Search This Blog

23.2.09

பெரியார் கண்ணீர் விட்ட நிகழ்வு


கண்களில் தண்ணீர் வந்துவிட்டது

(சென்னை ஆதிதிராவிட மகாஜனங்களின் சுயமரியாதை மாநாடு சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லை வனம்) வெகு விமரிசையாய் நடந்தேறியது. திருவாளர்கள் ஈ.வெ.இராம-சாமியாரும், குருசாமி, அய்யாமுத்து ஆகியவர்-களும் சனிக்கிழமை 13.07.1929ஆம் தேதி மாலை 5 மணிக்கு மோட்டார் வாகனத்தில் பாண்டு வாத்தியங்களுடன் சிந்தாதிரிப்-பேட்டை வழியாக ஆண்களும், பெண்களு-மாக சுமார் ஆயிரம் பேர் சூழ்ந்து ஆதிதிரா-விடர் தெருக்கள் முழுவதும் சுற்றி நேப்பியர் பார்க்குக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு தந்தை பெரியார் இரண்டு நாளும் சொற்பொழிவு ஆற்றினார். அவர்தம் பேச்சின் இறுதியில் சொன்ன வரலாற்றுக் குறிப்பு).

சமீபத்தில் திருவாங்கூரில் கூடிய ஈழவ சமுதாய மகாநாட்டில் திரு.மாளவியா இந்துமதப் பெருமையைப் பற்றிப் பேசும்போது அச்சமுதாயத்தார் இந்து மதம் வேண்டாம், அது தொலையட்டும் என்று ஒரே அபிப்பிராயமாகச் சொல்லிவிட்டார்கள். அம்மகா சங்கக் காரியதரிசி திரு. கோவிந்தன் பி.ஏ.பி.எல். மாஜி ஜில்லா ஜட்ஜ் இதோ இங்கு உட்கார்ந்திருக்கிறார் பாருங்கள். இவரை நான் கண்டவுடன் ஆச்சரியப்பட்டு தாங்கள் எங்கு வந்தீர்கள் என்று கேட்டதும் அவர் நானும் தீண்டப்படாதவன் தானே. ஆதலால் இந்தக் கூட்டத்திற்கு வந்தேன், என்னையும் ஆதிதிராவிடரில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.

எனக்கு அது கேட்டதும் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. இவர் முன்சீப்பாக இருந்து ஜில்லா ஜட்ஜாகி நாணயமும் பரிசுத்தமும் உள்ள ஜில்லா ஜட்ஜு என்று பேர் பெற்று பென்ஷன் வாங்கினவர். இப்போது இவரும் அநேக தெருக்களில் நடக்கமுடியாது. பிறகு கோயிலைப்பற்றி கேட்கவே வேண்டியதில்லை.

எனவே இவ்வளவு கொடுமையுள்ள ஒரு கட்டுப்பாட்டிலிருந்து விலகிக் கொள்ள ஆதி திராவிடர் ஆகிய நீங்கள் ஆசைப்படுவது மிகவும் நியாயமும் அவசியமுமாகும். ஆனால், விடா முயற்சியாய் வேலை செய்ய வேண்டும். இடையில் தளர்ச்சிக்கு இடம் விட்டால் நம் திராவிட இனம் மோசம் போய்விடும்.


---------------------'குடிஅரசு' 21.7.1929 - பக்கம் 7, 8,

ஈழப் பிரச்சினையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?




காங்கிரசை கூட்டணிக்கு அழைத்துள்ளார் ஜெயலலிதா
அதிமுகவுடன் கூட்டணி சேரும் இடதுசாரிகளின் நிலை என்ன?
சேலத்தில் செய்தியாளர்கள் மூலம் தமிழர் தலைவர் எழுப்பிய வினா


திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருக்கிறார். காங்கிரஸ் இல்லாத அணியுடன் இருப்போம் என்று சொல்லிச் சென்ற இடதுசாரிகள் நிலை என்ன? அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பேசிக் கொண்டிருக் கின்ற மற்றவர்களின் நிலை என்ன? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்கள் பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் 21.2.2009 அன்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி வருமாறு:

கேள்வி: திமுக அரசை கலைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளாரே?

தமிழர் தலைவர்:

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. அன்றைக்கு அடுத்த நாளில் இருந்தே அதிமுக பாடுகின்ற பழைய பாட்டு இது. கீறல் விழுந்த கிராம ஃபோன் பிளேட்டின் வரிகள். அதற்கு மக்களிடமும் மரியாதை இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.

கேள்வி: காங்கிரஸ் - திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளாரே?

தமிழர் தலைவர்:

எங்களுக்கு அதைப்பற்றி எந்த கருத்தும் இல்லை. இதுவரை அதிமுகவிற்கு எந்தவிதமான தெளிவும் இல்லை. அவர்கள் ஆசைகளை குதிரைகளாக்கி சவாரி செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதைப்பற்றி சிந்திக்க வேண்டியவர்கள். நாங்கள் மூன்றாவது அணி அமைப்போம் என்று அதிமுகவோடு சென்ற இடதுசாரிகளும் இப்பொழுது செல்ல திட்டமிட்டுப் பேசிக் கொண்டிருக்கின்றவர்களும் சிந்திக்க வேண்டிய ஒரு விசயம்.

எனவே காங்கிரசைப் பொறுத்த வரையிலே அவர்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விட்டார்கள். இடதுசாரிகளின் நிலைதான் பரிதாபகரமானது.


கேள்வி: என்ன காரணத்திற்காக காங்கிரஸ் வர வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள்?

தமிழர் தலைவர்:

என்ன காரணத்தைக் கொண்டு அழைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். காங்கிரசை ஒரு நேரம் அழைப்பார்கள். இன்னொரு நேரம் மக்களோடுதான் எங்களுடைய கூட்டணி என்று சொல்லுவார்கள். இன்னும் போகப் போக பல்வேறு பதில்கள் வெளி வரும்.

கேள்வி: ஈழப் பிரச்சினையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

தமிழர் தலைவர்:

ஈழத் தமிழர் நல உரிமைப் பாதுகாப்பு துணைக் குழு மூலம் டெல்லி சென்று குடியரசு தலைவர், மற்றும் சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினோம்.
எங்களிடம் உறுதிமொழிகூறினார்கள். மீண்டும் இந்தப் பிரச்சினை வந்திருக்கிறது. இப்பொழுது சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே அதனுடைய அமைப்பாளர் சட்டமன்றத்தில் இருக்கிறார். நாங்கள் சுற்றுப்பயணத்தில் இருக்கின்றோம். சுற்றுப்பயணம் முடிந்தவுடனே இதனுடைய தொடர் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பரிசீலித்து செயல்படுவோம்.


கேள்வி: அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று சொல்லி மனு கொடுத்திருக்கின்றார்களே!

தமிழர் தலைவர்:

ஈழப் பிரச்சினையிலே மற்றவர்கள் யார் எதைச் செய்தாலும் நாங்கள் அதைக் குறை கூறுகிறவர்கள் அல்லர். அதே நேரத்திலே அதை நாமும் சேர்ந்து நல்லனவற்றை வரவேற்க வேண்டும்.
கலைஞர் அவர்கள் மிக முக்கியமான உதாரணத்தைச் சொன்னார்கள். இரண்டு அணிகளாக இருக்கிறார்கள் என்பதினாலே ஈழத் தமிழர் பிரச்சினை பலகீனமாகியிருக்கிறது என்று யாரும் கருதத் தேவையில்லை.
கத்தரிக்கோலினுடைய இரண்டு பிளேடுகள் எப்படி சிறப்பாக இருக்கிறதோ அது போல பணியாற்றுவோம் என்று கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.


இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேட்டி அளித்தார்.


---------------------நன்றி:"விடுதலை" 22-2-2009

22.2.09

சங்ககால இலக்கியங்களும் பெரியாரின்பகுத்தறிவுக் கொள்கைகளும்


சங்ககால இலங்கியங்களும் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளும்

(முனைவர் பேராசிரியர் இரா. மணியன்
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியின் (தஞ்சாவூர்) மதிப்பியல் பேராசிரியர் முதுபெரும் புலவர் ஆவார். பெரியாரின் இலக்கியச் சிந்தனைகள் எனும் நூலிலிருந்து ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது.)


கடவுளும் மதமும்

பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளுள் தலையாயது கடவுள் பற்றியது. மனிதனை ஏமாற்ற மனிதனால் படைக்கப் பட்டதுதான் கடவுள் என்பது பெரியாரின் திடமான நம்பிக்கை ஆகும்.
கடவுள் இருக்கிறார் என்றால், அதனை எல்லோர் முன்னிலையிலும் காட்டவேண்டும் என்று பெரியார் கூறியதைப் பகுத்தறிவாளர்கள் யாவரும் ஒப்புக் கொள்வர்.

கி.பி. 1694 முதல் 1778 வரை வாழ்ந்து, பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டு,சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைக் கோட்பாடுகளாகக் கொண்டு உலகையே அதிரவைத்த பகுத்தறிவாளர் வால்டேர், இயற்கையால் நம்முள் கடவுள் அறிவு புகுத்தப்படவில்லை. அப்படி புகுத்தப்பட்டிருந்தால் எல்லா மனிதர்களும் ஒரே சமயத்தில் கடவுளைப் பற்றிய அறிவு ஏற்பட்டிருக்கும். ஆனால் நாம் பிறக்கும்போது கடவுளைப் பற்றிய இந்த அறிவுடன் பிறப்பதில்லை என்று கூறியுள்ளார்.

இதே கருத்தைத்தான் பெரியாரும் கூறுகிறார் என்பது நோக்கத்தக்கது. இந்தக் கருத்துடன், மதம் பற்றிய பெரியாரின் கருத்தும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
மதம் மனிதனை அறிவில்லாதவனாகவும், மூட நம்பிக்கை கொண்டவனாகவும் ஆக்குகிறது என்பதைப் பெரியார் பல்வேறு ஆதாரங்களோடு விளக்குகிறார். மதம்தான் வருணா சிரமத் தர்மத்தையும், சாதி வேறுபாடுகளையும் வேரூன்றச் செய்தது என்பதையும் பெரியார் புலப்படுத்துகிறார். அதனால் தான், மதம் தொடர்பான எத்தகைய இலக்கியமானாலும் அவ்விலக்கியம் தமிழர்களுக்குத் தேவையில்லாதது என்று கூறுகிறார்.

கடவுளும் மதமும் கூறப்பட்ட எந்த இலக்கியமாக இருந்தாலும் அதைப் பெரியார், இலக்கியமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ சொல்லாத எத்தனையோ சங்ககாலப் பாடல்கள் உள்ளன என்றாலும், கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் எடுத்துரைக்கும் பாடல்களும் சங்ககாலத்தில் பாடப்பட்டுள்ளன என்பதை மறுக்க இயலாது.

சங்ககாலத்துக்கு முற்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்துள்ளும் தெய்வம் பற்றிய கருத்து இருப் பதைக் காண்கிறோம். அணங்கே விலங்கே, கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே என்ற நூற்பாவால் (1202) அறியலாம்.

சங்ககாலக் கடவுள்கள்

நிலத்தை நானிலம் என்று கூறினாலும், பாலையையும் சேர்த்து அய்வகை நிலமாகக் கூறி, அவற்றுக்குக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பெயரிட்டு அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தெய்வத்தையும் அக்காலத்திலேயே தமிழர்கள் படைத்துக் கொண்டுள்ளனர். இக்கருத்தைப் பெரியார் ஏற்றுக் கொள்ளாததில் வியப்பில்லை.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற கொள்கையைக் கொண்ட பெரியார் தமிழர்களின் கடவுட் கொள்கையை ஏற்றுக் கொள்வார் என்று நாம் எவ்வாறு எண்ண இயலும்? அய்வகை நிலங்களுக்கும் முறையே சேயோன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை என்று கடவுள்களைப் படைத்த மக்களைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்றே பெரியார் எண்ணுகிறார்.
தமிழகத்தில் வாழ்ந்திருந்த ஆதிகுடிகளின் கடவுட் கொள்கைகளும்,தமிழ் மக்களின் சமயக் கொள்கைகளும், ஆரியரின் சமயக் கொள்கைகளும் ஒன்று கலந்து சங்க காலத்து சமுதாயத்தில் இடம் பெற்றிருந்தன என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பண்டைக் காலத் தமிழரிடையே துறக்கம்,நரகம் பற்றிய எண்ணங்கள் குடி கொண்டிருந்தன. நரகமும் சொர்க்கமும் ஆரியப் பார்ப்பனர்களின் கற்பனைகள் என்றும், தமிழர்களை அடிமைப்படுத்துவதற்காகவே இக்கொள்கைகளைப் பரவவிட்டனர் என்றும் பெரியார் கூறுகிறார்.

புறநானூற்றில் ஆரியப் பண்பாடு

சங்ககால இலக்கியங்களுள் மிகச் சிறந்ததாகக் கருதப் பெறும் புறநானூற்றிலேயே தமிழர்களின் கொள்கைகளுக்கு மாறான கடவுட் கொள்கைகளைக் காண முடிகிறது. ஆலமரத்தின் கீழ் சிவபெருமான் அமர்ந்திருக்கும் புராணக் கூற்று புறநானூற்றிலே காணப்படுகிறது.
தமிழகத்தில் அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னா லேயே குடியேறிய ஆரியர்கள் சமயக்கதைகள்பலவற்றைப் புனைந்து மக்களிடையே பரப்பி விட்டனர். இக்கதைகள் சிலப்பதிகாரத்திலும் நுழைந்து ஆரியக் கலாச்சாரத்தைத் தமிழ் மக்கள் கலாச்சாரம் என்று கூறமளவுக்கு ஆகிவிட்டது என்பதைப் பெரியார் பல்வேறு சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துகிறார்.

சமயக் கதைகளைத் தமிழ்நாட்டில் பரப்பிவிட்ட ஆரியர்கள், வேள்விகளைப் பற்றி அரசர்களிடையே புகழ்ந்து கூறி, தமிழ் மன்னர்களின் துணைகொண்டு பல்வேறுவகை யான யாகங்களை நடத்தியுள்ளனர். பார்ப்பனர்களுக்குப் பல வேள்விச்சாலைகளை அமைத்துக் கொடுத்துப்புகழ் கொண்ட முதுகுடுமிப் பெருவழுதி, பல்யாகசாலை என்ற விருதைத் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்ட வரலாற்றுச் செய்தியைக் காண்கிறோம்.
இதுபோலவே பெருநற்கிள்ளி இராச சூயம் வேட்ட என்னும் அடைமொழி பெற்று பாராட்டப் பெற்றுள்ளான். பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பாலைக்கவுதமனார் என்ற புலவர் ஒருவரின் உதவியுடன் ஒன்பது வேள்விகளை வேட்பித்துள்ளான். இவ்வாறு ஆரியப் பார்ப்பனர்கள், தங்கள் கடவுட் கொள்கைகளை மிகப் பழங்காலத்திலேயே மன்னர்களின் துணைகொண்டு தமிழ்நாட்டிலே பரப்பியுள்ளனர். இந்தச் செயல்களைப் பெரியார் போற்றவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாமா?

இறை வணக்கம் எப்படிப் புகுந்தது?

ஆரியர்கள் தமிழகத்திற்குள் புகுவதற்கு முன்னர், தமிழர்கள் கடவுளைப் பற்றிய சிந்தனைகளே இல்லாமல் இருந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. இறந்து போன வீரர்கள் நினைவாகக் கல்நட்டுப் பாராட்டி ஆண்டுதோறும் நினைவுநாள் கொண்டாடியுள்ளனர் என்பதற்குச் சங்க இலக்கியங்களில் ஆதாரங்கள் உள்ளன.
தொல்காப்பியத்துள்ளும் நடுகல் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. விழுத் தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகல் அன்னஎன்ற தொடர் அய்ங்குறுநூறில் உள்ளது. பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் என்று அகநானூறு கூறும். அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து இனி நட்டனரே கல்லும் என்ற புறநானூற்றால் அறிகிறோம்.

இவ்வண்ணம் நடுகல் பற்றிப் பல்வேறு செய்திகளைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். இந்த நடுகல் வணக்கம் ஆரியக் கலாச்சாரம் புகுந்த பின் இறைவணக்கமாக மாறிவிட்டது எனலாம்.

சங்க இலக்கியத்தில் கடவுள்கள்

கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று பல்வேறு ஆதாரங்களோடு விளக்கிய பெரியார், தமிழ் நூல்களுள் கடவுள் பற்றி வரும் செய்திகள் யாவும் ஆரியப் பார்ப்பனர்களின் உறவால் வந்தன என்று கூறுவதை மறுப்பதற்கில்லை. கடவுள் வாழ்த்தோடு கண்யிவருமே என்றும், அருந்திறற் கடவுள் அல்லன் என்றும், கடவுள் ஆயினும் ஆக என்றும், நிலைபெறு கடவுள் ஆக்கிய என்றும், கடவுள் சான்ற கற்பின் சேயிழை என்றும், வெள்வியில் கடவுள் அருத்தினை என்றும் பலவாறாக கடவுள் என்ற சொல்லாட்சி சங்க நூல்களுள் சிறந்து காணப்படுகிறது. இச்சொல், சிவன், முருகன்,திருமால், கொற்றவை போன்ற பல்வேறு கடவுள்களைச் சுட்டுகின்றது. இவ்வாறு கடவுள் பற்றிய செய்திகள் சங்க நூல்களுள் சிறந்து காணப்படுகிறது. இச்சொல், சிவன், முருகன், திருமால், கொற்றவை போன்ற பல்வேறு கடவுள்கைச் சுட்டுகின்றது. இவ்வாறு கடவுள் பற்றிய செய்திகள் சங்க நூல்களில் கூறப்பட்டிருப்பதால், கடவுள் இல்லை என்று கூறும் பெரியார், சங்க இலக்கியத்தையும்கூட வெறுத்து ஒதுக்குவதற்குத் துணிந்துவிட்டார் எனக் கருத வேண்டியுள்ளது.

சங்கப் பாக்களில் மூடநம்பிக்கைகள்

பகுத்தறிவுப்பகலவனாகத் தோன்றிய பெரியார் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து இலக்கியங்களில் கூறப் படினும் அதனைக் கண்டிக்கத் தயங்காததில் வியப்பில்லை. சூரிய கிரகணம் ஞாயிற்றைக் கேது பற்றுவதால் ஏற்படுகிறது என்ற பகுத்தறிவுச் செய்தி பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின் வாய்ப்பட்டான் என்று சங்க இலக்கியத்துள் வருவதை எவ்வாறு பெரியார் ஒப்புக் கொள்வார்? அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த பசங்கதில் மதியத்து அகல்நிலாப் போல எனவரும் சந்திரகிரகணச் செய்தியைப் பகுத்தறிவாளர்களால் ஏற்கமுடியுமோ?

நாண்மீன்கள் இருபத்தேழும் மகளிர் என்றும், இவர்களைச் சந்திரன் மணம் செய்து கொண்டான் என்றும், சந்திரன் ரோகினியிடத்து மட்டும் அன்பு செலுத்தினான் என்றும், அதனால் சாபம் பெற்றான் என்றும், சிவபெரு மானின் அருள் பெற்றுத் தேய்வதும் வளர்வதுமாக உள்ளான் என்றும் ஆரியர் கூறும் கதை கூறப்பட்டிருப்பதை ஆய்ந்தால், ஆரியப் பார்ப்பனர்கள் எவ்வண்ண மெல்லாம் திட்டமிட்டு, புலவர் பெருமக்களிடையேயும் தங்களின் புராணக்கதை களைத் திணித்து விட்டனர் என்பதை அறியலாம். இதைப் பெரியார் கண்டிக்காமல் இருப்பாரா?

சங்க இலக்கியத்தில் புராணச்செய்திகள்

சங்க நூல்களுள் புராணக் கதைகள் கருத்து விளக்க, உவமை உத்திகளாகக் கையாளப்பட்டு உள்ளன. பாரதக் கதைகள் பல இடங்களில் வருகின்றன. இராமாயணக்கதையும் சில இடங்களில் சுட்டப்படுகின்றது. வீமன் தன் சுற்றத்தினரை, அரக்கு மாளிகை எரிந்தபோது காப்பாற்றினான் என்றும் பாரதக் கதை கவித்தொகையுள் கூறப் பெற்றுள்ளது. வீமன் துரியோதனின் தொடையை அறுத்துக் கொன்ற செய்தியை மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான்போல் கூர்நுதி மடுத்து என்று வரும் கலித்தொகைப் பாடலின் அடிகளால் அறியலாம். இங்ஙனம் பாரதக் கதையின் செய்திகள் அகம், புறம், பதிற்றுப் பத்து, சிறுபாணாற்றுப்படை முதலிய நூல்களிலும் காணக் கிடக்கின்றன. இது போலவே இராமாயணக் கதைக் குறிப்புக்களும் சங்க இலக்கியங்களில் காணப்படுவதைக் காணலாம். அய்இரு தலையின் அரக்கர் கோமான் என்று கலித்தொகைப் பாடலில் வருகின்றது. கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை, வலித்தகை அரசக்கன் வவ்விய ஞான்றை எனப் புறநானூறும் இராமன்சீதையைக் குறிப்பிடுகிறது. இந்திரன் அகலிகைக் குறிப்பு திருக்குறளிலும் கூட வந்திருப்பதைக் காண்கிறோம்.

சங்கப் பாக்களில் பகுத்தறிவற்ற கருத்துகள்


பகுத்தறிவுக்குப் புறம்பான, மூட நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்ட கதைச்செய்திகளையும் சங்க காலத்தில் காணலாம். மழைநீர், உப்பு என்ற பொருள்களில் பழந்தமிழர் அமிழ்து என்ற சொல்லைக் கையாண்டனர் எனினும், சங்ககாலத்தில் சாகாத நிலைதரும் தேவாமிர்தம் என்ற பொருள்படக் கையாண்டுள்ளார். இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் என்று புறநானூறு கூறுகிறது. ஏஎர், வயங்குபூண் அமரரை வௌவிய அமிழ்தின் என்றும், நகை அச்சாக நல்லமிர்து கலந்த நடுவுநிலை திறம்பிய நயமில் ஒருகை என்றும் பரிபாடலில் வருவதைக் காணுங்கால், திருமால் மோகினி வடிவு கொண்டு தேவர்க்கு அமிழ்து வழங்கிய பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஆரியப் பார்ப்பனர்களின் கதை அந்தக் காலத்திலேயே நடமாடியிருப்பதை உணரலாம். சாவா மருந்து என்று அமிழ்தத்தைக் கூறுகின்ற திருக் குறளையும் காணலாம். ஆயிரந்தலைகளையக் கொண்ட ஆதி சேடன் என்ற பாம்பு பூமியைத் தாங்கிக் கொண்டிருப்ப தாகவும், பாற்கடலில் அமுது கடையக் கயிறாக விளங்கியது எனவும் கூறுகின்ற ஆரியக்கதை பரிபாடலில் உள்ளது.

தமிழில் தலைவிதித் தத்துவம்


தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது எல்லாமே அவரவர் தலைவிதிப்படிதான் நடக்கும் என்று தமிழர்கள் நம்பியதுதான் என்பது பெரியார் அவர்களின் தலையாய கருத்தாகும். அதனால்தான் பொருளாதாரச் சீர்திருத்தத்தைவிடச் சமுதாயச் சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது என்று அவர் வாதிட்டார். இப்படி வாதிட்ட காரணத்தால் அவரைப் பொதுவுடைமைக் கட்சியினர் குறை கூறினர் என்றாலும் பெரியார், தலைவிதித் தத்துவத்தை வன்மையாகக் கண்டித்து, இத்தத்துவம் தமிழர்களிடையே வேரூன்றுவதற்கு இலக்கியங்களும் காரணமாக இருந்தன என்று தமிழ் இலக்கியங்களில் குறைபாடு கண்டார். ஊழைப் பற்றிய செய்திகளை ஓர் அதிகாரமாகவே கொண்டு அதை ஓர் இயலாகவும் அமைத்துள்ளதை எண்ணியும் தலைவிதிக் கொள்கைளை வள்ளுவர் ஏற்றுக் கொண்டிருப்பதைக் கருதியும் திருவள்ளுவரின் எல்லாக் கருத்துக்களையும் தன்னால் ஏற்றுக் கொள்ள இயலாது எனப் பெரியார் கூறுகிறார்.

மூடக் கருத்துகளே நிறைந்துள்ளன


சங்ககால இலக்கியங்கள் என்று தமிழறிஞர் களால் போற்றப்பெறும் பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு என்று அடியளவால், கருத்தளவால் வகுக்கப்பட்ட முப்பத்தாறு நூல்களிலும் புராணக் குறிப்புகளும், மூட நம்பிக்கைக் கருத்துகளும் மிகக் குறைவாகவே உள்ளன என்றுபல தமிழறிஞர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால் அவ்வெண்ணத்துக்கு நேர் மாறாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரியப் பார்ப்பனப் புராணக்கதைக் குறிப்புகளும், அவர்களால் அறிவுறுத்தப் பெற்ற மூடக் கருத்துகளும் சங்ககால இலக்கியங்களுக்குள் மண்டிக்கிடக்கின்றன என்பதை தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
அதனால்தான் தந்தை பெரியார், தமிழர்களின் பண்பாட்டை மட்டுமே விளக்கக்கூடிய ஆரியம் கலவாத, இந்துமத ஆத்திகம் ஊடுருவாத இலக்கியங்களையே இனிமேல் எழுத வேண்டும்என்று பல்வேறு சொற்பொழிவுகளிலேயும் கட்டுரைகளிலேயும் குறிப்பிட்டுள்ளார்.
புராதன மனிதன் தனது அறியாமைக்கும் அச்சத்துக்கும் காரணமும் உதவியும் தேட முயலும் போது அவன் கடவுள்களிடமும் மதங்களிடமும் போய்ச் சேர்ந்தான் என்பதுதான் தத்துவ இயல் ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்தக் கருத்துக்கு ஒப்பவே தமிழறிஞர்களும் ஆனார்களோ என்ற அய்யம் வரத்தான் செய்கிறது.

நற்றிணை முதலான எட்டுத்தொகை, திருமுருகாற்றுப்படை முதலான பத்துப்பாட்டு ஆகிய பதினெண்மேற்கணக்கு நூல்களுள்ளும், திருக்குறள் முதலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்ளும், ஆங்காங்கே ஆரியக்கடவுள்களும், சிறு தெய்வங்களும், தேவர், நரகர் பற்றிய குறிப்புகளும், சொர்க்கம், நரகம் பற்றிய செய்திகளும், பார்ப்பனர்களுக்குத் தானம் வழங்கினால்தான் புண்ணியம் கிடைக்கும் என்பன போன்ற ஆரியச் சிந்தனைகளும், அணங்குகள், பேய்கள் பற்றிய கருத்துகளும், அரக்கர்கள் மக்களுக்கும் தேவர்களுக்கும் தீங்கிழைத்தனர் என்ற புராணக் கதைகளும், சிவன், திருமால், முருகன், உமாதேவி, இலக்குமி, மூதேவி, சீதேவி, பிரம்மா, சரசுவதி ஆகிய கடவுள்களின் உறவு முறைகளும் கூறப்பெற்றுள்ளன.

சொர்க்கமும் நரகமும்

இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் என்று தேவலோகம் பற்றிய செய்தி தொல்காப்பியத்துள் காண்கிறோம். நெடுமாவளவன் - தேவர் உலகம் எய்தினன் ஆதலின் என்று புறநானூற்றிலே கூறப்பட்டுள்ளது. புத்தேள் உலகு, புத்தேளிர், புத்தேள்நாட்டு, புத்தேள்நாடு என்ற தொடர்கள் மூலம் திருக்குறள் தேவர்களையும், அவர்கள் வாழும் உலகையும் குறிப்பிட்டுள்ளது. வானோர், வானகம் என்னும் தொடர்களைத் திருவள்ளுவர் கையாண்டுள்ளார். மேல்உலகம், உயர்ந்த உலகம் என்ற சொற்றொடர்களும் திருக்குறளில் காணப்படுகின்றன.

புராணச் செய்திகள்

திருக்குறளிலே மட்டுமன்றி இதர பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள்ளும், ஆரியப் பார்ப்பனப் புராணக் கருத்துகள் நிறைந்து கிடக்கின்றன. வசிஷ்டன் மனைவியாகிய அருந்ததி கற்பில் சிறந்தவள் என்னும் ஆரியப் புராணக் குறிப்பு திரிகடுகத்தில் அருந்ததிக் கற்பினார் தோளும் எனக் காணப்படுகிறது. தேவேந்திரன் மாறினாலும் அவன் மனைவியாகிய இந்திராணி மாறமாட்டாள். (தேவலோகத்தில் இந்திரன் மாறிவிடலாம். ஆனால் இந்திராணி மாறமாட்டாள். அதாவது எத்தனை இந்திரர்கள் மாறி மாறி வந்தாலும் இந்திராணி ஒருத்திதான் நிரந்தரமானவள்) என்பது புராணக் கதை. அந்த இந்திராணியைக் கற்புக்கரசியாகக் காட்டுகிறது நாலடியார். அரும் பெறற் கற்பின் அயிராணி அன்ன என்று நாலடியார் கூறுகிறது. இந்திரனைத் தேவாதி தேவன் என்று ஏலாதி குறிப்பிடுகிறது. பொலந்தார் இராமன் என்ற தொடர் மூலம் இராமாயணக் கதையை ஒப்புக் கொள்கிறது பழமொழி நானூறு.

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளுக்கு நல்வினை, தீவினைகளே காரணமாகும் என்ற ஆரியக்கருத்து தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தே என்று வரும் நாலடித் தொடரால் தமிழ் நாட்டில் புகுத்தப் பட்டுள்ளது.

ஊழ்வினைத் தத்துவம்

ஆரியக் கலப்பால் ஏற்பட்ட ஊழ்வினைத் தத்துவம் பதினென்கீழ்க்கணக்கு நூல்களான பழமொழி, திரிகடுகம், திணைமாலை நூற்றைம்பது ஆகியவற்றுள் வந்துள்ளதைக் காண்கிறோம்.

அறவினை ஊழே அடும் என்றும், ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம் என்றும், தெய்வம் முடிப்புழி எவன் செய்யும் என்றும், ஊழினால் ஒட்டி வினைநலம் பார்ப்பானும், பாலால் கடும்புனலின் நீந்திக் கரைவந்தார்க் கல்லால் என்றும் வந்துள்ள தொடர்கள் தமிழர்களின் அறிவு வளர்ச்சியையும் ஊக்க உணர்வையும் தளர்வடையச் செய்துள்ளன என்பது மிகையன்று.

பாடல்களில் பரமசிவனும் பார்வதியும்


சிவபெருமானைப் பற்றிய புராணக் கருத்துக்களும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் வந்துள்ளன. கண்மூன்று உடையானும் என்றும் கண் மூன்று உடையான்தாள் சேர்தல் கடிதினதே என்றும் ஆலம் சேர் கண்டத்தான் என்றும் வரும் தொடர்கள் சிவனைத் தமிழ்க் கடவுளாக ஆக்கிவிட்டன.

ஆரியர்களின் இதிகாசப் புராணக் கதைக் குறிப்புகளும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தோன்றித் தமிழ் மக்களின் பகுத்தறிவை வீழ்த்தியுள்ளன. பரமசிவன் பார்வதியைத் தன் இடப்பாகமாகக் கொண்ட கதையை ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா என்னும் தொடர் உணர்த்துகிறது. கண்ணன் உலகை உண்ட கதையை படியை மடியகத்திட்டான் என்ற தொடர் கூறுகிறது. திருமால் உலகளந்த கதையை அடியினால் முக்கால் கடந்தான் முழு நிலம் என்ற தொடர் அறிவுறுத்துகிறது. பாண்டவர் அரக்கு மாளிகையில் இருந்து தப்பிய கதையை அரக்கிலுள் பொய்யற்ற அய்வரும் போயினர் என்ற தொடரால் உணர்த்தப்படுகிறது.

ஆரிய ஊடுருவல்


இதுகாறும் கூறியவற்றால், சங்ககால இலக்கியங்கள் பலவற்றுள்ளும் ஆரியப் பார்ப்பன, புராண இதிகாசப் பகுத்தறிவுக் கொவ்வாத கருத்துகள் தோன்றி நிலைபெற்று விட்டன என்பதை உணரலாம்.

இயற்கையோடு இயைந்த அகம் - புறக் கருத்துகள் நிறைந்த சங்க இலக்கியங்களுக்குள்ளும், ஆரியக் கருத்துகள் ஊடுருவியதால்தான் பெரியார் அவற்றையும் கண்டிக்கிறார் என்பதை உய்த்துணர முடியும்.

------------------நன்றி: "விடுதலை" 15-2-2009 $ 22-2-2009

கலைஞருக்கு சிலை ஏன்? கலைஞர் சிலையைத் திறக்க அடிகளாரை அழைத்ததேன்?



பெரியார் பெற்ற மகிழ்ச்சி


அம்மா விளக்கம்

கலைஞர் சிலையைத் திறக்க அடிகளாரை அழைத்ததேன்? தந்தை பெரியார் அவர்கள் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதில் இன உணர்ச்சிக் கண்ணோட்டம் தான் முக்கியம் என்று கருதி அதன்படியே செயல்படக் கூடியவர்கள், அவர்கள் மதவாதியாக இருந்தாலும், வேறு பல கருத்துகளில் மாறுபாடாக இருந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாது, அவர்களிடம் தமிழன் என்கின்ற இன உணர்ச்சி இருக்கிறதா என்பதைத்தான் முக்கியமாகப் பார்ப்பார்கள். உதாரணமாக 1925-ம் ஆண்டிலே அய்யா அவர்கள் குடிஅரசு ஏட்டைத் துவக்கிய நேரத்திலேகூட திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளாரைத்தான் அழைத்துத் துவக்க விழா நடத்தினார்கள். நம்முடைய இனத்திலே பிறந்த ஒருவர் எந்த இடத்திலே இருந்தாலும், அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் - பெருமையாக நடத்த வேண்டும் என்று கருதுபவர் தந்தை பெரியார். அந்த அடிப்படையில்தான் ஞானியார் அடிகளை அழைத்து இன உணர்ச்சியின் சின்னமாகத்தான் இன்றைய தினம் கலைஞர் அவர்கள் சிலையை, தந்தை பெரியாருடைய ஆணையை ஏற்று திராவிடர் கழகம் எடுத்து இருக்கிறது.

ஓர் இன உணர்ச்சி விழாவிற்கு ஓர் இனவுணர்வு கொண்ட தமிழரைத்தான் அழைக்க முடியுமே தவிர வேறு யாரையும் நாங்கள் அழைக்காதற்குக் காரணம், அடிகளார் அவர்களைத் தவிர சிறந்த ஒருவர் எங்கட்குக் கிடைக்காததாலேயாகும் என்று அம்மா அவர்கள் குறிப்பிட்டார்கள். கலைஞர் சிலை திறப்பு விழாவில் நான் வரவேற்புரை நிகழ்த்தினேன். (விடுதலை 27.9.1975) அப்பொழுது, அய்யா அவர்கள் ஒன்றைக் குறிப்பிடுகிறார்கள் என்றால் அதை ஆணையாக ஏற்றுக் கொண்டு செயல்படுவதுதான் எங்கள் வேலை. அந்த ஆணை இன்று செயல்படும் வகையில் தான் டாக்டர் கலைஞர் அவர்கள் அதோ, சிலை வடிவாக நின்று கொண்டு இருக்கிறார்!

தந்தை தனயனுக்கு எடுக்கும் சிலை!

நாட்டில் பிள்ளைகள் என்பவர்கள் தன் தந்தையார் பெயரை எடுக்கும் என்பார்கள். ஆனால் இங்கு ஒரு விசித்திரமான நிலை. தன் தனயனைப் பாராட்டி தந்தையே சிலை எடுத்து மகிழும் அற்புதம் இங்குதான் உண்டு! என்பதுடன் இது சூத்திரன் அரசு என்று தமிழ்நாடு அரசு நாலாஞ்சாதி மக்களான சூத்திரர்களுக்காக பாடுபாடும் அரசுதான் - எங்களை எல்லாம் ஆளாக்கி உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களுடைய மொழியில் கூறுகிறேன் இவ்வரசு நாலாந்தர அரசுதான்! பிராமண, சத்திரிய, வைசிய சூத்திரன் என்ற முறையில் நாலந்தர அரசைத்தான் நாலாந்தர மக்களுக்காவே நடத்துகிறோம் என இறுமாப்புடனும் பெருமையுடனும் கர்வத்துடன் கூறிக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரகடனப்படுத்தினார் கலைஞர் என்று பெருமைப்பட எடுத்துக்கூறிய அந்த சம்பவத்தை விடுதலையில் கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு வெளியிடப்பட்டது. இந்தச் செய்தியை அய்யாவிடம் கூறினேன்.

அய்யா அகமகிழ்ந்து, இதனையே முக்கிய தலைப்புச் (Banner) செய்தியாக விடுதலை ஏட்டில் போடுங்கள் என்றார்; ஏற்கெனவே அப்படியே போட்டு விட்டோம் என்று கூறியதைக் கேட்டு மேலும் மகிழ்ந்தார்கள். என் பொது வாழ்வியல் நான் பெற்ற பெரிய மகிழ்ச்சியான செய்தி இது!
என்று தந்தை பெரியார் அவர்கள் இதை குறிப்பிட்டுக் கூறினார்கள்.

அண்ணாசாலையை எடுத்துக் கொண்டால்கூட தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட மூன்று முதலமைச்சருக்குச் சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. பச்சைத் தமிழர் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்கள் - இப்படி சிலைகள் எல்லாம் தமிழர்களுக்கே எடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கண்டு எதிரிகளுக்குப் பொறுக்க முடியவில்லை. இதில் நம் இனத்து விபீஷணர்களே அம்புகளாகப் பயன்படுவதுதான் வேதனை! என்று குறிப்பிட்டு என் பேச்சை முடித்துக் கொண்டேன்.

சிலை வைப்பது குறித்து கலைஞர் அறிக்கை (விடுதலை: 15.10.1975)

தனக்குச் சிலை வைக்க பல இடங்களில் ஏற்பாடு நடந்து வருவதாகவும், அதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கேட்டு, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இன்று ஓர் அறிக்கை விடுத்துள்ளார். முதல்வர் கலைஞர் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தந்தை பெரியார் அவர்களுடன் தான் கலந்து கொண்ட ஒரு விழாவில் எனக்குச் சிலை அமைக்க வேண்டும் என்ற கருத்தை பெரியார் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்கள். அதற்குப் பதில் அளிக்கும்போது நான்: எனக்குச் சிலை வேண்டாம் என்றும், அப்படி வைப்பதாக இருந்தால் தந்தை பெரியாருக்கு வைத்த பிறகு அது பற்றி யோசிக்கலாம் என்றும் கூறி அன்றைக்கு ஒரு விதமாக பெரியாரின் பிடிவாதமான கருத்தைச் சமாளித்தேன்.

பெரியார் மறைவுக்குப் பிறகு பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றி வரும் திராவிடர் கழகத்தினர் இதில் உறுதியாக இருந்தனர். அவர்கள் முதலில் ஒருமுறை எடுத்த முயற்சியைத் தடுத்து சிலை வைக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுகளை திரும்பப் பெறுமாறு செய்தேன்.

அதன் பிறகும் திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள், பெரியாரின் கடைசி ஆசைகளில் ஒன்று எனக்குச் சிலை வைப்பது என்று கூறி அந்த முடிவில் பிடிவாதமாக இருந்து வெற்றியும் பெற்று விட்டார்கள் என்று குறிப்பிட்டார். நேரிலும் சென்னை வந்து அம்மாவிடம் நன்றி கூறினார்.

1971ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களின் 93-ஆம் ஆண்டு பிறந்தநாள் - 17-9-1971-இல். அவர்தம் சொந்த பூமியாகிய பகுத்தறிவு மண்ணில் தந்தை பெரியார் அவர்களது பிறந்த நாளை வெகு விமரிசையுடன், ஈரோடு நகரமக்கள் பலரும் குழு அமைத்து, ஈரோட்டின் மய்யப்பகுதியில் சிலை திறப்பு விழாவை நடத்தினார்கள். அக்குழுவில் நகரத்தின் முக்கியப் பிரமுகர், பெருவணிகர் எம்.ஜி.அங்கப்ப (செட்டியார்). இவரது வளர்ச்சிக்கு அய்யா அவர்கள் பெரிதும் துணையாக இருந்தவர்கள் என்ற நன்றி உணர்ச்சியோடு இறுதிவரை இருந்த வெள்ளைச் சட்டை அணிந்த சுயமரியாதைக்காரர். மற்ற பிரமுகர்கள் ஈரோடு திரு. எஸ்.ஆர்.சந்தானம், அவருடைய சகோதரர் எஸ்.ஆர்.சாமி. (அய்யா வின் தங்கை கண்ணம்மையார்தம் அருமைப் புதல்வர்கள் - மாப்பிள்ளை நாயக்கர் மஞ்சள் மண்டியை நடத்தியவர் - பின்னவர். கடைசிவரை அய்யா, அம்மா மற்றும் எனது நிருவாகத்தில் ஈரோட்டின் இயக்கச் சொத்துகளை நிருவகித்த நாணயமான - நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவர்.)

திரு. எஸ்.ஆர்.சந்தானம் அவர்கள் ஈரோட்டில் அண்ணா இருந்தபோது மிக நெருக்கமாகப் பழகியவர். கடைசிவரை ஈரோடு நகராட்சி உறுப் பினராகவே அய்யா குடும்பப் பாரம்பரியத்தோடு இருந்தவர். இவர்கள் எல்லாம் சேர்ந்து அய்யா பிறந்த ஊரில், அவரிடம் ஈரோட்டுக் குருகுலத் தில் சீடராக இருந்து பிறகு அண்ணாவுக்கு அடுத்தபடி முதல்வராகி, அப்பதவிக்காலத்தில் பதவிக்காலம் முடியும் - ஓராண்டுக்கு முன்பே சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து, பெருவாரி யான வெற்றியைத் தி.மு.க. பெற்று, மீண்டும் 2ஆம் முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் திறந்துவைத்த பெரியார் சிலை ஈரோட்டில் என்பது வரலாற்று முக்கியத்துவ நிகழ்ச்சியாகும்!

1971 தேர்தலிக்கு முன்பு நடைபெற்ற தி.மு.க. எதிர்ப்புப் பிரச்சாரத்தில் கலைஞர் தலைமையில் நடந்த தி.மு.க.யைக் ஆட்சியைக் குறை கூறிய சோ.ராமசாமி, முதல்வருக்கு முக்கிய வேலையே பெரியாருக்குச் சிலைகளை ஆங்காங்கே சென்று திறந்து வைப்பதுதான் என்று வயிறு எரிந்து ஆத்திரத்துடன் தனது ஏட்டில், தேர்தலுக்கு முன் எழுதியததற்காகவே, வெற்றி பெற்றவுடன் ஈரோட்டிலேயே முதல்வர் கலைஞரை அழைத்து பிரமாண்ட நிகழ்ச்சியாக சிலை திறப்பு விழா நடைபெற்றது!

சிலை திறப்பு விழாவிற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அதே ஈரோட்டில்தான் தந்தை பெரியார் அவர்களும், அடிகளாரும் தனியார் ஒருவர் இல்லத்தில் சில ஆண்டுகளுக்குமுன் சந்தித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சிலை திறப்பு விழாவில், வரவேற்புரையை சிலைக்குழுத் தலைவர் எம்.ஜி.அங்கப்பனார் அவர்கள் நிகழ்த்தினார். முதலமைச்சர் கலைஞர், அமைச்சர்கள் ப.உ.சண்முகம், க.ராசாராம், கண்ணப்பன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

--------------------------நினைவுகள் நீளும்

------------------------ கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் அய்யாவின் அடிச்சுவட்டில் (இரண்டாம் பாகம்: தொடர் - 13) - "உண்மை" பிப்ரவரி 15-28 2009

கடவுள் - மதம் ஒழிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா ?



அறிவுள்ள மனிதர்க்கு அடையாளம் எது?

மனிதன் என்பவன் பகுத்தறிவு உடையவன்; சிந்தனா சக்தியோடு எந்தக் காரியத்தையும் செய்யக்கூடிய சக்தி உடையவன்; இன்று நல்ல அனுபவங்களையும் வளர்ச்சித் தன்மையையும் பெற்று நாளுக்குநாள் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பவன்.

ஒரு மணிக்கு 1000, 2000, 3000 மைல் வீதம் ஆகாயத்தில் பறக்கிறவனாக இருக்கிறான்; பத்தாயிரம் மைலுக்கப் பாலுள்ள மனிதனிடம், பக்கத்தில் இருப்பவனிடம் பேசுவதுபோலப் பேசுகிறான். அது மாத்திரமல்லாமல், அப்படிப் பேசுகிற மனிதனை நேருக்கு நேராகக் காணுகிறவனாக இருக்கிறான்; சூரிய மண்டலத்தை அளந்துவிட்டான்; சந்திர மண்டலத்துக் குப் போய் வந்து கொண்டிருக்கிறான்.

அநேக வியாதிகளுக்கு மருந்துகள், சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்து விட்டான். சராசரி அய்ந்து வருஷம், பத்து வருஷமே வாழ்ந்த மனிதர்கள் - இப்போது சராசரி 50 முதல் 75 வயது வரை வாழ்கிறார்கள்.

இப்படிப்பட்ட மனிதனுக்கு இவை எல்லாம், இந்த சக்திகளெல்லாம் இல்லாத காட்டு மிராண்டிக் காலத்தில் அதாவது 1000, 1500, 2000, 3000 வருஷங்களுக்கு முன்னால் இருந்த மூடமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட - கடவுள், மதம், வேதம் இவைகளைக் கற்பித்துக்கூறிய தலைவர்கள், இனியும் இன்றைக்கும் வேண்டுமா? அவைகளால் ஏதாவது பலன் உண்டா? என்பவைகளைப் பற்றி மனிதன் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

முதலாவது "கடவுள் என்றால் என்ன?" என்று தெரிந்தவன் - யாராவது, ஒருவனாவது இருக்கிறானா?

"கடவுள் தன்மை இன்னது" என்று தெரிந்தவர்களில் ஒருவனாவது அதை நம்பி, அதைப்போல் நடக்கிறவன் ஒருவனாவது இருக்கிறானா? மனிதன் கடவுள் செயலை (விதியை) நம்புகிறானா? அல்லது, தன்செயலை (மதியை) நம்புகிறானா? வரையறுத்துக் கூற முடியுமா?

"கடவுள் எங்கும் இருக்கிறான்" என்ற சொல்லுகிற அறிவற்றவர்களே - கடவுளுக்குக் கோயில் (இருப்பிடம்) கட்டுகிறார்கள்.

"கடவுளுக்கு உருவமில்லை" என்று சொல்கிற புத்தி ஈனனே அந்தக் கடவுளுக்கு உருவம், அதுவும் பல்வேறு உருவங்கள் கூறியிருக்கிறான்.

"கடவுளுக்கு ஒன்றும் வேண்டியதில்லை" என்ற சொல்லுகிற முட்டாள்களே -அந்தக் கடவுளுக்குச் சோறு, பெண்டாட்டி, வைப்பாட்டி முதலியவைகளை அமைக்கிறார்கள்.

"கடவுள் யோக்கியர்" என்று சொல்லுகிற முட்டாள்களே அந்தக் கடவுள் அவனைக் கொன்றார், இவனைக் கொன்றார், திருடினார், விபச்சாரத்தனம் செய்தார், அவன் மனைவியைக் கெடுத்தார், இவர் மனைவியை அபகரித்தார் என்றெல்லாம் கூறிப் பண்டிகைகள் நடத்து கிறார்கள். இவை யாவும், இவை போன்றவையும் ஒருபுறமிருந்தாலும், இப்படிப்பட்ட கடவுளால் மனிதன் அடையும் பயன் என்ன என்று சிந்தித்தால் என்ன பதில் கிடைக்கிறது?

கடவுளினால் ஒன்றும் பயனில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும் மேற்கண்ட முட்டாள் தனமான, காட்டுமிராண்டி அயோக்கியத்தனங்கள் ஒழிக்கப்படுவதற்காகவாவது கடவுள் - மதம் ஒழிக்கப்பட வேண்டாமா என்று கேட்கிறேன்.


ஒழுக்கத் துறையில், அறிவுத்துறையில் இவ்வளவு கேடுகள் இருப்பது மாத்திரமல்லா மல் - பொருளாதாரத் துறையில் எவ்வளவு கேடுகள், நட்டங்கள் ஏற்படுகின்றன? இந்தக் கேட்டிற்குப் பயன் என்ன?

அயோக்கியர்கள், மடையர்கள், சோம்பேறிகள், பிழைக்கிறார்கள் - மக்களை ஏய்க்கிறார்கள் என்பதில்லாமல் நற்பயன் என்ன என்று கேட்கிறேன்.

இவை மட்டுமா?

சமுதாயம் எவ்வளவு பிரிவுற்று, சின்னா பின்னப்பட்டுக் குதறிக் கிடக்கிறது?

எதற்காக "இந்து"; எதற்காகக் "கிறிஸ்தவம்"; எதற்காக "முஸ்லிம்" முதலிய மதங்கள் வேண்டும்? இவர்களுக்குத் தனித்தனி வேதம், வேஷம், செய்கைகள் முதலியன எதற்காகத் தேவையாக இருக்கின்றன? இவைகளால் பிரிவினை உணர்ச்சியல்லாமல் சமுதாயத்திற்கு நலனென்ன என்று கேட்கிறேன். கடவுளாலும், இந்த வேதங்களாலும் பிரிவினை உணர்ச்சி தவிர வேறு பலன் என்ன என்று கேட்கிறேன்.


இவைகளெல்லாம் ஒருபுறமிருந்தாலும், இவற்றால் மனிதனின் அறிவுகெட்டு, வளர்ச்சி பாழாகி - இந்த இருபதாவது நூற்றாண்டிலும் மனிதன் அறிவிற்கும், சிந்தனைக்கும் எற்றபடி வளராமல் தேங்கிக் கிடக்கிறான். இது எவ்வளவு பெரிய கேடு? மனித வாழ்வினால் எந்த மனிதன் கவலை, தொல்லை, அடிமைத்தனம் இல்லாமல் இருக்க முடிகிறது? ஏன் பிறக்க வேண்டும்? ஏன் சாக வேண்டும்? இவை இரண்டுமில்லாமல் செய்துகொள்ள மனிதனால் முடியாதா? பாழும் "கடவுளால்" தான் இது முடியாததாக இருக்கிறதே!

பிறப்பித்தல், சாகடித்தல் (ஆக்கல், அழித்தல்) என்ற இரண்டைத் தவிர, "கடவுள்" வேறு வேலை எதைப் பார்க்கிறானாம்? இந்தக் காரியத்திற்கு "ஒரு கடவுள்" - "பல கடவுள்கள்" ஏன்?

ஆகவே, தன்னைப் பகுத்தறிவுள்ள மனிதன் என்று உணர்ந்த எவனும் மனித சமுதாயத்துக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும் என்றால், தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தோம் என்று கூறிக் கொள்ளவோ வேண்டுமானால் கடவுள் மதம் வேதங்கள் ஒழிக்கப்பட, தன்னால் கூடியதைச் செய்ய வேண்டும். இதுதான் அறிவுள்ள மனிதர்க்கு அடையாளம் என்பது என் கருத்து.

-------------- தந்தைபெரியார் - "விடுதலை" தலையங்கம் 18.10.1972