Search This Blog

27.8.11

கலைத்துறையில் பெரியார்-சுயமரியாதை இயக்கம் செய்தது என்ன?

கலைத்துறையில் பார்ப்பனரல்லாதார் எவ்வளவு பேர் விற்பன்னர்களாக இருந்தார்கள்-பாரீர்!

பெரியார் கொடுத்த பட்டியலைக்காட்டி தமிழர் தலைவர் விளக்கம்

கலைத்துறையில் பார்ப்பனரல்லாத தமிழர்கள் எவ்வளவு விற்பன்னர்களாக இருந்தார்கள் பாருங்கள் என்று குடிஅரசில் பெரியார் தந்த பட்டியலைப் படித்துக் காட்டி விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் 10.8.2011 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய முதல் தொடர் சொற்பொழிவின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: அய்யா மேலும் சொல்லு கிறார்.

சங்கீத கலை அடியோடு அழிந்து போவதே மேல்!

இதை உத்தேசித்தே சில சங்கீத சம்பந்தமான சபைகளில் நாம் பேச நேர்ந்தபோது கூட சங்கீதத்தில் இச்சை வைத்திற்கு ஆகவும் சங்கீதத்தை தொழிலாகக் கொண்டதற்கு ஆகவும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்திற்காக இவ்வளவு கேவலமாயும் இழிவாயும் நடத்தப்படுவதாயிருந் தால் சங்கீதக் கலையே அடியோடு அழிந்து போவதே மேல் என்றும் அதனால் யாருக்காவது ஜீவனத்திற்கு கேடுவருமானால் அப்படிப்பட்டவர்கள் இச்சங்கீதத்திற்கு கருமாதி செய்துவிட்டு ரோட்டில் கல் உடைத்து வயிறு வளர்ப்பதே மேல் என்றும் (சிரிப்பு கைதட்டல்). அய்யா அவர்கள் எவ்வளவு அழகாக சொல்லுகிறார்கள் பாருங்கள். தன்மானத்தைவிட்டுவிட்டு இப்படி இருக்கிறார்களே என்று அய்யா அவர்கள் ஆத்திரப்பட்டு வேகமாக சொல்லுகிறார் பாருங்கள்.
அத்தொழிலும், ஜீவனமும் சங்கீதத்தை விட கவுரவமும் மேன்மையுமான வேலை என்றும் சொல்லி வந்திருக்கிறோம்.

சங்கீத மகாநாட்டில்

ஆகவே, சமீபத்தில் ஈரோட்டில் நடக்கும் சங்கீத மகாநாட்டில் மற்ற சங்கீத மகாநாடுகளைப் போல் சங்கீத சாஸ்திரம் என்பதைப் பற்றி பேசியே காலம் போக்காமல் சங்கீதத்தை கைக்கொண்ட பார்ப்ப னரல்லாத மக்களுடைய சுயமரியாதையை காப்பாற்றும் விஷயத்திலும் அதிகமான கவனம் செலுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

அநேக துறைகளில் அடக்கி வைக்கப்பட்டனர்

நிற்க! இன்றைய தினம் தமிழ்நாட்டில் சங்கீத விஷயத்தில் வாய்ப்பாட்டு புல்லாங்குழல், பிடில், மிருதங்கம், கஞ்சிரா, ஜலதரங்கம், கடம், கொன்னக்கோல், நாதசுரம் முதலிய அநேக துறைகளில் நிகரில்லாதவர்களும் மிக்க விற்பன்னர் களுமாக சுமார் 400, 500 பேர்கள் வரையில் பார்ப்பனரல்லாதார்களில் இருந்தும் அவர்களைப் பற்றிய பெயர்கள் கூட அனேகருக்குத் தெரிய முடியாமல் அடக்கி வைக்கப்பட்டி ருக்கின்றது.

ராமசுப்பிரமணியம் கொடுத்த பட்டியல்

அவர்களில் சிலரின் பெயர்களையும் திரு.ராம சுப்ரமணியம் அவர்கள் கொடுத்த பட்டியல்ப்படி மற்றொரு பக்கத்தில் காணலாம். மற்றப் பெயர்களும் பின்னால் வெளிவரும் என்று சொல்லுகின்றார்.

ஒரு ஆச்சரியம் பாருங்கள். பெரியார் எவ்வளவு பெரிய ஆக்கரீதியான பணியை செய்திருக்கிறார் என்பதை நாம் உணரலாம். கடவுளை மற! என்று சொன்ன தந்தை பெரியார் எவ்வளவு பார்ப்பனரல்லாத மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார் என்பது எத்தனை சமூகத்தார், பார்ப்பனரல்லாதாருக்குத் தெரியும்.

1930இல் குடிஅரசில் உள்ள செய்தி

இதோ பாருங்கள். 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி வந்த குடிஅரசில் வெளி வந்திருக்கின்ற ஓர் செய்தி. பிராமணரல்லாத சங்கீத வித்து வான்களின் பெயர் விலாசங்கள். திரு.இராமசுப்பிரமணியன் அவர்களால் கொடுக்கப்பட்ட பட்டி யல்கள் என்பதை குடிஅரசில் வெளியிட்டிருக்கின்றார். நீலாவதியை திருமணம் செய்து கொண்டவர். ராமசுப்பிரமணியம்-நீலாவதி ராமசுப்பிரமணியம் சுயமரியாதைக்காரர்கள். குடிஅரசில் வெளிவந்ததைப் படிக்கின்றேன்.

வாய்ப்பாட்டு

1. நாயனா பிள்ளை பெரிய காஞ்சீவரம் 2. பஞ்சாப கேசபிள்ளை மலைக்கோட்டை-திருச்சி 3. சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, மாம்பலம்-சென்னை 4. ராஜகோபால் பிள்ளை ராஜவீதி-மன்னார்குடி தஞ்சாவூர் ஜில்லா 5. செல்வரத்தினம் பிள்ளை விளங்கியம்மன் தெரு சிதம்பரம் எஸ்.அய்.ஆர். 6.பொன்னையாபிள்ளை அண்ணாமலை பல்கலைக் கழக சங்கீத உபாத்தியாயர் சிதம்பரம் எஸ்.அய்.ஆர். 7.கலியாணசுந்தரம் பிள்ளை, திருவீழிமிழலை-பூந்தோட்டம் எஸ்.அய்.ஆர். 8. ஸ்ரீமதி பெங்களூர் நாகரத்தினம்-சென்னை 9. திருமதி பெங்களூர் தாயி ராமகிருஷ்ணன் தெரு-சென்னை 10. ராதாகிருஷ்ண பிள்ளை காளையார் கோவில் தெரு, கும்பகோணம் 11.ஸ்ரீமதி கோமளம் சேகாதரிகள் சாரங்கபாணி சந்நிதி கும்பகோணம் 12.ஸ்ரீமதி மீனாட்சி சுந்தரம் சகோதரிகள் சட்டையப்பர் சந்நிதி நாகப்பட்டணம் 13. லஷ்மி ரத்தனம் சேகாதரிகள் 27 கிருஷ்ணன் தெரு, சென்னை 14. பிருந்தா சகோதரி, 8 பை ராகி மடத்தெரு, சென்னை 15. சின்ன பாப்பா மானோஜியப் பாவீதி, தஞ்சாவூர் 16. சௌந்தரம் கீவளூர் ளுஐசு 17. மோஹனாபாய் 42, வெங்கிடாஜல செட்டி தெரு திருவல்லிக்கணி, சென்னை 18. ஜகதாம்பாள் பெரியதெரு, கும்பகோணம் 19.டி.எஸ்.ரங்கம்மாள் திருநெல்வேலி ளுஐசு 20. சௌந்தரவல்லி தெற்கு வீதி, திருவாரூர் ளுஐசு 21. சாரதாம்பாள் சோமேசர் சன்னதி கும்பகோணம் 22.பத்மாவதி பெரிய குற்றாலம், குற்றாலம். 23.சந்தானம் டாட்டர் வடக்கு வீதி மாயவரம் 24.குப்பு அம்மாள் பெரிய காஞ்சிபுரம் 25.சீதாம்பாள் சின்னகடைத் தெரு, திருச்சி 26. ஜானகி அம்மாள் கன்சர் கோட்டை சந்து, தஞ்சாவூர் 27. அம்மாக்கண்ணு பாபநாசம் 28. லலிதாங்கி தங்கசாலைத் தெரு, சென்னை 29. ஐய்யம்மாள் 8 பைராகி மடத்தெரு, சென்னை 30. பவானியம்மாள், சகாநாயக்கன் தெரு, தஞ்சாவூர் 31. பவானியம்மாள் சௌனி செட்டித்தெரு, தஞ்சாவூர் 32. பத்மாவதி அம்மாள் முத்தோஜியப்பா சந்து தஞ்சாவூர் 33. மதுராந்தகம் கண்ணம்மாள் ஜி.டி. சென்னை 34. சௌடய்யா ஸிஸ்டர் ஜி.டி. சென்னை 35. அஞ்சுகத்தம்மாள் கீழவீதி பழனி 36. அம்மாக்கண்ணு கோவை.

புல்லாங்குழல்

திருவாளர்கள்: 1. சுவாமிநாத பிள்ளை தாஸ் தாமால் சந்து, தஞ்சாவூர் 2. ரங்கதாஸ் சேலம் 3. சுப்பையா பிள்ளை சோழபுரம், கும்பகோணம், தாலுகா 4. ராமசாமி பிள்ளை, உறையூர், திருச்சி ளுஐசு 5. டி.செல்வக்கணபதி பிள்ளை திருப்பாம்புரம் பேரளம் ளுஐசு 6. சில்கு பாப்பா கீரனூர், பேரளம் 7. ஸ்ரீமதி ருக்மணி அம்மாள் ஸ்ரீரங்கம், திருச்சி ளுஐசு 8. ராஜமாணிக்கம், டாட்டர் வடக்கு வீதி திருவிடைமருதூர் 9. கோவிந்தசாமி பிள்ளை ஆயி குளத்துமேல் கரை கும்பகோணம் 10. சிவராம பிள்ளை டாட்டர், திருக்கோ கர்னம், புதுக் கோட்டை.

பிடில்

திருவாளர்கள்: 1.கோவிந்தசாமி பிள்ளை கும்பகோணம் ளுஐசு 2.ராஜமாணிக்கம் பிள்ளை, நாகேஸ்வரர் வடக்கு வீதி, கும்பகோணம். 3.மகாதேவ பிள்ளை, சித்தாய் ஆலத்தம்பாடி, ஆத்தம்பாடி 4. சிவவடிவேல் பிள்ளை, சாரங்கபாணி சந்நிதி, கும்பகோணம் 5. சுப்பிரமணிய பிள்ளை, திருவீழிழலை, பூந்தோட்டம் ளுஐசு 6. கிருஷ்ணசுவாமி பிள்ளை, மலைக்கோட்டை, திருச்சி 7. ரத்தின சுவாமி பிள்ளை, தொப்பிள் பிள்ளையார் சந்து தஞ்சாவூர் 8.ராஜகோபால் நாயுடு மதுரை 9.ராமச்சந்திரம் பிள்ளை மேல 2ஆம் வீதி, புதுக்கோட்டை 10. சுப்பிரமணிய பிள்ளை வரதா முத்தையப்பன் தெரு, சென்னை 11. சௌடய்யா மைசூர் 12. தாயப்பா பெங்களூர் 13. வெங்கிட கிருஷ்ண நாயுடு விஜய நகரம் (விசாகபட்டினம்) 44, பரமசிவம் பிள்ளை திருச்சி 15. கோவிந்தசாமி பிள்ளை, ராஜமன்னார்குடி 16. ராதாகிருஷ்ண பிள்ளை ஆலங்குடி நீடாமங்கலம் 17. பாலு பிள்ளை வடக்கு வீதி, மாயவரம் 18. வெங்கடாசலம் பிள்ளை, தெற்கு வீதி தஞ்சாவூர் 19. டி.சுப்பரமணியபிள்ளை பாரிஸ் வெங்கிடாசல அய்யர் தெருவு.

மிருதங்கம்

திருவாளர்கள்: 1. அழகநம்பி பிள்ளை, கும்ப கோணம் 2. குப்புசாமி பிள்ளை, குற்றாலம் 3. தக்ஷிணாமூர்த்தி பிள்ளை, புதுக்கோட்டை 4. வேணுநாயக்கர் திருவல்லிக்கேணி, சென்னை

5. முத்தய்யா பிள்ளை, பழனி 6. மகாலிங்கம் பிள்ளை, பந்தமாணிக்கப்பா சந்து, தஞ்சாவூர் 7. சிவவடிவேல் பிள்ளை, குற்றாலம் 8. பீதாம்பர தேசாயி, திருவல்லிக்கேணி, சென்னை 9. சுப்பிரமணியபிள்ளை, பழனி, 10.ராமதாஸ் ராவ், பெத்தபெருமாள் சந்து தஞ்சாவூர், 11. கிருஷ்ணபிள்ளை தொப்பிள் பிள்ளையார் சந்து, தஞ்சாவூர் 12. பைரவம்பிள்ளை, தஞ்சாவூர் 13. வேணு செட்டியார் சக்கிரபாணி சந்நிதி, கும்பகோணம் 14. தக்ஷிணாமூர்த்தி ஆச்சாரி, இடைத்தெரு, திருச்சி 15. சாமிநாதபிள்ளை, வடக்கு 2ஆம் வீதி புதுக்கோட்டை 16. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் ஜில்லா 17. துரைசாமி பிள்ளை, பள்ளத்தெரு, மதுரை 18. திருவேங்கிட நாயுடு, மதுரை 19. ராஜு நாயுடு, மதுரை 20. பக்கிரியா பிள்ளை, சாரங்கபாணி நாயுடு வடக்கு மடவிளாகம், கும்பகோணம் 21. ஸ்ரீமதி ரெங்கநாயகி, திருக்கோகர்கனம், புதுக்கோட்டை 22. ராமய்யா பிள்ளை கட்டளைத் தெரு, திருநெல்வேலி 23. அப்பாயிநாயக்கர் மடப்புரம், திருவாரூர் 24. அப்பண்ணா ராவ் மடப்புரம், திருவாரூர் 25. கோவிந்தசாமி பிள்ளை, ராஜவீதி, ராஜமன்னார்குடி, 26. கோவிந்தசாமி பிள்ளை காளிபண்டாரத் தெரு, குறநாடு, மாயவரம் 27. நடேச பிள்ளை, கீழவீதி, மாயவரம் 28. நாகராஜ பிள்ளை மனோஜியப்பா வீதி, தஞ்சாவூர் 29. பாலுபிள்ளை, தெற்கு ராஜ வீதி, தஞ்சாவூர் 30. நடேச பிள்ளை விளங்கியம்மன் தெரு, சிதம்பரம் 31. மருதமுத்து பிள்ளை பைராகி கோவில் தெரு, சென்னை 32.சத்திவேலு பிள்ளை, திருவல்லிக்கேணி, சென்னை 33. நாகராஜ பிள்ளை முத்தோஜிய்ப்பா சந்து தஞ்சாவூர் 34. ரெங்கசாமி நாயுடு மடப்புரம் திருவாரூர் 35. நடேச பிள்ளை பள்ளித்தெரு, மதுரை 36.மீனாட்சிசுந்திரம் பிள்ளை, நீடாமங்கலம்,

கஞ்சிரா

1. தெட்சிணாமூர்த்தி பிள்ளை, புதுக்கோட்டை 2. பஞ்சாப்பகேச பிள்ளை, மலைக்கோட்டை, திருச்சி 3. முத்தையா பிள்ளை பழனி, 4. வேணு நாயக்கர், திருவல்லிக்கேணி, சென்னை

5. பார்த்தசாரதி, திருவல்லிக்கேணி சென்னை 6. வேதாசலம் பிள்ளை, காஞ்சிபுரம், 7. குருசாமி பிள்ளை, கீழவீதி, மாயவரம் 8. வைத்தினாத பிள்ளை, விளங்கியம்மன் தெரு, சிதம்பரம். 9.ராமய்யா பிள்ளை, கட்டளைத் தெரு, திருநெல்வேலி 10. செல்வரத்தினம் பிள்ளை விளங்கியம்மன் தெரு, சிதம்பரம்.

ஜலதரங்கம்

திருவாளர்கள்: 1. ரமணீய செட்டியார் 17, தாதா முத்தையப்பன் தெரு, சென்னை 2. நாராயணசாமி பிள்ளை, உறையூர் திருச்சி 3. கண்ணுச்சாமி பிள்ளை திருவழுந்தூர், மாயவரம் 4. ராஜாயி அம்மாள், இளமையாக்கினார் வீதி, சிதம்பரம்.

கதை

திருவாளர்கள்: 1. ஸ்ரீமதி எம்.கனகாம்புஜம், திருக்கோகர்னம், புதுக்கோட்டை 2. மாணிக்கம் க்ஷ க்ஷ 3. விஷ்ணுபுரம் பாப்பா, விஷ்ணுபுரம், இரவாஞ்சேரி, போஸ்டு, பூந்தோட்டம் 4. பத்மாசானிபாய் சென்னை, 5. துரைக்கண்ணுபாய், கீழ வீதி, மாயவரம் 6. ஸ்ரீமதி பன்னிபாய் சென்னை, 7. ஸ்ரீமதி பத்மாவதி பாய், முத்தோஜியப்பா சந்து, தஞ்சாவூர் 8. வாலாம்பாள் எல்லையம்மன் கோவில் தெரு, தஞ்சாவூர் 9. தனம் தெற்கு வீதி, தஞ்சை 10. ஞானாம்மாள் விளங்கியம்மன் தெரு, சிதம்பரம் 11. பஞ்கஜத்தம்மாள் சகோதரி விளங்கியம்மான் தெரு சிதம்பரம் 12. சுந்திரமூர்த்தி ஓதுவர் கட்டளைத் தெரு, திருநெல்வேலி 13. லட்சுமி காந்தா ஜி.டி.சென்னை 14. சித்திரகவி சிவராம பாகவதர், சாமநாத குளக்கரை, தஞ்சாவூர் 15. பட்டணம் அம்மாள் டாட்டர் தெற்கு வீதி தஞ்சாவூர் கடம்திருநாராயண பிள்ளை சிக்கல்.

டோலக்

திரு. வேணுசெட்டியார், சக்கிதரபாணி சந்நிதி கும்பகோணம்.

நாதசுரம்

1. ராஜரெத்தினம் பிள்ளை, திருவாவடுதுறை, 2.வீறாசாமி பிள்ளை, திருவிடைமருதூர், 3.சின்னதம்பி பிள்ளை சகோதரர்கள், கீரனூர் 4.சுப்பிரமணியம் சகோதரர்கள், திருவீழிமழலை, புந்தோட்டம் 5. அங்கப்ப பிள்ளை, பெரம்பலூர் 6.சுப்பிரமணிய பிள்ளை, திருவெண்காடு 7.சே.கோவிந்தசாமி பிள்ளை சகோதரர்கள், மாயவரம் 8. வைத்தியநாத பிள்ளை, சிதம்பரம் 9. நடேச பிள்ளை, திருச்சி 10. பழனிசாமி பிள்ளை, புதுக்கோட்டை 11.பஞ்சாபகேச பிள்ளை 12.சுந்தரேச பிள்ளை, லால்குடி, (ஞ.டீ), திருச்சி 13.வேலுபிள்ளை ஐயம்பேட்டை, தஞ்சாவூர் 14. சுப்பையா பிள்ளை, பெருமாள் சந்நிதி, ஸ்ரீரங்கம் 16. முத்துக்குமாரசாமி பிரதர்ஸ், திருக்குவளை.
கொன்னக்கோல்
திரு.பக்கிரியா பிள்ளை, ராஜவீதி, மன்னார்குடி.

வீணை

1. ஸ்ரீமதி சரஸ்வதி அம்மாள் மேலைக்கோபுரவாசல்-மதுரை, 2. ஸ்ரீமதி தனம்மாள், 27. ராமகிருஷ்ணன் தெரு, சென்னை 3. திரு.டி.லெஷ்மண் பிள்ளை, திருவனந்தபுரம். என்று இப்படி யார் யார் எதில் வித்வான்களோ பார்ப்பனரல்லாதார் அவ்வளவு பேரையும் ஒரு கேட் லாக் மாதிரி அய்யா அவர்கள் போட்டி ருக்கின்றார்.

சுயமரியாதை இயக்கம் இதைத்தான் செய்தது

சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்களே இதைத்தான் சுயமரியாதை இயக்கம் செய்தது. பார்ப்பனரல்லாத மக்களுக்கு நல்வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தது. இன்றைய இளைய தலைமுறையினர் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


ஏனென்றால் இன்றைய தலைமுறையினர் என்ன நினைக்கிறார்கள் என்றால் பார்ப்பனர்களைப் பற்றிப் பேச இப்பொழுது என்ன இருக்கிறது? இன்றைக்கு யார் இருக்கிறார்கள் பார்ப்பனரல்லாதார் வந்துவிட்டார்களே என்று சொல்லு கின்றார்கள்.

கொஞ்சம் அசந்தால் நொடிப் பொழுதில் மாறிவிடும்

இந்த நிலை ஒரு நொடிப்பொழுதில் மாறிவிடும். இப்பொழுது சமச்சீர் கல்வியிலிருந்து எல்லாவற்றையும்பார்த்தோம் அல்லவா? கொஞ்சம் அசதியாக இருந்தால் மறுபடியும் குலக்கல்வித் திட்டம் வந்துவிடும்.

இவை அத்தனையும் கண்மூடி கண் திறப் பதற்குள் பழைய நிலைக்கு வந்துவிடு. அதற்கு ஆதிக்க சக்திகள், ஊடகங்கள் தயாராக இருக்கின்றன. அதற்காக அவர்கள் இஷ்டத்திற்கு அறிவியல் விஞ்ஞானத்தையே பயன்படுத்து கின்றார்கள். நம்மாட்களும் அதற்கு பலிகடாவாக ஆகிறார்கள். தமிழர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள்.

கம்பனுக்கு விழாவா?

கம்பன் விழாவை யார் நடத்துகிறார்கள்? பார்ப்பனர்கள் நடத்துவதில்லையே. கம்பன் கழகத்தை யார் நடத்துகிறார்கள்? எத்தனை பேர் புலவர் குழந்தையைப் பாராட்டுகிறார்கள்.

இராவண காவியத்தை அல்லவா பாராட்ட வேண்டும்

இலக்கியத்திற்காக ஒருவன் பாராட்ட வேண்டும் என்றால் இவர்கள் கம்பனை எவ்வளவு பாராட்டுகிறார்களோ அதற்குமேல் புலவர் குழந்தையையும் அவரது இராவணகாவியத்தையும் பாராட்ட வேண்டுமா இல்லையா? (கைதட்டல்). நம் எதிரே பேசட்டுமே. நமது புலவர்களை விட்டு வாதிடுவோம். கம்பராமாயணத்தைவிட புலவர் குழந்தை அற்புதமாகப் பாடியிருக்கின்றாரே. அவர் தன்மானத்தை உண்டாக்கப் பாடியிருக்கின்றார்.

ஆகவே, நண்பர்களே இந்த செய்திகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நாம் சொன்னோம். ஒன்று தெரிகிறது. இந்த சொற் பொழிவுகள் மூன்று நாளைக்குள் முடியுமா என்பது சந்தேகம். அங்கங்கே தொட்டுக்காட்டியிருக்கின்றோம்.


மற்றவர்களை பெரியார் எப்படி பாராட்டியிருக்கிறார்

அண்ணா அவர்கள் எவ்வளவு பெரிய புரட்சியை உண்டாக்கினார். நடிகவேள் ராதா எவ்வளவு பெரிய புரட்சியை உருவாக்கியிருக்கிறார் என்பதைச் சொல்லுவோம். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி ஆகியோ ருக்கு இந்த இயக்கம் எவ்வளவு ஆதரவு காட்டியது. இசை அரசு, தண்டபாணி தேசிகர், இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் இவர்களை எல்லாம் பெரியார் பாராட்டியிருக்கின்றார். ஆச்சரியமாக இருக்கும்.

வைதீகப் பாட்டைத்தானே பாடினார்கள் என்பதற்காக பெரியார் யாரையும் வெறுத்ததில்லை. மதுரை சோமசுந்தரம் போன்றவர்களைப் பாராட்டியிருக்கின்றார்.

நம் மக்களைத் தூக்கி நிறுத்த ஆசைப்பட்டார்

அய்யா அவர்களுக்கு என்ன கவலை? பார்ப்பனரல்லாத மக்கள், திராவிடர்கள், தமிழர்கள் எல்லா துறைகளிலும் தன்மானம் பெற்று உரிமை பெற வேண்டும் என்று விரும்பினார். தகுதி இருந்து, திறமை இருந்து ஆற்றல் இருந்து தன்மானத்தை இழந்திருக்கிறார்களே இவர்களை எல்லாம் தன்மானத்தோடு தூக்கி நிறுத்த வேண்டும் என்று அய்யா அவர்கள் நினைத்தார்கள்.
ஆகவே பெரியாருடைய கண்ணோட்டம் சுயமரியாதைக்கண்ணோட்டம்தான் என்பதை எடுத்துச் சொல்லி நாளை உரை தொடரும், இன்றைக்கு மழையையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு பேர் இந்த நிகழ்ச்சிக்கு வந்தமைக்காக நன்றியைக் கூறி விடைபெறுகிறேன்.


-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-------------------------- “விடுதலை” 27-8-2011

இதற்கு மேலும் கட வுளா? பக்தியா? சிந்திக்க வேண்டாமா?



சென்னை ஜாபகர்கான் பேட்டையில் ஒரு நிகழ்வு... பக்திப் போதையில் சுருண்டு கிடக்கும் மக்களைக் கண் திறக்கச் செய்வதாகும்.
கடவுள் பக்தி, ஒழுக் கத்தை வளர்க்கும்; கடவுள் பயம் குற்றம் செய்யும் உணர்வை அச்சுறுத்தி அடக்கி வைக்கும். பக்தி இல்லாவிட்டால் தனி மனி தனுக்கும் சரி, சமூகத்துக்கும் சரி ஹானி விளைவிக்கும் என்று சங்கராச்சாரியி லிருந்து ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள்வரை உப தேசமும், உபந்நியாசமும் அன்றாடம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

பார்ப்பன நாளேடுகள் ஒவ்வொரு நாளும் நடக் கும் ஆன்மிகச் சொற் பொழிவுகளின் அட்ட வணைகளையும் வெளி யிடுவதைக் கடமையாகக் கொண்டுள்ளன.

அதேநேரத்தில், ஆன் மிகப் போர்வையில் நடக்கும் ஆபாசங்களை அத்து மீறல்களை, அநியாயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவராமல் கழுத்தை நெரித்துக் கொன்று விடுகின்றன. இதன்மூலம் ஆன்மிகத்தை அக்குளில் வைத்துப் பாதுகாப்பதாக நினைப்பு.

இதனையும் தாண்டி தான் சென்னை ஜாபகர் கான் பேட்டையில் நடை பெற்றுள்ள ஒரு நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதில் கதாநாயகன் ஒரு அர்ச்சகப் பார்ப்பான் - அவன் பெயர் ராமகிருஷ்ணன். இரவு நேரத்தில்கூட அல்ல - பட்டப் பகல் மணி 11.45.

அடுக்ககத்தின் மூன்றாவது மாடியில் உள்ள மாதவியம்மாள் வீட்டுக்குச் சென்றான். இவன் ஏற்கெனவே அறிமுகமானவன் என்பதால், அவனை வர வேற்று, சமையல் அறைக்குள் தேநீர் தயாரிக்கச் சென்றுள்ளார். அவனும் சமையலறைக்குள் நுழைந்து இருக்கிறான். சற்றும் எதிர்பாராத மாதவி வெளியே போகுமாறு கூறி யிருக்கிறார்.

உடனே என்ன செய்தான்? கத்தியை எடுத்து மிரட்டி அந்தப் பெண்ணி டம் இருந்த நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளான்.

தொடக்கத்தில் நகைகளைக் கொடுக்கத் தயாராக இருப்பதுபோல பாவனை காட்டி, திடீ ரென்று இரண்டு கைகளாலும் அவனை மடக்கிப் பிடித்து உதவிக்கு வருமாறு கூச்சல் போட்டுள்ளார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். அந்த அர்ச்சகப் பார்ப்பானோ தப்பித்து ஓடினான். ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டின்மீது ஓடியதால், அது உடைந்து, கீழே விழுந்து அவன் விலா எலும்பும், கால் எலும்பும் முறிந்து போயின. காவல்துறை வழக்கைப் பதிவு செய்துள்ளது.

அர்ச்சகப் பார்ப்பானே திருடுகிறான்; அர்ச்சகப் பார்ப்பானே கோயிலுக்கு வரும் பெண்களை கோயில் கருவறைக்குள் வைத்து காமவேட்டை ஆடுகிறான். சங்கராச்சாரியாரே கொலை குற்றவாளியாகத் திரிகிறார்.

சாமியார்களே நடிகைகளோடு சல்லாபம் அடிக்கிறார்கள். பகவான் பாபா அறையைத் திறந்து பார்த்தால் பட்டுப் புடவைகளும், லேடீஸ் பேக்குகளும் குவிந்து கிடக்கின்றன.

இதற்கு மேலும் கட வுளா? பக்தியா? சிந்திக்க வேண்டாமா?

--------------- மயிலாடன் அவர்கள் 24-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

********************************************************************


சென்னை மாகாணத் தில் சர்க்கார் உத்தியோகங்களுக்காக ஏற்படுத்தியிருக் கும் வகுப்பு வாரி பிரதிநிதித் துவம் என்பது சர்க்கார் உத்தரவாக மாத்திரம் இல்லாமல், சர்க்கார் சட்டத்திலேயே ஒரு விதியாகக் குறிக்கப்பட வேண்டுமென்று, இந்த மாநாடு தீர்மானிக்கிறது. தற்போதுள்ள வகுப்பு வாரி பிரதிநிதித்துவ எண் ணிக்கை திராவிடர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்கும் மிகவும் குறைவாக இருப் பதால் ஜனசங்கியைக்கு ஏற்றபடி அவ்விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென் றும் அவ்விகிதப்படி உத்தி யோகங்கள் அடையும் வரை அதிகமாகப் பிரதிநிதித்துவம் அடைந்திருக்கும் கூட்டத்தாருடைய நியமனம் நிறுத்தி வைக்கப்படவேண்டுமென்றும் சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது. இந்த முறை அகில இந்திய சர்க்கார் உத்தியோகங்களிலும் கையாளப்பட வேண்டுமென்று தெரிவித்துக் கொள்வதுடன் வரப் போகும் சீர்திருத்த சட்டத் திலேயே இவை குறிக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக் கிறது.

- இதே நாளில் (1940) திருவாரூரில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக் கட்சி) 15 ஆவது மாகாண மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் மேலே காணப்படுபவை.

71 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு தொலை நோக்கோடு இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளன என்பது கவனிக்கத் தக்கதாகும்.

இட ஒதுக்கீடு வெறும் ஆணையாக இல்லாமல் சட்ட மாக ஆக்கப்பட வேண்டும் என்ற கருத்து1994 ஆம் ஆண்டில் (டிசம்பர் 31) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களால் தொகுத்து அளிக்கப் பட்ட 31(சி) மூலம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற் றப்பட்டது. (தமிழ்நாடு சட்டம் 45/1994) 76ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் நாடாளு மன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. அதே போல மத்திய அரசுத் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பது திருவாரூர் மாநாடு நடந்து முடிந்த 50 ஆண்டுகளுக்குப்பின் திராவிடர் கழகத்தின் அரிய முயற்சியால், கழகத் தலைவரின் திட்டமிட்ட அறி வார்ந்த செயல்முறைகளால், நல்வாய்ப்பாக இந்தியத் துணைக் கண்டத்துக்கு வாராது வந்த மாமணியாய், வான் மழையாய் வந்து சேர்ந்த பிரதமர் வி.பி.சிங் அவர்களின் சமூக நீதி உணர்வால் (1990 ஆகஸ்ட் 7) நாடாளுமன்றத்தில் அறி விக்கப்பட்டது.

மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்கிற பரிந் துரையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி, இந்த சாதனை நிகழ்த்தப் பட்டது என்பது கல்லின் மேல் எழுத்தாகும்.

நீதிக்கட்சி என்ன செய்தது? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கரிக்கோடு கிழிக்கும் வீடணர்கள் இந்த வரலாற்றை யெல்லாம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கழகப் பிரச்சாரகர்களும், மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அழுத்த மாக இவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

---------------- மயிலாடன் அவர்கள் 25-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

தமிழில் அர்ச்சனை என்பது விதண்டாவாதமா?இரட்டை வேடம் ஏன் தினமணியே?


இரட்டை வேடம் ஏன் தினமணியே?

நல்ல சட்டமாகத்தான், சத்தமாகத்தான் பேசுகிறார் தினமணி ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர்வாள்.

திண்டிவனத்துக்கு அடுத்த மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமி கள் தமிழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மிகவும் வக்கனையாகவே பேசியுள்ளார்.

தமிழ் வேறு, சைவம் வேறு என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசி யம் இல்லை. இரண்டும் ஒன்றோடு பிணைந்து நிற்பவை. தமிழையும், சைவத்தையும் வளர்ப்பதற் காக ஏற்பட்டவைதான் சைவத் திருமடங்கள். தமிழ் மட்டுமே ஒரு கட வுள் மொழி என்று தமிழ் மொழிக்கு ஒரு தனிச் சிறப்புண்டு.

இறைவனைக் கடவுள் என்று குறிப்பிட்டு ஆண்ட வனுக்குக் காரணப் பெயர் சூட்டிப் போற்றிய மொழி நமது தமிழ் மொழி மட்டுமே. ஆழ்வார்களும், நாயன்மார் களும் தமிழை வளர்த் தார்கள்

என்று சாங்கோ பாங்க மாகப் பேசி இருக்கிறார் தினமணி ஆசிரியர்வாள் (தினமணி 20.8.2011, பக்கம் 6)

இதே தினமணியில் இரண்டு நாள்கள் கழித்து (22.8.2011) கருத்துக் களத்தில் எதை இடம் பெறச் செய்துள்ளார்? சென்னை அண்ணாநகர் கிழக்கு என்ற முகவரியோடு லா.சு. ரங்கராஜ அய்யர்வாள் என்ன எழுதியிருக்கிறார்?

தமிழில்தான் அர்ச்சனை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போன்ற விதண்டாவாதக் கொள்கைகளும் மறுபரிசீலனைக் குரியவை - என்று
எழுதி இருக்கிறார்.

தமிழ் மட்டுமே கடவுள் மொழி என்று தினமணி ஆசிரியர் கூறிய கூற்று 20 ஆம் தேதியதினமணியில் இடம் பெறுகிறது - அப்படிக் கூறுவது விதண்டா வாதம் என்று 22 ஆம் தேதி தினமணி கூறுகிறது.

ஏனிந்த இரட்டை வேடம்? யாரை ஏமாற்ற இந்த இரட்டை வேடம்?

தமிழும் கடவுளும் ஒன்றே என்று ஆகிவிட்ட பிறகு அந்தத் தமிழில் வழிபாடு நடத்தக் கூடாதா? அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார் என்று சேக்கிழார் எழுதி இருப்பதெல்லாம் பிரமாதம்தான்.

ஆனால் அது ஏட்டுச் சுரைக்காய்தானா? தமிழில் அர்ச்சனை என்பது விதண்டாவாதம் என்று தினமணி கூறுகிறதே.

சிதம்பரம் நடராசன் கோயில் சைவக் கோயில் தானே? சைவமும், தமிழும் வேறு வேறு அல்ல என்று கூறும் திருவாளர் வைத்திய நாதய்யர்வாளே!

திருவாசகத்துக்கு உருகாதார் வேறு எதற்கும் உருகார் என்று சொல்லப் படும் அந்தத் திருவாசகத் தைத்தானே ஓதுவார் ஆறுமுகசாமி என்ற பக்தர் - முதியவர் சிதம்பரம் சிற்றம்பலத்தில் பாடினார்?

அவருக்குக் கிடைத்த பரிசு என்ன? அடி உதை தானே! ஒரு முறையா, இருமுறையா? பலமுறை உதைபட்டுள்ளாரே!

அந்தத் தில்லைக் கூத் தாடிதான் ஓடி வந்து தடுத் தாரா? அல்லது இந்தத் தினமணிதான் கண்டித்து எழுதிற்றா?

தினமணி ஆசிரிய ரின் குருநாதர் திருவாளர் சோ ராமசாமி அய்யரும் என்ன எழுதினார்?

மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்ற தலைப் பில் துக்ளக்கில் (18-11-1998) தலையங்கமே தீட்டித் தள்ளினாரே.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ் கிருதத்தில் மொழி பெயர்த் தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும், பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருதத் துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும். புனிதம் இருக் காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு என்று எழுதவில்லையா?

அர்ச்சனை செய்ய ஸம்ஸ்கிருதத்திலிருந்து தான் மொழி பெயர்க்க வேண்டும் என்று யார் சொன்னார்? தமிழில் அர்ச் சனைப் பாட்டு இல்லையா? அர்ச்சனைப் பாட்டேயாகும் என்று சேக்கிழார் எழுதி யுள்ளதன் அர்த்தம் என்ன?

ஒலிக்குத்தான் முக்கி யத்துவமாம். இது கடவுளையே கொச்சைப்படுத்து வது ஆகாதா?

அப்படிப் பார்க்கப் போனால் ஸம்ஸ்கிருத மொழியின் ஒலியைவிட தமிழின் ஒலி இசை அருவி போன்றதல்லவா?

அடி வயிற்றிலிருந்து மாரிக்காலத் தவளை போல கத்துவதுதானே ஸம்ஸ் கிருதம்?

அருட்பா பாடிய வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் என்ன கூறு கிறார்?

இடம் பத்தையும், ஆர வாரத்தையும், பிரயாசத்தையும் பெருமறைப்பையும் உண்டு பண்ணுகிற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது. பயிலுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வளத்தாற் கிடைத்த தென்மொழி யொன்ற விடத்தே மனம் பற்றச் செய்து அத்தென் மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளுவீர்

என்கிறார் வடலூரார்.

(திருவருட்பா 6 ஆம் திருமுறை - வசன பாகத் தில் சத்தியப் பெருவிண் ணப்பம் என்ற தலைப் பின் கீழ் வருவது)

இரட்டை வேடம் ஏன் தினமணியே?


----------------------- “விடுதலை” 24-8-2011

26.8.11

பேரறிவாளன், சின்ன சாந்தன், முருகன் தூக்குத் தண்டனை-சட்டவிதிகளைவிட மனிதநேயம் முக்கியம்


முதல் அமைச்சர் இதில் முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புண்டு

சட்ட விதிகளைவிட மனிதநேயமே முக்கியம்

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோர் மீதான தூக்குத் தண்டனை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள சட்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டும் அறிக்கை வருமாறு:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை, அளிக்கப்பட்ட மூன்று பேர்களான பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ரத்து செய்து கருணை காட்ட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கை - மனித உரிமை அமைப்புகள், மனிதநேயர்கள் அனைவரது (மக்கள்) சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஆகும்.

கருணை மனுவை நிராகரித்தது ஏன்?

இதனை ஏற்கெனவே பதவியிலிருந்த இரண்டு குடிஅரசுத் தலைவர்கள் நிராகரிக்காமல் வைத்திருந்தனர். இப்போது மூன்றாவதாக வந்துள்ளவர் (உள்துறை அமைச்சகத்தின் கருத்துப்படி) நிராகரித்து விட்டதோடு, அந்த ஆணையினை வேலூர் மத்திய சிறைச்சாலைக்கும் அனுப்பியுள்ளார். இதனால் விரைவில் அவர்களது தூக்குத் தண்டனையை நிறைவேற்றிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் நிலையில், இக்கடைசி நிமிடத்தில்கூட அத்தண்டனையை நிறுத்தி, மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை வட இந்தியத் தலைவர்களாலும்கூட வற்புறுத்தப்படுகிறது. இதில் மனிதநேயம் பொங்கி, மனிதாபிமான அணுகுமுறை காட்டப்படல் வேண்டும் என்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இம்மூவரும் சுமார் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளனர். இதுவே ஓர் ஆயுள் தண்டனைக் காலமாகும். தூக்குத் தண்டனையை ஏற்பதைவிட மிகவும் கொடூரமான சித்ரவதையாகும். இதை எண்ணிப் பார்க்க ஏனோ தவறியது குடிஅரசுத் தலைவரின் முடிவு. இதுபற்றி காங்கிரஸ் கட்சி தவிர தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள், அமைப்புகள், தமிழ் இன உணர்வாளர்கள், மனிதநேய அடிப்படையில் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைத்துள்ள நிலையில், அவர்களது கருணையும், மனிதாபிமானமும் இந்த மூவர் விஷயத்தில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.

முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்

மற்ற பல்வேறு செய்திகளில் அணுகுமுறை, முடிவுகளில் முதல் அமைச்சரிடம் நாம் மாறுபட்ட நிலையிலும், வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் முதலிய அனைவருக்கும் அவர் இப்போது முதல் அமைச்சர் என்ற முறையில் கருணை காட்டுவதை - கடமையாகக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நாமும் வலியுறுத்துகிறோம்.

அடுத்து, சட்டரீதியாகவே இவர்கள் மூவர் விஷயத்தில் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கின் பல்வேறு சட்ட அம்சங்கள் உள்ளன என்பதால், நீதிமன்றங்களிலும்கூட அரசு சார்பிலேயே ஆலோசனைகள் வழங்க இடம் உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் நடைமுறை

எடுத்துக்காட்டாக,
இந்த மன்னிப்பு - கருணை வழங்கும் விதிகள் இந்திய அரசியல் சட்டத்தில் புகுத்தப்பட்டதே, பிரிட்டிஷ் பாராளுமன்ற, நடவடிக்கைகள் - விதிகள் - அங்குள்ள நீதிமுறைகளின் அடிப்படையில் என்பது விவரம் தெரிந்த அனைவரும் அறிந்த ஒன்று.

1907இல் இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சர் (Home Secretary என்று அழைக்கப்பட்டவர்) ஹெர்பட் கிளாட்ஸ்டன் அவர்கள் பிரிட்டனின் அவுஸ் ஆஃப் காமன்ஸ் என்ற மக்கள் அவையில், இந்த மன்னிப்பு வழங்குதல், கருணை காட்டுதல் சம்பந்தமான விதிகளின் பயன்பாடு பற்றி விளக்குகையில், குறிப்பிட்டார். அது சட்டப் புத்தகங்களிலும் வெளியாகியுள்ளது.

Earlier in 1907, Herbert Gladstone, Home Secretary, in a speech in the House of Commons, emphasised that numerous considerations are relevant and that the exercise of the prerogative does not depend in principles of strict law and justice, still less of sentiment. “It is a question of policy and judgment in each case, and in my opinion, a capital execution which in the circumstances, creates horror and compassion for the culprit rather than a sense of indignation at his crime is a great evil.”

1907 ஆம் ஆண்டிலே இங்கிலாந்து நாட்டின் உள்துறைச் செயலாளர் ஹெர்பர்ட் கிளாட்சன் பொது மக்கள் அவையில் (House of Commons) பேசும்போது, இதில் பல்வேறுபட்ட விஷயங்கள் பரிசீலனை செய்யப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என்பதையும், முடிவு எடுக்கும் அதிகாரத்தை பயன்படுத்துவது நீதி மற்றும் சட்டக் கொள்கைகளையே சார்ந்திருப்பது அல்ல என்பதையும், அதைவிட மன உணர்வுகளை சார்ந்திருப்பது மிகவும் குறைவானதே என்பதையும் வலியுறுத்தினார். ஒவ்வொரு வழக்கிலும் அடங்கியிருப்பது கொள்கை மற்றும் மதிப்பீடு பற்றிய ஒரு கேள்வியேயாகும். மரண தண்டனை என்பது அதன் சூழ்நிலைகளில் பெரும் பீதியைக் கிளப்புவதே என்பதும், அவரது குற்றம் மிகப் பெரும் கொடுமையானது என்று குற்றம் சாட்டுவதை விட, கருணை காட்டுவதே சிறந்தது என்பதும் எனது கருத்தாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமல்ல, நமது இந்திய சட்டக் கமிஷன் அறிக்கைகளில்கூட இந்தக் கருணை காட்டுதலில் பல்வேறு முக்கிய அம்சங்களைக் கணக்கில் எடுத்த பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது (1967) Vol I, பக்கங்கள் 317-18.

கொலைக் குற்றம் புரிந்து தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பவர்கள்.

(1) ஏற்கெனவே திட்டமிட்டு பேசினர். Pre-meditation

(2) அவர்களது வயது

(3) அவர்களது மனது, உடல் நிலை,

(4) அவர்களது பழைய வரலாறு பழைய குற்றவாளியா என்பன

(5) வெளியே இருந்துவந்த நிர்பந்தச் சூழ்நிலை.

இத்தகைய அம்சங்களையெல்லாம்கூட ஆய்வுக்கு எடுத்து பரிசீலிக்கப்பட்டுத்தான் இறுதி முடிவு (நிராகரிப்பது போன்ற) வர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மேலவை கருணை அப்பீலை முடிவு செய்யுமுன்பு, உள்துறை அமைச்சகம், இந்த வழக்கில் சரியாக, முறையாக விசாரிக்கப்படாமல் உள்ளது என்ற ஒரு துளிசந்தேகம் ஏற்பட்டாலும், ஜூரிகள் (அங்கு ஜூரிகள் முறை உண்டு) குற்றவாளி என்று தீர்ப்பளித்துத் தூக்குத் தண்டனையை பரிந்துரை செய்து ஏற்ற நிலையிலும்கூட, மறுபரிசீலனை - மறுவிசாரணை செய்தாக வேண்டும் என்பதே சட்டப் பூர்வ நிலையாகும்.

இங்கிலாந்து நீதிமன்றத்தில் இப்படி தவறு நடந்துள்ளதை திருத்தும் மறுவிசாரணை வழக்கேகூட நடந்துள்ளது.

அங்குள்ள தலைமை நீதிபதி Lord Chief Justice லார்டு கோடர்ட் (Lord Goddard) என்பவர் முன்னால் கிரிமினல் அப்பீல் மறுவிசாரணைக்கு வந்து (மன்னருக்குத் தரப்பட்ட கருணை மனு வழக்கில்) நடைபெற்ற வழக்கில், தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டவர் நிரபாரதி என்பது வெளியாக்கப்பட்டது.

இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டினை சட்ட ரீதியாக, நியாய அடிப்படையில் எடுத்து வைக்கவும் இடம் உண்டு.

மற்ற அமெரிக்கா போன்ற நாடுகளில் ஓர் ஆலோசனை வாரியம் (Advisory Board) அமைக்கிறார்கள். இங்கு அதுபோன்ற எதுவும் இல்லாததால் அவர்கள் கருத்தறிந்தே, குடியரசுத் தலைவரோ, கவர்னரோ முடிவு எடுக்கும் நிலை இல்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

சட்டவிதிகளைவிட மனிதநேயம் முக்கியம்

சட்டம் - விதிகளைவிட மனிதநேயம் முக்கியம். சிறைத் தண்டனைகளின் தத்துவமே வெறும் தண்டிப்பு (Mere Punishment) என்பது மாறி, இப்போது Reformation குற்றம் செய்திருந்தாலும்கூட அவர்களைத் திருந்தி நல்வாழ்வு வாழச் செய்வதுதான் என்கிறபோது, இந்தக் கருணைப் பிரச்சினையில் அந்த அடிப்படையும் முக்கியம் அல்லவா?

மனமிருந்தால் மார்க்கம் உண்டு. நளினிக்குக் காட்டிய அதே கருணையை இம்மூவருக்கும் காட்டுவது மனிதநேய அடிப்படையில் தேவையல்லவா?

நமது அரசியல் சட்டப்படி பால் அடிப்படையில் வித்தியாசம் காட்டப்படுவதுகூட விரும்பத்தக்கதல்லவே. எனவே மத்திய, மாநில அரசுகள் மீண்டும் தங்களது மனிதாபிமானத்தினைக் காட்ட இந்த அரிய தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் - கேட்டுக் கொள்கிறோம்.

------------------கி. வீரமணி , தலைவர் திராவிடர் கழகம் --"விடுதலை” 26-8-2011

ஜாண் உயர பார்ப்பனராயிருந்தாலும்!பார்ப்பனரல்லாதார் பெரிய வித்வான்களாக இருந்தாலும்

பார்ப்பனரல்லாதார் எவ்வளவு பெரிய வித்வான்களாக இருந்தாலும்

அவர்களை மட்டம் தட்டி வந்ததை 40 வருடமாய் பார்த்திருக்கிறேன்!

பெரியார் கூறிய கருத்தை விளக்கி தமிழர் தலைவர் பேச்சு



பார்ப்பனரல்லாதார் எவ்வளவு பெரிய வித்வானாக இருந்தாலும் அவர்களை மட்டம் தட்டியே வந்ததை 40 வருடமாய் பார்த்து வருகிறேன் என்று பெரியார் கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.

தந்தை பெரியாரின் கலை இலக்கியச்சிந்தனைகள் என்ற தலைப்பில் 10.8.2011 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய முதல் தொடர் சொற்பொழிவின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


நாதஸ்வரம் வாசிக்கிறவர் தோள்மீது துண்டு போட வில்லை வியர்வையைத் துடைப்பதற்காக என்று அந்த சங்கதிகளை கேள்விப்பட்டு ஊர்க் காரர்களுக்கு அழகிரியும் பதில் சொல்லுகிறார்.

தோளில் துண்டு போட்டு வாசிப்பதா?

இந்த ஊர் பெரிய மனிதர்கள் எல்லாம் தோளில் துண்டு போட்டு வாசிப்பதைப் பார்த்து சங்கடப் படுகிறார்கள். இது எங்களுடைய ஜாதி வழக்கத் திற்கே விரோதமானது என்று சொல்லுகின்றார். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னாலே நடைபெற்றது என்பதை எண்ணிப் பாருங்கள்.

உடனே அந்த வித்வானை பார்த்து அழகிரி சொல்லுகிறார். சிவக்கொழுந்து வாசிக்காதே. அங்கேயே நில் என்று சொல்லுகின்றார். இந்த ஊர்வலம் பெண்ணோ மாப்பிள்ளையோ அங்கு போய் சேர்ந்தால்தானே கல்யாணத் தொடர்ச்சி காரியங்கள் நடைபெறும் எனவே ஊர்வலத்தை நிறுத்து என்று பட்டுக்கோட்டை அழகிரி சொல்லுகின்றார்.

அடுத்த நாள் காலையில் திருமணம் நடக்க வேண்டும். முதல்நாள் ஊர்வலம் நின்றால் திருமணம் எப்படி நடக்கும்? நடக்காது.

ஊர்வலம் அப்படியே நிற்கிறது

பெண்ணையோ மாப்பிள்ளையையோ ஊர்வலத்தில் அழைத்து வருகிறார்கள். அந்த கச்சேரியில் தான் இவ்வளவு பெரிய பிரச்சினை. ஒரு மணி நேரத்திற்கு மேல் பிரச்சினை. ஊர்வலம் அப்படியே நிற்கிறது. இதற்கிடையில் நேராக பெரியார் அய்யா அங்கு தங்கியிருக்கின்றார். அவரிடத்திலே போய் சொல்லுகின்றார். இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்று அய்யா அவர்களிடம் சொல்லுகின்றார். அப்படியா! விடாதீர்கள்! என்று அய்யா அவர்களும் சொல்லுகின்றார். நம்மாள்கள் எல்லாம் அவருக்கு ஆதரவுகாட்ட வேண்டும் என்று சொல் லுகின்றார்.

என்ன அநியாயம்? அவர் வியர்ப்பதைத் துடைப் பதற்காக சிறிய துண்டை வைத்திருக்கின்றார். விளக்கம் சொல்லுகின்றார். அதையும் கேட்க மாட்டேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நாங்கள் விட மாட்டோம் என்று பெரியார் சொல்லி ஆட்களை அனுப்பி விடுகின்றார்.

மதுரை சிவக்கொழுந்து

மதுரை சிவக்கொழுந்து அவர்களிடம் காசு கொடுத்தவர்கள் வாசியுங்கள் என்று சொல்லுகின்றார்கள். வாசிக்காதே என்று பட்டுக்கோட்டை அழகிரி சத்தம் கொடுக்கின்றார்.

மாப்பிள்ளையோ, பெண்ணோ தெரியவில்லை. வண்டியில் ரொம்பநேரம் உட்கார்ந்திருக்கின்றார். ஒரு மணிநேரம், ஒன்றரை மணி நேரம் ஆகி விட்டது. அவமானமாகப் போய் விட்டது. அதை எல்லாம் நீங்கள் பண்ணாதீர்கள் என்று அழகிரியிடம் சொல்லுகின்றார்கள். பிறகு பெரியாரிடம் போய் சொல்லுகிறார்கள். உங்களுடைய ஆள்தான் யாரோ ஒருவர் வந்து தகராறு பண்ணுகிறார் என்று சொன்னார்கள்.

பெரியார் சொன்னார். அழகிரியிடம் நான் தானய்யா சொல்லி அனுப்பினேன் என்று. உங்களுக்கு என்ன ஜாதிப்பற்று?

அவருடைய பாட்டும் மட்டும் தேவைப்படுகிறது

அவருடைய கச்சேரி பாட்டு மட்டும் தேவைப்படுகிறது. ஆனால் அவருடைய தன்மானத்தைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லையா? என்று பெரியார் கேட்டார்.


பிறகு ஊர்க்காரர்கள், ஜாதிக்காரர்கள் பார்த்தார்கள். சரிங்க நீங்கள் துண்டு போட்டுக் கொண்டே வாசியுங்கள் என்று சொன்னார். அதுதான் முதல் போராட்டம் (கைதட்டல்). அண்ணன் அழகிரி, தளபதி அழகிரியிடம் பெரியார் விசிறியைக் கொடுத்து நாதசுவரம் வாசிக்கின்ற சிவக்கொழுந்துக்கு வியர்க்காமல் இருக்க விசிறிக் கொண்டு வாருங்கள் என்று பெரியார் சொன்னார். (சிரிப்பு-கைதட்டல்).

அழகிரி பின்னால் விசிறிக்கொண்டு வருகின்றார்

நாதசுவர வித்வான் மதுரை சிவக்கொழுந்து அவர்களுக்கு பட்டுக்கோட்டை அழகிரி விசிறிக் கொண்டு வருகின்றார். (சிரிப்பு-கைதட்டல்). இது பற்றி அய்யா சொல்லுகின்றார்.


உதாரணமாக சென்ற இரண்டு, மூன்று வருஷத்திற்கு முன் நாட்டுக்கோட்டை நகரத்தில் ஒன்றான கானாடுகாத்தானுக்கு நாம் போயிருந்த காலத்தில் தென் இந்தியாவுக்கே முதன்மையான நாதசுர வித்வான் திரு.பொன்னுசாமி அவர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபா கொடுத்து ஒரு பிரபு வீட்டு விசேஷத்திற்கு வாத்தியத்திற்காக வரவழைக்கப்ப ட்டிருந்தார்.

மேளக்காரன் தோளில் துண்டா?

அப்படிப்பட்ட அவர் நின்று வாசிக்கும் போது தனது வேர்வையைத் துடைத்துக்கொள்ள ஒரு சிறு வெள்ளைத் துவாலை தன் தோளின் மேல் போட்டுக்கொண்டு வாசிக்கத் துவங்கினதும் அவ்வூர் பிரபுக்கள் சிலர். மேளக்காரன் தோளில் துண்டு போட்டுக்கொண்டு வாசிக்கலாமா? என்று குற்றம் சொல்லி வாசிப்பதைத் தடுத்தார்கள். அதற்கு அந்த வித்வான் பதில் சொல்ல மாட்டாமல், விழித்திருந்தார். நீங்களாக போய்விடுங்கள்

அப்போது சமீபத்தில் இருந்த நமது நண்பர் ஒருவர் அவ்வித்வானை நோக்கி நீங்கள் மேல் துவாலை எடுக்காதீர்கள். அவர்களுக்கு கேட்கப் பிரியாமில்லாவிட்டால் போய்விடட்டும். அல்லது நீங்களாவது போய்விடுங்கள் என்று சொன்னார். இதைக்கேட்ட வீட்டுக்கார பிரபு தனது விசேஷ காலத்தில் இந்தப்படி ஒரு சம்பவம் நடந்தது வாத்தியக்காரர் போய்விட்டார் என்கின்ற கெட்ட பெயர் வருமே என்று பயந்து சீக்கிரத்தில் வாசிப்பைமுடித்துக்கொண்டார்.

பெண் வித்வான்களாயிருந்தால்

இம்மாதிரியான சம்பவம் அனேக இடங்களில் இன்றும் நடக்கின்றது. பார்ப்பனரல்லாத பெண் வித்வான்களாயிருந்தால் உட்கார்ந்து பாடும்போது சபைக்கு ஒவ்வொரு மனிதன் வரும்போதும் எழுந்து எழுந்து கும்பிட்டு விட்டுத்தான் உட்கார வேண்டியிருக்கின்றது. (அப்பொழுது நிலைமை எப்படியி ருந்திருக்கிறது பாருங்கள்)

மகாராஜா, எஜமான், ஸ்வாமி

ஆண் பாட்டுக்கார வித்வான்களோ பிரபுக் களிடம் பேசும்போது இடுப்பின் மேல் வேஷ்டியை எடுத்து சுருட்டிக் கட்டிக்கொண்டும் முழங் காலுக்கு மேல் இடுப்பு வேஷ்டியக் கட்டிக் கொண்டும் இடக்கையை வல கட்கத்தில் வைத்து வலக்கையால் வாயைப் பொத்தி குனிந்து, மகா ராஜா, எஜமான், ஸ்வாமி, சமூகம் என்று மேல் மரியாதை வைத்து பேச வேண்டியிருக்கின்றது.

நீ, அவன், டேய்...!

இப் பிரபுக்களும் இவ்வித்துவான்களிடம் பேசும் போது நீ, அவன், டேய் என்கின்ற ஒருமை அடிமை முறையில் பேசுவதும் வழக்கமாயிருக்கின்றது. இதே தொழிலில் இருக்கும் பார்ப்பனர்களும் தங்கள் சகோதர தொழிலாளிகள் பார்ப்பனரல்லாதவர் களாயிருந்தால் அவர்களிடமும் இப்படியேதான் நீ, அவன், அடே என்கின்ற வரிசை வைத்துத்தான் பேசுகிறார்கள்.

ஜாண் உயர பார்ப்பனராயிருந்தாலும்!

ஒரு இரண்டு மூன்று ஜாண் உயரம் உள்ள பையனாயிருக்கும் பார்ப்பன வித்வானும் கூட எட்டரைச் சாண் இருக்கும் பார்ப்பனரல்லாத வித்வானை ஒருமையிலேயே தான் அவன், நீ அடே என்று பேசுகிறான். அந்தச் சிறு பையன் வித்துவானிடம் இந்தப் பெரிய வித்துவான்கள் பேசும் போதும் சுவாமிகள் என்றே மரியாதை வைத்து பேசுகின்றார்கள். நிற்க! நமது பிரபுக்கள் என்பவர்கள் பார்ப்பன வித்வான்களிடம் பேசும் போதெல்லாம் மரியாதையாகவே பேசுவதும் தாங்களாகவே முதலில் கும்பிடுவதும் இதற்கு பார்ப்பனர்கள் இது கையை தங்கள் இடுப்பிற்கு கீழாகக் காட்டி ஆசீர்வாதம் என்று சொல்லுவது மான காரியங்கள் தினமும் நடந்து வருகின்றன.

தாசிகளுக்குப் பின்னால் நின்று கொண்டு

ஆனால் சதுர் முதலிய கச்சேரிகளில் தாசிகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு அவர்களை ஆட்டுவிப்பராயிருந்தாலும் தாளம் போடுகிறவ ராயிருந்தாலும் அலலது அப்பெண்களுக்கு மாமாக்களாய்கூட இருப்பவர்களாய் இருந்தாலும் அவர்களைக் கண்டால் நமது பிரபுக்கள் கும்பிடுவதும் சுவாமிகளே என்று கூப்பிடுவதும் ஆன காரியங்கள் முக்கியமாக எல்லா கிராமாந்திரப் பிரபுக்களிடமும் இன்னமும் பார்க்கலாம்.

இவை ஒரு புறமிருக்க பார்ப்பனப் பிரபுக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கும், சடங்குகளுக்கும் மேளம் வாசிப்பதற்குத் தவிர மற்றபடி சபைக் கச்சேரிகளுக்கு பாடவோ, கதைகள் செய்யவோ கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதார்களை கூப்பிடு கின்ற வழக்கமே ஒரு சிறிதும் இல்லை.

அது மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் பாடுவதையோ கதை செய்வதையோ புராணம் உபன்யாசம் முதலியவை செய்வதையோ பார்ப்பனர் கள் கேள்ப்பது மத சம்பரதாயப் படி தோஷம் என்றே கருதி இருக்கிறார்கள். ஏனெனில் சூத்திரன் வாக்கை கேள்க்கக் கூடாதாம் அன்றியும், பார்ப்பன பக்க வாத்தியக்காரர்களில் அனேகர் பார்ப்பனரல்லாத வித்வான்களுக்கு பக்க வாத்தியம் வாசிப்பதையும் இழிவாய்க் கருதுகிறார்கள்.

பார்ப்பனரல்லாத பக்கவாத்தியக்காரர்கள் கூட ஒரு பார்ப்பனச் சிறு வித்வானுக்கு வாசிப்பதை பெருமையாய் கருதுகிறார்களே யொழிய பார்ப்பனரல்லாத வித்வான்களுக்கு வாசிப்பதை கவுரவக் குறைவாகவே கருதுகின்றார்கள் அன்றியும் ஒரு பார்ப்பன சிறுவன் பாடினாலும் கருவிகளால் வாசித்தாலும் சுற்றிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு பலே, பலே, பேஷ், பேஷ் என்று கைதட்டுவதும் தலையை ஆட்டுவதும் மெய் மறந்தது போல் கண்கள் மேலே சொருகும்படி வேஷம் போடுவதும் அதை ஒன்றுக்கு இரண்டாக விளம்பரம் செய்து அவனுக்கு பிரக்யாதி சம்பாதித்துக்கொடுப்பதிலும் அதிக கவலையாய் இருக்கிறார்கள். (கைதட்டல்-சிரிப்பு).

பெரியார் எவ்வளவு அழகாக விளக்குகிறார்

(அய்யாஅவர்கள் எவ்வளவு அழகாக சொல்லுகிறார்கள். இன்றைக்கும் இது பார்ப்பனர்களிடம் நடக்கிறது. பார்ப்பனர்கள் தங்களுடைய இனத்தை உயர்த்துவதற்கு நம்மைத் தாழ்த்துவதற்கு எப்படி செய்கிறார்கள். என்பதை அய்யா அவர்கள் எவ்வளவு அழகாகப் படம் பிடிக்கிறார்கள் பாருங்கள். இதைவிட வர்ணனையை வேறு யா சொல்ல முடியும்?) அந்தக் காட்சியை அய்யா அவர்கள் நம் கண் முன்னால் கொண்டு வந்து காட்டுகிறார்கள். பாருங்கள். எப்பொழுது இதை அய்யா அவர்கள் எழுதுகிறார்? 1930இல் எழுது கிறார். எங்களை மாதிரி இருக்கிறவர்கள்.

பிறக்காத காலத்தில் இப்படிப்பட்ட ஒரு காட்சி. இன்றைக்கு இந்த நிலை மாறியிருக்கிறதென்றால், பெரியார் பிறந்திருக்காவிட்டால் என்ற கேள்வியை கேட்டுப்பாருங்கள். விடை தெரியும். (கைதட்டல்). கலையாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தா லும் நமக்கு இன உணர்வை ஊட்டினார்.)

கட்டைசாரீரம்-கணக்குப் போராது

ஆனால் பார்ப்பனரல்லாத வித்வான் களாயிருந்தால் அவர்கள் எவ்வளவு பெரிய வித்துவான் களாயிருந்தாலும் வேண்டுமென்றே கட்டை சாரீரம் என்பதும் கணக்குப் போராது என்பதும் மேல் ஸ்தாயில் சுகப்படாது என்பதும் மற்றும் ஏதேதோ பொருத்த மற்றவைகளைச் சொல்லி விஷமப் பிரச்சாரம் செய்வது எங்கும் வழக்கமாக இருக்கிறது.


(நம்மாட்களை எப்படி ஏமாற்றி பார்ப்பனர்கள் மட்டம் தட்டியிருக்கிறார்கள் பாருங்கள்)
இவைகளை நாம் சுமார் 40 வருஷத்திற்கு மேல்பட்ட நமது பிரத்தியட்ச அனுபவத்தில் கண்டு வந்திருக்கிறோம். (அய்யா அவர்கள் கல்லூரிக்குப் போய் படித்தவர்கள் அல்ல. பல்கலைக் கழகம் போய் படித்தவாகள் அல்ல. அவருடைய ஆராய்ச்சிக் கூடம் எங்கேயிருக்கிறது) மக்களிடம் இருக்கிறது. உலகத்தில் இருக்கிறது. அதைக் கண்டவர்தான் பெரியார்.)

40 வருடமாய் பார்த்திருக்கிறார்

40 வருடம் பார்த்திருக்கிறார் சிறிய வயதிலிருந்து பார்த்துப் பார்த்து அவருடைய மனதில் பதிந்து போயிருக்கிறது.

பெரியார்திரைப்படத்தைப் பார்த்தால் தெரியுமே. கடன் வாங்கியவனை அமீனாவுடன் சென்றது. பெரியாருடைய அப்பாவே இவரை செருப்பினால் அடிக்கிறாரே அப்பொழுதே அவருக்கு அந்த உணர்வு வந்திருக்கிறது. நாம் நியாயத்திற்காக பாடுபட்டோம். தனது தந்தையார் இவ்வளவு மோசமாக இருக்கிறாரே என்று சிந்திக்கிறார் பாருங்கள். வேறு எந்தத் தலைவரும் அனுபவங்களால் உருவாக்கப்பட்ட தலைவர் கிடையாது. (கைதட்டல்) அய்யா அவர்களுடைய சிந்தனை காலத்தை வென்றதாக இருக்கிறது அய்யா மேலும் சொல்லுகிறார்).

சங்கீத ஞானத்திற்காக அல்ல

ஆகவே நாம் சங்கீத மாநாட்டில் கலந்துகொள்ள ஆசைப்பட்டதின் முதல் காரணம் சங்கீத ஞானத்திற்கு ஆகவோ சங்கீத கலை வளர்ச்சிக்கு ஆகவோ மாத்திரம் அல்ல என்றும் மேலே கண்ட பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்னும் உயர்வு தாழ்வு விஷம் சங்கீதத்திற்குள்ளும் புகுந்து அதன் மூலம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு விரோதமாயிருக்கும் கொடுமையை அழிப்பதற்கே ஒழியவேறில்லை என்றும் தெரிவித்துக்கொள்ளு கின்றோம்.

---------------தொடரும்.............. “விடுதலை”. 26-8-2011