Search This Blog

29.12.09

பெரியார் கருத்து உலகமெலாம்

பெரியார் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது
பெரியாரின் மறு உருவாக்கமாகத் திகழ்கிறார் வீரமணியார்
திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் மு.நாகநாதன் பாராட்டு

தந்தை பெரியாரின் மறு உருவாக்கமாகத் திகழ்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியார் அவர்கள் என்று தமிழக திட்டக்குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் தனது உரையில் குறிப்பிட்டார்.

சென்னை பெரியார் திடலில் நேற்று (27.-12.-2009) இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ரிச்சர்டு டாகின்ஸ் அவர்கள் எழுதிய God Delusion என்னும் ஆங்கில நூலை தமிழில் மொழியாக்கம் செய்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். இந்நூலின் முதல் படியினைப் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பிற்போக்கான அமெரிக்க நாடு

வளர்ந்த அமெரிக்க நாடு பிற்போக்குவாதிகள் நிறைந்த நாடு. அங்கு கடவுளை மதத்தை நம்பக் கூடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் அறிவியல் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு பிடித்த டார்வின் மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி.

இருபதாம் நூற்றாண்டில் கடவுள் இல்லை என்று சொல்லி இடையறாமல் போராடியவர் தந்தை பெரியார். அவர் மதங்களை ஒழிக்கப் போராடினார். ஜாதிகளை ஒழிக்கப் போராடினார். மக்கள் சமத்துவ உரிமை பெறவேண்டும் என்பதற்காகப் போராடினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காகப் போராடினார்.

இப்படிப்பட்ட நிலையில் ரிச்சர்டு டாகின்ஸ் அவர்கள் எழுதிய ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட நமது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பெருமகனார் அவர்களையும், இந்த நூலை தமிழில் மொழி பெயர்ப்பதற்கு உதவிய பேராசிரியப் பெருமக்களையும் பாராட்டுகிறேன். தந்தை பெரியார் வழியில் மிகச் சிறப்பாக ஆசிரியர் அவர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகிறார்.

பெரியார் வழியில் ஆசிரியர்

1930, 1940ஆம் ஆண்டுகளில் உலக அறிவியல் அறிஞர்களின் நூல்களை எல்லாம் ஆங்கில மொழியில் இருந்து மொழி பெயர்த்து தமிழில் கொண்டு வந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

அது மட்டுமல்ல. தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எல்லா ஊர்களிலும், எல்லா நகரங்களிலும் பரப்பிக் கொண்டிருக்கின்றார்.

நமது ஆசிரியரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் தந்தை பெரியாரின் மறுவடிவமாக, தந்தை பெரியாரின் மறு ஆக்கமாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு ஆசிரியர் வீரமணியார் அவர்களுடைய பணி பாராட்டத் தக்க அளவிலே நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவருடைய பணியைப் போற்றுகிறேன். கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை என்ற இந்த நூலை ஆங்கிலத்தில் இரண்டு முறை படித்தேன்.

பெரியார் கருத்து உலகமெலாம்

தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகள் இன்றைக்கு உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் பெரியாருடைய கருத்துகளை இருட்டடிப்பு செய்து பார்த்தார்கள்.

கலைஞர் - வீரமணியார் சுறுசுறுப்பு

பெரியாருடைய கடவுள் இல்லை என்ற கருத்து இன்றைக்கு ரிச்சர்டு டாகின்ஸ் மூலம் வெளியே வருகிறது, பரவுகிறது. பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் நீண்ட காலம் வாழுகிறார்கள். தந்தை பெரியாருடைய குருகுலத்தில் பயின்ற தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 86 வயதிலும் சுறுசுறுப்பாக பொதுமக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டு வருகின்றார்.

அதே போல நமது ஆசிரியர் அவர்களும் இந்த 77 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்து கொண்டு பொதுப் பணிகளை ஆற்றி வருகிறார். பெரியாரின் பேரியக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

தேவநாதன் என்ற காஞ்சிபுர அர்ச்சகர் அவருடைய செயலாலேயே கடவுள் இல்லை என்று காண்பித்துவிட்டார்.

நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர், நாத்திகர்

2003ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அறிஞர் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் ஒரு நாத்திகர். அவர் ஒரு நாத்திகர் என்ற செய்தியே ஊடகத் துறையால் மறைக்கப்பட்டது. பிறகு நான் தேடித் தேடி அலைந்து அந்த ஆதாரத்தைக் கண்டுபிடித்தேன். அறிவியல் இதழ்களிலிருந்து ஆதார பூர்வமாக எடுத்தேன், அவர் ஒரு நாத்திகர் என்ற செய்தியை. நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர் சாகும் தறுவாயில் இருந்த பொழுது அவரிடம் கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கேட்டார்கள். ‘‘எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை கிடையாது. நான் ஒரு நாத்திகன். நான் இளமையிலிருந்தே நாத்திகனாக வளர்ந்தேன். நான் இறப்பைப் பற்றி கவலை கொள்ளவில்லை’’ என்று தெளிவாகச் சொன்னார்.

12 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய கவிஞர் உமர் கயாம் ஒரு நாத்திகர். கடவுளை நம்பாதவர். சொர்க்கம், நரகம் என்று வேறெதுவும் இல்லை. இந்த பூமிதான் சொர்க்கமும் நரகமும் ஆகும் என்று பாடியவர் அவர்.

மா சே துங் சொன்னார்

மாசேதுங் சொல்கிறார் ‘‘தொழிலாளிகள், விவசாயிகளின் மூளையை உறைய வைப்பதற்காக முதலாளிகள் மதம் என்ற மாத்திரையைப் பயன்படுத்தினார்கள்’’ என்று. தந்தை பெரியார் அவர்கள் கடவுள் இல்லை என்று சொன்னார். அந்தக் கருத்துகளைத்தான் இன்றைக்கு அறிவியல் அறிஞர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள். நான் நாத்திகன் என்னுடைய சகோதரர் நரேந்திரன் ஒரு நாத்திகர்.

முரசொலி மாறன் சொன்னார்

மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களைப் பார்க்க நான் டில்லி சென்றிருந்தேன். அவர் உடல் நலம் இன்றி வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பி வந்த சமயம். நான், அண்ணன் முரசொலி மாறன் அவர்களைப் பார்க்க டெல்லியில் அவருடைய இல்லத்தில் அமர்ந்திருந்தேன். மத்திய அமைச்சரான அவரோ எங்கோ வெளியே சென்று விட்டு இல்லத்திற்குத் திரும்பினார். என்னைப் பார்த்தவுடன் ‘‘நீங்கள் எவ்வளவு நேரமாகக் காத்திருக்கிறீர்கள்’’ என்று கேட்டார். ‘‘நான் அரைமணி நேரமாகக் காத்திருக்கிறேன்’’ என்று செல்லிவிட்டு ‘‘நீங்கள் எங்கே சென்று வருகிறீர்கள்’’ என்று கேட்டேன். ‘‘ஒன்றுமில்லை. நான் உடல் நலம் தேறி வந்ததற்காக குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ண காந்த் என்னைப் பார்ப்பதற்காக வருகிறேன் என்று சொன்னார். இல்லை நீங்கள் வர வேண்டாம் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்ததில்தான் இந்த காலதாமதம்’’ என்றார். அது மட்டுமல்ல குடியரசுத் துணைத் தலைவரே ஒரு மூடநம்பிக்கையாளராக இருக்கிறார் என்று சொல்லிவிட்டுச் சொன்னார். என்னை குடியரசு துணைத் தலைவர் கேட்டார். நீங்கள் வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் வந்திருக்கிறீர்கள். நீங்கள் உயிர் பெற்றது கடவுளால் என்பதை இப்பொழுது ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டார். உடனே நான் சொன்னேன். நான் உயிர் பெற்றது மருத்துவர்களின் முயற்சியால், மனிதர்களின் முயற்சியால். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் சொன்னார். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த ஆசிரியர் அவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் மு.நாகநாதன் பேசினார்.

---------------------------- “விடுதலை” 29-12-2009

உலகில் பெரியார் ஒருவரே!

இந்நாள்

1938 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 29) தான் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவும் எந்த நிலையில்?

தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக சிறையில் இருந்த காலகட்டத்தில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமான நீதிக்கட்சியின் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை எல்லாப் பொறுப்புகளும் (பதவிகள் அல்ல) அவரைத் தேடி சென்றுள்ளனவே தவிர, அவர் அவற்றை நோக்கிக் காலடி எடுத்து வைத்தவர் அல்லர். அவர் ஏற்ற பொறுப்புகள் அவரால் பெருமை பெற்றுக் குலுங்கின என்பதுதான் வரலாறு.

1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாள்களில் சென்னையில் நீதிக்கட்சியின் 14 ஆவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தலைவராக தந்தை பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தந்தை பெரியாரோ சிறைக் கொட்டடியில் இருக்கிறார்.

50 ஆயிரம் மக்கள் மாநாட்டில் கூடியிருந்தனர். மாநாட்டுக்குத் தலைமை தாங்கவேண்டிய தந்தை பெரியார் சிறையில் இருக்கிறாரே என்ற உணர்ச்சி எரிமலையாகத் தகித்துக் கொண்டிருந்தது தமிழர்கள் மத்தியில்.

தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலையைத் தேரில் வைத்து சிறையில் உறைவதுபோல ஒப்பனை செய்து, ஊர்வலமாக மாநாட்டுப் பந்தலுக்குக் கொண்டு வரப்பட்டது. தந்தை பெரியார் அவர்களின் உருவம் நாற்காலியில் வைக்கப்பட்டு இருந்தது.

மாநாட்டுக்குத் தலைவராக சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிக்கப்பட்டார்.

மாநாட்டுத் தலைவருக்குப் போடப்பட்ட மாலையை நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் உருவத்திற்கு அணிவித்தனர்.

தம் தோளுக்குப் போட்ட மாலையைத் தந்தை பெரியாரின் தாளுக்கு அணிவித்து பேச முடியாமல் நா தழு தழுத்தார்.

தந்தை பெரியார் எழுதியிருந்த மாநாட்டுத் தலைமை உரையை ஏ.டி. பன்னீர்செல்வம் படித்தார்.

மாநாட்டில் கூடியிருந்த 50 ஆயிரம் மக்களும் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

“எங்கள் மாபெரும் தலைவரே! உங்கள் உடல் சிறைப்படுத்தப்பட்டிருந் தாலும், உங்கள் வீரத் திருவுருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கி றோம். உங்கள் தலைமை யில் நாங்கள் அனைவரும் சொல்வழி நின்று, கடைசி வரை, நோக்கம் நிறைவேற ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம் என்று உறுதி கூறுகிறோம்’’ தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இவ்வாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதுபோன்ற சிறப்புகள் எல்லாம் உலக வரலாற்றில் தந்தை பெரியாரை நோக்கி பாய்ந்து வந்ததுபோல வேறு யாருக்காவது வந்ததுண்டா?

ஆம் உலகில் பெரியார் ஒருவரே!

--------------- மயிலாடன் அவர்கள் 29-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

அறுத்தெறி பூணூலை என்று ஆவேசக் குரல் கொடுக்க வேண்டாமா ஆரியப் புத்திரர்கள்?

‘மும்மூர்த்திகளும் பார்ப்பனர்களே!’


பாரதீய ஜனதாவா? அது தேசியக் கட்சி! அதன் பார்வை ஏகப் பாரதம்! மாநிலங்கள் என்ற அமைப்பே கூடத் தேவையில்லை; கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை ஒரே தேசம்! பாகிஸ்தான் பர்மாவைக்கூட இணைத்து அகண்ட பாரதத்தை உருவாக்குவதுதான் அவர்களின் கட்டுக்கடங்கா ஆர்வம்.

காந்தியாரைப் படுகொலை செய்ததால் தூக்கலிடப்பட்ட நாதுராம் கோட்சேயின் அஸ்திகூட கலசத்தில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருவது எதற்காக? பாகிஸ்தானை இந்தியாவோடு இணைத்த பிறகு அந்தப் பகுதி சிந்து நதியில் அதனைக் கரைப்பதற்குத்தானாம்.

இப்படியெல்லாம் பேசுவதற்கு இவர்களுக்கு அருகதையுண்டா? இந்தியா ஒரே நாடு ஏகப் பாரதம் என்று பிலாக்கணம் பாடும் இவர்கள் இந்திய மக்கள் அனைவரும் ஒரு தாயின் மக்கள் என்று நெஞ்சார நினைப்பவர்கள்தானா?

பாரதத் தாயின் புதல்வர்கள் என்றால் இங்கு எல்லோரும் சகோதர சகோதரிகள்தானே! சரிசமம்தானே! அப்படியென்றால் எங்கிருந்து வந்து குதித்தது வர்ணாசிரமம் என்னும் நாகம் ஜாதி என்னும் புற்றுநோய்?

பதிலளிக்க வேண்டாமா பாரதீய ஜனதாவையும் ஆர்.எஸ்.எஸையும் ஆட்டிப் படைக்கும் பார்ப்பனர்கள்?

“அறுத்தெறி பூணூலை’’ என்று அண்டம் நடுங்க ஆவேசக் குரல் கொடுக்க வேண்டாமா ஆரியப் புத்திரர்கள்?

சங்கராச்சாரி மடத்தில் ஒரு சாம்பானை நியமிப்போம் என்று சங்கநாதம் செய்ய வேண்டாமா?

இதிகாசங்களை எரி தீயில்! வாட்டிட எழுச்சி கொள்ள வேண்டியதுதானே? மனுதர்மம் ஒழிப்பு மாநாடு கூட்ட வேண்டியதுதானே?

ஏன் செய்யவில்லை? ஏன் எழுதவில்லை?

ஏன் குரல் கொடுக்கவில்லை?

ஏடுகள் என்ன இவர்களுக்குப் பஞ்சமா? ஊடகங்களும் இவர்களின் கையிருப்புதானே? உண்டு இல்லை என்று ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதானே?

ஏன் தயக்கம்? ஏன் மயக்கம்? இன்னும் புரியவில்லையா? எல்லாம் வெளி வேடம்தான் ஊராரை ஏமாற்றத்தான். உள்ளுக்குள். ஓங்கி ஒலிக்கும் நாதம் எல்லாம் “நாங்கள் பிராமணாள்!’’ ‘‘நீங்கள் எல்லாம் சூத்திராள்!’’ என்பதுதான்.

ஆர்.எஸ்.எஸை உருவாக்கியவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே! மூத்த குருநாதரான பாலகங்காதர திலகரே பச்சைப் பார்ப்பனர்தான்

பிளேக் நோயை ஒழிக்க அதற்கு மூலாதாரமான எலியை வேட்டையாடினால், எலி விநாயகரின் வாகனம் என்று கூறி எலியை ஒழித்த வெள்ளைக்கார அதிகாரிகளை சுட்டுக் கொல்லத் தூண்டிய சூட்சும மனிதர் அவர்.

இவ்வளவு எழுச்சிக்குப் பிறகும்கூட.. இன்றளவில்கூட நிலைமை என்ன?

பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவர் நிதின் கட்காரி யார்? ஒரு பார்ப்பனர்.

நாடாளுமன்றத்தில் மக்களவையின் தலைவர் சுஷ்மா சுவராஜ் யார்? ஒரு பார்ப்பனர்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவர் அருண்ஜேட்லி யார்? ஒரு பார்ப்பனர்.

பாரதீய ஜனதா என்ற கட்சியின் மூன்று முக்கிய பதவிகளின் மும்மூர்த்திகள் மூவரும் பார்ப்பனர்களே!

ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் யார்? ஒரு பார்ப்பனர்

விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் யார்? ஒரு பார்ப்பனர்.

அகில இந்திய விசுவ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் வேதாந்தம் யார்?

ஒரு பார்ப்பனர் இப்படி சகலமும் பார்ப்பனமயமாகித் திமிரிக் கொண்டிருக்கும் ஒரு கட்சிதான் பாரதீய ஜனதாவும் அதன் பரிவாரங்களும்.

இந்த அமைப்புகளில் உள்ள பார்ப்பனர் அல்லாதார் குறிப்பாக “சூத்திரர்கள்” “பஞ்சமர்கள்’ இப் பொழுது இவர்களை அடையாளம் காணாவிட்டால் வேறு எப்போது?

கிலுகிலுப்பையைக் குழந்தைகளி டம் காட்டி கழுத்துச் சங்கிலியைக் களவாடும் திருடர்களுக்கும், சிறுபான்மையினர்களைக் காட்டி, இந்தியாவில் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை வருணா சிரமத்தின் பெய ரால் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பார்ப்பனர்களுக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு?

பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஒன்றும் தந்தை பெரியாரின் சீடரல்லர் _ ‘வகுப்புத் துவேஷியும்’’ அல்லர். அவரே என்ன கூறுகிறார்? ‘‘முன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வின் அனைத்துக் கூட்டங் களையும் கருத்தரங்குகளையும், பேச்சுகளையும் கடந்த நாற்பதாண்டு காலமாக நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்போதுமே தீண்டாமைபற்றிய கேள்வியை எழுப்பியதேயில்லை? இந்துக்களிடையே உள் ஜாதி நடைமுறை மிகவும் அடக்குமுறை நிறைந்த ஒன்றாக உள்ளது. பா.ஜ.க.வைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனர்களின் அமைப்பு என்பது இதன் காரணங்களுள் ஒன்றாக இருக்க லாம்.’’

(‘டெக்கான் கிரானிக்கல்’ 4.2.2008)

உமாபாரதி யார்? பாரதீய ஜனதா கட்சியின் அனல் பறக்கும் பேச்சாளர் ஆயிற்றே! கட்சியின் இளைஞர் பிரிவின் செயலாளராகவும் இருந்தவர் ஆயிற்றே! பாபர் மசூதி இடிப்பில் துள்ளிக் குதித்து ஆனந்த வெள்ளத்தில் நீந்தியவராயிற்றே!

பா.ஜ.க.,வைப்பற்றி அவரைவிட அதிகம் தெரிந்தவர் வேறு யாராவது இருக்க முடியுமா? அவர் என்ன சொல்லுகிறார்?

“பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தங்கள் கொள்கைகளில் நிலையற்றவர் களாக இருக்கிறார்கள். கட்சியின் தலைமை மேல்ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்குள்ளேயே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த தலைவர்கள் கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சரியாக வழங் கப்படவில்லை. வேறுபாட்டுக் கண்ணோட் டத்தோடு பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினருக்கே அதிக வாய்ப்புகள் தரப்படுகின்றன. இது மிகப் பெரிய சமூக அநீதியாகும். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமா?’’

(பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவு செயலாளராக விருந்த உமாபாரதி மத்தியப் பிரதேசம் போபால் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி -25.4.1996) இதற்கு என்ன பதில்?

கல்யாண்சிங் யார்?

பாரதீய ஜனதா கட்சி யின் சார்பில் உத்தரப்பிரதேச மாநில முதல் அமைச்சராக யிருந்தவர், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அம்மாநில முதல் அமைச் சரும் அவர்தான். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கள் பட்டியலிலும் இடம் பெற்றவர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

அவர் என்ன சொல்லுகிறார்?

‘‘பாபர் மசூதிக்கு ஒன்றும் ஆகாது என என்னிடம் பா.ஜ.க., தலைவர்கள் தெரி வித்தனர். அயோத்தியில் அடையாள கரசேவை மட்டுமே செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள். இருவர் எழுத்துப் பூர்வ மாகத் தெரிவித்தனர்.

அவர்களது வாக்குறுதியை நம்பியே மசூதி பாதுகாக்கப்படும் என நானும் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தேன். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்க பா.ஜ.க., தலைவர்கள் இந்த விஷயத்தில் சதி செய்தனர் என்றே தோன்றுகிறது’’

(‘தினமணி’ 3.5.2009)

இதற்கு என்ன பதில்?

பங்காரு லட்சுமணன் யார்?

பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவராக கொண்டு வரப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அதுகூட பா.ஜ.க. என்பது பார்ப்பனர் கட்சி என்ற முத்திரை விழுந்துள்ளதே அதைத் திசை திருப்புவதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடுதான் அவரை வெளியேற்றிய விதமும் அத்தன்மையைச் சேர்ந்ததுதான் அவர் ஒரு முறை (1.4.2002) சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.

“அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் பி.ஜே.பி. மரண அடி வாங்கியதற்குக் காரணம் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர்களைக் கட்சி அலட்சியப்படுத்தியதுதான்’’ என்று கூறினாரே இதற்கு என்ன பதில்?

கிருபாநிதி யார்?

தமிழ்நாட்டு மண் ணில் தந்தை பெரியார் ஊன்றியிருக்கும் உணர்வின் அலைகளிலிருந்து தப்பிக்க, பா.ஜக.. என்ன செய்தது? ஒரு தாழ்த்தப்பட்டவரை தமிழகத் தலைவராக நியமித்தது. அவர்தான் டாக்டர் கிருபாநிதி.

அவரின் கண்ணீர்ப் பேட்டி இதோ:

“தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல. கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக போர்டிகோ அருகில் காத்திருந்தேன்.

அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். ‘நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழிச்சுடுவேன்’ என்றெல்லாம் பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார்.

நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா அவர் எதையும் கேட்கிற நிலையில் இல்லை. நிதானம் இழந்து காணப்பட்டார். யார்கிட்டப் பேசறோம், என்ன பேசறோம்னு உணருகிற நிலைமையில் இல்லை. ஒரு கட்டத்துல என் கையைப் பிடிச்சு முறுக்கி அடிச்சுட்டார்.

கேள்வி: இல. கணேசன் உங்கள்மீது அவ்வளவு கோபமாவதற்கு என்ன காரணம்?

டாக்டர் கிருபாநிதி: என் பதவிக் காலம் முடியப் போகிறது. அதற்குமுன் கட்சி கணக்கு வழக்குகளை ஒப்படைக்கணும். அதனால் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது பல இழுப்படிகள் நடந்திருப்பது புரிந்தது. மாநிலச் செயலாளராக இருந்த இல. கணேசன் தேசிய செயலாளராக ஆன பிறகும் மாநிலக் கட்சி நிதியைக் கையாண்டு கொண்டிருந்தார். இதை நான் தடுத்ததால்தான் ஆத்திரப்பட்டு என்னை அடிக்கும் அளவுக்குப் போய்விட்டார்.

கேள்வி: நீங்கள் தமிழகத் தலைவராகப் பதவியேற்றதிலிருந்தே பலவித அவமானங்களை சந்தித்து வந்தீர்கள் அல்லவா?

டாக்டர் கிருபாநிதி: ஆமாம் தலைவர் என்கிற முறையில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எனக்கு அடிப்படை வசதிகள்கூட செஞ்சுத்தரலை ஃபேக்ஸ் மிஷினை நானே சொந்தமா வாங்கினேன். டைப் அடிக்கணும் என்றால் வெளியில் கொடுத்து அடிச்சுக்கிட்டேன். இப்படிக் கட்சிப் பணிகளுக்கு சொந்த பணத்தைச் செலவழித்தேன். கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்திலேயே (கமலாலயம்) ரங்கநாதன் மற்றும் ராஜசிம்மன் ஆகிய இருவரும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள்.

இவர்களை இயக்கும் சூத்திரதாரி இல. கணேசன் தான். கமலாலயத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் தலைவர் இருக்கிறாரா என்று கேட்டால் சரியான பதில்கூட சொல்ல மாட்டார்கள். எவ்வளவோ அவமானங்கள்.

கேள்வி: உங்கள் கட்சியில் சாதீய உணர்வுகள் தலை விரித்து ஆடுகிறது என்று பலகாலமாக செய்திகள் வருகின்றன. நீங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதால் தான் அவமானப்படுத்துகிறார்களா?

டாக்டர் கிருபாநிதி: (சற்று மவுனத்திற்குப்பிறகு) நடக்கிறதை எல்லாம் பார்க்கும்போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருத்தன் தலைமைப் பதவியில் இருக்கிறதை அவங்களால் ஜீரணிக்க முடியலை. (“தமிழா தமிழா’’ ஏப்ரல் 2003).

இந்தத் தகவல்களை கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கும் டாக்டர் கிருபாகரன் எழுதியிருப்பதாகவும் இதே பேட்டியில் வெளியாகியுள்ளது.

இதற்கு என்ன பதில்?

‘‘தமிழ்நாட்டில் கூட மிக வெளிப்படையாக நடந்த ஒரு தகவல். அப்பொழுது மாநில பா.ஜ.க., தலைவராக இருந்தவர் கே. நாராயணராவ். மாநில பா.ஜ.க., செயலாளராகவும், மாநில விவசாயி அணித் தலைவராகவும் தேசியப் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர் பொ. நந்தகுமார், கோவை மாவட்ட பா.ஜ.க., இளைஞரணி தலைவராகயிருந்தவர் ந. லட்சுமணகுமார் இருவரும் பா.ஜ.க.வை விட்டு விலகியபோது மாநிலத் தலைவர் நாராயணராவுக்கும், அகில இந்திய பா.ஜ.க,. தலைவர் ஏ.பி. வாஜ்பேயியிக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விவரம் மிக முக்கியமானது.

‘‘தமிழக பாரதீய ஜனதா தொடர்ந்து மற்றொரு பிராமணர் சங்கமாக செயல்படுவதை எதிர்த்து வெளியேறுகிறோம்’’ என்று எழுதினார்களே இதற்கு என்ன பதில்? பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களின் பார்ப்பன மனப்பாங்கு எத்தகையது? தாழ்த்தப்பட்ட மக்கள்மீது அவர்களின் பார்வை எந்தத் தரத்தைச் சார்ந்தது?

முரளி மனோகர் ஜோஷி, பவுதிகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்தானேஅக்கட்சியின் தலைவராக அலங்கரித்தவர்தானே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்தானே!

படிப்பும் பதவியும் வளர்ந்த அளவுக்குப் பார்ப்பனர்களின் மனப்பாங்கு பக்குவப்பட்ட ஒன்றுதானா? வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்வதுதானா?

ஒரு தகவல்: நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் தேர்தல், காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடக்கத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலை; பா.ஜ.க., சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற அறிவிப்பும் வெளிவந்தது. இந்த நிலையில் முரளி மனோகர் ஜோஷி அளித்த பேட்டி ஒன்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் வெளிவந்தும் உள்ளது (11.7.1991)

Nobody can take the BJP as a pariah and then expect it to support you’’

“பாரதீய ஜனதாவை தங்கள் வசதிக்கேற்ப யாரும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. பா.ஜ.க.வை நீங்கள் ஒரு பறையனைப் போல் நடத்தக் கூடாது. இதைச் செய்துவிட்டு நாங்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது’’ என்று ‘மெத்தப் படித்த மேதாவி’ ஒருவர் பேசுகிறார் என்றால் அவர் படித்த படிப்பும்கூட அவரின் பார்ப்பனத் திமிருக்கு முன் மண்டியிடுகிறது என்றுதானே பொருள்!

ஜோஷியின் இந்தச் சொல் பிரயோகத்தை எதிர்த்து பல அமைப்புகள் குடியரசு தலைவருக்குத் தந்திகளைக்கூட அனுப்பின என்பதும் மறக்காமல் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தப் பார்ப்பன ஜனதா (பா.ஜ.க.,) கட்சியில் பாதந்தாங்கிக் கிடக்கும் பஞ்சமர்களே விழிமின்!

அடியாள்களாக சேவகம் செய்யும் பிற்படுத்தப்பட்டோரே விழிமின்! விழிமின்!!


-------------------மின்சாரம் அவர்கள் 27-12-2009 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

சொர்க்க வாசல் நுழைந்த பக்தர்களே சொர்க்கத்துக்குப் போகவில்லையா?


‘சொர்க்கவாசல்’

நாடு முழுவதும் 108 வைணவக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் அனைத்திலும் இன்று இரவு கண் விழித்து ஏகாதசி விரதம் இருந்து விடியற்காலை சொர்க்கவாசல் திறப்பு.

ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொல்பவர்களுக்கு இப்பிறவியில் எல்லா க்ஷேமங்களும் பேஷாகக் கிடைக்குமாம்.

மத்திய, மாநில அரசுகள் எதற்காக தேவையில்லாமல் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி திட்டங்களை வகுக்கின்றன என்று தெரியவில்லை. அய்ந்தாண்டு திட்டங்கள் எல்லாம் எதற்காக?

பேசாமல் இந்தியாவின் குடியரசுத் தலைவரும், பிரதமரும் இன்று இரவு ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொன்னால் தீர்ந்தது கதை. 110 கோடி மக்களுக்காக ஒரு இரவு கண் விழித்து இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லவேண்டியதுதானே!

பக்தியின் பெயரால் மக்களை எந்த அளவுக்கு முடமாக்கி வைத்திருந்தால் இந்த 2009 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற தெருப் புழுதிக் கூத்துகளை அரங்கேற்றுவார்கள்?

இந்த ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்திரத்தில் ஒரே ஒரு பாடல்; ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கைதானே பதம்?

‘தேவேந்திரனின் அமர லோகத்தில் வாசம் செய்து தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம் ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியம் எனக்குக் கொடுப்பீராக!’ எப்படிப்பட்ட சுலோகம்!

அரிது அரிது மானிடராகப் பிறப்பது அரிது என்ற கருத்தையும் படித்திருக்கிறோம். இப்படி நாயாகப் பிறக்கவேண்டும் என்று கூறுவதையும் படிக்கும்பொழுது ஆறறிவுள்ள ஒரு மனிதனின் புத்தியை எப்படியெல்லாம் நாசமாக்கி விட்டனர்! நாயாகப் பிறக்கவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை ஒரு கல் சிலைக்கு முன் வைக்கும் அளவுக்கு அறிவின் தரத்தை பக்தி என்னும் ஆபாசக் குழியில் தள்ளி மிதித்து அசிங்கப்படுத்தி விட்டனரே!

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் அறிவு மொழி, ஆகா, எவ்வளவு வானளாவியது! வையத்து அறிவுக் கண்ணின் ஊற்றைத் திறக்கக் கூடியது!

கடைசியில் ஒன்று:

இன்று இரவு கண் விழித்து ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரங்களை 1008 முறை ஓதி, விடியற்காலையில் கோயிலில் டிக்கெட்டும் வாங்கிக் கொண்டு சொர்க்க வாசல் நுழைந்த பக்தர்களே, மீண்டும் வீட்டுக்குத் திரும்புகிறீர்களே, சொர்க்கத்துக்குப் போகவில்லையா? (சாகவில்லையா) இது என்ன நியாயம்? வடலூர் இராமலிங்கனார் சொன்னதுபோல இது என்ன பிள்ளை விளையாட்டு!

யாரை ஏமாற்றுகிறீர்கள்? அல்லது உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளவில்லையா!

---------------- மயிலாடன் அவர்கள் 28-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

25.12.09

ஒரு மனிதன் மதத்தை, கடவுளை ஏன் மறுக்கிறான்?


கடவுள், மதமும், மக்களும்

மதம் என்பது ஒரு கட்டுப்பாடு. மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்த கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப்போவதில்லை. ஒரு மதவாதிக்கு மதம் காரணத்தால் ஏற்பட்ட கடவுள், மோட்சம், நரகம், வேதம், மதத்தர்மம், மதத்தலைவன், என்பனவெல்லாம் அந்த அதாவது அவன் சார்ந்திருக்கிற மதக் கட்டுப்பாட்டினால் ஏற்பட்டவையே ஒழிய, உண்மைப் பொருளோ, உண்மைத் தத்துவமோ அல்ல என்பதோடு, அவை எல்லாம் செயற்கையே ஒழிய இயற்கையுமல்ல.


ஒரு மதவாதிக்கு அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அவனுக்குக் கடவுள் அது எப்படிப்பட்ட கடவுளானாலும், அது செயற்கைக் கடவுளே ஆகும். இதில் இயற்கை, செயற்கை என்பதற்கு என்ன விளக்கம் என்றால் இயற்கை என்பது உணவு உட்கொள்வது, மலஜலங் கழிப்பது பார்ப்பது கேட்பது, மூச்சுவிட்டு இழுப்பது, பேசுவது, வலி காண்பது, பசி தோன்றுவது, தூங்குவது, விழித்திருப்பது, காம உணர்ச்சி, துக்கம், சுகம், சூரியன், சந்திரன், வெளிச்சம், இருட்டு, பஞ்சப்பூதங்கள் முதலியவை இயற்கையாகும். இவை எல்லா மக்களுக்கும் பொது என்பதோடு யாராலும் மறுக்க முடியாதவை. மற்றபடி இத்தன்மைகளல்லாத கடவுள், மதம், மோட்சம், நரகம், சன்மானம், தண்டனை, செல்வம், சிறுமை, பெருமை, பக்தி, பிராத்தனை, வேதம் முதலியவை அடியோடு கற்பனையேயாகும்.

இந்த இயற்கை, செயற்கைகள் அறியப்படுவதற்கு ஆதாரம் முறையே பிரத்தியட்ச அறிவும் - பிரத்தியட்ச அறிவுக்குப்புறம்பான நம்பிக்கையுமேயாகும்.
ஆகவே, உலகில் உள்ள எப்படிப்பட்ட மதக்காரனும், கடவுள் உணர்ச்சிக்காரனும், நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய, அறிவுவாதி ஆகவேமாட்டான். உதாரணமாக "கிறிஸ்து" என்றால் "பைபிள்" என்றால் கிறிஸ்துவை ஏற்று அவரில் நம்பிக்கை வைத்து பைபிளை ஒப்புக் கொண்டவருக்குத் தான் "கிறிஸ்துவே" தவிர, "பைபிளே" தவிர அவை, நம்பிக்கையில்லாதவருக்கு உண்மையாய் தத்துவமாய் இருக்க முடியாது. அதுபோலவே, "முகமது நபி" என்றால், "குரான்" என்றால் முகமது நபியை ஏற்று, அவரின் மீது நம்பிக்கை வைத்து குரானை ஒப்புக் கொண்டவருக்குத் தான் நபியே தவிர, குரானே தவிர, நம்பிக்கை இல்லாதவருக்கு எப்படி நபியாகவும், குரானாகவும், இருக்க முடியும்? அப்படியே தான் மற்ற மதங்களும், வேத சாஸ்திரங்கள் முதலியவையுமாகும். ஆகவே, நம்பாதவனுக்கு, ஏற்காதவனுக்கு எது எது இல்லையோ அவை எல்லாம் பெரிதும் செயற்கையே ஆகும். கடவுளும், கடவுள் நம்பிக்கையும் அதில்பட்டதுதான்.

ஒரு மனிதனை மற்றொரு மனிதன் "நீ கிறிஸ்துவை நம்பித் தான் ஆக வேண்டும்? பைபிளை நம்பித்தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால் நரகத்தில் அழுந்துவாய்" என்று சொல்பவனும் "நீ நபியை நம்பித்தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால் எரி நரகில் அழுந்துவாய்" என்று சொல்பவனும் எவ்வளவு அறிவற்றவனாவானோ அவ்வளவு அறிவற்றவனே ஆவான். ஒரு மனிதனைப் பார்த்து, "நீ கடவுளை நம்பித்தானாக வேண்டும்; இல்லாவிட்டால் நீ நரகத்தில் அழுத்தப்படுவாய்" என்று சொல்கிறவனும் என்பதை மதவாதிகளும் உணர வேண்டும். கடவுளும், மதமும் அறிவற்றவனைத்தான் ஆட்டும் என்பதோடு வெறியனாகவும், பைத்தியக்காரனாகவும் கூட ஆக்கிவிடும்.

ஆனால், எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும், மதமும் பகுத்தறிவுவாதி இருக்கிற பக்கம் எட்டிக்கூடப் பார்க்க முடியாது.



எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே, "வெங்காயம்" என்று தான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது. வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது உரிக்க உரிக்கத் தோலாகவே – சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையாய் முடிவது என்பது பொருள். ஆகவே விதை - வித்து இல்லாத காரணத்தால் தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும், மதமுமாகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருளே இல்லை. கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான்.

ஆனால், சூரியன், சந்திரன் முதவானவைகளை அப்படிச் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால் அவை உண்மையானவை. எவ்வளவு மடையனும், எப்படிப்பட்ட பகுத்தறிவாதியும் அவைகளை மறுக்க மாட்டான் என்பதோடு, "எனக்கு அவை இல்லை", "என் கண்ணுக்கு – என் புத்திக்கு அவை தென்படவில்லை", "நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று சொல்லவே மாட்டான். இதுதான் இயற்கைக்கும் - உண்மை பகைக்கும் ஏற்ற உதாரணமாகும்.

மற்றும், கடவுள், மதவாதியாக இருப்பவர்கள் "ஒரு மனிதன் மதத்தை ஏன் மறுக்கிறான்?" என்பதைப்பற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும். அது போலவே ஒரு மனிதன் கடவுளை ஏன் மறுக்கிறான் என்பதையும் (கடவுள்வாதி) சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்றும் கடவுள், மதவாதிகள், கடவுள் - மத மறுப்பாளர்களை விட எந்த விதத்தில் அறிவாளிகள்? எந்தவிதத்தில் உயர்ந்த இந்திரியங்களை (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவைகளை) உடையவர்களாக இருக்கிறார்கள்? என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.


மனிதனுக்கு மிக அருமையான அறிவும், பகுத்தறியும் சக்தியும், ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையும், அனுபவத்திற்கு ஏற்ப நடக்கும் உரிமையும் இருக்கும் போது கடவுள் எதற்காக வேண்டும்? என்பதையும் மனிதன் நல்ல வண்ணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


கடவுள் என்ற பொருளுக்கு மனிதன் கற்பித்து இருக்கும் குணம் என்னவென்றால், கடவுள் யாவற்றையும் படைத்து (படைத்ததோடல்லாமல்) யாவற்றையும் நடத்துகிறவன் என்பதாம்.


அதாவது நன்றோ செய்வேன், தீதோ செய்வேன், நானா அதற்கு நாயகன், நீ நடத்துகிறபடி நடத்தப்படுகிறவன்தானே? என்பது தான் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளைப்பற்றி மக்களுக்குச் சொல்லும் இலட்சணம்.

இந்தக் கருத்து ஒரு கடுகளவாவது மனிதனுக்குப் பயன்படுகிறதா? மற்ற மனிதர்களுக்குத்தான் சொல்லப்படுகிறதே ஒழிய, எவனுக்காவது தன் விஷயத்தில் நம்பவோ நம்பி நடக்கவோ வாழ்க்கையில் கொள்ளவோ பயன்படுகிறதா?

மக்கள் மடையர்களாக இருந்த வரையில் அதாவது சிந்திக்கும் தன்மை இல்லாதவர்களாக இருந்தவரையில் - இருக்கிறவரையில் கடவுளுக்கு சர்வ சக்தி, சர்வ செயல் "இருந்திருக்கலாம்". இன்று அறிவாளிக்கு – அறிவுவாதிக்கு அந்த எண்ணம் சரி என்று தோன்ற முடியுமோ?

தவிரவும் கடவுளும், மதமும் மனிதனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்பிக்கப்பட்டவை அல்லது தோன்றியவை என்பதை யாரும் மறுக்க முடியாது. அக்காலக் கற்பனையானது காலக்கிரமத்தில் மாறுதலடைந்து கொண்டே வந்திருக்கிறது என்பதையும் யாராவது மறுக்க முடிகிறதா?

இந்த நிலையில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கிறிஸ்துவ மதமும், கிறிஸ்துவக் கடவுளும், 1500 ஆண்டுகளுக்கு முந்தைய நபி மதமும், முகமது நபி கடவுளும் மாத்திரம் சீர்திருந்தி மாற்றம் அடைந்துள்ளபோது, பலப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆரியக் கடவுள்களும், ஆரிய மதமும் மாற்றமடையக் கூடாது என்றால் அது எப்படிப் பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்க முடியும்?

இவைகள் எல்லாம் மனிதர்களால் அமைக்கப்பட்டனவே அன்றி மனிதப் பிறவியில் மனிதத் தன்மைக்கு மேற்பட்ட சக்தி கொண்டு ஒரு மனித உருவால் அமைக்கப்பட்டது என்று சொல்லப்படுமானால், அது பெரும் புரட்டாகத்தான் இருக்க முடியுமே ஒழிய, அப்படிச் சொல்வதில் சிறிதாவது உண்மையோ, அறிவுடைமையோ இருக்காது என்பதுடன், அதில் யோக்கியப் பொறுப்பும் இருக்க முடியாது என்று வலியுறுத்திக் கூறுவேன். ஏனென்றால், இன்றைய மக்கள் தன்மை - இன்றைய விஞ்ஞான அறிவு சக்தித்தன்மை 10000, 5000, 2000, 1500ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட எத்தனையோ மடங்கு அதிகமானது.


அக்காலக் கடவுளும், மதமும் இவைகளைக் கற்பித்தவர்களும், அக்கால மனிதத் தன்மைக்கு மேற்பட்டவர்களும் "ஏழைகளுக்கு உதவி செய்தால் உனக்கு "மோட்சம்", "சன்மானம்" கிடைக்கும் என்று சொன்னார்கள். அவர்களால் சொல்லப்பட்ட வேத சாஸ்திரங்களும் அப்படியே சொல்கின்றன. இன்றைய வெகு சாதாரண விஞ்ஞான அறிவு, ஏழைகள் ஏன் இருக்க வேண்டும்? அவர்கள் பிறப்பிக்கப்பட என்ன அவசியம்? அவர்கள் யாரால் எதனால் பிறப்பிக்கப்பட்டாலும் சரி, இன்று அவர்கள் கண்டிப்பாக மனித உலகத்தில் இருக்கக்கூடாது" என்று கூறுகிறது. இதற்கு யாரால் தான், எந்தத் தெய்வீகப் புருஷனால்தானாகட்டுமே என்ன பதில் சொல்ல முடியும்?

ஆகவே, கடவுள், மதம், தெய்வீகப் புருஷர்கள் என்பவற்றை எப்படிப்பட்டவர்களானாலும் பாதுகாக்க வேண்டுமானால், அவர்களைப் பொறுத்தவரை அடக்கமாக வைத்திருத்தால் காக்கப்பட்வர்கள் ஆவார்கள். அப்படிக்கினறி, தான் பெரிய கடவுள் பக்தன் மத பக்தன் என்கின்ற கர்வங்கொண்டு அவற்றைக் காப்பாற்ற வெளிக்கிளம்புவானேயானால், அவன் கண்டிப்பாக அவர்களை ஒழிக்க அவற்றின் "பெருமை"யை அழிக்கப் புறப்பட்டவனே ஆவான்.

கடவுள், மதம், தெய்வீகப் புருஷர்கள் என்பவற்றில் கடவுளைவிட மோசமானது, மக்களை அலைக்கழித்து வேற்றுமை உணர்ச்சியை உண்டாக்குவது மதமாகும். மதத்தைவிட மக்களுக்கு மடமையையும், அகம்பாவத்தையும் உண்டாக்குவது தெய்வீக சக்தி உள்ள மனிதத் தன்மையைவிட மேற்பட்ட சக்தி உள்ள மனிதன் மனிதப் பிறவி என்பதாகும்.

எனவே, பெரிய ஆட்கள் அதாவது 25 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த கடவுள், மத உணர்ச்சி இருந்தாலும், 24 அல்லது 30 வயதிற்கு உட்பட்ட மக்களிடம் கண்டிப்பாக இந்த உணர்ச்சி இருக்கவே கூடாது என்பது என் ஆசை.

அப்படி இந்தக் கடவுள், மத உணர்ச்சி இல்லாமல் இருந்தால் தான் மனிதப் பண்பு, மக்கள் யாவரையும் ஒன்றுபோல கருதும் உணர்ச்சி இல்லாமல் தான் மனிதப் பண்பு மக்கள் யாவரையும் ஒன்று போல கருதும் உணர்ச்சி, நேர்மை நல்லதைப் போற்றவும், தீயதைக் கண்டிக்கவுமான துணிவு, யாவையும் ஒன்று போல் கருதிச் செய்யும் பொதுத் தொண்டு உணர்ச்சியும் ஏற்பட முடியும்.


இன்று இவை சுத்த சத்தமாய் இல்லாததற்குக் காரணம் இந்தக் கடவுள், மதம், மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தன்மையுள்ள மனிதப் பிறப்பு என்கின்ற உணர்ச்சிதான் என்பது எனது தாழ்மையான முடிந்த முடிவு.



------------21-09-1973 "விடுதலை" நாளிதழில் தந்தைபெரியார் எழுதிய தலையங்கம்.