Search This Blog

9.7.12

இவன்தான் விஷ்ணு - பெரியார்

மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் கடவுள் பற்றி சிந்திப்போமானால், இவன் (விஷ்ணு) மனித சமுதாயத்தில் சிறிது நாகரிகம் ஏற்பட்ட பிறகு கற்பித்துக் கொண்ட கடவுளாகும். அதிலும் பாரதகால விஷ்ணுவுக்கும், இராமாயண கால விஷ்ணுவுக்கும் அதிக பேதமுண்டு. அதாவது பாரதகாலம் இராமாயணக் காலத்தைவிட முந்திய காலமாகும். பாரத காலத்தில் கற்பு என்பது பழக்கத்தில் முக்கியத்துவம் பெற்று இருக்கவில்லை.

இந்த விஷ்ணுவின் உற்பத்திக்கு ஒரு குறிப்பிட்ட தன்மையோ, காலமோ கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும், நடை, உடை, பாவனைகளில் சிறிது நாகரிகம் காணப்படுகின்றது. விஷ்ணு என் னும் கடவுள் நகரத்திற்குள் நகர வாழ் வோடு ஆடம்பரமான தன்மையோடு கற்பிக்கப்பட்டிருக்கிறதுடன், சிவன் கற்பிதம்போல அவ்வளவு முட்டாள்தனம் கற்பிக்காமல் விஷ்ணு சிறிது அறிவாளியாகவும், தந்திரசாலியாகவும் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

சிவனை எடுத்துக் கொண்டால் அவன் பிள்ளைகள் கணபதி, கந்தன் என்பவைபோல், விஷ்ணுவை எடுத்துக் கொண்டால் அவனது அவதாரங்களைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அவதாரங்கள் ஒழுங்காக கற்பிக்கப்பட்ட தாகச் சொல்ல முடியாது. அதாவது அவதாரம் பத்து எடுத்ததாகச் சொல்லி ஒன்பது அவதாரங்கள்தான் கற்பிக்கப்பட் டிருக்கின்றன. அந்த ஒன்பதும் ஆரிய - திராவிடப் போராட்டங்களையே கருத்தில் கொண்டு கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

என்றாலும், அவற்றில் இரண்டு அவ தாரங்களைத்தான் முக்கியப்படுத்தி முக்கியமான கடவுளாகவும் ஆக்கப்பட் டிருக்கின்றன. அதாவது, சிவன், மூலக்கடவுளாகவும் அவன் பிள்ளைகள் கணபதி கந்தன் முக்கிய கடவுள்களாகவும், நடராஜன், சோமசுந்தரம், அண்ணாமலை, ராமனாதன் முதலியவை உபகடவுள்களாகவும் கற்பித்துக் கொண்டனர்.

அதுபோலவே, வைணவர்களும் விஷ்ணு என்பதை மூலக் கடவுளாகவும், கிருஷ்ணன், இராமன் என்பதை - அவதாரங்களில் இரண்டை மாத்திரம் அதாவது கிருஷ்ணன், ராமன் என்பவற்றை முக்கிய கடவுள்களாகவும், ஸ்ரீரெங்கநாதர், வெங்கடாஜலபதி, வரதராஜன் முதலியவற்றை உபகடவுள்களாகவும் கற்பித்துக் கொண்டார்கள். இவையெல்லாம் நல்ல நாகரிகம் ஏற்பட்ட காலத்தில் உண்டாக்கிச் சொல்லப்பட்டவை என்றாலும் இவற்றில் கூறப்படும் கதைகள் மிகமிகக் காட்டு மிராண்டித்தனமான முட்டாள்தனம் கொண்டவையே.

பிரம்மா

மூன்றாவதான பிரம்மா என்னும் கடவுள் பயனற்ற - பிரபலமற்ற கற்பனைக் கடவுளேயாகும். அதற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது.

பிரம்மாவை சிவன் கற்பித்தான், பிரம்மாவை விஷ்ணு கற்பித்தான், சிவன் விஷ்ணுவை, பிரம்மாவைப் பிறப்பித்தான் என்பது போன்ற முழுமுட்டாள்தனமான கட்டுக்கதைகள் ஏராளம் உண்டு. இவர் களது மனைவிமார்கள் பற்றி அசிங்க ஆபாசக் கதைகள் ஏராளம் உண்டு.

இவை தவிர, சிறு தெய்வங்கள் என் னும் பேரால் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் ஏராளம் உண்டு.

இந்தக் கடவுளால் என்ன பயன் என்று பார்த்தால் அறிவாளிகளுக்கு ஒரு விஷயம்தான் தோன்றும். அதாவது உலகில் கீழ்த்தரமான காட்டுமிராண்டி மக்களும், அயோக்கியர்களும் ஏராளமாய் இருக்கிறார்கள் என்று மற்றநாட்டு மக்கள் தாராளமாகப் பேசிக் கொள்ளக் கூடிய தன்மை ஏற்படத்தான் பயன்படும்.

----------------7.9.1973 விடுதலை நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

வாசக சாலைகளும், கல்வியின் நிலையும் -பெரியார்



அன்புள்ள தோழர்களே!

பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கு இம்மாதிரி வாசகசாலைகள் பெரிதும் அவசியமானதாகும். பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவதொரு விஷயத்தில் விளக்கத்தையும் தான் உண்டாக்க உதவும். ஆனால், வாசகசாலை என்பது பொது அறிவு விளக்கத் தையும் சகல விஷயங்களிலும் ஞானத்தையும் உண்டாக்கும். நல்ல முறையில் அமைக்கப்படும் வாசகசாலையும், புத்தக சாலையும் மனிதர்களை சகல விஷயங் களிலும் ஞான பண்டிதர்களாகவும் அனுபவ ஞானமுடையவர்களாகவும் ஆக்கிவிடும். நம் நாட்டில் பொது உணர்ச்சியின் மீது ஏற்படுத்தப்படும் வாசகசாலை, புத்தகசாலை மிகக் குறைவென்றே சொல்லலாம்.

நம் நாட்டில் ஒரு புத்தகசாலை இயக்கம் இருப்பதாகவும், அதற்கு சர்க்கார் ஆதரவு கூட இருப்பதாகவும், 4, 5 வருடமாக அறிந்து வருகிறேன். ஆனால், அது யாரோ ஒரு குறிப்பிட்ட நபர்களின் சுய நலத்துக்கும், சில குறிப்பிட்ட பத்திரிகை, புத்தகம் ஆகியவை விற்பனையாவதற்கும், உள் எண்ணத்துக்கும் பயன்பட்டு வருவதாக உணர்கிறேன். நம் நாட்டில் எப்படிப் பட்ட பொது நன்மையான காரியத்தையும், ஒரு சில நபர்களோ, ஒரு வகுப்போ சுவாதீனம் செய்து கொண்டு சுயநலத்திற்கே பயன்படுத்திக் கொண்டு வரப்படுகிறது. இதற்குக் காரணம் பொது மக்களுக்குக் கல்வியறிவும், பொது ஞானமும் இல்லாததேயாகும்.

மத விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் பக்தி செலுத்தவும், பணம் கொடுக்கவும், அடிபணியவும் ஒரு வகுப்பார் அவற்றை கொள்ளையடிக்கவும், நலம் பெறவும்தான் பயன்படுத்தப்படுகிறதே ஒழிய, மற்றபடி மதத்தால் ஒழுக்கமோ, ஞானமோ பெற முடிகிறதா? என்று பாருங்கள். அது போலவே அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் காசு பணம் கொடுக்கவும், ஓட்டுக் கொடுக்கவும், ஒரு வகுப்பார் அதனால் நலம் பெறவும், உயர் வாழ்வு நடத்தவும் மற்ற மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும் தான் பயன்பட்டு வருகிறது. அதுபோலவேதான் கல்வியை எடுத்துக் கொண்டாலும் சரி, வேறு எதை எடுத்துக் கொண்டாலும் சரி அவற்றிற்காக பொது மக்கள் வரி கொடுக்க வேண்டும். கஷ்டப்பட வேண்டும். பலனை எல்லாம் ஒரு சிறு வகுப்பார் அடையவேண்டும் என்கிறதாகத்தான் இருந்து வருகிறது.

உழைப்பு நமக்கு, பலன் யாருக்கு?

கல்விக்காக செலவாகும் பணம், நேரம், உழைப்பு ஆகியவைகளை எடுத்துக் கொள்வோமேயானால் அதனால் கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் என்னும் கூட் டத்தார் அடையும் பலனில் 4இல் ஒன்று 8இல் ஒன்று கூடப் படிக்கும் மக்களுக்கோ, படிக்கச் செலவுக்கு பணம் கொடுக்கும் பெற்றோர்களுக்கோ பயன்கிடையாது. நம் கல்வித் திட்டம் பெரிதும் கற்றுக் கொடுப்பவர்கள் நன்மைக்கு ஆகவே இருந்து வருகிறது. இவற்றிற்கு எல்லாம் காரணம் பொது மக்களுக்குப் பொது ஞானம் இல்லாததேயாகும்.
புத்தக சாலை, வாசக சாலை ஆகியவைகளை வெளிநாடுகளில் நான் பார்த்து இருக்கின்றேன். ஒரு புத்தக சாலையில் 500 பேர் 600 பேர் வேலை யாட்கள் இருந்து வருவதைப் பார்த்தேன். 3 லட்சம் 4 லட்சம் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தினம் ஒன்றுக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் பேர்கள் வந்து படிப்பதும், எழுதிக்கொண்டு போவதும், புத்தகங்கள் எடுத்துக் கொண்டு போவது மான காரியங்களை ஒரு நாள் முழுதும் இருந்து பார்த்து இருக்கிறேன்.

கிராமங்களுக்கும் மற்ற சின்ன ஊர்களுக்கும் புத்தகங்கள் வாரா வாரம் அனுப்பப்படுவதையும் திரும்பி வந்து சேருவதையும் பார்த்தால் மிக மிக ஆச்சரியமாய் இருக்கும். ரயில்வே வாகன் புத்தகசாலையின் முன் வாசலில் வந்து நிற்கும். அந்த ரயில் தொடர்ச்சியாகப் போய்ச் சேரும் ஊர் வரையில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கட்டு வீதம் பல புத்தகங்கள் கட்டப்பட்ட கட்டுகள் வாகன் நிறைய அடுக்கப்படும். தபால் கட்டுபோல் அது டேஷன் டேஷனுக்கு எடுத்துக் கொடுக்கப்படும். அதுபோலவே வரும் போது படித்து முடித்த புத்தகங்கள் கட்டுக்கட்டாய் வாங்கிவரப்படும். இந்தக் காரியம் ஒரு பெரிய இலக்காவாக நடைபெறுகிறது.

பத்திரிகை அபிமானம்

அது போலவே பத்திரிகை படிப்பதும் நடைபெறுகிறது. பத்திரிகை படிக்காத மனிதன் சமுகத்தில் கேவலப்படுத்தப் படத்தக்கவராவர். சகல கூலிக் காரர்களும், தொழிலாளிகளும் வீட்டு வேலைப் பெண்களும் தினம் 2 முறையாவது பத்திரிகை படிப்பார்கள். வீடுமெழுகும் ஒரு வேலைக்காரப் பெண் ஒரு கையில் லோஷன் நனைத்த துணியில் நிலத்தை மெழுகிக் கொண்டே மற்றொரு கையால் பத்திரிகை படித்துக்கொண்டே இருப்பதை நான் பார்த்தேன். பத்திரிகை விநியோகிக்கப் பட்ட 2 மணி 4 மணி நேரத் திற்குள் பழைய பத்திரிகையை வாங்கும் வியாபாரி வந்துவாங்கிக் கொண்டுபோய் கடைகளுக்கு விற்றுவிடுவான். அன் றாடப் பத்திரிகையை அன்றாடமே கடையில் சாமான் மடித்துக் கொடுப்பதைப் பார்க்கலாம். அரசியல் ஞானமும், மற்றும் ஊர்ப் பொது விஷயமும் ஒவ்வொரு வருக்கும் தெரியும். ஒருவரை ஒருவர் ஏமாற்றமுடியாது. இவற்றிற்கெல்லாம் காரணம் அந்த நாடுகளில் படித்த மக்கள் 100க்கு 100 பேர்களாக இருப்பதே ஆகும்.

நம் நாட்டில் 100க்கு 8 பேர் 10 பேரே படித்திருக்கிறார்கள். பெண்கள் 1000க்கு 8 பேர் 10 பேரே படித்திருக் கிறார்கள். இதனால் அதிக வாசக சாலை ஏற்படவோ அதிக புத்தகசாலை ஏற்படவோ இடமில்லாமல் போனதோடு, ஏற்பட்டாலும் பயன்படவோ, நிலை பெறவோ முடியாமல் போய்விடுகிறது. நம்மில் கொஞ்சம் பேரே படித்திருந்தாலும் நமக்குப் படிக்க நல்ல புத்தகங்கள் கிடை யாது. தமிழ்ப் புத்தகமெல்லாம் புராணங்களும், அவற்றிற்குப் புதுப்புது உரைகளும் கருப்பொருள்களும், நுண்பொருள்களு மாகத்தான் இருக்கிறதே ஒழிய, அறிவுக்கு ஏற்ற புத்தகங்கள் இல்லை. கதைப் புத்தகம், இலக்கியப் புத்தகம் என்பதும் ஒரு ஊரில் ஒரு ராஜா, அவன் வேட்டைக்குப் போனான். அங்கொரு பெண்ணைப் பார்த் தான் காதல் கொண்டான் என்கின்ற துவக்கமும், காதலுக்கு உயிரை விட்டான்; கற்புக்காக உயிரை விட்டான் என்கிற முடிவுமல்லாமல் வேறு விஷயம் காண்பது அரிதாகவே இருக்கும். நம் புத்தக வியாபாரிகள், வித்வான்கள், கலை வாணர்கள் எல்லோருடைய யோக்கி யதையும் இப்படித்தான் இருக்கிறது.

இங்கிலீஷின் சிறப்பு

இங்கிலிஷ் பாஷைக்கும், கலைக்கும் மத சம்பந்தமோ, பைபிள் சம்பந்தமோ கிடையாது. இங்கிலிஷ் பண்டிதர்களுக்கு மத சம்பந்தமான விஷயம் தெரியாது. ஆனால், தமிழ் பண்டிதனுக்கு மதத்தைவிட வேறொன்றும் தெரியாது. இதனால் தான் நம் பாஷைகள் உலகில் மதிக்கப்படுவதில்லை. ஆதிபாஷையாக இருக்கலாம். கடவுள் பேசிய பாஷையாக இருக்கலாம். அநேக அருள் வாக்கு கொண்ட பாஷையாக இருக்கலாம். அது வேறு விஷயம். அறிவுக்கு பயன் உண்டா? என்பதற்குப் பதில் வேண்டும். நம் தமிழ் பண்டிதர்கள் 100க்கு 99 பேர்கள் மத பக்தர்களே ஒழிய, அறிவாளிகள் என்று சொல்லத்தக்கவர்கள் மிகச் சிலரேயாவார்கள்.

ஆனால், தமிழ் பாஷை நமக்கு நன்மை அளிக்கவில்லை. நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்துக்கும், தன்மான உணர்ச்சிக்கும் தமிழ் எவ்வளவோ உதவி புரிந் திருக்கிறது. அது இல்லாதவரை இவ்வளவு தமிழ் மக்களும் நிஜமாய் குரங்கு களாகவே (அனுமார்களாகவே) இருந்திருப்போம். ஆனாலும் தமிழைப் போற்ற வேண்டுமானால், பரப்ப வேண்டு மானால் மதத்திலிருந்து பிரிக்க வேண் டும். விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும். பத்திரிகைகளும், வெறும் அரசியலும் மதமுமாகத் தான் இருக்கிறதே தவிர பொது அறிவுக்கு பத்திரிகை இல்லை.

பொது அறிவு பரப்பக்கூடிய பத்திரிகைகள் மலிந்திருக்குமானால் மதத்தினால் அரசியலில் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள இழிவுகளும் கேடுகளும் ஏற்பட்டிருக்கவே மாட்டா. ஆதலால் இந்த வாசக சாலை புத்தகசாலை நிர்வாகஸ் தர்கள் இவற்றை கவனிக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். இவ் வாசகசாலைக்குப் பனகல் வாசகசாலை என்று பெயர் வைத்திருப்பதில் நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பனகல் பெருமை

பனகல் என்று பெயர் வைப்பது பனகல் ராஜாராமராய நிங்காரின் தனிப்பட்ட பெயருக்கு ஆக அல்ல. அது ஒரு புரட்சியின் அறிகுறியைக் காட்டுவ தற்கு ஆகும். பனகால் ஒரு புரட்சி வீரர். தியாகராயரையும், மாதவநாயரை யும் லெனினுக்கு ஒப்பிட்டால் பனகால் டாலினுக்கு ஒப்பிடலாம். இவர்களு டைய புரட்சி வீரம் தான் தேவர்களாய் இருந்த இந்நாட்டு பார்ப்பனர்களை மனிதர்களாக ஆக்கிற்று. அவர்களது புரட்சித் தன்மைதான் இந்நாட்டு சூத் திரர்களை இழிமக்களை கீழ்ஜாதி யார்களை மனிதர்களாக ஆக்கிற்று. இக்காரியம் மதங்களையும் கடவுள் களையும் ஒழிப்பதைவிட சொத்துக் களை சமமாக பிரித்துக் கொடுப்பதை விட முக்கியமானதும் பிரயாசையான தும் என்பதை உணருங்கள்.

ஓர் உதாரணம்

இன்றைய சூத்திரர்களுக்கும் பார்ப் பனரல்லாத மக்களுக்கும் சண்டாளர்களுக்கும் தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கும் இதன் அருமையும் பெருமையும் தெரியாது. ஏனெனில் இப்படிப்பட்டவர்கள், மனிதத்தன்மை சமத்துவ உணர்ச்சி ஏற்பட்டதற்குப் பிறகு அறிவு பெற்றவர்களும் கருப்பந்தரித்த வர்களுமாவார்கள். ஆதலால் அவர்கள் பிறக்கும் முன்பு அறிவு பெறுமுன்பு அவர்கள் சமுகத்துக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் என்ன யோக்கியதை இருந்தது என்பது அவர்களுக்குத் தெரி யாது. ஒரு சிறு உதாரணம் சொல்லு கிறேன். சுமார் 30, 35 வருஷங்களுக்கு முன் எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர், பிரபல வியாபாரி, சுமார் 100, 150 ரூபாய் இன்கம்டாக்ஸ் கட்டி வந்தவர். அவரை அக்காலத்தில் 12ஙூ ரூ 15 ரூ சம்பளம் உள்ள ஒரு முனிசிபல் பில்கலெக்டர் பார்ப்பனன் வரி விதிப்பு விஷயமான ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்து பைசல் செய்ய மண்டிக் கடைக்கு வந்து கூப்பிடுவான். அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து ராவால ராவால தேவடா வரவேணும் வரவேணும் சாமீ என்று இரு கை கூப்பி (தூக்கி) கும்பிட்டு உட்காரச் சொல்லிவிட்டு நின்று கொண்டே இருப்பார். அப்பார்ப்பன பில்கலெக்டர் தலை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டு ஏமிரா வெங்கிட்ட நாயுடு போத்தாமா ஆஇண்டினி சூசே தானிக்கு ஏண்டா வெங்கிட்ட நாயுடு, அந்த வீட்டை பார்க்க போகலாமா? என்று கூப்பிடுவான். என் தகப்பனார் ஆ! ஹா என்று சொல்லி வஸ்திரத்தைத் தலையில் கட்டிக் கொண்டு அவன் பின்னால் புறப்பட்டு விடுவார். சுற்றி விட்டு வந்தவுடன் மஞ்சள், மிளகாய், கருப்பட்டி வெல்லம், எல்லாம் ஒரு சாக்கில் கட்டி பையனிடம் கொடுத்து சுவாமிகள் வீட்டில் கொடுத்து விட்டுவா என்று சொல்லி வழியனுப்புவார் இதை நான் நேரில் பார்த்ததைச் சொல்லுகிறேன்.

பார்ப்பனத் திமிர்

இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசு தாரரையும், ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனன் நாயிலும் கீழாக மதித்து அடாபுடா என்று பேசுவான். இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும். இந்த நிலைமைக்கும், இன்றைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். ஆகவே எனக்கும் என் போன்றவர் களுக்கும் அல்லவா தெரியும் தியாகராயருக்கும், நாயருக்கும், பனகாலுக்கும் எவ்வளவு மரியாதை செலுத்த வேண்டும், எவ்வளவு பெருமை அளிக்க வேண்டும் என்பது.

சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பு பார்ப்பனர்கள் நிலைமையும் மத உணர்ச்சியும் எப்படி இருந்தது? இந்த 10, 15 வருஷத்தில் எவ்வளவு தூரம் மாற்ற மடைந்திருக்கிறது? என்பவைகளை உணர்ந்தவர்களுக்குத்தான் அவ்வியாதியினால் ஏற்பட்ட பலனும் அதன் அவசியமும் விளங்கும். இம் மாதிரியான பெரிய புரட்சிகள் சமுதாய வாழ்வில் உண்டாக்கின இயக்கங்களுக் கும், புரட்சிக்காரர்களுக்கும் மக்கள் நன்றி செலுத்துவதற்கும், அவற்றை ஞாபகப் படுத்தி மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்குமாகவே அவர்களின் பெயர்களை மக்களுக்கும் இம் மாதிரியான வாசகசாலை முதலியவைகளுக்கும் இடப்பட்டு வருகிறது.

ஒரு வேண்டுகோள்

இவ்வூர் பொதுஜனங்கள் இவ்வாசக சாலையை ஆதரிக்க வேண்டும். அங்கத் தினர்களாக வேண்டும். தாராளமாக பண உதவி செய்ய வேண்டும். பெண்களும், ஆண்களும் அங்கத்தினர்களாக வேண் டும். சீர்திருத்த உணர்ச்சியும், பகுத்தறிவு உணர்ச்சியும் பெற வேண்டும். அறிவுக்குப் புறம்பான எதையும் அலட்சியம் செய்ய வேண்டும்.

இந் நிலைமையை நம் மக்கள் அடைந்து விட்டால் சுதந்திரத்துக்கு என்றும், சுயமரியாதைக்கு என்றும் மக்கள் போர் தொடுக்க வேண்டிய அவசியமே ஏற் படாது. ஏனெனில் இன்று நாம் அறிவில்லாத குறையில் அடிமையாய் சுயமரியாதை அற்றுக் கிடக்கின்றோமே ஒழிய, சுதந்திரமில்லாமல் அல்ல. மனிதனுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ள அறிவில்லை. எப்படி பயன்படுத்துவது? எது சுதந்திரம்? என்பது கூட நமக்கு இன்னும் சரியாய் தெரியவில்லை. சிலர் வெள்ளைக்காரனை விரட்டுவது, சுதந்திரம் என்கிறார். சிலர் பொருள்கள் சமமாய் இருப்பதைச் சுதந்திரம் என்கிறார், சிலர் கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாமல் இருப்பது சுதந்திரம் என்கிறார். சிலர் தனது முட்டாள்தனம், பேராசை, அயோக்கியத்தனம், நன்றி கெட்டத்தனம் ஆகியவைகளுக்கு ஏற்ப தன்னிச்சையாய் திரிவது சுதந்திரமென்கிறார். சிலர் பாடுபடாமல் ஊரார் உழைப்பால் வாழ்ந்து திரிவது சுதந்திரம் என்கிறார். எது சுதந்திரம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாய் இருக்கிறது.
ஆகவே, மக்கள் யாவரும் கல்விபெற்று உலக விவகாரமுணர்ந்து, தன்னைப் போல் அந்நியர் என்பதை உணர்ந்து அன்புடனும் பரோபகார உணர்ச்சியுடனும் இருந்து வாழ ஆசைப்பட வேண்டியது மனிதனுக்கு அவசியமாகும். அதற்கு இப்படிப்பட்ட வாசகசாலை அறிவு வளர்ச்சிப் புத்தகம் சமத்துவ உணர்ச்சி சம்பாஷணைக் கூடம் ஆகியவை அவசியம் என்று சொல்லு கிறேன். தோழர்களே!

---------------01.03.1938-இல் காஞ்சிபுரம் பனகல் அரசர் வாசக சாலை ஆண்டு விழாவில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் உரை-”குடிஅரசு” - சொற்பொழிவு - 06.03.1938

8.7.12

நம்மை முட்டாளாக்கவே பார்ப்பான், பண்டிகை, விழாக்கள்!

பேரன்புமிக்கத் தலைவர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! இந்தச் சிவகாசியில் என்னைப் பொங்கல் விழாக் குழுவினர் இன்று அழைத்துப் பொங்கல் விழாவினைப் பற்றிப் பேசச் சொல்லி இருக்கின்றார்கள். நான் இந்த ஊருக்குப் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு தடவை வந்து, இதே இடத்தில் பேசி இருக்கின்றேன். அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் காலஞ்சென்ற நண்பர் சவுந்தர பாண்டியன், பி.டி.ராசன் ஆகியவர்களுடன் சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்துள்ளேன்.

இந்த முப்பது ஆண்டுகளில் எவ்வளவோ மாறுதல் அடைந்திருக்கின்றது. இந்தப் பொங்கல் பண்டிகை தமிழனுடைய விழா என்று சொல்லும்படியான நிலையில் உள்ளது. அறிவுக்குப் பொருத்தமானதாகவும் அமைந்துள்ளது. மற்றப் பண்டிகைகள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும், முட்டாள்தன மான கருத்துகளை கொண்டனவாகவுமே இருக்கின்றன. ஒன்று கூடத் தமிழனுடையது - தமிழனுக்குச் சொந்தமானது என்று சொல்லத்தக்க நிலையில் இல்லை.

தீபாவளி விழாவை நம் மக்கள் புத்தி இல்லாமல் ஆடம்பரமாகக் கொண்டாடு கிறார்கள். அதன் தத்துவம் என்ன என்பதை எவனும் சிந்தித்துப் பார்ப்பது கிடையாது. பெரிய பட்டதாரிகள், புலவர்கள் என்பவர்கள் கூடக் கவலைப்படுவது கிடையாது. என்ன கதை அது?

இரணியனுடைய தம்பி இரண்யாட்சன் என்பான், இந்தப் பூமியையே பாயாகச் சுருட்டிக் கொண்டு போய்க் கடலில் போட்டு விட்டானாம். அதைத் திருமாலான வன் பன்றி உருவம் எடுத்துக் கடலுக்குள் சென்று மீட்டு வந்தா னாம். இது எவ்வளவு முட்டாள் தனமான கற்பனை என்பதை நம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூமி உருண்டை வடிவமானது என்று விஞ்ஞானி சொல்லுகின்றான். அப்படியே தட்டையாக இருந்த போதிலும், அவன் அதை எதன் மீது நின்று கொண்டு சுருட்டினான்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்படிக் கடலுக்குள் இருந்து மீட்டு வந்த அந்த பூமியை மீண்டும் விரித்து அதன் மீது அந்தப் பன்றி நடந்ததாம். அதனால் பூமாதேவிக்கு அந்தப் பன்றி மீது காதல் உண்டாயிற்றாம். இருவரும் சேர்ந்து ஒரு குட்டி போட்டார்கள். அவன் தான் நரகாசூரன் என்பவன். ஆணும், பெண்ணும் மனித இனத்தில் கூடிப் பிறப்பது தான் மனித உருவாகப் பிறக்கும் என்பது இயற்கை. ஆனால், பார்ப்பனர்கள் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான கதைகளை எல்லாம் எழுதி வைத்திருக்கின்றனர்.

அந்த நரகாசூரன் என்பவன் பெரிய வனாக ஆனதும், கடவுள்களை எல்லாம் உதைக்க ஆரம்பித்தான். தேவர்களுக்கெல்லாம் தொல்லை கொடுத்தான். அதனால், விஷ்ணு அவனைக் கொன்று போடச் சென்று முடியாமல் தன் மனைவியை விட்டுக் கொல்லச் செய்தான்.
அப்படி அந்த நரகாசூரன் இறந்த நாளைத் தான் நாம் தீபாவளி என்று கொண்டாட வேண்டுமாம். பார்ப்பானுக்குத் தொல்லை கொடுத்தவன் ஒழிந்ததற்குப் பார்ப்பான் சந்தோஷமாகக் கொண்டாடுகின்றான் என்றால், அதில் அர்த்தம் இருக்கின்றது. ஆனால், நம் மக்கள் இம்மாதிரி, நம்மவன் இறந்ததற்குத் துக்கப்படாமல், மகிழ்ச்சியாகக் குளித்து விட்டுப் புத்தாடை உடுத்திக் கொண்டு பலகாரம் சாப்பிட்டுக் குதியாட்டம் போடுகிறார்கள் என்றால், இந்த மக்களை என்ன என்று கூறுவது?

அடுத்து விநாயக சதுர்த்தி. பார்வதியானவள் குளிக்கப் போகும் முன் தன் உடலில் இருந்த அழுக்குகளை எல்லாம் ஒன்று திரட்டி ஓர் உருவம் செய்து குளிக் கும் அறைக்கு வெளியே உட்கார வைத்து, தான் குளித்து முடிக்கும் வரை உள்ளே யாரையும் விட வேண்டாம் என்று கூறி விட்டுக் குளிக்கச் சென்றாளாம். வெளியே சென்றிருந்த சிவன் உள்ளே நுழைய, அந்த அழுக்குருண்டை ஆசாமி சிவனைத் தடுத்து நிறுத்தினானாம். உடனே சிவன் சினங்கொண்டு தலையை வெட்டி வீழ்த்தி விட்டுப் பார்வதியிடம் சென்று விட்டான். சங்கதி அறிந்த பார்வதியானவள் தன்னுடைய அழுக்கினால் உண்டாக்கப்பட்ட பிள்ளையைக் கொலை செய்ததற்காக மிகவும் விசனப்பட்டாளாம். சிவன் அவள் வருத் தத்தை மாற்ற ஒரு யானைத் தலையை வெட்டி வந்து அந்த அழுக்குருண்டைக்கு வைத் துப் பொருத்தினானாம். அதுதான் யானை முகப் பிள்ளையார் சங்கதி.

ராமன் பிறந்ததைக் கொண்டாட ராமநவமி, கிருஷ்ணர் பிறந்ததைக் கொண்டாட கிருஷ்ண ஜெயந்தி, சுப்பன், சஷ்டியில் பிறந்தான் - அதற்கு விழா. இப்படித்தான் அறிவுக்குப் பொருத்தமற்ற, காட்டுமிராண்டித்தனமான காரியங்களுக்காகத் தான் எல்லா விழாக்களும் ஏற்பட்டு இருக்கின்றன.

அத்தனை கதைகளும் பார்ப்பானால், நம்மை முட்டாள்கள் ஆக்க, நம்மை அடிமைப் படுத்த உண்டாக்கப்பட்ட கதைகளும், விழாக்களுமேயாகும். இதில் ஒன்று கூடத் தமிழ்நாடு சம்பந்தமானதாக இருக்கவில்லை. எல்லா விழாக்களும் இந்தக் கடவுள் இவனைக் கொன்றான், அந்தக் கடவுள் அவனைக் கொன்றான். அவன் 1,000 பேரைக் கொன்றான். இவன் 2,000 பேரைக் கொன்றான். இப்படி எல்லா விழாக்களும் கொலை பண்ணின சங்கதிகளுக்காக ஏற்பட்டதாகத்தான் இருக்கின்றன.

மதுரையில் வருஷா வருஷம் 8,000 சமணர்களைக் கழு மரத்தில் ஏற்றிக் கொன்றதற்காக விழா நடத்தப்படுகின்றது! கேட்டால் கூறுகின்றான் எங்கள் கடவுள் அன்பானவர், அருளானவர் என்று! உன் கடவுள்கிட்டே அருளும், அன்பும் எங்கே இருக்கிறது? எதற்கு அதன் கையில் வேலா யுதம், சூலாயுதம், அரிவாள், கொடுவாள், ஈட்டி, கொட்டாப்புளி இவற்றைக் கொடுத்து இருக்கின்றாய்? அதெல்லாம் கொலைகாரப் பசங்கள், திருட்டுப் பசங்கள் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்களாயிற்றே! இவை எல்லாம் உன் கடவுள் கையில் ஏன் கொடுத்திருக்கின்றாய்?


உலகத்திலே நாம் சங்கங்கள் வைத்துக் கொண்டு - இலக்கியங்கள் வைத்துக் கொண்டு நாகரிகமாக வாழ்ந்த காலத்தில், சுத்தக் காட்டுமிராண்டிகளாகத் துணி கூட உடுக்கத் தெரியாத மக்களாக வாழ்ந்த அய்ரோப்பிய மக்கள் எல்லாம். இன்று எவ்வளவோ முன்னுக்கு வந்து விட்டார்கள். அதிசயமான விஞ்ஞான அற்புதங்கள் எல்லாம் கண்டுபிடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், நாம் எந்த நிலையில் இருக்கின்றோம்? பழைய சிக்கி முக்கிக் கல் காலத்தில், கட்டை வண்டிக் காலத்தில் ஏற்பட்ட கடவுளையும், மதத்தையும் தானே கட்டிக் கொண்டு அழுகின்றோம்.

ஆரக்கால் இல்லாத மரப்பட்டரை வண்டியில் மணிக்கு மூன்று மைல் போய்க் கொண்டு இருந்த நாம், இன்று சைக்கிள், மோட்டார் ரயில், அதற்கும் மேலாக மணிக்கு 1,000, 1,500 மைல் போகும் ஆகாய விமான காலத்தில் வாழ்கின்றோம். அமெரிக்காவின் ஜனாதிபதி அய்சனோவர் மாலை 8 மணிக்கு அங்கு ரேடியோவில் பேசுகின்றார் என்றால், நாமும் 8 மணிக்கு உடனுக்குடன் கேட்கும் வாய்ப்புப் பெற்று இருக்கின்றோம் என்றால், நம் கடவுள்கள் பழைய ஆரக்கால் இல்லாத முழுமையும் மரத்தாலேயே செய்யப்பட்ட கட்டை வண்டிக் காலத்தை நினைவுபடுத்து வது மாதிரி, மரக்கட்டைகளால் ஆன தேரில் தானே போய் வருகின்றனர். கொஞ்சம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா?

நம் மக்களை எவ்வளவுக்கெவ்வளவு மடையர்களாக, காட்டு மிராண்டிகளாக ஆக்கி வைத்திருக்கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு பார்ப்பானுக்குப் பிழைப்புக் கிடைக்கும். அதனால் தான் அடிக்கடிப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பண்டிகைகளையும், விழாக்களையும் நம் மக்களைக் கொண்டாடச் செய்து, அவர்களுடைய மடமை எத்தனை டிகிரி உயர்ந்திருக்கின்றது என்று பார்த்துக் கொள்ளுகின்றார்கள். எப்படிப் பார்ப்பனர்கள் தம் அறிவினைக் கெடுத்து மடமையில் ஆழ்த்தி இருக்கின்றார்களோ, அது போலவே சமுதாயத் துறையில் நம்மை நான்காம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி மக்களாக, சூத்திரர்களாக, பறையன், சக்கிலி, பஞ்சமர்களாக ஆக்கி வைத்திருக்கின்றனர். இந்த இழிநிலை பற்றி இன்று எங்களைத் தவிர, எந்த அரசியல் கட்சிக்காரன்களும் கவலைப்படுவது கிடையாது. ஆனால், சட்டசபைக்கும், பார்லிமெண்டுக்கும் பொறுக்கித் தின்ன மட்டும் சொல்லுகின்றார்கள். 100-க்கு 97 பேராக உள்ள இந்த நாட்டிற்குச் சொந்தக் காரர்களான நாம், உடல் உழைப்புக்காரர் களாகிய நாம் ஏன் இழிந்த ஜாதி? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் ஆக இருக்க வேண்டும்? 100-க்கு மூன்று பேராக உள்ள இந்த நாட்டிற்குச் சொந்தமில்லாதவன். உடலுழைப்புச் செய்யாதவன் ஆன பார்ப்பான் ஏன் மேல் ஜாதியாக இருக்க வேண்டும்? இதுபற்றி எவனாவது சிந்திக்கின்றானா? எதற்காக இந்த நாட்டில் பார்ப்பான் இருக்க வேண்டும்? அவனால் இந்த நாட்டிற்கு ஒரு கடுகு அளவு பிரயோசனமாவது உண்டா?

கக்கூஸ் எடுப்பவன் இல்லாவிட்டால் நகரமே நாறிப் போகும். அதற்காகக் கக்கூஸ் எடுப்பவன் இருக்க வேண்டும். துணி வெளுக்க வண்ணான் வேண்டும். மயிர் சிரைக்க சவரத் தொழிலாளி இருக்க வேண்டும். உடை நெய்ய நெசவாளி, உழுது உணவு தானியம் விளையச் செய்ய உழவன் வேண்டும். ஆனால், இந்தப் பார்ப்பனர்கள் எந்த வேலையும் செய்யாமல் சமுதாயத்தில் சேர்ந்திருக்க வேண்டும்? இவர்கள் இல்லாவிட்டால் எந்தக் காரியம் கெட்டுப் போகும்? சொல்லட்டுமே. தலைவணங்கி ஏற்றுக் கொள்ளுகின்றேன். வீணாக ராமசாமி, பார்ப்பானைத் திட்டுகிறான், திட்டுகிறான் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

இன்று உத்தியோகத் துறையினை எடுத்துக் கொண்டால், 100-க்கு மூன்று பேராக உள்ள இவர்களே, 100-க்கு 70, 80 பங்குகளுக்கு மேலாகவே பெற்றுக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். நம் வரிப் பணத்தில் இருந்து 60 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் முழுக்க முழுக்க இந்தப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் தானே நடைபெற்று வருகின்றது. ரூ.2,000, ரூ.1,500 இப்படிப்பட்ட பெரிய பதவியில் இருந்து சாதாரண கிளார்க் பதவிகளில் கூட அவர்கள் தான். ரயில்வே அக்கவுண்டெண்ட் ஆபீசில் வேலை பார்ப்பவர் எல்லாம் பார்ப் பனர் மயம்! இது பற்றி எவன் கவலைப்படுகின்றான்? மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்றுப் பொறுக்கித் தின்ன சட்டசபைக்கும், பார்லி மெண்டுக்கும் போகின்றார்களே தவிர, எவனாவது இதுபற்றிக் கேட்கின்றானா?

ஆனால், பார்ப்பானுடன் சேர்ந்து கொண்டு எவன் தமிழனுக்காக நன்மை செய்கின்றானோ அவனை ஒழிக்கிறேன் என்று மட்டும் வந்து விடுகிறான். இன்று நான் எங்கு போனாலும் நீயேன் காமராசரை ஆதரிக்கின்றாய் என்று கேட்கின்றார்கள். நான் காமராசாரை ஆதரிக்காமல் இந்தத் தேர்தலில் இருந் திருந்தால், அந்த இடத்தில் யார் வந்திருப்பார்? ராஜகோ பாலாச்சாரியோ அல்லது அவரது அடிமைகள் தானே வந்திருப்பார்கள்? ராஜகோபாலாச்சாரி கொல்லைப்புற வழியாக மந்திரிசபை ஏற்றுக் கொண்ட சில மாதங்களுக்குள் பச்சை மனு தரும ஆட்சியை அல்லவா நிலைநாட்டி விட்டார். அவனவன் ஜாதித் தொழிலைப் படிக்க வேண்டும். அரை நேரம் மட்டும் பள்ளிக்கூடம் வந்தால் போதும். பாக்கி அரை நேரம் வண்ணான் மகன் வெளுக்க வேண்டும். அம்பட்டன் மகன் சிரைக்க வேண்டும். சக்கிலி மகன் செருப்புத் தைக்க வேண்டும். குயவன் மகன் சட்டிப்பானை செய்யப் பழக வேண்டும் என்றல்லவா சட்டம் போட்டு விட்டான்?

அவரை இந்தச் சட்டசபைக்காரர்களால் என்ன செய்ய முடிந்தது? நான் தானே ஒரு மாதத்துக்குள்ளாக இந்த உத்தரவை மாற்றாவிட்டால் கத்தியை எடுத்துக் கொள்ளுங்கள். நான் சொல்லும்போது உபயோகிக்கலாம் என்றவுடன், தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதாகக் கூறி விட்டு ஓடினார்.

பிறகு காமராசர் வந்தார். ஆச்சாரியாரின் வருணாசிரமக் கல்வித் திட்டத்தை, வந்ததும் - வராததுமாக உடனே எடுத்துப் போட்டார். ஆச்சாரியாரால் மூடப்பட்ட 3,000 பள்ளிக் கூடங்களையும் திறந்து, மேலும் 4,000 புதிய பள்ளிகளையும் திறந்தார். பள்ளிக்கூடத்துப் பசங்களுக்கு மத்தியான சாப்பாட் டுக்கு வகை செய்தார்! ஏராளமான அய்ஸ்கூல் களையும், காலேஜ்களையும் ஏற்படுத்தினார்! அய்ஸ்கூல் வரை சம்பளம் இல்லாமல் படிக்க ஏற்பாடு செய்தார்.

ஆச்சாரியார் காலத்தில் எஞ்சினியரிங், மெடிகல் காலேஜ், இவற்றில் பார்ப்பனப் பிள்ளைகள் 100-க்கு 60, 70 பேர் படித்து வந்தார்கள். பாக்கியில் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் என்பதன் கீழ் பார்ப் பானுக்குப் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படும் மலையாளி களையும், கிறித்தவர், முஸ்லீம்கள் இவர் களுக்குக் கொடுத்தது போக மீதி நம்மவர் களுக்கு 10, 12 இடங்கள் தான் கிடைக்கும்.

ஆனால், காமராசர் முதன்மந்திரியாக வந்த பிறகு நம் பசங்கள் 60, 70 பேர்களும் பாக்கியில் கிறித்தவர்கள், முஸ்லீம் போகப் பார்ப்பாரப் பசங்கள் 10, 15 பேர்கள் தான் வரும்படியான நிலையை இன்று உண்டாக்கி இருக்கின்றார்.

மற்றும் ராஜகோபாலாச்சாரியார் மந்திரியாக இருந்தபோது, கூன் குருடு, சுடுகாட்டுக்குப் போக வேண்டிய வயதான பார்ப்பனர்களுக்கெல்லாம் பதவிக் காலத்தை நீட்டித்துக் கொண்டே இருந்தார். எல்லா பெரிய உத்தியோகங்களிலும் பார்ப்பனராகவே பார்த்துப் போட்டு வந்தார்.

காமராசர் வந்தபிறகு தான் நம் தமிழர்கள் சில பேர்களாவது உயர்ந்த பதவிக்கு வரும்படியான நிலை வந்திருக்கின்றது. இன்று முக்கியமான இலாக்காக்களில் பெரிய பதவிகளில் எல்லாம் நமது தமிழர்களே பதவி வகிக்கின்றனர். இப்படி இருப்பதனால் அந்த அந்த இலாகாக்களில் வேலை பார்க்கும் நமது கீழ்த்தர உத்தியோகஸ்தர்களுக்குத் தானே நன்மை.

தமிழர்களுக்காக, தமிழன் நன்மைக்காக என்றே கட்சி வைத்துத் தொண்டாற்றி வரும் எங்களுக்கு இப்படித் தமிழன் நலத்தில் அக்கறை கொண்ட ஒருவரை ஆதரிப்பது தான் கடமை.

நான் சென்ற தேர்தலில் மட்டும் அல்ல, இந்தக் காங்கிரஸ் கட்சி உயிரோடு இருக் கின்றவரை காமராசரே முதன்மந்திரியாக இருக்க வேண்டுமென்று கருதுபவன். காங்கிரஸ் ஒழியும்போது வேண்டுமானால் காமராசர் ஒழிந்து போகட்டும். கவலை யில்லை. அதுவரை அவர் தான் முதன் மந்திரி யாக இருக்க வேண்டும்.

அவர் பெண்டு பிள்ளை இல்லாதவர். ஆகையால் அவர் களுக்கென்று சொத்து முதலியவை சேர்த்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிலையில் இல்லாதவர். என்னைப் போலவே அவரும் ஒரு மொட்டை மரம். எனக்குப் பிள்ளைக் குட்டிகள் கிடை யாது. எனக்கும் காமராசர் தயவால் ஆக வேண்டிய காரியம் ஒன்றும் கிடையாது. இப்படிக் கல்வித் துறையிலும், உத்தியோகத் துறையிலுமாக காமராசர் செய்திருக்கின்ற அம்மாறுதல்களால் எங்கள் வீட்டுப் பிள்ளைகளா பலன் பெறப் போகிறார் கள்? 100-க்கு 97 பேராக உள்ள நம் சமுதாயம் முழுமைக்கும் தானே அதனால் பலன் ஏற் பட்டிருக்கின்றது.

-----------------19.1.1959 அன்று சிவகாசி பொங்கல் திருநாளில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை. "விடுதலை" 31.1.1959.

7.7.12

பார்ப்பனர்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள !

மூன்று பிரச்சினைகள் மீதானவிவாதங்கள்

கிடந்தது கிடக்கட்டும் கிழ வனைத் தூக்கி மணையில் வை என்பார்கள்.

அ.இ.அ.தி.மு.க. அரசின் முக்கிய வேலையே கடந்த கால திமுக ஆட் சியில் நடைபெற்ற நல்ல திட்டங் களை எல்லாம் தலைகீழாகப் புரட்டி அடிப்பதுதான்.

சென்னை -_ கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு விழாவை யொட்டி, அண்ணாவின் பெயரில் நூலகம் ஒன்று திமுக ஆட்சிக் காலத் தில் எழில் சோலையாக உருவாக் கப்பட்டது.

ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க நூலகம் என்று நடுநிலையாளர்களும் சிந்தனையாளர்களும் போற்றும் வண்ணம் அமைத்தது.

ஒன்பதுதளங்களில் பன்னிரெண்டு லட்சம் நூல்களோடு ஒய்யாரமாக நிற்கிறது. படிப்பதற்கும் எழுதுவதற்கும் ஏகப்பட்ட ஏற்பாடுகள்! கல்வி அமைச்சராக இருந்த மானமிகு தங்க பாண்டியன் அவர்களால் பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டது.

ஆடியோ வீடியோ மூலம் தகவல்களை அறிந்து கொள்ளவும் வசதி! நம் காலத்தில் இவற்றை எல் லாம் காணக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது குறித்து மகிழாதார் யார்? 230 கோடி ரூபாய் செலவில் எட்டு ஏக்கர் பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் அட்டாணிக் கால் போட்டு அமர்ந்திருந்தது. அந்த அறிவுக் கூடம். புத்தகத் தேனீயான அண்ணாவின் பெயரால் அமைந் திருந்ததுதான் என்ன பொருத்தம்!

அமெரிக்காவில் தமக்கு நடக்க இருந்த அறுவை சிகிச்சையைக் கூட தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் படித்து முடிக்காத நிலையில் அறுவை சிகிச்சையை ஒரு நாள் ஒத்தி வைக்க முடியுமா என்று டாக்டர் மில்லரிடம் வேண்டுகோள் வைத்த அறிஞர் அண்ணாவின் பெயரால் இருக்கும் நூலகத்தை அண்ணாவின் பெயரால் கட்சியை வைத்துக் கொண்டு இருக்கும் ஒரு கட்சியின் ஆட்சி வேறு இடத்திற்கு மாற்றுவேன் என்பதும், நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்பதும் - நாம் 21 ஆம் நூற்றாண்டில் அறிவார்ந்த கால கட்டத்தில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை உடலைக் கிள்ளிப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியாகும்.

எந்த அளவுக்கு மனப்போக்கு மாறியிருக்கிறது? கற்றறிந்தவர்கள் கருத்து மணம் பரப்பும் மாநாட்டு அரங்கத்தைத் திருமணம் நடத்த வாடகைக்கு விடுவதும், விவேகத் தோடு உருவாக்கப்பட்ட அந்த வளாகத்தில் சமையல் செய்ய அனுமதிப்பதும் நினைத்துப் பார்க்கப் பட முடியாத ஒன்றே! உயிரோடு ஒரு மனிதனை நிற்க வைத்துக் கொளுத்துவதற்கு ஒப்பாகும் இது!

ஒவ்வொரு கட்டத்திலும் நீதி மன்றம்தான் நெற்றியடி சாட்டை யைக் கழற்றி முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இன்னொரு தகவலும் உண்டு. அண்ணா நூற்றாண்டு - நூலகத்தில் பில்லா 2 படவிழா ரத்து! அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் என்பதுதான் அந்தச் செய்தி! முதல் நாள் உயர் நீதிமன்றம் சுழற்றிய சாட்டையால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது.

அன்று பவுத்தத்தின் பெட்டகமான நாலந்தா பல்கலைக் கழகத்தைப் பார்ப்பனர்கள் தீ வைத்துக் கொளுத்தவில்லையா? உலகப் புகழ் பெற்ற யாழ் நூலகத்தைச் சிங்கள வெறியர்கள் கொளுத்திக் கூத்தாட வில்லையா?

அண்ணா நூலகம் இதுவரை அந்தப் பட்டியலில் இடம் பெறாத வரை மகிழ்ச்சிதான்!

மதிய உணவுத் திட்டம்

மதிய உணவு திட்டத்தினால் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இந்து ஏடு ஒரு சிறப்புக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

குறிச்சி, ரங்கசாமி அய்யங்கார் என்ற ஆசிரியர்தான் ஏழைப் பிள்ளைகளுக்காக சென்னை இந்து தியாலஜிகல் கல்லூரியில் மதிய உணவுத் திட்டத்தை 1918இல் முதலா வதாகஅறிமுகப்படுத்தினார் என்று இந்துவின் கட்டுரை கூறுகிறது.

மதுரையில் சவுராஷ்டிரா சமுதாயம் நடத்திய ஒரு பள்ளியில் 1920இல் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட தகவலும் தவறாமல் குறிப்பிட்டுள்ளது. 1951இல் கல்வி வள்ளல் காமராசர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இத் திட்டத்தையும் அட்சரம் பிசகாமல் எடுத்துச் சொன்னது வரவேற்கத் தக்கதே!

இவ்வளவுத் தகவல்களையும் வரைந்துதள்ளத் தெரிந்த இந்து ஏட்டுக்கு சென்னை மாநகரில் மாநகராட்சித் தந்தையாக வலம் வந்த வெள்ளுடை வேந்தர் தியாகராயர் அறிமுகப்படுத்திய மதிய உணவு திட்டம் நினைவிலிருந்து மறந்தது எப்படி?

முதல் முதலாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள பள்ளி களில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அன்றைய மாநகராட்சித் தலைவர் பி. தியாகராயர்; அதன் காரணமாக ஓராண் டுக்குள் மாணவர்கள் சேர்க்கை 3075லிருந்து 3705ஆக உயர்ந்தது என்றால் தெரிந்து கொள்ளலாமே.

நீதிக் கட்சித் தலைவர் தியாகராயர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை மறைப்பதில் பார்ப்பனர்கள் எப்பொழுதுமே குறியாக இருந்து வருகின்றனர்.

திருவாளர் சோ. ராமசாமி துக்ளக் இதழில் (9.5.2012 பக்கம் 31) அளித்த கேள்வி பதில் பகுதியில்கூட இலவச மதிய உணவுத் திட்டத்தை முதலில் கொண்டு வந்தவர் காமராஜர்தான் என்று பதில் கூறியதையும் கவனிக்க வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவைச்சேர்ந்த கர்னல் ஆல்கட் என்பவரால் சென்னை அடையாறில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் 1902இல் தொடங்கப் பட்ட ஆல்காட் பள்ளியில்தான் மதிய உணவு முதன் முதலில் அறி முகப்படுத்தப்பட்டது.

ஆல்காட் ஆரம்பித்த முதல் தாழ்த்தப்பட்டோர் பள்ளி

இலவச உணவுத் திட்டம் பள்ளி களில் வழங்கப்பட்டதற்கு இவ்வளவுத் தகவல்கள் இருக்கும்போது இந்து ஏடு ஏதோ ஓர் அய்யங்கார் தான் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்ததாகச் சாதிப்பது எல்லாம் சரியானதுதானா?

எதிலும் வருணப் பார்வைதானா?

கேள்வி: ஓர் ஆணின் வெற்றிக்குப்பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பவர்கள் ஒரு பெண்ணின் வெற்றிக்குப்பின் ஓர் ஆண் இருக்கிறார் எனச் சொல்வதில்லையே ஏன்?

பதில்: வெற்றி அடைகிற பெண் சம்பாதிப்பதை அவனே அனுபவித்து விடாமல், அதில்தானும் பங்கு பெறுவதற்காகவோ, அல்லது மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு விடுவதற்காகவோ ஓர் ஆண் திட்ட மிடுவதில்லை. அதனால் வெற்றி பெறுகிற பெண்ணின் பின்னால் நின்று கொண்டு கண்காணிப்பு வேலையில் ஆண் ஈடுபடுவதில்லை. அவன்தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போகிறான். ஒரு பெண் ணின் வெற்றிக்குப் பின்னால் ஆண் இல்லாததற்கு இதுதான் காரணம்.

-------------------(-துக்ளக் 13.6.2012 சோ ராமசாமி)

பெண்ணின் வெற்றிக்கு ஆண் இருக்கிறாரா இல்லையா என்பது தான் கேள்வி; ஆம் என்று சொல்ல வேண்டும் அல்லது இல்லை என்று சொல்ல வேண்டும். ஆனால் சோ ராமசாமி தனக்கே உரித்தான பாணியில் பிரச்சினையைத் திசை திருப்பி, வேறு தளத்திற்குக் கொண்டு சென்று குழப்பும் வேலையை இதிலும் செய்துள்ளார்.

பெண் சம்பாதிப்பதில் ஆண் உரிமை கொண்டாடுவது கிடையாதா? பணியில் இருக்கும் பெண் சம்பாதிப்பதை அப்படியே கறாராகத் தன்னிடம் கொடுத்தாக வேண்டும் என அதிகாரம் செய்யும் ஆண்கள் நாட்டில் இல்லையா?

தன்னைவிட அதிகம் படித்த பெண் மனைவியாக இருந்தால் அந்த ஆண் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறான் என்பது நடை முறையில் காணக் கூடிய ஒன்று தானே!

தன்னைவிட அதிகம் படித்து, வேலைக்குச் செல்லும் மனைவியாக இருந்தால் ஆண் எப்படி எப்படி எல்லாம் சந்தேகப்படுகிறான்? எத்தனை எத்தனை குடும்பங்களில் உள் கட்சிப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது, இத்தகு பிரச்சனைகளால் விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றம் வரை செல்லு வதெல்லாம் நாட்டின் நடப்புத்தானே?

இந்துமதத் தத்துவத்தின் படி பெண் என்பவர் ஒரு உயிருள்ள ஜீவனே அல்லவே! பெண்ணானவர் பால்ய பருவத்தில் தந்தையின் ஆக்ஞையிலும், யெனவனத்தில் கணவனின் ஆக்ஞையிலும், வயோ திகத்தில் மகனின் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியவள் என்பதுதானே இந்து மத மனுதர்மத்தின் கட்டளை. (அத்தியாயம் 5 சுலோகம் 148).

இந்த இந்து மதத்தை தனது ஊனும் உயிரும் ரத்தவோட்டமுமாகக் கருதுகிற சோ ராமசாமி அய்யர்களிடமிருந்து வேறு எது மாதிரியான பதிலை எதிர்ப்பார்க்க முடியும்?

கேள்வி: சட்டசபையில் முதல்வர் துதி சலிப்படையும் அளவுக்கு அதிகமாக உள்ளதே! தாங்கள் இதைக் கண்டு கொள்ளாதது ஏன்?

பதில்: யார் யாரை யார் யார் போற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதுதான் என் வேலையா? உங்களைக் கூடத்தான் உங்கள் வீட்டில் யார் யாரோ பாராட்டிக் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் நான் கண்டு கொள்கிறேனா என்ன?

- இதுவும் சோ ராமசாமி அதே துக்ளக் இதழில் எழுதிய பதில்தான்.

கலைஞர்பற்றிய கேள்வியாக இருந்திருந்தால் இதுமாதிரியான பதிலை சோ ராமசாமி அய்யர் எழுதுவாரா?

கேள்வி நியாயமானது _ உண்மை யானது என்பது சோ அய்யர்வாளுக்குத் தெரியாதா? நன்றாகத் தெரியும். ஆனாலும் அவரால் இதற்குப் பதில் சொல்ல முடியாது. சொன்னால் அவாள் ஆத்துப் பெண்ணை அவமதிப்பதாக ஆகி விடும். அது வட்டியும் முதலுமாக எதிரொலிக்கும் அதனால்தான் இந்தச் சாமர்த்தியமான பதில்!

கேட்கப்பட்ட கேள்வி சட்ட சபையில் ஆளும் கட்சி துதிபாடுவது பற்றி _ இதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் கேட்கப்பட்ட கேள்வி ஜெயலலிதாவைப் பற்றி என்பதால் தடுமாறுகிறார்.

கலைஞர் வீட்டுப் பிரச்சினைபற்றி யெல்லாம் எழுதத் தெரிந்தவருக்கு சட்டசபையில் அப்பட்டமாக நடப்பது எல்லாம் தெரியாதா?

இதுபோன்ற இடங்களில்தான் பார்ப்பனர்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

------------------------7-7-12 “விடுதலை” ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

தந்தைபெரியாரும் -நுழைவுத்தேர்வும்


நுழைவுத் தேர்வு கூடாது!

கல்வித் துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பனியம் செய்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேருவதற்கு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்குத் தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளதாம்! எதற்காக? பாஸ் செய்த சர்ட்டிபிகேட்டில் காலேஜில் சேர - சேர்த்துக்கொள்ளத் தகுதி உடையவன் என்று எழுதி, கையெழுத்துச் செய்து கொடுத்துவிட்டு, காரியத்தில் மார்க்குப் பார்த்து, திறமை பார்த்து, புகுமுகப் பரீட்சை வைத்துச் சேர்க்க வேண்டும் என்று உத்திரவு போடுவதும் தராதரம் பார்க்காமல் சேர்க்கக்கூடாது என்பதும் பார்ப்பனியமா? அல்லவா? ஏனென்றால், இவை பார்ப்பான் மூளையில் தோன்றியதுதானே?

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பவர்களைக் கல்வி விஷயத்தில் குழியில் தள்ளி மூடுவதுதானே இந்த யோசனையின் பலன்?

கல்வித்துறையில் அதிகாரம் பிற்படுத்தப்பட்ட வகுப்பார், தாழ்த்தப்பட்ட வகுப்பார் கையில் இருந்தால் இந்த எண்ணம் அவர்களது ஞாபகத்துக்கு ஆவது வருமா? மொத்த ஜனத்தொகையில் முற்பட்ட வகுப்பு மக்கள் எவ்வளவு? பிற்படுத்தப்பட்ட வகுப்பார் ஜனத்தொகை எவ்வளவு? வரி கொடுப்பதில் யார் 1 க்கு 3 ஆக, 4ஆக வரி கொடுக்கிறார்கள்? ஓட்டர்களில் அதுபோல் யார் அதிகம்? நாளைக்குப் பதவிக்கு, நிருவாகிகள் ஆசைப்பட்டால் ஓட்டர்களில் இதை எண்ணிப் பார்க்கமாட்டார் களா? கல்வித் துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை உயிருக்குத் துணிந்து ஒழித்ததன் பலன் இதுதானா? இராஜாஜி, பக்தவத்சலனார் உத்திரவுகளுக்கும் இதற்கும் என்ன பேதம்? இதனால் யார் பயனடைவார்கள்?

உத்தியோகத்திற்குத் தகுதி _ திறமை பார்ப்பதே யோக்கியமற்ற காரியம் என்று 40 ஆண்டுகளாகச் சொல்லிப் போராடி வருகிற நான், பாஸ் செய்தவனைப் பள்ளியில் சேர்ப்பதற்குத் தரம் பார்க்கவேண்டுமென்றால் பெரிதும் ஜாதித் தரம் தவிர வேறு தரம் என்ன? நாம்தான் பாஸ் பண்ணாதவனைப் பெயில் ஆக்குகிறோமே! தகுதி _ திறமை பார்த்துச் சேர்க்கப்பட்டவனும் பெயில் ஆகிறானே?

நான் மனித சமுதாயத்தின் தகுதி, தரம் என்பவைகளைப் பார்த்து வந்த அனுபவமுடை யவன், அவைகளைப் பற்றி நான் எழுதி வந்த கருத்துகள் இன்னமும் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு ஆக, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு ஆக உழைத்து வந்தவன் _ வருபவன் நான். மந்திரிகள் முதல் அவர்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகித் தீரவேண்டும் என்பவன்.

கல்வி விஷயத்தில் இந்த ஆட்சியைவிட காமராஜர் ஆட்சி மிக்க தேவலாம் என்று ஆக்கிவிடக்கூடாது.

பாஸ் செய்த பின்பு தகுதி, திறமை, தரம் எதற்காகப் பார்க்கப்படுகிறது? அது எதற்காக வேண்டும்? அதன் அர்த்தம் என்ன? அதன் பலன் என்ன? மந்திரி சபையில், பெரிய பதவியில், அதிகாரத்தில் தரமுள்ளவர்களால், திறமை உள்ளவர்களால் ஏற்பட்ட நன்மை பெருமை என்ன? தகுதி, திறமை, தரம் அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன? அதிகாரம், உத்தியோகங் களிலும் வகுப்பு, உள்வகுப்பு, உட்பிரிவு, ஜாதி வகுப்புரிமை வேண்டும். சர்க்காருக்கு 50 கோடி ரூபாய் மது இலாகா மூலம் வருவாய் கிடைத்திருக் கிறது. இது யார், எந்த வகுப்பார் தந்த பணம்? இந்த வருவாய் கொடுத்தவர்களை வடிகட்டுவது தான் பலனா? இதைக் கவனிக்கவேண்டும்.

கண்டிப்பாய் அரசாங்க அகராதியில் தகுதி, திறமை, தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும்.
இது என் சொந்தக் கருத்து.


---------------------------தந்தை பெரியார் "விடுதலை" 17.7.72

(தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் நாவலர் அவர்கள் நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க - அதனை எதிர்த்து தந்தை பெரியார் விடுதலையில் வெளியிட்ட முக்கிய அறிக்கை இது. (குறிப்பு: தந்தை பெரியார் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு டாக்டர் கலைஞர் அவர்கள் டாக்டர் நாவலரின் கருத்தைச் செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). நுழைவுத் தேர்வு என்னும் சமூகநீதிக்கு எதிரான முறையை கலைஞர் அவர்களின் தி.மு.க.ஆட்சி நீக்கியது. அதன் மூலம் கடந்த மூன்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் உயர் கல்வியில் தமக்குரிய இடத்தை பெற்று வருகின்றனர். இதன் மூலம் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வு நடைமுறையில் இல்லாத நிலையில் மத்திய அரசு மீண்டும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இந்த சமூக நீதிக்கு எதிரான முறையைக் கைவிட வலியுறுத்தி வழக்கம் போல திராவிடர் கழகம் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தனது முதல் குரலை எழுப்பியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நுழைவுத் தேர்வைப் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் கருத்து என்ன என்பது தெரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அதன் அடிப்படையில் இது வெளியிடப்படுகிறது)