Search This Blog

24.7.14

இந்தியப் பொருளாதாரம் - பெரியார்



    சகோதரர்களே! பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம் நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன் காலத்தில் எல்லாம் பொருளை உடைத்தாயிருக்கவும், பணம் காசாய் கையாளவும் சிலருக்கே உரிமை இருந்தது. மற்றவர்களுக்கு தானியம் தவிர, வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணம் காசு புழக்கமும் கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்டமாற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும்.

    ஒரு பண்டத்தைக் கொடுத்து மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளுவார்கள். கைத்தொழில்காரர்கள், கூலியாள்கள், ஏவலாளர்கள் எல்லோருக்கும் தானியமே கொடுப்பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் பூமி மானியம் விடுவதே தவிர, பணமாக எதுவும் கொடுப்பதில்லை. எனக்குத் தெரிய 40, 50 வருஷங்களுக்கு முன் வேஷ்டி கொடுப்பவன், உலோகப் பாத்திரம் கொடுப்பவன், நகை செய்து கொடுப்பவன், தோட்டங்களுக்கு கலப்பை ஏர் செய்து கொடுப்பவன், செருப்புத் தைத்துக் கொடுப்பவன். சுவர் வைப்பவன் முதலியவர்கள் எல்லோரும் தானியம்தான் வாங்கிக் கொள்ளுவார்கள். சில ஆட்களுக்கு வருஷத்திற்கு இவ்வளவு என்று இருக்கும்.

    பெருத்த மிராசுதாரர்களிடம் பார்த்தாலும் தானியத்தைத்தான் பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். பண்டமாற்றத்தைத் தவிர, சாதாரண ஜனங்கள் பணமாய் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும்.

    பெருத்த மிராசுதாரர்களிடமும் அரசாங்கப் பழக்கம் முதலியவைகளிலும் பணம் புழங்கினதனாலும், அதுவும் மிகச்சிறு நாணயமாகத்தான் இருக்கும். ரூபாய் என்கிற பெயர் கூட இந்த நாட்டு பாஷை அல்ல, நாணயமுமல்ல, சின்னப்பணம் அதாவது ரூபாய் 1-க்கு 10 - கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும் எத்தனை பணம் என்றுதான் கேட்பார்கள். செல்வம் உள்ளவனையும், பணக்காரன் என்றுதான் சொல்லுகின்ற வழக்கம் இன்னும் உண்டு. அரசியல் அபராதம் முதலியவைகளிலும் 100 பணம் 200 பணம் 500 பணம் என்று பணக்கணக்கில்தான் கணக்கு சொல்லுவதாகும்.

    சமீபகாலம்வரை கூட மலையாளத்தில் திருவாங்கூர், கொச்சி ராஜ்யத்தில் சிவில் கோர்ட்டில் ரூபாய் என்று பிராது போடுவதில்லை. ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதானாலும், அதைப் பணமாகப் பெருக்கி அந்தப் பண எண்ணிக்கையைக் காட்டித்தான் பிராதுபோடும் வழக்கம் இருந்து வந்தது. சில இடத்தில் இன்றும் இருக்கிறது.

    ஆகவே, ரூபாய் என்பதும், பவுன் என்பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக்கூடிய நிலை ஏற்பட்டதே பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையைவிட, சற்று உயர்வடைந்தது என்பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே, பொதுவாகப் பார்த்தால் பொருளாதாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்லமாட்டேன். மற்ற நாட்டைவிட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்தது அல்ல. இந்தியாவை நம்பி அநேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக் கொண்டிருக்கின்றன.

    இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்டமில்லையானால், வெள்ளைக்காரனுக்கு இங்கு வேலை இல்லை. இதுபோலவே இதற்கு முன் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கும் முன் வந்த ஆரியர்களுக்கும் இந்த நாட்டில் வேலையே இல்லை.
    ஆகவே, இவ்வளவு உயர்ந்த பொருளாதார நிலையுடைய இந்திய நாடு இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையான பேர்களை வயிறார உண்ணவும், இடுப்பறா உடுக்கவும், மானமோடு பிழைக்கவும் முடியாதபடி வேறுபல காரியங்கள் கொடுமைப்படுத்துகின்றன. அவைகளின் முக்கியமானவை மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமுமேயாகும்.

    மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும் மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும் எவ்வளவு விளைந்தாலும் அநேகமாய் எல்லாவற்றையும் மேல்கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளுகின்றன. அதிலும் உலகத்திலும் வேறு எப்பாகத்திலும் காணமுடியாத மாதிரி இந்த நாட்டில் இம்மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு அந்த நிலைகளைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்பதோடு சகல போக்கியங்களையும் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டதால் இந்த உலகம் உள்ளவரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஏற்பட்டு விட்டது. அதுமாத்திரமல்லாமல் இந்த நாட்டில் அரசனுக்கும், குடிகளுக்கும் இருக்கும் முறையும், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், குடியானவனுக்கும் மிராசுதாரனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் இருக்கும் முறையும், மேல்ஜாதிக்காரனுக்கும் கீழ்ஜாதிக்காரனுக்கும் இருக்கும் முறையும் பார்த்தால் இந்த நாட்டு மக்களில் 100-க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகளவு கூட மாறி முன்னேற்றமடைய முடியவே முடியாது என்பது எனது உறுதி. ஆகவே, இம்முறைகளும் முன் சொல்லப்பட்ட மதம், கடவுள், அடுத்த ஜென்மம் ஆகிய கொள்கைகளும் இந்தியா எவ்வளவு வளம் பொருந்திய நாடானாலும், செல்வம் பொருந்தியதானாலும், பொன் விளையும், புண்ணிய பூமியானாலும் தபோதனர்கள் அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், முனிகள்_ரிஷிகள், மகாத்மாக்கள், பிறந்த நாடானாலும் பஞ்சநதி, அஷ்டநதி, ஜீவநதியாய் ஓடுகின்ற நாடானாலும் தரித்திரமும், கூலியும், இழிவும் பஞ்சமும், நோயும் இந்தியாவுக்கு நிரந்தர சொந்தமானதேயாகும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.

    நம்முடைய பொருளாதாரக் கஷ்டமெல்லாம் முதலாவது அநாவசியமான செலவுகளும், அவற்றிற்கும் அதிக செலவுகளுமாகும். இந்திய மக்களில் நூறுக்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அநாவசியமானவைகளுக்கும், குருட்டுப் பழக்கம், மூட நம்பிக்கை யானவைகளுக்கும், சோம்பேறியாய் வாழ்கின்ற வர்களின் சுகபோகத்திற்கும் செலவு செய்யப்படுவதினாலேயே வீணாய் விடுகின்றன.

    இரண்டாவது, சுலபத்தில் ஒருபக்கமாக பொருள்களெல்லாம் போய்ச் சேரும்படியாகி விடுகின்றன.

    மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும், சக்தியும், குறைந்து வரும்படிக்கே செலவாகும்படியான முறைகளே இங்கு வெகுகாலமாய் இருந்து வருகின்றன. அதாவது,

    புத்தியைச் செலவழித்து குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவும் துறையானது அடியோடு அடைபட்டுப் போய்விட்டது. இத்தியாதி காரணங்களே இந்தியாவின் பொருளாதாரத்தின் குறைவிற்குக் காரணமாகும்.
    சாமி, பூசை, உற்சவம், புண்ணியம், யாத்திரை ஆகியவைகளின் பெயரால் தனித்தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும் கணக்குப் பார்த்தால் மனிதனின் மொத்த வரும்படியில் ஒரு குறிப்பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம்.

    பிறகு, மதத்தைக் காரணமாய் வைத்து ஏற்பாடுகள் செய்திருக்கும் சடங்குகளையும், அவற்றிற்காகும் செலவுகளையும் கணக்குப் பார்த்தால் அதுவும் ஒரு குறிப்பிட்ட பாகத்தைக் கவர்ந்து கொள்வதைப் பார்க்கலாம். மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும்போதே பெரும்பான்மையோர் அவர்களது கல்வி, கல்யாணம், முதலியவைகளால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படி செய்துவிடுவதுடன் சதா தரித்திரர்களாகவும், கடன்காரர்களாகவும் இருக்க வேண்டியதாய் இருக்கிறது.

    இவை மாத்திரமல்லாமல் நாட்டின் பொருளாதார நிலைமை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற்சாலைகள், யந்திர சாலைகள் முதலியவைகள் ஏற்பாடு செய்வதற்கும் மார்க்கமில்லாமல் பொருள்களையெல்லாம் மேற்கண்ட சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்து கொள்வதோடு கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவைகள் செய்து வைத்தல் மற்றும் உற்சவம், பூசை ஆகியவைகளுக்கு பண்டு, பூமிகள் முதலிய சொத்துக்கள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்கள் பெரும் பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன.

    ஆகவே, இந்த மாதிரியாக எல்லாம் எல்லாப் பொருள்களும் நாசமாகிக் கொண்டும், வீணாகிக் கொண்டும் இருக்கையில் இந்த நாடு எந்தக் காலத்தில்தான் எந்த வகையில்தான் பொருளாதாரத்தில் சீரடைய முடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நம் நாட்டுப் பொருளாதார கஷ்டத்திற்கு மற்றொரு காரணத்தையும் சற்றுக் கவனித்துப் பாருங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை மேல்நாடுகளைப் பார்த்து நாளுக்கு நாள் செலவை அதிகரித்துக் கொண்டு வருகின்றோம்.

    போகயோக்கியங்களை அதிகப்படுத்திக் கொள்ளுகின்றோம். முன்னைவிட, அதாவது 30, 40, 50 வருஷங்களுக்கு முன் நாம் இருந்ததைவிட, அதிகமான ஆடம்பரங்களை விரும்புகின்றோம். மேல்நாட்டு நடை, உடை பாவனையைக் காப்பியடித்து படிப்படியாக உயருகின்றோம். இவையெல்லாம் நமக்குத் தகாதென்றோ குற்றமென்றோ சொல்ல வரவில்லை. ஆனால், மேல்நாட்டார் எப்படித் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தனது வாழ்வின் சுகபோகத்தையும் உயர்த்திக் கொண்டு போகின்றாரோ அதுபோலவே நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டும், வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வருவாய்க்கு வகை செய்து கொண்டும் தானே அதில் பிரவேசிக்க வேண்டும். அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன் அடையக்கூடும்? என்பதை யோசித்துப் பாருங்கள்.

    மேல்நாட்டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து நம்மைப் பார்க்கிலும் பன்மடங்கு லாபம் அடைகிறான். அதனால் அவர்கள் சுகம் அனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 அணா; மேல்நாட்டானுக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 ரூபாய். இதற்குக் காரணம் அவன் வேலை துரிதமேயொழிய வேலை சாமார்த்தியம் அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 10 மணி நேரம் செய்யும் வேலையை மேல்நாட்டார் ஒரு மணி நேரத்தில் செய்து விடுகிறான். அதற்கேற்ற சாதனங்களை அவன் கையாளுகிறான். அதற்காகவே மேல்நாட்டுச் செல்வத்தையும், அறிவையும், ஊக்கத்தையும் செலவு செய்து அந்த நிலையடைந்திருக்கின்றான். அப்படிப்பட்டவனைப் பார்த்து வேலை செய்வதிலும், சம்பாதிப்பதிலும் காப்பியடிக்காமல் அதாவது, அதுபோல் நடக்காமல் அவன் அனுபவிப்பதில் மாத்திரம் காப்பியடித்து அவனைப்போல் நடக்க ஆரம்பித்தால் சாத்தியப்படுமா? பொருளாதாரம் இடம் கொடுக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.

    நமது நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் செத்துப்போன கைத்தொழில்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்கின்றார்கள். உதாரணமாக, இராட்டினத்தில் நூல் நூற்க வேண்டும். கைத்தறியால் வேஷ்டி நெய்ய வேண்டுமென்கின்றார்கள். போராக்குறைக்கு தக்கியில் நூல் நூற்பது தேசியப் பொருளாதாரப் பக்தியாகக் குழந்தைகளும் நாமும் கற்பிக்கப்படுகிறோம். ஒரு நாளைக்கு ஒரு பெண் ராட்டினத்தில் நூல் நூற்றால் கால்ராத்தல் அல்லது காலேவீசம் ராத்தல் 100க்கு 1 அணா அல்லது அதிகமானாலும் 0_-1_-6 அணா கூலிதான் அடையக்கூடும். அதுவும் வெகு மோசமான சரக்கைத்தான் உற்பத்தி செய்யக்கூடும்.
    மேல்நாட்டானோ ஒரு ஆள் ஒரு நாளையில் இதைவிடக் குறைந்த நேரத்தில் இதைவிடக் குறைந்த கஷ்டத்தில் இதைவிட உயர்ந்த சரக்காக 5 ராத்தல் 6 ராத்தல் நூற்று தினம் 2 ரூபாய் சம்பாதிக்கிறான். ஆகவே, மேல்நாட்டார் தினம் 2 ரூபாய் சம்பாத்தியத்திற்கும் நம் நாட்டார் தினம் 2 அணா சம்பாதிக்கவும் இதுவும், மற்றும் இதுபோலவே விவசாயத்துறையிலும் வியாபாரத் துறையிலும் உள்ள காரணங்களாகுமே யல்லாமல் வேறு ஒரு காரணமும் அல்ல. சமூகச் சீர்திருத்த சம்பந்தமான விஷயங்களுக்கு நமது பண்டிதர்கள் எப்படி தொல்காப்பியர் காலத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்து அந்தக் கால நாகரிகத்தைக் கொண்டு சமூக முன்னேற்றம் செய்யப் பார்க்கின்றார்களோ அதுபோலவே நமது தேசியப் பொருளாதாரப் பண்டிதர்கள் அதைவிட முந்திய காலத்திய கைத் தொழில்களைக் கண்டுபிடித்து அந்தத் துறையில் பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டுவரப் பார்க்கிறார்கள்.
    ஆகவே, இந்தியப் பொருளாதார நிலைக்கு இந்தியர்களும், அவர்களது மதமும், கடவுளும், சடங்குகளும் கர்நாடகத்தில் (பழமையில்) பித்துக்கொண்ட தலைவர்களுமே காரணமல்லாமல் வேறு ஒன்றும் முக்கியக் காரணமல்ல என்பது எனது அபிப்பிராயம்.

    சகோதரர்களே! வருஷம் ஒன்றுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மதம், கடவுள், சடங்கு ஆகியவைகளுக்குச் செலவாவதை மறுக்கின்றீர்களா? பல கோடிக்கணக்கான ரூபாய்கள் சாமி, கோயில், பூசை, உற்சவம், நகை, வாகனம் ஆகியவைகளுக்காக அடங்கி முடங்கிக் கிடக்கின்றதை நீங்கள் மறுக்கின்றீர்களா? எனவே, இந்தத் துறைகளில் எல்லாம் புதிய முறை ஆராய்ச்சி முறை மேல்நாட்டு முறை ஆகியவைகளில் கைத்தொழிலும், வியாபாரமும், விவசாயமும் செய்யப்பட்டு குருட்டுப் பழக்கம் மூடநம்பிக்கை சுயநலக்காரர்கள் சூழ்ச்சி ஆகியவைகளிலிருந்து மீண்டுவிட்டோ மானால், நமது பொருளாதார நிலை தானாகவே உயருமா? இல்லையா? என்பதையும், அந்தப்படி செய்யாத காரணமே இன்றைய தரித்திர நிலைக்குக் காரணமா? இல்லையா? என்பதையும் நீங்களே யோசித்துப் பாருங்கள்.

    எனவே, எனக்குக் கொடுத்த விஷயத்தின் தலைப்பில் எனக்குத் தோன்றியதைத் தங்களுக்கு எடுத்துச் சொன்னேன். இது சரியா? தப்பா? என்று யோசித்துப் பார்த்து உங்கள் மனதிற்குச் சரியென்று தோன்றியதை வைத்துக்கொண்டு மற்றதை உடனே மறந்து விடும்படியாய் கேட்டுக்கொண்டு இவ்விஷயத்தை முடிக்கிறேன்.

    ----------------------27.12.1930இல் களக்காடு அய்க்கிய முஸ்லீம் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு விழாவில் இந்தியப் பொருளாதாரம் குறித்து தந்தை பெரியார் ஆற்றிய உரை-- "குடிஅரசு" - 18.01.1931

    தனித்தமிழில் பெயர் வைத்துள்ள ஒரே ஒரு பார்ப்பனரைச் சுட்டிக்காட்டச் சொல்லுங்கள்!


    தேஜ் நாராயணன் டண் டன் என்பவர் லக்னோவைச் சேர்ந்தவர். அவர் இந்தி மொழியில் ஜெயகிருஷ்ணா ஜெய கன்யாகுமரி என்ற ஒரு பயண நூலை எழுதினார்.

    ஆந்திராவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரி யர் டாக்டர் நரசிம்மாச்சாரி தன்னிடம் சொன்ன ஒரு தகவலை அந்நூலில் குறிப் பிட்டுள்ளார் (30 ஆண்டு களுக்குமுன்).

    இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவில் ஒரு புரபசர், 11 ரீடர்கள் உள்பட 12 ஆசிரியர்கள் இருந்தார்கள். புரபசருக்கு மாதச் சம்பளம் ரூ.1200, ரீடருக்கு மாதம் ரூ.900. மாதம் ஒன்றுக்குச் சம்பளம் மட்டும் ரூ.11,100. ஒரு முறை பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம் படிக்க ஒரு மாணவர்கூட இல்லையாம். 12 ஆசிரியர்களும் வேலை யின்றிச் சம்பளம் பெற்று வந்தனர். 

    துணைவேந்தரை அணுகி, நாங்கள் வேலை இல்லாமல் வெறுமனே பொழுது போக்கிக் கொண்டு இருக்கிறோமே என்ன செய்ய? என்று குறைபட்டுக் கொண்டார்கள். துணை வேந்தர் அதற்குச் சொன்ன பதில்: உங்களுக்கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதி யன்றே கிடைத்து விடுகிறது அல்லவா? பிறகு என்ன குறை? வேண்டுமானால், பல்கலைக் கழகத்தில் உள்ள பெரிய சமஸ்கிருத நூலகத் திற்குச் சென்று ஏதாவது படித்துக் கொண்டு இருங்கள் என்று அறிவுரை வழங்கினா ராம்!


    இன்றைக்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்? 0.01 சதவிகிதம் மக்கள் மட்டுமே பேசுவதாகச் சொல்லப்படுகிற சமஸ்கிருதம் இந்தியாவில் பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் இருக்கத்தான் செய்கின்றன. ஈ ஓட்டிக் கொண்டு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் சமஸ்கிருதப் பேராசிரியர்கள்.
    ஒரு காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா? சென்னை மாநிலக் கல்லூரி யில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த கா.நமசிவாய முதலி யாருக்கு மாதச் சம்பளம் ரூ.81, அதேநேரத்தில் சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300. தந்தை பெரியார் குடிஅரசு இதழில் எழுதிய காரணத்தால், நீதிக்கட்சியைச் சேர்ந்த அன்றைய பிரதமர் அமைச்சர் பனகல் அரசர்  அந்த வேறுபாட்டைக் களைந்தெறிந்தார்.


    பனகல் அரசருக்கு சிறீரங் கம் நகராட்சி வேண்டுமென் றே சமஸ்கிருதத்தில் வர வேற்பிதழ் அடித்துக் கொடுத் தது. பனகல் அரசரோ சமஸ் கிருதத்திலேயே பதிலடி கொடுத்து அவாளின் மூக்கை வெட்டினார் என்ப தெல்லாம் சுவையான செய்திகள்.


    வாஜ்பேயி அமைச்சர வையில் மனித வள மேம் பாட்டுத் துறை அமைச்சராக விருந்த முரளி மனோகர் ஜோஷி ஓர் கல்வி ஆண் டையே (1998-1999) சமஸ் கிருத ஆண்டாக அறிவித்து மக்கள் வரிப் பணத்தைக் கொட்டி அழவில்லையா?


    கல்வி நிறுவனங்களில் சரஸ்வதி வந்தனா பாட வேண்டும் என்று வற்புறுத்த வில்லையா?

    பார்ப்பனர்கள் இப்படி யெல்லாம் மொழி வெறியராக இருந்துகொண்டே மற்றவர்களைப் பார்த்து மொழித் துவேஷிகள் என்று கூசாமல் அர்ச்சிப்பதுதான் வேடிக் கையும், வாடிக்கையும் ஆகும்.


    தனித் தமிழில் பெயர் வைத்துள்ள ஒரே ஒரு பார்ப்பனரைச் சுட்டிக்காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். (ஒரே ஒரு பரிதிமாற் கலை ஞரைத் தவிர - அதுகூட அவர் இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரிதான்).
    சமஸ்கிருத எடைக் கருவியை வைத்துப் பார்ப்பனர்களை எளிதிற் புரிந்துகொள் ளலாம்.

                 -              --------------- மயிலாடன் அவர்கள் 23-07-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

    23.7.14

    எண்ணிக்கை முக்கியமல்ல கட்டுப்பாடுதான் மிக முக்கியம்!-கி.வீரமணி

    வழக்குரைஞர் குமாரதேவன் தலைமையில் கழகத்திற்கு வந்துள்ள தோழர்களை வரவேற்கிறோம் 

    புதிய தோழர்கள், பழைய தோழர்கள் என்ற பேதம் இல்லாமல் ஒன்றிணைந்து கட்டுப்பாட்டுடன் பெரியார் பணி முடிப்போம் வாரீர்!
    கழகப் களப்பணி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

    சென்னை, ஜூலை 23- வழக்குரைஞர் குமாரதேவன் தலைமையில் கழகத்தில் இணைந்துள்ள தோழர்களை வரவேற்று, கட்டுப்பாட்டுடன் தந்தை பெரியாரின் பணி முடிக்க வேண்டிய கடமை உணர்வை வலியுறுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

    20.7.2014 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற சென்னை மண்டல கழகப் பொறுப்பாளர்களுக்கான களப்பணி பயிற்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

    அவரது உரை வருமாறு:

    களப் பணி முகாம் என்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது என்பதை,  நம்முடைய கழகப் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் என்னை சந்தித்து மகிழ்ச்சியோடு கூறினார்கள்.

    பெரியார் அவர்களுக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா?

    இது ஒரு நல்ல திருப்பம்; அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய அடிப்படைத் தத்துவத்திலிருந்து, அதனை உலகளாவிய நிலையிலே கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்றக்கூடியவர்கள் நாம் எல்லோரும்.

    நம் எல்லோருக்கும் வழிகாட்டி, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான். பெரியார் அவர்களுக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று பலர் கேட்டார்கள். அதனுடைய பொருள் என்னவென்றால், இயக்கம் இருக்காது என்பதுதான் விடையாகக் கிடைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான், அவர்கள் கேள்வியாகக் கேட்டார்கள்.

    ஆனால், தந்தை பெரியாருக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமை தாங்கிய நேரத்தில், இராவண லீலாவின் மூலமாக மிகப்பெரிய அளவிற்கு, உலகத்தையே கிடுகிடுக்கச் செய்தார்கள் அம்மா அவர்கள். இதே பெரியார் திடல், அதற்கு மிகப்பெரிய களமாக இருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.

    அதுபோலவே, மிகப்பெரிய சோதனையான கால கட்டம், நெருக்கடி காலம் - எமர்ஜென்சி என்று சொல்லக் கூடிய கட்டம்; எங்களையெல்லாம் சிறைச்சாலைக்குள்ளே அடைத்தார்கள்;

    சிறைச்சாலைக் கண்காணிப்பாளராக இருந்தவர் எங்களையெல்லாம் பயமுறுத்திய நிலை இருக்கிறதே, அதை கொஞ்சம் பக்குவம் இல்லாத யாராக இருந்தாலும், அன்றைக்கே அவர்கள் தங்களுடைய வாழ்வை இழந்துவிட்டதாகத்தான், மாரடைப்பு வந்தவர் களாகத்தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

    என்னோடு இருந்த பல அரசியல் கட்சி நண்பர்கள்,  அப்படிப்பட்ட நிலைக்கு ஆளானார்கள்; அப்படி அந்த நிலைக்கு ஆளாகி, அவர்கள் சொல்வதை நம்பிக்கொண்டு கூட என்னிடத்தில் பேசியதுண்டு. நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.

    அன்னை மணியம்மையாருக்கு துணையாக இருந்தார்கள்

    ஏற்கெனவே சிறைச்சாலையில் நாங்கள் தாக்கப் பட்டிருக்கிறோம். நாங்கள் மிகப்பெரிய கொடுமைக்கு, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் கொண்டு சென்ற உடைகளோ, உடைமைகளோ எங் களுக்குத் தரப்படவில்லை. பல வாரங்களாக, பல மாதங் களாக அணிந்திருந்த உடையைத்தான் குளித்துவிட்டு, மீண்டும் அணிந்துகொள்வோம்; ஆகவே, எங்கே இருக்கிறோம் என்று தெரியாது. முதல் நேர்காணல்கூட நடைபெறவில்லை.

    அந்த அளவிற்குச் சூழ்நிலை இருக்கும் பொழுது, நாங்கள் எந்தச் சிறைச்சாலையில் இருக்கிறோம் என்றுகூட வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியாது. இந்த நிலையில், அம்மா அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எங்களைப் பார்க்க வந்தவர்கள்கூட, தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்பதால், மீண்டும் வராமல், நின்று விட்டார்கள்.
    நம்முடைய கவிஞர் கலி.பூங்குன்றன் போன்றவர்கள்தான், அரசு பணியில் இருந்தாலும்கூட, அதனைப்பற்றி கவலைப்படாமல் உறுதுணையாக இருந் தார்கள். அப்படிப் போட்ட சிலர் அன்னை மணியம் மையார் அவர்களுக்குத் துணையாக இருந்தார்கள்.

    சிறையில் ஏற்பட்ட அச்சுறுத்தல்

    நாங்கள் சிறைச்சாலையில் இருந்தபொழுது, இன்னும் சில மணிநேரத்தில் ஒரு அறிவிப்பு வரப் போகிறது; அது என்ன அறிவிப்பு என்றால், திராவிடர் கழகத்தை, திராவிட இயக்கத்தையே தடை செய்ய அறிவிக்க இருக்கிறார்கள்; இனிமேல் காங்கிரஸ் இயக்கம் ஒன்றுதான் இருக்கும்.

    வேறு எந்த இயக்கமும் இருக்காது. ஆகவே, இதோடு எல்லாமே முடிந்தது; ஆகவே, நீங்கள் எல்லோரும் வெளியில் செல்வோம் என்றெல்லாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் எல்லாம் அடங்கி இருங்கள் என்று சொன்னார்கள். எங்களை தனித்தனியே அழைத்து சிறைக் கண் காணிப்பாளர் சொல்கிறார்:

    இனிமேல் நீங்கள் வெளியில் போக முடியாது. வெளி உலகத்தை நீங்கள் பார்க்க முடியாது. உங்களுடைய வாழ்க்கை இந்த சிறைச்சாலையோடு முடிந்துவிடப் போகிறது.  இத னைக் கேட்டவுடன், பல பேர் அரண்டு போய்விட்டார்கள்.

    ஒரு நண்பர், அதுவும் முக்கியமான நண்பர் என்னிடம் வந்து, என்ன இப்படி சொல்கிறார்களே, இனிமேல் நாம் வெளியிலே போகவே முடியாது போல இருக்கிறதே என்று சொன்னார்.

    நான் அவரிடத்தில், சலனமில்லாமல், கொஞ்சம் கவலையோடு சொன்னது என்னவென்றால், இதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது; நம்மை பயமுறுத்துவ தற்காக சொல்கிறார்கள். அப்படியே இருந்தால்தான் என்ன? இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கங்களே இல்லையா? வேறுவிதமான சூழ்நிலைகளே இல்லையா? நிறைய இருந்திருக்கிறதே! இதையெல்லாம் நாம் ஏற் கெனவே பார்த்திருக்கிறோமே என்று அவரிடம் சொன் னேன்; சிறைக் கண்காணிப்பாளரிடம் சொன்னதைத்தான் அவரிடமும் சொன்னேன்.

    சிறைக் கண்காணிப்பாளரும் தனித்தனியே எங்களைக் கூப்பிட்டு, அச்சுறுத்தி, எங்களின் மன நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்பார். இவர் எப்படி நினைக்கிறார்? அவர் எப்படி நினைக்கிறார்? என்பதற்காக. எல்லோரையும் ஒன்றாக வைத்துக் கொண்டு கேட்டால், அவருக்குப் பதில் சொல்வதற்கு வசதியாக இருக்கும். ஆனால், அவர் தனித்தனியே எங்களை அழைத்துக் கேட்டார்.

    என்னை அழைத்து அப்படி கேட்டுவிட்டு, என்ன சொல்றீங்க வீரமணி? என்று சாதாரணமாகக் கேட்டார். நான் இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தேன். உடனே அவர், என்னங்க, பேசாமல் இருக்கிறீர்கள்; ரொம்ப யோசிக்கிறீங்களா என்று கேட்டார்.

    என்னைப் பொறுத்தவரை நான் நம்பத் தயாராக இல்லை!

    நான், யோசிக்கவில்லை, நீங்கள் சொன்னது உண்மை யாக இருக்கலாம்; உங்களுக்கு வந்த தகவல்களின்படி நீங்கள் சொல்கிறீர்கள். தடை வரட்டும்; எங்களையெல்லாம் கைது செய்து வந்திருக்கிறீர்கள். தடை வந்தால், இன்னும் கொஞ்சம் பேர் வருவார்கள். ஆனால், ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், நீங்கள் சொன்னீங்களே, இனிமேல் வெளி உலகத்தைப் பார்க்க முடியாது; சிறைச் சாலைக்குள்ளேயே உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும் என்று, என்னைப் பொறுத்தவரை நான் நம்பத் தயாராக இல்லை என்று சொன்னேன். என்ன இப்படி சொல்றீங்க! என்று கேட்டார்.

    நான் மிகவும் தெளிவாகச் சொன்னேன்,

    கொஞ்ச நாள்களுக்கு முன்பு பங்களாதேஷ் பிரிந்ததே - அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? முஜ்புர் ரஹ்மான் அவர்கள், சோனாலி பங்களா (தங்க வங்கம்) என்று அவருக்கு வாழ்த்துச் சொல்லி பாடினார்களே, அதுதான் அவர்களுக்கு பின்னாளில் தேசிய கீதமாக ஆயிற்று. அந்த வாழ்த்துச் சொல்வதற்கு முன்பு, நான்கு நாள்களுக்கு முன்பு, அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் தூக்கு மேடைக்குப் போகப் போகிறார் என்கிற நிலை இருந்தது; எல்லோரும் எதிர்பார்க்கவேயில்லை, அதே முஜ்புர் ரஹ்மான், அந்த நாட்டிற்கே அதிபராக ஆகக்கூடிய அளவிற்கு வந்த வரலாறு இருக்கிறதே, அந்த வரலாறு எங்களுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. உங்களுக்கும் அதனை ஞாபகப்படுத்துகிறேன்.

    அரசியலில் ஒன்றே ஒன்று, நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாளைக்குக் காலையில் என்ன செய்தி என்று தெரியாததற்குப் பெயர்தான் அரசியல். ஆகவே, அதனைக் காட்டி எங்களையெல்லாம் அச்சுறுத் தலாம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். உடனே அந்த அதிகாரி, நான் அச்சுறுத்துவதற்காக சொல்கிறேன் என்று நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று சொன்னார்.

    நெருக்கடிக்கு ஆளாக்கியவர்களே, நெருக்கடிக்கு ஆளானார்கள்!

    தவறாக எடுத்துக்கொள்கிறேனோ, சரியாக எடுத்துக் கொள்கிறேனோ அது ஒருபுறம் இருக்கட்டும்; ஆனால், ஒன்று, எவ்வளவு காலத்திற்கு இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்களோ, நாங்கள் இருக்கப் போகிறோமே தவிர, வேறொன்றுமில்லை என்று சொன்னேன்.

    ஆகவே, அந்த நெருக்கடி காலத்தில் பல நண்பர்கள் இந்தக் கருத்தோடு இருந்தார்கள். இந்த இயக்கம் இனிமேல் இருக்காது என்றெல்லாம் நினைத்தார்கள்.

    ஆனால், நாம் நினைத்தோமே, மிகத் தெளிவாக, நெருக் கடிக்கு ஆளாக்கியவர்களே, பிறகு அவர்கள் நெருக் கடிக்கு ஆளானார்கள்; அவரே பிறகு சிறைச்சாலைக்குப் போனார். அதையெல்லாம் மிக விரைவில் நாம் பார்த் தோம். ஆகவே, அரசியலில் இதெல்லாம் மிகச் சாதாரணம். பொது வாழ்க்கையில் சர்வசாதாரணம்.

    எனவே, இந்த இயக்கம் இருக்கவே இருக்காது என்று நினைத்தார்கள். ஒவ்வொரு கட்டமும் இருந்தது. அய்யா, அம்மாவிற்குப் பிறகு இனிமேல் இந்த இயக்கத்தை யார் நடத்தப் போகிறார்கள் என்று நினைத்தார்கள். அது மட்டுமல்ல, பெரியார் சொத்தை நிறைய சேர்த்து வைத் திருக்கிறார்; அந்தச் சொத்துக்காக ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு செத்துப் போவார்கள் என்று.

    பார்ப்பான் இப்படிமே சொன்னான், இவர்கள் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சுகிட்டு, குத்திக்கிட்டு, வெட்டிக்கிட்டு செத்துப் போவான் என்று சொன்னார்கள். எல்லோரும் உயிரோடு தான் இருக்கிறோம்.

    இயக்கத்தினுடைய பலமே இதில்தான் இருக்கிறது

    ஆகவே, இங்கே கூடியிருக்கும் தோழர்களைப் பார்த் தால், இதுவரையில் நடைபெற்ற களப்பணி பயிற்சியில் கூடியதைவிட, தோழியர்கள், தோழர்கள் நிறைய அளவிற்கு வருகை தந்துள்ளது மகிழ்ச்சிகரமாக இருப்பதோடு மட்டுமல்ல, நம்முடைய தோழர்களுக்கு ஒரு மிகப்பெரிய சிறப்பு, கறுப்புச் சட்டை!

    நம்முடைய ஒவ்வொரு தோழரும், மற்ற அமைப்புகளில், பொதுவாழ்க்கையில் இருக்கும், நூறு பேர்கள் - ஆயிரம் பேர்களுக்கு சமமானவர்கள்; எல்லா வகையிலும் - தியாகத்திலும் சரி, பக்குவத்திலும் சரி, கொள்கையை முன்னெடுத்துச் செல்வதிலும் சரி, ஈடுகொடுப்பதிலும் சரி தெளிவாக இருப்பார்கள். இதுதான் இந்த இயக்கத்தினுடைய பெரிய பலம்!
    இன்றைக்கு அய்யா அவர்களுடைய இயக்கம் உலக ளாகவிய இயக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய மகிழ்ச்சி; அது என்னவென்று சொன்னால், வளர்ந்து கொண்டே இருக்கிறது; ஜெர்மனியில், பெரியாருடைய குரல்; கடலூரில் நேற்று முன்தினம் நானும், அறிவுக்கரசு அவர்களும் வாழ்க்கை இணையேற்பு விழாவில் கலந்து கொண்டோம். அந்த மணமகன் பின்லாந்தில் பணியாற்றக் கூடியவர். இங்கிருந்து சென்ற இளைஞர்கள் பலர் அங்கே கணினியில் பணியாற்றக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.

    நான் மணமகனிடம் சொன்னேன், அடுத்தபடியாக பின்லாந்தில் ஒரு கூட்டம் போடவேண்டும் என்று. உடனே மணமகன் கூறினார், நான் அங்கே சென்றதும், பெரியார் பன்னாட்டமைப்பை உருவாக்குவேன்; அதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என்றார்.

    ஜெர்மனியில் ஜூன் மாதத்தில் நடைபெற்றது என்று சொன்னால், அடுத்தது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் அந்த வாய்ப்பு ஏற்படும்.
    ஆகவே, பெரியாருடைய கொள்கை என்பது உலகளாவிய கொள்கையாக இருக்கிறது. இந்தக் கொள்கை தேய்ந்து போய்விட்டது; தேய்ந்து போய்விட்டது என்று காட்டுவதற்கு நிறைய பேருக்கு ஆசை இருக்கிறது. காரணம் என்னவென்றால், அதில் ஒரு விஷமத்தனமும், மயக்கமும் கலந்திருக்கிறது.
    பயிற்சி வகுப்பில் சொல்லவேண்டிய மிக முக்கிய செய்தி இது.

    இதோ போகிறான் கறுப்புச்சட்டைக்காரன்

    என்னங்க, திராவிட இயக்கம் எல்லாம் கொள்கையை விட்டுவிட்டார்கள்; கொள்கை தேய்ந்து போய்விட்டது. இப்பொழுது திராவிட இயக்கமே இல்லையே! பெரியாரோடு முடிந்து போய்விட்டதே - இப்பொழுது என்ன கொள்கை இருக்கிறது என்று பெரிய விவாதத்தை செய்கிறார்கள். இடதுசாரிகள் மிக சன்னமாக செய்கிறார்கள்; மிக சாமர்த்தியமாக செய்கிறார்கள். இன்னும் வலதுசாரிகள், நடுசாரிகள், எல்லாருமே செய்து கொண்டிருக்கிறார்கள்.

    செய்தியாளர்கள் என்னிடம் இதுபற்றி கேட்டபொழுது, நான் ஒரே கேள்வியை கேட்க விரும்புகிறேன். அவர்கள் கேட்ட கேள்விக்கும் அதுதான் பதில்.

    திராவிட இயக்கங்கள் ஒன்று!

    கொள்கையை வைத்து அடையாளம் என்பது நமக்குத் தான் நமக்கு ஒரு பெரிய சிறப்பு சாதாரணமாக கிராமத்தில் இருப்பவர்கள்கூட, நம்மைப் பார்த்து, இதோ போகிறான் கறுப்புச்சட்டைக்காரன் என்று சொல்வார்கள்.
    அதைவிட மிக முக்கியம் என்னவென்றால்,  தனித் தன்மை; இப்பொழுது கறுப்புச் சட்டையை எல்லோரும் போட ஆரம்பித்துவிட்டார்கள். யாருக்காவது போராட்ட உணர்வு வந்ததென்றால், அன்றைக்குக் கறுப்புச் சட்டையைப் போட்டு வருகிறார்கள். போராட்டத்திற்கு உகந்தது கறுப்பு சட்டை தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது; அந்த மரியாதை நமக்கு இருக்கிறது. ஏதாவது போராட்டம் என்றால் கறுப்புச் சட்டை போடவேண்டும்; நியாயத்தைக் கேட்கவேண்டு மானால், கறுப்புச் சட்டை போடவேண்டும் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.

    கறுப்புச் சட்டைக்காரன் என்று நம்மை சொல்வதைவிட, இன்னும் எளிமையாக சொல்வது, அதாங்க, அவங்கதான்; ஊருக்கு இரண்டு பேர்தாங்க இருப்பான்; அதாங்க, சாமி இல்லைன்னு சொல்ற கட்சிக்காரங்க அப்படின்னு சொல்வாங்க.


    கொள்கையைச் சொல்லி நம்மை அறிமுகப்படுத்து கிறார்கள் பாருங்கள், அது நம்ம இயக்கத்திற்கு மட்டும்தான் உண்டு.

    சாமி இல்லை என்று சொல்வதுதான் நமது கொள்கை; அதில் ஒன்றும் சந்தேகமில்லை. வேறு எந்தக் கட்சிக்காவது இந்த சிறப்பு உண்டா? வேறு எந்த அமைப்பிற்காவது இந்த சிறப்பு உண்டா?

    ஆடி மாதத்தைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள்

    அப்படிப்பட்ட இந்த இயக்கம், இன்றைக்கு வளர்ந் திருக்கிறது. பெரியார் தலைமையில் நடைபெற்ற ஒரு திருமணம்; 50 ஆண்டுகள் கழித்து பொன்விழாவிற்கு நாங்கள் சென்று நடத்தி வைக்கிறோம். கடலூரில் உரையாற்றும்பொழுது நான் சொன்னேன், இந்த விழாவைக்கூட ஆடி மாதத்தைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள் என்று.

    ஆடி மாதத்தில் திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள் என்றால், இவ்வளவு துணிச்சல், இவ்வளவு பக்குவம் வந்திருக்கிறது என்றால், பெரியார் கொள்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிர்; இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது; இந்தக் கொள்கையை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இளைஞர்கள் உற்சாகத்தோடு வாருங்கள்; இந்த இயக்கத்தில் வயது இடைவெளியே கிடையாது; வயதானவர்கள், இளைஞர்கள் என்கிற பேதமே கிடையாது.

    யாராலும் குறை சொல்ல முடியாது!

    நம் இயக்கத்திற்கு என்ன பெருமை என்றால்,  ஒரே கொள்கையில், குடும்பம், குடும்பமாக இருக்கிறார்கள் என்று சொல்வது இருக்கிறது பாருங்கள், அதுதான் நமக்குப் பெருமை. அப்பன் ஒரு கட்சி; மகன் ஒரு கட்சி என்று சொல்வதற்கு இங்கே இடம் கிடையாது.

    மனைவியா, மகனா, பெயரக் குழந்தைகளான பிஞ்சுகளுக்குக்கூட அந்த உணர்வை உண்டாக்கியிருக்கிறோம் என்றால், குடும்பம், குடும்பமாக, கொத்து கொத்தா, எப்படி ஒரு மரத்திற்கு வேர் சரியாக இருந்தால், பூக்களாக இருந்தாலும், காய்களாக இருந்தாலும், கனிகளாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்கும்; அடி வேர், உழைப்பு, தொண்டர்கள், கொள்கை, இவை அத்தனையையும் யாராலும் குறை சொல்ல முடியாது.

    எனவே, தோழர்களே, நம்முடைய இயக்கம் வெற்றி பெறக்கூடிய ஒரு இயக்கம். நம்முடைய இயக்கம் உலகளாவிய அளவில் இருக்கிறது. மத உதாரணத்தைச் சொல்வதற்காக என்னை மன்னிக்கவேண்டும்;
    விளங்க வேண்டும் என்பதற்காக அதனை சொல்கிறேன்; பைபிளை எடுத்துக்கொள்ளுங்கள்; குரானை எடுத்துக்கொள்ளுங்கள்; புத்தருடைய அந்தக் கொள்கைப் பரப்பலை நினைத்துப் பாருங்கள். அய்ந்து சீடர்; நான்கு சீடர்; மூன்று சீடர் என்றுதான் இருந்திருக்கிறார்கள். ஆனால், நமக்கிருக்கின்ற வசதிகள் அவர்களுக்குக் கிடையாது.

    அவர்களுடைய முறைகள் எல்லாம் அதே முறையா? அல்லது திரிபுவாதம் ஏற்பட்டதா? திரிபுவாதம் ஏற்படவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், அய்யாவினுடைய கொள்கை அப்படியல்ல, இதில் யாரும் திரிபுவாதம் செய்ய முடியாத அளவிற்கு, உரைகளே பதிவு இருக்கிறது; உரைகளே அச்சாக இருக்கிறது; உரைகளே எழுத்தாக இருக்கிறது. 

    ஏனென்றால், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு, பல்வேறு ஒலிப் பதிவுகள், ஒளிப்பதிவுகள் இவை அத்தனையும் நடைபெற்றது நமக்கிருக்கின்ற வாய்ப்பு.
    ஆனால், அவர்களுடைய காலத்தில் பார்த்தீர்களே யானால், தொண்டர்கள், சீடர்கள்தான் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள்.

    தனிப்பட்ட தன்மானத்தையும் இழப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும்

    தத்துவ ஞானியான தந்தை பெரியார் அவர்கள் வித்தியாசமான தலைவராக இருந்தார். எப்படியென்றால், அவர் கொள்கையை சொல்லியதோடு மட்டுமல்ல, அவரே பரப்பினார். அவரே தன்னுடைய சொந்தப் பணத்தை செலவு செய்தார்; சொந்த செல்வத்தைப் பயன்படுத்தினார்.

    எனவே, அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், அவருடைய உழைப்பினால், இந்த இயக்கம் வந்த தென்றால், அவருடைய தோழர்களாகிய நம் ஒவ்வொரு வரும், நம் இயக்கத்தை உலகளாவிய அளவிற்குக் கொண்டு போவது எப்படி என்பதுதான் நம்முடைய கவலையாக இருக்கிறது. நம்முடைய இயக்கம் பதவி நாடாத இயக்கம்.

    நன்றி பாராட்டாத ஒரு இயக்கம். நம்முடைய இயக்கம் சொந்த லாபத்திற்காக எதையும் கருதாத ஒரு இயக்கம். எல்லாவற்றையும்விட, தன் மானத்தைச் சொல்லிக் கொடுத்த தலைவர், தேவைப் பட்டால், உன்னுடைய தனிப்பட்ட தன்மானத்தையும் இழப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். இது ஒரு விசித்திரமான அமைப்பாகும்.

    உன் தலைவன், உன்னுடைய கொள்கை, உன்னுடைய ஸ்தாபனம்

    இனமானத்திற்காக தன்மானத்தை விடு; உன்னைப்பற்றி கவலைப்படாதே! உன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதே! கொள்கையை முன்னிலைப்படுத்து! நம்முடைய இயக்கமென்றால், அந்த இயக்கத்திற்குக் கடமை; அந்த இயக்கத்திற்குக் கொள்கை, தத்துவம், அந்த இயக்கத்திற்கு ஸ்தாபனம் (நிறுவனம்) இந்த மூன்றும்தான் மிக முக்கியம்.

    அதைத்தான் அய்யா அவர்கள்,

    புத்தம் சரணம் கச்சாமி
    தம்மம் சரணம் கச்சாமி
    சங்கம் சரணம் கச்சாமி

    என்பதை, உன் தலைவன், உன்னுடைய கொள்கை, உன்னுடைய ஸ்தாபனம் (நிறுவனம்) இந்த மூன்றிற்கும் தெளிவாக உன்னை ஒப்படை என்று தெளிவாகச் சொன்னார்.

    புத்தி மார்க்கம் என்று சொல்லி, அதற்கு விளக்கம் கொடுத்தார். ஆகவே, இது தெரிந்த ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தை எவ்வளவு முன்னெடுத்துச் செல்லவேண்டு மோ, அவ்வளவு செல்லவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தக் களப்பணி என்பது, அதை இன்னும் பயனுறு வகையிலே, இன்னும் பலருக்கும் அது பயன்பட்டு, காலங்காலமாக அழிக்க முடியாத ஒன்று என்று, அடக்குமுறைகள் வரலாம்; எதிர்ப்புகள் வரலாம்; எதிர்ப்பு வரவர நமக்கு லாபம். அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல, அடக்க அடக்க நாம் வளருவோம் என்பதுதான் வரலாற்றுச் சுவடுகள். 

    எதிர்ப்பைப்பற்றி நாம் கவலைப்படவேண்டாம்; எதிர்ப்பு இல்லை என்றால்தான் நாம் கவலைப்பட வேண்டும். எனவே, எதிர்த்தவர்கள்தான் நம் இயக்கத் திற்குப் பின்னாளில் வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் ஒவ்வொருவரும் நீங்கள் தெளிவாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

    முகாமியினுடைய வெற்றியே இதில்தான் இருக்கிறது

    அந்த வகையில், நன்றாக இந்தக் களப்பணி முகாமை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக ஒன்றுபட்டு, ஒரு குடும்பமாக நாம் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கவேண்டும்.

    இங்கே பார்க்கும்பொழுது மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுகிறது; தாய்மார்கள், சகோதரிகள், தோழியர்கள் ஏராளமாக வந்திருக்கிறார்கள். இந்த முகாமினுடைய வெற்றியே இதில்தான் இருக்கிறது. மதவாதிகளைப் பாருங்கள், சர்ச்சுக்குப் போகவேண்டுமென்றால், குடும்பம் குடும்பமாகச் செல்கிறார்கள், அதை ஒரு அமைப்பாகவே கொண்டு வந்துவிட்டார்கள்.
    அதுபோல், நம் நிகழ்ச்சிகள் என்றால், நான் தோழர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், நம் செயல் வீரர்கள் கூட்டம், கலந்துரையாடல் கூட்டம், நிர்வாகக் கூட்டம், இயக்க அமைப்புக் கூட்டம் என்றால், நீங்கள் தவிர்க்கவே கூடாது; குடும்பம் குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும். பெரியார் பிஞ்சுகள்முதல் பெரியார் தொண் டர்கள்வரை கலந்துகொள்ளவேண்டும். பிஞ்சுகளுக் கென்று தனியாக ஒரு இதழை நாம் நடத்துகின்றோம். அதனை வாங்கிப் பெரியார் பிஞ்சுகளுக்குக் கொடுங்கள்.


    ஆகவே, இளைஞர்களையும் இதில் ஈடுபடுத்த வேண்டும்; அந்த வகையில் நல்ல இளைஞர்களை யெல்லாம் இன்றைக்குக் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்கள் கொண்டு வந்து, இந்த அமைப்புக்குள்ளே அழைத்து வந்ததற்கு நன்றி! பாராட்டு!

    என்னிடம் அவர் சொன்னார், நான் 18 ஆண்டுகளாக பிரிந்து போனதில் மிகவும் சங்கடமாக இருக்கிறது என்று சொன்னார்.

    18-க்கும் 18-க்கும் ஒற்றுமை இருக்கிறது

    18 ஆண்டுகள் பிரிந்து போனது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அய்யாவை விட்டு, அண்ணா அவர்கள் 18 ஆண்டுகள் பிரிந்து போனார். 18-க்கும் 18-க்கும் ஒற்றுமை இருக்கிறது. சங்கடங்கள் தேவையில்லை;  ஒரு குளத்திலுள்ள நீரை, ஒரு குடத்தில் எடுத்துக்கொண்டு போய் தனியே வைத்துவிட்டு, மறுபடியும் அந்தக் குடத்திலுள்ள நீரை குளத்திலேயே ஊற்றினால், அந்தத் தண்ணீர் என்ன மாறிப் போய்விடுமா? கண்டிப்பாக மாறாது. ஊற்றிய பிறகு குடத்திலிருந்த தண்ணீர், குளத்திலிருக்கும் தண்ணீர் என்று கோடு போட முடியுமா?

    உண்மையைத் தெரிந்துகொண்டவுடன் அவர்கள் மீண்டும் வருகிறார்கள்

    ஆகவே, இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை.    நம்முடைய பணியை பல பேர் சரியாகப் புரிந்துகொள் ளாமல், நமக்கு ஏதோ சுயநலத்திற்காக அல்லது வேறு எதற்காகவோ என்று சில பேர் செய்த பிரச்சாரத்திற்கு அவர்கள் பலகீனமாக இரையாகியிருக்கலாம். பிறகு அவர்கள் சரியான உண்மையைத் தெரிந்துகொண்டவுடன் அவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவ்வளவுதானே தவிர, வேறொன்றுமில்லை.

    எனவேதான், நாம் அதைப்பற்றியெல்லாம் பொருட் படுத்தாமல், நம் தோழர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன், இதில் ஒன்றும், முன்னர், பின்னர் எல்லாம் கிடையாது. தண்ணீர் கதை போலத்தான்.

    எல்லா தோழர்களும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். 

    எல்லோரையும் ஒருங்கிணைக்கவேண்டும். நமக்கு ஒரே தலைமை; அதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமை; ஒரே கொள்கை; ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, வகுப்புரிமை பாதுகாப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை போராட்டம் இவை அத்தனையும்!

    எண்ணிக்கை முக்கியமல்ல தோழர்களே, கட்டுப்பாடுதான் மிக முக்கியம்!

    இதுமாதிரி கொள்கையில் நமக்கு வித்தியாசமில்லாமல், இதே கொள்கையை நன்றாகப் பலப்படுத்தவேண்டும்; ஸ்தாபனத்திற்கு என்ன அடையாளம் என்றால், எண்ணிக்கை முக்கியமல்ல தோழர்களே, கட்டுப்பாடு மிக முக்கியம். ராணுவக் கட்டுப்பாடு.

    எனவே, இந்த இயக்கத்திற்கு வந்த தோழர்கள், இருக்கின்ற தோழர்கள் எல்லோருக்குமே, ஒரு குடும்பம்போல நடத்துகின்ற நேரத்தில், தயவு செய்து வேறு எதையும் நீங்கள் இழப்பதற்குத் தயாராக இருங்கள்; கட்டுப்பாடை மட்டும் இழப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கக்கூடாது.

    முக்கியமாக நமக்குத் தேவை மூன்று:

    1. கட்டுப்பாடு 2. கட்டுப்பாடு 3. கட்டுப்பாடு

    ஆகவே, இதைத்தான் வலியுறுத்த விரும்புகிறோம். இதனை மனதில் நீங்கள் வைத்துக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றுங்கள்.

    நம் இயக்கம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்!

    அதைவிட இந்தக் கூட்டத்தில் ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், இன்றைக்கு ஒரு அறிக்கை வருகிறது; சமஸ்கிருத மயம் என்கிற அறிவிப்பு வந்தவுடன், அந்த அறிவிப்பை மிகப்பெரிய அளவிற்கு, ஒரு மிகப்பெரிய வாய்ப்பு வரக்கூடிய அளவிற்கு, நம் இயக்கம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம், தமிழக முதலமைச்சர் அவர்களே, சமஸ்கிருதம் வாரம் கூடாது என்று சொல்லவேண்டிய அளவிற்கு வந்திருக்கிறார் என்றால், இந்தக் கொள்கை மிக ஆழமாக இருக்கிறது. அவருடைய அறிக்கையில் இருக்கிறது. இந்த சமுகநீதிக் கொள்கையாளர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள்.


    இந்த நாட்டில், பெரியார் கொள்கையை நாங்கள் ஒழித்துவிட்டோம், ஒழித்துவிடுவோம் என்றெல்லாம் வரக்கூடிய நிலை இருக்காது. ஒருபோதும் முடியாது என்பதற்கு அடையாளம்தான், ஆகஸ்டு ஒன்றாம் தேதியன்று சிறப்பாக போராட்டங்கள் நடைபெறும் என்று விடுதலையில் அறிக்கையாக எழுதியிருக்கிறோம்.

    சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து, நடத்தக்கூடிய அறப்போராட்டம், ஆர்ப்பாட்டமாக, மத்திய அரசு அலுவலகத்திற்கு முன்பு, சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, புதுச்சேரி, மதுரையில் நடைபெற விருக்கிறது.

    சென்னையில் நான் தலைமை தாங்குகிறேன்!

    மேலும் ஒன்றிரண்டு நகரங்களில் தோழர்களுடன் கலந்துகொண்டு பேசி இது நீட்டிக்கப்படும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை தாங்க இருக்கிறேன். குடும்பம் குடும்பமாக அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வரவேண்டும். நமது போராட்டம் என்றால், காலையில் சென்று மாலையில் வந்துவிடுவோம் என்று நினைத்துச் செல்வதில்லை.

    ஆகஸ்டு ஒன்றாம் தேதிதான் போராட்டத்திற்கு நல்ல நாள்!

    ஆகவேதான், தயாராகக் இருக்கக் கூடிய சூழ்நிலையில், இந்தக் களப்பணி முகாமிற்கே ஒரு நல்ல செய்தி என்ன வென்றால், போராட்டம் ஆகஸ்டு ஒன்றாம் தேதி என்று சொல்வதுதான் இன்றைய தெளிவான ஒரு பெரிய வாய்ப்பு.

    போராட்டம் நடத்துகின்றவர்களுக்கு அய்யா அறிவுரை சொல்லியிருக்கிறார். ஆகஸ்டு ஒன்றாம் தேதிதான் போராட்டத்திற்கு நல்ல நாள். அதற்கு நல்ல நாள் குறித்திருக்கிறார்.

    நாம் செயலில் இறங்குவோம்

    ஏனென்றால், ஜெயிலில் தண்டிப்பதாக இருந்தாலும், நல்ல வசதியாக தண்டித்து, பயனுள்ளதாக சிறை வாழ்க்கையை கழிக்கலாம். போராட்டம் நடத்தவேண்டு மென்றால், எப்பொழுது நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அப்படிப்பட்ட தலைவர் நமக்கு அறிவாசானாகக் கிடைத்திருக்கிறார்.

    எனவே, உங்களைப் பார்க்கும்பொழுது உற்சாகத்தைப் பெருகிறேன். என்னுடைய பேட்டரி ரீ-சார்ஜ் ஆகியி ருக்கிறது; உங்களுடைய பேட்டரியும் ரீ-சார்ஜ் ஆகியிருக்கிறது. நாம் செயலில் இறங்குவோம்.

    நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

    - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினர்.

    இயக்கத்தில் இணைந்தோர்

    வழக்குரைஞர் சு.குமாரதேவன், வடசென்னை சொ.அன்பு, வி.ஜனார்த்தனம், வடசென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த கருங்குழி கண்ணன், வடசென்னை பகுதியைச் சேர்ந்த திலகவதி, தெ.சரளா, வ.வெண்ணிலா, செ.சந்தியா, செ.கலையரசன், அ.புகழேந்தி, அ.செந்தமிழ்தாசன், ம.கயல்விழி, மணிகண்டன், க.கலைச்செல்வி, ஜெ.மாரீஸ்வரன், தி.சுதா, மல்லிகா, நந்தினி, இளவரசு, அன்புச்செல்வம், கலைச்செல்வி, சத்தியசீலன், அ.பல்லவி, ஜெ.மல்லிகா,

    தி.இளவரசி, தெ.திலீபன் மற்றும் தென்சென்னையைச் சேர்ந்த ஜெகன், அடையார் அந்தோணி, கே.விஜயகுமார், புதுப்பேட்டை அன்பு, ஜி.சசி, இரா.சந்தோஷ்குமார், எழில், இராயப்பேட்டையைச் சேர்ந்த ரகுநாத், மூர்த்தி, வாசு, சூரியா, மோகன், பிரசாந்த், மதன், சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி, அன்பு, சண்முகம், தாஸ், நரேஷ் மற்றும் காஞ்சிபுரம் கண்ணதாசன் ஆகிய 46 தோழர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

                                           -----------------------"விடுதலை” 23-07-2014

    இந்தியை தந்தை பெரியார் எதிர்த்தது ஏன்?

    இந்தியை தந்தை பெரியார் எதிர்த்தது ஏன்? ஆரியப் பண்பாட்டை முறியடிக்கவே! தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கம்!

    சென்னை, ஜூலை 18- இந்தியை தந்தை பெரியார் எதிர்த்தது  ஆரியப் பண்பாட்டை முறியடிக்கவே என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விளக்கவுரையாற்றினார்.
    இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் 14.7.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

    அவரது உரை வருமாறு:

    பேரன்பிற்கும், பெருமிதத்திற்கும் உரிய அனைவரை யும் வரவேற்ற கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, இந்நிகழ்விற்கு வருகை புரிந்து, சிறப்பாளராக, சிறப்பாக இங்கே அமர்ந் திருக்கும் அருமைத் தோழர்களே, தோழியர்களே, செய்தி யாளர்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.


    கம்யூனிஸ்டு கட்சிகளும் எதிர்க்கின்றன


    இந்தியை எதிர்க்கின்ற ஒரு அவசியத்தை, புதிய அரசு திடீரென்று மற்ற பல்வேறு தலைபோகின்ற பிரச்சினைகள் என்று மக்களால் சொல்லப்படுவதைப்போல, விலைவாசி ஏற்றம், பண வீக்கம் இன்னும் தேர்தல் அறிக்கையில் அவர்கள் அறிவித்த அவசரத் திட்டங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், திடீரென்று ஒரு நாள் அவர்கள் இந்தியைக் கட்டாயமாக்கவேண்டும் என்ற அந்தக் கொள்கையை, உடனடியாக ஆட்சிக்கு வந்து 30 நாள்களில் அவர்கள் தொடங்கினார்கள் என்றவுடன், தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்துணைத் தலைவர்களும், இந்தியைப் பாரம்பரியமாக எதிர்த்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்களைப் போன்றவர்கள், திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் இதனை எதிர்க்கவில்லை. கம்யூனிஸ்டு கட்சிகளும் எதிர்க்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய, வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்தி எதிர்ப்பு என்பது ஏதோ இல்லாத ஒன்றாக ஆகிவிட்டதோ என்று பதம்பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதைப்போல, எடுக்கப் பட்ட முயற்சியைப்போல அந்த முயற்சி இருந்தது. ஆனால், இது நீறுபூத்த நெருப்புதான், எப்பொழுது வேண்டு மானாலும், எதிர்காலத்தில், வேகமாக, அவசியம் வரும் பொழுது தீப்பிடித்து எரியும் என்று காட்டுவதைப்போல, அந்த உணர்வுகள் வந்தவுடன், இல்லை, இல்லை, தமிழகம் போன்ற மாநிலங்களுக்காக அது வரவில்லை; இந்தி பேசுகின்ற மாநிலங்களுக்காகக் கொடுக்கப்பட்டது என்று ஏதோ ஒரு தவறான அல்லது உண்மைக்கு மாறான ஒரு விளக்கத்தை அளித்தார்கள். பிறகு அந்த விளக்கங்கள்கூட அது முரண்பட்ட நிலையில், அது எடுபடாமல் போயிற்று. காரணம், இங்கே வரவேற்புரையாற்றிய நண்பர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்தி மொழி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்; அந்தப் பயிற்சிக்கு வகுப்புக்குச் செல்லாதவர்களுக்குத் தண்டனை, அபராதம்; ஊதிய உயர்வு குறைக்கப்படும்; அரசு சலுகைகள் ரத்து செய்யப் படும் என்பனபோன்ற நிலைகளையெல்லாம் வைத் திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்பொழுது, நிச்சயமாக, இது ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு மீண்டும் இந்த முயற்சியை தொடுத்திருக்கிறார்கள். இதனை நாம் முளை யிலேயே கிள்ளியெறியவேண்டும்; நாம் எப்பொழுதும் விழிப்பாக இருக்கவேண்டும் என்ற உணர்வில், இன்றைக்கு அதனைப்பற்றிய விவாதங்களை அவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    சற்றுநேரத்திற்கு முன்புகூட நான், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய ஒரு வார தமிழ் ஏட்டில், ஆர்.எஸ். எஸில் அமைப்பாளராக இருக்கக்கூடிய ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். அதனை நான் முழுமையாகப் படித்தேன்.

    மேலெழுந்தவாரியாகச் சொல்லக்கூடும்

    இந்த நிலையில், இது எதற்காக? சில பேருக்கு உள்ளபடியே, இளைய தலைமுறையினருக்கு, என்ன ஒரு முன்னுதாரணம்? படித்துவிட்டால், தோழர்களே, சில பேருக்குக் குழப்பம் இருக்கும். ஏனென்றால், வரலாற்றை அறியாதவர்களும், பண்பாட்டுப் படையெடுப்பினுடைய ஆபத்தை உணராதவர்களும் அப்படி அவர்களை மேலெழுந்தவாரியாகச் சொல்லக்கூடும்.



    இந்தச் செய்திகளுக்காகத்தான், ஆதாரப்பூர்வமாக அடிக்கடி நினைவூட்டக்கூடிய செய்திகள் ஏராளம் இருக்கின்றன. மக்களுடைய மறதியை வைத்துத்தான் பல அரசியல்வாதிகள் அரசியலை நடத்திக் கொண்டிருக் கிறார்கள் என்பது ஒரு பக்கம் உண்மை. ஆனால், அதேநேரத்தில், தெளிவாக சிந்திக்கவேண்டிய செய்தி என்னவென்று சொன்னால், எதற்காக தந்தை பெரியார் அவர்கள், 1938 ஆம் ஆண்டு, அதற்கு முன்பு 1926 ஆம் ஆண்டிலிருந்து இந்தியை எதிர்த்தார்கள் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும்  மேலெழுந்தவாரி யாக என்ன ஒரு மொழிதானே? ஏன் இன்னும் எதிர்க்க வேண்டும்? என்றிருப்பார்கள். இந்தக் கேள்வி நியாயமாக எல்லோருக்கும் தோன்றுவதுதான். அண்மையில்கூட, இதனை அடிப்படையாக வைத்துத்தான், ஜெர்மனியில் இருக்கக்கூடிய கொலோன் பல்கலைக் கழகத்தில், கடந்த ஜூன் 2 ஆம் தேதிமுதல் 6 ஆம் தேதிவரை நடைபெற்ற நிகழ்வுகளில், சில சொற்பொழிவுகளுக்காக, ஆய்வு சொற்பொழிவுகளுக்காக என்னை அழைத்திருந்தார்கள். அப்படி அழைத்தபொழுது, அவர்கள் இரண்டு தலைப்பு களில் சொற்பொழிவுகளை ஆற்றச் சொன்னார்கள். பொதுவான ஒரு தலைப்பு - திராவிடர் இயக்கம்; பெரியாருடைய பகுத்தறிவுச் சிந்தனைகளுடைய தாக்கம் என்பதை, பொதுமக்களும் கலந்துகொள்ளக்கூடிய ஒரு பொது அமைப்பிலே, தலைப்பாக ஆக்கிக் கொடுத்தார்கள்.



    அடுத்த தலைப்பு, இந்தி எதிர்ப்பு இயக்கம். அதைப்பற்றி தெளிவான பல கருத்துக்கள்; என்ன காரணங்கள் என்பதை விளக்கக்கூடியதாக எங்களுடைய பல்கலைக் கழக வகுப்புகள், ஆய்வு மாணவர்கள், இங்கே மட்டுமல்ல, வெளியில் இருக்கக்கூடிய பல்கலைக் கழக மாணவர் களுக்குக்கூட இடமுண்டு. எனவே, அவர்களும் வருவார் கள் என்று சொல்லி, அதற்கும் அவர்கள் வாய்ப்பளித் தார்கள்.



    ஆய்வாளர்களுக்குத் தெளிவான கருத்துகள் கிடைக்கும்
    கேட்டபொழுது சொன்னார்கள், இது ஆய்வுக்குரிய ஒன்று. ஏனென்றால், தென்கிழக்கு ஆசிய படிப்புகள், அதேபோல தென் ஆசிய அமைப்புகள் இவை எல்லாம் இணைந்த ஒரு துறை இது. ஆகவே, இந்தத் துறையிலே, மிக முக்கியமான ஒரு பிரச்சினையாக கருதுகின்றோம். ஆகவே, அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அழைக்கப் பட்டுச் சொன்னால்தான், இந்த ஆய்வாளர்களுக்குத் தெளிவான கருத்துகள் கிடைக்கும். அதைப்பற்றி பலரும் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்; அதற்காகத்தான் உங்களை அழைத்தோம் என்று சொல்லி, இரண்டு நாள்கள் அதைப்பற்றி விரிவான, விளக்கமான, கேள்வி - பதில்கள் உள்பட அவர்களுடைய அய்யங்களைக் களையக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தினார்கள்.


    இதற்கிடையில், ஒரு சுவையான இன்னொரு செய்தி:

    காலஞ்சென்ற சீதாராம் கேசரி அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து, கடைசியில் அவரிடமிருந்துதான் சோனியா காந்தி அம்மையார் அவர்கள் அந்தப் பொறுப்பைப் பெற்றார்கள். நீண்ட காலமாக சீதாராம் கேசரி அவர்கள், பொருளாளராக, நேரு காலத்தில் தொடங்கி, இந்திரா காந்தி காலம், அதற்குப் பிறகு ராஜீவ் காந்தி காலம், அதற்குப்பிறகு அடுத்த கட்டம் என தொடர்ந்து, அந்தக் குடும்பத்தினருக்கு நம்பிக்கை யாகவும், இயக்கத்திற்கு நம்பிக்கையாகவும் இருந்த பிகா ரைச் சார்ந்த, பிற்படுத்தப்படுத்த சமுதாயத்தைச் சார்ந்தவர்; மூத்த காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி அவர்கள்.

    நீங்கள்தான் இந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பதற்குரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்!

    அவர்கள் பின்னாளிலே, திரு.சந்திரஜித் யாதவ் அவர் களின் மூலமாக, எனக்கு நட்புக்குரியவராக ஆனார்கள். தந்தை பெரியார் அவர்களைப்பற்றிய ஆங்கில நூல்கள், அதைப்பற்றிய விவாதங்களையெல்லாம் சொல்லும் பொழுது, தன்னுடைய தலையணை அடியில் வைத்துக் கொண்டு, ஏதோ தேர்வுக்குச் செல்கின்ற மாணவன்போல, தந்தை பெரியார்பற்றிய ஆங்கில நூல்களை, தத் துவங்களை எல்லாம் படித்துவிட்டு, மிகவும் பாராட்டினார். இப்படிப்பட்ட ஒரு தலைவர், சிந்தனையாளரை நாம் எளிதில் சந்திக்கவே முடியாது என்று, மிகப்பெரிய அளவில் அவர் ஆய்வு செய்தார். அடிக்கடி சந்தேகங்களைக் கேட்பார். திடீரென்று  தொலைப்பேசியில் அழைத்துகூட சந்தேகம் கேட்பார். அவருடைய இல்லத்திற்கு நாங்கள் நேரடியாகச் செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றோம். அவ்வளவு நெருக்கமாக நாங்கள் நட்பாகிவிட்டோம். ஒரு நாள் எல்லோரையும் அனுப்பிவிட்டு, உங்களிடம் ஒரு சந் தேகத்தைக் கேட்கவேண்டும்; ஏனென்றால், பெரியாரி டத்தில் நெருக்கமாக இருந்தவர்கள்; பெரியாரின் மாணவர் நீங்கள். ஆகவே, நீங்கள்தான் இந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பதற்குரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள். ஆகவே, உங்களிடம் இதை கேட்கிறேன்.



    பெரியார் ஒரு தலைசிறந்த, ஒப்பற்ற ஒரு பகுத்தறிவாளர். இதனை நான் பல செய்திகளில் படித்திருக்கிறேன். அவருக் கென்று தனிப்பட்ட ஆசாபாசங்கள் கிடையாது; எதையும் அவர் பகுத்தறிவு கண்ணோட்டத்தோடுதான் எந்தப் பிரச்சினையையும் சிந்திக்கக்கூடியவராக வாழ்நாள் முழுவதும் இருந்திருக்கிறார் என்பது வியக்கத்தகுந்த ஒரு செய்தி. நான் அதனை ஆழமாகப் பார்க்கிறேன். அப்படிப் பட்ட தந்தை பெரியார் அவர்கள், இந்தி மொழியை எதிர்த்தார்கள் என்று சொன்னால், அது வெறும் பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றபொழுது, அவர் வெறும் மொழிக்காக அவர் எதிர்த்திருக்க வாய்ப்பில்லை. அதை விட மிகவும் ஆழமான காரணங்கள் இருக்கவேண்டும் அதற்கு. அதைவிட வெறும் மொழி எதிர்ப்பு என்பது முக்கியமல்ல. அது எனக்குத் தோன்றவில்லை. இந்தி எதிர்ப்பாளர் பெரியார் என்று அவர்கள் காட்டும்பொழுது, அதிலே எனக்கு அவ்வளவு முழு நிறைவு ஏற்படவில்லை. ஆகவேதான், இந்த செய்தியைப்பற்றி உங்களிடம் கேட்டு தெளிவடையவேண்டும் என்று சொன்னார்.

    ஒரு பண்பாட்டு நாகரிகத்தை, அடிப்படையை சிதைக்கவேண்டுமானால்...
    உடனே நான் சொன்னேன், மொழி எதிர்ப்பு என்பது மட்டும் அவரது அடிப்படையான காரணம் அல்ல. மொழி எதிர்ப்பு என்பது சாதாரண விஷயம். ஆனால், பெரியார் அவர்கள் எதிர்ப்பதற்கு அடிப்படையான இன்னொரு காரணம் என்னவென்றால், இந்தியை அவர்கள் புகுத் தியதின் நோக்கம், சமஸ்கிருதத்தை எப்படியாவது புகுத்த வேண்டும்; அதன்மூலமாக சமஸ்கிருத கலாச்சாரத்தை, சமஸ்கிருத தன்மையை உருவாக்கவேண்டும் என்ற ஒரு ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பு என்று சொல்லக்கூடிய பார்ப்பனீயத்தினுடைய உயர்வை, மேலாண்மையை, வருணாசிரம தர்மத்தை அல்லது அதன்மூலம் வந்த கருத்துகளையெல்லாம் அவர்கள் மேலே தூக்கிப் பிடிக்கவேண்டும்; அதனை நிரந்தரப்படுத்தவேண்டும். அதற்கு என்ன வழி என்றால், ஒரு பண்பாட்டு நாகரிகத்தை, அடிப்படையை சிதைக்கவேண்டுமானால், மொழியின் மூலமாகத்தான் முதலில் கைவைக்கவேண்டும்; ஆகவே, அந்த மொழியைக் கையாளவேண்டும் என்று சொன்னால், அதற்கு வாய்ப்பானது சமஸ்கிருதம்தான் என்று நினைத்து, இன்னமும் சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய மொழி யாக இருக்கவேண்டும் என்று சொல்லுவதில்கூட, நேரிடை யாக அதனை செய்ய முடியாது என்பதற்காக, மறைமுக மாகவும், முதற்கட்டமாகவும், அதிலிருந்து கிளைத்த, அதே நாகரீகத்தை, அதே தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மொழியான, இந்தியை அவர்கள் புகுத்தினார்கள்.



    இந்தித் திணிப்பு என்பது, வெறும் மொழித் திணிப்பு என்பதைவிட, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பாகத்தான் அதனைச் செய்தார்கள் என்பதற்காக, தந்தை பெரியார்  தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்தவர்கள். ஆகவே தான், இந்தப் பண்பாட்டு படையெடுப்பை எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த இந்தி எதிர்ப்பு என்பது உருவானது என்று சொல்லும்பொழுது, அவர் கைதட்டி வரவேற்று, கைகொடுத்தார். இதுதான் நான் தேடிக்கொண்டிருந்தது, ஏனென்றால், நான் ஆழமாக சிந்திக்கிறபொழுது, இது சரியானது. ஏனென்று சொன்னால், அதன்மூலமாக பண்பாட்டு படையெடுப்பை, பண்பாட்டு ஆக்கத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள். அதனைப் புரிந்துகொண்டார் பெரியார்;  அவர் இந்தி எதிர்ப்பு நியாய மானது; அவருடைய கண்ணோட்டத்தில் அது தேவை யானது. ஏனென்றால், வெறும் மொழிக்காக, மொழி பரவ வேண்டும் என்பதற்காக அல்ல; இந்த மொழியினுடைய வரலாற்றைத் தேடிப் பார்த்தால் ஏராளமான ஆதாரங்கள்  இருக்கின்றன என்பதை, அதனுடைய வரலாற்றைப் பார்க்கும்பொழுது நிச்சயமாக உணருகிறோம். இது சரியான, எனக்கு ஒரு நல்ல தெளிவை உண்டாக்கக்கூடிய விளக்க மாகும் என்று சொன்னார்.


    பவர்பாயிண்ட் பிரசன்டேசன்

    எனவே, ஜெர்மனியில் உரையைத் தொடங்கும்பொழுது கூட, நேரிலே, மின்னொளி மூலமாக நேரத்தைக் கருதி, செய்கிறபொழுது, ஆங்கிலத்தில் நான் வகுப்பு எடுக்கும் பொழுது, அவர்களுக்கு வசதியாக மின்னொளி பவர் பாயிண்ட் பிரசன்டேசன் என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினேன்.


    அனேகமாக நிறைய செய்திகள்; சாதாரணமாகப் பேசினால், அந்தச் செய்திகள் மனதிலே தங்குவதில்லை. ஏதோ ஒரு பொதுவான ஒரு பேச்சைக் கேட்டோம்; சில கருத்துகளோடுதான்  வெளியே போக வேண்டியிருக்கும். ஆனால், இப்பொழுது மின்னொளியின் மூலமாக சில செய்திகளை எடுத்துச் சொல்லுகின்ற நேரத்தில், பல்வேறு வாய்ப்புகள் அதற்குத் தாராளமாகக் கிடைக்கும்.

    அந்த வகையில், இந்தி எதிர்ப்பு என்பது இருக்கிறதே, இப்பொழுது அதனுடைய அடிப்படை என்பது வெறும் மொழித் திணிப்பை எதிர்ப்பது என்பது மட்டுமல்ல; அந்த மொழியைத் திணிப்பவர்களுக்கும் உள்நோக்கம் உண்டு; எதிர்ப்பவர்கள் அதை புரிந்துகொண்டு எதிர்க்கிறார்கள் என்பதும் மறக்கப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத வரலாறாகும்.


    அந்த அடிப்படையில், என்னுடைய இந்த உரையின் அம்சங்கள், மின்னொளியின் மூலமாக தெளிவாகத் தெரியும்.
    இந்தியத் துணைக் கண்டம் என்பது, பல மொழிகள் பேசப்படக் கூடிய ஒரு துணைக் கண்டமே! இதற்கு முன்பு, 56 ராஜ்ஜியங்கள் என்று சொல்லுவார்கள். இப்பொழுது வெள்ளைக்காரர்கள் வந்த பிறகுதான், இந்தியா என்பதே உருவானது என்பது எல்லோருக்கும் தெரிந்த, மறுக்கப்பட முடியாத ஒரு வரலாற்று உண்மை.


    உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், மண்டல் ஆணையத்தின் தீர்ப்பில் எத்தனை ஜாதிகள் இருக் கின்றன? எவ்வளவு மொழிகள் இருக்கின்றன? என்பது போன்ற அந்த மொழிகளைப்பற்றிச் சொன்ன ஒரு அடிப் படையை வைத்துக்கொண்டு இந்தக் குறிப்புகள் தயாரிக் கப்பட்டிருக்கின்றன.
    நம்முடைய நாட்டில், இந்தியா என்று அழைக்கப்படு கின்ற இந்த நாட்டில் பேசப்படும் மொழிகள் 1652 மொழிகள்; இதில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பிறகு, மொழிப் பிரச்சினையை, அவர்கள், வரைவுத் திட்டம் மூலமாக இது ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சினை என்கிற காரணத்தினால்,  மிக ஆழமாக ஏனென்றால், தென்னாடு தனியே இருந்தது; இந்தியை தென்னாட்டில் புகுத்த வேண்டும் என்று நினைத்தனர்.  அந்த அடிப்படையில் என்ன செய்யலாம் என்று சொல்லி, எதையும் தேசிய மொழி என்று சொல்லி, ஒரு தனித்த அந்தஸ்து கொடுத்து, இந்திதான் தேசிய மொழி என்று பல பேர் இப்பொழுது சொல்கிறார்கள் அல்லவா? அதுபோல, இந்திய அரசியல் சட்டத்தில், எந்த இடத்திலும் இந்தி மட்டும் தேசிய மொழி என்று குறிப்பிடப்படவேயில்லை என்பதை, பல பேர் இதுவரையில் தெரிந்துகொள்ளாதவர்களாக இருந்தால், தெரிந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.


    எந்த இடத்திலும், இந்திய அரசியல் சட்டத்தில் இந்தி தேசிய மொழி என்று குறிப்பிடப்படவில்லை.  இந்தி நம்முடைய தேசிய மொழி என்றெல்லாம் மேடைகளில் பேசுகிறார்கள். யாரோ ஒருவர் இந்திக்காக நான் வக்காலத்து வாங்கிக்கொண்டு, பயில்வானாகப் போகிறேன் என்று சொல்கிறார். வரட்டும்; களத்தில் பார்ப்பதற்கு நாம் என்றைக்கும் தயாராகத்தான் இருப்போம். அதுவேறு.


    அந்த வகையில், தெளிவாக அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதை, ஆதாரப்பூர்வமாக, இது வெறும் உணர்ச்சிபூர்வமான ஒரு உரையல்ல;  இது அறிவுபூர்வ மான, ஆதாரப்பூர்வமான பல பேர் இதனை எடுத்துக் கொண்டு பயன்படுத்தவேண்டும்; நீங்கள் விவாதங் களுக்குரிய செய்திகளை சேகரிக்கவேண்டும் என்பதற் காகத்தான்.



    அரசியல் சட்டத்தில், 17 ஆவது பகுதியில்...

    இந்தியைப் பொறுத்தவரையில், அரசியல் சட்டத்தில், 17 ஆவது பகுதியில், 343 ஆம் பகுதியில், ஆட்சி மொழியாக, மத்திய அரசாங்கத்தினுடைய அலுவல் மொழியாக இந்தி மொழி இருக்கவேண்டும் என்று சொல்கிறது.


    அந்த 17 ஆவது பிரிவில் இருக்கக்கூடிய அமைப் பின்படி 8 ஆவது அட்டவணை என்று பின்னாளில் அவர்கள் சேர்த்திருக்கிறார்கள்.  அந்த 8 ஆவது அட்ட வணையில், அந்தந்த மாநிலங்களில் பேசப்படக்கூடிய மொழிகள். அதில் இரண்டு குடும்பம் உண்டு. ஆரியக் குடும்பம் உண்டு; திராவிடக் குடும்பம் உண்டு.


    அதிலே பண்பாட்டு அடிப்படையில் மிகப்பெரிய ஒரு கோடு போடப்பட்டிருக்கின்றது என்பதை யாரும் மறுத்து விட முடியாது. எனவேதான், இந்திக்கெல்லாம் ஆரிய பாஷா என்பது சமஸ்கிருதம். ஆரிய வர்த்தம் என்ற பகுதி இருக்கின்றது. 22 மொழிகள் அட்டவணையில் இருக்கின்றன


    இதோ நம்முடைய அரசியல் சட்டத்தினுடைய 8 ஆவது அட்டவணையில், வரைவுத் திட்டத்தைப் போட்ட போது, 13 மொழிகளை மட்டும்தான் அவர்கள் அங்கீகரித் தார்கள். அதில் ஒன்று இந்தி. பிறகு, அவரவர்கள் கிளர்ச்சி செய்யச் செய்ய, கொஞ்சம் கொஞ்சமாக பலூனை ஊதி னால் பெரியதாக ஆவதைப்போல, 14 மொழிகளாயிற்று; பிறகு 18 ஆயிற்று. இப்பொழுது 22 மொழிகள் அட்ட வணையில் இருக்கின்றன. இது இப்பொழுது இருக்கக்கூடிய நிலவரம்.


    அசாமியம், வங்காளம், குசராத்தியம், இந்தி, கன்னடம், கசுமீரியம், கொங்கணியம்,  மலையாளம், மணிப்புரியம்,  மராத்தி, நேபாளி, ஒரியம், பஞ்சாபி, சமசுகிருதம், சிந்தியம், தமிழ், தெலுங்கு, உருது, மைதிலியம், போடோயம், சாந்தளியம், தோக்ரியம்.

    இந்தச் செய்தியை நீங்கள் மிக முக்கியமாக அடிப் படையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.



    இதில் தலைப்பு என்னவென்றால், இந்திய அரசியல் சட்டத்தில் 8 ஆவது அட்டவணையில் தலைப்பு என்ன போட்டிருக்கவேண்டும்? 22 தேசிய மொழிகள் என்று போட்டிருக்கவேண்டும். அல்லது இந்தி, சமஸ்கிருதம் எல்லாம் அந்த 22 மொழிகளில்தான் இருக்கிறது. மொழிகள் என்றுதான் தலைப்பு போடப்பட்டிருக்கிறது என்பதை இந்த அறிவார்ந்த அவையினுடைய கவனத்திற்கு கொண்டு வந்து நிறுத்துகிறோம்.



    இதற்கு அடுத்தபடியாக சில செய்திகளை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.


    இந்தி பேசுகிறவர்கள் 42 சதவிகிதம் பேர்தான்

    ஒரே மொழி, பேசப்படக்கூடிய, எழுதப்படாத, பேசப் படாத, ஆனால், இந்தியாவின் பெரும்பாலான மக்களால் பேசப்படும் ஒரு மொழி என்று கூறப்படுகிறது.


    42 சதவிகிதம் பேர்தான் அந்த மொழியைப் பேசு கிறார்கள். எல்லா மொழிகளையும் சேர்த்து. அந்த மொழி கள்கூட எவ்வளவு என்பதைப்பற்றி சொல்லும்பொழுது, நம்முடைய நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், திராவிட இயக்க வரலாறு முதல் தொகுதியை எழுதி, மிக அற்புத மான அந்தப் பணியை செய்தார். இந்த இடத்தில்தான், அவருடைய பிறந்த நாள் விழாவின்போது, அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டு, பல இடங்களிலும் திராவிடர் கழகம் பரப்புவதற்குக் காரணமாக இருந்தது. நாவலர் அவர்கள் பல்வேறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு எழுதுகிறபோது, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி என்பதை ஒரு தனிப் பகுதியாகவே எழுதியிருக்கிறார். மிக ஆழமாகவே அதில் எழுதியிருக்கிறார்.



    பல்வேறு செய்திகள், நல்ல ஆவணப்படுத்தப்பட்ட ஒரு பகுதியாகும். இதில் ஒரு செய்தியை மிக ஆழமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். எப்படியெல்லாம் இந்தி ஒரு பகுதியிலே இருக்கக்கூடிய இந்தி, ஒரே மாதிரியான சூழ்நிலையில் இல்லை என்பதற்கு அடையாளமாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்ற பகுதி மிக முக்கிய மானது.

                    -----------------(தொடரும்)---”விடுதலை” 18-7-2014
    Read more: http://viduthalai.in/page-4/84279.html#ixzz37sFSUlFB

    *************************************************************************************
    அரசமைப்புச் சட்டத்தில் இந்தியைக் குறிக்கும்பொழுது தேவநாகரி எழுத்து என்று குறிப்பிட்டது ஏன்?


    அரசமைப்புச் சட்டத்தில் இந்தியைக் குறிக்கும்பொழுது தேவநாகரி எழுத்து என்று குறிப்பிட்டது ஏன்?
    தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கம்


    சென்னை, ஜூலை 19- அரசமைப்புச் சட்டத்தில் இந்தியைக் குறிக்கும்பொழுது தேவநாகரி எழுத்து என்று குறிப்பிட்டது ஏன்? என்று விளக்கம் அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் 14.7.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

    அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
    5 குழு மொழிகளும், 19 மொழிப் பிரிவுகளும்!
    எத்தனை இடங்களில் வெவ்வேறு பகுதிகளிலும், வெவ்வேறு குழுக்கள் இந்தி பேசப்படுகின்றன என்று சொல்கிறார்.

    இந்தி என்ற பெயரில், 5 குழு மொழிகள். 19 மொழிப் பிரிவுகளாக ஆகி, 89 வகை மக்களால், தனித்தனியாகப் பேசப்படும் சில்லறை மொழிகளாக மாறின. இந்தியின் 5 குழு மொழிகளும், 19 மொழிப் பிரிவுகளும் கீழ்க்கண்டவாறு அமைகின்றன.

    குழுக்களின் பெயர் - மொழிப் பிரிவுகளின் பெயர் வருமாறு:

    1. கவுரவி குழு: கடீபோலி, பங்காரு
    2. பிரஜ் குழு: பிரஜ் பாஷா, கண்ணோவ்ஜி, பண்டேலி
    3. கவுஷாலி குழு: அவதி, பஹேலி, சட்டிஸ்காதி
    4. இராஜஸ்தானி குழு: மார்வாடி, மால்வி, ஜெய்புரி, மேவதி, மாலினி
    5. பீகாரி குழு: போஜ்புரி, மைதிலி, மகாஹி, கார்வாலி, காமாயுளி, நேபாளி.
    டாக்டர் சங்கர் ராஜூ நாயுடு

    சென்னைப் பல்கலைக் கழகத்தில், இந்தி மொழித் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் விளங்கிய டாக்டர் சங்கர் ராஜூ நாயுடு அவர்கள், 1965 இல் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். பிற மொழிகள் அனைத்தையும் பேசுவோர் எண்ணிக்கை 58 சதவிகிதம்

    இந்தி மொழி பேசுவோர் என்று சொல்லப்படுபவர் கள் அனைவரும் ஒரே விதமாகப் பேசுவோர் அல்லர். வெவ்வேறு விதமான பேச்சு மொழிகள் பலவற்றைக் கொண்ட மொழியே இந்தி மொழி. ஒவ்வொரு பேச்சு மொழிக்கும் ஒவ்வொரு குழுவினர் உண்டு. அந்த ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்பவர்கள் ஆவார்கள். இவ்வாறு மாறுபட்ட தனிப் பெயர் தாங்கித் தனித்தனியாகக் கணக்கெடுக்கப்பட்டப் பேச்சு மொழியாளர்கள் அனைவரையும் இந்தி என்ற ஒரு பொது மொழிப் பெயரால் குறிப்பிடுவது எந்த வகையிலும் பொருந்தி வராது. மேலும் இந்தி இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகிறது என்ற வாதமும், உண் மைக்குப் புறம்பானதாகும். இந்தியாவில் சுமார் 42 சத விகிதத்தினர்தாம், எல்லா வகையான இந்தி மொழி களையும் பேசுபவர்கள் ஆவார்கள். பிற மொழிகள் அனைத்தையும் பேசுவோர் எண்ணிக்கை 58 சதவிகிதம் ஆகும். இப்பொழுது இந்தியப் பேரரசின் ஆட்சி மொழி யாக, அரசமைப்புச் சட்டத்தால் ஆக்கப்பட்டிருக்கின்ற கடீபோலி என்ற இந்தி மொழியைப் பேசுபவர்கள் சுமார் 2.5 கோடி பேர்கள்தான் இருப்பார்கள். அவர்களும் டில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்பவர்கள்தாம் என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் சங்கர் ராஜு நாயுடு.



    இந்தி மொழியின் 19 பிரிவினர்களும் பேசும் பேச்சுக்கள் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது என்பது, அவை வேறுபட்ட வகையில் உச்சரிக்கப்படுவதி லிருந்து தெரிந்துகொள்ளலாம்.



    ஆகவே, முதலில் நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், இந்திய மக்களை இந்தி மொழி ஒற்றுமைப்படுத்தும் என்ற வாதம் வைக்கப்படுவது உண்மையல்ல. உதாரணமாக வடபுலத்தில் வேலைக்குச் சென்றவர்கள், மும்பை, பிகாரில் மற்றவர்கள் உள்ளே நுழையும்போது எப்படிப் பட்ட சூழ்நிலை நிலவியது என்பது தெளிவாகத் தெரியும்.



    பஞ்சாபில் அகில இந்திய வானொலியில்கூட இந்தி மொழியில் சொல்லுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று சொல்லி, அவர்கள் எதிர்ப்பு காட்டியது பதிவு செய்யப்பட்டிருக்கின்ற ஒரு உண்மையாகும்.
    ஆகவே, இந்தி, நம் எல்லோரையும் இணைத்து விடுகிறது என்பது அல்ல.
    கிழக்குப் பகுதியில் பெரும்பாலும் இருக்கின்ற மாநிலங்களில் எல்லாம் ஆங்கிலம்தான் நடைமுறை யில் பேசப்படுகிறதே தவிர, அங்கு இந்தியோ அல்லது வேறு மொழியோ கிடையாது.



    பெரும்பாலும் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். நாகாலந்து, மேகாலயா போன்ற பகுதிகளில். அசாமில்தான் போடோ மொழி பேசப்படுகிறது. பின்னாளில் 22 மொழிகளில் ஒன்றாக அம்மொழி இணைக்கப்பட்டிருக்கிறது.



    ஆகவே, இப்படி பல மொழிகளில், இந்தி மொழி ஒற்றுமைப்படுத்தும் என்கிறார்களே, அது ஒற்றுமைப் படுத்தவில்லை. மாறாக,  வெறுப்புணர்ச்சியை உரு வாக்கி, அமைதியாக கைகோத்துக் கொண்டிருப்பவர் மத்தியில்கூட ஒரு சந்தேக உணர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது.
    இது வெறும் மொழி அடிப்படையில் அல்ல; இது ஆழமான கலாச்சார ஆதிக்கத்தின் அடிப்படையில் தான். அதை விரும்பாத மக்கள்மீது திணிக்கப்படுகிறது என்பது முக்கியமாக சுட்டிக்காட்டப்படவேண்டும்.



    காங்கிரசில் இருந்தபோது, இந்தி மொழியை பெரியார் எதிர்த்தார்

    இங்கே வரவேற்புரையில் சுட்டிக்காட்டியபடி, அன்றைக்கே, காங்கிரசில் இருந்தபோது, இந்தி மொழியை பெரியார் எதிர்த்து இருக்கிறார். இந்த வரலாற்றை பல பேர் தெரிந்துகொள்ளவேண்டும். மனதிலே அதை பதிய வைத்துக் கொள்ளவேண்டும். எதனால் இந்தியை எதிர்த்தார் பெரியார்?
    ஜாதியால் ராமாயணத்தில் சம்பூகன் ராமனால் வெட்டிக் கொலை செய்யப்படுவதை எடுத்துக்காட்டி, கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். ராஜகோபாலாச் சாரியார், திரு.வி.க. போன்றவர்களை வைத்துக்கொண்டு, திருப்பூர் மாநாட்டில்.

    துளசிதாஸ் ராமாயணத்தில், புருஷ உத்தமன் என்று காட்டும் நோக்கில், சிவனை வணங்குவதைவிட, மகா விஷ்ணுவை வணங்குவதைவிட, யாரை வணங் கினான் ராமன் என்றால், பிராமணர்களைத்தான் வணங்கினான், பார்ப்பனர்களைத்தான் வணங்கினான் என்று சொல்லி, பார்ப்பனீய வருண தருமத்தையும், பார்ப்பனீயத்தையும் தூக்கிப் பிடிப்பதற்காகவே துளசிதாஸ் ராமாயணம் உருவானது. எனவே, துளசிதாஸ் ராமாயணம் இந்தியில் வந்தது என்று சொன்னால், அது பார்ப்பனீய கலாச்சாரத்தை, ஆரிய கலாச்சாரத்தை முழுக்க முழுக்க திணிக்கவேண்டும் என்பதுதான் இதன் பின்னணி!
    கம்ப ராமாயணம் அதற்கொன்றும் குறைந்தது அல்ல; கம்பராமாயணப் பாடலை எடுத்துக் கொண்டால்கூட, கரியமானினும் என்று தொடங்கும் பாடலுக்கு என்ன அர்த்தம் என்றால், பார்ப்பனர்களை வணங்கித்தான் மற்றவைர்களை வணங்கவேண்டும்; கடவுள்களைவிட மேலானவர்கள் பார்ப்பனர்கள்தான் என்று இருக்கக்கூடியது. இதனை குடியரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டி எழுதி யிருக்கிறார்.

    மாணவப் பருவத்திலேயே ஆரம்பிக்கவேண்டும் என்று ஆரம்பித்துதான்...

    எனவே, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை, மிகச் சாமர்த்தியமாக, கலாச்சாரத் திணிப்பை, அவர்கள் ஒரு மொழியின் மூலமாக, அந்த மொழியை கற்றுக் கொண்டால், மிக வசதியாக இருக்கவேண்டும் என்று சொல்லி,  அதை எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்றால், மாணவப் பருவத்திலேயே ஆரம்பிக்கவேண்டும் என்று ஆரம்பித்துதான், தெளிவாக இங்கே கவிஞர் சொல்லியதைப்போல, ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, லயோலா கல்லூரியில் உரையாற்றும்பொழுது மிகத் தெளிவாக அதை செயல்படுத்த முனைந்தார்.

    Hindi in Devnagari Script

    இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கின்ற அந்த வாக்கியத்தில், Hindi shall be the official language of the State என்று சொல்லும்பொழுது, வெறும் இந்தி என்ற வார்த்தை, மற்ற மொழிகளில் தமிழில் இந்தி என்று போட்டுவிடுவோம். தமிழுக்கு பிராக்கெட் போட மாட்டோம். தமிழுக்கு தமிழ் எழுத்துப் போட்டு அப்படி சொல்லமாட்டோம். ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் என்ன எழுதப்பட்டது என்று சொன்னால், Hindi in Devnagari Script   என்று ஆரம்பிக்கிறது. தேவ் என்றால் என்ன? கடவுள்; நகரி என்றால் என்ன? எழுத்து; கடவுள் எழுத்து! கடவுள் எழுத்து என்றால் என்ன? சமஸ்கிருத எழுத்து.
    என்ன அதற்குக் காரணம் என்று பார்த்தால், அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு அதனுடைய ஆரம்பம் புதைக்கப்பட்டிருக்கிறது. இதை நான் சீதாராம் கேசரி அவர்களுக்கு விளக்கும்பொழுது, அவருக்குப் பளிச்சென்று விளங்கியது.

                      ------------------------------------ தொடரும்--”விடுதலை” 19-07-2014

    *************************************************************************************
    மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று இருந்ததே! அதனை மாற்றியது நீதிக்கட்சி - தந்தை பெரியார்

    மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று இருந்ததே!
    அதனை மாற்றியது நீதிக்கட்சி - தந்தை பெரியார்
    தமிழர் தலைவர் வெளியிட்ட வரலாற்று உண்மை

    சென்னை, ஜூலை 20- மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று இருந்ததே அதனை மாற்றியது நீதிக்கட்சியும், தந்தை பெரியார் அவர்களும்தான் என்ற வரலாற்று உண்மையை வெளிப்படுத்தி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் 14.7.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


    அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


    இந்தி மொழிக்கும், உருது மொழிக்கும்தான் அங்கே போராட்டம்

    நம்முடைய இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு பக்கத்தில் இருக்கட்டும். ஆனால், வடபுலத்தில் இந்தியை எதிர்த்தவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால், மிக முக்கியமாக, ஆழமாக, இந்தி மொழிக்கும், உருது மொழிக்கும்தான் அங்கே போராட்டம்.


    உருது மொழி - அரபு மொழி - அதற்கு முன்பு இருந்த இஸ்லாமியர்களுடைய ஆட்சி - அதனுடைய விளைவுகள் காரணமாக, அரபு, பாரசீக மொழிகள் இவைகளெல்லாம் கலந்தன, இந்து என்று பெயரே கூட பாரசீகம் கொடுத்த பெயரே தவிர, வேறு கிடையாது.


    அதற்கு முன்பு, இந்த மதத்திற்கு வேத மதம், வைதீக மதம், பார்ப்பன மதம் என்றுதான் இருந்திருக்கிறது.


    அதற்கு இந்து என்று வெறுப்போடு கொடுத்த ஒரு வார்த்தையாகும்.
    சிந்து நதி பக்கம் வசித்தவர்கள் சிந்து என்று அழைக்க ப்பட்டனர். சிந்து, இந்து என்று இவர்கள் ஒரு தவறான நீண்ட விளக்கத்தை வலிந்து சொல்லக்கூடியவர்கள் ஆனார்கள்.


    உருது மொழிதான் அதிகமாக இருக்குமே தவிர, இந்தி மொழி அல்ல!
    ஆனால், அதேநேரத்தில், அங்கிருந்த பிரச்சினை அரபு மொழி, பாரசீக மொழி இவைகள் எல்லாம் கலந்துதான், உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான ஒரு செய்தி இருக் கிறதே, எந்த எழுத்தின்மூலமாக  பயன்படுத்தினார்கள் என்று சொல்லும்பொழுது, இந்துஸ்தானி என்று சொன்னார் கள்.


    காந்தியார் ஆதரித்ததும், காந்தியார் வரவேண்டும் என்று விரும்பியதும் அதுதான்.


    இந்தி என்பது பாசறை மொழி; அந்தப் பாசறை மொழியாக மற்றவர்கள் இருந்தார்கள்.


    எனவே, வடபுலத்தைப் பார்த்தீர்களேயானால், உருது மொழிதான் அதிகமாக இருக்குமே தவிர, இந்தி மொழி அல்ல.


    அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வரக்கூடிய நிலையில்,  உருது மொழி சேர்ந்த இந்துஸ்தானியில்,.


    உருது எழுத்துக்களைப் பயன்படுத்துவதா? சமஸ்கிருத எழுத்துக்களாக இருக்கக்கூடியவைகளைப் பயன்படுத்து வதா? என்பதில் மிகப்பெரிய ஒரு போராட்டமாக இருந்தது.


    அந்தப் போராட்டத்தைப்பற்றி சொல்லும்பொழுது, இதோ என் கைகளில் இருக்கின்ற ஒரு புத்தகம்; இது 60 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ஆதாரபூர்வமான புத்தகம். பவன்ஸ் புக் யுனிவர்சிட்டி - பாரதீய வித்யா பவனின் வெளியீடாகும்.


    றிக்ஷீஷீதீறீமீனீ ஷீயீ பிவீஸீபீவீ ணீ பீஹ்   என்று மிகப்பெரிய மொழி அறிஞரும், வரலாற்று அறிஞருமான ஏ.கே.மஜூம்தார் அவர்கள் ஆழமான பல செய்திகளை இந்நூலில் சொல்லி யிருக்கிறார்.


    இதையே, நாம் பண்பாட்டுப் படையெடுப்பு அடிப்படையில், இந்தியில் இந்தப் பக்கத்தில் எதிர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல, மற்ற பகுதிகளிலும் நடந்துகொண்டு இருக்கிறது என்பதற்கு, அவசியமாக, இந்த புத்தகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு செய்திகளை சுட்டிக்காட்டவேண்டும்.


    இந்தியின் ரகசியம்பற்றி....


    இந்தப் போராட்டம் நீண்ட காலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்தப் போராட்டம் 1926 ஆம் ஆண்டு குடியரசில் பெரியார் தமிழுக்குத் துரோகமும், இந்தியின் ரகசியம் என்று எழுதியுள்ளார்.
    ஒரு பக்கம் உருது என்று சொன்னால்,  அது இஸ்லாமியர்களுக்குச் சம்மந்தப்பட்டது; அது ஆரியக் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது. அதற்கு விரோதமாக இன்னொரு மொழியை தயாரிக்கவேண்டும். சமஸ்கிருதம் என்பது நடைமுறையில் வேகமாக பரவவில்லை. காரணம், எல்லோரும் அதனைப் படிக்கிற மாதிரி இல்லை. சூத்திரர்கள் படிக்கக்கூடாது; படிக்கிற மொழியிலும் அது வரவில்லை; ஆகவே, என்ன செய்வது என்று யோசித்த நேரத்தில், ஒன்றை தயார் செய்தார்கள்; அதுதான் இந்தி மொழி. அந்த இந்தியை எப்படி தயாரித்தார்கள், எப்படி அதை பிரபலப்படுத்தினார்கள், மக்கள் மத்தியில் புழக்கத் திற்குக் கொண்டு வந்தார்கள் என்று சொல்லும்பொழுது, சமஸ்கிருத எழுத்து வேறு, இந்தி எழுத்து வேறு.


    இந்தி - தேவநகரி ஸ்கிரிப்ட்

    பண்பாட்டுப் படையெடுப்பை மய்யப்படுத்தி, இந்த எழுத்துக்கள் வந்தால்தான், இந்துத்துவ கருத்துகள் நிலைக்கும். அதற்குப் பதிலாக வேறு வந்துவிட்டால்,  உருது வேறு எங்கோ போய்விடும். இஸ்லாமியர்கள் தனியே பிரிந்துவிடுவார்கள். அவர்கள் பிரிந்து போகாமல் இருந்து வலியுறுத்தினால், நாம் இதனை ஏற்றுக்கொள்ளலாம். அவர்கள் தனியே போய்விட்டார்கள் பாகிஸ்தானுக்கு, இனிமேல் நம் ராஜ்ஜியம்தான்; ஆகவே, நமக்கு அதைப் பற்றி கவலையில்லை. எனவே, இந்தி - தேவநகரி ஸ்கிரிப்ட் என்ற வார்த்தை அரசமைப்புச் சட்டமானது.


    இதற்கு ஆதாரமானதுதான் Problem of Hindi a study  என்ற இந்தப் புத்தகம்.
    திராவிடர்களுக்கு எதிராக கலாச்சார ஊடுருவல் மற்றும் படையெடுப்பு என்ற முறையில், சமஸ்கிருத மயமாக்கல் ஏற்படுகிறது.


    தேவபாஷை என்று சொல்லும்பொழுது, தமிழை என்ன சொன்னான், நீச்ச பாஷை என்று. ஏன் தமிழ் உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் என்றால், தமிழை நீச்ச பாஷை என்று சொல்லியிருக்கிறார்கள்.


    நம்முடைய திருமணங்களில் தமிழ் இருக்கக்கூடாது;  நாம் கோவிலுக்குச் சென்றால், அங்கே தமிழ் இருக்கக் கூடாது; கோவிலில் அர்ச்சனை தமிழில் இருக்கக்கூடாது. அர்ச்சகர் தமிழராக இருந்தால், தமிழ் பேசக்கூடியவராக இருந்தால், சாமி செத்துப் போகும்; தீட்டாகிவிடும்.


    இந்த நேரத்தில், ஒன்றை இடைச்செருகலாகச் சொல்ல வேண்டும்; நேரடியாக சம்பந்தப்படாத செய்தியாக இருந் தாலும்கூட, அதைச் சொல்லவேண்டியது என்னுடைய கடமை.



    நேற்று எல்லோருக்கும் கலக்கமான செய்தி; தலைவர் கள் எல்லாம் கண்டனம் என்று நாளிதழ்களில் வெளிவந்த செய்தி.



    தமிழன் கட்டிய கோவிலுக்குள், தமிழனே உள்ளே வரக்கூடாது என்ற இழிவு....
    வேட்டிக் கட்டிக்கொண்டு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை கிரிக்கெட் சங்கத்தில் அனுமதிக்கவில்லை. அதுபோன்ற இன்னும் சில சங்கங்கள் இருக்கின்றன. அவர்கள் சட்டதிட்டத்திலும் அந்த விதிமுறைகளைப் போட்டிருக்கிறார்கள். இதனைக் கண்டித்து எல்லோரும் அறிக்கை விட்டிருக்கிறார்கள்; கண்டனங்களைத் தெரிவித் திருக்கிறார்கள். வேட்டி கட்டியவர்களை அவமானப்படுத் தக் கூடாது; மற்றவர்களுக்கு என்ன உரிமையோ அதனை அவர்களுக்கும் கொடுக்கவேண்டும்; நம்முடைய பண் பாட்டுக்கு அடித்தளம் என்னவோ அதனை கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் அதனை வரவேற்கிறோம்; ஆனால், அதே நேரத்தில், நாங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு கேள்வி கேட்கிறோம்,



    அது என்னவென்றால், வேட்டி கட்டியதற்காக வெளியே போங்கள்; உள்ளே வரக்கூடாது என்று சொன்ன தற்கு, இவ்வளவு துடியாய்த் துடித்து, தமிழர்களுடைய அடையாளம் என்று துடியாய் துடிக்கின்றோமே, தமிழன் கட்டிய கோவிலுக்குள், தமிழனே உள்ளே வரக்கூடாது என்று சொல்லி, காலங்காலமாக இழிவுபடுத்தியிருக் கிறார்கள்; அதற்கு நமக்கு சொரணை வேண்டாமா, சூடு வேண்டாமா, அறிவு வேண்டாமா, மானம் வேண்டாமா?
    வேட்டிக்கு இவ்வளவு பதறுகிறீர்கள்; நாங்கள் அதனை ஆதரிக்கிறோம். அதேநேரத்தில், இன்னும் ஒருபடி வேகமாக எதில் இருக்கவேண்டும். ஆனால், அது மரத்துப் போய்விட்டதே! இந்த இயக்கத்தைத் தவிர, இந்த மேடையைத் தவிர மற்றவர்கள் யாரும் சொல்வதில் லையே! அதனைச் சொல்லவேண்டாமா, இந்த நேரத்தில்!



    வேட்டி கட்டுவதைவிட, மிக முக்கியம் என்ன வென்றால், சரியாகக்கூட வேட்டி கட்டாதவன்; வேட்டியை நம்மைப்போல் கட்டாமல், மாற்றிக் கட்டுபவன்; உள்ளே சென்று அவன்தான் மணி அடிப்பேன் என்கிறான். காஞ்சிபுரம் தேவநாதன்கள் என்னென்னமோ விஷயத் திற்கு அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.



    அதைப்பற்றி நம்மாட்கள் கவலைப்படவில்லையே!



    வேட்டி கட்டுவது ஒன்றும் அவமானம் கிடையாது. அது நம்முடைய உடை
    வேட்டி கட்டியதால், கிளப்புக்குள் விடவில்லை என்றால், அதற்காக நடவடிக்கை எடுக்க முடியாது; அந்த கிளப்புக்கு என சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதற்காக வழக்குப் போட்டாலும், சட்ட திட்டங்கள் தப்பு என்றுதான் நீதிமன்றத்தில் சொல்வார்கள். அந்த சட்ட திட்டங்களை மாற்றவேண்டும் என்றுதானே சொல்வார்கள்.



    காமராசர் முதற்கொண்டு வேட்டி கட்டிக்கொண்டுதான் சென்றார்கள். வேட்டி கட்டுவது ஒன்றும் அவமானம் கிடையாது. அது நம்முடைய உடை அதனை அவமானப் படுத்தக் கூடாது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். அதனை நாங்கள் எதிர்க்கவில்லை.



    அதேநேரத்தில், இதற்குத் துடியாய்த் துடிக்கின்ற தமிழர்கள், தமிழர்களை கோவிலுக்கு வெளியில் நிற்க வைத்துவிட்டானே! தமிழன்தான் கல் கொடுத்தான்; தமிழன்தான் பணம் கொடுத்தான்; தமிழன்தான் கோபுரத் தைக் கட்டுகிறான்; அப்படி தமிழன் கட்டிய கோபுரத்தி மீது ஏறி நின்று, மணி அடித்துவிட்டு, தண்ணீரை ஊற்றுகிறான், கீழே நின்றுகொண்டு அதை வாங்கிக் குடித்துவிட்டு, அதுதான் திருக்குட நன்னீராட்டு விழா என்று சொல் கிறானே அவன்! இதைவிட மானக்கேடு வேறு என்னவாக இருக்கும்? இந்த மான உணர்ச்சி இல்லாமல் ஆக்குவதற் குத்தான் இந்தி மொழி மூலமாக சமஸ்கிருதம் திணிக்கப் பட்டது.



    அதை எதிர்ப்பதன் அடிப்படை இதுதான். அந்த உணர்வுகள் நமக்கு வரும். ஆகவேதான், பெரியார் அவர்கள் இந்த உணர்வுக்கு வந்தார்கள். இந்த இரண்டையும் நீங்கள் முடிச்சுப் போட்டு பார்த்தால், உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.


    சமஸ்கிருத மொழியை சூத்திரன் படிக்கக்கூடாது!

    திராவிடர்களுக்கு எதிரான கலாச்சார ஊடுருவல்கள், மற்றும் படையெடுப்பு முறை, சமஸ்கிருத மயமாக்கல், தேவ பாஷை, தமிழ் நீச்ச பாஷை என்று சொல்லக்கூடிய நிலையில்,கடவுள் வழிபாடுகள் சமஸ்கிருத மொழியில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரியும்.
    பிறப்பின் அடிப்படையிலான வேறுபாட்டை அது நிலைநிறுத்துகிறது. அதுமட்டுமல்ல, சமஸ்கிருதத்தைக் கற்க பெரும்பாலான மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. நேற்று வரையில், டாக்டர்களாக வரவேண்டும் என்றால்,  சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும். சமஸ்கிருதம் படித்திருந்தால்தான், டாக்டருக்கு மனு போட முடியும். சமஸ்கிருத மொழியை சூத்திரன் படிக்கக்கூடாது; அப்படியென்றால் என்ன அர்த்தம், பார்ப்பான்தான் டாக்டராக வரவேண்டும்; அவர்கள்தான் மருத்துவக் கல்லூரிக்கு வரவேண்டும். அப்படி வந்தவர்கள்தான் ரங்காச்சாரியார்கள் எல்லாம்.



    பிறகு திராவிடர் கழகம் வந்ததினால், பெரியார் பாடு பட்டதினால், அதனை நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் ரத்து செய்ததினால்தானே, இன்றைக்கு எல்லோருக்கும் மருத்துவக் கல்லூரியின் கதவுகள் திறந்து வைக்கப் பட்டிருக்கின்றன.



    பண்பாட்டுப் படையெடுப்பு மட்டுமல்ல, நம்முடைய கல்வி உரிமை பறிப்பு
    ஆகவே, சமஸ்கிருதத்தை எதிர்க்கவேண்டும் என்று சொல்வது, பண்பாட்டுப் படையெடுப்பு மட்டுமல்ல, நம்முடைய கல்வி உரிமை பறிப்பும் ஆகும். அதுதான் மிக முக்கியம். ஆகவே, இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது  அகலமாகப் பார்த்தால், கல்வி உரிமை பறி போவதற்கும் அதற்கு இடமுண்டு.
    எனவே, இந்தி போராட்டம் என்பது இருக்கிறதே, ஒரு மொழியை எதிர்த்து மட்டுமல்ல. அப்படிப் பார்த்தால், எத்தனையோ மொழிகளை அவரவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் போய் நாம் தடுத்தோம்? அவரவர் விருப்பப்படி மாலையில் சென்று படிக்கட்டும்; அதுபற்றி நமக்குக் கவலையில்லை. அதை மாணவர் களுக்கு கட்டாயமாக்கவேண்டும்; முதலில் இதைப் படிக்க வேண்டும்; சமஸ்கிருத கலாச்சாரத்தை உண்டாக்க வேண்டும் என்பதினால்தானே, இந்த நேர்மாறான சூழலை வந்திருக்கிறது. ஆகவே, சமஸ்கிருத மொழியினுடைய அடையாளம் என்பதற்குத்தான் அடிப்படையானது இது என்பது மிக முக்கியம்.

                                      
                                   ------------------------”விடுதலை” 20-07-2014

    Read more: http://viduthalai.in/page-4/84411.html#ixzz383pPNNBR
    ************************************************************************************

    இந்தியைத் திணித்த ஆச்சாரியார் பிற்காலத்தில் இந்தியை எதிர்த்தது - பெரியாருக்குக் கிடைத்த வெற்றி!


    தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரை
    சென்னை, ஜூலை 21- இந்தியைத் திணித்த ஆச்சாரியார் பிற்காலத்தில இந்தியை எதிர்த்தது பெரியாருக்குக் கிடைத்த வெற்றிதான் என்று உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் 14.7.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


    அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:



    இந்தி பற்றிய பிரச்சினைகள், சில முக்கிய தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.


    1869 இல் இந்திக்கும், உருது மொழிக்குமான போட்டி - தகராறுகள் இருந்தன.
    நியானி டால் இன்ஸ்டிடியூட் என்பதன் நடவடிக்கை 28.8.1869 இல் ஒரு வெளியீட்டைக் கொணர்ந்தது.


    அரபு எழுத்துக்களின் மாற்றமே உருது என்று குறிப்பிட்டு, உருது மொழியைத் தாக்கி அது கருத்துகளைக் கூறியது.



    இந்தி முதன்முதலாக மக்கள் மொழிபோல புழக்கத்தில் வர காரணமானவர் சுவாமி தயானந்தா (ஆரிய சமாஜ நிறுவனர்) அவர்களே, இந்து மத உணர்வின் அடிப்படையிலேயே இது உருவானது.



    சமஸ்கிருதம் பேசினால், வெகு சிறுபான்மை மக்கள் மத்தியில்தான் தனது வேதக் கருத்துக்களைப் பரப்ப முடியும்; பெரும்பான்மை மக்களைச் சென்றடைய முடியாது என்பதற்காகவே தயானந்தாவும், சமஸ்கிருதம் தெரியாத வங்காளியான கேசப் சந்திரசென் அவர்களும் ஆரிய பாஷா என்ற ஹிந்தியை பொது மேடைப் பிரச்சாரங்களில் பயன்படுத்தினர்.
    ஹிந்தி என்பது தேவ நகரி எழுத்துக்களைப் பயன் படுத்தி உருவான நிலையில், ஹிந்தி போராட்டம் பெரிதும் மத அடிப்படையிலே அடி நீரோட்டமாக அமைந்திருந்தது. அப்போது இங்கிலீஷ்பற்றிய பிரச்சினையே எழவில்லை.



    இதை ஏ.கே.மஜூம்தார் அவர்கள் அவரது நூலில் Problem of Hindi a study என்று இந்திபற்றிய பிரச்சினை பக்கம் 18 இல் குறிப்பிடுகிறார்.


    1906 ஆம் ஆண்டிலேயே தென்னகத்திலிருந்து வெளிவந்த மெயில் ஏட்டில் இந்தியைக் கண்டித்து தலையங்கம் தீட்டியது. இந்தி என்பது சமஸ்கிருத சொற்களை மிக அதிகமாகக் கொண்ட மொழி. இந்துஸ்தானி என்பது பாரசீக அரபுச் சொற்களைக் கொண்ட மொழி.



    இந்தியை வட நாட்டு இந்துக்கள் பாராட்டுகின்றனர்.


    இந்துஸ்தானியை வடநாட்டு முஸ்லிம்கள் போற்றி வந்தனர்.


    இந்துக்களின் ஆதிக்கம் வலிமை பெற்றிருந்த காரணத்தால்...

    காந்தியடிகள் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கு மிடையே உள்ள ஒற்றுமை உணர்வை வளர்க்க இந்துஸ்தானி மொழி பயன்படும் என்று கருதி, அதுவே இந்தியாவின் பொது மொழியாகத் திகழவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்.
    காங்கிரஸ் கட்சியில், இந்துக்களின் ஆதிக்கம் வலிமை பெற்றிருந்த காரணத்தால், இந்தி இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்ததோடு, காந்தியார் அவர்களையும் நாளடைவில் அவர்கள் ஒப்புக்கொள்ளும்படியும் செய்துவிட்டார்கள்.



    1906 ஆம் ஆண்டில், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து பேசிய, வடநாட்டு இந்தி வெறி பிடித்த தலைவர் ஒருவர், இந்தி அல்லது இந்துஸ்தானிதான் இந்தியாவின் பொது மொழியாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.


    மெயில் ஆங்கில நாளேட்டின் தலையங்கம்


    1906 ஏப்ரல் 18 ஆம் நாள் வெளிவந்த, மெயில் ஆங்கில நாளேடு அந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்ததோடு, திராவிடர்களைப் பொறுத்தவரை, ஆங்கிலம் எந்தளவிற்கு அந்நிய மொழியோ, அதே அளவிற்கு இந்தியும் அந்நிய மொழி என்பதை அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டு தலையங்கம் எழுதியிருந்தது.



    எனவே, இந்த எழுச்சி என்பதன் வரலாறு இருக்கிறது பாருங்கள், ஒரு நூற்றாண்டுக்கு மேலே போய்க்கொண் டிருக்கின்ற வரலாறு. காரணம் என்னவென்றால், ஒரு பண்பாட்டுப் படையெடுப்பினுடைய அடிப்படை.
    ஆகவேதான், மஜூம்தார் எழுதிய புத்தகத்தில் மிகத் தெளிவாக, அவர்கள் குறிப்பிடுவது, வகுப்புவாத கண்ணோட்டம் என்பதை இங்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.


    வகுப்புவாத கண்ணோட்டம் என்று சொல்வது மட்டுமல்ல, இன்னும் தெளிவாக ஒரு கருத்தை உங் களுக்குச் சுட்டிக்காட்டவேண்டும்.
    ரவீந்திரநாத் தாகூருக்கு, காந்தியார் எழுதிய கடிதம்
    அதற்கு என்ன ஆதாரம் என்று சொல்லும்பொழுது,   ஆங்கிலம் எப்படி அந்நிய மொழியோ, அதேமாதிரிதான், இந்தி மொழியும் திராவிட மக்களுக்கு அந்நிய மொழி என்று சொல்லும்பொழுது,



    ரவீந்திரநாத் தாகூருக்கு 1918 ஆம் ஆண்டு காந்தியார் ஒரு கடிதம் எழுதுகிறார். மொழிப் பிரச்சினையில் உங்கள் கருத்து என்ன? என்று கேட்கிறார்.
    அப்பொழுது தாகூர் சொல்கிறார்,



    தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் இந்தி மொழியைக் கொண்டு போய் திணித்தால், திராவிட மக்கள் ஒருபோதும் அதனை ஏற்கமாட்டார்கள்; அவர்களைப் பொறுத்தவரை யில், இந்தி, ஆங்கிலம்போல் ஒரு அந்நிய மொழியே என்று தாகூர் கூறியிருக்கிறார்.



    இதையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்கோடு புரிந்து, தொடர்ச்சியாக 1924 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார் அவர்கள், திருவண்ணாமலையில் நடைபெற்ற மாகாண காங்கிரஸ் மாநாட்டிற்கு பெரியார் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றியபோது இந்தி திணிப்பு குறித்து தமிழர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பேசினார்.



    1924 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் தலைமையுரை


    இது யாருடைய உரை? பெரியார் அவர்களுடைய உரை. எப்பொழுது 1924 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாநாட்டில் தலைமை உரையாற்றும்பொழுது.
    அதைத் தொடர்ந்து, இந்தியின் ரகசியம் என்ற கட்டுரையில் பண்பாட்டுப் படையெடுப்பைப்பற்றியும், நாகரிகம், ஒரு இனத்தை அழிப்பதற்கு, அவர்களுடைய மொழியை முதலில் அழித்துவிடுங்கள், அவர்களுடைய செல்வாக்கை அழித்துவிடுங்கள் என்று சொன்னதினுடைய அடிப்படையிலேதான் இது இருக்கிறது.



    எனவே, காந்தியார், இந்தி பற்றிய தகவல்கள் அத்தனையும் அந்த நூலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.



    காந்தியார் அவரது சுயசரிதையில் எழுதுகையில்,
    நான் எனது பயணங்களில் கண்ட ஒன்று, மார்வாடிகள் இந்தி ஆதரவுப் பிரச்சாரத்தையும், பசுப் பாதுகாப்பையும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு செய்வதைப் பார்க்கிறேன்...



    இதற்குரிய விளைவாக இஸ்லாமியர், இதைப் பார்க்கும்போது இது வகுப்புவாத கலவரம் உருவாக்குவதாக அமைந்துவிட்டது என்பதே அது.
    (இஸ்லாமியர்கள் மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள் ஆனபடியால், இதை இந்துத்துவா அம்சமாக இஸ்லாமிய மக்கள் கருதினார்கள்).
    எனவேதான்,  ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்று சொல்வதுதான் எங்களுடைய கொள்கை என்று வருகின்ற நேரத்தில், இந்த ஒரே மொழி சமஸ்கிருதம்; அதை நேரடியாகப் புகுத்த முடியாது என்பதால், அதற்கு முதல்படிதான் இந்தி.



    அந்த இந்தியின்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்கிருத எழுத்து மறைந்து போய்விடும். இந்தியை ஒரு படிக்கட்டாக வைத்துக்கொண்டு, சமஸ்கிருத கலாச்சாரம்; ஒரே அமைப்பு, ஒரே நாடு என்ற அடிப்படையில், பசுப் பாதுகாப்பு போன்றவை எல்லாம் வரும். பன்மதங்கள், பல மொழிகள், பல அமைப்புகள் இருக்கின்ற இடத்தில், பல பண்பாடுகளுக்கு இடமே கிடையாது.
    கொஞ்சம் கொஞ்சமாக இந்த மொழியின்மூலமாக படையெடுத்து வந்தது; எப்படி வருகிறது என்று பார்க்கின்றபொழுது, இதுதான் நண்பர்களே, நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதை பெரியார் கண்ணாடி போட்டு பார்க்கின்ற நேரத்தில் மிகத் தெளிவாகத் தெரியும். அந்த அடிப்படை யில், இந்தப் பிரச்சினை பல்வேறு பிரச்சினைகளாக ஆவதற்கு என்ற வாய்ப்பு வரும்.
    இன்றைக்கு வந்திருக்கிற செய்தி ஒன்றை சொல்கிறேன்.


    ஆர்.எஸ்.எஸ். ஏட்டில் வெளிவந்த கட்டுரை!


    மீண்டும் இந்தி எதிர்ப்பு தேவையற்றது! என்ற தலைப் பில் ஆர்.எஸ்.எஸ். வார ஏட்டில் கட்டுரை வெளியிடப் பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையை ஆர்.எஸ்.எஸினு டைய மாநில பிரச்சார அணி தலைவர் எழுதியிருக்கிறார்.
    அந்தக் கட்டுரையில், தமிழகத்தில், 1938 இலும், 1965 இலும் இருந்த சூழ்நிலை ஏன் என்பதை மறந்துவிடக் கூடாது. 1965 இல் தமிழகத்தில் இந்திக்கு எதிராக, தீவிரமான போராட்டங்கள் நடை பெற்றதற்கு முக்கியமான காரணம், காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியால், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை ஏற்பட்ட விரக்தியே, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வேகத்தைக் கூட்டியது. மேலும் அவர்,
    பணிபுரியும் அடியார்களும், அநேகர்களும், டுவிட்டர், பேஸ்புக் போன்று தங்களுடைய சமூக வலைதளங்களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், இந்தியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் ஆணையாகும்.
    எப்படி புதிதாக ஒரு கரடி விடுகிறார் பாருங்கள்;


    இங்கே கவிஞர் அவர்கள் வரவேற்புரையில் சொன்னாரே, தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் பணியாற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு, இந்தியை கட்டாயமாக்க முயன்று வருகிறது. ஏற்கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண்டும் செயல்பட உத்தரவிட்டுள்ளது.



    மத்திய அரசு அலுவலகங்களில் வருகைப் பதிவேடு அரசு ஆணைகள் இந்தி மயமாகியுள்ளன. இந்தி பயிற்சிக்கு செல்லாத மற்றும் தேர்வு எழுதாத ஊழியர்களுக்கு காரணம் கேட்கப்பட்டுள்ளது. புதிதாக இந்தியில் கையொப்பமிட தனி காலம்


    தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவல கங்களின் ஊழியர்களுக்கு இந்தி மொழி பயிற்சி மற்றும் இந்தி தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகள் கட்டாயமாக்கப் பட்டுள்ளன. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்தி மொழி பயிற்சிக்கு செல்லாத அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



    சென்னையில் உள்ள பல்வேறு மத்திய அரசு அலுவல கங்களில் 11 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே, பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    அலுவலக வருகைப் பதிவேட்டில் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மட்டுமே கையொப்பமிடும் முறை இருந்து வருகிறது. இப்போது புதிதாக இந்தியில் கையொப்பமிட தனி காலம் உருவாக்கப்பட்டுள்ளது.



    மேலும் அலுவலகக் கடிதங்கள், பதவி உயர்வு ஆணைகள், பணி மாற்று ஆணைகள் உள்பட அனைத்து நிர்வாக ஆவணங்களும் ஆங்கிலத்துடன் தற்போது இந்தியிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன.



    மறைமுகமாக பயமுறுத்தி, பிரிப்பதைத் தவிர வேறு என்ன? அரசாங்க மொழியாகிவிட்டால், பிறகு அதை பேசுகிறான். ஆங்கிலத்தை ஏன் தவிர்க்க முடியாது. வெள்ளைக்காரன் அரசாங்க மொழியாக்கினான். தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல், கடைசிவரை ஆங் கிலத்திலே படித்துவரலாம் என்கிற வெட்கங்கெட்ட நிலை இருக்கிறது. ஆகவே, இதில் தெளிவாக சிந்திக்கவேண்டிய செய்தி என்னவென்றால், உண்மைகளை மறைத்து இவர்கள் சொல்கிறார்கள். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். பல பேர் படித்துவிட்டு எங்கே வேலைக்குச் செல்கிறார்கள்? வளைகுடா நாட்டிற்குத்தானே செல்கிறார்கள். அரபு மொழி படித்தால், நல்ல வருமானம் கிடைக்கிறது. அரபு மொழியை கட்டாயமாக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ். அரசு தயாராக இருக்கிறதா? தயவு செய்து நீங்கள் சிந்திக்கவேண்டாமா?



    இந்தி மொழியைவிட, அரபு மொழி வளமான மொழி தானே! உருது படித்தவர்கள் எல்லாம் அங்கே செல்லலாமே, அரபு மொழியும், உருது மொழியும் கிட்டத்தட்ட ஒன்றானதுதானே! அங்கே போய் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்களே, அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டால், என்ன சொல்வார்கள்? தயவு செய்து இதனை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.



    இந்தி மொழி தெரிந்தவர்களுக்கே தமிழ்நாட்டில்தானே வேலை!
    அதுமட்டுமல்ல, இந்தி படித்தால், வேலை கிடைக்கும், வேலை கிடைக்கும் என்று கிளிப் பிள்ளை போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்களே! பிகார் மாநிலத்தில் உள்ளவர்கள் இந்தி மொழி தெரிந்தவர்கள் தானே, அங்கே வேலையில்லாமல், தமிழ்நாட்டில்தானே கட்டட வேலைகள் மற்ற வேலைகளை நாம் கொடுக் கிறோம். இங்கேதானே அவர்கள் முழுக்க முழுக்க வரு கிறார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் இல்லையென்றால், கட்டட வேலைகளே கிடையாது என்ற நிலை இருக்கிறதே! அவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொண்டு, தமிழில் பேசுகிறார்களே!



    ஏற்கெனவே நாம் சொல்லியிருக்கிறோம், இந்தி மொழியில் யாரும் பேசக்கூடாது என்று நாம் உத்தரவு போடவில்லை. இந்தியை யார் வேண்டுமானாலும் விரும் பலாம்; வடநாட்டிற்கு நாம் செல்கிறோம், அங்கேயுள்ள தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்; அங்கேயிருந்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருகிறோம்; அவர்கள் தமிழில் உரையாற்றுகிறார்கள். தந்தை பெரியாரின் நூல்களை வடமாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு, இந்தி மொழியில் மொழி பெயர்க்கிறோம், ஒரியா மொழியில் மொழி பெயர்க்கிறோம், தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கிறோம், அசாம் மொழியில் மொழி பெயர்க்கிறோம். நமக்கு ஒன்றும் மொழியின்மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பில்லையே! பண்பாட்டுப் படையெடுப்பாக வைத்து, கட்டாயமாக்கி, இந்த நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறவர்களின் உள்நோக்கம் என்ன?



    எந்தக் காரியத்தையும் சாதாரணமாக செய்யும்பொழுது அதற்கு மரியாதை உண்டு. அதையே உள்நோக்கத்தோடு செய்யும்பொழுது, எப்படி அறிவாளிகள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? திரிக்கின்ற வரை லாபம் என்று இருக்க முடியுமா?



    ஆகவேதான், நண்பர்களே, இப்பிரச்சினை மிக முக்கியமானதாகும். தற்போது ஒரு தலைமுறையினர் இந்திக்கு எதிராகத் திரும்பியதால், தீனதயாள்ஜி கொடுத்தாரே, அதையே ஏன் இப்பொழுது மோடி ஜி மாற்றுகிறார்?
    அய்க்கிய பாரதீய ஜனசங்கத் தலைவர் தீனதயாள் உபாத்யாயா (ஒரு பத்திரிகையாளர்) அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது,
    அந்தக் கேள்வி என்னவென்றால், மத்திய அரசு நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகளை இந்தியில் எழுதவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு போட்டுள் ளதே, இதுபற்றி தங்கள் கருத்து என்ன கேட்கிறார்கள்?
    அவரது பதில்,



    ஒரு தேர்வை எந்த மொழியில் எழுதவேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்யக்கூடாது. இதற்கு மாறாக, தேர்வு நடத்தும் கல்வியாளர்களும், தேர்வு எழுதும் மாணவர்களும் முடிவு செய்யவேண்டும். அரசியல்வாதிகள் இந்த மாதிரியான விஷயங்களில் தங்களது கருத்துகளைத் திணிக்கக் கூடாது என்று தீனதயாள்ஜி அழகாக சொல்லி யிருக்கிறார்கள்.



    தீனதயாள்ஜி கொடுத்தாரே, அதையே ஏன் இப்பொழுது மோடிஜி மாற்றுகிறார்? அதுதானே மிக முக்கியம்!



    இளைஞர்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும்

    ஆகவேதான் நண்பர்களே, இப்பொழுது அந்தப் பிரச்சினை என்பது, இருக்கின்ற பிரச்சினைகளில், ஈழத் தமிழர்கள் பிரச்சினையாகட்டும்; தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்ற பிரச்சினையாகட்டும் அல்லது விலைவாசி பிரச்சினையாகட்டும், எந்தப் பிரச்சினை களிலும், எல்லாம் பழைய கருப்பனாகத்தான் இன்னமும் இருக்கிறது. பழைய கள், புது மொந்தையாகத்தான் இருக்கிறது. இன்னுங்கேட்டால், அந்தப் பழைய கள் புளித்துப்போன கள்ளாக இருக்கிறது, புது மொந்தையில் ஊற்றினாலும் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக் கிறது என்று மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்த காரணத் தினால்தான், நண்பர்களே, இதை மீண்டும் பல்வேறு வாதங்களை எடுத்துச் சொல்லி, அதன்மூலமாக இவர்கள் புதிய மெருகேற்றலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் உடன்படக் கூடாது. அதிலும், குறிப்பாக, இணைய தளம்தான் எல்லாமே என்று இருக்கக்கூடிய 18 வயது முதல் 24 வயது இளைஞர்கள், இணைய தளத்தி லேயே தன்னுடைய வாழ்க்கையை செலவழித்துக் கொண்டிருக்கக்கூடியவர்கள், பழைய வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.


    இவை அத்தனையும் இணைய தளத்திலும் வெளியிடப் படும். அதற்கு வசதியாகத்தான் இந்த செய்திகள், மின் னொளி மூலமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.


    ஆகவே, இதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் அவர்களும், திராவிடர் இயக்கமும் தொடர்ந்து அந்தப் பணியைச் செய்யக்கூடிய நிலையிலே இருக்கிறது. இன்னமும் யாரும் அசந்துவிட வில்லை. இன்னுங்கேட்டால், இந்த இயக்கம் எப்படிப் பட்டது என்பதை புரிந்துகொள்வதற்கு,


    Hindi Never, English Ever 


    எந்த ராஜகோபாலாச்சாரியார், நான் யாரைக் கேட்டுக்கொண்டு இந்தியைத் திணிக்கவேண்டும்? என்று கேட்டாரோ, அதே ராஜகோபாலாச்சாரியார்,  பின்னாளில் எப்படி மாறினார்?  என்ன சொன்னார், Hindi Never, English Ever    என்று சொன்னாரே!


    யார் வெற்றி பெற்றார்கள்? பெரியார் வெற்றி பெற்றார்; திராவிடர் இயக்கம் வெற்றி பெற்றது.


    எப்பொழுதும் தயாராக இருப்போம்! எப்பொழுதும் விழிப்போடு இருப்போம்!
    ஆகவே, நண்பர்களே, இந்தப் போராட்டம் ஒரு தொடர் போராட்டம். எப்படி தேவாசுரப் போராட்டமாக இனப் போராட்டமாக, நம்முடைய அரசியல் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறதோ, அதுபோலத்தான், மொழிப் போராட்டம் என்று சொன்னாலும், முழுக்க முழுக்க இது ஒரு இனப் போராட்டம்; ஒரு பண்பாட்டுப் பாதுகாப்புப் போராட்டம். எனவே, எப்பொழுதும் தயாராக இருப்போம்! எப்பொழுதும் விழிப்போடு இருப்போம்!
    எப்பக்கம் புகுந்துவிடும் இந்தி என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் கேட்டார்களே, அதுபோல, எப்பக்கம் வந்தாலும், எந்த ரூபத்தில் வந்தாலும், அதனை எதிர்ப்பதற்குத் தயாராக இருப்போம், அதிலொன்றும் சந்தேகமில்லை.


    உணர்வுகள் மங்கிவிடவில்லை; மறைந்துவிடவில்லை


    இப்பொழுது, அடக்கமாக, அமைதியாக இருக்கிறார்கள், இல்லை என்று விளக்கம் சொல்கிறார்கள் என்று சொல்லும்பொழுது, உடனடியாக நாம் போராட்டக் களத்தில் இறங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. தேவைப்படும்பொழுது இந்த ஆயுதம், பெரியார் கொடுத்த ஆயுதம் நமக்கு எப்பொழுதும் கையில் இருக்கிறது. மக்கள் தயாராக இருக்கிறார்கள்; உணர்வுகள் மங்கிவிடவில்லை; மறைந்துவிடவில்லை; மலிந்து விடவில்லை.


    எனவே, நம்முடைய பணிகள் தொடரும், தொடரும்; பண்பாட்டைப் பாதுகாப்போம் என்று கூறி முடிக்கிறேன், நன்றி, வணக்கம்!
    வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

    --------------------------- இவ்வாறு தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

                                    ----------------------”விடுதலை” 21-07-2014