Search This Blog

24.6.12

செத்தமொழியைச் சிங்காரிக்க பார்ப்பனர்கள் படும் பாடு!

இனப்பற்று

சென்னை மயிலாப்பூரில் சமஸ்கிருத கல்லூரி ஒன்று இருக்கிறது. அத னோடு இணைந்து செயல்படுவது குப்புசாமி சாஸ்திரி சமஸ்கிருத மய்யம் ; அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று வந்த இந்த மய்யம் 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நிதி கிடைக்காமையால் தள்ளாடியது.

மின்னஞ்சல் வழியாக இந்த நிலையை அறிந்து கொண்ட ரவி என்ற பார்ப் பனர் பதைபதைத்துப் போனார்! தான் ஆடாவிட் டாலும் சதை ஆடாதா என்ன!

ரவி தன் பார்ப்பன நண்பர்களோடு இணைந்து இந்த மய்யத்தைத் தூக்கி நிறுத்தும் வேலையில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். (சிருங்கேரி மடம் நடத்தும் சமஸ்கிருத வகுப்புகளுக்குச் சென்று சமஸ்கிருதம் கற்று வரு கிறாராம்)
என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டாராம் - இந்த ரவி? பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் பார்ப்பனர்களோடு ஒருங்கிணைப்பாளராக யிருந்து தொடர்பு கொண்டு, நிதியின் வாய்க்காலைத் திறக்கச் செய்து மய்யத்தை அழிவிலிருந்து காப்பாற்றி விட்டார். இன்னொரு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மய்யத்தில் வெளியிடப்படும் ஆராய்ச்சி நூல்களை வாழ்நாள் உறுப்பினராக இரண்டாயிரம் ரூபாய் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அந்தப் புதிய திட்டம்.


மய்யத்திற்கு நிதியும் ஆயிற்று; மய்யத்தில் நூல்கள் விற்பனையும் ஆயிற்று. ஒரே கல்லால் இரண்டு காய்களை அடிக்கும் இந்த சாமர்த்தியம் நம் மக்களுக்கு எங்கிருந்து வரப்போகிறது?

மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டதில் நூறு வாழ்நாள் உறுப்பினர்கள் கிடைத்துள்ளனராம்.

இன்னொன்றுதான் முக்கியம். சென்னை அய். அய்.டி.யில் உள்ளோர் (முழுக்க அக்கிரகாரம் தானே!) மத்திய அரசின் சில துறைகளிலிருந்து நிதியைத் திரட்டுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளனராம். (அவர்களால் முடியக் கூடிய காரியம்தானே!)

செத்தமொழி என்றாலும் அதனைச் சிங்காரிக்க பார்ப்பனர்கள் என்ன பாடு படுகிறார்கள் பார்த்தீர்களா?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது நீடாமங்கலத்திலிருந்து ஒரு பார்ப்பனர் மின்னஞ்சல் மூலம் பார்ப்பனர் வட்டாரத்துக்குத் தகவல் அனுப் பினாரே நினைவிருக்கிறதா? தவறாமல் தாய் மொழி சமஸ்கிருதம் என்று சொல்லுங்கள் என்று அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு இருந்ததே! தமிழர்களே இந்த இனப்பற்று உங்களுக்கு எப்பொழுது வரப் போகிறது?

----------------- மயிலாடன் அவர்கள் 24-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

23.6.12

பெரியார் அவர்கள் பிரபாகரனுக்குச் சேர்த்துத் தலைவரும், வழிகாட்டியுமாவார்



ஆனந்தவிகடன் லோகம்!

இந்த வார ஆனந்தவிகடனை (20.6.2012) ஒரு புரட்டு புரட்டியபோது சில பேட்டிகள் தென்பட்டன.

அந்தப் பேட்டிகளுக்குள் சில தகவல்கள்:

(1) சினிமா இயக்குநர் ஒருவரின் பேட்டி

பெரியார் பெயரை உச்சரித்து, பெரியாரின் பேரன் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, சற்று விளம்பரம் கிடைத்தவுடன் பெரியாரை விமர்சித்து, அதன் மூலம் பார்ப்பனர்களின் சடகோபத்துக்கு ஆளாவது ஒன்றும் அதிசயமல்ல. தமிழர்கள் போல மலிவான பொருள்கள் உலகத்தில் எங்கும் கிடைக்கப் போவதில்லை.

இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவது தான் என்றார் தந்தை பெரியார். (விடுதலை 17-.9.-1969)

இனப்பாதுகாவலரான தந்தை பெரியார் அதையும் கடந்து உலக மக்களுக்கே வழிகாட்டும் சுயமரியாதை - பகுத்தறிவு - சமதர்ம ஒளியை உலகுக்குக் கொடுப்பவர்.

சுயசிந்தனையாளர்! - அவருக்கு வழிகாட்டி என்று யாரும் கிடையாது. தன் கருத்தை திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார் என்று சொல்லக் கூடியவரே தவிர, -திருவள்ளுவர் சொன்னதைத் தான் நானும் சொல்லுகிறேன் என்று சொல்லாதவர்! காலத்தைக் கடந்து கருத்துக்களைக் கருத்தரிக்கச் செய்யக் கூடிய ஞானத்தந்தை அவர். அறிவாயுதத்தை எடுத்த களப்போராளி, தளகர்த்தர்! வாழ்நாள் முழுவதும் அந்தக்களத்திலேயே நின்றவர் - வெற்றிகளையும் குவித்தவர்.

வாழ்ந்த காலத்திலும் சரி, மறைந்த காலத்திலும் சரி அவரைத் தவிர்த்துவிட்டு சமூகமோ, அரசியலோ, சிந்தனையோ பயணித்தது கிடையாது.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று புரட்சிக் கவிஞர் கூறியதும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

ஒன்றை தமிழர்களாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் உணர்தல் தேவை.

தந்தை பெரியார் அவர்களையும் மாவீரன் பிரபாகரனையும் ஒப்பிடுதல் முதல் குற்றமாகும். தந்தை பெரியார் அவர்கள் பிரபாகரனுக்குச் சேர்த்துத் தலைவரும், வழிகாட்டியுமாவார். பிரபாகரன் படத்தைத்தான் மேடையில் வைப்போம் - பெரியார் படத்தை வைக்க மாட்டோம் என்று பேசுவது எல்லாம் அசல் சிறுபிள்ளைத்தனமே!

ஒரு மேடையிலே பெரியார் படம் வைக்கப் படாததாலேயே பெரியாரின் ஆளுமை சுருங்கிப் போய்விடுமோ!

(உலகப் பல்கலைக்கழகங்களில் பெரியார் உலா வருவது இந்தக் குப்பை களுக்குத் தெரியுமா?)

இப்படியெல்லாம் பேசுவது - எழுது வது பெரியாரையும் புரிந்து கொள்ளாத - தம்பி பிரபாகரனையும் தெரிந்து கொள்ளாதபேதைமை என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

என்ன முரண்பாடு என்றால் ஆனந்தவிகடன் பேட்டியில், தம்மையும் அறியாமல் வேறு ஓர் இடத்தில் எங்களின் பெருமைக்குரிய வழி காட்டி பெரியார்தான் என்று ஒப்புக் கொண்டு விட்டு பிறகு, -வழிகாட்டியின் படத்தை வைக்கப்போவதில்லை என்பது -குழப்பப் போதையில் அவர்கள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

பித்துக்குளித்தனமான ஆவணம் ஒன்றை வெளியிட்டுவிட்டு, ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கின் நிலைக்கு ஆளாகி, நாலாதிசைகளிலும் சவுக்கடி கிடைத்தவுடன் நாக்குத் தொங்கி, விழி மேலேறி, கெண்டைக்கால் சதையும் பிடித்துக் கொள்ள, பெரியாரே துணை! என்று சரணம் பாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது நல்ல நகைச்சுவையே!

(ஆவணத்தை வெளியிட்டவரே கைவிட்டு விட்டாரே!)

அவர்களின் கண்ணோட்டத்தில் பார்ப்பான் என்றால் ஆய்வாளன் (அவர்களின் ஆவணத்தில் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.)

அந்த ஆய்வாளர்கள் சொல் பேச்சைக் கேட்டு 2012ஆம் ஆண்டு அனுமார்களாகவும், விபீஷணர்களாகவும், சுக்ரீவன்களாகவும் வாலையாட்டிப் பிழைத்துப் போகட்டும்! (தந்தை பெரியாரையும், திராவிடர் என்ற பார்ப்பனர் எதிர்ப்பு உணர்வையும் பெறாத எந்த அமைப்பும், தனி மனிதனும் இங்குக் கடையைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்).

(2) சரத் ஃபொன்சேகா

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததில் வெறி பிடித்து அநாகரிகமாக செயல்பட்ட அன்றைய இலங்கை ராணுவத்து தளபதி பொன்சேகா ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களைத் தெரிவிக்கிறார். அவை ஒருபுறமிருக்கட்டும்.

அடுத்து ஈழத்தில் என்ன நடக்கும் என்று அவர் சொன்னது மிக முக்கியமானதே.

இங்கு சுதந்திரம் இல்லை. ஜனநாயகம் இல்லை. யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. உங்களைச் சர்வ நேரமும் யாரோ கண்காணித்துக் கொண்டும் வேவு பார்த்துக் கொண்டும் உங்கள் உரையாடல்களை ஒட்டுக் கேட்டுக் கொண்டும் இருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? நாங்கள் அப்படித்தான் இருக்கிறோம்.

ஊடகங்கள் முழுமையாக முடக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. அரசு ஊடகங்கள் சொல்வதுதான் செய்தி. அரசுக்கு எதிராக யோசிப்பது கூடக் குற்றம் என்று நினைக்கிறது அரசு. தான் ஆட்சியில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார் ராஜபக்ஷே.

எங்கள் நாட்டில் இப்போது சர்வ சுதந்திரத்துடனும் சகல வசதிகளுடனும் இருப்பது ஒரே ஒரு குடும்பம்தான். அது. . ராஜபக்ஷேவின் குடும்பம். நாட்டைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல், ஊழல் . . . மக்கள் வெறுத்துப் போய் இருக்கின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

ராஜபக்ஷேவின் அடக்குமுறையும் ஊழலும் மிக்க இந்தக் காட்டாட்சி தொடர்ந்தால், விடுதலைப் புலிகள் மட்டுமா? இன்னும் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். வடக்கில் இல்லை; தெற் கிலேயே அரசுக்கு எதிரான இளைஞர் களின் புரட்சி வெடித்தாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை என்கிறார் பொன் சேகர். எங்கெல்லாம் அடக்கு முறைகள் திமிர் முறித்துக் கிளம்புகின்றனவோ, அங்கெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது மனிதவியல் பாலபாடமாகும்.

விழுப்புரம் டெசோ (ஆகஸ்டு5) மாநாடு அழைப்புக் கொடுக்கும் -காத்திருங்கள்!

(3) சு.சாமி. பராக்!

கேள்வி: உண்மையிலேயே உங்களுக்குத் தமிழ் சுத்தமாகப் பேசவராதா? இல்லே, இதை ஒரு சாக்காக வெச்சு அவ, இவ, அவன், இவன்னு - கலாட்டா பண்றீங்களா?

சு.சாமி பதில்: இது என் ஸ்டைல். திராவிட இயக்கத்துக்காரங்க போல அடுக்கு மொழியில் மக்களுக்குப் புரியாத தமிழில் பேசி என்ன பிரயோஜனம்? அதனால்தான் நான் எப்பவும் போல பேசுகிறேன். அதுவும் தவிர, சமஸ்கிருத வார்த்தைகள் எல்லா மொழியிலயும் பரவிக்கிடக்கு. அதைப் பயன்படுத்திப் பேசினா, தமிழ், கர்நாடகம், தெலுங்கு, இந் தினு எல்லா மொழிக்காரங்களும் புரிஞ்சுக்குவா. சமஸ்கிருதத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கனும். நான் இப்படிப் பேச அதுவும் ஒரு காரணம் என்கிறார் சு.சாமி. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்கும் பார்ப்பனர்களை இங்கே தெரிந்து கொள்க!
இப்படித் தமிழ்ப் பேசும் இந்த வகையறாக்கள் எல்லாம் தமிழ் தேசியவாதிகள் கண்ணோட்டத்தில் பச்சைத் தமிழர்கள் தாம்.
ஏன்னா, நன்னா; தமிழ்ப் பேசுறாளே!

அவ, இவ என்று பேசுவதும் வேண்டு மென்றே!

சமஸ்கிருதத்தை பரப்புவதற்காகவே இந்த வேடம் என்பது கோணிப்பைக்குள் ளிருந்து பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதே!

இந்தப் பார்ப்பனர் மட்டுமல்ல; எல்லாப் பார்ப்பனர்களுமே இந்த உணர்வு படைத்தவர்கள்தான். கோல்வாக்கரிலிருந்து லோக்கல் வாக்கர்கள் வரை இதே புத்தியைக் கொண்டவர்கள்தான்.

என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால் இந்தியர்களை இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் கட்டாய பாடமாகப் படிக்கச் செய்வேன் என்று அடித்துக் கூறியவர்தானே சத்தியமூர்த்தி அய்யர்வாள்! (மெயில் 25.-7.-1939)

சமஸ்கிருதம் நாட்டு மொழியாக ஆக்கப்பட்டால் மொழிப் பிரச்சினையே இருக்காது. இதைத்தான் 1957 முதல் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறேன் என்று சொன்னவர்தான் வி.வி. கிரி என்ற பார்ப்பனர்.

(சிலப்பதிகார சமஸ்கிருத மொழி பெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையிலிருந்து -_ 2-.1-.1963)

(4) சி. ராஜகோபாலாச்சாரியார்

நமது முன்னோர்கள் நமக்கு வைத்து விட்டுப் போன பழைய பொருள்களைப் புறக்கணிப்பது தவறாகும். நமக்கிருக்கும் பெருமைகள் சமஸ்கிருதத்துடன் இணைக் கப்பட்டவை. பள்ளிக் கூடங்களிலிருந்தும், கல்லூரிகளில் இருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற சமஸ் கிருதம் தெரியாவிட்டால் மகா பெரிய விபத்தாகும்.

அது பணமிருக்கும் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டு சாப்பாட்டுக்கு பிச்சை எடுப்பதற்கு ஒப்பாகும். ஒரு பள்ளிப் படிப்பில் சமஸ்கிருதம் சார்ந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்துவாய் இருந்தாலும், முஸ்லிமாய் இருந்தாலும், நமது பழைய பெருமைகளுக்கு திறவுகோல் சமஸ்கிருதம்தான்.

புத்தர்கள், இந்துக்கள், இந்தியக் கிறிஸ்துவர்கள் முதலியோர்களுக்கு சமஸ்கிருதத்தைத் தவிர வேறு பெருமைகள் கிடையாது. இப்போதைய நவீனக் கல்விகளுடன், சமஸ்கிருத்ததையும் சேர்த்துக் கற்றுக் கொண்டால் இன்னுமொரு தலை முறைக்குள் இந்து மதம் இப்போது இருப்பது போல் இராது. சமஸ்கிருதம் ரொம்ப அழகான பாஷை. அதை ஈஸ்வர பாஷை என்று கூடச் சொல்லலாம்.

----------------(சென்னை லயோலா கல்லூரி சமஸ்கிருத சங்கத்தின் துவக்கவிழாவில் 24-.7.-1937 அன்று பிரதம அமைச்சர் சி.ராஜகோபாலாச்சாரியார் பேசியது.)

சங்கராச்சாரியார், சர்.சி.பி. ராமசாமி அய்யர், ஆர்.வெங்கட்ராமன் என்று சமஸ்கிருத்தைச் சப்புக் கொட்டி உச்சி மோந்து உச்சரிக்கும் பார்ப்பனர்களின் பட்டியல் மிக நீளமாகவே உண்டு.

தமிழ் ஆய்வாளரான ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் இந்தப் பார்ப்பனர்களைப் பற்றி வெகு நேர்த்தியாகவே படம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பார்ப்பான் பிறந்த நாள் முதல் தமிழையே வழங்குகின்றார்கள். ஆயினும் அவர்கள் தாம் தமிழர் அல்ல என்றும் தமக்குத் தாய்மொழி ஆரியம் என்றும் உணர்கிறார்கள். ஆகவே அவர்களிடத்தில் தமிழனிடத்தில் எழுதுவது போன்ற தமிழ் மொழிப் பற்றை நாம் காணுதல் முடியாது. இவ்வுணர்ச்சி குன்றிய கூட்டத்தினரே இந்தி பிரச்சார சபைகளையும் வடமொழியைத் தமிழோடு கலந்து எழுதும் உரைநடைகளையும் தோற்று விக்கின்றனர்.

(நூல், தமிழ் வரலாறு)

சு.சாமி _ பார்ப்பனர்கள் எத்தகையவர்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு

இதைத் திராவிடச் சிந்தனையாளர்களால்தான் சுட்டிக் காட்ட முடியும். இடித்தும் காட்டவும் முடியும். தமிழ்த் தேசிய வாதிகள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ம.பொ.சி. ஒருவர் போதாதா?

பெரியாரை விமர்சிக்கக் கூடாதா?

ஏன் தாராளமாக விமர்சிக்கலாமே! ஏன், அவர்தானே பகுத்தறிவைப் புகட்டினார். தாராளமாகவே விமர்சிக்கலாம்.

என்ன...?

அவர்தான் பார்ப்பனர் எதிர்ப்பை முன்னிறுத்தினார். அவர்தான் சூத்திர இழிவை ஒழிக்கப் பாடுபட்டார். அவர்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் பொது இடங்களில் புழங்கும் உரிமைக்காக வைக்கம் வரை சென்று போராடி சிறை சென்றார்.

அவர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் கல்வி உரிமை வேலை வாய்ப்பு உரிமைக்காக சமூக நீதிக் கொடியை உயர்த்தி பிடித்தார். இந்திய அரசமைப்புச் சட்டத்தை முதன் முதலாகத் திருத்தவும் செய்தார்.

அவர்தான் பெண்ணுரிமைப் பேரிகை முழங்கினார். அவர்தான் இந்தியை எதிர்த்து மொழி மானம் காத்தார். தமிழ் எழுத்துச் சீர் திருத்தத்தையும் கொண்டு வந்தார்.

அவர்தான் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்த மக் களுக்குப் பகுத்தறிவு வெளிச்சத்தைக் காட் னார். தமிழ், தமிழன், தமிழ்நாடு உரிமை களுக்காகக் கடைசி மூச்சு அடங்கும் வரை போர்க்களத்தில் நின்றார். இவ்வளவும் தமிழ்நாட் டுக்கோ, தமிழ் மக்களுக்கோ, பொது மக்களுக்கோ தேவையில்லை என்றும், இவை யெல்லாம் ராஜதுரோகம் என்றும் உங்களின் நுண்மாண் நுழை புல அறிவு கூறுமானால் தாராளமாகப் பெரியாரை விமர்சியுங்கள் -_ விமர்சித்துக் கொண்டே இருங்கள்.

உங்கள் காலத்தையும் உழைப்பையும் இந்தப் பகுதிகளுக்கே செலவிடுங்கள். பிறப்பில் உயர்வு - தாழ்வு கற்பிக்கும் பார்ப்பன ஆதிக்கத்தைப்பற்றி வாய் திறக்காதீர்கள். விமர்சிக்க வேண்டாம்! நீங்கள்தான் பெரியாரை விமர்சிக்கக் கிளம்பி விட்டீர்களே!

மாநில உரிமைகளைக் கொத்துத் கொத்தாகத் தூக்கிச் செல்லும் டில்லி கழுகுகளைக் கண்டு கொள்ளாதீர்கள். (தேவைப்பட்டால் கருடதரிசனம் செய்யுங்கள்).

நுழைவுத் தேர்வை ஒழித்த தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை நுழைய விடும் ஒட்டகங்களுக்குத் தீவனம் தேடும் வேலையில் ஈடு படுங்கள் (அதுதான் இந்திய இறையாண்மைக்காக ஊசி முனையில் தவமிருக்க முடிவு கட்டி விட்டீர்களே!)

பார்ப்பானை -ஆராய்ச்சியாளன் - இளைஞன் என்று ரோமம் பிளந்து ஆய்வு செய்து கண்டு பிடித்து விட்டீர்களே! திராவிடன் தான் ஆரியன் என்று அடேயப்பா! ஏழேழுலோகம் சென்று கண்டு பிடித்து கனைத்துக் கொண்டு திரிகிறீர்களே!

அதனால் நன்றாக விமர்சனம் செய்யுங்கள். பெரியாரை விமர்சனம் செய்யுங்கள். அப்பொழுதுதானே ஆரிய ஏடுகளின் விளம்பர பாதுகா பட்டா பிஷேகம் சாங்கோ பாங்கமாக நடக் கும். சூத்திரப் பட்டமும் நிலைக்கும்.

தமிழனுக்குக் கொஞ்சம் விளம் பரம் கிடைத்தால் பார்ப்பான் கால் எங்கு இருக்கிறது என்று தேடிச் சென்று நக்கிக் கிடப்பான் என்று தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்?

--------------- மின்சாரம் அவர்கள் 26-6-2012 “விடுதலைஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை


22.6.12

நேற்றிரவு ஷீலாவுடன் சந்தோஷமாக இருக்க எவ்வளவு பணம் கொடுத்தாய்?ஆபாச நச்சு விதை!


முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா?

காதலியிடம் காதலன்: உன்னைப் போன்ற அழகான பெண்ணை முத்தமிட நான் 5000 ரூபாய் கூட கொடுப்பேன்.

காதலி: அய்யோ, நேற்று இரவு மகேஷ் எனக்கு முத்தம் கொடுத்தான். ஆனால் பணம் ஏதும் தரவில்லையே!

கணவனிடம் மனைவி: நேற்றிரவு ஷீலாவுடன் சந்தோஷமாக இருக்க எவ்வளவு பணம் கொடுத்தாய்?

கணவன்: நூறு ரூபாய் கொடுத்தேன்.

மனைவி: அவமானம்! அவளது காதலன் என்னி டம் வரும்போது, அய்ம்பது ரூபாய் மட்டுமே கொடுத்தான்.

சென்சஸ்அதிகாரி ஒருவர் ஓர் வீட்டின் பெண் மணியிடம் கேட்கிறார்: உங்கள் கணவர் 9 ஆண்டுகளுக்கு முன் இறந்து போய்விட்ட போது, உங்களுக்கு எப்படி 5 வயதிலும் 3 வயதிலும் மகன்கள் உள்ளனர்?

நகைச்சுவைத் துணுக்குகள் என்ற கண்ணோட் டத்தில் பார்த்தாலும்கூட மேற்கண்டவை ரசிக்கத் தக்கவையல்ல - வெறுக்கத்தக்கவை. நகைச்சுவை என்ற மிக உயர்ந்த அம்சத்தைக் கொச்சைப்படுத் துவதாகும்.

எந்தப் பெண்ணும் இந்தத் தரங்கெட்ட வகையில் பேசவும் மாட்டார்; நடந்து கொள்ளவும் மாட்டார்.

இந்தநிலையில் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எப்படித் தான் மனம் வந்ததோ?

சோ கூட்டம் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றதே - கொஞ்சுகின்றதே - அடுத்த பிரதமர் இவரை விட்டால் வேறு ஆள் யார்? என்று காற்றடித்து ஊதிப் பெருக்க வைக்கிறதே பார்ப்பன ஊடகங்கள் - அந்த மகத்தான குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடியின் ஆட்சியில் தான் பள்ளிப் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

இந்துத்துவாவாதிகளுக்கு இவைபற்றியெல்லாம் கவலை ஏது? இந்துத்துவா என்கிற போது அதன் மூலம் இந்து என்பதிலிருந்து தானே கிளைக்கிறது. அந்த இந்துவின் யோக்கியதைபற்றி அறிந்தவர்களுக்கு ஒரு பிஜேபி ஆட்சியில் இவ்வளவு ஆபாசமான பாடத் திட்டங்கள் அமைவதில் ஆச்சரியம் இருக்கவே முடியாது.

அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் சட்டப் பேரவையிலேயே சொன்னதைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். நினைத்தபின் கொஞ்சம் அசைப் போட்டும் பார்க்க வேண்டும். அப்படி சிந்திக்கும் பொழுது ஆசா பாசத்துக்கு ஆட்படக் கூடாது; பக்தி என்னும் போதைக் கண்ணாடியையும் அணியக் கூடாது. அப்பொழுதுதான் எது ஒழுக்கம், எது ஒழுக்கக் கேடு என்பதும் புத்திக்கும் படும். இதோ அண்ணா பேசுகிறார்.

கண்ணன் தின்னும் பண்டம் எது? கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் என்பதைக் கற்றுத் தர இப்படிப் போட்டிருக்கும். கைக்கெட்டாத பொருளை எவருக்கும் தெரியாமல் எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதால் புராணம் கூடாது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்தக் கருத்தை இங்கு சொல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பொதுக் கூட்டத்தில் வைத்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கூடத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத் தோட்டத்தில் காய்த்துத் தொங்குகிற மாங்கனியைப்பறிக்க சோனிப் பையன் ஒருவனைக் குனிய வைத்து மாங்காய் பறிக்கலாம் என்ற வழியை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதாக ஆகிறது. இந்தக் கருத்தை பகுத்தறிவு என்று எடுத்துக் கொண்டாலும் சரி, சுயமரியாதைக் கருத்து என்று எடுத்துக் கொண்டாலும் சரி, பயப்படாமல் உலக அறிவு என்று திருத்தி அமைத்தால் கல்வி அறிவும், தரமும் பெருகும்.

------------------முதலமைச்சர் அண்ணா கல்வி மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளிக்கையில் 23.3.1967இல் பேசிய பேச்சின் ஒருபகுதி இது.

பகுத்தறிவுக் கண்ணோட்டம் முக்கியம் - பகுத்தறிவு என்பது வெறும் தகவலைச் சேகரிப்பது அல்ல - மனித நேயத்தையும், ஒழுக்கத்தையும் அளிப்பதாகும். அதனைத்தான் தந்தை பெரியார் போதித்தார்.

குஜராத்தில் பிஞ்சு உள்ளத்தில் ஆபாச நச்சு விதைகளைத் தூவுவதற்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா? எங்கே பார்ப்போம்!

-------------------"விடுதலை” தலையங்கம் 22-6-2012

ஜோதிடமும், பஞ்சாங்கக் கிரகணக் குறிப்புகளும் அறிவியலா?


சேது வெளியிட்ட செய்தி

2012 மே 20 நாளிட்ட தினமலர் இதழின் வாரமலரில், கேள்விகளும் ஆச்சரியங்களும் என்கிற பகுதியில் "நவக்கிரக சன்னதி உணர்த்தும் அறிவியல் உண்மைகள்" என்னும் தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. செய்தியை எழுதியிருப்பவர் சேது என்பவர். அந்தச் செய்தி பின்வருமாறு:

"சூரியனை மய்யமாகக் கொண்டு பூமி உட்பட எல்லாக் கிரகங்களும் சுற்றி வருகின்றன என்ற வானியல் உண்மையை நமது முன்னோர் திறம்பட அறிந்து இருந்தார்கள் என்பதற்கு நமது ஆலயங்களில் காணப்படும் நவக்கிரக பிரதிஷ்டையில் சூரியன் நடுநாயகமாக அமைக்கப் பட்டுள்ளதே நிரூபணமாகும்.

அதுமட்டுமன்றி, திருக்கணித பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் நேரத்தில்தான் அறிவியல் நீதியாக வரும் சூரியகிரகணம், சந்திரகிரகணம் ஆகியவை நிகழ்கின்றன.

எனவே, ஜோதிடம் என்பது முழுவதும் அறிவியலடிப்படையானதே!' என்கிறார் வேதஜோதிடத்தில் நீண்ட அனுபவம் கொண்ட கோவை ஸ்ரீஜெகநாத சுவாமி".

கோவை ஜெகநாதசவாமியின் கோமேதகக் கருத்துகளை ஆய்வு செய்வோமே?

புவி எங்கே போயிற்று?

ஜோதிடத்தில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என ஒன்பது கோள்கள் (நவக்கிரகங்கள்) இடம்பெற்றுள்ளன.

ஆனால், அந்தக் கோள்பட்டியலில், இந்தக் கோவை ஜோதிடர் ஜெகநாத சுவாமி உட்பட நாம் வாழும் புவி (Earth) இடம்பெறவில்லையே? ஏன் இந்த நிலை? அறிவி(வானி)யலில் புவி ஒரு கோள் ஆயிற்றே? ஜோதிடத்தில் புவி இல்லையே! புவி எங்கே போயிற்று? புவி என்பதாக ஒரு கோள்பற்றிய அடிப்படை அறிவே இந்த வேத ஜோதிட மேதைகளுக்கு இல்லையே? பின் எப்படி ஜோதிடம் அறிவியல் ஆகும்?

விண்மீனுக்கும் கோளுக்கும் வேறுபாடு தெரியவில்லையே?

ஜோதிடத்தில் சூரியன் ஒரு கோள் ஆகும். ஆனால், அறிவியலில் சூரியன் கோள் (Planet) அன்று; விண்மீன் ஆகும். (Star). வேதஜோதிடம் சூரியனை ஒரு கோள் ஆகக் கருதுகிறதே? 'க்ரஹாணாம் ஆதிராதித்யோ' -_ அதாவது, கிரகங்களுள் முதன்மையானவன சூரியன் என்று ஸ்ரீசூர்யஸ்தோத்திரம் என்னும் நூலுள் கூறப்பட்டுள்ளது.

"ஓம் க்ரஹாணாம் பதயே நமஹ!" அதாவது, கோள்களின் தலைவனே! வணக்கம்! என்று, 108 பெயர் வரிசையுள் 89வது சூரியனின் பெயர் வரிசையாக ஸ்ரீசூர்யா அஷ்டோத்ர சத நாமாவளி என்னும் நுல் கூறுகிறது. (தகவல்: பாலஜோதிடம்; டிசம்பர் 1987. இதழ்)

சூரியன் அய்யத்திற்கிடமின்றி கோள் (கிரகம்)என்றே ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கொண்ட ஜோதிடம் எப்படி அறிவியலாகும்? ஜெகநாத சுவாமி செப்புவாரா விடை?

கோளா? துணைக்கோளா?

ஜோதிடத்தில் சந்திரன் ஒரு கோளாகவே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், புவி என்னும் கோளைச்சுற்றிவரும் ஒரு துணைக்கோள் (Satelite) ஆகவே அறிவியல் கூறுகிறது.

சந்திரனை _ ஒரு துணைக்கோளை, கோள் என்று வைத்துச் சதிராட்டம் போடும் ஜோதிடம் எப்படி அறிவியல் ஆகும்?

விண்ணிலே எத்தனை வெண்ணிலவுகள்?

ஜோதிடத்தில் இருப்பது ஒரே ஒரு சந்திரன் (நிலவு)தான்! இதை வைத்துக்கொண்டுதான் திரையிசைப் பாடலாசிரியர்கள், அன்று வந்ததும் இதே நிலா! இன்று வந்ததும் அதே நிலா!! என்றும் உள்ளதும் ஒரே நிலா! இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா!! என்று கொட்டி முழக்குகிறார்கள். ஆனால், வானியலில், 112 பெரியவை; 16 சிறியவை. ஆக, 128 சந்திரன்கள் உள்ளன என்று கண்டுபிடித்தும் கூறப்பட்டுள்ளது.

புவிக்கு அமைந்த துணைக்கோள் ஆன ஒரே ஒரு சந்திரனுக்குத்தான் ஜோதிடப் பலன்கள் கூறப்பட்டுள்ளன.

ஏனைய 127 சந்திரன்கள் என்ன குற்றம் செய்தன? அவர்கள் மொழியில் சொல்வதானால் அவை என்ன பாவம் செய்தன? இந்த வேத ஜோதிட அனுபவசாலி ஜெகநாதசுவாமி பதிலளிப்பாரா?

இல்லாத கோள்கள் இரண்டு

ஜோதிடத்தில் விண்மீனான சூரியன், துணைக்கோளான சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி சனி, இவற்றோடு இராகு, கேது எனப்படும் இரண்டு கோள்களும் இடம் பெற்றுள்ளன. இவை, உண்மையில் இல்லவே இல்லை. கற்பனைப் புள்ளிகள். வானியலில் இவை இடம்பெறவில்லை. இப்படியிருக்க, இராகு, கேது உள்ளிட்ட கோள்கள் எனக் குறிக்கும் ஜோதிடம் அறிவியல் ஆவது எப்படி?

இருக்கும் கோள்கள் இடம் பெறவில்லையே?

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியன சூரிய குடும்பத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டவை. இவை ஜோதிடத்தில் இன்றும் சேர்க்கப்படவில்லையே? எப்படி ஜோதிடம் அறிவியலாகும்?

அண்மைய அறிவியல் ஆய்வின்படி, புளூட்டோ, ஒரு கோளுக்குரிய தகுதிப்பாடு இல்லை என்று விலக்கிவிட்டனர் அதனை அறிவியலார்.

பேச்சு _ மூச்சு இல்லை

அதே சமயம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யத்தின் (நாசா) நிதியுதவியுடன், அறிவியலாளர்கள் புதியகோள் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் நாள் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு செட்னா (ஷிமீஸீணீ) எனப் பெயரும் இட்டுள்ளனர். இவ்வாறான கோள்பற்றி மூச்சு விடாத ஜோதிடம் அறிவியல் ஆவது எப்படி?

நவக்கிரகங்களின் நடுநாயகமாம்

கோளே இல்லாத, கோள்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையான விண்மீன் ஆன சூரியன் ஆலயங்களில் நவக்கிரங்களின் நடுநாயகமாக ஏனைய கோள்களோடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஜோதிடம் அறிவியல் என்பதை மெய்ப்பிக்கும் என்று பிதற்றுவது சரிதானா?

இப்படிக் கூறுவது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது? சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கிறது? ஜெகநாதசுவாமி ஏன் இப்படி ஜோதிடத்தையும் அறிவியலையும் போட்டுக் குழப்புகிறார்? எதற்காக இவர் இவ்வண்ணம் குழப்பத்தின் குட்டையாக மாறவேண்டும்?

வர்ணதர்ம வல்லாண்மை:

வர்ண தர்மப் பிடியில் மக்களை அழுத்தி வைத்ததுபோல கோள்களையும் வர்ண வல்லாண்மையின் பிடியில் வைத்துள்ள ஜோதிடத்தின் போக்கைக் கீழே பாருங்கள்:

குரு (வியாழன்), சுக்ரன் (வெள்ளி) இரண்டும் பிராமண ஜாதி (வர்ணம்)யாம்! சூரியன், செவ்வாய் சத்திரிய ஜாதியாம், சந்திரன், புதன் வைசிய ஜாதியாம், சனி சூத்திர ஜாதியாம்! இராகு, கேது _ சாங்கிரம (கலப்பு) ஜாதியாம்! இவ்வாறு எழுதிவைத்துள்ளனர் ஜோதிடகர்த்தாக்கள்.

இழிவுக்கும் அவமரியாதைக்கும் உரிய கோள் ஆக, சனியை வைத்திருக்கிறார் பாருங்கள்! சனி சூத்திர ஜாதியாம்! வர்ணதர்ம ஒடுக்குமுறையும் உயர்ஜாதி வெறியும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ள போக்கு இது! அறிவியலில் இல்லாத அது சொல்லாத வர்ண தர்மத்தைச் சுமத்தும் இந்த ஜோதிடம் எப்படி அறிவியலாகும்?

ஆணாம்! பெண்ணாம்! அலியாம்!!

கோள்கள்பற்றிய ஜோதிடத்தின் கற்பனைக்கு எல்லையே இல்லை! உயிரற்ற அறிவற்ற, மனமற்ற வெறும் அஃறினைப் பொருள்களாகிய கோள்கள், துணைக்கோள், விண்மீன் இவை ஆணாக, பெண்ணாக, அலியாக இருக்கின்றனவாம்!

சூரியன், செவ்வாய், குரு(வியாழன்) இவை ஆண்களாம்! சந்திரன், சுக்ரன்(வெள்ளி), ராகு இவை பெண்களாம்! புதன், சனி, கேது இவை அலிகளாம்!! கேலிக்கூத்தாக இல்லை? இப்படி எந்த அறிவியல் கூறுகிறது? பின், எப்படி இந்த ஜோதிடம் அறிவியலாகும்? ஆகும் என்கிறாரே கோவை சுவாமிகள்!

கிரகணம் பற்றிய கிறுக்குத்தனம்

திருக்கணித பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்பட்டுகின்றனவாம்! ஆகவே, ஜோதிடம் அறிவியலாம்! சொல்கிறார் கோவை சுவாமிகள்! கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் உண்யில் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த முன்னோர் கண்டுபிடிப்பா?

வரலாறு கூறும் வானியல் செய்திகள்

கி.மு.747இல், அதாவது கி.மு.8ஆம் நூற்றாண்டில் மெசபடோமியாவில் கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் இருந்துள்ளதாக, கிரேக்க வானியலறிஞர் டாலமி குறிப்பிடுகிறார்.

இந்தக் குறிப்புகள் எகிப்து, இந்தியா, சீனாவுக்குப் பரவியதாக வரலாற கூறுகிறது. கி.மு.7-_6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தேலீஸ் என்னும் கிரேக்க அறிஞர், கதிரவனுக்கும் புவிக்கும் இடையே நிலவு புகுவதால் சூரிய கிரகணம் (Solar Eclipse) ஏறப்டுவதாக, கணித்துச் சொல்லியிருக்கிறார்.

கி.மு.5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனக்காரஸ் என்னும் கிரேக்க அறிஞர், சூரியனுக்கம் சந்திரனுக்கும் இடையே புவி வருவதால் நிகழ்வதே சந்திரகிரகணம் (Lunar Eclipse) என்றார்.

இவர்களுக்கு உரிமை இல்லை!

ஓர் இடத்தில், ஒருமுறை முழுச்சூரிய கிரகணம் (Total Solar Eclipse) தோன்றினால், பின்னர் 360 ஆண்டுகட்கு பிறகுதான் மறுபடியும் முழுச்சூரிய கிரகணம் தோன்றும்.

இதுபோல, பிறவகைக் கிரகணங்களுக்கும், சந்திர சூரிய கிரகணங்களுக்கும் அவற்றிற்கென சுழற்சிக்கால முறை உண்டு. மேலைநாட்டிலிருந்து _ நாடுகளிலிருந்து பெற்ற இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டுதான் பஞ்சாங்கத்தில் கிரகணக் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனரே தவிர, இவர்களாகவே கண்டுபிடித்துச் சொல்லவில்லை! இப்படிச் சொந்தம் கொண்டாட இவர்களுக்கு எவ்வகை உரிமையும் கிடையாது.


இந்தியாவில் தோன்றவில்லை!

இதுமட்டுமல்ல, ஆண்டுகள், மாதங்கள் ஆகவும், மாதங்கள் வாரங்கள் ஆகவும், வாரங்கள் நாள்கள் ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளன. வாரத்தின் 7 நாள்களுக்கும் தனித்தனிப் பெயர்கள் உள்ளன. இந்தப் பெயர்கள் 7 கோள் (கிரகங்)கள் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

இந்த முறைமை, 2000 ஆண்டுக்காலமாகவே இந்திய நிலப்பரப்பில் நடைமுறையில் இருந்துவந்தாலும் இந்தியாவில் தோன்றியது அன்று. இந்த முறை, முதன்முதலில் எகிப்தில் தோன்றியது.

பின்னர், அலெக்சாண்டர், எகிப்தை வெற்றி கண்டபோது இது கிரேக்கநாட்டிலும் பரவியது. கிரேக்க நாட்டிலிருந்துதான் இது இந்தியாவிலும் பரவியது. 12 இராசிகளின் பெயரும் இதுபோல் வந்தவைதாம். இப்படி இருக்க, இந்தியப் பஞ்சாங்கத்தின் கிரகணக் குறிப்புகளை வைத்துக் கொண்டு என்னமாய்க் குதியாட்டம் போடுகிறார் இந்தக் கோவை சுவாமிகள்!

மூடநம்பிக்கைகளின் முகாம்

இனியும், ஜோதிடம் அறிவியல் என்று கிறுக்குத்தனமாக_ அசட்டுத்தனமாகக் கூறுவதை, வேதஜோதிடத்தில் நீ.......ண்ட அனுபவம் வாய்ந்த ஜெகநாத சுவாமிகள் போன்ற ஜோதிட பற்றாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜோதிடம் அறிவியல் என்று கூறுவது அபத்தம் ஆகும். அது, அறிவியல் அல்ல; அல்ல; அல்லவே அல்ல! ஆனால், அது மூடநம்பிக்கைகளின் முகாம்.

---------------- பேரா.ந.வெற்றியழகன் அவர்கள் ஜுன் 1 15 20112 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

21.6.12

நிலவுக்குச் சுற்றுலா செல்ல வேண்டுமா?


நிலவுக்குச் சுற்றுலா செல்ல ரூ.900 கோடி செலவாகும். தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு ருசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடி வா, மலை மேல் ஏறி வா, மல்லிகைப்பூ கொண்டு வா! என்று பாட்டுப் பாடி குழந்தைகளுக்குச் சோறூட்டும் காலம் ஒன்று இருந்தது. நிலா இங்கே வராது - நிலாவுக்குத்தான் நாம் செல்ல வேண்டும்.

இனிமேலாவது பித்தா பிறை சூடிப் பெருமானே - சிவபெருமான் தலையில் சூட்டப்பட்டிருக்கும் சந்திரனே என்று சொல்லும் செய்யுள்களைக் குப்பைக் கூடை யில் தூக்கி எறிந்தால் புத்திக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று நம்பலாம்.

குரு பத்தினியைக் கற்பழித்து விட்டான் சந்திரன், குருவின் சாபத்தால் தேய்பிறையானான் என்கிற மூளிகளை மூளையிலிருந்து கூட்டிப் பெருக்கி, மூலையில் ஒதுக்கினால் ஓகோ, கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர் எனும் பாராட்டுக்கூடக் கிடைக்கப் பெறலாம்.

ராகு, கேது என்ற பாம்புகள் சந்திரனை விழுங்குவதால்தான் சந்திரன் தேய்ந்து கொண்டு போகிறான் என்கிற புராண மூட் டையைப் பொசுக்கி எறிந்தால், அடுத்த தலை முறையினராவது அறிவு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

நவக்கிரகங்களுள் முக்கியமானதான பூமியைப் பட்டியலில் சேர்க்காமல், பூமியின் துணைக் கோளான சந்திரனை நவக்கிரகப் பட்டியலில் சேர்த்துள்ள சோதிடர்களை - மக்கள் மத்தியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக (51ஹ () முட்டாள் தனத்தை முதலாக்கி வியாபாரம் செய்ய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப் படையில் சிறைக் கொட்டடியில் அடைத்தால் விஞ்ஞான மனப்பான்மை இந்தியாவில்கூட முளை விட ஆரம்பித்து விட்டது என்று மன நிறைவு அடையலாம்.

விஞ்ஞானத்தையும் ஒரு பக்கத்தில் அன்றாடம் அனுபவித்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில், அஞ்ஞானத்தையும் ஆலிங்கனம் செய்யும் இரட்டை வேடக்காரர்கள் இனியாவது திருந்துவார்களா?

------------------- மயிலாடன் அவர்கள் 21-6-2012 “விடுதலை” டில் எழுதிய கட்டுரை