Search This Blog

25.12.09

பெரியாரின் கேள்விக்கென்ன பதில்?

கேள்விக்கென்ன பதில்?

இந்தக் கேள்விகளைப் படித்தவுடன், அதிர்ச்சியும், எரிச்சலும், கோபமும் வரும். தடுமாறும் மன நிலையை சற்று சமாதானம் படுத்திவிட்டு கேள்வி கேட்கப்பட்ட நல்லெண்ணத்தை புரிந்து கொண்டால் கேள்விகளின் நியாயத்தை ஏற்றுக்கொள்ள மனம் வரும். நல்ல பதிலையும் கூறுவீர்கள்.

இந்தக் கேள்விகள் 80 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியாரால், ‘குடிஅரசு’ இதழில் 19.02.1928 இல் எழுதப்பட்ட கட்டுரையில் ஒரு பகுதியாகக் காணப்படும் கேள்விகளாகும்.

அன்று பெரியாரால் கேட்கப்பட்ட கேள்விகள் இன்றும் பசுமை குன்றாமல்தான் உள்ளன, தக்க பதிலை எதிர்பார்த்து.

‘முன்னையை விட பார்ப்பன பிரச்சாரம் பலமாய் நடந்து வருகிறது’, என்பதைக் கூறி முதல் கேள்வியை கேட்கிறார். அடித்த ரப்பர் பந்து துள்ளி எழுவதுபோல், பெரியாரின் தடியால் அடிபட்ட பார்ப்பனப் பாம்பு பொந்தில் பதுங்கிக் கொள்ளாமல், தன் வீரியத்தையும் ‘வீரத்தையும்’, காட்டுவதை விரதமாக்கிக் கொண்டுள்ளதே! ‘தாம்ப்ராஸ்’ அமைப்பை வைத்துக் கொண்டு தண்டோரா போட்டு தண்டலும் பலமாக செய்து வருகின்றதே! நெய்வேலியில் கூட்டமாம். நீதிமன்றத்திலும் முறையீடாம். இட ஒதுக்கீட்டு ஏணியை இழுத்துத் தள்ளவும், அதே வேளையில் தனக்கு இட ஒதுக்கீடு தேவை என கையேந்தவும் பார்ப்பனீயம் தயாராகி விட்டதே! ஊடகங்கள் ‘பொதிகை’ முதற்கொண்டு, துக்ளக், ‘தினமலர்’, தினமணி போன்றவை தூக்கிப் பிடிக்கும் தூண்களாக உள்ளனவே! எங்கே? ‘பிராமணன் தொடர் - 2’ என்று ‘ஜெ’ டி.வி.யில் விரைவில் என்று ‘சோ’ விளம்பரம். ‘வந்தேமாதரம்’ பாடலின் தேசிய புனிதத் தன்மைக்கும். லிபரான் அறிக்கைக்கு எதிராகவும் வாதாட எஸ்.குருமூர்த்திகளும் தயார் நிலையில் உள்ளனரே!

இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிசத் அமைப்புகள், வட இந்தியாவில் தேய் பிறையாகவும், பெரியார் மண்ணில், கலைஞர் நீர்ப் பாசனத்தால் அமாவாசையாகவும் உள்ளனவேயொழிய, கல்லறை நிலைக்கு இன்னும் வரவில்லை, சுயமரியாதையின் சுவையைப் பற்றி பார்ப்பனரல்லாதவர்கள் சிலரும் சிந்திக்க முன் வந்தால், அந்த நிலையும் வந்துவிடும். பெரியாரின் கேள்விக்கும் பதில் கிட்டும்; அடிமைத்தன மோகமும் இடம் தெரியாமல் போகும்.

பார்ப்பன பிரச்சார ஏற்பாட்டில், திராவிட இன மக்களின் கல்வி முன்னேற்றத்தில், பகுத்தறிவு சிந்தனையில் மண்ணைப் போடுவதில் முக்கிய பங்கு இருந்தது. கல்வியாளர்கள், ஆசிரியர்கள், புலவர்கள் போன்றோர்கூட கவலைப்படாத வேளையில், பள்ளி, பல்கலைக் கழகத்தின் படிகளை மிதித்தறியாத பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பட்ட வேதனை:

“பள்ளிக்கூட டெக்ஸ்ட் பாடப்புத்தகங்கள் என்று அநேக பார்ப்பனர்களும், சுயமரியாதையும் அறிவும் இல்லாத சில பார்ப்பனரல்லாதவர்களும், ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரியபுராணம், அருணாசலப் புராணம், திருவிளையாடல் புராணம், முதலிய குப்பை கூளங்களின் பேரால் சிறு சிறு கதைப் புத்தகமும் எழுதி சிறு குழந்தைகளுக்கு பார்ப்பன விஷத்தை ஊட்டுவது சகிக்கக் கூடியதாயில்லை. இதற்கு வழி என்ன என்று யார் சிந்தித்தார்கள்?

பெரியாரின், ‘யார் சிந்தித்தார்கள்?’ என்ற கேள்வியினால்தான், அவரின் தளபதியான அறிஞர் அண்ணா ‘தீ பரவட்டும்’ விவாதங்களை நடத்தினார். புலவர் குழந்தையின், ‘இராவண காவியம்’ தடையை மீறி வெளிவந்தது.

கல்வி நீரோடையில், பார்ப்பன முதலைகள் சூழ்ந்துள்ளதை பெரியார் சுட்டிக் காட்டினார். விஞ்ஞான அறிவுக்கு முள்வேலி உள்ளதை விளக்கினார்.

இவற்றையெல்லாம் உணர்ந்த மானமிகு சுயமரியாதைக்காரர், தமிழக முதல்வர் கலைஞர், காலத்தின் கட்டாயம் கருதி, காலமும் கனிந்திருப்பதை உணர்ந்து நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த கல்வித் துறை சீர்திருத்தம் என்ற வகையில், பல்வேறு கல்வித்துறை அறிஞர்களின் கருத்தை அறிந்து சமச்சீர் கல்வித் திட்டத்தை நிதானித்து உறுதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆப்பைப் பிடுங்கிய குரங்குபோல் துள்ளிக் குதித்தது அக்கிரகாரம். பத்திரிகைகள் பக்க வாத்தியம் வாசிக்கத் துவங்கின. “பெரியாரே,’’ சமச்சீர் கல்வித் திட்டம் என்பது போல ஒரு பீதியை கிளப்பி இருக்கிறது. இதை தமிழர் தலைவர் 5.12.2009 தேதி அறிக்கையில், இந்து முன்னணி இராம. கோபாலன் குமுறலை எடுத்துக் காட்டியுள்ளார்.

“ஈ.வெ.ரா வின் (பெரியார் என்று கூறினால் ‘‘புத்’’தென்ற நரகத்திற்கு போவோம் என்ற நடுக்கம்) இந்து விரோதக் கொள்கைகளைத் தூக்கி பிடிக்க முதல்வர் முயல்கிறார். நாத்திகத்தை மாணவர்களிடம் திணிக்க சதி நடக்கிறது. இந்து மதத்தைக் கேவலப்படுத்தும் பாடங்கள் இடம் பெற்றுள்ளன.’’ ‘விடுதலை’ இதழில் ஆசிரியர் அய்யா அவர்கள், இந்த அழுகை ஓலத்தை தெளிவான ஒரு சொல்லில், ‘அரைவேக்காட்டுத்தனம்’ என்று கூறிவிட்டார். அத்துடன் தேவைப்படும் எதிர்பார்ப்புகள் பற்றியும் அறிக்கையில் கூறத் தயங்கவில்லை.

கற்க வேண்டியதைக் கற்க வழிவகுக்கும் முறையில், சமன் செய்து சீர் தூக்கும் துலாக்கோல் போல், மனித நேயப் பார்வையில் அமைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த முனையும்போது, மறதி மனித இயல்பு என்ற நினைப்பில் இந்து முன்னணி கூட்டம் அறிவு நாணயமில்லாமல் ஒன்றை மறந்துவிட்டது.

பா.ஜ.க ஆட்சிக்காலத்தில், பார்ப்பனீயத்தையும், மதவெறியையும் இரு கைகளில் ஏந்தி, இந்துத்துவா நஞ்சை பாடத்திட்டத்தில், சொட்டு சொட்டாக இல்லாமல் குடம் குடமாக கொட்டி கலந்தபோது குதூகலித்தனரே. அவர்களின் வகுப்புவாத, அறிவியல் விரோத நாசிச போக்கை வரலாற்று வல்லுநர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததை இராம. கோபாலனின் முகாரிக்கு முடிவுகாணும் வகையில் விளக்குவோம். கண் திறந்து பார்த்து கருத்துத் தெளிவு பெறட்டும்.

“With the NCERT authorities going ahead with the implementation of the agenda drawn up by the Sangh Parivar, the distinction between the academic agenda of a national - level academic organisation and the communal agenda of the sangh Parivar has been obliterated... The ideas ‘manufactured’by the Sangh Parivar ideologues, and rejected by reputed right-wing historians such as R.C. Majumdar, had found their way into the syllabus. No political unit of the Deccan and South, except the Rashtrakutas find a mention in the syllabus of Ancient India for class XI, Even the Satavahanas, Pallavas, Chalukyas and cholas do not find a place... As for varuna system, there was no mention of it before 300 B.C” (‘The Hindu’ 01.02.2002) NCERT Syllabus Saffronised.

தமிழாக்கம்:

“சங்பரிவார் தயாரித்த செயல் குறிப்புத் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் என்.சி.இ.ஆர்.டி அமைப்பு அதிகாரிகள் செயல்வழிமூலம், தேசிய அளவு பாடத்திட்டத்தின் நிறுவனத்திற்கும், சங்பரிவாரின் வகுப்புவாத நோக்குடைய பாடத்திட்ட செயல் குறிப்புக்கும் இடையே எந்தவித இடைவெளியும் இல்லாமல் போய்விட்டது.

சங்பரிவாரால் ‘உற்பத்திசெய்யப்பட்டு’ புகழ் பெற்ற வலதுசாரி வரலாற்று ஆசிரியர் ஆர்.சி. மஜும்தாரால் நிராகரிக்கப்பட்ட சங்பரிவார் தத்துவங்கள் பாடத்திட்டத்தில் நுழைந்துள்ளன.

“ஆம் வகுப்பு பழைமை இந்தியா பாடப் புத்தகத்தில், ராஷ்டிரகூடரை தவிர்த்து, தக்காணம் தென்னிந்தியா பற்றிய ஆட்சி அமைப்புப் பற்றி எந்த குறிப்பும் இடம் பெறவில்லை. சாதவாகனர், பல்லவர், சோழர் பற்றிய குறிப்பு கூட இடம் பெறவில்லை. வருண அமைப்புப் பற்றி, கி.மு.300 க்கு முன் இருந்த நிலைபற்றி எந்தக் குறிப்பும் இல்லை’’

“They (Fanatics) perverted texts from history books to make them conform to their ideas” (Khushwant singh- ‘The End of India’)

தமிழாக்கம்:

‘‘மத தீவிரவாதிகள், தங்கள் கருத்துக்கு ஒத்துப் போகும் வகையில், வரலாற்றுப் புத்தகங்களின் செய்திகளைத் திருத்தியமைத்தனர்’’ (‘இந்தியாவின் முடிவு’ என்ற புத்தகத்தில் குஷ்வந்த்சிங்)

இந்தியாவில், இந்து வகுப்புவாத சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பி.ஜே.பி ஆட்சியில் இருந்த நிலையில் கல்வித் துறையை காவி மயமாக்கும் கயமைச் செயலை கட்டுப்-பாடற்ற வகையில் செய்தனர். இதையே அமெரிக்காவில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் மாற்றம் செய்ய முனைந்ததை அமெரிக்க நீதிமன்றம் அணுமதிக்க மறுத்தது, என்றாலும், எந்த அளவுக்கு, வகுப்புவாத அமைப்பும், அரசியல் கட்சியும் மத வெறித்தனமாக ஆட்டம் போட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த செய்தியை, இங்கிலாந்து நாட்டின் முன்னோடி வரலாற்று மாத இதழ் ‘இன்றைய வரலாறு’ (பிவீstஷீக்ஷீஹ் ஜிஷீபீணீஹ் அக்டோபர் 2007) ‘சிந்துவெளி நாகரிகம்’ என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் எழுதி, ‘இந்துத்துவா’ சிறு மதியாளர்களின் செயலை உலகறியச் செய்துள்ளது. அந்தக் கட்டுரையில்:

“With the ascendency of Hind National politics whithin India during the 1990s of the Indus Valley civilisation has been blatantly misused to give a ‘hoary antiquity’ to modern -day Hinduism. Revised History Books were published and thrust upon Indian Schools by the NCERT in 2002 and in 2005, the Hindu education foundation and the Vedic Foundation demanded that the 6th Grade history books on South Asia in California be amended. Although the text books have been withdrawn and the proposed amendments overruled by the courts of the U.S.”

‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார்கள். ஆட்சியில் இருந்த காலத்தில் பா.ஜ.க. ஆரியத்தை உள்வாங்கிய இந்துத்துவாவை, இந்தியாவின் முடியில் வைத்து ராம ராஜ்யம் நடத்த ஆசைப்பட்டது. ஆசை வெட்கமறியாது. முயற்சி, குன்றில் மோதிய குருவியின் கதியாயிற்று. மேலை நாட்டில் வாலை ஆட்டியபோது அமெரிக்க நீதிமன்றம் வாலை நறுக்கியது. பெரியாரின் நாணயத்தை, மனித நேயத்தை, உள்ளத்தால் பொய்யா தொழுகும் உயர் பண்பை, தொண்டறத்தை 95 வயதிலும் அறிவுச் சுடரை தூக்கிப் பிடித்த வாழ்க்கையை எவரேனும் குறை கூற முடிந்ததா? அத்தகைய பெரியாரின் கொள்கையை ‘தூக்கிப் பிடிக்கிறார் முதல்வர்’ என்பதற்குப் பாராட்டை கூறாமல் பதறிப்போவானேன்? பழிச்சொல்லைக் கூறுவானேன்? அல்லவை தேய நல்லவை நாடுவது தானே நாத்திகம்! மறு மலர்ச்சித் தேவையை, மூட நம்பிக்கை ஒழிப்பின் தேவையை வலியுறுத்தாத அறிஞர்கள் உண்டா உலகில்? இதற்கு அறியுமா கற்பூர வாசனை? என்பார்கள். திருவாளர் இராம. கோபாலனுக்கு இந்த வாசனை தெரியாதது அதிசயமில்லை.

தமிழர் தலைவரின் அறிக்கையில், “எந்த ஒரு மாற்றத்தையும், வளர்ச்சியையும் விரும்பாத ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டுதானிருக்கும்.’’ என்று கூற வந்தது, இராம. கோபாலன் கூட்டத்தின் நோஞ்சான் வாதத்தை ஓரம் தள்ள வேண்டியதை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. அறிக்கையின் இறுதிப் பத்தியில் உள்ளவையே, பெரியாரின் கேள்விகளுக்கு அவரின் அடிச்சுவட்டில் நடைபோடும் மாணவரின் பதிலாக அமைந்துள்ளது.


--------------------மு.வி.சோமசுந்தரம் அவர்கள் 19-12-2009 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

பகுத்தறிவாளர் கழகத்தில் பார்ப்பானைச் சேர்க்காதீர் என்று கூறுவது ஏன்?




தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை வருமாறு:-

வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதோடு வெற்றி பெற ஓட்டளித்த வாக்காளர் பெருமக்களையும் பாராட்ட வேண்டும். இத்தேர்தலில் பார்ப்பனர்களின் பெரும் எதிர்ப்புக்கிடையே அவற்றை எல்லாம் இலட்சியம் செய்யாமல் ஓட்டளித்து வெற்றிபெறச் செய்தது பாராட்டிற்குரியதாகும். இத்தேர்தலில் மட்டுமல்ல; எல்லா தேர்தல்களிலுமே பார்ப்பனர்கள் நமக்கு எதிராகவே பாடுபட்டு வந்திருக்கின்றனர். இந்த நாட்டில் பறையனாக, சூத்திரனாக இருப்பதைவிட துலுக்கன் நாட்டில் வாழ்வதில் பெருமைப்படுகின்றேன். கிறிஸ்தவன் நாட்டில் வாழ்வதில் பெருமைப்படுகிறேன்.

சுதந்திரநாடு என்றால் அங்கு பார்ப்பான், பறையன், சூத்திரன், மற்ற எந்த ஜாதியுமே இருக்கக் கூடாது. மனிதன் தான் இருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்களாக்கி இழிமக்களாக்கி வைத்திருக்கிறதோ, அது போன்று தான் சுயராஜ்யம், சுதந்திரம், ஜனநாயகம் என்பது நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது. இதனை நான் சாதாரணமாகச் சொல்லவில்லை, 50 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டே சொல்கிறேன். உங்களிடம் மட்டும் சொல்லவில்லை. காந்தி, நேரு ஆகியவர்களிடமே சொல்லி இருக்கின்றேன். அவர்கள் உணர ஆரம்பித்தது மிக மிகப் பின்னாலேயே ஆகும்.

கடவுள், மதம், ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பவை யாவும் மனிதனை மடையன் ஆக்குவதற்காகப் பார்ப்பானால் கற்பிக்கப்பட்டவையே ஆகும். கடவுள் நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் 50 கோடிக்கு மேலிருக்கிறார்கள், அவர்கள் கடவுளுக்கு உருவமில்லை. அதேபோல் 100 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கடவுளுக்கும் உருவமில்லை; அவர்கள் கடவுளை வணங்குவது நம்மைப்போல் காட்டுமிராண்டித்தனமாக அல்ல. மனத்தால் நினைப்பதோடு சரி. நம்மைப் போல் பூசைபடையல்கள் செய்வது கிடையாது.

இந்த உலகில் சுமார் 20 கோடி மக்களாகிய இந்துக்கள் என்று சொல்லப்படுகிற நம் மக்கள் தான் கடவுளுக்கு உருவம் செய்து அதற்கு 6 கால பூசை, திருமணம், திருவிழா என்று சொல்லி விழாக்கள் கொண்டாடி மக்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நமது கடவுள்கள், புராணங்கள், அவதாரங்கள் என்பவை யாவும் நம் மக்களைக் கொல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையே ஆகும். நம் கடவுள் கதைகளும், பெருமைகளும் எத்தனை கோடி பேரைக் கொன்றது என்பதில் தானிருக்கிறது. கொன்றதை விழாவாகக் கொண்டாடுகிறார்கள், கதா காலட்சேபம் செய்கிறார்கள். கடவுள் அவதாரங்கள், அழித்தது எல்லாம் நம் மக்களையே என்பதற்குப் பலஆதாரங்கள் இருக்கின்றன. பல அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளனர். நேருவே தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் இராமாயணம் என்பது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போராட்டமே ஆகும் என எழுதி இருக்கிறார்.

கடவுள், மதம், ஜாதி, புராணம், ஆகிய இக்கற்பனைகள் அனைத்தும் பார்ப்பான் மேல் ஜாதியாக இருப்பதற்கும், நாம் கீழ் ஜாதியாக இருப்பதற்கும் கற்பிக்கப்பட்டவையே ஆகும். இதை எல்லாம் நாங்கள் ஒழிக்க வேண்டும் என்பது திமிரினால் அல்ல. இவை தான் நம்மை இழி மக்களாக, சூத்திரர்களாக ஆக்கி வைத்திருக்கின்றன. அதனால் தான் நம் இழிவைப் போக்க இவற்றை ஒழிக்க வேண்டும் என்கின்றோம்.

இந்த நாட்டில் நாங்கள் ஒருவர் தான் பார்ப்பானைப் பார்ப்பான் என்றழைக்கின்றோம். மற்றவன் பார்ப்பானைப் பிராமணன் என்று தான் கூப்பிடுகின்றான்? ஒருவனைப் பிராமணன் என்றால் மற்றவன் யார்? சூத்திரன் தானே! ஒரு பெண் இன்னொருத்தியைப் பார்த்து பதிவிரதை என்று சொன்னால் அவள் யார்? பதிவிரதைத் தன்மையற்ற விபசாரி என்று தானே பொருள்.

நம் மந்திரிகள் கூட பார்ப்பானைப் பார்ப்பான் என்று சொல்லத் தயங்குகின்றார்கள். மடாதிபதிகள் முதல் பார்ப்பான் என்று சொல்ல தயங்குகிறார்கள்.

கடவுளை ஒழித்த கோயில்களை, இடித்த பார்ப்பனர்களை (கடவுள் பிரசாரகர்களை, மதப் பிரசாரகர்களை) எல்லாம் வெட்டி வீழ்த்திய நாடுகள் பல இருக்கின்றன. அந்நாடுகளில் எல்லா மனிதர்களும் சம அந்தஸ்துள்ளவர்களாக இருக்கிறார்கள். பணக்காரன் ஏழை என்கின்ற பேதமில்லை.

முதலாளி, தொழிலாளி என்கின்ற பேதமில்லை. அந்த நாட்டில் போலீஸ் அய்.ஜி.க்குள்ள மதிப்பு சாதாரண கான்ஸ்டேபிளுக்கும் உண்டு. கலக்டெரும், பியூனும் ஒரே மதிப்புடையவர்கள் என்கின்ற மதிப்போடு வாழ்கின்றார்கள். எந்தப் பேதமும் அவர்களுக்கிடையில் இல்லை. இவ்வளவுக்கும் காரணம் அந்த நாட்டில் கடவுள் இல்லாததாலேயே ஆகும்.

நம் நாட்டில் பேதங்களிருப்பதற்குக் காரணம் கடவுளேயாகும். இந்தப் பேதங்கள் ஒழிய இன்று கடவுளைச் செருப்பால் அடிக்கின்றோம். இவற்றில் மாறவில்லை என்றால் நாளைக்கு மனிதர்களையே கொல்ல நேரலாம். சமுதாய மாற்றம் என்றால் கொலை, கொள்ளை, தீவைப்பு, நாசம் யாவும் நடந்து தான் தீரும்.

இன்று நாம் எல்லாம் சூத்திரர்களாக பறையன், சக்கிலிகளாக இருப்பதற்குக் காரணம் கொலை. சித்திரவதை, கழுவேற்றல் முதலிய காரியங்களைச் செய்து தான் ஆகும். இதிலிருந்து மாற நாமும் இக்காரியங்களைக் கையாள வேண்டியது தான். அறிவான காலமாக இருப்பதால் அடிப்படையிலிருந்து ஆரம்பித்து இருக்கிறோம். அதாவது கடவுளைச் செருப்பால் அடிப்பதிலிருந்து துவக்குகின்றோம். இது வளர்ந்து நாளை அவர்கள் செய்த காரியத்தை நாமும் செய்யும் படி நேரலாம்.

இன்றைக்கு இருப்பதை விட மோசமான நிலை 2500 ஆண்டுகளுக்கு மேலிருந்து அப்போது ஒரே ஒரு மனிதன் சித்தார்த்தன் என்பவன் தோன்றி, தற்போது நாம் செய்வது போன்று அறிவுப் பிரசாரம் செய்த மக்கள் யாவரையும் மாற்றிவிட்டான். வேதங்களை எல்லாம் நெருப்பில் இட்டுக் கொளுத்தினான். அவன் கொள்கை நாடு முழுவதும் பரவி மக்கள் எல்லாம் அவன் கொள்கையைப் பின்பற்ற ஆரம்பித்தனர். பார்ப்பனர்களை எல்லாம் கொலை செய்ய ஆரம்பித்தனர்.

இதைக் கண்டு பார்ப்பான் புத்த கொள்கையை ஏற்றவன் போல் நடித்து, அதில் சேர்ந்து பிரசாரகனாகி புத்த மடங்களை எல்லாம் கொளுத்தினார்கள். பவுத்த கொள்கைகளை ஏற்றவர்களை எல்லாம் நாசம் செய்து அக்கொள்கைகளைத் தடுத்து விட்டனர். அதனால் தான் இன்றைக்குப் பார்ப்பானை பகுத்தறிவாளர் கழகத்தில் சேர்க்கக் கூடாது என்று சொல்கிறேன். அவனைச் சேர்த்தால் புத்த இயக்கத்தில் சேர்ந்து புத்த கொள்கையைப் பரவவிடாமல் தடுத்தது போல் தடுத்து விடுவான். எனவே நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பார்ப்பானை நுழையவிடவே கூடாது.

பார்ப்பான் எந்த விதமான பாதகமும், அக்கிரமும் செய்வான். அதற்கு அவன் சாஸ்திரத்தில் அவனுக்கு இடமிருக்கிறது. பார்ப்பான் தன் தருமத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்த விதமான அக்கிரமும் செய்யலாம், அது பாவமல்ல என்பது சாஸ்திரமாகும். எனவே பார்ப்பான் நம்மை ஒழிக்க எந்தப் பலாத்காரமான காரியத்திலும் ஈடுபடலாம். அதற்கு எல்லாம் நாம் தயாராகத்தான் இருக்க வேண்டும். நம்மில் சிலர் உயிர் விட நேரலாம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் போராட வேண்டியதுதான்.

இப்போதைய காலம் மிகவும் பகுத்தறிவுக் காலம். உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டு போகிறது. உலகில் நாம் ஒருவர் தான் இன்னமும் முட்டாள் தனமாக, மூடநம்பிக்கைக்காரர்களாக இருக்கின்றோம். இதிலிருந்து நாம் விடுதலை பெற்று மற்ற உலக மக்களைப் போன்று இழிவற்று, அறிவு பெற்று வாழ வேண்டும். இனி நீங்கள் எந்தக் காரியத்தையும் நடுநிலையிலிருந்து சிந்திக்க வேண்டும்.

--------------------- 12.5.1971 அன்று அரூரில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு- `விடுதலை’, 22.5.1971

24.12.09

பெரியாரின் வெற்றிக்கொடி



தந்தை பெரியாரின் வெற்றிக்கொடி

தஞ்சை பகுத்தறிவாளர் தோழர் இரா.இரத்தினகிரி அவர்கள், வாழ்வியல் சிந்தனைப் பகுதிக்காக, எனக்கு நினைவூட்டி கீழ்க்காணும் அரிய செய்தியை ஒரு கட்டுரை வடிவில் தயாரித்து அனுப்பினார்.

அய்யா தந்தை பெரியார் அவர்களது 36 ஆவது நினைவு நாள் இன்று.

அவர்களது லட்சியங்களும், கொள்கை, கோட்பாடு அவைகளை அடைய அவர்கள் காட்டிய வழிமுறைகளும், அறப்போராட்டங்களும் இன்றும் தொடருகின்றனஅவர்தம் தூய தொண்டர்களால்,

நமக்குப் பலவீனம் என்று எதையும் கருதி, மனிதர்கள் அதைரியப்படக்கூடக் கூடாது; மாறாக, பலவீனமாக இருந்தாலும்கூட அதை பலமாக்கிக் கொள்ளும் துணிவுடைமை தந்தை பெரியாரின் சொத்தாகும்.

1967 பொதுத்தேர்தலின் முடிவில் அறிக்கை தந்தபோது, ‘‘நான் நல்லவண்ணம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். இது எனக்குப் புதிதல்ல, மூன்றாவது முறையாகும்.

ஆனால் கடந்த இரண்டு முறைகளில் இந்த தோல்விகளை எப்படி வெற்றிகளாக மாற்றிக் கொண்டேனோ, அது போலவே இம்முறையும் மாற்றிக்கொள்ள என்னால் முடியும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அது போலவே மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு ஏற்பட்டது என்பது வரலாறு.

தோழர் இரா.இரத்தினகிரியின் தகவல் பெட்டியைத் திறப்போமா?

அய்யா அவர்கள் தனக்கு உடலில் ஏற்பட்ட நஷ்டங்களையே கூட இலாபமாக மாற்றி, ஈடுகட்டிக் கொள்ளும் வல்லமையை வளர்த்துக் கொண்டவர்கள். அதுதான் பகுத்தறிவின் அடையாளம். எடுத்துக்காட்டாக. அவருக்கு வயதான நிலையில் பற்கள் எல்லாம் விழுந்துவிட்டன. அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. தோழர்கள், மருத்துவர்கள்கூட ‘பல்செட்’ வைத்துக்கொள்ளலாம் என்று வலியுறுத்தினார்கள். அய்யா அதை ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.

‘பல் இல்லாவிட்டால் சொல்போய்விடும்’ என்பார்கள். ஆனால் அய்யா அவர்கள் பல் இல்லாவிடினும்கூட தமது சொற்பொழிவின் சொற்களை வெகு தெளிவாகப் பயன்படுத்தினார். ஒலி உச்சரிப்பு குறையாமல் சொற்பொழிவைக் கேட்பவர்களுக்குப் பொருள் நல்ல வண்ணம் புரியும்படி அய்யா அவர்கள் பேசுவதை, பேச்சு வெளிப்படுவதை நீங்கள் இன்றைக்கும் கூட அவரது சொற்பொழிவுகளின் ஒலி நாடா ஒலிபரப்பப்படும் போது துல்லியமாகக் கேட்கலாம்.

அய்யா அவர்கள், வாயின் பல் ஈறுகளையே பற்களைபோலப் பயன்படுத்திக் கொண்டார். பற்கள் இல்லாமலேயே அவர் இறைச்சி உண்ணும் விதம் ரசிக்கத்தக்கது. அன்னை மணியம்மையார் அவர்கள், அய்யாவின் உடல் நலத்துக்கு உகந்த மாதிரியான மிருதுவான இறைச்சித் துண்டுகளைத் தேர்ந்தெடுத்து எளிதாக ஜீரணமாகும்படி, மிளகு சேர்த்து மணம் மிகுந்தவாறு சமைத்து பக்குவமாகக் கொடுப்பார்கள்.

அவர், உணவில், இறைச்சித் துண்டுகளை எடுத்து அதைத் தமது வலது கை கட்டைவிரலில் ஆள்காட்டி விரல் இடுக்கில் வைத்து அழுத்தி நசுக்கி விரல்களிலேயே, மாவு பதத்துக்கு இறைச்சியை மசிய வைத்துவிடுவார். அதை வாயில்போட்டு மென்று சுவைத்துத் தம்முடைய பல் ஈறுகளால் மென்று கூழாக்கி பின் சாப்பிடுவார்கள். பல் இல்லையே என்பதற்காக அதை விட்டுவிடமாட்டார்.

அதுபோலவே, மதுரை பெரியவர் தேவசகாயம் போன்ற சில தோழர்கள் நல்ல ‘முறுக்குப் பொட்டலம்’ அய்யாவிடம் அன்போடு கொடுப்பார்கள். அய்யா எனக்குத்தான் பல் இல்லையே, ஏன் கொடுக்கின்றீர்கள்? என்று சொல்லி மறுக்கமாட்டார். அன்போடு அதை வாங்கிக்கொண்டு அவர்கள் முன்னிலையில் பொட்டலத்தைப் பிரித்து அந்த முறுக்கில் ஒன்றை எடுத்துக் கைகளால் பொடிப் பொடியாக்கி, வாயில் நிறைய உமிழ்நீரைச் சேகரித்துக்கொண்டு போட்டுக் கூழாக்கிச் சுவைத்து விழுங்கி மகிழ்ந்து பொட்டலத்தைக் கொண்டு வந்து கொடுத்தவரிடம் மிகச் சுவையாக இருப்பதை வெகுவாகப் பாராட்டியும் சொல்வார். பொதுவாக பல் விழுந்தவர்கள் மட்டும் அல்ல, ‘பல்செட்’ கட்டிக்கொண்டவர்கள் கூட முறுக்கு சாப்பிட மாட்டார்கள்.

‘ஒன்று’ போய் விட்டதனாலேயே அதனால் ஆகக் கூடிய வேலை போய்விட்டது என்று இல்லாமல், பலவீனத்தைக் கூட பலமாக மாற்றி வாழ்ந்து காட்டுவதுதான் பகுத்தறிவு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே, அருமை நண்பர்களே! எதற்கும் கலங்காதீர்கள்; அச்சம் தேவையில்லை. தோல்விகள் வந்தால்கூட, அது நிரந்தரம் என்று கருதி மனமுடையாதீர்கள். பலவீனத்தை பலமாக்கிக்கொள்ளுவது போல, தோல்விகளை புதிய அனுபவங்களாக்கி அந்தப் படிக்கட்டு மீதேறி நின்று வெற்றிக் கொடியைப் பறக்க விடுங்கள்!

--------------------- கி.வீரமணி அவர்கள் 24-12-2009 “விடுதலை” யில் எழுதிய ”வாழ்வியல் சிந்தனைகள் ”

மூல பலத்தை நோக்கிப் போர் புரிவதுதான் பெரியார் முறை


‘‘பொட்டைக் காடுகளின்’’ புலம்பல்!

தந்தை பெரியாரின் தமிழ் மண்ணில் 21 ஆம் நூற்றாண்டில் 10 ஆண்டுகள் காலடி எடுத்து வைக்கப்பட்ட இந்தக் கால கட்டத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களின் தெருக்களில் தேரோட்டம் நடத்தலாமா? நடத்தக்கூடாதா? என்ற கேள்வி எழுந்திருப்பது வெட்கப்படத் தக்கதாகும்.

தாழ்த்தப்பட்டவர்கள் பொது வீதிகளில் நடக்கக்கூடாது, உணவு விடுதிகளில் நுழையக் கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது; பேருந்துகளில் பயணம் செய்யக்கூடாது; பள்ளிகளில் அமர்ந்து படிக்கக்கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது என்கின்ற தடைகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு, சட்ட ரீதியாகவே இந்த உரிமைகள் எல்லாம் அனைவருக்கும் உண்டு என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. தந்தை பெரியாராலும், நமது இயக்கத்தாலும், கோயில் கருவறைக்குள் சென்று தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அனைவருக்கும் அர்ச்சனை செய்ய உரிமை உண்டு என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்காகப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கிடைத்திட்ட ஒரு கால கட்டம் இது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொட்டைக்காடு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு வீதிகளில் கோயில் தேர் சென்றிட கோயில் நிருவாகிகள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். இதுவும் ஒரு வகையான தீண்டாமைக் கண்ணோட்டம் என்பதால், தடை செய்பவர்களைத் தீண்டாமை ஒழிப்புக் குற்றத்தின் கீழ் தண்டிக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது.

அந்த நிலையை எட்டுவதற்கு முன் மாவட்ட வருவாய் அதிகாரி இரு தரப்பிலும் பேசி ஒரு சுமுகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் ஜாதி ஆணவக்காரர்களுக்கு, கோயில் நிருவாகிகளுக்கு உயர்நீதிமன்றம் வாய்ப்பு ஒன்றை தாராளமாகக் கொடுத்திருக்கிறது என்றே கருதவேண்டும். இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் அவர்களுக்கும் நல்லது; - ஊரின் பொது அமைதிக்கும் உகந்தது.

வேறு சில ஊர்களில் இது போன்ற பிரச்சினைகள் எழுந்ததுண்டு; பிறகு சமாதானமான முறையில் காரியங்கள் நடைபெற்றதும் உண்டு.

இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று அடிக்கடி அழைக்கும் இந்து முன்னணிக்காரர்களும், ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளும் இந்த இடத்திற்கு வராமல் எங்கு போய் ஒளிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள்தான். அவர்கள் குடியிருக்கும் பகுதியில் கண்டிப்பாகத் தேரோட்டம் நடைபெறவேண்டும் என்று குரல் கொடுக்க ஏன் முன்வரவில்லை? இல்லாவிட்டால் அவர்களுக்கு கைவந்த யாகங்களை நடத்தி, ஆண்டவன் அனைவருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சலாமே! அந்த வகையிலும் ஏன் அவர்கள் முயற்சிக்கவில்லை என்ற இரண்டாவது கேள்வியும் எழுகிறது.

இந்து மதம் 2010 பிறக்கும் தருணத்திலும் தன்னுடைய நஞ்சு உமிழ்தலை நிறுத்தவில்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

இதற்கு மேலும் மூல காரணத்தை இந்த இடத்தில் ஆராய்வது அவசியமாகும். கிராமங்களில் இன்றும் இரு பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒன்று தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதி; இன்னொன்று மேல்ஜாதி என்று கருதப்படுவோர் வாழும் பகுதியாகும். இந்தத் தனித்தனி இருப்பிடங்கள் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். இந்தத் தனித்தனி முறை என்பது பழைய சமூக அமைப்பை நிலை நிறுத்தும் அடையாளங்களாகும். இதில் இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால், சேரியில் வாழும் மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும், வேறு இடத்தில் வாழும் மக்கள் குடியானவர்கள் என்றும் அழைக்கப்படுவதாகும். அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் குடி மக்கள் இல்லையா? எவ்வளவு ஆழமாக, பேதங்கள் என்ற காயங்கள் ஊடுருவியிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

வேறு எப்பொழுதும் சிந்திக்க மறந்தாலும், தந்தை பெரியார் அவர்கள் நினைவு நாளான இன்று இது குறித்து சிந்திக்கவேண்டும். சேரிகளும் கூடாது; மேட்டுக் குடியிருப்புகளும் கூடாது. இரு கூறுப் பகுதிகள் கூடவே கூடாது.

இந்த அடையாளங்கள் மிச்சசொச்சமின்றி முற்றிலும் அழிக்கப்பட்டாக வேண்டும். சமநிலைக் குடியிருப்புகளை அரசே முன்னின்று உருவாக்க வேண்டும். இந்த வகையில் தீர்வு காணப்படாத வரை பொட்டைக் கிராமங்கள் விழுந்து விழுந்து முளைத்துக் கொண்டேதானிருக்கும்.

மூல பலத்தை நோக்கிப் போர் புரிவதுதான் தந்தை பெரியார் முறை என்றார் அறிஞர் அண்ணா. அது இந்த நாளில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நல்ல சிந்தனையாகும்.


-------------------- “விடுதலை” தலையங்கம் 24-12-2009

தமிழர் தலைவரின் தந்தைபெரியார் நினைவு நாள் அறிக்கை


சோதனைகள், துரோகங்களை வென்று தந்தை பெரியார் வழியில் வெற்றி நடைபோடுகிறது கழகம்
சக படை வீரர்களோடு நம் வெற்றிப் பயணம் தொடரும்
தோழர்களே, உங்கள் பங்கை மேலும் கூட்டுங்கள்!

தமிழர் தலைவரின் தந்தை பெரியார் நினைவு நாள் அறிக்கை


தந்தை பெரியார் வழியில் நமது வெற்றிப் பயணம் தொடர்வோம்; தோழர் களின் உழைப்பும், பங்கும் மேலும் மேலும் பெருகட்டும் என்று, தந்தை பெரியார் நினைவு நாளில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று திரும்பிப் பார்க்கிறோம். திகைக்கிறோம், திண்தோள்களோடு நமது பயணத்தை, அந்த ஈரோட்டுப் பாதையில் தொடர்கிறோம் முழு மன நிறைவோடு.

‘அய்யா’ என்று அகிலமே அழைக்கும் அந்த அறிவு ஆசானின் மறைவு 36 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை நிலை குலையச் செய்தது. நீடு துயில் கொள்ளச் சென்ற அவர் நமக்கு நீங்காத் துன்பத்தை, துயரத்தை அல்லவா தந்தார்கள், அந்தப் பகலவன் மறைந்ததால் எங்கும் சோக இருள்மயம்தானே என்று கதறினோம்.

என்றாலும், கடமை அதனினும் முக்கியமல்லவா? களத்தில் நம்மை தனியே அவர்கள் அனாதைகளைப் போல விட்டுவிடவில்லையே. நமக்குத் தலைமை யேற்று அய்யா விட்ட பணிகளை முடிக்க, அதுவும் அவர்கள் போட்டுத் தந்த பாதையிலேயே சென்று முடிக்க அன்னையாரை அல்லவா விட்டுச் சென்றிருக்கிறார்கள் அந்த தியாகச் சுடர் அந்த இருட்டை தனது ஒளியால் நீங்கச் செய்யும் என்று ஆறுதல் கொண்டோம்!

அம்மாவின் அரிய தலைமை

ஆம்; அம்மாவின் தலைமை நமக்கு அரியதோர் புதையலாகக் கிடைத்ததோடு, அய்யாவை 95 ஆண்டு காலம் வாழ வைத்த நம் அம்மா அவர்கள் இயக்கத்தையும் வாழ வைத்தார்கள்.

நெருக்கடி காலச் சோதனைகளிலிருந்து கழகத்தினை கண்ணை இமை காப்பதுபோல் காப்பாற்றினார்கள்.

கொள்கைகளை விட்டுக் கொடுக்காத வீராங்கனை அவர் என்பதற்கு ‘இராவண லீலா’ என்ற அனைத்திந்தியாவையும் அலற வைத்த அந்த ஒரு சாதனை போதாதா?

தொண்டர்களை அரவணைத்து ஆதரவு காட்டி, தாய்ப்பாசத்தோடு கடமையாற்றுபவர் என்பதை, ஜாதி ஒழிப்புப் போரில் தந்தை பெரியார் சிறைக் கோட்டத்தில் இருந்தபோதே நிரூபித்துக் காட்டியவர் அல்லவா!

தனக்கென வாழாது தன் சொத்துகளையும்கூட அய்யாவைப் போலவே அறக்கட்டளையாக்கி இணையில்லாத் தொண்டறத்திற்கும், இறவாப் புகழுக்கும் சொந்தக்காரர் ஆனவர் நமது அம்மா அவர்கள் அல்லவா!

சமுதாய நோய்களோடு மட்டுமா அவர்கள் போராடினார்கள்? அவரது உடலின் நோய்களோடு நாளும் போராடிக் கொண்டு கடமை தவறாது, இயக்கத்தினை ஏறு நடைபோட வைத்தார்கள்.

“குருவி தலையில் பனங்காய்!’’

அத்தகைய இருபெரும் மலைகள் மறைந்துவிட்ட நிலையில், ‘குருவி தலையில் பனங்காயை’ வைத்துவிட்டு (மறைந்த மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பயன்படுத்திய உரையின் ஒரு பகுதி இது) மறைந்தார்கள்.

மாபெரும் தளபதிகள் இருந்து நடத்திய போரை வெறும் சாதாரண போர் வீரனிடம் விட்டுச் சென்றார்கள் நம்பிக்கையோடு!

அந்த நம்பிக்கையை நியாயப்படுத்தவே அந்த இராணுவ வீரன் இன்றும் ஓடோடி உழைக்கிறான் அலுப்பு சலிப்பின்றி!

அதற்குக் காரணம் அவனது திறமையோ, பலமோ இல்லை. அவனது சக படை வீரர்கள், அவர்களிடம் உள்ள (இராணுவக்) கட்டுப்பாடு! கடமை உணர்ச்சி! முகம் சுளிக்காத முழுப் பயணங்கள்!

‘துறவிகளை விட மேலானவர்கள் எனது தோழர்கள் தொண்டர்கள்’ என்ற தந்தை பெரியார் தம் அற்புதப் பாராட்டுரையையே அணிகலனாகக் கொண்ட பாசறை வீரர்கள் அல்லவா அவர்கள்?

துரோகத்தின் தொடர் கதை

1978 இல் துரோகம் தொடங்கியது. இன்றும் தொடர்கிறது_

1978 இல் பொறுப்பேற்றவுடன் துரோகம் இது அம்மா தலைமையேற்றபோது ஒத்திகை பார்க்கப்பட்ட ஒன்றுதான்; இன எதிரிகளின் காலடியில் வைத்துவிடலாம் என்று கருதி வழக்கு மன்றங்கள் சென்றனர். அவதூறு சேற்றினை அள்ளி அள்ளி வீசினர்; இவை தொடர் கதையாயின.

என்றாலும், நமது தோழர்கள், தோழியர்கள், கழகக் குடும்பத்தினர்கள் கவசமாகப் பயன்பட்டார்கள் மலையென வந்தவை பனியென மறைந்தன.

வருமான வரித்துறை என்னும் கணை

அடுத்து வருமான வரித்துறை பாக்கி என்ற பெரும் ஏவுகணை நம்மை நோக்கி! அதற்கும் மூல காரணம் நமது துரோக முன்னாள் கழகத்தவர்கள்தான் என்பது உலகறிந்த ரகசியம்; அய்யா காலத்திலேயே அவர்மீது கணை ஏவப்பட்டது. ‘அம்மா’ காலத்தில் நெருக்கடி காலத்தில் முழு வீச்சோடு கிளம்பி, ‘முடக்கிவிட்டோம் இவர்களது சொத்துகளை’யென்று கொக்கரித்து கும்மாளம் போட்டது ஆரியம்!

அடுத்து அதன் முழு வீச்சும், கடுமையும் போர் உக்கிரமும் நம் காலத்தில் ரூபாய் 80 லட்சம் வரிகள்; இவை அறக்கட்டளைகளே அல்ல என்றனர். இப்படிக் கூறியதை மாற்றி, 80 லட்சம் ரூபாய் வரி பாக்கிகளையும் செல்லாததாக்கி, இவை அறக்கட்டளைதான் என்று அறிவிக்க செய்ததோடு, அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்த அங்கீகாரம் தொய்வின்றிக் கிடைக்கும் நிலையை உருவாக்கினோம். துணிவோடு கழகப் பணிகளையும், கல்விப் பணிகளையும், மருத்துவப் பணிகளையும், மனித நேயப் பணிகளையும் ஊக்கமுடன் செய்து வருகிறோம் கொள்கைப் பயணத்தில்.

வகுப்பு வாரி உரிமை வரலாறு இந்தியாவிலேயே 69 சதவிகித இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு (S.C., S.T., BC., MBC) தனிச் சட்டத்தின்மூலம் கிடைக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்ற தனி வரலாற்றை நம் இயக்கம் வழிகாட்ட அரசுகள் செய்தன. 76 ஆவது இந்திய அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்தோம். முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் 1951 இல் அய்யா மூல காரணம். 1994 இல் கழகம் காரணம் என்பது வரலாறு.

மத்திய அரசிலும் இட ஒதுக்கீடு

மத்தியிலும் தாழ்த்தப்பட்டோருக்குத் தரப்பட்ட இட ஒதுக்கீடு போலவே, பிற்படுத்தப்பட்டோருக்கும் 27 சதவிகித இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பில் என்று லட்சிய வெற்றி பல கட்டப் போராட்டங்-களின் காரணமாகப் பெறப்பட்டது. இன்று மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் கூட செயலாக்கப்படும் நிலை சட்டப்பூர்வமாக!

கடவுள், மத மூட நம்பிக்கைகளை எதிர்த்த போர் தொடர்ந்தபடி உள்ளது.

மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்க, மத்தியில் சுமார் 10 ஆண்டுகால மதவெறி ஆட்சியை மாற்றிட, மக்களாட்சி வருவதற்கு நம் இயக்கத்தின் பங்களிப்பு எவராலும் மறுக்க முடியாத ஒன்று அல்லவா?

வெற்றி உலா வரும் ‘விடுதலை’

இவ்வளவும் எதிர் நீச்சலில்; ஏடுகளும், தொலைக்காட்சிகளும், அதிகாரவர்க்கமும் இன எதிரிகளான ஆரியத்தின் வசம்; என்றாலும் நம் பயணம் தொடர்ந்தபடியே இருக்கிறது!

தேவாசுரப் போரின் சில கட்டங்களே முடிவடைந்துள்ளது; நாம் நம்பிக்கையோடு களத்தில் உள்ளோம்; நம்மிடம் அய்யா தந்த படைக்கலன்களில் ஒன்றுதான் ‘விடுதலை’ நாளேடு. அதன் 75 ஆம் ஆண்டு பவளவிழா வெற்றி உலா வருகிறது.

வெட்கப்படாது நமது தோழர்கள் தெருவில் இறங்கிவிட்டால், இதன் வெற்றி உலா தொடருவது உறுதி!

வளர்கிறது பெரியார் கல்வி நிறுவனங்கள்

கல்வி நிறுவனங்கள் வளர்ந்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமாக ஓங்கி வளர்ந்து, மற்றும் 49 அமைப்புகளாக வளர்ச்சி பெற்று வருகின்றன.

நமது இப்பயணம் தொடரும் சலிப்போ, சங்கடமோ இன்றி!

80 ஆண்டுகளுக்குமேலான இயக்கம், அந்த எழுச்சி குறையாமல் பீடுநடை போட்டுக் கொண்டுள்ளது. தலைவரைப்போல் அதன் பயணம் இளமை முறுக்கோடு முதிர்ச்சி என்ற வளர்ச்சியோடு வாகை சூடுவது நிச்சயம் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறது!

தோழர்களே, தோழியர்களே, உங்கள் பங்கை மேலும் கூட்டுங்கள். கூட்டுறவில்தான், கூட்டுக்குழு மனப்பான்மையில் நம் வெற்றி.

வெற்றி நமதே!

தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை 24.12.2009