Search This Blog

6.1.15

விவேகானந்தர் - ஓர் எக்ஸ்ரே பார்வை


    சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் :

    விவேகானந்தர் - ஓர் எக்ஸ்ரே பார்வை


    நூல்: கடவுளின் கதை - பகுதி IV
    ஆசிரியர்: அருணன்
    வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்,
    69/24ஏ, அனுமார் கோவில் படித்துறை,
    சிம்மக்கல், மதுரை - 625 001.
    தொலைப்பேசி: 0452-2621997
    பக்கங்கள்: 288
    விலை: ரூ.200/-

    நாடறிந்த முற்போக்கு எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களது கடவுளின் கதை மிக்ஷி _ என்ற அரிய ஆராய்ச்சி நூல் _ நான்காம் தொகுதி மற்ற மூன்று தொகுதிகளைப் போலவே மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

    முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டில் எப்படி மேற்கிலும் கிழக்கிலும் கடவுள் _ மதப் பரப்புகள் - புரட்டுகள் - திட்டமிட்டு நடைபெற்றன. எதிர் சிந்தனையாளர்களின் கருத்துப்போரும் அறிவாயுதங்களும் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல வாத ஆதாரங்களை முன்னிறுத்தி மிக சுவையான, ஆழமான, ஆய்வு நூலாக இந்நூல் - வழமைபோல் அமைந்துள்ளது!

    விவேகானந்தர் இப்போது ஆர்.எஸ்.எஸுக்குக் கிடைத்த அருமையான மயக்க பிஸ்கட் ஆகும்.

    படித்த நம்மில் பலரே இதில் மயங்கி வருகின்றனர்; அவர்களது மயக்கம் தெளிந்து சரியான புரிதல் பார்வையைப் பெற இந்த நூல் விவேகானந்தரை மிகவும் துல்லியமாக எக்ஸ்ரே எடுத்துப் புரியவைத்துள்ளது.
    அவசியம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்இது.
    பேச்சாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கையேடுபோல் பயன்படக் கூடும்.
                                                           -------------------------- ஆசிரியர் கி.வீரமணி
    அந்நூலின் ஒரு பகுதி:
    கல்கத்தாவில் 1863இல் ஒரு பாரம்பரியமான காயஸ்தா குடும்பத்தில் பிறந்தார் நரேந்திரநாத் தத்தா. தந்தையார் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குரைஞர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நரேந்திராவுக்கு பிரம்மோ சமாஜ இயக்கத்தில் பற்றுதல் ஏற்பட்டது. அதன் வருணாசிரம மறுப்பு, பிரம்மோ இறையியல் அந்த பிராமணரல்லாத மாணவரை  ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. இதை ராமகிருஷ்ணரைப் பற்றிய பதிவுகளைத் தந்த மகேந்திரநாத் குப்தா இப்படியாகக் குறிப்பிட்டுள்ளார்: பத்தொன்பது வயது நிரம்பிய ஒரு வாலிபரைப் பார்த்து பல விஷயங்களை ஆனந்தமாகப் பேசினார் ஸ்ரீராமகிருஷ்ணர். அந்த வாலிபர் நரேந்திரா. அவர் கல்லூரி மாணவர்; சாதாரண பிரம்மோ சமாஜத்திற்கு அடிக்கடி செல்பவர்.

    விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை எழுதியுள்ள நிகிலானந்தாவும் இப்படிச் சித்தரித்துள்ளார்: நரேந்திரா நவீன உணர்வின் அடையாளமாக இருந்தார். பிரம்மோ சமாஜத்தின் விசுவாசமான உறுப்பினர் என்ற முறையில் இந்து மதத்தின் உருவ வழிபாடு மற்றும் இதர சடங்குகளை அவர் விமர்சித்து வந்தார். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே குருமார்கள் தேவையில்லை என்று நினைத்தார். கடவுள்கள் மற்றும் தேவதைகள் பற்றிய ஸ்ரீராமகிருஷ்ணரின் தரிசனங்களை அவர் கேலி செய்தார், அவை பொய்த்தோற்றங்கள் என்றார்.

    கேசவ சந்திரசென், விஜய் போன்ற பிரம்மோ சமாஜத் தலைவர்கள் ராமகிருஷ்ணரைச் சந்தித்து வந்தார்கள் என்பதைக் கண்டோம். அப்படிப்பட்ட சூழலில்தான் 1881 நவம்பரில் அவரை நரேந்திராவும் சந்தித்துப் பேசினார். அவரது ஆற்றலைச் சட்டென்று உணர்ந்து கொண்ட ராமகிருஷ்ணர் அவரைத் தனது ஆளுகைக்குள் கொண்டுவர முடிவு செய்தார்; குறிவைத்து வலை விரித்தார். தனது சீடர் (நரேந்திரா) சென்றிருந்த பிரம்மோ ஆலயத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருநாள் சென்றார். அவர் சென்றபோது நரேந்திரா மற்ற பிரம்மோக்களுடன் சேர்ந்து பாடிக்-கொண்டிருந்தார். நரேந்திராவின் குரலைக் கேட்டதும் ஸ்ரீராமகிருஷ்ணர் அருள் வந்தவராக ஆடினார். கூடியிருந்தவர்கள் பார்வையெல்லாம் அவர் மீது திரும்ப, அங்கே பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்று விவரித்துள்ளார் நிகிலானந்தா.

    பிரம்மோ சமாஜக் கூட்டத்திற்கே சென்று நரேந்திராவை இப்படியாக அங்கிருந்து இழுத்துவரும் வேலையில் இறங்கினார். அப்படியும் நரேந்திரா உடனடியாக ராமகிருஷ்ணரின் வலையில் விழவில்லை. உலகம் மாயை, பிரம்மம் எனப்பட்ட கடவுள் ஒன்றே மெய்ப்பொருள் எனும் அத்வைதம் அவருக்கு இயல்பானதாகப் படவில்லை. பூங்காவில் உலவிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த இரும்புக் கம்பத்தில் தனது தலையைப் பலமுறை மோதி இந்த உலகம் மெய்யா அல்லது மனதின் மாயையா என்று சோதனை செய்தார் என்கிறார் நிகிலானந்தா. நிச்சயம் உலகம் மாயை அல்ல என்பதை நெற்றிப்-பொட்டின் வலி காட்டிக் கொடுத்திருக்கும்!

    அப்படியும் முடிவில் நரேந்திரா ராமகிருஷ்ணரின் அத்வைதத்தையும், காளி வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டார் என்றால் அதற்குச் சிந்தாந்தக் காரணமும், வாழ்வியல் காரணமும் இருந்தன. அந்த 19 வயது இளைஞர், சந்திக்கிற பெரிய மனிதர்களிடம் எல்லாம் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டு வந்தார். பிரம்மோ சமாஜத்தின் தேவேந்திரநாத் தாகூரிடம் அப்படிக் கேட்டபோது அவர் பேச்சை மாற்றிவிட்டார்.

    அதே கேள்வியை ராமகிருஷ்ணரிடம் கேட்டபோது அவர் தயங்காமல் சொன்னார்: ஆமாம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன். உன்னைப் பார்ப்பது போல, சொல்லப்-போனால் இதையும்விடத் தெளிவாக அவரைப் பார்க்கிறேன். கடவுளைப் பார்க்க முடியும், அவரோடு பேச முடியும். ஆனால் கடவுளைப் பார்க்க யார் பிரியப்படுகிறார்கள்? தங்களது மனைவி, குழந்தைகள், சொத்து ஆகியவற்றுக்குத்-தான் மனிதர்கள் குடம்குடமாகக் கண்ணீர் விடுகிறார்களே தவிர கடவுள் தரிசனத்திற்காக யார் அழுகிறார்கள்? கடவுளுக்காக ஒருவன் உண்மையில் கதறினால் நிச்சயம் அவரைக் காண்பான். இந்தப் பதிலைக் கேட்டு அசந்துபோனார் நரேந்திரா.

    விண்டவர் கண்டதில்லை, கண்டவர் விண்டதில்லை என்று மரணத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் பாமரர்களும் ஜாக்கிரதை-யாகவே பேசி வந்த இந்த நாட்டில் மகான்கள் எனப்பட்டோரே இப்படிச் சொல்லும் அசட்டுத் துணிச்சலைப் பெற்றிருந்தார்கள். கடவுள் எனும் கற்பிதத்தைக் கண்ணாரக் கண்டதாகச் சொன்னால் அதன் அர்த்தம் அந்தக் கற்பிதத்தின் மீது அவர்களுக்கிருந்த உறுதி-தானே தவிர புலனறிவால் ஒரு பவுதீக வஸ்துவைப் பார்த்த அர்த்தம் அல்ல என்று பின்னர் விளக்கினால் யாரால் மறுக்க முடியும்?

    அந்தத் தைரியம்தான் அவர்களை இப்படிப் பேச வைத்தது. அது மட்டுமல்ல, உண்மையில் கதறினால் என்று ஓர் இக்கு வைத்திருப்-பதையும் கவனிக்க வேண்டும். கடவுளின் தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையென்று ஒரு பக்தன் புகார் கூறினால் இந்த நிபந்தனையை நினைவுபடுத்தியும் அவர்களால் சமாளிக்க முடியும். உண்மையில் என்பதற்கு யாரால் இலக்கணம் தர முடியும்? இப்போதும்கூட நரேந்திரா உடனடியாக ராமகிருஷ்ணர் பின்னால் சென்றுவிடவில்லை. அவருக்கும் பிரம்மோ சமாஜத்திற்கும் இடையே அல்லாடினார். அந்தச் சமயத்தில்தான் - 1884இல் - அவரது தந்தையார் அகால மரண-மடைய, அவரது குடும்பம் நடுத்தெருவில் நின்றது பணச்சிக்கலில்மாட்டி. அதில் திகைத்துப்போன நரேந்திரா தனது குடும்பத்திற்காகக் காளியைப் பிரார்த்திக்குமாறு வேண்டினார் ராமகிருஷ்ணரிடம். அவரோ மிகச் சாதுரியமாக அவரையே நேரடியாகப் பிரார்த்திக்கச் சொன்னார். நரேந்திரா துறவு வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் விரும்பினார். அப்படி-யெனில், தனது குடும்பத்திற்கு ஏதாவது செய்யுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார் நரேந்திரா. காளியைப் பிரபஞ்சத்தின் தெய்வத் தாயாக ஏற்றுக் கொண்டவர், அவளின் பக்தராக மாறினார் என்று விளக்கியிருக்கிறார் நிகிலானந்தா. வாழ்வின் எதிர்பாராத துயரங்கள் மனிதர்களை கடவுள் நம்பிக்கை-யாளர்-களாக மாற்றுகின்றன என்றால், அத்தகைய துயரம் ஒன்று இங்கே ஒரு பிரம்மோவை உருவ வழிபாட்டாளராக மாற்றியது! இதற்குப் பிறகு பிரம்மோ சமாஜத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை நரேந்திரா. அந்த சமாஜத்திற்கு மூடுவிழா காணும் முயற்சியில் இப்படியும் வெற்றிபெற்றார் ராமகிருஷ்ணர்.

    * * *
    1889 இறுதியிலிருந்து நரேந்திராவும் அப்படியொரு பாரத யாத்திரையை மேற்கொண்டார்.

    இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் இந்து சமஸ்தானங்களாகப் பார்த்து அவர் விஜயம் செய்தது, அவற்றின் ராஜாக்களைச் சந்தித்து அளவளாவியது. அவர்களில் பெரும்பாலோர் இந்துப் பழமைவாதிகளாக இருந்தார்கள்; இவரை அன்போடு உபசரித்து மகிழ்ந்தார்கள். மேற்கத்திய நவீனக் கல்விக்கு ஆட்பட்டு இந்துப் பழமைவாதத்தை சில ராஜாக்கள் விமர்சித்தபோது அவர்களைக் கண்டிக்கத் தவறவில்லை நரேந்திரா. அல்வார் மகாராஜாவை 1891 பிப்ரவரியில் சந்தித்தபோது அவர் உருவ வழிபாட்டைக் கேலி செய்ததை இவர் கேட்கவும் சகிக்கவில்லை. அவருக்குப் புத்தி புகட்டி அங்கிருந்து புறப்பட்டார்.

    கத்தியவார் ராஜாதான் இவரை மேற்குலகிற்குப் பயணம் செய்யுமாறு முதலில் ஆலோசனை சொன்னவர். அத்தகைய ஆலோசனையை ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி மூலமும் கேட்டார் நரேந்திரா. அமெரிக்காவில் நடக்கவிருந்த மதங்களின் நாடாளுமன்றம் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், அதற்கு நிதி உதவி செய்வதாகவும் அவர் கூறினார்.

    கேத்ரி ராஜாவின் வேண்டுகோளின்படிதான் விவேகானந்தர் எனும் பெயரைச் சூட்டிக்-கொண்டார் நரேந்திரா. இதே ராஜா பட்டுக் காவி ஆடை, காவித் தலைப்பாகை, பெரிய பணமுடிப்பு, 1893 மே 31இல் கிளம்பவிருந்த எஸ்.எஸ்.பெனின்கலார் கப்பலில் ஒரு முதல் வகுப்பு டிக்கெட் என்று கொடுத்துதவினார் என்கிறார் நிகிலானந்தா. இந்த ராஜாக்களின் உதவி மட்டுமல்லாது இன்னும் மைசூர் மகாராஜா மற்றும் சமஸ்தானங்களது மந்திரிமார்களின் உதவியும் விவேகானந்தருக்கு இருந்தது என்கிறார் அவரே. ஆக, பாரதத்தின் பக்கா பழமைவாத நிலப்பிரபுத்துவ குறுநில மன்னர்களின் பிரதிநிதியாகத்தான் மனிதர் மேற்குலகிற்குப் பயணித்தார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

    அமெரிக்காவைக் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடித்ததன் நானூறாவது ஆண்டு விழாவை ஒட்டி அங்கே பலவித நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அப்படியொரு நிகழ்ச்சிதான் சிக்காகோ நகரில் நடந்த மதங்களின் நாடாளுமன்றம் எனும் கூட்டம். அந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதில் பலரும் சீமான்களே! சீமாட்டிகளே! என்று விளித்துப் பேசியபோது விவேகானந்தர் சகோதரர்களே! சகோதரிகளே! என்று அழைத்துப் பேசியது இன்றளவும் பெரிதாகப் போற்றப்படுகிறது. ஆனால், அங்கே அவர் பேசிய பேச்சுகளைப் படித்துப் பார்த்தால் அப்படியொன்றும் சகோதரத்துவம் பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடியதாகத் தெரியவில்லை. அவருடைய கவலை எல்லாம் பாரதத்தில் நடந்து வந்த கிறிஸ்தவ மத மாற்றமே, அதைத் தடுக்க பிராமணிய இந்து மதத்தின் பெருமைகள் எனப்பட்டவற்றைப் பறைசாற்றுவதே. அந்தக் காரியத்தையே திறம்படச் செய்தார். அதனாலேயே அவரது அமெரிக்க விஜயத்தை அன்றும் இன்றும் இந்துப் பழமைவாதிகள் புகழ்ந்துரைக்கிறார்கள்.

    செப்டம்பர் 20ஆம் தேதி அந்த நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சின் தலைப்பே இந்தியாவின் உடனடித் தேவை  மதம் அல்ல என்பதுதான். அதாவது கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்குத் தேவையில்லை என்றார். பேச்சைக் கேளுங்கள்: பரசமயத்தவரின் ஆன்மாவைக் காப்பாற்ற மிஷனரிகளை அனுப்புவதில் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் மிக ஆர்வத்தோடு இருக்கிறீர்கள். ஏன் நீங்கள் பசியிலிருந்து அவர்களது உடலைக் காப்பாற்ற முயற்சி செய்யக்கூடாது?

    இந்தியாவில் கொடூரமான பஞ்சங்களின்போது பசியால் ஆயிரக்கணக்கானோர் மாண்டுபோகிறார்கள். அப்படியும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஏதும் செய்வதில்லை. இந்தியா முழுக்க நீங்கள் தேவாலயங்களைக் கட்டுகிறீர்கள். ஆனால் இந்தியர்கள் ஏற்கெனவே போதுமான அளவுக்கு மதத்தைக் கொண்டிருக்கிறார்கள். எரியும் இந்தியாவின் கோடிக்கணக்கான வறியவர் தொண்டை வறளக் கத்துவது ரொட்டிக்காகத்தான்.

    இந்தியாவில் பஞ்சம் நேர்ந்தபோது நிவாரணம் தந்தவர்கள், கஞ்சித் தொட்டி திறந்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளே என்பது வரலாற்று உண்மை.

    இந்துமடாதிபதிகள் அப்படியெல்லாம் பஞ்ச நிவாரண வேலையில் இறங்கியதில்லை. பிராமணர்களுக்குப் போஜனம் செய்விப்பதே சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்கும் வழி என தர்ம சாஸ்திரங்கள் சொல்லியதை அட்சரம் பிசகாமல் பின்-பற்றினார்கள்.

    அடித்தட்டு ஜாதியினர் பஞ்சத்தால் செத்தால் அது அவர்களது பூர்வஜென்ம வினை. அதில் தாங்கள் தலையிடக் கூடாது என்றிருந்தார்கள்.
    அமெரிக்காவுக்குப் போன விவேகானந்தரோ கிறிஸ்தவ மிஷனரி-களின் பணிகளை அப்படியே மூடிமறைத்துப் பேசினார்.

    ஓர் உண்மையை மட்டும் ஒப்புக்கொண்டார். இங்கே பஞ்சகாலத்தில் பாமரர்கள் பசியால் மாண்டார்கள் என்பதை. ஆனால் அப்போது அவரது பெருமைமிகு இந்து மதம் என்ன செய்து கொண்டிருந்தது என்பதை மட்டும் சொல்லவில்லை. அந்த அந்நியர்களிடம் ரொட்டிக்காக இவரும் சேர்ந்து கையேந்த வேண்டிய நிலை ஏன் வந்தது என்றும் சொல்லவில்லை.
    அவரது கவலை எல்லாம் அவரது சொந்த மதத்தை _ பசியால் வாடினாலும் கோடிக்கணக்கான இந்தியர்-களுக்குச் சோறு போடாத பிராமணிய மதத்தை _ கட்டிக் காப்பதுதான். அதைச் சரியவைக்கும் வேலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபடக்கூடாது என்றவர், மாற்று வழியாக ரொட்டி கொடுக்கும் வேலையைச் செய்யச் சொன்னார்! ஆதாயம் இல்லாமல் யாரேனும் உபகாரம் செய்வார்களோ அடுத்த நாட்டவருக்கு என்பதையும் மறந்தார்!


    தனது சொந்த மதம் தனது சொந்த மக்களுக்குச் சோறு போடவில்லை என்பதை நாசூக்காக மறைத்துவிட்டு அதன் பெருமை-களை எடுத்தோத ஆரம்பித்தார் அமெரிக்கர்-களுக்கு.சமீபத்திய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எதன் எதிரொலியாக இருக்கின்றனவோ அந்த உயர் ஆன்மிகமாகிய வேதாந்தத் தத்துவம் முதல் பலவித புராணங்களைக் கொண்ட தாழ்நிலையான உருவ வழிபாடு வரை, பவுத்தர்களின் அறியொணாவாதமும் சமணர்-களின் நாத்திகமும் என்று சகலமும் இந்து மதத்தில் இடம் பெற்றுள்ளன என்று ஒரு போடு போட்டார். நவீன விஞ்ஞானங்கள் எல்லாம் தங்கள் வேதங்களில் இருப்பதாக மார்தட்டுகிற இந்துப் பழமைவாதிகள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் முன்னோடி விவேகானந்தர். எல்லாம் வேதங்களில் உள்ளன என்றால் ஏன் நீராவிச் சக்தியையும், அதில் இயங்கும் இயந்திரங்களையும், அதில் ஓடும் ரயிலையும் இந்து அறிவுஜீவிகள் கண்டுபிடிக்கவில்லை என்பதை மட்டும் அவரும் விளக்கவில்லை, அவருக்குப் பின்பு வந்தவர்களும் விளக்கவில்லை. மற்றொரு பொய்யுரை பவுத்தமும் சமணமும் இந்து மதத்தின் அங்கங்கள் என்று அவர் பேசியது. அவற்றை ஒழித்துக்கட்ட ஆதிசங்கரர் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்ததை, முதன்முதலில் நானாதிசைகளிலும் மடங்கள் அமைத்து ஆள் திரட்டியதைத் திட்டமிட்டு மறைத்தார். இன்றளவும் பவுத்தமும், சமணமும் உலகில் தனித்தனி மதங்களாகத்தான் இயங்குகின்றன எனும் நடப்பு யதார்த்தத்தைக்-கூட கணக்கில் கொள்ளவில்லை மனிதர்.
    இந்து மதம் ஜாதியை ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது எனும் விஷயம் அமெரிக்கா வரை போயிருந்தது. அந்த உண்மையை ஒப்புக்கொண்டு பேசவில்லை விவேகானந்தர். மாறாக முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தார். காணுங்கள் அதை: இந்துக்களின் மதம் இரு பகுதிகளைக் கொண்டது.

    அவை: 1. சடங்குப் பூர்வமானது. 2. ஆன்மிகப் பூர்வமானது.

    பிந்தியதைத் துறவிகள் சிறப்பாக ஆராய்கிறார்கள். அங்கே ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சார்ந்த மனிதரும், மிகத் தாழ்ந்த ஜாதியைச் சார்ந்த மனிதரும் இந்தியாவில் துறவியாகலாம்; இரண்டு ஜாதிகளும் சமமாக மாறுகின்றன. மதத்தில் ஜாதி இல்லை; ஜாதி என்பது ஒரு சமூக நிறுவனமே. (செப்.26இல் நிகழ்த்திய உரை)
    ----------- மேலும் அறிய, புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!

    ஆஸ்.எஸ்.எஸ். ஒப்பனை கலைகிறது!



    ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி நடைபெறும் பிரதமர் நரேந்திரமோடி அரசின் நடவடிக் கைகள் குறிப்பாக, கல்வித் துறையில் அதன் பிடியை நாளும் இறுக்கி, நெருக்கி வருகிறது.

    சமஸ்கிருதத்தை எப்படியும் இந்தியாவின் பொது மொழியாக்கிட, திட்டமிட்ட ஊடுருவல் களும், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவ னங்களும், ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பின் மாணவர் பிரிவான ABVP
    என்ற  அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்தும் இணைந்து பல்வேறு வட்டார மாநாடுகள் கருத்தரங்கங்களை ஏதோ கல்விப் பிரச்சினைகள், கல்வித் தரம், உயர் கல்வியைப் பரப்புவது போன்ற வெளி வேஷத்தை போட்டு உள்ளுக்குள் ஆர்.எஸ். எஸ்.சின் ஹிந்து ராஷ்டிர, பத்தாம் பசலித்தன கொள்கைகளை கல்வித் திட்டங்களாக்கி, நாட்டின் இளைஞர்களின் மூளைகளில் காவிச் சாயத்தை ஏற்படுத்த மிகவும் தந்திரமான வித்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்!


    விவேகானந்தரை முன்னிலைப்படுத்தி, அவரைப்பற்றி அறிந்து கொள்ள ஒவ்வொரு மாணவரும் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பது போன்ற சூழ்ச்சிப் பொறி வைப்பது; வேதங்களில் விமானம் செய்வது, ஓட்டுவது முதற்கொண்டு ஏராளம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது; பரத்வாஜ் மஹராஜ் என்ற வேத ரிஷி இவைகளையெல்லாம் புட்டுப்புட்டு அக்காலத்திலேயே எழுதியுள்ளார் சமஸ்கிரு தத்தில்  என்று மும்பையில் கூடிய விஞ் ஞானிகள் மாநாட்டில் - சயின்ஸ் காங்கிரசில் ஏதோ மிகப் பெரிய கண்டுபிடிப்பு போல படிப்பது; அதை ஊடகங்களில் ஊதி ஊதிப் பெருக்குவது,


    வரலாற்று ஆய்வாளர்கள் - பேராசிரியர்கள் மாநாட்டிலும், புராணக் குப்பைகளைக் கொட்டி, ஏதோ நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு களுக்கே, பிளாஸ்டிக் சர்ஜரி, (ஸ்டெம் செல்) மரபணு ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் எல்லாம் நம் முனிவர்களாலும், இதிகாச புராணங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன என்று உளறுகிறார்கள்.


    சர் அய்சக் நியூட்டன், புவி ஈர்ப்பு (Law of Gravitation)  சக்தியை கண்டுபிடிப்பதற்கு முன்பே நமது வேதங்களில் இருக்கின்றன என்பதுபோல ஏதோ பெரிய ஆய்வுக் கண்டுபிடிப்புபோல சில ஸ்லோகங்களை வைத்துப் பேசுவது, காங்கிரஸ் பார்ப்பனராக இருக்கும் சசிதரூர் போன்ற பூணூல்களும் (இவருக்குள்ள நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள பி.ஜே.பி.யுடன் இணைந்து கொள்ள இவருக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு போலும்), போன்றவர்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கூறுவதில் பொருள் உண்டு; அலட்சியப்படுத்தக் கூடாது என்று ”ஜால்ரா” அடிப்பது - தெளி வாகிறது.

    மீண்டும் இந்த நாட்டை ஹிந்து ராஜ்ய மாக்குவது என்ற பெரிய பார்ப்பன ஆரிய சாம்ராஜ்யமாகவே மாற்றிக் காட்ட அனைத்து முயற்சிகளிலும் அசராமல் ஈடுபட்டுள்ளனர்.


    ஆட்சிக்கு வந்து 7 மாதங்களே ஆன நிலையில், சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயமாகி - ஆரிய பார்ப்பனமயமாகி வருகிறது-


    பாரம்பரிய முறையில் பெரும் பகுதியாக உள்ள மலைவாழ் மக்களின் முதல்வர் உரிமைகூட, மெல்ல சத்தீஸ்கரில் மாற்றப்பட்டு விட்டது! வளர்ச்சி என்ற போர்வையில், ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ அமைப்பு, ஆட்சி அதிகார வாய்ப்புகளைப் பயன்படுத்தி தன்னை வளர்க்க மிகப் பெரிய திட்டத்தைப் போட்டு முழு மூச்சில் இறங்கி விட்டது!


    அகமதாபாத்தில் ஓர் கூட்டத்தில் அதன் தலைவர் மோகன்பகவத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை கிராமங்களில் பரப்ப வேண்டும்; முன்பு ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன? எதற்கு இவர்கள் கையில் தடியோடு வரிசை யாக செல்கின்றனர்? என்று கேட்ட மக்கள் நம்மைப் பற்றி இப்போது நன்கு அறிந்து வைத்துக் கொண்டுள்ளார்கள்.


    ஆரியக் கலாச்சாரம்தான் இந்தியாவின் அடையாளத்திற்கும் இந்தியப் பாரம்பரியத் திற்கும் அடிப்படை ஆகும்.


    (“The Aryan Culture was the basis of the Indian tradition and Indian identity”  - ‘The Hindu’ 5.1.2015 page 12)
    Any one born in India is a Hindu,

    இந்தியாவில் பிறந்த எவரும் இந்துவே! என்று பேசியுள்ளார்.

    என்னே அமுத மொழிகள்!


    ஆரிய வெறி அப்பட்டமாக வெளிச்சம் போட்டு ஆட்டமாடுகிறது! பலே பலே!

    இணையத்தில் குஜராத் வளர்ச்சி - வேலை வாய்ப்பு - இந்தியாவில் என்று புதுமுகம் மோடிக்கு ஏமாந்து வாக்களித்து விட்டு, இப்போது கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்து கொண்ட இணைய இளைஞர்களே, இனியாவது இவர்களைப் புரிந்து கொண்டு, பாடம் பெறுங்கள் - விழிப்படையுங்கள்.

       --------------- ஊசி மிளகாய் 5-1-2015 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

    4.1.15

    பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு - பெரியார்

    பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு - தந்தை பெரியார்
    பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு  - தந்தை பெரியார்
    தி.மு.கழகம் சமுதாயத்தோடு நில்லாமல் அரசியலிலும் ஈடுபட வேண்டி இருப்ப தால், தங்களது கொள்கையை மறைத்துக் கொண்டு செயல்படுகின்றது. அந்தக் காரியத்தைச் செய்ய நாங்களிருக்கிறோம். எங்களால் மட்டும் எப்படி முடிகிறது என்றால், நாங்கள் பதவிக்குப் போவ தில்லை; மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்பது கிடையாது. எனவே, மக்களின் தயவு எங்களுக்குத் தேவை இல்லை யானதால், மக்களிடையே இருக்கிற குறை பாடுகளை- மூடத்தனமான முட்டாள்தன நம்பிக்கைகளை எங்களால் எடுத்துச் சொல்ல முடிகிறது.


    தங்களது தோல்விக்கு அரசியல் வாதிகள் காரணங்களைத் தேடி எதை யாவது சொல்லித் தங்களுடைய தோல்விகளை மறைத்துக் கொள்ளப் பார்ப்பார்கள். நான் அப்படியல்லவே!


    தேர்தல் நடக்கிற அன்று இரவுவரை திமுகவை எதிர்த்தேன். அது வெற்றி பெற்றது என்று செய்தி வெளிவந்ததும் ஓர் அறிக்கை விட்டேன். அதில் நான் தோற்று விட்டேன்; பார்ப்பான் ஜெயித்து விட்டான். இதற்கு முன் இரு முறை அவனை நான் ஒழித்து இருக்கின்றேன்; எப்படி ஒழிப்பது என்பது எனக்குத் தெரியும். என்னிடம் அந்தப் பொறுப்பை விட்டு விடுங்கள் என்று குறிப்பிட்டி ருந்தேன்.

    மாணவர்களுக்குச் சில சொல்ல வேண்டும்; நம் நாட்டு அரசியல், காந்தி வந்ததும் கழுதை புரண்டகளமாகி விட்டது. வெள்ளைக்காரன் இருந்த வரை ஒரு அத்து இருந்தது. அவன் போனதும்- பார்ப்பான் கைக்கு ஆட்சி வந்ததும், அவன் கட்டுப் பாட்டிற்கு மக்கள் வர மறுத்ததால் அரசாங் கத்திற்கு எதிராகக் காலித்தனங்களையும், அயோக்கியத்தனங்களையும், வேலை நிறுத்தம், பட்டினி கிடப்பது போன்ற கீழ்த் தரமான காரியங்களையும் தூண்டிவிட்டு விட்டான்.


    இக்காரியங்களைக் காந்தி தான் ஆரம் பித்தார். தலைவன் என்கின்ற முறையில் அவர் ஆரம்பித்ததும், பத்திரிகைகள் எல்லாம் பார்ப்பான் கையிலிருந்ததால் அதற்கு விளம்பரம் கொடுத்துப் பெரிதாக்கி விட்டார்கள். இப்போது மற்ற மக்களும் அதைக் கையாள ஆரம்பித்து விட்டனர்.


    தற்போது சில மாணவர்கள் கைக்கு அந்தக் காலித்தனம் வந்துவிட்டது. நாங்கள் தோன்றும் போதும் மாணவர்கள் நிலை எப்படி இருந்தது? நம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்குப் படிப்பு வராது என்று கருதினார்கள். 1916-இல் பார்ப்பனரிரல்லாத இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் நம் மக்கள் 100க்கு 5 பேர் தான் படித்தவர்கள் பார்ப்பனர்கள் 100க்கு 100 பேரும் படித்த வர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

    இந்த நிலை 1925 வரை இருந்தது. அதன் பின் ஜஸ்டிஸ் கட்சியினைச் சேர்ந்தவர்கள் போய் ஆட்சி செய்து 100க்கு 7 பேரைப் படித்தவர்கள் ஆக்கினார்கள். அந்த ஆட்சி யின் மேல் பொய்யையும், புளுகையும் கூறி மக்களை நம்பச் செய்து அதை ஒழித்து, 1938-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் சூத்திரன் எத்தனை பேர் படித்திருக்கிறான் என்று கணக்குப் பார்த்தார்கள். 100க்கு 7 பேர் படித்திருக் கிறார்கள் என்று தெரிந்ததும் 2500 பள்ளிக் கூடங்களை மூடியது.


    நாளைக்குக் காங்கிரஸ் வந்தாலும் இந்தக் கதி தான் ஏற்படும். காமராஜர் இல்லையா என்று கேட்பீர்கள்? அவரால் ஒன்றும் முடியாது. காமராஜருக்குக் கையாக இருப்பது சுதந்திராக் கட்சி; காலாக இருப்பது ஜனசங்கம். இந்த இரண்டின்படி தான் அவர் நடக்க முடியுமே தவிர, தானாக எதையும் செய்ய முடியாது.


    ஜனசங்கம் முழுக்க முழுக்கப் பார்ப்பானுடையது. சுதந்திரா விலாவது பார்ப்பானும், ஒரு சில நம்மைக் காட்டிக் கொடுக்கிற துரோகிகளும் இருக்கிறார்கள். இது (ஜனசங்கம்) பச்சைப் பார்ப்பான் கட்சி. இவர்கள் இரண்டு பேரும் சொல்லுகிறபடி தான் காமராஜர் கேட்டு நடக்க வேண்டிய வராகி விட்டார். எனவே அவரால் இனிப் பார்ப்பனருக்கு பயன் ஏற்படுமே தவிர நமக்குப் பயன் ஏற்படும் என்று நம்புவதற்கு வழியில்லாமல் போய்விட்டது.


    1952-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சூத்திரன் எத்தனைபேர் படித் திருக்கிறான் என்று கணக்குப் பார்த்தார்கள். 100க்கு 9 பேர் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் இனி இதை வளர விட்டால் பார்ப்பனர்கள் கையில் தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு போக வேண் டிய நிலை ஏற்பட்டு விடும் என்று பயந்து, 6000 கிராமப் பள்ளிக்கூடங்களை மூடி னார்கள். மூடினதோடு விடவில்லையே! மாணவர்கள் ஒரு நேரம் தங்கள் ஜாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார். அதை எதிர்த்து நாம் தான் போராடி அவரை ஒழித்துக் காமராசரைக் கொண்டு வந்தோம். அவர் வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று நம்மிடம் கேட்டார். இராஜாஜி மூடிய பள்ளிகளை எல்லாம் திறக்க வேண்டும் என்று சொன்னதும் அதன்படி செய்ததோடு, மேலும் கிராமங்கள் தோறும் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அப்போது திரு. சுந்தர வடிவேலு டைரக்டராக இருந்தார். எங்கெங்கு அவர் பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்று சொன்னாரோ அதன்படிக் காமராசர் செய்தார். மக்களிடையே ஆதரவு பெருகியது.


    அவர் போய் இவர்கள் ஆட்சி வந்ததும், நம்மக்களின் கல்வியில் நிறைய கவனம் செலுத்துகிறார்கள். இவர்கள் ஆட்சியில் நம் மக்கள் 100க்கு 50க்கு மேல் படித்த வர்கள் ஆனதோடு, நம் மக்கள் நினைக்கவே முடியாத பதவி உத்தியோகங்களை எல்லாம் அனுபவிக்கும்படியான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமுதாயத் துறையிலும் இதுவரை வேறு எவரும் நினைக்காத அளவிற்குக் காரியங்கள் நடை பெற்று வருகின்றன.


    நம் இளைஞர்கள் எல்லாம் இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். மாண வர்கள் தாங்கள் செய்யும் ரகளையைப் பற்றி அதன்பின் விளைவைப் பற்றி சிந்திப்பது கிடையாது. அதைத் தான் எதிரிகள் பயன் படுத்திக் கொள்வார்கள். தற்போது காம ராஜர் இந்த ஆட்சியை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்கின்ற எண் ணத்தில் மாணவர்களைப் பிடித்து ரகளை செய்யச் சொல்லி, அதன் மூலம் இந்த ஆட் சியைக் கவிழ்த்து விடலாம் என்று பார்க்கிறார். அதற்கு நீங்கள் பலியாகக் கூடாது.

    என்னைப் பொறுத்த வரை எவன் ஆட்சிக்கு வந்தாலும் அவனை நான் சரி செய்து கொள்வேன்; என் தயவு எவனுக்கும் வேண்டும். நான் எவனையும், எவன் ஓட்டையும் எதிர் பார்க்க வில்லையே!


    இன்றைக்கு முன்னேற்றக் கழகத்திற்குள்ள கேடு எதிர்க் கட்சிகளால் அல்ல; அவர்களுக்குள் இருக்கிற  உட்பூசல் களாலேயே ஆகும். உட்பூசல்  வந்தால் எந்தக் கட்சியும் வாழ முடியாது; உட்பூசல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


    மாணவர்களை நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, இந்த ஆட்சிக்கு எந்த கேடும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது ரொம்ப அபாயகரமான காலம். நாம் சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த ஆட்சி மாறினால் நம் வாழ்வு - பொதுமக்கள் வாழ்வு ஒழிந்தது. இந்த நிலைமையை அடியோடு தலைகீழாக மாற்றி விடுவார்கள். மனுதர்மப்படி தான் ஆட்சி நடக்கும்.


    இன்று நம் இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும் பதவிகளில்- உத்தியோகங்களில் இருக்கிறார்கள்.


    உத்தியோகங்களால் நாம் வாழ்ந்து விட்டோம் என்று சொல்வதற்கு இல்லா விட்டாலும் இதனால் நம் இழிவு ஒழிகிறதே!

    இது நம் நாடு- நம் முன்னோர்கள் வாழ்ந்த நாடு. இந்த பார்ப்பான் எல்லாம் பொறுக்கித் தின்ன, பிச்சை எடுக்க வந்த வன். ஆடு, மாடுகளை மேய்க்க வந்தவன். அவன் இன்று நம் தலையில் பெரிய கல்லை வைத்து இருக்கின்றான். அதைத் தள்ளி விட்டு நாம் முன்னேற வேண்டும். நாம் எதற்காகப் படிக்கிறோம்? நாட்டிற்குத் தொண்டு செய்ய வேண்டும்- உத்தியோகங் களுக்குச் செல்ல வேண்டும் என்பதற் காகவே ஆகும். அதை ஒவ்வொரு மாண வரும் எண்ணிப் பார்த்து இன்றைய ஆட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.


    --------------------------------22-11-1970 அன்று காரைக்குடியில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு -"விடுதலை", 6.1.1971.

    3.1.15

    பக்தியால் ஒழுக்கக்கேடு குறைந்ததா?சோ சாமர்த்தியம் செல்லுபடியாகாது!


    பா.ஜ.க. ஆட்சிக்குப் பார்ப்பனர் 'சோ' பகரும் பாராட்டு!

    மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (ழிஞிகி) ஆட்சி என்னும் பா.ஜ.க. ஆட்சியின் நடைமுறைகள், பா.ஜ.க., சங்பரிவார்க் கூட்டத்தின் பேச்சுகள் - ஏச்சுகள் - நடைமுறைகள் பற்றி துக்ளக் இதழில் (31.12.2014) திருவாளர் சோ ராமசாமி தந்துள்ள நற்சான்றுப்(?) பத்திரங்கள் இதோ:

    கே: பா.ஜ.க.வில் நிலவும் கருத்துச் சுதந்திரம், அக்கட்சிக்குப் பாதகமாக அமையுமா, சாதகமாக அமையுமா? பா. நாராயணன், சென்னை-92


    ப: பா.ஜ.க.வில் இப்போது நிலவுவது கருத்துச் சுதந்திரம் அல்ல. கருத்து வெறி. இது அக்கட்சிக்கு நல்லதல்ல.


    கே: அயோத்தியில் சீக்கிரமாக ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் - என்று உத்தரப்பிரதேச கவர்னர் ராம் நாயக் பேசியுள்ளது குறித்து? கே.ஆர். சாரங்கபாணி, வடவள்ளி


    ப: ஒரு கவர்னர், இப்படி இந்தப் பிரச்சினையில் பேசுவது சரியல்ல. நாளை வேறொரு கவர்னர், இடிக்கப்பட்ட பாப்ரி மசூதி திரும்பவும் கட்டப்பட வேண்டும் என்று கூறினால், அது எவ்வளவு தவறாக இருக்குமோ, அவ்வளவு தவறு இதுவும்.


    கே: இஸ்லாமியர்கள் மதம் மாறுவதை அரசியலாக்கக் கூடாது; அவர்களின் முன்னோர் இஸ்லாமியர்களாக மாற்றப் பட்டவர்கள்தான் - என்கிறாரே வி.ஹெச்.பி.தலைவர்? ச. புகழேந்தி, மதுரை-14


    ப: என்றோ ஹிந்துவாக இருந்து, பிறகு மதம் மாறியவர்களின் இன்றைய வாரிசுகளை மீண்டும் ஹிந்துக்களாக மாற்றுவதில் தவறில்லை என்றால், அதே வாதத்தின்படி இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தால், எந்த மத நம்பிக்கையும் இல்லாமல் வாழ்ந்தவர்களுடைய வாரிசுகள் தானே, இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறார்கள்? ஆகையால், எல்லோரும் அவரவருடைய மத நம்பிக் கைகளை விட்டு விடுவதுதான் நல்லதா?


    கே: ஸ்ரீநகரில் தேர்தல் அதிகாரியைக் கன்னத்தில் அறைந்திருக்கிறாரே பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர்? . புகேழந்தி, மதுரை -14


    ப: கண்டனத்திற்குரிய நடத்தை. இப்படிச் செய்திருப்பவர் ஒரு பெண் வேட்பாளர் என்பது நிகழ்ச்சியை மேலும் அதிர்ச்சிக் குரியதாக்குகிறது.


    கே: தாஜ்மஹால் ஒரு சிவன் கோவில் மீது கட்டப் பட்டுள்ளது என்றும், அதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளதே? எஸ். புருஷோத்தம் ராஜன், பரமக்குடி

    ப: அந்தச் சிவனுக்கே இது பொறுக்காது.

                                               -----------------------------------(துக்ளக் 31.12.2014 பக்.13)

    மோடியை ஆட்சி அதிகார நாற்காலி யில் அமர வைக்க வேண்டும் என்று சோ சும்மா விழுந்து விழுந்து எழுதினார்;  தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது தன் சரக்கை அவிழ்த்துக் கொட்டினார்.


    ஆனால், அவராலேயே இந்த ஏழு மாத ஆட்சிபற்றிப்  பெருமைப்பட முடிய வில்லை; மாறாக தன் மனப்புழுக்கத்தைக் கொட்டியுள்ளார்.


    இப்படிக் கூறுவதால் சங்பரிவார் நட வடிக்கைகளை சோ ஏற்றுக் கொள்ள வில்லை என்று பொருளல்ல;  அவர்களின் நடவடிக்கைகள் வெகு மக்களின் எதிர்ப்பை மோடி அரசுக்குச் சம்பாதித்துக் கொடுக்குமே என்ற கவலைதான்.
    பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தியவர்தானே இந்த சோ அதில் முக்கிய குற்றவாளியான எல்.கே. அத்வானிக்கு வக்காலத்துப் போட்டு எழுதியவர்தானே இந்த அக்கிரகாரவாசி!


    கேள்வி: பாபர் மசூதி இடிப்பு அத்வானி யின் தூண்டுதலால் நடந்தது என்று சிறப்பு சி.பி.அய் கோர்ட்டில் பூசாரி உட்பட 5 கரசேவகர்கள் வாக்குமூலம் கொடுத்துள் ளார்களே?


    பதில்: அவர்களுடைய வாக்குமூலமே இறுதியான ஆதாரம் ஆகி விடாது; நிகழ்ச்சி நடத்து பல வருடங்கள்; வழக்கு தொடங்கி சில வருடங்கள்; கமிஷன் விசாரணை தொடங்கி சில வருடங்கள்; கமிஷன் விசாரணை தொடங்கி கணிசமான காலம் - எல்லாம் கழிந்த பிறகு, இப்பொழுது திடீ ரென்று இப்படிச் சொல்வதால் - இவர்கள் பேச்சு சந்தேகத்திற்கு இடமளிக்கிறது  இவர்கள் கூறுவதை உறுதி செய்ய (சிஷீக்ஷீக்ஷீஷீதீஷீக்ஷீணீமீ) போதுமான சாட்சியங்கள் இருந் தால் மட்டுமே, அவர்கள் சொல்வது நீதிமன் றத்தில் எடுபடும் (துக்ளக் 25.6.2003 பக்.19).


    இந்தப் பதிலில் தான் எத்தகைய தளுக்கு - குலுக்கு! - ஆட்சிக்கு வருவதற்கு முன் இதுபோன்ற காரியங்களில் வன்முறையா ளர்களுக்கு வக்காலத்து; ஆட்சிக்கு வந்த பிறகு இது போன்ற மதவாத சரக்குகளை சங்பரிவார்கள் அவிழ்த்துக் கொட்டினால் அது மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்துமே என்பதால் இன்னொரு நாக்கால் பேசும் தந்திரம். இதற்குப் பெயர் தான் பார்ப்பனீயம் என்பது.

    பேசு நா இரண்டுடையாய்ப் போற்றி! என்று அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை நூலில் எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது. புரிந்து கொள்வீர் இந்(து)தப் பார்ப்பன நஞ்சுகளை!

    ----------------------------------------------------------------------------------------------------------------

    பக்தியால் ஒழுக்கக்கேடு குறைந்ததா?
    கே: கடவுள் பக்தியால் அச்சமும் வரவில்லை; ஒழுக்கமும் வளரவில்லை என்றால், அது என்ன பக்தி? அது பெருகி என்ன லாபம்? என்ற கி. வீரமணியின் கருத்து பற்றி?


    ப: ஊழல், கொலை - கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல குற்றங்களைத் தடுக்க சட்டங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் ஒழிந்து விடவில்லை. குறையவும் இல்லை. இந்தச் சட்டங்கள் இருந்து என்ன பிரயோஜனம்? இந்தச் சட்டமே தேவையில்லை என்று முடிவு செய்துவிட வேண்டியதுதானா? சட்டங்கள் இருப்பதால் தான், இந்த அளவாவது கட்டுப்பாடு இருக்கிறது; இப்போதே இப்படி இருக்கிறது என்றால், சட்டங்கள் இல்லை என்றால் என்ன நடக்குமோ - என்று தானே எல்லோரும் நினைப்பார்கள்? அம்மாதிரியே பக்தி உணர்வு இருப்பதால்தான், சமுதாயத்தில் இந்த அளவுக்காவது கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பக்தி உணர்வு அறவே அற்றுப் போய் விட்டால் என்ன நேரிடுமோ...?                                          (துக்ளக் 31-12-2014 பக்.13)


    திருவாளர் சோ ராமசாமி தான் இப்படி பதில் சொல்லி இருக்கிறார்.


    முதலில் ஒன்றை அவர் ஒப்புக் கொண்டு இருக்கிறார். கடவுள் சக்தியையும் மனிதர்களின் செயல்பாடுகளையும் ஒரே அளவில் - சம மட்டத்தில் வைத்து எழுதுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். இதன் மூலம் மனிதனுக்கு மேற்பட்டது கடவுள் என்ற வாதம் அடிபட்டுக் கீழே விழ்ந்து விடவில்லையா? மனிதன்தான் சட்டம் செய்கிறான்; கடவுள், பக்தி இவற்றையும் மனிதன்தான் உண்டு பண்ணுகிறான் என்பதை இதன் மூலம் சோ ஒப்புக் கொள்வது ஒரு வகையில் பாராட்டத்தக்கதே! (இப்படிதான் அவரைப் பாராட்ட முடியும் - வேறு சந்தர்ப்பம் ஏது?)


    சரி, இரண்டாவது விவாதத்துக்கு வருவோம் - பக்தி உணர்வு இருப்பதால் தான் இந்த அளவாவது கட்டுப்பாடு இருக்கிறது; இப்பொழுதே இப்படி இருக்கிறது என்றால், சட்டங்கள் இல்லை என்றால் என்ன நடக்குமோ என்று தானே எல்லோரும் நினைப் பார்கள்? அம்மாதிரியே பக்தி உணர்வு இருப்பதால் தான் சமுதாயத் தில் இந்த அளவுக்காவது கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பக்தி உணர்வு  அறவே அற்றுப் போய் விட்டால் என்ன நேரிடுமோ..?                                          (துக்ளக் 31-12-2014 பக்.13)


    பக்தி இருந்தால் ஒழுக்கம் இருக்கும்; கட்டுப்பாடுகள் இருக்கும்; பக்தி உணர்வு அற்றுப் போய் விட்டால் என்ன நேரிடுமோ? என்று பசப்புகிறாரே திருவாளர் சோ ராமசாமி இதே சோவின் துக்ளக் ஏட்டில் பக்தியின் யோக்கியதை எப்படி என்பதை ஒப்புக் கொண்டுள்ளாரே!


    வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலைபேசி விற்கலாமா?


    புரோகிதர் பதில்: எல்லாம் காலக்கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே. பிராமண தர்மமும் இல்லே.


    வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா, இப்போது?


    புரோகிதர் விடை: பக்தியாவது, ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி, அம்பாளை நெனச்சிக்கிறா!                   
                                   ------------------------- (துக்ளக் 1-6-81 இதழ் பக்.32)


    இப்படி எழுதிய சோதான் இப்பொழுது சந்தர்ப்பவாத பல்டி அடிக்கிறார். மேலும் ஒரு செய்தி உண்டு இவாளின் லோகக் குருவான சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பக்திப் பழம்தானே! அவர் யோக்கியதை - ஒழுக்க சீலம் எத்தகையது என்பதுபற்றி ஊரே சிரிக்கவில்லையா? கொலை குற்றப் பின்னணியில் வேலூர் சிறையில் கம்பி எண்ணவில்லையா? பார்ப்பனப் பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் என்ற பெண்மணி  - ஜெயேந்திர சரஸ்வதி என் கையைப் பிடித்து இழுத்து பிடித்து கேவலமாக நடந்து கொண்டார் என்று கண்ணீரும் கம்பலையுமாகக் கதறவில்லையா?


    தொலைக்காட்சிகள்கூட அந்த அவல நிலையை ஒளிபரப்பியதே! பக்தி காரணமாக ஒழுக்கக் கேடாக நடந்து கொள்ளப் பயங்கொள்வார்கள் என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!

    சோ சாமர்த்தியமெல்லாம் செல்லுபடியாகாது.
     -------------------------------------------------------------------------------------------------------------------------------
                                 --------------- மின்சாரம் அவர்கள் 03-01-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
    Read more: http://viduthalai.in/page-1/93838.html#ixzz3NlH0RWvp

    இதுதான் வால்மீகி இராமாயணம் - 49

    இதுதான் வால்மீகி இராமாயணம்

    இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.



    அயோத்தியா காண்டம்

    பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி


    ஆதலின் வஞ்சகனாகிய வசிட்டன்  உண்மையைக் கூறாது பரதனை அழைத்தால் அவன் மட்டும் அயோத்திக்கு வருவான். அப்போது வேண்டுவன செய்து கொள்ளலாமென நினைத்தான். அவன் சூழ்ச்சியும் பலித்தது. பின் குடிகள் சென்று வேண்டியும் பரதன் முடிபெற மறுத்ததையும், அதற்கு முன்னரும் அவன் கோசலையிடம் வஞ்சினமுரைத்து எவ்வாற்றாளும் இராமனையழைத்து வரத்துணிந்ததையும் அறிந்திருந்துங்கூட, வசிட்டன் மறு படியும் சபை கூட்டிப்பரதனையழைத்து முடிசூட வேண்டு கிறான். இது தன்மேல் குற்றமில்லாமல் தப்பித்துக் கொள்வதற்குச் செய்த சூழ்ச்சியேயாகும். பரதன் வந்தபோது அவனுக்கு உண்மையை உரைத்து முடிசூட்ட ஏன் பார்த்திருந்தா யெனக் கேகயன் வினவினால், அப்போது வசிட்டன் அகப்பட்டுக் கொள்வான். அதனால் வசிட்ட னுடைய தீயசிந்தைகளையும் சூழ்ச்சிகளையும் உலகமறியும் போது, யாவரும் அவனை இகழ்வார்கள். இவ்வுண்மையை அறியாமலிருந்தும் பரதன் வசிட்டனை அப்போது நிந்திக் கிறான். இதனால் தீமை செய்கிறவர்கள் எவ்வாறாவது நிந்தனையடைவர் என்பது விளங்குகின்றது. இச்சூழ்ச்சி யால் வசிட்டன் மற்றொரு நன்மையுமடைகிறான். அதாவது பரதன் சபைமுன் வாக்குரைக்கச் செய்து தன்னுடைய தீய தோழனாகிய தசரதனுடைய பேராசைப்படி இராமனை யழைத்து வந்து முடி சூட்டிவிடலாம் என முனிவன் நினைத்தான். இதிலும் அவன் வெற்றி பெறுகிறான். இதனால் கேகய மன்னனுக்குத் தான் சபை கூட்டி முடிசூட்டப் போனதாகவும், பரதனே மறுத்துவிட்டன னென்றும் சமாதானம் கூறிக் கொள்ளலாம். தன்னுடைய சூழ்ச்சிகளும், தசரதன் சூழ்ச்சிகளும் மறையக்கூடும். இராமனும் அரசு பெறுவான். வசிட்டனைப் போன்ற தீயோரும உளரோ? வேறு கதைகளிலும் இதைப் போலக் கேட்டறிய முடியாதே!


    பரதனிடம் கைகேயி தன் கணவன் இறக்கும்போது கூறியவற்றைத் தன்னிடம் கூறியதுபோலக் கூறுகிறாள். தசரதன் இறக்கும்போது கோசலையின் அரண்மனை யிலேயே இருந்தான். மறுநாளே அவன் இறந்தமையறிந்து அங்கே கைகேயி போகிறாள். இதனால் இவள் இச்சொற் களைப் பரதனுக்குத் திடீரென்று ஏக்கம் வராமலிருக்கும்படி உண்மையை மறைத்துக் கூறியவளாவள். இச்சொற்களை இவள் எவ்வாறு அறிந்தனளோ? இராமன் காட்டுக்குப் போய்விட்டானென்பதைக் கேட்ட பரதன், இராமன் ஏதாவது பெரிய குற்றஞ்செய்தே நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டிருக்க வேண்டுமென அய்யுற்று வினாவுகிறான். இவ்விடத்தில் மொழி பெயர்ப் பாளர் சீனிவாசய்யங்கார், இராமனுடைய கலியாண குணங் களைப் பூரணமாகவறிந்த பரதன் அப்படிச் சந்தேகப்படு வதே தகாது என்று குறித்திருக்கிறார். இது தகுமோ தகாதோ, பரதன் இராமனை விபசாரம் முதலிய கொடிய குற்றங்களைச் செய்திருப்பானோ என்று சந்தேகித்தது உண்மை. பரதன் இராமனுடைய தீயநடைகளை உணர்ந்திருந்தமையினாற் றான் அவ்வாறு சந்தேகித்தனன் போலும்! ஆனால், அவன் ஏன் இராமனை அழைத்து வந்து முடிசூட்டத் துணிகிறான்? என்றால், பரதன் வீரத்தன்மையுடையோனாயிராமல் பயங்காளியாயிருந்தான். மேலும் அவனுக்குத் தன்தந்தை செய்த வாக்குறுதியால் நாடு தனக்குரியவையானது என்ற உண்மையும், பிறப்பால் உரிமையுள்ள தன்னை வஞ்சித்துத் தன் தந்தை இராமனுக்கு நாடளிக்க முயன்ற உண்மையும் தெரியாது. அவன் உண்மையாகவே தன்னுடைய தாய் வம்புக்காரி, அவள் இராமனை வஞ்சித்துத் துரத்திவிட்டாள், அதனால் கொடிய பாவம் தனக்கு வந்து சேரும் என்று நம்பி நடுங்கினான். இவ்வாறு அவனுடைய அச்சமும் அவசரமும் அவனுக்கு மனநடுக்கத்தைத் தந்தன. மேலும் கைகேயியுங் கூட பரதனே பிறப்பால் அரசுரிமையுடையவன் என்பதை உணராளே. உணர்ந்திருப்பின் கட்டாயம் அதைக் கூறிப் பரதனைத் தன் வசப்படுத்தியிருப்பாள். இவ்விபரீதங் களினாலேயே பரதன் மிகவும் பழிக்கு அஞ்சியவனாய்த்தன் தாயைத் தாயென்றும் பாராமல் கயிறிட்டு உயிரை விடு எனப்பலவாறு தகாத முறையில் நிந்திக்கிறான். தன்னைப் பெற்ற தாயை நிந்தித்த இவன் மக்களுக்கு ஒரு வழிக்காட்டியே! இவனைப் பார்த்து உலகத்தார் நடப்பரேல், உலகம் விரைவிற் கெட்டழிவது திண்ணம். தன் தாய் தவறி நடந்தால் அவளைக் கண்டிக்கும் முறை வேறு.

    பரதனைப் பார்க்க வந்த கோசலை அவனைக் கொடுமையாக நிந்திக்கிறாள். பரதன் மனம் துடிக்கிறான். அப்போது அவன் கூறியதில் தேவதைகளுக்கும் விருந்தி னருக்கும் தென்புலத்தாருக்கும் ஊட்டாமல் எவன் உண் கிறானோ, அவன் நரகமடைகிறான் என்று கூறப்படுகிறது. இதுவும் நாம் முன் கட்டுரைகளில் ஆரியரைப் பற்றிப் புலாலுண்போரென்று கூறிய உண்மையை வலியுறுத்தும். விருந்தினர் வந்தபோது புலாலுணவும், தெய்வம் தொழும் பொழுது உயிர்க்கொலையும் அவர்களுக்கு இன்றியமை யாதது. நாம் முன் கட்டுரைகளில் சீதை கங்கைக்கும் யமுனைக்கும் நேர்ந்து கொண்டபோது, பல உயிர்ப்பிராணி களை வதைத்துத் திருப்தி செய்கிறேன் என்ற வரலாறே இதற்கு இவர்களுடைய மனுநீதி சாஸ்திரம் மேற்கோளா யிருக்கிறது. மேற்கோளாகச் சிலவற்றை இங்கே அந்நாளி லிருந்து குறிப்போம்.

    பிதிர்க்களுக்குத் திதி கொடுப்பதைப்பற்றி மனுஸ்மிருதி மூன்றாவது அத்தியாயம் விளங்கக் கூறுகிறது. அதில் சுலோகம் 268 இல் பாடீனசம் முதலிய மச்ச மாமிசத்தால் சிரார்த்தம் செய்தால் பிதிர்க்கள் இரண்டு மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள். அரிணமென்கிற மான் மாமிசத்தாற் செய்தால் மூன்று மாதம் வரையிலும், செம்மறியாட்டு மாமிசத்தாற் செய்தால் நான்கு மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள். சுலோகம் 269-இல் வெள்ளாட்டின் மாமிசத்தாற் செய்தால் ஆறுமாதம் வரையிலும், புள்ளி மான் மாமிசத்தாற் செய்தால் ஏழு மாதம் வரையிலும், கருப்புமான் மாமிசத்தாற் செய்தால் எட்டு மாதம் வரையிலும் கலைமான்  மாமிசத்தாற் செய்தால் ஒன்பது மாதம் வரையிலும் பறவைகளின் மாமிசத்தாற் செய்தால் அய்ந்து மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள். சுலோகம் 270 இல் முள்ளம் பன்றி, காட்டெருமைக்கடா இவற்றின் மாமிசத்தாற் செய்தால் பத்து மாதம் வரையிலும், முயல், ஆமை இவற்றின் மாமிசத்தாற் செய்தால் பதினோரு மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள். சுலோகம் 271 இல் பசுவின் பால், தயிர், நெய் இவற்றால் சிரார்த்தம் செய்தால் ஓராண்டு வரையிலும், தண்ணீர் குடிக்கும்போது இரண்டு காதும் தண்ணீரிற்படக் குடிக்கின்ற க்ஷீண இந்திரியத்தை யுடையதாகிய வார்த்தீனச மென்னும் கிழ வெள்ளாட்டுக் கடாவின் மாமிசத்தாற் செய்தால் பன்னிரண்டு ஆண்டுகள் வரையிலும் திருப்தியடைகிறார்கள்.

                              ---------------------- தொடரும்- “விடுதலை”30-12-2014
    Read more: http://viduthalai.in/page-3/93615.html#ixzz3NOQVjFLd

     **********************************************************************************
    இதுதான் வால்மீகி இராமாயணம்
    இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.


    அயோத்தியா காண்டம்

    பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

    சுலோகம் 212 இல் அந்தந்தக் காலத்திலுண்டான கரியமுது, முள்ளுள்ள வாளை மீன், கட்கமிருகம், சிவந்த ஆடு இவற்றின் மாமிசங்களால் செய்தால் அளவற்றநாள் வரையில் திருப்தியடைகிறார்கள். சுலோகம் 123 இல் மாதந்தோறும் செய்யத்தக்க அமாவாசிய சிரார்த்தத்தைப் புதிதாயும் நாற்றமில்லாமலுமிருக்கிற மாமிச முதலிய வற்றாலே செய்யத்தக்கது. 5-ஆம் அத்தியாயம் சுலோகம் 16 இல் ஆயிரம் பல்லுள்ள யுடீனசமென்னும் மீனும், சிவப்பு மீனும் எக்கியத்திலும் சிரார்த்தத்திலும் விதிக்கப்பட்டிருக் கிறது. கும்பலோடு சஞ்சரிக்கின்ற மீனும், சிங்கமுக மீனும், முள் மீனும் மற்ற காலங்களில் உண்ணலாமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சுலோகம் 18 இல் முள்ளம்பன்றி, சல்லியமிருகம், உடும்பு, காண்டாமிருகம், முயல் இவை அய்ந்து நகங்களுள்ளவையாயிருந்த போதிலும் உண்ணலாம். ஒரு பக்கம் பல்லுள்ள மிருகங்களில் ஒட்டகம் நீங்கலாக மற்றவற்றை உண்ணலாம். சுலோகம் 28-இல் பிரமன் இவ்வுலக முழுவதையும் சீவனுக்கு ஆகாரமாக உண்டு பண்ணினார். ஆகையால் நெல் முதலான தாவரமும், மிருக முதலான சங்கமமும் சீவனுக்கு ஆகாரமாகவே இருக்கின்றன. சுலோகம் 30-இல் ஆதலால் பிராமணன் புசிக்கத் தகுந்த பிராணிகளைத் தினந்தோறும் புசித்த போதிலும் பாவத்தையடைய மாட்டான். புசிக்கத் தக்கவர்களும், கொல்லத் தகுந்தவையும் பிரமனாலேயே படைக்கப்பட்டிருக்கின்றனவல்லவா?


    மேலே கண்டவற்றைச் சிந்தித்தால் ஆரியர் எவ்வளவு தூரம் இழிவான அறிவுடையவர்களாயிருந்தார்களென் பதை உணரலாம். மனிதன் தின்பதற்காகவே மிருகங் களையும் பறவைகளையும் பிரமன் படைத்தானென்று அவர்களுடைய சட்ட நூலாகிய மனுஸ்மிருதியே கூறுகிறது! என்ன அநியாயம்! இவ்வளவு கேவலமான அறிவுடைய மக்களும் இருந்திருப்பார்களா? மிருகங்கள் தின்பதற்காகவே மனிதரைப் பிரமன் படைத்தான் என்று அம்மிருகங்கள் விதித்துக் கொண்டு மனிதர்களைக் கொல்லத் துணிந்தால் இம்மனு முதலிய அறிவற்ற மிருகங்கள் யாது கூறுமோ? இம்மனுவைப் பகுத்தறிவுள்ள மனிதனென்பதா, அறிவற்ற மிருகமென்பதா? இவன் பகுத்தறிவற்ற மிருகமென்பதை நன்கு நிரூபித்துவிட்ட பின்னரும் இவனை மனிதனென்று எவ்வாறு கொள்வது?


     இச்சுயநல மிருகத்தை ஒருவகுப்பார் தமது நீதி நூலாசிரியன் எனப்பாராட்டுகின்றனரே? பரிதாபம்! இதனால் இவ்வாரிய மக்கள் புலாலுண்ணுந்தன்மை மிக விவரமாகத் தெளிவாகின்றது. இதற்குச் சான்றாக இக்காலத்திலும், சென்னைமாபுரிக்கு வடக்கேயுள்ள பார்ப்பன மக்களனை வரும் புலாலுண்பவராக இருத்தலே அமையும், வடநாட்டுப் பார்ப்பனருள் புலாலுண்ணாதோர் கிடைப்பது அருமை யிலும் அருமை.
    தென்னாட்டுப் பார்ப்பனரோ தமிழ் மக்களிடைக் காணப்படும் மிகச்சிறந்ததான கொல்லாமையைக் கற்றுக் கொண்டனர். அதனால் புலாலுணவையும் மறுத்தனர். ஏனெனில், அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளாதிருப்பின் அவர்களைக் கேடுகெட்ட மிருகங்களாகவே தமிழ் மக்கள் மதித்திருப்பர். ஆனால் தென்னாட்டுப் பார்ப்பனரோ அடிக்கடி பல வேள்விகள் புரிந்து எண்ணற்ற ஆடுகளைக் காயடித்துக் கொன்று நெய்யிலிட்டுப் பொரித்துத் தின்கின்றனர். இதை அவர்கள் தேவதைகளுக்குப் பிரியமான செயலென்று கூறித்தமிழ் மக்களை ஏமாற்றி வந்ததோடு அமையாது தமிழ் மக்களிற் சிலரையும் தம் வசப்படுத்தி, சிறு தெய்வ வழிபாடுகளைப் புகுத்தி, கடவுள் மிருகங்களை மனிதர்கள் தின்பதற்காகவே படைத்தார் என்ற தீய கொள்கைகளையும் பரப்பிப் பலரைப் புலாலுணவு உண் ணுமாறும் செய்து விட்டனர். ஆரியருக்கும் தமிழருக்கும் ஏற்பட்ட பழக்கத்தால் ஆரியர் புலாலுணவைக் குறைப் பதையும், தமிழரிற் சிலர் புலாலுண்பதையும் கற்றுக் கொண்டனர். மேலும் தேவதைகளுக்குப் பூசை செய்யும்போது கட்டாயம் ஆடு - மாடுகளைக் கொன்று தின்னவேண்டும், இல்லையானால் பாவம் வந்து சேரும் என்ற தப்பான தீய கொள்கையையும் தமிழ் மக்களிற் சிலரிடம் புகுத்தினர்.



    இது எதனால் விளங்குகிற தென்றால், மேலே பரதன் இராமனுக்குத் தீமை நினைத்திருந்தால் ஆட்டு மாமிசத்தைத் தேவதைகளுக்கு ஊட்டாமல் உண்பவன் அடையும் பாவத்தில் போடுகிறேன் எனச் சூளுரைப்பதால் இது தெளிவாகிறது.  ஆனால் தற்போது பலர் இதன் உண்மையையுணரத் தொடங்கியுளர். ஆனால், சிறு தெய்வ வழிபாடுகள் ஒழிவதோடு பலியிடுவதும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது கண்ட பார்ப்பனர் பாகமென்று பெயர் வைத்து அடிக்கடிப் பல ஆடுகளை வதைத்துக் கொல்லுவதில் மிகுதியாக முனைந்துளர். பரிதாபம்! இத்தகைய ஆரியச் சூழ்ச்சித் தீமைகள் ஒழிந்து கொல்லா விரதம் இக்குவலய மெல்லாம் ஓங்குநாள் எந்நாளோ என்று அறிஞரனைவரும் வேண்டும் முயற்சிகளைச் செய்து கொல்லாவிரதத்தைப் பரப்ப வேண்டும்.


    தமிழ் மக்கள் மறந்துமத பிறன்கேடு சூழா மாண்பினர். இன்னா செய்தாரைத் தண்டிக்க அவர் நாண நன்னயஞ் செய்யும் நடையினர். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வதுதான் சாலுமெனக் கொண்டு யாவருக்கும் நலமே புரிவர். ஆதலின் தமிழ் மக்களனைவரும் நமது முன் னோரியல்புணர்ந்து நல்வழிப்படுமாறு வேண்டுகிறோம்.


    ---------------- தொடரும் --”விடுதலை” 02-01-2015