Search This Blog

3.11.12

தீபாவளிப் பண்டிகை: நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? -2




ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத் தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்தபுராணம், பெரியபுராணம், திரு விளையாடற்புராணம் முதலியவை பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லா வற்றையும் பொய்யென்று ஒப்புக் கொண்டாய் விட்டது. அப்படியிருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில், இந்தக் காலத்தில், இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வ தென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகா சூரன், கிருஷ்ணன். அவனது இரண் டாவது பெண்ஜாதியாகிய சத்திய பாமை ஆகியவைகளாகும் எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும், இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமுகக்காரர்களென்றும், கலைகளிலும் ஞானங்களிலும், நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், தட்டிப் பேச ஆளில்லாவிடங்களில் சண்டப் பிரசண்டமாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளை மாடு கன்று போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர் களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர் களுக்குள்ளும், பாமர மக்கள் என்பவர் களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய, காளைமாடு எப்படி கன்றுப் போடும் என்று கேட்கின்ற மக்களை காண்பது என்பது அரிதாகவே இருக்கின்றன, மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்திரங் களில் இருப்பவர்களைவிட, பட்டணங் களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத் தன மாகவும், பட்டணங்களில் இருப்பவர் களை விட சென்னை முதலான பிர தான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதைப் பார்க்கின்றோம்.  உதாரணமாக, தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு கிருத் திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட நகரங்களில் அதிகமாகவும், மற்ற நகரங்களை விட சென்னையில் அதிகமாகவும் கொண் டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான் மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகிறோம் என்பதே தெரியாதவர்களாகவே யிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களை பின்பற்றி நடக்கும் மோச மான இடம் தமிழ்நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லையென்று சொல்லி விடலாம்.

ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங் களில் பாரத இராமாயணக் காலட்சே பங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள் தோறும் சகதா கலாட்சேபங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌ ரவப்பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ் தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப் பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லா தார்களில் இந்தக் கூட்டத்தார்கள்தான் ஆரியர் வேறு, தமிழர் வேறு என்பாரும், புராணங்களுக்கும், திராவிடர் களுக்கும் சம்பந்தமில்லை என்பாரும், தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப்பனரல்லாத சமுகத்தாருக்கு நாங்கள் தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்களின் பழைய நாகரிகத் திற்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பாரும் பெரு வாரியாக இருப்பார்கள். ஆகவே, இதுபோன்ற படித்த கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்த மான காரியங்களை எதிர்பார்ப்பதை விட, உலக அறி வுடைய, சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரச்சாரம் செய்வதும் பயன் தரத்தக்க தாகும்.

உதாரணமாக, ராமேஸ்வர தேவஸ்தானக் கமிட்டியாரின் ஒரு ரிப்போர்ட்டில் மக்கள் ராமேஸ் வரத்திற்கு முந்திய வழக்கம் போல் இப்போது யாத் திரைக்கு வருவதில்லையென்றும், அத னால் வரும்படி குறைந்து விட்டதென் றும், அதுபோலவே திருப்பதி மகந்து அவர்களின் ஒரு வருஷாந்திர ரிப்போர்ட் டில் அவ்வருஷம் திருப்பதிக்கு யாத் திரைக்காரர்கள் மிகக் குறைந்துபோய், அதனால் கோவிலுக்கு முந்திய வருஷங் களைவிட பகுதி வரும்படிகூட எதிர் பார்க்க முடியாததாய் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதனாலும், சங்க ராச்சாரியார், ஜீயர் முதலிய மடாதிபதிகள் செல்லுகின்ற பக்கங்களிலெல்லாம் முன் போல் வரவேற்பு ஆடரம்பரங்களும், வரும்படியும் இல்லாமல் சீக்கிரம் சீக்கிர மாக சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்புவதிலிருந்தும், பிராமண மகாநாடுகளும், சமய பத்திரிகைகளும் மூட்டை கட்டப்படுவதிலிருந்தும் ஒரு விதத்தில் பாமர மக்களிடை உண்மை உணர்ச்சி பரவி இருக்கின்றதென்பதை உணர முடிந்தாலும், வழிகாட்டி களென்றும், தலைவர்களென்றும், பொது ஜனங்களின் தர்மகர்த்தாகளென்றும், படிப்பாளிகள் என்றும் தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுக்குள் அநேகமாக சிறிது உணர்ச்சி கூடக் காணாம லிருப்பதால் அவர்களைப் பற்றி நாம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.

எப்படியானாலும், இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மை யான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக் கவோ, கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன். அன்றியும், இத்தீபா வளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமாயிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.

தீபாவளியின் கதைச் சுருக்கம்

ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும், பூமிக்கும் பிறந்தவனாம்.  அவன் தேவர்களையெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப் பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம்.
உடனே, திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூமிதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டா னாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டு மென்று வாக்களித்தாராம். அதற்காக வேண்டி மக்கள் எல்லோரையும் கொண் டாடும்படி கடவுள் செய்துவிட்டாராம். ஆதலால், நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத் திப் பார்ப்போம்.  முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்க முடியுமா?
எல்லா உலகங்களையும் உண்டாக் கிய, நான்முகனைப் பெற்றவரும், உல கங்களையெல்லாம் காத்துவருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்கும், பூமிதேவிக்கும் எப்படி குழந்தை பிறக்கும்? பூமிதேவி என்றால் உலகம் அல்லவா? அப்படித் தான் பிறந்த அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்ல வேண் டுமோ?
மேற்படி நரகாசுரனைக் கொன்ற போது அதன் தாயாகிய பூமிதேவியும் சத்தியபாமையாகப் பிறந்து உடனிருந்த தாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! பொறுமையில் பூமிதேவிபோல் என்ற உதாரணத்திற்கு கூட பண்டிதரும், பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமிதேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்க வேண்டுமென்று திரு மாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!

தமிழர்களாகிய நம்மையே அசுரர் களென்றும், ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவ -அசுரப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாக கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக் கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண்செலவு செய்வதென் றால், நமது சுயமரியாதையை என்னென் பது? நமது பகுத்தறிவை என்னவென்று சொல்லுவது?


சென்றது போக, இனிமேற் கொண் டாவது தீபாவளியை, அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை, நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிட நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள் கிறேன்.
 
(நிறைவு)
                      -----------------------தந்தைபெரியார் -”குடிஅரசு” - கட்டுரை - 01.11.1936

தீபாவளிப் பண்டிகை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? அப்பண்டி கைக்கும், எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லி விடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப் போகின்றீர்களா? என்பதுதான் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்பதின் தத்துவமாகும்.

நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மை தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சி இன்றி, சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள் ளுகின்றீர்களேயல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர் களேயல்லாமல், மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம் என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களேயல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செல வழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன் படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந் நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார் களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக் கான மக்கள் ஞானமற்று, மானமற்று கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலை வதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.
புராண கதைகளைப் பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லா ருக்கும் தெரிந்தது தானே! அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சுவிடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராண புரட்டை உணர்ந்தவர் களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை, கொண் டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய் தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப் பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோ ஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி, அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றியும் பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லி விட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப் பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்து வதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும், பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடுவீடாய், கூட்டங்கூட்டமாய்ச் சென்று, பல்லைக் காட்டி கெஞ்சி, பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர் விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து, அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து, அவை களில் பெரும் பாகம் கண்டவர்களுக்கு கொடுப்பதும், வீணாக்குவதும் ஆறு: இந்தச் செலவுகளுக்காக கடன் படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருப்பது என்பதும், பட்டாசு வெடிமருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந் தாலும் மற்றும் இவைகளுக் கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்த சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிது கூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். 

                     தொடரும்.. --------------------------------- பெரியார் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை -”குடிஅரசு” 1-11-1936

2.11.12

தீபாவளி - தத்துவமும் இரகசியமும் -2



டேவிஸ் : டேய்! ராமானுஜம் எங்கேடா புறப்பட்டு விட்டாய்?
ராமானுஜம் : எங்கள் சொந்த ஊருக்குப் போகிறேன்.
டேவிஸ் : உங்கள் சொந்த ஊருக்கா? எதற்காகப் போகிறாய்?
ரா-ம் : அடடே! என்ன இப்படிக் கேட்கிறாய். தீபாவளிப் பண்டிகை
வருகிறதல்லவா, அதற்காகப் போகிறேன்.
டேவிஸ் : என்ன பண்டிகை?
ரா-ம் : தீபாவளிப் பண்டிகை.
டேவிஸ் : தீபாவளியா? அது என்ன பண்டிகையப்பா? எதற்காக அதைக் கொண்டாடுவது?
ரா-ம் : அப்படிக் கேளு, சொல்லுகிறேன். தீபாவளி என்பது உலகத்துக்குக் கேடு விளைவித்த ஒரு அசுரன், கடவுளால் கொல்லப்பட்ட நாளை மக்கள் கொண்டாடுவதாகும். அதை நீயும் கொண்டாடலாம். இப்பொழுது வெள்ளையனை ஒழித்த நாளை நாம் சுதந்தர நாளாகக் கொண்டாடவில்லையா அதுபோல்.

டேவிஸ் : அப்படியா அந்த அசுரன் யார்? அவன் எப்படி உலகுக்குக் கேடு செய்தான்? அந்தக் காலத்தில் அணுகுண்டு இருந்திருக்காதே. இந்தக் காலத்தில் அணு குண்டு வைத்திருப்பவனையும், இன்னும் மக்கள் சமுதாயத்துக்கு என்ன என்னமோ கேடு செய்கிறவர் களையும் பற்றி நாம் ஒன்றுமே பேசுவதில்லை. அப்படி இருக்க அந்த அசுரன் யார்? அவன் என்ன கேடு செய்தான்?
ரா-ம் : அந்த அசுரன் பெயர் நரகாசூரன். அவன் பூமியிலிருந்து பிறந்தவன். அவன் தகப்பன் மகா விஷ்ணு. அவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத் தான். அதனால் மகாவிஷ்ணுவும் அவர் மனைவியும் சேர்ந்து அவனைக் கொன்றுவிட்டார்கள். இனி எவரும் தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கு ஆக அவன் செத்த நாளைக் கொண்டாடுவது, தெரிந்ததா? இதுதான் தீபாவளித் தத்துவம்.

டேவிஸ் : தெரிந்தது. ஆனால், அதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று என் மனம் ஆசைப்படு கிறது. அதாவது, அவன் மகாவிஷ்ணுவுக்கும் பூமிக்கும் எப்படிப் பிறக்க முடியும்? பூமியானது மண்கல் உருவத்தில் இருந்தது. மகாவிஷ்ணுவுக்கு பூமியுடன் எப்படிக் கலவி செய்ய முடிந்தது? பூமி எப்படி கர்ப்பம் தரிக்கும்? அதற்கு எப்படிப் பிள்ளை பிறக்கும்? எனக் குப் புரியவில்லையே?
ரா-ம் : அட பயித்தியக்காரனே! மகாவிஷ்ணு நேராகவா போய் கலவி செய்வார். அதற்கு அவருக்கு மனைவிகள் இல்லையா? ஆதலால் அவர் நேராகக் கலவி செய்யவில்லை; மகாவிஷ்ணு பன்றி உருவ மெடுத்தார்.
டேவிஸ் : பொறு, பொறு. இங்கே கொஞ்சம் விளக்கம் தேவை; மகாவிஷ்ணு பன்றி உருவம் ஏன் எடுத்தார்.

ரா-ம் : அதுவா, சரி! சொல்லுகிறேன் கேள். இரண் யாட்சதன் என்று ஒரு இராட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.
டேவிஸ் : பொறு, பொறு; ஓடாதே; இங்கே எனக்கு ஒரு மயக்கம்.
ரா-ம் : இதிலென்னப்பா மயக்கம்? நான்தான் தெளிவாகச் சொல்லுகிறேனே; பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு சமுத்திரத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டான் என்று.
டேவிஸ் : சரி, அது அர்த்தமாச்சுது.
ரா-ம் : பின்னே, எது அர்த்தமாகவில்லை? சும்மா தொல்லை கொடுக்கிறாயே?

 டேவிஸ் : தொல்லை ஒன்றுமில்லை; உன் சங்கதி தான் என் மூளைக்குத் தொல்லை கொடுக்கிறது; தலை சுற்றுகிறது; அதாவது ஒரு இராட்சதன் - அப்டீன்னா என்ன? அது கிடக்கட்டும். அவன் பெயர் இரண்யாட்சதன். அதுவும் போகட்டும். அவன் கதை அப்புறம் கேட்போம். அந்த இராட்சதன் பூமியை எப்படிச் சுருட்டினான்? பூமிதான் பந்து போல் இருக்கிறதே! அவன் அதைச் சுருட்டுவதானால் ஒரு சமயம் உருட்ட முடியுமே ஒழிய, சுருட்ட முடியாது. அதுவும் போகட்டும்; சுருட்டினான் என்கிறாய். சுருட்டி னான் என்றே வைத்துக் கொள்வோம். சுருட்டினானே அவன், சுருட்டும்போது தான் எங்கே இருந்துகொண்டு சுருட்டினான்? சுருட்டிக் கொண்டு ஓடினானே, எதன் மேல் நடந்து ஓடினான்? ஆகாயத்தில் பறந்துகொண்டே சுருட்டி இருக்கலாம்! ஆகாயத்திலே பறந்துகொண்டே ஓடி இருக்கலாம்! கருடன் மகாவிஷ்ணுவையும் அவர் பெண்டாட்டியையும் தூக்கிக்கொண்டு பறப்பதுபோல் பறந்து இருக்கலாம்! ஆனால், அவன் சமுத்திரத்திற்குள் ஒளிந்துகொண்டான் என்றாயே; அந்த சமுத்திரம் எதன் மேல் இருந்தது? பூமியின் மேல் இல்லாமல் அதுவும் ஆகாயத்தில் தொங்கிக்கொண்டோ அல்லது பறந்துகொண்டோ இருந்தது என்றால் சமுத்திரம் தண்ணீர் ஆயிற்றே, அது ஒழுகிப்போய் இருக்காதா? அப்போது அடியில் ஒளிந்து கொண்டிருப்பவன் தொப் பென்று கீழே பூமியுடன் விழுந்திருக்க மாட்டானா? அல்லது அது வேறு உலகம், இது வேறு உலகமா? நமக்கு ஒன்றும் புரியவில்லையே? இதை எனக்குப் புரிய வைக்க வேண்டும்; நாமும் பி.ஏ., 2வது வருஷம் பூகோளம், வானநூல் சைன்ஸ் படித்தவர்கள்; ஆத லால் இந்த சந்தேகம் வருகிறது. நாம் படிக்காத மடையர்களாய் இருந்தால் குற்றமில்லை. சற்றுச் சொல்லு பார்ப்போம்.
ரா-ம் : இதெல்லாம் பெரியோர்கள் சொன்ன விஷயம். சாஸ்திரங்கள் சொன்ன விஷயம். மதத் தத்துவம். ஆதலால் இவைகளை இப்படியெல்லாம் கேட்கக்கூடாது. நாஸ்திகர்கள்தான் இப்படிக் கேட் பார்கள். கருப்புச் சட்டைக்காரர்கள்தான் இப்படிக் கேட்பார்கள். இத்தனை ஆயிரம் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்களே, ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? சோஷியலிஸ்டுகளில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? நீதான் இப்படிக் கேட்கிறாய்; நீ கருப்புச் சட்டைக்காரன் தான் சந்தேகமில்லை.
டேவிஸ் : நீ என்னப்பா இப்படிப் பேசறே. பி.ஏ. படிக்கிறவனாகத் தெரியவில்லை; பூமிக்குப் பிறந்தான் என்றாய்! பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போனான் என்கிறாய்! எப்படிப் பிறந்தான்? எப்படித் தூக்கிக் கொண்டு-எப்படிப் போனான்? என்றால், கோபப்படுகிறாய்! இந்தக் கதையைப் பண்டிகையாக வைத்துக் கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடுகிறார் கள் என்கிறாய். சர்க்கார் இதற்கு லீவு விடுகிறது. பல லட்சம் பிள்ளைகள் அன்று படிப்பதைவிட்டுத் தெரு சுற்றுகிறார்கள்; இவ்வளவு பெரிய சங்கதியைக் கேட்டால் என்னைக் கருப்புச் சட்டை என்கிறாய்; கருப்புச் சட்டை போடாதவனுக்குப் புத்தியே இருக்கக் கூடாதா? புத்தி கருப்புச் சட்டைக்குத்தான் சொந்தமா? சரி அதிருக்கட்டும் அப்புறம் அவன் ஓடிப்போய் சமுத்திரத்தில் ஒளிந்துகொண்டான்; அப்புறம்?
 
ரா-ம் : ஒளிந்துகொண்டான்; பூமியில் இருந்தவர்ள் எல்லாம் போய் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.
டேவிஸ் : இரு, இரு இது, பூமியைச் சுருட்டின போது பூமியில் இருந்தவர்கள் ஓடிவிட்டார்களோ? நோட்டீஸ் கொடுத்துவிட்டுத்தான் சுருட்டினானோ?
ரா-ம் : நீ என்னப்பா சுத்த அதிகப் பிரசங்கியாக இருக்கிறே! ஓடிப்போய் முறையிட்டார்கள் என்றால், “எப்படிப் போனார்கள்” “வெங்காயம் வீசை என்ன விலை” “கருவாடும் கத்தரிக்காவும் போட்டுக் குழம்பு வெச்சால் நல்லா இருக்குமா?” என்பது போன்ற அதிகப் பிரசங்கமான கேள்விகளை முட்டாள்தனமா கேட்கிறாயே?
டேவிஸ் : இல்லை, இல்லை கோபித்துக் கொள்ளாதே! சரி; சொல்லித்தொலை. முறையிட்டார்கள், அப்புறம்?
ரா-ம் : முறையிட்டார்கள், அந்த முறையீட்டுக்கு இரங்கி, பகவான் மகாவிஷ்ணு உடனே புறப்பட்டார். சமுத்திரத்தினிடம் வந்தார். பார்த்தார் சுற்றி; எடுத்தார் பன்றி அவதாரம்; குதித்தார் தண்ணீரில்; கண்டார் பூமியை; தன் கொம்பில் அதைக் குத்தி எடுத்துக் கொண்டு வந்து விரித்தார். புரிஞ்சுதா?
டேவிஸ் : புரியாட்டா, கோபித்துக் கொள்ளுகிறாய்; அதிகப் பிரசங்கி என்கிறாய்; சரி புரிந்தது; விரித்தார் பூமியை; பிறகு என்ன நடந்தது?
 
ரா-ம் : பிறகா, பூமியை விரித்தவுடன், அந்தப் பூமிக்கு ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. ஒரு குஷால் உண்டாயிற்று. பூமி அந்தப் பன்றியைப் பார்த்தது. அந்தப் பன்றி இந்தப் பூமியைப் பார்த்தது. அந்தச் சமயம் பார்த்து மன்மதன் இரண்டு பேரையும் கலவி புரியச் செய்துவிட்டான். அப்புறம் சொல்ல வேண்டுமா! கலந்தார்கள்; பிறந்தது பிள்ளை.
டேவிஸ் : சரி; இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன்; கோவிச்சுக்காதே.

ரா-ம் : சரி கேள்.
டேவிஸ் : வராகம் என்பது பன்றி. அது ஒரு மிருக ரூபம்; சரிதானா?
ரா-ம் : சரி.
டேவிஸ் : பூமி கல்மண் உருவம்; சரிதானா?
ரா-ம் : சரி.

டேவிஸ் : இது இரண்டும் எப்படிக் கலவி புரியும்? எப்படிக் கருத்தரிக்கும்?
ரா-ம் : பாத்தியா பாத்தியா; இதுதான் போக்கிரித் தனமான கேள்வி என்பது. கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யலாமல்லவா?
டேவிஸ் : என்னப்பா இராமானுஜம், பாத்தியா பாத்தியா என்று சாயபு மாதிரி பாத்தியா கொடுக்கிறே. இது ஒரு பெரிய செக்ஷுவல் சையன்சு சங்கதி. இதைக்கேட்டால் போக்கிரித்தனமான கேள்வி என் கிறாய்; சரி! இதைப்பற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?
ரா-ம் : அந்தப் பிள்ளைதான் நரகாசூரன்.
டேவிஸ் : இந்தப் பெயர் அதற்கு யார் இட்டார்கள். தாய், தந்தையர்களா?
ரா-ம் : யாரோ ‘அன்னக்காவடிகள்!’ இட்டார்கள்? அதைப்பற்றி என்ன பிரமாதமாய்க் கேட்கிறாய்? எனக்கு அவசரம். நான் போகவேண்டும்; என்னை விடு.
டேவிஸ் : சரி போகலாம். சீக்கிரம் முடி. அப்புறம்?
ரா-ம் : அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல் லை கொடுத்தான். அவனை மகாவிஷ்ணு கொன்றார்.
டேவிஸ் : அடப்பாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான்? அப்படி யென்றால் தேவர்கள் என்ன அவ்வளவு அயோக்கி யர்களா?
ரா-ம் : இல்லேப்பா. இந்த நரகாசூரனின் பொல்லாத வேளை. தேவர்கள் கிட்டே அவன் வாலாட்டினான். அவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா?
டேவிஸ் : அதற்காகத் தகப்பன் மகனுக்குப் புத்தி சொல்லாமல் ஒரே அடியாகக் கொன்றுவிடுவதா?
ரா-ம் : அது அவர் இஷ்டம். அதைக் கேட்க நாம் யார்? “தேவரனையர் கயவர் அவரும் தாம்-மேவன செய்தொழுகலான்” என்று நாயனார் சொல்லி இருக்கிறார். ஆதலால் நாம் அது ஏன், இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?
டேவிஸ் : சரி கொன்றார். அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?
ரா-ம் : அதைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் என்றால், இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக, அதை ஞாபகத்தில் வைப்பதற்கு அதை நினைவூட்டுவதற்கு (ஆக) நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது.
டேவிஸ் : தேவர்கள் எங்கிருக்கிறார்கள்?
ரா-ம் : வான் தேவர்கள் வானத்தில் (மேல் லோகத்தில்) இருக்கிறார்கள்; பூதேவர்கள் இந்தப் பூமியில் இருக்கிறார்கள்!
டேவிஸ் : இந்தப் பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?
ரா-ம் : அடமுட்டாள்! அதுகூடவா தெரியாது; அது தான் பிராமணர்கள். பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள்தானே. அகராதியைப் பார்.
டேவிஸ் : பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு?
ரா-ம் : என்ன வகுப்பு? நாங்கள் தான்.
டேவிஸ் : நீங்கள் என்றால், நீ அய்யங்கார்; நீங்கள் தானா?
ரா-ம் : நாங்கள் மாத்திரம் அல்ல அப்பா. நாங்களும், அய்யர், ஆச்சாரி, சாஸ்திரி, சர்மா, தீட்சதர் முதலிய வர்கள்.
டேவிஸ் : அப்படி என்றால் பார்ப்பனர்கள் யாவரும் பூதேவர் என்கிறாய்.
ரா-ம் : ஆமா! ஆமா!! கல்லாட்டமா ஆமா!!!
டேவிஸ் : சரி, தொலைந்து போகட்டும். நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக் கொள்வோம்; உங்களுக் குத் தொல்லை கொடுக்க அசுரர், ராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கிருப்பவர்களை எதற்கு ஆகப் பயப்படுத்தத் தீபாவளி கொண்டாட வேண்டும்?
ரா-ம் : இங்கேயே அசுரர் ராட்சதர் இல்லை என்கிறாய். இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள் சு.மக்கள், தி.கழகத்தார்கள் இவர்கள் எல்லாம் யார்? பிராமணர் களைப் பார்த்து பொறாமைப்படுகிறவர்கள். குறை சொல்லுகிறவர்கள். அவர்களைப் போல் வாழ வேண்டு மென்பவர்கள், வேதசாஸ்திர புராண இதிகாசங்களைப் பகுத்தறிவால் ஆராய்ச்சி செய்கிறவர்கள் முதலிய இவர்கள் எல்லோரும் இராக்கதப் பதர்கள், இரக்கமே இல்லாத அரக்கர்கள் தெரிந்ததா? அவர்களுக்குப் பயம் உண்டாவதற்கு ஆக தேவர்களுக்கு இடையூறு செய்தால் நாசமாய்ப் போய்விடுவாய் என்று அறிவு றுத்துவதற்கு ஆகத்தான் தீபாவளி கொண்டாடுவ தாகும். இதுதான் இரகசியம், மற்றபடி ‘கதை எப்படி இருந்தால் என்ன?’
டேவிஸ் : அப்படியா? நீங்கள் 100க்கு 3 பேர், நீங்கள் அல்லாதவர்கள் 100க்கு 97 பேர். எப்படி எத்தனை நாளைக்கு இப்படி மிரட்ட முடியும்?
ரா-ம் : அதைப் பற்றிக் கவலைப்படாதே. காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது. இந்தத் தொண்ணூறு பேர்களில் ஒரு பகுதி விபீஷணர்களாக, அனுமார்களாக இருந்து பிராமணத் தொண்டாற்றவும் எதிரிகளை ஒழிக்கவும் பயன்படுத்துவதற்கு மற்றும் பண்டிதர் கூட்டம், படித்துவிட்டு உத்தியோகத்துக்குக் காத்துக்கிடக் கும் கூட்டம் கோவில் மடம் தர்ம்ஸ்தாபனத்தில் இருக்கும் கூட்டம், புத்தகக் கடைக் கூட்டம், பூசாரிக் கூட்டம், பிரபுக் கூட்டம், பாதிரிக் கூட்டம், மேற்பதவி வகிக்கும் உத்யோகஸ்தர் கூட்டம், தாசிக் கூட்டம், சினிமாக் கூட்டம், நாடகப் பிழைப்புக் கூட்டம், கலைவித்துவான் கள் கூட்டம், அரசியல் பிழைப்புக்காரர் கூட்டம், தேசபக்தர்கள் தியாகிகள் கூட்டம் இப்படியாக இடறி விழும்படி சர்வம் பிராமண அடிமையாம் என்பதுபோல் இருக்கும் போது 100க்கு 3, 100க்கு 97 என்ற கணக்கு முட்டாள்தனமான கணக்கு ஆகும்.
டேவிஸ் : ஓஹோ! அப்படியா? சரி, சரி, தீபாவளி என்பதன் தத்துவமும் இரகசியமும் தெரிந்துகொண்டேன். நன்றி, வணக்கம்.
ரா-ம் : சரி நமஸ்தே, ஜே ஹிந்து!

-------------------சித்திரபுத்திரன் என்னும் பெயரில் தந்தை பெரியார் எழுதியது. ‘விடுதலை’ 28.10.1956

1.11.12

தீபாவளி தத்துவமும் இரகசியமும்!

தீபாவளி தத்துவமும் இரகசியமும்!

வளவன்
- சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே.

ராம் - சரி கேள்.

வளவன் - வராகம் என்பது பன்றி அது ஒரு மிருக ரூபம் சரிதான்?

ராம் - சரி.

வளவன் - இது இரண்டும் எப்படி கலவி புரியும்? எப்படி கருத்தரிக்கும்?

ராம் - பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என்பது. கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யுமல்லவா?

வளவன் - என்னப்பா இராமானுஜம் பாத்தியா பாத்தியா என்று சாய்பு மாதிரி பாத்தியா கொடுக்கிறே. இது ஒரு பெரிய செக்சுவல் சையன்சு சங்கதி இதைக் கேட்டால் போக்கிரித்தனமான கேள்வி என்கிறாய். சரி! இதைப்பற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?

ராம் - அந்தப் பிள்ளைதான் நரகாசூரன்.

வளவன் - இந்தப் பெயர் அதற்கு யார் இட்டார்கள் தாய் தந்தையர்களா?

ராம் - யாரோ அன்னக்காவடிகள்! இட்டார்கள்? அதைப் பற்றி என்ன பிரமாதமாய் கேட்கிறாய்? எனக்கு அவசரம் நான் போகவேண்டும். என்னை விடு.

வளவன் - சரி போகலாம், சீக்கிரம் முடி அப்புறம்?

ராம் - அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான் அவனை மகாவிஷ்ணு கொன்றார்.

வளவன் - அட பாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர்களுக்குத்தொல்லை கொடுத்தான்? அப்படியென்றால் தேவர்கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?

ராம் - இல்லேப்பா, இந்த நரகாசூரனின் பொல்லாத வேளை தேவர்கள்கிட்டே இவன் வாலாட்டினான். அவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா?

வளவன் - அதற்கு ஆக தகப்பன் மகனுக்கு புத்திசொல்லாமல் ஒரே அடியாகக் கொன்று விடுவதா?

ராம் - அது அவர் இஷ்டம் அதைக் கேட்க நாம் யார்? தேவரனையர் கயவர் அவரும் தாம் மேவன செய்தொழுகலான் என்று நாயனார் சொல்லி இருக்கிறார் ஆதலால் நாம், அது ஏன் இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?

வளவன் - சரி கொன்றார். அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?

ராம் - அதைக் கொண்டாட வேண் டிய அவசியம் ஏன் என்றால் இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்பதற்காக, அதை ஞாபகத்தில் வைப்பதற்கு அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது.

வளவன் - தேவர்கள் எங்கிருக்கிறார்கள்?

ராம் - வான் தேவர்கள் வானத்தில் (மேல் லோகத்தில்) இருக்கிறார்கள், பூதேவர்கள் இந்தப் பூமியில் இருக்கிறார்கள்!

வளவன் - இந்த பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?

ராம் - அட முட்டாள்! அது கூடவா தெரியாது. அதுதான் பிராமணர்கள், பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள் தானே அகராதியைப்பார்.

வளவன் - பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு.

ராம் - என்ன வகுப்பு? நாங்கள் தான்?

வளவன் - நீங்கள் என்றால், நீ அய்யங்கார் நீங்களா?

ராம் - நாங்கள் மாத்திரம் அல்ல அப்பா, நாங்களும் அய்யர், ஆச்சார், சாஸ்திரி சர்மா தீட்சதர் முதலியவர்கள்.

வளவன் - அப்படி என்றால் பார்ப்பனர்கள் யாவரும் பூதேவர் என்கிறாய்.

ராம் - ஆமா! ஆமா!! கல்லாட்டமா ஆமா!!!

வளவன் - சரி, தொலைந்து போகட்டும், நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தொல்லை கொடுக்க அசுரர், இராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கிருப்பவர்களை எதற்கு ஆக பயப்படுத்த தீபாவளி கொண்டாட வேண்டும்?

ராம் - இங்கேயே அசுரர் இராட்சதர் இல்லை என்கிறாய், இந்த கருப்புச்சட்டைக்காரர்கள் சு.மக்குகள், திராவிட கழகத்தார்கள் இவர்கள் எல்லாம் யார்? பிராமணர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறவர்கள். அவர்களைப் போல் வாழ வேண்டுமென்பவர்கள். வேத சாஸ்திர புராண இதிகாசங்களைப் பகுத்தறிவில் ஆராய்ச்சி செய்கிறவர்கள் முதலிய இவர்கள் எல்லோரும் இராக்கதப் பதர்கள். இரக்கமே இல்லாத அரக்கர்கள் தெரிந்ததா? அவர்களுக்கு பாபம் உண்டாக்குவதற்கு ஆக தேவர்களுக்கு இடையூறு செய்தால் நாசமாய்ப் போய் விடுவாய் என்று அறிவுறுத்துவதற்கு ஆகத்தான் தீபாவளி கொண்டாடுவதாகும் இதுதான் இரகசியம். மற்றபடி கதை எப்படி இருந்தால் என்ன?

வளவன் - அப்படியா? நீங்கள் 100-க்கு 3 பேர். நீங்கள் அல்லாதவர்கள் 100-க்கு 97 பேர் எப்படி எத்தனை நாளைக்கு இப்படி மிரட்ட முடியும்?

ராம் - அதைப் பற்றிக் கவலைப் படாதே! காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது. அந்தத் தொண்ணூறு பேர்களில் ஒரு பகுதி விபீஷணர்களாக அனுமார்களாக இருந்து பிராமண தொண்டாற்றவும், எதிரிகளை ஒழிக்கவும் பயன்படுத்துவதற்கு மற்றும் பண்டிதர் கூட்டம் படித்து விட்டு உத்தியோகத்துக்குக் காத்துகிடக்கும் கூட்டம், கோவில் மடம், தர்மஸ்தாபனத்தில் இருக்கும் கூட்டம், பூசாரிக் கூட்டம், பிரபுக்கூட்டம், பாதிரிக் கூட்டம், மேற்பதவி வகிக்கும் உத்தியோகஸ்தர் கூட்டம், நாடகைப் பிழைப்புக் கூட்டம், கலைவித்துவான்கள் கூட்டம், அரசியல் பிழைப்புக்காரர் கூட்டம், தேசபக்தர்கள், தியாகிகள் கூட்டம் இப்படியாக இடறிவிழும்படி சர்வம் பிராமண அடிமையாம் என்பது போல் இருக்கும் போது 100-க்கு 3 100-க்கு97 - என்ற கணக்கு முட்டாள்தனமான கணக்கு ஆகும்.

வளவன் - ஓஹோ! அப்படியா? சரி சரி தீபாவளி என்பதன் தத்துவமும் இரகசியமும் தெரிந்து கொண்டேன், நன்றி வணக்கம்.

ராம் - சரி நமஸ்தே, ஜெய்ஹிந்த்!

-------------------------------------(சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் தந்தை பெரியார் எழுதியது. தீபாவளி பற்றி சித்திரபுத்திரன் எழுதியுள்ள ஆராய்ச்சி உரையாடலை தருகிறோம். பாமரர்களில் பல்லாயிரவர் உண்மை தெரிந்து வெறுத்துத் தள்ளியுள்ள தீபாவளியைப் படித்த கூட்டத்தார் கூடக் கொண்டாடுகிறார்களே! அதுதான் வெட்கக்கேடு! சைவர்கள் என்பவர்கள் கூடக் கொண்டாடுகிறார்களே! அது இன்னும் பெரிய வெட்கக்கேடு! எல்லோருமே இதைப் படித்துப்பார்க்கட்டும்! -ஆசிரியர் 'விடுதலை')

தீபாவளியும் - அவதாரங்களும்!

மகாவிஷ்ணு எனும் இந்துக் கடவுள் திருமால் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கடவுளை இந்து மதத்தின் மற்றொரு பிரிவினரான சைவர் ஏற்றுக் கொள்வது கிடையாது. பல கடவுள் மதம் என்பதால் இந்தக் கோளாறு. விஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தது.  ஒன்பது முடிந்துவிட்டது. ஒன்று மீதி உள்ளது.  அது கல்கி அவதாரம்  என்றெல்லாம் புராணங்களில் எழுதப்பட்டுள்ளன என்கிறார்கள்.

நாம்தான் வேதங்களைப் படிக்கக்கூடாது. நாம் படிப்பதற்காகத்தான் புராணங்களே எழுதப்பட்டன. அப்படி 18 புராணங்கள் எழுதப்பட்டன. இவை தவிர துணைப் புராணங்கள் 18 உள்ளன. இவற்றில் கருட புராணம் என்பது மெயின் புராணங்களில் ஒன்று. அதன்படி திருமால் இதுவரை 21 அவதாரங்கள் எடுத்திருக்கிறது. 22 ஆம் அவதாரத்தை இனிமேல் தான்  எடுக்க வேண்டும். அதுதான் கல்கி அவதாரம். யாரோ ஒரு எத்தன் கல்கி அவதாரம் தான் என்று கூறிப் பெண்களையும், பெற்றோரையும் ஏமாற்றிப் பிழைத்து வருகிறான். ஆந்திரா, மராட்டியம் உள்பட பல மாநிலங்களில் பல வழக்குகள் அவன் மீது.

முதல் அவதாரம் மச்சாவதாரம். - முதல் முதலில் நீரில்தான் ஜீவராசிகள் (உயிரிகள்) தோன்றின என அறிவியல் கூறுகிறது. இரண்டாம் அவதாரம் ஆமை. இது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடியது.   மூன்றாம் அவதாரம் பன்றி. இது விலங்கு. நான்காம் அவதாரம் நரசிம்மம். பாதி விலங்கு, பாதி மனிதன் - பின்னர் வாமன அவதாரம் - (குள்ளப் பார்ப்பனன்) என்று வரிசைப்படுத்தி அறிவியலோடு தொடர்புபடுத்தித் தம் மூடக் கற்பனையை நியாயப்படுத்த பக்திக் குமுதம், பக்தி விகடன், காமகோடி, ஆன்மீகம் அருள்சோதி என்றெல்லாம் பார்ப்பனர் ஏடுகளில் எழுதி வருகிறார்களே! அவை பொய்.

கருட புராணப்படி முதல் அவ தாரம் குமாரன், பிரம்மச்சாரி, தவம் செய்தார். இரண்டாம் அவதாரம் வராகம், மூன்றாம் அவதாரம் தேவ ரிஷி,- நான்காம் அவதாரம் நரநாரா யணன்  இப்படியே போய்... பத்தாம் அவதாரம்தான் மீன் - பதினொன்றாம் அவதாரம்தான் ஆமை  14 ஆம் அவ தாரம் நரசிம்மம்  15 ஆம் அவதாரம் வாமனன் -16 ஆம் அவதாரம் பரசுராமன். - 19 ஆம் அவதாரம் இராமன் - 20 ஆம் அவதாரம் கிருஷ்ணன் - 21 ஆம் அவதாரம் புத்தர் - 22 ஆம் அவதாரம் கல்கி (எதிர்-காலத்தில் எடுக்குமாம்) என ஆகிறது.

பூவுலகை மீட்கத்தான் வராக (பன்றி) அவதாரமாம். நியாயப்படி பார்த்தால் விஷ்ணு புராணத்தில்தான் அதன் அவதாரங்கள் பற்றி எழுதியிருக்க வேண்டும். மாறாகக் கருட புராணத்தில் எழுதப்பட்டுள்ளது. ஏன்? சரி, விட்டுவிட்டுப் பன்றியின் கதையைப் பார்ப்போம். அதுதானே தீபாவளியின் கதை!

பன்றியின் கதைதான் வராக புராணம். பன்றியே விஷ்ணுவே_- பூமாதேவிக்குச்  சொன்னதாம். பிரளய முடிவில் இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி ரிஷிகளில் காஷ்யபன்,- அதிதி தம்பதிகளின் புத்திரன், விசுவாஸ்வனன். அவன்தான் சூரியன் என்கிறது பிரம்ம புராணம். முதல் புராணத்திலேயே சூரியனை அறிமுகப்படுத்திவிட்டு 15 ஆம் புராணத்தில் பூமி இருட்டில் இருந்தது என எழுதினால்... என்னய்யா முரண்பாடு?

இதே வராக (பன்றி) அவதாரத்தைப் பற்றி விஷ்ணு புராணத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள், தெரியுமா? நீரின் மேல் தாமரை இலை மட்டும் மிதக்கக் கண்டதாம் விஷ்ணு. உடனே நீரில் குதித்து பூமிதேவியை எடுத்ததாம். அதன் வேண்டுகோளின்படி, வராக ரூபம் கொண்டு தனது கொம்பு நுனியில் பூமியை உயர எடுத்து (பாதாளத்திலிருந்து) அருளியதாம். (வெளிநாடுகளில் நீரில் குதித்து மூழ்கித் தன் மூக்கால் பந்தை உருட்டித் தள்ளி வேடிக்கை காட்டும், டால்ஃபின் மீன். புராணத்தில் இதே வேடிக்கையைப் பன்றி காட்டியுள்ளது).
யோகிகள் எல்லாம் பன்றியைக் கும்பிட்டு பூமியை உத்தரித்து சுகத்தினைக் கொடுத்து அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார்களாம். உடனே பன்றி, பூமியைப் பழையபடியே நீரின் மீது நிறுத்தி அருள் புரிந்ததாம். இதை  பெரிய திருமொழிப் பாசுரம்

ஏனாகி உலகிடந்து அன்று இருநிலனும்
பெருவிசும்பும் தாளாய பெருமான்
எனப் பாடுகிறது. பிறகு நரகாசுரன் எங்கே வருகிறான்?

கேசவ துதி பாடியதால் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று பன்றி உரு எடுத்து கடலுக்குள் நுழைந்தார். இரண்யாட்சதனுடன் சண்டை போட்டு, அவனைக் கொன்று, பூமியை வெளிக் கொணர்ந்து விரித்தார் என்றுதான் வராக புராணம் கூறுகிறது.

பூமி தட்டை எனக்கூறிய முட்டாள்களால் எல்லாப் புராணங்களுமே எழுதப்-பட்டன. ஆகவே பூமியைச் சுருட்டினான் என்றும், கடலில் புகுந்தான் என்றும், பன்றி மீட்டது என்றும் கதை எழுதி வைத்துவிட்டார்கள்.

ஒவ்வொரு அவதாரம் எடுக்கும்போதும் மகாலட்சுமி எனும் விஷ்ணுவின் மனைவியும் உடன் தோன்றி ஒரு கல்யாணம் செய்து கொள்ளுமாம். இதனால்தான் விளையாட்டு எனும் பொருள் கொண்ட கல்யாணம் என்ற சொல் சூட்டப்பட்டதோ?

ஒரு மாநிலத்தில் வாமன அவதாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.

ஒரு மாநிலத்தில் இராம அவதாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.

ஒரு மாநிலத்தில் இராமன் ஜெயித்த நாள் எனக் கதை. ஒரு மாநிலத்தில் சீதையுடன் நாடு திரும்பும் நாள் எனக் கதை.

ஒரு மாநிலத்தில் கூர்ம (ஆமை) அவதாரத்துடன் தொடர்புபடுத்தி - விஷ்ணுவும் லட்சுமியும் கல்யாணம் செய்து கொண்ட நாள் எனக் கதை.

இந்து மதம் ஒன்றுதானே! ஏன் இந்து மதத்தின் விழாக்களின் கதைகள் ஒரே மாதிரி இல்லை? அவரவர் கற்பனைப்படி கதையளந்து கொண்டு விழா நடத்-துவது என்றால்...

புராணம் எழுதியவர்களுக்குப் புத்தி இல்லை என்றுதான் பொருள். பொய் சொல்வதற்கும் கூடப் புத்திசாலித்தனம் தேவைப்படுமே!  பலப்பல நபர்கள் பலப்பல காலங்களில் எழுதிச் சேர்த்த கதைகள்தான் புராணங்கள்!  அத்தனையும் பொய்ப் புளுகு மூட்டைகள். அம்மட்டே!


                                  -----------------------------விடுதலை, 19.10.2006