Search This Blog

22.6.08

பெரியாரின் வெற்றி



தந்தை பெரியார் அவர்கள் - பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டபோது - அப்போதும் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்,

தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளின் இறுதியில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று விரும்பினார்; அதற்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் பிரகடனம் வெளியிட்டிருந்தார். இன்று அவரது விருப்பம் நிறைவேற்றி வைக்கப்படாத நிலையில் நாம் அவரை அடக்கம் செய்கிறோம். பெரியாரின் நெஞ்சில் ஒரு முள் போல அந்த நிறைவேற்றப்படாத அறிவிப்போடு சேர்த்து அவரை நாம் அடக்கம் செய்கிறோம்
- என்று கண்களில் நீர் பனிக்க - துக்கம் தொண்டையை அடைக்க தழுதழுத்த குரலில் கூறினார்.


2006ல் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மளமளவென்ற பெரியார் கொள்கைகள் பலவற்றை - திராவிடர் இயக்கக் கொள்கைகள் பலவற்றை நிறைவேற்றி வைப்பதில் தீவிரம் காட்டினார் கலைஞர்.

அதனையொட்டி -

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக - அவர் காலத்திலேயே நிறைவேற்றப்படாமல் போய்விட்ட - அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அவரது இறுதி ஆசையை சட்டமாக்கினார்.

சட்டமாக்கியதோடு நின்றுவிடவில்லை. அவர் திருவண்ணாமலை, பழநி, மதுரை, திருச்செந்தூர், திருவரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அமைத்துத் தந்தார். இந்தப் பள்ளிகளில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த பெற்றோரும் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டினர்.

இன்று தமிழகத்தின் பல்வேறு கோயில்களிலும் அர்ச்சகர்களாக இருக்கும் எத்தனை பேருக்கு அர்ச்சனைக்குரிய மந்திரங்கள் முழுமையாகத் தெரியும் என்பது சந்தேகத்துக் குரியதே! எத்தனை பேர் முறையாக இதற்காக சிறந்த குருக்களிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் கேள்விக்குரியதே.
ஆனால் -

கலைஞர் அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், கோயிலின் அமைப்பு முறைகள், வேதங்கள், ஜோதிடம், அர்ச்சனை செய்யும் முறை, ஆகமங்கள், கிரந்தம், திருக்குறள், பன்னிரு திருமறைகள், சைவத் தமிழ் இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் போன்றவை கற்பிக்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்படுகிறது!

ஒரு சாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆகமுடியும் என்ற உயர்சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் அர்ச்சகர்கள் ஆனவர்கள், மன்னனுக்குப் பிறகு அவரது மகன் மன்னன் ஆவது போல - பரம்பரை பாத்தியதையின் பெயரால் - முறையான பயிற்சியோ - சமயப் பற்றோ - அது தொடர்பான விஷய ஞானமோ இல்லாமலே, ஆட்டமேடிக் அர்ச்சகர்களாக வாய்ப்புப் பெற்று தங்களுக்குத் தெரிந்த அளவில் மந்திரம் சொல்லி அர்ச்சித்து வந்தார்கள். பொதுமக்களும் - தங்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை நடத்தப்படுவதால் கண்ணை மூடிக் கொண்டு - கண்மூடித்தனமாக - நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழிபட்டு வந்தார்கள்.
கலைஞர் அரசு - அர்ச்சகர்களுக்கு உரிய தகுதிகளோடு - திறமை மிக்க அர்ச்சகர்களை உருவாக்கித் தந்திருக்கிறது.


அதுமட்டுமா?

இந்தப் பள்ளிகளில் படிக்கும் பலரும் பட்டதாரிகளாகவும், ஜோதிடம், இசை, சிற்பக்கலை என ஒவ்வொரு துறையில் தேர்ந்தவராகவும் உள்ளனர் என்று ஆனந்தவிகடன் (25.6.2008) ஏடு பெருமையோடு குறிப்பிடும் அளவுக்கு இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பல்துறை வித்தகர்களாகவுமிருக்கிறார்கள்.

இது பெரியாரின் வெற்றி

- என்ற தலைப்பிட்டு விகடன் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை வருமாறு:-

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிவிட்டேன் என்று முதல்வர் கருணாநிதி நெகிழ்ச்சியோடு அறிவித்த திட்டம்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். இதையடுத்து தமிழகத்தில் திருவண்ணாமலை, பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.

எப்படி இருக்கிறது அர்ச்சகர் பயிற்சி என்று அறிய, முதல் ஆண்டு பயிற்சியை முடித்த திருவண்ணாமலை பள்ளிக்குச் சென்றோம்.

எட்டாம் வகுப்பு பாஸ் செய்திருந்தாலே போதும், இந்தப் பள்ளியில் சேர்ந்து விடலாம். ஆனால், இந்தப் பள்ளியில் படிக்கும் பலரும் பட்டதாரிகளாகவும் ஜோதிடம், இசை, சிற்பக் கலை என ஒவ்வொரு துறையில் தேர்ந்தவராகவும் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சமூக நீதிக்கான போராட்டத்தில் கிடைத்த பல வெற்றிகளில் இது முக்கியமானது. இவ்வளவு சிறப்பான திட்டத்தின் பயனை அனுபவிக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு நிறைய மகிழ்ச்சி.

இப்பயிற்சியில் நான் அடிப்படையாகக் கற்றுக் கொண்ட விஷயம் ஒழுக்கம். பூசை செய்யும் முறைகளில் ஆகம விதிகளையும் நெறி முறை களையும் கற்றுக் கொண்டேன். வாழ்க்கையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பேன் என்கிறார் விஜயசங்கர் என்கிற மாணவர்.

இப்படியொரு புரட்சிகரமான மாற்றத்தில் என்னுடைய பங்களிப்பும் சிறிய அளவிலாவது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனாலேயே நான் படித்துவந்த பி.காம்., படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, இந்தப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்திருக்கிறேன் என்கிறார் பிரபாகரன்.
நாங்கள் இந்தப் பயிற்சியில் கோயிலின் அமைப்பு முறைகள், வேதங்கள், ஜோதிடம், அர்ச்சனை செய்யும் முறை, ஆகமங்கள், திருக்குறள், பன்னிரு திருமுறைகள், சைவத் தமிழ் இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் என பலவற்றைப் படித்துள்ளோம். தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் பூசை செய்ய எங்களால் இயலும். என்றாலும், தமிழில் அர்ச்சனை செய்வதையே நான் சிறப்பாகக் கருதுகிறேன் என்கிறார் தர்மேந்திரன்.

இம்மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களைப் புலவர் மு.சொக்கப்பனும், சைவ ஆகமங்களை எஸ்.எஸ்.ராமகிருஷ்ண னும் போதிக்கின்றனர்!

- என்கிறார் விகடன் கட்டுரையாளர் சுப.தமிழினியன்!


அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆனால் - கோயிலின் புனிதம் கெடும் - சாமிக்குப் புரியாது - ஆகமங்களுக்கு அது விரோதமானது என்று இதுவரை கூப்பாடு போட்டு வந்த குறுக்குச்சால் ஓட்டிகள் இனியாவது தங்களது பழைய - துருப்பிடித்த - மூடநம்பிக்கைகளை கைவிட்டு - பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல - என் பதை ஒப்புக் கொண்டு - இந்தப் புதுமையை புரட்சியை வரவேற்கத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோமாக!


---------- நன்றி: `முரசொலி 22.6.2008

பெண்களைப் பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வருவது மாநாடுகளுக்கு அழைத்து வருவது என்ற வழக்கத்தைத் தமிழ்நாட்டில் புகுத்தியவர் பெரியார்



நாகம்மையார் உயிரோடு இருக்கும் வரையிலும் ஈ.வெ.ரா.வின் வீடு எப்போழுதும் ஒரு விருந்துக் கூட்டமாகவே விளங்கும். அவர் எத்தனைப் பேரானாலும் முன்னெச்சரிக்கை இல்லாமல் வீட்டுக்குச் சாப்பாட்டுக்கு அழைத்துப் போவார். எந்த நேரத்தில் எவர் சென்றாலும் இரவு 12- மணியானாலும் "சாப்பிட வாருங்கள் இலை போட்டாயிற்று என்பது தான் அம்மையாரின் முதல் உபச்சாரம்".

நாகம்மையாரின் கொள்கைகள் இரண்டே. ஒன்று ஈ.வெ.ரா. எக்காரியஞ் செய்தாலும் அதற்குத் தானும் துணை நிற்பது. இரண்டு தன் இல்லத்திற்கு வரும் எல்லோருக்கும் சோறு போடுவது. இந்த இரண்டு கொள்கைகளையும் அவர் இறக்கும் வரையிலும் தவறாமல் பின்பற்றி வந்தார். எவ்வளவு பேர் மிகுதியாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு மகிழ்ச்சி. அடுத்தபந்திக்கு இன்னும் அதிகமான பேர் வரமாட்டார்களா? என்பதே அவருடைய கவலையாக இருக்கும். ஈ.வெ.ரா.வைச் சதா "வையும்" ஆண்களாலும் வீட்டுக்கு வந்தால் உடனே சாப்பாடு போட்டு விட்டு தான் வேறு வேலை பார்ப்பார்.

இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் நாகம்மையாரைப் பற்றி நன்கறிவார்கள். சீர்திருத்தவாதிகள் அனைவரும் நன்குணர்வார்கள். ஈ.வெ. ரா.வின் அரசியல் சமூக எதிரிகளும் அம்மையாரிடம் மதிப்பும், அன்பும் பாராட்டி வந்தனர். ஈ.வெ.ரா.வின் பொதுவாழ்க்கைக்குக் காரணம் அம்மையாரின் அருங்குணங்களேயென்பதை எவரும் மறுக்க முடியாது.


திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் 1933- இல் ஈரோட்டில் நாகம்மையாரின் உருவப் படத்தை திறந்து வைத்த போது கூறியதாவது:
"செல்வச் செருக்கில் மூழ்கிக் கிடந்த அம்மையார்! தேச நலத்தின் பொருட்டு அச்செல்வங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டார். அம்மையார் ஏட்டுக் கல்வி அதிகம் பெறாவிடினும், உலக அறிவில் உயர்ந்து விளங்கினார்.

கணவனுடைய தேசத் தொண்டிற்கும் பின்னர் அவர் புரிந்த சமூகச் சீர்திருத்தத் தொண்டிற்கும் பெருந்துணையாய்த் தம் கணவருடன் ஒத்துழைத்தார். விருந்தோம்பலில் அம்மையாருக்கு இணையானவர் எவருமிரார். தம் இல்லத்திற்கு வருந்தொண்டர்ககட்கு இனிய முகத்துடனும், இன் சொல்லுடனும் இன்னமுது படைத்துவந்ததை எவரும் மறுத்துக் கூற முடியாது.

ஒருசமயம் நானும் நாயக்கரும் திருநெல்வேலிக்குப் பிர்சார நிமித்தம் சென்று விட்டு ஈரோட்டுக்கு இரவு 12-30 மணிக்கு வந்தோம். அன்னம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அய்யப்பாட்டுடனே வந்தோம். அப்பொழுது அம்மையார் அன்புடன் வரவேற்று உடனே அறுசுவையுடன் அமுது படைத்ததை யான் என்றும் மறவேன்.

நாகம்மையாரும், இராமசாமியும் இறுதிவரையிலும் வாழ்ந்த வாழ்வு இன்பகரமானதாகும். அது எல்லோராலும் பாராட்டக் கூடியதாக இருந்தது. பெண்மக்களைப் பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வருவது மாநாடுகளுக்கு அழைத்து வருவது என்ற வழக்கத்தைத் தமிழ்நாட்டில் புகுத்தியவர் ஈ.வெ.ரா. அவர்களேயாவர்.

"காதலர் இருவர் கருத்தொருமித்து

ஆதரவுபட்டதே இன்பம்"

என்னும் அவ்வையார் சொல்லுக்கு இவர்கள் வாழ்க்கையே எடுத்துக்காட்டாகும்.



----------------------- சாமி.சிதம்பரனார் அவர்கள் எழுதிய "தமிழர் தலைவர்" என்ற நூலில் இருந்து..... பக்கம்- 46

ஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை!



குடியானவன் : என்ன சார் தங்களிடம் தனித்துச் சற்று நேரம் பேச வேண்டும் என்கின்ற எண்ணம். ஏனென்றால் நாம் இருவரும் வெகு நாள் சினேகமல்லவா? ஆதலால் சில விஷயங்களை தெரிவிக்க வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு உண்டு.

ஆபீசர் : ஆ!ஆ! பேஷாப் பேசலாம். இப்பொழுதே வாருங்கள். என்ன விஷேம்?

குடியானவன் : விசேஷம் ஒன்றும் இல்லை. கோபித்துக் கொள்ளக் கூடாது. இந்த விஷயத்தில் மனம் பொறுக்கவில்லை. அதனால் தங்களிடம் சொல்லித் தீரவேண்டும் என்கின்ற கவலை கொண்டு விட்டேன்.

ஆபீசர் : என்ன இவ்வளவு யோசிக்கிறீர்கள். கோபம் என்ன வந்தது தாராளமாய்ச் சொல்லுங்கள். என்ன விசேஷம்?

குடியானவன் : கொஞ்சகாலமாகத் தங்களுடைய சம்சாரத்தின் நடத்தை சரியாய் இல்லை. எந்நேரம் பார்த்தாலும் நம்ம வீட்டுத் தையல்காரனிடமே சகவாசம் வைத்துக் கொண்டிருக்கிறதாகத் தெரிகிறது. சில சமயங்களில் அந்தத் தையல்காரன் அந்த அம்மாளை அடிக்கிறதாகவும் தெரிய வருகிறது. இதைப்பற்றி பலவிதமாகவும் ஊரிலும் பேசிக் கொள்கிறார்கள். இதைத் தங்களிடம் தெரிவித்து விட வேண்டும் என்று துணிந்து விட்டேன். மன்னிக்க வேண்டும்.

ஆபீசர் : இதில் மன்னிக்க வேண்டிய சங்கதி ஒன்றுமில்லையே! தாங்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். ஏனென்றால் அந்த கழுதையை
என் சம்சாரம் அல்ல என்று விலக்கிப் பல வருஷமாகி விட்டது. எப்பொழுது ஒரு கான்ஸ்டபிளை இழுத்துக் கொண்டு போய் இரண்டு மாதம் வரையில் காணாமல் இருந்தாளோ அன்று முதலே இனி அவள் என்னுடைய சம்சாரமல்ல என்பதாகத் தீர்மானித்து விட்டேனே! இது தங்களுக்குத் தெரியாது?


குடியானவன் : இந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரிய வருகின்றது. ஆனால் அந்தம்மாள் தங்கள் வீட்டில் தங்களுடன் தானே இருக்கிறார்கள்?

ஆபீசர் : அதனாலென்ன? முன்பு அவளை அடித்துக் கொண்டு போன கான்ஸ்டேபிள் அவளிடம் இருந்த நகையைப் பிடுங்கி கொண்டு விரட்டி விட்டு விட்டான். அவள் இந்த ஊர்ச்சத்திரத்தில் வந்து திண்டாடுவதாகக் கேள்விப்பட்டேன். நேரில் போய்ப் பார்த்தேன். அவள் அழுதாள். அதற்கு நான்
நீ என்றைக்கு ஊரை விட்டு ஓடினாயோ அன்று முதலே உன்னை என் சம்சாரமல்ல என்று தீர்மானித்து விட்டேன். இனிமேல் எனக்கும் உனக்கும் புருஷன் பெண் ஜாதி என்கிற பாத்தியமும் இல்லை என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். பிறகு அவள் வருத்தப்பட்டதைப் பார்த்து மறுபடியும் உனக்கு என்னிடம் வரப் பிரியமிருந்தால் உன்னை ஒரு தாசி மாதிரியாகக் கருதி உன்னிடம் நேசம் வைத்துக் கொள்கிறேன். இஷ்டமிருந்தால்
என்னோடு வா என்று சொன்னேன் அவளும் வந்தாள். நானும் அவளை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டேன். இப்போது அவளை ஒரு
தாசி மாதிரியாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு
தாசி வீட்டுக்கு நான் போவதற்குப் பதிலாக என் வீட்டிற்கு வரவழித்துக் கொள்கிறேன். அடிக்கடி அவள் போய் விட்டு வருவதற்குப் பதிலாக என் வீட்டிலேயே இருக்கும்படி சொல்லி விட்டேன். குழந்தைகள் வீஷயத்திலும் ஓடுவதற்கு முன் பிறந்த குழந்சைகள் என் சொந்தக் குழந்தைகள் மாதிரிதான் வைத்திருக்கிறேன். திரும்பி வந்ததற்குப் பின் பிறந்த குழந்தைகளை தாசிக்குப் பிறந்த குழந்தை மாதிரி தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தவிர என் குழந்தைகளையும் அவளே பார்த்துக் கொள்ளும்படியாயக் கேட்டுக் கொண்டேன். அவளும் தன் குழந்தைகள் மாதிரியே பார்த்துக் கொள்ளுகிறாள். அந்த விதத்தில் அவள் உத்தமி என்றே சொல்லுவேன்.




குடியானவன் : அப்படியானால் அடிக்கடி டெய்லர் (தையல்காரன்) வீட்டில் இருக்க காண்கிறேனே அதன் காரணம் என்ன?

ஆபீசர் : என்னமோ காரணம் இருக்கலாம். அதைப் பற்றி நமக்கு
ஏன் கவலை? நாமே அவளை ஒரு தாசிப் போல் நினைத்து தாசியை வைத்துக் கொண்டிருக்கிறது போலவே கருதிக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க நமக்கு அனாவசியமான கவலை எதற்கு? அவள் எங்கு போனால் நமக்கென்ன? என்று நான் அதில் என் நேரத்தை சிறிதும் வீணாக்குவதேயில்லை. ஆனால் அந்த டெய்லரிடம் அடிப்படுவதாகச் சொல்லுகின்றீர்களே அதைக் கேட்க நமக்குச் சற்று பரிதாபமாகத்தான் இருக்கின்றது. என்ன செய்யலாம்? பாவம் அந்த டெய்லர் ஒரு சமயம் இவளைத் தன் சம்சாரமாக நினைத்துக் கொண்டிருக்கலாம். அவளும் அவனைத் தன் புருஷனாக நினைத்துக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். அப்படியிருந்தால் அடிக்க வேண்டியதும், அடிபட வேண்டியதும் நியாயம் தானே. நானும் அவளை என் சம்சாரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அதைத்துக் கொண்டு தான் இருந்தேன். அதற்கு என்ன செய்யலாம்?


குடியானவன் : சரி, சார்! இப்போழுது தான் தங்களுடைய கொள்கை (பிரின்சிபில்) எனக்கு விளங்குகிறது. அனாவசியமாய் தங்கள் நேரத்தைக் கெடுத்ததற்காக மன்னிக்க வேண்டும். நான் போய் வருகிறேன்.

ஆபீசர் : சரி போய் விட்டு வாருங்கள். இதைத் தவிர வேறு விஷயமில்லையே?

குடியானவன் : இல்லை.



------------------------29-07-1928- குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சித்திர புத்திரன் என்ற புனைபெயரில் எழுதியது.

21.6.08

இந்துக்களின் மனம் புண்படுகிறது என்று பேசுகிறவர்கள் ஊன்றிப் படித்து உணர வேண்டிய உண்மை

பக்தியும் - புத்தியும்!

பக்தி இருக்கும் இடத்தில் புத்தி இருக்காது என்பது தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழி. இந்தக் காலத்துக்குப் பொருத்தமாகச் சொல்வதென்றால் பெட்ரோல் மொழி! (பொன்னைவிட இப்போது கச்சா எண்ணெய்க்குத்தானே மதிப்பு அதிகம்)

பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
பெரியர் 1920-களிலேயே ஏறத்தாழ 80 வருடங்களுக்கு முன்பே கடவுள் இல்லை என்று முழக்கமிட்டார்.

இன்று பல்வேறு ஆய்வுகளில் புத்திசாலித்தனம் உள்ளோருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை - என்ற உண்மை - அதாவது பெரியார் பொன்மொழி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தினமலர் (19-6-2008) இதுகுறித்து வெளியிட்டிருக்கும் செய்தி வருமாறு:

புத்திசாலிகளும், அதிக நினைவாற்றலும் கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உல்ஸ்டர் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல், சர்வதேச அளவில் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.


புத்திசாலித்தனம் மிக்கவர்கள், அதிக நினைவாற்றல் கொண்டவர்களில் பெரும்பாலானோர் இறை நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பதாகவும், மத சம்பிரதாயங்களை கைவிட்டு விடுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த நூற்றாண்டில், இறை நம்பிக்கையும், மத நம்பிக்கையும் பெரிதும் குறைந்து வருவதற்குக் காரணம், புத்திசாலிகள் மற்றும் நினைவாற்றல் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதே என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, இதற்கு முன், இனம் மற்றும் பாலின அடிப்படையில் மத நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனம் கொண்டோர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வும் சர்ச்சை கிளப்பியது.
மற்றவர்களைவிட, புத்திசாலித்தனம் கொண்டவர்கள் குறைந்தளவே இறை நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


புத்திசாலித்தனம் உள்ளவர்களில் 3.3 சதவிகிதத்தினர் மட்டுமே இறை நம்பிக்கை, மத நம்பிக்கை கொண்டிருப்பதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஆனால், பிரிட்டனில் ஓர் ஆய்வில், 69 சதவிகிதம் பேர் இறை நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க தேசிய விஞ்ஞான அகடமியில் நடத்தப்பட்ட ஆய்வில், இதில் இடம் பெற்றிருப்போரில் வெறும் 7 சதவிகிதம் பேர் மட்டுமே இறை நம்பிக்கையும், மத நம்பிக்கையும் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர், லின், ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை பெரிய அளவில் உள்ளது. ஆனால், இவர்கள் பருவ வயதுக்கு வரும்போது, புத்திசாலித்தனம் அதிகரித்து, இறை நம்பிக்கையைக் கைவிடுகின்றனர்.

ஏராளமானோர் கடவுள் இருப்பது உண்மைதானா என்பது உட்பட பல்வேறு சந்தேகங்களுக்கு ஆளாகின்றனர். மற்வர்களைவிட நன்றாகப் படிப்போரும், அதிகம் படித்தோரும் இறை நம்பிக்கையைக் கைவிடுகின்றனர்.

இதற்குக் காரணம், அவர்களுக்கு புத்திசாலித்தனமும், நினைவாற்றலும் அதிகரித்து இருப்பதே. அதேபோல, பொதுமக்கள் மத்தியிலும் புத்திசாலித் தனமானோர் மத்தியிலும் இறை நம்பிக்கை இல்லை என்று விளக்கியுள்ளார்.



- என்பது ஆய்வுகளின் மூலம் வெளிப்பட்டுள்ள உண்மை!


"எதற்கெடுத்தாலும், இந்துக்களின் மனம் புண்படுகிறது என்று பேசுகிறவர்கள் ஊன்றிப் படித்து உணர வேண்டிய உண்மை இது!"


--------------- நன்றி: "முரசொலி", 20.6.2008

19.6.08

இழிவுகளை அடியோடு நீக்க இந்து மதத்தை விட்டொழியுங்கள்




இந்த நாட்டில் மருத்துவக் குலத்தவராய் நீங்கள் ஒரு பெருங்கூட்டமாக மனித சமுதாயத்திற்கே மிகவும் பயன்படக்கூடிய தொழிலைக் கொண்டு பழங்குடி மக்களின் கூட்டமாக விளங்குகிறீர்கள். ஆனால் இந்த நாட்டு இந்து சமுதாயத்திலே மிகவும் தாழ்மையாகக் கருதப்படுகிறீர்கள். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்வை இழிவை மறைத்து வைக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு கேடுதான் சூழும். நன்றி நலமற்ற மக்கள் சமுதாயத்திலே பெருங்கூட்டமான நீங்கள் மிகவும் தாழ்மையாகக் கருதப்படுகின்றீர்கள்.

நீங்கள் முடி எடுக்கிறவர்கள் என்றும், சவரம் செய்கிறவர்கள், முக அலங்காரம் பண்ணுகிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறீர்கள். இவற்றில் இழிவு சிறிதளவாவது இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால், நீங்கள் அத்தொழிலைச் செய்கிறீர்கள் என்பதற்காக, உங்களை இழிவாகக் கருதுவதுதான் மடமை. இன்று பெரிய ராஜாக்களும் சவரம் செய்து கொள்ளுகிறார்களே! ஆகவே இத்தகைய இழிவு வகுப்பிற்கு ஏற்பட்ட இழிவே தவிர, தொழிலுக்கு ஏற்பட்ட இழிவு அல்ல. உதாரணமாக, பார்ப்பனர் அத்தொழிலைச் செய்தாலும் அவர்களுக்கு இழிவு இல்லை. இப்பேர்ப்பட்ட சூழ்ச்சி, இழிவான எண்ணம் உலகில் நம்நாடு என்று சொல்லப்படும் இத்தேசத்திலன்றி வேற்று நாட்டில் எங்கும் கிடையாது.

மேல் நாட்டிலே ஒரே குடும்பத்தில் ஒருவன் கவர்னராக இருப்பான்; அவன் தம்பி செருப்புத் தைக்கும் கடையை வைத்து வியாபாரம் செய்வான்; மற்றொருவன் முடி கத்திரிப்பான்; மற்றொருவன் பாதிரியாக இருப்பான். ஆனால் முறைப்படி காரியாதிகள் நடைபெற்றுவரும் இப்பாழும் நாட்டிலே, தகப்பன் செய்து வந்த தொழிலையே மகன் செய்ய வேண்டிய நிலையும், அதன் காரணமாக சமுதாயத்திலே உயர்வு அல்லது தாழ்வு என்ற பட்டத்தைச் சுமக்கும் நிலையும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தாண்டவமாடுகிறது. இந்த மாதிரி நம்மை இழிவு செய்யும் நிலை நிலைத்து இருப்பது, நம்முடைய கையாலாகாத் தனத்தை விளக்குகிறதே தவிர, எதிரிகளுடைய, நம்மை மோசம் செய்பவர்களுடைய பலத்தையோ, அல்லது வீரத்தன்மையையோ விளக்குவதாக இல்லை.

நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள இந்து மதத்தால் தான் நீங்கள் இகழப்படுகிறீர்கள். உண்மையாகவே உங்களைப் பிடித்துள்ள இழிவு நீங்க வேண்டுமானால், அம்மதத்தை இழுத்து எறியுங்கள். வேண்டுமானால் தனிப்பட்ட மனிதன், இந்து மதத்தின் பெயராலேயே தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளலாம் என்று ஏமாற்றிக் கொண்டு திரியலாம். ஆனால், தாசி மகன், வேசி மகன், கோயிலுக்குள் சிற்றுண்டிச் சாலைக்குள் பிரவேசிக்கக் கூடாத இழிநிலையோன் என்பதான பட்டங்கள் என்றும் நிலைத்திருக்கும்.

இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களிலே பார்ப்பனரல்லாதாரிலே, தேவாங்கர்கள், கம்மியர்கள் தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்வதாலேயும், படையாச்சிகள், நாயுடுகள், நாடார்கள் தங்களை சத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்வதிலேயும், இன்னும் இது போன்ற போலிப் பட்டங்களைச் சூட்டிக் கொள்வதிலும் பெருமை கொள்கிறார்கள். அதற்கு மாறாக, நாவிதர், கம்மாளர், பறையர், படையாச்சி, நாடார் என்று சொல்லிக் கொள்வதால் என்ன குடி முழுகிவிட்டது என்று கேட்க ஆசைப்படுகிறேன். பெயரில் என்ன இருக்கிறது? நாமெல்லோரும் தமிழர்- திராவிடர். நமக்குள் ஜாதி வேற்றுமை உணர்ச்சி இல்லை என்பதான மனப்பான்மை ஏற்பட வேண்டுமானால், சாதியை மாற்றி ஆரியமாக்கக் கூடாது. திராவிடர்களாகிய நமக்குள்ளே கூட்டு வளர்ச்சி வளர வேண்டும்.

தோழர்களே! ஒரு அய்ந்து வருடத் திட்டம் போட்டுக் கொள்ளுங்கள். உங்களை சமுதாயத்தில் தாழ்மையாகக் கருதுகிறவர்களுக்கு நீங்கள் உதவி செய்வதில்லை - தொண்டாற்றுவதில்லை என்ற உறுதியை ஏற்படுத்திக் கொண்டீர்களானால், இழிவுகளைப் பறக்கடிக்க ஒற்றுமையோடு, உள்ளத்துணிவோடு அந்த அய்ந்து ஆண்டுத் திட்டத்தை செவ்வனே செய்து முடித்தீர்களானால் - புரோகிதன் உங்களை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைப்பான்.

ஆகையினால், சமுதாயத்தின் பெயராலே, தொழிலின் பெயராலே உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழிவுகளை நீக்க, மதத்தை உடைத்தெறியுங்கள். எதிரிகளை பகிஷ்கரியுங்கள். இம்மாநாட்டை பண்டிகையாக நினைத்துப் போய்விடாதீர்கள். இந்து மத உணர்ச்சியை ஒழித்து, காரியத்தில் இறங்குங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். நான் இந்துவல்ல, இந்தியன் என்றும் சொல்லிக் கொள்ள மாட்டேன். இந்து மதத்திற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்ற முடிவிற்கு ஒவ்வொரு மருத்துவ வாலிபனும் வந்து, அதன்படி தொண்டாற்ற முற்பட்டால்தான் ஏதாவது பயன் விளையும்.

---------------- சென்னை மாநில 3ஆவது மருத்துவக் குழு மாநாடு திறப்பு விழாவில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை ‘குடியரசு' 27.5.1944