Search This Blog

28.6.12

பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல - பெரியார்


தந்தை பெரியார் அவர்கள் தமது அறிவுரையில், பெண்கள் எவ்விதத்திலும் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல. அவர்களும் மனித ஜீவன்கள் என்றும் அவர் களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்பதை எடுத்துக்காட்டவே இம்மாதிரியான திருமணமாகும். எங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வேலை இல்லை என்றாலும் இம்மாதிரியான நிகழ்ச்சியின் காரணங்கள் தேவைகள் ஆகியவற்றை எடுத்துச் சொல்லவேயாகும்.

இந்த நாட்டில் படித்தவன் பணக்காரன் என்பவன் எல்லாம் பகுத்தறிவு பற்றி கவலைப்படாதவர்கள். படிப்பாளிகள், அறிவாளிகள் என்பவர்கள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காகப் படித்தவர்களேயாவர். இந்த நாட்டு மக்களின் சமுதாய இழிவுகள் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. எனவே தான் நாங்கள் தான் எங்கள் கழகந்தான் இந்தத் துறையில் ஈடுபட்டு உழைக்கின்றோம். எங்கள் கருத்தில் மக்கள் மானமற்றவர்களாக மனிதத் தன்மையற்ற காட்டுமிராண்டிகளாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையிலுள்ள மக்களை சீர்திருத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கழகத்தின் குறிக்கோளாகும்.

தோழர்களே, மனிதன் என்றால் ஓர் பெண் துணையும் பெண் என்றால் ஓர் ஆண் துணையும் இருக்க வேண்டும் என்பது இயற்கை. இது மிருகங்கள், புழு பூச்சிகள், மரங்கள், பூ பிஞ்சுகள் எல்லாவற்றிலும் ஆண், பெண் இருக்கின்றன. இது இயற்கை.


இதுவரை நம்மில் ஆணும், பெண்ணும் கூடி வாழ்வதற்காக நடத்தப்பட்ட கலியாணம் என்னும் நிகழ்ச்சி மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்தே சில மாறுதல்கள் ஏற்படுத்த இம்மாதிரி காரியம் செய்கின்றோம்.

இதுவரையில் இருந்து வந்த கருத்து ஓர் ஆணும், பெண்ணும் கூடி வாழ வேண்டும் என்ற கருத்தால் அல்ல, ஓர் ஆணுக்கு ஓர் பெண் சம்பளமில்லாத வெறும் சோற்றுக்காக வேலை செய்யும் அடிமை என்ற கருத்தில்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. நாங்கள்தான் இப்போது அந்தக் கருத்தை மாற்றி ஆணும், பெண்ணும் சரிசமம் உடையவர்கள் என்ற கருத்தில் மாற்றியிருக்கின்றோம். ஆண், பெண் சம உரிமையுடையவர்கள், பகுத்தறிவு உடையவர்கள், மானம் உடையவர்கள் என்பதை உணர்த்தவேயாகும். மனிதன் என்ற சொல்லே மானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுந் திருக்க வேண்டும்.


கலியாணம் என்ற பெயரால் நடத்தப் பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் மனிதன் மடையனாக கீழ்ஜாதியாக, சூத்திரனாக, இழிபிறவியாக, காட்டுமிராண்டியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்துத்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. எவனுக்கு நடந்த திருமணமாக இருந்தாலும் சரி, ராஜா வாகவோ, பிரபுக்களாகவோ, படிப்பாளியாகவோ யாராய் இருந்தாலும் இந்த அடிப்படையில்தான் இருந்து வந்திருக் கின்றது. இந்த சீர்திருத்த முறையில் மடமைக்கோ, காட்டு மிராண்டித் தனத்துக்கோ, இழிவுக்கோ வகை இல்லை. நாம் மானமற்ற இழிபிறவிகள் என்பதன் அறிகுறியாகவே பார்ப்பானை அழைத்துத் திருமணம் நடத்துவது ஆகும். நாம் கூப்பிடுவதே அவனை பெரிய ஜாதி என்ற கருத்தில்தான் ஆகும். அதன் காரணமாக அவன் உயர்ந்தவன் நம் வீட்டில் சாப்பிட மாட்டான் என்பதற்கு அறிகுறியாகவே அவனுக்கு அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றை பச்சையாகவே மூட்டை கட்டி அவன் வீட்டில் கொண்டுபோய் வைக்கின்றோம். நாம் நம் அறிவைப் பயன்படுத்தாமல் அவன் மேல் ஜாதி என்று ஒத்துக் கொண்டு அதன்மூலம் நாம் இழிமக்கள் என்பதை ஒத்துக் கொள் கின்றோம் என்பதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்?

ஆதியில் பார்ப்பானைக் கூப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் கூட பெருமையெனக் கருதி சமீபகாலமாக பார்ப்பானை கூப்பிட ஆரம்பித்து இருக்கிறான். ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டு வாழும் உரிமை, சாஸ்திரத்தில் சூத்தி ரர்களாகிய நமக்கில்லை. நாளாவட்டத்தில் பார்ப்பானுடைய முறையானது எல்லா வகுப்பாரிடையேயும் வந்துவிட்டது. இதன் காரணமாக நாம் அறிவு, மானம் இல்லாதவர்களாக, காட்டுமிராண்டிகளாக, இழிமக்களாக ஆக்கப்பட்டு விட்டோம்.

எங்களுடைய முயற்சியால் இப்படி நடைபெறும் திருமண முறையால் நாங்கள் மட்டும் பயன் அடையவில்லை. நாங்கள் மட்டும் செய்யவில்லை - ஆனால், எங்களின் எதிரிகளான காங்கிரஸ், கண்ணீர்த்துளி, கம்யூனிஸ்டு ஆகிய கட்சிக்காரர்கள் கூட செய்து வருகின்றனர் என்று எடுத்துரைத்தார்.

மேலும் பேசுகையில், கடவுள், மதம், ஜாதி ஆகியவைகள் நீக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும், மணமக்கள் சிக்கன மாகவும், பகுத்தறிவுடனும் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கி அறிவுரையாற்றினார்.
-------------------------தந்தை பெரியார்-"விடுதலை" 6.9.1960

27.6.12

ஆஷை சனாதன வெறிபிடித்த வாஞ்சி நாதன் கொலை செய்தது ஏன்?


ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பாற்றவே!

ஜுனியர் விகடன் (27.6.2012) இதழில் திரு எஸ்.இராமகிருஷ்ணனின் எனது இந்தியா கட்டுரை வெளிவந்துள்ளது. 1911 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலை செய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக்கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர் இராமகிருஷ்ணன்.

இது உண்மையா? ஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சி நாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தான்?
"ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு இந்தி யனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம்.

அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடை யேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு,
வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta.."

திரு. ரகுநாதன் தமது பாரதி காலமும் கருத்தும்' (1982) என்ற நூலில் இக்கடிதத் தின் தமிழ் மூல வடிவத்தைக் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கப்பட்ட தடயங்களின் (நுஒவைள) தமிழ் அச்சுப் பிரதியிலிருந்து இதனை அப்படியே எடுத்து எழுதியதாக ரகுநாதனுடன் நிகழ்த்திய உரையாடலின் போது குறிப்பிட்டதாக பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் தெளிவாக பதிய வைத்திருக்கிறார்.

பேராசிரியர் சிவசுப்ரமணியம் நூலை மேற்கோள்காட்டி எழுதியிருக்கும் திரு. இராமகிருஷ்ணன், வாஞ்சிநாதன் ஆஷை கொல்வதற்கு முக்கிய காரணம் ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்வதுதான் என்ற தகவலை வெளிப் படுத்தும் இந்த கடிதத்தை வெளியிட் டிருக்கவேண்டும். அன்றைய கால கட்டத்தில் ஆஷை நவீன இரண்யன் என்று பத்திரிகைகள் எழுதியதாக கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்யன் யார்?

இரண்யன் அசுரர்களின் தலைவனாக கருதப்பட்டவன். பார்ப்பன குலதர்மத்தை எதிர்த்து சவால்விட்டவன். புராணகால இரண்யனின் கதை புரட்சிக்கவிஞரால் சிறிது மாற்றம் செய்யப்பட்டு இரணியன் அல்லது இணையற்ற வீரன் எனும் பேரில் நாடக வடிவம் பெற்றது.

வர்ணாஸ் ரமத்தை எதிர்த்து சூத்திரர்களின் பாதுகாவலனாய் நவீன இரண்யன் என்று பத்திரிகைகளில் எழுதப்பட்ட ஆஷை சனாதன வெறிபிடித்த வாஞ்சி நாதன் கொலை செய்தது எப்படி காலனி ஆதிக்க எதிர்ப்பாகும்?

ஆஷும் அவரது மனைவியும் பயணிக்கையில் பிரசவ வேதனையால் துடித்துகொண்டிருந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை தனது வண்டி யில் ஏற்றி அவசரம் கருதி அக்ரஹாரம் வழியாக அழைத்துச்சென்று மருத்துவ மனையில் சேர்த்தார் ஆஷ்.

தாழ்த்தப்பட்ட பெண்ணை அக்ர ஹாரத்தின் வழியாக அழைத்துச்சென்று பார்ப்பன சனாதனதர்மத்தை கெடுத்து விட்டார் ஆஷ்! இதுவே ஆஷ் கொலைக்கு காரணம் என்று சொல் லப்படுகிற வரலாறு இருக்க புதுச்சேரியில் இயங்கிவந்த வ.வே.சு.அய்யர் முடி வெடுத்து நீலகண்ட பிரம்மச்சாரி திட்டம் தீட்டி வாஞ்சி அய்யர் நடத்திய படுகொலை பார்ப்பன குலதர்மத்தை காப்பதற்கே என்பது நன்றாகப் புரிகிறது.

-------------- கி. தளபதிராஜ் அவர்கள் 27-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

26.6.12

சாமியை கல்லென்று சொன்னீர்களே, சரியா?-பெரியார் பதில்

ஆயிரந்தரம் சொல்லுவேன்

ஈ.வெ.ரா.: ஸ்ரீ அய்யங்கார் வெகுநேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக்காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை.

நாராயண அய்யங்கார்: (எழுந்து) நீங்கள் சாமியை கல்லென்று சொன்னீர்களே, இது சரியா?

ஈ.வெ.ரா.: ஆம் வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள், காட்டுகின்றேன். (என்று மேஜை மீதிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைதட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலை குனிந்தார்.)


மற்றொரு பார்ப்பனர்: (பத்திரிகை நிருபர்) அந்தக் கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறதே!

ஈ.வெ.ரா: அப்படியானால், மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்கு செய்த மந்திர உபதேசம் உண்மையில் சக்தி உள்ளதானால் இதோ எதிரில் இருக்கும் சகோதரருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதேசம் செய்து அவரை அந்த கல்லுச்சாமிக்குப் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும்படியாகவாவது செய்யக்கூடாதா?

(அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.)

அய்யங்கார்: இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நீங்களாவது ஒரு புது மதம் சொல்லுவதுதானே?

ஈ.வெ.ரா.: நான் ஒரு புது மதத்தை போதிக்க வரவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத்தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்றுதான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகிறேன்.

அய்யங்கார்: இருக்கிறதை மறைப்பதால் புதிதாக ஒன்றைக் காட்டவேண்டாமா?

ஈ.வெ.ரா.: வீட்டிற்குள் அசிங்கமிருக்கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்குப் பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும். இந்து மதம் துர்நாற்றம் போய்விட்டால் அதுவே போதும். நீங்களே இந்து மதம் என்பதாக ஒன்று இல்லையென்று சொல்லி ஒப்புக்கொண்டு விட்டீர்களே, இனி நான் என்ன சொல்ல வேண்டும்!

அய்யங்கார்: நீங்கள் இவ்வளவு சமத்துவம் பேசுகின்றீர்களே, உங்களுகுக்கு லட்ச லட்சமாக சொத்துக்கள் இருக்கின்றதே! அதையேன் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கக்கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே?

ஈ.வெ.ரா.: ஸ்ரீமான் அய்யங்கார் சொல்லுகின்றபடி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்துக்கிடையாது.ஏதோ சொற்ப வரும்படிதான் வரக்கூடியதாயிருக்கின்றது. அதையும் எனக்குச் சரியென்று தோன்றிய வழியில் பொது நலத்துக்குத்தான் செலவு செய்து வருகின்றேன். அல்லாமலும் இந்தத் தொண்டுக்கு வருமுன் பெருவாரியாக வியாபாரமும் செய்து வந்தேன்.

வருடம் ஒன்றுக்கு 1,000 ரூபாய்கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கிறேன். ஆனால், அவைகளை இப்போது அடியோடு நிறுத்திவிட்டேன். இந்தப் பிரச்சாரச் செலவு சில சமயம் மாதம் 200, 300 ரூபாய்வீதம் ஆகிவருகிறது. மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்பதில்லை. நான் அநேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டியில்தான் போகிறேன். அப்படியிருந்தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.

அய்யங்கார்: புரோகிதரைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத்திற்கு போவதில்லை, பிச்சைக்கும் போவதில்லை, காப்பிக் கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரையும் ஒன்றாக கண்டிக்கிறீர்கள். அப்படியானால், என்னதான் செய்கின்றது? எந்தப் புஸ்தகத்தைத்தான் படிக்கிறது?

ஈ.வெ.ரா.: நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவதில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிடமிருந்தாலும் மனிதனின் சுபாவத்திற்கும், சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கைகளும், கதைகளும் எதிலிருந்தாலும் அவைகளை ஒதுக்கி, சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.

இந்த ஊர் எவ்வளவோ நல்ல ஊர் என்றுதான் சொல்லுவேன். சில ஊர்களில் கல்லுகள் போடவும் கூட்டத்தில் கலகம் செய்யவும், கூச்சல் போடவும்கூட பார்த்திருக்கிறேன்றேன். இதெல்லாம் எனக்கு அனுபவிப்பது சகஜம்தான். எவ்வளவுக் கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகின்றதோ, அவ்வளவுக் கவ்வளவு எனது வேலையும் சுலபமாகும் எனது எண்ணமும் நிறைவேறும் என்கின்ற தைரியம் எனக்கு உண்டு. இம்மாதிரி வேலைகளை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் இருந்தே பலர் செய்து வந்திருக்கின்றார்கள்.

ஆனால், அந்த சமயம் இருந்த அரசர்கள் முட்டாள்களாகவும் பலவிதத்தில் பார்ப்பனர்களால் மயக்கப்பட்டவர்களாகவும் இருந்ததினால், அது பலிக்காமல் போய்விட்டது. ராமராஜ்யமாகவோ, பாண்டிய ராஜ்யமாகவோ இருந்தால் நான் இதுவரை ஒரே பாணத்தால் கொல்லப்பட்டிருப்பேன். அல்லது கழுவேற்றப்பட்டிருப்பேன். நல்ல வேலையாக அந்த அரசாங்கங்கள் மண் மூடிப்போய் விட்டது.

வேறு ஒரு லாபமும் இல்லாவிட்டாலும் நமது பணம் கொள்ளை போனாலும், மனிதனின் சுயமரியாதைப்பற்றியாவது வெள்ளைக்காரர் ராஜ்யத்தில் இதுவரை தாராளமாகப் பேச இடம் கிடைத்துவிட்டது. சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி, நான்கு நாள் முன்னோ பின்னோ சாகவேண்டியது தான்.

வீட்டில் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத்தொண்டிற்குப் பிரவேசித்திருக்கிறேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாகப் பயணம் சொல்லிக்கொண்டு தப்பிப் பிழைத்ததால்தான் திரும்பிவர முடியும் என்று என் பெண் ஜாதிக்கும், தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர் விட வேண்டும் என்பது எனது ஆசை.

ஏனெனில் நான் எடுத்துக்கொண்ட வேலை அவ்வளவு பெரியதும், பல எதிரிகளைக் கொண்டதும், தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால், இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும், தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும், இனிப் பயப்படுவது என்பது முடியாத காரியம்.

ஆயிரந்தரம் சொல்லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும் கல் - வெறும் கல். நமது தேசிய இயக்கம் என்கிற காங்கிரஸ் முதலியவைகள் வெறும் புரட்டு - வெறும் புரட்டு என்பது எனது முடிவு. யார் ஒப்புக்கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி. நான் யாருக்கும் போதிக்க வரவில்லை.

எனக்குப் பட்டதைச் சொல்ல வந்தேன். சரியானால் ஒப்புக்கொள்ளுங்கள். தப்பானால் தள்ளிவிடுங்கள். சாமி போய்விடும் என்று யாரும் சாமிக்காக வக்காலத்துப் பேசவேண்டியதில்லை. பேசினாலும் நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. உண்மையான கடவுளும் உண்மையான தேசியமும் எனக்குத் தெரியும். அதை வெளியிடும் தொண்டுதான் இது.

--------------------சிதம்பரத்தில் நடந்த சுயமரியாதைக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. குடிஅரசு 4.2.1928.

25.6.12

பெரியாரின் குறிக்கோள் சமதர்மமே! - அறிஞர் அண்ணா


சோவியத் ரஷ்யா, உலகின் கவனத்தை இழுக்கும் சக்தி பெற்றுவிட்டது. மலடோவின் புன்சிரிப்புக்குத் தவம் கிடக்க வேண்டிய நிலைமைக்கு வல்லரசுகள் இன்றுவந்துவிட்டன. அத்தகைய உச்சநிலை இந்த நாட்டுக்கு வந்துவிட்டது. முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை, அதே நாடு, வல்லரசுகளின் வலையில் சிக்கிக் கிடந்தது; மதவாதிகளின் மாயச்சேற்றிலே அமிழ்ந்து கிடந்தது, ஜாரின் பிடியிலே, ரஸ்புடீனின் கபடத்திலே, சீமான்களின் களியாட்டத்திலே சிக்கிச் சீரழிக்கப்பட்ட நாடாக இருந்தது. பஞ்சத்தையும் படுகொலையையும் கண்டது; கொடுங்கோலரையும் வறுமையையும் கொண்டு நெளிந்தது. அத்தகைய நாடு, இன்று, உலகில் வேறு எங்கும் காணமுடியாத சோபிதத்துடன் விளங்குகின்றது.

சோவியத் ரஷ்யாவின் இந்தப் புதுநிலையை மறுப்பார் இல்லை. புதிய சக்தி பெற்றுவிட்டது என்ப தற்கு விளக்கம் அதிகம் தேவையில்லை. வல்லரசுகள் பலவும் இன்று சோவியத்தின் பலத்தைக் கண்டு, பயம் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

நோய் கொண்டிருந்த நாடு, இன்று பலம் பெற்று விளங்குகிறது. காட்டுமிராண்டிக்காலநிலை மாறிவிட்டது - கணப்போதில்! ஆம்! முப்பதாண்டுகள், ஒரு நாட்டு வாழ்நாளிலே, ஒருகணம்தானே! இதற்குள் கொடுங் கோலர்கள் விரட்டப்பட்டனர், கபட சன்யாசிகள் ஒழிக்கப்பட்டனர், முதலாளித்துவம் முறியடிக்கப்பட்டது, புதிய ஆட்சிமுறை ஏற்பட்டுவிட்டது. புதியதோர் உலகே தோன்றிவிட்டது. இதனை மறுப்பார் இல்லை - ஆனால் இதன் முழு உண்மை - முழுச் சித்திரம் - மக்களுக்குத் தெரிய ஒட்டாதபடி, தப்புப்பிரசாரம் எனும் மூடுபனிப் படலத்தை அமைக்கும் வேலையில் ஈடுபட்டவர்கள் பலர். நாம்அந்த மூடுபனியை நமது சக்திக்கேற்ற அளவு அழிக்க முயற்சிக்கிறோம். இந்த இதழ் மூலம் சித்திரவதைக்கு ஆளான மக்கள், சீறி எழுந்து போரிட்டு, சீரும் சிறப்பும் பெற்றது மானிட வர்க்க வரலாற்றிலே, முக்கியமான பகுதி. அவர்கள் பட்ட கஷ்டத்தை அவனி அறியாவண்ணம், முதலா ளித்துவம் தப்புப்பிரசாரம் செய்துவந்தது; வருகிறது. சமீபகாலம் வரையில் சோவியத்தை அழிப்பதற்கே, வல்லரசுகள் பலவும் தமது பணபலத்தைப் பயன் படுத்தி வந்தன. எனினும் வெற்றி அவர்கட்கு இல்லை. ஒவ்வோர் நாடும் இன்று தத்தம் எல்லையைப் பாதுகாக்கின்றன. “எப்பக்கம் வந்து புகுந்திடுமோ? ரஷ்யா, எத்தனை பட்டாளம் கூட்டிவருமோ?” என்று வீண் பீதிகொண்டு, பட்டாளம் தேவையில்லை - வரவும் வராது - ஏழையின் கண்ணீரிலே, பாட்டா ளியின் பெருமூச்சிலே, விவசாயியின் விசாரத்திலே, தேவையான அளவு பட்டாளம் இருக்க, சோவியத் படையை இங்கு அனுப்புவானேன்!

சோவியத் படை எடுப்பு - ரஷிய ஆதிக்கம் என்பன போன்றவைகள் கடைசிக் கட்டத்திலே வந்து நிற்கும் முதலாளித்துவத்தின் குளறல்.

இந்தப் பீதியைக் கிளப்பி விடுவதன் மூலம், சோவியத்தின் மீது மக்களுக்கு அருவருப்பு வருமாறு செய்து, அதைத் துணைகொண்டு, சோவியத் முறை யான சமதர்மத்தின்மீது வெறுப்பு ஏற்படும்படிச் செய்து, முதலாளித்துவம் சிறிதுகாலம் பிழைத்திருக்கலாம் என்று ஆசைகொண்டிருக்கிறது. அந்த ஆசை நிறை வேறாது! ஏனெனில் நாம் முன்பு குறிப்பிட்டபடி ஏழை யின் விழியில் நீர் வழிகிறது! இது சமூகம் புது அமைப்புத் தேடுகிறது என்பதற்கான அறிகுறி.

இந்த நிலையிலேதான், தப்புப் பிரசாரத்துக்கு இலக்கான ரஷியாவைப் பற்றிய சில உண்மைகளை எடுத்துக்கூறும் கடமையை நாம் களிப்புடன் ஆற்ற முன்வந்தோம். இதனை நமது கடமை என்று நாம் கொள்வதற்குக் காரணமும், உரிமையும் இருக்கிறது. ஏனெனில், பெரியாரின் இயக்கத்தைச் சார்ந்தவராகிய நாம், சமதர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வருகிறோம்.

“ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடு கிறது என்கின்றதன்மை இருக்கின்ற வரையிலும், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில் லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் ஐந்து வேளை சாப்பிட்டுவிட்டுச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கிறதும் ஆகிய தன்மை இருக்கிறவரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேஷ்டியில்லாமல் தீண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேஷ்டி போட்டுக்கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கின்ற வரையிலும், பணக்காரர்களெல்லாம் தங்கள் செல்வம் முழுமையும், தங்களுடைய சுயவாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிற தன்மை இருக்கின்ற வரையிலும், சுயமரியாதை இயக்கம் இருந்தே தான் தீரும்.”

பெரியார், ஜாதிமத ஊழல்களை மட்டுமல்ல, மக்களிடை காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வு களையும் இதுபோலப் பலமாகக் கண்டித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையைக் கூறவேண்டுமானால், சமூக சீர்திருத்தத்துக்காகப் பாடுபடும் அவரை, விஷமிகள், “நாத்திகர்” என்று பாமரரிடம் கூறி வந்தது போலவே, “பொது உடைமை வாதி இவர்” என்றும், சர்க்காரிடம் சாடி கூறினர். அவருடைய வேலைத் திட்டத்தை ஒரு காலத்தில், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி போன்றவர்கள், பொது உடைமைத் திட்டம் என்று கூறினதுண்டு.

பெரியார், இவைகளைக் குற்றச்சாட்டுகளாகக் கருதிச் சளைக்கவில்லை.

சமதர்மப் பிரசாரத்தைத் தமிழகத்தில் தளராது செய்து வந்தார். அதுவும் ஏட்டுப்படிப்பின் பயனாக அல்ல - அனுபவத்தின் துணைகொண்டு மட்டுமல்ல - நேரடியாகச் சோவியத் சென்று, அங்குப் புது உலகு பூத்திருக்கும் அழகினைக் கண்டு உண்மை நிலை யினைத் தெரிந்து கொண்டு அந்தப் பிரசாரத்தைத் துவக்கினார்.

அது மட்டுமல்ல உண்மை. அவருடைய சாதி ஒழிப்புப் பிரசாரமுங்கூட, வெறும் மதத்திருத்தமோ, மக்களிடை ஏற்பட வேண்டிய மனத்திருத்தமோ மாத்திரமல்ல, சாதிமுறையையே - வர்ணாசிரமத்தையே, அவர் முற்காலத்தில் தந்திரசாலிகள் அமைத்துக் கொண்ட பொருளாதாரச் சுரண்டல் முறை என்று நம்புகிறார் - தக்க காரணம் காட்டி இதனை நிரூபித் திருக்கிறார். ஆகையால், சாதி முறையை அவர் எதிர்க்கிறார் என்றால், பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும், நிலைத்திருக்கச் செய்வதும், இனி யும் வளரச் செய்யக் கூடியதுமான கொடிய ஏற் பாட்டைத் தாக்கித் தகர்க்கிறார் என்றே பொருள் - அதாவது சமதர்மத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்.

தமிழகத்தாரின் மனதிலே கிடக்கும் பழங்காலக் கொள்கைகளை, அவர், சாதிய முறையின் மூலம் வளர்ந்துள்ள முதலாளித்துவத்தின் முடிக்கயிறுகள் என்று எடுத்துக்காட்டியே கண்டிக்கிறார். அவருடைய பெரும்படையின் பணி, சமதர்மத்துக்கே பயன் படுகிறது - பிறர் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பினும் - மதிப்பிடக் கூசிடினும். இத்தகைய பணி, சோவியத் தில், தேவையான அளவுக்குமேல், புரட்சிக்கு முன்பு செய்யப்பட்ட காரணத்தாலே தான், புரட்சி, சாத்திய மாயிற்று. பாட்டு, கூத்து, கதை, காவியம், ஓவியம் முதலிய பல்வேறு துறைகளிலும், இதற்கான பிரச்சாரம் செய்யப்பட்டு, ஏழை ரஷியன் மனதிலே, தூவப்பட்டி ருந்த நெடுங்காலக் கருத்துக்களை அறவே ஒழித்த தால் தான், மாவீரன் லெனின், புரட்சி மார்க்கத்தைக் காட்டியவுடன் சிங்கக் கூட்டம் சீறி எழுந்தது, கிழித்து எறிந்தது பகைக் கூட்டத்தை.

இந்த மூலக்கருத்தை நன்கு தெரிந்ததாலேயே, இன்று பெரியார் நடத்திச் செல்லும் இயக்கம், நாட்டு மக்களிடை நல்லறிவுப் பிரச்சாரத்தை விடாமல் செய்து வருகின்றது; இலட்சியப் பாதையில் நடந்து சென்ற வண்ணம் இருக்கிறது. அதன் இறுதியில், சோவியத் சோபிதம் காண வேண்டும் என்ற உறுதியுடன்.

இதன் பயனாகவே, நாம், நவம்பர் புரட்சி சமயத் திலே, சோவியத் நாட்டுச் சோபிதத்தை விளக்கும் கட்டுரைகளையும், அதுபோன்ற புத்துலகம் காண வேண்டின், எதுபோன்ற சூழ்நிலை தேவை என்பதை விளக்கிடும் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறோம். நாடோடியின் நிலைமை, விபசாரம் பிறக்கும் வழி என்ற பல்வேறு சித்திரங்களும் இன்று நாட்டிலே காணக்கூடியன. தெருக்கோடியில், பாதை ஓரத்தில், பட்டினத்தில், பட்டியில் எங்கும் நீங்கள் இவர்களைச் சந்திக்கலாம். இவர்கள் சமூகத்திலே உள்ளதற்கான காரணம் என்ன, என்ற சிந்தனையைக் கிளறவே, இக்கட்டுரைகள். இதழ்பெற்றுப் பயன் பெறுவர் தமிழர் என்று நம்புகிறோம்.

------------------அறிஞர் அண்ணா“திராவிட நாடு”, தலையங்கம், 17-11-1946

பெண்கள் விடுதலை பற்றி பெரியார்


இராஜன்: ஏண்டா, டேய்! இராமா! பெண்கள் விடுதலை, பெண்கள் விடுதலை என்று பேசுகிறார்களே, அதென்ன விடுதலை? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?

இராமன்: உனக்கெப்படியப்பா புரியும்? உனக்கு கால் டஜன் பெண்டாட்டிகள் இருக்கிறார்கள்; அரை டஜன் வைப்பாட்டிகள் இருக்கிறார்கள்; அதோடு நிறையப் பணமும் இருக்கிறதே?

இராஜன்: நான் சொல்லுவது உனக்குக் கேலியாக இருக்கிறது. இந்தப் பெண்களிடமிருந்து எனக்கு (ஆண் களுக்கு) விடுதலை கிடைப்பதுதான் பெரிய கஷ்டமாயிருக்கிறது? ஒருத்தி விட்டால் மற்றொருத்தி இழுக்கிறாள். இவர்களைவிட்டு நான் எப்படி விடுதலை அடைகிறது?

இராமன்: சரிதான்; இப்போது புரிந்தது. நீ அந்தப் பெண்களிடம் கஷ்டப்படுவதினால் உனக்குத்தான் விடுதலை வேண்டும் என்கிறாய். உனக்கு 9 பெண்கள் எதற்கு? ஒரு பெண் இருந்தால் போதாதோ? ஒரு பெண் 9 கணவனை மணம் செய்து கொண்டும் காதலனாக வைத்துக் கொண்டும் இருந்தால் நீ அந்த ஒன்பதில் ஒருவனாக இருக்க சம்மதிப்பாயா?

இராஜன்: ஒரு பெண்ணுக்கு 9 புருஷன் என்றால் அது என்ன மிருகமா? நாமென்ன மிருக சாதியா? நன்றாய்ச் சொல்லுகின்றாய் நாக்கு கூசாமல்!

இராமன்: பெண்கள் விடுதலை என்றால் இப்போது உனக்கு அருத்தமாச்சுதா? நீ ஒன்பது பெண்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய இயற்கை உணர்ச்சிக்கு உன்னை வலிய இழுக்க வேண்டிய மாதிரிக்கு அவர் களை அடைத்து வைக்கலாம்.அது மனுஷத்தன்மை என்கிறாய். ஒரு பெண் 9 கணவனை வைத்துக் கொண்டி ருந்தால் அது மிருகத்தனம் என்கிறாய், இந்தக் கொள்கை போக வேண்டு மென்பதைத் தான் பெண்கள் விடுதலை என்று சொல்லுவது. புரிந்ததா?

இராஜன்: புரிந்தது. நன்றாய்ப் புரிந்தது. நான் அவசரப்பட்டு மிருகத் தன்மை என்று சொல்லிவிட்டேன். ஒரு பெண்ணுக்கு 9 பேர் என்பது இன்றும் தாராளமாய் நடக்கின்றதே. நம்ம தேவதாசிகளைப் பாரேன். நம்ம விலைமாதர்களைப் பாரேன். 9 தானா 90ம், 900-மும்கூட இருக்கும் போலிருக்கின்றதே.

மக்கள் அங்கு போவ தில்லையா? அவர்களுக்கு மரியாதை செய்வதில்லையா? அந்தப் பெண் களுக்குச் சுதந்திரமில்லையா? தங்கள் இஷ்டம் போல் பணம் கேட்பதும் தங்கள் இஷ்டம் போல் ஒருவனை நீ வேண்டாம் வெளியில் போ என்பதும் நாம் தினமும் பார்க்கவில்லையா? ஆகவே அவர்களுக்குச் சுதந்திரமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

இராமன்: பொறு, பொறு அவசரப்படாதே. சுதந்திரம் இருப்பதாக நீ சொல்லும் பெண்கள் யார் என் பதைத் தெரிந்து கொண்டாயா? தேவதாசிகளுக்கும் விலைமாதர் களுக்கும் சுதந்திரம் இருப்பதாகச் சொன்னாய். நீ சொல்கிறபடி பார்த்தால் ஒரு பெண் சுதந்திரமாக இருக்க வேண் டுமானால் ஒன்று தேவதாசியாகப் போய்விட வேண்டும்.

அல்லது விலைமாதாகப் போய்விட வேண்டும். வெள்ளைத் தமிழில் சொல்ல வேண் டுமானால் தேவடியாளாக அல்லது குச்சுக்காரியாகப் போய்விட வேண்டும் என்கிறாய். ஒருவனையே கணவனாகக் கொண்டு திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிற பெண்களுக்கு விடுதலை என்பது ஒரு ஆணுக்குப் பல பெண்களில் ஒருத்தியாய் இருந்து அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதான் கடமைபோல் இருக்கிறது.

இராஜன்: ஒரு பெண் தனிமையில் இருந்து வாழ்க்கை நடத்திக் கொள்ளட்டுமே, யார் வேண்டாம் என் கின்றார்கள்? பெண்கள் தாங்களாகத்தானே யாருக்காவது ஒருவ க்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்று துடிக்கிறார்கள். அவர்கள் பெற் றோர்களும் வயது வந்துவிட்டதே என்ன செய்வது? யார் தலையிலாவது கட்டிவிட வேண்டுமே, இல்லா விட்டால் கெட்ட பெயர் வந்து விடுமே என்று கவலைப்படுகிறார்கள். அதற்கேற்றபடியே கல்வி இல்லாமலும் தொழிலில் பழக்காமலும் வளர்க் கிறார்கள்.

அப்படிப்பட்ட பெண்ணைக் கட்டிக் கொள்ள வருபவனும் தனக்கு அடிமைத் தொழில் செய்ய ஒரு ஜீவன் வேண்டும் என்று கருதியே பெண்ணைத் தேடுகிறான். அதோடு இவள் பெறுகின்ற குழந்தைகளுக்கும் இவளுக்கும் வாழ்விற்கு வேண்டியதை எல்லாம் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு செய்கிறான்.

இதற்கு மேல் அடிமை புகுந்தவளுக்கு எஜமானன் வேறு என்ன செய்ய முடியும்? தான் தேடிய சொத்துக்களையும் அடிமை பெற்ற குழந்தைகளுக்கே வைத்து விட்டுப் போகிறான். இன்னும் என்ன தான் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறாய்?

இராமன்: நீ சொல்லுவதைப் பார்த்தால் பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்கிறாய் போல் இருக்கிறது. கல்யாணம் செய்து கொண்டால் அடிமையாகத்தான் இருக்க வேண்டும் என்கின்றாயாக்கும்?

இராஜன்: நான் அப்படிச் சொல்லவில்லை; இயற்கை அது. கொடுப்பவன் கை மேலாகவும், வாங்குபவன் கை கீழாகவும்தான் இருக்கும். கல்யாணம் இல்லாமல் இருந்தால் என்ன முழுகிப்போய் விடும்? மலையாளத்தில் சில இராணிகளும் ஜமீன்தாரணிகளும் சம்பளம் கொடுத்து புருஷன்மார்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் கவுரவம் குறைந்துபோய் விட்டதா? அல்லது சமுதாயத்தில் குறை கூறுகிறார்களா?

அவ்வளவு தூரம் போக உன்னால் முடியாவிட்டால் பெண்களை நன்றாய்ப் படிக்க வைத்து அல்லது ஏதாவது ஒரு தொழிலில் அமர்த்தி, 25 வருடம் வரை கல்யாணப் பேச்சு பேசாமல் 25 முதல் 30 வயதிற்குள் அந்தப் பெண்ணையே தனக்குப் பிடித்தவனை ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துகொள்ளும்படிச் செய். வாழ்க்கைக்கு (அன்னவஸ்திரத்துக்கு) புருஷன் கையை எதிர்பார்க்காமல் செய். அப்போது பெண் விடுதலை வேண்டி இருக்குமா அல்லது ஆண் விடுதலை வேண்டியிருக்குமா அல்லது இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் கட்டுப் படுத்திக் கொள்வார்களா என்று பார்!

------------------சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் தந்தை பெரியாரால் எழுதப்பட்டது-குடிஅரசு 27.9.1945