Search This Blog

12.7.12

தெற்குச் சூடானுக்கு ஒரு நீதி, ஈழத் தமிழர்களுக்கு இன்னொரு நீதியா?


ருசியாவின் கூட்டமைப்பில் இருந்த உக்ரைன் 1990-இல் பிரிந்து சென்றது.

உக்ரைன் 27 மாநிலங்களைக் கொண்ட தாகும். 13 மாநிலங்களில் ருசிய மொழி பேசும் மக்கள் 30 விழுக்காடு உள்ளனர். பெரும்பான்மையான மக்களின் தாய்மொழியோ உக்ரைன்.

நீண்ட காலம் ருசியாவின் கூட்டமைப்பில் உக்ரைன் இருந்ததால் ருசிய மொழியின் ஆதிக்கமும், தாக்கமும் இருக்கவே செய்தது.

இந்த நிலையில் உக்ரைன் மொழியோடு ருசிய மொழியையும் அலுவலக மொழியாக ஆக்க வேண்டும் என்ற மசோதாவை அதிபர் விக்டர் யானுகோவிக் தாக்கல் செய்தார்.

450 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளு மன்றத்தில் 248 பேர் ஆதரவாக வாக்களித்த தன் காரணமாக சட்டம் நிறைவேற்றப் பட்டதுதான் தாமதம் - உக்ரைன் மக்கள் எரிமலையாக வெடித்துக் கிளம்பிவிட்டனர்.

இந்தச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் அளிக்க மறுத்ததுடன் பதவியையும் தூக்கி எறிந்தார் - போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்துகிறார்.

அதிபரோ நாடாளுமன்றத்தையே கலைத்து விடப் போவதாக எச்சரித்துள்ளார்.

இவ்வளவுக்கும், ருசிய மொழி மட்டுமே அலுவலக மொழி என்று கூட சட்டம் செய்ய வில்லை - உக்ரைன் மொழியோடு ருசிய மொழியும் அலுவலக மொழியாக இருக்கும் என்பதற்கே கடும் எதிர்ப்பு! உக்ரைன் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது ருசிய மொழிக்காரர்களின் கடமையாகும்.

துணைக் கண்டமாகிய இந்தியா இதில் பாடம் பெறவேண்டும். இந்தியா ஒரு நாடு அல்ல. ஒரே மொழி கொண்ட நாடும் அல்ல.

பல மொழிகள், பல மாநிலங்கள், பல இனங்கள், பல கலாச்சாரங்களைக் கொண்ட துணைக் கண்டமாகும்.

மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் தி.க., தி.மு.க., அமைப்புகள் பல சந்தர்ப்பங்களில் தீர்மானங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டும் உள்ளன.

இது குறித்து ஆய்வு செய்ய சீதா காந்த மகாபத்திரா தலைமையில் குழு அமைக்கப் பட்டு, அந்தக் குழுவும் சாதகமான வகையில் கருத்தினைக் கொடுத்துள்ளதாகவே தெரிகிறது. ஆனாலும் அந்தக் குழுவின் அறிக்கை அதிகார பூர்வமாக வெளியிடப்படாதது ஏன்?

மத அடிப்படையில் மேற்குப் பாகிஸ்தானும், கிழக்குப் பாகிஸ்தானும் ஒன்று என்றாலும், மொழி அடிப்படையில் மாறுபட்ட காரணத்தால் பிரிந்து சென்று விடவில்லையா?

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள சூடானில் என்ன நடந்தது?

பிரிட்டனின் பிடியிலிருந்து விலகிய பிறகும், அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த அரேபி யர்களை எதிர்த்துப் போர்க் கொடி உயர்த்தி, உங்களின் உறவே வேண்டாம் என்று கூறி தெற்குச் சூடான் எனும் தனி நாட்டினை உருவாக்கிக் கொண்டனர் என்பதுதான் வரலாறு.

இதே கண்ணோட்டத்தோடு இலங்கைத் தீவையும் பார்க்க வேண்டாமா? அங்கு நிலைமை என்ன? சிங்களம்தானே ஆட்சி மொழி? சிங்கள இனத்தைச் சேர்ந்த பவுத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர்தானே அதிபராக வரமுடியும் சட்ட ரீதியாக!

தெற்குச் சூடானுக்கு ஒரு நீதி, ஈழத் தமிழர்களுக்கு இன்னொரு நீதியா? உலகம் சிந்திக்கட்டும் - தனித் தமிழர் ஈழக்கொடியைப் பறக்கவிட ஆவன செய்யட்டும்!

-----------------------"விடுதலை” தலையங்கம் 12-7-2012

11.7.12

கோயிலுக்குள் நுழைந்தால் ஆபாசம்-கோயில்சிலைகள் தேர்கள் அருவருப்பு


கோயிலுக்குள் நுழைந்தால் ஆபாசம் - கோயில் சிலைகள் - தேர்களைப் பார்த்தால் அருவருப்பு - சாமியார்களைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்! கோயில் கருவறையிலோ அர்ச்சகனின் காம லீலைகள்! கடவுள் கதைகள், புராணங்கள், இதிகாசங்களைப் படித்தால் கேவலமான ரசனைகள் - இத்தோடு முடிந்ததா?

ஏடுகளை, இதழ்களைப் புரட்டினால் அரைகுறை ஆடைகளோடு பெண்களின் வண்ண வண்ணப் படங்கள் (ஆனந்தவிகடன் உள்ளிட்ட வார இதழ்கள் எல்லாம் இதில் அடக்கம்!)

ஓட்டல்களில் இரவு நேரங்களில் மதுவிருந்து - நடிகர் நடிகைகள் பட்டாளங்கள் அங்கு அணிவகுப்பு - ஆட்ட பாட்டம் - அடிதடிக் கூத்துகள். செய்தி ஏடுகளில் வெட்கம் கெட்ட முறையில் இவைகளுக்கு முன்னுரிமை!

இதுபோன்ற ஓட்டல் ஆட்டம் பாட்டங்களில் கல்லூரி மாணவிகளும், கைநிறைய சம்பாதிப்பவர்களும் பங்கேற்கிறார்களாம்.

சின்னத் திரை - பெரிய திரைகள் என்றால் ஆபாச நச்சுக் காற்றின் பிரவாகம்! வசனம், பாடல்களில் இரட்டை அர்த்தங்கள். இணையதளங்களிலோ எழுத்துக்களால் கூறமுடியாத அளவுக்கு நிர்வாணங்கள். இவற்றைப் பயன்படுத்தி மோசடிகள்!

இவற்றின் தாக்கங்களால் இளைஞர்கள், மாணவர்கள் திசைமாறித் தத்தளிக்கும் போக்குகள். 15 வயதுக்குள் மது பழக்கம் வந்துவிட்டதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

பேருந்துகளில் சக பயணிகள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு இளம் வட்டங்களின் அருவருப்பான பேச்சுகள் - அதீதமான சேட்டைகள்!
இரவு நேரங்களில் கடற்கரைச் சாலைகளில் பெருங்குடி மகன்களின் ஆர்ப்பாட்டமான நடவடிக்கைகள்.

சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் எட்டு வளைவு போட்டுப் பறக்கும் போக்குகள் - இவை எல்லாம் எங்கு கொண்டு போய் விடும் என்கிற அச்சமும், கவலையும் நாணயமான சமூக சிந்தனையாளர்களுக்கு ஏற்படாமல் போகாது. கல்வித் திட்டமும், கல்வி நிறுவனங்களும் இவற்றிற்குத் தீர்வு காணும் என்கிற நம்பிக்கை இல்லை. உயர்நிலைப் பள்ளி மாணவன் தன் ஆசிரியையே கத்தியால் குத்திக் கொலை செய்கிறான்.

வீட்டில் பெற்றோர்கள் பரபரப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள். பிள்ளைகளைக் கவனிக்க நேரம் ஏது? அப்படியே நேரம் கிடைத்தாலும் சின்னத்திரை சாகரத்தில் அவர்கள் மூழ்கிவிடுவார்கள்.

அரசியல் போக்கோ கேட்கவே வேண்டாம். சித்தாந்தங்கள் சிறகொடிந்து போய், பெரும்பாலும் குறுக்கு வழியில் குபேரர் ஆவதற்கான மும்முரங் களில் மூளைகளைக் கசக்கிக் கொண்டு இருக்கிறார்கள் - புதிய தலைமுறையினர்.

போதும் போதாததற்கு உலக மயம் என்ற பொருளாதார ஒட்டகம் நுழைந்து, நுகர்வுக் கலாச்சாரம் எனும் அபினில் மக்கள் மயங்கிக் கிடக் கிறார்கள். தங்கள் வருமானம் என்ன என்பதைப் பற்றி கவலையில்லை - கடன் வாங்கியாவது சொகுசுப் பொருள்களை வாங்கி வீட்டை நிரப்பும் போலித்தன படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் நிலை!

சித்தாந்தம் உள்ள தலைவர்களைவிட, கட்சிகளை விட சினிமாக்காரர்கள்தான் தங்கள் வழிகாட்டிகள் என்று சிகரத்தில் வைத்து வழிபடும் அவலம்!

இவற்றைப் பற்றி எல்லாம் சிந்திக்கும் தலைவர்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? எத்தனை ஏடுகள் - இதழ்கள் இருக்கின்றன? பொதுக்கூட்டங்களில் ஒரு மணி நேரம் பேசினால் அதில் ஒரு பத்து நிமிடம் தனி ஒழுக்கம், பகுத்தறிவு, பொது ஒழுக்கம்பற்றிப் பேசக்கூடாதா? கேடுகெட்ட கலாச்சாரத்தைக் கண்டித்துக் கருத்துக் கூறக்கூடாதா?

எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்? சிந்தனையாளர்கள் என்ன செய்கிறார்கள்? ஆன்மீகத்துக்காக வாரம் ஒருமுறை சிறப்பு இதழ்களை வெளியிடும் பத்திரிகை முதலாளிகள், பொது ஒழுக்கத்தைப்பற்றி நான்கு வரிகளை இடம்பெறச் செய்யக்கூடாதா?

இவை குறித்த உரத்த சிந்தனை தேவை - செயல் பாடுகளும், திட்டங்களும் தேவை! தேவை!! கழகமும், நமது ஏடுகளும்தான் இவற்றை ஆழமாகச் செய்து கொண்டு இருக்கின்றன என்பதை மறுக்க முடியுமா?

---------------------”விடுதலை” தலையங்கம் 11-7-2012

உண்மையை ஒப்புக் கொண்ட கோயபல்சு துக்ளக் சோ


கேள்வி: இலவசங்களைக் கொடுத்து மக்களிடம் ஓட்டு வாங்கிவிட லாம் என்ற அரிய தத்துவத்தை முதலில் கண்டுபிடித்த ஜீனியஸ் காங்கிரசா, தி.மு.க.வா?

இவர்கள் எல்லாம் இல்லை. இதை முதலில் கண்டு பிடித்தது கோயில்கள்தான். விபூதி, குங்கு மத்தோடு நிற்காமல், இலவசமாக வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை என்று பிரசாதம் கொடுத்தால் பக்தர்கள் வருவார்கள் என்று கண்டு பிடித்தது அவர்கள்தான்.

--------------------------(துக்ளக்- 20.6.2012)

அப்பாடி! முதன் முதலில் ஒரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் கோயபல்சு துக்ளக் சோ. ராமசாமி.

கோயிலில் கூட்டம் கூடுகிறது, கூடுகிறது, பக்திப் பரவசவெள்ளப் பெருக்கைப் பாரீர்! பாரீர்!! நாத்திகமெல்லாம் படுத்துண்டுட்டுது என்று பல்லவி பாடிய வட்டாரத் திலிருந்து ஒரு உண்மை உதறித் தள்ளி வெளியே வந்து விழுந்துவிட்டது.

இந்த இலவசம் என்ற ஒன்று இல்லையாயின் கோயில்களில் கூட்டமா வது, கீட்டமாவது - என்று உதட்டைப் பிதுக்கி உண் மையை ஒப்புக் கொண்ட தற்காக நாமும் ஒரே முறை சோ அய்யர் வாளைப் பாராட்டலாம் தான்!

ஒன்றை விட்டுவிட் டாரே! அது போலவே இலஞ்சம் உற்பத்தியான தும் சாட்சாத் இந்தக் கோயில்களில்தான் என் பதையும் ஒப்புக் கொண் டிருந்தால் பேஷா நன்னாயிருக்குமோல்லியோ!

ஆதிலட்சுமி, அகோர மூர்த்தி, நான் உனக்குச் கண்ணடக்கம் செய்து வைக்கிறேன்; வெள்ளியாலே ரிஷபம் ஏற்பாடு செய்கிறேன். என் பிள்ளையாண்டான் பரிட்சையில் பேஷா பாஸாகனும், என் ஆத்துக்காரருக்கு புரமோசன் கூடிய விரைவில் கிடைக்கணும்; என் சிரேஷ்ட புத்திரிக்கு நல்ல வரன் கிடைக்கணும் னு வேண்டிக் கொள்கிறார்களே... இதற்குப் பொருள் என்னவாம்?

இலஞ்சம் அல்லாமல் வேறு என்ன வாம்? இதையெல்லாம் செய்து வைச்சாதான், உண்டியலில் பணம் போட் டால்தான் எம்பெருமான் அருள் பாலிப்பாருன்னு ஆகிவிட்ட பிறகு, இலஞ்சம் உற்பத்தியாகும் இடம் இந்தக் கோயில்கள்தான் என்று அடுத்த இதழில் சோவாள் எழுதுவாளா?

--------------------- மயிலாடன் அவர்கள் 7-7-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

10.7.12

தேசியமாம் தேசியம்- என்னாங்கப்பா தேசியம்?


தேசியமாம் தேசியம்- என்னாங்கப்பா தேசியம்? திராவிடர் கழகப் பேரணிகளில் கருஞ் சிறுத்தைகள் முழக்க மிடுவதுண்டு. இது ஏதோ கோபதாபத்தில், எரிச்சலில் போடப்பட்ட முழக்கம் இல்லை.

நாட்டு நடப்பின் நாடியைப் பிடித்து ஒலிக்கப்பட்ட முழக்கம். குறிப்பாக இந்தி யாவில் நதிநீர்ப் பிரச்சினை ஒன்று போதும் - இந்தியாவில் தேசிய நீரோட்டம் எந்த டி.எம். சியில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள!

இதில் என்ன வேடிக்கையென்றால், இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசாக இருந்தாலும் சரி, சர்வ தேசியம் பேசும் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, நதிநீர்ப் பிரச்சினையில் குள்ள மனிதர்களாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.

குறிப்பாக கருநாடக மாநிலத்தில் காங்கிஸ், ஜனதாதளம், பி.ஜே.பி. ஆட்சிகள் மாறி மாறி வந்திருந்தாலும் சட் டப்படி தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுக்காமல் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் காட்டி வருகின்றன.

முல்லைப்பெரியாறு நீர்ப் பிரச்சினையில் கம்யூனிஸ்டு ஆட்சியானாலும் சரி, காங்கிரஸ் ஆட்சியானாலும் சரி உச்ச நீதிமன்றம் சொன்னாலும் போய் வா மகனே! என்று போர் முரசு கொட்டுகின்றன.

இப்பொழுது டில்லிக்கும், அரியானாவுக்கும் இடையே உடைசல் எழுந்துள்ளது. யமுனை நதியிலிருந்து டெல்லிக்கு அளிக்கப்பட்டு வந்த குடிதண்ணீருக்கும் பிரச்சினை!

குடிநீருக்கே வயிற்றில் அடியாம்! ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற டில்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் தம் வீட் டுக்கு, அமைச்சர்கள் வீட்டுக்குத் தடையில் லாமல் வழங்கப்பட்டு வந்த குழாய் இணைப்பைத் துண்டிக்கச் செய்துவிட்டாராம்.

இப்பொழுது கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும் 22 கேரட் தேசிய திலகங்கள். திராவிடர் கழகப் பேர ணியில் கருஞ்சிறுத்தைகளின் முழக்கம் நியாய மானதுதானே!

--------------- ------- மயிலாடன் அவர்கள் 10-7-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

இராமன் தசரதன் மைந்தனா? ராமனின் மறுபக்கம் -1

ராமனின் மறுபக்கம்


1. மகாவிஷ்ணு இராமனாக அவதாரம் எடுத்தார். எப்படி?

2. இராமன் ஓர் அவதாரம். எப்படி?

3. தசரதனின் மைந்தன் இராமன். எப்படி?

4. தந்தை சொல் மீறாதவன் இராமன். எப்படி?

5. இராமன் ஓர் சுயநலக்காரன். எப்படி?

6. இராமன் ஒரு வஞ்சகன் எப்படி?

7. இராமன் ஈவு இரக்கம் அற்றவன். எப்படி?

8. இராமன் ஒரு கோழை. எப்படி?

9. இராமன் ஒரு காமாந்தகாரன். எப்படி?

10. இராமன் ஒரு சந்தேகப் பேர்வழி. எப்படி?

11. இராமன் ஒரு பதவிப் பிரியன். எப்படி?

12. இராமராஜ்யம் ஒரு வர்ணாஸ்ரம ராஜ்யம். எப்படி?

இத்தனை எப்படிகளுக்கும் விடை காண்பதே இக் கட்டுரை.

மகாவிஷ்ணு வழக்கம்போல் பாற் கடலில் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, லட்சுமி அவர் கால்களை அமுக்கிக் கொண்டேயிருக்கிறாள். அந்த ஆனந்த சுகத்திலே பகவான் விஷ்ணு தன்னை மறந்து தான் உலகிற்கு ஆற்றவேண்டிய கடமைகளை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்.

கணவன் மனைவி தனித்திருப்பதைப் பொருட் படுத்தாமல் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் மகாவிஷ்ணுவைத் துயிலெழுப்புகின்றனர். துயிலெழுப்பி மகாப் பிரபோ! மகாதேவா! ஸ்ரீமன் நாராயணா! நமஸ்கரிக்கின்றோம். அபயம், அபயம்! என்று விளிக்க, மகாவிஷ்ணு துயில் நீங்கி, உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று வினவுகிறார்.

(மூவுலகம் அறிந்தவர், காக்கும் கடவுள், உலகி லுள்ள அத்தனை ஜீவராசிகளையும் காப்பவர். இவர் காக்காவிடில் உலகில் யாரும் வாழமாட்டார்கள். அப் பேர்ப்பட்டவருக்கு தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் ஆகியோருக்கு வந்துற்ற துயரம் என்னவென்று தெரியவில்லை. பார்க்கப் போனால் கடமையிலிருந்து தவறியவருக்கு தண்டனை வழங்க வேண்டுமல்லவா!)

முனி: நமோ நாராயணா! நீ அறியாதது ஒன்றுமில்லை. அடியேங்களை அசுரப் பயல் இராவணனும், அசுரப் பயல்களும் துன்புறுத்துகிறார்கள். தொல்லை கொடுக்கிறார்கள். யாகம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள். சுராபானம் குடிக்கக்கூடாதாம், மது அருந் தக்கூடாதாம். இம்மாபாதகச் செயலைச் செய்யும் இராவணனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் மஹாபிரபோ!

விஷ்ணு: அப்படியா! மகாசிவ பக்தனான இராவணன், மாமேருவைத் தூக்கிய மாவீரன், இசையில் இணையற்ற ஞானம் பெற்றவன். அவனாலா உங்களுக்குக் கஷ்டம். கவலைப்படாதீர்கள். நான் இராமாவதாரம் எடுத்து அந்த இணையற்ற வீரனான இராவணனை எப்படியாவது வதம் செய்து உங்களைக் காப்பாற்றுகிறேன்.

முனி: தன்யன் ஆனோம்! மகாப் பிரபோ! ஆனந்தம் அடைந்தோம். தங்கள் இராமாவதாரம் காணக் காத்திருக்கிறோம். உத்தரவு தாருங்கள் பிரபோ! விஷ்ணு: அப்படியே செய்யுங்கள். போய் வாருங்கள். நான் லட்சுமியோடு தனித்திருக்க வேண்டும். இராமவதாரம் பற்றி அவளோடு யோசிக்க வேண்டும்.

முனி: வருகிறோம் பிரபோ! நமோ நாராயணா! நமோ நாராயணா! இலட்சுமி: தாங்கள் இராமாவதாரம் எப்போது எடுப்பது? இவர்கள் கஷ்டம் எப்போது தீருவது?

விஷ்ணு: பூலோகத்தில் அயோத்திப் பட்டணத்தில் தசரத ராஜன் என்பவன் ஆண்டுகொண்டிருக்கிறான். அவனுக்கு 60,000 க்கு மேல் மனைவிகள். இருந்தும் குழந்தை இல்லை. அவன் அதற்காக புத்ரகாமேஷ்டியாகம் செய்யப் போகிறான். அப்போது நான் அவன் மகனாக பூமியில் அவதரிக்கப் போகிறேன்.

இலட்சுமி: என்ன பிரபோ முனிவர்கள் கஷ்டம் இப்போது தீராது போலிருக்கிறதே-

விஷ்ணு: ஏன் அப்படிச் சொல்கிறாய்?

இலட்சுமி: இனிமேல் தசரதன் யாகம் செய்து, அதன் பிறகு நீங்கள் அவதாரம் எடுத்து, முடி துறந்து காட்டுக்குப் போய் பதினான்கு ஆண்டுகள் கழித்து அல்லவோ இராவணனை வதம் செய்யவேண்டும்.

விஷ்ணு: ஆமாம்! நான் அவதரித்து 12 வயதுக்கு மேல் கானகம் சென்று அங்கு பதினான்கு ஆண்டுகள் கழித்து, ஆக 26 ஆண்டுகள் சென்றபின்தான் இராவண வதம் நடைபெறும்.

இலட்சுமி: அத்தனை வருஷங்கள் முனிவர்களும், ரிஷிகளும் துன்பங்களை அனுபவிக்கவேண்டுமா?

விஷ்ணு: ஆமாம்! இவர்கள் சோம்பேறிகளாய் எந்த வேலையையும் செய்யாமல் ஊரில் மக்கள் வாழ்வதற்குத் தேவையான அரிசி, நெல், நெய், எண்ணெய், பழங்கள், வஸ்திரங்கள் ஆகியவற்றை நெருப்பில் போட்டு, பொசுக்கி வீணாக்குகிறார்கள். இதனால் மக்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கும், உடுத்தும் உடை களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களைக் காக்கவேண்டிய எனக்கு இவர்களால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே 26 வருஷமாவது இரா வணனால் இவர்கள் தொல்லையிலிருந்து மக்கள் விடுபட்டு சுபிட்சமாக வாழட்டுமே!

இலட்சுமி: நல்ல யோசனைதான். தாங்கள்தான் சூழ்ச்சி செய்வதில் வல்லவர் ஆயிற்றே!

விஷ்ணு: பொறுத்திருந்து பார்.

இராமன் ஒரு கடவுள் அவதாரம் என்றால் இராமாவதாரமோ!, பரசுரா மாவதாரமோ! ஒரே நேரத்தில் இரண்டு அவதாரங்கள் எடுக்கமுடியுமா? அப் படியே எடுத்தாலும் ஏன் ஒன்றுக் கொன்று சண்டையிட்டுக் கொண்டன. (இராமாவதாரமும், மற்றும் பிற அவதாரங்கள் எடுத்தபோதெல்லாம் பாற்கடலில் பாம்புப் படுக்கையும், விஷ்ணுவும் லட்சுமியும் இல்லாமல் வெறிச்சோடிப் போயல்லவா இருக்கும்? அப்போது விஷ்ணுவின் காத்தல் தொழிலை யார் பார்த்தார்கள்? இது போன்ற அய்யங்கள் ஏற்படுவது நியாயம்தானே?) அவதாரம் என்றால் கடவுளுக்குக் கற்பித்த குணங்களில் ஒரு சிலவாவது இருக்க வேண்டாமா? இராமனைப் பொறுத்தவரை அவன் யாரையும் காத்ததாகத் தெரியவில்லை. அரக்கர்களையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும் அழித்திருக்கிறான்.

காத்தலைத் தொழிலாகக் கொண்ட கடவுளான விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் இராமன் அழித்தல் தொழிலையே கைக்கொண்டு நடந்துள்ளான். எனவே இராமன் கடவுள் அவதாரமா? என்ற அய்யம் எழுகிறது. இராமன் கடவுள் அவதாரமா? சிந்தித்துப் பாருங்கள்.

இராமன் தசரதன் மைந்தனா? தசரதன் மைந்தன் இராமன் என்று சொல்லப்படுவது சரியா? தசரதனுக்கு 60,000 மனைவிகள் (முதல் மனைவியைப் பார்த்துவிட்டு மீண்டும் அவளைப் பார்க்க வேண்டுமானால் சுமார் 165 ஆண்டுகள் ஆகுமே!) அத்தனை மனைவிகள் இருந்தும் பிள்ளைப் பேறு இல்லையே! அதனால்தானே புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.

அந்த யாகத்தில் கிடைத்த பாயசத்தை அருந்தியதால்தானே மூன்று பட்ட மகிஷிகளும் நான்கு புதல்வர்களைப் பெற்றதாகக் கூறுகிறார்கள். மேலும் அந்த யாகத்தின் முடிவில் தசரதன் தன் மூன்று மனைவிகளையும் ரித்விக்குகளுக்கு அளித்ததாகவும், அவர்களோடு ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் இருந்ததாகவும் கூறப்படுகிறதே! தவிர வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக எழுதப் பட்டுள்ளதே! அதன் பிறகல்லவா நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

அப்படியென்றால் இராமன் கோசலைக்கு பிறந்தவன்தானே தவிர தசரதனுக்குப் பிறந்ததாக எப்படி சொல்ல முடியும்? (இந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்கள் அம்மாதிரி தானுங்களே நமக்குத் தெரியும் என்று சொல்வதை சற்று சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்). எனவே கோ (கோசலை)இராமன், பா(பாயசம்) இராமன், கு(குதிரை) இராமன் என்று தானே கூறவேண்டும்? இராமனின் பிறப்பு அதுவும் ஒரு அவதாரத்தின் பிறப்பு இப்படியா இருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்.

இராமன் தந்தை சொல்மீறாதவன் என்கிறார்களே! தந்தை சொன்னதாக கைகேயி சொன்னது என்ன? இராமனுக்கு பதில் பரதன் இந்த நாட்டை ஆளவேண்டும். இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதுதானே! அப்படியிருக்க சீதை வருகிறேன் என்றவுடன் சம்மதிக்கிறானே! எப்படி? தந்தை என்னை மட்டும்தான் காட்டுக்குச் செல்ல ஆணையிட்டிருக்கிறார்.

என்னுடன் உங்களில் யாரையும் அழைத்துச் செல்லும்படி சொல்லவில்லையே! என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாமல் சீதையையும், லட்சுமணனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறானே! இது தந்தை சொல்லை மீறியதாகாதா? இதுதான் அவதாரத்தின் லட்சணமா? தந்தை சொல்லை மீறியவன்தானே இராமன்? சிந்தித்துப் பாருங்கள்.

------------------------தொடரும் - 7-7-2012 "விடுதலை” ஞாயிறுமலரில் ச. சோமசுந்தரம் அவர்கள் எழுதிய கட்டுரை