Search This Blog

21.12.07

கீழ் வெண்மணிக் கொடுமைகளைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன?

ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது.

காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி(த்தான்) ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது! சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காயத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் ந்திவிட்டார்கள்.

‘புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன' மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக்கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆகவேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

எந்த மனிதனும் ‘அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத' நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்தியாகவும் மற்றும் மந்திகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்' என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால் : 1. காந்தியார் கொல்லப்பட்டார் 2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன 3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர் 4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காயங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காயங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காயங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள்.

அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக' இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை' என்கிறார்கள். மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள்.

அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.



- கீழ்வெண்மணியில் 42 தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை ‘விடுதலை' 28.12.1968
வெண்மணியில் கொல்லப்பட்ட அனைவருக்கும் எமது வீர வணக்கம். இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு ஆவண செய்வோம்.

0 comments: