Search This Blog

21.12.07

[டிசம்பர்-24]. பெரியார் நினைவு நாள் சிந்தனைகள்.

நினைவுநாள்- படத்திறப்பு ஏன்?
------------------------------


எத்தனையோ பேர் சாகிறார்கள். ஏதோ இரண்டொருவர்கட்குத்தான் நாம் நினைவு நாள் கொண்டாடுகிறோம். செத்துப் போனவர்களின் பணத்தை உத்தேசித்தோ, படிப்பை உத்தேசித்தோ, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, சாமர்த்தியம் முதவியவைகளைப் பற்றியோ நாம் எவருக்கும் நினைவு நாள் கொண்டாடுவதில்லை. இவைகள் காரணமாக நாம் எவரையும் போற்றுவதுமில்லை; துதிப்பதுமில்லை.

பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத் தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’ ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும். இப்படி அனேகவற்றை - உயிரில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல.

மற்றெதற்காக என்றால், மனிதர்களாக - மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது மனிதத் தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆக்குங்கள் என்பதற்காகவேயாகும்.

அப்படியானால், செத்துப் போன மற்றவர்களும், இப்போது இருக்கும் மக்கள் எல்லோரும் மனிதர்கள் அல்லவா என்று கேட்பீர்கள். அவர்களையெல்லாம் மனிதர்கள் என்று சொல்லுகின்றோமே ஒழிய, மற்ற ஜீவபிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் பேதம் காணக்கூடிய தன்மையுடைய மனிதர்கள் என்று சொல்லுவதற்குரியவர்களாக மாட்டார்கள். பேதம் என்றால் உருவ பேதம் அல்ல. நடப்பிலும்! நடப்பால் ஏற்படும் பயனிலும் உள்ள பேதமேயாகும்.

உலகிலுள்ள எல்லா ஜீவ பிராணிகளுக்கும் - மனிதர்கள் என்பவர்கள் உட்பட, உருவத்தில் பேதம் இருந்தாலும், குணத்தில் பேதம் இருந்தாலும் நடப்பும் பயனும் அனேகமாய் ஒன்றுதான்.

அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கிறோமா? அல்லது தெய்வங்கள் என்பவர்களையாவது மதிக்கிறோமா? மடாதிபதிகள் அல்லது மகான்கள் அல்லது ஆச்சாரியார்களை மதிக்கிறோமா? இவர்களை எல்லாம் அவரவர்களிடத்தில் சம்பந்தமும், தனிப்பட்ட நலமும் பெறுகிறவர்கள் தான் மதிப்பார்கள்; மற்றவர்கள் ஏன் மதிப்பார்கள்?

ஏன் என்றால், வியாபாரம் செய்து இலாபம் சம்பாதிப்பவனை யார், எதற்காக மதிப்பார்கள்? ஓட்டல்காரன், ‘அன்னதான பிரபு’ ஆவானா? சம்பள உபாத்தியாயர், ‘குருநாதன்’ ஆவானா? தாசி, ‘காதலி’ யாவாளா? என்பது போல்தான் தன் தன் நலத்துக்கு - தன் தன் பொறுப்புக்காகக் காரியம் செய்யும் எவனுடைய காரியமும் - எப்படிப்பட்டதாயினும், அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக்கூடியதாகாது. அப்படியல்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் -அதாவது தன்னைப் பற்றிய கவலை இல்லாமல் பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துத் தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத் தொண்டால் பாதகமடையும் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட வகுப்புக்கள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம்; அது பொதுவாய் மதிக்காததாகாது.

ஆகவே, நாம் நினைவு நாள் கொண்டாடும் மக்களை, உண்மையான மனிதர்களாய்க் கருதி, அவர்களது மனிதத் தன்மையை மதித்து, மற்றவர்களும் அந்தத் தன்மைக்கு வரவேண்டுமென்கிற ஆசைக்காக, எடுத்துக்காட்டுக்காக, பிரச்சாரத்திற்காகக் கொண்டாடுகிறோம்.

(‘குடிஅரசு’ 14-4-1945)

நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூசை செய்யவோ, தேங்காய், பழம் ஆராதனை செய்து, விழுந்து கும்பிட்டுப் பக்தி செய்து, நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த - செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாகக் கருதிக்கூட நாம் எந்தப் படத்திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும், எப்படிப்பட்ட படத்திற்கும் பூசை செய்யும்படியோ, கோவில்களிலோ தேர், இரதம், விமானம், சப்பரம் ஆகியவைகளிலோ வைத்து ஊர்வலம் ஆராதனை செய்யும்படி காலித்தனம் செய்வதற்கோ அல்ல.

ஆனால் மற்றெதற்கு என்றால், மனித சமூக நலனுக்கு - சுயநலமில்லாமலும், மற்றவர்களிடமும் எவ்விதக் கூலியோ, புகழோ, பிரயோஜனமோ பெறாமலும், தன் முயற்சியால், தன் பொருளால், தன் பொறுப்பென்று கருதித் தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதிசயங்களையும் தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம், மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா என்பதற்காகவேதான். மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம், கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாகவேதான் இக்காரியத்தைச் செய்கிறோம்.

உதாரணமாக, கிரீஸ் தேசத்துச் சாக்ரடீஸ் என்பவர் - எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். கவுதம் புத்தர் என்பவர் - ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார். இயேசு கிறித்து விக்கிரக ஆராதனை, கோவில் பூசை முதலியவைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற்காகச் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார் முகமது நபி அனேக மூடப்பழக்க வழக்கங்களையும் பல தெய்வ உணர்ச்சியையும் பெண் கொடுமையையும் எதிர்த்துப் பல நல்ல கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததற்காகப் பல முறை சங்கடப்படுத்தப்பட்டார். அப்படிப்பட்டவர்களும் மற்றும் அது போன்ற பல புதிய அபிப்பிராயம் சொன்னவர்களும் அவர்களது ஆயுள் காலத்தில் இதுபோல் எவ்வளவு துன்பப்படுத்தப்பட்டு, எவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டு, எவ்வளவு தொல்லைப்படுத்தப் பட்டு இருந்தாலும் இன்று அவர்கள் கோடானுகோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப்படுகிறார்கள்; கோடிக்கணக்கான பேர்களால் பின்பற்றப்படுகிறார்கள்.

அது போலவே தான், நாங்களும் இன்று எங்கள் அபிப்பிராயங்கள் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும், பாமர மக்களாலும், சுயநலச் சூழ்ச்சிக்காரர்களாலும் எவ்வளவுதான் வெறுக்கப்பட்டுத் தொல்லைகள் விளைவிக்கப்பட்டு அல்லல்பட்டாலும், பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன் தரக்கூடியதாயும் பாராட்டக்கூடியதாயும், மக்களை ஞானவழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கை யுடையவர்களாகவே இருக்கிறோம். இல்லாவிட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத்திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டைப் பெரும்பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற்கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம்.

நாங்கள் பாமர மக்களால் வெறுக்கப்படுவதினாலேயே எங்கள் தொண்டின் மேன்மையை உணருகிறோம். பாமர மக்கள் மதித்துப் பக்தி செலுத்திப் புகழும்படியாக நடந்து கொண்டவர்களுடைய எப்படிப்பட்ட தொண்டும், அபிப்பிராயமும் அவர்களது வாழ்நாளுக்குப்பின் பயன்பட்டதாக எங்களுக்கு ஆதாரமே கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவர்களால் மனித சமூகம் திருத்தப்பாடு அடைந்ததாக எவ்வித ருசுவும் இதுவரை கிடைத்ததில்லை.

நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார்; பெசண்ட் அம்மையார் புகழப்பட்டார்; காந்தியும் புகழ்ப்படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் ‘தெய்வீகம்’ கற்பிக்கப்பட்டார்கள்; பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காணப்படுகின்றதா? இவர்கள் எல்லாம் புராணங்களுக்குப் புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள் போல் தோன்றி, பாமரர்களுடைய பக்திக்கும் பூசைக்கும் ஆளாகி, முட்டாள் தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய்ப் புகழ் பெற்று வருகிறோம் என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் - சாகின்றார்கள் - சாகப்போகின்றார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறதே தவிர, கண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள்!

இன்று உண்மையில் மனித சமூகத்திற்கு ஏதாவது புதிய மாறுதல் உணர்ச்சி அல்லது புரட்சிகரமான சுதந்திரம், விடுதலை, சமத்துவம், சுயமரியாதை என்பதான உணர்ச்சி தோன்றி இருக்குமானால் - அவை அனைத்தும் ஒரு காலத்திலோ நேற்றோ இன்றோ -கல்லடிபட்டு, கொல்லப்பட்டு, கையடிபட்டு, தொல்லைப்பட்டு உயிர் துறந்த, உயிர் வாழ்கின்ற - வெறுக்கப்பட்ட மக்களாலே தான் என்பது ஆராய்ந்து பார்க்கின்ற எவருக்கும் சுலபத்தில் புலப்படும்.

அப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் தன்மை உயர வேண்டுமென்று கருதித் தொண்டாற்றியவர்களே ஒழிய, மக்கள் தங்களைப் போற்றிப் புகழ்ந்து பூசிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்லர். ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி - அவர்களின் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்து, அம்மாதிரியான உள்ளம் பெற்று சமூகத்துக்குத் தொண்டாற்ற முற்படவேண்டும் என்பதற்காகவே அவர்களது உருவப் படத் திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து இவற்றை எடுத்துக் கொள்கிறோம்.

(‘குடிஅரசு’ 10-1-1948)

0 comments: