கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா?
கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா?
சென்னை சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி
சென்னை, ஜன. 5- கிருஷ்ணன் லீலைகளை தேசிய
விளையாட்டுகளாக அறிவிப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பினார் பேராசிரியர்
சுப.வீரபாண்டியன் அவர்கள்.
12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார்
திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை
அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர்
இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் தா.பாண்டியன்
அவர்களே, எழுச்சித் தமிழர் நண்பர் தொல்.திருமாவளவன் அவர்களே, பேராசிரியர்,
நண்பர் அருணன் அவர்களே, கவிஞர் கலிபூங்குன்றன் அவர் களே, அரங்கில்
அமர்ந்திருக்கின்ற பல்துறை சான்றோர்கள் அனைவருக்கும் என் அன்பு
வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணனின் விளையாட்டுகளையும், தேசிய விளையாட்டுகளாக அறிவித்தால்...
பகவத் கீதையை தேசிய நூலாக
அறிவிக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி என்று இந்திய வெளியுறவுத் துறை
அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் சொன்னதற்குப் பிறகு, அதே வேகத்தில்
கிருஷ்ணனின் விளையாட்டுகளை யும், தேசிய விளையாட்டுகளாக அவர்கள்
அறிவித்துவிடுவ தற்கு முன்பு, ஒரு வேளை அப்படி அறிவித்தால், அவர்கள்
கட்சியில் உள்ள பெண்களே ஏற்றுக்கொள்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை;
அந்தச் சாமியார் பெண்கள் உள்பட.
எனவே, அதற்கு முன்பாக, உடனடியாக செயலில்
இறங்கிவிடவேண்டும் என்கிற அடிப்படையில் இந்தக் கூட்டத்தை, இது சரியான
கூட்டம் என்பதைவிட, சரியான நேரத்தில் கூட்டப்பட்டிருக்கின்ற,
எப்பொழுதும்போல பெரியார் திடலிலிருந்து தொடங்குகிற இந்த முதல் பயணத்தில்
கலந்துகொள்கின்ற நல்ல வாய்ப்பினை நானும் பெற்றமைக்காக மகிழ்கிறேன்.
தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு செய்
தியை, ஒவ்வொரு விதமான விவாதத்தை அவர்கள் கிளப் பிக் கொண்டே இருக்கிறார்கள்.
அதற்கு இன்னொருவித மான உள்நோக்கம் இருக்கக் கூடும் என்பது தெளிவாகத்
தெரிகிறது. இன்றைக்கு நான் இந்த அரங்கிற்கு வருவதற்கு முன்புகூட,
நாடாளுமன்றத்தில் சாக்ஷி மகராஜ் என்கிற பாரதிய ஜனதா கட்சியினுடைய
நாடாளுமன்ற உறுப்பினர், காந்தியார் எப்படி தேசப் பற்று உடையவரோ, அதுபோல,
கோட்சேயும் தேசப்பற்று உடையவர் என்று சொல்லி, பிறகு அதனைத் திரும்பப்
பெற்றுக்கொண்டார் என்பது செய்தி.
காந்தியாரின் தேசப்பற்று அப்படிப்பட்டதா? என்கிற அய்யம் வருகிறது
ஒவ்வொரு செய்தியையும் சொல்லுவது, பிறகு
திரும்பப் பெற்றுக்கொள்வது என்பதை, ஏறத்தாழ இந்த இரண்டு, மூன்று வாரங்களாக
அவர்கள் ஒரு வழக்கமாக வைத்திருக் கிறார்கள். நமக்கே இப்பொழுதுதான்
தெரிகிறது, காந்தியா ரின் தேசப்பற்று அப்படிப்பட்டதா? என்கிற ஒரு பெரிய
அய்யம் வருகிறது.
காந்தியாரின் தேசப்பற்றும், கோட்சேயின்
தேசப்பற்றும் ஏறத்தாழ ஒரே மாதிரியானதுதான் என்று, நாடாளுமன்றத் தில்
சொல்கின்ற அளவிற்கு அவர்கள் இன்றைக்கு வந்திருக்கிறார்கள்.
அதேபோல, ஒவ்வொரு வாரமும், ஒன்று சமஸ்கிருத
வாரம், அதற்குப் பிறகு நிரஞ்சன் ஜோதி வாரம், பிறகு அமித்ஷா வாரம், பகவத்
கீதை வாரம் என்று தொலைக் காட்சியில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நடிகரின்
படத்தைப் போடுவார்களோ அதுபோல, இவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு படத்தை
நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது கீதையின் வாரம்.
இன்றைக்கு அவர்கள் கொண்டு
வந்துகொடுத்திருக் கின்ற அந்த செய்தி, அதுவும் எந்த இடத்தில் அது
சொல்லப்பட்டிருக்கின்றது என்பது ஒரு முக்கியமான செய்தி. டில்லியில்
கொண்டாடப்பட்ட, நீங்கள் கவனமாக கவனிக்கவேண்டும், கீதை எழுதப்பட்ட 5151 ஆம்
ஆண்டு விழாவில்.
வரலாற்றுக்கு எந்தவிதமான சான்றுகளும்
தேவையில் லையா? வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லுவதெல்லாம் வரலாறா?
வரலாற்றுப் பேராசிரியர் அய்யா ராமசாமி அவர்கள் எல்லாம் எதிரில்
அமர்ந்திருக்கிறார்கள். இப்படி யொரு நகைச்சுவையை அவர்கள் படித்திருக்க
முடியாது.
கீதையின் வயது 5151 என்று சொல்லுகிற,
எந்தச் சான்றும் தேவையில்லாமல், அதற்கு ஒரு விழாவை டில்லியில் எடுக் கின்ற,
அவ்விழாவில், இந்திய அமைச்சர்கள் கலந்துகொள் கின்ற நிகழ்வு
நடைபெற்றிருக்கிறது. இதில், இந்தியாவினு டைய அமைச்சர்
கலந்துகொள்கின்றபொழுது, கீதையின் வயது 5151, அதற்கு மேற்பட்டது என்பதாக,
ஒரு பொய், ஒரு புனைவு வரலாற்று ரீதியாக உண்மையாக ஆக்கப்படுகின்ற முயற்சி
வெளிப்படையாகத் தெரிகிறது.
கீதை என்பது ஒரு இடைச்செருகல் நூல் என்றார் அம்பேத்கர்
அண்ணல் அம்பேத்கர் அவர்கள், பல்வேறுவிதமான
ஆதாரங்களோடு மிகச் சரியாக, இந்த ஆண்டிலேதான் கீதை இடைச்செருகலாக
மகாபாரதத்தில் கொண்டுவந்து திணிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதைக்
காட்டுவார். அம்பேத்கர் அவர்கள் காட்டுகின்ற காலம், பால ஆதித்த குப்தனுடைய
காலம். அது ஏறத்தாழ கி.பி.500 அல்லது கி.பி.400 இல் வரவேண்டும். பால ஆதித்த
குப்தன் காலத்தில் தான், கீதை என்கிற ஒரு நூல் ஒரு இடைச்செருகலாக, பவுத்
தத்தினுடைய எழுச்சிக்குப் பிறகு, இங்கே ஜாதிகளினுடைய அந்த இறுக்கம்
தளர்ந்து, ஜாதிகளுக்கு எதிரான ஓர் உணர்வு ஏற்பட்ட நேரத்தில், மறுபடியும்
ஜாதிகளின் இறுக்கத்தை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நூல்தான் பகவத்
கீதை. இதனை அம்பேத்கர் அவர்கள் மிகச் சரியாக ஆய்வு செய்து
சொல்லியிருக்கின்ற காலம், இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம், நம்முடைய பாடப்
புத்தகங்களில் எல்லாம், குப்தர்கள் காலம் பொற்காலம்; நிறுவுக! என்றுதான்
கேள்வி கேட்பார்கள்.
பொற்காலம் யாருக்கு? அவாளுக்கு - இந்தியாவிற்கு அல்ல!
அதாவது விடையை அவர்கள் சொல்லிவிட்டு, அதனை
நிறுவுவதற்கு நாம் வரவேண்டும். குப்தர்கள் காலம் எப்படிப்பட்டது? என்பது
கேள்வி அல்ல. குப்தர் களின் காலம் பொற்காலம், உண்மைதான் குப்தர்களின் காலம்
பொற்காலம், ஒரு கேள்வி விடுபட்டு போய்விட்டது. யாருக்கு? என்கிற கேள்வி.
குப்தர்களின் காலம் பொற்காலம்; அவாளுக்குப் பொற்காலம்; இந்தியாவிற்கு அல்ல.
எனவே, அவாளின் பொற்காலத்திலேயே திணிக்கப்
பட்ட, இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட ஒரு நூல்தான் பகவத் கீதை. 1400, 1500
ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம்.
டாக்டர் கோசாம்பி அவர்கள், தன்னுடைய
வரலாற்று நூலில் எழுதுகின்ற பொழுது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டாக
இருக்கலாம் என்று சொல்கிறார். அப்படிப் பார்த்தால், 1700.
வேண்டாம், டி.ஜி.திலகரும், டாக்டர்
எஸ்.இராதா கிருஷ்ணன் - கீதையைப்பற்றி மிக அதிகமான நூல்களை எழுதி
இருக்கின்றவர்கள் நான் நினைக்கிறேன், ஒன்று டாக்டர் இராதாகிருஷ்ணன்,
இன்னொன்று நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள். இவர்கள் இரண்டு
பேரும்தான்.
அண்மையில், ஒரு நாளேட்டில் ஒன்றினை
எழுதியிருந் தார்கள்; கீதையைக் காப்பாற்றுங்கள் என்று. அவர்கள்
எழுதியிருந்ததன் நோக்கம், இன்றைக்கு இந்த மேடையில் நமக்குப் புரிகிறது.
அவர்கள் கீதையை தேசிய நூலாக ஆக்கக் கூடாது என்கிற நோக்கில், அந்தத்
தலையங்கம் இல்லை.
ஏன் சும்மா இருக்கின்ற கீதையை, இப்படிச்
சொல்லி, ஆளுக்கு ஆள் திட்டுவதற்கு ஒரு ஏற்பாடு செய்கிறீர்களே, என்பதுதான்
அந்தத் தலையங்கத்தினுடைய அடிப்படை.
பாரதீய ஜனதாவிற்கு நாம் நன்றி சொல்லவேண்டும்!
நீங்கள் பார்த்தால், ஒரு 10 நாள்களுக்கு
முன்புகூட, கீதையின் மறுபக்கம் நூல் இந்த அளவிற்கு விற்பனை யாகுமா என்பது
தெரியாது. கீதையின் மறுபக்கம் நூலை இந்த அளவிற்கு விற்பனைக்கு ஏற்பாடு
செய்திருக்கிறார் கள். அதுமட்டுமல்ல, நான் மேடையில் பார்க்கிறேன், தோழர்
தா.பாண்டியன் அவர்களோடு எல்லாம் நீண்ட நெடுநாள்களுக்குப் பிறகு அவரோடு
சேர்ந்து மேடையில் பேசுகின்ற வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதற்காக
நாம் பாரதீய ஜனதாவிற்கு நன்றி சொல்லவேண்டும் அல்லவா!
ஏண்டா, பிரிந்து கிடக்கிறீர்கள்;
கறுப்புச் சட்டையும், சிவப்புச் சட்டையும், நீலச் சட்டையும் இனிமேலும் இந்த
நாட்டில் பிரிந்திருக்கக் கூடாது என்பதை, பாரதீய ஜனதா கட்சி மறைமுகமாக
நமக்கு உணர்த்தியிருக்கிறது என்பதை இந்த மேடையிலேயே நான் பார்க்கிறேன்.
எனவேதான், கீதையைக் காப்பாற்றுங்கள்!
என்று அந்தத் தலைப்பு; தேசிய நூல் என்றெல்லாம் சொல்லி, இதுவரைக் கும்,
பொதுவாக அறிவுக்களஞ்சியம், பொதுக்களஞ்சியம் என்றெல்லாம் புரூடா விட்டுக்
கொண்டிருந்ததற்கு மாறாக, அது அறிவுக்களஞ்சியம் அல்ல; அது எப்படிப்பட்ட நூல்
என்பதை, ஆளாளுக்குப் பேசுவதற்கு ஒரு ஏற்பாடு செய்து விட்டீர்களே, என்கிற
கவலையில், கீதையைக் காப்பாற்றுங் கள் என்று ஒரு தலையங்கத்தை நான்
பார்த்தேன்.
சுப.வீ.யும், அருணனும் வந்து பேச வேண்டும் என்கிற ஆசையினால் அல்ல....
இந்து ஏட்டின் தலையங்கம்கூட, அதுபற்றிய
விமர் சனத்தை எழுதியிருந்தது. இப்பொழுது பல்வேறு தொலைக் காட்சிகளில், பகவத்
கீதைபற்றிய விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஒரு விதத்தில் அது
நல்லது. அப்படி விவாதம் நடைபெறுகின்றபொழுதுதான், கீதையைப்பற்றிய ஒரு
பொத்தாம் பொதுவான ஒரு எண்ணம் உடைந்து, உள்ளே என்ன இருக்கிறது என்பதை, நம்
போன்றோர் எல்லாம் தொலைக்காட்சிகளில் எடுத்துரைப்பதற்கு என்ன காரணம்,
தொலைக்காட்சிகள் நம்மையும் எதற்காக அழைக் கிறார்கள் என்றால், சுப.வீ.யும்,
அருணனும் வந்து பேச வேண்டும் என்கிற ஆசையினால் அல்ல; விவாதத்திற்கு வேறு
தரப்பு ஆட்களும் தேவை என்பதினாலே, அருணை அழைக்கின்ற பொழுதும், என்னை
அழைக்கின்ற பொழுதும், நம்முடைய கருத்துடையவர்களை கவிஞரை அழைக்கின்ற
பொழுதும், அருள்மொழியை அழைக்கின்ற பொழுதும், கீதையைப்பற்றி இன்னொரு பக்கம்
இன் றைக்கு மக்களிடத்தில் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு வாசகர் தொலைப்பேசியில் என்னிடத்தில் கேள்வி கேட்டார்!
கீதை என்பது ஒரு பொதுவானா நூலா?
இந்துக்களின் புனித நூல் என்று சொல்லுவதுகூட மிகவும் பிழையாம். இந்துக்கள்
என்று தங்களை பல பேர் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள்தானே
80 சதவிகிதம் உள்ளனர். நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்
கேற்கும்பொழுது, ஒரு வாசகர் தொலைப்பேசியில் என் னிடத்தில் கேள்வி
கேட்கிறார், இந்துக்கள்தானே 80 சத விகிதம்; ஏன் அவர்களின் நூலை,
இந்தியாவினுடைய தேசிய நூல் என்று ஏற்கக்கூடாது? என்று.
நான் அவரிடம் கேட்டேன், இந்துக்கள் 80
சதவிகிதம் என்கிறீர்களே, இந்துக்களில் சூத்திரர்கள் எத்தனை சதவிகிதம்?
தாழ்த்தப்பட்ட மக்கள் எத்தனை சதவிகிதம்? பஞ்சமர்கள் எத்தனை சதவிகிதம்?
எல்லோரும் சமமாக இந்துக்களில் மதிக்கப்படுகிறார்களா? எல்லோருக்கும் கோவில்
கருவறைக்குள் போவதற்கு அனுமதி உண்டா? நீங்கள் இந்துக்கள் என்று
சொல்லுகின்றவர்கள் 80 சதவிகிதம் என்று சொல்லுகிறீர்களே, 80 சதவிகித
மக்களும் சமமாகக் கருதப்படுகின்ற இடம் ஏதேனும் ஒன்று உண் டென்று சொன்னால்,
அது வாக்குச் சாவடி மட்டும்தானே, நண்பர்களே!
வாக்குச் சாவடிக்கு மட்டும்தான், எல்லோரையும் வருந்தி வருந்தி அழைக்கின்றார்கள்
யாரும் கோவில் கருவறைக்குள்ளே வரக்கூடாது
என்று சொல்பவனும்கூட, யாரும் வாக்குச் சாவடிக்குள் வராதே என்று
சொல்வதில்லை. வாக்குச் சாவடிக்கு மட்டும்தான், எல்லோரையும் வருந்தி வருந்தி
அழைக்கின்றார்களே தவிர, மற்ற இடங்களில் எல்லாம், கோவிலில், தெருவில்
நிறுத்தப்படுகின்ற பொழுது, அதனை எப்படி நீங்கள் ஒட்டு மொத்தமாக ஒரு கணக்காக
எடுத்துக்கொள்ள முடியும்.
கீதை இந்து மதத்திற்கான நூல் இல்லை; அது பார்ப்பனர்களுக்கான நூல்
எனவே, அடிப்படையில் வைக்கின்ற ஒரு
கருத்தைத் தாண்டி, இன்னொன்றை நான் சொல்லுகின்றேன்; அடிப் படையாக
சொல்லப்படுகின்ற செய்தி, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடென்றால், அப்படி
மதச்சார்பற்ற நாட்டில், ஒரு மதத்தினுடைய நூலை, பொது நூலாக அறிவிக்கக்
கூடாது என்பது. ஆனால், அதனைத் தாண்டி நாம் குறிப் பிட விரும்புகின்ற
செய்தி, இது ஒரு மதத்திற்கும் பொது வான நூல் இல்லை. இது இந்து மதத்திற்கான
நூல் என்று திரும்பத் திரும்பச் சொன்னால், அதனுடைய பொய் மையை நாமும்
புகழ்ந்துவிடுகிறோம் என்று பொருள். இது இந்து மதத்திற்கான நூல் இல்லை. இது
பார்ப்பனர்களுக் கான நூல்.
எனவே, மூன்று சதவிகிதமாக இருக்கின்ற
பார்ப்பனர் களுடைய நூலை, 100 சதவிகித மக்களுக்கும் பொதுவான நூலாக ஆக்காதே
என்பதுதான் நமது அடிப்படையான வாதம்.
கீதையைப்பற்றி விளக்கம் சொல்வதானால், இரண்டு வரிகளில் சொல்லலாம்.
அது, வருண அமைப்பை வலியுறுத்துகின்ற நூல்;
வன்முறையைத் தூண்டுகின்ற நூல்
இந்த இரண்டைத் தாண்டி, தத்துவக் குழப்பங்களைக் கொண்டிருக்கின்ற நூல்.
கீதாச்சாரத்தில் இருப்பது சீட்டுக் கம்பெனிகளுக்கு பொருத்தமானது
நான் வேடிக்கையாகச் சொல்லவில்லை. நான் செயலாற்றுகிறவனும் இல்லை; செயல் ஆற்றாமல் இருக்கின்றவனும் இல்லை என்று கண்ணன் சொல்கிறான்.
இதற்கு என்னடா, பொருள் என்றால், இதெல்லாம் தத்துவம், உங்களுக்குப் புரியாது என்கிறான்.
புரியாதவாறே எல்லாவற்றையும் சொல்லிவிட்டு,
கேட்டால், உங்களுக்குப் புரியாது என்று சொல்கிறானே தவிர, இது தத்துவக்
குழப்பங்கள், யோகம்பற்றி, சாங்கியம் பற்றி, பல்வேறு தரிசனங்கள் என்று
சொல்லப்படுகின்ற தத்து வங்கள் பற்றியெல்லாம் உள்ளே ஏராளமான கருத்துகள்
இருக்கின்றன.
எனவே, அதில் அடிப்படையாக இருக்கின்ற
செய்தி இரண்டுதான். அவர்களைக் கேட்டாலே, அவர்கள் சொல்கின்ற செய்தி, மிகச்
சுருக்கமாக, கீதையினுடைய அழுத்தமான சாரம் என்னவென்று கேட்டால்,
பயன் கருதா கருமம் என்பது கீதையின் சாரம்.
கீதாசாரம் என்று கடைகளில் எழுதிப் போட்டிருப் பதற்கும், கீதை புத்தகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கீதாச்சாரம் என்று எழுதியிருப்பதெல்லாம், எது நடந் ததோ, அது நன்றாகவே நடந்தது என்பது போன்றவை யெல்லாம் கீதையில் எங்கேயும் இல்லை.
அந்தக் கீதாச்சாரத்தில் இருப்பது, இந்தச்
சீட்டுக் கம்பெனிகளுக்குத்தான் பொருத்தமானது; நேற்று வரைக் கும் உன்னுடையது
யாருடையதாக இருந்ததோ, அந்தப் பொருள் நாளையில் இருந்து இன்னொருவனுடையது
என்று சொல்கிறபொழுது, நீ போகும்பொழுதே, அந்தக் கடையிலுள்ள அந்த வரியைப்
பார்த்திருக்க வேண்டுமல்லவா!
அடடா, எத்தனை உத்தமமான கருத்து என்று சொல்கிறார்கள்!
அவன் தெளிவாகச் சொல்லிவிட்டானே, இன்றைக்கு
வரைக்கும் உன்னுடையதான பொருள், நாளைக்கு இன் னொருவனுடைய பொருளாக
ஆகிவிடும். நீ எதைக் கொண்டு வந்தாய்; கொண்டு போவதற்கு.
அய்யோ, நான் பணம் அல்லவா கொண்டு வந்தேன் என்று உனக்குத் தோன்றவேண்டும் அல்லவா!
எனவே, கீதாச்சாரம் என்பது அது அன்று; கீதாச்சாரம் பயன் கருதாத கருமம் என்பதுதான்.
அதை அவர்கள் இரண்டாவது இயலிலேயே அதனைச் சொல்லி விடுகிறார்கள்.
இதில் என்ன சிக்கல் என்றால், தொடக்கத்தில்
சொல்கிற பொழுது, அந்தப் பயன் கருதா கருமம் என்பது; கருமம் என்றால் என்ன
என்பதற்கான விளக்கம் நான்காவது இயலில் வெளிப்பட்டு, 18 ஆவது இயலில் முற்று
பெறுகிறது.
ஆனால், சொல்கிறபொழுது, இரண்டாவது இயலில், பயன் கருதா கருமம்; அதுதான் கீதையினுடைய சாரம். இரண்டாவது இயலிலேயே இருக்கிறது.
கடமையைச் செய்வதுதான் உன்னுடைய நோக்கமாக
இருக்கவேண்டுமே தவிர, அந்தக் கடமைக்கான பயன் களை நீ எதிர்பார்க்கக்கூடாது.
இதைத்தான் திரும்பத் திரும்ப, அடடா, எத்தனை உத்தமமான கருத்து என்று
சொல்கிறார்கள்.
நான் முதலில் டாக்டர் இராதாகிருஷ்ணன்
அவர்களைக் குறிப்பிடுகின்ற பொழுது நான் ஒன்றை சொல்லவேண்டும்; அவர்தான்
கீதையைப்பற்றி நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
5151 என்று புதிதாக ஒரு புருடாவை விடுகிறார்கள்!
The Bhagavad Gita என்பதில் இருந்து
தொடங்கி, The Indian Philosophy என்பதிலிருந்து,The Source of Indian
Philosophy என்கிற புத்தகமும், Eastern Religions Western Thought என்கிற
புத்தகமும், எல்லாவற்றிலும், டாக்டர் இராதாகிருஷ்ணன் எழுதியிருக்கின்ற அந்த
வரலாற்றுக் குறிப்புகளை நாம் எடுத்துக்கொண்டாலும்கூட, காரணம், அம்பேத்கர்
சொல்கின்ற செய்தியை நாம் ஏற்கவேண்டாம்; அய்யா பெரியார் சொல்கின்ற கருத்தை
நாம் ஏற்கவேண்டாம்; அவர்களுடைய வரலாற்று ஆசிரியர் டி.ஜி.திலகர்
சொல்லுவதைக்கூட ஏற்கவேண்டாம். நீங்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் சொல்லுகின்ற
அந்தக் கூற்றை எடுத்துக்கொண்டாலும், ஏசு நாதருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே
இந்த கீதை எழுதப்பட்டிருக்கிறது என்பது என்னுடைய கணிப்பு என்று டாக்டர்
இராதாகிருஷ்ணன் The Bhagavad Gita என்கிற புத்தகத்தில் சொல்கிறார்; அதனை
உண்மை என்று வைத்துக்கொண்டாலும், 2500 ஆண்டுகள்தான். ஆனால், இவர்கள் 5151
என்று புதிதாக ஒரு புருடாவை விடுகிறார்கள். வாய்க்கு வந்ததை வரலாறு என்று
சொல்கிறார்கள்.
எனவே, அப்படி டாக்டர் இராதாகிருஷ்ணன்
சொல்லு கின்ற அந்தப் புத்தகத்திலே அவர் குறிப்பிடுவது, அதனு டைய சாரம்
என்பதே, எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டும் என்று ஒரு பொதுநலத்
தொண்டுபோல அதனைக் காட்டுகிறார்.
சிறப்புக் கழிவு விலைகளில்தான் கொடுக்கின்றோம் கீதையின் மறுப்பு நூலினை!
ஒவ்வொன்றிற்கும் இவர்கள் எழுதியிருக்கின்ற
விளக்க உரை இருக்கின்றதே, இன்றைக்கு அய்கான் என்கிற அந்த
நிறுவனத்திலிருந்துதான், மிகக் கூடுதலான மொழிகளில், அவர்களுடைய பிரபு
மகனார் எழுதிய உரைகளோடு, பல்வேறு மொழிகளில் கீதை மொழி பெயர்க்கப்பட்டு,
நாம் இங்கே சிறப்புக் கழிவு விலைகளில்தான் கொடுக்கின்றோம் கீதையின் மறுப்பு
நூலினை. ஆனால், அவர்கள் சும்மாவே கொடுக்கின்றார்கள். நான் இணைய தளத்தில்
பார்த்த பொழுது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை மொழிகளில் அவர்கள்
மொழி பெயர்த்து கீதையைக் கொண்டு போயிருக்கிறார்கள். உலகில் உள்ள பல்வேறு
மொழிகளில், அதனை மொழி பெயர்த்து, எல்லா மொழி பெயர்ப்புகளிலும் அவர்கள்
முன்னுரையில் சொல்லியிருக் கின்ற செய்தி, இந்தியாவைப்
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நூல் இதுதான் என்று.
வைணவத்தினுடைய நூல்தான் கீதை. அதனை சைவர்கள் கூட ஏற்கமாட்டார்கள்
இதனை பகுத்தறிவாளர்கள் ஏற்கிறோமா,
இல்லையா? கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத்தினைச் சார்ந்தவர்கள் ஏற்கி றோமா,
இல்லையா? என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இந்து மதம் என்று தங்களைக் கருதிக்
கொண்டிருக்கின்ற சைவர்கள் ஏற்கிறார்களா? என்று கேட்டுச் சொல்லுங்கள்.
வைணவத்தினுடய நூல்தான் கீதை. அதனை சைவர்கள் கூட ஏற்கமாட்டார்கள். எனவே,
அப்படிப்பட்ட அந்த நூலில், பயன் கருதா கருமம்; எதையும் எதிர்பார்க்காமல்
இந்த உலகத்தினுடைய நன்மைக்காக உழைக்கவேண்டும் என்று
சொல்லப்பட்டிருக்கின்றது என்று இரண்டாவது இயல் சொன்னால், நான்காவது இயலில்
அதற்கு இன்னொரு விளக்கம் இருக்கிறது. இந்தக் கருமம் என்பது, அவரவர்
வருணத்திற்கு உரியது. வருணம் என்பது நான்கு. அந்த நான்கு வருணங்களை
நான்தான் படைத்தேன்.
சதுர் வருணம் மயாசிருஷ்டம்
அந்த நான்கு வருணங்களையும் நான்தான்
படைத்தேன். அதற்கு நம்முடைய உண்மை இதழில் எழுதியிருப்பது போல, அதற்கொரு
வெண்டைக்காய் வியாக்கியானம் வைத்திருக்கிறார்கள்.
இந்த நான்கு வருணம் என்றால், அது குண தருமங் களைப் பொறுத்தது. அடுத்த வரியில் இருக்கிறது.
நான் ஒலிநாடாவில் கேட்டேன், சுகிசிவம்கூட அந்த விளக்கத்தைச் சொல்கிறார்.
நான்கு வருணம் என்பது பிறப்பினால் இல்லை;
அது குண தரும, சுபாவம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டிருக் கிறது. அது
குணத்தையும், அவரவருடைய செயலையும் ஒட்டி பிரிக்கப்பட்டிருக்கிறது.
மறுபடியும் தொடர்ந்து படித்துக்கொண்டே
போனால், 9 ஆவது அத்தியாயத்திலே ஒரு செய்தி இருக்கிறது. நான்
குறிப்பிடுவதற்குக் காரணம், இப்பொழுதெல்லாம் புத்தகங் களைத் தேடுவதில்
மிகப்பெரிய சிரமமில்லை. இணைய தளத்திற்குள் சென்றால், பகவத் கீதையை உடனே
படித்து விடலாம்.
-----------------------------”விடுதலை” 5-1-2015
Read more:
http://viduthalai.in/page-2/93977.html#ixzz3O0GsggbM
************************************************************************************
பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாதாம்! இதுதான் மகாபாரதம் காட்டும் தருமம்!
பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாதாம்!
இதுதான் மகாபாரதம் காட்டும் தருமம்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை
சென்னை, ஜன. 6- பெண்கள் இரண்டு
வரத்துக்கு மேல் கேட்கக் கூடாது என்று மகாபாரதம் காட்டும் தருமம் பற்றி
கேள்வி எழுப்பினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.
12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார்
திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை
அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர்
இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பாவ யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள்
9 ஆவது இயலினுடைய 32 ஆவது பாடல் சொல்லு கிறது; கிருஷ்ணன் சொல்கிறார்:
யாருக்கெல்லாம் நான் என்னிடத்தில்
அடைக்கலம் கொடுத்து, அவர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துக் கொண்டு போவேன்
என்றால், பாவ யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள்
(சூத்திரர்கள்) ஆகி யோரும்கூட என்னிடத்திலே வந்தால், அவர்கள் உயர்ந்த
இடத்தினை அடைவதற்கு நான் உதவி செய்வேன்.
சரி, இந்த இடத்திலே அவர்கள் விடை சொல்ல
வேண்டும். அது குண தருமத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால், பாவயோனியில்
பிறந்த என்று சொன்னால், அது பிறப்பின் அடிப்படை என்பதை அவர்கள் மறைமுகமாக
சொல்கிறார்களா, இல்லையா?
இதையும் தாண்டி, 18 ஆவது இயல்; அதுதான் கடைசி இயல். அங்கே போகிறபொழுதுதான், கொலையை அங்கீ கரிக்கின்ற ஒரு இடத்தை நாம் பார்க்கிறோம்.
அந்த 18 ஆவது இயலில்தான் கிருஷ்ணன் சொல்கிறார்,
ஆணவம் இல்லாத, தூய அறிவுடையவர்கள்
செய்யும் எந்த ஒரு கொலையும் அவர்கள் உலகம் முழுவதையும் எதிர்த்தாலும், கொலை
செய்தாலும் அது கொலையாகாது! அந்தக் கொலைக்கு அவர்கள் இணக்கமானவர்களாகவும்
ஆக மாட்டார்கள் என்று சொல்லுகிற, வன்முறையைத் தூண்டுகிற கருத்தாக அது
இருக்கிறது.
பார்ப்பானுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் என்ன?
அதற்கும் அடுத்ததாக வருகிற அந்தப் 18 ஆவது
இயலில், 41 ஆவது பாடலில் இருந்து 47 ஆவது பாடல் வரை எல்லாம் தெளிவாக,
வெட்ட வெளிச்சமாகி விடு கிறது. பெயர் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. இந்த
நான்கு வருணம் எல்லாம் தாண்டி, குணம் தாண்டி, சுபாவம் தாண்டி, கருமம்
தாண்டி பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று அந்தப் பெயர்களோடு
அவை சொல்லப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, யார் யாருக்கு என்ன என்ன
கடமை? எது அவரவர்க்கு உரிய கருமம்? என்று 44 ஆவது இயலில் இருந்து 47 ஆவது
இயல் வரை சொல்லப்படும்பொழுது, மிகத்தெளிவாக, இவனுடைய - பார்ப்பானுடைய
கருமம்; அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் என்ன?
அவனுக்குத் தவம் செய்வது, படிப்பது!
அடுத்தது சத்திரியனுக்கு
விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் - வீரம் உடையவனாக இருப்பது; எக்காரணம்
கொண்டும், போரில் புறங்காட்டாமல் இருப்பது.
வைசியனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் - வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம் ஆகியன.
சூத்திரனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் எது வென்று கேட்டால், மேலே சொல்லப்பட்டிருக்கின்ற மூவருக்குமான ஏவல் செய்வதுதான்.
அப்படியிருந்தால், அதையெல்லாம் நீக்கிவிடலாமாம்!
இதனைச் சொல்லி முடித்ததற்குப் பிறகு, இதை
நான் அந்தத் தொலைக்காட்சியில் கேட்டேன். நான் அதிகாரத் தைக் குறிப்பிட்டுச்
சொல்லிக் கேட்டேன், இதற்கு என்ன விடை? என்று.
அதற்கு மிக புத்திசாலியான ஊடகவியலாளர் சுதாங் கன் அவர்கள் சொன்னார், அப்படியிருந்தால், அதை யெல்லாம் நீக்கிவிடலாம் என்று.
அதாவது, அது இல்லை என்று அவர்
சொல்லவில்லை. அப்பொழுது எனக்கு தருமியின் நினைவுதான் சட்டென்று நினைவிற்கு
வந்தது. என்னுடைய பாட்டில் எவ்வளவு தவறு இருக்கிறதோ, அதனைக்
குறைத்துக்கொண்டு மீதியைக் கொடுங்கள் என்பதுபோல, வேண்டியதை வைத்துக்கொண்டு,
வேண்டாததை வெட்டிவிடுங்கள் என்று.
ஏதோ, கீதையில் சேர்ப்பதற்கும்,
வெட்டுவதற்கும் இவர் தான் அதற்கான முழு அதிகாரம் உடையவர் என்பதுபோல,
தொலைக்காட்சி நிகழ்வின்போது, தப்பாக இருந்தால், அதனை வெட்டி விடலாம் என்று
சொல்கிறார்.
மிகத் தெளிவான இரண்டாவது இயல் தொடங்குகிற
பொழுது, மிக நல்ல பிள்ளைபோல் தொடங்கி, 18 ஆவது இயலுக்கு வருகிறபொழுது,
வெட்ட வெளிச்சமாக, இந்த நான்கு வருணங்களில், இவன்தான் வேலை இருக்கிறவன்;
இவனுக்கு இதுதான் வேலை. இங்கே இருக்கின்ற சூத்திர னுக்கு இதுதான் கடமை
என்று சொல்லிவிட்டு, இப்பொழுது இரண்டையும் நீங்கள் இணைத்துப் பாருங்கள்;
அவனவனுக்கு உள்ள கருமம் என்று எது என்று
சொன்னதற்குப் பிறகு, மறுபடியும் இரண்டாவது இயலுக்குப் போனால், நீங்கள் பயன்
கருதா கருமம் செய்யவேண்டும்.
இந்தக் கருமத்தையும்கூட, எந்த
எதிர்பார்ப்பும் இல்லா மல் செய்யவேண்டும். இந்தக் கருமம் என்ற சொல்லை,
நடைமுறையில் சரியாகத்தான் சொல்கிறான்.
கீதையில் சொல்கின்ற பொருள் வேறாக
இருந்தாலும், இவன் சொல்கின்ற இந்தக் கருமத்தையும் நாம் என்ன செய்யவேண்டும்
என்றால், எதையும் எதிர்பார்க்காமல் செய்யவேண்டும் என்று, நீ கடமையைச் செய்!
பலனை எதிர்பார்க்காதே!
ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குச்
சென்றேன்; அங்கு ரஜினிகாந்த் அதனை உணர்ந்து எழுதியிருக் கிறாரா? அல்லது
வேறு ஏதாவது மறுப்பாக எழுதி யிருக்கிறாரா? என்பது எனக்குத் தெரியாது.
கடமையைச் செய்! பலனை எதிர்பார்! என்று எழுதி யிருக்கிறார். இன்றைக்கும் அதனை நீங்கள் அங்கே பார்க்கலாம்!
எது உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் செய்யவேண்டும்!
கடமையைச் செய்! பயனை எதிர்பார்க்காதே! நீ
வேலை செய்வதற்காக மட்டுமே பிறந்தவன். ஏவல் வேலைகளை எடுத்துச் செய்யவேண்டுமே
தவிர, நீ எந்தப் பயனையும் எதிர்பார்க்கக்கூடாது என்றுதான், இரண்டாவது
அத்தியாயத்தில் இருக்கின்ற அந்த வரிக்கு என்ன பொருள் என்றால், இதுதான் உன்
கருமம்! இன்னமும் கீதை விளக்க மாகச் சொல்கிறது.
நீ உன் வருணத்திற்குக்
கொடுக்கப்பட்டிருக்கின்ற பணியைவிட, இன்னொரு வருணத்தாருக்கு உரிய பணியை
சிறப்பாகச் செய்வாய் என்றாலும்கூட, அதை நீ செய்யக் கூடாது. உனக்கு
அரைகுறையாகத்தான் தெரியும் என்றா லும், எது உனக்கு
விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் செய்யவேண்டும்.
யார் விதித்தார்? மயாசிருஷ்டம், அதை நான் தான் விதித்தேன் என்று கிருஷ்ணன் சொல்கிறார்.
இதில் என்ன செய்தியை நாம் பார்க்கவேண்டும்
என்றால், இடைச்செருகல்தான் இந்த பகவத் கீதை என்ப தற்கு ஒரு மிகச் சரியான
எடுத்துக்காட்டை அம்பேத்கர் தன்னுடைய புத்தகத்தில் காட்டுகிறார்.
The Revolution and Counter Revolution in
ancient India என்கிற பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர் புரட்சியும்
என்கிற புத்தகத்தில் அவர் ஒன்றைச் சொல்கிறார்:
பகவத் கீதையிலேதான் கிருஷ்ணன் எல்லோரையும்
விட மேலானவராக அவர்தான் எல்லாம். ஆக்கமும் நானே, அழிவும் நானே! நீ
செய்கின்ற புண்ணியம், பாவம் எல்லாம் என்னிடத்திலேதான் வந்து சேரும் என்று
The Supreme God என்று சொல்கிற, எல்லாவற்றிற்கும் மேலான ஒரு இடத்தில்
கிருஷ்ணர் உயர்த்தி வைக்கப் பட்டிருக்கிறாரே, இது இயல்பான மகாபாரதத்தினுடைய
கதைப் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது என்கிறார்
அம்பேத்கர்.
மற்ற இயல்களில் நீங்கள் பார்த்தால், அங்கே கிருஷ் ணனின் நிலைமை மகாபாரதத்தில் என்னவாக இருக்கிறது.
அதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டையும்
காட்டுகிறார். மகாபாரதம் 18 பருவங்களை உடையது. அதில் முதல் பருவம்
ஆதிபருவம். இங்கே இருக்கின்ற நண்பர்கள், இளைஞர்கள் யாரும் மகாபாரதம்
படிக்கவில்லை என்றால், உங்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். படிக்கலாம்
என்று நினைத்தால்கூட ஆதிபருவத்தை விட்டுவிட்டுப் படியுங்கள்; ஆதிபருவத்தைப்
படிக்கின்ற எந்தப் பையனும் உருப்படமாட்டான். ஆதிபருவத்தைப் படிக்க
ஆரம்பித்து, முடிக்கும் தருவாயில் எவனாக இருந்தாலும் காம உணர்ச்சியை அவனால்
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையாகிவிடும்.
இவர்கள் சொல்லி வைத்திருக்கின்ற பல புராணக் கதைகளில் எல்லாமே இப்படித்தான். எந்தக் கதையுமே நாம் சொல்லவில்லை.
தலை என்ன நெல்லிக்காயா? கிள்ளி எறிவதற்கு!
நான் பல கூட்டங்களில் கேட்டிருக்கிறேன்,
ஆக்குகிற கடவுள், காக்கிற கடவுள், அழிக்கின்ற கடவுள் எல்லாவற் றையும்
சொல்லுகிறாய்; காக்கும் கடவுளுக்குக் கோவில் வைத்திருக்கிறீர்கள்;
அழிக்கின்ற கடவுள் சிவனுக்குக் கோவில் வைத்திருக்கிறீர்கள்; ஏன் ஆக்குகிற
கடவுளான பிரம்மனுக்குக் கோவில் இல்லை. கும்பகோணத்தில் மட்டும்தான் உள்ளது.
வேறு எங்கேயும் இல்லை என்றால், சிவபெருமான் வைக்கக்கூடாது என்று
சொல்லிவிட்டார். ஏன் வைக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்.
பிரம்மனுக்கு அடிப்படையில் அய்ந்து
தலைகள்; ஆனால், இப்பொழுது இருப்பது நான்கு தலைகள்தான். சிவபெருமான் ஒரு
தலையைக் கிள்ளி விட்டார். அது என்ன நெல்லிக்காயா? கிள்ளி எறிவதற்கு.
ஏன் கிள்ளி எறிந்துவிட்டார் என்றால், வேறு
ஒரு காரணமும் இல்லை. பார்வதி பிரம்மனுக்கு அத்தை முறை. பார்வதி குளித்துக்
கொண்டிருக்கும்பொழுது, பிரம்மன் எட்டிப் பார்த்ததை, சிவபெருமான்
பார்த்துவிட்டாராம்.
ஏனய்யா, ஒரு கடவுள் செய்கின்ற காரியமா இவை
யெல்லாம். இந்தக் கதையை நாங்களா எழுதினோம்; இந்தக் கதை முழுவதையும்
நீங்கள்தான் எழுதி வைத்திருக் கிறீர்கள். ஒரு கடவுளைப்பற்றிய கதையைப்
படிக்கின்ற பொழுது, மனதில் ஒரு நெகிழ்ச்சி வரவேண்டாமா?
அம்பேத்கர் எடுத்துச் சொல்கின்ற சபா பருவம்!
படிக்கின்ற பொழுதே, என்னடா, இது இவ்வளவு
மோசமாக இருக்கிறதே - அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாக மகாபாரதத்திலும் உண்டு.
அந்த மகாபாரதத்தில் இருக்கின்ற ஆதிபருவம். அதனைத் தாண்டி வந்தால்,
இரண்டாவது பருவம் சபா பருவம். பிறகு ஆரண்ய பருவம்; விராட பருவம். சபா
பருவத்தில் அம்பேத்கர் எடுத்துச் சொல்கின்ற காட்சி எது என்று கேட்டால்,
சபா பருவத்தில் ஒரு விருந்துக்கு தருமன், முதல் மரியாதையாக கிருஷ்ணனை
அழைக்கின்றபொழுது, சிசுபாலன் என்கின்ற ஒரு சாதாரண பாத்திரம், மிகக்
கடுமையாக கிருஷ்ணனை விமர்சனம் செய்கிறார். இது மகாபாரதத்தில் இருக்கிறது.
நீ கிருஷ்ணனுடைய உயரத்தை கீதையில்
காட்டுவதற் கும், சிசுபாலன் அவ்வளவு கோபப்பட்டு, அவ்வளவு குறைவாக சபா
பருவத்தில் கிருஷ்ணனை தருமன் முன்னிலையில் பேசுவதற்கும் இருக்கின்ற
வேறுபாட்டை அம்பேத்கர் கேட்பார், அவ்வளவு பெரிய பாத்திரத்தை இப்படி ஒருவன்,
சாதாரணமான ஒரு மன்னன், அப்படி பேச முடியுமா?
சிசுபாலனுக்கு கிருஷ்ணனின்மேல் இருந்த
கோபம் நியாயமானது. எதற்காக கிருஷ்ணன்மீது சிசுபாலன் கோபப்பட்டான் என்றால்,
சிசுபாலனுக்குப் பார்த்து வைத்திருந்த, அந்த ருக்மணி என்ற பெண், மண
மேடையில் இருக்கின்றபொழுதுதான், கிருஷ்ணனும், அவனுடைய அண்ணனும் சேர்ந்து
ருக்மணியைத் தூக்கிக் கொண்டு போனார்கள். இதனால், சிசுபாலனுக்குக்
கிருஷ்ணனின்மேல் கோபம் இருக்குமா, இருக்காதா?
கண்ணன் யாரைக் காதலித்தான் என்றால், ராதாவைத்தான்!
எனவே, தன் மனைவியை, தனக்கு மனைவியாக மண
மேடையில் உட்கார்ந்திருந்த பெண்ணை, தூக்கிக் கொண்டு போய், ருக்மணியை
மணந்துகொண்டு, அதற்குப் பிறகு ஏழு பெண்களை மணந்துகொண்டு, இதில் என்ன
சிறப்பு என்றால், அந்த ஏழு பெண்களும் ஏற்கெனவே திருமணமானவர்கள். அதற்குப்
பிறகு 10 ஆயிரம் கோபியர்கள்; இத்தனை பேரையும் விட்டுவிட்டு, கண்ணன் யாரைக்
காதலித்தான் என்றால், ராதாவைத்தான் காதலித்தார்.
ஏன்டா, இத்தனை பேர்களுக்கு அப்புறம்,
ராதாவைக் காதலிக்கலாமா? நம்மாள் இன்றைக்கும் ருக்மணி கிருஷ் ணன் என்று
யாராவது பெயர் வைக்கிறானா? ராதா கிருஷ்ணன் என்றுதான் பெயர் வைக்கிறார்கள்.
நண்பர் களே, ஒருவேளை கல்யாணம் செய்தால், நம்மாள்களுக்குப் பிடிக்காதோ,
என்னவோ, தெரியவில்லை!
எனவே, ராதாகிருஷ்ணன்கள் செய்த அந்த
செயல்களையெல்லாம் மிகக் கடுமையாக சிசுபாலன் பேசு கின்ற அந்தக் காட்சி
மகாபாரதத்திலேயே இடம்பெற்றிருக் கிறது.
தருமம் என்று சொல்வதற்குப் பொதுவாக நாம்
வைத்திருக்கின்ற பொருளைப் புரட்டிப் பார்க்கக்கூடாது. வள்ளுவன் சொல்லுகின்ற
அறம் வேறு; அறம் என்பதற்கு இவர்களுடைய தருமம் என்கிற சொல் ஒருநாளும்
பொருந்தாது. அந்த அறத்திற்கும், இந்த தருமத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
காரணம், நீங்கள் தருமன் என்கிற பாத்திரம்
இருக் கிறதே, அந்தப் பாத்திரம்தான், மகாபாரதத்தினுடைய அத்தனை விதமான
இடர்களுக்கும் அடிப்படைக் காரணம். நான் இங்கே சொல்கின்ற இந்தச் செய்தியை,
ஒருமுறை கலைஞர் தொலைக்காட்சியில் கூறியபொழுது, அன் றைக்கு உண்மையிலேயே
வழக்கமாக வருவதைவிட, ஏராளமான தொலைப்பேசி அழைப்புகள். அப்படியா? என்று
கேட்டார்கள். அப்படி கேட்டவர்கள் எல்லோரும் பக்தர்கள்.
நான் மகாபாரதத்தில் இருக்கின்ற
கதையைத்தான் சொன்னேன். தருமன் சூதாடி எல்லாவற்றையும் இழந்தான் என்பதுதான்
பொதுவாக அறியப்பட்டிருக்கின்ற செய்தி.
ஆனால், அவன் முதல்முறை சூதாடி, எல்லாவற்றை யும் இழக்கவில்லை என்பது அழுத்தமாக நான் சொன்ன செய்தி.
தருமன் சூதாடினான்; எல்லா தம்பிகளையும்
இழந்தான்; சொத்து சுகங்களை இழந்தான்; படைகளை இழந்தான்; கடைசியாக துரோபதையை
இழந்தான். துரோபதையை இழந்ததற்குப் பிறகு, துரோபதி அரங்கத்திற்கு வந்து,
பீஷ்மர் உள்பட அத்தனை பேரும் இருக்கின்ற சபையில், ஒரு கேள்வியை, பாஞ்சாலி
கேட்டாள்.
தருமன் என்னை பணயம் வைத்து இழந்தான் என்று
சொல்லுகிறீர்களே, அவன் தன்னை இழந்த பின் என்னை இழந்தானா? அல்லது என்னை
இழந்த பின் தன்னை இழந் தானா? என்று கேட்டாள்.
அந்தக் கேள்வியில் ஆயிரம் அர்த்தங்களும், அழுத் தங்களும் இருக்கின்றது.
தன்னை இழந்த பின்தான் உன்னை இழந்தான் என்றவுடன், மறுபடியும் பாஞ்சாலி கேட்டாள்,
அவன் தன்னையே இழந்த பிறகு, என்னை இழப்பதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அடிப்படையில் அவனே அடிமையான பிறகு, இன் னொருவரை எப்படி அவன் பணயம் வைத்து விளையாட முடியும்?
அதற்கு அந்த அரங்கில் யாரும் விடை சொல்ல
வில்லை. பிதாமகர் என்று சொல்லப்படுகிற பீஷ்மர் சொன்னார், மகாபாரதத்தில்
இருக்கிறது நண்பர்களே, குறிப்பாக நம் வீட்டில் போய் சொல்லுங்கள்.
பீஷ்மர் சொன்னார், ஆண் அடிமையாக ஆனாலும், மடையனாக இருந்தாலும், அவன் எந்த நிலையில் இருந்தாலும் அவன் மனைவி அவனுக்கு அடிமைதான்.
மகாபாரதம் சொல்லித் தருகின்ற சமூக வாழ்வில் செய்தி இதுதான்
உன்னைப் பணயம் வைப்பதற்கு அவனுக்கு உரிமை உண்டு
ஒருவன் ஆண் மன்னனாக இருந்தாலும், சாதாரண
குடிமகனாக இருந்தாலும், அடிமையாக இருந்தாலும், எந்த நிலையில் ஆண்
இருந்தாலும், அவன் மனைவி அவனுக்கு அடிமைதான். எனவே, உன்னைப் பணயம்
வைப்பதற்கு அவனுக்கு உரிமை உண்டு என்று பீஷ்மர் சொன்னார்.
எல்லாம் இழந்த பிறகு, என்ன நடந்தது
என்றால், திருதராஷ்டிரன், துரியோதனிடம் சொன்னான், இது நியாயமில்லை. ஒருவனை
சூதாட்டத்திற்கு அழைத்து, எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுப் போ என்று சொல்ல
முடியாது. துரோபதியை, அந்தப்புரத்தில் அடிமைப் பெண்ணாக அனுப்பிக்
கொண்டிருக்கின்ற வேளையில், தடுத்து நிறுத்தி, வேண்டாம், பாஞ்சாலி; நீ
என்னிடத்தில் இரண்டு வரம் கேள் என்று திருதராஷ்டிரன் சொன்னான்.
இது மகாபாரதத்தில் உள்ள காட்சி.
பெண்கள் இரண்டு வரத்திற்குமேல் கேட்கக்கூடாது!
பாஞ்சாலி வரம் கேட்டாள்; முதல் வரம், தருமனை விடுவிங்கள் என்றாள்.
திருதராஷ்டிரன், விடுவித்தோம் என்றான்.
இரண்டாவது வரம் கேள் என்று கேட்டான்;
தம்பியர்களையும் விடுவியுங்கள் என்றாள்.
விடுவித்தேன் என்று சொன்னான். மூன்றாவது வரமும் கேள் என்று திருதராஷ்டிரன் சொன்னபொழுது,
பாஞ்சாலி சொன்னாள், இல்லை இல்லை பெண்கள் இரண்டு வரத்திற்குமேல் கேட்கக்கூடாது என்று.
திருதராஷ்டிரன் நல்ல மனிதனா? சூதாடிய தருமன் நல்ல மனிதனா?
அப்படியும் திருதராஷ்டிரன், இல்லை இல்லை,
நானாகவே வரம் தருகிறேன். கைப்பற்றிய எல்லாவற் றையும் திருப்பிக்
கொடுத்துவிடுகிறோம். படை, நாடு, செல்வம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
நீங்கள் ஊர் திரும்பலாம் என்று சொன்ன திருதராஷ்டிரன் நல்ல மனிதனா? சூதாடிய
தருமன் நல்ல மனிதனா? நண்பர்களே, நன்றாக நீங்கள் சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
என்ன நடந்தது என்றால், அதற்குப் பிறகு
இவர்கள் போய்க் கொண்டிருக்கின்றபொழுது, சகுனி துரியோதனை அழைத்து, இப்படி நீ
அவர்களை அனுப்பி விட்டாயே! அவர்கள் சபதம் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள்;
என்றைக்கு இருந்தாலும் உனக்கு ஆபத்து என்கிறார்.
என்ன செய்யலாம் மாமா என்கிறான் துரியோதனன்.
மறுபடியும் சூதாட்டத்திற்கு அழைக்கலாம் என்கிறான் சகுனி.
எப்படி வருவான்? மனநிலை சரியாக இருக்கின்ற எவனாவது வருவானா?
ஆனால், சகுனி சொன்னான், எவன் வருவானோ இல்லையோ, தருமன் வருவான்.
சகுனி சொன்ன அந்த செய்தி இருக்கிறது.
சூதாட்டம் என்றால், தருமனுக்கு அவ்வளவு பிரியம். பாருங்கள் தருமன் யார்
என்று தெரிந்துகொள்ளுங்கள்!
சூதாட்டத்தில் தருமனுக்கு அத்தனை ஆசை உண்டு. மறுபடியும் அழைத்தால் வருவான்.
திருதராஷ்டிரன் மறுபடியும் பாண்டவர்களை அழைக்கக்கூடாது என்கிறபொழுது,
இல்லை, இல்லை, மறுபடியும் நாங்கள் எதையும்
பணயமாக வைக்கச் சொல்லவில்லை. ஒரே ஒரு நிபந்தனையை வைக்கிறோம். தோற்றுப்
போகிறவர்கள், 12 ஆண்டுகள் காட்டுக்குப் போகவேண்டும். ஒரு ஆண்டு அஞ்ஞான
வாசம்; மறைமுகமாக, தலைமறைவாக இருக்கவேண்டும். இதுதான் பந்தயம்; வேறு
எதையும் இழக்கச் சொல்லவில்லை என்று சொல்லி,
மறுபடியும், போகிற பாதையில், அவர்கள் ஊர்
போய்ச் சேரவில்லை. போகிற பாதையில், உங்களை மறுபடியும் சூதாட அழைக்கிறார்கள்
என்றவுடன், திரும்பி வந்தவ னுக்குப் பெயர்தான் தருமன் என்பது. இதுதான்
தருமமா? என்று மக்களிடம் கேளுங்கள்.
நல்லதுதான் செய்திருக்கிறான் பாரதீய ஜனதா.
நாம் சும்மா இவையெல்லாவற்றையும் பேச முடியுமா? இதை வைத்துக்கொண்டு, இவை
எல்லாவற்றையும் பேசுவதற்கு, மிக அருமையான வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள்.
மறு படியும் தருமர் வந்து, ஆடித் தோற்றுத்தான், 12 ஆண்டுகள் வனவாசம்;
அதுதான் மூன்றாவது பருவம் ஆரண்ய பருவம்.
ஆரண்ய பருவத்தில் என்ன நடந்தது என்று நான் உள்ளே சென்றால், அடுத்து அய்ந்து பேர் இங்கே பேசவேண்டும்; நேரம் இருக்காது.
எனவே, இந்தக் குருசேத்திரம் என்று சொல்லுகின்ற கீதையில் நடந்த யுத்தமே நியாயமற்ற யுத்தம். அதனை மட்டும் சொல்லிவிடுகிறேன்.
அந்த யுத்தமே நியாயமற்றது. நீங்கள் எண்ணிப் பாருங்கள், பாண்டவருக்காகத் தூது வந்த கிருஷ்ணன் என்ன கேட்டான்?
எவனாவது உரிமை உள்ளவன் இப்படி கேட்பானா?
எங்களுக்கு உரிமையான பகுதியை, பாதி நாட்டை கொடு என்றுதானே கேட்கவேண்டும்.
உரிமை உள்ளவன் அப்படித்தான் கேட்பான். ஆனால், கிருஷ்ணன் என்ன கேட்டான்?
அய்ந்து நாடு கொடு; இல்லையென்றால், அய்ந்து ஊர்களைக் கொடு.
எவனாவது உரிமை உள்ளவன் இப்படி கேட்பானா? கிடைத்தவரை லாபம் என்பது இதுதான்.
அய்யா பெரியார் அவர்கள் சொல்வார், பார்ப்பனியம் என்பதே பலித்தவரை என்று. பலித்தவரை என்பதுதான் பார்ப்பனியம்.
அய்ந்து நாடு கொடு; இல்லை அய்ந்து வீடாவது கொடு; இல்லை அய்ந்து டம்ளராவது கொடு என்பது என்ன நியாயம்?
ஏன் அப்படி கேட்டார்கள் என்றால், அந்த நாடு எந்த விதத்திலும் பாண்டவர்களுக்கு உரியது அல்ல.
திருதராஷ்டனின் தம்பி பாண்டுவாக
இருக்கலாம்; ஆனால், நான் சொல்வதைக் கேட்டுக் கோபித்துக் கொள்ளக்கூடாது.
கர்ணன் உள்பட, எந்தப் பயலும் பாண்டுவுக்குப் பிறக்கவில்லை என்றுதான்
மகாபாரதம் சொல்கிறது.
இந்திரனுக்குப் பிறந்தான், சந்திரனுக்குப்
பிறந்தான் என்று சொன்னால், அப்புறம் எப்படி அவர்கள் பாண்டவர்கள்.
பாண்டுவுக்கே பிறக்காதவர்கள், பிறகு எப்படி பாண்டவர்கள். மனைவியைத்
தொட்டால், பாண்டுவின் தலை வெடித்துவிடும் என்ற ஒரு சாபத்தை வைத்துத்
திரிகின்றான்.
யார் யாருக்கோ பிறந்தவர்களுக்கு இந்த நாடு எப்படி சொந்தமாகும்?
ஆகவே, குருசேத்திரப் போரும் நியாயமில்லை;
அதில் இவர்கள் பேசுகின்ற எந்தச் செய்தியும் நியாயமில்லை. முழுக்க முழுக்க
வருண அமைப்பை நிலை நிறுத்துகிற வன்முறையைத் தூண்டுகிற ஒரு நூல் தேசிய நூலாக
இல்லை, பாட நூலாக இருக்கக் கூடிய தகுதியும் அற்றது என்று சொல்லி
வாய்ப்புக்கு நன்றி சொல்லி, என் உரையை முடிக்கின்றேன்.
- இவ்வாறு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.