Search This Blog

6.12.11

டாக்டர் அம்பேத்கர் மறைவு : பின்னணி என்ன?-பெரியார்

இன்று அம்பேத்கர் நினைவு நாள்




இந்தியாவின் சிறந்த அறிஞர் களின் முன்னணியிலுள்ள அறிஞரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது எந்த விதத்திலும் சரிச் செய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்றுச் சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்ட வரும் - எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களையெல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.

உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை வெகு சாதாரணமாக மதித்ததோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னா பின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார். இந்து மதம் என்பதான ஆரிய ஆஸ்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும், ஆபாசமாகவும் அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம் பசலி பிற்போக்குவாதியென்றும், அவரால் பிரமாதமாக நடிக்கப்பட்டு வந்த கீதையை முட்டாள்களின் உளறல்கள் என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான ராமனை மகா கொடியவன் என்றும், ராமாயண காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி, பல்லாயிரக் கணக்கான மக்களிடையில் ராமா யணத்தை சுட்டு எரித்து சாம்பலாக்கிக் காட்டினார்.

இந்துமதம் உள்ள வரையிலும் தீண்டாமையும், ஜாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்யதுக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அநேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுணரும் சீர்திருத்த புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக் கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவே ஆகும்.


அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதி லிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலா மென்று கருதுகிறேன். அதாவது காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங் களும், அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கர் மரணத்துக்கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும்.

-------------------------- ஈ.வெ.ரா. ”விடுதலை” 8.12.1956

3 comments:

தமிழ் ஓவியா said...

அம்பேத்கரும் திலகரும்


அண்ணல் அம்பேத்கர் மறைந்த நாளும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதால், மத நல்லிணக்கத்தை நாடு மேலும் இழந்த நாளும் - டிசம்பர் 6 !

அம்பேத்கர் என்னும் மிகப் பெரிய அறிவாளியை, சமூகநீதிப் போராளியை, வெறுமனே ஒரு சாதித் தலைவராகக் காட்டி, அவரது தொண்டைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகள் இந்தியாவெங்கும் நடைபெற்றன. அவருடைய நூற்றாண்டு விழாவையயாட்டி, 1990களுக்குப் பிறகு வெளிவந்த நூற்றுக்கணக்கான நூல்களும், புதிய எழுச்சியும், ஒளி ததும்பும் அவரது உண்மை முகத்தை உலகுக்குக் காட்டின.

ஆனால் அதற்கு அரை நூற்றாண்டு முன்பே, 1940களிலேயே அவரைப் பற்றிய பல அரிய செய்திகளைத் தந்தை பெரியார் வெளியிட்டார். அவருடைய போர்க்குணத்தைத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினார். இது குறித்து, நெல்லையைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்டன் எழுதிவரும் ' சுயமரியாதை இயக்கமும், தாழ்த்தப்பட்டவர்களும் ' என்னும் ஆய்வேடு வெளிவரும்போது, இன்னும் பல செய்திகள் வெளிவரும்.

பார்ப்பனர்களால் பலவாறாகத் தூற்றப்படும் நீதிக்கட்சியும், தலித் மக்களின் சமத்துவத்திற்காகக் குரல் கொடுத்துள்ளது. 1918ஆம் ஆண்டு, சாதி மறுப்புத் திருமண முன்வடிவை ஆதரித்துத் தமிழ்நாட்டில் நீதிக்கட்சியும், மராட்டியத்தில் அம்பேத்கரும் பேசியுள்ளனர்.

வித்திலபாய் படேல் என்பவர், தில்லி மத்திய சட்டசபையில் 1918ஆம் ஆண்டு, ' கலப்புத் திருமண மசோதா ' என்னும் சட்ட முன் வடிவு ஒன்றை முன்மொழிந்துள்ளார். நாடு முழுவதும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. மராத்தியத்தில் அம்பேத்கர் இதனை முழுமையாக ஆதரிக்க, திலகரோ முழு மூச்சாய் எதிர்த்திருக்கிறார்.

இச்சட்ட முன்வடிவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட சவுத்பரோ குழுவின் முன் அம்பேத்கர் அளித்த வாக்குமூலம் மிக நுட்பமானது. அவருடைய வாதத்தை, அவருடைய சொற்களிலேயே காணலாம்:

" வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு எதிராகக் கூறப்பட்ட மற்றொரு முக்கியமான வாதம், அது சமூகப் பிரிவினைகளை நிரந்தரமாக்கிவிடும் என்பதாகும். சமூகப் பிரிவினைகளை ஆதரிப்பவர்கள்தான் இந்த வாதத்தை கூறுகின்றனர் என்பது வேடிக்கை. இந்தக் காரணத்தைக் காட்டி வகுப்புவாதப் பிரநிதித்துவத்தை எதிர்ப்பவர்கள், திரு படேலின் சாதிக் கலப்புத் திருமண மசோதாவை எதிர்ப்பவர்கள் என்பதைக் குழு தயவுசெய்து கவனிக்க வேண்டும். அந்த மசோதா, சாதிகளை உடைத்துவிடும் என்று அவர்கள் வாதிட்டார்கள். "

முன்னுக்குப் பின் முரணான சாதி மத வெறியர்களின் வாதங்களை அம்பேத்கர் இங்கு அடித்து நொறுக்குகின்றார்.

சாதிகளின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளைச் சாதிகளின் பெயராலேயே கோருவதுதான், இட ஒதுக்கீடு என்று பொதுவாக அறியப்பட்டிருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம். அது சாதிகளை நிலை நிறுத்தி விடும் என்று வாதம் செய்பவர்கள், சாதிகளின் ஏற்றத்தாழ்வுகளையும், இறுக்கத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கின்றனர். இந்த உண்மையைத்தான் அம்பேத்கர் அம்பலப்படுத்துகின்றார்.

இந்தச் சட்ட முன் வடிவைத் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆதரித்தது. 1921இல் நாக்பூரில் நடைபெற்ற ' அனைத்து இந்திய தாழ்த்தப்பட்டோர் மாநா 'ட்டின் தலைமை உரையில், கோல்ஹாப்பூர் மன்னர் சத்ரபதி சாகு மகராஜ், நீதிக்கட்சித் தலைவர்களைப் பாராட்டுகின்றார். டாக்டர் டி.எம். நாயர் குறித்து அவர்,

" காலஞ்சென்ற டாக்டர் நாயருக்கு நாமெல்லோரும் நன்றியறிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பஞ்சமர்களின் முன்னேற்றத்திற்காக டாக்டர் நாயர் கஷ்டப்பட்டு உழைத்தார். அவருடைய வீட்டு வேலைக்காரர் எல்லோரும் அந்த வகுப்பைச் சேர்ந்தவர்களே. தாழ்ந்த வகுப்பார் முன்னேற்றத்தின் பொருட்டு மிகக் காருண்யத்துடன் வேலை செய்து வந்தவர், "

என்று கூறுகின்றார்.

தமிழகத்திலும், மராத்தியத்திலும் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலுமிருந்த முற்போக்குச் சிந்தனையாளர்கள் இந்தச் சட்டமுன் வடிவை வரவேற்றனர். அதேபோல, வைதீகப் பார்ப்பனீயச் சிந்தனை கொண்ட அனைவரும் இதனை எதிர்த்தனர்.

தமிழ் ஓவியா said...

மிகக் கடுமையாக எதிர்த்தவர்களில் பால கங்காதரத் திலகரும் ஒருவர். அவர் தன்னுடைய கேசரி இதழில், " அனுலோமத் திருமணங்களை ஆதரித்தால், பிறகு பிரதிலோமத் திருமணங்களையும் தடுக்க முடியாது போய்விடும் " என்று சொல்லிப் படேல் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தார்.

இப்போது நமக்கு அனுலோமத் திருமணம், பிரதிலோமத் திருமணம் என்பவைகளுக்கு என்ன பொருள் என்ற ஐயம் எழுவது இயல்பே. அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் இதற்கு விளக்கமாகத் தன் நூலில் விடை தருகின்றார்.

சாஸ்திரங்களைச் சாகடிக்கக்கூடிய வகையில், கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப் பார்த்தாராம் மநு,

ஒன்று...அனுலோம சங்கரம்

இரண்டு...பிரதிலோம சங்கரம்

சபிக்கப்பட்ட உறவுகளுக்கு மநு வைத்த பெயர்தான் சங்கரமாம். ஆண் மேல் ஜாதிக்காரனாகவும், பெண் கீழ் ஜாதிக்காரியாகவும் இருந்து மணம் முடித்தால் அது அனுலோம சங்கரமாம். இதனை மநு மன்னித்து விடுகிறார். ஆனால், மேல் ஜாதிப் பெண்களைக் கீழ் ஜாதி ஆண்கள் கவர்ந்து, பறித்து, நுகர்ந்து சென்றால், மநுவின் பார்வையின் இது பிரதிலோம சங்கரமாம். இதற்கு மன்னிப்பே கிடையாதாம்.

எனவே, " அவர்களும், அவர்களைத் தொடர்ந்து வரும் சந்ததிகள் அத்தனை பேரும் சண்டாளர்கள்தான் " என்று சட்டம் இயற்றி, அவர்களுக்குக் கடுமையான தண்டனையும் விதித்தான் மநு.

இதைத்தான் நம் விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் கவனப்படுத்துகிறார். படேலின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டால், அனுலோம, பிரதிலோம திருமணங்கள் எல்லாம் நடந்துவிடுமாம். பதறுகின்றார் திலகர்.

இன்றும் நம்மிடையே அம்பேத்கர்களும், திலகர்களும் இருக்கவே செய்கின்றனர். அம்பேத்கர்கள் சமூகநீதிக்குப் போராடிக் கொண்டுள்ளார்கள். திலகர்கள், பாபர் மசூதிகளை இடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
---------சுப.வீரபாண்டியன் ”கருஞ்சட்டைத்தமிழர்” டிசம்பர்1_2011

Suresh Subramanian said...

nice post.... www.rishvan.com