இந்தியாவையே குலுக்கிய இரு முக்கிய நிகழ்வுகள்
1992 டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு
நாளன்று சங்பரி வார்க் கும்பல் - பிஜேபி தலைவர் எல்.கே. அத்வானி தலைமையில்
சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை - இடித்துச் சுக்கு
நூறாக்கிய கொடுமை;
இரண்டாவது 2002இல் மோடியின் தலைமையிலான
குஜராத் பிஜேபி ஆட்சி சிறுபான்மை மக் களான முஸ்லீம்கள் இரண்டாயிரத்துக்கும்
மேற்பட்டவர் களை (குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட) அரசு
பயங்கரவாதமாகக் கொன்று குவித்த கொடுமை!
முதல் குற்றத்தைச் செய்த அத்வானி,
வாஜ்பேயி உள்ளிட்ட 68 பேர் தண்டிக்கப்படாமல் (லிபரான் ஆணை யத்தின்
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி) படாடோ பமாக பதவிச் சுகங்களையும் அனுபவித்த
நிலையில் பல்லக்குச் சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவது, ஈராயிரம் பேர்களுக்கு மேல் படு
கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த நபர், இந்தியாவின் பிரதமருக்கான
வேட்பாளராகப் பவனி வருகிறார்.
இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!
இதுவரை இந்தக் கொலைக் குற்றங்களுக்குப்
பொறுப்பு ஏற்காத, அதற்காக வருத்தம் கூடத் தெரிவிக் காத நீரோ மன்னன்
(உச்சநீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தை இது) கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப்
பிறகு பசப்பு வார்த்தைகளால் அந்தச் சம்பவம் வார்த்தை களால் விவரிக்க
முடியாத வேதனையைத் தமக்கு ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
இப்பொழுதுகூட அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை; மன்னிப்பும் கோரவில்லை.
என்ன கூறுகிறார்? முதன் முதலாக எனது துயரத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறுகிறார்.
அவரின் ஒப்புதல் வாக்கு மூலப்படி
பார்த்தாலும்கூட ஒரு கொடிய நிகழ்வுக்கு ஒரு மனிதன்12 ஆண்டு களுக்குப் பிறகு
முதன் முதலாக துயரத்தை வெளிப் படுத்துகிறார் என்றால் இது இயல்பானதுதானா?
நம்பத் தகுந்தது தானா?
12 வருடம் கழித்தா ஒரு மனிதனுக்கு
வருத்தம் பீறிட்டுக் கிளம்பும்? பல ஊடகங்கள் மிகவும் வெளிப் படையாக
கேட்டும்கூட, அந்த நேரத்தில் எல்லாம் விடாப் படியாக நின்றவர் - அத்தகு
சந்தர்ப்பத்தில்கூட வருத்தம் தெரிவிக்க மனம் இல்லாதவர், இப்பொழுது துயரம்,
வருத்தம் என்று கூறுவதற்கு என்ன காரணம்?
இந்தியாவில் டவுசர் போடாத கோலி விளையாடும்
சின்னஞ்சிறு பொடியன்கூட படக்கென்று சொல்லி விடுவான்; தேர்தலுக்காகப்
பசப்பும் ஏமாற்றும் வார்த்தையென்று; வெகு தூரம் கூடப் போக வேண்டாம். 5
மாதங்களுக்கு முன்புகூட இவர் என்ன சொன்னார்? குஜராத் காந்தி நகரில் அதிகார
பூர்வ இல்லத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு குஜராத் முதல்
அமைச்சர் நரேந்திரமோடி பேட்டி அளித்தார். அப்போது குஜராத் கலவரம் தொடர்பாக
பலரும் தங்கள்மீது குற்றம் சாட்டியபோது விரக்தி அடைந்தீர்களா? என்று
செய்தியாளர் கேட்டதற்கு மோடி அளித்த பதில் வருமாறு:
நான் ஏதாவது செய்திருந்தால்தான் நான்
குற்றம் செய்ததாக நினைத்திருப்பேன். நாம் பிடிபட்டு விட்டோம். நாம் திருடி
விட்டதால் சிக்கிக் கொண்டு விட்டோம் என்பதுபோல் நினைக்கும்போதுதான்
எரிச்சலும், விரக்தியும் ஏற்படும். ஆனால் எனது விஷயம் அப்படிப்பட்டதல்ல;
நடந்த நடவடிக்கை களுக்காக (குஜராத் கலவரம்) வருத்தப்படு கிறீர்களா? என்று
கேட்கிறீர்கள். இந்த விவகா ரத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் அமைத்த
சிறப்புப் புலனாய்வுக் குழு எனக்கு விரிவான நற்சான்றிதழை அளித்துள்ளது.
எனினும் ஒரு காரை நாமே ஓட்டிச் சென்றாலும்
சரி, மற்றொருவர் ஓட்டும்போது பின் சீட்டில் அமர்ந் திருந்தாலும் சரி, ஒரு
நாய்க் குட்டி காரின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு மன வேதனை
ஏற்படுமா? ஏற்படாதா? என் நிலையும் அதுபோன்றதுதான் (தினமணி 13.7.2013
பக்கம்1)
அய்ந்து மாதங்களுக்கு முன் இதே நரேந்திரமோடி கூறியவைதான் இவை.
இன்றைக்குத் தெரிவிக்கும் மோடியின்
வருத்தம் எந்த ரகத்தைச் சேர்ந்தது? நாம் பயணிக்கும் காரில் நாய்க்குட்டி
ஒன்று அடிபட்டு இறந்ததால் ஏற்படும் வருத்தத்துக்குச் சமமானது என்பதுதானே!
கடந்த ஜூலையில் சொன்ன வருத்தத்துக்கும்,
இப்பொழுது மோடி சொல்லும் வருத்தத்திற்கும் அடர்த்தியில், ஆழத்தில்,
வேறுபாடு உண்டா என்பதை மோடிதான் விளக்க வேண்டும். (இதற்கு வக்காலத்துப்
போட்டு பாஷ்யம் செய்ய ஒருக்கால் சோ. ராமசாமி அய்யர் வந்தாலும் வரக்கூடும்).
மோடி - ஒரு மரண வியாபாரி என்று காங்கிரஸ்
தலைவர் திருமதி. சோனியா காந்தி சொன்னார். மோடியின்மீது விழுந்த கொலைக்
கறைக்காக தேர்தலில் பாடம் கற்பிக்கப்படும் என்ற பயம் உலுக்கும் நிலையில்,
அவர் வட்டாரத்தில் யாரோ சொன்ன யோசனையை ஏற்றுதான் 2002 நிகழ்வுக்கு
வேதனைப்படுவதாக வெளிப்படுத்தியுள்ளார்.
மோடியைப் பற்றி அறிந்தவர் களுக்கு இது வெறும் உதட்டு அசைவு - உள்ளத்தின் வெளிப்பாடு அல்ல என்பது நூற்றுக்கு ஆயிரம் சதவீதம் தெரியுமே!
----------------- ----------------”விடுதலை” தலையங்கம் 30-12-2013
நாய்க்குட்டி
காரில் அடிபட்டதையும் குஜராத் மாநிலத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட
முஸ் லீம்கள் கொல்லப்பட்டதையும், பெண்கள் சூறையாடப் பட்டதையும்
சமப்படுத்திப் பேசிய நிலையில், டில்லி மாநில பி.ஜே.பி. துணைத் தலைவர்
அமீர்ராசா உசேன் என்பவர் பதவியிலிருந்து மட்டுமல்ல; கட்சியிலிருந்தும்
விலகினார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறினார்.
நரேந்திர மோடியின் இந்தக் கருத்து
இழிவானது; மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது. இதுபோல் பேசினால்
இஸ்லாமியர்களின் ஆதரவை அவர் எப்போதும் பெற முடியாது. மோடி பிஜேபியின்
தலைவர்; என்னுடைய தலைவர் இல்லை என்று கூறினாரே!
பதவி விலகல் குறித்து மேலும் அவர்
கூறினார். என்னைப் போல் பல சிறுபான்மையினர் காங்கிரஸ் அல்லாத மாற்றுக்
கட்சிகளை எதிர்பார்க்கிறோம். அதை வாஜ்பேயி, அத்வானியால் வழங்க முடிந்தது.
மோடியை முன்னிலைபடுத்துவதன் மூலம் எங்களுக்கிருந்த மாற்று வழியை பி.ஜே.பி.
அடைத்துவிட்டது. எல்.கே. அத்வானியோ, சுஷ்மா சுவராஜோ பிரதமர் வேட்பாளராக
வேண்டும் என்றே இஸ்லாமியர்கள் விரும்புகின்றனர். மோடி தனது கருத்துக்கு
மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். எனவே கட்சியிலிருந்து விலக எனக்கு
முழு உரிமை உள்ளது என்று எழுதினாரே.
(வாஜ்பேயியாக இருந்தாலும், அத்வானியாக இருந் தாலும் அடிப்படை கொள்கை ஒன்றுதான்)
இதுதான் பாதிக்கப்பட்ட சமுதாயத்தைச்
சேர்ந்த வரின் உண்மையான உள்ளக் குமுறலாக இருக்க முடியும். குஜராத்தில்
முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்து இருக் கிறார்கள் என்று சோ போன்றவர்கள்
குருட்டுத்தனமாக வக்காலத்து வாங்கி எழுதுவது முஸ்லீம்கள் மீதான தாக்குதலை
வேறு சொற்களில் நியாயப்படுத்துவதாகும்.
குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி சார்பில் ஒரே ஒரு முஸ்லீம்கூட நிறுத்தப்படவில்லை
மோடி சொன்ன உதாரணம்கூட அடிப்படையில் தவறானது. காரில் நாய்க்குட்டி அடிபட்டதுகூட விபத்து - தற்செயலானது.
ஆனால், குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டது - திட்டவட்ட மானதாகும்.
கோத்ரா நிகழ்வுக்குப் பிறகு -
பலியானவர்களை சம்பந்தப்பட்டவர்களின் ஊருக்கு அனுப்ப அதிகாரிகள் கூட்டத்தில்
முடிவு எடுத்த நிலையில், அதனை மாற்றி அனைத்துப் பிணங்களையும் ஊர்வலமாக
எடுத்துச் செல்ல வேண்டும் என்று முதல் அமைச்சர் மோடி ஆணையிட்டார் என்றால்,
அதன் பொருள் என்ன? பொது மக்கள் மத்தியில் பெரும்பான்மையினரான இந்துக்கள்
மத்தியில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வெறியாகி, விபரீதமாக உருமாற
வேண்டும் என்ற படுநாசமான கோரப்புத்தி தானே!
குஜராத் கலவரத்தில் பொடா
சட்டத்தின் கீழ் நரேந்திர மோடி அரசால் சிறையில் தள்ளப்பட்ட 287 பேர்களுள்
286 பேர்கள் சிறுபான்மையினரான முசுலிம் கள், ஒருவர் சீக்கியர் - ஒருவர்கூட
இந்து கிடையாது.
குஜராத்தில் சிறுபான்மை மக்கள் கொல்லப்
பட்டபோது விவரிக்க வார்த்தையே இல்லாத அளவுக்கு வருத்தப்பட்டதாக இப்பொழுது
பசப்புகிறாரே - அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட
இஸ்லாமியர்களைத்தானே பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்?
பாதிப்புக்குக் காரணமான கொலை வெறியர்களை - பெரும்பான்மை சமுதாயத்
தினர்களுள் ஒருவரைக்கூட பொடாவின் கீழ் கைது செய்யவில்லையே, ஏன்? இதற்கு
முதலில் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து முக்கிய
அதிகாரிகளை அழைத்து, மூன்று நாள் கெடு கொடுத்து, அதற்குள் அதிகபட்சமாக
எவ்வளவு முஸ்லிம் மக்களைத் தீர்த்துக் கட்ட முடியுமோ அத்தனைப் பேர்களையும்
வேட்டையாட அதிகாரம் கொடுத்தார் என்று காவல்துறை அதிகாரிகளே
கூறியுள்ளார்களே!
காவல்துறைத் தலைவர் (டிஜிபி) சிறீகுமார், புலனாய் வுத்துறையின் உயரதிகாரி சஞ்சீவ்பட் ஆகியோர் ஆவணப்படுத்தியுள்ளார்களே!
மோடி முதல் அமைச்சராகவிருந்த பிஜேபி
சட்டப் பேரவை உறுப்பினர் அதுவும் கோத்ரா தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்
ஹரீஷ் பட் என்பவர் தெகல்கா புலனாய்வுத் துறையிடம் கூறியவை பதிவு செய்யப்பட்
டுள்ளன.
கலவரத்தை நடத்த பி.ஜே.பி., வி.எச்.பி.
தலைவர் களுக்கு மோடி மூன்று நாள் அவகாசம் கொடுத் திருக்கிறார். வி.எச்.பி.
தலைவர்கள் என்னை சபர்கந்தா என்னும் இடத்தில் உள்ள குவாரிக்கு அழைத்துச்
சென்று குண்டுகள் எப்படி தயாரிக்கப்பட்டன? எப்படி அகமதாபாத்துக்கு அனுப்பி
வைக்கப்பட்டன என்று நேரடியாக விளக்கினர். இந்துக்கள், முஸ்லீம்களைப் பழி
தீர்த்துக் கொள்ளும்போது காவல்துறையினர் அமைதி யாக இருக்க வேண்டும் என்று
கேட்டுக் கொள்ளப் பட்டனர். காவல்துறையினர் உதவி மட்டும் இல்லாமல்
போயிருந்தால் இஹ்கான் ஜாஃப்ரியைக் கொன்றிருக்க முடியாது என்று கூறினாரே!
இவ்வளவுக்கும் மூலகாரணமாக இருந்த முதல்
அமைச்சர் மோடிதான் குஜராத் கலவரத்தால் அவருக்கு ஏற்பட்ட வேதனையை விவரிக்க
வார்த்தையில்லை என்று இன்று கூறுகிறார் என்றால், இவர்களைவிட கொடியவர் களை
மனிதம் என்ற ஒன்று அறவேயில்லாதவர்களை வரலாறு சந்திப்பது அரிதினும் அரிதே!
இப்படிப்பட்ட ஒருவர் 120 கோடி இந்திய மக்களுக்குப் பிரதமரா? நினைத்துப் பார்க்கவே முடியாத பயங்கரம் அது!
Read more:
http://viduthalai.in/page-2/72884.html#ixzz2p4RVge1a
----------------------------------”விடுதலை” தலையங்கம் 31-12-2013
குஜராத்
கலவரத்திற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருத்தம் தெரிவிக்கிறார் - அம்மாநில
முதலமைச்சர் என்றால், அதனை யாரும் நம்பமாட்டார்கள்.
அந்தக் கலவரம் நடந்த பின்னணியைக்
கருத்தில் கொண்டால், அது முழுக்க முழுக்க முதலமைச்சர் மோடி என்ற மய்யப்
புள்ளியிலிருந்து வெடித்துக் கிளம்பிய விபரீதம் ஆகும்.
சிறுபான்மையினரை வளைத்து வளைத்துக்
கொன்றனர் - அதற்காக மலைவாழ் மக்களைக்கூடப் பயன்படுத்திக் கொண்டனர். ஜெய்
ஸ்ரீராம் என்று குரல் கொடுத்தால் காவல்துறையினர் ஒதுங்கிக் கொள்ளவேண்டும்;
சிறுபான்மையினரை உயிரோடு கொளுத்த காவல்துறையின் வாகனங்களில் இருந்துகூட
பெட்ரோல் கொடுத்து உதவப்பட்டுள்ளது.
காவல்துறை ஜீப்பில்கூட சிறுபான்மையினர்
கொண்டுவரப்பட்டு, சங் பரிவார்க் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
என்பதெல்லாம் உலகில் எங்கும் கேள்விப்பட்டிருக்க முடியாத அவலம் ஆகும்.
மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட
சிறுபான்மையினர் முகாம்களில் சரணடைந்தனர். அந்த நேரத்தில், முதலமைச்சர்
மோடி கவ்ரவ் யாத்திரை ஒன்றை நடத்தினார். அப்பொழுது அவரின் திருவாய்
அவிழ்த்துக் கொட்டியது என்ன?
நாங்கள் அகதி முகாம்கள் நடத்தி,
முஸ்லிம்களுக்குப் பிள்ளை பெறும் வாய்ப்பு களை ஏற்படுத்திக் கொடுக்க
விரும்பவில்லை. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் மக்களுக் குப் பாடம்
படித்துக் கொடுக்கவேண்டும் என்று பேசினாரா இல்லையா? இது மிகப்பெரிய-
பிரச்சினையாக வெடித்தபோது முதல்வர் அவ்வாறு பேசவில்லை என்றனர்; ஆனால், அவர்
அவ்வாறு பேசிய ஒலிநாடா வெளியில் வந்துவிட்டதே - மோடியின் முகம் வெளிறிப்
போனதுதான் மிச்சம்.
குஜராத்தில் கலவரம் நடந்த ஒரு மாதம்
கழித்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி அகதி முகாம்களைப் பார்வையிட்டார். நிவாரண
நிதியாக ரூ.150 கோடி அறிவித்தார் பிரதமர். ஆனால், இதற்குமுன் 7.3 கோடி
ரூபாய் செலவழிக்கப்பட்டு விட்டது - இனி நிதியோ, திட்டங்களோ தேவைப்படாது
என்று மோடியின் உள்துறை அமைச்சர் கூறினாரா இல்லையா?
இன்னொரு தகவலும் முக்கியமானது.
குஜராத்தில் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக
உச்சநீதிமன்றத்தில் மல்லிகா சாராபாய் பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்தார்.
அந்த வழக்கைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு
தனது வழக்குரைஞர்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்தார் என்று பகிரங்கமாக
குற்றம் சுமத்தினாரே - முதலமைச்சர் நரேந்திர மோடி மீது - அதற்கு இதுவரை
பதில் உண்டா?
காவல்துறை அதிகாரி சிறீகுமார் இந்தத் தகவலை நானாவதி ஆணையத்திடமே நேரில் சொன்னதுண்டே!
குஜராத் கலவரத்திற்கும், மோடிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையாம் - பம்மாத்துப் பேசுகிறார்கள்.
பெரிய வீராதி வீரர் சூராதி சூரர் என்று
பொதுக்கூட்ட மேடைகளில் தோள் தட்டுகிறாரே - 12 ஆண்டுகளுக்குப் பிறகு
வருத்தப்படுவதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறாரே, இதே மோடி சி.என்.என்.,
அய்.பி.என். தொலைக்காட்சியில் பிரபல ஊடகவியலரான கரண்தாப்பருடன் பேட்டிக்கு
அமர்ந்தபோது, குஜராத் கலவரம் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்டபோது,
தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் நான்கரை நிமிடங்களே தாக்குப்பிடித்து,
தண்ணீர் குடித்து ஜகா வாங்கி வெளியேறினாரா இல்லையா?
உண்மையை மறைப்பதும், அப்பட்டமாகப்
பொய்களைப் பேசுவதும், நீலிக் கண்ணீர் வடிப்பதும் எல்லாம் சங் பரிவார்க்
கும்பலுக்குக் கைவந்த கலை. அதில் கைதேர்ந்தவர் இந்த மோடி. அதில் ஒன்றுதான்
12 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் சம்பவம் வருணிக்க முடியாத துயரத்தை தனக்கு
அளித்தது என்று பசப்புவது ஆகும். இந்தக் கபட நாடகத்தை மக்கள் ஒருபோதும்
நம்ப மாட்டார்கள் - நம்பவே மாட்டார்கள்.
----------------------------”விடுதலை” தலையங்கம் --2-1-2014