Search This Blog

24.11.12

பிளேக் நோய் தீர்த்த ஸ்லோகமாம்!சிருங்கேரிகள் பற்றி புரூடாக்கள்!


சிருங்கேரிகள் பற்றி புரூடாக்கள்!

நம் நாட்டில் ஒரு சொலவடை உண்டு; இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை. அப்படியானால் கந்தப் புளுகு தான் புளுகுகளின் மெகா தொகுப்பு போலும்!

இவ்வாரக் கல்கி ஏட்டில் (25.11.2012) சிருங்கேரி சங்கராச்சாரியார்பற்றி - சிருங்கேரி மடம்  - ஒரு ஆய்வு என்ற தலைப்பில் வெளியான ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு நூல் அறிமுகம் என்ற பகுதியில் மதிப்புரை எழுதப்பட்டுள்ளது.
அதன் தலைப்பு என்ன தெரியுமா? ஸ்லோகத்தால் ப்ளேக்கை விரட்டினார் - இது சிருங்கேரி மடத்தின் சாதனையாம்! நூல்களின் தனி ரகப்புளுகுகள் அவர்களால் ஏமாற்றப்படும் பக்த கோடிகளும், பக்த கேடிகளும் அன்றாடம் பலியாவதால் உச்ச வரம்பின்றி புளுகி, கோணிப்புளுகன் கொயபெல்ஸையும் கூடத் தோற்கடித்து விடுகின்றனர்!
... பல ஆண்டுகளுக்கு முன்னால் பிளேக் என்னும் ஆட்கொல்லி நோய் பரவியபோது ஸ்ரீசச்சிதானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி சுவாமிகளின்
ஏதாவந்தம் ஸமயம் ஸ்வாபத் பயோசபி
ரக்ஷணம் க்ருத்வா!... என்று தொடங்கும்
துர்காஸ்தவம் ஸ்லோகத்தை மனமுருகிப்பாடி, நோய் பரவாமல் காத்தார் என்று எழுதுகிறார் இந்த ஆய்வாளர். நல்ல நூல் என்கிறார் மதிப்புரையாளர்.
ஸ்லோகங்களினால் - அதுவும் சிருங்கேரி சங்கராச்சாரியார் உச்சரித்த சில மந்த்ர ஸ்லோகங்களில் இப்படி பிளேக் போன்ற கொடிய நோய்களையே சொஸ்தப்படுத்தி விட்டார் என்றால் இதை விட நமக்கு வேறு மருத்துவமனையோ, டாக்டர்களோ, மருந்துக் கடைகளோ தேவையா? தேவையே யில்லையே!

பாழும் புற்று நோய் பல பேர்களைக் கொல்லும் நோயாகிறதே.
இருதயம்  - மாரடைப்பு, சர்க்கரை நோய் - இப்படி பலப்பல நோய்களால் மனித குலம் மாள்கிறதே அதற்கு சிருங்கேரியார் ஸ்லோகம் போதுமே!
பின் ஏன் அனாவசியமாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்கி பொருள்களை கோடிக்கணக்கில் செலவழிக்க வேண் டும்? அவரையே - சிருங்கேரி சங்கராச் சாரியையே தேசியமயமாக்கி ஒரு அவசரச் சட்டத்தை உடனே மத்திய அரசு போட்டு, எந்த நோய்க்கு எந்த ஸ்லோகம் என்று அவாளையே விட்டு சொஸ்தப் படுத்திடக் கேட்டுக் கொள்ளலாமே!
அந்தக் காலத்தில் ஈரோட்டில் பிளேக் நோயால் பல நூறு மக்கள் செத்தபோது, ஈரோடு நகரத்தில், நகரத் தந்தை நிலையில் இருந்து, தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று அருகில் இருந்து பிணங்களை அப்புறப்படுத்தி, சிகிச்சை சரியாக நடைபெற நேரிடையாக களத்தில் நின்று பாடுபட்டு வரலாறு படைத்தார் தந்தை பெரியார் அவர்கள்.
அதையெல்லாம் உணர்ந்துதான் சில ஆண்டுகள் கழித்து, சிருங்கேரிபீடம் பெரியாருக்கு ஸ்ரீமுகம் எழுதி, தாங்கள் பாரியாள் (நாகம்மையார்) சகிதமாக சிருங்கேரி மடத்திற்கு வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார் போலும்!
இந்த ஸ்லோகத்தை அவர் ஏன் பிளேக் வந்த பகுதிக்குச் சென்று அப்போது ஓதிடவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். (இதெல்லாம் நாஸ்தீகாளின் விதண்டாவாதம் என்கிறீர்களா?)
இப்போது டெங்கு காய்ச்சலால் பல பேர் அவதிப்படுகின்ற நிலையும், இறக்கும் கொடுமையும் உள்ளதே, சிருங்கேரி மடத் தலைவர் இந்த மாதிரி டெங்கு காய்ச்சலுக்கும் ஒரு ஸ்லோகத்தை ஓதி - மந்த்ரம் ஜெபித்து, குணமாக்கப்படாதோ! பகவத் கிருபையின் புண்யம் பரலோகம் வரை பரவாதோ!
முன்பு, திராவிடர் இயக்கத்திலிருந்து திடீர் பக்தர் ஆகிய ஒரு முன்னாள் அமைச்சர், காஞ்சிப் பெரியவாளை காஞ்சி மடத்தில் சந்தித்தபோது, மழை பெய்ய வில்லையே என்று பெரியவாளிடம் கேட்டாராம்; அவாள் அதெல்லாம் பெய்யும் என்று அவாள் திருவாய் மலர்ந்தருளினாராம். இவர் காஞ்சியி லிருந்து சென்னைக்கு காரில் திரும்பும் போது, ஸ்ரீபெரும்புதூர் வரும் போதே மழை கொட்டியதாம்! இந்த திடீர் 777 பக்தர் கோடிகள் நெஞ்சும் நெக்குருகி பெரியவாள் வாக்கு பலித்ததோ என்று மகிழ்ந்தனராம்!
இப்படி ஒரு கப்சா - புரூடா - சில வருஷத்துக்குமுன்!
இப்போது மேட்டூர் தண்ணீர் வராத தால் தஞ்சை - காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது; விவசாயிகள் கவலைப்படு கின்றனர்!
ஓடி தலைக்காவிரிக்கே சென்று தங்கிய வரலாறு படைத்தவாள்தான் இப்போது பெரியவாள்; இவாள் மந்த்ரம் ஜெபித்து மழையை வரவழைக்க முடியாதோ! நிச்சயம் முடியும் என்கிறார் பக்த கேடிகள் - ஆனால் அவாளுக்கு நேரமில்லை - பெயில் - கோர்ட் - வழக்கு இத்தியாதி இப்படி என்பதால்!
பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கடா அட போக்கத்தவர்களே!
- என்ற உடுமலையார் பாட்டு அதோ கேட்கிறது. 

------------------------------- ஊசி மிளகாய் ----------"விடுதலை” 20-11-2012

23.11.12

சோவின் பார்வையில் - ராஜதர்மம் என்பது மனுதர்மம் தானே?


உபன்யாஸத்திலகம்
சோவின் பார்வையில் - ராஜதர்மம் என்பது மனுதர்மம் தானே?

துக்ளக் (28.11.2012) இதழில் நண்பர் சோ அவர்கள்.
ராமன் ஒரு மோசமான கணவன் என்று கூறிய ராம்ஜெத்மலானியின் கூற்றுக்கு பதில் எழுதியுள்ளார்.

ராம் ஜெத்மலானி சட்ட நிபுணரே தவிர, உபன்யாஸத்திலகம் அல்ல. அவர், ராமர் ஸீதையை கை விட்டவர்; ஆகையால் அவர் நல்ல கணவன் அல்ல என்று ஒரு தீர்ப்பு அளித்திருக்கிறார். இது பலவகைகளில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், இதுவே இன்று கூறப்படுகிற கருத்து அல்ல; ராமாயணத்திலேயே ராமரின் முடிவு விமர்சிக்கப்படுகிறது. ரைட் ஆனரபிள் வி.எஸ். சீனுவாச சாஸ்திரி தனது இராமாயண உரைகளில் இதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இப்படி பலர் அபிப்பிராயபேதம் கொண்டு பேசியிருக்கிறார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்த வரையில் ராமர் செய்தது ராஜரீகமான ஒரு அவசியமான காரியமாகப் போய்விட்டது.

ராம் ஜெத்மலானி சொல்வது போல் ஒரு மீனவர் பேசியது போல் (மீனவர் அல்ல சலவைத் தொழி லாளி என்பது முக்கிய கருத்து அத்தொழி லாளி அவரது சந்தேகம் நியாயமானது - பொருத்தமானது காரணம் அவருக்குச் சேலைகளைத் துவைக்கும்போது ஏற்பட்ட பழைய  அனுபவம் புதிய அனுபவம் என்ற அடிப்படையிலேயே அப்படி ஒரு சம்பவம் - சந்தேகம் கூறப்பட்டிருக்கிறது) நகரத்தில் இந்தப் பேச்சு பரவிக் கொண்டே இருக்கிறது என்று ஒற்றர்கள் மூலம் அறிந்தார்.

இப்படி ஸீதையைப் பற்றி சந்தேகப்படுகிற பேச்சு பரவிக் கொண்டே போனால், அது அவளுக்கும் நல்லதல்ல. ஆட்சிக்கும் நல்லதல்ல என்ற முடிவுக்கு அவர் வந்தார். Ceaser’s wife must be above suspicion என்று சொன்னால் அதை நாம் பெரிய வார்த்தையாகப் பாராட்டுகிறோம். அதை ராமர் காரியத்தில் காட்டினார்.
அரசனின் மனைவிபற்றி நாட்டில் பலவித விமர்சனங்கள் எழுந்து விட்டால், அரசனுக்கு மரியாதை அவனுடைய ஆணைகளுக்கு மரியாதை இருக்காது. அவனுடைய ஆணைகளுக்கு மரியாதை இல்லை என்றால், ராஜ்யத்தில் அமைதி ஒழிந்து போகும். இவையெல்லாம் கருத் தில் கொண்டுதான் ராமர் ஸீதையை வெளியேற்றினார்.

(இது ஏன் ரைட் ஆனரபிள் சீனுவாச சாஸ்திரிக்குத் தெரியாமல் இந்த லெப்ட் ஆனரபுள்களுக்கும் மட்டும் எப்படி தெரிகிறதோ தெரியவில்லை!)

ஒரு வகையில் பார்த்தால், அது அவர் தனக்குத் தானே விதித்துக் கொண்ட தண்டனை; ஏனென்றால் அந்த அளவுக்கு அவர் ஸீதைமீது அன்பு கொண்டிருந்தார்.

ஸீதையை வெளியேற்றியபின்பு அவர் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இப்படிக் கூறுகின்றன சோ வின் கூற்று ஓட்டையை அடைக்கும் உதவாக்கரை வக்கீலின் வாதம்தான் அக்கால ராஜதர்மம் என்பது மனுதர்மமே! அதன் ஆட்சியே! பெண் என்பவள் சுதந்திரமாக விடப்படக் கூடியவள் அல்ல என்று கூறி, பெண்கள் இயல்பாகவே மோசமானவர்கள் - கணவனால் அடக்கி ஆளப்பட வேண்டிய வர்கள் என்பதை நிலை நாட்டுவது மனு தர்மம் - மனித தர்மத்தின் நேர் எதிரான பிறவியை அடிப்படையாகக் கொண்ட குல(அ) தர்மம்!
இவர் கூறுவதுபோல், இராமன் ஏக பத்தினி விரதன் அல்ல வால்மீகி இராமா யணத்திலேயே ஆதாரங்கள் உண்டு.

அதைவிட, இராவணனிடமிருந்து மீட்டு வந்த சீதையைப் பார்த்து, ஸீதே நீ ஒழுக்கமுள்ளவள், தவறு செய்யாதவள் என்பதற்காக உன்னை நான் மீட்டுக் கொண்டு வரவில்லை.

உனக்காக யுத்தம் செய்தேன் என்று நினைக்காதே, என் வீரத்தைக் காண் பிக்கவே என் க்ஷத்திரிய தர்மத்தைக்  நிறைவேற்ற வேண்டியது, எனக்குச் செய்த அவமானத்தைப் போக்க வேண்டியது கடமை. துஷ்டனான இராவணனுடைய வீட்டில் வசித்ததால் உன் நடத்தைப் பற்றி சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது

----------------------- வால்மீகி இராமாயணம் சர்க்கம் 117, பக்கம் 487

இதை அப்படியே மறைத்திடுவது தான் அறிவு நாணயமா?

அது மட்டுமா? அவன் நிறைமாத கர்ப்பிணியை காட்டுக்கனுப்பியதற்கு - அக்னி பிரவேசத்திற்குப் பின்பும் என்ன வகையில் நியாயப்படுத்தக் கூடிய செயல்?
இராம் ஜெத்மலானி கூற்றை நிரூ பிக்க இதுபோதாதா? இதுவும் ராஜ தர்மம் தானா?

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற ஆங்கில மொழியைக் காட்டும் சோ அவர்களே,

அந்த மொழியின்படி, அது சீசரின் மனைவியின் கடமைபற்றியதே தவிர சீசரைப் பற்றியதல்லவே. பெண் சந்தேக மற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினால், அது சீதையைப் பொறுத் ததே தவிர, இராமனின் செயலை நியாயப்படுத்த அதைத் துணைக்கழைப்பது, பொருத்தமற்ற, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பொருந்தாவாதம் அல்லவா?
எனவே புதிய உபன்யாஸத்திலகம் சோ அவர்களே இந்த வழக்கிலும் உங்களுக்குத் தோல்விதான் மிச்சம்
 

 -------------------------- ஊசி மிளகாய் - எழுதிய கட்டுரை-”விடுதலை” 22-11-2012

22.11.12

நாத்திகம் பேசாமல் நாசமாய்ப் போன பக்திப் பஜனைப் பாட்டா பாடுவார்கள்?

ஆம், அதே புதுச்சேரியில்தான்!
22.7.1945 திரையரங்கு ஒன்றில் திராவிடர் கழகத் துவக்க விழா; ஏற்பாடு செய்தவர் யார்?

இயக்கக் கவிஞன் என்று நாம் மார்புப் புடைக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்தான் அந்த விழா ஏற்பாட்டாளர். வெறும் மாலை நேரம் பொதுக் கூட்டமல்ல காலை - மாலை இருவேளைகளிலும் விழா!

தலைமை ஏற்றவரோ தந்தை பெரியார்! கழகக் கொடியேற்றியவரோ அறிஞர் அண்ணா! தந்தை பெரியார் படத்தைத் திறந்தவரோ மாணவர் க.அன்பழகன் (இன்றைய பேராசிரியர்). திராவிட நாடு படத்தினைத் திறந்து வைத்து ஒரு மணி நேரம் முழங்கியவர் தந்தை பெரியார்.

ஆந்திர மாநிலச் சுற்றுப் பயணத்தை முடித்து வந்ததால் களைப்புற்ற அந்தக் கர்ச்சனைச் சிங்கம் மயக்கமுற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் அடைந்தனர் பதற்றம், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி டி.சண்முகம் அவர்களைத் தலைமை ஏற்கச் சொல்லி ஓய்வெடுக்கச் சென்றார் தந்தை பெரியார். பிற்பகல் நிகழ்ச்சியிலோ கலகம் மூண்டது. கறுஞ் சட்டைச் சிறுத்தைகளின் திரண்டு வந்த கருத்து  வெள்ளத்திற்கு முகம் கொடுக்க முடியாத கோழைகள் காலித்தனத்தில் இறங்கினர். அந்தக் காலகட்டத்தில் இவை எல்லாம் சர்வசாதாரணம்.

வீதிகளில் சென்ற கருஞ்சட்டைத் தொண்டர்கள் எல்லாம் தாக்கப்பட்டனர். அதோ பாரடா வாத்தியாரு - அவனை விடாதே - பிடி! என்று ஆத்திரத்தோடு ஓடி வந்தது ஒரு கும்பல். வாத்தியார் என்றால் வேறு யாருமல்ல - நமது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைத்தான் அப்படி அழைத்தார்கள் - விரட்டினார்கள்.
புரட்சிக்கவிஞர் மட்டுமா? காஞ்சி கலியாணசுந்தரமும், அன்றைய திருவாரூர் மு.கருணாநிதி என்ற 21 வயது இளைஞரும் சிக்கிக் கொண்டனர்.

கலைஞர் சிக்கிக் கொண்டார். ஆனமட்டும் அடித்துத் தூக்கி எறிந்து சென்றனர் - பையன் குளோஸ் என்ற எண்ணத்தில். அடிபட்ட அந்த இளைஞனைப் பார்த்த அய்யா ஆசுவாசப்படுத்தினார்.  அதைப்பற்றிக் கலைஞர் அவர்கள் நெஞ்சுக்கு நீதியில் எழுதுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்துத்தான் நான் கண்விழித்துப் பார்த்தேன். எங்கேயோ வீட்டுத் தாழ்வாரத்தில் நான் படுக்க வைக்கப்பட்டிருந் தேன். முதிர்ந்த ஒரு தாயும், ஒரு சிறுமியும், ஓர் இளை ஞனும் என் அருகே இருந்தார்கள். நான் கண் விழித்துப் பார்த்தபோது அந்தத் தாய் சொன்ன வார்த்தை என் நெஞ்சில் அப்படியே பதிந்து விட்டது.
அய்யோ, யார் பெற்ற பிள்ளையோ! இப்படிச் சாகக் கிடக்கிறதே? என்பதுதான் அந்தத் தாயின் வாயிலிருந்து வந்த கனிவு மிக்க வாசகம்.

நீண்ட நாள் வரை தேடிக் கொண்டிருந்தேன்; புதுவை யில் எனக்கு உயிரளித்த அந்த நல்லவர்கள் யாரென்று. அதற்குப் பிறகு நான் அவர்களை இரண்டொரு முறை சந்தித்தேன். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் என்பது மட்டும் எனக்குத் தெரியும்

இதற்கிடையில் காலையில் கலைக்கப்பட்ட கழக மாநாடு மீண்டும் மாலையில் கூட்டப்பட்டு அழகிரிசாமி அந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் சொன்ன வாசகம்தான், காலையில் சில கவலை தரத்தக்க நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கேள்விப்பட் டேன் - நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பதாகும்.
என்னுடைய நிலைமை என்னவாயிற்று என்று தெரியாமல் தலைவர்கள் ஊரெல்லாம் ஆள் அனுப்பித் தேடியிருக்கிறார்கள். பெரியாரும், அண்ணாவும் என்னைக் காணாமல் துடித்துப்போயினர். விடியற்காலை நாலு மணிக்கு தலைவர்கள் தங்கியிருக்கும் இடம் தெரிந்து அவர்களிடம் போய்ச் சேரப் புறப்பட்டேன். மீண்டும் என்னைத் தெருவில் கண்டால் கலக்காரர்கள் உயிரைப் பறித்துவிடக் கூடுமென்று அஞ்சிய எனக்கு உதவி செய்த வீட்டார் என்னை மாறுவேடத்தில் போகுமாறு வலியுறுத்தினர்.

அவர்களே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து, முஸ்லீம் வேடத்தில் என்னை அனுப்பி வைக்கத் திட்ட மிட்டனர். கைலி, நீண்ட ஜிப்பா, தலையில் குல்லாய் இவைகளுடன் ரிக்ஷா ஏறி தலைவர்கள் இருக்குமிடம் சென்றேன். பெரியார் கண்ணுறங்காமல் என்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். என்னைக் கண்டதும் ஆரத் தழுவிக்கொண்டு, சுகமாக இருக் கிறயா? என தழுதழுத்த குரலில் கேட்டார்.

அதற்குப் பிறகு அவரே என் காயங்களுக்கெல்லாம் மருந்திட்டார். என்னுடன் வா, போகலாம் என்று ஆணையிட்டார். நானும் அவருடன் புறப்படத் தயாரானேன். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் பெரியாரின் ஈரோட்டுக் குடிஅரசு அலுவலகத்தில் துணையாசிரி யனாகப் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. என் இனிய நண்பர் கருணானந்தம், ஜனார்த்தனம், தவமணி ராஜன் ஆகியோர் குடிஅரசு அலுவலகத்தில் பணியாற்றி வந்த காலம் அது.
(கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூல் பக்கம் 90, 91)

தேதி சொல்லியாயிற்று - நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பும் சொல்லியாயிற்று, கலவரத்தைப் பற்றியும் விவரித்தாகி விட்டது. இவையெல்லாம் நடந்தது எந்த ஊரில்?

எந்த ஊரிலா - புரட்சிக் கவிஞரை ஈன்று புறந்தந்த அந்தப் புதுச்சேரி மண்ணில்தான் இவ்வளவு அரங் கேற்றங்களும்.
கருஞ்சட்டைத் தோழர் குருதி கொட்டிய அதே புதுவையில்தான் நாளை மறுநாள் (23.11.2012) வெள்ளியன்று திராவிடர் கழக மாநாடு.
1945இல் நடந்ததுபோல காலை - மாலை இரு வேளைகளிலும் மாநாட்டு நிகழ்ச்சிகள். கூடுதலாக ஒரு சிறப்பு - இந்த மாநாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி யும் உண்டு.

ஊரையே கலக்கப் போகிற இந்த கருஞ்சட்டை வெள்ளம் கரைபுரண்டு ஓடப்போகிறது! கருத்துக் கர்ச்சனை கேட்கப் போகிறது. கத்துங்கடல் சூழ்ந்த புதுவையிலே கழகத் தோழர்களின் முழக்கம் கடல் அலைகளையும் அடங்கச் செய்யும். ஆவேசம் உண்டு என்றாலும், அமைதிக்குப் பங்கம் இருக்காது; கனல் பறக்கும் பேச்சு உண்டு - எந்த நிலையிலும் கண்ணியத் திற்குக் குந்தகம் இருக்கவே இருக்காது.

புரட்சி முழக்கங்கள் விண்ணை முட்டும். ஆனால் புரட்டுப் பேச்சுகள் கிடையாது.  பந்தை அடிக்க முடியாத கோழையல்லவா காலை அடிப்பான்? தலைமுறை தலை முறையாக கடல் கடலாய்க் கருத்துச் செல்வங்களைக் குவித்துச் சென்றுள்ளாரே குவலயத் தலைவராம் நமது அறிவுத் தந்தை. முக்கியமானதோர் காலகட்டத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. புதுச்சேரி என்றாலும், தமிழ்நாடு என்றாலும் நம் தமிழ் மக்களின் பூமிதானே. பிரச்சினைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பயணம் செய்யக் கூடியவைதானே.
ஜாதியற்ற சமூகம் படைப்போம், தீண்டாமை நோயைத் தீர்த்துக் கட்டுவோம்! மூடநம்பிக்கையை முற்றாக ஒழிப்போம்; சமூக நீதி சங்கநாதம் செய்வோம்! பெண்ணுரிமைக்குப் பீரங்கிக் குரல் கொடுப்போம்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கு வழி செய்ய வலியுறுத்துவோம். மண்ணுக்கு உரிமை கேட்போரே! மனித உரிமைக்குக் குரல் கொடுப்போம், வாரீர்! வாரீர்!! என்று அழைப்புக் கொடுப்போம்!
பெரியார் பணி முடிக்க வாரீர்! வாரீர்!! என்று பெருங்குரல் கொடுப்போம், வாரீர்! வாரீர்!! ஒரு சேதி தெரியுமா?  

அதுதான் நமது மாநாட்டு விளம்பரப் பொறுப்பை எப்பொழுதும் நம் எதிரிகள் கையில் எடுத்துக் கொள்வார்களே - அதே வேலையைத்தான் புதுவையிலும் செய்துள்ளார்கள்.

சபாஷ்! அப்படி வாருமய்யா - இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களே! கருத்தைக் கருத் தோடு சந்திக்க இயலாத கடைந்தெடுத்த கோழைகள் காவல்துறைக்கு மூச்சு இரைக்க இரைக்க ஓடி மனு கொடுத்துள்ளார்களாம். கருஞ்சட்டைக்காரர்கள் நாத்திகம் பேசுவார்களாம். நாத்திகம் பேசாமல் நாசமாய்ப் போன பக்திப் பஜனைப் பாட்டா பாடுவார்கள்?
அந்த நாத்திகம்தானே சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டடி என்ற தன்மான உணர்வும் ஊட்டியது. அந்த நாத்திகம்தானே தமிழர்களுக்குக் கல்வி உரிமையை வாங்கிக் கொடுத்தது - உத்தியோக வாய்ப்புக்கு வழி செய்து கொடுத்தது. இன்னும் எத்தனை எத்தனையோ பட்டியல் உண்டே - இந்த நாத்திக இயக்கம் சாதித்துக் கொடுத்தது சாதனைகள் பற்றி! வாலாட்டிப் பார்க் கிறார்கள் - வாருங்கள், தோழர்களே வங்கக் கடலாய் - கருங் கடலாய்! அடேயப்பா - இத்தனை ஆயிரம் இளைஞர்களா இந்த ஈரோட்டுக் கிழவனாரின் மறைவிற்குப் பிறகும்? என்று கரித்துக் கொட்டட்டும் கபோதிகள்.
காலை கருத்தரங்க நிகழ்ச்சிக்கே வந்து குவிந்திடுவீர்! குடும்பத்தாரையும் கூட்டி வாருங்கள். தமிழர் தலைவர் அழைக்கிறார் புறப்படுங்கள். புரட்சிக் கவிஞன் மண்ணிலே புரட்சி இயக்கத்தின் மகத்துவம் காட்டுவோம், வாரீர்! வாரீர்!!
தீக்குண்டம்! தீக்குண்டம்!
தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி காணத்தக்கது. புதுச்சேரி மக்களால் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி! பக்திக்கும், தீமிதிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபிக்கும் - அறிவியல் சிந்தனையைத் தூண்டும் செயல்முறை விளக்கம் இது. வாருங்கள், தோழர்களே!
                    ------------------------மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை 21-11-2012

21.11.12

டெசோவின் பயணம்


டெசோவின் அடுத்த கட்ட கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்று (19.11.2012) நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

டெசோவைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் விமர்சித்தவர்கள்கூட இப்பொழுது அதன் செயல்பாட்டை நேர்மையான முறையில் உள்வாங்கிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

12.8.2012இல் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாடு - அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் -  மற்றும் அதன் விளக்கம் அடங்கிய மனுவினை அய்.நா. செயலாளரிடம் அளித்தது; ஜெனிவா மனித உரிமை ஆணையரிடமும் அளித்து விளக்கம் தெரிவித்தது; லண்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற (7.11.2012) மாநாட்டில் பங்கேற்றது - என்று தொடர்ச்சியாக, ஆற்றொழுக் காக டெசோ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆக்க ரீதியானவை -  ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் ஆகும்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அசாதாரண கொடுமைகளுக்குப் பிறகு - எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம் என்பது முக்கியமாகக் கையில் எடுத்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதே நேரத்தில்  ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரரான ராஜபக்சேமீது இனப் படுகொலை குற்றச்சாற்று என்பதிலும் கவனம் கொண்டு அந்தத் திசையிலும் காய்கள் நகர்த்தப்பட்டும் வருகின்றன.

இலங்கை அரசு, மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறது என்ற கருத்தாக்கம் மனித உரிமை ஆணையத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்பொழுது வெளிப்படையாகவே அய்.நா. தன் வாயைத் திறந்துள்ளது. அய்.நா. மன்றம் தன் கடமையைச் செய்யத் தவறி இருக்கிறது என்று அம்மன்றத்தின் பொதுச் செயலாளரே வெளிப் படையாக ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களைப்பற்றி குற்றவாளியான நாடே விசாரிப்பது என்னும் முடிவு - நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பது போன்றதாகும்.

இலங்கை அரசு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலைகள் குறித்து சுதந்திர மான விசாரணை நடத்திட பல நாடுகள் கொண்ட குழு ஒன்றினை அமைக்க வேண்டுமென அய்.நா. மன்றத்துக்கு லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு மிக மிகச் சரியானதாகும்.
இந்தக் கருத்தைத் தொடக்க முதலே நாம் கூறிக் கொண்டும் வந்திருக்கிறோம். லண்டன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தைத் தொடர்ந்து நேற்று சென்னையில் கூடிய டெசோ கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள திட்டம் சிறப்பானது.

அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் உறுப்பு நாடுகளான 47 நாடுகளின் இந்தியாவிற்கான தூதுவர்களையும் டெசோ சார்பில் நேரில் சந்திப்பது என்பது  - இந்த வகையில் மேலே முன்னேறுவதற்கான படிக்கட்டு என்பதில் அய்யமில்லை.
இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு என்ற கருத்தாக்கம் உருவாக்கப்படுவதற்கு மேலும் மேலும் வலுவான அழுத்தத்தை நாம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வாக்கெடுப்பு -  ஒன்றும் புதிதான ஒன்றல்ல; இதற்கு முன் மாதிரிகளும் உண்டு.

ஒரு பக்கம் எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, இன்னொரு பக்கம் ஈழத் தமிழர் அழிவுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை என்கிற இரண்டு தண்டவாளத்தில் நிதானமாக அதே நேரத்தில் உறுதியாக டெசோ தன் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கும் என்பதில் அய்யமில்லை.
வெறும் உணர்ச்சிகளை  ஒரு பக்கத்தில் ஒதுக்கி அதே நேரத்தில் சரியான உணர்வுடன் செயல்படும் பொழுதுதான் வெற்றி என்பது உறுதிப்படும். அந்த வகையில்தான் டெசோவின் செயல்பாடு இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
                               -----------------------------"விடுதலை” தலையங்கம் 20-11-2012

20.11.12

பக்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இராம. கோபாலன் கோரிக்கையும் நமது கோரிக்கையும்
எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இந்துத்துவாவாதிகளுக்கு அவை எல்லாம் ஒரு பொருட்டல்ல.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளரான திருவாளர் இராம. கோபாலன் அய்யர் அரசுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.

1) ஒவ்வொரு கோயிலிலும் உள்ள விக்கிரகங்கள், அவற்றின் நகைகள் ஆகியவைபற்றி முழு மதிப்பீடு செய்து குறிப்பிட்ட கால அளவில் பதிவு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அவை சரி பார்க்கப்பட வேண்டும். இதில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறார் திருவாளர் இராம. கோபாலன்.

இந்துக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி வந்த இவர்களுக்கு இப்பொழுது நல்ல புத்தி வந்துவிட்டதா? அரசின் கையில் இருந்தால்தான் அவை பாதுகாப்பு என்று மனம் மாற்றம் பெற்று இருக்கிறார்களா?

சர்.சி.பி, இராமசாமி அய்யர் தலைமையிலே அமைக்கப்பட்ட இந்துக் கோயில்களுக்கெல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்து கோயில்கள் எப்படி எல்லாம் அர்ச்சகர்ப் பார்ப்பனர்களின் சுரண்டல் கூடாரங்களாக இருக்கின்றன - பாழடைந்த மண்டபங்களாகக் காட்சி அளிக்கின்றன. அர்ச்சகர்களே கோயில் சிலைகளை அபகரிக்கின்றனர் என்றெல்லாம் விலாவாரியாக வெளிப்படுத்தியதுண்டு.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அற நிலையத் துறை என்ற ஒன்றை உருவாக்கி, இந்துக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த காரணத்தால்தான் ஓரளவு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராசன் கோயில் தீட்சதர்ப் பார்ப்பனர்களின் தனி உடைமையாக இருந்தது. அதனை தி.மு.க. ஆட்சியில், கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராகவிருந்தபோதுதான் இந்து அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

நீதிமன்றம் வரை சென்று பார்த்தனர் தீட்சதர்கள்.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கை சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பும் அளித்தது. அதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆண்டு ஒன்றுக்கு வெறும் 32 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் என்று நீதிமன்றத்தில் தீட்சதர்கள் கணக்குக் காட்டினர். அதிலும் பெரும்பாலும் செலவு என்று கணக்குக் காட்டினர்.

அதே நேரத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் ஆண்டு ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை விலக்கிக் கொள்ள முயற்சி எடுப்பாரா இந்து முன்னணி அமைப்பாளர்?
இன்னொன்றையும் கோயில்களில் உள்ள சாமி சிலைகளின் கணக்கெடுப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

கடவுள் சிலைகளின் சக்திமீது அந்த அளவுக்குத்தான் நம்பிக்கை போலும்! அந்த சிலைகளின்மீது யாரும் கை வைக்க முடியாது - சர்வ சக்தி வாய்ந்தது என்று இராம. கோபாலன்கள் உண்மையிலேயே நம்புவார்களேயானால், இது போன்ற கோரிக்கைகளை வைக்க முன் வருவார்களா?

கோயில் சிலைகள் திருட்டு என்பது அன்றாட செய்தி யாகிவிட்டது. சில திருட்டுகளில் அர்ச்சகப் பார்ப்பனர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதும் நிரூபணமாகி விட்டதே - இதைப்பற்றி  எல்லாம் இந்துத்துவாவாதிகள் வாய் திறக்க மாட்டார்கள்.

இந்துத்துவா பேசும் இந்தப் பேர்வழிகள் இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? தி.மு.க. அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவானேன்? மற்ற மற்ற விடயங்களில் எல்லாம் இந்துக் களே! ஒன்று சேருங்கள் என்று அழைப்புக் கொடுக்கும் இவர்கள். அந்த இந்துக்களில் பயிற்சி அளிக்கப்பட்ட எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை ஏற்றுக் கொள்ளாதது ஏன்?

காரணம் வெளிப்படையானதே! இந்து மதக் கோயில்கள் எல்லாம், அவை பார்ப்பனர்களின் தனி உடைமை, பார்ப்பனர்கள்தான் கடவுளுக்குப் பக்கத்தில் செல்லும் உரிமை பெற்றவர்கள் என்பதை நிலை நாட்டுவதன் மூலம்,  சமூக அமைப்பில் தங்களின் உயர் ஜாதித் தத்துவத்தை நிலை நாட்டுவதுதான் இதில் உள்ள சூட்சுமம் ஆகும்.

பார்ப்பனர் அல்லாதாரில் பக்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

2) அனைத்து ஊர்களிலும் தேர்த் திருவிழா நடைபெற வேண்டும், அதற்கு இந்து அற நிலையத்துறை ஆவன செய்ய வேண்டும், என்பது அடுத்த கோரிக்கை
தமிழ் செம்மொழியாவதுதான் முக்கியமா? நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன;அவற்றை எல்லாம் விட்டு விட்டு, செம்மொழி ஆக வேண்டும் என்று குரல் கொடுப்பது ஏன்? என்று பார்ப்பனத் தலைவர்களும், பார்ப்பன ஊடகங்களும் விழுந்து விழுந்து எழுதுவார்கள்.

இப்பொழுது அதையேதான் நாமும் திருப்பிக் கேட்க வேண்டும்.
நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன - கடும் மின்வெட்டு உட்பட! இந்தநிலையில் தேர் ஓட்டம்தான் முக்கியமா? என்று கேட்க விரும்புகிறோம்.

மக்களில் அடிப்படை பிரச்சினைகள், தேவைகள் தீர்க்கப்பட கோயில் சொத்துக்களை அரசு பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் - அரசுக்கு நாம் வைக்கும் கோரிக்கை இதுதான்!


          -----------------------"விடுதலை” தலையங்கம் 19-11-2012