Search This Blog

18.5.13

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஈராண்டு சாதனைகள்தான் என்ன... என்ன?

ஈராண்டு சாதனைகள்தான் என்ன... என்ன?
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இரண்டாண்டுகளைக் கடந்து வந்துள்ளது; ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் - சட்டப் பேரவையில் பாராட்டுக் குவியல்கள்.
இவற்றையெல்லாம் குறையாகச் சொல்ல முடியாது. எந்த ஆட்சியிலும் பொதுவாக இவையெல்லாம் நடக்கக் கூடியவைதான்.

வேண்டுமானால் திகட்டக் கூடியதாக இது இருக்கிறது என்று விமர்சிக்கலாம்.
சட்டமன்றத்தில் குறைகளை சுட்டிக்காட்ட எந்த எதிர்க்கட்சியாலும் முடியவே முடியாது. எதிர்க்கட்சிகளை சட்டப் பேரவையில் இருக்க அனு மதித்தால்தானே அவர்களால் பேச முடியும்? அப்படியே அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தால் ஆயிரம் ஆயிரம் குறுக்கீடுகள்; அதையும் மீறி குறை கூறினால் அவை அவைக் குறிப்பில் இடம் பெறாது.

சட்டசபையில் 110ஆவது விதி என்பது மிகவும் அரிதாகப் பயன் படுத்தப்படுவது; அதன்கீழ் அறிக்கையை முதல் அமைச்சர் படித்தால் அது குறித்து யாரும் எதிர்த்து பேசக் கூடாது - விமர்சனங்களை வைக்க முடியாது, - குறைகூறிப் பேச முடியாது.

இதனை இலாவகமாகப் பயன் படுத்தியதில் இன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களை வெல்ல யார் இருக்கிறார்கள் இந்த வையத்தில்? அதே நேரத்தில் பாராட்டி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆளும் கட்சியும், ஒத்து ஊதும் கூட்டணிக் கட்சிகளும் பிற்பகல் ஒன்றரை மணி நேரம் பாராட்டுப் பத்திரத்தை வாசித்துக் கொண்டே இருக்க தாராளமான அனுமதி.

பிற்பகல் ஒன்றரை மணி வரை  இந்த பாராட்டுச் சடங்கு தங்குத் தடையின்றி நடந்து கொண்டே இருக்கும். அதற்குமேல் மக்கள் பிரதி நிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் எதைப் பேசுவது!

ஒரு வருடம் வரை குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை அவைக்கு வரக் கூடாது (Suspension)  என்று எந்தக் காலத்தில் எந்த அவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்? இந்தச் சாதனையை வேண்டுமானால் மார் தட்டிச் சொல்லலாம் அ.இ. அ.தி.மு.க. அரசு.

எதிர்க்கட்சி என்றால் குறைகளை எடுத்துக் கூறத் தாராளமாக வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் அவர்கள் கூறுவதில் நியாயம் இருந்தால் திருத்திக் கொண்டு செயல்பட ஆளும் கட்சி முன்வர வேண்டும். இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் என்று திருவள்ளுவர் சொல்ல வில்லையா?

ஆனால் அதெல்லாம் பழைய காலம்; அ.இ.அ.தி.மு.க. சகாப்தத்தில் அதற்கெல்லாம் இடம் கிடையாது.

இவை ஒருபுறம் இருக்கட்டும். ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்குவோம் என்று சொன்னார்களே. இரண்டாண்டுக்குப் பிறகும் நிலை என்ன? தி.மு.க. ஆட்சியில் இரண்டே இரண்டு மணி நேரம் மின் தடை இருந்ததற்கே மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவிக் குதித்தார்களே --_ இப்பொழுது நிலை என்ன?

எப்பொழுது மின்சாரம் வரும்? எப்பொழுது போகும் --- என்று யாருக்குத் தெரியும்? மின்சாரம் வருவதும் உண்டு என்று வேண்டுமானால் கூறலாம். 10 மணி; 12 மணி நேரம் என்று மின்தடை!

இரவிலும் விட்டு விட்டு மின்சாரம் வந்தால் யார் நிம்மதியாகத் தூங்க முடியும்? உங்களைத் தூங்க விட மாட்டேன் -_ ஜாக்கிரதை! என்கிறார்களா? 

பொது மக்கள் குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் நிலைமை என்ன? தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களின் கதி என்ன?

தொழிற்சாலைகள் எப்படி செயல்படும்? அவற்றை இழுத்து மூடும் நிலையில், தொழிலாளர்களின் வேலை வாய்ப்பில்தானே கை வைக்கப்படும். வேலை கிட்டாத தொழிலாளர்களின் வீட்டு அடுப்பில் பூனைக் குட்டி தானே தூங்கும்? திருப்பூர் போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த ஊரின் நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கட்டுமே!

சூரியன் மறைந்ததால் ஏற்பட்ட இருட்டுக்கு பெயர்தான் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்றே சொல்லத் தோன் றுகிறது.

அறிவிப்புகளை அன்றாடம் மாண்புமிகு முதல் அமைச்சர் அறி வித்துக் கொண்டே இருந்தாலும், அந்த அறிக்கைகளைப் படித்துப் பார்க்கக் கூட மின்சாரத்தைக் கொடுத்தால் தானே முடியும்?

வந்ததும் வராததுமாக மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு என்ற முப்பிரி சங்கிலியால் மக்களின் முதுகு நார் நாராகக் கிழிக்கப் பட்டாயிற்று.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அண்ணாவின் நூற்றாண்டையொட்டி அவருக்குப் பொருத்தமாக நினைவு கூரும் - எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.230 கோடி செலவில் விண்ணை முட்ட எழுந்து நிற்கும் அறிவுச் சோலையாம் நூலகம் - திமுக ஆட்சி யில் - அதுவும் மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்து கட்டி முடிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்தால் அதனை இட மாற்றம் செய்யத் துடித்த துடிப்புக்கு என்ன பெயர்? ஆரியத் துடிப்புத் தானே! 

அம்மையாருக்கு ஆல வட்டம் சுழற்றும் வேலையை அட்சரம் பிறழாமல் செய்து வந்த திருவாளர் சோ ராமசாமியாலேயேகூட அதனை நியாயப்படுத்த முடியவில்லையே!

அதே போல தி.மு.க. ஆட்சிக் காலத்தில்  9 லட்ச சதுர அடியில் 450 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்ட சட்டமன்றத்தை உள்ளடக்கிய தலைமைச் செயலகத்தை முடக்கியதும், செம்மொழி மாநாட்டை ஒட்டி அறிவிக்கப்பட்டுச் செயல்பட்ட புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்த நூலகத்தை நொறுக்கிய கொடுமை என்ன? அதில் இடம் பெற்றிருந்த அரிய நூல்களும் பழங்கால ஓலைச் சுவடிகளும் குப்பைமேடாக அல்லவா ஆக்கப்பட்டது. சமச் சீர் கல்வியையும் பிடிவாதமாக அமல்படுத்த மறுத்தபோது உச்சநீதி மன்றம் உச்சந் தலையில் ஓங்கி அடித்த பிறகுதானே ஒட்டாரம் ஓய்ந்தது.

அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணி அடித்துச் சொன்ன வார்த் தைகள் சாதாரணமானவைகளா? The Law must permit change of policy because another political party with different political philosophy coming to power, as it is to the decision of the government. The state is the authority under article 12 of the constitution, and not a particular person or party which is responsible for implementation of the policies என்று உச்சநீதிமன்றம் கூறியதே! 

அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு வழங்கிய தங்கப்பூண் போட்ட பாராட்டுப் பத்திரமா இது? முதலில் இருந்த ஓர் ஆட்சி ஒரு காரியத்தைச் செய்தால் தனிப் பட்ட முறையில் செய்தார்கள் என்று யாரும் கருதிட முடியாது. இன்னொரு ஆட்சி வரும்போது பழைய ஆட்சி யினுடைய தொடர்ச்சி.

சென்ற ஆட்சி யின் செயலைப் பின்பற்ற வேண்டியது தான் _ வந்திருக்கும் ஆட்சியின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அதை உடைப்பதற்குப் புதிய அரசுக்கு அரசியல் சட்ட ரீதியாக உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் வரை யறுத்த வார்த்தைகளால் வறுத்தெடுத்த பிறகாவது அண்ணா தி.மு.க. ஆட்சி புத்திக் கொள் முதல் பெற வேண்டாமா?

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு நலச் சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா கொண்டு வரப்படவில்லையா? (18.8.2011).

ஆரம்பக்கட்ட நிலையிலேயே அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகள் எதிர்க்க வில்லையா? கூட்டணி கட்சியாக இருந்தால் என்ன, அறிஞர் அண்ணாவின் பெயரில் இருந்த நூலகமாக இருந்தால் என்ன? - அவை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்தவை _ அதுவும் தன் ஜென்மப் பகைவரான கருணாநிதி செய்தது என்றால், அதன் குடலைக் கிழித்து மாலையாகப் போடாத வரை ஓய மாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டவர் ஆட்சி ஆயிற்றே!

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண் டென்று கருணாநிதி சட்டம் செய்தாரா? விடப் போவதில்லை சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தலைகீழாகப் புரட்டியடிக்கவில்லையா?

உழவர் திருநாளை கலைஞர் கொண்டாடினார் தைப் பொங்கலை ஒட்டி என்றால் அதனை நான் ஏற்க முடியுமா? கொளுத்தும் கோடையில் உழவர் விழாவை நடத்துவேன் என்று ஏட்டிக்குப் போட்டியாக நடத்த வில்லையா? 

செம்மொழி பூங்காவா? - அந்தப் பெயரை இருட்டடிப்பு செய்! தொல் காப்பியர் பூங்காவா? - தொலைத்துக் கட்டு அந்தப் பெயரை _ என்பதெல் லாம் ஓர் அரசின் மகத்தான சாதனையோ!

2427.40 கோடி ரூபாயில் சேது சமுத்திரத் திட்டம் தி.மு.க. அமைச்சர் டி.ஆர். பாலுவின் முயற்சியால் வந்ததா?

மூக்கணாங் கயிறு போட்டு, முற்றுப் புள்ளி வை!

அய்யா சொன்னால் என்ன? அண்ணா விரும்பியிருந்தால் என்ன? அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தால் தான் என்ன? அதெல்லாம் அப் பொழுது; இப்பொழுது நம் முன் உள்ள பிரச்சினை - அது தி.மு.க. ஈடுபட்ட விவகாரம் - விடப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் வரை சென்று முடக்கி இருப்பது எப்படிப்பட்ட சாதனை? இரண்டாண்டுகளில் இப்படிப்பட்ட சாதனைகள் அனந்தம்! அனந்தம்!

சட்ட ஒழுங்கா? அடேயப்பா, ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, வன்முறையின் வாள் வீச்சுகள் நீதிமன்ற வளாகத்துக் குள்ளேயே குத்து வெட்டு கொலை.

இடதுசாரிகள் இவற்றிற்கெல்லாம் ஏற்றப்பாட்டு இசைப் பாட்டுப் பாடுவார்கள்; ஊடகங்கள் ஒலி பெருக்கிகளாகச் செயல்படும்.

ஆனாலும் மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் உணர்வு என்பது மட்டும் வேறுதான். அதிகாரத்தில் இருக்கும்போது அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது.

மக்கள் உரிய முறையில், சரியான சந்தர்ப்பத்தில் தெரிவிக்க வேண்டிய நேரத்தில் தெரிவிப்பார்கள் என்பது மட்டும் உறுதி! உறுதி!!

                    ----------------மின்சாரம் அவர்கள்  18-5-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

கிரீமிலேயர் தேவையா? மெத்தப் படித்த நிதி அமைச்சர் சிதம்பரம் உணர்வாரா?

கிரீமிலேயர் தேவையா? 
 
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் பொழுது பொருளாதார அளவுகோல் என்ற நிபந்தனையை (Creamy Layer) உச்சநீதிமன்றம் புதிதாகத் திணித்தது. (16.11.1992)

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் காணப்படாத அளவுகோல் இது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் (Socially and Educationally Backward Classes of Citizens) இட ஒதுக்கீட்டைப் பற்றித்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.

நீதிமன்றங்களின் வேலை அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டவைகளைக் காப்பாற்றுவது தானே தவிர, அவற்றை உடைப்பதல்ல; மத்திய அரசோ, மாநில அரசோ சில சட்டங்களை இயற்றும்போது - அது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் என்று பேனாவை உளியாக்கிச் செதுக்கும் உச்சநீதிமன்றம், சமூகநீதிப் பிரச்சினை என்று வரும்பொழுது மட்டும் அரசமைப்புச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்ப்புரை வழங்குவது எந்த வகையில் நியாயமோ?

மண்டல் குழு தொடர்பான வழக்கில்தான்  உச்சநீதி மன்றம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்தப் பொருளாதார அளவுகோலைப் புகுத்தியது -
தொடக்கத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் அந்தத் தொகை             உயர்த்தப்பட்டு வந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தொகை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை.
கிராமப்புற மக்களுக்கு ரூ.9 லட்சம், நகர்ப்புற மக்களுக்கு ரூ.12 லட்சம் என்று உயர்த்தப்பட வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்தது.

ஆனால் கடந்த ஒரு வருடமாக, இந்தப் பிரச்சி னையில் முடிவு செய்யப்படாமல் இழுபறியாக இருந்து வந்திருக்கிறது. அமைச்சர்களின் குழு ஒன்று அமைக் கப்பட்டு அதன் பரிசீலனைக்கு இந்தப் பிரச்சினை விடப்பட்டது.
கடைசிக் கடைசியாக இதரப் பிற்படுத்தப்பட்டோ ருக்கு ஆண்டு வருவாய் ரூ.6 லட்சம் என்று இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் குழுவில் மாறுபட்ட கருத்துகள் இருந்ததால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இது நிலுவையில் இருந்து வருகிறது. மத்திய அமைச்சர்கள் என்.நாராயணசாமி, வீரப்ப மொய்லி, வயலார் ரவி போன்றவர்கள் 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளனர்.

உயர் ஜாதியினரும், சில தொங்கு சதைகளும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சொன்னதைப் புறந் தள்ளி விட்டனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்கக் கூடிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் போன்றவர்களே முட்டுக் கட்டையாக இருந்துள்ளனர் என்பது வேதனைக் குரியதாகும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை விடக் கருத்துச் சொல்ல யாருக்குத் தகுதி உண்டு?

கிரீமிலேயரின் தொகையை உயர்த்தினால் பிற் படுத்தப்பட்டோரில் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று வக்கீல் வாதம் (?) செய்துள்ளார் நிதி அமைச்சர்.
ஓர் உண்மையை மெத்தப் படித்த நிதி அமைச்சர் உணர்வாரா? அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற மத்திய அரசின் உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் நுழையக் கூடிய நிலையில் உள்ளவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் சூழ்ச்சி இது.

பிற்படுத்தப்பட்டோர்களில் ஓரளவு வளர்ந்தவர்கள் தாம் இது போன்ற உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் நுழையும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அவர்களையும் வெளியில் தள்ளி விட்டால், அதன் நிலை என்ன? பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் காலியாகி, அந்த இடங்கள் முழுவதும் உயர் ஜாதியினரின் வயிற்றில் அறுத்துக் வைக்கப்படும் என்பதுதானே யதார்த்த நிலை?

சமூக நீதி பிறந்த தமிழ்நாட்டு மண்ணில் பிறந்து வளர்ந்த சிதம்பரம் போன்றவர்களுக்கு இந்தப் பால பாடம்கூடத் தெரியவில்லையா? அல்லது தெரிந்திருந்தும் உயர் ஜாதி வட்டார மனப்பான்மையின் தாக் கத்துக்கு ஆளானதால் இவ்வாறு நடந்து கொள்கிறாரா?


தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச் சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட வருமான வரம்பு ஆணையால் 1980இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன் முதலாகத் தோல்வியைத் தழுவியது - எம்.ஜி.ஆர் அவர்களின் அ.இ.அ.தி.மு.க.;  அதிலி ருந்தாவது தமிழ் மண்ணின் மனப்பான்மை (Soil Psychology) என்னவென்று தெரிந்திருக்க வேண்டாமா சிதம்பரம் போன்றவர்களுக்கு?

சமூகநீதியில் உண்மைத் துடிப்பு உள்ள காமராசர் போன்றவர்கள்தாம் மக்கள் தலைவராக உயர முடிந்தது என்பதை சிதம்பரங்கள் உணர்ந்தால் நல்லது. இல்லையெனில் மக்கள் எதிர்ப்பு வெள்ளத்தில் சிக்கிட வேண்டிய பரிதாப நிலைதான்!

நான்கு வருடத்துக்கு ஒருமுறை பொருளாதார அளவுகோலை மாற்றியமைப்பதைவிட, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான இந்தக் கிரீமிலேயரைத் தூக்கி எறிவதுதான் சரியாக இருக்கும் என்பதை மத்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
                     ----------------------"விடுதலை” தலையங்கம் 17-5-2013

16.5.13

பார்ப்பானைக் கொன்ற பாவம் - பிரம்மஹத்தி


மூடநம்பிக்கைகளை பக்தியின் பெயரால் புகுத்தி மனிதர்களை முட்டாளாக் குவதில் நம் நாட்டு ஊடகங்களிடையே மகத்தான போட்டி.

இதில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் ஏடுகள் என்ற பேதம்கூட கிடையாது; முட்டாள்தனமும் அறியாமையும் சுரண்டு கின்ற மனப்போக்கும் எவருடைய தனி உரிமையும் அல்லவே!

எனவே வார ஏடுகள், சிறப்பு மலர்கள் என்று நாளேடுகளின் இலவச இணைப் புகள், ஒன்று சினிமாக்காரிகள், சினிமா காரர்களுக்கு 5 விரல்கள் தானா? ஆறு விரலா? என்ற ஆராய்ச்சியையும் சுவை சொட்டச் சொட்ட மாத ஜோதிடம், குரு பெயர்ச்சி, மாதந்தோறும் வரும் விழாக்கள் இப்படி மக்களிடையே மூடநம்பிக்கை வியாபாரத்தைப் பெருக்கி, பக்தி மூலம் புத்தியை இழக்கச் செய்யும் இழி தொழிலை வெட்கமின்றி இந்த அறிவுக் காலத்திலும் செய்து மக்களை ஏமாற்ற முனைகின்றனரே!

நாளேடு பார்ப்பன மலர் - ஒரு வாரத்தில் ஒரு நாள் பக்தீ மலர் வெளியிட்டு, அறிவை அழிவை நோக்கி அழைத்துச் செல்வதோடு, ஒழுக்கத்தையும் குழி தோண்டிப் புதைக்கிறது!

பாவ புண்ணியக் கற்பனையே பார்ப்பனீயத்தின் தொப்பையை வளப்படுத்து வதற்கேயன்றி வேறு எதற்கு?

இதோ பக்திமலரின் பைத்திய வைத்தியம் பாரீர்!

துன்பம் நீக்கி நன்மைகள் அருளும் மலர்களைத் தெரிந்து கொள்ளலாமா?

எள்ளுப்பூவினால் பூஜை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
மாதா, பிதாக்களைக் கொன்ற கொடிய பாவத்தையும் நீக்க வல்லது கொன்றைப்பூ.

வெள்ளெருக்குப் பூவால் பூஜிக்க மாற் றான் மனைவியை விழைந்த தோஷம் போகும்.

பொய் சொன்னதால் நேரும் தோஷத்தை வில்வம் அகற்றும்.

வறுமையால் செய்த குற்றங்களால் விளையும் பாவங்களைத் துளசி நீக்கும்.

கத்திரிப்பூவால் பூஜிக்க அனைத்து வகையான கடும் நோய்களும் அகலும்.
பசுவைக் கொன்ற பாவம், தும்பைப் பூவால் அர்ச்சித்தால் போகும்.

சகோதர சகோதரிகளை வஞ்சித்த செயல்களால் வரும் பாவத்தை அருகம்புல் அகற்றும்.

சிவலிங்கங்களுக்கு அழிவு செய்ததால் விளையும் பாவங்கள் அசோகம் அகற்றும்.

நெல்லி இலைகளால் வழிபட கொடிய நோய்கள் அகலும்.

பேச்சால் விளையும் பாவங்களை நீலோத்பவ மலர் அகற்றும்.

இவைகள் எல்லாம் பூஜாபத்ததி நூல்களில் உள்ள அரிய தகவல்கள்.

அருகில் உள்ள நந்தவனங்களில் உங்கள் தேவைக்குரிய மலர் வளர்த்து, நாள்தோறும் இறைவனுக்குச் சாத்தித் தோஷ நீக்கம் பெறலாமே! - பக்தி மலர் செய்யும் சிபாரிசுகள் இவை!

மேலே முதலில் காட்டிய பிரம்மஹத்தி பாவம் என்றால் என்ன தெரியுமா?
பார்ப்பானைக் கொன்ற பாவம் - பிரம்மஹத்தி -

பரவாயில்லை எள்ளுப்பூ பூஜை செய்தால் போதும் என்றால் பார்ப்பனர்கள் கொலை பரவி விடாதா? இதைவிட முட்டாள்தனமான வன்முறை பிரச்சாரம் வேண்டுமா?

சரி போலீஸ், கோர்ட் தண்டிக்காமல் விட்டு விடுமா?  -எள்ளுப் பூவை பூஜை செய்து கொண்டிருந்தால்...?

மாதா, பிதாக்களையும் கொல்லலாமாம்!

கொன்றைப்பூ இந்த கொடிய பாவத்தைப் போக்குமாம்!

இதைவிட கொடுமையான ஒழுக்க கேட்டினைப் பரப்பும், கொலை செய்யத் தூண்டும் கீதைக்கு அண்ணனான நூலின் மீதும், இதை எழுதும் நாளேட்டின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

அதைவிட அசிங்கம்; அருவருப்பு -

வெள்ளெருக்குப்பூவால் பூஜிக்க மாற்றான் மனைவியை விழைந்த தோஷம் போகும்!

- மேலே காட்டியதை அந்த பக்தி மலருக்கு எழுதிய அதிமேதாவி புலவர் வே. மகாதேவன் என்பவராம்!

வெட்கம், மானம், சூடு, சொரணை உள்ளவர்கள் இதை ஏற்பார்களா?

இவர் யோசனைப்படி இந்த மலர்களை வைத்தால், ஒழுக்கம் கெடுமா? ஒழுக்கம் வளருமா? சொல்லுங்கள்.

எந்த பாவத்தையும் செய்துவிட்டு ஒரு பூ பறித்து பூஜித்தால் குற்றம் ப்பூ என்று ஓடி விடுமாம்? - இப்படியும் ஒரு மானங் கெட்ட - மக்களை மடையர்களாக்கும் பிரச்சாரமா?

இவ்வேடுகளை வெறுத்து ஒதுக்க வேண்டாமா?

 -------------------------------------------------- ஊசி மிளகாய் --”விடுதலை” 16-5-2013

13.5.13

தீண்டாமை பற்றி பெரியார்

தீண்டாமை

இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை ஒரு பெருமை யெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்ச மும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன்.

ஆதி திராவிடர்களுக் கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரம மென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மை விடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக்குறியும் ஏற்படுத்துவ தாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக் கிணறு வெட்ட வேண்டும்? சிலர் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும்.

நமது கிணறு குளங்களில் ஆதி திராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அனுமதிக்கலாகாது? பட்சிகளும் மிருகங்களும் குளங் களில் தண்ணீர் சாப்பிடுவதில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்னென்ன வருகிறதென்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்விதத் தண்ணீரை இந்த ஆதி திராவிடர்கள் எடுத்துச் சாப்பிட்டுவிடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும். என்று சொல்லிவிட்டு நீங்கள் எனக்களித்த வரவேற்புப் பத்திரத்தில் உங்களுக்காக நான் அதிகவேலை செய்திருப்பதாகச் சொல்லிப் புகழ்ந்திருக்கிறீர்கள். அது கொஞ்சமும் உண்மையல்ல. உங்களை உத்தேசித்து நான் ஒரு காரியமும் செய்யவேயில்லை.

ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு உழைப்பதாய் நினைத்துக் கொள்வதும் ஆதி திராவிடர்களுக்கு உழைப்பதாய்ச் சொல்லுவதும் வேஷத்திற்காகத்தான் உழைக்கிறவர்களும் பேசுகிற வர்களுமாயிருப்பார்களென்பது எனது அபிப்பிராயம். அதாவது, இந்தியாவின் நன்மைக்காக அய்ரோப் பியர்கள் இந்தியாவை ஆளுகிறார்கள் என்பது போலத் தான் ஆகுமேயல்லாமல் வேறல்ல. நான் அப்படி நினைக்கவேயில்லை.

பறையர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருப்பதால்தான் சூத்திரர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருக்கிறது. பறையர் என்கிற ஜாதிப் பெயரைவிட சூத்திரர் என்கிற ஜாதிப் பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரீகளில் பதிவிரதைகளும், சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்களுமிருக்கலாம். சூத்திரர்களில் அப்படி யிருக்க இடமேயில்லை. ஏனென்றால் சூத்திரச்சி என்றால் தாசி, வேசி என்றுதான் பொருள். சூத்திரன் என்றால் தாசி மகன், வேசி மகன் என்றுதான் பொருள்.

இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்பந்தம். ஆகையால் என் போன்ற சூத்திரன் என்று சொல்லப்படுபவன் பறையர்கள் என்று சொல்லப்படு வோர்களுக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம் சூத்திரர்கள் என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறல்ல. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்று கிறது.
உங்களைத் தாழ்மையாய் கருதும் ஸ்திரீகளும், புருஷர்களும் தாங்கள் பிறரால் உங்களைவிடக் கேவலமாய் தாழ்மையாய்க் கருதுவதை அறிவதில்லை. அந்நியர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக் கும் அறியாமை யால், தங்களை மற்றவர்கள் தாழ்மை யாய் நினைப்பது தங்களுக்கு ஈனமாய்த் தோன்றுவதில்லை.

இந்த லட்சணத்தில் உங்களிடம் தப்பிதங் கண்டு பிடித்து, உங்கள் உடம்பில் துர்வாடை அடிக் கிறது, நீங்கள் ஸ்நானம் செய்வதில்லை, துணி துவைப்ப தில்லை, மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள், மதுவருந்துகிறீர்கள், இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள். நீங்கள் வேஷ்டி துவைக்காமலும் குளிக்காமலும் இருப்ப தற்கு யார் ஜவாப்தாரி என்பதை அவர் உணருவதில்லை. உங்களுக்குக் குடிக்கவே தண்ணீரில்லையென்றால் குளிப்பதெப்படி, வேஷ்டி துவைப்பதெப்படி? அழுக்கும் நாற்றமும் உங்கள் கூடவே பிறந்ததா என்று கேட்கிறேன்.

குளிக்கவும், வேஷ்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல் மகந்துகள் என்போரையும், சங்கராச்சாரிகள் என்போரையும் கொண்டு வந்து வீட்டிலடைத்து வைத்து விட்டால் அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக்குமா? அவர்கள் உடம்பும் வாயும் நாற்றமடிக்காமலிருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். நாமே ஒருவனைப் பட்டினி போட்டுவைத்து, அவன் இறந்துபோன பிறகு பட்டினியினால் இறந்துபோய் விட்டான் பாவி என்று சொன்னால், யார் பாவி யென்பதை நினைத்துப் பாருங்கள்.

அல்லாமலும், மாடு தின்பதும், மதுவருந்துவதும், நீங்கள் பறையர்களாயிருப்பதற்குக் காரணமென்று சொல்லுவது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக் கொண்டும் மதுவருந்திக் கொண்டும் இருக்கிறவர்கள் தான் இப்பொழுது உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தவிரவும், நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சேர்ந்ததல்ல.

உங்களை மற்றவர்களைப் போல சரியானபடி சம்பாதிக்கவும், தாராளமாய் சாப்பிடவும், தெருவில் நடக்கவும், தாராளமாய் எங்கும் போய் வேலை செய்து சம்பாதிக்கவும் வழியில் லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப் பணத்தில் அதிக ஆகாரம் ஆகக் கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டியதாயிற்று.
மாட்டு மாமிசத்தை அனுமதிக்கும் மதத்தைச் சேர்ந்த மகமதியாரும் கிறிஸ்தவரிலும் கூட சிலர் கைப்பணந் தாராளமாய்க் கிடைப்பதாயிருந்தால் நாங்கள் மாட்டுமாமிசம் சாப்பிடுகிற வழக்கம் இல்லை என்று சொல்லு கிறார்கள்.

ஆதலால், நமது நாட்டார் மாட்டிறைச்சி சாப்பிடுவ தற்குத் தரித்திரந்தான் முக்கியக் காரணம். அல்லாமலும், மாட்டு மாமிசம் சாப்பிடுவது ஆடு, கோழி, மீன், பன்றி இவைகளைவிட என்ன அவ்வளவு அதிகமான பாவமாய்ப் போய்விட்டது. கோழியும், மீனும், பன்றியும் எச்சிலையும், பூச்சு புழுக்களையும், அழுக்குகளையும், மலத்தையும் சாப்பிடுகிறது. இப்படியிருக்க இதைச் சாப்பிடுகிற வட நாட்டு பிராமணர்கள் முதல் தென்னாட்டு சூத்திரர்கள் வரை நல்ல ஜாதியும், தொடக்கூடியவர்களாயு மிருக்கும் போது, புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும், புண்ணாக்கும் சாப்பிடுகிற மாட்டிறைச்சி சாப்பிடுவதனால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான்.
அப்படிப் பார்த்தாலும் மாடு சாப்பிடுகிறவர்களை யெல்லாம் தொடாதே, தெருவில் நடக்காதே, குளத்தில் தண்ணீர் சாப்பிடாதே, ஊருக்குள் குடியிருக்காதே என்று சொல்லுகிறார்களா? இது வீணாய், வேண்டுமென்றே உங்களைத் தாழ்த்தி வைப்பதற்காகச் சொல்லும் ஒரு யோக்கியப் பொறுப்பற்ற காரணமேயல்லாமல் உண்மையான காரணமல்ல என்பதுதான் எனது முடிவு.
மதுவையும், மாட்டு மாமிசத்தையும் தள்ள வேண்டும் என்பதை நான் ஆட்சேபிக்க வரவில்லை. மதுவையும் மாட்டு மாமிசத்தையும் தள்ளினால்தான் உங்கள் ஜாதி உயரும் என்று சிலர் சொல்லும் அயோக்கியத்தனமான காரியத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஜாதி உயருவதற்காக, மதுவையும் மாட்டு மாமிசத்தையும் விடுங்களென்று கேட்க மாட்டேன்.

அதற்காக நீங்கள் விடுவதும் அவ்வளவு அவசியமில்லை. நம் நாட்டில் தென்னை, பனை மரங்களில் ஊறும் கள்ளும், காய்ச்சும் சாராயமும் வெளிநாடுகளிலிருந்து வரும் சாராய தினுசுகளும் சென்னை மாகாணத்தில் மாத்திரம் சுமார் 15, 20 கோடி ரூபாய் பெரும்படியானதை யெல்லாம் நீங்க ளேவா குடித்து விடுகிறீர்கள்? யாராவது நம்புவார்களா? ஒருக்காலும் நம்பமாட்டார்கள். ஆதலால், ஜாதி உயர்வை உத்தேசித்து இவற்றை விட்டு விட வேண்டுமானால் மற்றவர்கள் முதலில் விடட்டும்.

மதுபானம் மனிதனின் ஒழுக்கத்திற்கு விரோதமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். மதுவிலக்குக்காக நானும் சிறிது தொண்டு செய்திருக் கிறேன். ஆனால், ஜாதி உயர்வுக்கு எல்லா ஜாதியாரும் சாப்பிடும் மதுவிலக்கு ஒன்றும் தடை செய்வதில்லை. ஆகையால், மதுவிலக்கும் மாமிச விலக்கும் ஜாதி உயர்வுக்கு அவசியம் என்று சொல்வது வேண்டுமென்றே சொல்லும் பொய். அல்லாமலும் உங்களிடமும் சில குற்றங்கள் இருக்கிறதைச் சொல்லா மலிருக்க முடியவில்லை.

அதாவது, நீங்க ளாகவே உங்கள் ஜாதிக்கு இழிவு சம்பாதித்துக் கொள்ளுகிறீர்கள். அனாவசியமாய் யாரைக் கண்டாலும் சுவாமி என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதை மாற்றிவிட வேண்டும். ஒரு மனிதனைப் பார்த்தால் அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்கிற எண்ணம் உங்கள் மனதில் உதிக்க வேண்டும்.

சுயமரியாதையில் கவனமில்லாத ஜாதியாரை உயர்த்தினாலும் உயராது. அவனவனுக்கே, தான் மனிதன் என்கிற உணர்ச்சி வரவேண்டும். நீங்கள் இனிமேல் யாரையும் சுவாமி  என்று கூப்பிடக் கூடாது. வேண்டு மானால் அய்யா என்று கூப்பிடுங்கள். நீங்களாகவே பதுங்குவதும் ஒதுங்குவதுமான துர்க்குணங்கள் உங்களை விட்டுப் போகவேண்டும். அன்றுதான் நீங்கள் சமத்துவமாக நடத்தப்படுவீர்கள். என்று பேசி முடித்தார்.

---------------------------------------------------காரைக்குடி - சிராவயலில் நடைபெற்ற காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் காந்தி கிணறு திறப்பு விழாவில்  06-04-1926 ந்தேதி - தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு- - "குடிஅரசு" -  25.04.1926

12.5.13

கிருஸ்தவ, முஸ்லீம் மதத்திலும் குறைபாடுகள் உண்டு!இல்லை என்று மறுத்துக் கூற முடியுமா?

மக்களைப் பிரிப்பதே மதம்

ஏன் ஒரு குறிப்பிட்ட மதம், கடவுள், அரசாங்கம் இவைகளை நீங்கள் ஆதரிக்கக் கூடாது என்று உங்களிலே பலர் கேட்கலாம். இந்தப்படியான மதம், கடவுள், அரசாங்கம் முதலியவைகள் அவரவர்கள் கட்சிக்குப் பயன்படுகிறதே தவிர மக்களை ஒழுங்குபடுத்தி அவர்களை அறிவுள்ளவர்களாக்கி, மக்களுக் குள்ளே இருக்கும் உயர்வு தாழ்வுகளை ஒழித்து, எந்தவிதமான சமத்துவத்தையோ, ஒழுங்கையோ, ஒழுக்கத்தையோ நிலை நாட்டவில்லை என்பதால்தான்.

வேறு மதத்தவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. எந்த மதம் எப்படிப்பட்டதாயிருந்தாலும், அந்த மதம் மனித சமுதாயத்தைப் பிரித்து வைத்திருக்கிறது. நம்முடைய மதம் இன்னது என்று கூறிக்கொள்ளத்தான் முடிகிறதேயொழிய, வேறென்ன இவைகளால் லாபம். 

இந்து மதத்தை எடுத்துக்கொண்டால் இன்னும் மோசம். 4 அல்ல 400 அல்ல 4000-க்கும் மேற்பட்ட வகையாக மக்களைச் சாதி பேர் சொல்லி இந்து மதம் மக்களை ஒன்று சேரவொட்டாமல் பிரித்து வைத்திருக்கிறது. ஒரு மதத்திலேயே 1000 கணக்கான சாதிகள்-அதிலே ஒன்று உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்ற நிலையென்றால் இது எப்படி நியாயம் ஆகும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவனுக்குப் பெயர் பிராமணன், மற்றவனுக்குச் சூத்திரன், கடைசியானவனுக்குப் பஞ்சமன் என்ற பட்டம் இவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடாது, தொடக்கூடாது, பார்த்தால், தொட்டால் தீட்டு என்று எழுதி வைத்துக்கொண்டு இந்த 1950ஆம் ஆண்டிலேயும் அதையே நடைமுறையில் செய்கிறார்கள்.

அதுபோலவே கிருஸ்துவ மதத்தை எடுத்துக் கொண்டாலும், நம் நாட்டைப் பொறுத்த வரையில் அது மோசமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தை விட கிருஸ்துவ மதம் பல மடங்கு மேல் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நம் நாட்டைப் பொறுத்தவரையில் இந்து மதத்தைப் போலவே பாப்பாரக்கிருஸ்துவன் என்பது போன்று பல சாதிப்பிரிவுகள் இருந்து கொண்டு, அவைகளின் பெயரால் உயர்வு, தாழ்வு கற்பிக்கப்பட்டும் வருகின்றது.

எவனாவது ஒருவன் இந்து மதத்தை விட்டு கிருஸ்துவமதத்திற்குப் போவானென்றால் இந்து மதத்திலே தனக்கிருக்கும் இழிநிலை, அவைகளிலே போதிக்கப்படும் மூடக் கருத்துக்கள் இவைகள் பிடிக்காமல், அறிவு, நாகரிகம், சமத்துவம் பெறவேண்டு மென்றுதானே கிருஸ்துவ மதத்திற்குப் போயிருப்பான். வேண்டுமானால் சில பார்ப்பனர்கள் இல்லை என்று கூறலாம்.
பணம் கொடுத்து பாவையரைக் காட்டி நம்மவரை மயக்கினார்கள் என்று கூறுவார்கள். அதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் அந்தப்படி பணத்தைக் காட்டி, அவர்களை மதம் மாறும்படி செய்திருந்தால் இப்போதுள்ள கிருஸ்துவர்கள் பணக்காரர் களாய் இருக்க வேண்டும். அப்படி யாரும் பணக்காரர்களாய் இருப்பதாகவும் தெரிய வில்லை.

அல்லது பெண்களைக் காட்டி ஏமாற்றினார்களென்றால் கிருஸ்தவத் தாய் மார்கள் வெள்ளைக்காரப் பெண்மணிகளாக இருக்க வேண்டும். அதுவும் இல்லை. பின் ஏன் கிருஸ்துவ மதத்திற்கு மாறினார்கள் என்று கேட்டால், இந்து மதத்திலே நமக்கு இருக்கும் இழிவு ஒழியும், அறிவு நாகரிகம் வளரும் என்பதால் தான். இன்னமும் நான் கூறுவேன், இந்த நாட்டிற்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் கிருஸ்துவர்கள் தான் என்று.

கிருஸ்துவ ஆங்கிலேயன் இங்கு வராதிருந்தால் நம் மக்கள் இன்றும் நாய்கள், பன்றிகள் நிலையிலேயேதான் காட்டுமிராண்டிகளாய் இருப்பார்கள். அவனால் ஏதோ நமக்கு அறிவு சிறிது வளர்ந்து, இன்று ஓரளவு நாகரிகம் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்தக் கருத்தை எந்தப் பார்ப்பனரிடமும் வாதாடி அவைகளை ஒத்துக் கொள்ளும்படி செய்ய என்னால் முடியும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதத்தில் தங்கள் நலன் கருதி இந்துக்கள் சேர்ந்தாலும், அதிலேயும் சாதிப்பிரிவு இருக்கிறது, ஆகவே தான் அதிலேயும் சீர்திருத்தம் வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

அது போலவே முஸ்லீம் மதமும் இந்த நாட்டு மக்களை எவ்வளவோ சீர்திருத்தி யிருக்கிறது. நம்முடைய நாட்டு மக்கள் அத்தனை பேரும் சமுதாயத்தில் ஒன்று என்று இல்லா விட்டாலும் கூட, முஸ்லீம்களைப் பொருத்த மட்டிலுமாவது, தங்களுக்குள் சாதி பேதம், உயர்வு, தாழ்வு என்பது இல்லாமல் செய்து விட்டார்கள். முஸ்லீம் என்று சொன்னால் அவர்கள் காரியத்திற்கு ஒன்றுபட்டு, கட்டுப்பாடாக இருந்து செயலாற்றும் பண்பு அவர்களுக்கு இருக்கிறது.

ஆகவே கிருஸ்துவ, முகமதிய மதத்தை விட இந்து மதம் மட்டம் என்பதோடு மட்டுமல்ல, அவைகளில் இல்லாத பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள் இந்து மதத்திலே இருக்கின்றன. ஏனென்றால் இதில்தான் பித்தலாட்டத்தையே போதிக்கும் வேத புராண, இதிகாசங்கள் நிறைந்திருக்கின்றன.

அதுமட்டுமல்ல ஆயிரங்கடவுள்கள், அதன் பேரால் ஆபாசமான கற்பனைகள் நிறைந்திருக் கின்றன. அந்தக் கடவுள்கள் உருவ பேதம், குணபேதம், கொண்டு நம்மைவிட மோசமான நிலையிலிருக்கின்றன. பல பெண்டாட்டிகள் உடைய கடவுள், தேவடியாள் வீட்டுக்குச் செல்லும் கடவுள், ஆண்டுதோறும் திருமணம் செய்து கொள்ளும் கடவுள்-ஆக இந்தப் பலரகக் கடவுள்கள் இந்து மதத்தில்தானே இருக்கின்றன.

கிருஸ்தவ மதத்திலும் சில குறைபாடுகள் இருக்கின்றன. முஸ்லீம் மதத்திலும் ஜாதி பேதம், உருவக் கடவுள், ஆபாசக் கடவுள்கள் இல்லை என்றாலும் சில குறைபாடுகள் உண்டு. இல்லை என்று எந்த
முஸ்லீமாவது மறுத்துக் கூற முடியுமா? நல்ல கடவுள்கள் என்றால் பணக்காரன் என்று ஒருவனும், பிச்சை யெடுத்து வாழவேண்டும். என்று மற்றொருவனும் என்று ஏழை பணக்காரனைக் கொண்ட எந்த மதமும்; கடவுளும் உண்மையான மதம் ஆகாது.

ஒருவனுக்குப் பூமி இருக்க வேண்டுமானால் காடுவெட்டி கழனியாக்கிச் செய்திருந்தால் தான் முடியும். அப்படி ஏற்பட்ட சொத்துக்கள் தானே எல்லாவகையான அத்தனையும். அவை ஏன் ஒரு தனி மனிதனிடத்தில் 100 ஏக்கரா 50 ஏக்கரா என்று இருக்க வேண்டும். மற்றவன் வயிற்றுக்கு இல்லையே என்று வாடி இருக்கவேண்டும்.

ஒருவனிடத்தில் ஏன் 2 அடுக்கு, 3 அடுக்கு மாடி வீடுகள் பல இருக்க வேண்டும்; மற்றொருவன் குந்தக் குடிலற்று கதறி அழும் நிலையில் இருப்பது. நாணயமான, யோக்கியமான கடவுள் என்றால் மக்களுக்கு இத்துறையில் இதுவரை செய்ததென்ன? இந்த நாட்டில் எத்தனை பேர் படிப்பற்றவர்கள்? படிக்க வசதியில்லாதவர்கள். இவர்களுக்கு இந்தக் கடவுள் சாதித்ததென்ன?
ஆகவேதான் நாங்கள் கூறுகிறோம் எங்கள் கடவுள், எங்கள் மதம், எங்கள் சாஸ்திரம் என்று ஒவ்வொருவரும் கூறுவதும் அடிப்படையில் ஒன்றுதான், கலரில் தான் வித்தியாசம் இருக்கிறதென்று. ஏன் என்றால் அவைகள் அந்தக் காலத்திலே சரியாக இருக்கலாம். அந்தக்காலத்து மக்கள் அறிவுக்கேற்ற முறையில், அறிவுத்தெளிவு ஏற்படாத அந்தக் காலத்தில் இந்த மாதிரியான காரியங்கள் செய்தார்கள்.

கடவுள்கள் அத்தனையும் நம்முடைய கற்பனைகளே. இந்துக் குழந்தைக்கு இந்துக் கடவுளரைப் பற்றியும், மகமதியக் குழந்தைக்கு மகமதிய கடவுளரைப்பற்றியும், கிருஸ்துவக் குழந்தைக்குக் கிருஸ்துவக் கடவுளைப் பற்றியும் அந்தந்த மதத்தவர்கள் சொல்லிக் கொடுத்துத்தான் தெரிகிறதே தவிர, இயற்கை யிலேயே கடவுள் உணர்ச்சி அக்குழந்தை களுக்கு ஏற்படுவதில்லை.

                           ------------------------------1.4.1950 அன்று வீரகலூர் பொதுக்கூட்டத்த்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து-விடுதலை, 4.4.1950