மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துவிட்டது. இதனையடுத்து, 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆடிப்பெருக்கை முன்னிட்டும், டெல்டா பகுதி விவசாயிகளின் பாசன வசதிக்காகவும் அணையைத் திறந்து தண்ணீர் விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பக்தர்கள் சிலர் மேட்டூர் அணை நிரம்பவேண்டும் என்ற வேண்டுதலுடன் சிறப்பு யாகமும், பூஜையும் நடத்தி இருக்கிறார்கள்.
யாகத்தால் பூஜையால் மழை பெய்யுமா? ஆற்றிலே வெள்ளம் பெருக்கெடுக்குமா? மேட்டூர் அணை நிரம்புமா?
கர்நாடக மாநிலத்தில் கனத்த மழை பெய்து, அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்தால் கர்நாடகம் அந்த அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும். அப்படித் தண்ணீர் திறந்துவிட்டால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் உயரும்; டெல்டா விவசாயிகளுக்குப் பாசனத்திற்குத் தண்ணீரும் கிடைக்கும் மற்றபடி,
யாகத்தாலும் பூஜையாலுமே மேட்டூர் அணையை தண்ணீரால் நிரப்பிவிட முடியும்; காவிரியில் வெள்ளத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்துவிடமுடியும் என்றால் -
காவிரிப் பிரச்சினை என்று ஒன்று ஏது? கர்நாடக அரசோடு நமக்கு வாதாடல் - வழக்காடல் எல்லாம் எது? ஒன்றுமிருக்காதே!
இதுவெல்லாம் சிறப்பு யாகம், பூஜை நடத்திய பக்தர்களுக்குத் தெரியாதா? தெரியும்! என்றாலும் யாகத்தால், பூஜையால் மழை பெய்யும் அணை நிரம்பும் என்று ஓர் ஆவலாதிதான்; வேறென்ன?
இவர்கள் பரவாயில்லை என்பது போல, மழை பெய்யவேண்டும் என்று வேண்டி, பிகாரில் - ஒரு கிராமத்தில் கன்னிப் பெண்களை நிர்வாணமாக வயல்களில் ஏர் உழச் செய்திருக்கிறார்கள்! அப்படிச் செய்வதால் மட்டும் மழை பெய்துவிடுமா? அதுவும் ஓர் ஆவலாதிதான்!
-------------------------நன்றி: முரசொலி, 28.7.2009
Search This Blog
29.7.09
ஜாதி சாகிறது -மனிதன் பிழைக்கிறான் எப்படி?
தாய் தந்தையரிடத்திலே நன்றி பாசம் காட்டக்கூடிய உணர்ச்சி பிள்ளைகளிடம் உண்டா?
சமூக அவல நிலையைப் படம் பிடித்து தமிழர் தலைவர் விளக்கம்
தாய், தந்தையரிடத்திலே நன்றி காட்டக் கூடிய பாச உணர்ச்சி இன்றைக்குக் குடும்பங்களிலே உண்டா? என்ற கேள்வியை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுப்பினார்.
புதுச்சேரியில் 7.7.2009 அன்று நடைபெற்ற காஸ்மாஸ் ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
நாம் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அந்தப் பணம் நமக்காக மட்டுமல்ல; பணத்தை நமக்கு மட்டுமே வைத்திருந்தால் என்ன ஆகும்? கவலைதானிருக்கும். தன்பெண்டு, தன்பிள்ளை, என்று ஒரு குறுகிய வட்டத்திலே நிற்கக் கூடாது. தொல்லுலக மக்கள் எல்லாம் நம்மக்கள் என்று சொல்லி எங்கே சங்கடப்படுகிறார்களோ அவர்களுடைய துயரத்தைப் போக்க வேண்டும்.
நான் அடிக்கடி இது போன்ற அமைப்புகளில் பேசும்பொழுது ஒரு கருத்தை வலியுறுத்து-வதுண்டு. உங்களிலே மிகப் பெரும்பாலோர் அறிவீர்கள். நாம் ஒருவரைப் பார்த்து இரங்குவது என்பது வேறு. ஆனால் அவர்களுடைய நிலையிலேயே நம்மை ஆளாக்கிக் கொள்வது, தக்கவைத்துக்கொள்வது என்பது வேறு.
சிம்பதி- எம்பதி
உதவி செய்வதிலே கூட இந்த இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. சிம்பதி என்று சொல்லும்பொழுது அதற்கு என்ன பொருள்? நாம் அவரைப் பார்த்து பரிதாபப்படுகிறோம் என்று அர்த்தம், அதற்குப் பெயர் சிம்பதி.
ஆனால், அதைவிட சிறந்த சொல் ஒன்று உண்டு. ஆங்கிலத்திலே எம்பதி என்ற சொல். சிம்பதி என்ற சொல்லுக்கும் எம்பதி என்ற சொல்லுக்கும் என்ன வேறுபாடு என்றால், சிம்பதி என்பது வெறும் இரங்குதல். பரிதாபப்படுதல் அய்யோ அவர் இப்படி இருக்கிறாரே என்று நினைப்பது, அது ஓரளவு தான். ஆனால், எம்பதி என்ற சொல் இருக்கிறதே துன்பப்பட்டவர் இடத்தில் அவராகவே மாறி, அவரிடத்தில் இருந்து நம்மை வைத்துப் பார்ப்பது.
தன்நோய்போல் போற்றாக்கடை
அறிவினால் ஆகுவதுண்டோ பிரிதின் நோய் தன்நோய் போல் போற்றாக்கடை
என்று வள்ளுவர் சொன்னார். நாம் அந்த இடத்திலே இருந்தால் நமக்கு அப்படி ஏற்பட்டி-ருந்தால், என்ன ஆகியிருக்கும்? ஆகவே நாம் உதவ வேண்டாமா? என்று நினைக்கின்ற பொழுது தான் அவன் உயர்ந்த மனிதனாகிறான். சிறந்த மனிதனாகிறான். எப்பொழுதும் மற்றவர்களாலே மதிக்கக் கூடிய மனிதன் ஆகின்றான்.
அதைத்தான் உங்களிடத்திலே வலியுறுத்திடக் கடமைப் பட்டிருக்கின்றோம். ஒரே ஒரு கருத்தை உங்களுக்கு வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
எதை வைத்து மனிதனை அளக்க வேண்டும்?
மனிதர்கள் எதை வைத்து அளக்கப்பட வேண்டும் என்று சொன்னால், பணத்தால் அல்ல; அல்லது பட்டத்தால் அல்ல; அல்லது அவர்களுடைய பெருமைகளால் அல்ல. அவர்களுடைய தொண்டினால் மனிதர்கள் அளக்கப்பட வேண்டும். தெண்டினால் அவர்கள் எவ்வளவு உயர்ந்திருக்கிறார்களோ, அந்த அளவிற்குத் தான் அவர்கள் சிறந்த மனிதர்கள். மாமனிதர்களாக இருக்க முடியும்.
புகழ்வேட்டை என்பது வரக்கூடாது. புகழ்தானே இவரை அடையாளம் கண்டு வரவேண்டுமே தவிர, புகழை நோக்கி நாம் போகக் கூடாது. அந்த வகையிலே ஒரு கருத்து மனிதனுக்கும், மிருகத்திற்கும் இருக்கின்ற வேறுபாடு என்ன? என்பதை சொல்லுகிற நேரத்தில் தத்துவரீதியாக ஒரு கருத்தை தந்தை பெரியார் அவர்கள் சொல்லுகின்றார்.
மனித குலம் பெற்ற பயன் என்ன?
மாமனிதர்கள் நிறைந்திருக்கின்ற மன்றம் இந்த மன்றம். எல்லோருக்கும் பகுத்தறிவு இருக்கிறது. ஆறாவது அறிவு இருக்கிறது. வளர்ச்சி மனிதனுக்கு ஓங்கிக்கொண்டேயிருக்கிறது.
நேற்றைய விஞ்ஞானம் இன்றைக்குப் பழையதாகப் போய்விட்டது. இன்றைக்கு மின்னணுவியல் யுகம். எனவே தான் இதை எல்லாம் நினைத்துப் பார்க்கிற பொழுது இந்த வளர்ச்சியினாலே மனித குலம் பெற்ற பயன் என்ன? முன்னேற்றம் என்ன? ஆக்கரீதியான பயன் என்ன? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
மனித சுபாவம் என்னவென்று பார்த்தால், ஜீவன்களுக்கு இல்லாத சுபாவமுள்ளவனாக இருக்கின்றான்.
நாய்க்கு நன்றி உண்டு
நாய்க்காகிலும் நன்றி விசுவாசமென்பது மிகவும் உண்டு. நன்றியைக் கொஞ்சம் கூட மறக்காமல் நாய்தன் எஜமானனிடம் விசுவாசத்துடன் இருக்கும் தன் எஜமானன் தன்னை விட்டு வெளியே சென்று விட்டு வந்த பிறகும் தன் நன்றியின் அறிகுறியாக எட்டித்தாவி வாலை ஆட்டிக் கொண்டு துள்ளிக்குதித்து, மேலே விழுந்து விளையாடுவதற்கு முயற்சிக்கும். மனிதனோ நாயைப் போல நன்றி விசுவாசம் உடையவன் அல்லன்.
நன்றி காட்டுவது என்பது அரிதிலும் அரிது. அதிலும் பிள்ளைகளை நாம் இப்பொழுது நிறைய படிக்க வைக்கின்றோம். ஒரு சிறிய உதாரணம் உங்களுக்குச் சொல்லுகின்றேன். ஒருவர் பெரிய வீடு கட்டினார். வீடு திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ்களை எல்லாம் கொடுத்தார். பெரிய உத்தியோகத்தில் இருக்கிறவர். தன்னுடைய நண்பர்கள் எல்லாம் வந்தார்கள். வீட்டிற்குப் பெயரோ அன்னை இல்லம்.....!
அவருடைய வீட்டிற்கே அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருந்தார். எல்லோரும் அந்த அழைப்பிதழைப் பார்த்து அவருடைய புதுமனை விழாவிற்கு வந்திருந்தார்கள்.
அந்த இல்லத்துக்காரர் வந்திருந்த முக்கிய பிரமுகர்களுக்கு ஒவ்வொரு அறையாகக் காட்டினார். வீடு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று பாராட்டினார்கள். அதிலே ஒருவர் கேட்டார். அன்னை இல்லம் என்று நீங்கள் பெயர் வைத்திருக்கின்றீர்களே, இவ்வளவு பெரிய பாசத்தை தாய் மீது நீங்கள் வைத்திருக்கின்றீர்கள். அதனால் தான் அன்னை இல்லம் என்றே பெயர் சூட்டியிருக்கின்றீர்கள்.
தாயாரோ முதியோர் இல்லத்தில்
ஆகவே, உங்களுடைய தாயாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபொழுது,அந்த புதிய இல்லத்துக்காரர், அவர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார் என்று பதில் சொன்னார்.
இது கற்பனை அல்ல. வாழ்க்கை ஒரு பக்கம் உயர்ந்திருக்கிறது. சம்பளங்கள் கை நிறைய கிடைக்கிறது. பணம் இருக்கிறது. ஆனால் தன்னுடைய தாயிடத்திலே, பெற்றோரிடத்திலே நன்றி காட்டக் கூடிய பாச உணர்ச்சி பல குடும்பங்களிலே இருக்கிறதா? என்று பார்க்கின்ற நேரத்திலே நீங்கள் எத்தனையோ உதவிகளை செய்கிறீர்கள். இடையிடையே அதை நீங்கள் வலியுறுத்த வேண்டும்.
ஏனென்றால் நோய்களிலே பெரிய நோய் அறியாமை மற்றும் இது போன்ற சிக்கல்களான நிலைகள்தாம். ஆகவே அதைச் சொல்லுகிறார்கள்.
நாயை அடித்தாலும் உதைத்தாலும்
நாயைத் தன் எஜமானன் எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும் அதே நாய் தன்னுடைய எஜமானனிடம் அன்பு காட்டுவதைக் காணலாம். சோறு போடாவிட்டாலும், நாய் விசுவாசம் காட்டும். ஆனால், மனிதன் அப்படி அல்லன். மனிதனுடைய இயல்பு தன்மை என்ன? அதைப் பார்க்கும் பொழுதுதான் உங்களுடைய தொண்டின் சிறப்புத் தெரிகிறது.
திட சித்தத்தோடு உறுதி எடுத்துக்கொண்டு
இவ்வளவு பேர் சேர்ந்து அற்புதமான ஒரு புதிய சமுதாயத்தை இதற்கு விதிவிலக்கான சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் திட சித்தத்தோடு உறுதி எடுத்துக்கொண்டு நாம் தொண்டாற்ற வேண்டும்.
அதிலே சொல்லுகின்றார். மனிதன் அப்படி அல்ல. என்ன நன்மை அடைந்தாலும் ஒரு தீமை நேர்ந்துவிட்டாலும் முன்பு அடைந்த நன்மைகளை மறந்து தீமையை மட்டும் எடுத்துக்கொள்வான்.
நாம் எத்தனை நண்பர்களைப் பார்க்கின்றோம். எத்தனையோ உதவிகளைத் தொடர்ந்து செய்திருப்பீர்கள். ஒரே ஒரு உதவியை நீங்கள் மறுத்தீர்கள் என்று சொன்னவுடனே பல உதவிகள் செய்தது அவருக்கு நினைவுக்கு வராது. எட்டாவது உதவியை நீங்கள் செய்யவில்லையே அதை மட்டும் தான் சொல்லிச் சொல்லிக் காட்டக் கூடிய, சுட்டிக்காட்டக் கூடிய உணர்வோடு இருப்பார்கள்.
துரோகம் என்பது இயல்பு
எனவே, மனிதனுக்கு சகலமும் சுய நலம். வியாபாரமுறை. மனிதனுக்கு துரோகம் என்பது இயல்பு என்ற நிலையிலே இப்படி இருக்கிறார்கள். ஆனால் பூமிக்கு மேல் மைல் கணக்கில் தூரத்தில் பறக்கும் பருந்து பூமியில் கிடக்கும் சிறிய வஸ்துகளை அது கண்டுபிடித்து விடுகிறது.
கரும்பை பயிர் செய்ய யானைக்குத் தெரியாது
நம்முடைய கண் பருந்தின் கண்களைவிட பெரிது நம் கண் உருவத்தில் பெரிதே தவிர, பறவைக்குள்ள கண்ணின் சக்தியைவிட அதிகம் சக்தி கொண்டதில்லை.
பருந்தின் கண்களுக்கு தனி சக்தி இல்லை. மனிதன் கரும்பை உற்பத்தி செய்கிறான். ஆனால் யானைக்குக் கரும்பைத் தின்பதற்குத் தான் தெரியும். கரும்பை பயிர் செய்யத் தெரியாது.
எவ்வளவு அழகான கருத்து என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள். மனிதன் பிறருக்குத் தொண்டு செய்து வாழ்வதையே குறியாகக் கொண்டுள்ளான். ஆனால் இந்தக் குறிக்கோள் மற்ற ஜீவனுக்கு இல்லை. எனவே தொண்டு செய்து அதன் விளைவாக மனிதன் புகழ் ஈட்டுவதிலே அவனுக்குத் தனி சிறப்பாகும். தொண்டின் மூலமாக கிடைக்கின்ற பெருமை தான்
இது தான் அவர்களுடைய கருத்து எனவே அந்தத் தொண்டின் மூலமாகக் கிடைக்கின்ற பெருமையிருக்கிறதே, அது தான் நிலையான பெருமை.
இங்கே விழிக்கொடை அளித்தவர்கள் பற்றிச் சொன்னார்கள். ஒன்று, விழிக்கொடை கொடுத்ததாலே உங்களுக்கு மனநிறைவு ஏற்படுகின்றது. இரண்டாவது, யாருக்கு விழிக்கொடை கொடுத்தீர்களோ அதன் மூலம் அவர் இறக்கவில்லை. மாறாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வு இருக்கிறதே அது தான் முக்கியம். செத்தவர்களைப் பிழைக்க வைக்க முடியும் நம்மாலே. எப்படி முடியும்? நம்முடைய தொண்டறத்தாலே, நம்முடைய ஆற்றலாலே, நம்முடைய பரந்து விரிந்த மனத்தாலே. இதே நகரிலே எங்களுடைய இயக்கத்தைச் சார்ந்த கண்ணாடிக் கடை வைத்திருக்கின்ற தோழருடைய தந்தையார் உடல் முழுவதும் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினார். இன்றைக்கும் எத்தனையோ பேர் உடல்தானம் செய்து வைக்கின்றார்கள். விழிக்கொடை, அதே போல சிறுநீரகம், உறுப்புக்கொடை அத்தனையும் தருகிறார்கள்.
ஜாதி செத்து விடுகிறதல்லவா?
இதில் மகிழ்ச்சி என்னவென்றால், மனித நேயம் தழைக்கிறது. மற்றவர்களை நாம் வாழ வைக்கிறோம் என்பது மட்டு-மல்ல; அதே நேரத்திலே ஜாதி என்ற கொடுமையிருக்கிறதே அதுவும் செத்துவிடுகிறது. இவர்கள் வாழ்கிறார்கள். ஏனென்றால், இந்த ஜாதிக்காரன் கண் இந்த ஜாதிக்குத் தான் பொருந்தும் என்பது கிடையாது.
இன்ன ஜாதியினர் ரத்தம்_அதாவது செட்டியார் ரத்தம் செட்டியாருக்கு, முதலியார் ரத்தம் முதலியாருக்கு, அய்யங்கார் ரத்தம் அய்யங்காருக்கு என்று கிடையாது.
அதற்கு மாறாக, எந்த குரூப் பொருந்துமோ அந்த குரூப்புக்குக் கொண்டு போய் வைக்கிறார்கள். அடிபட்ட ஒருவர் மருத்துவமனையிலே இருக்கிறார். அவருக்கு உடனடியாக ரத்தம் கொடுக்க வேண்டும். என்னங்க அவரைத் தொட்டாலே குளிக்க வேண்டும் என்று சொல்கின்றீர்கள்.
ஓர் ஆதி திராவிடர் ரத்தம்
ஓர் ஆதிதிராவிட தோழர்தான் ரத்தம் கொடுக்க வந்திருக்கிறார். உங்களுடைய ரத்த குரூப்பும், அவருடைய ரத்த குரூப்பும் தான் பொருத்தமாக இருக்கிறது. அவருடைய ரத்தத்தை உங்களுடைய அனுமதி இல்லாமல் ஏற்றக் கூடாது என்பதற்காக காத்திருக்கிறோம் என்று சொன்னால் இல்லிங்க நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் செத்தாலும் சாகிறேன் என்று யாராவது சொல்லுவார்களா?
கையைப் பிடித்துக்கொண்டு, இப்பொழுது யாருங்க அதை எல்லாம் பார்க்கிறார்கள். நான் பெரியார் கட்சியில் சேர்ந்து ரொம்ப நாள் ஆச்சே. சீக்கிரம் அந்த ஆளைப் பிடியுங்கள் என்று தான் கேட்பார்கள்.
ஜாதி சாகிறது மனிதன் பிழைக்கிறான்
காரணம் என்ன? அப்பொழுது ஜாதி செத்து விடுகிறது; மனிதன் பிழைக்கிறான். ஏன் இதைச் சொல்லுகிறேன்? நம்முடைய நாட்டில் தியாகம் செய்த தலைவர்களையே ஜாதிச் சட்டிக்குள் அடைத்துவிட்டார்கள்.
அதுவும் அரசியல் எவ்வளவு ரொம்ப மோசமாகப் போய்விட்டது.
--------------------தொடரும் ...."விடுதலை" 28-7-2009
Labels:
வீரமணி
28.7.09
உலக நாடுகள் -தூரப்பார்வை - சியர்ரா லியோன்ஸ்-சிங்கப்பூர்

சியர்ரா லியோன்ஸ்
இப்பகுதிக்கு முதலில் வந்த அய்ரோப்பியர்களான போர்த்துகீசியர்கள் வைத்த பெயர் லியோன்ஸ் என்பது. 1787இல் அடிமைகளாக இருந்தவர்களுக்கான மறு வாழ்வுக்கான திட்டத்தைச் செயல் படுத்த இந்நாட்டைப் பிரிட்டிஷார் தேர்வு செய்தனர். 1808இல் பிரிட்டனின் குடியேற்ற நாடாக ஆயிற்று.
1961இல் நாட்டுக்கு, விடுதலை தரப்பட்டது. 1971இல் குடியரசு நாடானது. 1978இல் புதிய அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு ஒரு கட்சி ஆட்சி முறை ஏற்பட்டது.
ஆப்ரிகாவின் மேற்குப் பகுதியில் வட அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் கினியாவுக்கும் லைபீரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள நாடு. பரப்பளவு 71 ஆயிரத்து 740 சதுர.கி.மீ. மக்கள் தொகை 60 லட்சம். இசுலாமியர் 60 விழுக்காடு. கிறித்துவர் 10 விழுக்காடு. மீதிப் பேர் பழங்கால நம்பிக்கைகளைக் கொண்டிருப்போர்.
இங்கிலீஷ் ஆட்சி மொழி 30 விழுக்காடு மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர். குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவரும் கூட. 68 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.
சிங்கப்பூர்
சிங்கப்பூரின் பழைய பெயர் புலுவோசுங் என்பதாகும். மூன்றாம் நூற்றாண்டின் சீன நூல்களில் இப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. தீபகற்ப முனையில் உள்ள தீவு என இதற்குப் பொருள். அமைப்பின்படி பொருத்தமான காரணப் பெயர்தான். சுமித்ரா நாட்டின் சிறீவிஜய வமிச அரசின் அவுட் போஸ்ட் ஆக சிங்கப்பூர் 14ஆம் நூற்றாண்டு வரை திகழ்ந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஜாவா, சயாம் நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து கடைசியாக மலாக்கா நாட்டைச் சேர்ந்ததாக ஆனது. அடுத்த இருநூறாண்டு களில் போர்த்துகீசியர்களும் டச்சுக்காரர்களும் மாறி மாறி ஆண்டனர்.
1819இல் பிரிட்டிஷார் கைப்பற்றினர். இரண்டாம் உலகப் போரின் போது 1942 முதல் 1945 வரை ஜப்பான் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. போரின் முடிவுக்குப் பிறகு 1946இல் மீண்டும் பிரிட்டனின் ஆட்சிக்கு வந்தது. 1963இல் மலேசிய நாட்டரசில் சிங்கப்பூர் அங்கமாகியது. இதில் மலேயா, சபா மற்றும் சரவாக் மாநிலங்களும் அங்கம் வகித்தன. 1965இல் மலேசிய கூட்டரசிலிருந்து பிரிந்து தனி நாடாகியது.
692.7 சதுர கி.மீ. பரப்புள்ள இத்தீவின் மக்கள் தொகை 45 லட்சம். சீனப் பவுத்தர்கள், மலாய் முசுலிம்கள், இந்து, கிறித்துவ, சீக்கிய எனும் பல்வேறு மதத்தவர்களும் வாழும் நாடு. 93 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். சீனம், மலாய், தமிழ், இங்கிலீஷ் ஆகிய நான்கு ஆட்சி மொழிகள். மலாய் தேசிய மொழி.
9.-8.-1965இல் விடுதலை நாள் கொண்டாடப் படுகிறது. குடியரசுத் தலைவர் அதிபர். பிரதமர் ஆட்சித் தலைவர். அங்கும் கூட 3 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாமல் உள்ளனர்.
----------------"விடுதலை" 28-7-2009
Labels:
உலக நாடுகள்
இந்துயிசம் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

இந்துத்துவாவா?
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்விக்கு இந்துத்துவா கொள்கை காரணமல்ல. பா.ஜ.க.வை மதவாதக் கட்சி என்று மதச்சார்பற்ற கட்சிகள் கூறினாலும், இந்துத்துவா கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டோம். இந்துத்துவா கொள்கையில் பா.ஜ.க. உறுதியாக இருக்கும். இந்துத்துவா என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே, அந்தக் கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டோம். என்ன விலை கொடுத்தாகினும் இந்துத்துவா கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங் லக்னோவில் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 15 ஆவது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் செயற்குழுவில், தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டன. இந்துத்துவாவை முதன்மைப்படுத்தியதால்தான் தோல்வி கண்டோம் என்று கட்சிக்குள்ளேயே பேசினார்கள். மக்கள் பிரச்சினையைப் பேசவேண்டும் என்று கூறியவர்களும் உண்டு. எதிர்க்கட்சிகள் கூறுவது ஒருபுறம் இருக்கட்டும். கட்சிக்குள்ளேயே அந்தப் பிரச்சினை வெடித்துக் கிளம்பியதே அதன் அடிப்படையைப்பற்றி கட்சியின் தலைவர் சிந்திக்கவேண்டாமா?
பொய்யை மட்டும் பேசுவது உண்மையைத் திரித்துக் கூறுவது என்பதிலே பி.ஜே.பி. சங் பரிவார் வட்டாரத்தை வெல்ல உலகத்தில் வேறு யாருமே கிடையாது.
காந்தியாரைப் படுகொலை செய்த, நாதுராம் கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு, காந்தியாரைக் கொன்றது முசுலிம்தான் என்று மக்களை நம்ப வைக்கவேண்டும் என்று சூழ்ச்சி செய்யவில்லையா?
அதுபோல, இந்துத்துவா பற்றி ஏதோ உச்சநீதிமன்றமே சொல்லி விட்டது, சொல்லிவிட்டது என்று ஒரு கரடியை நீண்டகாலமாகவே இந்தக் கூட்டம் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது.
உண்மை என்னவென்றால், அந்தத் தீர்ப்பைக் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா இந்துத்துவாபற்றி தான் கூறிய தீர்ப்பை சில அரசியல்வாதிகள் திரித்து அரசியலாக்கிவிட்டனர் என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினாரே!
இந்துயிசம் குறித்து தாம் பொறுப்பில் இருந்தபோது வழங்கிய தீர்ப்பை சில அரசியல்வாதிகள் தவறான அர்த்தத்தில் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். தமது தீர்ப்பின் சாரத்தை அவர்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாமல் தங்கள் வசதிக்கேற்ப திரித்துக் கூறுகின்றனர்.
இந்து, இந்துயிசம், இந்துத்துவா ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், குறிப்பிட்ட நோக்கத்துக்காக திட்டமிட்டு அந்த வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவதுதான் தவறு.
விவேகானந்தர் சகிப்புத்தன்மை என்ற பொருளில் இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். அந்த அர்த்தத்தில்தான் தம் தீர்ப்பில் இந்துயிசம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று கூறியதாகக் கூறினார்.
(தி இந்து, 6.2.2003, பக்கம் 11)
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தமது தீர்ப்பை பி.ஜே.பி. வகையறாக்கள் திரித்துக் கூறுகின்றன. தாம் கூறியதை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்று கூறியதிலிருந்தே காவிக்கூட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்பதை தீர்ப்பு வழங்கிய நீதிபதியே அம்பலப்படுத்தி விட்டாரே! விவேகானந்தர் கூறிய பொருளில்தான் தாம் கூறியதாகச் சொல்லியிருக்கிறாரே தவிர, காவிக்கூட்டம் சொல்லும் சித்தரிக்கும் பொருளில் கூறவில்லை என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக இந்தச் சொல்லை காவிக் கூட்டம் சொல்லி வருகிறது என்பதையும் முகத்திரையைக் கிழித்தக் காட்டிவிட்டாரா இல்லையா?
காவிக் கூட்டத்தின் அந்தக் குறிப்பிட்ட நோக்கம் எது? இந்துக்கள் அல்லாத முசுலிம்கள், கிறித்துவர்களை அந்நியப்படுத்திக் காட்டவேண்டும் என்பதுதானே அந்தக் குறிப்பிட்ட கூட்டத்துச் சொல்லாடலின் நோக்கம்!
இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் தங்கள் மதத்தையே இந்து மயமாக, இந்திய மயமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் கூறவில்லையா? கிறிஸ்துவைத் தூக்கி எறிந்துவிட்டு கிருஷ்ணனைக் கும்பிடவேண்டும் என்று கூறிடவில்லையா? அல்லாவை மறந்துவிட்டு அவதாரக் கடவுளான ராமனை வழிபடவேண்டும் என்று வெளிப்படையாகப் பேசவில்லையா?
அந்த அடிப்படையில்தானே இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை இடித்தனர். குஜராத் மாநிலம் டாங்ஸ் மாவட்டத்தில் சர்ச்சுகளை இடித்துத் தள்ளினர். வாடிகன் போப் இந்தியா வந்தபோது, எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததும் அந்த நோக்கத்தில்தானே!
எதைச் செய்கிறார்களோ அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் அவர்களிடத்தில் கிடையாது என்பதற்கும் இது ஓர் எடுத்துக்காட்டுதானே!
-------------------"விடுதலை" தலையங்கம் 28-7-2009
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் சாதனைகள்

அருள்வாக்காம்
எந்த ஒரு பார்ப்பனர் இதழ் நடத்தினாலும், அதில் கண்டிப்பாக சங்கராச்சாரியாரின் ஒரு பொன்மொழி இடம்பெற்றிருக்கும். புரிகிறதோ இல்லையோ சடங்காச்சாரமாக பெரிய வாளி(லி)ன் படம் போட்டு 10 வரிகளாவது நிரப்பிவிடவேண்டும். அப்படி செய்யாவிட்டால், ஏதோ பெரும்பாவம் செய்துவிட்டதாக அவர்களைப் பொறுத்தவரை அப்படி ஒரு நினைப்பு பிழைப்பு.
அதேபோல, இந்த வார கல்கியில் (2.8.2009) ஒரு அருள்வாக்கு:
ஞானிக்கு ஆத்ம ஸ்வரூபத்தைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லை. ஒரே பரமாத்மாதான் இத்தனையாகவும் தெரிகிறது என்று கண்டுகொண்டவன் அவன். வெளியிலே தெரிகிற தோற்றத்தை மாயை என்று தள்ளிவிட்டு, எல்லாவற்றுக்கும் உள்ளேயிருக்கிற பரமாத்ம ஸ்வரூபத்தை மட்டுமே அனுபவிக்கிறவன் அவன். வெளிப் பார்வைக்குத் தெரிகிற உலகம் மாயை என்று ஆகிவிட்டதால், இந்த மாயா லோகத்தில் ஞானிக்குக் காரியம் எதுவுமே இல்லை. பார்க்கிறவன், பார்க்கப்படுகிற வஸ்து, பார்வை எல்லாமே ஒன்றாக அடங்கிப் போனவனுக்குக் காரியம் எப்படி இருக்க முடியும்? அவன் பிரம்மமாகவே இருக்கிறான் என்று உபநிஷத்து சொல்கிறது.
பிரம்மத்துக்குக் காரியம் இல்லை. ஆனால், இந்த மாயை உலகத்தில் அகப்பட்டுக் கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள் ஈசுவரன் என்று ஒருவனைப் பூஜை செய்து தங்கள் காரியங்களை நடத்தித் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக நல்ல மனஸோடு பிரார்த்தித்தால் ஈசுவரனும் அவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈசுவரன் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்று தெரிகிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள்
யாருக்கும் புரியாத வகையில் வார்த்தைகளை ஜாலமாக அடுக்கினால் அதற்குப் பெயர் அருள்வாக்கு தெய்வவாக்கு அவாள் அகராதியில்.
ஒன்று மட்டும் புரிய வருகிறது. இந்தவுலகம் மாயை இந்த நிலையில் இந்த லோகத்தில் ஞானிக்குக் காரியம் எதுவுமே இல்லை என்று சொல்ல வருகிறார் பெரியவாள்.
சரி... இந்தக் கருத்தை ஞானியாகிய அவரைப் பொறுத்து எந்த வகையில் சரி? மாயையான இந்த லோகத்தில் இந்த ஞானி எந்தக் காரியத்தையும் செய்யவில்லையா?
பிராமணப் பெண்களுக்கான கன்னிகாதானம் டிரஸ்டை ஏற்படுத்தவில்லையா? கம்யூனல் ஜி.ஓ.வைப்பற்றிப் பேசவில்லையா? ரிட்டயர்டு ஆன பிராமணர்களுக்கு அறிவுரை கூறி பிராமணர்களுக்கு உதவி செய்யக் கூறிடவில்லையா?
நாஸ்திகர்களுக்கு மருத்துவ உதவி செய்யக்கூடாது என்று தனது கடல் போன்ற பரந்து விரிந்த உள்ளத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டவில்லையா?
தீண்டாமை க்ஷேமகரமானது என்று நியாய விரோதமாக, சட்ட விரோதமாக அருளுபதேசம் செய்யவில்லையா?
பாலக்கோட்டில் காந்தியாரே நேரில் வந்து கேட்டுக்கொண்டும் தீண்டாமை சாஸ்திர சம்பந்தமானது. அதற்கு எதிராகத் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று கறாராகக் கூறவில்லையா?
இந்த லட்சணத்தில் இந்த லோகம் மாயை. இதில் செய்யவேண்டியது ஒன்றும் இல்லை என்று இவர் சொல்வாராம் அதைக் கல்கி வெளியிடுமாம். அதையும் காசு கொடுத்து வாங்கி இந்தச் சூத்திர மக்களும் படித்துக் கிழிக்க வேண்டுமாம்! பலே! பலே! -
-------------------மயிலாடன் அவர்கள் 28-7-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
Subscribe to:
Posts (Atom)
