Search This Blog

5.1.18

ரஜினியைப்பற்றி 2017 பிப்ரவரியில் தமிழருவி மணியன் கூறியது என்ன?

தமிழருவி மணியன் அவர்களுக்கு...

‘‘நல்ல மனிதனுக்கு ஒரு சொல்
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!''ரஜினியைப்பற்றி 2017 பிப்ரவரியில் தமிழருவி மணியன் கூறியது என்ன?
தமிழருவி மணியன் தமிழருவி மணியன் என்ற ஒருவர் இருக்கிறார். பல கட்சிகளைத் தாவி, இனி தாவிட வேறு கட்சி ஏதுமில்லை என்ற நிலையில், தனக்குத்தானே காந்திய மக்கள் இயக்கம் என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார்.
கூட்டணிகளை உருவாக்குவதுதான் இவரின் வேலை; தேர்தலில் அவர் கூட்டணி தோல்வி கண் டால், வசைப்பாட ஆரம்பித்துவிடுவார்.
2014 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.யை ஓடி ஓடி ஆதரித்தவர், பிறகு என்ன சொன்னார்?
‘‘இப்போது என் அரசியல் பாதையை திரும்பிப் பார்க்கிறவேளையில், நான் அமைத்துக் கொடுத்த அந்தக் கூட்டணி (பி.ஜே.பி. தலைமையிலான நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி) ஒரு அரசியல் பிழையாகவே தோன்றுகிறது.''
(‘குமுதம் ரிப்போர்ட்டர்', பேட்டி 15.4.2016, பக்கம் 21)
இன்னும் இருக்கிறது அவசரப்படவேண்டாம்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களை முதலமைச்சர் ஆக்கியே தீருவேன் என்று வரிந்து கட்டி நின்றார்.
தன் வீழ்ச்சிக்குத் தானே வழிவகுக்கிறார் வைகோ. எளிதில் உணர்ச்சிவயப்படுகிறார்.
(‘மாலைமுரசு', 26.4.2016, பக்கம் 7)
என்று திருப்பியடிக்கிறார் தமிழருவி.
பி.ஜே.பி.யைப்பற்றி திருவாளர் தமிழருவியின் நிலைப்பாடு என்ன?
இதோ அவர் எழுதுகிறார்:
‘‘வெள்ளாடு நட்பு கொள்வதால், வேங்கை வள்ள லாருக்கு வாரிசாகுமா? படமெடுக்கும் பாம்புக்குப் பால் வார்த்து நேசத்துடன் நெஞ்சில் வைத்துக் கொஞ்சினால், கொல்லும் விஷத்தை அடியோடு விலக்கி விட்டு அன்றாடம் அது அகிம்சையைப் போதிக்குமா? கோடிலிட்டர்பாலைக்கொட்டிகுடமுழுக்குசெய் தாலும், பாரதீயஜனதா எனும் கரித்துண்டின் கருப்பு நிறத்தை மாற்றிவிட முடியாது. சிறுபான்மை மக்க ளுக்கு எதிராகவே பாரதீய ஜனதாவின் அணுகுமுறை இருந்தாகவேண்டும் என்பது அதன் பிறப்பிலேயே அழுத்தமாக எழுதப்பட்ட அரசியல் விதி.''
(நூல்: ‘‘2010 - இன்று புதிதாய்ப் பிறப்போம்!'')
பரவாயில்லையே, மதச்சார்பின்மையில் மனுஷன் மகத்தான உறுதியைக் காட்டுகிறார் என்று அவசர முடிவை எடுத்துவிடாதீர்கள்.
இதோ அவர்:
‘‘மதவாதம் என்பதும், மதச் சார்பின்மை என்பதும் வெறும் அரசியல் சொல்லாடல். பா.ஜ.க. ஒரு மதவாதக் கட்சி என்று சொல்பவர்கள், முஸ்லிம் லீக்கைப்பற்றி என்ன சொல்கிறார்கள்? பச்சையாக ஒரு மதத்தின் பெயரால் இயங்கும் ஒரு கட்சியோடு கைகோர்த்து நிற்பவர்கள் மதச்சார்பற்றவர்களா? வெளிப்படையாக இந்துக்களின் கட்சியென்று அறிவிக்காத பா.ஜ.க. வோடு இருப்பவர்கள் மதவாதிகள் என்று சொல்வதில் நியாயத்தின் நிறமே இல்லை!''
(‘இந்தியா டுடே', 26.2.2014, பக்கம் 39)
‘‘2010 - இன்று புதிதாய்ப் பிறந்தோம்'' எனும் அவரின் நூலில் என்ன எழுதுகிறார்?
கோடி லிட்டர் பாலைக் கொட்டி குடமுழுக்கு செய்தாலும் பாரதீய ஜனதா என்ற மதவாதக் கரித் துண்டின் கருப்பு நிறத்தை மாற்றவே முடியாது என்று எழுதவில்லையா?
அப்படியே சம்மர் சால்ட் அடித்து மதவாதம், மதச்சார்பின்மை என்பதும், வெறும் அரசியல் சொல் லாடல் என்கிறாரே இந்த வசன வியாபாரி!
‘‘2010 - இன்று புதிதாய்ப் பிறந்தோம்'' எனும் அவரின் நூலில், சிறுபான்மை மக்கள் என்று கரிசனம் காட்டி எழுதுபவர். ‘இந்தியா டுடே' பேட்டியில் என்ன சொல்லுகிறார்? பச்சையான ஒரு மதத்தின் பெயரால் உள்ளது முஸ்லிம் லீக் கட்சி என்கிறார்.
ஏதோ தெரியாமல், வாய்த் தவறி சொல்லும் கோலி விளையாட்டுச் சிறுவரா இவர்? இல்லை இல்லை. எல்லாம் தெரிந்த பேச்சாளர்தான். ஏனிப்படி முரண்படுகிறார்? அறிவு நாணயத்திற்கு விடுமுறை கொடுக்கிறார் என்ற கேள்வி எழத்தானே செய்யும்?
அதற்குள் ஏதோ ஆதாயம் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தால், என்ன தவறு? இதில் வேறு எந்தத் தத்துவார்த்த வெங்காயம் இருக்க முடியும்?
நல்ல வசன வியாபாரியான தோழர் மணியன் அவர்கள் தனக்குத்தானே அடையாள அட்டை ஒன்றைத் தயார் செய்து வைத்துள்ளார்.
‘‘பறக்கும் பட்டாம் பூச்சி எந்தப் பூவில் எப்பொழுது அமரும்? என்று யாருக்குத் தெரியும்?''
(‘ஜூனியர் விகடன்', 12.6.2016, பக்கம் 41)
என்பதுதான் அவரின் சுய அடையாள அட்டை.
‘தொலைநோக்காளர்' என்ற பட்டத்தை வேண்டுமானாலும் இலவசமாகவே கொடுக்கலாம்.
மக்களவைத் தேர்தல் முடிந்து மணியன் அவர்களின் கூட்டணி மண்ணைக் கவ்விய நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு (அக்னிப் பரீட்சை) அளித்த பேட்டியில் என்ன கூறினார் தெரியுமா? (3.8.2014).
‘‘வேண்டுமானால் என்னைத் தூக்கில் போடுங்கள்'' என்றாரே பார்க்கலாம்! ரோசக்காரர் அவர். அதெல்லாம் வேண்டாம் - நீண்ட காலம் நலமுடன் ‘வளமுடன்' வாழட்டும்!
என்னென்ன ‘அவதாரங்களை' எல்லாம் எடுத்துப் பார்த்தும் ‘‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை; கட்டிக்கொண்டேன்'' என்ற நிலையில், அரசியலுக்கே முழுக்குப் போடுகிறேன் என்று ஓர் அறிக்கையையும் வெளியிட்டார். (25.7.2016).
‘‘திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து கவிஞர் கண்ணதாசன் பிரிந்தபோது, ‘‘போய் வருகிறேன்'' என்று எழுதினார். ஆனால், நானோ இறப்பு என்னைத் தழுவும் இறுதிநாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை என்ற முடிவுடன், போகிறேன்'' என்று அறிக்கை வெளியிட்டு ஒரு ஒப்பாரிப் பாடலையும் எழுதினார்.
இதோ அது:
‘‘காட்டுக் குயில் பாட்டைக்
காது கொடுத்துக் கேட்பதற்குக்
கானகத்தில் யாரும் இல்லாதபோது,
தன் தொண்டை வறண்டு
புண்ணாகும்வரை அது எதற்காகப் பாட
வேண்டும்? குத்துப்பாட்டில் குதூகலிக்கும்
பாமரர்கள் பார்வையாளர்களாகக் கூடி
யிருக்கும் அரங்கில் அமர்ந்து
சுத்த சன்யாசியில் - ஆன்மாவே
உருகும்படி ஆலாபனை செய்தாலும்
அந்த சங்கீத உபாசகனுக்கு
யார் வந்து மரியாதை செய்து
மாலையிடப் போகிறார்கள்?''
(‘தீக்கதிர்', 27.5.2016)
இதிலாவது உறுதியாக நின்றாரா? அரசியல் வியாபாரம் நடக்கவேண்டுமே - மக்களும்தான் மறதி மன்னர்களாயிற்றே - வேட்டியைக் கட்டிக்கொண்டு, ‘‘சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துதான் சரியான புளியமரம்'' என்று பிடித்துக்கொண்டு விட்டார். குத்துப்பாட்டைக் கேலி செய்தவர் - குத்துப்பாட்டுக்காரரிடம் குத்தகை போனது ஏன்?
இலட்சியங்கள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள்பற்றி எல்லாம் மணிக்கணக்கில் மணி மணியாகப் பேசும் திருவாளர் மணியனின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா?
கட்சியின் கொள்கை என்ன என்றால், ‘தலை சுத்துது' எனும் ரஜினியிடம்தான் கொள்கை இருக்கிறதோ!
நேற்றைய ‘இந்து‘ ஆங்கில ஏட்டில் (4.1.2018, பக்கம் 4) பேட்டி கொடுத்திருக்கிறார்.
ஆன்மிக அரசியல் நடத்த ரஜனி முன்வந்துள்ளாராம். அரசியலில் ஆன்மிகம் ஒன்றும் புதிதானது அல்லவாம்!
காந்தியார் அரசியலில் ஆன்மிகத்தைப் புகுத்தவில்லையா? என்று காந்தியாரோடு ரஜினிகாந்தை முடிச்சுப் போட்டு ரஜினிக்கு முண்டாசு கட்டுகிறார்.
ஆன்மிகவாதிகள் தவறே செய்யமாட்டார்களாம் - ஊழல் புரியமாட்டார்களாம். குறுகிய மனப்பான்மை, ஜாதி வேறுபாடு என்பது போன்ற பிரிவினை எண்ணங்களுக்கு ஆன்மிகத்தில் இடமே இல்லையாம். ஆகவே, இவர்தான் திராவிட அரசியலுக்கு மாற்றாம்.
இந்த இடத்திலேயே நல்லாதான் வருது... கேட்டு விடலாம். ‘‘அந்தப் பரிசுத்த ‘தேவதூதனாகிய' ரஜினிகாந்த் சினிமா தொழிலில் கருப்புப் பணமே வாங்கவே மாட்டாதவரா? வாங்குவதெல்லாம் வெள்ளைப் பணம்தானா?''
ரஜினிகாந்த் நடிக்கும் சினிமா திரையிடப்படும்பொழுது டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் விற்கவேபடுவதில்லையா?
அவர் வாசம் செய்யும் சினிமா உலகில் கொழிக்கும் கருப்புப் பணத்தை வேரறுக்கக் குரல் கொடுத்தவர்தானா? சிஷ்டம் கெட்டு விட்டது என்றாரே - முதலில் அவர் வாழும் சினிமா உலகக் கள்ளச்சந்தை சிஷ்டத்தை மாற்றிட ஒரே ஒரு சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டிருப்பாரா?
ஆன்மிகவாதிகள் தவறு செய்யமாட்டார்களாம்! அடேயப்பா என்ன கண்டுபிடிப்பு?
காஞ்சி சங்கராச்சாரியார் ஆன்மிகவாதியில்லையா?
அவரின் ஆன்மிகத்தை மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் கண்ணீரும், கம்பலையுமாக சொன்னதுண்டே!
கார்ப்பரேட் சாமியார்களின் கதைகள் நாற்றமெடுத்து சாக்கடையாய் ஓடுகிறதே!
சத்திய சாய்பாபா மறைந்த நிலையில், கண்டெய்னரில் ரூபாய் நோட்டு மூட்டைகள் கடத்தப்படவில்லையா? பட்டு சேலைகளும், லேடீஸ் கைப் பைகளும் ஒவ்வொரு அறையிலும் குவிந்து கிடக்கவில்லையா?
இன்னும் சொல்லப்போனால், கொள்ளை அடிப்பதற்கும், ஒழுக்கக்கேடாக நடப்பதை மறைப்பதற்கும் ஆன்மிக வேடம் சரியான பாதுகாப்பு அரண் அவ்வளவுதானே!
கபட சந்நியாசிகள் என்ற சொலவடைகூட உண்டே!
உ.பி.யில் முதலமைச்சராக இருக்கும் ஆதித்யநாத்கூட காவி வேட்டி கட்டிக்கொண்டிருக்கும் ஆன்மிக சாமியார்தான். அங்கே நடக்கும் லூட்டிகளுக்கு அளவுண்டா? (ஆன்மிகம் என்றால், இது அல்ல என்று திசை திருப்பவேண்டாம் - நடைமுறைதான் முக்கியம்).
ஆன்மிகவாதிகள்தான் யோக்கிய சிகாமணிகள் என்றால், பச்சைத் தமிழர் காமராசர் என்ன ஆன்மிகவாதியா? ஒருவரைத் தூக்கி சுமக்கவேண்டும் என்று முடிவு கட்டிவிட்டால், எதை வேண்டுமானாலும் சொல்லலாமா?
அதையும் விட்டுத் தள்ளுவோம். மிக முக்கியமானதொரு இடத்திற்கு வருவோம்.
ஆகா - ஊகா என்று ரஜினிகாந்தைப்பற்றி மூக்கைச் சிந்துகிறாரே அந்த ரஜினியைப்பற்றி திருவாளர் தமிழருவி மணியனின் நிலைப்பாடு என்ன? கணிப்பு என்ன?
இதோ அதே மணியன் பேசுகிறார் கேளுங்கள், கேளுங்கள்!
‘‘ஜல்லிக்கட்டு வரவேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்தமாக தமிழகமே திரண்டது. டில்லியில் உட்கார்ந்துகொண்டு சுப்பிரமணியன் சாமி, ‘‘பொறுக்கிகளின் கூட்டம்’’என்றார். ஆனால், உண்மையில் நான் கமலகாசனைப் பாராட்டுகிறேன்.
‘‘உண்மைதான்; நான் தமிழ்நாட்டுப் பொறுக்கி; மற்றவர்களைப் போல் நான் டில்லியில் பொறுக்குவதில்லை’’ என்று. இதைவிட வன்மையாகச் சொல்லவே முடியாது. நான்கு மணிநேரம் சொன்னாலும்கூட, இவ்வளவு அழுத்தமாக சொல்ல முடியாது; அதை கமலகாசன் சொல்லியிருக்கிறார்.
இப்பொழுதுகூட சசிகலா வருவதில் எனக்கு விருப்பமில்லை; பன்னீர்செல்வம் தவறு செய்தவராக இதுவரையில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தெரியவில்லை. எனவே அவர் முதலமைச்சராகத் தொடர்வதுதான் நல்லது என்று தன்னுடைய கருத்தை வெளிப்படையாக சொல்கிறார். ரஜினிகாந்தை கொஞ்சம் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
ரஜினிகாந்திடம் கேட்டால் என்ன சொல்வார்? ‘‘ஒரு பக்கம் பார்த்தால் சசிகலாவும் பரவாயில்லை; இன்னொரு பக்கம் பார்த்தால், பன்னீர்செல்வமும் பரவாயில்லை. வேறொரு பக்கம் பார்த்தால் ஸ்டாலின்கூட பரவாயில்லை; அந்தப் பக்கம் பார்த்தால் ராமதாசுகூட பரவாயில்லை. எல்லோருமே பரவாயில்லை.
ஒன்றை புரிந்துகொள்ளுங்கள், எல்லாருக்கும் நண்பனாக இருப்பவன்; உண்மையில் எவனுக்கும் நண்பனாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை.
ரஜினிகாந்தை நேசிக்கக்கூடிய லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த மண்ணில் இருக்கிறார்கள். நானும் ரஜினிகாந்தை நேசிக்கிறேன். ஆனால், லட்சக்கணக்கான மனிதர்களின் நேசத்திற்குரிய ரஜினிகாந்த், ஒரு கமலகாசனைப் போல வாய் திறக்கவேண்டாமா?
இந்தப் பன்னீர்செல்வத்திற்காக அவர் பேசவேண்டாமா?''
இப்படி பேசியவர் திருவாளர் தமிழருவி மணியன்தான் - பேசிய ஊர் கோவை; நாள்: 12.2.2017.
சந்தர்ப்பவாதமே -
காரியவாதமே -
உன்பெயர்தான் தமிழருவி மணியன் என்று கேட்கத் தோன்றுகிறதா இல்லையா?

சரி, இப்பொழுது என்ன வந்தது - மணியனை விமர்சிக்க?
காரணம் இல்லாமலா?
நேற்றைய ‘இந்து' ஆங்கில ஏட்டில் (4.1.2018) திருவாளர் மணியன் அவர்களின் பேட்டி வெளிவந்துள்ளது.
தேவையில்லாமல் தந்தை பெரியாரையும், திராவிடர் கழகத்தையும் இழுத்துள்ளார்.
Periyar had an ideology and the Dravidar Kazhagam today has no reach to take his ideas to the people'
பெரியாருக்குக் கொள்கை இருந்ததாம். ஆனால், பெரியாரின் கொள்கைகளை திராவிடர் கழகம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லையாம்.
அவர் கூற்றுப்படியே வருவோம்.
பெரியார் கொள்கையின் தேவையை அவர் உணருகிறார் என்பது அவரின் வார்த்தைகளிலிருந்து அறிய முடிகிறது. அந்தத் தேவையின் அடிப்படையில்தான் திருவாளர் மணியன் ரஜினியை ஆதரிக்கிறாரா?
திராவிடர் கழகம் பெரியாரின் கொள்கையைப் பரப்புகிறது என்பதற்கு அடையாளம்தான் ஆன்மிக அரசியல் என்ற ஒன்றை முன்னிறுத்தும் ரஜினிகாந்தை எதிர்ப்பது.
திருவாளர் மணியனுக்குத் தந்தை பெரியாரின் கொள்கைமீது அக்கறையிருந்தால், ஆன்மிக அரசியல் என்கிற ரஜினிகாந்தை எதிர்த்தல்லவா குரல் கொடுக்கவேண்டும்? என்னே முரண்பாடு!
தந்தை பெரியாரின் கொள்கையை திராவிடர் கழகம் பரப்பவில்லையா?
இன்றும், நாளையும், மறுநாளும் (ஜனவரி 5, 6, 7) ஆகிய மூன்று நாள்களிலும் திருச்சியில் பெரியார் பன்னாட்டு நாத்திக மாநாட்டை நடத்துகிறதே!
2017 ஜூலையில் (27, 28, 29) ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழக வளாகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டை நடத்தியது யார்?
திருச்சி சிறுகனூரில் ‘பெரியார் உலகம்' நிர்மாணம்பற்றி அறிவாரா திருவாளர் மணியன்?
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் 49 சதவிகித இட ஒதுக்கீடாக இருந்தது இன்று 69 விழுக்காடாக உயர்ந்ததே - இதன் பின்னணி என்ன? அரசமைப்புச் சட்ட ஒன்பதாவது பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொடுத்ததும், செயல்படுவதற்கு உந்து சக்தியாகவும் இருந்தது திராவிடர் கழகம் இல்லையா? தலைவர் வீரமணி அல்லவா!
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் மத்திய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அறவேயில்லாதிருந்த நிலையில் மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திட 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது திராவிடர் கழகம் அல்லவா?
அதனை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் திராவிடர் கழகத்தின் பங்களிப்பைப் பாராட்டிப் பெருமிதம் கொள்ளவில்லையா?
‘நீட்' தேர்வை எதிர்த்து அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து எதிர்வினை ஆற்றவில்லையா?
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டு உழைத்து வருவது திராவிடர் கழகம் இல்லையா?
மாதம் 20 நாள்கள் தந்தை பெரியார் கொள்கையைப் பரப்புவதற்காக 85 வயதிலும் சுற்றுப்பயணம் செய்துகொண்டு இருப்பவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அல்லவா?
தந்தை பெரியார் காலத்தில் சென்னையிலிருந்து மட்டும் வெளியாகிக் கொண்டிருந்த ‘விடுதலை' ஏடு இப்பொழுது இரண்டாவது பதிப்பாக திருச்சியிலும் நீட்சி பெற்றுள்ளதை அறிவாரா அன்பர்?
தந்தை பெரியார் கொள்கை பரப்பும் நூற்றுக்கணக்கான வெளியீடுகள் வந்த வண்ணமே உள்ளனவே! பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள், குழந்தைகள் முகாம்கள், மகளிர்ப் பாசறைகள் என்று திட்டமிட்ட வகையில் தந்தை பெரியார்தம் கொள்கைகளைப் பரப்பும் பணியில் போர்க்கால வேகத்தோடு செயல்பட்டு வருவதை தெரிந்துகொள்ளாமல்,  வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று பேசலாமா?
தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு வீரமணி ஆற்றும் தொண்டினை இதே தமிழருவி மணியன் சிலாகித்துப் பேசிய ஆவணமெல்லாம் எங்கள் கைவசம் உள்ளனவே - தேவைப்பட்டால் வெளியிடத் தயார்தான்!
ஆதாயப் பூக்களைத் தேடி அலையும் அரசியல் பட்டாம் பூச்சிகள் அரசியல் பதவி, பவிசுகள் பக்கம் போகாமல் தந்தை பெரியார் பணி முடிப்பதே எம் கடன் என்று பாடுபடும் ஓர் சமூகப் புரட்சி இயக்கத்தின் மீது பழிசுமத்த வேண்டாம்.
உங்கள் ஆதாயத்துக்காக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக திராவிடர் கழகத்தைச் சீண்ட வேண்டாம்.
நல்ல மனிதனுக்கு ஒரு சொல் -
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!
உபயம்: தமிழருவி மணியன்

(‘கல்கி' பேட்டி, 2.4.2015, பக்கம் 8)
                -----------------கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் 5-1-2018 ‘விடுதலை’ யில் எழுதிய கட்டுரை

0 comments: