ஸ்மைல் பிங்கி!
திரைப்படத் துறையில் உலக அளவில் பெருமைக்கு உரியதாகப் பேசப்படுவது ஆஸ்கார் விருதாகும். இது கிடைத்தற்கரிய ஒன்றாக மதிக்கவும் படுகிறது. இந்த விருது இந்தியாவுக்கு இதுவரை கிடைத்திடவில்லை என்றும், முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்லம்டாக் மில்லியனர் என்ற திரைப்படம் எட்டு ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்றது என்றும் பெருமையாகப் பேசப்படும் நேரம் இது.
இந்தப் படத்தில் சிறந்த இசை அமைப்பு, சிறந்த பாடல் ஆகிய இரண்டுக்குமான ஆஸ்கார் விருதுகளை தமிழகத்தைச் சேர்ந்த தமிழரான ஏ.ஆர். ரகுமான் பெற்றிருக்கிறார் என்பது தமிழ்நாடும், தமிழர்களும் பெருமைப்படத்தக்க சாதனையே என்பதில் அய்யமில்லை. அந்த வகையில் நமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட - வெறும் 39 நிமிடங்களே ஓடும் குறும்படம் ஒன்றுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கப் பெற்றுள்ளது என்பது குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒன்றாகும்.
ஸ்மைல் பிங்கி என்பது இந்தக் குறும்படத்துக்கான தலைப்பாகும்.
உத்தரப்பிரதேசத்தில் உண்மையாகவே நடைபெற்ற நிகழ்வினை மய்யமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரம் இது.
உத்தரப்பிரதேசம் மிர்சாபூர் மாவட்டத்தில் ரம்பூர் தபாஹி என்னும் கிராமத்தில் பிறந்த பெண்தான் பிங்கி.
பிறவியிலேயே உதடு பிளவுபட்ட பெண்ணாகப் பிறந்த அந்தப் பெண் உற்றார் உறவினரால் வெறுக்கப்பட்டவள்தான்.
தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தபோது அந்தப் பெண்ணுக்கே தன்மீது வெறுப்புப் பீறிடுகிறது. யாருடனும் பேச முடியவில்லை; பழக முடியவில்லை; விளையாட்டுப் பருவத்தில் சகக் குழந்தைகளுடன் விளையாடவும் முடியவில்லை - வெறுக்கப்படும் ஒரு பொருளாக ஆன நிலைதான்.
அய்ந்து குழந்தைகளோடு பிறக்கிறாள் - ஏழைக் குடும்பம்; இவள் ஏன் பிறந்தாளோ? என்று தந்தையே நொந்து கொள்ளும் நிலைமை.
அந்த நேரத்தில் தான், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சமூக சேவகர் அங்கு வந்து சேர்கிறார்.
இது ஒன்றும் நோய் அல்ல - எளிமையான அறுவை சிகிச்சைமூலம் சரி செய்துவிடலாம் என்று அந்தக் கிராமத்தில் நம்பிக்கையை ஊட்டுகின்றார்; விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அந்தக் கிராமத்திலே பிங்கியும் ஒருவர்.
அந்தச் சமூக சேவைக்காரர் இலவசமாக பிங்கிக்கு அறுவை சிகிச்சை செய்திட ஏற்பாடு செய்கிறார். 45 நிமிட அறுவை சிகிச்சைக்குப் பின் பிங்கியின் முகமே அழகின் சிரிப்பாக மலர்ந்து விடுகிறது - தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறாள் பிங்கி; அடடா, அப்படி ஒரு ஆனந்தம் அந்தச் சிறுமிக்கு!
மேல் நாடுகளில், பிறந்த நான்காவது நிமிடத்திலேயே இத்தகைய குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து விடுகின்றனர். அப்படி ஒரு குறைபாடு தனக்கு இருந்ததாகவேகூட பிற்காலத்தில் அத்தகையவர் களுக்குத் தெரிவதில்லை.
ஆண்டு ஒன்றுக்கு இத்தகு குழந்தைகள் இந்தியாவில் 35 ஆயிரம் பிறக்கின்றனவாம். போதிய விழிப்புணர்வு இல்லாததால் சக மக்களிடமிருந்து விலகி வாழும் அவலம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
இந்தத் திரைப்படம் புதிய விழிப்புணர்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல; சமூகத்திற்கே ஏற்படுத்தி விடுகிறது.
ஏதோ விதிப் பலன்; போன ஜென்மத்தில் நாம் செய்த பாவம் நமக்கு இப்படி ஒரு பிள்ளை பிறந்திருக்கிறது என்று தங்களுக்குத் தாங்களே நொந்து கொண்டும் சமாதானம் செய்துகொண்டும் மகிழ்ச்சியான வாழ்வைத் தொலைத்துக் கொண்டவர்கள் மத்தியிலே இந்தத் திரைப்படம் ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதில் அய்யமில்லை.
இவ்வளவுக்கும் இந்தக் குறும்படத்தின் ஓட்டம் வெறும் முப்பத்து ஒன்பதே நிமிடங்கள்தானாம்.
பிரேசில் நாட்டுக்காரரான இயக்குநர் மேஹன் மைலான் என்ற பெண்மணி - யதார்த்தமான நடப்பினை மையப்புள்ளியாக்கி இப்படி ஒரு படத்தைத் தயாரித்து ஆஸ்கார் விருதினையும் பெறச் செய்துள்ளார் என்பது சிந்திக்கத்தக்கதாகும்.
உலகின் நடப்புகளில் இதுபோன்று எத்தனை எத்தனையோ யதார்த்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களை எடுப்பதன்மூலம் விழிப்புணர்வை ஊட்ட முடிகிறது - புதிய திருப்பத்தைக் கொடுக்க முடிகிறது என்பதுதான் இதில் பாராட்டப்பட வேண்டிய மிக உயர்ந்த அம்சமாகும்.
இதில் இன்னும் முக்கியமான மகிழ்ச்சி. இந்தக் குறும்படத்தின் கதாபாத்திரமான பிங்கி என்ற பாத்திரம் கற்பனையல்ல; உண்மையிலே அப்படி ஒரு பெண் இருக்கிறார்; அந்தப் பெண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்.
ஆஸ்கார் விருது விழா வழங்கும் லாஸ்ஏஞ்சல்சுக்கு தம் தந்தையார் மற்றும் அறுவை சிகிச்சையைச் செய்த டாக்டர் ஆகியோர்களுடன் சென்று, ஸ்மைல் பிங்கி குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும் காட்சியையும் நேரில் பார்க்கிறார் என்பது, எத்தகைய உணர்ச்சியின் விளிம்பு - ஆனந்தத்தின் ஆகாயப் பயணம்!
ஒரு காலத்தில் அருவருக்கப்பட்ட பிங்கி - இன்று அனைவராலும் கட்டியணைத்து முத்தம் பொழியப்படுகிறாள்.
கர்ம வினையும் அல்ல; கடவுளின் கட்டளையும் அல்ல - மனிதனின் மிக உயர்ந்த அறிவுத் திறன் எதையும் சந்தித்து, எதையும் சாதிக்கும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் இத்தகு குறும்படங்கள் தான் நாட்டுக்குத் தேவை.
குத்துப்பாட்டும், அடிதடியும் குலை குலையாய்த் தொங்கும் தமிழ்நாட்டுத் திரைப்படங்களின் போக்கு சிரிக்கத்தக்கதாக இருக்கிறது; "ஸ்மைல் பிங்கி" படமோ சிந்திக்கத்தக்கதாக விருக்கிறது - பாராட்டுகள்!
Search This Blog
24.2.09
திராவிடர் கழகம் என்றைக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக
இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றினால்
அந்தச்சட்டத்தைதிராவிடர் கழகம்கொளுத்தும்!
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்
தொல்.திருமாவளவன் - சுப. வீரபாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர்
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மத்திய அரசு சட்டத்தை நிறைவேற்றினால், திராவிடர் கழகம் அதைக் கொளுத்தும் என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.
மத்திய அரசின் மசோதா தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தலையில் விழுந்த பேரிடி என்று தொல். திருமாவளவன் கூறினார். தமிழர் தலைவர் ஆசிரியர் மிகச் சரியான தருணத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளார் என்று சுப. வீரபாண்டியன் கூறினார்.
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான மசோதாவில் சமூகநீதிக்கு எதிரான சரத்துகள் சேர்க்கப்பட்டதைக் கண்டித்தும், சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளு மன்ற நிலைக்குழு பரிந்துரை சிபாரிசுகளை இணைத்தும் காலம் தாழ்த்தாமல் இந்த மசோ தாவை, இந்தக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமை காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் திராவிடர் கழகத்தின் சார்பில் அதுவும் 24 மணி நேரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (24.2.2009) காலை 11 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் உள்ள மெமோரியல் ஹால் முன்பு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களது தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொல். திருமாவளவன்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு தேவையற்ற பல குழப்பங்களைச் செய்துள்ளது. ஏற்கெனவே உள்ளதிலேயே கை வைத்துவிட்டது மிகுந்த வேதனை அளிக்கிற ஒரு செயலாகும்.
தலையில் இடி விழுந்த செய்தி இது
ஏறத்தாழ 47 நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற நிலையை மத்திய அரசு உரு வாக்கியிருப்பது ஏழை, எளிய மக்களின் தலையில் இடி விழுந் ததைப் போன்ற ஒரு செயலாகக் கருதுகின்றோம்.
இதுபோன்ற கருத்து எதிர்காலச் சந்ததியினரை மிகப்பெரிய கொடுமையில் ஆழ்த்தக்கூடிய ஒன்றாகும்.
நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அய்யா அவர்கள் உரிய நேரத்தில் இந்தப் பிரச்சினையை வெளிக்கொணர்ந்து மக்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்.
குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இது ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தி யாகும்.
தமிழர் தலைவர் வழியில் போராடுவோம்
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் ஒன்று சேர்ந்து நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்களுடைய வழியிலே விடுதலைச்சிறுத்தைகளும் இணைந்து போராடுவோம். வந்துள்ள ஆபத்தைத் தடுப்பதற்காகத்தான் ஆசிரியர் அய்யா அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
எம்.பி.க்களும் வற்புறுத்தவேண்டும்
தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 எம்.பி.க்கள் ஒற்றுமையாக இருந்து இட ஒதுக்கீட்டில் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வரக்கூடிய இந்த ஆபத்தை நாடாளுமன்றத்திலே எடுத்துச் சொல்லி தடுத்திட வேண்டும். இதிலே அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும்.
நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுடைய தலைமையிலே இட ஒதுக்கீட்டை சமூகநீதியைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.
தமிழர் தலைவர் உரை
அடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய சிறப்புரை வருமாறு:-
உயர் ஜாதிக்கார பார்ப்பன ஆதிக்கத்தினர் இட ஒதுக்கீட்டை ஒழிக்க தந்திரமான முறையில் இறந்த சடலத்திற்கு அலங்காரம் செய்வது போன்ற காரியத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தமிழகம் என்றைக்கும் முதலிடம்
இட ஒதுக்கீடு, சமூக நீதி என்றால் என்றைக்கும் தமிழகம் தான் முதலிடம் வைத்து வழிகாட் டியாக இருந்து கொண்டிருக்கின்ற மாநிலமாகும்.
இன்றைக்கு 47 கல்வி நிறுவ னங்களில் இட ஒதுக்கீட்டை மூடியிருக்கிறது மத்திய அரசு. கதவு முழுவதும் ஓட்டையைப் போட்டு வைத்து விட்டு கதவை சாத்தி வைத்திருக்கின்றோம் என்றால் அது முறையானதா? அதை ஏற்க முடியுமா?
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சகோதரர்களை பிரித்தாளும் முயற்சியில் உயர் ஜாதிக்கார ஆதிக்க வர்க்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோரின்
கண்களில் மிளகாய்ப் பொடி
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் துவியுள்ளனர். இவர்களிடமும் பிளவு மனப்பான்மையை உருவாக்குகின்றனர்.
47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உள்ளே புக முடியாது. சுதர்சன நாச்சியப்பன் தலைமை யிலான பரிந்துரையை உதா சீனப்படுத்தினர். 2008 டிசம்பர் 23இல் மாநிலங்களவையில் இந்த இட ஒதுக்கீடு மசோதா அவசர அவசரமாக - ஒதுக்கப்பட்டு இரண்டே நிமிடங்களில் நிறை வேற்றப்படக் காரணம் என்ன?
செய்த கோளாறுகள் என்னென்ன?
தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களின் நலத் துறைக்கு இந்த மசோதா அனுப்பப்படவில்லை. பழங்குடி யினரின் அமைச்சகத்திற்கும் இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட வில்லை. தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகச் செயல்பட்டு வரும் சட்டரீதியான அமைப்பான பூட் டாசிங் தலைமையிலான தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு இந்த மசோதா கொண்டு செல்லப்பட வில்லை.
இது ஒரு அப்பட்டமான சட்ட மீறலான செயலாகும். மேலும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கண்களுக்குக் கூட இது காட்டப்படவில்லை.
இந்திய அரசமைப்பின் சட்டம் 338இன் துணைப் பிரிவு 9இன்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கொள்கைகளை உருவாக்கும்பொழுது மத்திய மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்தின் கருத்தினைக் கேட்கவேண்டும்.
இந்த சட்ட நடைமுறையையும் கண்மூடித் தனமாகத் தூக்கி எறிந்துவிட்டு மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது என்பது எவ்வளவு பெரிய அநீதி - கொடுமையாகும்.
கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையிலே வை என்பது போல மத்திய அரசு இத்தகைய கொடுமையான செயலை செய்துள்ளது.
மரண அடிபோல்
தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு மரண அடி கொடுத்துள்ளது. சமூக நீதிக்கு மாபெரும் கேட்டினை மத்திய அரசு செய்துள்ளது.
45 நாள்களுக்கு உள்பட்ட மத்திய, மாநில அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட் டுள்ளது. அவசர காலங்களில் ஏற்படும் குறிப்பிட்ட மத்திய மாநில அரசு வேலைக்கான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது.
47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது
அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவைச் சார்ந்த பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கூடாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற 47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக் கீடு கிடையாது. சம்பந்தப்பட்ட துறைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட வில்லை.
சட்டத்தைக் கொளுத்துவோம்
நாங்கள் சொல்லுகின்ற இந்தக் கருத்துக்களை மீறி சட்டத்தை நிறைவேற்றினால் அந்த சட் டத்தை வீதிகளில் போட்டு கொளுத்துவோம் (பலத்த கைதட் டல்).
திராவிடர் கழகம் என்றைக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களைப் பிரித்தாள முடியாது.
அதேபோல கிரிமீலேயர் என்பதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்ட வர்களையும் பிரித்தாள நரித்தந்திரத்தை கையாண்டுள்ளனர்.
தமிழக அரசு விழிப்போடிருக்க வேண்டும்
தமிழக அரசும் இதில் விழிப்போடு இருந்து கண்காணித்து இந்த ஆபத்துகளைத் தடுத்திட வேண்டும். தட்டினால் திறக்கப்படும் என்கிறார். அப்படித் திறக்கா விட்டால் கதவுளை உடைத்தெறியவும் நாங்கள் தயங்கமாட் டோம்.
சமூக நீதி என்பது அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சலுகை அல்ல, அது ஏதோ பிச்சை அல்ல. அது உரிமை; உரிமை.
அந்த உரிமையை நிலைநாட்டுகின்ற வரை திராவிடர் கழகம் தொடர்ந்து போராடும்.
சுப. வீரபாண்டியன்
அடுத்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தனது உரையில், நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் சொன்னது போல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை என்றைக்கும் பிரிக்கவே முடியாது. அவர் சொன்னது போல கத்தரிக்கோலின் இரு கத்திகளிடையே சிக்கினால் என்ன ஆகும் என்பதை உயர் ஜாதியினர் எண்ணிப் பார்க்க வேண்டும். எப்பொழுதும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். மிகச் சரியான நேரத்தில் நம்முடைய தமிழர் தலைவர் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளார் என்றார்.
முன்னதாக க.பார்வதி, செ.வை.ர. சிகாமணி, கோ.வீ. ராகவன், ஆவடி இரா.மனோகரன் ஆகியோர் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை அரை மணி நேரம் முழங்கினர்.
----------------- நன்றி:-"விடுதலை" 24-2-2009
Labels:
திராவிடர் இயக்கம்
சிவராத்திரி என்றால் என்ன? எப்படி ஏற்பட்டது?

சிவராத்திரி
சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரதவிழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ளபடியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக்கோளாறு உண்டாகும்.
ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமைப்பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு-பண்பாடுகளுக்கும் பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!
முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலைமுதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லை யாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தன. ஒரு புலி இந்த வேடனைக் கண்டுவிட்டது. இவனைப் பின் தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வமரத்தின் மேல் ஏறிக்கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின் கீழ் தங்கல் போட்டது. புலியும் அவன் இறங்குகிறானா என்று பார்த்துகொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக்களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வமர இலை களைக் கொத்து கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழையின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப்பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக்கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம்; அன்று இரவு வேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.
(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டுசென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம் தான்) அவன் மாலை மழையில் நனைந்து குளித்தது போல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல் , அவன் அறியாத லிங்கத்தின் மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்தது போல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிடவேண்டும் என்ற எண்ணமில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின் மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான் உலகை அடைந்தானாம்.
அடுத்த கதை
ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் சுத்த அயோக்கியனும் ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோயிலை அடைந்தானாம். அப்போது அந்த கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்து விட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்கு சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன் பார்ப்பன இளைஞன் பலகாரங் களை மூட்டை கட்டுவதைக் கண்டு. ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப்பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களை பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈசுவரலிங்க சிலைக்கு தீபாராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பன பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக்கொலை; அவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை. மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத்தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்த சிவராத்திரிகள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல் , மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்று தான் நாம் கேட்கின்றோம். இந்தபாழும்அர்த்தமற்ற-பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைகளும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும் பணத்தையும் விரயப்படுத்துவது மக்களின் அறியா மையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின் ஆதிக்கமும் தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்கவேண்டும்.
---------------- தந்தைபெரியார் - நூல்: "இந்துமதப் பண்டிகைகள்" - பக்கம்: 6-9
Labels:
பெரியார்
தமிழ் இலக்கியத்தில் ஜாதி எதிர்ப்பு

பண்டைத் தமிழ் மக்கள் பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்பதையே கோட்பாடாகக் கொண்டிருந்தனர். சங்ககாலத் தமிழகத்தில் ஜாதிப் பிரிவினைகள் இருந்தாலும் ஒருவரையொருவர் மதித்து, ஒருமைப்பாட்டுப் பண்புடன் விளங்கினர் என்பதை அறியமுடிகின்றது. இருப்பினும், பிறப்பால் உயர்வு - தாழ்வு வரையறுக்கப்படும் இழிவைப் போக்கும் வகையில் கல்வி கற்பதையும், கலப்பு மணத்தையும் முன்வைத்துத் தம் ஜாதியெதிர்ப்புச் சிந்தனையை மிக மென்மையாகச் சங்கப்புலவர்கள் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ள திறத்தை ஆங்காங்கே காணமுடிகிறது. ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் புறநானூற்றில்,
"வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனும் அவன்கண் படுமே"
என்று பாடியிருப்பது, ஜாதியொழிப்புச் சீர்திருத்தத்தின் முதல்குரலாக ஒலிக்கிறது என்று கூறலாம். பிறப்பால் தாழ்ந்த வகுப்பால் தோன்றிய ஒருவன் கல்வியறிவும் பெற்றால், அச்சிறப்புக் காரணமாக உயர்ந்த வகுப்பினர்க்குரிய சமுதாயத் தகுதியை அடையலாம் என்பதே இப்பாடற்பகுதியின் கருத்தாகும். கல்வியின் சிறப்பை வலியுறுத்துவதற்காக இப்பாடல் புனையப்பட்டிருந்தாலும், ஜாதியால் தீர்மானிக்கப்பெறும் உயர்வுதாழ்வு வேறுபாட்டைக் களைய வேண்டுமானால் கல்வி கற்பதே உகந்ததாகும் என்னும் தீர்வையும் முன்வைத்துள்ளது. இதன் வாயிலாக இப்புலவனின் ஜாதிமறுப்புச் சிந்தனையையும் அதன் தீர்வின் திசைநோக்கிப் பயணப்பட்டிருக்கும் பாங்கையும் அறியமுடிகிறது. கற்பதன்மூலம் ஜாதியால் ஏற்படும் உயர்வு தாழ்வு வேறுபாடு மறையும் என்றும் இதே கருத்தை,
"எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடிக் கற்றோரை மேல்வருக என்பர்"
என்று 'வெற்றிவேற்கையும்' எடுத்துக் காட்டியிருக்கிறது. இதே "கருத்தை நாலடியாரும், கடைநிலத்தோர் ஆயினும் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப் படும்"
என்று சுட்டிக் செல்கிறது. சங்க இலக்கியம் சுட்டும் சமுதாயத்தில் தொழில்களின் அடிப்படையில் சில பிரிவினர் தாழ்ந்த நிலையினராகக் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்களிடையே ஒருமைப்பாட்டுணர்வு நிலவியதால் ஜாதிப்புன்மை இல்லையென்று கூறலாம். எனவேதான் சங்ககாலப் புலவர்களிடையே ஜாதி எதிர்ப்புச் சிந்தனை மென்மையாக இழையோடுகிறது.
மணிமேகலை காட்டும் சமுதாயத்தில்தான் வருணப்பாகுபாடு பாராட்டும் நிலையை வெளிப்படையாகக் காணமுடிகிறது.
"நால்வேறு வருணப் பாகுபாடு காட்டி
இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்"
எனவரும் பகுதி, இடுகாட்டில்கூட வருணப்பாகுபாடு பாராட்டும் நிலை அக்காலச் சமுதாயத்தில் நிலவியதைத் தெளிவுபடுத்துகிறது. ஜாதிமுறையின் அடிப்படையில் மக்கட் சமுதாயம் பிளவுபட்டு நிற்பதைக் கண்ட சாத்தனார், வைதிகப் புராண இதிகாசங்களில் காணப்படும் ஜாதி குறித்த செய்திகளைத் தாக்குகிறார். அந்தணர்கள் வேள்வியில் கொலை செய்வதற்காக வைத்திருந்த பசுவை ஆபுத்திரன் கடத்தி வைத்துக் கொள்கிறான்; அதனைக் கண்ட அந்தணர்கள் அவனை ஒவ்வாத செயல் செய்தவன் என்று இழித்தும் பழித்தும், அவன் பிறப்பை அவமதித்தும் பேசுகின்றனர். அவர்களை நோக்கி,
"ஆண்மகன் அசலன் மான்மகன் சிருஞ்சி
புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனோ கேச கம்பளன்
ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்குயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?"
என ஆபுத்திரன் வினவுகின்றான். ஆவயிற்றில் பிறந்த அசலமுனிவன், மான்வயிற்றில் பிறந்த சிருஞ்சி, புலிவயிற்றில் பிறந்த விரிஞ்சி, நரி வயிற்றில் பிறந்த கேசகம்பளன் ஆகியோரை உயர் அறவோர் கூட்டத்தினர் என்று நீங்கள் போற்றுகின்றீர்; விலங்குகளின் வயிற்றில் பிறந்த இவர்கள் உயர்ஜாதியினராகக் கருதப்பெறும் நிலையில், இனிய பாலைத் தருகின்ற பசுவோடு தொடர்புடைய நான் மட்டும் எப்படி இழிகுலத்தவன் ஆக முடியும் ஆகமுடியும் என்று புரட்சிக்குரல் எழுப்புகின்றான். இதன் மூலம், பிறப்பின் அடிப்படையில் ஏற்படும் ஜாதி வேறுபாடுகளைப் பாராட்டும் மனநிலைக்குச் சாவுமணி அடிப்பது தெளிவாகப் புரிகிறது.
---------------- முனைவர் ச.முருகேசன் அவர்கள் "உண்மை" பிப்ரவரி 15-28 2009 இதழில் எழுதிய கட்டுரை
Labels:
மூடநம்பிக்கை
23.2.09
தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் பிரித்து தனித்தனியாக மசோதா கொண்டு வருவது பிரித்தாளும் சூழ்ச்சியே!

* தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் திடுக்கிடத்தக்க சதிப்பின்னல்கள்!
* 47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாதாம்!
* தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் பிரித்து தனித்தனியாக மசோதா கொண்டு வருவது பிரித்தாளும் சூழ்ச்சியே!
இன்னும் இரண்டு நாள்கள்தான் நாடாளுமன்றக் கூட்டம்
அதற்குள் இரு மசோதாக்களையும் புதிய வடிவத்தில் கொண்டு வருக!
சென்னையில் நாளை காலை இதனை
வலியுறுத்தி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கை
47 கல்வி நிறுவனங்களை - தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பட்டியலிட்டு, அவற்றில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற சமூகநீதிக்கு எதிரான கருத்துக்களை நீக்கி, புதிய வடிவில் மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
14ஆவது மக்களவையின் கடைசித் தொடர் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. புதன்கிழமையோடு அது முற்றுப் பெறுகிறது. இந்த நிலையில் மகாசிவராத்திரி என்ற பெயரில் திங்கள்கிழமை நாடாளுமன்றத்திற்கு விடுமுறையாம்! (வாழ்க மதச்சார்பின்மை!)
இன்னும் இருநாள்களே!
மீதி இருக்கும் இரு நாள்களில் பெரும்பகுதி மக்களான தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தேசியக் குறைந்தபட்ச திட்டத்தில் (National Common Programme) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று இது (2004 டிசம்பர்).
அதன்படி தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான (பணிகள் மற்றும் சேவைகள்) இட ஒதுக்கீடு மசோதா 2004 என்பது மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது. அப்பொழுது கிளம்பிய சில எதிர்ப்பின் காரணமாக, திரு. ஈ.எம்.சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் அமைந்த பணி யாளர் துறையைச் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுதர்சன் நாச்சியப்பன் குழுவின் முக்கியப் பரிந்துரைகள்
அந்தக் குழு பல முக்கியமான பரிந்துரைகளை இணைத்திருந் தது; இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தவறு செய்யும் அதிகாரி களுக்கு மூன்றாண்டு சிறை அல்லது 50 ஆயிரம் ரூபாய் அப ராதம் அல்லது இவை இரண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.
அப்படி என்ன அவசரமோ!
ஆனால், அந்தக் குழு பரிந்துரைத்த முக்கியமானவற்றை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு, 2008 டிசம்பர் 23இல் மாநிலங்களவையில் இந்த மசோதா அவசர அவசரமாக (ஒதுக்கப்பட்ட நேரம் இரண்டே நிமிடங்கள்) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டிய சட்டரீதியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதிலிருந்தே இதன் பின்னணியில் உயர் ஜாதியினரின் கைகள் இருக்கின்றன என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
கமுக்கத்தின் இரகசியம் என்ன?
அ. தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களின் நலத் துறைக்கு (Ministry of Social Justice and Empowerment) இந்த மசோதா அனுப்பப்படவில்லை.
ஆ. பழங்குடியினரின் அமைச்சகத்துக்கும் (Ministry for Tribal Affairs)அனுப்பி வைக்கப்படவில்லை.
இ. தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகச் செயல்பட்டுவரும் சட்ட ரீதியான அமைப்பான தேசிய ஆணையத்தின் (National Commission for Scheduled Castes) கவனத்திற்கு இந்த மசோதா கொண்டு செல்லப்படவில்லை. இது ஒரு அப்பட்டமான சட்ட மீறலாகும்.
ஈ. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கண்களுக்கும் காட்டப்படவில்லை.
இந்திய அரசமைப்பின் சட்டம் 338இன் துணைப் பிரிவு 9இன்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான (SC) கொள்கைகளை உருவாக் கும்போது மத்திய மற்றும் மாநில அரசுகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்தின் கருத்தினைக் கேட்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தையும், நடைமுறைகளையும் கண்மூடித்தனமாகத் தூக்கி எறிந்து, மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது என்பது எவ்வளவு பெரிய அநீதி - கொடுமை!
அடிப்படையே தவறு!
இன்னும் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இந்த மசோதா மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பாகத் தான் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்; அதற்கு மாறாக பிரதமரின் கீழ் செயல்படும் நாடாளுமன்றப் பணிகள் குறித்த அமைச்சரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
திடீர் சேர்க்கைகள் உள்ளே நுழைந்த பின்னணி என்ன?
2004 டிசம்பரில் முதல் முதலாக மக்களவையில் இந்த மசோதா வைக்கப்பட்ட போது இடம் பெற்றிராத சில பகுதிகள் - தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்கும் மரண அடி கொடுக்கும் வகையில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
1. 45 நாள்களுக்கு உள்பட்ட மத்திய மாநில அரசு வேலைகளில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது.
2. அவசர காலங்களில் ஏற்படும் குறிப்பிட்ட மத்திய மாநில அரசு வேலைக்கான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கிடையாது.
3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சார்ந்த பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கூடாது.
4. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த (அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் போன்றவை) 47 கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது.
இத்தகைய பகுதிகள் இணைக்கப்பட்டு தாழ்த்தப்பட்டோரின் தலையில் இடியைப் போட்டுள்ளனர்.
பின்னணியில் இருந்த கைகள் யாருடையவை?
இப்படிப்பட்ட அபாயகரமான பிரிவுகளைச் சேர்த்தது வெளியில் தெரியக்கூடாது; கமுக்கமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சூதான எண்ணத்தின் காரணமாகத்தான் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இந்த மசோதா திட்டமிட்டே அனுப்பி வைக்கப்படவில்லை என்பது வெளிப்படையாகும்.
இதன் பின்னணியில் இருக்கும் கைகள் யாவை என்பது முக்கிய மாகும். 2008இல் கவுஹாத்திக்கு (அசாம் மாநிலம்) பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் சென்றிருந்த போது அய்.அய்.டி. இயக்குநர்கள் பிரதமரைச் சந்தித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இடஒதுக்கீடு அளித்தால் தகுதி கெட்டுப்போய் விடும் என்று உபதேசித்த பின்னணியில் தான் இது நடந்திருக்கிறது என்று தெரிய வருகிறது.
அந்த அய்.அய்.டி. இயக்குநர்கள் எல்லாம் யார்? சமூக நீதியை ஒழிக்க கங்கணம் கட்டியுள்ள பார்ப்பனர்கள்தானே அல்லது உயர் ஜாதிக்காரர்கள்தானே என்பது சொல்லாமலேயே விளங்கும்.
எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டனரே!
நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தும், அவர்களுக்காக ஆணையம் இருந்தும், எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு, இப்படி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால், 2009ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மத்திய அமைச்சரவை இதனை எப்படி ஏற்றுக் கொண்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
கற்க வேண்டிய பாடம்
இதில் மிக முக்கியமாகப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று உண்டு. 2004 டிசம்பரில் இந்த மசோதா மக்களவையில் வைக்கப்பட்ட போது - தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மசோதாவாகத்தானிருந்தது. இடஒதுக்கீடு என்று வரும்போது தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான பொதுவான அம்சம் என்பதால் இரு பிரிவினரையும் சேர்த்தே அவ்வாறு உருவாக்கப்பட்டது.
பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாவதா?
ஆனால் இதரப் பிற்படுத்தப்பட்டோரை நீக்கிவிட்டு, தாழ்த்தப் பட்டோர் மற்றும்மலைவாழ் மக்களுக்காக தனி மசோதாவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சில தலைவர்கள் வற்புறுத்திய தவறான காரணத்தால் தனித்தனியாக மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது ஒரு பிரித்தாளும் (Divide an Rule) தன்மைக்குப் பலியான சோகமாகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஒன்றாக நிற்கும் பட்சத்தில், அந்தப் பலத்தின் வலிமையைத் தெரிந்து ஆதிக்க வாதிகள் தங்கள் வால்களை ஆட்ட முன்வரமாட்டார்கள். பிற்படுத் தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் இரு கைகள்; ஒன்றுக்கு மற் றொன்று எதிரி அல்ல. காலம் காலமாக உயர்ஜாதியினரின் சூழ்ச்சி வலையில் நம் மக்கள் பலியாவது இன்றுவரை தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது.
இன்னும் இரண்டே நாள்கள்தான்
14ஆவது மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடரிலேயே (வரும் செவ்வாய், புதனுக்குள்) தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத் தப்பட்டோருக்குமான இரு மசோதாக்களையும் இடையில் இணைக்கப்பட்ட ஆபத்தான சரத்துக்களை அறவே தூக்கி எறிந்து, திரு. சுதர்சனம் நாச்சியப்பன் அவர்களின் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த சிபாரிசுகளையும் இணைத்து, காலதாமதம் செய்யாமல் குறுக்குச்சால் ஓட்டாமல் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமாய் மத்திய அரசை வலியுறுத்துகின்றோம். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் - ஏன் எதிர்க்கட்சிகளும்கூட கோடானு கோடி தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியைப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்!
இதனையொட்டி, நாளை 24.2.2009 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் நடைபெறும். அனைத்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ், சமூகநீதி அமைப்புகளும் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். இதில் தவறு நேர்ந்தால், அடுத்து இரண்டொரு மாதங்களில் வரவிருக்கும் தேர்தலில் மக்களைச் சந்தித்து வாக்குகள் கோரும் போது, மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான இந்த மக்களின் தீர்ப்பு வேறு மாதிரியாகவே இருக்கும் என்றும் எச்சரிக்கின்றோம்.
------------------- "விடுதலை" - 23.2.2009
Labels:
வீரமணி
Subscribe to:
Posts (Atom)
