Search This Blog

20.12.07

அய்யம் போக்கும் பெரியார்

2.பெரியாரும் -ஒரு கடவுளும் :
-----------------------------
உலகச்சிந்தனையாளர்களில் யாருக்கும் இல்லாத "தனித்தன்மை" தந்தைபெரியாருக்கு உண்டு.எப்படியெனில் தான் சொன்ன கருத்துக்களை, தன் கண்முன்னே மக்கள் கடைப்பிடித்து வாழ்க்கை நடைமுறையாக "வாழ்வியலாக" பின்பற்றப்படுவதைக்கண்ட ஒரே சிந்தனையாளர் பெரியார் மட்டுமே.இப்படிப்பட்ட பெரியாரின்
கருத்தை ஒரு சிலர் தன் வசதிக்கேற்ப திரித்தும், தவறாகவும் கூறிவருகின்றனர். அதில் ஒன்றுதான் பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை ஒரு கடவுளை மட்டும் வணங்க அல்லது கும்பிடச்சொன்னார் என்று ஒரு சிலர் சொல்லி வருவது உண்மையா என்று பார்ப்போம்.
கடவுள் மறுப்பை ஒரு இயக்கமாக நடத்தியவர் பெரியார்.கடவுள் இல்லை;இல்லவேஇல்லை என்று அழுத்தந்திருத்தமாக மக்களிடம் தான் சாகும் வரை பிரச்சாரம் செய்தவர் பெரியார். அதோடுமட்டுமல்ல கட்வுள் உருவப் பொம்மைகளை உடைத்து கடவுளும் இல்லை;கடவுளுக்கு எந்தச்சக்தியும் இல்லை என்பதை மக்கள் மன்றத்தில்,கணபதி உருவப்பொம்மை உடைப்பு;இராமன் பட எரிப்பு;இராமன் படத்தை(ஒரு எதிர்வினைக்காக)செருப்பால் அடிப்பது போன்ற செயல்விளக்கமும் செய்து கடவுளே இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர் பெரியார்.
இப்படிபட்ட பெரியாரா ஒரு கடவுளை மட்டும் வணங்கச்சொல்லியிருப்பார்? அவரிடமே கேட்டு விடுவோம்.இதோ பெரியார் பேசுகிறார். கேளுங்கள். தெளிவடையுங்கள்...
"சென்ற மாதம் 30 ஆம் தேதி நான் கும்பகோணம் நிதி அளிப்புக்கூட்டத்தில் பேசுகையில் நான் ஒரு கடவுள் உண்டு என்றும் அதனைக் கும்பிடும்படிக்
கூறினேன் என்றும் எல்லாப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும்,பத்திரிக்கையில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள்.'மெயில்' போன்று பொறுப்பு வாய்ந்த பத்திரிக்கைகள் கூட இந்த அயோக்கியத்தனமான வேலையைச்செய்துள்ளது.'ஆனந்தவிகடன்'
கார்ட்டூன் போட்டுள்ளான்."கண்ணீர்துளி"பத்திரிக்கை ஒன்று "அண்ணா பாதையில் பெரியார்" என்று ஈனத்தனமான முறையில் சேதி வேளியிட்டுள்ளது."கண்ணீர்துளிகள்"அதுவரை ஒரு கடவுள் உண்டு என்று கூறினார்களாம்! நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம்!இன்றுதான் தவற்றை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு நான் வந்திருக்கிறேனாம்! பத்திரிக்கைக்காரன்களில் எவனும் யோக்கியன் கிடையாது. எல்லோரும் இப்படிப்பட்ட அயோக்கியனாகத்தான் ஆகிவிடுகின்றான்.நானும் மானங்கெடத்தான் இவர்களைப் பற்றிப் பேசுகின்றேன் ஒருவனுக்காவது மானஈனத்தைப்பற்றி கவலையே இல்லையே. நான் கும்பகோணத்தில் என்ன பேசினேன் நான் இங்கு குறிப்பிட்டதுபோலத்தான் அங்கும் கடவுள், மதம் இவை பற்றி பெசினேன்.
நம் மக்கள் கடவுள்,மதம் இவைபற்றிய முட்டாள்தனங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும்.உங்களுக்கு கடவுள் இருந்தாக வேண்டுமென்று எண்ணுவீர்களேயானால் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.எனது
இயக்கத்தை சேர்ந்த தோழர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை கிடையாது.
அதுபோலவே நீங்கள் இருந்தாக வேண்டும் என்று நான் என்றும் கட்டாயப்படுத்த வரவில்லை.கடவுள் இல்லையென்று கூற, அதன்படி நடக்க ரொம்ப அறிவுவேண்டும்.தெளிவு வேண்டும். எப்பெடி இல்லை? என்று எந்தவிதக்கேள்வி கேட்டாலும் தெளிவுபடுத்தக்கூடிய முறையில் அறிவாற்றல் ஆராய்ச்சி வல்லமை வேண்டும்.
இவையெல்லாம் நம் மக்கள் எல்லோரிடமும் இருக்கிறதென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.கடவுளிருக்கின்றது என்று கூற அறிவு தேவையில்லை.சுத்தமடையன்
அடிமுட்டாள் கூட கடவுள் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருக்கலாம்.அறிவுக்கு வேலையே இல்லை.அப்படி கடவுள் இருந்தாக வேண்டும் என்று நம்புகின்ற நீங்கள் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்; உலகத்தில் முஸ்லீம், கிறித்துவர்கள் கடவுள் நம்பிக்கை வைத்து இருப்பது போலாவது நடந்து கொள்ளுங்கள் என்றுதான் விளக்கம் சொன்னேன்."
---------"விடுதலை" 24,25-11-1959.
ஆக கடவுள் இல்லை என்பதில் பெரியார் மிகத்தெளிவாக இருந்தார் என்பது
இதன் மூலம் தெரியவருகிறது.கொள்கையில் குழப்பம் விளைவிக்கும் குழப்பவாதிகள் இப்போது தெளிவடைந்திருப்பார்கள் என்று நம்புவோம்.பெரியாரி கடவுள் கொள்கை பற்றி விளக்கமாகவும், விரிவாகவும் அறிந்து கொள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரநிறுவனம்
வெளியிட்டுள்ள 'கடவுள் தொகுதிகள்'-1,2 படிக்க அறிவுறுத்துகிறோம்.
--------- ---------- - தொடரும்---

0 comments: