Search This Blog

1.9.09

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான நாளை இரயில் மறியல்-தடையை மீறிப் போராட்டம்!


ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான
நாளை இரயில் மறியல்: தடையை மீறிப் போராட்டம்!
தமிழர் தலைவர் அறிவிப்பு

ஈழத் தமிழர்களுக்காக திராவிடர் கழகம் நாளை நடத்தும் ரயில் மறியல் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தடையை மீறிப் போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ள அறிக்கை வருமாறு:

போர் முடிந்தும் ஈழத்தில் தமிழர்களின் துயரத்திற்கு முடிவில்லை என்ற பரிதாப நிலைதான் தொடர்கிறது. இன்றும் முள்வேலி முகாமுக்குள் மூன்று லட்சம் தமிழர்கள்; தமிழன் என்ற உணர்வால் மட்டுமல்ல மனிதாபிமானமுள்ளவர்கள் அனைவரும் துடிக்கின்றனர்.

ஆனால், கொடுங்கோலன் ராஜபக்சே மட்டும் ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தமிழன் என்ற அடையாளம் எந்த வகையிலும் மிச்ச சொச்சங்களின்றி அழிக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருவது வெளிப்படை.
இன்னொரு வேதனையான சேதி. இலங்கையின் மூத்த தமிழ்ப் பத்திரிகையாளரான ஜே.எஸ். திசைநாயகத்துக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையை கொழும்பு உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு என்ற ஏட்டில் கட்டுரை எழுதியதுதான் இவர் செய்த மிகப்பெரிய குற்றமாம். இதற்காக 20 ஆண்டு தண்டனையாம்!
என்ன கொடுமை இது! இவையெல்லாம் தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் _ பார்ப்பன ஊடகங்களின் கண்களுக்கு தெரியவே தெரியாதா? இதுவே பூணூல் திருமேனி என்றால் எப்படி நடந்து கொள்வார்கள்?


மத்திய அரசின் இறையாண்மையே இலங்கை அரசின் நடவடிக்கையால் கேள்விக்குறியாகியிருக்கிறது. இலங்கை ராஜபக்சே அரசு சீனாவுக்குத் தளம் தந்து, பாகிஸ்தானின் துணை கொண்டு சவால் விடும் நிலையில்கூட, மத்திய அரசு பொறுமை காட்டுவது வேதனைக்குரியதாகும்.

எனவே, எல்லாவற்றையும் உலகத்திற்குக் கொண்டு செல்லவும், ஆறு கோடி தமிழர்களின் முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று வலியுறுத்தவும் இந்த மறியல் போராட்டம்.

இந்த நிலையில், எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை காப்பாற்றிட, வாழ்வுரிமைக்கு உறுதிகிட்ட மத்திய அரசு நியாயமான முறையில் இலங்கை அரசுக்கு உண்மையான அழுத்தத்தைக் கொடுக்கச் செய்யவே நாளை திராவிடர் கழகம் நடத்தும் இரயில் மறியல் போராட்டம்!

தடையை மீறுவோம்!

எதிர்பார்த்தபடி காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. ஆனாலும், தடையை மீறி போராட்டம் நடக்கும்.

நாளை காலை 9 மணிக்கு கழகத் தோழர்களே, இன உணர்வு கொண்ட பெருமக்களே, பெரியார் திடலில் கூடுங்கள்! கூடுங்கள்!!

ஈழத் தமிழர்கள் படும் அவதிகளுக்கு முடிவு கட்ட போராடுவோம்! போராடுவோம்!! தொடர்ந்து போராடித்தான் தீரவேண்டும். இது நமது கடமை!

வாரீர்! வாரீர்!!

நாளை களத்தில் சந்திப்போம், வாரீர்!!!


------------------- "விடுதலை" 1.9.2009

அறிஞர் அண்ணா பார்வையில் கலைவாணர்(என்.எஸ்.கே.)





எல்லாரும் ஒரு தடவை கை தட்டுங்கோ.
தட்டமாட்டிங்களா? பரவாயில்லை!

வெறும் நகைச்சுவைப் பேச்சல்ல, அல்லது திரைப்படத்துக்காக மட்டுமே தீட்டப்பட்ட வாசகமல்ல. இது, நகைச்சுவை மன்னன், தோழர் என்.எஸ்.கிருஷ்ணனின் உள்ளத்தின் படப்பிடிப்பு; அவர் வாழ்க்கையிலே, கொண்டுள்ள வழிகாட்டி நண்பர்கள் புடை சூழ நகை குலுங்க, நாளெல்லாம் விழாவாகக் கொண்டாடி வாழ்ந்தவர். இன்று? விவரிக்க நமக்கு வேதனையாக இருக்கும். அவரோ, பரவாயில்லை என்ற பாணியிலேதான் இருப்பார். ஏனெனில், அது வெறும் வாசகமல்ல, அவருடைய உள்ளம்.

நகைச்சுவை, என்ற துறையைப் பலர் பலவிதத்திலே பலகாரியத்துக்குப் பயன்படுத்திப் பலவகையான பலனைப் பெற்றனர். இதுவரை ஒருவராவது நகைச்சுவையை, நாட்டு மக்களுக்கு நற்கருத்துகளைப் புகுத்தும் கருவியாக்கியதில்லை, அதன் பலனாக நடிகர் உலகில் நடுநாயக மணியாக மட்டுமல்ல, நாட்டுச் சிந்தனைச் சிற்பிகளின் முன்வரிசையிலே முக்கியமான இடமும் பெற்றதில்லை; அவரைப்போல, நம்மைச் சிரிக்க வைத்தவர்களுமில்லை; அவர் போல் வேறு யாரும் நம்மை இதுவரை அழவைத்தவர்களுமில்லை. அன்று தமிழகம் விட்ட கண்ணீர், ஊற்று நிலையை அடைந்துவிட்டது. தமிழகம், நடிகர்களைப் பாராட்டி இருக்கிறது, பழக்கமான மொழியில் கூறுவதென்றால், சொர்ணாபிஷேகம் செய்திருக்கிறது; ஆனால் நடிகருக்கு இடுக்கண் வந்தபோது கண்ணீர் சொரிந்தது இல்லை. கிருஷ்ணன் - பாகவதர் சம்பவத்தின் போதுதான், ஒரு பெருங்கூட்டம், கட்சி முதலிய கட்டுகளையும் தாண்டி கண்ணீர் விட்டது.

என்.எஸ்.கே. வெறும் நடிகர் மட்டுமல்லர், அவர் ஒரு சின்னமாக விளங்கினார். எங்ஙனம் பாரதிதாசன், கவிதை உலகிலே புரட்சி புகுந்துவிட்டது என்பதை எடுததுக்காட்டும் சின்னமானாரோ, அது போலவே நகைச்சுவைத் துறை என்பது நாட்டு மக்களைச் சிரிப்பு மூட்டும் வெறும் வெட்டிவேலை என்ற நிலையைவிட்டுக் கடந்து, நற்கருத்துக்களை மிக இலாவகமாகப் புகுத்தும் நிலை பிறந்துவிட்டது என்பதை விளக்கும் சின்னமாக என்.எஸ்.கே. விளங்கினார். சீர்திருத்தக் கருத்து எனும் சூரணத்தைத் தேனில் குழைத்துத் தந்தார் நாட்டு மக்களக்கு, அதனைத் தந்தது கூட, தாய் அன்புடன் தன் குழந்தைகளுக்கு மருந்தூட்டுவது போன்ற பக்குவமான முறையிலே!

கோணல் சேட்டைகள் செய்து மக்களைக் குலுங்கக் குலுங்க நகைக்கச் செய்தனர்; கண்ணுக்குமேலே சுண்ணம் பூசியும் வாய்சுற்றிச் சிகப்புச் சாயம் பூசிக்கொண்டும், வளைந்து நடந்தும், மக்களைப் பல நடிகர்கள், வயிறு வெடிக்கும்படிச் சிரிக்கச் செய்திருக்கின்றனர். வயிறு வெடிக்கும் படித்தான் அவர்களால் செய்ய முடிந்ததேயொழிய புதிய கருத்தைப் புகுத்த முடியல்லை.

வயிறுவலி தாங்க முடியவில்லையப்பா!

ஏன்?

நேற்றிரவு நாடகத்திலே, பபூன் பக்கிரி, செய்த காமிக், இருக்கிறதே, அடடா, ரொம்ப ஜோர்

என்ன செய்தான் பபூன்?

அடேயப்பா! எத்தனை சேஷ்டைகள் தெரியுமோ! அனுமார் வேஷக்காரன் வந்தான் ஸ்டேஜுக்கு; பபூன் பின்னோடு, அநுமன் வாலை தன் மூக்கில் திணித்துக்கொண்டு தும்ம ஆரம்பித்தான் - தும்மினான் பத்து நிமிஷம், கொட்டகையே அதிர்ந்து போய்விட்டது! ஜனங்கள் சிரித்துச் சிரித்து வயற்றுவலி வந்துவிட்டது. ரொம்பத் தமாஷ் செய்தான். நாய் போலக் குலைக்கிறான், அப்படியே அசல் நாய் போலேயே இருந்தது

இவ்வளவுதான், மக்கள் தாம் கண்ட காமிக்கைப்பற்றிப் பேச முடிந்தது, என்.எஸ்.கே.யின், வருகைக்கு முன்பு. அவர் வந்ததும், அந்தத் துறையிலே, இருக்கும் அற்புதமான ஆற்றலை மக்கள் உணர முடிந்தது. அவர்கள் சிரித்து விட்டு, மறந்துவிடக்கூடியதாக இல்லை, சிரித்துவிட்டு, அத்துடன் சில புதிய கருத்துக்களையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றார்கள்!

சின்ன வயதிலே கன்னித்தமிழிலே
சொன்னான் ஒரு பாட்டு
என்று போடுறாயே வேட்டு
கல்விகற்றுத் தேறா முன்னம்
கவி எழுதிட வருமா?
கட்டுக் கதைகளை விட்டுத் தள்ளடா
குட்டு வெளிப்படுமே
!

என்று பூம்பாவையில் கிருஷ்ணன் பாடினார்; நாம் கேட்டோம், சிரித்தோம்; சிரித்ததோடு நின்றுவிடவில்லை, சிந்தித்தோம், உண்மைதானே, கல்வி கற்றுத் தேறா முன்னம் கவி எழுதிட வருமா? என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டோம், முடியாது! என்று நமக்கு அறிவு கூறுகிறது உடனே, மறு நிமிடம், சரியான கேள்வி கேட்டானப்பா1! என்று வாய்விட்டுக் கூறுகிறோம் நம்மையும் அறியாமல்; மறுபடியும் ஒரு முறை சிரிக்கிறோம்! உண்ணும் போது சுவை தரும் பண்டம் பல உண்டான பிறகு, நெடுநேரம் வரையிலே, உமிழ் நீர் உள்ளே செல்லும் போதெல்லாம், சுவைதரும் பண்டம் சில! அத்தகைய நகைச்சுவையை நாட்டு மக்களுக்குத் தந்தார் கிருஷணன். நாட்டுமக்களின் நிலைமை உயர் ஜாதிக்காரரின் உளப்போக்கு, தொழிலாளியின் துயரம், ஜாதி பேதத்தால் உண்டாகும் மனப்போக்கு, இவைகளை விளக்கினார். புனிதமான கொள்கைகள் என்று மக்கள் கருதும்பல எண்ணங்கள், வெறும் புரட்டு அல்லது பொருளற்றவை என்பன போன்ற பலப்பல புத்துலக அமைப்புக்கான கருத்துக்களை நகைச்சுவையுடன் கலந்தூட்டிய நற்காரியத்தை, வெறும் கோமாளிச் சேட்டைக்கு மட்டுமே பயன்பட்டுவந்த, நசைச்சுவை நடிப்புத்துறை மூலம், நாட்டுக்குச் செய்துவந்தார். நகைச்சுவைத் துறையை இத்தகைய சீர்திருத்த மேடையாக்கி நடிகர்கள், இங்கு இதுவரை தோன்றினதில்லை, மேனாட்டுக்காமிக் நடிகர்களிலேகூட, ஹெரால்ட் லாயிட், பஸ்டர் கீடன், லாரல் அண்டு ஹார்டி, ராபர்ட் உல்சி, போன்ற புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர்கள் கூட, வெறும் பொழுதுபோக்குக்கான விளையாட்டுகளைக் காட்டுபவராயினரே தவிற, போதனை செய்பவர்களாகவில்லை. ஓரளவுக்கு, சார்லி சாப்ளின், சிற்சில படங்களில், சிறப்பாக சிடிலைட் போன்ற படத்திலே கருத்துகளைத் தருவதற்குக் காமிக் துறையைப் பயன்படுத்தினார் மற்றவர்கள், பெண்ணென்று எண்ணி ஆணை முத்தமிடுவது, வழுக்கி விழுவது, சாமர்த்தியமாக எதிரியை ஏய்த்துவிடுவது போன்ற காமிக்குகளைச் செய்தவர்களே தவிற, என்.எஸ்.கே. வைப் போல, ஆணும் பெண்ணும் ஒண்ணு அதை அறியாதவன் மூளை அது களிமண்ணு என்று காரமருந்தை இனிப்புப் பூச்சுடன் கலந்து, நாமாக வாங்கி அதனை ஒன்றுக்குப் பத்தாக உள்ளே போட்டுக் கொள்ளக் கூடிய விதத்திலே நகைச்சுவை நடிப்பைச் செய்ததில்லை. தமிழகத்திலே மட்டுமல்ல இந்தியாவிலேயே இந்த நகைச்சுவைத் துறையை இதமாகச் சீர்திருத்தம் புகுத்தும் கருவியாக்கிய காமிக் நடிகர் வேறு கிடையாது என்பது விளங்கும். கணக்கெடுத்து அந்த அளவைக் கூற முடியாதே தவிர, அவருடைய காமிக் கண்டதன் மூலம் புதிய, சீர்திருத்தக் கருத்துகளை ஒப்புக் கொண்டவர்களின் தொகை ஒரு மேடைப் பிரசங்கியின் பிரசாரத்தால் திருந்தியவர்களின் தொகையைவிட அதிகம் என்று தைரியமாகக் கூறலாம். சீர்திருத்தக் கருத்துகளை கண்டன ஒருவிலே காட்டாமல், வேடிக்கைப் பேச்சின் மூலம் புகுத்திய முதல் நடிகர் என்பதால், நாட்டைப் பண்படுத்தப் பாடுபட்ட, கவிஞர்கள், பேச்சாளர், எழுத்தாளர், ஆகியோரின் வரிசையிலே, என்.எஸ்.கே. நடிகரும் நிச்சயமாக இடம் பெறுகிறார். கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர்கள் ஆகியோரின் பணியினால் விளைந்த பலன்போலும் பெறும் பயன் விளைந்திருக்கிறது என்பதை நாடு இன்று ஏற்றுக்கொள்ள மறுக்கலாம், ஆனால் உண்மையான எடைபோடும் நாள் வரும்போது, நாடு, இந்தத் தொண்டின் மதிப்பைச் சரியாகக் குறித்தே தீரும். இன்றுங்கூட எங்காவது நாம் குளத்தங்கரைப் பக்கம் போனால், அங்கு யாராவது வைதிகப் பிராமணர் சந்தியாவந்தனத்திலே ஈடுபட்ட வண்ணம், சுற்று முற்றம் பார்த்தால், உத்தமபுத்திரன் கவனத்துக்கு வராமற் போகாது!

நன்னா இருக்கா! அழகா! இலக்ஷணமா, பிராமணப் பெண் போலவே இருக்கா! என்று கிருஷ்ணன் கூறுவது நம் செவியிலே விழுவது கூடக் கேட்கிறதல்லவா! அசல் அய்யங்கார் விட்டு அம்மா போல மதுரம் நிற்பதும் பேந்தப் பேந்த விழிக்கும், ஆத்துக்காரரைப் பார்த்து அரிஜன சேவை செய்கிறீரோ, அரிஜன சேவை என்று இடித்துக் கூறுவதுமான காட்சி தெரிகிறதல்லவா! வெறும் நகைச் சுவையா அது! நாட்டு நிலையின் படிப்பிடிப்பு அல்லவா! சிரித்துவிட்டு மறந்து விடமட்டுமா அவருடைய நடிப்பு பயன் பட்டது? நமது நெஞ்சிலே இடம்பெற்று விட்டதே!
ஜாதிச் சிக்கலைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், எப்படி நாம் சாலிவாகனனை மறக்கமுடியும்.

உப்பு கரிக்கிறது
மிளகா உரைக்கிறது
தண்ணீர் குடித்தால் நெஞ்சு அடைக்கவில்லை,
சந்தேகமிருந்தா சாப்பிட்டுப்
பாருங்கோ, சமையல் ரெடியாக இருக்கு


என்று அந்தப் படத்திலே, பாடத்தை எவ்வளவு பக்குவமாகப் புகுத்துகிறார். எப்படி இதனை வெறும், நகைச்சுவை என்று கருதமுடியும்! பட்டாளியின் துயரைப் படம்பிடித்துக் காட்டும், பண்பு, அவர் நடித்த சகுந்தலையில் பார்க்கலாம்.

ஐயா! ஆத்திலே நாங்க
ஆத்தி தூண்டி போட்டு
அதிலே ரெண்டுமீன் கிடைச்சா
அரைவயத்துக் கஞ்சிக்காகும் கடவுளே
குடும்பம், ஆளாப்பறக்குதடா கடவுளே


என்ற பாடலை என்.எஸ்.கே. பாடிக்கேட்டிருக்கிறீர்கள். அப்பாடலில், எவ்வளவு உருக்கமாக, பரதவர்குல மக்களின் பரிதாபகரமான வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டுகிறார்! பரிதாப நிலைமை பாடலுடன் தோய்ந்து வருகிறது, நமது மனதைவிட்டு அதனைப் பெயர்த்தெடுக்க முடியாத நிலைமையில், இடம் பெற்று விடுகிறது. எந்தப் படத்திலும், ஏதாவதொரு, புதிய முற்போக்கான கருத்தைப் புகுத்திப் பணிபுரிய அவர் தவறியதில்லை. மூலக்கதை புரணமாக இருப்பினும் சரியே முடிந்தமட்டும், நமது தொண்டு அதிலே இடம் பெறச் செய்துவடுகிறார் திறமையாக; சுவை துளியும் கெடாத விதத்திலே.

நகைச்சுவைத் துறையின் மூலம் நாட்டு மக்களுக்கு நற்கருத்தைப் புகுத்திய வெற்றிகரமான பணி அவருடைய 'கிந்தனார்'. அதிலே கிண்டல் அல்ல, பாடம் அருமையாக இருக்கக் காணலாம். கல்வித் துறையிலே பழங்குடி மக்கள் முன்னேறினால், ஜாதிச்சனியனின் பிடியிலிருந்து விடுபடலாம் என்ற கருத்தை கிருஷ்ண பாகவதராகி, கிந்தனாரில் கூறினார். கதைமட்டும் அல்ல நாடுகேட்டது; கருத்தையும் உட்கொண்டுவிட்டது. சிறைவாசம் ஏற்பட்டிராவிட்டால், நாடு இன்று அவருடைய கீலகண்டர் மூலம், புத்துலக ஆக்கத்துககான புரட்சிக்ருத்துக்களைக் கேட்டு இன்புற்றுப் பயனும் பெற்றிருக்கக் கூடும்.

பண்டாரப்பரங்கன் வேஷம் பறந்து போச்சுதுபார், தெண்டாயுதபாணி, பரங்கிரி செந்தூர், பழனி, திருப்பதி பண்டாரப்பரங்கள் வேஷம் பறந்து போச்சுது பார் என்ற பாடலைக்கட்டு இரட்சித்து அந்த ரசனையுடனேயே புரட்சிக்கருத்தையும் உட்கொண்டிருக்க முடியும் நாம் அனைவரும்.

இவ்விதமாக, யாரும் இதற்குமுன் கையாளாத முறையை, நெடுங்காலமாக இருந்துவரும் நகைச்சுவைத் துறையில் புகுத்தி வெற்றி கண்டதுடன், அந்த வெற்றியின் மூலமாகவே, நாட்டுக்கு நற்கருத்துக்களைப் புகுத்தும் நற்றொண்டு புரிந்து, புரட்சிப் பரப்பிய பெருமக்கள் வரிசையிலே அவர் இடம் பெற்றார் என்பது மட்டுமல்ல, அந்த முறையைப் பின்பற்றித்தீர வேண்டிய நிலைமையை நடிகர் உலகிலே உண்டாக்கிவிட்ட காரணத்தால் அந்த நற்காரியத்துக்கு பலர் முன்வரவும் செய்துவிட்டார். அதாவது ஓர் சூழ்நிலை உண்டாக்கிவிட்டார். நகைச்சுவைத் துறையிலே அவர் ஆற்றிய அரும் பணிக்கு எதையாவது ஈடாகக் கூற வேண்டுமானால், புரட்சிக்கு முன்பு, பிரன்சிலும், ரஷியாவிலும், கவிஞர்கள், எழுத்தாளர், பிரசங்கிகள் நடிகர்கள் ஆகியோர், உண்டாக்கிவைத்த சூழ்நிலையைத் தான் குறிப்பிட முடியும். இந்த அரும்பணியினை அவர் திறம்பட ஆற்ற உறுதுணையாக இருந்து வந்தவர் கொங்கு நாட்டுக் கவிஞர் உடுமலை நாராயணக்கவி. அவரும், இந்த அரும்பணியில் சரிபங்கு கொண்டு பணியாற்றிய மதுரம் அம்மையாரும் மட்டுமல்ல, நாமும் நாட்டிலே நற்கருத்து பரவ வேண்டுமென்ற ஆர்வத்தால் தூண்டப்பட்ட இலட்சக்கணக்கான மக்களும், நகைச்சுவை மன்னர், மீண்டும் நாட்டுக்கு நகைச்சுவைத் துறை மூலம் பணிபுரிய வேண்டுமென்பதற்காக, அவரை என்று நம்மிடை பெறுவோம் என்று ஏக்கமுற்று
இருக்கிறோம்.


--------------------------அறிஞர் அண்ணா - திராவிடநாடு - 17.11.1946

விநாயகன் ஊர்வலமா? குடிகாரர்களின் கும்மாளமா ?


பக்தியின் யோக்கியதையைப் பாரீர்!
விநாயகன் ஊர்வலமா? குடிகாரர்களின் கும்மாளமா ?
பிள்ளையாருக்குப் பீர் அபிஷேகம்- வெட்கக்கேடு


விநாயகன் சிலையை கடலில் கரைக்கச் சென்ற பக்தர்கள் குடித்துவிட்டு சாலையில் கலாட்டா செய்தனர். காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

விநாயகன் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை.

விநாயகன் பெயரில் பக்த கோடிகள் நடத்திய களேபரங்கள் சில........... சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில், தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள்.

சென்னையை அடுத்த கல்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை, கல்பாக்கம் கடலில் கரைக்க, பக்தர்களுக்கு காவல்துறையினர் ஒரு பாதையை வகுத்து கொடுத்து இருந்தனர். நேற்று மாலை, இந்து அமைப்பினர்,காவல்துறையினர் வகுத்து கொடுத்த பாதையை தவிர்த்து, இ.சி.ஆர். சாலையில் புதுப்பட்டினம் மசூதி வழியாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து, அனுமதிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், இந்து அமைப்பினர், காவல்துறையினர் வகுத்த பாதையில் செல்ல மறுத்தனர். இதனால் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர் காவல்துறையினர் மீது கற்களை வீசியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். விநாயகன் சிலைகளை அங்கேயே போட்டு விட்டு, ஊர்வலத்தினர் கலைந்து ஓடி விட்டனர். பின்னர் இ.சி.ஆர். ரோட்டில் கிடந்த விநாயகன் சிலைகளை, காவல்துறையினர் சேகரித்து, கல்பாக்கம் கொண்டு சென்று, அங்கு கடலில் கரைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, புதுப்பட்டினத்தில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் மூடப்பட்டன. பதட்டமான நிலை காணப்பட்டது. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், புதுபபட்டினம் பேருந்து நிலையம் அருகே சிலர், ஒரு விநாயகன் சிலையை கொண்டு வந்து வைத்தனர். உடனே காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று, அவர்களை விரட்டி அடித்தனர். பின்னர் அந்த சிலையை கடலுக்கு கொண்டு சென்று கரைத்தனர். இது பற்றிய தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் சின்கா, துணை காவல்துறை கண்காணிப்பளர் சம்பந்த மூர்த்தி ஆகியோர், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த பகுதியில் சம்பவம் தொடர்பாக சிலரை தேடி வருகிறார்கள். விக்னம் இல்லாமல் காப்பாற்றும் கடவுளின் சக்தி இதுதானா?

விநாயகன் சிலை ஊர்வல வாகனங்கள் கவிழ்ந்தன

பட்டாமிராமில் இருந்து சிறிய ரக வாகனம் ஒன்றில் விநாயகன் சிலை ஒன்றை ஊர்வலமாக எடுத்து வந்தார்கள். சென்னை மாநில காவல் துறை தலைமை அலுவலகம் அருகே வரும்போது இந்த வாகனம் திடீரென்று கவிழ்ந்து விட்டது. அதில் இருந்த சிலையும் சரிந்து விட்டது. பின்னர் சிலையை தூக்கி வேறு வாகனத்தில் வைத்து எடுத்து சென்று கடலில் கரைத்தனர்.இந்த சம்பவத்தில் சிலை கொண்டு வந்த வாகனத்தில் பயணம் செய்த 5 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை அயனாவரத்தில் இருந்து வந்த சிலை ஏற்றி வந்த வாகனம் ஒன்று முத்துசாமி பாலம் அருகே கவிழ்ந்து விட்டது. இதில் சிலை லேசாக சேதம் அடைந்தது. சேதம் அடைந்த சிலையை வேறு வாகனத்தில் எடுத்து சென்று கடலில் கரைத்தனர். ராஜரத்தினம் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டையிலிருந்து ஆட்டோ ஒன்றில் விநாயகன் சிலை ஒன்றை 3 பேர் எடுத்து வந்தனர். மெரினா கண்ணகி சிலை அருகே வரும்போது இந்த ஆட்டோ மற்றொரு வாகனத்துடன் மோதி கவிழ்ந்தது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 3 பேரும் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

------------------------"விடுதலை" 31-8-2009

ஈழப் பிரச்சினையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானவையல்ல!


வரிப்புலியாய்
வாருங்கள்! வாருங்கள்!!


தோழர்களே, தோழர்களே!

பல்வேறு நாடுகளின் இராணுவப் பலத்தோடு ராஜபக்சே தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசு பல லட்சம் தமிழர்களை ஈழத்தில் கொன்று குவித்துவிட்டது; போராளிகளையும் அழித்துவிட்டது. ஆனாலும் அதன் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை போலும்.

மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் முடக்கி, ஒவ்வொரு நொடியும் அவர்கள் படும் துயரத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே.
அந்நாட்டுத் தலைமை நீதிபதியே இது அக்கிரமம், அக்கிரமம், அநியாயம் என்று ஆர்ப்பரித்திருக்கிறார்.


காலந்தாழ்ந்தாலும் அய்.நா.வும் எச்சரித்துள்ளது; மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துக் கொண்டுள்ளன. அமெரிக்காவும் இங்கிலாந்தும் எடுத்துக் கூறி வருகின்றன. எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருக்கிறார் இந்த ராஜபக்சே. எண்ணூறு இடி அமீன்களாகவும், எண்ணாயிரம் இட்லர்களாகவும் காட்சி அளிக்கிறார்.
போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்ற குரலும் அழுத்தமாக ஆங்காங்கே கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

இதற்கிடையே இங்கிலாந்து தொலைக் காட்சி ஒன்று (சானல்_4) ஈழத்தில் எத்தகைய காட்டு விலங்காண்டித்தனமாக போராளிகளும், தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டனர் என்கிற காட்சிகளைத் திரையிட்டு உலகம் பூராவும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகாமில் முடங்கிக் கிடக்கும் மூன்று லட்சம் தமிழர்களுக்கு வெளிநாடுகள் அளிக்கும் பொருள்களைக் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்திட மனம் வரவில்லை அந்த மயான மனிதருக்கு.
இதற்குமேல் துயரப்படுவதற்கு ஏதும் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் நமது தொப்புள் கொடி உறவினர்.

இந்த நிலையில்தான் - நம்முடைய முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு வேண்டு கோள் விடுத்தார். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானவையல்ல என்று மனந்திறந்து கூறியிருக்கிறார்.
முதல்வரின் ஆதங்கத்தை மத்திய அரசு புரிந்து கொள்ளுமா? செயல்படுமா?

தமிழர்களே, தமிழர்களே, தாய் நாட்டுத் தமிழர்களே! நாம் இந்தக் கால கட்டத்தில் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு கண்டும் காணாமல் இருப்பதை விட துரோகம் வேறு ஒன்று இருக்க முடியுமா?

நம் ரத்தத்தின் ரத்தங்களுக்காக நாம் குரல் கொடுக்காவிட்டால், வீதியில் இறங்கிப் போராடா விட்டால், வேறு யார் அவர்களுக்கு? இதனைச் செய்யாவிட்டால் நாம்தான் யார்?
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கல்லக்குறிச்சி பொதுக் கூட்டத்தில் (29.8.2009) அறிவித்துவிட்டார் நேற்று (30.8.2009) விடுதலையிலும் அறிக்கை கொடுத்துவிட்டார்.

திரளுங்கள்! திரளுங்கள்! செப்டம்பர் 2 ஆம் தேதி கழகம் அறிவித்துள்ள ரயில் மறியலில் ஆயிரக்கணக்கில் ஈடுபடுங்கள்! ஈடுபடுங்கள்!

எத்தனை எத்தனையோ போராட்டங்களை, எழுச்சிப் பேரணிகளை, மாநாடுகளை, ஈழத் தமிழர்களுக்காக நடத்திய வீரஞ்செறிந்த தன்மான வரலாறு திராவிடர் கழகத்திற்கு உண்டு.
சென்ற ஆண்டு செப்டம்பர் 23 இல் இதே ரயில் மறியலில் ஈடுபட்டோம். இந்த செப்டம்பரிலும் அந்தச் செயலையே செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

புறப்படுங்கள் புறப்படுங்கள்!
புலிப்போத்தாய் புறப்படுங்கள்!
இளைஞர்களே, இளைஞர்களே
எரியீட்டியாய் கிளம்புங்கள்!
எங்கிருந்து வந்தது இந்தச் சேனை என்று
எதிரிகளே கலங்கும் வகையில்
கருஞ்சட்டைச் சிறுத்தைகளே
கிளர்ந்து எழுங்கள்! எழுங்கள்!

செப்டம்பர் 2 ஆம் தேதி ஒன்பது மணிக்கெல்லாம் சென்னை பெரியார் திடலில் கூடுங்கள், கூடுங்கள்!

தமழர் தலைவர் தலைமையில் அணி வகுப்போம்! அணிவகுப்போம்!

அனுமதி கிடைக்காது. தடை உத்தரவு போடப்படும். ஆனாலும் நமது கடமையை முடிக்க களம் காணுவதை எந்த ஆணையும் நம்மைத் தடுத்திட முடியாது.

வாருங்கள்! வாருங்கள்!! வரலாற்றுக் கடமையை ஆற்றிட வரிப்புலியாய்ப் பாய்ந்து_ வாருங்கள்! வாருங்கள்!!

---------------------"விடுதலை" 31-8-2009

பக்தி ஒரு வியாபாரம்; ஃபேஷன் என்று சங்கராச்சாரியார்கள்வரை ஒப்புக்கொள்ளும் நிலை !


கைப்பேசி கடவுள்!


மத்தியப் பிரதேசம் இந்தூரில் சிந்தாமணி கோயில் ஒன்று இருக்கிறது. அது 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம்.

இந்தக் கோயிலுக்குள்ள சிறப்பு என்னவாம்? நேரில் பகவானைத் தரிசிக்கத் தேவையில்லையாம். கடிதம் எழுதிப் போட்டால் போதுமாம். 40 ஆண்டுகளுக்குமுன் ஒரு பக்தர் கோயிலில் உள்ள சாமியின் முகவரியிட்டு அஞ்சல் அட்டை எழுதினாராம். தன்னால் நேரில் வர இயலவில்லை; அருள்கூர்ந்து என் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று அதில் எழுதப்பட்டிருந்ததாம்.

சாமி என்ன செய்யும்? அதுவா கடிதத்தை வாங்கும்_ வாங்கிய கடிதத்தைப் படிக்கும். அதுதான் ஒரு தற்குறியாயிற்றே _ பிடித்து வைத்த பொம்மையாயிற்றே?

அந்தக் கடிதத்தை பூசாரி பகவானின் காலடியில் வைத்தாராம்; என்ன ஆச்சரியம் விட்டலாச்சாரியா பாணியில் _ கடிதம் எழுதியவரின் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறினவாம்.

அதோடு கோயில் தர்மகர்த்தாக்கள் விட்டுவிடுவார்களா? கோயிலுக்கு ஒரு மகாத்மியத்தை உண்டாக்கவேண்டாமா? அதுதானே அவர்களின் நோக்கம்? இந்தச் சேதியைப் பரவவிட்டார்கள். பக்தர்கள் கடிதங்களை எழுத ஆரம்பித்தனர்.

அஞ்சலட்டையெல்லாம் எந்தக் காலம்? கம்ப்யூட்டர் யுகத்தில், ஆளுக்கு ஆள் கைப்பேசி வைத்துள்ள காலச் சூழலில், காலத்திற்கேற்ற கோலம் கைப்பேசியில் கடவுளிடம் பேச ஆரம்பித்தார்களாம்; கடவுள் என்றால் வேறு யாரும் இல்லை. கோயில் அர்ச்சகர்தான். சாமியாரின் பாதத்தில் கைப்பேசியை வைத்துவிடுவாராம்.

ஒவ்வொரு தடவையும் பக்தர்கள் பேசும்போதெல்லாம் அதே கைப்பேசியைக் கொண்டு போய் வைப்பாரா? ஒவ்வொரு முறையும் பேசும்போதும் வெவ்வேறு கைப்பேசிகளை வைப்பாரா என்று தகவல் இல்லை.

பக்தி ஒரு வியாபாரம்; ஃபேஷன் என்று சங்கராச்சாரியார்கள்வரை ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடவுள்தான் சர்வசக்தி வாய்ந்தவர் ஆயிற்றே _ உண்மையான பக்தன் யார்? போலிப் பக்தன் யார்? என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றல் அவருக்குக் கிடையாதா?


அவனுடைய தேவை என்பதைத் தெரிந்துகொள்ளும் சக்தி கிடையாதா?

இதை ஒப்புக்கொண்டுவிட்டால் பெரிய ஆபத்து இருக்கிறது மதவாத உலகத்திற்கு? கடவுளுக்கு எல்லாம் தெரியும் அதற்காக எந்தவிதமான பிரத்யேக ஏற்பாடுகள் தேவையில்லை என்று சொல்லிவிட்டால், கோயிலுக்கு வேலையில்லை; அதற்குள் கடவுள் சிலைகள் தேவையில்லை; பூஜை புனஷ்காரங்கள், காணிக்கைகள் என்ற பிரச்சினைக்கே இடமில்லை. அதைவிட முக்கியம் அர்ச்சகனுக்கும் வேலையில்லை.

பிழைப்புப் போய்விடுமே _ மத வியாபாரம் நடக்கவேண்டாமா?

நாளடைவில் என்ன ஆகும்? கடவுள் என்ற ஒன்றையே மக்கள் மறந்துவிடுவார்கள். அதனால்தான் இந்த எத்துவேலைகள் எல்லாம்; புரிகிறதா?

-------------- மயிலாடன் அவர்கள் 31-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை