Search This Blog

16.1.18

திராவிடரா? தமிழரா?

‘தமிழர்’ என்பவர்கள் ஏதோ திராவிடர் என்பவர்களுக்குப் பகைவர்கள்போல், சில அரசியல் கடை திறந்திருக்கும் புதிய வியாபாரிகளும், அரை வேக்காடுகளும் பக்குவமில்லாத, வரலாறு தெரியாத இளைஞர்களை திசைதிருப்ப முயலுவது அசல் கேலிக்கூத்து ஆகும்.

“திராவிடர் _ திராவிடம் என்பதும், தமிழ் உணர்வு என்பதும் எதிரானவைகள் அல்ல. மொழியால் தமிழராக உள்ள “சூத்திரர் _ பஞ்சமர் _ கீழ்ஜாதி’’ என்று ஒதுக்கப்பட்ட அனைவரும் என்னைப் பொறுத்தவரையில் திராவிடர் _ ஆரியரல்லாதவர். இது இரத்தப் பரிட்சையால் தேர்வு செய்யப்படுவதில்லை; அவர்களது பண்பாடு, நாகரிகம், மொழி இவைகளைப் பொருத்தும், சமூகத்தில் மற்றவர்களுடன் பழகும் பான்மையையும் பொருத்தது!’’ என்றார் தந்தை பெரியார்.

திராவிடர் என்பது சில காவி எழுத்தாளர்கள் இப்போது கற்பனையாகக் கூறுவதுபோல், “வெறும் கால்டுவெல் பாதிரிகளால் மட்டும் சொல்லப்பட்டதோ, இறக்குமதி செய்யப்-பட்டதோ அல்ல.’’
‘அவாளின்’ ஆரிய தர்ம நூலான மனுதர்மத்திலேயே இச்சொல் உள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார்கள். இதற்கு மறுப்புக் கூற முடியாது.

“மொழியால் தமிழர் வழியால் (வரலாற்றால்) திராவிடர் (இனம்)’’ இது எப்படி முரண் ஆகமுடியும்?

எந்த ஒரு வீழ்ந்த இனமும் மீண்டும் எழுவதற்கு முதற்படி, முன்தே
வை, அது வரலாற்று ரீதியாகத் தன்னைச் சரியாக அடையாளப்படுத்திக் கொள்ளலேயாகும்.

நம் இனத்திற்கு தமிழர் என்கிறபோது _ பார்ப்பனர் உள்ளே புகுந்து நாங்களும் தமிழ் பேசுகிறோம் என்று கூறி ஊடுருவி மேலாதிக்கம் செலுத்தினர். உண்மையான தமிழ்ப் பண்பாட்டை அழித்தனர். எனவே, மொழி மட்டுமிங்குப் போதாது; அதனால்தான் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள், ‘பார்ப்பனர் தமிழரல்லர்’ என்று ஒரு தனி பகுதியே  விரிவாக எழுதியுள்ளார்கள்!

திராவிட இன அடையாளம்தான் நமது தனித்தன்மையை நிலைநிறுத்தும். ‘பார்ப்பனரல்லாதார்’ என்ற எதிர்மறைப் பெயரை _ அதுவும் வெகுச் சிறுபான்மையினரான பார்ப்பனருக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்கள் அல்லாதவர் என்று நம்மை அழைத்துக் கொள்வது இழிவிலும் இழிவு என்று கருதியே, தமிழ் மொழி காக்க ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தினை 1938இல் துவக்கி _ பண்பாட்டுப் போராக _ நடத்திய தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழக்கமும் கொடுத்த வரலாறும் பார்ப்பனரல்லாத இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய நிலையில், அதன் பெயரை ‘திராவிடர் கழகம்’ என்று 1944இல் சேலத்தில் மாற்றியதும், மிகப் பெரிய இன அடையாள எழுச்சிக்கு வித்தூன்றிய வரலாற்றுத் திருப்பம் ஆகும்!

“ஓர் இனத்தின் அடையாளம் வெறும் மொழியை மட்டுமே கொண்டதாக இருந்தால் மட்டுமே அது போதியதாகாது; அதன் முக்கிய அடையாளம் அதன் பண்பாட்டுத் தளமே ஆகும். அதன் நாகரிகத்தையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும்.’’

அது மட்டுமல்லாது, தமிழர் என்று கூறிக்கொண்டு பிற இனத்தவர் ஊடுருவி, தமிழரின் சொந்த அடையாளத்தை,  பண்பாட்டை, நாகரிகத்தை, கலைகளை, அழித்து ஒழித்து தமது பண்பாட்டைச் சுமத்தி, பிறகு இதுவே நிலைத்ததாக ஒரு புதிய வரலாற்றையும் உருவாக்கிக் கொள்ளும் பேரபாயமும் உண்டு.

எப்போதும் வெளியில் உள்ள கிளைகளும், கிளைகளில் தழைத்த இலைகளையும்விட முக்கியம் வேர்களேயாகும்!



‘திராவிடர்’ என்ற சொல்லைத் தந்தை பெரியார் அவர்கள், நம் மக்களுக்கு ஒரு சரியான  தனித்த _  இழிவுபோக்கும் அடையாளம் தருவதற்குரிய கருவியாகவே _ ஆயுதமாகவே பயன்படுத்தினார்.

அந்த அடையாளம் தரப்பட்ட பின்புதான், நமது பண்பாடு, நாகரிகம், மொழியின் தனித்தன்மை _ இவைகளின் பின்புலம் _ எழுச்சியூட்டும் சிந்துவெளி நாகரிகம் _ திராவிடர் நாகரிகம் தொடங்கி _ நாளது, கீழடி ஆய்வு வரையில் செல்வதற்கும் வெல்வதற்கும் வாய்ப்பாக அமைந்தது.

திருவிடம் _ திராவிடம் _ வெறும் இடம் அல்ல; நிலம் அல்ல; அஃது இனப் பண்பாட்டு அடையாளம். நனிநாகரிக _ தனித்த வரலாறு படைத்து வரும் கருவி.

புரிந்துகொள்வீர் இளைஞர்களே! குழப்பத்திற்கு ஆளாகி, ஆரிய வில்லுக்கு அம்பாகாதீர்!

 -------------------- கி.வீரமணி  ஆசிரியர் "உண்மை’’ 2017 -ஆகஸ்ட்  01-15 

0 comments: