Search This Blog

3.5.13

வம்பனுக்கும் - கம்பனுக்கும் சம்பாஷணை - பெரியார் எழுதிய உரையாடல்

 சம்பாஷணை வம்பனுக்கும் - கம்பனுக்கும்

வம்பன்:- என்ன அய்யா கம்பரே! அனாவசியமாக வெள்ளைக் காரர்களையெல்லாம் இந்த நாட்டைவிட்டு வெளியில்போங்கள் என்று சொல்லுகின்றீரே! இது நியாயமா?

கம்பன்:- சொன்னால் என்ன அய்யா முழுகிப்போய்விட்டது. அவர் களுக்கு இங்கு என்ன வேலை? அவர்கள் என்ன நம்ம மதமா? ஜாதியா? ஜனமா? போ என்றால் போகவேண்டியதுதானே?

வம்பன்:- அப்படிச் சொல்லிவிடலாமா திடீரென்று. அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தானே; இந்த நாட்டுக்கு அவர்கள் வந்து சுமார் 400, 500 வருஷத்துக்கு மேலாகின்றது. அதுமாத்திரமல்ல இந்த நாட்டு அரசாட்சி பெற்று சுமார் 200 வருஷமாகின்றது. அப்படியிருக்க நீ போ வெளியில் என்று சொல்லுவது நியாயமா?

கம்பன்:- 400, 500 வருஷமாய் விட்டதால் ஒருவனுக்குப் பாத்தியம் வந்துவிடுமா? 200 வருஷம் ஆண்டால் அவனுக்கே என்றைக்கும் நிரந்தர மாகிவிடுமா? ஆயிரம் வருஷம் ஐந்நூறு வருஷம் இருந்த மரஞ்செடிகளை வெட்டித்தள்ளி காடுகளைத் திருத்துவதில்லையா? 4000 வருஷம் 5000 வருஷமாய் இருக்கிற பாறைக் கல்லுகளையெல்லாம் டைனாமெட்டு வைத்து உடைத்து தூளாக்கி அப்புரப்படுத்துவதில்லையா? ஆதலால் வேண்டாம் என்றால் போய்விட வேண்டியதுதானே.

வம்பன்:- வேண்டாம் என்றால் போக வேண்டியதுதானே என்றால் எனக்குப் புரியவில்லை. வேண்டாம் என்பதற்கு ஏதாவது சட்டப்படி நியாயம் சொல்லுகின்றீர்களா? அல்லது கை பலத்தைப் பொறுத்து நியாயம் சொல்லு கின்றீர்களா?

கம்பன்:- சட்டமென்ன? கைபலமென்ன? இந்த இரண்டும் நமக்குக் கிடையாது. நம் இஷ்டம் தான்.

வம்பன்:- அப்படியானால் அந்த இஷ்டத்துக்காவது ஒரு காரணம் வேண்டாமா?

கம்பன்:- காரணம் என்ன? காரணம் அவர்களால் இந்த 200 வருஷ மாய் நமக்கு என்ன பிரயோஜனம் என்ன சாதித்தார்கள்? நமது நாட்டுச் செல்வத்தையெல்லாம் கொள்ளை கொண்டு போகின்றார்கள். அவர்களிடத் தில் நியாயம் என்பதில்லை, கருப்பனுக்கு ஒரு நீதி, வெள்ளையனுக்கு ஒரு நீதி, இது போதாதா? அவர்கள் இந்த தேசத்தை விட்டுப் போக வேண்டிய தற்குக் காரணம்?

வம்பன்:- அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று சொன் னால் போதுமா? (1)இந்த 200 வருஷகாலத்தில் இந்தியா எவ்வளவு நாகரீகம், கல்வி அறிவு பெற்றிருக்கிறது. அவர்கள் வருவதற்கு முன் 100க்கு 99 தற்குறி களாயிருந்தோமே. பார்ப்பான் காலத்தைவிட வெள்ளைக்காரன் காலம் மோசமா? (2) பணம் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால் யாருடைய பணம்? பாடுபடுபவர்கள் பணத்தை நம்ம பணக்காரனும் கொள்ளை அடித்தான், வெள்ளைக்காரனும் கொள்ளை அடித்தான், பணக்காரன் கொள்ளை அடிக் கும் பணமும், மோட்டார் பெட்ரோல், ரயில், சீப்பு, சோப்பு, டிரஸ், பிராந்தி, உஸ்கி, பெட்டி, பேழை முதலிய சாமான்கள் வாங்கி எல்லாம் வெளி நாட்டுக் குத்தான் அனுப்பிவிடுகிறான். (3) நீதி விஷயத்திலும், இங்கும் பார்ப்பானுக்கு ஒரு நீதி, பறையனுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி, பணக் காரனுக்கு ஒரு நீதி, கோவில், குளம், வீதி, பள்ளிக்கூடத்திலும், மேல் ஜாதிக்கு ஒரு நீதி, கீழ் ஜாதிக்கு ஒரு நீதி, சம்பளத்திலும் ஒருவனுக்கு மாதம் 6000 ரூபாயும், ஒருவனுக்கு மாதம் 6 ரூபாயும், ஒரு ஜாதி பாடுபடவேண்டும், ஒரு ஜாதி சோம்பேரியாய் இருந்து வாழ வேண்டும். இப்படி அநேக வித்தியாசங்கள் அக்கிரமமாய் இருக்கும்போது வெள்ளைக்காரனை மாத்திரம் ஏன் குற்றம் சொல்லுகிறாய்? அவன்போய்விட்டால் இதெல்லாம் திருத்துப்பாடாகி விடுமா?

கம்பன்:- ஆகுதோ இல்லையோ அதைப்பற்றிக் கவலையில்லை. நாங்கள் எப்படியோ எங்களுக்குள் அடியோ உதையோ போட்டுக் கொள் ளுகிறோம். வெள்ளைக்காரன் மாத்திரம் இனி அரை நிமிஷமும் வேண்டாம். அவ்வளவுதான் நம்ம சங்கதி.

வம்பன்:- சரி எப்படியோ நடக்கட்டும் எல்லாருக்கும் ஒத்தது எனக்கும் ஆகட்டும். நானும் வேணுமானால் உன்னுடனேயே சேர்ந்து கொள்ளுகிறேன். ஆனால் ஒரு சேதி.

கம்பன்:- என்ன சேதி?

வம்பன்:- இந்தியாவிலிருந்து கொளும்பு, சிங்கப்பூர், பினாங்கு, செய்கோன், கொச்சின், சைனா முதலிய ஊர்களுக்கு நம்ம ஆளுகள் 10-லட்சக்கணக்காகப்போய் அந்த தேசங்களை கொள்ளையடித்து கோடிக் கணக்காக ரூபாய்கள் கொண்டு வந்து இங்கு எத்தனையோ பேர் லட்சாதி பதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் பிழைக்கிறார்களே! அதுமாத்திரமல்ல இன்னும் வெகுபேர் அந்த தேசங்களில் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்களே! இதற்கு என்ன செய்கின்றது?

கம்பன்:- செய்வது என்ன? அந்த ஊர்க்காரர்கள் பார்த்துப் போ என்று சொன்னால் போய்விடவேண்டியதுதான்.

வம்பன்:- அப்படியானால் சைய்கோன் அரசாங்கம் இந்திய “வெள்ளைக்காரர்”களாகிய நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு நோட் டீஸ் கொடுத்துவிட்டதாமே. இனி அவர்கள் என்ன செய்ய வேண்டும்.

கம்பன்:- செய்வதென்ன இந்த இரண்டு வருஷ சங்கராந்தி நாட்டுக் கோட்டை செட்டியார்கள் மேல் தான் வந்திருக்கின்றது. மரியாதையாய் மூட்டை கட்டிக்கொண்டு இந்தியாவுக்கு திரும்பவேண்டியதுதான்.

வம்பன்:- அப்படியானால் இப்பொழுது தேசீயவாதிகள் உள்பட எல்லோரும் சேர்ந்து என்னமோ ஆபத்து வந்துவிட்டதாக இதற்குக் கூச்சல் போடுகிறார்களே அது ஏன்? இதற்கு இந்திய சட்டசபையில் அவசரப் பிரேரேபணை எதற்காக? “போ என்றால் போய்விட வேண்டியதுதானே” “இவர்களால் செய்கோனுக்கு என்ன நன்மை” “செய்கோனை கொள்ளை அடித்து பொருள் திரட்டி இந்தியாவுக்கு கொண்டு வருவது நியாயமா?” என்று செய்கோன்காரர்கள் சொல்வதில் என்ன தப்பு என்ற யோசித்துப் பாருங்கள்.

கம்பன்:- எதற்கும் எதற்கும் ஒப்பிட்டுப் பேசுகிறீர்? இது உமக்கு ஒரு வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்ததுதானோ? திரைகடலோடியும் திரவியம் தேடு என்று ஒளவை பாடி இருக்கிறாளே திரைகடல் என்றால் இந்தியாவுக்குள் என்றுதான் அருத்தமோ?

வம்பன்:- சரி அப்படியானால் எல்லோருக்கும் எல்லா தேசத்தாருக் கும் இந்த உரிமை உண்டா? இல்லையா?

கம்பன்:- என்ன நியாமய்யா நீர் பேசுகிறது. வெரும்வம்பு பேசுகிறீரே நியாயம் அநியாயம் இல்லையா?

வம்பன்:- சரி அப்படி வாருங்கள் நியாயம் பேசலாம். நியாயம் என்றால் என்ன? கம்பன் சொன்னதா? காளிதாசன் சொன்னதா? ராமன் சொன்னதா? கிருஷ்ணன் சொன்னதா? வள்ளுவன் சொன்னதா? Òபுத்தன் சொன்னதா? கிறிஸ்து சொன்னதா? முஹம்மது சொன்னதா அல்லது காந்தி சொல்வதா?

சங்கராச்சாரி சொல்வதா? சத்தியமூர்த்தி சொல்வதா? மற்றும் யாராரோ சொல்லுவதா? என்பவைகளை நியாயம் என்று வைத்துப் பேசுவதா னால் உலகம் உள்ளவரை நியாயம் பேசித் தீராது.

கம்பன்:- பின்னை என்னதான் பண்ணித் தொலைக்கச் சொல்லுகிறீர்.

வம்பன்:- தங்களுக்குப் புத்தி இருக்கின்றது என்று ஒப்புக் கொள்ளு கிறீர்களா?

கம்பன்:- ஆம் ஒப்புக் கொள்ளுகிறேன்.

வம்பன்:- சரி எனக்கு புத்தியிருக்கின்றது என்று ஒப்புக் கொள்ளு கின்றீரா?

கம்பன்:- சரி ஒப்புக்கொள்ளுகிறேன்.

வம்பன்:- அப்படியானால் நாம் இருவருமே நம் புத்தியை-அறிவைக் கொண்டு பேசுவோம். நம் இருவர் புத்திக்குட்பட்டதை நாம் சரி நியாயம் என்று ஒப்புக்கொள்ளுவோம். இதில் ஒன்றும் தடை இல்லையே.

கம்பன்:- தடை இல்லை.

வம்பன்:- முதலாவது மக்களை மதத்தின்பேரில் பிரிக்கலாமா? தேசத்தின்பேரால் பிரிக்கலாமா? ஜாதியின்பேரால் பிரிக்கலாமா? அல்லது பாடுபட்டு உழைக்கும் மக்கள் சோம்பேறிகளாய் இருந்து உழைப்பாளிகளை ஏய்த்து வாழுகின்ற மக்கள் என்று இரண்டுவித வகுப்பாய் பிரிக்கலாமா? என்பதை முதலில் முடிவு செய்வோம். ஆகவே எப்படிப் பிரிக்கின்றது சொல்லுங்கள் பார்ப்போம்.

கம்பன்:- இப்படிச் சொன்னால் எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

வம்பன்:- இது உங்களுக்குப் புரியாதல் என்ன? சற்று தயங்குவதாகத் தெரிகின்றது. நியாயம் என்று தோன்றுவதைச் சொல்லவேண்டியதுதானே.

கம்பன்:- நீர்தான் சொல்லுமே.

வம்பன்:- சொல்லுகிறேன் நன்றாய் யோசித்துப்பாரும். என்ன வென்றால் மனிதர்களைப் பிரிக்கவேண்டுமென்றால் இரண்டு வகையாய்த் தான் பிரிக்கலாம்.

கம்பன்:- எப்படி?

வம்பன்:- பாடுபட்டு உழைக்கும் மக்கள் ஒரு வகுப்பு. அப்படிப் பாடுபட்டு உழைக்கும் மக்களின் உழைப்பின் பலனை பல பலவித வழிகளால் ஏமாற்றி அனுபவிக்கிறவர்கள் ஒரு வகுப்பு ஆக இரண்டு வகுப்பாகத் தான் பிரிக்கலாம்.

கம்பன்:- சரி அப்புறம்.

வம்பன்:- இந்தப்படி ஏமாற்றிவாழும் மக்களைப் பார்த்து நீயும் உன் விகிதாச்சாரம் உழைத்து விகிதாச்சாரம் கூலி எடுத்துக்கொள் என்று சொல்ல வேண்டும்.

கம்பன்:- சரி அப்புறம்.

வம்பன்:- அந்தப்படி நாம் சொல்லுவதை அவர்கள் கேட்கா விட் டால் ஊரைவிட்டு நாட்டைவிட்டு தேசத்தைவிட்டு வெளியில் போகிறாயா இல்லையா? என்று கேட்கவேண்டும்.

கம்பன்:- அவன் போகமாட்டேன் என்றால் என்ன செய்வது.

வம்பன்:- வெள்ளைக்காரன் போகமாட்டேன் என்றால் என்னசெய்ய வேண்டுமென்கிறாயோ அதைச்செய்ய வேண்டியதுதான்.

கம்பன்:- இதில் வெள்ளைக்காரனும் சேர்ந்தவன்தானே.

வம்பன்:- அவர்கள் பாட்டன்கூட சேர்ந்தவனேயாவான்.

கம்பன்:- அப்படியானால் சரி.

-------------------------------------

சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதிய உரையாடல்- ”குடி அரசு” - உரையாடல் - 10.09.1933

2.5.13

இராமன் பாலம் - ஆதாரம் உண்டா? பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆருக்கும் துரோகம்!


மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று ஆதரவு திரட்டுவோம் - வாரீர்!

அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை சேது  சமுத்திரத் திட்டத்தின் அவசியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுவோம் - ஆதரவு திரட்டுவோம். அனைவரும் வாரீர் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவரது அறிக்கை வருமாறு:

தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் வாய்ப்பாக அமையும், தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்ற திட்டத்தினை வேண்டாத தமிழ்நாட்டுத் தலைவர்களே இல்லை என்றே சொல்லலாம்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், எம்.ஜி.ஆர். என்ற மறைந்த அத்தனைத் தலைவர்களும், கட்சி வேறுபாடு இன்றி இதனை பற்பல கால கட்டங்களிலும் வலியுறுத்தி, செயலில் கொண்டு வர வேண்டுமெனக் கோரியுள்ளனர் - தத்தம் கட்சிகள் சார்பில்.

ரூ.2400 கோடி திட்டம்

இத்திட்டம் தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை 2004இல் அமைத்த வாய்ப்பின் காரணமாக, 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் (U.P.A.) அடுத்து 2007இல் துவக்கப் பட்டது. அதற்கு முன்பே தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதே (NDA)   வாஜ்பேயி பிரதமராக இருந்த காலந்தொட்டே இது தமிழ்நாட்டுக் கட்சிகளால் வற்புறுத்தி, ஆராயும் படியான ஒரு நிலையையும் ஏற்படுத்தின.

பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில்...

அதன்படி - பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் இதற்கான ஆய்வுகளை - நாகபுரியில் உள்ள நீரி (Neeri)   என்ற புவியியல் ஆய்வுக் கூடத்தின் மூலம் சரியான வழித் தடம் பற்றி ஆய்வு செய்து, ஆறாம் வழித்தடமே வாய்ப்பானது என்று கூறப்பட்டது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதனை ரூ.2400 கோடி திட்டமாக செயல்படுத்த முனைந்தது!

இன்னும் 22 கிலோ மீட்டரே!

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் இடையறாத திட்டமிட்ட சீரிய முயற்சி - தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் கப்பல்துறை அமைச்சராகவே பொறுப் பேற்று மிக வேகமாகச் செய்ய முனைந்து இன்னும் ஒரு சிறு பகுதிதான் (22 கி.மீட்டர்தான்) முடிக்க வேண்டிய பாக்கி பகுதி என்ற நிலை இருந்தது.
இந்தக் கால கட்டத்தில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியசுவாமி என்ற பார்ப்பனரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வழக்குப் போட்டனர்.

அரசியல் நோக்கமே!

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வந்துவிட்டால் அதன் பெருமை - அதன் அரசியல் லாபம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு - தி.மு.க.வுக்கு அல்லவா சென்றுவிடும் என்ற அரசியல் நோக்கில் (பிஜேபி ஆட்சியிலேயே தேர்வு செய்த தடம்தான் என்ற போதிலும்) ஆதாம் பாலம் போன்ற மணற் திட்டுகளை, இராமன் பாலம் என்று கயிறு திரித்து, பார்ப்பன ஊடகங்கள் ஆதிக்கம் காரணமாக இதை ஊதிப் பெரிதுபடுத்தி, முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் ஒரு ஆய்வுக் குழு புதிதாக போடப்பட்டு (கால தாமதம் செய்து கட்டை போடுவதுதான் அதன் நோக்கம் என்பது அரசியல் பார்வையாளர் அறியாததா?) அதன் அறிக்கைக்காக என்று, காங்கிரசு சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வடநாட்டில் இந்த இராமன் பாலப்  பிரச்சாரம் தங்கள் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமோ என்று கருதியோ என்னவோ, இந்த முட்டுக்கட்டை போட்டவர்களுக்கு மறைமுக உதவி செய்வது போல நடந்து கொண்டு கிணற்றில் போட்டனர்!

வெறும் நம்பிக்கை போதுமானதா?

மக்கள் வரிப் பணம் ரூ.2000 கோடி செலவழிக்கப்பட்டு, பல வகையில் கப்பல்களின் பயண தூரம் இலங்கையைச் சுற்றாமல் சுருங்கியுள்ளதனால் எரி பொருள் சிக்கனம், இலங்கை அரசுக்குச் செல்லும் பண வருவாய் தமிழ் நாட்டிற்கு, இந்திய அரசுக்கு வரும் வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு இவைபற்றி சிறிதும் எண்ணா மல், வெறும் மூடநம்பிக்கை அடிப்படையில் அறிவிய லுக்கும் ஆதாரங்களுக்கும் முரணாக இப்படி ஒரு செயற்கைத் தடையை ஏற்படுத்தி, 4 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டிய திட்டத்தைக் கிடப்பில் போட, இவ்வாறு பல நிலைப்பாடுகளை உருவாக்கி விட்டனர்.

இராமன் பாலம் - ஆதாரம் உண்டா?

1. இராமன் கட்டிய பாலம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆதாம் பாலம் - மணல் திட்டுக்கள் என்றே அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வாசகங்களிலேயே கூறப்பட்டுள்ளன.

2. அய்.மு. கூட்டணி அரசு (U.P.A.) இந்த ஆறாம் வழித்தடத்தை (ஆதாம்பாலம் உள்ள தடத்தை) தேர்வு செய்யவில்லை; நீரி என்ற ஆய்வு அமைப்பின் நிபுணர்கள் ஆறு தடங்களில் இதுவே சிறந்தது என அறிக்கை தந்து தேர்வு செய்து  பணிகளும் நடந்தன. தி.மு.க.வோ மற்ற அய்க்கிய முற்போக்குக் கட்சிகளோ முடிவு செய்த இடம் அல்ல அது! பா.ஜ.க. அமைச்சர்களே அப்போது கையொப் பமிட்டு முடிவு செய்யப்பட்ட தடம் (அருண்ஜேட்லி, எஸ். திருநாவுக்கரசர், வேத்பிரகாஷ்கோயல், உமாபாரதி ஆகிய பிஜேபி அமைச்சர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டமிது - பிரதமர் வாஜ்பேயியாலும் அறிவிக்கப் பட்டதும்கூட).

3. தனது இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை ஏன் அப்போதைய மத்திய ஆட்சிகள் செயல்படுத்தவில்லை என்பதை ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க.வே வற்புறுத்தி விட்டு, இப்போது இப்படி தலை குப்புற பல்டி நிலைப்பாடு எடுப்பது எதனால்?  அரசியல் தவிர வேறு எந்த நியாயமான காரணமும் இல்லை. அது தி.மு.க.வின் சாதனையாகி விடக் கூடாதே என்பதுதானே உள் நோக்கம்?
இதைவிட தமிழ்நாட்டு வளர்ச்சிக்குக் கேடு செய்யும் கொடுமை வேறு உண்டா?
வேலை வாய்ப்பு, பொருளாதார செழுமைபற்றி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையே விளக்கமாக விவரித்த நிலையிலா இப்படி ஒரு முரண்பட்ட அரசியல் நிலைப்பாடு?
நண்பர் வைகோவும், இடதுசாரிகளும் கண்டிக்க வேண்டாமா?

4. நண்பர் வைகோ இதை செயல்படுத்த தான் எடுத்த முயற்சிகள் அதிகம்; எனவே தனக்கும் தன் கட்சிக்குமே முதல் பெருமை கிடைக்க வேண்டும் என்று மார்தட்டியவர்.

இடதுசாரிக் கட்சித்  தோழர்களும் இடையறாது வற்புறுத்தியதோடு, பல மேடைகளில் தி.மு.க.வோடு இணைந்து சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் பற்றியும், இராமன் பாலம் என்பது கற்பனை என்றும் முழங்க வில்லையா?
தமிழக அரசின் நிலைப்பாடாகவே உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, கட்சியாடி முடக்க நினைப்பதை - மதிமுக பொதுச் செயலாளரும், இடது சாரிகளும்  எதிர்க்க வேண்டாமா?

ஓட்டுக் கண்ணோட்டமா?

இதில் நாட்டுக் கண்ணோட்டம் முக்கியமல்லவா? ஓட்டுக் கண்ணோட்டம் அல்லது கூட்டணி உத்தேசக் கண்ணோட்டத்திற்காக மவுனம் சாதிக்கலாமா? உடனே குரல் கொடுக்க வேண்டாமா?

தி.மு.க. -கருமத்திற்குரியவர்கள் கடைசி வரை இருப்பர் - என்பதற்கேற்ப வரும் மே 15ஆம் நாள் - எழுச்சி நாள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி, மக்களின் ஆதரவைத் திரட்டுவது என்பது வரவேற்கத்தக்கது!

இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டு வளர்ச்சியோடு இணைந்த - இன்றியமையாத திட்டம். எனவே இதனை மத்திய அரசு செயல்படுத்திட அனை வரும் ஒத்தக் கருத்துள்ளவர்கள். ஓரணியில் நிற்க மனமில்லா விட்டாலும் - முரண்பாடு இல்லாமல் தனித்தனியாகவேனும் குரல் கொடுக்க - செயல்படுத்த முன் வாருங்கள்!

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆருக்கும் துரோகம்!

தமிழ்நாடு அரசின் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை இராமனைக் காட்டி முடக்குவது அண் ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும்கூட அது செய்யும் துரோகம் -  மக்கள் விரோதம்! இதை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று மக்கள் ஆதரவைத் திரட்டிட அனைவரும் முன் வருவார்களாக!

-----------------------  கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் -”விடுதலை” 2-5-2013

மே தினம் பற்றி பெரியார்



மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாளை உலகமெங்கும் உழைப்பவர்களால் பெரு நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், முதல் அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் அடங்கிய மக்கள் 8மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும், வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் நாள் கொடூரமாக முடிந்ததன் பயனாக, எளிய தொழிலாளர், விவசாயிகளின் இரத்தம் சிந்தியபடியால், அந்நாள் தொழிலாளர்களின் மாபெரும் தியாக ஞாபகார்த்தமாகக் கொண்டு உலக முழுமையும் அத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள்.

தொழிலாளர் உலகில் முதலாளித் திட்டம் ஏற்பட்டது முதல் 8மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊண் உறக்கமின்றி உழைத்து வந்திருக்கின்றார்கள். சுரங்கங்களிலும், குன்றின் மேற்களிலும், புயல் காற்றிலும், பெரும் வெள்ளத்திலும் உழைத்து வருகின்றார்கள் . தொழிலாளர்களில் முதியோர் மாத்திரமல்ல, சிறு குழந்தைகளும் தூங்க வேண்டிய இரவிலும் உழைத்து வருகின்றனர். அனுதினமும் வேகா வெய்யிலிலும், குளிரிலும் தீக்ஷண்யத்திலும், வயலிலும், பாலைவனத்திலும் உழைத்து வருகின்றவர் யார்? இவ்வளவு கஷ்டமும் தங்கள் வயற்றுக்கு மட்டிலும் தானா? மணிக்கு 100 மைல் ஓடும் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஆயிரக்கணக்கான பிரயாணிகளுடைய உயிர் ஒரு சிக்னல் மென் அதாவது, அடையாளம் காட்டும் ஒரு கூலிவயமிடமிருக்கின்றது! அவனைப் பன்னிரண்டு மணி நேரம் இரவில் விழித்திருக்க வேண்டுமென்றால் இதனினும் கொடுமை எங்குளது. இவன் 8மணி நேரம் வேலை செய்வதுதான் உசிதமென்று வாதமிட்டால், அவனை மிஷின் கன்களைக் கொண்டு கொல்லுவதென்றால் யாரால் பொருக்க முடியும். இத்தியாதி கொடுமைகளைப் போக்கி, உலகத்தில் தொழிலாளருக்கு நியாயத்தை ஸ்தாபிக்க நேர்ந்த தினம் இந்நாளாகும்.

சென்னை புளியந்தோப்பில் பன்னீராயிரம் நெசவுத் தொழிலாளர்கள் ஐந்து மாத காலமாக பசியும் பட்டினியாயும் கிடக்க நேரிட்ட காலையில் அவர்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் கருங்காலிகளை நிறுத்த எத்தனித்த காலையில், அமைதிக்கும் ஒழுங்குக்கும் ஏற்பட்டுள்ள அதிகாரிகள் தொழிலாளர் எழுவரைச் சுட்டுக் கொன்றனர்!! இத்தியாகத்தைக் கொண்டாடும் தினமும் மே தினமாகும்.

1905ம் வருஷத்தில் வீணாக ஜப்பானியர் மேல் படையெடுத்த ஜார் சக்கிரவர்த்தியின் கொடுமையைத் தடுக்க முயன்ற ரஷியத் தொழிலாளிகள், பதினாயிரக்கணக்காக கொல்லப்பட்ட ஞாபக தினமும் இத்தினமாகும்.

பிரான்சு தேசம் புரட்சிக்கு பின்பு பிரான்சு நாட்டில், அநீதியும் கொடுமையும் மிகுந்து வந்தபடியால் பிரான்சு தேச தொழிலாளிகளும், விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, பாரீஸ் நகரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியை, தீ கம்யூன் என்ற உழைப்பவர்கள் ஆட்சியை ஸ்தாபித்த காலை, முதலாளிகளுடைய தந்திரத்தால் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான பிரான்சுத் தொழிலாளர்களுடைய ஞாபகத்தைக் குறிக்கும் தினம் இம் மேதினமாகும்.

ஆங்கில நாட்டினும் நிலவரியிலும், நிலங்களை இழந்ததாலும் மனம் பொறாத தொழிலாளர்கள் சார்ட்டிஸ்ட் என்ற இயக்கத்தைக் கிளப்பியதன் காரணமாக, அக்கூட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் நாசப்படுத்திய ஞாபகப் படுத்தப்படும் தினம் இத்தினமாகும்.

சீன நாட்டில் சன்யாட்சன் என்ற பெரியோர் ஸ்தாபித்த தேசீயத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பட்ட தொழிற்கட்சியை நாசமாக்கிய ஞாபக தினமும் இதுவாகும்.

நேற்று தென்இந்திய ரயில்வேயில் முப்பதினாயிரம் பேர்கள் வேலை நிறுத்திய காலையில் அவர்களின் தலைவர்கள் நிரபராதிகளாகிய பதினெட்டு பேரை, பத்து வருஷம் சிறை வாசமிட்ட ஞாபக தினமும் இத்தினமாகும். இவ்விதமாக உலகம் முழுமையும் அந்தந்த நாடுகளின் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றிய நாள் முதல் பல்லாயிரக்கணக்காக கஷ்டப்பட்டு, மாண்டு மடிந்த உழைப்போர்களுடைய தியாகத்தை ஞாபகார்த்தமாக கொண்டாட இத்தினம் ஏற்பட்டுள்ளது.

உலகில் உயிர் முளைத்த கால முதல், கஷ்டமும் தியாகமும் அவ்வுயிர் களுடன் கலந்தேயிருக்கின்றன. இது பிரபஞ்ச வாழ்க்கையிலொன்றாகும். கஷ்டமில்லாமல் தியாகமில்லாமல் ஒன்றும் கை கூடுவதாக வில்லை. உலகத்தின் மேல் நடப்பது, பெரும்பான்மை மக்களுக்கு முள் கம்பளத்தின் மேல் நடப்பதைப் போல் ஒத்திருக்கின்றது. முள் கம்பளத்தின் மேல் நடக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் அக்கம்பளத்தின் மேல் நடந்தால்தான், சுகப் பேற்றையடைய முடிகின்றது. இதைத்தான் தொழிலாளர் இயக்கத்துக்கு ஆசானாகிய காரல் மார்க்ஸ் என்பார் லோகாயுதத்தின் முரண் என்பார். கஷ்டமில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்பதில்லை. இதுதான் சமதர்மத் தத்துவத்தின் முரண்பாடு. பொது உடைமைக்காரர் யாராகிலும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அலட்சியம் செய்ய முடியாது. சோஷலிஸ்ட் அனைவரும் இந்த பிரபஞ்ச முரண்பாட்டை அடிப்படையாக வைத்து தங்கள் தத்துவத்தைக் கட்ட வேண்டும். சுதந்திரம் வேண்டுமானாலும், ஸகோதர தத்துவம் வேண்டுமானாலும், சரிசம தத்துவம் வேண்டுமானாலும் தியாகத்தால் தான் அடைய முடியும்.

உடலுக்கு உணவு வேண்டுமானால், அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் அன்னியில் எதையுமடைய முடியாது! சுகம், துக்கம்; துக்கம், சுகம் வாழ்வில் பிணை கொண்டிருக்கிறபடியால், தியாக மூர்த்திகள் செய்து வரும் தியாகம் உலக ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருக்கும். இவ்வித தியாக மூர்த்திகளின் ஞாபகத்தைக் கொண்டாடும் தினம் இந்த மே மாதம் முதல் தேதியாகும்.

இந்த மே தின ஞாபகம் ஏகாதிபத்திய ஆட்சிக்கல்ல, செல்வத்திற்கும் சம்பளத்திற்குமல்ல, கொடுங்கோன்மைக்குமல்ல, உலக மக்களனைவரும் உண்டு உடுக்கவும், இருந்து வாழவும், சந்ததி விருத்தி செய்யவும், அந்த சந்ததியார் உலக சுகப் பேற்றை பெறவும் செய்யும் தியாகமாகும்.

தற்போது உலகம் பலவித இடுக்கண்களால் கஷ்டப்பட்டு வருகின்றது. இல்லாமையும் வறுமையும், பஞ்சமும், வெள்ளமும் உலகை ஒருபுறம் வருத்தி வர கொடுங்கோன்மைக் கட்சிகளாலும், முதலாளிகளின் அட்டூழியத்தாலும், வறுமையாலும் உலக நெருக்கடி அதிகரிக்கும் போலும்! உலகம் பிற்போக்கால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும் போலும்!! உலக நெருக்கடி குறைந்த பாடில்லை. சேனைத் தளங்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. மகாயுத்தத்தின் முன்னிருந்த சேனைத்தளங்களைவிட எண்மடங்கு அதிகரித்திருக்கின்றன. இத்யாதி வியர்த்தங்களால் உலக மக்கள் இனிவரும் மாபெரும் யுத்தத்தில் மடியப் போகின்றனர். இனிவரும் யுத்தம் உலகில் விளைபொருள் போதாதென்பதற்கல்ல. செய்பொருள் செய்ய முடியவில்லை என்பதற்கல்ல. வல்லரசுகளின் ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் விளையப் போகும் மகா பாதகமென அறிக!!! இம்மாபெரும் கேட்டைத் தடுப்பதற்கு உலகில் ஒருவரேயுளர். அவர்களால்தான் ரஷ்ய தேசம், புரட்சிக்குப் பின் நடந்த உள்நாட்டுக் கலகம் அடக்கப்பட்டது. வெளிநாடுகளின் உதவி பயன்படாமல் போயிற்று. போலண்ட் தேசத்து நெருக்கடியைச் சாக்காக வைத்துக் கொண்டு வல்லரசுகள் சோவியத் அரசை நசுக்கச் செய்த முயற்சி வீணானதாயிற்று. இவர்கள் யாரெனில் அகில உலக தொழிலாளர்களாவர். இவர்கள் தான் உலக சமாதானத்தை நிலைக்க வைக்க வலிமை கொண்டவர். இவர்கள்தான் அகில உலகப் போரை நிறுத்த வல்லவர். இவர்களுக்கு வேண்டியதொன்றே. அதாவது, அகில உலகத் தோழர்கள் ஒற்றுமைப்பட்டு சுகத்திலும், துக்கத்திலும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய தொன்றே. இந்த ஒற்றுமைக்காக உலகத் தொழிலாளர் பல்லாண்டுதோறும் பட்ட கஷ்ட நிஷ்டூரங்களை யெல்லாம் ஞாபகப்படுத்தும் தினம் மே மாதம் முதல் தேதியாகும்.

------------------------தந்தைபெரியார் -”புரட்சி”  தலையங்கம் 29.04.1934

1.5.13

புத்தகர்-பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்! -3

பெண்ணுரிமை என்பதை மனித நேயத்தின் மறுபகுதியாகப் பார்த்த மானுடநேயர் தந்தை பெரியார் அவர்கள்.
அதனால்தான் 1930களிலேயே இந்தியத் துணைக் கண்டத்தின் முன் னோடியாக (Pioneer) கர்ப்பத்தடை அல்லது பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல் எப்படி என்ற தலைப்பில், வெளிநாட்டு மருத்துவ அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்து - எளிய முறையில் - தமிழில் நமது மக்கள் குறிப்பாக பெண்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மலிவு விலையில் வெளியிட்டுப் பரப்பினார்கள்!
மேரி ஸ்டோப்ஸ் என்ற இங்கி லாந்து நாட்டு அம்மையாரின் அரிய கருத்துக்களையும், இன்னும் பல மேதைகளின் கருத்தையும் விளக்கி குடிஅரசு வார ஏட்டில் கட்டுரை களாகவும் வெளியிட்டு, அதனை மேடைகளில், சுயமரியாதைத் திருமண பிரச்சாரக் களங்களில் கூறி, மக்களை ஆயத்தப்படுத்தியதுபோலவே, புத்தகங்களை வெளியிட்டு விளக் கினார்கள்.
அக்காலத்தில் பிள்ளை பெற்றுக் கொள்ளாதீர்கள் என்றால், அது கடவுள் விரோதம், மத விரோதம், சமூக விரோதம் என்று கருதி, கூறியவர்களைச் சாடிய காலம் ஆகும்!
அதில் தந்தை பெரியார் செய்த பணி அசாதாரணமான பெண்ணிய விடுதலைக்கான அமைதியான புரட்சி யாகும்!
குடும்பக் கட்டுப்பாடு என்று இன்று அரசுகளால் அழைக்கப்படும் இத்திட்டத் திற்கு முக்கியமாகக் கூறப்படும் காரணம் - மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதேயாகும். பொருளாதாரக் காரணமே பெரிதும் பெரும்பாலோரால் சொல்லப்பட்டு வருகின்றது.
ஆனால் தந்தை பெரியார்தம் கண் ணோட்டமே இப்பிரச்சினையில் வேறு, வெறும் மக்கள் தொகை ((Population)) கட்டுப்பாடு என்பது பெரியார் அவர் களைப் பொறுத்தவரை இரண்டாம் பட்சம்தான்.
முதலில் பெண்களின் சுதந்திரத் திற்கும், சுகவாழ்வுக்கும் பிள்ளைப் பேறு மிகப் பெரிய இடையூறு ஆகும்! அவர்களைப் பிள்ளைகளைப் பிரசவிக்கும் இயந்திரங்களாக்கி, அவர்கள் சுதந் திரத்தை, இழந்து, உடல் நலம் குன்றி, என்றென்றும் மற்றவர்கள் தயவில் தான் பெண் என்பவள் வாழ வேண்டும் என்ற ஒரு நிலையைத் தவிர்க்கவே கர்ப்பத் தடை - கர்ப்ப ஆட்சி முக்கியம்; ஆணின் அகம்பாவம்தான் பெண்களை இத் துறையில் அடக்கி, பிள்ளை பெறாதவர் களைக் கொச்சைப்படுத்துவது, அதை சாக்காகக் கொண்டு, மற்ற பெண்களு டன் வாழ்க்கையை அமைப்பது போன்ற முறையற்ற செயல்களுக்கு இதை ஒரு வாய்ப்பான கருவியாக ஆண்கள் பயன்படுத்துவது கூடாது என்பதை பெண் ஏன் அடிமை ஆனாள்? என்ற பெண்ணுரிமைச் சாசனமான அந்த நூலில் விளக்கியுள்ளார் புத்தகர் பெரியார்!
அதைவிட எதிலும் சிக்கனம் காட்டும் அய்யா அவர்கள், புத்தகங்கள் விலை உயர்ந்தவைகளாக இருந்தாலும் வாங்கிட தாராளமாகப் பணம் கொடுத்து வாங்கி, தமிழில் மொழி பெயர்க்கவோ, அல்லது ஆதாரங்களாக்கி தமது கொள்கை களுக்கு வலு சேர்ப்பதாகவோ அவை இருப்பின் அதை வாங்கிடத் தயங்க மாட்டார்கள்!
அறிஞர் அண்ணா அவர்கள் 1940 களில் ஈரோட்டில் விடுதலை ஆசிரியராக இருந்தபோது, ஈரோடு ப. சண்முக வேலாயுதன், எஸ்.ஆர். சந்தானம் ஆகிய நண்பர்களுடன் மாலையில் நடந்து ஈரோடு ரயில்வே சந்திப்புக்குச் சென்று, அங்கே தேனீர் பருகி விட்டு, அங்கிருந்த ஹிக்கின்பாதம் Higginbothams ரயில்வே புத்தக ஸ்டாலில் புதிதாக வந்துள்ள நல்ல ஆங்கில நூல்களைப் படித்து விடுவார்கள் (ஒரு பெரும் பகுதியை - உட்கார்ந்து பழக்கமாகிய காரணத்தால்) இந்த நூல் மிகவும் நமக்குப் பயன்படும்; நல்ல நூல். ஆனால் விலை அதிகம் என்று கூறிடுவார். தந்தை பெரியார் காதுக்கு இது சென்றவுடன் வாங்க அண்ணாதுரை, இந்த புத்தகங்கள் 2 பிரதிகள் வாங்கி வாருங்கள்; ஒன்று உங்களிடம் இருக்கட்டும் மற்றொன்று அலுவலகத்தில் இருக் கட்டும் என்று உடனே பணத்தை எடுத்துக் கொடுத்துச் சொல்வார்கள்.

எங்களிடம் இதை அய்யாவும் கூறியுள்ளார், நண்பர் சண்முக வேலாயுதனும் கூறியுள்ளார்.
அதுபோலவே அபிதான சிந்தா மணி அப்போது (1940களில் - ரூபாய் 50)  பத்து  பிரதிகள் வாங்கி, பல அலுவலகங்களில் வைத்ததோடு, அறிஞர் அண்ணாவிற்கும் ஒரு பிரதியை அன்பளிப்பாக தந்து பயன் படுத்துங்கள் என்றாராம்!
அன்னை மணியம்மையார் அவர்கள் திருமணம் என்ற ஏற்பாட்டிற்கு முன் செயலாளராக செவிலியராக அய்யாவிடம் தொண்டாற்றியபோது அவருக்கு ஆங்கிலத்தில் கையொப்ப மிட்டு அபிதான சிந்தாமணி புத்தகப் பிரதியை அய்யா அளித்தார்கள்.
அதை அன்னையார் பிறகு எனக்குக் கையொப்பத்துடன் அன்பளிப்பாகத் தந்தார்கள்.

எனது அரிய கருவூலங்களில் அதுவும் ஒன்று!
எனவே புத்தகர் பெரியார்பற்றி இன்னமும் எவ்வளவோ எழுதலாம் என்றாலும் இத்துடன் இப்போது முடிக் கிறோம்.

         ----------------- கி.வீரமணி அவர்கள்  25-4-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

மே நாள் பிறந்தது எங்கே?மே நாள் ஆன வரலாறு

மே நாள் மேதினி போற்றும் நாள்

மே நாள் - ஆண்டுதோறும் பிறக்கும் மே முதல் நாள் உழைக்கும் வர்க்கத்தின் உன்னதமான ஆரவாரமும், எழுச்சியும், போராட்டமும் நிறைந்த நாள். மே நாள் விழா நாள் என் கொண்டாடப்படுகிறது. ஆனால் அது பிறந்த போது அப்படியில்லை. அடிமைத்தளைகளையும், அடக்கு முறைக் கொடுமைகளையும் உடைத்து வெளிவர உழைக்கும் வர்க்கத்திற்கு ஓடாகிப் போன உழைக்கும் வர்க்கம் புரட்சிக் குரல் எழுப்பிய நாள். அந்த நாள் பிறந்தது எங்கே?

உலகின் தலைசிறந்த பொது வுடைமை நாடாக விளங்கிய, முதலாளித்துவத்திற்கு அறைகூவல் விடுத்த சோவியத் மண்ணிலா? ஆம், இல்லை, என்ற பதில்தான் வருகிறது. என்ன ரஷ்யாவிலே மே தினம் பிறக்கவில்லையா.

சரி, ரஷ்யா இல்லையென்றால் சீனாவில், அங்கேரியில், என்று வரிசையாகப் பொது உடைமை நாடுகளையெல்லாம் சொல்லிப் பார்த்தால் எந்தப் பொதுவுடைமை நாடும் மே நாள் பிறப்பின் தாய்த்தகுதி பெறவில்லை.
மே நாள் பிறந்தது பொதுவுடை மைப் பூங்காக்களில் அல்ல - முதலாளித்துவ ஆதிக்க அரசுகளின் தாயகமான வல்லரசுகளில் மாபெரும் வல்லரசான அமெரிக்காவில் எனில் உங்கள் விழிகள் விரிப்பில் - வியப்பில் மாற்றம் பெறலாம்.

மே நாள் பிறந்தது 19ஆம் நூற்றாண்டில் 1884 ஆம் ஆண்டில் அக்டோபர் திங்கள் 7ஆம் நாளில் அமெரிக்க நாட்டில் தீர்மானம் ஒன்று நிறைவேறுகிறது.

தீர்மானத்தை அமெரிக்கத் தொழிற்சங்க நிறுவனம் ஆன தொழிற்சங்க சம்மேளனம், அமெரிக்க, கனடா நாட்டுத் தொழிற்சங்கங்கள் ஆகியன ஒருங்கிணைந்து மாநாடு ஒன்றினை - அது அவர்களின் நான்காவது மாநாடு. அம்மாநாட்டைக் கூட்டுகின்றனர். பின்னர் இதற்குப் பெயர் அமெரிக்கத் தொழிற்சங்கக் கூட்டிணைவு merican Federation of Labour (AFL) எனப் பெயர்.

11/886 ஆம் ஆண்டு மேத் திங்கள் முதல் நாள் முதல், எட்டு மணிநேரம் தான் தொழிலாளரின் சட்டப்படியான வேலை நேரமாக இருக்க வேண்டும். என அமெரிக்கத் தொழிற்சங்கக் கூட்டிணையும், அமெரிக்கா, கனடா, தொழிற்சங்கங்களும் சேர்ந்து இந்த மாநாட்டின் பிரதிநிதிகளான நாங்கள் தீர்மானிக்கிறோம்.

என்பது தான் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம்.

ப்பூ இது என்ன புரட்சிகரமான தீர்மானம். எட்டு மணிநேர வேலை தான் இருக்க வேண்டும் என்பது 36 கோரிக்கை. அதற்குப் போய் இவ்வளவு முதன்மை நிலையா என விபரம் குறைந்தவர்கள் கேட்கலாம்.

ஆனால் 1880களில் அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில், ஊதிய உயர்வு கேட்டோ, போனஸ் கேட்டோ, புதிய ஊதியக்குழுவை நியமிக்க வேண்டியோ போராடவில்லை. பின் எதற்காகப் போராடினார்கள். எதற்காக வேலை நிறுத்தம் செய்தார்கள் என்று கேட்டால் வேலை நேரத்தைக் குறை என்பது தான் வேண்டிய கோரிக்கையாக, போராட்ட முதல் நோக்கமாக இருந்தது.
ஆம், வேலை நேரத்தைக் குறைக்க வேண்டிய அளவிற்கு மோசமான அவல நிலை தொழிற் கூடங்களில் இருந்தது.

சில தொழிற்கூடங்களில் 18 மணி நேரம், 20 மணி நேரம் என்று பாவ, புண்ணியம் பார்க்காமல், பசித்தவன் படும் துயரம் பார்க்காமல் தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டார்கள்.

தமிழகத்தில் தொழிற்சங்க உரிமைக் குக் குரல் கொடுத்த வ.உ.சி.காலத்தில் சில ஆலைகளில் ரேகை பார்த்து வேலை செய்வது, அதாவது வேலைப்பளுவினால் விரலில் ரேகை வெளியே தெரிய வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தது.

அதேபோல் நிலைம அமெரிக்காவில் இருந்தது. இதற்குச் சான்று, ஆதாரம் இருக்கிறது. தொழிலாளர்களின் வழக்கறிஞர் (Working Men’s Advocate) எனும் ஏடு 1834ல் நியூயார்க்கில் நடந்த ரொட்டித் தொழிலாளர்களின் பணி முடக்கத்தின் போது கண்டவற்றை எழுதியது.

ரொட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள கூலியாட்கள் அடிமைத்தனத்தை விடவும் கேவலமான நிலையில் ஆண்டுக்கணக் கில் அவதியுற்று வருகிறார்கள். 24 மணி நேரம் கூட வேலை செய்ய வேண்டி யிருக்கிறது எனவே 1830, 1840 ஆண்டுக் காலங் களில் உழைக்கும் மக்கள் போராடிய தெல்லாம் 10 மணி நேர வேலை நேரத்திற்காகத்தான். ஆம் முதலில் 8 மணி நேரம் என்று எண்ணிக் கேட்க வில்லை 10 மணி வேலை நேரத்தைத் தான் கேட்டார்கள். ஏனென்றால் 10 மணி நேர வேலை என்பதே வெறும் வாய்ப்பாகக் கருதினர்.

1837இல் அமெரிக்க அரசு ஊழியர் களுக்கு 10 மணி நேர வேலை தான் என அமெரிக்கக் குடியரசுத் தலைவர் அறி வித்தார். எனினும் தனியார் நிறுவனங் களில் மாற்றம் இல்லை.

அளவே 1880களில் தான் 8 மணி நேர வேலை என்று போராடத் தலைப்பட்டனர் எனில் அதற்குக் காரணம் வேலை நேரக்குறைப்பு இயக்கங்கள் உலகம் முழுவதும் பரவியதே.

ஆஸ்திரேலியத் தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேரப்பொழுது போக்கு, எட்டு மணி நேர உறக்கம் என ஒரு நாளை 24 மணி நேரத்தை எட்டு, எட்டு மணிநேரங் களாகப் பங்கிட்டுக் கொண்டனர். 1856இல் அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் பிற நகரங்களில் இயலவில்லை.
இங்கே இன்னொரு கொடுமை நடந்துவிட்டதையும் சொல்லாமல் இருக்க இயலவில்லை. 1875ஆம் ஆண்டில் பென்சில் வேனியா மாநிலத்தில், எட்டு மணிநேரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய பத்து நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் தூக்கு மேடை ஏறினர்.

1877ஆம் ஆண்டில் அரசு, அரசு சார்பு நிருவாகத்தவர்களை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினர். பல்வேறு அடக்கு முறைக்கு ஆளாயினர் என்பது சொல்லாமலே விளங்கும். எனினும் Knights of Labour எனும் ஒரு சங்கம் இந்தப் போராட்டத்தின் வலிமை யினால் இரண்டு இலட்சம் உறுப்பினராக இருந்து எண்ணிக்கையை ஏழு லட்ச மாகப் பெருக்கியது ஒரு மாபெரும் வெற்றிப்படி.

1886 மே முதல் நாள் அமெரிக்கா முழுவதும் வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் தொடங்கி விட்டன. சிகாக்கோ நகர் போராட்டத்தின் மய்யக் களமாக விளங்கியது. மே முதல் நாளுக்கு முந்திய ஞாயிறன்று 25,000 தொழி லாளர்கள் கொண்ட ஒன்றுபட்ட அணி வகுப்பு ஒன்றினை 25000 தொழிலா ளர்கள் அணி வகுப்பு எனில் அது சாதாரணமானதல்லவே, அதனை தொழிற்சங்கக் கூட்டிணைவு, நைட்ஸ் ஆஃபலேபர், சமதர்ம தொழிற் கட்சி ஆகியன இணைந்து நடத்தின. மாபெரும் போராட்டம், அதற்கு முன் அத்தகைய பிரம்மாண்ட போராட்டம் நடைபெறாத போராட்டம் வெற்றி வாயிலைத் தொட்டுவிட்டது.

முதலாளித்துவமும், அவர்களுக்கு முழுத் துணையாய் நின்ற அரசுகளும் கையைக் கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு வாளாவிருக்கவில்லை. தங்கள் வஞ்சக வலையை விரித்தனர்.

மே முதல் நாள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து மே மூன்றாம் நாள் ஹேஅங்காடிச் சதுக்கத்தில் (Hay Market) மக்கார்மிக் உழுபடைக் கருவித் தொழிலாளர்கள் ஒரு கூட்டத்தை நடத்தினார்கள்.

காவல்துறை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. தொழிற் சங்கம் துவக்குவதே நாட்டுக்கெதிரான குற்றமாகக் கருதப் பட்ட காலம் அது. சூழ்ச்சி செய்தனர், சதி புரிந்தனர் என்று தொழிலாளர் தலைவர்களைத் தூக்கில் தொங்கச்செய்தலும் நடைபெற்றது. காவல்துறையின் கண் மூடித்தனமான முதல் நாள் தாக்குதலில் சிலர் மாண் டனர் மற்றும் பலர் படுகாயமுற்றனர்.
இதனைக் கண்டித்து மே 4ஆம் நாள் கண்டனக்கூட்டம் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. கூட்டம் முடியும் வேளையில் காவல் துறையினர் கொடுந்தாக்குதலைத் தொடர்ந்தனர். அவ்வேளையில் - எங்கிருந்தோ ஒரு வெடிகுண்டு வந்து வீழ்ந்தது. காவல் துறை அலுவலர் - சார்ஜெண்ட் ஒருவர் இறந்தார். பிறகு அங்கே காவல் துறையினருக்கும் தொழிலாளருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டு போராட்டம் ரத்தக்களரியானது.
ஏழு காவலர்களும், நான்கு தொழி லாளர்களும் செத்து மடிந்ததனர். ஹேஅங்காடி இரத்தச்சேற்றில் உழன்றது. பார்சன்ஸ், ஸ்பைஸ், பிஷக், ஏஞ்சல் ஆகியோர் மீது ஆதிக்க வர்க்கம் சதிக்குற்றம் சுமத்தித் தூக்குக் கயிற்றில் உயிரிழக்க வைத்தது. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம் எழுச்சி பெற்று 1888 டிசம்பரில் செயிண்ட்லூயிசில் மாநாடு கூட்டியது. அந்த மாநாட்டில் தான் 1890 மே முதல் நாள் மீண்டும் 8 மணிநேரக் கோரிக் கையை முன் வைத்துப் போராட முடிவுச் செய்தல்.

1889 ஜூலை 14இல் பிரெஞ்சுப் புரட்சியின் போது பாஸ்டிஸ் சிறை உடைத்த, வீழ்த்த நூற்றாண்டு விழா வினை சமதர்ம இயக்கங்களின் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பாரிஸ் நகரத்தில் கூடி அனைத்துலகத் தொழி லாளர் கூட்டிணைவை நிறுவினார்கள்.

1890 மே முதல் நாளில் மீண்டும் ஓர் எட்டு மணி நேர வேலை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்திருப்பதால் அதே மே நாளை, அனைத்து நாட்டு ஆர்ப்பாட்ட நாளாக நிகழ்த்துவது என்று முடிவு செய்தனர்.

இவ்வாறுதான் மே நாள் விழா - மே நாள் ஆன வரலாறு பிறந்தது.

இந்த நாளைத் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் பெரிதும் போற் றிக் கொண்டாடி, இந்த மண்ணில் வாழும் உழைக்கும் தோழர்களுக்கு உயர்புணர்வை ஊட்டினர்.

அந்த வழியில் வந்த கலைஞர் அரசு மே மாதத்திய முதல் நாளின் சிறப்பை உணர்ந்து மே முதல் நாள் ஊதியத் துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்துத் திராவிட இயக்கம் என் றும் உழைக்கும் மக்கள் கூட்டத்தின் பக்கமே என்று அறிவித்தது.

 ---------------- முனைவர் பேரா. ந.க. மங்களமுருகேசன் -"விடுதலை” 30-4-2013