அமைச்சர் திடீர் திடீர் என்று, பல குண்டுகளைத் தூக்கிப் போட்டு, தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ளது மிகவும் விசித்திரமாக இருக்கிறது!

அவர் பொறுப்பேற்றவுடன், நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும் என்று சகட்டுமேனிக்குக் கூறி, அதற்கு எதிர்ப்புக் கிளம்பியவுடன், பின்வாங்கி இப்போது, தேவையானவர்கள் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி.யை ரத்து செய்யலாம் என்று மாற்றி அறிவித்துள்ளார்!

மும்மொழித் திட்டமா?

இப்போது நாடு முழுவதிலும் இந்தியாவிலுள்ள எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் மும்மொழித் திட்டம் இடம்பெறவேண்டும். 3 மொழிகளில் மாணவர்கள் திறன் பெறும்போது கலாச்சார ஒருங்கிணைப்பு ஏற்பட உதவும். இந்தி மொழி தேசிய ஒருங்கிணைப்பு ஏற்பட உதவும். இந்தி மொழி தேசிய ஒருங்கிணைப்புக்கும், ஆங்கிலம் உலக அளவில் தொடர்பு கொள்ளவும் உதவும் என்று புதுடில்லியில் நடைபெற்ற பள்ளிக் கல்வி வாரியக் குழுக்களின் ஆண்டு மாநாட்டில் பேசியுள்ளார்!

கல்வி என்பது மாநில அரசும், மத்திய அரசும் அதிகாரம் படைத்துள்ள ஒரு துறை. பல்வேறு மொழிகள், கலாச்சாரம் உள்ள மாநிலங்களில் ஒருமைப்பாடு ஏற்படுத்த இதுவா வழி? எல்லோரும் கோதுமையையே சாப்பிட வற்புறுத்த முடியுமா?

இதில் மத்திய அரசோ, ஏதோ மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்துவிட்ட நிலைபோலத்தானே தென்படுகிறது.

முதலமைச்சர் அண்ணாவின் மூன்று முக்கிய சாதனைகள்

1967 இல் தி.மு.க. அறிஞர் அண்ணா நூற்றாண்டு நாயகர் தலைமையில் ஆட்சி ஏற்றபோது, செய்த முப்பெரும் சாதனைகள்:

1. சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம்

2. சென்னை ராஜ்ஜியத்தினை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தது.

3. தமிழ், ஆங்கிலம், இந்தி என்ற மும்மொழித் திட்டத்திற்கு விடை கொடுத்து, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை அண்ணா அறிவித்து 42 ஆண்டுகள் ஆகிவிட்டன.


இந்தியை யாராவது விரும்பிக் கற்றுக்கொள்ள விரும்பினால், இந்திப் பிரச்சார சபா என்று உள்ளதிலோ, தனிப்பட்ட முறையில் பிரெஞ்ச், ஜெர்மனி, ஜப்பான், சீனம், ரஷ்ய மொழிகளைக் கற்றுக்கொள்வதுபோல், தமிழ்நாட்டு மாணவர்கள் எவரும் கற்றுக்கொள்ள எவ்விதத் தடையும் இல்லையே!

புதிய தலைவலி!

தாய்மொழி தமிழையே சரிவரப் படிக்கத் தெரியாது, கல்லூரி பட்டதாரிகளாக, மேல் பட்டதாரிகளாகி வெளியேறும் வெட்கப்படத்தக்க சூழல் தமிழ்நாட்டிலேயே இன்னமும் இருக்கிறது. கிராமப்புறங்களில் தமிழ் படிக்கத் தெரியாத பிள்ளைகளும், பெற்றோர்களும் ஏராளமாக லட்சக்கணக்கில் உள்ள நிலையில், இந்தித் திணிப்புப் பள்ளிகளில் தேவையா?

கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்பதுபோல ஏன் இந்த வீண் சர்ச்சையை மத்திய கல்வி அமைச்சர் கபில்சிபல் வரவழைத்து, மத்திய, மாநில அரசுகளுக்குத் தலைவலியை மோதல் ஏற்படுமோ என்று அஞ்சும் சூழலை உருவாக்கவேண்டும்?

மாணவர்கள் சும்மா இருப்பார்களா?

தமிழ்நாட்டில் 1967 லிருந்து இன்றுவரை காங்கிரஸ் ஆட்சிக்கு வர இயலாததற்கு மூலகாரணம் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் அல்லவா? அதை மறந்துவிடலாமா?

மற்ற அரசியல் கட்சிகள் சும்மா இருந்தாலும், உணர்ச்சிப்பூர்வமான இந்த மொழிப் பிரச்சினையில் மாணவர்கள் சும்மா இருப்பார்களா?

தேவையான தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்கவேண்டும்!

மத்திய அரசு குறிப்பாக மனித வளத்துறை அமைச்சர் கபில்சிபல் சிந்திக்கவேண்டும். கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்யப்படவேண்டியவை எவ்வளவோ உண்டு.

அவற்றை விட்டுவிட்டு இதுபோன்றவற்றில் ஈடுபடவேண்டாம் என்பதே நமது அழுத்தமான, அன்பான வேண்டுகோள்.

இதுபற்றி நமது முதலமைச்சர் அவர்கள் தேவையான தடுப்பு நடவடிக்கையை எடுக்கவேண்டும்; எடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

தீப்பொறி கிளம்புமுன்பே அதனை அணைப்பதுதான் சாதுரியமான அணுகுமுறையாகும். வெறும் வாயை மெல்லும் சிலருக்கு இந்த அவலைத் தருவது தேவையற்றது; புத்திசாலித்தனமும் ஆகாது!

******************************************************





அண்ணா நூற்றாண்டில் அண்ணா சாதனைக்கு வெடியா?

மத்திய அரசு மத்திய அமைச்சர் கபில்சிபல் மூலம் இந்தியைத் திணிக்க முற்பட்டிருக்கிறது. அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்தபொழுது தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டமில்லை. இருமொழித் திட்டம்தான். ஆங்கிலமும், தமிழும்தான் என்று சட்டம் கொண்டு வந்தார். அந்த சாதனைக்கு அதுவும் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டிலே வெடி வைப்பதுபோல் இது அமைந்துள்ளது.

உடனடியாக மத்திய அரசு இந்தித் திணிப்பை நிறுத்திட வேண்டும். இதை ரத்து செய்யவேண்டும். இல்லையேல், அடுத்து இதுபற்றி முடிவு செய்வோம்!

-------------- செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்,26.8.2009

*****************************************************




இந்தியின் இரகசியத்தை 1926ஆம் ஆண்டிலேயே
அம்பலப்படுத்தி எழுதியவர் தந்தை பெரியார்
செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்


சென்னை, ஆக. 26- சென்னை பெரியார் திடலில் இன்று (26.8.2009) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நேற்றைய பத்திரிகைகளில் மத்திய மனித வளத் துறை அமைச்சர் கபில்சிபல் ஒன்றை அறிவித்து உள்ளார். இந்தியா முழுவதும் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட்டிட நாடு முழுக்க இந்தியைக் கட்டாயம் கற்கவேண்டும் என்று அவர் ஒரு கல்வித் திட்டத்தையே அறிவித்துள்ளார்.

இது மிகுந்த வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.

இந்தி மொழி தேவையற்றது என்பதை 1926 ஆம் ஆண்டிலேயே குடிஅரசில் தந்தை பெரியார் அவர்கள் இந்தியின் இரகசியம் என்று ஒரு கட்டுரையையே எழுதியுள்ளார். இந்தி என்பது ஆரிய கலாச்சாரத்தை பரப்பிடும் ஒரு திட்டம்தானே ஒழிய, இதை ஒரு மொழியாக, பயனுள்ள மொழியாக கற்றுக்கொள்வதற்கு இதில் ஒன்றுமில்லை.

இந்தித் திணிப்பை எதிர்த்து அண்ணா சர்வாதிகாரியாக பொறுப்பேற்று சிறை சென்றார். தந்தை பெரியார் அவர்கள் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

1965 ஆம் ஆண்டு மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போராட்டம், மாணவர்களாலே நடத்தப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கும் அது முக்கிய காரணமாகும்.

கல்வி மத்திய பட்டியலுக்கா?

கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்து நெருக்கடி காலத்தில் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. மத்திய அரசுக்கு மட்டுமே அது சொந்தம் என்று மத்திய அரசு செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. இதை மத்திய அரசின் பட்டியலுக்கு கொண்டு சென்று விடுவார்களோ என்று அய்யப்பட, அச்சப்பட வேண்டியுள்ளது.

இந்தி திணிக்கப்படுவதை திராவிடர் கழகம் எதிர்க்கிறது. இந்தித் திணிப்பை மத்திய அரசு நிறுத்திக் கொள்ளவில்லையென்றால், அடுத்தக் கட்டப் போராட்டத்தை திராவிடர் கழகம் அறிவிக்கும்.

முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இதைப்பற்றி நன்றாகத் தெரியும். அவரும் இந்தி திணிப்பைத் தடுக்க தேவையான முயற்சிகளை எடுப்பார். அவர் மாலையில் படிக்கின்ற முதல் ஏடே விடுதலைதான்.

என்னுடைய அறிக்கையும் அவருக்கும், அரசுக்கும் போய் சேரும்.

மாணவர் கிளர்ச்சி ஏற்படும்

மாணவர்கள் மத்தியிலே இது ஒரு பெரும் போராட்டமாக வெடிக்கும் முன்பே தீப்பொறி பற்றிக் கொள்ள ஆரம்பிக்கும் முன்பே இதைத் தடுத்திடவேண்டும் என்பதை பத்திரிகையாளர்-களாகிய உங்கள்மூலம் மத்திய அரசுக்கு வேண்டுகோளாக வைக்கின்றோம்.

நான் துபாய் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு அரேபிய மொழியை எல்லோரும் பேசுவதில்லை. பெரும்பாலும் மலையாள மொழிதான் பேசுகின்றனர். விமான நிலையத்தில்கூட மலையாள மொழியில் அறிவிப்புகளைத் தருகின்றனர்.

சிங்கப்பூரில் நான்கு மொழிகள் இருக்கின்றன. ஆங்கிலம் பொது மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

தமிழ் மொழியும் நான்கு மொழிகளில் ஒன்றாக சம அந்தஸ்து படைத்த ஆட்சி மொழியாக இருக்கிறது.

கபில்சிபல் தமிழில் பேசுவாரா?

தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆறு கோடி பேரும் இந்தி கற்றுக்கொள்ளவேண்டுமா?

மத்திய அமைச்சர் கபில்சிபல் தமிழ்நாட்டிற்கு வந்து பேசினால் இங்கு தமிழ் மொழியில்தான் பேசவேண்டும் என்று நாம் வற்புறுத்தினால் அது சரியாக இருக்குமா?

இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு அடையாள-மாக எல்லோரும் இனிமேல் கோதுமைதான் சாப்பிடவேண்டும் என்று சொன்னால், அது ஏற்புடைத்ததாகுமா?

வேலை வாய்ப்புக்காக இந்தி படிக்கவேண்டும் என்கிறார்கள் _ இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில் எல்லாம் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்துவிட்டதா? அப்படியே தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தனியே படிப்பதில் தடை ஒன்றும் இல்லையே! யாரோ ஒரு சிலருக்காக ஆறு கோடி மக்களும் இந்தி படிக்கவேண்டுமா?


இந்திய அரசியல் சட்டத்தில் இந்தி மொழியின் நிலை என்ன?

இந்திய அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் எட்டு, ஒன்பது மொழிகள் தேசிய மொழிகளாக இருந்தன. இப்பொழுது 22 மொழிகள் இருக்கின்றன. அதில் இந்தியும் ஒன்று. அவ்வளவுதான்.

இன்னமும் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் ஆங்கிலம்தான் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட இக்காலத்தில் இன்னமும் உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை, வாதாடுவதற்குரிய மொழியாக ஆட்சிமொழியாக நாம் கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருக்கின்ற வேளையில், மூன்றாவது மொழியான இந்தி மொழியைத் திணிப்பதா?

தமிழ் மொழியை நீதிமன்றத்தில் ஆட்சி மொழியாக்குவதற்கு குடியரசுத் தலைவர் தான் ஒப்புதல் தரவேண்டும். மத்திய அமைச்சரவை அதற்கு முறையான அனுமதி வழங்கவேண்டும்.

குஜராத் நீதிமன்றத்தில் மாநில மொழி...!

குஜராத் மாநிலத்தில் அந்த மாநில மொழியான குஜராத் மொழியில்தான் நீதிமன்றங்களில் வாதாடுகிறார்கள். உ.பி. அலகாபாத் நீதிமன்றத்தில் இந்தியில் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் தமிழுக்கு அதே வாய்ப்பு கிடைக்கவேண்டாமா?

அதற்குள்ளாக மத்திய அரசு இப்படி ஒரு புதுக்கரடியை விடுவதா? என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குறிப்பிட்டார்.

-------------------"விடுதலை" 26-8-2009

சுருட்டு, பிராந்தி,கஞ்சா குடிக்கும் பெண் சாமியாரிணி சுதா கைதானது எப்படி?





திருவண்ணாமலை சாமியார்களும்,
போதை சாமியாரிணி கைதும் -
பொதுமக்களின் கேள்வியும்!


நம்நாட்டில்- அதுவும் தமிழ்நாட்டில் சாமியார்களுக்குப் பஞ்சமேயில்லை!

ஏறத்தாழ 80, 90 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டம் திருச்சுழி என்ற கிராமத்திலிருந்து வீட்டை விட்டு ஓடிவந்தான் ஒரு சிறுவன். பார்ப்பன ஜாதியைச் சேர்ந்த அவன் பெயர் வேங்கட ரமணன். ஆப் டிராயர் அணிந்த சிறுவன் திருவண்ணாமலைக்கு வந்து அங்கிருந்த ஒரு மலைக் குகையில் அமர்ந்து கொண்டான். அவன் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டான். ஆரம்பத்தில் அவனை ஆதரிப்பாரற்ற அனாதைச் சிறுவனாகப் பார்த்த திருவண்ணாமலை பக்தகோடிகள் நாளாக நாளாக அவனை பகவானின் மறு அவதாரமாகப் பார்த்து வழிபடவும் வணங்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

வேங்கட ரமணனாக ஓடி வந்த அந்த சிறுவன் ஆண்டுகள் செல்லச் செல்ல ரமணன் ஆகி, பின்னர் ரமண மகரிஷியாகி, பிற்காலத்தில் பகவான் ரமண ரிஷியாகிவிட்டார்!


பகவான் ரமணரை தரிசிக்காத பெரிய மனிதர்களே இல்லை எனலாம்.

உதாரணமாக_

1940 களில் சென்னை மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள். அவர் சிறந்த மனிதாபிமானி. தந்தை பெரியாரின் கொள்கைகளை அரசு மூலம் நடத்துகிறார் என்று அக்கிரகாரத்தாரின் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆளானவர்.

கோட்டைக்கு வெளியே கறுப்புச் சட்டை ராமசாமி, கோட்டைக்கு உள்ளே கதர்ச்சட்டை ராமசாமி - கோட்டைக்கு வெளியே தாடி வைத்த ராமசாமி, கோட்டைக்கு உள்ளே தாடி வைக்காத ராமசாமி என்று பார்ப்பன ஏடுகளால் துவேஷிக்கப்பட்ட ஒரு நல்ல மனிதரவர். அவர் பார்ப்பனத் துவேஷி என்று தலையங்கம் எழுதிய இந்து ஏடு -அவரை பார்ப்பனத் துவேஷி என்று குற்றஞ்சாட்டி அன்றைய பிரதமர் நேருவுக்கே புகார்க் கடிதம் எழுதியது!


அப்பேர்ப்பட்ட ஓமந்தூரார் அவர்கள் பகவான் ரமணரின் பரமபக்தர். ரமணரின் ஆலோசனையையும் ஆசியையும் பெறாமல் எந்த முக்கிய முடிவையும் எடுக்க மாட்டார்.

அவரை ஆந்திரகேசரி டி.பிரகாசத்துக்கு பதிலாக புதிய முதலமைச்சராக காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.

அப்போது ஓமந்தூரார் என்ன சொன்னார் தெரியுமா?

நான் நாளையே திருவண்ணாமலை செல்வேன்; பகவான் ரமணரை சந்திப்பேன். அவரிடம் முதல்வர் பதவியை ஏற்கலாமா? கூடாதா? என்று கேட்பேன்! பதவியை ஏற்கலாம் என்று ரமண பகவான் ஆசி வழங்கினால் மட்டுமே முதல்வர் பதவியை ஏற்பேன். இல்லாவிடில் நீங்கள் எனக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வர் பதவிக்குத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்! என்று சொன்னார். சொன்னபடியே திருவண்ணாமலை சென்றார், பகவானின் ஆசி கிடைத்தது; முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

அந்த அளவுக்கு பகவான் ரமண பக்தி எல்லோரையும் ஆட்டிப் படைத்தது.

காலப்போக்கில் பார்ப்பனர்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், கோவில் பிரச்சாரங்கள் மூலம் பகவானின் மகாத்மியம் குறித்து எழுதியவை உலகின் பல்வேறு நாடுகளிலும் ரமண பகவானுக்குப் பக்தர்களை ஏராளமான அளவில் உருவாக்கித் தந்து விட்டன! அதே சமயம் -

பகவான் ரமணரும் பக்த கோடிகள் வழங்கிய காணிக்கைகள் மூலம் கோடீசுவரராக உயர்ந்து விட்டார். பகவானிடம் பணம் சேரச் சேர அவரது தாயார், தம்பி எல்லாம் ரமணரின் ஆசிரமத்துக்கு வந்து விட்டார்கள்!

ஒரு கட்டத்தில் முற்றும் துறந்த முனிவரான பகவான் ரமணரிஷிக்கு கோடிக்கணக்கில் தன்னிடம் குவிந்த சொத்துக்களை யாருக்கு வழங்குவது என்ற கவலை பிறந்துவிட்டது.

அனாதைச் சிறுவனாக ஆதரிப்பார் யாருமின்றி, ஆப் டிராயர் சிறுவனாக மலைக்குகையில் அடைக்கலம் புகுந்த தன்னை கோடீசுவரனாக்கிய மக்களுக்கே எழுதி வைக்க வேண்டும் என்று தோன்றவில்லை பகவானுக்கு!

ஊரார், உலகத்தார் கொட்டிக் கொடுத்த கோடி கோடி ரூபாய் சொத்துக்களை எல்லாம் பகவான் ரமணர் தனது தம்பி வாசுதேவன் பெயருக்கே உயில் எழுதி வைத்தார்.


இந்தச் செய்தி வெளிவந்தபோது திருவண்ணாமலை மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பகவான் - பொதுச் சொத்தை_ குடும்பச் சொத்தாக ஆக்கி தம்பிக்கு உயில் எழுதி வைத்ததை எதிர்த்து ஒரு வழக்கு போடப்பட்டது.

அந்த வழக்கினையொட்டி_ பகவான் ரமணர் ஒரு வாக்கு மூலம் கொடுத்தார். அது என்ன?

நான் சன்னியாசம் வாங்க வில்லை. அதனால் நான் சன்னியாசி அல்ல! நான் குடும்பஸ்தன்தான்! நான் எனது சொத்துக்களை உயில் எழுதியது எவ்விதத்திலும் தவறல்ல என்பதே அந்த வாக்குமூலம்!

இதையெல்லாம் மறைத்துவிட்டு பார்ப்பனர்களும் பார்ப்பன ஏடுகளும் கதாகாலட்சேபத்துக்காரர்களும் இன்னமும் ரமணரின் மகாத்மியங்கள் பற்றி பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டேதான் இருக்கிறார்கள்; மணிக்கணக்கில் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.


அது ஒரு புறமிருக்க - அனாதைச் சிறுவனாக வந்த ஒருவர் திருவண்ணாமலையில் பகவானாகி - கோடீஸ்வரராகவும் ஆகிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்ட ஒரு டஜன் சாமியார்களுக்கும் மேல் திருவண்ணாமலைக்கு வந்து குடியேறி, குட்டிகுட்டி மகான்களாக மாறிவிட்டார்கள். இந்த சாமியார்களில் பெரும்பாலானவர்கள், திருமணமாகி - குழந்தை குட்டிகள் பெற்று குடும்பத்தைக் காப்பாற்ற வக்கின்றி - குடும்பத்தாரை அம்போ என்று விட்டு விட்டு பிழைப்பு தேடி திருவண்ணாமலை வந்து, இந்து மதத்தின் தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் மாறிவிட்டார்கள்.

இந்த திடீர்ச் சாமியார்கள் - திடீர் மகான்கள், திடீர் சுவாமிகள் ஆகியோரின் பூர்வாசிரமம் (அதாவது சாமியார் ஆவதற்கு முந்தைய அவர்களது வாழ்க்கை நிலவரம்) குறித்து பரணிதரன் ஆனந்தவிகடன் வார இதழில் அருணாசல மகிமை என்ற தலைப்பில் பக்தி ரசம் நனி சொட்ட சொட்ட படு சுவாரசியமாக கட்டுரை தொடர் எழுதினார்.

அது இரண்டு பாகங்கள் கொண்ட தொகுப்பு நூலாகவும் வெளிவந்து பரபரப்பாக விற்பனை ஆனது. பரணிதரனின் கட்டுரையால் - பக்தி மார்க்கமும் வளர்ந்தது. அதே சமயம், திருவண்ணாமலை சென்றால் - சாமியார் என்ற பேரால் பிழைப்புக்குப் பெரும் பலம் ஏற்படும், உட்கார்ந்த இடத்தில் பணத்தைக் குவிக்கலாம் என்ற நம்பிக்கையும் பலருக்கு உதயமானது.

அதன் விளைவாக, திருவண்ணா மலையின் கிரிவலப் பாதையில் தடுக்கி விழுந்தால் அது ஒரு சாமியாரின் ஆஸ்ரமமாகவோ மடமாகவோதான் இருக்கும் என்கிற அளவுக்கு, சாமி யார்கள் மயமாகி விட்டது கிரிவலப் பாதை!

திருவண்ணாமலை சாமியார்களின் செல்வச் செழிப்பைக் கண்ட, கேள்விப்பட்ட பலரும் - மாவட்டம் தோறும், பீடிச்சாமியார், எச்சில் துப்பும் சாமியார், அடித்துத் தாக்கும் சாமியார், தகாத வார்த்தைகளால் திட்டும் சாமியார், என்று பல்கிப் பெருகிவிட்டார்கள்.


கேட்க ஆங்காங்கும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது! இப்படிப்பட்ட சாமியார்களின் சக்தியில் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள் போன்றோரும் நம்பிக்கை உடையவர்களாக இருப்பதால், சாமான்ய மக்களும் இந்த சாமியார்களிடம் சர்வ சக்தியிருப்பதாக நம்பி கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள். சாமியார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகுகிறது.

இந்த நிலையில்தான் கிரிவலப் பாதையில் கொல்லிமலைச் சாமியார் ஆஸ்திரமத்தில் துரை என்ற ஓய்வு பெற்ற சாலை அதிகாரி சிறீ கருப்பசாமி சிறீ சக்தி காளி கோயிலை அமைத்தார். அவரது மகள் சுதா என்பவர் பக்தர்களுக்குக் குறி சொல்ல ஆரம்பித்தார். எப்படி?

தண்ணி அடிப்பார் அந்தப் பெண் சாமியார் - சிகரெட்டோ, சுருட்டோ வாயில் புகைத்துக் கொண்டே இருப்பார், கஞ்சாவும் அடிப்பார்.

அவர் மீது கருப்பணசாமி வந்து ஆவாஹனம் ஆவார். அப்போது அவர் கருப்பணசாமியாகவே ஆகி ஆரூடம் சொல்வார். அந்த ஆரூடம் பலிக்கும் என்பது அவரை நாடிவரும் பக்தர்களின் நம்பிக்கை!

இப்படி அவர் ஆரூடம் சொல்வதற்கு அவர் கட்டணம் வசூலிக்காமல் இருப்பாரா? அப்புறம் அவர் என்ன சாமியார்?

சாமியாருக்கு செலுத்த வேண்டிய காணிக்கை என்ன தெரியுமா? பீர், பிராந்தி பாட்டில்கள், சிக்கன் பிரியாணி, ஆயிரக்கணக்கில் பணம்! இந்த லேட்டஸ்ட் பெண் சாமியாரைப் பற்றி பல்வேறு ஏடுகளும் பரபரப்பாக புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டன!

அண்ணாமலை என்ற பக்தர் சாமியாரிடம் வந்து நான் பாசனத்திற்கு ஒரு கிணறு தோண்ட இடம் பார்த்திருக்கிறேன். அந்த இடத்தில் தோண்டினால் தண்ணீர் வருமா? என்று ஆரூடம் கேட்டார். ஆரூடம் சொல்ல அன்புக் காணிக்கையாக ரூபாய் அய்யாயிரத்தையும் தந்தார்.

சாமியாரிணி, அதே இடத்தில் தோண்டு, அபாரமாகத் தண்ணீர் வரும் என்று சொன்னார். இந்த ஆரூடத்தை நம்பி அண்ணாமலை கிணறு தோண்டினார் - 50 ஆயிரம் ரூபாய் செலவிட்டு. அவர் தோண்டிய கிணற்றில் எத்தனை அடிகள் தோண்டிய பிறகும் தண்ணீர் மருந்துக்கும் கண்ணில் தென்படவில்லை. அவருக்குக் கிடைத்தது கல்தான்.

நொந்து போன அவர் ஆசிரமத்துக்கு வந்து முறையிட்டார். சாமியாரிணியின் தகப்பன் அவரைத் தெருவரையில் அடித்து விரட்டிவிட்டார்.


வேறு வழியின்றி காவல் நிலையம் சென்று அண்ணாமலை புகார் கொடுத்தார்.

இதற்கிடையில், திருவண்ணாமலை சென்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ரமணர் காலத்திலிருந்து கிரிவலப் பாதையில் சாமியார்கள் ஆரூடம், குறி என்ற பேரால் நடத்தி வரும் மோசடிகளையும்,

இப்போது முளைத்துள்ள பெண் சாமியாரின் ஏமாற்று வேலைகளையும் பட்டியலிட்டுக் காட்டி, இவர்கள் மீது 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்று பிரகடனம் செய்தார்.

மறுநாளே சாமியாரிணியும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு விட்டார்கள்!


இதுகுறித்து இன்றைய (25.8.2009) இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தி விமர்சனக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதிலே இறுதிப் பகுதியில் சுதா சாமியாரை மட்டும் கைது செய்தால் போதுமா? திருவண்ணா மலை முழுவதும் அவரைப் போல் எத்தனை எத்தனை சாமியார்கள் - எதிர்காலம்பற்றி ஆரூடம் கூறுவதாக மக்களை ஏமாற்றிப் பணம் பறித்துக் கொண்டிருக்கிறார்கள்? என்று திருவண்ணாமலை மக்கள் கேட்கிறார்கள் என்று எழுதியிருக்கிறது அது!

நன்றி:- சின்னக்குத்தூசி அவர்கள் அவர்கள் 26.8.2009 "முரசொலி" யில் எழுதிய கட்டுரை

நாடெல்லாம் வளருது நாத்திகம்






கனடா நாட்டின் போக்குவரத்துப் பேருந்துகளில் நாத்திக வாசகங்கள் எழுதப்பட்ட பேருந்துகள் டெப்போவை விட்டு இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் வெளியே வந்து பயணித்தன. அவற்றில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இவைதான்:

கடவுள் என்பதாக ஒன்றிருக்க வாய்ப்பு இல்லை; கவலைப்படுவதை விட்டுவிட்டு வாழ்வை அனுபவியுங்கள்

கனடாவின் தாராளச் சிந்தனையாளர் அமைப்பு இந்த விளம்பரத்திற்காக 45 ஆயிரம் டாலர் வசூலிக்கத் திட்டமிட்டது. இத்தொகையைக் கொண்டு டோரோன்டோ, ஒட்டோவா, கல்காலி ஆகிய ஊர்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இதற்குச் சம்பந்தப்படாத, கனடாவின் மனித நேயர்களின் அமைப்பு இதே மாதிரியான விளம்பரத்தைத் தொடர்வண்டிகளில் செய்துள்ளது. ஆனால், வாசகம் சற்று மாறுபாடு: கடவுள் இல்லாமலேயே நீங்கள் நல்லவராக இருக்க முடியும். இதையே பிரெஞ்ச் மொழியில் எழுதி வைத்துள்ளனர் கியுபெக் பகுதியில் (இங்கே பிரெஞ்ச் மொழி பேசுவோர் நிறைய.)

இத்தகைய நாத்திக விளம்பரங்கள் தொடங்கியது லண்டன் நகரத்தில்தான். தொலைக்காட்சி நகைச்சுவை எழுத்தாளரான அரியேன் ஷெரீன் என்பார் இதன் தொடக்க கர்த்தா.

இதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு தெரியுமோ? கடைசி வரையில் நீங்கள் கடவுளோடு சேரவிடாமல் தடுக்கப்பட்டு, நரகத்தில் கஷ்டப்படுவீர்கள் என்கிற மிரட்டல் வாசகங்களைத் தங்களின் இணைய தளத்தில் வெளியிட்டு மிரடும் மதவாதிகள்.

வெறும் 5 ஆயிரம் பவுண்ட்கள் வசூலுக்குத் திட்டமிட்டதில் வசூல் தொகை ஒரு லட்சத்து 40 ஆயிரத்தைத் தொட்டது என்றால் மக்களிடையே எப்படிப்பட்ட வரவேற்பு என்பதை விளங்கிக்கொள்ளலாம். இதே பிரச்சார இயக்கங்கள் ஸ்பெயின், நெதர்லாண்டு, அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பின்லாந்து, சுவிட்சர்லாந்து, குரோஷியா, கனடா என நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும் அளவுக்குச் செல்வாக்கு பெற்று செயல்படத் தொடங்கி வளர்ந்து வருகின்றன.

அமெரிக்காவின் விளம்பர வாசகம் இப்படி உள்ளது: கடவுளை எதற்காக நம்பவேண்டும்? நன்மைக்காகவே நல்லவற்றைச் செய்யுங்களேன்.

அமெரிக்காவின் தலைநகராமான வாஷிங்டன் டி.சி.பகுதியில் கடவுளை நம்பவேண்டாம், நீங்கள் தனியாக இல்லை. (நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் எனப் பொருள்). டெக்சாஸ், கொலரடோ பகுதிகளில் இத்தகைய வாசகங்கள்தான். சுவரொட்டிகளும் அச்சடிக்கிறார்கள்; அரசாங்கக் கட்டடங்களிலும் விளம்பரத் தட்டிகளை வைத்திருக்கிறார்கள்.

லண்டனில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு ஆஸ்திரேலியாவில் அரசுத் தரப்பில் எதிர்ப்பு. புதிய வாசகம் நாத்திகம் கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்துங்கள் என்று அமைந்துள்ளது.

இத்தாலியில் இது இன்னும் வேடிக்கை. முதலில் எழுதப்பட்ட வாசகம் இது: கெட்ட சேதி_ கடவுள் இல்லை! நல்லசேதி கடவுள் உங்களுக்குத் தேவையே இல்லை! ஆ, ஊ என்ற அலறினர் மதவாதிகள். மக்களின் மனம் புண்படுகிறது என்றார்கள். வாசகம் மாற்றப்பட்டது. மதவாதிகள் ஒப்புக்கொண்டார்கள்: மாற்றப்பட்ட வாசகம் இதுதான்: நல்ல சேதி - பத்து லட்சக்கணக்கான நாத்திகர்கள் இத்தாலியில் இருக்கின்றனர். மிக நல்ல சேதி - அவர்கள் கருத்து சுதந்திரத்தை நம்புகிறார்கள்.

இத்தாலியின் ரோம் நகரின் ஒரு பகுதிதான் போப் வசிக்கும்வாடிகன். கத்தோலிக்க மதத் தலை நகரமாயிற்றே! அங்கேயே...!

கனடாவில் ஹாலிபாக்ஸ் எனும் கடற்கரை ஊரில் விளம்பர வாசகங்களுக்கு எதிர்ப்பு. நாத்திகர்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்ளும் நிலை. ஆனாலும் ஒரு வெற்றி. பஸ்நிறுத்த பைபிள் பாடம் என்ற ஒரு மதவெறி அமைப்பு பேருந்து நிறுத்தங்களில் பைபிள் வாசகங்களை எழுதி வைத்து வந்தன. நாத்திகர்களின் விளம்பரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் காரணமாக அவர்களுக்கு அளித்து வந்த அனுமதி புதுப்பிக்கப்படவில்லை. அவர்கள் விளம்பரத்திற்கு அனுமதித்தால், நாத்திக விளம்பரத்தையும் அனுமதிக்கவேண்டுமே என்கிறார்கள். மனித உரிமை ஆணையம் ஏடுகளில் எழுதப்படும் ஆட்சேபகரமான கட்டுரைகளிலேயே கவனம் செலுத்துகிறது. கருத்துச் சுதந்திரம் பற்றிக் கவலைப்படுவதேயில்லை -அங்கேகூட!

ஒட்டாவா நகரில் விளம்பரத்திற்கு அனுமதி மறுத்தனர், கீழ் நிலை அலுவலர்கள். நாத்திகரான அலெக்ஸ் கல்லன் விடவில்லை. மேல்முறையீடு செய்தார். அதந்தக் குழுவில் 3_க்கு 3 என சமமான வாக்குகள் கிடைத்தன. சோர்ந்துவிடாமல் ஒட்டாவா நகர் மன்றத்திற்கு மேல் முறையீடு செய்தார். அங்கே இவருக்கு ஆதரவாக 13 வாக்குகளும் எதிர்ப்பாக 7 வாக்குகளும் கிடைத்தன. நாத்திகப் பரப்புரையாளர் களுக்கு வெற்றி; அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன.

இந்தியாவைப் போலவே, அங்கேயும் மதவாதிகள், கிறித்துவ மதத்தைப் பற்றி மட்டுமே தாக்குகிறீர்கள்; மற்ற மதங்களை விட்டு விட்டீர்கள் எனக் கூப்பாடு கிளப்பினர். கடவுள் என்று சொன்னாலே, அல்லா, பிரமன், தோர் போன்ற எல்லா மதக் கடவுள்களையும்தான் குறிக்கும் என விளக்கம் தந்தனர், நாத்திகர்கள்!

அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி கனடாவில் 23 விழுக்காடு மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள். என்றாலும் ஓர் உண்மையைக் கவனிக்க வேண்டும். நாத்திக விளம்பரத்திற்காக வசூலிக்கப்பட்ட தொகை 45 ஆயிரம் டாலர். ஆனால் மதவாதிகள் வைத்து இருக்கும் அறக்கட்டளையின் தொகை ஓர் ஆயிரம் லட்சம் டாலர்.

அங்கேயும் ஒரு முசுலிம் மதகுரு சையத் சுரவர்தி என்பவர் எதிர்ப்பிரச்சாரத்திற்கு ஆள் சேர்க்கிறார். கடவுளை நம்பாதவர்களுக்காகவும் கடவுள் கவலைப் படுவார் எனப் பசப்பு வார்த்தை பேசுகிறார்.

எதைச் செய்தால் என்ன? அறிவுக்குத் தடை போட முடியுமா, என்ன?

------------------- தரவு: ஃப்ரீ என்கொயரி- தமிழில்: அரசு -நன்றி:-"விடுதலை" 25-8-2009

25.8.09

1971 இல் தியாகராயர் நகர் திடீர் பிள்ளையாரை அகற்றியவர் கலைஞர்


1971 இல் தியாகராயர் நகர் திடீர் பிள்ளையாரை அகற்றியவர் கலைஞர்
ஆசிரம மோசடிகளைத் தடுக்க
காவல் துறையில் புதுப்பிரிவு அமைத்திடுக
மோசடிக் கும்பலைக் கைது செய்த முதல்வர் கலைஞருக்கு நன்றி
எல்லா ஆசிரம ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட தமிழர் தலைவர் வேண்டுகோள்


திருவண்ணாமலையில் கஞ்சா அடித்துக் குறி சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடிக் கும்பலை மிக விரைவாகக் கைது செய்த முதல்வர் கலைஞ ருக்கு நன்றி தெரிவித்து தமிழர் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை.

திருவண்ணாமலையில் மது குடித்தும், கஞ்சா அடித்தும் குறி சொல்லி மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சுதா என்ற பெண் சாமியாரிணியும், அவரது தந்தை துரை என்ற பேர்வழியும் கிரிவலப் பாதையில் கறுப்பு சாமி பீடம் ஒன்றை அமைத்து (ஆக்கிரமித்து) வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாள்களில் மட்டும் பெண் சாமியாரிணியான இவர் தன்னிடம் வருபவர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார்.

ஒரு நாளைக்கு 100 பேருக்குமேல் குறி சொல்லுகிறேன் என்று பலரை ஏமாற்றி திடீர் பணக்காரராகி-விட்டார். இதன்படி இவரிடம் ஏமாந்த பாமரர்கள் படித்த, படிக்காத பாமரர்கள் ஆயிரம் பேருக்குமேல் தாண்டும்.

இதை கலைஞர் தொலைக்காட்சி மிகவும் விவரமான பேட்டியெடுத்து அம்பலப்படுத்தியது.

பக்தர்கள் கொண்டு வரும் மதுவை ராவாக சோடா போன்றவைகளைக் கலக்காமலேயே குடிப்பது, கஞ்சா அடிப்பது, சுருட்டுப் பிடிப்பது போன்ற வித்தைகளையெல்லாம் செய்து காட்டி, பக்தி வியாபாரத்தை, மோசடி வித்தையை நன்கு விளம்பரப்படுத்தி, குறுகிய காலத்தில் மக்களின் அறியாமையை மூலதனமாக்கிட ஒரு பெருந்திட்டத்தையே போட்டார்.


இதுபோன்று பற்பல ஊர்களில் பல்வேறு நூதன டெக்னிக்குகளைக் கையாண்டு எச்சில் துப்பும் சாமியார், விசிறி மட்டை சாமியார், விளக்குமாற்றால் அடித்து பக்தர்களை அருள்பாலிக்கும் சாமியார் (தேனி மாவட்டத்தில்) இப்படிப் பலப்பல மூட நம்பிக்கை மோசடிகள் முளைத்துக் கிளம்பின.


இதுபற்றி நாம் அறிக்கை விடுத்து, திருவண்ணாமலை மக்களது அமோக வரவேற்பிற்கிடையே (பக்தர்கள் கூட இந்த அருவருப்பை விரும்பாததால் நமது கண்டனத்திற்கு பேராதரவு தந்தனர்) 21.8.2009 அன்று பெரிய மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்தி, ஒரு பெரும் பொதுக்கூட்டத்தினை திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தி, மக்களிடையே சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

பகிரங்க வேண்டுகோள்

ஒரு மாதத்திற்குள் இந்த சாமியார் மோசடிகளுக்கும் ஆபாச அருவருப்புகளுக்கும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மாவட்ட அரசு அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் போன்றவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்தோம்.

இதை ஏடுகள் வாயிலாகவும் அறிந்த முதல்வர் அவர்கள், தக்க நேரத்தில் இதனைத் தடுத்து மோசடிக் கும்பலைக் கைதுசெய்து சிறையில் தள்ள ஏற்பாடுகளைச் செய்த மானமிகு சுயமரியாதைக்காரரான மாண்புமிகு முதல்வருக்கு அனைத்து பகுத்தறிவாளர்கள், சுயமரியாதைக்காரர்கள் சார்பில் எமது நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

காவல் துறையில் தனி பிரிவு

க்யூ பிராஞ்ச் போல இதற்கென ஒரு தனி போலீஸ் பிரிவினையே உருவாக்கி, இந்த காவி வேட்டி அல்லது வேறு வண்ணங்களில் மக்களைச் சுரண்டுவதை கண்காணிப்பதையும், அரசு நிலங்களை எவ்வித அனுமதியும் இன்றி ஆக்கிரமித்து பெரும் முதலாளிகளாகி பக்தி சுரண்டலை, வியாபாரத்தைப் பெருக்குவதைத் தடுத்து நிறுத்திட, காவல் துறையை, உளவுத் துறையை முடுக்கவேண்டும்.

தீவிரவாதிகள்கூட இப்படி ஒரு காவி வேடம் அணிந்து, வடக்கே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சாமியாரிணிமூலம்தான் பல இடங்களில் குண்டுவெடிப்புகளை இராணுவ மேஜர் ஒருவரையே பயன்படுத்தி நடத்தியுள்ள வழக்கு இன்னும் நடத்தாமல் நிலுவையில் அங்கே உள்ளது போன்ற ஆபத்து நாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்பதே நமது கவலையாகும்.

முதல்வர் கலைஞரின் துணிச்சல்

1971 இல் தியாகராயர் நகரில் இப்படித்தான் பேருந்து நிலையம் அருகில் திடீர் பிள்ளையாரை நட்டு வைத்து, அதனைக் கண்டு வணங்க, அங்கே இருந்த ஆர்.எஸ்.எஸ். சுப்ரமணிய அய்யர் போன்றவர்கள் ஏற்பாடு செய்து, சில நாள்களில் பல்லாயிரக்கணக்கில் கூட்டம்; உண்டியல் வருமானம்; விடுதலை எழுதியவுடன் முதல்வர் கலைஞர் அவர்கள் உண்டியலை இந்து அறநிலையச் சொத்தாக்கி விட்டார்கள்!

தந்தை பெரியார் அங்கே சென்று இதை அம்பலப்படுத்தி கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப் போவதான அறிவிப்பு வந்தவுடன், முதல்வர் கலைஞர் அவர்கள் துணிச்சலாக அந்தப் பிள்ளையார் சிலையை அப்புறப்படுத்தி விட்டார்; அய்யா நடத்திய கூட்டத்தில் கலைஞருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

மோசடிக்குத் துணை போன பெரியவாள்

அதன் பிறகு தனி விசாரணையை காவல்துறைமூலம் நடத்த ஆணையிட்டபோது, செல்வராஜ் என்ற ஏட்டு (போலீஸ்) 84 ரூபாய்க்கு அப்பிள்ளையாரை வாங்கி நட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

காஞ்சி சங்கராச்சாரியார் (பெரியவர்) இதைப்பற்றி அது சுயம்பு, தானே கிளம்பியிருக்கும், என்றுகூட பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்து அந்த மோசடிக்குத் துணை போனார்!

1971 இல் முதல்வர் கலைஞரின் துணிச்சலான நடவடிக்கை இல்லையென்றால், அங்கே ஒரு புதுக்கோயில் உருவாகி பேருந்து நிலையத்தையே கிளப்பவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

பகுத்தறிவு ஆட்சி

அதுபோன்றதுதான் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் நடைபெற்ற துணிவுமிக்க நடவடிக்கையும்!

எனவே, இந்தப் பகுத்தறிவு ஆட்சி இருப்பதால்தான் இந்நிலை; இப்போதே பல பெரிய அதிகாரிகள் தங்கள் கடமையிலிருந்து நழுவுகிற நிலை உள்ளதே!

அவசியம், அவசரம்!

எனவே, முதல்வருக்கு நம் நன்றி! அமைச்சர், மாவட்ட அதிகாரிகள் முதலியவர்கள் ஆக்கிரமிப்புக்களை அகற்றிடுவதில் சுணக்கம் இல்லாமல் செயல்படுவதோடு, வழக்கினை உறுதியாக நடத்தி தண்டனை கிடைக்கும்படிச் செய்வதும், இதுபோல் மற்ற இடங்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதும்கூட அவசியம், அவசரம்!

------------------"விடுதலை" 24-8-2009
************************************************************************************



முடிவல்ல - தொடக்கம்

30 ஆண்டுகளுக்கு முன்பு, கலை, பண்பாடு என்கிற பெயரில் இந்துமத மூடநம்பிக்கைகளுக்குப் புத்துயிர் கொடுக்க காஞ்சி சங்கராச்சாரி (ஏ-1 சங்கராச்சாரிதான்) முயற்சி எடுத்தார். பச்சைப் பார்ப்பன வருணாசிரம வெறித்தனம், மறுஉரு எடுக்கிறது என்பதை ஈரோட்டுக் கண்ணாடியால் அறிந்து கொண்டார், தமிழர் தலைவர்.

பார்ப்பனப் பண்பாட்டு, கலை ஆகிய மோசடிகளை வெருட்டுவது பகுத்தறிவே என்று பாடிய புரட்சிக் கவிஞரைத் தமிழ் மக்கள் மனதில் பதியவைத்து, அவரது புரட்சிப் பாடல்களைப் பரப்பி மூடநம்பிக்கைகளின் முடைநாற்றத்தை விரட்டியடிக்க வேண்டும் என முடிவு செய்து அவர் அறிவித்ததுடன் தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா என்பது.

மூடநம்பிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிற முயற்சியின் முத்தாய்ப்பு_ ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழா. மூடநம்பிக்கைகள் புதியதாக முளைத்தாலும்கூட அவை, முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பாகவே முறித்துப் போடுவது அவரது போர்முறை!

பிரார்த்தனையால்தான் ஒரு மக்கள் தலைவர் நோய் தீர்ந்து திரும்பினார் என்று பார்ப்பனர்களும் அவர்தம் பாதம் தாங்கிகளும் திட்டமிட்ட பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, தமிழர் தலைவர்தான் பிரார்த்தனை மோசடி என்ற தொடர் சொற்பொழிவை நிகழ்த்தி அந்த மோசடியைத் தோல் உரித்தார். பிரார்த்தனையின் பெயரால் தில்லுமுல்லு செய்யும் எல்லா மத ஏமாற்றுக்காரர்களையும் சந்தி சிரிக்க வைத்தார். (அதே தலைப்பில் அவ்வுரைகள், அரிய நூலாகவே வெளிவந்துள்ளன.)

திருவண்ணாமலை கிரிவலம் எனக்கூறிய கெடுமதியாளர்களின் நரித்தனத்தை நாறடிக்க கருப்புச் சட்டை கரிவலம் நடத்தி (யானைகளின் அணிவகுப்பு) அதன் அற்புதத்தைக் குலைத்தார்; 6 ஆண்டுகளுக்கு முன்பே!




ரமணரிஷி முதல் நேற்றைய கருப்பண்ணசாமி சுதா வரை, அத்தனை சாமியாடிகளின் அசிங்கச் செயல்களை அம்பலப்படுத்தி, அரெஸ்ட் செய்ய வைத்துள்ளார், தமிழர் தலைவர்.

அவரே, திருவண்ணாமலையில் அறிவித்தவாறு, இது முடிவல்ல தொடக்கம்.

கழகம், அவரது விரலசைவுக்கு ஏற்ப கணையெனக் கிளம்பும் தீர கோட்டம்! அவர் ஆணைப்படி பணி தொடங்கி, பெரியார் பணி முடித்திட முடிவு செய்துள்ள வீரர் கூட்டம்!

வெண்தாடி அசைந்தால் போதும்

கண்ஜாடை தெரிந்தால் போதும்

கருப்புடை தரித்தோர் உண்டு

நறுக்கியே திரும்பும் வாள்கள்

என்று, கவிதையல்ல எனப் பாடினார் நம் கலைஞர் 1945இல்!


கருப்புடை தரித்தோரின் படை ஆர்ப்பரித்துக் கிளம்பும் மூடநம்பிக்கைகளின் முதுகெலும்பை முறிக்கும் பகுத்தறிவுச் சமுதாயத்தைச் சமைக்கும் என்கிற சூளுரையை விடுதலை ஏட்டின் பவள விழா நிகழ்ச்சி நாளன்று ஏற்கிறோம்!

ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை

மாண்டிடும் புழுவே, மகுடம் கழற்று.

-----------------------"விடுதலை" 24-8-2009 பக்கம் -5

ஜெயேந்திர சங்கராச்சாரி கடைந்தெடுத்த பொய்யர்-சோ ஒரு நாணயங்கெட்ட, யோக்கிய தன்மை இல்லாத நபர்



திராவிடர் கழகம் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறதா? கிறித்து,இஸ்லாம் மதங்களை விமர்சிக்கவில்லையா?

சங்கராச்சாரிகள் தாழ்த்தப்பட்டவகளுக்காக பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?

சங்கராச்சாரியார் பேச்சைகேட்டு துக்ளக் “சோ” ஆள்காட்டி வேலை பார்த்தது உண்மையா?

சங்கராச்சாரி வேண்டிக் கொண்டதால்தான் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு காய்ச்சல் வந்ததா?

இவ்வளவுக்கும் பிறகும் பெரியார் தொண்டர்களின் பெருந்தன்மை எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளவும்,

இது போல் பல உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ள


("எதிரொலி" நாளேட்டில் அன்றாடம் சுயமரியாதைக் கருத்துக்களை கட்டுரைகளாக வடித்து வரும் சின்னக் குத்தூசி - ஞானி அவர்கள் - கஞ்சி சங்கராச்சாரியை நேரில் கண்ட கருத்தாழ மிக்க பேட்டி)

1983 ஆம் ஆண்டு உண்மை நாடுவோர் வெளியிட்டுள்ள சங்கராச்சரியாரின் முகத்திரையை கிழித்தெறிந்த “சின்ன சங்கராச்சாரி –யார் ?” என்ற நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு பதிவு செய்யப் படுகிறது. நமது வாசகர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிய வேண்டுகிறோம் -

நன்றி


*************************************************************************************
சின்ன சங்கராச்சாரி - யார்?


பகுதி - 4



"சோ" மறுப்பு:

(15.4.83 'துக்ளக்' இதழில் சோ வெளியிட்ட மறுப்பு அறிக்கை இது)

அன்புடையீர், வணக்கம்.

தாங்கள் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணியுடன் நடத்திய கலந்துரையாடல் அறிவார்ந்த கருத்துச் செறிந்த, இரண்டு வழக்குரைஞர்களின்போராகவே இருந்தது.

ஆனால், 3.4.83 'எதிரொலி' நாளிதழில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சின்னக்குத்தூசி கண்டெழுதியுள்ள கலந்துரையாடலில்சங்கராச்சாரியார், 'நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக் கொடுத்த கேள்விகளைத்தான் சோ, வீரமணியிடம் கேட்டார்" என்றுகூறியுள்ளார்.

இது எவ்வளவு அபத்தம் என்பதை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். 'லாஜிக்' என்பார்களே, 'தர்க்கவாதத்' துறைக்கு தாங்கள் முடிசூடா மன்னர்போன்றவர் என்பதை, தர்க்கவியலைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்தவர் உணர்வர். இது தங்களை மகிழ்விக்க வேண்டுமென்று எழுதப்படவில்லை.ஏனென்றால், 'துக்ளக்' படிப்பவர்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்பதைத் தாங்கள் பன்முறை கூறியுள்ளீர்கள்.

எனவே, என் போன்ற பலர் இதுபோல் சங்கராச்சாரியார் கூறியதைக் கேட்டு வருந்துகிறோம். வீரமணி சொல்லியிருக்கிற பதில்களையெல்லாம் இவர் உணர்ந்து அதற்கு மறுவினாவையும் தங்களிடம் அனுப்பியதுபோல், சங்கராச்சாரியார் கூறியுள்ளமை குறித்து தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்என்பதை அறிய என் போன்றவர்கள் ஆவலாயுள்ளோம்.

காஞ்சி சங்கராச்சாரியின் பேச்சைத் தாங்கள் தெளிவுறுத்தி, 'தன்னிலை விளக்கம்' அளிப்பின் என் போன்றோர் தெளிவுற ஏதுவாகும்.

----------------அ.மகிமை, வேலூர் 63

(ஆசிரியர் குறிப்பு: இந்த வாசகர் குறிப்பிட்டிருப்பது போல், இந்த விஷயம்பற்றி நான் விளக்கமளிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.)



டியர் மிஸ்டர் வாசகரே!

ஆசார்ய சுவாமிகள் கூறியுள்ளதாக 'எதிரொலி'யில் வெளியாகியுள்ளதை நானும் படித்தேன்.

ஆசார்ய சுவாமிகளிடமே நேரில் சென்று, இது பற்றி அவருடைய கருத்தைச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.

பிரசுரத்திற்காக அல்லாமல் சில கருத்துக்களை எதிரொலியின் பிரதிநிதிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாக சுவாமிகள் கூறினார். ஆனால் தான்சொல்லாதவற்றை ஆங்காங்கே சேர்த்தும், சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டும், சம்பாஷணையின் சில பகுதிகளை முற்றிலுமாக விட்டும்'எதிரொலி' கட்டுரை வெளியிட்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

துக்ளக்கில் வெளியான வீரமணி பேட்டியைப் பற்றி பேசுகையில், 'இந்து மத நம்பிக்கைகளைப் பற்றித்தான் எல்லோரும் தாக்குவீர்கள். மற்றமதங்களைப் பற்றிக் கேட்டால், பதில் கூறாமல் நழுவி விடுவீர்கள். வீரமணியை சோ பேட்டி கண்ட போது இப்படித்தான் நடந்திருக்கிறது. சரியாகவே பதில் சொல்லவில்லை' என்று சுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார் அவ்வளவுதான்.

நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூற வேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காததுபோல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்குவேண்டுமானால் ஏற்படலாம்.

ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயம் இல்லை. இன்னொரு விஷயத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சென்னையில்ஆசார்ய சுவாமிகள் முன்னின்று வெற்றிகரமாக நடத்திய கலாச்சார விழா, ஊர்வலம் போன்றவைகளுக்கு பிறகு எதிரொலி இந்தக் கட்டுரையைவெளியிட்டுள்ளது. ஆசார்ய சுவாமிகளைச் சந்தித்த போதே அதுபற்றி வெளியிடாமல் திடீரென்று அந்த விழாவுக்குப் பிறகு வெளியிடுவானேன்?

வீணாக அவருடைய பெயரை சர்ச்சைக்குரிய வகையில் இழுத்திருப்பது வருந்தத்தக்க விஷயம்.

--------------------------சோ.

*********************************

சின்னக்குத்தூசி எழுதிய பதில்

காஞ்சி காமகோடிபீடம் ஜீனியர் சங்கராச்சாரியாரை அவரது விருப்பத்திற்கிணங்கவே நாம் சந்திக்க நேர்ந்தது. ஏழெட்டு தடவைகள் அவர் சொல்லிஅனுப்பிய பின்னரே, நாம் அவரை சந்திக்க ஒப்புக் கொண்டோம்.

சங்கராச்சாரியார் போன்ற துறவிகள் குறைந்தபட்சம் பொய் சொல்லாத நேர்மையானவர்களாகவாவது இருப்பார்கள் என்று நாம் நம்பினோம். ஜீனியர்சங்கராச்சாரியார் நமது நம்பிக்கையின் அஸ்திவாரத்தையே தகர்த்துத் தூள்தூளாக்கி விட்டார்.

பொய்யர், கடைந்தெடுத்த பொய்யர் என்பவருக்கு ஒரு உதாரணம் வேண்டும் என்றால் காஞ்சி ஜீனியர் சங்கராச்சாரியாரை கண்ணை மூடிக்கொண்டுஉதாரணம் காட்டி விடலாம். அந்த அளவுக்கு அவர் தம்மை வடிகட்டிய பொய்யர் என்று துக்ளக் சோ மூலம் அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியார் நம்முடன் பேசியது என்ன என்பதற்கு இரண்டு பேர் சாட்சியம் உண்டு. ஒருவர் பரீக்ஷா நாடக அமைப்பின் தலைவர் ஞாநி.மற்றொருவர் காஞ்சி சங்கராச்சாரியாரின் அத்யந்த சீடரும் கார்ப்பரேஷன் பாங்கின் கெல்லீஸ் கிளை நிர்வாகியுமான சீனிவாசன்.

காஞ்சி ஜீனியர் நம்மிடம் உரையாடியபோது "நான் தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக் கொடுத்த கேள்விகளைத்தான் சோவீரமணியிடம் கேட்டார்" என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை!

ஆனால் இப்போது அவர் சோவிடம் அப்படிச் சொல்லவில்லை என்று மறுப்புத் தெரிவித்து விட்டார். சங்கராச்சாரியார் அப்படி மறுப்புச் சொல்லியிருந்தால் அவரைப்போல ஒரு கடைகெட்ட பொய்யரை துறவி என்று நம்பி சந்திக்கச் சென்றதற்காக வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளநேரிடும்.


நம்மிடம் பேசியபோது மணியன் உள்ளிட்ட பலரையும் அவன், இவன் என்றே அவர் தரக்குறைவாகப் பேசினார்.

"மணியனுக்கும் எனக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. மணியன் பிசினஸ் பேர்வழி. இப்போது இந்து மதத்தை ஆதரிப்பதால் பிசினஸ் நடக்கிறது. நாளைக்குகருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மணியன் கருணாநிதியின் பின்னால் போய்விடுவான்" என்று ஜீனியர் கூறியதை எல்லாம் நாம் நாகரீகம் கருதி நமது பேட்டிக்கட்டுரையில் குறிப்பிடாமலே விட்டுவிட்டோம்.

அது மட்டுமல்ல; பெரியார் கொள்ளையடித்துப் பணம் சேர்த்து வைத்திருப்பதாகவும் ஜீனியர் சொன்னார். அப்போது நாம் ஜீனியரிடம்,

"அப்படிச் சொல்லாதீர்கள். அகில இந்தியாவில் பெரியார் ஒருவர்தான் பொதுமக்கள் தாங்களாக விரும்பி தமக்கு அளித்த சொத்தை எல்லாம் தன்வாழ்க்கைக்கு என்று பைசாகூட எடுத்துக் கொள்ளாமல் கோடிக்கணக்கில் சேர்த்து, அதைப் பொதுமக்கள் நன்மைக்காகவே டிரஸ்ட் எழுதிவிட்டுப்போன தலைவர்.


பெரியாரின் சிக்கனம் பிரசித்தி பெற்ற ஒன்று; கஞ்சன் கருமி என்றெல்லாம் சொல்லும்படியாக ஒவ்வொரு பைசாவையும் செலவழிப்பதற்கு முன் பலமுறையோசித்து செலவு செய்து, சிக்கனத்திற்கே ஓர் இலக்கணமாக திகழ்ந்தவர் பெரியார்

.பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அப்படிப்பட்ட பெரியார் மக்கள் தமக்கு தந்த பொருள் எதையும் தமது குடும்பத்தாருக்கு உயில் எழுதிவைத்து விடாது, பொது நன்மைக்கே ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்.

ஆனால் பெரியாரின் சமகாலத்தில் திருவண்ணாமலை குகையில் ஒரு அரை நிஜாருடன் ஒரு சிறுவன் உட்கார்ந்தான். அந்த அரைநிஜார் சிறுவனே பின்னர் ரமணமகரிஷி என்றும் பகவான் ரமணர் என்றும் அழைக்கப்பட்டவர்.

அரை நிஜாருடன் குகையில் வந்து அமர்ந்த ரமணருக்கும் மக்கள் கோடிக்கணக்கில் காணிக்கை என்ற பேரில் ஏராளமாய் சொத்தை சேர்த்துத்தந்தார்கள். அந்த பகவான் ரமணரிஷி இறந்து போவதற்குள் என்ன செய்தார் தெரியுமா? தனது தம்பியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துவிட்டுப்போனார்.


ஆகவே, பெரியார் பற்றி அப்படி எல்லாம் சொல்லாதீர்கள்" என்று ஒரு நீண்ட பிரசங்கம் என்று சொல்லத்தக்க அளவுக்கு ஒரு விளக்கம் தந்தோம்.

ஜீனியர் சங்கராச்சாரி உடனே "கொள்ளையடித்த பணம் என்று நான் சொல்லவில்லை. கொள்ளைப் பணம் வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்றுதான்சொன்னேன். கொள்ளை அழகு என்று சொல்வதில்லையா அதுபோல்; நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள்" என்று தம்மைத் திருத்திக்கொண்டார்.

நாம் 'எதிரொலி'யில் எழுதிய பேட்டிக் கட்டுரையில் இந்தப் பகுதியையும் விட்டுவிட்டோம். காரணம், அவரே வருத்தம் சொல்லிவிட்ட பிறகு அதைஏன் எழுத வேண்டும் என்ற நாகரீகம் கருதி பிரசுரிக்காமல் விட்டோம்.

அது போலவே,

"குன்றக்குடி அடிகளார் என்ன பேசுகிறார் என்றே அவருக்குப் புரியவில்லை! சமயத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். திடீர் என்று மார்க்ஸ் லெனின் என்று போய்விடுவார்" என்று ஜீனியர் கூறியதையும் நாம் அன்று பிரசுரிக்கவில்லை.


இப்படி நாம் பிரசுரிக்காமல் விட்ட பகுதிகள் அனைத்துமே காஞ்சி ஜீனியரின் உண்மை உருவத்தை தோலுரித்துக் காட்டக் கூடிய பகுதிகள்தாம்.

எனினும் நாகரிகம் கருதி நாம் அதனை எல்லாம் பிரசுரிக்காமல் விடுத்தோம். ஆனால் சோவுக்கு ஜீனியர் சங்கராச்சாரி தெரிவித்துள்ள மறுப்பை படித்தபிறகு, இந்த மாதிரி பொய்யர்களிடம் நாகரீகமாவது புடலங்காயாவது என்ற வருத்தமே மேலோங்கி நிற்கிறது.

"நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக்கொடுத்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்" என்று சொல்லவில்லைஎன்று மறுப்புத் தெரிவித்திருக்கிறார் சங்கராச்சாரி.

சங்கராச்சாரி எவ்வளவு பொய்யரோ அந்த அளவுக்கு சோ ஒரு நாணயங்கெட்ட, யோக்கிய தன்மை இல்லாத நபர் என்பதும் சோ துக்ளக்கில் எழுதியுள்ள விளக்கத்திலிருந்து புலனாகிறது.


" 'சங்கராச்சாரியாரை நேரில் கேட்டேன்; அவர் அப்படிச் சொல்லவில்லை' என்று மறுப்பு தெரிவித்து விட்டார்" என்று எழுதியிருந்தால் சோவை நம்மால்மதிக்க முடியும்!

'எதிரொலி'யில் சங்கராச்சாரியார் பேட்டி வந்த மறுநாளோ அதற்கு மறுநாளோ, சோ 'எதிரொலி'க்கு போன் செய்து ஞாநியிடமும் நம்மிடமும்

"சங்கராச்சாரியார் அப்படித்தான் சொன்னாரா? அதைப் படித்ததிலிருந்து ரொம்ப வேதனையா இருக்கின்றது" என்றெல்லாம் பிரலாபித்தார் சோ!

அதுமட்டுமல்ல;

"சங்கராச்சாரியார் சொன்னதை நீங்கள் நம்பிவிட்டீர்களா?" என்று வேறு திரும்பத் திரும்பக் கேட்டார். அப்படிப்பட்ட 'சோ' இப்போது என்னஎழுதுகிறார்?

நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூறவேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காததுபோல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்குவேண்டுமானால் ஏற்படலாம். ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயமில்லை" என்று எழுதி இருக்கிறார் சோ.





எதிரொலி பற்றிய, அவநம்பிக்கையையும், சங்கராச்சாரியார் மீது தமக்குள்ள நம்பிக்கையையும் இந்த இரண்டு வாக்கியங்கள் மூலம் கோடிட்டு காட்டிஇருக்கிறார் சோ.

இந்த இரு வாக்கியங்களும் சோ எவ்வளவு நாணயங்கெட்ட மனிதர், யோக்கியத்தன்மை இல்லாதவர் என்பதையே தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. கட்சிப்பத்திரிகை என்றால் திரித்தும் மறைத்தும்தான் எழுதும். சங்கராச்சாரியார் அப்படிப்பட்டவர் அல்ல என்பதுதான் சோ வின் நம்பிக்கை என்றால்,

எதிரொலிக்குப் போன் செய்து

"சங்கராச்சாரியார் அப்படித்தான் சொன்னாரா?" என்று கேட்க வேண்டிய அவசியம் என்ன?

"சங்கராச்சாரியார் அப்படிச் சொன்னதை நீங்கள் நம்பி விட்டீர்களா?" என்று நம்மிடம் கேட்க வேண்டிய அவசியம் என்ன?

சரி, சங்கராச்சாரியார் அப்படி எல்லாம் சொல்லக் கூடியவர் அல்ல என்று உண்மையாகவே அவர் நம்பும் பட்சத்தில் சங்கராச்சாரியரிடம் போய் "நீங்கள்அப்படிச் சொன்னீர்களா?" என்று கேட்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?

கட்சிப் பத்திரிகை என்றாலே அப்படித்தான் திரித்து எழுதும் என்று எழுதுகிற "சோ" யோக்கியரானால்,

"எதிரொலிக்கு டெலிபோன் செய்து 'நீங்கள் நம்பிவிட்டீர்களா?' என்று கேட்டிருக்க மாட்டார். அதுபோலவே, "ஸ்ரீசங்கராச்சாரிய சுவாமிகளுக்கு அப்படிஏற்பட நியாயமில்லை" என்று இப்போது விளக்கம் எழுதும் சோ நாணயம் வாய்ந்த மனிதர் என்றால்,

சங்கராச்சாரியாரைச் சந்தித்து "நீங்கள் அப்படிச் சொன்னீர்களா?" என்று கேட்டிருக்க மாட்டார்.
ஆனால், சோ எப்படிப்பட்டவர்?

இந்த மாதிரி பிறருக்காக உளவு பார்ப்பது காட்டி கொடுப்பது போன்றவற்றில் இவர் கைதேர்ந்தவராகவே இருக்கிறார்.

சங்கராச்சாரியாருக்காக வீரமணியிடம் வேவு பார்த்தது முதல் முறையாக நடந்தது அல்ல. அ.தி.மு.க. மந்திரிசபையிலிருந்து விலகிய சவுந்திர பாண்டியன் "சோஎன்னுடைய நடவடிக்கைகளை சி.அய்.டி. மாதிரி கண்காணிக்கிறார்; உளவு பார்க்கிறார்" என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

அப்போது சோ துக்ளக் ஏட்டின் முதல் பக்கத்திலேயே "அப்படி சி.அய்.டி. வேலை பார்த்தது உண்மை" என்று ஒப்புக் கொண்டார். "ஒரு பெரிய மனிதருக்காக,ஒரு நல்லவருக்காக, நான் அந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டியது ஆயிற்று" என்று பகிரங்கமாக தமது ஒட்டுக் கேட்கும் வேலை உளவு பார்க்கும்வேலை பற்றி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

"சங்கராச்சாரியார் அப்படிச் சொன்னதை நீங்கள் நம்பிவிட்டீர்களா?" என்று சோ நம்மிடம் கேட்டபோது, நாம் "நம்பவில்லை" என்றே தெரிவித்தோம்.அதுமட்டுமல்ல.

"இப்போதே மறுப்பு எழுதி அனுப்பிவிடுவேன். ஆனால் நீங்கள் "சங்கராச்சாரிமீது சோ கடும்தாக்கு" என்று போட்டுவிடுவீர்கள். அதனால்தான்யோசிக்கிறேன்" என்று சொன்னபோது கூட "வேண்டாம்; நீங்கள் துக்ளக்கிலேயே போடுங்கள்" என்று பதில் சொன்னோம்.

சங்கராச்சாரியார் சொன்னது என்ன?" என்பது குறித்து சங்கராச்சாரியைச் சந்தித்த மறுநாளே வீரமணி அவர்களைச் சந்தித்து நாம் சொன்னோம். அப்போது சோ பற்றி சங்கராச்சாரி சொன்னது குறித்து சொல்லி இருக்கிறோம்.

அத்தனைக்கும் பிறகுதான் சோவை வீரமணி அவர்கள் பெரியார் கல்விச்சாலைக்கு அழைத்துப் பேசவைத்து, விடுதலையில் சோவின் முழுப் பேச்சையும்பிரசுரித்தார்.

பெரியார் சீடர்களின் பெருந்தன்மை, பரந்த மனோபாவம், காழ்ப்புணர்ச்சி அற்ற தன்மை ஆகியவைகளுக்கு வீரமணியின் இந்தச் செய்கை சாட்சியம் கூறிநிற்கிறது.


ஆனால், "சொல்லவில்லை" என்ற பொய்பேசும் சங்கராச்சாரிகளும், அதற்கு சப்பைக்கட்டு கட்டும் சோக்களும் எதற்கு சாட்சியம்அளிக்கிறார்கள்?

பிராமணர்கள் அது சங்கராச்சாரியாக இருந்தாலும், நகைச்சுவை நடிகர் சோவாக இருந்தாலும், இனம் என்று வரும்போது எப்படி ஒருவருக்கொருவர்விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள் என்பதற்கே சாட்சியமாக இருக்கிறது.

---------------------நூல்:-"சின்ன சங்கராச்சாரி - யார்?" - பக்கம்: 21-32