Search This Blog

21.9.12

விவேகானந்தர் ஒரு கிறுக்கன் மாதிரி - பெரியார்

கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தரா?

தந்தை பெரியார் அவர்களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளிட்ட தினமலர் ஏட்டில் ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது.

கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் தந்தை பெரியாரை வணங்குகிறேன் என்று தலைப்பிட்டு  தந்தை பெரியார் உருவப் படத்துடன் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் கீழ் இடம் பெற்றுள்ள வாசகமும் முக்கியமானது.

ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் இல்லை. அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதுதான் அந்த வாசகம். தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் அது.

விளம்பரம் என்பதால் தாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று தினமலர் தப்பித்துக் கொள்ளப் பார்க்கும். அது எப்படியோ தொலையட்டும்!

ஆனால் அதில் வெளி வந்துள்ள வாசகங்கள் சரியானதுதானா?


பெரியார் கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் என்பது எப்படி சரி ஆகும்?

இந்து என்று சொல்லாதே, இழிவைத் தேடிக் கொள்ளாதே என்று சொன்ன தந்தை பெரியார் எங்கே? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பிய விவேகானந்தர் எங்கே?

ஒரு முறை அமெரிக்கர் ஒருவர் தந்தை பெரியாரைச் சந்தித்தார். அப்பொழுது விவேகானந்தரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று தந்தை பெரியார் அவர்களிடம் அந்த அமெரிக்கர் கேட்டபோது, பட்டென்று அளித்த பதில் - அந்த ஆள் ஒரு கிறுக்கன் மாதிரி. இப்படியும் அப்படியு மாகப் பேசியவர் என்று பதில் சொன்னார்.

அப்படிச் சொல்லாதீர்கள். எங்கள் அமெரிக்காவிலேயே விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோமே? என்றார்.

அவ்வளவுதான், முட்டாள்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டுமே தான் சொந்தமா? என்று செவுளில் அறைந்தாற் போல் தந்தை பெரியார் சொன்னாரே பார்க்கலாம் - பொறி கலங்கிப் போனார் அந்த அமெரிக்கர்!

உண்மை இவ்வாறு இருக்க, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் பெரியாரின் படத்தைப் போட்டு, கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் என்று விளம்பரம் செய்திருப்பது அசல் திரிபுவாத மாகும்.


பார்ப்பனர்கள் பற்றி தந்தை பெரியார் சொன்னது போல ஒன்றிரண்டு விவேகானந்தர் சொல்லியிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு பெரியாரும் விவேகானந்தரும் ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட முடியாதே!

அந்த விளம்பரத்தில் இடம் பெற்ற இரு வாசகங்கள் கோணிப்பைக் குள்ளிருந்து பூனை வெளியில் வந்துவிட்டதைக் காட்டக் கூடியதாகும்.

ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் இல்லையாமே! ஏதாவது புரிகிறதா? சூடான அய்ஸ் கிரீம் என்று சொல்வது போல் இல்லையா?

அறிவியல், சந்திரனை பூமியின் துணைக் கோள் என்கிறது. ஆனால் ஆன் மீகமோ குரு பத்தினியின் கற்பினை அழித்தவன் சந்திரன் என்கிறது. குருவின் சாபத்தால் சந்திரன் தேய்கிறான் - ராகு, கேது என்கிற பாம்பு சந்திரனை விழுங்குகிறது. அதுதான் கிரகணம் என்கிறது ஆன்மீகம்.

பூமியின் சுழற்சியால் சூரியனின் ஒளி சந்திரனில் விழாமல் தடுக்கப்படுவ தால் கிரகணம் ஏற்படு கிறது என்கிறது அறிவியல். முரண்பட்ட இரண்டும் எப்படி ஒன்றாகும்?

அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதை இப்படி எடுத்துக் கொள்ளலாம்.

அறிவியலை வைத்துத் தானே ஆன்மீகத்தின் பிழைப்பு நடக்கிறது! அறிவியல் நன்கொடையான தொலைக் காட்சியில் காலையிலிருந்து சோதி டம், வாஸ்து, எந்த நிறத்தில் உடை, எந்த நிறத்தில் மோதிரக் கல் அணிவது உட்பட எல் லாம் பிரச்சாரம் செய்யப் படுவது இல்லையா?

கம்ப்யூட்டர் சோதிடம் என்கிற அளவுக்கு வயிற்றுப் பிழைப்பு நடக்க வில்லையா?

ஆரிய மதத்தின் ஆணி வேரை அசைத்த புத்தரையே மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரம் ஆக்கிய பார்ப்பனர்கள் கொஞ்சம் நாம் அசந்தால் தந்தை பெரியாரையும் அவதாரப் புருஷர் ஆக்கி விடுவார்கள். அதன் ஒரு முன் னோட்டம்தான்  இந்தத் தினமலர் விளம்பரம்!

எச்சரிக்கை!
              --------------------"விடுதலை” 21-9-2012

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு


வரதராஜூலு கூட்டிய பார்ப்பனரல்லாதார் கூட்டம்
நூல்    :    பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு
ஆசிரியர்    :    பழ. அதியமான்
வெளியீடு    :    காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை, நாகர்கோவில் _ 629 001.
பக்கங்கள் :    480- ரூ. 375.
-நூலிலிருந்து.....
பார்ப்பனரல்லாதாரின் எதிர்காலத் திட்டம் குறித்து விவாதிக்க தலைவர்கள் கூட்டம் ஒன்றை 1926 அக்டோபரில் வரதராஜுலு கூட்டினார். அக்கூட்டத்திற்குப் பெரியார் உட்பட பல தலைவர்களை அழைத்தார். அதை ஒட்டி தேசிய அறிக்கை ஒன்றினையும் தமிழ்நாடு அலுவலகத்திலிருந்து அனுப்பினார். அதைக் குறித்த பெரியாரின் எதிர்வினை பின்வருமாறு:
சுயராஜ்யக் கட்சி பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்க் கட்டுப்பாடாக பிரசாரம் செய்து வருகிறது. இம்மாதிரியான நிலைமையை இன்றும் வளர விட்டுக்கொண்டே போனால் பிராமணரல்லாதாருக்குக் கெடுதல் வரும் என்பது வரதராஜுலு அறிக்கையில் கூறியிருக்கும் கருத்துகளில் ஒன்று. இந்த அபிப்பிராயத்தை நாம் இரண்டு வருஷத்திற்கு முன்னதாகவே கொண்டுள்ளோம்.... இதை வெளிப்படையாய் வலியுறுத்த முன்வந்ததற்கு நன்றி. அவர் எடுத்துக்கொள்ளும் எவ்வித முயற்சிக்கும் ஆதரவளிக்க வேண்டியது தமிழ் மக்கள் கடமை (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 2009, ப. 895).

வரதராஜுலு, திரு.வி.க., பெரியார் ஆகியோர் காங்கிரசைவிட்டு விலகியபோது இப்போதுதான் காங்கிரசு பரிசுத்தமானது என்று எஸ். சீனிவாச ஐயங்கார் கூறியதைக் குடிஅரசு பலமாகக் கண்டித்தது (குடிஅரசு, 26 செப்டம்பர் 1926: 3 அக்டோபர் 1926). பார்ப்பனரல்லாதாருக்குக் கெடுதல் செய்யும் காங்கிரசு தலைவர் எஸ். சீனிவாச ஐயங்காரோடு வரதராஜுலுவும், திரு.வி.க.வும் இணங்கி இருப்பது பற்றி கேலியும், கிண்டலும், கண்டனமும் பெரியார் செய்துவந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து வரதராஜுலு விலகினார் என அறிந்து நாட்டின் நல்ல காலத்தின் பயன் என்று பெரியார் எழுதினார். (குடிஅரசு, 26 செப்டம்பர் 1926).
காங்கிரசில் பார்ப்பனரல்லாதாரின் நிலைமை
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் எதிர்விளைவாகவே பார்ப்பனர் அல்லாதாருக்குக் காங்கிரசில் மதிப்பும் பதவியும் வாய்ந்தது என்று பல சமயங்களில் பெரியார் எடுத்துக் காட்டினார். அவ்வகையிலேயே காங்கிரசில் வரதராஜுலுவுக்குப் பதவி கிடைத்தது என்றும் ஒருமுறை அவர் குறிப்பிட்டார்.
ஜஸ்டிஸ் கட்சியே இல்லாதிருக்குமானால் அரசியல் சங்கங்களிலாவது டாக்டர் வரதராஜுலு நாயுடு, கலியாண சுந்தர முதலியார், தண்டபாணி பிள்ளை, சிங்காரவேலு செட்டியார், பாவலர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப்பிள்ளை, வெங்கிடு கிருஷ்ணப்பிள்ளை, இராமசாமி நாயக்கர், சக்கரை செட்டியார், மயிலை இரத்தினசபாபதி முதலியார், முனுசாமி கவுண்டர், அமீத் கான் சாயபு, ஷபி முகம்மது சாயபு, மாரிமுத்துப் பிள்ளை முதலிய எத்தனையோ கனவான்கள் தலைவர்களாகவும், தொண்டர்களாகவும் வந்திருக்க முடியுமா? முடியுமென்று சொல்வார்களானால் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதபோது ஐந்தைந்து வருஷம் ஜெயிலுக்குப் போன உண்மையான தேசபக்தர்களான ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம் பிள்ளை முதலிய கனவான்கள் உண்மையான தேசத் துரோகிகளான பல பார்ப்பனர்கள் மூட்டை தூக்கியும், அவர்களைச் சுவாமிகளே என்று கூப்பிட்டுக்கொண்டும் அவர்கள் வாலைப்பிடித்துத் திரிந்தால் மாத்திரம் வாழும்படியான நிலைமையில் இருக்கவில்லையா? (குடிஅரசு, 31 அக்டோபர் 1926).
வரதராஜுலுவின் பார்ப்பனச் சார்பைக் கண்டிப்பவராக இருந்தாலும் பார்ப்பனர்கள் அவரைத் தாக்கும்போது காப்பாற்றுபவராகப் பெரியார் இக்கட்டத்தில் (1926) இருந்தார். சுயராஜ்யக் கட்சியைப் பார்ப்பனர்கள் கட்சி என்று வரதராஜுலு கூறியதையடுத்து எதிர்ப்பு எழுந்தது. அச்சம்பவத்தில் குடிஅரசு வரதராஜுலுவை ஆதரித்தது.
சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல கள், சாராயம், பிராந்தி சாப்பிடுகிறாரா? சுயராஜ்யக் கட்சிப் பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக்கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களில் எல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம், பிராந்தி விற்றுப் பணம் சம்பாதிக்கிறாரா? பத்திரிகையில் பேர் போடுவதாகவும், படம் போடுவதாகவும் சொல்லிப் பணம் சம்பாதித்தாரா? பத்திரிகைச் செல்வாக்கை உபயோகித்து மடாதிபதிகளிடம் பணம் வாங்கினாரா? மகனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டாரா? வாங்கின கடனை ஏமாற்றினாரா? அல்லது வீட்டில் மல் துணியும் பெண்சாதிக்குப் பட்டுச் சல்லா முதலிய அந்நிய நாட்டுத் துணியும் உபயோகித்துக்கொண்டு மேடைக்கு வரும்போது கதர் கட்டிக்கொண்டுவந்து பொதுஜனங்களை ஏமாற்றுகிறாரா? திருட்டுத்தனமாய் சர்க்கார் அதிகாரிகளிடம் கெஞ்சி ஏதாவது தயவு பெற்றுக் கொண்டாரா? மந்திரி உத்தியோகம் வேண்டுமென்று யார் காலிலாவது விழுந்தாரா? பெரியபெரிய உத்தியோகங்களையும், பதவிகளையும் பெறலாமென்று தனது உத்தியோகத்தை இராஜினாமா கொடுத்து ஜனங்களை ஏமாற்றினாரா? அல்லது இன்னமும் தனக்கு ஏதாவது ஓர் உத்தியோகமோ பதவியோ கிடைக்குமென்று எதிர்பார்க்கிறாரா? இவர்கள் பூச்சாண்டிக்கு யார் பயப்படுவார்கள்? (குடிஅரசு, 10 அக்டோபர் 1926).
குடிஅரசின் மேற்கண்ட எழுத்து, சுயராஜ்யக் கட்சியினரின் மோசமான செயல்களின் பட்டியலாகவே இருந்தாலும் எதிர்நிலையில் வரதராஜுலுவின் சிறப்பான ஆளுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனாலேயே வசையே வடிவான இப்பத்தியைத் தர நேர்ந்தது.
நவீனம்: வரதராஜுலுவும் பெரியாரும்
(மாறிவரும் காலத்தை உணர்ந்து புதியனவற்றை ஏற்றுக்கொள்ளும்) நவீன மனிதராக வரதராஜுலுவைக் கருத முடியாது என அவரோடு நன்கு பழகிய வ.ரா. குறிப்பிட்டுள்ளார். அப்படி பழமைவாதியாக அவரை முற்றாக ஒதுக்கிவிட முடியாது. பெரியாரைப் போல் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டாடுபவராக இருக்கவில்லை என்றாலும் பண்பாட்டு மாற்றங்களைச் சூழ்நிலைக்கேற்ப ஏற்பவராகவே இருந்தார் வரதராஜுலு. அதற்கு ஒரு சான்று 1933இல் மதவாதிகளால் எதிர்க்கப்பட்ட கர்ப்பத் தடையை வரதராஜுலு ஆதரித்தார். பெண் ஏன் அடிமையானாள்? எனச் சிந்தித்த பெரியார் கர்ப்பத் தடையை ஆதரித்தார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
பி.எஸ். சிவசாமி ஐயர் தலைமையில் நடந்த கர்ப்பத் தடையின் அவசியம் குறித்த கூட்டத்தில் (31 அக்டோபர் 1933, சென்னை) வரதராஜுலு கலந்துகொண்டார்.
கர்ப்பத் தடை போன்ற லௌகீக விஷயங்களில், சாஸ்திரம் பற்றிக் கவலையே கொள்ளக்கூடாது.... பழைய காலத்து சாஸ்திரங்கள் கர்ப்பத் தடையை ஆதரிக்கின்றனவா அல்லவா என்பது பற்றியும் கவலை வேண்டாம். இந்தக் காலத்தில் நடந்துகொள்ள வேண்டியது பற்றியே கவனிக்க வேண்டும்.
குழந்தைகளில்லாவிட்டால் அது பெருங்குறையாகவிருக்கிறது. அதிகமாகி விட்டாலும் கஷ்டம்... கர்ப்பம் ஏற்படாதபடியே தடுப்பது சரியா? அல்லது கர்ப்பம் ஏற்பட்ட பிறகு அதனைக் கலைப்பது சரியா? கர்ப்பத்தைச் சிதைத்து அது சம்பந்தமான குற்றங்கள் செய்த கைதிகளே பெரும்பாலோராய் சிறையில் இருக்கக் கண்டிருக்கிறேன்... நமது (இந்து) வைதீகர்கள் கர்ப்பத் தடை விஷயத்தில் குறுக்கிட்டு கூச்சல் போடவில்லை. ஆனால் அவ்வேலையைக் கத்தோலிக்கர்களுக்கு விட்டிருக்கிறார்கள்.... சர்க்கார் எவ்வித எதிர்ப்பையும் அலட்சியம் செய்யாமல் ஆஸ்பத்திரிகளில் தகுந்தவர்களைக் கொண்டு கர்ப்பத் தடை முறைகளைப் போதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் (குடிஅரசு, 5 நவம்பர் 1933) என்பது வரதராஜுலு அக்கூட்டத்தில் விடுத்த கோரிக்கையாகும்.
கர்ப்பத் தடையை ஆதரித்துச் சென்னையில் நடந்த அக்கூட்டத்தின் நிகழ்வுகளைச் சுதேசமித்திரன் வெளியிட்டிருந்தது. பலரும் ஆங்கிலத்தில் பேசியதை மொழிபெயர்த்துப் பிரசுரித்திருந்த அது வரதராஜுலுவின் பேச்சைத் தமிழில் பேசினார் என்று ஒருவரியில் முடித்துவிட்டது. அதைக் கண்டித்து எழுதியது குடிஅரசு.
இங்கிலீஷ் பேச்சுகளை எல்லாம் மொழிபெயர்த்து பிரசுரித்த இந்தப் பத்திரிகை தோழர் வரதராஜுலுவின் தமிழ்ப் பேச்சைப் பூராவாகப் போடாததற்குக் காரணம் என்ன? தமிழ்மொழி மீதுள்ள வெறுப்பா? அல்லது பார்ப்பனரல்லாதார் மீதான துவேஷமா? என்றுதான் கேட்கிறோம். பார்ப்பன பத்திரிகைகளை ஆதரிக்கும் தமிழ் வாசகர்கள் இதைச் சிந்தனை செய்வார்களாக! (குடிஅரசு, 5 நவம்பர் 1933).
கட்சியிலும் சமூகத்திலும் தனக்கும் தன் கல்வித் திட்டத்திற்கும் எதிர்ப்பு அதிகமாகிவிட்டதை உணர்ந்த இராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து உடல் நிலையைக் காரணம் காட்டி விலக முடிவு செய்தார். அதற்கு முன்னதாகச் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்தல் நடத்தப்பெற்றது. புதிய தலைவர் தேர்வில் வரதராஜுலுவுக்கும் பெரியாருக்கும் முக்கியப் பங்கிருந்ததாகத் தெரிகிறது.
கூட்டம் (சென்னை சட்டசபை காங்கிரசு கட்சிக் கூட்டம்) ஆறு மணி அடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் துவக்கப்பட்டது. தமக்குப் பதிலாகக் கட்சித் தலைவர்
பதவிக்கு நியமனச் சீட்டுகளைப் பதிவு செய்யுமாறு ஆச்சாரியார் கேட்டுக்கொண்டார். டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு காமராசர் பெயரை முன்மொழிந்தார்.
என்.அண்ணாமலைப் பிள்ளை அதை வழிமொழிந்தார். கி.சுப்பிரமணியத்தின் பெயரை பக்தவத்சலம் முன்மொழிய டாக்டர் யூ.கிருஷ்ணாராவ் வழிமொழிந்தார்.
தேர்தல் நடைபெற்றது. காமராசருக்கு 93 ஓட்டுகளும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 ஓட்டுகளும் கிடைத்தன. (விடுதலை 31 மார்ச் 1954).
8 ஏப்ரல் 1954இல் இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதையடுத்து காமராசர் முதலமைச்சரானார். ஏ.பி. ஷெட்டி, எம். பத்வத்சலம், சி. சுப்பிரமணியம், பி. பரமேசுவரன் ஆகியோர் அமைச்சர்களாக அமைந்தனர். காமராசர் பொறுப்பேற்றதும் புதிய கல்வித் திட்டத்தை விலக்கிக் கொண்டார்.
1953 முதல் 1954 வரை நடந்த புதிய கல்வித் திட்ட எதிர்ப்பு போராட்டத்திலும் அதன் இறுதிப் பகுதியாக அமைந்த முதலமைச்சர் மாற்றத்திலும் வரதராஜுலு பெரியாருடன் இணைந்து செயலாற்றியதைக் கண்டோம். 1925இல் நடைபெற்ற சேரன்மாதேவி போராட்டத்தை இது நினைவூட்டுகிறது. இரண்டு போராட்டங்களும் கல்வி சார்ந்தவை. இரண்டும் காங்கிரசுகாரர்களின் செயல் திட்டங்களாக அமைந்தவை. வர்ணாசிரமப் புதுப்பித்தலாகப் பார்ப்பனரல்லாதாரால் கணிக்கப்பட்டவை. 25 ஆண்டுகள் இடைவெளி கொண்ட இரண்டிலும் பார்ப்பனரல்லாத தலைவர்களான வரதராஜுலுவும் பெரியாரும் இணைந்து போராடினார்கள்.
இறுதியான இரண்டு போராட்டங்கள்
காமராசர் முதலமைச்சரான பிறகு வரதராஜுலு மூன்று ஆண்டுகளே வாழ்ந்தார். காமராசர் ஆட்சியின் இக்கட்டத்தில் தேசியக் கொடி, இராமர் பட எரிப்புப் போராட்டங்களில் பெரியார் ஈடுபட்டார். சட்டமன்ற உறுப்பினரான வரதராஜுலு பெரியாருக்கும், காமராசருக்கும் பாலமாகச் செயல்பட்டார்.
1955 ஆகஸ்ட் மாதத்தில் இந்தி எதிர்ப்பின் ஒரு அடையாளமாக இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். வரதராஜுலுவின் முயற்சியினால் வெளியான முதலமைச்சர் காமராசரின் அறிக்கையை அடுத்துப் பெரியார் அப்போராட்டத்தை விலக்கிக் கொண்டார். இதன் பின்னணியில் வரதராஜுலு இருந்தார்.
தமிழ்நாட்டவர் மீது இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் வாக்குறுதி கொடுத்து கொடியைக் கொளுத்த வேண்டாம் என்று விரும்புவதாக உணர்கிறேன். ஆகவே நான் எனது தீர்மானம் அமுல் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்று சர்க்கார் விரும்பினால் எப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தேனோ அப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
..... முதல் மந்திரியாரின் விருப்பத்திற்கு ஏற்பக் கொடி கொளுத்துவதைத் தற்காலிகமாகவே ஒத்திவைத்து திராவிடர் கழகத்தாரையும் மற்றும் இதில் ஈடுபட இருக்கிற பொது மக்களையும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்றைக்குக் கொடியைக் கொளுத்தாமல் இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 1974, ப. 1836).

காமராசர் ஆட்சிக்கு ஊறு வந்துவிடாமலும், அதேசமயம் தன்னுடைய தேசியக் கொள்கையை விட்டுக்கொடுத்து விடாமலும் அரசியல்ரீதியாகப் பெரியார் எதிராகச் சென்றுவிடாமலும் அமையக்கூடிய நடவடிக்கைகளை எடுத்தவராக வரதராஜுலு இச்சந்தர்ப்பங்களில் செயல்பட்டார் எனச் சொல்லலாம்.
1956இல் நிகழ்ந்த பெரியாரின் இராமர் பட எரிப்புப் போராட்டத்தை வரதராஜுலு எதிர்த்தார். அதைப் பெரியார் பின்வருமாறு எதிர்கொண்டார்.
நான் மதிக்கத்தக்க இரண்டு நபர்களிடமிருந்து இராமன் உருவம் கொளுத்தப்டக்கூடாது என்று ஒரு வேண்டுகோள் -- அதாவது ஒரு வகை எதிர்ப்பும் கொடி கொளுத்துவதைத் தடை செய்யும்படி சர்க்காரைக் கேட்டுக்கொள்ளும் மற்றொரு வகை எதிர்ப்பு ஒன்றும் ஆக இரண்டு எதிர்ப்புகளைப் பத்திரிகையில் பார்த்தேன்.
இந்தக் கனவான்கள் எனது மரியாதைக்கு உரியவர்கள் ஆவார்கள். இவர்களில் எம்.எல்.ஏ. ஒருவர். இவர் மக்கள் பிரதிநிதி உரிமை கொண்டவர். மற்றொருவர் ஒரு மடாதிபதி ஆவார். இவர்கள் இருவரும் யார் என்றால், வரதராஜுலு நாயுடு அவர்களும் குன்றக்குடி மடாதிபதிகளுமாவார்கள்.
ஆதாரத்தின் மீதும், பலத்தின் மீதும், ஆமோதிப்பின் மீதும் நடத்தப்படுகிற ஒரு காரியத்தை ஒரே வார்த்தையில் வேண்டாம் என்றும், தடைசெய் என்றும் பொறுப்புள்ள மரியாதையுள்ள இரு பெரியார்கள் சொல்லிவிடுவது என்றால் இதில் எப்படி நம் கருத்தைக் கூறாமல் இருக்க முடியும்? மற்ற வேறு யாராவது இருந்தால் நான் இவ்வளவு இலட்சியம் செய்யமாட்டேன்.....
என் உள்கருத்தை அறிந்து, நான் சொல்லும் காரணங்களை காட்டும் ஆதாரங்களை எடுத்துத் தலைப்பில் காட்டி, அதை மறுத்து அல்லது சமாதானம் சொல்லிக் கொளுத்த வேண்டாம், கொளுத்துவது தப்பு என்று சொல்லுவது எதிர்ப்புப் பண்பாகும். நமக்கும் உதவி செய்வதாகும். அப்படியில்லாமல் மக்கள் மனம் புண்படும் என்பது மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பவருக்காகத் தான் கவலைப்படத் தக்கதாகுமே தவிர மக்களை மூடத்தனத்திலிருந்து அதனால் ஏற்பட்ட இழிவிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்பவனுக்கு மக்கள் மனம் புண்படுவது என்பது மதிக்கத்தக்க தாகுமா? (விடுதலை, 30 ஜூலை 1956).

அரசு தடைவிதித்திருந்தாலும் இராமன் பட உருவத்தைக் கொளுத்தியது குற்றமல்ல என்று பெரியார் விடுதலையில் கட்டுரை எழுதும்படி இப்போராட்டம் ஒருவகையாக முடிவுக்கு வந்தது
(விடுதலை, 2 ஆகஸ்டு 1956).


காவிரி நதி நீர்ப் பிரச்சினை - திராவிடர் கழகம் கூறிய யோசனை! தீர்வுதான் என்ன?

காவிரி நதி நீர்ப் பிரச்சினை: பிரதமர் அடுத்து செய்ய வேண்டியது என்ன? கருநாடகாமீது 365அய் பயன்படுத்த வேண்டும் தொலைநோக்காக நதிகளை இணைக்க வேண்டும் தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை



பிரதமர் கூட்டிய நதி நீர் ஆணையக் கூட்டத்தில் ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில், மத்திய அரசு - பிரதமர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

காவிரி நதிநீர் ஆணையம் அதன் தலைவர் பிரதமர் (exofficio தகுதியில்) டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று (19.9.2012) புதுடில்லியில் கூடியது.

இக்கூட்டம்கூட, உச்சநீதிமன்றத் தில் போடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன் றம் சுருக்கென்று தைப்பதுபோல் கேள்வி கேட்ட பிறகே பிரதமர் அலுவலகத்தால் தேதி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, அதன்படி தான் கூட்டப்பட்டிருக்கிறது! 9 ஆண்டுகளுக்குப்பின் கூடிய கூட்டம்!

முந்தைய தேசீய முன்னணியின் பிரதமர் வாஜ்பேயி தலைமையில்தான் ஒரு கூட்டம் நடந்தது.

9 ஆண்டுகளுக்குப்பிறகே நேற்று அடுத்த கூட்டம் நடைபெற்றுள்ளது என்பதே, இப்பிரச்சினை எப்படி ஊறு காய் ஜாடியில் ஊறிக் கொண்டுள்ள பிரச்சினையாகி உள்ளது என்பது தெரியும். நமது தமிழ்நாட்டுத் தமிழர் களும், விவசாய சாகுபடி நேரத்தில் மட்டுமே விவசாயிகளுக்காக காவிரி யில் தண்ணீர் வராவிட்டாலும் தத்தம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் தலைவர்களும், கட்சிகளும் இருக் கின்றன!

காவிரி நடுவர் மன்றத்திற்குத் தலைவர் நியமிக்கப்படாத நிலை!

1. இல்லாவிட்டால், காவிரி நடுவர் மன்றத் தலைவர் ஜஸ்டீஸ் என்.பி. சிங் - உடல் நலம் காரணமாக - தனது பதவியை ராஜினாமா செய்து சில ஆண்டுகள் ஆகிவிட்டபோதும்கூட இதுவரை அத்தலைமைப் பொறுப்பு நிரப்பப்படாமல், காலியாகவே உள்ளது மிகவும் வருந்தத்தக்க நிலை அல்லவா? இதை தமிழ்நாடு முதல்வரும் சுட்டிக்காட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாமும் முன்பே சுட்டிக் காட்டி எழுதியுள்ளோம்.

2. இதைவிட இன்னொரு கொடுமை இந்த நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது 2007 பிப்ரவரி 5ஆம் தேதி. 5 ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்ட நிலையில், இன்னமும் அது கெசட்டில் பதிவு செய்யப்பட்டு மத்திய அரசால் வெளியிடப்படவில்லை! (No Central Gazettee Notification). -  இது உடனடி யாகச் செய்யப்பட வேண்டும்.

ISRWD - நதி நீர்ப் பங்கீடு குறித்து மாநிலங்களிடையே உள்ள பிரச்சினை - தாவாக்களுக்குத் தீர்வு காணும் சட்டத்தின்படி இது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசும், முதல்வரும் இதனைப் பிரதமருக்கு சுட்டிக்காட்டியும் - மேற்காட்டிய இரண்டு பிரச்சினை களிலும் எந்த மேல் நடவடிக்கையும் இதுவரை பிரதமர் அலுவலகத்தால் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக் குரியது.

பாலையாகி வரும் தமிழ்நாடு

தமிழ்நாட்டுக் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கும் - நீர்வரத்து இன்மையால் சாகுபடி செய்ய வாய்ப்பில்லை- காவிரி நீர்ப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளின் நிலங்கள் தரிசுகளாகி பாலைகளாகி வரும் அவலம் தொடருகிறது!

இப்போது வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை இவ்வாண்டு திறக்கப்படாமல் தாமதம் ஆனபடியால் - போதிய நீரை - நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கருநாடக அரசு தராமல் மறுத்த காரணத்தால், இப் போது காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடிக்கும் வாய்ப்பில்லாமல், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப்படும் அநீதி அரங்கேற்றப்பட்டுள்ளது!

காவிரி நடுவர் மன்றம் 1990 ஜூன் 2இல் அமைக்கப்பட்டது. (இன்று 22 ஆண்டுகள் ஆகி விட்டன!)

திராவிடர் கழகம் கூறிய யோசனை!

1991 ஜூன் 25ஆம் தேதி அந்த நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்புப்படி ஒவ்வொரு ஆண்டும் 205 டி.எம்.சி. தண்ணீரை - கருநாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டும் என்று கூறியது! மேட்டூருக்கு அந்த அளவு நீரை கருநாடக அரசு கொடுக்க வேண்டும் என்பது நீதிமன்ற ஆணை!

இதில் தமிழ்நாடு 6 டி.எம்.சி. காவிரி நீரை புதுச்சேரி அரசுக்கு அளிக்க வேண்டும் (காரைக்கால் பகுதியில் உள்ள நிலங்கள் பயன் பெறுவதற்காக)

இதனை ஒழுங்குபடுத்திக் கண் காணித்து நீர் வழங்கவே காவிரி நதிநீர் ஆணையம் (Cauvery River Authority) 1998இல் அமைக்கப்பட்டு அறி விக்கப்பட்டது. இடைக்கால நிவாரண ஆணையை ஒழுங்காகத் தரப்படு வதைக் கணித்து அளிப்பதற்காகவே இப்படி ஒரு நிரந்தர ஆணையம் உரு வாக்கப்பட்டது. (எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்து காவிரி நீர்ப் பிரச்சினை சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் இப்படி ஒரு யோசனையை எடுத்து வைத்து உருவாகச் செய்ததே திராவிடர் கழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது)

நடுவர் மன்ற தீர்ப்பு செயல்படுத்தப்படவில்லை

17 ஆண்டுகளுக்குப்பின், 500 கூட்டங்களுக்குப் பின் இந்த நடுவர் மன்றம் - (இது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமரானபோது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வழங்கிய அருட்கொடையாகும்) இறுதித் தீர்ப்பை 2007இல் தந்தது.இது 419 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு அளிக்கும் படி இறுதித் தீர்ப்பு வழங்கியது (தமிழ் நாட்டின் கோரிக்கை 562 டி.எம்.சி. தண்ணீராகும்) கருநாடகாவிற்கு 270 டி.எம்.சி., கேரளாவிற்கு 30 டி.எம்.சி., புதுச்சேரி மாநிலத்திற்கு 7 டி.எம்.சி. யாகும்!

இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் (அப்பீல்கள்) மேல் முறை யீடுகள், தமிழ்நாடு, கருநாடகா, கேரளா  அரசுகளால் தாக்கல் செய்யப் பட்டு நிலுவையில் உள்ளன!

டிசம்பர் 1996 அன்று, அதன் தலை வர் ஜஸ்டீஸ் N.P. சிங் 80 வயதாகி விட் டதால் உடல் நலம் காட்டி விலகினார்!

முதல் கட்டமாக, மேனாள் குடிய ரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் கூறிய ஆலோசனைப்படி தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்தை உடனடியாகத் துவங்கினால் இந்தப் பிரச்சினைகள் ஒரு நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.

அனைத்துக் கட்சிகளும் கருநாட கத்தைப் போல ஒரே குரலில் - இது பொதுப் பிரச்சினை என்கின்ற கண்ணோட்டத்தில் ஒன்றுபட்ட குரலைத் தர வேண்டும் -  ஓரணியில் நிற்கத் தயங்கினாலும்கூட என்பதே நமது வேண்டுகோள்!

வாடும் விவசாயியின் நிலங்களும், காயும் அவர்களின் வயிறுகளும்  நமது பார்வையில் தெரிய வேண்டும்.

வாக்கு வங்கி அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு நாட்டு நலனைக் கருதியே யோசிக்க வேண்டும். செய்ய முன்வருமா நம் நாட்டு கட்சிகள்?

சென்னை
20.9.2012

கி.வீரமணி

தலைவர்
திராவிடர் கழகம்

******************************************************************************
பிரதமரின் தீர்ப்புரையை ஏற்க மறுக்கும் கருநாடக அரசு

இப்படிப்பட்ட நிலையில் நேற்றைய கூட்டத்தால் ஒரு பயனும் - விளையவில்லையே!

யானைப் பசிக்கு சோளப் பொரி போன்ற தீர்வை - பிரதமர் - காவிரி நதிநீர் ஆணையத் தலைவர் கூறியது தமிழ்நாட்டிற்கும் ஏமாற்றம்; கருநாடக அரசும் ஏற்க மறுத்துவிட்டது.

9000 கன அடி நீர் வினாடிக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் தீர்ப்புரை வழங்கினார்.

தமிழக முதல்வர் குறைந்தபட்சம் 15 லட்சம் ஏக்கர் சம்பா பயிரைக் காப்பாற்ற நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கேட்டும் கருநாடகம் ஒப்புக் கொள்ளவில்லை!

மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?

இந்நிலையில் இதற்குத் தீர்வுதான் என்ன?

1)    உச்சநீதிமன்றத்தில் வழக்கு என்றாலும் அதன் தீர்ப்பை முறையாக அமல்படுத்தினால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்கும் சாத்தியம் உண்டு. ஆனால் யதார்த்தத்தில் இதற்கென்ன வழி?

2) பிரதமர் - மத்திய அரசு - கருநாடக அரசைக் கண்டிப்புடன் வழங்க ஆணையிடலாம் - அரசியல் சட்டத்தின் 365 விதி அதற்குரிய அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது! செய்யும் நிலையில் இன்றுள்ள மத்திய அரசு உள்ளதா என்பது அடுத்த கேள்வி!

3)    நதிகளை தேசியமயமாக்கி அறிவிக்கும் அவசர சட்ட ஆணை (Ordinance) போட்டு நாட்டிலுள்ள எல்லா நதிகளும் மத்திய அரசுக்கு உரிமையானது என்றும் உடனடியாக அறிவிக்க முன்வர வேண்டும்.
நதிகளை இணைக்க வேண்டும்

4) தொலைநோக்காக, எல்லா நதிகளையும் இணைக்கும் திட்டத்தை - உலக வங்கி ; சர்வதேச நிதியம்  (IMF) போன்றவற்றில் நிதி உதவி, கடன் பெற்று திட்டத்தை பெரும் திட்டமாகத் தொடங்க வேண்டும்.

குறிப்பு: தலைமைக் கழகத்தின் சார்பில் இவ்வறிக்கை துண்டறிக்கையாக அச்சிடப்பட்டுள்ளது. காரைக்கால் முதல் மேட்டூர் வரையிலான காவிரி டெல்டா பகுதிகளில் கழகத் தோழர்களின் பிரச்சாரம் மற்றும் துண்டறிக்கைகள் விநியோகத்திற்கான ஏற்பாடுபற்றி தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளிவரும்.

                              *********************************

20.9.12

விநாயகனாகிய பிள்ளையார் கடவுள் பிறப்பின் கதையை எழுத வெட்கமா?

வெட்கமா?

இந்து மத வியாபாரிகள் இப்பொழுதெல்லாம் விவேகத்துடன், வீராப்புடன் மார் தட்டிக் கொள்ளும் வகையில் தங்களின் கடவுள்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.

வளைந்து, நெளிந்து, குனிந்து, குமைந்துதான் நடக்கும்படி, சொல்லும்படி, எழுதும்படி நேர்ந்துவிட் டது. ஒருவகையில் நம் இயக்கத்துக்கு, கொள் கைக்குக் கிடைத்த வெற்றி தான் இது!


எடுத்துக்காட்டாக விநாயகனாகிய பிள்ளையார் எனும் கடவுள் ஒன்று போதாதா?

கடவுள் என்றால் பிறப்பு - இறப்பு அற்றவர் என்று சொல்லிக் கொண்டு  ஆவணி மாதம் பூர்வபட்ச சதுர்த்தி, விசாக நட்சத் திரம் கூடிய சோம வாரத் தில், சிங்க லக்னத்தில் விநாயகர் பிறந்தார் என்று, கடவுளுக்கே ஜாதகம் எழுதி வைத்துள்ள தெருப்புழுதியை என்னவென்று சொல்லுவது!

இந்த முதல் பல்டியை! விட்டுத் தள்ளுவோம்!

மனிதனாக இருந்தாலும், மாடாக இருந்தாலும், கடவுளாக இருந்தாலும் அவர்களின் பிறப்பு என்பது ஒரே மாதிரியாகத்தானே இருக்கும். வெவ்வேறு வகையாக, விதவிதமாக முரண்பாடு இருக்க முடியாதல்லவா!

ஆனால் இந்த வீணாகப் போன விநாயகன் பிறப்புக்கு  எத்தனை எத்தனை ஆபாசக் கதைகள் - மூலங்கள்! நதி மூலம், ரிஷி மூலங்களைப் பார்க்கக் கூடாது என்பதில் உள்ள இரகசியம் இதுதானோ!

காட்டுக்குப் போனான் சிவன் - தன் மனைவியோடு. அங்கு ஆண் யானையும், பெண் யானையும் புணர்ந்ததைக் கண்டு சிவன் ஆண் யானையாகவும், பார்வதி பெண் யானையாகவும்  உருக் கொண்டு உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலம் விநாயகர் பிறந்தார் என்பதெல்லாம் மனிதன் காட்டு விலங்காண்டியாய் திரிந்த காலத்தில்  கற்பிக்கப்பட்டது என்பது, ஒரு கடுகளவு அறிவைப் பயன்படுத்தும் எவருக்கும் விளங்குமே!


(ஆனால் பக்தர்களுக்கு விளங்காது என்றால் - அதன் பொருளைப் புரிந்து கொள்க!)

பார்வதி குளிக்கப் போகும்போது தன் உடல் அழுக்கைத் திரட்டி பிள்ளை யாரைப் பிடித்து வைத்தார் என்பதுதானே பிள்ளையார் பிறப்பின் கதை.

ஒரு வார இதழ் விநாயக மலரை வெளியிட்டுள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது தெரியுமா? நீராடச் சென்றபோது காவலுக்கு ஒருபிள்ளையை உருவாக்கிக் காவலாக்கினாள் என்று தந்திரமாக எழுதுவதைக் கவனிக்கவும். உண்மையைச் சொல்ல ஒருக்கால் வெட் கப்பட்டும் இருக்கலாம்.

அழுக்கை உருட்டி உருவாக்கினாள் என்று தினமலரால்எழுத முடியவில்லை. இது பித்தலாட்டம் மட்டுமல்ல - நம்மை நினைத்து அவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள் என்பதுதானே இதன் உட்பொருள்?


             ---------- மயிலாடன் அவர்கள் 20-9-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!



தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:-

நமது நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புகோ மற்றபடி வளப்பத்துக்கோ குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய் விட்டது என்றால் எல்லோ ருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப் படவே இல்லை.

இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று குவிந்து இருந்ததை ஆளுக்கு 30 ஏக்கருக்கு மேல் இருக்கக் கூடாது என்று பிரித்தார்கள். அதுபோலவே, 10 கோடி, 20 கோடி, 50 கோடி என்று ஒரு சிலரிடம் போய் குவிந்துள்ள பணத் தையும் உச்சவரம்பு கட்டி பாக்கியை அரசாங்கம் எடுத்துக் கொண்டு எல்லா மக்களுக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்.

எல்லா வளமும் இருந்தும் அது எல்லோருக்கும் கிட்டவில்லையென்றால், எல்லா வளமும் இருந்தும் அறிவு வளம் இல்லாத குறை ஒன்றுதான் காரணமாக இருக்கின்றது. மனிதன் மற்ற மிருகங்களிடம் இல்லாத பிரத்தியோகமான அறிவான பகுத்தறிவினைப் பெற்றுள்ளான்.

அந்த பகுத்தறிவினை மனிதன் மற்ற காரியங்களுக்கு எல்லாம் செலவிடுகின்றான். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வாழ்வு வாழப் பயன்படுத்துகின்றான். ஆனால், நாம் ஏன் கீழ்ஜாதி? அவன் என்ன மேல் ஜாதி? நாம் ஏன் ஏழை? அவன் ஏன் பணக்காரன்? என்று சிந்தித்துப் பார்க்காதவனாக ஆகிவிட் டான். இந்தத் துறையில் சுத்த முட்டாளாக ஆகிவிட்டான்.

அவன் என்ன பார்ப்பான்? அவன் ரத்தம் என்ன ரத்தம்? நமது ரத்தம் என்ன கீழா? அவன் மட்டும் ஏன் உயர்ந்தவன்? நாம் மட்டும் ஏன் இழிஜாதி? என்று சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. இது போலத்தான் அவன் ஏன் பணக்காரன்? நாம் ஏன் ஏழை? என்று சிந்திப்பதே இல்லை. இவைகளுக்கு எல்லாம் காரணம் நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காததுதான்.

1925-லேயே சமதர்மத்தைப் பற்றி பேசியவன் நான் என்று நண்பர் பழனி அவர்கள் கூறினார்கள். 1925-இல் காங்கிரசை விட்டு விலகிய பிறகு கடவுளை ஒழிக்க வேண்டும். பணக்காரனை ஒழிக்க வேண்டும். சமதர்மம் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நான் சமதர்மம் எப்படி ரஷ்யாவில் நடைபெறுகின்றது என்பதை நேரில் போய் பார்த்துவிட்டு வரலாமே என்று அங்கு போய் பார்த்துவிட்டு வந்தேன். சமதர்மம் எப்படி உன்னத நிலையில் அங்கு நடைபெறுகின்றது என்பதை கண்டு வந்த நான் முன்னிலும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டேன்.

சமதர்மம் வெற்றி பெற வேண்டுமானால், மக்கள் மனத்தில் குடிகொண்டு உள்ள கடவுள், மதம், சாஸ்திரம் பற்றிய முட்டாள்தனமான எண்ணங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

             ---------------10.7.1965 அன்று முதுகுளத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - "விடுதலை" 7.8.1965