Search This Blog

29.11.12

சமதர்மம் பற்றி பெரியார்


சமதர்மம் என்றால், சாதாரணமாக பாரபட்சமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால், இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல் கீழ் நிலை இருந்து வருகிறது.
இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்கு சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம் என்றால், மதக்காரர்களுக்கும், கடவுள் நம்பிக்கைக் கொண்ட ஆஸ்திகர்களுக்கும் கஷ்டமாயிருக்கிறது. உழைப்பாளி மக்கள் உடல் வருந்தியுழைத்த பின்னும் குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் கந்தையின்றியும், குடி இருப்பதற்கு ஓட்டைக் குடிசை கூட இல்லாமல் பரிதவிக்கும் பொழுது எந்தவிதமான வேலையும் செய்யாது, பணக்காரனாக இருக்கின்ற சந்தர்ப் பத்தால், அக்கிரமமாக அநீதியாக தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டு, தான் மட்டும் படோடோபம் டம்பாச்சாரித்தனமாக வீண் விரையமாக்குவது சரியல்ல.
எல்லோரும் கஷ்டப் பட்டு வேலை செய்து பலனை எல்லோரும் சமமாக அனுபவிக்கலாம் என்று சொன்னால், அது முதலாளி களுக்கும், பணக்காரர்களுக்கும், ஜமீன்தார், மிட்டா மிராசுதார் முதலியவர்களுக்கும் விரோதம் என்று வீண் கூக்குரலிடப்படுகிறது. 

சாதாரணமாக இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு, உடுத்திக் களிப்புடன் வாழ்க்கை நடத்துவதில்லையா? அதுபோலவே ஒரு கிராமம், ஒரு ஜில்லா ஒரு மாகாணம் அல்லது தேசத்திலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவும், உள்ள பூமியும், பொருளும் எல்லாம் குடும்ப பொதுச் சொத்து போல் எல்லா மக்களுக் கும் பொதுவாகிய அக்குடும்பத்துக்குச் சொந்தமே அன்றி தனித்தனியாக அவனவன் இஷ்டம்போல் அனுபவிக்கும் தனி உரிமை யாருக்கும் இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கொரு வேலை செய்து, உண்டு உடுத்தி இன்ப வாழ்வு வாழ வேண்டுமென்பதுதான்தான் சமதர்மம், மற்றபடி இதில் பயப்படத்தக்க காரியமும், புரியாத காரியமும் இல்லை.
இந்த சமத்துவமான வாழ்க்கை வேண்டுமென்று கூறும்பொழுது சமதர்ம விரோதிகளான மதவாதிகளும், ஆஸ்திகர்களும் துள்ளிக் குதித்து அது கடவுளுக்காகாது. அவனவன் முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்றாற்போல் சுகமான வாழ்க்கையோ, கஷ்டமான வாழ்க்கையோ நடத்துகிறான். பணக்காரனாகவோ, ஏழையாகவோ இருப்பது கடவுள் சித்தம் அவர் கடாட்சத்தால் அவனுக்கே தனி உரிமை கொடுக்கப்பட்ட பொருள்களைப் பொதுவுடைமை ஆக்கப்படல் அநீதி, கடவுள் கட்டளைக்கு விரோதம் என்று கூப்பாடு போடுகிறார்கள். இன்றைக்கு முனிசிபல் கட்டடத்தையோ, பொது ரஸ்தாவையோ, ரயில்வேயையோ எடுத்துக் கொள்ளுங்கள். இதில் யாருக்கு உரிமையில்லையெனக் கூற முடியும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவற்றை அனுபவிக்கிறார்களா? இல்லையா? இதனால் எந்தக் கடவுளுக்கு, மதத்துக்கு அல்லது பணக்காரனுக்கு ஆபத்து வந்துவிட்டதாகக் கூற முடியுமா? ``மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததான பல வசதிகளையும், சாதனங்களின்றி மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும், பரவாயில்லை. எனக்குத் தேவைக்கு மேலிருந்தாலும், நான் அனுபவிப்பதற்கு வேண்டிய அளவுக்கு மேலிருந் தாலும், அது சும்மா இருந்து வீணாக அழிந்து போவதானாலும், பிறர் அனுபவிக்க நான் பார்க்கக் கூடாது என்றாலும், குறுகிய புத்தியும், கீழான எண்ணமும், சுயநல உணர்ச்சியும் கொண்டவர் களுக்கும்தான் உழைக்கக் கூடாது, உடல் வளையக் கூடாது. ஆனால், பிற மக்கள் உழைப்பதினால், விளையும் பயனைத் தட்டிப் பறித்து அனுபவிக்க வேண்டும் என்னும் சூழ்ச்சிமிக்க சோம்பேறி களுக்கும்தான் சமதர்மம் கசப்பாகவோ, வெறுப் பாகவோ, விரோதமாகவோ இருக்குமே தவிர, அவர்கள் இதைப்பற்றி மறுப்பார்களே தவிர மற்றபடி உடலைச் சாறாகக் கசக்கிப் பிழிந்து வேலை செய்யும் பாட்டாளி மக்களுக்கு இந்தக் கொள்கை ஒரு நாளும் விரோதமானதல்ல. பெரிதும் சாதகம் செய்யவல்ல வாழ்க்கை நிலைமை உயர்த்தவல்ல ஜீவ தாது இது என்றுதான் கூறவேண்டும். உலக ஜனத் தொகையில், 100க்கு 90 பேருக்கு மேற்பட்ட தொழிலாளிகள் பாமர மக்கள் ஆகியவர்களுக்கு அனுகூலமாயிருக்கின்றன. இந்தத் தத்துவத்தை நியாய புத்தியும், நேர்மையும் நோக்கமும், பரந்த மனப்பான்மையும் கொண்ட அனைவரும் ஆதரித்துத்தான் தீருவார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் மலிந்த இன்றைய சமுக அமைப்பால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ, சாந்தியோ, சமாதானமோ உண்டு என்று கூற முடியுமா? ஏழைக்கு கஞ்சியில்லை, கட்டத் துணி இல்லை, இருக்க வீடில்லை. ஓய்வில்லை, இல்லாத பிள்ளைக்கு கல்வி வசதி இல்லை என்பன போன்ற பல ஓயா கவலையே கவலையாய் சதா வறுமைக் கடலிலே கிடந்துழல்கிறான். பணம் படைத்த பணக்காரர்களுக்கோ இருப்பதைக் காக்கவேண்டும், மேலும் பெருக்க வேண்டும், பிறர் கவராது காப்பாற்றவேண்டும் என்றும் கவலையோடு பேராசை மிகுதியால் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்கவே ஆசைப்படுகின்றார்கள். சாதாரணமாக ஒரு தோட்டி வேலை செய்யும் கீழ்தர நிலையில் உள்ளவன், ஆடு, கோழி வளர்த்துக் கொஞ்சம் பணக்காரனாக வேண்டும். பின்னர் மணியக்கா ரனாக ஆக வேண்டும் என்றெண்ணுகிறான். மணியக்கார வேலை கிடைத்தாலும், தாசில்தாராக வேண்டுமென்று ஆசிக்கிறான். அப்படியானாலும், கலெக்டர் ஆகவேண்டும், கவர்னர் ஆகவேண்டும். வைஸ்ராயாக வேண்டும், ஏக சக்கிராதிபதியாய் உலகாள வேண்டும். இன்னும் இதற்குமேல் வேறு உலகங்கள் இருந்தாலும் அவற்றையும் தான் ஒருவனே கட்டி ஆளவேண்டும் என்று கருதுகின்றான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்னவென்றால், கஷ்டப்பட்டு உழைக்காது சுகவாழ்வு நடத்துவதும், தேவைக்குமேற்பட்ட சொத்துகளுக்கு சொந்தக்காரனாக இருப்பதும் ஒரு கவுரவம் என்றும், தனி மதிப்புக்குப் பாத்திரமானது என்றும், கண்ணியமானது என்றும் கருதுகின்ற ஒரு ``மூட நம்பிக்கையே தவிர வேறில்லை.
இந்த மூட நம்பிக்கையின் பயனாய்த் தான் மனிதன் தேவைக்கு மேற்பட்ட பொருள் போகங்களைத் தானும் அனுபவியாது, பிறரையும் அனுபவிக்க விடாது, வைக்கோல் போரைக் காக்கும் நாய்போல் வாழ்கின்றான். இந்தத் தனிவுடைமை வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன்படக் கூடிய பல பொருள்கள் சாதனங்கள் வீண் விரையம் செய்யப்படுகின்றன.
உதாரணமாக மோட்டார் காரை எடுத்துக் கொள்வோம். ஒரு செல்வந்தர் குடும்பத்துக்குத் தனியாக ஒன்று அல்லது மேற்பட்ட கார்கள் வைத்துக் கொண்டிருப்பது இன்றைய அனுபவம். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு மனிதனுக்கு மூன்று அல்லது நான்கு மணிநேர தேவைக்காக உபயோகிக்கப்படும் மோட்டார் ஒரு நாளில் இருபது மணிநேரம் வீணாக யாதொரு பயனும் இன்றி இருக்கிறது. இதில் வீணாக பணம் முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலை மாறி பஞ்சாயத்து போர்டு அல்லது முனிசிபாலிட்டிகளில் ஜனத்தொகைக்குத் தக்கவாறு 10, 15, 20 கார்கள் வைத்துக் கொண்டால், பொதுவில் தேவைப்பட்ட நேரங்களில் உபயோகித்துக் கொண்டால் வீணாக பணம் முடங்கிக் கிடக்க வேண்டிய தேவையில்லை.
இம்மாதிரியான முறைகளை அனுசரிப்பதால் வீண் விரயங்கள் தடுக்கப்பட்டு மக்கள் எல்லோரும் மனித வாழ்வை இன்ப மயமாக்கும் பல சாதனங்களையும் அனுபவித்துப் பயன்படுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படும். இதற்கு பாடுபடாது பிறருழைப்பில் படோடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான, பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.
                    --------------------செங்குந்த மகாஜன மகாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, "புரட்சி", 10.6.1934

28.11.12

கார்த்திகைத் தீபமா? இதற்கு என்ன கதையளப்பு?


இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் அது சடங்குகளின் - பண்டிகைகளின் குவியல். மனிதனின் அறிவைப் பாழ்படுத்துவதோடு நின்று விடாது; மனிதன் கடும் உழைப்பால் ஈட்டிய பொருளையும் சுரண்டக் கூடியதாகும்.

சித்திரை - தமிழ் வருஷப் பிறப்பு, சித்ரா பவுர்ணமி, இராம நவமி, ஆடி மாதம் பூர நட்சத்திரம் விழா, ஆடிப்பூரம் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி புரட்டாசி, நவராத்திரி (ஒன்பது நாள் கூத்து)

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி இன்னோரன்ன... புரட்டாசி சனி (4 சனிக்கிழமைகளிலும் விரதம்) மகாளய அமாவாசை அய்ப்பசி - தீபாவளி கந்தர்சஷ்டி கார்த்திகை மாதம் - கார்த்திகைத் தீபம்
மார்கழி: ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி.
தை தமிழர் திருநாளையும் மாற்றி சங்கராந்தி ஆக்கப்பட்ட கொடுமை! (புராணக் கதை புகுத்தப் பட்டுள்ளது) தைப் பூசம், தை அமாவாசை மாசி மகம், மகாசிவராத்திரி; பங்குனி - பங்குனி உத்திரம், காமன் பண்டிகை.
இப்படி பார்ப்பன சுரண்டலுக்கு நீண்ட பட்டியலை உருவாக்கி வைத்துள்ளனர். தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்த கதையாக ஒவ்வொரு நாளும் பண்டிகை - பண்டிகை என்று கூறி மக்களை சக்கையாக உறிஞ்சி எடுக்கும் மகா மகா கொடுமை.

இந்தப் பண்டிகைகளுக்காகக் கூறப்படும் கதை களோ ஆபாசம் - அருவருப்பு - அடி முட்டாள்தன மாகும்.

ஒரு கதையா? இரு கதையா? பைத்தியக்கார னுக்குக் கள் ஊற்றிய மாதிரி உளறல்! உளறல்!!

நவராத்திரி, தீபாவளி முடிந்த கையுடன் கார்த்திகை வந்து விட்டது. வீட்டுக்கு வீடு அகல் விளக்கு ஏற்றி வைப்பது என்பது எண்ணெய் செலவுக்குத்தான் கேடு.

இன்று திருவண்ணாமலையில் மகா தீபமாம்.

இதற்கு என்ன கதையளப்பு?

பிர்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் போட்டி- இரண்டு பேர்களில் யார் பெரியவன் என்ற சண்டையாம் (கடவுள்களிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது சண்டைதானா?)

பரமசிவன் நடுவில் புகுந்து ஜோதி உருவெடுத்து என் அடி, முடிகளை யார் முதலில் காண்கிறார்களோ அந்த ஆள் தான் பெரிய ஆள் என்றானாம்.
விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டே போனானாம். அடியைக் காண முடியாமல் திரும்பினானாம். (இதனை வைஷ்ணவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது வேறு கதை!)
பிரம்மன் அன்னப் பறவை உருவெடுத்து மேலே பறந்து சென்றானாம். அப்பொழுது தாழம்பூ ஒன்று மேலேயிருந்து கீழே வந்து கொண்டு இருந்ததாம்! எங்கிருந்து வருகிறாய் என்று அன்னப் பறவை தாழம் பூவைப் பார்த்துக் கேட்டதாம். சிவன் முடியிலிருந்து நீண்ட காலமாக வந்து கொண்டுள்ளேன் என்றதாம் தாழம்பூ.

எனக்கு ஒரு உதவி செய். சிவன் முடியை நான் பார்த்துவிட்டதாக சாட்சியம் சொல்லு என்று அன்னப் பறவை - கெஞ்ச, தாழம்பூவும் பரிதாபப்பட்டு பொய்ச்சாட்சி சொல்ல ஒப்புக் கொண்டதாம். சிவனிடம் வந்து சொல்ல, சினம் கொண்ட சிவன் சபித்து விட்டானாம். உனக்குக் கோயில் இல்லாமல்  போகக் கடவது! என்று பிர்மாவுக்கும் - பூசைக்கு உதவாமல் போகக் கடவாய் என்று தாழம்பூவுக்கும் சிவன் சாபமிட்டானாம்!

விஷ்ணுவும், பிர்மாவும் தவறுகளை ஒப்புக் கொண்டு - சிவனே நீதான் சக்தி வாய்ந்தவன் என்று ஒப்புக் கொண்டு, தங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததன் அடையாளமாக இம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும்! என்று கேட்டுக் கொள்ள, சிவபெருமானும் சம்மதித்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகைப் பண்டிகையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று கூறினானாம். அதுதான் திருவண்ணாமலையில் மகா தீபம் கொண்டாடப்படும் இலட்சணம்!

இதில் சில கேள்விகள் உண்டு. பிர்மா, விஷ்ணு எனும் கடவுள்களிடையே யார் பெரியவன் என்று சண்டை போடுவது அசல் சிறுபிள்ளைத்தனம் அல்லவா!
இரண்டாவது, படைத்தல் கடவுள் என்று பார்ப்பனர்கள் கூறும் பிர்மா பொய் சொல்கிறானே, இது எந்த வகை ஒழுக்கம்?

மூன்றாவது, சிவன்தான் மற்ற இரு கடவுள் களையும்விட பெரியவள் என்பதை வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்வார்களா?

நான்காவது, கார்த்திகையில் ஜோதியாய்த் தோன்றுவேன் என்று சிவன் சொன்னபடி, அவனாக அல்லவா ஜோதியாக உருவெடுக்க வேண்டும்? மாறாக மனிதர்களே கொப்பறை சட்டியில் நெய்யை ஊற்றி காடாத் துணியைப் பற்ற வைப்பது யாரை ஏமாற்ற? இது பச்சையான மோசடியல்லவா!
பக்தி வந்தால்தான் புத்தி போய் விடுமே - யார் சிந்திக்கப் போகிறார்கள்? உணவுக்குப் பயன்பட வேண்டிய நெய்யை டன் டன்னாக நெருப்புக்கு இரையாக்குகிறார்களே - இதைவிட பொறுப்பற்ற செயல் வேறு உண்டா? சிந்திப்பீர்!

                        --------------------------"விடுதலை” தலையங்கம் 27-11-2012

27.11.12

ஜாதியை ஒழிக்காமல், சுதந்திரம், சமத்துவம் என்பதெல்லாம் ஏமாற்று வேலையே!

நவம்பர் 26 
 
நவம்பர் 26 என்பது மறக்க முடியாத பொன்னாள். இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமை பெற்றது நவம்பர் 26 இல் (1949) என்பதற்காக அல்ல - இந்த நவம்பர் 26 இல் (1957) ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார்.

சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை என்ற அவசர சட்டம் கொண்டுவந்தும் அதனைக் கிஞ்சிற்றும் சட்டை செய்யவில்லை கருஞ்சட்டைத் தோழர்கள்.

தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை எந்த வகையில் கழகத் தொண்டர்களை உருவாக்கி யுள்ளார் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

மூன்று ஆண்டுகளுக்கோ, பத்து ஆண்டு களுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும் பிரிட்டிஷ்காரன், காங்கிரஸ்காரன் கிளர்ச்சியின்மீது கையாண்ட எவ்விதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகள் நம்மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலுங்கூட, அவைகளுக்குப் பயப்பட்டு என் லட்சியத்தையோ, திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

கழகத் தோழர்களே! தீவிர லட்சியவாதிகளே, நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்து விடவேண்டியதில்லை, பயந்துவிட மாட்டீர்கள்!
சட்டத்தைப் பார்த்து பயந்துவிட்டதாக கெட்டப் பேர் வாங்காதீர்கள்!
ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள் என்று தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டார்.

தந்தை பெரியார் அவர்களின் கட்டளையை ஏற்று 10 ஆயிரம் கழகத் தோழர்கள் போர்க் களத்தில் குதித்தனர் என்றாலும், 4000 பேர்கள் மட்டும் கைது செய்யப்பட்டனர். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்கள் கூடப் போராட்டத்தில் குதித்தனர். சிறையில் பிறந்த குழந்தைக்குச் சிறைப் பறவை என்றுகூடப் பெயர் சூட்டப்பட்டதுண்டு.

பலர் சிறையில் பலியானார்கள் - சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுதலையாகி வந்த சில நாள்களில், சில மாதங்களில்  மரணமடைந்தனர் சிலர்.

1957 நவம்பர் 26 இல் எந்தக் காரணத்தை முன்னிட்டு தந்தை பெரியார் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தச் செய்தார்களோ அந்தக் காரணம் இன்னும் நிலுவையில் இருக்கத்தான் செய்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக நடத்திய (1973 டிசம்பர் 8, 9) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக, ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

தீண்டாமை என்பது ஜாதியின் விளைவாகும். ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு தீண்டாமை ஒழிப்பு என்பது நிஜத்தைவிட்டு நிழலோடு மோதுவதாகும்.

இன்றுவரை கோவில் கருவறைகளில் பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்கள் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதெல்லாம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மதப் பாதுகாப்புப் பிரிவுகளே!

இன்றைக்கும் ஜாதி வெறியர்கள் ஜாதியை தன்னலத்துக்கும், தலைவர்கள் ஆவதற்கும், அரசியலுக்கும் பயன்படுத்தி வருவதை நாடு கண்டுகொண்டுதானே இருக்கிறது.

55 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் அறிவித்து நடத்தப்பட்ட போராட்டம் இன்றைக்கும் தேவைப்படும் ஒரு நிலை - இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லப்படுவதற்குத் தகுதியுடையது அல்ல. சோசலிசம்பற்றிப் பேசுவதற்கு, அருகதை உடையதும் அல்ல.

முற்போக்குச் சக்திகள் இதில் கவனம் செலுத்துவார்களாக!

ஜாதி என்பது பிறவியில் பேதம் பேசும் கீழ்க் குணமாகும். இதனை ஒழிக்காமல், சுதந்திரம், சமத்துவம் என்பதெல்லாம் ஏமாற்று வேலையே!


                --------------------” விடுதலை” தலையங்கம் 26-11-2012

26.11.12

பெரியார் திடலில் ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமண விழா

ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தோர், மணவிலக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான இணையர் தேடும் மன்றல் விழா!
பெரியார் திடலில் சுயமரியாதைத் தீ!
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சாதனையோ சாதனை!!

சென்னை, நவ.25- ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தோர், மண விலக்குப் பெற்றவர். மாற்றுத் திறனாளிகளுக்கான இணையர் தேடும் மன்றல் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் இன்று காலை முதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. பெரியார் திடலே நிரம்பி வழிந்தது என்று சொல்லும் வண்ணம் வந்து கொண்டே இருந்தனர். பெண்கள் உடன்கட்டை ஏறுவதை தடுத்தவர் ராஜாராம் மோகன்ராய் என்று சொல்கிறார்கள்.
ஆனால், ஒரு தீ விபத்தில் தன் கணவரை இழந்த என் மகளுக்கு அதற்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்திருப்பது அய்யா தந்தை பெரியாரின் கொள்கைதான். பல்வேறு புரட்சிகரமான நிகழ்வுகளுக்கு முன்னோடியாக இருக்கும் பெரியார் திடல், இப்போதும் இப்படி ஒரு முற்போக்கான நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துவது வெகு சிறப்பானது, மன்றல் நிகழ்வில் இணையரை இழந்த தன் மகள் சாந்தகுமாரி(33)க்கு மறுமணம் செய்யும் நோக்கோடு வந்திருந்திருந்த ஒரு தந்தை நம்மிடம் நன்றி பெருக்கோடு இப்படி கூறினார்.

ஆம், பெரியார் மறைந்து இத்தனை ஆண்டு களுக்கு பிறகும் கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்கும் துணிச்சல், எண்ணம் இந்த சமூகத்தில் நிலைபெறச் செய்வதற்கு அஸ்திவாரமாக அவரின் கொள்கை வீரியத்தோடு விளங்குகிறது என்பதை எண்ணி பார்த்து நாம் திமிர் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை காலை பெரியார் திடலில் 9 மணிக்கெல்லாம் சாரை சாரையாக மக்கள் கூட்டம்.

ஏராள பதிவுகள்
ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மாற்று திறனாளி, இணையை இழந்தோர், மணமுறிவு பெற்றோர் ஆகிய பிரிவுகளுக்கு தனித் தனியே கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தங்களுக்கு விருப்பமான கவுன்டர்களில் ஆர்வமாக இளம் வயதினரும் அவர்களுடைய பெற்றோர்களும் பதிவுகளை செய்த வண்ணம் இருந்தனர். எண்ணிக்கை கட்டுக்கடங் காமல் போனதால் ஒருகட்டத்தோடு பதிவுகளை நிறுத்தும் நிலையே ஏற்பட்டது.

இது குறித்து கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய சிறப்பம்சம் ஒன்று உண்டு. பெரியார் திடலுக்கு வந்திருந்த அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது அந்த நிகழ்வு. நம்புங்கள் தோழர்களே! அமைக்கப்பட்டிருந்த அத்துணை கவுன்டர்களிலும் கூட்டம் அதிகம் மொய்த்த்து ஜாதிமறுப்புக்கான பிரிவில்தான். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தோடு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள நீண்ட வரிசையில் இருபால் இளைஞர்களும் அவர்களின் பெற்றோர்களும் நின்ற காட்சி அடேயப்பா! தந்தை பெரியார் இருந்து இந்த காட்சியைப் பார்த்திருக்க வேண்டும்  பூரித்து போயிருப்பார்!

என் மகள் ஜெயந்தி(31), இசையில் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார். கால் ஊனமானவர். அவருக்கு ஏற்ற துணை தேடி வந்திருக்கிறோம். ஜாதி, மதம் எதுவாக இருந்தாலும் அதை பற்றி யெல்லாம் கவலையில்லை. என் மகளை அன்போடு நடத்தக்கூடிய மனமுடையவராக இருந்தால் போதும், சென்னை வானகரத்தில் இருந்து வந்திருந்த மோகன் என்பவர் கூறியது.

இளைஞர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு காட்டும் ஆதரவை பார்க்கும்போது, ஒன்றை மட்டும் உரக்க சொல்லிக் கொள்ளலாம்----பெரியார் வாழ்வார்! பெரியாரியல் வெல்லும்!! வென்றே தீரும்!!!

தமிழ் மண்ணின் ரசாயனத் தன்மையை பெரியார் மாற்றியிருக்கிறார், அவரின் தாக்கம் எந்த அளவுக்கு ஊடுருவி சென்றுள்ளது என்பதற்கு இந்த ஒன்றே தக்க சான்று!
மன்றல் 2012 ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழாவை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் துவக்கி வைத்தார். சுயமரியாதை திருமண இயக்குநர் திருமகள், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் பிறைநுதல் செல்வி, இரா. ஜெயகுமார்,  மனித வள பயிற்சியாளர் அருள்வேல்  ஆகியோர் உள்ளனர். (25-11-2012)

சுயமரியாதைத் தீ
ஜாதி, மதம் இவைதான் தமிழினத்தின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக நிற்கின்றன. அவற்றை தகர்த்து எறிந்தே தீர வேண்டும். என் உறவுக்காரப் பெண்கள் இருவர் நித்யமலர்(22) மற்றும் தாட்சாயிணி(22) ஆகியோர் இந்த முற்போக்கு திருமணம் செய்து கொள்ள இங்கே பதிவு செய் திருக்கிறார்கள், இது வாணியம்பாடி இளம்பரிதி.

ஜாதி தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளை யில் பெரியார் திடல் சுயமரியாதை தீயை பற்ற வைத்திருக்கிறது. தீ பரவட்டும்!
                -----------------------"விடுதலை” 25-11-2012

25.11.12

பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்களா? பார்ப்பனர்கள் இன்றைக்கும் எப்படி இருக்கிறார்கள்?

ஹிந்து தர்மாவைக் காப்பாற்றுகிறார்களாம்!

பார்ப்பனர்கள் இன்றைக்கும் எப்படி இருக்கிறார்கள்?

அவர்கள் எப்பொழுதோ திருந்தி விட்டார்கள். அவர்களிடையே எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன!

முனியாண்டி ஓட்டலில் மூச்சு முட்ட சாப்பிடுகிறார்கள் _ தண்ணி அடிக்கிறார்கள்; கஞ்சா அடிக்கிறார்கள் என்று சொல்லுவதெல்லாம் மாற்றமா?
மாட்டு நாக்கைத் தேடி வாங்கி சாப்பிடும் சர்.சி.பி. இராமசாமி அய்யர் கூட பார்ப்பனீயத் தன்மையைக் கட்டிக் காப்பதிலும், முட்டுக் கொடுப் பதிலும் முப்புரி நூலை முறுக்கிக் கொண்டு முன் வரிசையில் தானே நின்றிருக்கிறார்.

பல்கலைக் கழகத்திலே தங்க மெடல் வாங்கிய கே.ஆர். நாராயணன் பட்டுச் சட்டை போட்டு வந்தார் என்பதற்காக ஒரு கல்லூரி உதவிப் பேராசிரியர் வேலை கொடுக்க முன் வரவில்லையே! மாறாகக் கிளார்க்கு வேலை இருக்கிறது _ என்ன போறீயா என்று கேட்டவர்தானே?

குடிஅரசு தலைவரான நிலையில் இதுபற்றிக் கூறிப் புலம்பினாரே கே.ஆர். நாராயணன்.

வலைத் தளத்தில் ஒரு செய்தி! சென்னையைச் சேர்ந்த நாகராசன் என்ற ஒரு பார்ப்பனர்; அவர் ஒரு காலத்தில் நாத்திகவாதியாக இருந்து, மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் தெய்வத்தின் குரலைப் படித்துத் திருந்தி விட்டாராம். (அரைகுறை ஆசாமி!)
என்ன திருத்தம்? அங்கேதான் சமாச்சாரமே சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டிருக்கிறது.

நாகராஜனின் மகள் -வைஷ்ணவி பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணம் கட்டி இருக்கிறார்கள். பிள்ளையாண் டானுக்கும், பெண்ணுக்கும் இடைப் பட்ட வயது ஒன்றும் அதிகம் இல்லை _  பத்தே பத்து தானாம்!

சென்னையில் படித்த பெண்;  நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடு _ பள்ளித் தலைமை ஆசிரியை நல்லா படிக்கிற பெண்ணுக்கு இப்ப என்ன கல்யாண அவசரம் என்று கேட்டி ருக்கிறார்.
இல்லை; இல்லை; கல்யாணத்துப் பிறகும் கூட எங்கள் பெண் படிப்பாள் என்று உத்தரவாதம் கொடுக்க, தலைமை ஆசிரியையும் நம்பி ஆசீர் வாதம் பண்ணி அனுப்பி வைத்தாராம்!

பெண்ணின் தாயார் சொல்கிறார் கேண்மின்! சிட்டியில கல்யாணப் பண்ணினா பிரச்சினை ஆகுமுன்னு கிராமத்திலே பண்ணினோம். அந்த நாள் கல்யாணம் பெரியவர் எப்படி சாஸ்திர வார்தமா பண்ணச் சொன்னாளோ அதே மாதிரி நடந்தது விவாகம் என்றார்.

பெண்ணின் தோப்பனாரோ கல்யாணம் சத்தியமங்கலத்தில் நடந்தது என்று கூறுகிறார்.

காஞ்சி  பெரியவாள் கூறியபடி நடத்தினார்களாம். ஹிந்து தர்மாவை கடைப்பிடிப்பதற்காகவே இப்படி செய்தார்களாம்!

பார்ப்பனர்கள் என்னவோ திருந்தி விட்டனர் என்று பார்ப்பனர்களைவிட பத்து மடங்கு அதிகம் பாய்ந்து பார்ப்பனர் அல்லாதார் சிலர் பசப்பு கிறார்களே _ இந்தக் குழந்தைத் திருமணத்துக்கு என்ன சமாதானம் சொல்லுவார்கள்?
ஹிந்து தர்மாவைக் காப்பாற்ற இவ்வாறு செய்தார்களாம். பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம்... ஆனால் சாஸ்திரத்தைப்பற்றி கவலைப்படுகிறார்களே தவிர சட்டத்தை மலம் துடைக்கும் காகிதமாக அல்லவா கசக்கி வீசுகிறார்கள்?

பெண்களுக்கு வயது வரம்பை நிர்ணயிக்கும் சாரதா சட்டத்தை எதிர்த்துப் பார்ப்பனத் தலைவர்கள் எப்படி எல்லாம் கூச்சல் போட் டார்கள்?
அரசாங்கம் இந்துக்களுடைய விவாகத்தில் தலையிட்டால் இந்து சமூகமே கெட்டு விடும்; பெண் களுக்கு 10,12 வயதுக்கு முன்னமையே திருமணம் செய்து விட வேண்டும், இல்லையேல் பாவம் வந்து சூழும் என்று பராசரர் எழுதி இருக்கிறார். நாங்கள் பாவத்திற்குப் பயப்படு வோமா? அல்லது உங்கள் சட்டத் திற்குப் பயப்படுவோமா என்று வயது சம்மதக் குழுவின் முன் சாட்சியம் அளித்தாரே திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்.

இந்து ஏட்டுக்கு மூக்குடைப்பு

இந்து ஏடு வேடிக்கையான வெண்டைக்காய், விளக்கெண்ணெய் பாஷ்யம் செய்தது.

இதுகுறித்து திராவிடன் ஏடு மூக்கை உடைக்கும் வண்ணம் பதிலடி கொடுத்தது.

இந்து பத்திரிகையில்  10 வயதுப் பெண்ணோ அல்லது 12 வயதுப் பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத் திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ! இந்துவே. நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனயே! இந்தக் காலத்தில்கூட 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமோ? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்: 10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதானது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டுக்குள் விட்டுக் கதவு சாத்து கின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத்தனமாகப் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் ஓ இந்துவே! 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக் குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10,12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பது ஏன்? அதுகூட உங்கள் நிச்சயதார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்திபோல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது. (திராவிடன் 13.03.1928 பக்கம் 7)
என்னதான் பார்ப்பனர்கள் படித் திருந்தாலும், பட்டம் பெற்றிருந்தாலும், தங்களின் பாசி பிடித்த பார்ப்பனீய ஆபாச கலாச்சாரத்திலிருந்து வெளியேறிட விரும்புவதில்லை.

எடுத்துக்காட்டாக திருவாளர் சோ. ராமசாமி அய்யரை எடுத்துக் கொள்ளலாம். இன்று வரை மனுதர்ம சாஸ்திரத்திற்கு முட்டுக் கொடுத்து எழுதி எழுதி மாய்கிறார்.

அந்த மனுதர்மம் என்ன கூறு கிறது? நாம் கூறினால் நமக்கு ஒரு முத்திரையைக் குத்தி விடுவார்கள் மறைந்த காஞ்சி மகாப் பெரியவாள் என்று மகாத்மியம் பேசுவார்களே, சந்திரசேகரேந்திர சரஸ்வதி, அவரின் அத்தியந்த சீடர் அன்னியோன்யம் என்று சொல்லுவார்களே _ அந்த அளவுக்குப் பாசக் கயிற்றால் பிணை யப்பட்டவரான அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

நக்கீரன் இதழில்  எழுதிய  எங்கே போகிறது இந்து மதம்? என்ற தொடர் பெரிய நூலாகவே வெளி வந்துள்ளது.

பால்ய திருமணம் குறித்து மனுகூறுவதை அவரே விசனப்பட்டு எழுதியுள்ளார். அதனை எடுத்துக் காட்டுவதற்குக்கூட, எழுதுவதற்குக் கூட பேனாமுனை வெட்கப்படுகிறது.

இந்த ஸ்மிருதி (மனுஸ்மிருதி) விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டு இருப்பதற்காக சமஸ்கிருதப் பாஷையே கூச்சப்பட வேண்டும் என்று பீடிகை போட்டே எழுதியுள்ளார்.
அவர் எழுதியதாவது: இக்கால அப்பாக்களுக்கு தெரி யாமல் இருக்கலாம். அக்கால அப்பாக் களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்தத் தண் டனையை அனுபவிப்பதை அவர் களால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள்; அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?

மாஸி மாஸி ரஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...

இந்த ஸ்மிருதி விதியை எழுது வதற்கு என்  பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது.. தமிழன் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.

அது என்னவென்றால்... அடே கையாலாகாத அப்பா.. உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்க வேண்டும். தவறிவிட்டாய், அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.

ருதுவான பின் மூன்று வருஷத் துக்குள் நீ அவளுக்கு மண முடிக்க வில்லையென்றால்.. அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும்வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?

அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமா காமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற் றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறு கிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தண்டனை!

பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன் னதைத் தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல... இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது என்று எழுதியிருப்பவர் விடுதலை ஆசிரியர் அல்லர்; மறைந்த மகா பெரியவாளின்  அத்தியந்த சிஷ்யர் அக்னி கோத்திரம் ராமானுஜ தாத் தாச்சாரியார் _ நினைவில் வையுங்கள்!

பார்ப்பனர்களின் கூவம் கலாச்சாரத்துக்கு மேலும் என்ன சாட்சியம் வேண்டும்?
பத்தாம் வகுப்பில் படித்த பெண்ணை சத்தியமங்கலத்துக்கு அழைத்துச் சென்று அய்ந்து நாள்கள் கல்யாணம் நடத்தியுள்ளனர் - பெரிய சங்கராச்சாரியார் சொன்னதுக்கேற்ப நடத்தி இருக்கின்றனர். ஹிந்து தர்மாவைக் கடைபிடிப்பதற்காகத்தான் இப்படி செய்துள்ளார்களாம். பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்களா? பதில் உங்கள் முடிவுக்கே!

சட்டம் என்ன செய்கிறது?

15 வயது பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். சிதம்பரத்தில் தீட்சதர்கள் வீடுகளிலும் பால்ய கல்யாணங்கள் இன்றும் நடந்து கொண்டு தானிருக்கின்றன. அரசு சட்டம் கொட்டாவி விட்டுக் கொண்டு இருப்பானேன்? பார்ப்பனர் சமாச்சாரம் என்றால் சட்டம்கூட பதுங்குக் குழிக்குப் போய் விடுமோ!

 ----------------------- மின்சாரம் அவர்கள் 24-11-2012 “விடுதலை”ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை