Search This Blog

3.8.14

பாரதியாருக்கும் வ.உ. சிதம்பரனாருக்கும் தமிழ்மொழி தொடர்பான ஒரு சிக்கல்


பாரதியாருக்கும் வ.உ. சிதம்பரனாருக்கும் தமிழ்மொழி தொடர்பான ஒரு சிக்கல் - முரண்பாடு வந்தது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனாலும் அப்படி ஒரு மோதல் நடந்தது என்பது மட்டும் உண்மையே!

ஞானபாநு என்னும் ஓர் மாத இதழ் அதில் (1915 ஜூலை) சுப்பிரமணிய பாரதியார் கட்டுரை ஒன் றினை எழுதியிருந்தார். சமஸ்கிருதம் உள்ளிட்ட சில மொழிகளில் க,ச,ட,த,ப எனும் எழுத்துக்களில் நான்கு வகை ஒலி உண்டு; தமிழை எடுத்துக் கொண் டால் அவ்வாறு இல்லை. க என்ற ஒரே ஒலியுடைய ஒரு எழுத்துத்தான் உண்டு. க,ச,ட,த,ப எழுத் துக்களும் அப்படியே தமி ழில் ஒரே ஒலி உடையன. இது தமிழில் உள்ள ஒரு குறைபாடு என்றும், இதனைப் போக்கிட சில குறியீடுகளைப் பயன் படுத்தலாம் என்றும் இதில் அரவிந்தரும் என்னோடு உடன்படுகிறார் என்றும்  பாரதியார் ஞானபாநு வில் எழுதியிருந்தார்.

அதே இதழில் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நமது வ.உ. சிதம்பரனார் கட்டுரை ஒன்றினைத் தீட்டியிருந்தார்.

தெய்வ பாஷை என்றும், பூரண பாஷை என்றும், சொல்லப்படுகிற சமஸ்கிருத பாஷை எழுத் துக்களோடும், பல புதுமை களையும், திருத்தங்களை யும் கொண்டுள்ள பாஷை என்று சொல்லப்படுகின்ற வங்காளிப் பாஷை எழுத் துக்களோடும் ழ,ற,ன,தி.ஞீ.  என்னும் எழுத்துக்களை யாவது, அவற்றின் ஒலி களைக் குறிக்கும் குறி களையாவது சேர்ப்பதற்கு நமது நண்பர்கள் பாரதியார் அவர்களும், அரவிந்தர் அவர்களும் முயற்சித்து வெற்றி பெறுவார்கள் ஆயின் அவர்கள் நமது தமிழ் மக்களுக்கு ஒப்பற்ற வழி காட்டிகள் ஆவார் கள். பின்னர் நம் தமிழ் மக்கள் அவர்களைப் பின்பற்றத் துணிவார்கள் என்று பளிச் சென்று பதில் அடி கொடுத்தார்.

இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? என்று மேலெழுந்தவாரி யாகப் படிப்பவர்களுக்குத் தோன்றக் கூடும். நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் ஆரிய - திராவிட உணர்வு இதற்குள் இழையோடுகிறது.


சமஸ்கிருதத்தில் உள்ள ஒலி அமைப்புகளைத் தமிழில் திணிக்க வழி செய்ய வேண்டும் என்று கூறுகிற பாரதியார் யார்? அரவிந்தர் யார்? என்பதை யும், அதற்கு மறுப்புக் கூறி எழுதியுள்ள வ.உ.சி.யார் என்பதையும் தெரிந்து கொண்டால் இதனுள் இழையும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார், சமஸ்கிருதம் - தமிழ் இவற்றிற்கிடையே நீண்ட காலமாக இருந்துவரும் மோதலின் நுணுக்கம் என்ன என்பது நுணுக்க மாகவே புரியும்.

சமஸ்கிருத சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இது ஒரு கூடுதல் தகவலாகும்.

                       
குறிப்பு: தமிழில் உள்ள இந்த க,ச,ட,த,ப எனும் எழுத்துக்கள் இடத்துக் கேற்ப இயல்பாகவே ஒலியில் மாற்றம் ஏற்படு வதுதான் தமிழின் தனிச் சிறப்பாகும். குழந்தை என்று சொல்லும்போது எழும் குவின் ஒலிக்கும். தூங்கு என்பதில் வரும் குவுக்கும் ஒலி வேறுபடு வதை ஒரு முறை சொல் லிப் பாருங்கள் வேறுபாடு புரியும்.


----------------- மயிலாடன் அவர்கள் 2-8-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2.8.14

லஞ்சம் பற்றி பெரியார்



நமது நாட்டிடை இது காலை அரசாங்க ஊழியர்களுக்குள்ளும் பொது மக்களுக்குள்ளும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகவும் எளிய வழக்கமாகப் போய்விட்டது. மக்களிடை இவ்வித வழக் கங்களை இழிவாய்க் கருதும் மனப்பான் மையும் மாறி விட்டது. அரசாங்க ஊழியர்கள் என்போர் ஓர் ஊரினின்றும் மற்றொரு ஊரிற்கு மாற்றப்பட்டு வந்தால் முதன் முதலாகஅந்த ஊரில் லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் தரகர்களைத் தேடுவதுதான் அநேகமாய் அவர்களது வேலையாய் இருக்கின்றது.

பொது மக்களும், அரசாங்க நீதிமன்றங்களிலோ நிர்வாக மன்றங்களிலோ தங்களுக்கு ஏதேனும் அலுவல்கள் ஏற்பட்டால் லஞ்சம் வாங்கிக் கொடுக்கத் தரகர்களைத் தான் முதலில் நாடுகிறார்கள். இவ்விரு கூட்டத்தாரிடையினும் லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் தற்காலம் பெரும்பாலும் வக்கீல் கூட்டங்களிலிருந்தே தரகர்கள் தெரிந்தெடுக்கப்படுகின்றனர்.

இதனால் நியாயமன்றங்களில் விவகா ரங்களைத் தாக்கல் செய்ய வேண்டிய கட்சிக்காரர்கள் நியாயாதிபதிகளுக்குத் தரகர்களாய் இருக்கும் வக்கீல்கள் யாரோ, அவர்களிடமே அதிகம் செல்லுகின்றனர் சில வக்கீல்களும் தங்களுக்கு இவ்வளவு நியாயாதிபதிக்கு இவ்வளவு என்று பேசியே தொகை வாங்குகின்றனர்.

சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குகின்றனர். சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை என்று சொல்லிக்கொண்டு சிற்சில வக்கீல்களிடம் சிநேகமாகவும் தாட்சண்ய மாகவும் பாரபட்சமாகவும் நடந்து கொண்டு அதன் மூலமாக வக்கீல்களுக்கு வரும்படி செய்து வைத்து அவர் களிடம் பணமாக அல்லாமல் வேறு வழிகளில் தாங்கள் லாபம் அடைகின் றனர்.

இதை வழக்கத்தில் லஞ்சம் என்று சொல்லாவிடி னும், இது போன்ற செயல்கள் உண்மை யான லஞ்சத்தின் பலனையே உண்டாக்கு கின்றது. தாட்சண்யம் காட்டப்படும் வக்கீல்கள் இதன் பலனாய் லஞ்சம் என்கிற பெயரால் இல்லாவிடினும்,வேறு வழியில் கட்சிக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்றனர். இதனால் அநேகமாய் இவ்வழக்கமுள்ள வக்கீல் களிடம் தான் கட்சிக்காரர்கள் செல்லு கின்றனரே அன்றி, கெட்டிக்காரர்களாக வும் யோக்கியமாகவுமுள்ள வக்கீல்களி டம் செல்லுவதில்லை.

அரசாங்க ஊழியர் என்று சொல்லும் அதிகாரிகளும் லஞ்சம் வாங்குவதில் பலவித தத்துவங் களை உபயோகிக்கின்றனர். சிலர் இரண்டு கட்சிக்காரரிடம் வியாபாரம் பேசுவது போல் பேசி, அதிக தொகை கொடுத்த வனுக்கு அனுகூலமாகவே தங்கள் தீர்ப்பைக் கொடுக்கின்றனர். சில சமயங் களில் இரண்டு பேரிடமும் வாங்கிக் கொண்டு இருவரையும் திருப்தி செய்யும் படி ராஜி செய்து அந்த ராஜிக்கு ஏற்ற விதமாய் தங்கள் தீர்ப்பை அளித்து விடு கின்றனர்.

சில தருணங்களில் ஒரு கட்சிக்கார ருக்குத் தெரியாமல் மற்றொரு கட்சிக்கார ரிடம் இவ்வளவிற்குக் குறைவில்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும், இன்னொரு கட்சியாரிடம் இவ்வளவுக்கதிகமல்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும் இருவரிடமும் வாங்கிக் கொள்ளுவதும், சில தருணங் களில் பெரிய தண்டனை செய்ய வேண்டி யதையோ, பெரிய தொகைக்குத் தீர்ப்புச் செய்ய வேண்டியதையோ குறைந்த அளவிற்குச் செய்வதாய்ச் சொல்லி வாங்குவதும், இன்னும் சில சந்தர்ப்பங் களில் தங்களிடமுள்ள விவகாரங்களில் நியாயம் இன்னாருக்குத்தான் என்று தெரிந்து அந்தக் கட்சியாரிடம் வாங்கிக் கொள்ளுவதும் இப்படி இன்னும் அநேக விதமாய் வாங்கப்படுகின்றன.

இப்படி வாங்கப்படும் லஞ்சங்கள் பெரும்பான்மை யாய் முழுவதும் தாங்களே அடைவ தில்லை. மேல் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க நேரிட்டு விடுகின்றது. அந்தப் பங்கு என்பது தொகையாகவோ, சப் ளைகள் மூலமாகவோ, சாமான்களாகவோ, வேறுவிதமாய் அவரைத் திருப்தி செய் வதன் மூலமாகவோ பங்கு செலுத்தி யாகிவிடுகின்றது.

அப்படிச் செலுத்தி மேலதிகாரிகளுக்கு நல்லவனாய் நடந்து கொண்ட இவ்வதிகாரிகள் வெகு தைரியமாய் தங்களுடைய தீர்ப்புகளைக் கடைவைத்து வியாபாரம் செய்வது போல் விற்று வருகின்றனர். பொது ஜனங்களும் கடைகளில் கத்தரிக்காய், வாழைக்காய் விலைபேசி வாங்குவதுபோல தீர்ப்பை விலைக்கு வாங்குகின்றனர்.

இவை பெரும்பாலும் வெளிப்படையான ரகசியங் களாய் விளங்குகின்றன. வியாஜ்யங்களும், விவகாரங்களும் அதிகமாகிக் கொண்டு வருவதற்கு நமது நாட்டு வக்கீல்கள் முக்கியக் காரண மென்று சொல்லுவது ஒரு பக்கமிருந்த போதிலும், இந்த லஞ்சம் வாங்கலும் கொடுக்கலும் அதற்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்லவென்றே சொல்லலாம்.

மேல் அதிகாரிகள் என்று சொல்லப்படு வோர் லஞ்சம் வாங்கும் கீழ் அதிகாரி களிடம் பங்கு வாங்காவிட்டாலும் குருட்டுத்தனமான அபிமானத்தாலோ, வேறு சிபாரிசின் காரணங்களாலோ, தங்கள் இஷ்டம் போல் நடக்கிறார்கள் என்பதினாலோ, அல்லது நாம் தாம் வாங்குவது போலவே அவரும் வாங்கி விட்டுப் போகட்டும் என்று கருணை காட்டுவதினாலோ, தம்முடைய  மேல் அதிகாரிக்கு வேண்டியவராகவும் இருக் கிறார்கள் என்ற காரணத்தினாலோ, அன்றியும் ராஜீய விஷயங்களில் சர்க்காருக்கு அனுகூலமாய் அவரது மனசாட்சிக்கு விரோதமாய் அநேகம் பேரைத் தண்டனை செய்துள்ளார் என்றோ, வெள்ளையருக்கும் இந்தியருக் கும் நடந்த விவகாரங்களில் வெள்ளைக் காரருக்கு அனுகூலமாகத் தீர்ப்புச் செய்துள்ளார் என்றோ இத்தியாதி காரணங்களால், எவ்வளவு வெளிப் படையாயும், எவ்வளவு மக்கள் வருந்தும் படியாயும், லஞ்சம் வாங்கினாலும் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்.

லஞ்சம் என்று சொல்லுவது சாதாரணமாய் போலீஸ், ரிவனியூ, இஞ்சினியர், வைத்தியம், பார்ட், சால்ட் முதலிய இந்த இலாகாக் களுக்குப் பிறவிக்குணமாய் இருந்து அரசாங்கத் தாலும் பொதுமக்களாலும் சகஜந்தான் எனக்கருதி கவனிக்காமலே அனுமதிக்கப்பட்டு வந்திருந்த போதிலும், ஜனங்களின் வாழ்வு -  தாழ்விற்குப் பெரிதும் காரணமாயிருக்கிற சிவில், கிரி மினல் இலாகாக்களில் கூட தலைவிரித் தாடி வருகின்றன.

இவர்களில் சிலர் பணமும், நோட்டும் வாங்கினால்தான் லஞ்சமென்றும், வேறுவித காரியங்கள் என்ன செய்தாலும் லஞ்சம் இல்லை என்கிற எண்ணத்துடனேயே தங்கள் காரியங்களைச் செய்கின்றனர். சாதாரணமாய் உத்தியோகஸ்தரில் லஞ்சம் வாங்காதவரை மற்ற அதிகாரிகள் முட்டாள் என்றே கருதுகின்றனர்.

அநேக மாய் அவர்களுக்கு மேல் உத்தியோகமும் கிடைப்பதில்லை. தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்கிற அகம்பாவத் தால் மேல் அதிகாரிகளை இவர்களும் இலட்சியம் செய்யாதிருந்துவிடுவது. அதனால் மேல் அதிகாரிகள் இவர்களைக் கெடுத்து விடுகின்றனர். இவை இப்படி யிருக்க, அதிகாரிகளிலேயே சிலரும், படித்தவர்களில் சிலரும் தாங்கள் ஒரு குற்றமும் செய்யாமல் உத்தியோகமும் மேல் உத்தியோகமும் சம்பாதிப்பதற்கா கவே ஆயிரம் பதினாயிரக்கணக்காக வும் கொடுக்க வேண்டி ஏற்பட்டுப் போய் விடு கின்றது.

சில உத்தியோகஸ்தர்கள் வாங்க இஷ்டப்படாதவர்களாயிருந் தாலும் மேல் உத்தியோகஸ்தர்களுக்குக் கொடுக்கவும், செலவு செய்வதற்கும் என்றே லஞ்சம் வாங்க வேண்டியவர்களாய் விடுகிறார் கள். சில இலாகாக்களில் லஞ்சம் மாமூ லாகவே கருதப்பட்டு வருகின்றது. சில அதிகாரிகள் தாம் வாங்காதிருந்தால் போதும் என்று, மற்றவர்கள் வாங்குவது நன்றாகத் தெரிந்திருந்த போதிலும் கவனியாமலே இருந்து விடுகிறார்கள்.

இவ் விதமாக அதிகாரிகளின் யோக்கியதை கவனிக்கத் தகுந்த அளவிற்குப் பெருகி வருகிறது. எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தால் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்று சொல்லுவதற்கு ஒரு தொகையே இல்லாமல் போய் விட்டது.

சில்லரை உத்தியோகஸ்தர்கள் வாங்கும் லஞ்சம் அவ்வளவு கெடுதியை உண்டாக் காவிட்டாலும், அதன் விவரங்களைப் பற்றிப் பின்னர் எழுதுவோம். கவுரவ உத்தியோகஸ்தர்களும் லஞ்சம் வாங்கு வது சகஜமாகி விட்டதல்லாமல், அரசாங் கமும் அனுமதித்து விடும் போலிருக்கிறது. லஞ்சம் விஷயமாய் ஒரு பெரிய அதிகாரிக்கும், ஒரு பெரிய மனிதருக்கும் நடந்த சம்பாஷணையை மாத்திரம் எழுதிவிட்டு இதை முடிக்கிறோம்.

---------------- தந்தை பெரியார்-- "குடிஅரசு", கட்டுரை, உரையாடல் 26.07.1925

இதுதான் வால்மீகி இராமாயணம் - 16


இதுதான் வால்மீகி இராமாயணம்
{இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.}



அயோத்தியா காண்டம்

முதல் அத்தியாயம் தொடர்ச்சி 

அவர்களுடைய எண்ணத்தை அறிந்தும் அறியாத வனைப் போலப் பாசாங்கு பண்ணி, அரசர்களே! நான் உங்களை எல்லாம் சரியாக அரசாண்டு வரும்போது இராமனுக்கு ஏன் முடி சூட்டச் சொல்லுகிறீர்கள்? உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்டான்.


அப்பொழுது அவ்வரசர்களும் குடி மக்களும் அவனை நோக்கி, இராமன் உத்தமமான குணங்களோடு நடக்கிறான். அவன் மிகவும் கேவலமானவர் களோடுங்கூட நெருங்கிப் பழகுகிறான். எல்லோருடனும் பிரியமாகப் பேசுகிறான். கிராமங்கள் நகரங்களைப்பற்றிப் பகைவர்களுடன் போராட வேண்டியிருந்தால், இலக்கு வனை அழைத்துக் கொண்டு சண்டைக்குப்போய் வெல்லாமல் திரும்புவதில்லை. போர் முடிந்த பிறகு ஊருக்கு வந்து குடிகளைப் பார்த்து, உங்கள் மனைவி மக்கள் யாவரும் சுகமா? என்று தந்தை குழந்தைகளை விசாரிப்பதுபோல சுகம் விசாரிப்பான். ஆதலால் இவ்வளவு நற்குணங்களோடு விளங்கும் இராமனுக்கு முடிசூட்ட நாங்கள் விரும்புகிறோம் என்று கேட்டுக் கொண்டார்கள். இதைக் கேட்ட தசரதன் மகிழ்ச்சி யடைந்து வசிட்டனைப் பார்த்து, பன்னிரண்டு மாதங்களில் இந்தச் சித்திரை சிறந்தது. இதே இராமன் பிறந்த மாதம். இந்த மாதத்தில் அரசனுக்குப் பட்டங் கட்டுவதே உத்தமம். ஆதலின் வேண்டுவன விரைந்து செய்க என்று கூறினான். உடனே வசிட்டமுனி சுமந்தி ரனைப் பார்த்து, எல்லாவிதமான அலங்காரங்களும் செய்க. பொருள்களெல்லாம் சேர்க்கக் காலையில் அநேகமாயிரம் பிராமணர்களுக்கு இஷ்டப்படி தயிர், பால் முதலிய வியஞ்சனங்களுடன் சிறந்த அன்னமும், நெய், தயிர், பொரி, பூர்ணமான தக்ஷணைகளும் வேண்டியவரையில் ஆதரவுடன் கொடுக்கப்படட்டும். சூரியோதயத்தில் சுவஸ்திவாசனம் நடக்க வேண்டும். பிராமணர்களுக்கு அதைப்பற்றி ஞாபகம் செய்து தகுந்த ஆசனங்கள் போடப்படட்டும் தாளங்கொட்டிப் பிழைக்கும் நட்டுவன் முதலியவர்களும் வேசிகளும் நன்றாய் அலங்கரித்துக்கொண்டு அரண்மனை இரண் டாங்கட்டில் தயாராயிருக்கட்டும் என்று ஆணையிட்டு, ஏனைய காரியங்களையும் செய்து முடிக்க ஏவிவிட்டுத் தசரதனிடத்தில் எல்லாம் செய்யப்பட்டன என்றனன். அரசன் இராமனை அழைத்துவரச் சுமந்திரனை ஏவினன். நான்கு திக்குகளிலுமிருந்து வந்திருக்கும் அரசர்களும் மிலேச்ச தேசத்தரசர்களும் அரசனைச் சூழ்ந்திருந்தனர். இராமனும் வந்து தந்தையை வணங்கி ஓர் உயர்ந்த இருக்கையில் இருந்தான். உடனே தசரதன்,  இராமா! உனக்குப் பூச நாளாகிய நாளைக்கு முடிசூட்ட எண்ணி யிருக்கிறேன், நல்லவனாக நடந்து கொள்வாயாக என்றான். இராமனுக்கு நண்பர் சிலர் இச்செய்தியை அவனுடைய தாயாகிய கோசலைக்கு அறிவித்தனர். அவள் அவர்களுக்குப் பரிசளித்தாள். இராமன் தந்தை யிடத்தில் விடைபெற்றுத் தனது அரண்மனையை அடைந்தான்.


சபையைவிட்டு எல்லோரும் போனபின்பு தசரதன், பூச நக்ஷத்திரத்தில் நாளைக்கு முடிசூட்டுவேனென்று முடிவு செய்து உள்ளே போய்ச் சுமந்திரனைப் பார்த்து இராமனை மறுபடியும் அழைத்துவரைச் சொன்னான். சுமந்திரன் இராமனுடைய அரண்மனையையடைந்து காவலர் மூலமாக வரவைத் தெரிவித்தான். உடனே இதென்ன! உத்தேசித்த காரியத்திற்கு ஏதாவது இடையூறு நேர்ந்ததோ? என்று இராமனுக்குச் சந்தேக முண்டா யிற்று. அவன் சுமந்திரனை உள்ளே அழைத்து, நீர் மறுபடியும் வந்த காரணமென்ன? நன்றாகச் சொல்லு மென்று கேட்டான். சுமந்திரன், இராமா! உனது பிதா உன்னைப் பார்க்க விரும்பி அழைத்துவரச் சொன்னார். அதைத் தெரிவித்தேன். அங்கே போவதும் போகாம லிருப்பதும் உன்னிஷ்டம் என்றான். சுமந்திரனுடைய சொல்லைக் கேட்டு இராமன் வெகு பரபரப்புடன் வேகமாக அரண்மனைக்குப் போனான்.


தசரதன் இராமனை நோக்கி, இராமா! உன்னிடம் அரசை ஒப்புவிப்பதைத் தவிர வேறு செயலில்லை. ஆகையால் நான் சொல்வதைத் தவறாமல் கேட்க வேண்டும். நமது தேசத்து மக்களனைவரும் இப்பொழுதே நீ அரசனாக வேண்டுமென விரும்புகிறார்கள். அவர் களுடைய புத்தி எப்பொழுதம் ஒரேவிதமாயிராது. என் புத்தி மாறுவதற்கு முன்னால் உனக்கு முடி சூட்டுகிறேன். இப்படிச் செய்யவேண்டுமென்று எனக்கு இப்போது தோன்றுகிறது. உத்தேசித்த காரியத்தை நாளைக்கே முடிக்க வேண்டும். இவ்விதமான காரியங்களுக்குப் பலவகை இடையூறுகள் நேரும். உன் நண்பர்கள் இன்று உன்னைக் கவனமாகக் காப்பாற்றட்டும். உன் தம்பி பரதன் வெகு நல்ல எண்ணமுள்ளவனே. ஆனாலும் அவன் அம்மான் வீட்டிற்குப் போய் வெகுநாளாயிற்று. சாதுக்களாயும், தர்ம சிந்தையுள்ளவர்களாயும், பிறரால் கலக்க முடியாதவர்களாயும் இருப்பவர்களின் மனமும் மாறிவிடும். ஆகையால் பரதன் ஊருக்கு வருவதற்குமுன் இந்தக் காரியத்தை முடிப்பது நல்லது என்று சொல்லி இராமனுக்கு விடை கொடுத்தனுப்பினான்.


இச்செய்திகளைத் தெரிவிப்பதற்கு இராமன் தன் தாய் கவுசலையிடம் சென்றான். கவுசலை செய்தியுணர்ந்து இராமனை நோக்கி, குழந்தாய், நீடு வாழ்க! உன் எதிரிகள் நாசமடையட்டும். நீ அரசைப்பெற்று என் பந்துக் களையும், சுமித்திரையின் பந்துக்களையும் காப்பாற்று. உன் பிதா தசரதர் உன் குணங்களால் மகிழ்ந்தார். நீ நல்ல நாளிலே பிறந்தாய். நான் நெடுநாளாகச் செய்த தவமே உனக்கு அரசைக் கிடைக்கச் செய்தது என்றாள். இராமன் பக்கத்தில் நின்ற இலக்குவனைப் பார்த்து, அப்பா உனக்காகவே இந்த அரசாட்சி எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆதலால், அரசாள வேண்டியது உன் வேலை. இந்த நாடு நான் உயிரோடிருப்பதும் எல்லாம் உனக்கே என்று கூறி விடைபெற்றுச்சென்றான்.


தசரதனால் அனுப்பப்பெற்ற வசிட்டன் இராம னுடைய அரண்மனைக்குச் சென்று, முடிசூட்டலுக்கு முன் செய்யவேண்டிய சில காரியங்களைச் செய்து மீண்டு, சபையிலிருந்து தசரதனையடைந்து அந்தப்புரம் சென்றான். இராமனும் தனக்குப் பிரியமான வார்த்தை களை எப்பொழுதும் சொல்லும் மித்திரர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விடைபெற்று அந்தப்புரஞ் சென்றான். இராமன் விடிய ஒரு ஜாமமிருக்கும்போது தூங்கி விழித்துக்கொண்டு, வேண்டிய அலங்காரங் களெல்லாம் செய்துக் கொண்டிருந்தான். மேலே கண்ட வற்றை ஆராய்வோம்.


மேலேகண்ட வரலாறும் நாம் கேள்விப்படாததாகவே இருக்கிறது. இவ்வரலாற்றைக் கற்றுவல்ல பெரியோரிற் பலரும்கூட அறிந்திருக்க முடியாது. ஏனெனில், இவ் வரலாறு வடமொழியில் வால்மீகியாற் கூறப்பட்டிருப்பது. அதனால் வடமொழி கற்றோருள்ளும் இந்நூலை நன்கு கற்போர் மட்டுமே அறியக்கூடியதாக இது உள்ளது. மேலும், இவ்வரலாற்றை முற்றிலும் புரட்டி எழுதியுள்ள பெரும் புரட்டுக்காரரான கம்பரும் தமிழில் இராமாயணம் பாடிவிட்டார். அதனால் தமிழ் மக்களனைவரும் கம்பர் பாடிய பெரும்புரட்டு நிரம்பிய கவிகளையே படித்து மயங்கி விட்டனராதலால், வடமொழி இராமாயணப் படிப்பே தமிழ் மக்களுக்கில்லாமற் போயிற்று. இதனாலேயே தமிழ் மக்களனைவரும் மேலே கண்ட உண்மையான வரலாற்றை அறிவதற்கு வழியில்லாமற் போயிற்று. வால்மீகியெழுதியுள்ள ஆபாசமான கதைகளை யெடுத்துக்கூறி அவற்றைப் பொய்க் கவிச்சக்ர வர்த்தி யாகிய கம்பர் எவ்வாறு புரட்டுகிறாரென்று எடுத்துக் காட்டியுங்கூடச் சிலர் நம்பாது வாய்க்கு வந்ததை எழுதவும் முன் வருகின்றனரே! ஆதலின், சந்தேக முள்ளவர்கள் வால்மீகி இராமாயண மூலத்தைப்படித்துப் பார்க்க வேண்டுகிறோம். வடமொழி தெரியாதவர்கள் பண்டித நடேச சாஸ்திரியார், பண்டித அனந்தாச்சாரியார், சி.ஆர்.சீனிவா சய்யங்கார் பி.ஏ., இவர்கள் எழுதிய வால்மீகி இராமாயணத் தமிழ் மொழிபெயர்ப்பையேனும் சிரத்தையோடு படித்துச் சரி பார்க்க வேண்டுகிறோம். இவை கிடையாதோர் பண்டித மன்மதநாத தத்தர் எழுதியுள்ள ஆங்கில மொழி பெயர்ப்பை வாங்கி வாசித்து உண்மையை உணர்வாராக! நிற்க வால்மீகி கூறும் உண்மை வரலாறாகிய மேலே கண்ட வரலாற் றைக் கம்பர் எவ்வாறு மறைக்கிறாரென்பதைப் பின்னர் ஆராய்வோம். இப்போது இவ்வரலாற்றால் விளங்கும் உண்மைகளை ஆராய்வோம்.


மேலே கண்ட வரலாற்றால், தசரதன் மிகவும் வஞ்சகன் என்பது புலப்படுகிறது. ஏனென்றால் அந்தப் பரதன் வருவதற்கு முன்னாலேயே எப்படியாவது இராமனுக்கு முடிசூட்டிவிட வேண்டுமென்று நினைக் கிறான். இதனால் முன் பாலகாண்ட இறுதியிலே வஞ்சகமாகவே பரதனை அவனுடைய மாமன் வீட்டுக்கு அனுப்பினான் என்றாராய்ந்த உண்மை வலியுறுகிறது. ஆதலினாலே தசரதன் ஏதோ சூழ்ச்சி கருதியே பரதனை அவனுடைய மாமன் வீட்டுக்கு அனுப்பியவனாதல் வேண்டும். இதிலிருந்து பரதன் அயோத்தியிலிருந்தால் இராமனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறாதென்பதைத் தசரதன் நன்றாக அறிவான் என்பது ஊகிக்க இடமா கிறது. இராமன் மூத்த மகனாக இருக்க, மூத்த மகனுக்கே பட்டமுரியதாக இருக்கப் பரதனிருந்தால் எவ்வாறு தடையுறும்? இராமனுக்குப் பட்டமில்லாமல் பரதனே பட்டத்துக்கு உரியவனா? என்றாராய்ந்தால், பின்னால் சித்திரகூடம் சென்று அங்கேயிருந்த இராமனைப் பரதன் நாடாள அழைத்தபோது, இராமன் பரதனை நோக்கி (வால்மீகி அயோத்தியா காண்டம், சருக்கம் 107) நம் பிதா கைகேயியிடத்தில் மிகுந்த ஆசை வைத்து இவ்விதமான அநியாயத்தைச் செய்தாரென்று நீ அவரை நிந்திப்பது சரியன்று. இந்த விஷயத்தில் புத்தி பிசகி அவர் எதையும் செய்யவில்லை. முன்பு நம் பிதா உன் தாயான கைகேயியை விவாகம் செய்யும்பொழுது, கேகய மன்னனிடத்தில் உன் பெண்ணிற்குப் புத்திரன் பிறந்தால், அவனுக்கே என் இராஜ்யத்தைக் கொடுக்கிறேனென்று பிரதிக்ஞை செய்திருக்கிறார் என்று கூறியதாகக் காணப்படும் வாக்கியத்தால் பரதனே அரசாட்சிக்கு உரியவன். இராமனுக்கு யாதொரு உரிமையுமில்லை என்ற உண்மை விளங்குகிறது. தசரதனோ வால்மீகி கூறுகிறபடி இராமனிடத்தில் அதிக அன்புள்ளவன். ஆதலின், தான் செய்து கொடுத்திருக்கிற சத்தியத்தின்படி நடக்காமல் அதை மறைத்து எப்படியாவது இராமனுக்குப் பட்டங்கட்ட வேண்டிய சூழ்ச்சிகளைச் செய்கிறான். அதனாலே ராமனை அவனுடைய குடிகளிடத்தில் நெருங்கிப் பழகி அவர்களுக்கு நல்லவனாக நடந்து அவர்களுடைய அபிமானத்தைப் பெறும்படி வேண்டும் ஏற்பாடுகள் செய்கிறான்.


தசரதன் விரும்பியபடியே இராமனும் நடந்து கொள்கிறான். இராமன் மூத்த மகனானபடியால் கூடிய விரைவில் தங்களுக்கு அரசனாக வந்தால் தங்களுக்கு அநேக நன்மைகளைச் செய்வானென்று எண்ணத் தொடங்கினார்கள். இராமனோ தன் தந்தை செய்து கொடுத்த வாக்குத்தத்தத்தையும் அதனால் பரதனுக்கே அரசுரிமையுண்டு என்பதையும் அறிந்தவனே. இது பின் அவன் பரதனிடம் கூறிய மொழிகளினாலே வெட்ட வெளிச்சமாகத் தெரிவதோடு, மேலேகண்ட வரலாற் றிலும் ஊகித்தறியத் தக்கதாக இருக்கிறது. இராமனும் எவ்விதமாவது அரசைப் பெறவேண்டுமென்னும் பேராசையையுடையவனாகவும் தன்னுடைய தந்தையின் புத்திரத்துரோக நயவஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு உடந்தையாகவும் இருந்ததோடு, அதனால் தன்னுடைய தம்பியாகிய பரதனை வஞ்சிக்கவும் துணிந்து பரம சகோதரத் துரோகியாகவுமானான்.


                 ------------------தொடரும் -  “விடுதலை” 01-08-2014
Read more: http://viduthalai.in/page-3/85080.html#ixzz39C8uJ3Y9

1.8.14

தெய்வ நம்பிக்கைக்கு மரணம் காரணமா? - பெரியார்


தெய்வ நம்பிக்கைக்கு மரணம் காரணமா?
வினா: கடவுளைப் பற்றிப் பொது வாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக்கூறு.

விடை:- கடவுள் வான மண்டலத் தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலார் நம்புகிறார்கள்.


வினா:- அப்புறம்?
விடை:- கடவுள் சர்வ ஞானமுடைய வனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்ச முழுதும் அவனது உடைமை யாம், சர்வவியாபியாம்.
வினா:- கடவுள் ஒழுக்கத்தைப்பற்றி ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள்.
விடை:- அவன் நீதிமானாம்; புனித னாம்.
வினா:- வேறு என்ன?
விடை:- அவன் அன்பு மயமான வனாம்.
வினா:- கடவுள் அன்பு மயமானவ னென்று ஜனங்கள் எப்பொழுதும் நம்புகிறார்களா?
விடை:- இல்லை. மக்கள் அறிவும், ஒழுக்கமும் உயர உயர, கடவுள் யோக் கியதையும் விருத்தியடைந்து கொண்டே போகிறது.
வினா:- உன் கருத்தை நன்கு விளக்கிக்கூறு.
விடை:- காட்டாளன் கடவுள், ஒரு காட்டாளனாகவும், திருடனாகவும் இருந்தான். அராபித் தலைவன் கடவுளான ஜாப், ஒரு கீழ் நாட்டு யதேச்சாதிகாரியாக இருந்தான். யூதர்கள் கடவுளோ வெறியனாயும், பழிக்குப்பழிவாங்கும் குணமுடைய வனாகவும் இருந்தான். கிறிஸ்தவர் கடவுளோ, அற்பாயுளுடைய மக்கள் செய்யும் குற்றங்களுக்கு நித்திய நரக தண்டனை வழங்கக் கூடியவனாக இருக்கிறான்.

 வினா:- கடவுளைப் பற்றிய வேறு அபிப்பிராயங்கள் என்ன?
விடை:- மக்கள் மனோ, வாக்கு, காயங்களினால் செய்யும் காரியங்களில் அவன் சிரத்தையுடையவனாக இருக் கிறானாம்.
வினா:- ஏன்?
விடை:- அவனுக்கு விருப்பமான காரியங்களை நாம் செய்தால் பரிசளிக் கவும் விருப்பமில்லாத காரியங்களைச் செய்தால் தண்டனையளிக்கவும்.

வினா:- கடவுளுக்கு என்ன என்ன பெயர் வழங்கப்பட்டிருக்கின்றன?

விடை:- ஒவ்வொரு தேசத்தாரும் கட வுளை ஒவ்வொரு பெயரால் அழைக் கிறார்கள், கிரேக்கர்கள் யூயஸ் என்றும், ரோமர்கள் ஜோவ் என்றும், பார்சிகள் ஆர்முஸ்ஜித் என்றும், இந்துக்கள் பிரம்மம் என்றும், யூதர்களும் கிறிஸ் தவர்களும் ஜிஹோவா என்றும், முகம் மதியர் அல்லா என்றும் கடவுளை அழைக்கிறார்கள்.

வினா:- கடவுளுக்குக் கொடுக்கப்பட்டி ருக்கும் வேறு பெயர்கள் எவை?

விடை:- பரம்பொருள், அனந்தன், மூலகாரணன், பரமாத்மா, நித்தியசக்தி, பிரபஞ்சம், இயற்கை, மனம், ஒழுங்கு முதலியன.

வினா:- ஆனால், ஜனங்கள் சொல் லும் கடவுள் ஒரே பொருளைத்தானா குறிக்கிறது?

விடை:- இல்லை, சிலர் கடவுளை ஒரு ஆளாக பாவனை செய்கிறார்கள். சிலர் ஒரு கருத்தெனக் கூறுகிறார்கள். வேறு சிலர் சட்டம் என்கிறார்கள். மற்றும் அறிய முடியாத ஒரு சக்தி என்கிறார்கள். ஒரு கூட்டத்தார் கடவுள் பூரணன் என்கிறார்கள். பின்னும் சிலர் ஜடப் பொருளும் மனமும் அய்க்கியப்படும் நிலையே கடவுள் என நம்புகிறார்கள்.
வினா:- மக்கள் எப்பொழுதும் ஒரே கடவுளில் நம்பிக்கை வைத்து வந்திருக் கிறார்களா?

விடை:- மக்களில் பெரும்பாலார் ஒருகடவுள் அல்லது பல கடவுள்கள் இருப்பதாக நம்பியே வந்திருக்கிறார்கள்.

வினா:- ஒன்றுக்கு மேற்பட்ட கடவு ளுண்டா?

விடை:- பல கடவுள்களும் உண்டென்றே பொதுவாக நம்பப்படுகிறது.

வினா:- பல கடவுள்களை நம்புகிற வர்களுக்கு என்ன பெயர் அளிக்கப் படுகிறது?
விடை:- பல கடவுளை நம்புகிறவர் பல தெய்வவாதிகள், ஒரே கடவுளை நம்புவோர் ஏக தெய்வவாதிகள்.

வினா:- சில, பல தெய்வவாதிகளின் பெயர் சொல்லு.

விடை:- எகிப்தியர், இந்துக்கள், கிரேக்கர், ரோமர்.
வினா:- ஏக தெய்வவாதிகள் யார்?
விடை:- யூதர்கள், கிறிஸ்தவர்கள், முகம்மதியர்.

வினா:- இவர்கள் எல்லாம் எப்பொ ழுதுமே ஏக தெய்வவாதிகளாக இருந் தார்களா?

விடை:- இல்லை, ஆதியில் எல்லா ஜாதியாரும் பல தெய்வங்களையே வணங்கி வந்தார்கள்.

வினா:- பல தெய்வவாதிகளின் கடவுள்கள் எவை?

விடை:- சூரியன், சந்திரன், ஆவிகள், நிழல்கள், பூதங்கள், பேய் பிசாசுகள், மிருகங்கள், மரங்கள், மலைகள், பாறைகள், நதிகள் முதலியன.

வினா:- இவைகள் எல்லாம் கடவு ளாக நம்பப்பட்டதாய் உனக்கு எப்படித் தெரியும்?

விடை:- எப்படியெனில் ஜனங்கள் அவைகளை வணங்குகிறார்கள், அவை களுக்கு ஆலயங்கள் கட்டினார்கள், விக்கிரகங்கள் உண்டு பண்ணினார்கள், அவைகளுக்கு பூஜைகள் நடத்தி னார்கள்.

வினா:- இந்த தெய்வங்கள் எல்லாம் ஒரே மாதிரி மகிமையுடையன வென்று ஜனங்கள் நம்பினார்களா?

விடை:- எல்லாக் கடவுள்களுக்கும் மேலான ஒரு கடவுளுக்கு அவை அடிமைகள், அல்லது சின்னங்கள் என்று அறிவாளிகளான சொற்பப்பேர் நம்பினார்கள்.

வினா:- அறிவில்லாதவர்களோ?

விடை:- அவைகளில் சில அதிக சக்தி யுடையவை என்றும், சில கருணையுடை யவை என்றும், சில அழகானவை என்றும், சில அதிக புத்தியுடையவை என்றும் நம்பினார்கள்.

வினா:- கடவுள் உற்பத்திக்கு அவர் கள் என்ன காரணம் கூறுகிறார்கள்.

விடை:- கடவுள் உற்பத்திக்குப் பலவித மான காரணங்கள் கூறப்படுகின்றன.

வினா:- அவற்றுள் சிலவற்றை விளக்கு.

விடை:- முதற்காரணம், ஆதி கால மக்கள் அறிவில்லாதவர்களாக, குழந் தைகளைப் போல் பயங்காளிகளாயும் இருந்தார்கள். எனவே, தனக்கு அறிய முடியாதவைகள் மீது அவர் களுக்குப் பயமுண்டாயிற்று. கண்ணால் காண முடியாத ஏதோ ஒன்றே பயத்தை உண்டு பண்ணுகிறதென்று நம்பினார்கள்.
இரண்டாவது, மக்கள் பலவீனராயும், உதவியற்றவராயுமிருப்பதினால் அவர்களுக்கு உதவியளிக்கக்கூடிய சர்வ சக்தியுடையவொன்று இருக்க வேண்டுமென்று நம்பினார்கள்.

மூன்றாவது, மனிதன் இயல்பாக நேசமனப்பான்மையுடையவன், பிறருடன் கலந்து பழகவே அவன் எப்பொழுதும் விரும்புகிறான். எனவே, தன்னைச் சூழ்ந்திருக்கும் அறிய முடியாத சக்திகளை அறியவும், அவற்றுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளவும் விரும்புகிறான். இறுதியில் அறியமுடியாத சக்திகளைக் கடவுளாக உருவகப்படுத்திக் கொள்கிறான்.
நான்காவது, தெய்வ நம்பிக்கைக்கு மரணமே முக்கிய காரணம்.

வினா:- அது எப்படி?

விடை:- நமக்கு உலகத்தில் சிரஞ்சீவி யாக வாழ முடியுமானால் தெய்வங் களைப் பற்றியோ, தெய்வீக சக்திகளைப் பற்றியோ நினைக்கத் தேவையே உண்டாகாது. மரணம் உண்டு என்ற உணர்ச்சியினாலேயே மறு ஜென் மத்தைப் பற்றியும், பிறப்புக்கும் இறப் புக்கும் காரணமாக இருக்கும் ஒன்றைப் பற்றியும், யோசிக்க வேண்டியதாக ஏற் படுகிறது. பிராணிகளுக்கு மரணத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாததினால் கடவுளும் இல்லை.
வினா:- தெய்வங்களின் தொகை பெருகிக் கொண்டே இருக்கிறதா?
விடை: இல்லை. அது குறைந்து கொண்டே போகிறது.
வினா: ஏன்?
விடை:- மக்களது அறிவும், சக்தியும் வளர வளர தம்மைத்தாமே காப்பாற் றிக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை விருத்தியடைகிறது.

வினா:- அறிவில்லாதவர் கடவுள் களைவிட அறிவுடையோர் கடவுள் குறைவா?

விடை: ஆம். நாகரிகமில்லாதவர் களே பல தெய்வங்களை வணங்கு கிறார்கள்.
வினா:- ஏக தெய்வவாதிகள் நிலைமை என்ன?

விடை:- இப்போதும் பெரும்பாலோர் ஏக தெய்வ நம்பிக்கையுடையவர்களா கவே இருக்கிறார்கள்.
வினா:- கடவுள் நம்பிக்கையே இல் லாதவர்களும் இருக்கிறார்களா?
விடை: ஆம். அதிகம் பேர் இருக் கிறார்கள்.

---------------------------------------- தந்தை பெரியார்- குடிஅரசு - கட்டுரை (உரையாடல்) 03.05.1936

பாடத் திட்டங்களில் இந்துத்துவா நஞ்சா?

 
பி.ஜே.பி. சார்பில் ஆட்சி நடைபெறும் மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநிலங்களானாலும் சரி  - அவை தங்களின் இந்துத்துவா திட்டங்களைத் திணிப்பதில் தான் தீவிரமாக இருந்து வருகின்றன.


குறிப்பாகக் கல்வித் திட்டத்தில் அவை ஆவேசம் காட்டி வருகின்றன. முன்பு உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. ஆட்சி நடைபெற்றபோது பாடத் திட்டங்கள் முழுமையாக இந்துத்துவாக் கொள்கைகளால் குளிப்பாட்டப்பட்டிருந்தன. 


ஏழாம் வகுப்புப் பாடத்தில் முலாயம் சிங் யாதவ் இக்கால  இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்? பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது, முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்? (அவுட்லுக் 10.5.1999) என்ற கேள்விகள் கேட்கப்பட்டன.


கணக்குப் பாடத் திட்டம் எப்படித் தெரியுமா? 10 கரசேவகர்கள் சேர்ந்து பாபர் மசூதியை இடித்தால் 15 நாட்கள் ஆகும். 20 கரசேவகர்கள் இடித்தால் எத்தனை நாட்களாகும் என்பதுதான் கணிதக் கேள்வி. இயேசுநாதர் இமயமலைக்கு வந்து இந்து சாமியார்களிடம் உபதேசம் பெற்றுதான் பைபிள் எழுதினார். மெக்காவில் பச்சைத் துணி போட்டு மூடப்பட்டு இருப்பது சிவலிங்கம்தான் என்று பாடப் புத்தகத்தில் இடம் பெறச் செய்யப்பட்டது.


இதுபற்றி ஃபிரண்ட் லைன் இதழில் கட்டுரை தீட்டிய எழுத்தாளர்களாக பார்வதிமேனன், டி.கே. ராஜலட்சுமி ஆகியோர் இந்திய வரலாறு தலை முறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bomb Factories) மாற்றப்பட்டு விட்டன என்று குறிப்பிட்டுள்ளனர்.


உலகிலேயே ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள் என்பது ஹிட்லரின் - அசைக்க முடியாத எண்ணம். பள்ளிப் பாடங்களில் கணிதப் பாடத்தில் யூதர் பெற்ற இலாபம் என்பதற்குப் பதிலாக யூதர் அடித்த கொள்ளை என்ன? என்று தான் இருக்கும்.


அடால்ப் ஃஹிட்லரை பின்பற்றும் பேர் வழிகளான இந்த இந்துத்துவாவாதிகள் அவர் வழியைக் கண்களை மூடிக் கொண்டு பின்பற்றுவதாகத் தெரிகிறது. பாஸிஸ்டுகள், நாஜிஸ்டுகள் பின்பற்றும் அதே வழிமுறையைத்தான் இந்த இந்துத்துவப் பாசிஸ்டுகளும் பின்பற்றுகின்றனர்.


இந்த வரலாற்றுத் தகவல்கள் ஒரு பக்கம் சார்ந்த பொய்கள், மாச்சர்யங்கள் காலத்தால் உண்மைக்குப் புறம்பானவை என எடுத்து வீசப்பட்டவை; கோட் பாடுகள், கற்பனைகள் இவையெல்லாம் அப்படியே விட்டு வைக்கப்படவில்லை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் அவை அவ்வப்போது அதிகப் பொய் களைக் கொண்டு வலுவூட்டப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது (ஃபரண்ட் லைன் ஏடு 20.11.1998).


பாடத் திட்டங்களை ஆய்வு செய்யும் தேசியக் கல்வி மற்றும் பயிற்சி ஆய்வு நிறுவனம்  (National Council For educational Training and Research) என்ன கூறியது தெரியுமா?


பா.ஜ.க. நடத்தும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்  இத்தகைய கருத்துக்களைக் கொண்ட நூல்கள் பயிற்றுவிக்கப்படுமேயானால், நம் நாட்டின் எதிர்காலம் சீர்குலைந்து விடும்; நாடு பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளதே!


இப்பொழுது குஜராத்திலிருந்து வந்துள்ள தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தினாநாத் பத்ராவின் ஏழு நூல்கள் குஜராத்தில் தொடக்கப் பள்ளிகளில் பாட நூல்களாக வைக்கப்படுகின்றன என்பதுதான் அந்த  அதிர்ச்சியூட்டும் தகவலாகும். 35 ஆயிரம் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனவாம்.


இவர் எப்படிப்பட்டவர் என்பது ஏற்கெனவே தெரிந்த தகவலாகும். 


ஆரியர்களைப் பெருமையாகப் பேசக் கூடியவர்; மேற்கத்திய கருத்தியல்களுக்கு எதிரானவர்; நாள்தோறும் ஆர்.எஸ்.எஸ். ஷாகாவுக்கு அனுப்பினால் அவன் வாழ்வில் நல்லதோர் திருப் பத்தை அடைவான் என்று எழுதியவர் இவர். நிகழ்கால கல்வி முறையை எதிர்க்கக்கூடிய இவர், குடி மக்களை உருவாக்குவதில் மதத்தின் பங்கு இருந்தாக வேண்டும் என்பது இவரின் நிலைப்பாடு. பொதுவுடைமைச் சிந்தனைகளைப் பழி தூற்றக் கூடிய ஒருவரின் நூல்களை பாட நூல்களாக வைத்தால் அந்தப் பிள்ளைகள் எப்படி வார்த்து எடுக்கப் படுவார்கள் என்பதற்குப் பெரும் ஆய்வுகள் தேவைப் படாது.
ஏற்கெனவே மத்தியப் பிரதேச பி.ஜே.பி. முதல் அமைச்சர் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் இருக்கலாம் என்று சொல்லவில்லையா?


ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம். இந்து ராஷ்டிரா என்றும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பிடித்தவுடன் அந்த வேலைகளில் வேக வேகமாக செயல்படுகிறார்கள் என்பது மட்டும் உண்மை.
பி.ஜே.பி.க்கு வாக்களித்தவர்கள் அதன் வேதனையை  அனுபவிக்கப் போகிறார்களா? அல்லது அதன் செயல்பாடுகளை எதிர்த்து நின்று அவற்றைப் பின் வாங்கச் செய்யப் போகிறார்களா என்பதுதான் மக்கள் முன் உள்ள பிரச்சினை; மக்கள் மன்றம் விழிப்புக் கொள்ளட்டும்!


இல்லாவிட்டால் கடும் விலை கொடுக்கத்தான் நேரிடும்  - எச்சரிக்கை!

                      --------------------------------”விடுதலை” தலையங்கம் 31-07-2014