Search This Blog

2.9.08

விரதப்புரட்டு என்பது பார்ப்பன சூழ்ச்சி



உமாமகேஸ்வர பூஜை விரதம்



"நைமிசாரண்யவாசிகளுக்கு சூதபுராணிகர் சொன்னது" "ஆனந்த தேசத்தில் வேத விரதன் என்னும் பிராமணனுக்கு சாரதை என்று ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரில் மனைவியை இழந்த பத்மநாபன் என்னும் கிழப்பார்ப்பான் அந்தப் பெண்ணின் தகப்பனுக்கு நிறைய பணம் கொடுத்து, தனக்கு அந்தப் பெண்ணை இரண்டாவது பெண் ஜாதியாக விவாகம் செய்து கொண்டான். அந்தக் கிழப்பார்ப்பான் மணக்கோலம் முடியும் முன்பே விஷம் தீண்டி இறந்து போனான். பிறகு அந்தப் பெண் தகப்பன் வீட்டிலேயே இருந்தாள். சில நாள் பொறுத்து ஒரு முனிவர் சாரதையின் வீட்டிற்கு வந்தார். சாரதை அவருக்கு மரியாதை செய்தாள். உடனே அந்த முனிவர் சாரதையை "நீ புருஷனுடன் இன்பமாய் வாழ்ந்து நல்ல பிள்ளைகளைப் பெறக் கடவாய்" என்று ஆசீர்வாதம் செய்தார். அதற்கு சாரதை, "பூர்வஜென்ம கருமத்தின் பலனாய் நான் விதவையாகி விட்டதால் தங்களின் ஆசீர்வாதம் பலியாமல் வீணாய் போய்விட்டதே" என்றாள். அதற்கு அந்த ரிஷி, "நான் கண் தெரியாத குருடனானதால் அறியாமல் அந்தப்படி ஆசீர்வாதம் செய்ய நேரிட்டு விட்டது. ஆனாலும், அது பலிக்கும்படி செய்கிறேன் பார்" என்று சொன்னார். "என் புருஷன் இறந்து வெகுநாளாய் விட்டதே; இனி அது எப்படி பலிக்கும்?" என்று சாரதை கேட்க, அதற்கு அவர், நீ உமாமகேஸ்வர விரதம் அனுஷ்டித்து வந்தால் கண்டிப்பாய் நீ உத்தேசித்த காரியம் கைகூடும்" என்று கூறினார். "அவ்விரதம் அனுஷ்டிப்பதெப்படி?" என்று சாரதை கேட்டாள். அதற்கு முனி சொல்லுவதாவது:

"சித்திரை அல்லது மார்கழி மாதத்தில் ஒரு பிராமணனை அவன் மனைவியுடன் நல்ல பீடத்தில் உட்கார வைத்து அவர்களைப் பார்வதி பரமசிவனாகப் பாவித்து, மலர்களால் அர்ச்சித்து, தினமும் அன்ன ஆகாரமிட்டு வருஷக்கணக்காய் பூசை செய்து, பார்வதி பரமசிவ உருவத்தை மனதில் நினைத்து அதற்கு விரத அபிஷேகம் செய்து ஆராதித்து பஞ்சாட்சரத்தை தியானித்துக் கொண்டிருந்தால் நினைத்த காரியமெல்லாம் கைகூடும்" என்றார். அது கேட்ட சாரதையானவள் அந்தப்படியே அதுமுதல் தனக்கு முனிவரின் ஆசீர்வாதம் பலிக்க வேண்டுமென்று கருத்தில் கொண்டு, முனிவர் சொன்னபடி உமாமகேஸ்வர விரதத்தை சிரமமாய் அனுஷ்டித்து வந்தாள். உடனே பார்வதி தேவி தாரதைக்கு பிரத்தியட்சமாகி "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டாள். சாரதை "எனக்கு புருஷன் வேண்டும்" என்றாள். பார்வதி, "அப்படியே உன்னை ஒருபுருஷன் தினமும் வந்து சொப்பனத்தில் புணருவான்; அதனால் நல்ல ஒரு குழந்தை பிறக்கும்" என்று வரம் கொடுத்தாள். அது முதல் சாரதையின் சொப்பனத்தில் தினமும் ஒரு புருஷன் வந்து புணர்ந்து கொண்டே இருந்தான். அதனால் சாரதைக்கு கர்ப்பமும் உண்டாயிற்று. அதைக் கண்ட அவ்வூரார் எல்லோரும், சாரதை சோரம் போய் கர்ப்பம் ஆய்விட்டாள் என்று பழித்தார்கள். இதைக் கண்டு சாரதை துக்கப்பட்டாள். பிறகு பழித்தவர்கள் வாய் அழுகி அதில் புழு உதிரும்படி பார்வதி செய்து விட்டாள். பத்து மாதம் பொறுத்து சாரதை ஒரு புத்திரனைப் பெற்றாள். அதற்கு சாரதேயன் என்று பெயர் சூட்டி, மகாமகிமை பொருந்திய சிவராத்திரியன்று தாயும் பிள்ளையும் கோகர்ணத்திற்கு யாத்திரை சென்றார்கள். செல்லும் வழியில், சொப்பனத்தில் வந்து புருஷன் நெரில் வந்து சாரதையுடன் கலந்து கொண்டான். பிறகு கொஞ்ச காலம் சாரதையும் புருஷனும் சந்தோஷமாய் வாழ்ந்து இன்பமனுபவித்து புருஷன் இறந்து போனான். புருஷன் இறந்ததும் உடனே சாரதை உடன்கட்டையேறி இருவரும் சிவபதமடைந்தார்கள்" என்று நைமிசாரண்யவாசிகளுக்கு சூதக முனிவர், வியாசரிடம் கேட்டு தெரிந்ததைச் சொல்லுகிறேன் என்று சொன்னார். இந்த சரிதை பிரமோத்திர புராணத்தில், உமாமகேஸ்வர விரத மகிமையும், பிரதத்தின் பலனும் என்கின்ற தலைப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதை கவனிப்போம்.

இந்தக் கதையின் ஆகாசம் எவ்வளவு மோசமாயிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள். ஒரு சிறு பெண்ணை ஒரு கிழவன் அந்தக் காலத்திலும் கட்டிக் கொள்ளுகின்ற வழக்கமும், தகப்பன் பணம் வாங்கிக் கொண்டு சாகப்போகும் கிழவனுக்கு தனது சிறு பெண்ணை கட்டிக் கொடுக்கும் வழக்கமும் பார்ப்பனர்களுக்குள் இருந்ததாக வைத்துக் கொண்டாலும், புருஷன் இறந்தவுடன் உடன்கட்டையேறாமல் பெண்ஜாதியான (சாரதை) சிறு பெண் இருந்திருக்க முடியுமா? என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு சமயம் உடன்கட்டை ஏறாமல் இருந்திருந்தாலும், ஒரு ரிஷிகள் இந்தப் பெண் விதவை என்ற சங்கதி தெரியாமல் போகுமா? ரிஷிக்கு ஒரு சமயம் அந்தப்படி தெரியாமல் போயிருந்தாலும், ஒரு குருட்டு ரிஷி தெரியாமல் சொல்லிவிட்ட காரியம், ஒரு விரதம் அனுஷ்டிப்பதால் கைகூடி விடுமா? அந்தப்படி கூடுமானாலும், பார்ப்பனனையும் அவன் பெண்ஜாதியையும் பார்வதி பரமசிவன் போல் எண்ணி பூசை செய்தால் பார்வதி வந்துவிடுவாளா? அப்படி வருவதாயிருந்தாலும், பார்வதி நேரில் புருஷனைக் கொடுக்காமல், தூக்கத்தின்போது கனவில் வந்து புணர்ந்து விட்டுப் போகும்படி கட்டுளையிடுவாளா? அப்படி கட்டளையிடுவதானாலும், கனவில் புணர்ந்ததற்கு கனவில் கர்ப்பமுண்டு பண்ணாமல், விழித்த பிறகுங்கூட அந்த கர்ப்பம் இருக்கும்படி செய்வாளா? அப்படித்தான் செய்தாலும், அதன் காரணத்தை பொது ஜனங்களுக்குத் தெரியப்படுத்தாமல் இரகசியமாய் இருக்கச் செய்து, இந்த இரகசியம் தெரியாத பொது ஜனங்கள் சாரதையின் கர்ப்பத்தைபற்றி சந்தேகப்பட்டால் அதற்கு பார்வதி திருப்தி அடையும்படி சமாதானம் சொல்லாமல் சந்தேகப்பட்டவர்கள் வாய் அழுகிப் புழு தள்ளும்படி செய்வது யோக்கியமாகுமா? அன்றியும், கோகர்ணத்திற்குப் புருஷனை வரும்படி செய்த பார்வதியும் பரமசிவனும், பொது ஜனங்கள் சந்தேகப்படும்போது வரும்படி செய்திருக்கப்படாதா? அன்றியும், அந்தப் புருஷனும் சாவானேன்? அப்படியே காலம் வந்து செத்து இருந்தாலும், முன்னைய கிழப்புருஷனுக்கு உடன்கட்டை ஏறாத குமரி சாரதை, இந்தப் புருஷனுக்கு ஏன் கிழவி ஆனபின் உடன்கட்டை ஏறினாள்?

வாசகர்களே! வேதப்புரட்டு, இதிகாசப்புரட்டு, புராணப்புரட்டு என்பதுபோல் இந்த விரதப் புரட்டும் எவ்வளவு முட்டாள்தனமானதும் அயோக்கியத்தனமானதும் சுயநல சூழ்ச்சி கொண்டதுமாய் இருக்கின்றது என்பதை நன்றாய் கவனித்துப் பாருங்கள்.

விரதம் என்றால் ஒரு பார்ப்பனனையும், பார்ப்பனத்தியையும் பார்வதி பரமசிவன்போல் பாவித்து, அபிஷேகம் பூசை ஆராதனை செய்தால், விதவைகளுக்கு புருஷன் சொப்பனத்தில் வருவான் என்பது எவ்வளவு அயோக்கியத்தனமான கதை? இப்படித்தானே இப்போதுள்ள விதவைகள் புருஷ ஆசைக்கு விரதமிருந்து "சொப்பனத்தில்" புருஷருடன் புணர்ந்து கொண்டிருப்பார்கள். சாரதையைப் போல் அநேக விதவைகள் இப்போதும் கர்ப்பமானாலும், பழி சொல்லுகின்றவர்கள் வாயில் பார்வதி புழுக்கள் தள்ளச் செய்யாததால்தான் அந்த விரதமிருக்கும் விதவைகளெல்லாம் கர்ப்பங்களை தாங்களாகவே அழிந்து விடுகின்றார்கள் போலும். பார்ப்பன சூழ்ச்சி எவ்வளவு மோசமானது என்பதை இதிலிருந்தாவது விரதமிருக்கும் வைதீகர்களும், விரதமிருக்கும் பெண்களும், புருஷர்களும் அறிந்து கொள்ளுங்கள்.



------------------------சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது, -"குடி அரசு", 6.4.1930.

1.9.08

தாழ்த்தப்பட்டோருக்குப் பட்டை நாமம்! -"இந்து" ஏடே தரும் திடுக்கிடும் தகவல்கள்

மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணிகளில்
தாழ்த்தப்பட்டோருக்குப் பட்டை நாமம்!

19 பல்கலைக்கழகங்களில் 16 இல் ஒருவர்கூட இல்லை!

"இந்து" ஏடே தரும் திடுக்கிடும் தகவல்கள்


மும்பை, செப். 1- மத்தியப் பல்கலைக் கழகங்களில் தாழ்த்தப்பட் டோர் மற்றும் பழங்குடி மக்கள், ஆசிரியர்ப் பணிகளில் வஞ்சிக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களை "இந்து" ஏடு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நேற்றைய "இந்து" ஏட்டில் (31.8.2008) ராஹி கெய்க் வார்ட் என்பவர் எழுதியுள்ளதாவது:

இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் கழிந்த பின்னும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 19 மத்தியப் பல்கலைக் கழகங்களில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 40 விழுக்காட்டிற்கும் மேலாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. பல்கலைக் கழக மானியக் குழு அனுமதித்துள்ள 4,887 பணியிடங்களில், தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன ஆசிரியர்கள் 629 பேர் மட்டுமே உள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பல்கலைக் கழக மானியக் குழு வட்டாரங்களின் 2007-08க்கான புள்ளிவிவரங்களின் அடிப்படை யில் இத்தகைய பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளன.

பனாரஸ் பல்கலைக்கழகத்தின் நிலை?

155 தாழ்த்தப்பட்ட பேராசிரியர்களும், 74 பழங்குடியினப் பேராசிரியர்களும் இருக்க வேண்டிய பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் முறையே 86 மற்றும் 24 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதால் அதில் இட ஒதுக்கீட்டு நடைமுறை இல்லை. என்றாலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பேராசிரியர் கள் 193 பேர் தேவை எனப் பட்டியலிடப்பட்டுள்ள போதும், இந்த இனங்களைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூட இப்பல்கலைக்கழகத்தில் இல்லை.

மத்திய அரசின் விதிப்படி, தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு 15 விழுக்காடும், பழங்குடி இனத்தவருக்கு 7.5 விழுக்காடும் ஆக மொதம் 22.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்த போது இந்த இனங்களைச் சேர்ந்தவர்களிடையே உயர்கல்வி பயின்றவர்கள் இன்னமும் குறைவாகவே உள்ளனர் என்பது தெரிய வந்தது. மத்தியப் பல்கலைக் கழகங்களில் அனுமதிக்கப் பட்டுள்ள 4,887 பணியிடங்களில், தற்போதுள்ள 629 தாழ்த்தப் பட்ட பழங்குடி இன பேராசிரியர்கள் அவர்களின் பிரதிநிதித்து வத்தில் 22.5 விழுக்காட்டை விட மிகக் குறைவாக 12 . 8 விழுக் காடாக மட்டுமே உள்ளது.

மத்தியப் பல்கலைக்கழகங்களின் நிலை!

மத்தியப் பல்கலைக்கழகங்களிலும், அரசின் நிதி உதவி பெறும் தன்னிகர் பல்கலைக் கழகங்களிலும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பயன் நிறைந்த வகையில் நடைமுறைப் படுத்த பல்கலைக் கழக மானியக் குழு தவறிவிட்டது என்று பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டும் ஆவணம் தெரிவிக்கிறது.

விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மேலாக பேராசிரியர், ரீடர் பணியிடங்களைக் காணும்போது, இவற்றில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதைக் காணலாம். பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் இந்த இனங்களைச் சேர்ந்த பேராசிரியர்களோ, ரீடர்களோ எவருமே இல்லை.

19 இல் 16 பழுது!

மொத்தம் உள்ள 19 பல்கலைக் கழகங்களில் 16 பல்கலைக் கழகங்களில் தாழ்த்தப்பட்ட இனப் பேராசிரியர்களும், 17 பல்கலைக் கழகங்களில் பழங்குடியினப் பேராசிரியர்களும் எவருமே இல்லை. இதன் காரணம், அண்மைக் காலம் வரை, இட ஒதுக்கீட்டின் மூலம் நியமனம் பெறுவது விரிவுரையாளர் நிலையில் மட்டுமே அனுமதிக்கப் பட்டு வந்ததும் காரணமாக இருக்கக்கூடும். இட ஒதுக்கீடு பதவி உயர்வுக்கோ, மேல் நிலைப் பணியிடங்களுக்கோ பொருந்தாத தாக இருந்தது. 2006 இல் வெளியிடப்பட்ட பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிகாட்டும் நெறிமுறைகளில் பேராசிரியர் மற்றும் ரீடர்கள் நிலையிலும் 22 . 5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இட ஒதுக்கீடு சரியான அளவில் நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்பதை அதிகாரிகள் நன்கு அறிந்திருந்த நிலையிலும், கடந்த சில ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இந்தப் புள்ளிவிவரங்கள் எனக்கு வியப்பளிக்கவில்லை என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர்.கே.காலே கூறுகிறார். இட ஒதுக்கீடு சரியான அளவு நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து அவரே கல்விப் பத்திரிகையான யூனிவர்சிடி நியூஸ் இதழில் கேள்வி எழுப்பி யுள்ளார். இது மிகமிக மெதுவான ஒரு நடைமுறையாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்ட அவர், இடஒதுக்கீட்டுக் கொள்கை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதில் பல்கலைக் கழக மானியக் குழு ஆர்வம் காட்டுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறார்.

மத்தியப் பல்கலைக் கழகங்களுடன் இணைப்புப் பெற்றுள்ள மாநிலப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் நிலையைக் காணும்போது நிலைமை மேலும் மோசமாக உள்ளது. மாநிலப் பல்கலைக் கழகங்கள் மாநில அரசு அனுமதித்துள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே பின்பற்றுகின்றன.

53 இல் 50-இன் நிலை

53 மாநில பல்கலைக் கழகங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேலான இந்த இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்று பல்கலைக் கழக மானியக் குழுவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் சில பல்கலைக்கழகங்களில் இந்த இனங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் கூட இல்லை; பேராசிரியர்கள் ரீடர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

இவ்வாறு இத்தகைய இனங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பது கவலை அளிப்பதாக இருப்பதாக கல்வியாளர்கள் ஒப்புக் கொண்டாலும், மத்திய அல்லது தனிப்பட்ட கல்லூரி அளவில் எந்த அதிகாரியும் இதற் காக தண்டனை விதிக்கும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை.

அதிகார மனப்பாங்கு

பல்கலைக்கழக மானியக் குழு இதுபற்றிய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிற போதும், நடைமுறைப் படுத்துவதற்கான கால கெடு விதிக் கப்படாதது, சிக்கல் நிறைந்த நியமன நடைமுறைகள், அதிகாரிகளின் அதிகார மனப்பாங்கு, அனைத்திற்கும் மேலாக, மக்களின் மனதில் ஆழப் பதிந்து போன ஜாதிய உணர்வுகள் எந்த விதத் தண்டனையுமின்றி சட்டத்தை மீறிச் செயல்படுவதற்கான பாதைகளை வகுத்துக் கொடுத் துள்ளன.

நொண்டிச் சமாதானங்கள்

இன்றும் கூட, ஒதுங்கி இருக்கும் நகரங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன ஆசிரியர்கள், நியாயமற்ற ஒப்பந்த அடிப்படையிலான நியமன நடைமுறை, திடீரென வேலை நீக்கம் செய்வது, நேர்காணும் குழுவால் காரணமின்றி நிராகரிக்கப் படுவது, வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஆகிய அநீதிகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இத்தகைய தொரு காட்சிக் களத்தில், வழக்கமாகப் பாடும் பல்லவியான, "உரிய தகுதி படைத்தவர்கள் கிடைக்கவில்லை" என்று கூறுவதோ "நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள் தகுதி பெற்றவர்களாக இல்லை" என்று கூறுவதோ சரியானதாகத் தோன்றவில்லை.

-------------------------நன்றி: "தி இந்து" 31.8.2008 - ராஹி கெயிக்வார்ட்

யானை முகமுடைய பிள்ளயைர் பிறந்தது எப்படி?


விநாயகர் கதை...

'கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா' என்ற நூலில் விநாயகரைப்பற்றி அறிவுடையோர் அருவருக் கத்தக்கதான ஒரு கதைவடிவிற் கட்டிவிட்டார்கள்.

யாங்னம் எனில் கூறுதும் - திருக்கைலாயத்தின் கண் சிவபிரானும், அம்மையும் மகிழ்ச்சியோடு, அமர்ந் திருக்கையில் கோயிலின் ஒரு பக்கத்து சுவரில் ஆண் - பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மையைப் புணர வேண்டும் என்னும் காமவிருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம். அக்குறிப்பினைத் தெரிந்துகொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவெடுக்க இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தாராம் அப்புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளயைர் பிறந்தாராம். இவ்வாறு அந்த புராணத்தின் கண் சொல்லப்பட்டது.

பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கேனும் அருவருப்பினையும் மானக் குறை வினையும் விளையாது ஒழியுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய்யாத இக்காமச் செயலினை இறைவன் செய்தான் என்பது எவ்வளவு அடாததாயிருக்கின்றது?

தேவ வடிவில் நின்று புணருவதைவிட இழிந்த விலங்கு வடிவில் நின்று புணருமின்பம் சிறந்ததென்றும் கூற எவரேனும் ஒருப்படுவாரா? அத்தகைய இழிந்த காம - இன்பத்தினை இறைவன் விரும்பினானென்றால் பேரின்ப உருவாயே நிற்கும் கடவுள் இலக்கணத்துக்கு எவ்வளவு மாறுபட்டதாய் எவ்வளவு தகாததாய் எவ்வளவு பழிக்கத்தக்கதாய் இருக்கின்றது.
திருஞான சம்பந்தரும்கூட,

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன்!

என்று திருப்பதிகத்தில் பாடியுள்ளாரே!

-------------------நன்றி: "விடுதலை" 1-9-2008

“இழிவு” பெறும் வேலைக்கு மனப்பூர்த்தி யாகவே வந்தேன்.



“இந்த இயக்கம் எந்தத் தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும் வீர சொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது. வீரனாவதில் பயன் உண்டு என்று நம்பிக்கை கிடையாது. காந்திக்குமேல் ஒருவன் வீரனாகவோ மகாத்மாவாகவோ விளம்பரம் பெற முடியாது. ஆனால் அவரால் மனித சமூகத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு பயனும் ஏற்படவில்லை. ஏற்படப் போவதில்லை. வேண்டுமானால் அவருக்கும் அவர் சந்ததிக்கும் பெரிய மதிப்பு ஏற்பட்டு விடும். கோவிலும் ஏற்படும்.

ஆனால் நான் அப்படிப்பட்ட புகழை விரும்பவில்லை. எனக்குப் புகழ் வேண்டியதில்லை. புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். எத்துறையிலும் நான் இருந்து பார்த்து விட்டுத்தான் இந்த “இழிவு” பெறும் வேலைக்கு மனப்பூர்த்தி யாகவே வந்தேன். ஆதலால் நான் புகழ் பெறும் மார்க்கமோ வீரப்பட்டம் பெறும் மார்க்கமோ அறியாதவனல்ல.

----------------தந்தைபெரியார் -- ‘குடி அரசு’ 29.3.1936

ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

பிராமணரல்லாதவர்கள் தீண்டின குளத்து ஜலத்தை ஒருங்கே இறைத்து அதில் ஜனிக்கும் ஊற்று நீரை எடுத்துப் பானஞ்செய்வது அதிக கஷ்டமானதால் அது தீட்டல்லவென்றும் முகந்துவைத்த குடத்தின் ஜலத்தை அச்சூத்திரர். தீண்டின் அதைக் கொட்டிவிட்டு மீண்டும் சுலபத்தில் முகந்து கொள்ளக் கூடுமாதலால் அதைமட்டும் தீட்டெனவும் பிராமணர் கூறுகின்றனர். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

நியாயாதிபதிகளால் குற்றவாளிகளென்று தீர்மானிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்படும் பிராமணர்களென்போர் சிறைச்சாலைகளில் தாங்களுண்ட பாத்திரங்களை, நாடோறும் அலம்பி அவற்றிலேயே போஜனமுண்டு வருவதும், அவற்றை யெச்சாதியார்த் தீண்டினும் அவற்றிலேயே போஜன முண்பதும் தீட்டல்லவா? சிறைச் சாலைகளினின்று விடுதலையான பின் அப்பிராமணர் சமையல் செய்யும் பாத்திரங்களைப் பிராமணரல்லாதவர்கள் பார்க்கின், பார்த்த மாத்திரத்தில் அவை தீட்டாயினவெனக் கூறி அவற்றை உடைத்தெறிய வேண்டுமாம். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

பிராமணர் தாம் கருதிய விடத்திற்குச் செல்ல இரயில்வே ஸ்டேஷன்களில் டிக்கட் வாங்கும்போது பறையரென்றும், சக்கிலியரென்றும் பாராமல் ஒருவர் மீதொருவர் நெருக்கவும், ஒருவர் வேர்வை ஒருவர்மீது வடியவும் மிக்க வருத்தத்துடன் நின்று டிக்கட்டு வாங்கிக் கொண்டு வண்டியின் மீது உட்கார்ந்தபின் அப்பிராமணர் தம்பக்கம் உட்கார்ந்துள்ள அப்பறையர் சக்கிலியரை நோக்கி அடா ஈனஜாதிப்பயலே மேலே விழாதடா, தொடாதடா எனத் தமது ஜாதியினை மேம்படுத்திக் கொள்வதை நாம் பன்முறையும் பார்த்து வருகிறோமே. ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

கடவுளைச் சொப்பனத்தில் பார்ப்பவர்களாகிய பிராமணர் தாங்கள் இருப்புப்பாதை மார்க்கமாக நெடுங்தூரஞ் செல்ல நேரிட்டபோது புளியோரை ததியோதனம் முதலிய போஜன வகைகளுடன் வண்டியேறிச் செல்லுகையில் தம் அருகில் உட்கார்ந்திருக்கும் எச்சாதியாரையும் கவனியாமல் தாம் கொண்டு வந்த போஜனத்தை யுண்பதை மற்றெச் சாதியார் தீண்டியும் பார்த்துமிருந்தும் போஜனமுண்டு - தம் மனைக்கு சென்றபின் தாமுண்ணும் போஜனத்தை காவலர்களும் பார்க்கலாகாதென்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

பிராமணர் தாம் ஸ்நானஞ்செய்தபின் ஸ்நானஞ் செய்யா திருக்கும் தம்மினத்தவரே தம்மைத் தீண்டலாகாதென இதர ஜாதியாரிடத்தும் வாசகம் படித்து தம்மைத்தாமே புகழ்ந்து கொள்ளும் விவேகிகளாகிய பிராமணரில் திரளான பெயர் எவர்களிலும் இழிகுலத்தாராகிய விலைமாதர் மனைகளிலும் ஓட்டல்களிலும் மது மாமிசாதிகளுடன் போஜனமுண்டு வருகின்றனர். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

சமையல் செய்யும் மட் பாத்திரங்கள் மிகவும் அற்பக்கிரய முடையன ஆதலால், அவை பிராமணரல்லாதவர்களால் பார்க்கப்படுவதினாலேயே தீட்டாயினவென பெருமை சொல்லிக் கொண்டு அவற்றை உடைத்தெறிய வேண்டுமென மொழிகின்றனர். மட்பாத்திரங்களிலும் விலை மிகுந்த செப்புப் பித்தளை பாத்திரங்களோ சூத்திரர் தீண்டத் தீட்டாயினும் அவற்றை உடைத்தெறியாது, புளிசாம்பராதிகளால் தேய்த்து, அலம்புவதே போதுமானதாம். அவற்றிலும் விலையேறப் பெற்ற வெள்ளிப் பாத்திரங்கள் சூத்திரரால் தீண்டப்படினும் புளிசாம்பராதிகளால் தேய்க்கின் தேய்ந்து நஷ்டமாகு மெனக் கருதி ஜலத்தினால் அலம்புவதே போது மெனவும், அதிலும் விலைமிகுந்த பொன் இரத்தினபாணங்கள் ஜலம் படுமாயின் அவற்றின் பளபளப்புப் போய் விடுமென வெண்ணி அவற்றிற்குத் தீட்டில்லையெனவும், வீதிகளிலும் கடைகளிலும் உத்தியோக சாலைகளிலும் ஜலம்தேடி அலம்பி வாங்க அனுகூலிக்கா திருக்கும் ரூபா, அணா, பைசாக்களும் ஜலம் பட்டவுடன் பயன் படாதழிந்துபோகும் நோட்டுகளுக்கும் முத்திரை காகிதங் களுக்கும், தீட்டில்லையாம். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

பிராமணரல்லாதவர்கள் தீண்டின ஜலத்தையும் தீண்டோ மென்று பெருமை படைத்துக் கொள்ளும் பிராமணரில் அநேகர் இங்கிலாந்தினின்று செய்து வரும் மீன் எண்ணெயையும், ஆடு மாடு கோழிகளின் மாமிசங்களால் செய்தனுப்பப்படும்பிஸ்கட் முதலிய தின்பண்டங்களையும், பிராந்தி உஸ்கி முதலிய மயக்கத் திராவகங்களையும் உண்ணுவதே சுகிர்தமாம். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

துரைத்தன வைத்திய கலாசாலையில் வைத்திய சாஸ்திரங் கற்றுப் பரீட்சையில் தேர்ந்து வைத்திய உத்தியோகத்திலமர்ந் திருக்கும் பிராமண வைத்தியர்கள் மூலம், பவுத்திரம், நீரடைப்பு முதலிய வியாதிகளில் வருந்தும் பிராமணரல்லாதவர்கள், பறையர், சக்கிலியர் முதலியவரின் வியாதிகளைப் பரிசோதித்தும், கத்தியால் வகுத்தும், கழுவியும், அவிழ்தப் பிரயோகஞ் செய்தும், பரிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோமே. ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!


- டி.என். அநுமந்து உபாஸகர் - "திராவிடன்" 17.8.1917