Search This Blog

2.9.09

ஈழப் பிரச்சினையில் அரசியல் நடத்தலாமா? சுருதி பேதம் காட்டலாமா?


ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படவேண்டும். தமிழக அரசு சொல்வதை மத்திய அரசு செயல்படுத்தவேண்டும். இல்லையேல் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தார்.

கைதாவதற்கு முன்பு சென்னை பெரியார் திடல் வாசலின் முன்பு தலைவர்கள் நின்றனர். கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் மறியல் பற்றி விளக்கினார்.

உலகத் தமிழர் பேரவை இரா. ஜனார்த்தனம் பேசுகையில் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் மீட்கப்படவேண்டும். அதற்கு துரோகம் செய்யக்கூடாது என்று கூறினார்.

சுப. வீரபாண்டியன்

திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமது உரையில், ஈழத் தமிழர்கள் முள்வேலிக்குள் படும் இன்னல்களை ஈழத் தமிழர்கள் சாவதைக் கண்டு உலக நாடுகள் கள்ள மவுனம் சாதிப்பது வேதனைக்குரியது.

தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை மூன்றாவது குற்றவாளி. கலைஞர்தான் உலக முதல் குற்றவாளி என்று நேற்று பரமக்குடியில் நடந்த கூட்டத்தில் ஓர் அணியினர் பேசியுள்ளனர் என்பது கண்டிக்கத்தக்கது. இலங்கை தமிழர்களுக்குப் பாதுகாப்பாக தேவையான உதவிகளை கலைஞர் செய்துகொண்டு வருகின்றார் என்றார்.


தமிழர் தலைவர் உரை

இறுதியாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையிலே கூறியதாவது:

நாம் மகிழ்ச்சியோடு இங்கு கூடியிருக்கவில்லை. நம்முடைய இதயத்தில் வழிந்து கொண்டிருக்கின்ற ரத்தத்தை துடைத்துக் கொண்டே இங்கு கூடியிருக்கின்றோம்.

சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னாலே இதே செப்டம்பர் மாதத்திலே ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நாம் ரயில் மறியல் செய்து கைதானோம்.

இன்றைக்கும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, உலக மக்களின் கவனத்தை ஈர்க்க ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றோம்.

இந்திய அரசு தெரிந்தோ, தெரியாமலோ ஈழத் தமிழர் பிரச்சினையில் கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையில் சொரிந்து கொள்ள முற்படுகிறது.

தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழருடைய பிரச்சினைக்காக தன்னுடைய பதவி ஆட்சிப் பொறுப்பை இரண்டு முறை இழந்தவர்.

கலைஞர் வலியுறுத்துவதை அலட்சியப்படுத்தினால்...

கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினையில் வலியுறுத்துகின்ற செயலை மத்திய அரசு செய்யவில்லை என்று சொன்னால், திராவிடர் கழகம் அடுத்து மாபெரும் போராட்டத்திற்கு மக்களைத் திரட்டும்.

அய்ரோப்பிய நாட்டு மக்கள் கப்பலில் அனுப்பிய உணவு, மருந்து பொருள்களை வேறு கப்பலுக்கு மாற்றி ஈழத் தமிழர்களுக்காக அந்தப் பொருள்களை அனுப்பி வைத்தவர் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

அப்படிப்பட்ட கலைஞரைப் பார்த்து ஈழத் தமிழர்களுக்கு விரோதமானவர் என்று
சொல்லுவதா?

இது விபீஷ்ணத்தனம் அல்லவா? பழைய ராமாயணக் கதை திரும்பக்கூடாது.
முள்வேலிக்குள் எந்தவித வசதியின்றி கழிப்பிடம்கூட போதிய அளவு இல்லாமல் ஆண், பெண் இரு பாலரும் அவதிப்பட்டிருக்கின்ற நிலையில் அவர்கள் அழிந்து கொண்டிருக்கின்ற நிலையில், தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதற்குப் பதிலாக இதில் போய் அரசியல் நடத்தலாமா? சுருதி பேதம் காட்டலாமா?

ஈழத் தமிழர் பிரச்சினை யாரால் முடியும் என்பதை முதலில் பார்க்கவேண்டும். முதல்வர் கலைஞர் அவர்கள் அதற்குத் தேவையானதை செய்து கொண்டிருக்கின்றார்.

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியவர் (அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்) கலைஞர். அதேபோல இலங்கையிலே முள்வேலிக்குள் இருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்ற அந்த முள்வேலியையும் அகற்றக் கூடியவர்தான் நம்முடைய கலைஞர் (பலத்த கைதட்டல்).
போர் முடிந்துவிட்டது. இனி ஈழத் தமிழர்கள் அவரவர்களுடைய வாழ்விடங்களுக்கு அனுப்புவதை விட்டுவிட்டு, அந்த இடங்களில் எல்லாம் ராஜபக்சே சிங்களவர்களை குடியமர்த்துகின்றார்.


ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பெற, நாங்கள் எந்த விலையையும் கொடுக்கத் தயார்.
ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பது உலக நாடுகளுக்கும் கடமை இருக்கிறது. சிங்கள அரசுக்கு சீனா தளம் அமைத்து தருகிறது. பாகிஸ்தான் ஆயதங்களைத் தருகிறது. மத்திய அரசு இனி என்ன செய்யப் போகிறது? ராஜபக்சே அரசு இந்திய அரசின் இறையாண்மைக்கு சவால் விட்டிருக்கின்றது.

இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பத்திரிகை சுதந்திரமான நான்காவது தூண் அங்கு அழிந்து போய்விட்டது.

இங்கிலாந்து சேனல் 4 ஒலி, ஒளிபரப்பிய செய்திகள் சிங்களவர்களின் கொலை வெறித்தனத்தை வெளிக் கொணர்ந்துவிட்டது. நம்முடைய இதயமெல்லாம் வெடித்துவிடக் கூடிய அளவுக்கு கொடுமை நடந்துள்ளது.

நார்வே நாட்டுக்கு இருக்கின்ற உணர்ச்சி இங்குள்ளவர்களுக்கும், இந்திய அரசுக்கும் இல்லையே!

கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக சென்னை கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தபொழுது, திராவிடர் கழகத்தின் சார்பில் அப்பொழுதே அறிவித்தோம்.

ஈழத் தமிழர்களின் இன்னல்கள் களையப்படவில்லை என்றால், தமிழர்கள் அனைவரையும் திராவிடர் கழகம் ஒன்று திரட்டி இங்குள்ள இலங்கை துணை தூதுவர் அலுவலகத்தை பூட்டு போட்டு மூடுவோம் என்பதை அறிவித்திருந்தோம்.

அந்தப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றதே தவிர, அது கைவிடப்படவில்லை.
ராஜபக்சே உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்


ராஜபக்சே உலக நீதிமன்றத்தின் முன்பு முதல் குற்றவாளியாக நிறுத்தப்படவேண்டும்.
இந்த போராட்டம் தொடரும்.

நாம் ரயில் மறியல் செய்யப் போகிறோம்.

கட்டுப்பாடாக நாம் நடந்துகொள்ளவேண்டும். காவல் துறையினருக்கு ஒரு சிறு தொல்லைகூட நம்மால் ஏற்பட்டுவிடக் கூடாது.

இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

--------------"விடுதலை" 2-9-2009

ஓணம் பண்டிகையும் - பார்ப்பனர்களின் சூழ்ச்சியும்


ஓணம்

இன்று ஓணம் பண்டிகை _ குறிப்பாக கேரள மாநிலத்தில் இது விசேஷம்.
எதற்கெடுத்தாலும் ஒரு புராணக் கதை தயாராக இருக்குமே. இதற்கு மட்டும் இல்லாமலா போகும்.

மாவலி என்னும் சக்ரவர்த்தி மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அவன் இரணியகசிபு வழி வந்தவனாம். (இப்பொழுது புரிந்திருக்குமே அசுரக் குலத்தைச் சேர்ந்தவன் அவன் என்று).

மக்களுக்கு நல்லாட்சி புரிந்து வந்தான்; கேட்டவர்களுக்கெல்லாம் வாரி, வாரி வழங்கினான்.
பொறுக்குமா சுரர்களுக்கு? (பூதேவர்களாகிய பார்ப்பனர்களுக்கு) வழக்கம் போன்ற அவதாரக் கதைதான் இங்கும்.

பூதேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டார்களாம் (இந்து மதக் கடவுள்களில் அவதாரம் எடுக்கக் கூடியவர் இவர்தான்) மக்களுக்கு நன்மைகள் செய்வதால் மாவலிக்கு ஆணவம். அவனை ஒழிக்கவேண்டும் என்று முறையிட்டார்களாம்.

பூதேவர்கள் சொல்லி விட்டால் அதற்கு அட்டி ஏது? (பிரம்மா பூலோகத்தைப் படைத்ததே பிராமணர்களுக்குத்தான் என்பதுதானே மனுதர்மம்?)

உடனே விஷ்ணு வாமன (அதுவும் குள்ளப் பார்ப்பான்_ சூழ்ச்சி வரும்போது அந்த அவதாரம்தானே!) அவதாரம் எடுத்தானாம். அடுத்த கட்டம்... கேட்டவர்களுக்கெல்லாம் இல்லை எனாது கொடுக்கும் மாவலியிடம் குள்ளப் பார்ப்பானாகிய விஷ்ணு சென்று யாக சாலைக்கு மூன்றடி மண் கேட்டானாம். கொடுத்தேன் போ! என்றானாம் மாவலி.

ஒரு அடியை மண்ணில் வைத்து, இன்னொரு அடியை ஆகாயத்தில் வைத்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று கேட்டானாம் குள்ளப் பார்ப்பான். உடனே மாவலி தன் தலையைக் காட்டினானாம் (அதுதானே அவாள் எதிர்பார்த்தது) தலையில் கால் வைத்து மிதித்துக் கொன்று விட்டானாம்.

மாவலி மறைந்த நாளில் வீட்டில் கோலம் போட்டு பக்தர்கள் வரவேற்பார்களாம். அன்று எல்லோர் வீட்டிலும் அவர் வருவார் என்பது அய்தீகமாம் (கிட்டத்தட்ட தீபாவளி கதைபோல் இருக்கிறது அல்லவா!)

யாரை அழித்தார்களோ, அந்த அழிவுக்கு ஆளானவரின் இனத்தைச் சேர்ந்த மக்களையே கொண்டாட வைப்பதுதான் பார்ப்பனர்களின் சூழ்ச்சி.

தீமைகள் செய்தான் அதனால் நரகாசுரனை அழித்தார்களாம்; இராவணனை அவதாரம் எடுத்து கொன்றார்களாம். அப்படியானால் நல்லது செய்த மாவலியை ஏன் அழித்தார்களாம்? நல்லது செய்த அசுரனுக்கு நல்ல பெயர் வரலாமா?


மக்களுக்கு அன்றாடம் நன்மை செய்துவரும் கலைஞர் ஆட்சியை அழிக்க பார்ப்பனர்கள், அவர்களின் ஊடகங்கள் செய்துவரும் போக்கினை இதோடு முடிச்சுப் போட்டுப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

-------------- மயிலாடன் அவர்கள் 2-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம்




ஒற்றுமையாக இருக்கவேண்டுமா? ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா? இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம்


(இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இருக்கும் என்ற அரசமைப்புச் சட்டப் பிரிவினை எதிர்த்து தமிழகத்தில் 1965 இல் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தி மொழி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை, ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்று பிரதமர் நேரு அவர்கள் அளித்த வாக்குறுதி இப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. இவ்வாறு ஓய்ந்து போயிருக்கும் ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையை மறுபடியும் மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் எழுப்பத் துணிந்திருக்கிறார். நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் வேண்டும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேவையில்லை என்பது போன்ற அரைவேக்காட்டுத்தனமாக கருத்துகளை அள்ளித் தெளித்த அவர் இப்போது மொழிப் பிரச்சினையைத் தேவையற்ற நிலையில் எழுப்புகிறார். மத்திய அரசின் ஆட்சி பொறுப்பில் தலைமை ஏற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் தி.மு.க.வுக்கும் இடையே சுமுகமான நல்லுறவும், ஒத்துழைப்பும் நிலவி வரும் இன்றைய சூழ்நிலையில் அதனைக் குலைக்கும் வகையில் பேசி வரும் கபில் சிபலை காங்கிரஸ் தலைமை கட்டுப்படுத்தும் என்று நம்புகிறோம்.

இந்த சூழ்நிலையில் அன்று மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா இப் பிரச்சினை பற்றி பேசியதை இங்கு வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறோம்.)


********************************************************

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 343 ஆவது பிரிவின்படி 1965 ஜனவரி 26 முதல் இந்திய நாட்டின் ஆட்சிமொழியாக இந்தி ஆகவேண்டும்.

இந்தித் திணிப்பிற்கு எதிரான தங்களுடைய பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்க 1965 ஜனவரி 26 அன்று ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த தமிழ்நாட்டு மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். இப்போராட்டத்தின் விளைவாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் என்று அப்போதைய சென்னை மாநில முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் கருதினார். 1965 ஜனவரி 25 அன்று இரவு அண்ணாவும் அவரது கட்சியைச் சேர்ந்த 3000 தொண்டர்களும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 1965 பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்றுதான் விடுதலை செய்யப்பட்டனர். இந்த இடைப்பட்ட ஒரு வார காலத்தில் பொதுமக்கள் கடுங்கோபத்தில் வெகுண்டெழுந்தபோது, மாநிலத்தின் பல பகுதிகளில் மாநில வரலாற்றில் இதுவரை காணாத அளவில் வன்முறை வெடித்தது. திரு சி.சுப்பிரமணியம் மற்றும் திரு ஓ.வி.அழகேசன் என்ற இரு காங்கிரஸ்காரர்கள், மொழிப் பிரச்சினை காரணமாக தங்களின் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார்கள். அண்ணாவும் தி.மு.கழகத்தின் இதர தலைவர்களும் கைது செய்யப்பட்ட பிறகு, இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தலைமையை மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின், அண்ணா அவர்கள் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு தங்களின் தி.மு.கழகத்திற்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று ஆணித்தரமாக வலியுறுத்துவதற்கு அந்த வாய்ப்பை அண்ணா பயன்படுத்திக் கொண்டார்.

இந்தி எப்போதுமே ஆட்சி மொழியாக வரக் கூடாது என்று பிடிவாதமாக அண்ணா கூறவில்லை. நம்மிடையே குறிப்பிட்ட அளவுக்கு உணர்ச்சிப் பெருக்கு நிலவுவதால், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, சரியான ஆட்கள் நாம் இல்லை என்று ஒரு பெரிய பொறுப்புமிக்க அரசியல் தலைவர் நிலையில் அண்ணா பேசினார்.

1965 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும், மாநிலங்களவையில் அண்ணா பேசியது போன்று அரசியல் தலைவர்கள் விடுத்த நம்பிக்கை மிகுந்த வேண்டுகோள்களும் இணைந்து, நாட்டில் இந்தியைத் திணிக்கவேண்டும் என்ற வேகம் குறைந்தது.

***********


அண்ணா அவர்களின் பேச்சு

நான் கூற விரும்புவது இதுதான். காலப் போக்கில் இந்தி மொழியை நாட்டின் சட்டப்படியான இணைப்பு மொழியாக ஆக்குவதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் முன், உண்மையிலான இணைப்பு மொழியாக இந்தியை ஆக்கும் வழியில் நீங்கள் செயல்படவேண்டும். எனதருமை நண்பர் வாஜ்பேயி தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு அதில் இருக்கும் தமிழ் இலக்கியத் தேனை ஆழ்ந்து பருகினாரானால், நிச்சயம் அவர் தமிழ் மொழியைத்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாகத் தேர்ந்தெடுப்பார் என்று கூறிக்கொள்கிறேன்.

அனைத்து தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்

அதனால், நமது பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாக ஆக இயன்ற நேரம் வரும் வரை, இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் தற்போதைய நிலையே தொடருவதற்கு நாம் எந்த விதத்திலும் குந்தகம் விளைவித்து விடக்கூடாது. இந்தியாவை ஒற்றுமையாக ஒரே நாடாக வைத்திருப்பதற்காக பலமொழி என்ற விலையை நாம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இந்தி மொழியைத் திணிப்பதன் மூலம் உங்களால் இந்தியாவைப் பிளவு படச் செய்துவிட முடியும். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் மனநிறைவுடன் வாழும் ஒரு இந்தியாவை நீங்கள் காண விரும்பினால், நாட்டின் ஒரு பகுதி மற்றொரு பகுதி மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்று மக்கள் கருதாத ஒரு இந்தியாவை நீங்கள் காண விரும்பினால், கோடிக் கணக்கான மக்களின் மனதில் நியாயமான அச்சங்கள் தோன்றக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட்டுக் கொள்ள இயன்ற இந்தியாவைக் காண நீங்கள் விரும்பினால், அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்கும் பிரச்சினையை நீங்கள் கட்டாயமாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

சுவிட்சர்லாந்து 4 மொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்டிருக்கும்போது நம்மால் ஏன் 14 மொழிகளை வைத்துக் கொள்ள முடியாது?

இதை நான் கூறும்போது, இது நடைமுறை சாத்தியமற்றது என்று எனது நண்பர் திரு. அக்பர் அலி கான் கூறினார். அது சிக்கலானதுதான்; எளிதானது அல்ல என்பது உண்மைதான். ஆனால் அதில் உள்ள இடையூறுகள் கடக்க இயலாதவை அல்ல. நான்கு மொழிகளை ஆட்சி மொழியாக சுவிட்சர்லாந்து நாட்டினால் வைத்துக் கொள்ள முடியுமானால், நம்மாலும் பதினான்கு மொழிகளை ஆட்சி மொழிகளாக வைத்துக் கொள்ள முடியும். இந்த விஷயத்தில் எதிர்கொண்ட இடையூறுகளை சுவிட்சர்லாந்து கடந்து இருக்கிறது. அத்தகைய வழி முறைகளைக் கண்டு பின்பற்ற இயலாத அளவுக்கு அறிவுப் பஞ்சம் கொண்டவர்களா நாம்? எந்த இடையூறையும், சிக்கலையும் வென்று கடந்து செல்ல இயன்ற ஆற்றல் மிகு மக்களை நான் இங்கு காண்கிறேன். அந்த இடையூறுகளைக் கடக்க எங்கள் கட்சியின் உதவி தேவை எனில், அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் உதவி உங்களுக்குத் தேவைப்படாது என்று கருதுகிறேன். ஆனால், தேவை என்று நீங்கள் பாவனை காட்டினாலும் போதும், உதவ நாங்கள் தயார். பன்மொழிக் கருத்து என்பது வெறும் மயக்க உணர்வு அல்ல; தி.மு.க. நிறைவேற்றியுள்ள தீர்மானம் அது. அதைப் பற்றி நான் அஞ்சவில்லை. வெறுக்கத்தக்கது அது என்று கருதாதீர்கள். முன்னர் சென்னையின் ஆளுநராக இருந்த சிறீ பிரகாசா அவர்கள் கடந்த வாரம் பன்மொழிக் கருத்துக்கு ஆதரவாகப் பேசியதுடன் பொருத்தமான ஒரு வாதத்தையும் முன்வைத்தார். மொழிவாரியான மாநிலங்களை உருவாக்குவது என்ற முடிவுக்கு வந்த பிறகு, அதன் விளைவாக ஏற்படும் பல ஆட்சி மொழி எனும் கருத்தை ஏற்பதில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

நாங்கள் ஆங்கில மொழி மோகம் கொண்டிருக்கவில்லை

அனைத்து மொழிகளும் அந்த நிலைக்கு உயரும் வரை நாம் பலமொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்டிருப்போம். தமிழ் மொழி ஏற்கெனவே அந்த நிலையை எட்டிவிட்டது என்று நான் இங்கு அறிவிக்கிறேன். வங்காள மொழியும் அந்த நிலைக்கு வளர்ந்து விட்டது என்று எனது நண்பர் பூபேஷ் குப்தா கூறக்கூடும். நமது தேசிய மொழிகள் அனைத்தும் அந்த நிலையை எப்போது எட்டுகின்றனவோ, அது 1970 ஆக இருக்கட்டும் அல்லது 1980 ஆக இருக்கட்டும், அப்போது நாம் ஆங்கிலத்தைக் கைவிடுவோம். அதனால், ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்று தி.மு.க. வாதிடுவது , ஆங்கில மொழி மீது நாங்கள் கொண்டிருக்கும் மோகத்தின் காரணமாக அல்ல. எங்கள் மொழியைப் பொறுத்தவரை நாங்கள் கர்வம் மிகுந்த மக்களாவோம். தமிழ் மொழிக்கு இணையாக எந்த மொழியாலும் நிற்கமுடியாது என்று நினைப்பவர்கள் நாங்கள். அப்போது மேற்கு வங்க உறுப்பினர் டி.எல். சென் குறுக்கிட்டு, வங்காள மொழி தவிர என்று கூறினார்.

-----------------------(தொடரும்)

-------------------திரு. எஸ். ராமச்சந்திரன் அவர்கள் தொகுத்த அண்ணாவின் ராஜ்யசபை பேச்சுகள் என்ற ஆங்கில நூலிலிருந்து தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

ஞாயிற்றுக்கிழமை எதற்காக விடுமுறை விடப்படுகிறது? ஏன்?



கிறிஸ்துமஸ்
விடுமுறை கூடாது


நம் நாட்டின் விழாக்களும் பண்டிகைகளும் மூடநம்பிக்கைகளை வளர்ப்பன என்பதாகவே உள்ளன என்று தந்தை பெரியார் கூறிக் கண்டித்தார். இவற்றுக்கான விடுமுறைகள் விடப்படுவதும் கண்டிக்கத் தக்கனவாகவே உள்ளன. அந்தவகையில் உலகிலேயே அதிகமாக விடுமுறைகள் விடப்படும் நாடாக இந்தியா உள்ளது என்பதை விடுதலை பல ஆண்டுகளாகவே சுட்டிக் காட்டி வருகிறது.

வாரந்தோறும் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்தியாவை ஆண்டவர்கள் ஆங்கிலேயக் கிறித்துவர்கள் என்பதால், அவர்களின் மதநம்பிக்கைப்படி ஞாயிற்றுக்கிழமை வேலை செய்யக்கூடாது என்று விடுமுறை விட்டார்கள்.

விடுதலை பெற்றபிறகு, இலங்கையில் புத்தமதப்படி வியாழக்கிழமை விடுமுறை பாகிஸ்தானில் இசுலாமிய மார்க்கப்படி வெள்ளிக்கிழமை விடுமுறை. மதச்சார்பற்ற (?) இந்தியாவுக்கு கிறித்துவ மதப்படியே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ராஜீவ் காந்தி ஆட்சியில் கூடுதலாக சனிக்கிழமை விடுமுறை.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் விடுமுறை விடுகிறார்கள். அதேபோல, உயர்நீதி மன்றமும் விடுமுறை விட்டுக் கொள்கிறது. உச்சநீதி மன்றத்திற்கும் விடுமுறை. பெரும்பாலும் டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரம்வரை இந்த விடுமுறை விடப்படுகிறது.

என்ன அடிப்படை ? கிறிஸ்துமஸ் பண்டிகையும் புத்தாண்டுப் பண்டிகையையும் கொண்டாட வேண்டும் எனும் கிறித்துவ மதநம்பிக்கைதான் அடிப்படை. வெள்ளையர் காலத்தில் அவர்களே அதிகாரிகளாக, நீதிபதிகளாக இருந்த காலத்தில் விட்டுக் கொண்டார்கள். அது அப்படியே மதச்சார்பற்ற ஆட்சிக் காலத்திலும் நீடிக்கிறது. நீடிக்கலாமா
?

மதச்சார்பற்ற விழா_ பண்டிகை என்று எடுத்துக் கொண்டால், தமிழர்களின் பொங்கல் தவிர, வேறு எதுவுமே கிடையாது. அந்தவகையில் பண்டிகை எனக் கொண்டாடப்படக்கூடிய தகுதி பொங்கலுக்கு மட்டுமே உண்டு. அதனைச் சிறப்பாகக் கொண்டாடக் கூடிய வழியை, வகையைக் காணவேண்டியது தமிழர் கடமை.

புதிதாக விடுமுறை நாள்களைத் தேடுவதைத் தவிர்த்து, கிறிஸ்துமஸ் விடுமுறை என்று அழைக்கப்படும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையைத் தவிர்த்து விடலாம். அதற்கு மாறாக பொங்கல் விழா நேரத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறை அளவுக்கு அத்தனை நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கலாம்.

கல்வித் துறையில் பாடத்திட்டம் தொடங்கி, பரிட்சைமுறை, விடுமுறை போன்று பல வகைகளிலும் சீர்திருத்த வேண்டிய நிலை உள்ளது; மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இப்போதே செய்துவிட வேண்டும்.

***********************************

ஆன்மீக வணிகம்

யார் அதனை உணர்கிறாரோ, அவரால் அது உணரப்படுவது இல்லை. யார் அதைத்தன்னுள் கொண்டிருக்கிறாரோ, அவர் அதைத் தன்னுள் அறிவதில்லை. அதை அறிந்து கொண்டேன் எனும் எவரும் அதை அறிந்து கொண்டதில்லை என்கிற குழப்பமான வெண்டைக்காய் விளக்கெண்ணெய் வியாக்கியானம் ஆத்மா என்பதுபற்றித் தரப்படுகிறது. உபநிஷத்தில் இம்மாதிரி கூறப்படுகிறது. அந்த உபஷத்தின் பெயர் கூட மிகவும் பொருத்தமாகவே அமைந்துள்ளது _ கேண உபநிஷத். பத்தாம் அத்தியாயம் 3 ஆம் சுலோகம்.

ஆத்மா எனும் அறிவுள்ள உள்ளுயிருக்குப் பிறப்பில்லை; இறப்பில்லை. இது எங்கிருந்தும் வரவில்லை. ஏதோ ஒன்றாக மாறவில்லை. இது பிறப்பறுத்துப் பிறக்கிறது. நிலைமாறாதது. நிலைத்திருப்பது. ஆதிக்கும் முதலான ஆதி இது. இது நிலைத்திருக்கும் உடல் அழியும் போது இது மட்டும் அழிவதில்லை, இப்படிப்பட்ட கற்றாழைச் சாற்றுடன் கிரீஸ் சேர்த்துக் குழப்பிய விளக்கமும் ஆத்மா வுக்குத் தான் அளிக்கப்படுகிறது. இந்தப் புதுக்குழப்பம் கதா உபநிஷத் தின் அத்தியாயம் 2 சுலோகம் 18 இல் உள்ளது.

இளைப்பாறுவதற்காக மரங்களை நாடும் பறவைகள் போல அனைத்தும் இவ்வகை நிலைப் பண்பை நாடுகின்றன. மணமும் மணக்கும் பொருள்களும், சுவையும் சுவைதரும் பொருள்களும், தொடுதலும் தொடப்படும் பொருள்களும், மொழியும் மொழியப்படும் ஒலிகளும், மலவாயும் அதன்வழி தள்ளப்படுபவையும், பாதங்களும் அவை நடக்கும் பாதைகளும், மனமும் மனதால் அறியப்படுபவைகளும், நான்எனும் அகங்காரமும் அத்துடன் பிணைக்கப்பட்ட செருக்குகளும், எண்ணமும் எண்ணம் ஏற்படுத்தும் விளைவுகளும், உயிர் மூச்சும் அதற்கு உறுதுணையாக இருப்பவையும் ஆக , அனைத்துமே ஆத்மா வில் தஞ்சம் அடைகின்றன என்று மண்டைபிளக்கும் விளக்கம் பிரஸ்ந உபநிஷத் தில் தரப்படுகிறது.

வாய்மையின் மூலமும், தூய துறவறம் மூலமும், கோணல் இல்லாத அறிவு மூலமும், தூய்மையான வாழ்வை நடத்திவருபவன் மூலமும், ஆத்மா-அடையப்படுகிறது. இச்சை அகற்றி, உடலை வருத்தி, மெய்ஞானப்பாதையில் நடக்கும் ஞானி தன் குறை களைந்து அவனைப் பார்க்கிறான். என்ற விளங்கா வியாக்யானத்தை முண்டக உபநிஷத் மூன்றாம் அத்தியாயம் 5 ஆம் பாடல் தருகிறது.

அதே உபநிஷத் இப்படியும் கூறுகிறது. ஆத்மா கற்பித்துப் பெறப்படுவதில்லை. மூளைத்திறன் கொண்டு பெறப்படுவதில்லை. மிகுதியான அளவில் கல்வி கற்பதன் மூலமும் பெறப்படுவதில்லை என 3 ஆம் சுலோகத்தில் சொல்கிறது.

இந்த ஆத்மா விலிருந்து உண்மையாகவே விண்வெளி தோன்றியது. விண்வெளியிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து புவியும், புவியிலிருந்து செடியினமும் செடியினத்-திலிருந்து உணவுப் பொருளும் உணவுப் பொருள்களிலிருந்து விந்தும் விந்திலிருந்து மானிட இனமும் தோன்றின என்கிற வட்டச் சதுர முக்கோணப் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை (?) தைத்யாரிய உபநிஷத் இரண்டாம் படலம் முதல் பாடலில் கூறுகிறது.

இப்புவியில் எதுவாக இருந்தாலும் புலியாகவோ, சிங்கமாகவோ, ஓநாயாகவோ, பன்றியாகவோ, புழுவாகவோ, பறக்கும் பூச்சியாகவோ, குருதி குடிக்கும் கொசுவாகவோ எதுவாக இருப்பினும் அது (ஆத்மா) அதுவாகவே மாறுகிறது. அதுதான் நிலை மாறாத மெய்மை. அதுவே ஆத்மா , நீயும் அதுதான் என மனிதர்க்கு அறிவிக்கிறது சாண்டோக்ய உபநிஷத் ( படலம் 6 பாடல் 2 முதல் 4)

உபநிஷத் என்றால் ஏதோ, பெரிய இது என்று நினைத்துக் கொள்ள வேண்டா. அல்லா உபநிஷத், ஏசு உபநிஷத் என்று எழுதிவைத்திருக்கிறார்கள். அதே போன்ற குப்பைக் கூளங்களில் சேர்க்க வேண்டிய சமாச்சாரம்தானே தவிர, வேறொன்றும் இல்லை. அதிலேயே சொல்லி இருக்கிறது. என்று ஏகாரம் போட்டுப் பேச வேண்டா.

இதே ஆத்மா வைப்பற்றி சுருதி, ஸ்மிருதி ஆகியவையும் விளக்குகின்றன. அவையும் இப்படியே ! ஆத்மா பிறப்பதில்லை, இறப்பதுஇல்லை கொல்வதும் இல்லை. கொல்லப்படுவதும் இல்லை. பிணைக்கப்படுவது இல்லை. பிற பிணைப்புக்குக் காரணமாக இருப்பதும் இல்லை. அது தளை நீக்கப்பட்டது அல்ல. தளை நீக்கம் அளிப்பதும் இல்லை. அதுதான் மெய்யானது. அதனைத் தவிர அனைத்தும் மெய்மை அற்றவை. (கடவுளுக்கும் பொருந்துமோ?

அய்ந்து குருடர்கள் யானையைப் பார்த்துவிட்டு விளக்கம் கூறியதைப்போல, இல்லாத யானையைப் பார்க்காத கண்பார்வை யற்றவர்களான கருத்துக் குருடர்கள் பிதற்றியவை ஆத்மா பற்றிய விளக்கங்கள். ஹிந்து மதத்திற்கு மட்டுமே உரித்தான பித்தலாட்டச் செயல்.

இதை ஆன்மா என்று தமிழ்வெறித் தன்மை மாற்றி வைத்துக் கொண்டு, அதன் அடிப்படையில் தாங்கள் செய்யும் எல்லா பித்தலாட்டங்களையும் ஆன்மீகம் எனும் சொல்லைக் கொண்டு புனுகு பூசி ஏமாற்றி வருகிறார்கள் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

**************************************

கோயில் விழாக்களில் கோடிகள் வீண்

கோயில்களே வீண். கோயிலுக்குப்போய்க் கும்பிட்டால்தான் கடவுளின் அருள் முழுமையாகக் கிடைக்கும் என்கிறார்கள் இந்து மதத்தினர். நாள் ஒன்றுக்கு 5 முறை வணங்கவேண்டும் என்றாலும் வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசலுக்குப் போய் வணங்கவேண்டும் என நிபந்தனை இசுலாத்தில் உண்டு. கூடுதல் பலன்களைப் பெறுவதற்கு என எடுத்துக் கொள்ளாவிட்டாலும், இசுலாமியர்கள் ஒன்றுகூடும் வாய்ப்பாக அதனைக் கருத இடம் இருக்கிறது. கிறித்துவர்கள் ஞாயிறு தோறும் சர்ச்சுக்குச் செல்லும் வேலை தவிர வேறு வேலை பார்க்கக் கூடாது என்று கட்டாயம்.

இவை அத்தனையுமே, பக்தி நிறுவனமயமாக்கப்பட்டதற்கும் அதன் மூலம் வசூலிப்பதற்கும் செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்றே கருதலாம் அதிலும் இந்து மதத்தில் எல்லாமே காசு காரியத்தில் கண் வைத்துச் செய்யப்பட்டவையே!

இந்து மதத்தைப் பொறுத்தமட்டில் கோயில்கள் கள்ளர்தம் குகைகள்! எடுத்துக்காட்டுக்காகக் கோயில் கும்பாபிஷேகங்கள் பற்றிய கண்டிஷன்களைப் பார்த்தாலே புரியும். தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயிலுக்கான அபிஷேகத்திற்குத் தேவைப்படும் பொருள்களின் பட்டியல் கீழே:

_ தங்கக் குடங்கள் 119

_ சங்குகள்_ 1000

_ தூயநீர்_ 5 லட்சம் குடங்கள்

_ நீருடன் நவரத்தினங்கள் சேர்த்து_ 1000 செப்புக் குடங்கள்

_ - பசும்பால் -_ 1 லட்சம் குடங்கள்

_ பசும்நெய்_ 100 குடங்கள்

_ சர்க்கரை_ 5 மலையளவு (இமயமலை?)

_ இளநீர்_ 2 லட்சம்

_ வாழை_ 5 லட்சம்

_ மாம்பழம்_ 1 லட்சம்

_ எலுமிச்சை_ 10 லட்சம்

_ பலாப்பழம்_ 1 லட்சம்

_ கரும்புச்சாறு_ 1000 குடங்கள்

_ வாசனைப்பொடி கலந்த நீர்_ 1000 குடங்கள்

இவற்றுக்கு இன்றைய தேதியில் என்ன மதிப்பு என்று கணக்கிட்டுப் பாருங்கள்? கல்சிலையில் செய்யப்படும் அபிஷேகத்தினால் என்ன பலன் என்று பாருங்கள் ! அறிவும் பணமும் பாழாகுவதையும் எண்ணுங்கள்.


------------------செங்கோ அவர்கள் 29-8-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை




அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை

அர்ச்சகர்: என்ன ஜோசியரே, கோயிலுக்கு முன்போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் கஷ்டமாகவல்லவா இருக்கிறது.

ஜோசியர்
: என்ன காரணம்?

அர்: இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான்.

ஜோ: சுயமரியாதை காரணம் என்றால், சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை பூதம் இல்லை என்று சொல்லி மக்களைக் கோயிலுக்குள் போகக் கூடாது என்று பிரச்சாரம் செய்கின்றார்களே, அதனாலா?

அர்: இல்லை இல்லை. அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்தடவை வேண்டுமானாலும் சாமியில்லை; பூதமில்லை என்று சொல்லட்டும்; கோயிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும். அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது.

ஜோ: மற்றென்ன காரணம் என்ன சொல்லுகிறீர்கள்?

அர்: கோயில்களுக்கு தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி அதை நிறுத்தி விட்டார்களல்லவா, அதனால்தான்.

ஜோ: இதற்கும் பக்திக்கும் சம்பந்தமென்ன? இதனால் எல்லாம் மக்களுக்குக் கடவுள் பக்தி குறைந்து விடுமா?

ர்: கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்! கடவுள் தான் எங்கும் நிறைந்தவராயிற்றே; இதற்காக ஒரு மனிதன் கோயிலுக்கு வர வேண்டுமா?

ஜோ: மற்றெதற்காக வருகிறார்கள்?

அர்: இரண்டு காரியத்திற்காகத்தானே கோயிலுக்கு வருகின்றார்கள்:

1) தன்னை பக்திமான் என்று பிறர் மதிக்க வேண்டும்.
2) அங்கு வரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும், ஆண்களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும், இரண்டாவது விஷயத்திற்குத்தான் அதிகம் பேர் வாலிபர்கள் சற்று ஷோக் பேர் வழிகள் சிறிது வயதானவர்களாயிருந்தாலும் சபலமுடையவர்கள் ஆகியவர்கள் வருவது. இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய் வராவிட்டால் குடும்பப் பெண்களும் வருவதில்லை. ஆக, இப்படிப்பட்ட இரண்டு கூட்டம் வந்தால்தானே காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு ஆகியவை கிடைக்கும். ஆகவே, நமக்குக் கோயிலில் மணியடிப்பதில் என்ன பிரயோசனம்?
கோயில் சம்பளமாகிய மாதம் 1-12-0 ரூபாய் சம்பளமா நமக்குக்கட்டும்?

ஜோ: அப்படியா சங்கதி, அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு கிடைக்காதோ?

அர்: என்ன வழி?

ஜோ: நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி, நன்றாய் அலங்கரித்து தினம் காலை, மாலையில் கோயிலுக்கு வரும்படி செய்தால் என்ன?

அர்: அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர்களுக்கு நகை, புடைவை, மினுக்கு கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறிமுகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய சவுகரியம் - வீடு, வாசல், கட்டில், படுக்கை முதலிய சவுகரியம் ஆகியவை வேண்டாமா? இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது?

நாம் ஏதோ தாசிகள் செல்வாக்கினால் கோயிலுக்கு வருகின்றவர்களில் ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து சரி பண்ணி, அதுவும் இரகசியம் என்றும் அவசரமென்றும் பயப்படுத்தி 10, 5 பெற்றுக் கொண்டு கஷ்டமில்லாமல் நஷ்டமில்லாமல் சம்பாதிப்பது நலமா? அப்படிக்கின்றி, நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா?

ஜோ: என்னமோ கஷ்டகாலம் உங்களுக்கு மாத்திரமல்ல; நமக்கும்கூடத்தான் வந்துவிட்டது.

அர்: உங்களுக்கு என்ன வந்தது?

ஜோ: இப்போது எந்தத் தேவடியா மகன் நம்மிடம் ஜோசியம் பார்க்க வருகிறான்?
பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்க்கின்ற வேலையே மிகவும் குறைந்து போய் விட்டது.


அர்
: ஏன்?

ஜோ
: ஏன் என்ன! அத்துகளே - பெண்ணும் மாப்பிள்ளையுமே பொருத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன.

அர்: இருந்தாலும் கிரகதோஷம் பார்க்கவாவது வருவார்களே?

ஜோ: அதாவது வந்தாலும் பரவாயில்லை. அதற்குத்தான் எங்கு வருகின்றார்கள்! திருட்டுத் தேவடியா பிள்ளைகள் காய்ச்சல் வந்தால் - தலைவலி வந்தால் உடனே டாக்டர்கள் இடம் போய் விடுகின்றார்கள். நம்மிடம் வருவதே இல்லை. நம்மைக் கண்டால் சிரிக்கின்றார்கள்; என்னடா என்று கேட்டால், சுயமரியாதையடா என்கின்றார்கள்.

அர்: சரி, இவ்வளவு ஆனதற்கப்புறம் எனக்கு ஒன்று தோன்றுகிறது.

ஜோ: என்ன?

அர்: நாமும் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி மெள்ள மெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது! எப்படி என்றால், இப்பொழுது எத்தனையோ தமிழ்ப் பண்டிதர்கள் அப்படித்தான்; அதாவது, நானும் சுயமரியாதைக்காரன் என்று சொல்லிக் கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கின்றார்களே அதுபோல்.

ஜோ: அது நல்லவழிதான். நம்முடைய பெரியவாள் பவுத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால், இந்த சு.ம. பயல்கள் (சுயமரியாதைக்காரர்கள்) இது தெரிந்து தான் பு.ம. பயல்களை (புராண மரியாதைக்காரர்களை) அதாவது, பிராமணர்களைச் சேர்ப்பதில்லை என்று தீர்மானித்து விட்டார்களே!

அர்
: அதுவும் அப்படியா! அப்படியானால் இந்தப்படி ஏழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் இந்த சு.ம.காரன்கள் நாசமாய் நிர்மூலமாய்ப் போகட்டும். நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவோம்.

-------------- சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது, குடிஅரசு 10.5.1931.