Search This Blog

4.9.09

புதிய தமிழகம் உருவாக பார்ப்பனியம் அழிய வேண்டும்!


(போர்வாள்படப்பிடிப்பு

அந்த நாள் என்று வரும்?

தமிழ்நாட்டில் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் போராட்டம்

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - தந்தை பெரியார் அவர்களின் பணிகள் குறித்து போர்வாள் தீட்டிய அரிய கட்டுரைக் கருவூலம் இது
)


1924 இல் ஆரியத்தின் திருவிளையாடல்

கதர் போர்ட், தென்னாட்டில் கதர் நிர்வாகம் பற்றிய அலுவல்களைக் கண்காணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு. அதன் செயலாளராய் இருந்த சிறீமான் சந்தானம் என்பவர் பிரமன் முகத்துதித்த வகுப்பினர். அந்த நிலையத்தின் அலுவல்கள் அத்தனைக்கும் ஆரியரையே நியமித்தார் வரிசை வரிசையாக. கண்டார் பெரியார். ஏதோ தற்செயலாக, நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் ஆரியராக உள்ளனர் போலும் என்றெண்ணினார் முதலில். பிறகு அதுவே நித்திய நிகழ்ச்சியாக இருப்பதைக் கண்டதும் கொதித்தெழுந்து கேட்டார், என்ன சந்தானம், ஏன் இப்படி என்று. தக்க பிராமணல்லாதார் கிடைக்கவில்லை. கிடைக்கும் பிராமணரல்லாதார்க்கோ தகுதியும் திறமையுமில்லை என்று விடை கூறினார் சந்தானம். பெரியார் நம்ப வில்லை இதனை. அலசிப் பார்த்தார் உண்மைகளை. உத்தியோக நியமனங்களை ஆராய்ந்து பார்த்தார். ஆரியர்களே அடுக்கடுக்காக, வரிசை வரிசையாக, வேண்டுமென்றே, நெஞ்சுத் துணிவுடன் நியமிக்கப் படுகின்றனர் என்பதை உணர்ந்தார். ஓகோ! அந்த ஜஸ்டிசுகள் சொல்வது மெய்தான் போலிருக்கிறது என்றெண்ணினார். எண்ணியது மட்டுமா, இந்தப் போக்கை இனி நீர் வளரவிடக் கூடாது. பிராமணர்களையே வரிசையாக நியமிக்கக்கூடாது என்று கட்டளையிட்டார் செயலாளர் சந்தானத்திற்கு, தான் தலைவர் என்ற முறையில். சந்தானம் உடனே காரியதரிசி பதவியை ராஜினாமா செய்தார். வழக்கு காந்தியாரிடம் சென்றது. விசாரணைக்கு! அப்போதுதான் காந்தியார் நாய்க்கர்ஜீயை (பெரியாரை காந்தியார் அப்படித்தான் குறிப்பிட்டு வந்தார் அந்த நாளில்) அழைத்து ஏன் இந்த சிக்கலென்று கேட்டார். அதற்குப் பெரியார் கொடுத்த பதில், காந்தியார் அளித்த தீர்ப்பு, ஆச்சாரியார் செய்த வியாக்யானம், உண்மை நிலையைக் கண்டு சங்கர்லால் பாங்கர் திடுக்கிட்டது இவை அத்தனையும் உள்ளடக்கியதுதான் இக்கட்டுரை துவக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ள உரையாடல்.

தகுதியும் திறமையும் ஒரு கூட்டத்தார்க்கு மட்டுமே உரிய சொந்த சொத்து என்று இன்று கூறப் படுவது போலத்தான் அன்றும் கூறப்பட்டது என்றால் சாதாரண மனிதர்களால் அல்ல.அன்பர் ஆச்சாரியார் போன்ற மதிப்பு மிக்க தேசியத் தலைவர்களால்! தகுதியையும் திறமையையும் காட்டிக் காட்டி ஆரியம் திராவிடத்தை ஏய்த்த கதை புதிதல்ல - பழையது; மிகப் பழையது. தம் இனத்தவரே அறிவின் திருவுடையார்; பிறரெல்லாம் அத்துணை கூர்மதி அமையாதார் என்று ஆரியர் நெஞ்சு நிமிர்ந்து சொல்லி வருகின்றனர் இன்று நேற்றிலிருந்தல்ல. பலப்பல ஆண்டுகளாக, ஒரு துறையில் இரு துறையில் அல்ல. எல்லாத் துறைகளிலும், கதர் போர்ட் நிர்வாகம் இந்த விபரீத வாதத்திற்கு இரையான பரிதாப நிகழ்ச்சிகளில் ஒன்று. பெரியாரின் உள்ளத்தை ஒரு குலுக்கு குலுக்கி விட்டது இந்த நிகழ்ச்சி. அதுவரையில் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று பிரித்துப் பார்க்க ஒவ்வாத பெரியாரை பிராமணர்களென்றும் பிராமணர் அல்லாதார் என்றும் உள்ள பாகுபாடுகளைத் தன் உள்ளமென்னும் உலகத்தில் உலவா வண்ணம் துரத்தியடித்த பெரியாரை இந்தியாவைச் சுரண்டி வந்த வெள்ளை ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கட்டுவதிலேயே தன் உள்ளம், உரை, செயல் அத்தனையையும் பறிகொடுத்துவிட்ட பெரியாரை என்ன இருந்தாலுமே இந்தப் பேத புத்தி ஆகுமோ என்று ஜஸ்டிசுகளை நோக்கி கேலிக்கவிதை பாடிவந்த பெரியாரை முதன்முதல் சிந்திக்க வைத்தது இந்தக் கதர் போர்ட் நிகழ்ச்சி.

பார்ப்பனியத்தின் சலசலப்பு :
பெரியார் உள்ளத்தில் சிந்தனை


சந்தானத்திற்கு ஆரிய உணர்ச்சியா! நான் உள்ளன்போடு நேசித்து வந்த என்னருமை நண்பர் இராசகோபாலாச்சாரியர் உள்ளத்திலும் பிராமணீய உணர்ச்சி இத்துணை ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறதா! ஆரியம் உண்மையிலேயே இவ்வளவு சூழ்ச்சியும் கரவும் வஞ்சமும் நச்சுத் தன்மையும் நிறைந்ததா! ஒரு குலத்துக்கொரு நீதி என்றுரைக்கும் மனுநீதி இன்னும் மாயவில்லையா! காங்கிரசிலும் இந்த அநீதியா! எல்லாரும் ஓர் குலம்; எல்லாரும் ஓர் இனம்; எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று கவி பாடும் கலைவாணர்களும், அதைக் காட்டி உரையாடும் நாவாணர்களும் நனிநிறைந்த தேசிய இயக்கத்திலும் இது இருக்கிறதா! பெரியார் இது போல எண்ணலானார், கதர்போர்ட் பிராமண போர்ட் என உருமாறிய விந்தை கண்டு. முதன் முதலாக அவருடைய உள்ளத்தில், பிராமணர் - அல்லாதார் என்ற இரு சொற்களுக்கும் நடுவே உள்ள இடைவெளி, மிகப் பயங்கரமான, மிக மிக ஆழமான, பலப்பல நூற்றாண்டுகளாகக் கொஞ்சமும் குறையாது உள்ள இடைவெளியின் சாயல் படர்ந்தது.முதலில் லேசாக; பிறகு கொஞ்சம் அழுத்தமாக; பிறகு மேலும் மேலும் அழுத்தமாக.
*****************

மகரிஷி வ.வே.சு.அய்யர் எல்லோருடைய மதிப்பையும் பாராட்டுதலையும் பெற்றவர். சீமையில் வெள்ளைக்காரர்கட்கு எதிராகப் பயங்கரப் புரட்சி செய்யத் திட்டமிட்டு வந்த வீரசவர்க்காருக்கு உற்ற துணைவராகவும் உரிய நண்பராகவும் இருந்தவர். கலை பல பயின்றவர்; திருக்குறள் உணர்ந்தவர்; அறிஞர், விவேகி, வீரர், தீரர் என்றெல்லாம் புகழுரைகள் சூட்டப்பட்டவர். அப்படிப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சேரன்மா தேவியில் பரத்துவாச ஆசிரமம் என்ற பெயரில் தேச பக்தர்களையும், தேசிய வீரர்களையும் தயாரிப்பதற்கு என்பதாகக் காரணம் காட்டி ஒரு குருகுலம் அமைக்கிறார் என்ற சேதி கேட்டபோது தமிழ் நாட்டுக் காங்கிரஸ் துள்ளிக் குதித்தது, மகரிஷியின் வீரம், தியாகம், மேல்நாட்டில் வாழ்ந்ததால் பெற்றஅநுபவம், ஆழ்ந்த கலைப் பயிற்சி, ஆங்கில அறிவு, பயங்கரப் புரட்சியில் ஏற்பட்ட பழக்கம் இத்தனையும் குருகுலத்தை எத்தனை வளப்படுத்தும் என்று எண்ணி எண்ணி தேசிய வட்டாரம் களிப்புக் கடலில் குதித்துக் குதித்துக் கூத்தாடிற்று. அவர் உதவித் தொகை வேண்டுமென்று கேட்டதும் தமிழ் மாகாண காங்கிரஸ் 10,000 ரூபா நன்கொடை தருவதாக உடனே பெருமகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டது.

அப்போது தமிழ் மாகாண காங்கிரசிற்கு இரண்டு கூட்டுக் காரியதரிசிகள். ஒருவர் பெரியார், மற்றவர் கே.எஸ்.சுப்பிரமணிய அய்யர் என்பவர். பெரியாரின் பணி செக்கிலே கையெழுத்திடுவது. பிற கடிதங்கள் ஆதாரங்கள் முதலியவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பு மற்ற செயலாளருக்கு. வ.வே.சு.அய்யர், மாகாண காங்கிரஸ் தீர்மானித்தபடி என் குருகுலத்திற்கு தரவேண்டிய நன்கொடையைத் தாரும் என்று பெரியாரிடம் கேட்டபோது, பெரியார், தாராளமாகத் தருகிறேன். அதற்கென்ன? நீங்கள் குருகுலம் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? அதனுடைய சட்ட திட்டங்கள், நடைமுறை விதிகள் முதலியவற்றைக் கொண்டு வாரும்; அவற்றைப் பதிவு செய்து கொண்டு பணம் தருகிறேன் என்று சொன்னார். அவர் சரி என்று சொல்லிவிட்டு, இன்னொரு செயலாளராக சுப்பிரமணிய அய்யரிடம் சென்று, பெரியாருக்குத் தெரியாமல் ரூபா 5,000 க்கு செக் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

குருகுலப் போராட்டம் மூட்டிவிட்ட தீ

இதற்கு இடையில் வ.வே.சு. அய்யரின் குருகுலம் துவக்கப்பட்டுவிட்டது. துவக்கிய சில நாட்களுக்குள் அங்கு பிராமணர்- பிராமணரல்லாதார் வேற்றுமை மிகவும் பாராட்டப்படுவதாகத் தமிழ்நாடு முழுவதும் ஒரு சேதி காட்டுத்தீப் போல பரவிற்று. தமிழகம் முழுவதும் அதே பேச்சு. அரசியல் உணர்வுடையார் அனைவர் உரையாடலிலும் குருகுல வேற்றுமையைப் பற்றிய கருத்துப் பரிமாறல். எங்கும் எவரும் இதைப் பற்றியே சிந்திக்கவும் பேசவும் எழுதவும் முனைந்தனர்.

ஒரு நாள் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் (ஆமாம்! இப்போது சென்னை மாகாண முதலமைச்சராய் உள்ளவர்தான்) பெரியாரைக் கூப்பிட்டு, பரத்வாஜ குருகுலத்தில் பயின்றால் நல்ல பண்பாடும், அறிவு வளர்ச்சியும், சகோதர நேயமும், ஜாதி வேற்றுமையற்ற பரந்த உள்ளமும் ஏற்படும் என்று கருதி தன் மகனை அங்குப் பயிலும் பொருட்டுத் தான் அனுப்பியதையும், அவன் தன்னை ஒரு பிராமணர் அல்லாதவன் என்ற காரணத்தற்காக அங்கு இழிவாகக் கருதி பிராமணப் பிள்ளைகள் உண்ணாத இடத்தில் இருக்க வைத்து உணவு கொடுத்ததாகத் தன்னிடம் தெரிவித்ததையும் விளக்கமாக எடுத்துச் சொல்லி, இந்த அநி
ய-யத்திற்கு நாம் ஒரு பரிகாரம் தேட வேண்டாமா என்று மனம் வருந்திக் கேட்டார்.

மகரிஷி என்றும், சிறந்த அறிஞர் என்றும், கலைஞர், தியாகி, புரட்சி வீரர் என்றும், அஞ்சாமையின் சின்னம் என்றுமெல்லாம் போற்றப் பட்டு வந்த வ.வே.சு. இந்த வேற்றுமையைப் பாராட்டுவதில் முனைந்து நிற்கிறார் என்று அறிந்த போது பெரியார் திடுக்கிட்டுப் போய் விட்டார். அவரைப் போலவே, காங்கிரசில், அதுபோது, இரவு பகல் எனப் பாராது, ஓய்வு ஒழிவு என்பது கருதாது, அலைச்சல் திரிச்சல் என்பன அறியாது, சுழலும் சூறாவளி என நாடெங்கும் சுழன்று, சுழன்று பணியாற்றி வந்த திரு வி.கலி.யாணசுந்தரனாரும் டாக்டர் வரதராஜுலு நாயுடுவும் நெஞ்சம் துணுக்குற்றனர். நாயுடு _நாயக்கர் - முதலியார் என்று தமிழகத்தால் செல்லப் பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்த இம் மூவரும் குருகுல சம்பவத்தால் பாறையில் மோதிய மரக் கலமென மனங் கலங்கிப் போயினர். காங்கிரசுக்கு வெளியே பெருத்த ஆரவாரம் புரிந்து வந்த ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புவாத நச்சுக் கருத்தினர் என்று அன்று வரை எள்ளி நகையாடி வந்த இவர்கள் உள்ளம் இச்சேதி கேட்டதும் இவர்களையே எள்ளி நகையாடத் தொடங்கிற்று. ஆம்! முதன் முதலாக, காங்கிரசில் பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதார் என்ற வேற்றுமை வித்து ஊன்றப்பட்டது. வ.வே.சு. வின் குருகுல அமைப்பால் அது நடத்தப்பட்ட முறையால் அதனால் எழுந்த புகைச்சலால் புகைச்சல் தமிழரிடையே கிளம்பிய மனக்கொதிப்பால்!

சில நாள் பொறுத்து, டாக்டர் டி.எஸ்.எஸ். இராஜன் வீட்டில் மாகாண காங்கிரஸ் கமிட்டி கூடியபோது, முன்னர் கமிட்டியால் ஒப்புக் கொள்ளப் பட்ட தீர்மானப்படி 10,000 ரூபா நன்கொடை தர வேண்டியதில் ரூபாய் 5,000 கொடுக்கப்பட்டது. போக மிச்சப் பணம் இன்னும் தரப்படவில்லை என்று வ.வே.சு. அய்யரின் நண்பரான ஓர் ஆரியர் புகார் செய்தார். பெரியார் வெகுண்டெழுந்து, முன்வாங்கிக் கொண்ட 5,000 ரூபாயே முறை தவறுதலாகவும், தன் விருப்பத்திற்கு மாறாகவும், தனக்குத் தெரியாமலும், நேர்மையற்ற வழியில் வாங்கப்பட்டதென்பதை எடுத்துரைத்தார்.

அய்யர் குருகுலத்தில் பிராமணர்க்கு உயர்வும் அல்லாதார்க்குத் தாழ்வும் காட்டப்படுவதாக ஏராளமான தோழர்கள் எனக்கும் கடிதம் எழுதி உள்ளனர், ஏன் தமிழ்நாடு இதழில் வெளியிட என்று உடனே குறிப்பிட்டார் டாக்டர் வரதராஜுலு நாயுடு. ஓமந்தூர் ரெட்டியார் எழுந்து, சாப்பாட்டில் மட்டுமல்ல, படிப்பு சொல்வதிலும் வேறுபாடு உள்ளது; பார்ப்பனருக்கு சமஸ்கிருதக் கல்வியும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்க் கல்வியும் மட்டும்தான் கற்பிக்கப்படுகின்றன என்று கூறினார். குருகுலத்தில் ஆசிரியராய் உள்ள மற்றொருவர் எழுந்து தமிழ்ப் பிள்-ளைகள் வேத சுலோகங்களைச் சொல்லக்கூடாது என்பதாக ஒரு தடை இருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வ.வே.சு. அய்யர் வைதிகர்கள் உள்ள இடத்தில் நான் என்ன செய்வது என்பதாக சமாதானம் சொன்னாரே தவிர இப்படியெல்லாம் இல்லை என்பதை மறுத்துரைக்கவில்லை என்பதையும், ஆச்சாரியாரும், டாக்டர் ராஜனும் இந்தப் பிரச்சினையிலும் வ.வே.சு. அய்யர் பக்கமே நிற்பதையும் கண்ட பெரியார் இனம் இனத்தோடு என்பது இதுதான் போலும் என்பதை நன்குணர்ந்து கொண்டு, திரு. வி.க., டாக்டர் நாயுடு இருவரிடமும் கலந்து பேசிக் கொண்டு, இந்த மனுநீதி குருகுலத்தை ஒழித்தே தீர்வது என்ற திட்டமான முடிவுக்கு வந்தார்.

திரு.வி.க. நவசக்தியிலும் டாக்டர் நாயுடு தமிழ்நாட்டிலும் குருகுலத்தைக் கண்டித்தனர். பெரியாரும் நாயுடுவும் தமிழகத்தைச் சுற்றிச்சுற்றி வலம் வந்து குருகுலத்திற்கு இருந்து வந்த ஆதரவைக் குலைத்தனர். தேசிய குரு குலத்திற்குப் பணம் தருவது தேசிய பாவம் என்று டாக்டர் நாயுடு முழங்கினார். குருகுலம் ஒழிந்தது. ஆனால் அது தமிழ் நாட்டு அரசியலில் மூட்டிவிட்ட தீ ஒழியவில்லை வளர்ந்தது. மேலும் மேலும் வளர்ந்தது. வளர்ந்து வளர்ந்து, பெரிய பெரிய அநீதிகளையெல்லாம் சுட்டுப் பொசுக்கிற்று. பொசுக்குகிறது இன்றும்.


*********************

சதிச் செயல்கள் சாய்ந்தன - நீதியும் நேர்மையும் நிலைத்தது

1924 இல் திருச்சியில் கூடிய தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பெரியார், காங்கிரஸ் செயலாளராகவும் கொஞ்ச நாள் அதன் இடைக்காலத் தலைவராகவும் இருந்து செய்து வந்த வேலையைப் பாராட்டி ஒரு தீர்மானம் செய்யப்பட்டு, அந்த ஆண்டு திருவண்ணாமலையில் கூடும் மாகாண காங்கிரசுக்குத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத் தீர்மானம் நிறைவேறியது கண்டு மனம் குமுறிய வ.வே.சு. அய்யர் பெரியார் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார் - அப்போதே, அதே இடத்தில்! அது கண்ட திரு.வி.க. பாழும் பார்ப்பனர் - அல்லாதார் என்ற உணர்ச்சியைத் தமிழ்நாடு காங்கிரசில் வ.வே.சு. புகுத்தி விட்டமை கண்டு வருந்துகிறேன். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிற்பாடு, இன்றுதான் ஒரு பார்ப்பனரல்லாதார் மாகாணக் காங்கிரஸ் தலைவரானார். அவர் பண்புகளைப் பாராட்டிப் பேசிய பத்து விநாடிகளுக்குள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தவறு என்று இடித்துரைத்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றது. ஆனால் பிராமணர் - அல்லாதார் உணர்ச்சி வலுத்தது.

*************************

1925 இல் டாக்டர் வரதராஜுலு நாயுடு தமிழ் மாகாண காங்கிரஸ் தலைவர். அவர் ஒரு தமிழர் என்ற காரணத்தை உள்ளத்திற் கொண்டு அவர் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது ஆரியரால். டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், சி.ஆர். இருவரும் அதை ஆதரித்தனர். ஆனால் பெரியார் அவர்கள் உடனேஅதை எதிர்த்துப் பேசித் தோற்கடித்தார். பிறகு டாக்டர் நாயுடு மீது நம்பிக்கை இருப்பதாக ஒரு தீர்மானம் பெரியாரால் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களிலும் ஆரிய உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பக்கமாகவும், திராவிட உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பக்கமுமாக வாக்களித்தனர்.

அதோடு வ.வே.சு. அய்யர் குருகுலத்தைக் கண்டித்தும், அங்கு காட்டப்படும் ஜாதி வேறுபாடு தொலைய வேண்டுமென்பதை வலியுறுத்தியும், தீண்டாமையோடு ஜாதிப் பாகுபாடும் தொலைய வேண்டுமென்பதை வலியுறுத்தியும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடனே சி.ஆர்., டாக்டர் ராஜன், டாக்டர் சாமிநாத சாஸ்திரி, கே. சந்தானம், என்.எஸ்.வரதாச்சாரி முதலிய பதின்மர். பதின்மரும் ஒரே இனத்தவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்தே ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினர்.

காங்கிரசில் நிகழ்ந்த ஆரிய - திராவிடப் போரின் மற்றுமோர் அத்தியாயம் அது.


*******************************

இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதா பனகால் அரசரால் - ஜஸ்டிஸ் அமைச்சர் குழுவினால் - கொண்டு வரப்பட்டது. ஏறத்தாழ இதே காலத்தில், இதனால் மதத்திற்கு ஆபத்து! ஆண்டவனுக்கு ஆபத்து! என்று அபாயக் குரல் எழுப்பினர் ஆரியர் அனைவரும் காங்கிரஸ் பிராமணர் உட்பட. மசோதா ஜஸ்டிஸ் கட்சியினரால் கொண்டு வரப்படுகிறது என்றாலும் இதைக் கண்ட பெரியார், கட்சி வேற்றுமை பாராட்டாது பொதுமக்கள் நன்மைக்கான இம்மசோதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தார். டாக்டர் நாயுடுவும், திரு வி.க.வும் இதனை ஆதரித்தனர். பார்ப்பனர் அனைவரும் கட்சி வேற்றுமையின்றி மசோதாவை எதிர்க்கவும், அல்லாதார் அனைவரும் அதே போல கட்சித் திரைகளைக் கிழித்துக் கொண்டு அதனை ஆதரிக்கவுமான நிலை ஏற்பட்டது. காங்கிரசில் நிகழ்ந்த பிராமணர் -அல்லாதார் போராட்டத்தின் மற்றொரு பகுதி இது.

******************************

காங்கிரசில் தமிழர்களுக்கு பார்ப்பனர்கள் மீது வெகு வேகமாக வளர்ந்து வரும் அதிருப்தியை அடியோடு ஒழிக்க வேண்டுமானால், அந்தந்த வகுப்புகளின் தொகைக்கேற்ப அவரவர்கட்கு உரிமை தரப்படவேண்டும். அதாவது வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் அதிகார பூர்வமாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பெரியார் இந்த நிகழ்ச்சிகளின் பின்பு வற்புறுத்தலானார்.

1925 இல் காஞ்சிபுரத்தில் தமிழ் மாகாண காங்கிரஸ் கூடிற்று. பெரியார் வகுப்பு வாரித் தீர்மானத்தை அங்கு கொண்டு வந்தார். அது பல்வேறு சூழ்ச்சிகளின் விளைவாக ஒதுக்கப்பட்டது.

உடனே பெரியார் மாநாட்டில் எழுந்து, இன்று காங்கிரஸ் என் சொல்லை ஏற்க மறுக்-கிறது. ஆனால் என்றேனும் ஒரு நாள் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவமே வகுப்புப் பூசலைத் தீர்ப்பதற்குரிய சரியான வழி என்பதை அது உணரவே போகிறது. பார்ப்பனியம் காங்கிரசிலும் வெளியிலும் விளைவித்து வரும் கொடுமைகளை நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்குவதே இனி என் வேலை என்று சூளுரைத்து விட்டு வெளியேறினார்.

உண்மை உலவுகிறது - 22 ஆண்டுகளுக்குப் பின்

அவர் 1925 இல் உரைத்த அந்த நாளும் வந்தது - 1947 நவம்பர் 20 இல்,
இடையே உள்ள காலப் பள்ளம் 22 ஆண்டுகள்! ஆம், 22 ஆண்டுகள் தேவைப்பட்டது உண்மை உலவுவதற்கு!

20.11.1927 இல் வெளியான சென்னை காங்கிரஸ் அரசியலார் அறிக்கை இது:

இதுவரையில் உள்ள வகுப்பு விகிதாசர உத்தரவுப் படி காலியாகிற ஒவ்வொரு 12 ஸ்தானங்களுக்கும் பிராமணல்லாதார் 5, பிராமணர் 2, முகமதியர் 2, ஆங்கிலோ இந்தியர், கிறித்துவர் 2, அரிஜன் 1 என்ற முறையில் வழங்கப்படும்.

ஹரிஜனங்களுக்குப் போதுமான படியும், பிராமணல்லாதாரில் பிற்போக்கானவர்க்கும், பதவிகள் கிடைப்பதில்லை என்பதனால் சர்க்கார் இந்த வகுப்புவாரி உத்தரவைப் பின்கண்டவாறு மாற்றுகிறது. இனி காலியாகிற ஒவ்வொரு 14 ஸ்தானங்களுக்கும் கீழ்க்கண்ட முறைப்படி ஆளெடுக்கப்படும்.

1. பிராமணரல்லாதார்
2. ஹரிஜன்
3. பிற்போக்கு பிராமணரல்லாதார்
4. பிராமணரல்லாதார்
5. பிராமணர்
6. பிராமணரல்லாதார்
7. முசல்மான்
8. பிராமணரல்லாதார்
9. ஆங்கிலோ இந்தியர், கிறிஸ்தவர்
10. பிராமணரல்லாதார்
11. ஹரிஜன்
12. பிராமணரல்லாதார்
13. பிராமணர்
14. பிற்போக்கு பிராமணரல்லாதார்


புதிய உத்தரவு மத்திய சர்க்காரின் விகிதாசார ஏற்பாட்டுக்கும், ஜனத் தொகைக்கும் ஏற்றதாகப் பொதுவாக இருக்கிறதென்று தெரிவிக்கப்படுகிறது.

**************************
காங்கிரஸ் சர்க்கார் பழைய விகிதாசாரத்தை மாற்றி புதிய விகிதாசாரத் திட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறது. அதாவது பழைய விகிதாசாரம் தவறு என்று எண்ணிற்றே தவிர, காங்கிரஸ் சர்க்கார், விகிதாச்சாரப்படி பதவிகளை வழங்கும் முறையே தவறு என்று எண்ணவில்லை. வழங்கும் அளவு தவறு என்றதே தவிர வழங்கும் முறை தவறு என்று கூறவில்லை. ஆகவே, வழங்கும் முறையை வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்பவே பதவிகளை வழங்கவேண்டுமென்ற திட்டத்தை வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்ற தத்துவத்தை அது ஒப்புக்கொண்டது என்று பொருள்.

காங்கிரஸ் சர்க்கார் இன்று அந்தந்த வகுப்புகளுக்குத் தந்துள்ள உரிமைகளின் அளவு சரியா? சரியில்லை என்றே நாம் கருதுகிறோம். ஆனால் அது வேறு பிரச்சினை.

அந்தந்த வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்ப உத்தியோகங்களின் எண்ணிக்கை வகுக்கப்பட்டு இருக்கிறதா? இல்லை. பார்ப்பனர்கட்கு உரியதைவிட அய்ந்து மடங்கு அதிகமாகவும், திராவிடர் ஆதிதிராவிடர் முசுலிம்-கள் ஆகியோருக்கு உரியதிலும் பார்க்க மிகக் குறைவாகவும் விகிதாசாரம் உள்ளது. ஆனால் அதுவும் வேறு பிரச்சினை. ஆனால், காங்கிரஸ் சர்க்கார் வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்பவே பதவிகளை வழங்கவேண்டும் என்ற தத்துவத்தை 1925 இல் பெரியார், காங்கிரசை ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்திய, ஆனால், காங்கிரஸ் ஒப்புக்கொள்ள மறுத்த தத்துவத்தை - இன்று 1947 இல் மனமுவந்து ஒப்புக்கொள்வது கண்டு நாம் மிக மகிழ்கிறோம்.

பெரியார் 1925 இல், 1947 அய்க் கண்டார். காங்கிரஸ் சர்க்கார் 1947 இல் 1925 அய்க் காண்கிறது. ஆனால் இன்றேனும் காண்கிறதே அதுவரை மகிழ்ச்சி நமக்கு.

சென்னை சர்க்கார் அறிக்கையில் இங்கே மட்டுமல்ல, மத்திய சர்க்காரிலும் இது போன்ற விகிதாசார ஏற்பாடு இருக்கிறது என்கிற அந்தப் பகுதி உண்மையிலேயே அனைவரும் கவனித்தற்குரியது. சின்னத் தலைகள் (கல்கியின் பாஷை!) மட்டுமல்ல, பெரிய தலைகளும்கூட வகுப்புவாரி ஏற்பாட்டினையே ஒப்புகின்றன என்பது நம் கவனத்திற்குரியதுதானே!

பெரியார், 1925 இல் சொன்னதை இன்று சாதித்து விட்டார். வகுப்பு வாரித் திட்டம் ஒன்று தவிர வகுப்புச் சிக்கல் தீர மருந்தில்லை என்பதை, காங்கிரஸ் நடை முறையிலேயே ஏற்கும் அந்த நாளைக் கண்டுவிட்டார். பார்ப்பனியம் அழியும் நாளையே இன்னும் அவர் காணவில்லை. அதையும் காண்பார் விரைவில் என்பதில் ஏது அய்யம்?

காஞ்சி மாநாட்டிலிருந்து வெளியேறிய விநாடி முதல் இன்று வரை அந்த மாவீரர் பார்ப்பனியத்தின் கொடுமைகளை மக்களுக்கு விளக்கியே வந்திருக்கிறார். ஆரியத்தின் ஆணவத்தை - வர்ணாசிரம ஏற்பாட்டின் அநீதியை தமிழ் வீரர் கூட்டம் நன்குணர்ந்த வீறுகொண்டெழுந்து வீரப் போர் தொடுக்கச் செய்துவிட்டார். பார்ப்பனியம் என்னும் மாறு பெயர் கொண்ட பழமையை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எத்தனையோ ஆயிரமாயிரம் இளங்காளைகளின் உள்ளத்தில் தூவி விட்டார். பெரியதோர் பட்டாளத்தை - அறிவும் திறமும் சிந்தனையும் படைத்த தமிழர் சேனையை உருவாக்கி விட்டார். வாழ்க வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு வாழ்கவே! என்னும் பண் பாடச் செய்துவிட்டார். சிறுத்தையின் குகையில் சிறுநரிகளின் வாசமா என்னும் கேள்வி எங்கணும் எழச் செய்து விட்டார். புதிய தமிழகம் இனி உருவாகவேண்டும் - அது ஒன்றுதான் பாக்கி - அதற்கான பாதை வகுக்கும் பணியைச் செம்மையுறச் செய்து முடித்துவிட்டார். புதிய தமிழகம் உருவாக வேண்டுமானால் பழைய பார்ப்பனியம் அழிய வேண்டும். அது கல்லறை புகும் நாள் என்று வரும்? ஆம், புரட்சித் தமிழகம் பூக்கும் அந்த நாள் என்று வரும்?


-------------------------போர்வாள், 6.12.1947

ஜாதி மதம் ஒழிய, இஸ்லாமே நன் மருந்து என்று பெரியார் கூறியது எதற்காக?ஏன்?


மதத்தை ஒழித்தால்தான் சாதி மறையும்!


மற்ற எந்த நாட்டிலும் மனிதன்தான் உண்டு, ஜாதி கிடையாது. இந்த நாட்டிலேதான் - இந்து மதத்தில்தான் ஜாதி என்றும், பறையன், பள்ளன், சக்கிலி, தீண்டப்படாதவன் என்ற பேதமும் உள்ளது. யோக்கியமான கடவுள், ஒழுக்கமான கடவுள், பகுத்தறிவுக்கு ஒப்பிய பேதமில்லாத மதம், சாஸ்திரம், புராணம் இவை இருந்தால் கவலையில்லை. இவைகளினால் தான் நம் நாட்டில் நாம் கீழ் ஜாதியாகவும், உடல் உழைப்புக்காரர்களாக - ஏர் உழுது, வண்டி இழுத்து, மூட்டை சுமந்து, பாடுபட்டும் வயிறாரக் கஞ்சிக்கும் வழியில்லாமல், தாழ்ந்த ஜாதி என்பதால் படிப்புக்கும், உத்தியோகத்திற்கும் வசதியில்லாது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், மேல்ஜாதி என்று இனமாகிய பார்ப்பான் மட்டும் தன்னை இதன் மூலம் மேல்ஜாதி என்று கூறிக்கொண்டு படிப்பு - உத்தியோகம் முதலிய எல்லா வசதிகளையும் பெற்றுச் சுக வாழ்வு வரும்படியாகவும் இருக்கின்றது. எனவேதான் இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் இவைகள் ஒழிய வேண்டும் என்று கூறிப் பாடுபட்டு வருகிறோம்.


இந்த 30, 40 வருடமாக சத்தம் போட்டதால் தானே பறையன் கலெக்டராகவும், மற்றப் பல பெரிய உத்தியோகங்களும் பெற முடிந்தது? திராவிடர் கழகம் (அதாவது ஜஸ்டிஸ் கட்சி) தோன்றிய பிறகுதான் அந்தக் காலத்தில்தான் பறையன், பள்ளன், பஞ்சன் என்பவன் எம்.எல்.ஏ.வாகவும், கலெக்டர் - முன் சீஃபாகவும் ஆனான். அதற்கு முன்பே இது நடந்தது என்று யாராவது சொல்ல முடியுமா? முன்பெல்லாம் சூத்திரனுக்கென்றால் கிடைக்காது. காங்கிரஸ் செல்வாக்கு ஏற்பட்டது முதல் 50-வருடம் இப்படித்தான். ஜஸ்டிஸ் கட்சி (நீதிக் கட்சி) தோன்றிய பிறகுதான் தேர்தல் இல்லாவிட்டாலுங்கூட நாமினேஷன் (நியமனம்) மூலமாவது கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது. எனக்கு வயது 81-ஆகிறது. இந்த 75-வருடத்தில் நடந்தவை எனக்கு நன்றாகத் தெரியும்.


நான் படித்த போது ஒரு பறையன், சக்கிலி என்பவன் கூட என்னுடன் படிக்கவில்லை. நாங்கள் உள்ளே உட்காருவோம். பறையன் என்பவன் வந்தால் வரும் போதே கையில் ஓலைப்பாய் கொண்டு வந்து வெளியில் உட்காருவான். மணலைக் குவித்து வைத்து எழுதுவான். அவனுக்கென்றுத் தனியாகப் பாடம் சொல்லித்தர மாட்டார்கள். ஆசிரியர் எங்களுக்குச் சொல்லித்தரும் போது அவன் வெளியில் இருந்து கேட்டுக் கொண்டு ஆசிரியர் போகச் சொன்னதும் போய்விடுவான். இதுதான் அன்றைய நிலை. ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய பிறகுதான் ஆதிதிராவிடர்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும்! பள்ளிக்கூடத்திலே இடம் தரவேண்டும் என்றும் சட்டம் போட்டதோடு, பஞ்சாயத்து போர்டுகளில் பறையன் என்பவனை நாமினேஷன் போட வேண்டும் என்று தீர்மானம் போட்டோம்.


இப்போதுதான் தேர்தல். அப்போதெல்லாம் நாமினேஷன் தான். தஞ்சை ஜில்லா போர்டின் (மாவட்டக் கழகம்) தலைவராக திரு.சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் இருந்தபொழுது, அவர் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு ஆதித்திராவிடன் என்பவனைப்போட்டு விடுவார். அப்போது பட்டுக் கோட்டைப் பகுதியில் திரு.நாடி முத்துப்பிள்ளை என்ற பிரபலஸ்தர் ஒருவர் இருந்தார். அவர் ஜஸ்டிஸ் கட்வியினால் பதவிக்கு வந்தவர். பின்னால் காங்கிரசுவாதியானவர். அங்கு ஒரு தாழ்த்தப்பட்டவனைப் பன்னீர் செல்வம் பஞ்சாயத்து போர்டுக்கு நாமினேஷனில் போட்டுவிட்டார். அவர் என்ன செய்தார் தெரியுமா? அந்த ஆளை உள்ளேயே விட மறுத்து வெளியில் உட்கார வைத்துக் கையெழுத்து வாங்கினார். அவ்வளவு கொடுமை! அப்போதுதான் நான் காங்கிரசைவிட்டு வெளியில் வந்திருந்தவன். "குடிஅரசு" பத்திரிகை ஆரம்பித்து ஆதி திராவிடர்கள் பற்றி அடிக்கடி எழுதி வந்தேன்.


இந்தப் பட்டுக்கோட்டையில் நாடிமுத்து பிள்ளையின் செய்தி வந்தது. உள்ளேயே விடமாட்டான் என்கிறானே என்று நாங்கள் கிளர்ச்சி செய்தோம். அந்த ஆளை உள்ளே இழுத்துக் கொண்டு சென்றோம். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவ்வளவு கொடுமை இந்தச் ஜாதியின் பெயரால்!

ஜாதி மதம் ஒழிய, இஸ்லாமே நன் மருந்து என்று கூறினேன்.
ஏன் அப்படிக் கூறினேன் என்றால் - மதம் மாறும் எண்ணம் வந்தது என்றால் - இந்து மதத்தில் இருப்பதால்தானே அவன் பறையன் ஆகக் கருதப்பட்டுக் கொடுமைப்படுத்தப் படுகிறான். எனவே தான் மதத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அது எந்த மதமாக இருந்தாலும் சரி. எந்த மதத்தில் பறையன், பள்ளன் என்று இல்லையோ அதில் அவர்கள் இஷ்டம்போல் மாறலாம் என்றேன்.


வைக்கத்தில் ஈழவர்கள் வீதி வழியே போக்கூடாது என்பதை எதிர்த்து அறப்போர் செய்தபோது தினம் 4-பேர் மறியல் செயல் சிறை சென்றோம். கடைசியில் மாநாடு கூட்டிச் ஜாதி ஒழியவேண்டுமானால் அதற்கு ஆதாரமான இந்து மதத்தை விட்டு இஸ்லாம் மதத்தில் சேருவது என்றோம். சிலர் கிறிஸ்தவ மதம் என்றனர். கடைசியில் இந்து மதத்தை விட்டு மாறிவிடுவது. எந்த மதத்தில் சேருவது என்பது அவரவர்கள் இஷ்டம் என்று 20-ஆயிரம் பேர் கூடிய அம்மாநாட்டில் எதிர்ப்பு இல்லாமல் தீர்மானம் நிறைவேறியது, அந்த இடத்திலேயே 400-பேர் சாயபுகளாக (இசுலாமியராக) மாறினர். எந்த வீதியில் நடக்கக்கூடாது என்று இருந்ததோ அங்கெல்லாம் போரிட வேண்டியிருந்தது.


மேல் ஜாதிக்காரர்கள் சில சமயம் தாழ்த்தப்பட்டவர்களை வேலை காரணமாக வீட்டிற்குப் பின்னால் அழைத்துச் செல்ல நேரிடும்போது சந்து வழியாக அழைத்துச் செல்வது வழக்கம். சந்து இல்லாதபோது வீட்டிற்குள்தான் அழைத்துச் செல்ல வேண்டும். அவன் வீட்டிற்குள் நுழையக் கூடாது. அதற்காக கழுத்தில் சிலுவை மாட்டச் செய்து, எந்த இடத்தில் நுழையக்கூடாது என்றார்களோ அந்த வழியாக அழைத்துச் செல்வார்கள்! அவன் சிலுவை மாட்டிக் கொண்டால் பறையன் இல்லையாம். கிறிஸ்தவனாக ஆகிவிடுகிறானாம். வேலை முடிந்து வெளியில் வந்ததும் சிலுவையைக் கழற்றி வாங்கிவிடுவார்கள்! இது எனக்கு ஆதாரமாக இருந்தது.

நாம் இந்துவாக இருக்கும்வரை ஒத்துக் கொள்ள மாட்டான். எனவே நாம் மதத்தை விட்டு மாறிவிட வேண்டும் என்று கூறினேன்.

ஆலைப்புழையில் ஒரு கடையில் சென்று சாயபுவாக மாறியவன் சாமான் கேட்டான். அந்த நாயர், "என்னடா உள்ளே வந்து விட்டாயா?" என்று கேட்க, இவன் "நான் தீண்டப்படாதவன் அல்ல; இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவன்" என்று கூறினான். உடனே அவன் ஒரு மரக்கட்டையால் (அதாவது காசு வாங்கவும், சாமான் கொடுக்கவும் பயன்படும் தட்டு) அவன் மண்டையில் அடித்துவிட்டான். மண்டை உடைந்து இரத்தமும் வந்துவிட்டது. சாயபுகளின் கூட்டமும் சேர்ந்துகொண்டு "எப்படி அடிக்கலாம்?" என்று கேட்டு பெரிய கலவரம் ஆக்கிவிட்டனர். சாயபு 2-பேரும், நாயரில் 3-பேரும் செத்தார்கள். அந்தக் கலவரத்தின் பயனால் அங்கு அப்போது திவானாக இருந்தவர். சர்.சி.பி.இராமசாமி அய்யர். அவருக்குத் தந்தி மூலம் செய்தி போயிற்று. அவர் மிகவும் தந்திரசாலி, கெட்டிக்காரர். இந்து முஸ்லிம் தகராறு வந்துவிடப் போகிறது என்று பயந்து, முன்கூட்டியே "இது முதலாளி - தொழிலாளி தகராறு தொழில் தகராறு என்று கிளப்பி விட்டு விடு. மீதியை நான் கவனித்துக் கொள்கிறேன்" என்பதாகச் செய்தி அனுப்பி அந்தப்படியே செய்துவிட்டார்.


உடனே எதாட்டியத்தில் மகாராஜாவிடம் போய் இனி நாம் நல்லபடியாக பிழைக்க முடியாது. ஆபத்து நெருங்கிவிட்டது. துணிந்து ஒவ்வொரு முஸ்லிம் ஆண் பெண்களும் கிளம்பினால் என்ன செய்வது என்று என்ன என்னமோ கூறினார். அதன் பிறகு அதற்கு என்ன செய்வது என்று ஆலோசித்துக் கடைசியில் "எங்கள் இராஜ்ஜியத்தில் இனிமேல் ஜாதி வித்தியாசம் கிடையாது. எல்லோரும் ஒரே ஜாதிதான். பிரிவினை கிடையாது. தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள் என்பவர்களெல்லாரும் கோயிலில் பிரவேசிக்கலாம்! குளம் கிணறுகளில் தண்ணீர் எடுக்கலாம்! சர்க்காருக்குச் சொந்தமான இடத்தில் போக உரிமை உண்டு" என்பதாக உத்தரவு போடச் செய்து இதைத் திடீரென்று இராஜாவின் பிறந்தநாளில் பிறந்தநாள் அறிக்கை என்று அவரே பிரகடனம் செய்தார். அத்துடன் அங்கே ஜாதி மேல் கீழ் சண்டை ஒழிந்து போய்விட்டது. பெயருக்குத்தான் ஜாதி என்று இருக்கிறதே ஒழிய மற்றப்படி ஒன்றும் இல்லை.


உலகத்திலேயே அதிகம் படித்தவர்கள் உள்ளது மலையாளம்தான். இங்கே தமிழ் நாட்டில் 100-க்கு 2-பெண்கள்தான் படித்தவர்கள். திருவாங்கூரில் 30- பெண்கள் படித்தவர்கள்! இங்கு ஆண்கள் 18, 20-பேர் படித்தவர்கள். அங்கு 45- பேர் படித்தவர்கள்! அங்குப் படிப்புக்காக அதிகம் செலவிடப்படுகிறது. சமதகுதி அளிக்கப்படுகிறது. அய்ந்து ஜட்ஜ்கள் இருந்தால் அதிலே 2-ஜட்ஜ்கள் ஈழவர்கள். ஏன் அப்படி? மதம் ஒழிகிறது என்றவுடன் வழிக்கு வந்துவிட்டான்! அவ்வளவுதான்! திருச்சியில் நான் எல்லோரும் மதத்தை விட்டு சாயபுவாக மாறவேண்டும் என்று பேசிய எட்டாவது நாள் சென்னை சட்டசபையில் டாக்டர் இராசன் என்ற பார்ப்பனர் எல்லோரும் கோயிலில் பிரவேசிக்கலாம் என்று சட்டம் கொண்டுவந்து பிரரேபித்துப் பேசினாரே! அதற்கு என்ன காரணம்? மதம் போகிறதே! அழிகிறதே! என்ற கவலைதான்.


வைதீகத்தில் கையை வைத்து மதம் மாறவேண்டும் என்றவுடன்தான் திருவாங்கூரில் சட்டம் வந்தது. இங்குக் கோயில் பிரவேச (நுழைவு) சட்டம் வந்தது. இப்படியே விட்டுவிட்டாலே நம் மதம் இருக்க இருக்க தேய்ந்து அழிந்துவிடும் என்று பயந்துதான் கோயில் பிரவேச சட்டம் வந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மதத்தை ஒழித்தால் சாதி ஒழியும்; மதத்தை ஒழிக்கத் தயாராக இருந்தால் பார்ப்பான் பணிந்து விடுவான். ஜாதி, மதம், சாஸ்திரப் புராணங்களையெல்லாம் நெருப்பு வைத்துக் கொளுத்த நாம் தயாராக இருந்தால், வருணாசிரம தருமம் என்பது பற்றிப் பேசமாட்டான்.



-------------சிதம்பரம் வட்டம் காட்டுமன்னார் கோயிலில் 15-10-1959 அன்று பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு."விடுதலை" 27-10-1959

இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம் (2)


ஒற்றுமையாக இருக்கவேண்டுமா? ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா? இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம் (2)

தமிழ் இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக வரும் வரை மனநிறைவு ஏற்படாது
நமது உள்துறை அமைச்சர் அன்று பேசியபோது நான் ஓர் இந்திக்காரன் அல்லன். எனது தாய் மொழி பஞ்சாபி. பின்னர், குஜராத் மொழியை நான் எனது மொழியாக ஏற்றுக் கொண்டேன். நான் இப்போது இந்திக்கு மாறியிருக்கிறேன் என்று கூறினார். எங்களுக்கு அத்தகைய அனுபவங்கள் இல்லை. ஒரு தாய் மொழி கொண்ட நீங்கள், இரண்டாவது ஒரு மாற்று மொழியை ஏற்றுக் கொள்வதும், மூன்றாவதாக ஒரு மொழிக்காக வாதாடுவதும் உங்களுக்கு வேண்டுமானால் ஒரு நல்ல அனுபவமாக இருக்கலாம். உங்கள் நங்கூரங்களிலிருந்து வெட்டி விடப்பட்டதாக நீங்களே கூறியுள்ளீர்கள். ஆனால், நல்வாய்ப்பாக, எங்கள் நங்கூரங்களிலிருந்து நாங்கள் வெட்டி விடப் படவில்லை. வளமை மிகுந்த பழைமையான தமிழ் என்னும் மொழியைப் பெற்றிருக்கிறேன் என்பதை என்னால் என்றும் மறந்துவிட முடியாது. எனது முன்னோர்கள் பேசிய அந்த தமிழ் மொழி, எமது கவிஞர்களும் புலவர்களும் எண்ணற்ற கவிதைகள், பாடல்கள் இயற்றிய அந்தத் தமிழ் மொழி, பயின்று முடிக்க இயலாத கலை, இலக்கிய அறிவுக் கருவூலங்களைக் கொண்டு விளங்கும் அந்தத் தமிழ் மொழி, இந்திய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்று என்ற அதற்குரிய இடத்தைப் பெறுகிற வரை என்னால் மனநிறைவு கொண்டவனாக இருக்கவே முடியாது. இந்தியை இந்த அளவுக்கு வறுமை நிலையில் வைத்திருக்கக் கூடாது.

என்.பத்ரா (ஒரிசா): பின் ஏன் ஆங்கிலத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்கள்?

தமிழுக்காக நான்வாதாடும்போது, இந்திக்காக வாதாடும் எனது நண்பர் வாஜ்பேயி பெற்றுள்ள உரிமையை நான் பறிக்கவில்லை; மறுக்கவில்லை. இங்கு அவர் ஆற்றிய இந்தி பேச்சுகளை நான் கேட்டிருக்கிறேன். அவரது பேச்சில் குறைந்த எண்ணிக்கையிலான ஆங்கிலச் சொற்களே இருந்ததையும் நான் கவனித்திருக்கிறேன். மற்றவர்களின் பேச்சில் இந்தி சொற்கள் தாராளமாக தெளிக்கப்பட்டிருந்தன.

இது அல்ல இந்தி. நான் இந்திக்கு வாதாடுவேனேயானால், இந்தியை இந்த அளவுக்கு வறுமை படைத்ததாக என்னால் வைத்திருக்க முடியாது. எனவே இந்தியைப் பற்றி ஆர்வம் கொண்டவர்களாக இருங்கள். எனது நண்பர் திரு நந்தா ஆர்வம் கொண்டவராக இருக்கமுடியாது. அவர் எஸ்பிரண்டோ மொழியை தேர்ந்தெடுப்பார். (முக்கிய அய்ரோப்பிய மொழிகளில் இருந்து, எளிய இலக்கணம் மற்றும் உச்சரிப்புடன், சர்வதேச தகவல் பரிமாற்றத்திற்காக 1887 இல் உருவாக்கப்பட்ட செயற்கை மொழி எஸ்பிரண்டோ மொழி.)
ஆனால் நமது சொந்த மொழி என்று ஒன்றை நாம் பெற்றிருக்கிறோம். எனவே, அந்த மொழி நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இடம் பெறவேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். அதுவரை, ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும். அப்போதுதான் நோக்கமற்ற அல்லது நோக்கத்துடன் கூடிய அநீதி இழைக்கப்படாமல் தடுக்கப்படும். நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும், மக்களின் மனதில் நியாயமான அச்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் வெகு எளிதாக இந்தியைக் கற்றுக் கொள்ள முடியும். இந்தி எழுத்துகளைக் கற்றுக் கொண்டு இந்தி சொற்களை தட்டுத் தடுமாறி பேசும் எனது பேரன்கள், பேத்திகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து காணும்படி இந்த மதிப்பு மிகுந்த அவையினரைக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் மொழியை நாங்கள் கற்றுக் கொண்டு சமமற்ற முறையில் உங்களுடன் போட்டி போட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்?


இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் குழந்தைகள், தங்களின் பெற்றோரிடமிருந்து எளிதாக இந்தி மொழிப் பாடல்களை மனப்பாடமாகக் கற்றுக் கொள்வர். உங்கள் வயல்களில், தொழிற்சாலைகளில், உங்கள் வீடுகளில், குடிசைகளில் என்று ஒவ்வொரு தொழிலிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், ஆயிரம் வழிகளில் நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்வீர்கள். புத்தகங்களைப் படித்து இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை உங்களுக்கு இல்லை. அங்கு பிறந்ததினாலேயே நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்கிறீர்கள். பாரம்பரியமான உங்கள் மொழியை கற்றுக்கொண்டு அதில் சமமற்ற முறையில் உங்களுடன் நாங்கள் போட்டி போட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இத்தகைய போட்டிகளை ரோமானியர்கள்தான் நடத்துவார்கள். கொடிய வனவிலங்குகளுடன் ஆயுதம் ஏதுமின்றி போர் புரிய வீரர்களை அரசர்கள் பணிப்பார்கள். எனது அருமை நண்பர் சத்யநாராயணா போன்ற சிலர் அவ்வாறு போரிடவும் செய்தனர். ஆனால் மற்ற வீரர்களை அந்த விலங்குகள் கிழித்துப் போட்டன. இவ்வாறு நடத்தப்படுவதற்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் மீது உங்கள் மொழியைத் திணித்து, அதனை நாங்கள் கற்றுக் கொண்டு உங்களுடன் அதில் போட்டியிட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்?

இதில்தான் அநீதியே அடங்கியிருக்கிறது. அமைதியாக சிந்தித்துப் பார்த்தால் இந்தியை ஆதரிப்பவர்களே இத்தகைய அநீதியைச் செயல்படுத்தத் துணியமாட்டார்கள். அதனால் நாம் நியாயமாக, நேர்மையாக, நண்பர்களாக நடந்து கொள்வோம். அனைத்துக்கும் மேலாக நாம் ஜனநாயகப் பண்போடு விளங்குவோம்.

திரு. சி.சுப்பிரமணியமும், திரு.ஓ.வி. அழகேசனும்
தமிழ்நாட்டு மானத்தைக் காத்தனர்


தமிழ்நாட்டுத் தலைவர்களின் அறிக்கைகளின் நோக்கத்தைப் பற்றி கேள்வி எழுப்பும் அளவுக்கு இந்தியை ஆதரிப்போரின் உணர்வுகள் சென்றுள்ளன என்பதை நாளேடுகளில் இருந்து நானறிந்தேன். அண்ணாதுரை மட்டுமல்ல, இந்தியை எதிர்ப்பதால் காமராஜரையும் சிறையில் போடவேண்டும் என்று சிலர் கூறியதாக செய்தித் தாள்களில் நான் பார்த்தேன். இப்பிரச்சினைக்காக தங்களது அமைச்சர் பதவிகளைத் துறக்க முன்வந்த திருவாளர்கள் சி.சுப்பிரமணியம் மற்றும் ஓ.வி. அழகேசன் பற்றி தரக்குறைவான கருத்துகளை வேறு சிலர் வெளியிட்டுள்ளனர். நெருக்கடி நிறைந்த இக்காலக் கட்டத்தில் அவர்களின் பதவி விலகல் எத்தகைய நம்பிக்கையை எங்கள் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்; அதை கற்பனை செய்தும் உங்களால் காணமுடியாது. தமிழ்நாட்டுக் காங்கிரசின் பெயரை முழுவதுமாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது எவராவது காப்பாற்றினார்கள் என்றால், அவர்கள் திரு.சுப்பிரமணியமும், திரு.அழகேசனும்தான். அவர்கள் மீது எனக்கு பெருத்த அன்போ, பாசமோ கிடையாது. பலமுறை அவர்களுடன் நான் மோதி இருக்கிறேன். அவர்களும் பல முறை என்னை இடுப்புக்குக் கீழே உதைத்திருக்கிறார்கள். நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால், சரியான சந்தர்ப்பத்தில் அவர்கள் மேற்கொண்ட இந்த பெருந்தன்மையான செயல் எங்கள் மக்களின் உணர்வுகளை சாந்தப்படுத்தி உள்ளது. அசாமி மொழிப் போராட்டத்தின்போது, நாள்தோறும் ஒரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டும், மற்றொரு பக்கம் அமைதிக் குழுவினர் கிராமம் கிராமமாகச் சென்று வன்முறையைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டும் இருந்ததை நான் அறிந்தேன்.

கல்மனம் படைத்த பக்தவத்சலம்

சென்னை மாநில முதலமைச்சர் ஏன் எங்களை நம்பவில்லை? அதற்காக மத்திய உள்துறை அமைச்சர் நந்தா அவருக்கு ஒரு பாராட்டு வழங்கினார் அவர் ஒரு பாறை போல நின்றார் என்று பாராட்டினர். உண்மைதான், திரு. பக்தவத்சலம் உண்மையில் ஒரு கற்பாறை போலத்தான், ஆடாமல், அசையாமல், எந்த உணர்ச்சியும் இன்றி நின்றார். அவரைச் சுற்றி இருந்தவர்களெல்லாம் அழுது கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தபோதும், இறந்து போன தங்கள் கணவருக்காக விதவைகள் அழுது கொண்டிருந்த போதும், சுடப்பட்டு மடிந்த தங்களின் மகன்களுக்காக தாய்மார்கள் அழுது கொண்டிருந்த போதும், அவர் கல்லாகத்தான் நின்று கொண்டிருந்தார். இத்தகைய கல்மனம் கொண்ட மனிதர்தான் உங்களுக்குத் தேவையா? அவரை விட சிறந்த மனிதர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர் பாறை போல நின்றார் என்று நீங்கள் கூறும்போது, உங்கள் தத்துவத்தின் மீதே எனக்கு சந்தேகம் வருகிறது. நீங்கள் கருணை நிறைந்த மனத்தினர் என்று எனக்குக் கூறப்பட்டுள்ளது. சாதுக்கள், சன்னியாசிகளின் கூட்டத்துடனேயே எப்போதும் நீங்கள் இருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய கல்வியறிவும், பயிற்சியும் பெற்ற நீங்கள், 7 வயது சிறுமி, 8வயது சிறுவன், 80 வயது முதியவர் என்று வேறுபாடின்றி 50 பேருக்கு மேல் சென்னை தெருக்களில் சுட்டுக் கொல்லப்பட காரணமாக இருந்த கல்மனம் கொண்ட ஒரு முதல் அமைச்சரைப் புகழ்கிறீர்கள் என்றால், நீங்கள்தான் பக்தவத்சலத்தை விட படுமோசமான கல்மனம் கொண்டவர் என்று கூறுவதைத் தவிர வேறு என்ன கூறமுடியும்? தமிழ்நாட்டில் இவ்வாறு சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டுள்ளது என்று மத்திய அரசு எண்ணிக் கொள்ளவேண்டாம். ஆனால் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படவேண்டும் என்பதையும், வன்முறை தடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஆதரிப்பவன் நான். ஆனால் நாம் இந்த மொழிப் பிரச்சினையை மறுபடியும் பரிசீலனை செய்து, நமதுதேசியமொழிகள் அனைத்தும் ஆட்சி மொழியாக ஆகத் தகுதி பெறும் வரையிலும் ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்ற ஒரு தீர்வை நாம் காண்போம். அவ்வாறு பலமொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்கும்போது, இயல்பாகவே அவற்றில் ஒரு மொழி இணைப்பு மொழி என்ற இடத்தைப் பெறும்.


(நிறைவு)

------------------------திரு. எஸ். ராமச்சந்திரன் அவர்கள் தொகுத்த அண்ணாவின் ராஜ்யசபை பேச்சுகள் என்ற ஆங்கில நூலிலிருந்து தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

3.9.09

சிலைதிருட்டும் பார்ப்பனர்களும்





கோபுரம்


கோயில்களுக்கும், கோயில்களில் உள்ள சாமி சிலைகளுக்கும் ஆபத்து ஆபத்து என்ற ஒரு நிலை நாட்டில்! சாமி சிலை திருட்டுப் போவதைத் தடுக்கவும், கண்டுபிடிக்கவுமே காவல் துறையில் ஒரு தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, கூடுதல் டி.ஜி.பி. என்கிற தகுதியில் அதற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என்பதிலிருந்தே, கோயிலில் உள்ள கடவுள் சக்திபற்றி கோவணம் கட்டத் தெரியாத சிறுவன்கூடப் பின் பொறியால் சிரிக்கிறான்.

சாமி சிலையைத் திருடினால் கண் போகும், கால் விளங்காது என்று கரடி விட்டனர். இப்பொழுது கோயில் அர்ச்சகப் பார்ப்பானே திருட ஆரம்பித்துவிட்டான்.

தமிழ் நாவலர் சரிதை என்ற ஒரு நூல் கூறும் தகவல்:

விஜய நகர நாயக்கர் மன்னன் ஆட்சிக்காலம், மன்னன் கிருஷ்ண தேவராயன். திருவாரூர் தியாகராயர் கோயிலில் இருந்த 63 நாயன்மார்கள் சிலைகளுள் இரண்டு சிலைகளை நாகராஜ நம்பி என்ற பார்ப்பான் திருடி விற்று விட்டான். இதை அரசனிடம் சொல்ல அமைச்சர்கள் அஞ்சினர். புலவர் ஒருவர் கிளி ஒன்றுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து அதன்மூலம் மன்னனுக்குத் தெரியப்படுத்த எண்ணினார் (சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை அல்லவா!).

அந்தப் பாடல் வருமாறு:

முன்னாள் அறுபத்து மூவர் இருந்தார் _ அவரில் இந்நாள் இரண்டு பேர் ஏகினார். கண்ணான் நறுக்குகின்றான். விற்றுவிட்ட நாகராஜ நம்பி இருக்கின்றான் கிருட்டினராயா என்பதுதான் அந்தப் பாட்டு.


கோயிலில் பார்ப்பான் திருடுவது என்பது இன்று நேற்று நடப்பதல்ல. பல காலமாக நடந்து வருவதுதான். காரணம், அவனுக்கு மற்றவர்களைவிட மிக நன்றாகவே தெரியும். கடவுளாவது புடலங்காயாவது அது ஒரு கல் அல்லது உலோகம் என்பதை அன்றாடம் அதனிடம் புழங்குகின்ற அய்யருக்குத் தெரியாமல் வேறு யாருக்குத்தான் தெரியப் போகிறது?

சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் அரசு அமைத்த குழுவே கோயில் திருட்டில் அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு இருந்த உறவை அம்பலப்படுத்தி விட்டது.


நேற்று மாலை ஏடு ஒன்றில் ஒரு செய்தி. கோயில் கோபுர கலசங்களுக்கு அபூர்வ சக்தியிருக்கிறது என்றும், அவற்றை விற்றால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்றும் தமிழகம் எங்கும் ஒரே வதந்தியாம். அந்தக் கலசத்தில் இருடியம் இருக்குதாம். அதை விற்றால் பெரும் பணம் கிடைக்குமாம். கிளப்பி விட்டவர்கள் யார் என்று தெரியவில்லை.



இந்து அறநிலையத் துறைக்கு இப்பொழுது இந்த வேலை கூடுதலாகிவிட்டது. கருவறையில் உள்ள கடவுளைக் காப்பாற்றுவது போல கோபுரக்கலசத்தையும் காப்பாற்றும் வேலை வேறு.

மனிதனைக் காப்பாற்றுவான் கடவுள் என்பது சுத்தப் பொய் - புரட்டு, கடவுளைக் காப்பாற்றுவதுதான் மனிதன் வேலை. கடவுளுக்குப் பேச சக்தியிருந்தால் காவல்துறையே என்னைக் காப்பாற்று காப்பாற்று! என்று மனு போடுவார் என்று நம்பலாம்.

-------------- மயிலாடன் அவர்கள் 3-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

சென்னை கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஜாதி ஒழிப்பு மாநாடு


கையிருப்பைக் காட்டுவோம்- வாரீர்!

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பெயரால் அமைந்த சட்டக் கல்லூரியில் ஜாதி மோதலா?
மனுதர்ம _ வருணாசிரம தர்மத்தை எதிர்த்து ஏற்றத் தாழ்வற்ற இன்ப உலகைக் காட்டும் புத்த மார்க்கத்தைத் தழுவிய அண்ணல் அம்பேத்கர் பெயரால் அமைந்த கல்லூரியிலா ஜாதிக் கலவரம்? அதுவும் தம் வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்புச் சமர்க்களத்தில் சண்ட மாருதம் செய்த சரித்திர நாயகர் தந்தை பெரியாரின் தத்துவ வயலிலா இந்த ஜாதிக் களைகள்?

வெட்கம்! மகாவெட்கம்!

வேதனைப்பட்டார் தமிழர் தலைவர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி பெறவேண்டும் _ உயர்ந்த ஜாதி என்று தம்பட்டம் அடித்தவர்களின் தலைக்குமேலே நம் மக்கள் உயரமாக நிற்கவேண்டும் என்பதுதானே தந்தை பெரியார் கண்ட திராவிடர் கழகத்தின் தாகம்!

சென்னை கல்லூரி மாணவர்களைக் கூட்டவேண்டும், ஜாதி என்னும் தோலை உரித்துக் காட்டவேண்டும் புத்துணர்வை ஊட்டவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
பலமுறை கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தும் தொடர் மழையின் காரணமாக அந்தக் காலகட்டத்திலேயே அது நிறைவேறாமல் போனாலும், அந்த எண்ணம் கைவிடப்படவில்லை. அதனுடைய வடிவம்தான் நாளை மறுநாள் (4.9.2009) மாலை சென்னை புதுவண்ணையில் வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மாணவரணியினர் நடத்தவிருக்கும் ஜாதி ஒழிப்பு மாநாடு.

அதே வண்ணையில்தான் தந்தை பெரியார் போர் முழக்கம் செய்தார் (14.10.1957).
உலகெங்கும் இல்லா ஜாதியை உயிர்த் தியாகம் செய்தேனும் அழிப்போம்! என்று சங்கநாதம் செய்தார்.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை என்கிறானே, அது பித்தலாட்டம். பார்ப்பனருக்கும், திராவிட மக்களுக்கும் நடந்த சண்டையைத்தான் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை என்கிறான். இந்த ஜாதி ஏற்பாட்டை எதிர்த்தவர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். அப்படிக் கொன்று பார்ப்பனர்களைக் காப்பாற்றியவர்கள்தான் அவதாரங்கள் என்பவை என்று இதே வண்ணையில்தான் வைக்கம் வீரர் எடுத்துரைத்தார்.


அதே வண்ணையிலே அவரின் வழிவந்த தலைவரின் வழிகாட்டுதலில் நமது கழகக் கண்மணியினர், மாணவரணியினர் ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறார்கள். துடிப்பு மிக்க மாணவர் பட்டாளம் தூக்கத்தைத் தூர வைத்துவிட்டு தும்பிகளாகப் பணியாற்றுகின்றது.
எல்லாப் பொறுப்புகளும் அவர்களிடத்தில்தான்! நிதி வசூலிலிருந்து, விளம்பரப் பணிகள் உள்ளிட்ட அத்தனைப் பணிகளையும் அவர்களே போட்டி போட்டுக்கொண்டு செய்கின்றனர்.
வாழையடி வாழையாக இயக்கத்திற்கு வளமான பணிக்குத் தோழர்கள் வேண்டாமா? அதற்கான பயிற்சிக் களமாகக்கூட இதனைக் கருதலாம்.

தமிழர் தலைவர் வைத்த தேர்வில் நமது கருஞ்சட்டை மாணவர்கள் மிகப்பெரிய மதிப்பெண்களைப் பெறுவார்கள் என்று நம்பலாம்.

அண்மைக்காலத்தில் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் விடுதிகளிலிருந்து மாணவத் தோழர்கள் கழகத்தை நோக்கிப் பயணம் செய்கின்றனர். அய்யாவின் கருத்துகளில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்; அம்பேத்கர் கல்லூரியில் நடைபெற்ற சம்பவத்திற்காக வெட்கித் தலைகுனிகிறார்கள். அந்த நோய்க்கு மாமருந்து _ தந்தை பெரியாரின் பகுத்தறிவு மூலிகைத் தோட்டம்தான் என்ற உணர்வு மாணவர்கள் மத்தியிலே தலைதூக்கி நிற்கிறது.

அந்த உணர்வின் உச்சகட்டம்தான் வட சென்னை ஜாதி ஒழிப்பு மாநாடு.
சென்னையில் உள்ள அத்தனைக் கல்லூரிகளிலிருந்தும், விடுதிகளிலிருந்தும் மாணவர் பட்டாளம் படையெடுத்து வருகிறது. பாழ் செய்யும் ஜாதிப் பகைக்குப் பாடை கட்ட மாணவத் தோள்கள் துடித்துக் கொண்டு நிற்கின்றன.

புரட்சிகரமான தீர்மானங்களை வடிப்போம் வாருங்கள்!
புரட்டுகளை நொறுக்குவோம், வாருங்கள்!
புரட்சி சமூகம் படைப்போம், கூடுங்கள்!

அன்று நம் திராவிட முன்னோன் இரணிய கசிபு சொன்னான்:

வாருங்கள் தானவர்களே! தயித்தியர்களே! நீங்கள் பிராமண க்ஷத்திரியர்களாலே விருத்தியடையாமல் நின் பூமியை யடைந்து தபசு எக்கியம் விரதம் அக்கினி சம்மாரம் பண்ணுங்கள் எந்தெந்த தேசத்திலே பிராமணர்கள் வேதங்கள் வர்ணாசிரம தர்மங்கள் இவை யாவும் உண்டாயிருக்கின்றனவோ, அந்தந்த தேசத்தைப் போய்க் கொளுத்துங்கள்!
(பாகவதம் வேணுகோபாலாச்சாரி மொழி பெயர்ப்பு, பக்கம் 572, _ 1955 ஆம் ஆண்டுப் பதிப்பு)


ஜாதி ஒழிப்புக்கு, வருணாசிரமத் தகர்ப்புக்கு நமது திராவிட மாவீரன் சொன்ன மார்க்கம்தான் அது. அந்த மாவீரன் மகனான பிரகலாதனையே துரோகியாக்கி விபீடணனாக்கி கருணாவாக்கி கோழைகள் சூழ்ச்சியால் கொன்றனர்.

ஆனாலும், அவன் சொன்ன மருந்து இருக்கவே செய்கிறது.

சம்பூகனை அழித்தவர்கள் ஏகலைவனைப் பழிவாங்கியவர்கள், சூரபத்மனைக் கொன்றவர்கள், இராவணனை வீழ்த்தியவர்கள், வெண்தாடி வேந்தர் தந்தை பெரியாரின் காலடியிலே வீழ்ந்தார்கள்.

காரணம், வீரம் மட்டுமல்ல, விவேகமும் கலந்திருந்தது தந்தை பெரியார் அவர்களின் போர் முறையில்!

அந்தப் பே()ராயுதம் நம்மிடம் இருக்கிறது. புறப்படுவோம் வாருங்கள்.
மாநாட்டில் தமிழர் தலைவர் தரும் வழிமுறையை ஏற்போம், கூடுங்கள்!
அவர் கொட்டும் போர் முரசை செவி மடுப்போம் வந்து சேருங்கள்!
மானமிகு மாண்புமிகு மத்திய அமைச்சர் ஆ. இராசாவின் அறிவு முழக்கம் _ கேட்போம் வாருங்கள்! வாருங்கள்!

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மாணவர் அணியின் கைத்திறனின் எழுச்சியைக் காணுங்கள்! காணுங்கள்!!

----------------- மின்சாரம் அவர்கள் 2-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை