Search This Blog

6.7.12

பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - பக்திரசமா? காமரசமா?

பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 6
பக்தி ரசமா? காம ரசமா?

ஸ்ரீமகா பாகவதம் (சித்திரப்படங்களுடன்) என்ற புனித இதிகாச பாகவதத்தில் கடவுள் லீலைகளைப் பாருங்கள் - படியுங்கள்.

இவ்விதமாக முப்பது நாளும் விரத யாத்திரையாகச் செல்லும்போது கடைசி நாள் முன்போலவே கோபகன்னியா ஸ்திரீகள் யாவரும் ஸ்ரீ கிருஷ்ண குண கீர்த்தனங்களைச் செய்து கொண்டு நதிதீர சமீபத்திற்கு வந்து

பரிசுத்தமான ஏகாந்த பிரதேசத்தில் தங்கள் விலையுயர்ந்த வஸ்திரங்களைக் களைந்து அடையாளமாக வைத்து நிர்ப்பயர்களாய் அம்மகா நதியிலி றங்கி ஸ்ரீ ஹரியோஹரியென்று ஸ்ரீபகவன் நாமங்களை தியானித்துக் கொண்டு ஸ்நானஞ் செய்து, அந்த ஜலமத்தியில் சரஸாநந்தத்துடன் ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய லீலாகுண வைபவங்களைப் பாடி, அந்த ஜலத்தை வாரிவாரி யொருவர்க்கொருவர் ஜலவசந்தங்களாடி அடை தற்கரிய பகவத் குணாதிசயங்களையனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில் சர்வ லோகரக்ஷகரான ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகைகள் தீர்த்தமாடுகிற வைபவங்களை அறிந்து தாம் வெகுதூரத்திலிருந்து ஏதோ ஒரு கார்யார்த்தமாய் வருகின்றவரைப் போலத் தன்னுடன் கூட வந்தவர்களை கண்ஜாடை காட்டி ஒரு பிரதேசத்தில் செய்யாமிருக்கச் செய்து, சந்தடி செய்யாமல் தாம் ஒருத்தரம் புறப்பட்டு அங்கங்கு ஒளித்து மெதுவாய் மறைந்து வந்து தாமே களைந்து வைத்தவரைப் போல எல்லா வஸ்திரங்களையும் கிரகித்துக் கொண்டு உடனே கனைத்து மத யானையைப் போலக் கம்பீரமாக நடந்துவிட புருஷனைப் போல அந்த வஸ்திரங்களையெல்லாம் கைகளில் சேர்த்துப் பிடித்துக் கொண்டு தமது லீலைக்கனுகுணமாய் ஒத்த பருவங்களையுடைய இந்த கோப கன்யாகுமரிகளைப் பார்த்து ஏளனமாகிய வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு அந்நதிக் கரையில் தழைத்து புஷ்பித்து விருத்தியடைந்திருக் கின்ற ஒரு கடம்ப விருக்ஷத்தின்மீது தாவி ஏறி, அதன்மீது இவ்வஸ்திரங்களை வைத்துத் தாம் அவ்விருக்ஷத்தின்மேல் நின்று, அதன் பூர்வ கர்ம பாபத்தை நீக்கிப் பரிசுத்தஞ்செய்து மோக்ஷத்திற்குக் காரணமாகும்படி கிருபை செய்தார்.

அத்தருணத் தில் அந்தச் சுந்தரவதிகள் கழுத்தளவு ஜலத்திலிருந்து ஸ்ரீ பகவானுடன் சுகுமாரமாக வசனிக்கலாயினர்.- இந்தப் பகுதியை அப்படியே வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டால் அதை அவர்கள் - வெளிநாட்டவர்கள் - கடவுளின் லீலைகள் என்று கூறுவார்களா? அல்லது Pornographyஆபாச எழுத்துக்கள் என்று கூறுவார்களா?

சராசரி மனிதர் எவராவது, பெண்கள் குளிக்குமிடத்திற்குச் செல்லுவார்களா?

சென்றாலும் அங்கு தங்கி (மரத்தின்மீது ஏறிக்கொண்டு வேடிக்கைப் பார்ப்பார்களா?

அதற்கு மேலும் அந்த கோபிகைகளின் சேலைகள் கரையில் களைந்து வைக்கப்பட்டவைகளை திருடி, மரத்தின்மேல் உட்கார்ந்து நிர்வாண அம்மண, அம்மணிகளை நீரைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரச் சொல்லி அழகை சுவைத்து ஆபாச காட்சிகளை அரங்கேற்றி கைகளை மேலே உயர்த்திக் கேட்க சொல்லுவதைப் பற்றி பாகவத வசனம் படிப்போற்கு சொட்டுவது பக்தி ரசமா? காம ரசமா? இதைப் படமாகவும் அல்லவா வரைந்து பாகவதம் மொழிபெயர்த்தோர் போட்டுப் பரவசம் அடைந்திருக்கிறார்கள்.

என்னே கொடுமை! ஸ்ரீ கோபகன்யா சமூகங்களினுடைய சம்வாதம்ஹே! எமதுயிர்க்குயிரான ஸ்ரீ முத்துகிருஷ்ண பகவானே! நீரிந்த நந்தவிரஜத்தில் அவதரித்து, எங்கள் மனதை யபகரித்ததுமன்றி, எங்களுடைய மர்மாவயவமான தனங்களையும் அபகரிக்கின்றது தர்மமோ? ஈதென்ன ஆச்சரியம்.

நாங்கள் களைந்து வைத்த விழுப்பு வஸ்திரங்களை ஸ்பரிசித்து அவற்றைச் சுமந்து போகக்கூடுமோ? உமது கிருபையினால் எங்களை யடிமைகொண்டு எங்கள் இஷ்டங்களைத் தீர்க்கும்படியான அம்மான் மகனாகிய மைத்துனனாகவே இருக்கின்றீர்.

இப்போது எங்களை மன்னித்து அவைகளை கிருபையோடுக் கொடுத்து எங்கள் மானதனங் களை நிலை நிறுத்தி ரக்ஷிக்கக் கடவீர் என்று பிரார்த்தித்தார்கள்.

சிலர் ஸ்ரீ கோபாலகிருஷ்ணனே! அன்யர்கள் நம்மிடவர்கள் என்பதில்லாத அபேதகுணங்களை வகித்துச் சர்வத்திர்களிடத்திலும் முறை தப்பின வரே! நன்றாய் விளங்கிற்றே இச்செய்கை! சர்வ சம்பத்கர நித்யைஸ்வர்ய பிரதனாய் விளங்கவோ? சமஸ்தமான சேதனா சேதனங்களுக்கும் ஆகார பூதையான இப்பூமிதேவியை மஹார்ணவத்தில் மூழ்கிக் கரைந்து போகாமல் நிலை நிறுத்தவோ? மானிட சிம்ஹனாய் பிரகாசித்துச் சர்வாசுரசம் மாரம் செய்து பக்த பராதீனராய்க் காட்டி மறைக்கவோ? பலிச் சக்ரவர்த்தியினிடத்தில் யாசிக்கின்றவரைப்போல மாயாசிறு குட்டனாய் வந்து அவனுடைய ஐஸ்வரியகர்வங்களை யபகரித்து ஸ்ரீ திரிவிக்கிரமராய்ப் பிரகாசித்துக் கீர்த்தி வகிக்கவோ? சகல அரசர்களுக்கும் பிரபுவாய் ராஜராஜேஸ்வரராய்ச் சகல சத்துருசங்காரஞ் செய்து நிகில ஜனங்களையும் இரக்ஷித்து உத்தரிக்கவோ? சர்வ குருஜனங்களுக்கும் குருசிகாமணியாகி மஹா மஹனீய குணாதிசயங் களை வகிக்கவோ? அல்லது மிகவும் பேதைகளாகிய எங்களையொத்த ஸ்திரீ ஜனங்களுக்கு வசியராய் நாங்களிட்ட வழக்குக் குரியராய் எங்களுக்குப் பணி செய்யவோ? அறிகின்றிலோம்.

இவ்வளவு பெருமை வகித்தது போதும் எங்களுக்குக் கிருபை செய்து எங்கள் கலைகளைத் தருவீர்என்று வேண்டிக் கொண்டார்கள். சிலர் பக்தவத்ஸலனாகிய ஸ்ரீ கிருஷ்ணா! நன்றாயிருந்தது.

நீ சுலபனாய் முன்னமே எங்கள் மனதை யபகரித்தாய். கிரமக்கிரமமாய் எங்கள் மர்மாவயமான தனங்களையும், சுபாவ தர்மங்களாகிய நாண யங்களையும், வஸ்திரங்களையும் அபகரித்தது மன்றி, எங்கள் சர்வேந்திரியங்களையும் உனக்கு அடிமையாக வெழுதிக் கொண்டாய்.

பின்பு இன்னமுமென்ன செய்வாயோ வென்றார்கள். ஸ்ரீ பத்ம தளாக்ஷனாகிய எங்கள் பிரபுவே! நீங்கள் ரஜோகுணப் பிரபாவங்களினால் இந்த சர்வப் பிரபஞ்சங்களிலும் மிகவும் ஆச்சரியமாகிய விசித்திர சிருஷ்டி முதலிய செய்கைகளை யாசரிக்கிறவனென்று அறிந்தேயிருக்கின் றோம்.

உனது சத்வ குணத்தினால் சகல புவனங்களையும் மங்களகரமாக ரக்ஷித்துச் சதுர்வித புருஷார்த்தங்களைக் கொடுக்கத்தக்க ஐசுவரியமுடையவனாகியும், அன்னியர்களால் ஜயிக்க வொண்ணாதவனாகியும் விளங்குகின்ற உன்னை நாங்கள் தியானித்துக்கொண்டே இருக்கின்றோம்.

உனது தமோகுணா விசேஷத்தி னால் பயங்கரமான சக்திகளை வகித்து லோகாரி ஷ்ட நிவாரணங்களைச் செய்து எப்போதும்போல மூன்று குணங்களையும் ஒருமிக்க அடைந்து மிகவும் சோதிமய விக்ரஹனாகியும் ஏகனாகியும் விளங்குகின்றாயென்று நாங்கள் கேள்விப்பட்டு உன்னையே பர்த்தாவாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

இப்படிப்பட்ட நீ மகா மாயாவியாய் விசித்திர லீலாதிசயங்களை யநுஷ்டித்துக் கொண்டு பல மூர்த்தியாய் நானாவித ஜாடைகளை வகித்து ஒருவராலும் இப்படிப்பட்ட தன்மையை யுடையவனென்று அறிதற்கரியவனாகி சற்றுநேரமும் ஒழிவில்லாமல் வியாபித்துச் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற உன்னுடைய வல்லமைக்கு எங்கள் மனதைச் சோதிப்பது தகுமோ?

தயவுசெய்து கடாக்ஷத்திற்குப் பாத்திரைகளாகிய எங்கள் வஸ்திரங்களைக் கொடுத்தருள்வாய் விபுவே யென்றார்கள். இவ்விதம் கோபிகைகள் பிரார்த்திக்க மகா மாயா சாதுர்ய நடன மூர்த்தியாகிய ஸ்ரீ பகவானானவர் புன்னகையுடன் அந்தக் கன்னியாஸ்திரீகளைப் பார்த்துக் கம்பீரமாகச் சொல்லுகின்றார்.

--------------------------- கி.வீரமணி அவர்கள் ஜீலை 1 15 2012 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

கடவுளுக்காக நாமா? நமக்காகக் கடவுளா?


பகுத்தறிவுப் பணி


தோழர்களே, விசுவரெட்டிப் பாளையத்தில் என்னை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்தே முயற்சி செய்தும், இப்போதுதான் அந்த வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கு என் நன்றி.

எங்கள் கொள்கை மிகக் கசப்பான கொள்கை! உங்களுக்கு இனிப்பாக இருக்கும் வகையில் எங்களுக்குப் பேசத் தெரியாது. இன்றுள்ள பிரத்தியட்ச நிலைமையை எங்கள் மனத்தில் பட்டதை - உங்களிடமிருந்து எதுவும் எதிர்பார்க்காமல் தைரியமாகச் சொல்கிறோம். உங்கள் அறிவுக்குப்பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள். மீதியை விட்டுத் தள்ளுங்கள். நாங்கள் சொல்லுவதுதான் சரி. இதைத்தான் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

இப்படியே சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சித்தார்த்தன் என்பவர் எதையும் உங்கள் புத்தியைக் கொண்டு ஆய்ந்து பார்த்து உங்கள் புத்திக்கு சரி எனப்பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவருக்கு புத்தர் எனப் பெயர் ஏற்பட்டது. அதற்குப் பின் வள்ளுவர் இருந்தார். அவரும்,

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று சொல்லிவிட்டுப் போனார். அதற்குப் பின் ஒருவரும் தோன்றவில்லை. எத்தனையோ நாயன்மார்களும் - ஆழ்வார் களும் தோன்றியும் மக்களுக்குள்ள இழிவு ஒழிய பாடுபட்டதில்லை. அவர்களெல்லாம் பார்ப்பனர்களுடைய தயவால் ஆழ்வார்களாகவும், நாயன்மார்களாகவும் ஆக முயற்சித்தார்களே தவிர, மக்களுக்கு ஏன் இந்த இழிவு? பாடுபடும் பாட்டாளி மக்கள் இழிஜாதியினராக - தீண்டப்படாதவர்களாக - சூத்திரர்களாக - பார்ப்பானின் வைப்பாட்டி மக்களாக ஏன் இருக்க வேண்டும்? என்று கேட்டதே இல்லை. நாங்கள்தான் துணிந்து பகுத்தறிவுப் பணியாற்ற முன் வந்திருக்கிறோம். எங்கள் கொள்கைகளை விளக்கி பல புத்தகங்கள் போட்டிருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் வாங்கி படிக்க வேண்டும். நூல் நிலை யத்திலெல்லாம் திராவிடர் கழகத்தின் ஏடுகள் இருக் காது. இன்னும் அந்தத் துணிவு அவர்களுக்கு வரவில்லை.

பேய் பிடித்தாடும் மடமை இன்னும் நம் மக்களிடம் தானே இருக்கிறது? ஜப்பான்காரன் - ஜெர்மன்காரன் இவர்களைப் பேய் பிடிக்கிறதா? இல்லையே. ஏன்? கடவுள் யோக்கியதை தான் என்ன? திருடனும் கடவுளைக் கும்பிடுகிறான் - திருட்டுக் கொடுத்தவனும் கடவுளைக் கும்பிடுகிறான். கடவுள் யாருக்கு நல்லவர்? கடவுளுக்காக நாமா? நமக்காகக் கடவுளா என்பதே விளங்கவில்லையே!

மதம் என்றால் என்ன? யாராவது சொல்ல முடியுமா? மதத்தின் தத்துவம்தான் என்ன? மதத்தின் பிரச்சாரம்தானே நாம் சூத்திரர்கள். ஜாதி இழிவைக் காப்பாற்றுவதும் இந்த மதந்தானே? இந்த இருபதாவது நூற்றாண்டிலும் ஜாதி ஒழிய வேண்டும் என்று நாங்கள்தானே சொல்லுகிறோம்; அதற்காகப் பாடுபடுகிறோம் - சிறைக்குப் போகிறோம். ஜாதி ஒழிய வேண்டுமென்றால், இந்து மதம், சாஸ்திரம், சம்பிரதாயப் புராண, இதிகாசம் எல்லாம் ஒழிய வேண்டும். காந்தியார்கூட ஜாதியைப் பாதுகாக்க வருணாசிரம மதத்தை நிலை நிறுத்தவே பாடுபட்டார். அதனால்தான் காந்தியார் சிலையை உடைக்க வேண்டும் என்றேன். நமக்கு ஒரு அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில்லாததின் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு ஜாதியால்தானே. இதைச் சிந்திக்க வேண்டாமா?

---------------------------விசுவரெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் அவர்கள்ஆற்றிய பேருரை - "விடுதலை" 8.7.1961.

5.7.12

இந்துமதவாதிகள்இதற்குஎன்னபதில்சொல்லப்போகிறார்கள்?


கிறித்துவ மதத்தவர்கள் அதிகம் வாழும் இங்கிலாந்தில் சர்ச்சுகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன. மத அடிப்படையில் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களிலும் மாறுதல் புயற்காற்று வீச ஆரம்பித்து விட்டது.

1837 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சம்பிரதாயப்படி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரைதான் திருமணங்கள் செய்யப்பட்டு வந்தன. இதிலும் அதிரடி மாற்றம் இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளது.


24 மணி நேரத்தில் இரவு - பகல் பாராமல் எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முக்கியமாக தேவாலயங்களில், அவை திறந்திருக்கும் எந்த நேரத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

மற்ற மற்ற இடங்களில் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் 15 நாள்களுக்கு முன்னதாக எழுத்து மூலமாகத் தெரிவித்து அதன்படி திருமணம் செய்து கொள்ளலாம்.

இந்துமதவாதிகள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? இங்கிலாந்தில் இருக்கும் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கையாளர்கள் இத்தகு மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இங்கு அத்தகு நிலை ஏற்பட அனுமதிப்பார்களா? ஒரு பகல் நேரத்தை இராகுகாலம், எமகண்டம், குளிகை என்று பிரித்து வைத்து நான்கரை மணி நேரத்தைக் கெட்ட காலம், அபசகுனமான நேரம் என்று சொல்லி காலத்தை கரியாக்குபவர்கள் உலகத்தில் இந்து மதக்காரர்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? காலம் கண்போன்றது என்பார்கள். பொருளை இழந்தால் சம்பாதித்துக் கொள்ளலாம்; ஆனால் காலத்தைப் பறி கொடுத்தால் இழந்தது இழந்ததுதான்.

இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு வீச்சால் பேரழிவுக்கு உள்ளான ஜப்பான், இன்று பொருளாதாரத்தில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் இராகு காலம், எமகண்டம் பார்த்தா? உழைப் பாலும், அறிவைப் பயன்படுத்தித் திட்டமிடுத லாலும்தானே அது உயர்ந்த முகட்டை எட்டியுள்ளது!
நல்ல நேரத்தில் திருமணம் செய்து கொண் டால்தான் அவர்களின் வாழ்க்கை நலமாக, வளமாக இருக்கும் என்பதெல்லாம் சுத்த பித்தலாட்டம்.

தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி, ஆத்திகர்கள் நடுநடுங்கும் இராகு காலத்தில் கறுஞ்சட்டைத் தோழர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் கெட்டுப் போய் விட் டார்களா? நல்ல நாள் நட்சத்திரம், ஜாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து கொள்பவர்கள் எல்லாம் ஓகோ என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களா? இவற்றிற்கான புள்ளி விவரங்களை ஆன்மீக ஏடுகளாவது வெளியிட்டதுண்டா?

இராமாயணத்தில் ராமனுக்கும், சீதைக்கும் பொருத்தம் பார்க்கப்படவில்லையா? முகூர்த்த நேரம் கணிக்கப்படவில்லையா? ராமன் பட்டாபிஷேகம் சூடுவதற்கு நேரம் நிர்ணயிக் கப்படவில்லையா? அவன் வாழ்வில் இந்த இரண்டு நிகழ்வுகளுமே தலை கீழாகப் போய் விட்டனவே! நிறைமாத கர்ப்பிணியான சீதை, காட்டில் கொண்டு போயல்லவா விடப்பட்டாள்?

கடைசியில் ராமன் சரயூ நதியில் விழுந்து தானே தற்கொலை செய்து கொண்டான்! சீதை, பூமி பிளந்தல்லவா தற்கொலை செய்து கொண்டாள்!

இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்குவதில் கூட பார்ப்பனர்கள் நல்ல நேரம் குறிக்க வில்லையா? இரவில் வாங்கப்பட்ட சுதந்திரம். இன்னும் விடியவில்லையே!

இங்கிலாந்தைப் பார்த்தாவது இந்தியர்களே! மாற்றங்களுக்குத் தயாராகுங்கள்! வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்!

-------------------"விடுதலை” தலையங்கம் 5-7-2012

அண்ணா பார்வையில் ஆரியம்-திராவிடம்

எதிரே இருக்கும் பள்ளத்தைக் காண முடியாதவன் குருடன்! கண் இருந்தும் கருத்துக் குருடாகி, பள்ளமிருப்பதைக் கண்டும் அவ்வழி போய்க் கீழே உருள்பவன் போதையில் உள்ளவன். பலர் தடுத்தும் திமிறிக் கொண்டுபோய் அதிலே வீழ்பவன் பித்தன். அது போலவே ஆரிய திராவிடப் பிரச்சினையைத் தெரிந்து கொள்ளாதவன் தெம்மாண்டை! தெரிந்து கொண்டும் அலட்சியப்படுத்துபவன் தெகிடுதத்தக்காரன். குற்றத்தைப் பிறர்மீது சுமத்தப் பார்ப்பவன் குறும்பன்.

------------------------- "திராவிட நாடு" 3.5.42 பக்.2

ஆரியம் ஓர் நயவஞ்சக நாசீசம், பசப்பும் பாசீசம், ஜாலம் பேசிடும் ஜார், சீலம் என்றுரைத்துத் தமிழ்ச் சீமை ஆண்டவரைச் சிதைத்த சதி, வஞ்சக வல்லரசு, இளித்தவாயரை உற்பத்தி செய்து அவர் மீதேறிச் சவாரிச் செய்யும் ஏகாதிபத்தியம், தாசர் கூட்டத்தை உண்டாக்கி, அதற்குத் தரகு தொழில் செய்யும் தந்திரயந்திரம்!

------------------- நச்சுப் பொய்கை "திராவிட நாடு" 3.5.42 பக்.12

4.7.12

கிரிக்கெட் விளையாட்டும்! - வாஸ்து மூடநம்பிக்கையும்!


அய்.பி.எல். கிரிக்கெட் இந்தியாவில் நடந்தது அல்லவா? இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சென்னை யில் நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற என்ன செய்தது தெரியுமா?

அணியின் ஒப்பனை அறையில் கூடுதலாகக் கண்ணாடிகள் வைக்கப் பட்டன. அப்படி வைத்தால் வாஸ்து பிரமாதமாக இருக்கும் என்று எவனோ ஒரு வாஸ்து கிறுக்கன் சொன்னதைக் கேட்டு இந்தக் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டுக் காரர்களும் நம்பினார்கள்.

கண்ணாடிகள் எல்லாம் வைக்கப்பட்டன. விளைவு. ஊத்திக்கிட்டது தான் மிச்சம். தோல்வியைத் தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

விளையாட்டில் வீரத்தையும், விவேகத்தையும் காட்ட வேண்டியிருக்க, இப்படி முட்டாள்தனத்தையும், மூட நம்பிக்கையை யும் தேடி அலைகிறார்களே - காரணம் தன்னம்பிக்கையும் சுயபுத்தியும் இல்லாததுதான்.

சில கிறுக்கர்கள் குறிப்பிட்ட நிறத்தில் உள்ள கைக்குட்டையை மைதானத்தில் பயன்படுத்தினால்தான் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்குகிறார்கள்.

கடவுள் பக்தி, நம்பிக்கை என்பது எத்தனை எத்தனை வகைகளில் தான் தனி மனிதனையும், சமூகத்தையும் சீரழிக் கிறது பார்த்தீர்களா?

கடந்த முறை உலகக் கால்பந்து போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை ஆக்டோபஸ் முடிவு செய்யும் என்று கூறப்பட்டது.

யூரோ கப் போட்டியில் அது போன்றவை இல்லை. ஒருக்கால், உலகப் போட் டிக்குத்தான் வருமோ! இந்தியாவைப் பொருத்த வரை இந்து மனப்பான்மை என்ற ஒன்று இருக்கிறது. எதிலும் தன்னம்பிக்கையைக் காயடிக்கக் கூடியது அது. நெருக்கடியான கால கட்டத்தில் மன உறுதியோடு விளையாட வேண்டும் என்ற துணிவு இவர்களுக்கு அறவே கிடையாது. வெட்கக் கேடு!

வானத்தையே வளைத்து எழுதும் ஏடுகள் இந்த மூட நம்பிக்கைகள்பற்றி எல்லாம் மூச்சுவிடாது - காரணம், மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவை தானே இந்து ஏடுகளும்!

-------------------- மயிலாடன் அவர்கள் 4-7-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை