Search This Blog

4.6.11

இந்த ராம்தேவ் யார்? காவிகளின் மிரட்டலுக்கு மத்திய அரசு பணியலாமா?



காவிகளின் மிரட்டலுக்கு மத்திய அரசு பணியலாமா?
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

ஊழலை ஒழிப்பது என்ற பெயரால் காவியாட்சியை மீண்டும் கொண்டு வரும் சதித் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல், காவிகளின் மிரட்ட லுக்கு மத்திய அரசு அடி பணியலாமா என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். இதுகுறித்த அறிக்கை வருமாறு:

ஊழலை ஒழிக்கிறோம் என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா - மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டில்லியில் அரங் கேற்றுகின்றன.

சுமார் 18 கோடி ரூபாய் செலவில் டில்லி ராம்லீலா மைதானத்தில் மின்விசிறிகள், மேடைகள் முதலிய தடபுடல் ஏற்பாடுகள்.

அண்மைக் காலத்தில் உடற்பயிற்சிகளில் ஒன்றான மூச்சுப் பயிற்சியான யோகா வித்தைகளைப் பரப்பி, பல நவீனரக பாபாக் களும், காவிகளும் ஆண்டவன் அவதாரங் களும், தத்துவார்த்த மழைபொழியும் நடிகர்களைத் தோற்கக் கூடிய ஒப்பனைக் குருமார்களும் புற்றீசல் போல கிளம்பி வருகின்றனர்!

தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன!

அரசியலில் ஊழலை ஒழிக்குமுன் ஆன்மீகத்தைச் சரி செய்யுங்கள்!


ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு யாதவர் திடீரென - யோகா பயிற்சியில் முன்னணிக்கு வந்து, பாபா ராம்தேவ் ஆகி, பல அரசியல் தலைவர்கள் ஆதரவை ஆரம்பத்தில் பெற்று, பிறகு வெளி நாட்டுப் பணக்காரர் களையும் சீடர்களாக்கி, உலகப் பணக்கார ஆசிரமங்களையொத்த ராஜபோகத்தை எளிமை வாழ்வு எனக் கூறி நடத்துகின்றனர்!

அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா?

அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை பயமுறுத்திட இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர் - பாபா ராமதேவ், அன்னா ஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!

காவி ஆட்சியைக் கொண்டு வரும் திட்டம்


மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி - குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் உள்ள ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவே இப்படிப் பட்ட திடீர் ஊழல் ஒழிப்பு திடீர்க் காட்சிகள்!

டில்லியில் இதில் அரசியல்வாதிகள் மேடை யில் இருக்க அமைதிக்கப்படமாட்டார்களாம்! மாறாகக் கலந்து கொள்பவர்கள் யார் யார் தெரியுமா?

1. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால்.
2. சாத்வி ரிதம்பரா
3. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர்
4. இந்து அமைப்புகள்

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்


இதில் அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள்; ஜஸ்டீஸ் லிபரான் கமிஷன் என்ற அறிக் கையை காங்கிரஸ் கட்சி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதே! அதிலும் அலகா பாத் உயர்நீதிமன்ற வழக்கிலும் இவர்கள் எல்லாம் உள்ளனர்!

இதை அய்க்கிய முற்போக்கு முன்னணி ஆட்சித் தலைமை, பிரதமர், அமைச்சர்கள் எவருமா புரிந்து கொள்ளவில்லை?

ஊழலை ஒழிக்க தயங்காது என்று கூறும் மத்திய அரசு தலைமை, இந்த சாமியார்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும் - அமைச்சர்களை தூது அனுப்பி இதை நிறுத்திடும்படிக் கெஞ்சுதல், கொஞ்சுதல் செய்ய வேண்டும்? அவ்வளவு பலவீனமான அரசாக இயங்குவது நல்லதா?

மிரட்டுகிறவர்களுக்குப் பணிவதா?


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங் கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இத னைக் கூறி சட்டங்களைக் கொண்டு வருவதே அரசியல் சட்டப்படிக்கு உள்ள கடமையாகும்.

அதைவிடுத்து, மிரட்டுகிறவர்களைச் சேர்த்து புதுக்கமிட்டி போட்டு, சட்டத்தைத் தயாரிப்போம் என்று கூறும் மத்திய அரசின் செய்கை, அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட - ஏன் முரண்பட்ட நடவடிக்கை அல்லவா?

ஆட்சித் தலைமைக்குத் தெரியாதா?


பாபா ராம்தேவ்வை ஒரு வியாபாரி என்று நன்றாக வர்ணித்து அறிக்கை கொடுத்ததோடு, அவரை நோக்கி அமைச்சர்களை அனுப்புவது ஏன் என்று கேட்டுள்ளார் திக் விஜய்சிங்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியவர்களுக்குத் தெரியாமலா இந்த இரண்டு அணுகுமுறைகள்?

ஒருபுறம் பேச்சு வார்த்தை காவிகளிடம்; இன்னொருபுறம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் அறிக்கை - ஒன்றுமே புரியவில்லை நாட்டினருக்கு!

ஜனநாயகக் கேலிக் கூத்து!


இந்த அரசியல் அலங்கோலங்கள்பற்றி நினைத்தால் ஜனநாயகம் இப்படி கேலிக் கூத் தாக்கப்படுகிறதே என்று எண்ணி வேதனைப் பட வேண்டியுள்ளது!

மீண்டும் காவிகள் அரியணை ஏறவே இந்த ஆயத்தங்கள் என்பதை புரிய வைக்க வேண்டி யது முற்போக்குச் சிந்தனை உடைய தலைவர் களின் கடமையாகும்.

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்





********************************************************


ஊழலை ஒழிக்கும் உத்தமப் புத்திரர்கள் புற்றீசல் போல புறப்பட்டு விட்டார்கள். ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்பவர்கள் பால் பொது மக்களுக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. அதனைப் பயன்படுத்திக் கொள்ள சிலர் முன் வருகின்றனர்.

அன்னாஹசாரே என்ற ஒருவர் காந்தியின் மறுபதிப்பாக விளம்பரப்படுத்தப்பட்டு, இதோ ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் ஒரு மகான்! பராக், பராக் என்று பத்திரிகைகள் முண்டாசு கட்டி ஊளையிட்டன.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பதுபோல சில திரைமறைவு உண்மைகள் வெளிச்சத்தில் வந்து வீழ்ந்தன.

இந்த ஹசாரே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரர் - அதன் பிரச்சாரப் பொறுப்பில் இருந்தவர் என்று கூறப் பட்டது. அது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் ஆட்சியைப் புகழ்ந்து தள்ளினார்.

இவர் உண்ணாவிரதம் இருந்த டில்லியில் உள்ள ஜந்தர்மந்தர் மேடை என்பது ஆர்.எஸ்.எஸின் வாடை மிகக் கடுமையாக வீசும் வகையில் இருந்தது. பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பிரச்சார மேடைகளில் இடம் பெறும் பாரத மாதா வந்து குதித்து விட்டார் - மேடை விரிப்புக்கூட காவி வண்ணத்தில்தான் வடிக்கப்பட்டு இருந்தது.

இந்த உண்ணாவிரதத்துக்காக 82 லட்சம் ரூபாய் நன்கொடை திரட்டப்பட்டது - யாரிடமிருந்து? பெரும் பண முதலைகளிடமிருந்து நன்கொடைகளைக் கணிசமாகத் திரட்டுபவர்களால் உண்மையில் ஊழலை ஒழிக்க முடியுமா என்பது நியாயமான கேள்வியாகும்.

82 லட்சம் நிதி திரட்டப்பட்டதிலிருந்து நான்கு நாள் உண்ணாவிரதத்துக்கு ரூபாய் 50 லட்சம் ரூபாய் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டுள்ளது என்றால் இதற்குள்ளிருக்கும் நேர்மையின் மாற்று என்ன?

லோக்பால் மசோதாவைத் தயாரிக்கும் ஆலோசனைக் குழுவில் இடம் பெறுவதற்காக ஹசாரேயால் பரிந்துரைக்கப்பட்டவர்களும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இல்லையே!

லோக்பால் மசோதா நிறைவேற வேண்டும் - அதில் நான் உறுப்பினராக இருக்க விரும்பவில்லை என்று சொல்லியிருந்தால் அவர் பெரிய மனிதர்.

தான் உறுப்பினராக இருப்பதோடு, தன்னால் சொல்லப்படுபவர்தான் அந்தக் குழுவில் இடம் பெற வேண்டும் என்று அடம் பிடிப்பதெல்லாம் நேர்மையானது தானா என்ற கேள்வி எழவில்லையா?

சுவாமி அக்னிவேஷ், ராம் மாதவ், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்கிற சாமியார் பட்டாளமும் ஹசாரேயின் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்து விட்டன.

பொதுவாக நாட்டில் சாமியார்களின் யோக்கியதை பற்றி நல்ல அபிப்ராயம் கிடையாது. பரலோகத்தைக் காட்டப் போகிறேன் என்று கோடி கோடியாகப் பணம் குவிக்கிறார்களே - இதன் பொருள் என்ன?

கோடிகளைக் குவிப்பதற்கு ஆன்மீகம், காவி, சாமியார் என்பது ஒரு புடம் போட்ட குறுக்குவழிமுறையே!

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து ஹோதாவில் குதித்துள்ள இந்த ராம்தேவ் யார்? ஆர்.எஸ்.எஸின் பசு பாதுகாப்பு யாத்திரையில் (கோ ரக்ஷா) யோகா வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்தவர். பத்தாண்டுகளுக்கு முன்வரை சைக்கிளில் சுற்றித் திரிந்தவர். இன்று தனி ஹெலிகாப்டரில் பறந்து திரிகிறாரே - இதற்கான பணபலம் வந்த வகை தொகை என்ன? வெளிப்படையாக விவரங்களை வெளியிடட்டுமே, பார்க்கலாம்.

இப்பொழுது உண்ணாவிரதத்தில் குதித்துள்ள பாபா ராம்தேவ் தம் உண்ணாவிரதத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதில் ஒன்று என்ன தெரியுமா?

இங்கிலீஷ் இருக்கும் இடத்தில் இந்தியைக் கொண்டு வந்து வைக்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது? ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் என்ற பாதகையின்கீழ் இந்தி எங்கே இருந்து வந்து குதித்தது?

இதிலிருந்தே இதன் பின்னணி என்ன என்ற முகத்திரை முழம் முழமாகக் கிழியவில்லையா?

பார்ப்பனீயம், சங்பரிவார்த்தனம் என்கிற பின்னணி யோடு ஒரு கும்பல் புறப்பட்டுள்ளது. இதில் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சங்பரிவார்க் கும்பல் பெரும் சரிவை சந்தித்திருக்கும் கால கட்டத்தில், ஊழல் ஒழிப்பு என்ற குதிரையின்மீது சவாரி செய்து, மக்கள் மத்தியில் தங்கள் சட்டையை உரித்துக் காட்டுகிறார்கள். சட்டையை உரித்து விடுவதாலேயே பாம்பின் நஞ்சும் தேனாக மாறி விட்டது என்று நம்பினால் அதைவிட தற்கொலை ஒப்பந்தம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

ஊழல் ஒழிக்கப்படட்டும் - வரவேற்போம்! வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள் ளுங்கள் என்று நோயாளிகள் கேட்கும்படி இருக்கக் கூடாதல்லவா!

---------------- "விடுதலை” தலையங்கம் 4-6-2011

எந்த பார்ப்பானாவது பழனியாண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா?


தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை

எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா? இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட்டையடித்துக் கொள்வதில்லையே! மொட்டை அடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருடனாவது ஓடிவிடுகிறார்களே! அப்படியிருக்க உங்கள் தலை மயிரைத்தானா சாமி கேட்கும்? உங்கள் கணவன்மாரை காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே! எந்த பார்ப்பானாவது பழனியாண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அய்ந்து புருஷன் போதாதென்று ஆறாவது புருஷனையும் விரும்பிய துரோபதியம்மாளைப்போய் கும்பிடுகிறீர்களே! அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களே! உங்களுக்கு இன்னும் அதிகப்படியான புருஷன் வேண்டும் என்று வரம் கேட்கவா அந்தப்படி செய்கிறீர்கள்? திராவிடத் தாய்மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?

---------------தந்தை பெரியார் - "விடுதலை" 3.6.1976

பத்திரிகை சென்சார் காலத்தில் சர்வாதிகார ஆட்சியில் கத்தரித்து எறியப்பட்ட அய்யாவின் அறிவுரை.

********************************************

சாஸ்திரத்தைச் சுட்டுச் சதுர் மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவதெக்காலம்?

சாத்திரத்தைச்சுட்டு - மனு தர்ம சாஸ்திரத்தைச் சுட்டுப் பொசுக்கி, சதுர்மறையைப் பொய்யாக்கி, - மேல் கண்ட சாஸ்திரத்திற்கு ஆதாரம் என்று சொல்லப்படும் நான்கு வேதங்களையும் சுத்தப் புரட்டு என்று தள்ளி, சூத்திரத்தைக் கண்டு - பகுத்தறிவின் ஆராய்ச்சியில் இயந்திரங்களைக் கண்டு பிடித்து, சுகம்பெறுவதெக்காலம் - அவைகளினால் மனித சமூகமும் சுகமடைவது எப்போது வாய்க்கப் போகின்றது?

---------------- தந்தை பெரியார் - "குடிஅரசு - 5.5.1929

-------------------- நன்றி:- “விடுதலை” 3-6-2011

ஆராய்ச்சி விளக்கம் - பெரியார்


ஆராய்ச்சி விளக்கம்

ஏழை என்பவன் யார்?

தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன். இக் கூட்டத்தார்களுக்குதான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.

முதலாளிகள் என்பவர்கள் யார்?

சரீரத்தினால் வேலை செய்யும் ஆள்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக்குள்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்துவிட்டு அவ்வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள்.

கீழ் ஜாதியார்கள் யார்?

ஏவலாள்கள் அதாவது எவ்வித கூலியோ சம்பளமோ பேசாமல் இட்டவேலையை செய்துவிட்டு கொடுத்த கூலியைப் பெற்றுக்கொண்டு கிடைத்ததற்குள்ளாகவே வாழ்ந்து திருப்தியடைய வேண்டியவர்கள்.

மேல் ஜாதியார் என்பவர்கள் யார்?

தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து மேலான தொழில்கள், மத்திய தொழில்கள் என்பவைகளை மாத்திரம் செய்து கொண்டு கூடுமானவரை சரீரத்தால் செய்யும் கடினமான வேலைகளை செய்யாது தப்பித்துக் கொள்பவர்கள்.

குடியானவர்கள் என்பவர்கள் யார்

பூமியை தானே உழுது தானே பயிர்செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.

மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்?

தாங்களே நேரில் விவசாய தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும் மற்றவர்களுக்கு குத்தகைக்கோ வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களான (பூமியை உடைய)வர்கள்.

பிராமணர்கள் என்பவர்கள் யார்?

எக்காரணம் கொண்டும் சரீரம் பிரயாசைப்படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்துகொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியான உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்.

பிச்சைக்காரன் என்பவன் யார்?

பாடுபட சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு ஏமாற்றுவதாலும் சண்டித் தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள்.

செல்வவான்கள் என்பவர்கள் யார்?

தன் வாழ்க்கைத் திட்டத்திற்கு மேல் பணம் வைத்துக் கொண்டிருப் பவர்கள்.

தரித்திரர்கள் என்பவர்கள் யார்?

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக்கொண்டு துன்பப்படுபவர்கள் - நாணையமாய் வாழ முடியாமல் நாட்டுக்கு தொல்லை விளைவிப்பவர்கள். தங்கள் வரவுக்கும் தகுதிக்கும் மேல் வாழ்க்கை திட்டம் வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்.

-------------------- ஈ.வெ.ரா. "குடி அரசு" - 19.09.1937

3.6.11

கடவுளை நம்புகிறீர்களா? -கலைஞர் பதில்


சுயமரியாதைக்காரரின் மானமிகு முத்திரைகள்!

பெரியாருக்கு இணை வேறு யார்?

என்னை இங்கே பாராட்டுவதாகக் கூறி அவர்கள் தலைமை யேற்றிருக் கின்ற திராவிடர் கழகத்தின் சார்பாக பாராட்டு என்று கூறி, இந்த விழாவிற்கு அமெரிக்காவில் இருந்து கூட நண்பர்களெல்லாம் வருகை தந்து, ஆன் றோரும், சான்றோரும், கவிஞர் பெருமக்களும் திரண்டிருக்கின்ற இந்தப் புகழ் பெற்ற மைதானத்தில் மேலும் எனக்குப் புகழ் சேர்க்கின்ற வகையில் பல கருத்துகளை வாரி இறைத்திருக்கிறார்கள்.

நான் இதற்கு உரியவன்தானா? இதை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு எனக்குத் தகுதி உண்டா? என்பதெல்லாம் வேறு விஷயம்.

ஆனால் தகுதி உண்டு, உரியவன் எப்படி என்றால், இவையெல்லாம் தந்தை பெரியார் அவர்களைச் சேரக் கூடியவை - பெரியார் அவர்களுக்கே உரியவை என்பது ஒத்துக் கொள்ளப்படுமேயானால் இவை எனக்கும் உரியவை என்று கூறுவதிலே எந்த வித அய்யப்பாடும் எனக்கில்லை.

இடமருகு என்ற எழுத்தாளரால் வரையப்பட்ட அருமையான நூல். நூலுக்குத் தலைப்பு இவர்தான் நாராயணகுரு. நாராயண குரு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் கேரளத்தில் பெரியாருக்குச் சமமாக என்று சொல்லமாட்டேன். பெரியார் அளவுக்கு என்று நான் கூறமாட்டேன். ஏனென்றால், பெரியார் எனக்குத் தலைவர் என்ற காரணத் தால் அல்ல. பெரியார் செய்த புரட்சி உலகத்திலேயே எங்கும், யாரும் இது வரையிலே செய்யவில்லை என்ற காரணத்தினால் யாரையும் நான் பெரியாருக்கு ஒப்பிட்டுக் கூறமாட்டேன்.

(தஞ்சையில் 12-6-2006 அன்று நடை பெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்.)

திராவிட இயக்கங்களுக்கு பெரியார் என்னவாக இருக்கிறார்?


கலைஞர் பதில்

கேள்வி: திராவிட இயக்கங் களுக்கு இன்று பெரியார் என்னவாக இருக்கிறார்?

கலைஞர்: திராவிட இயக்கங் களுக்கு தந்தை பெரியார் ஆதர்ச சக்தியாக விளங்கி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை தந்தை பெரியார் எல்லாமாக விளங்குகிறார். திராவிட இயக்கம் என்று பெயர் அளவில் சொல்லிக் கொண்டிருக்கின்ற இயக்கங்களுக்குப் பெரியார் பெயர் அளவில் இருக்கிறார். அதாவது ஊறுகாய் போல உபயோகப்படுத்தப்படுகிறார்.

கேள்வி: திராவிட இயக்கங்களில் பெரியார் கொள்கைகள் மீது பெண்களின் பெருமளவு கவனத்தைக் கவர முடியாதது ஏன்?

கலைஞர்: பெரியாரின் கொள்கைகளில் தொடக்கக் காலத்தில் தாலி மறுப்பு, விதவைத் திருமணம், கடவுள் மறுப்பு, கலப்புத் திருமணம் போன்றவற்றை ஏற்றுக் கொள் வதில் பெண்களுக்கு சற்று தயக்கம் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போதெல்லாம் இந்தக் கொள்கைகளில் ஆண்களை விட பெண்கள்தான் மிகத் தீவிரமாக ஆதரித்து வருகிறார்கள் என்பதை நாங்கள் கண்டு வருகிறோம்.

(புத்தகம் பேசுகிறது இதழ் பேட்டியில் கலைஞர். முரசொலி 22-1-2008)

நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்!


சேகர் குப்தா: நீங்கள் உங்களது அறிக்கை ஒன்றில், ராமர் எந்தப் பொறியியல் கல்லூரி யில் படித்தார்? என்று கேட்டிருக் கிறீர்களே?

கலைஞர்: அது என்ன ஒரு பெரிய கேள்வியா?

சேகர் குப்தா: இவ்விஷயத்தில் காங்கிரசில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. நீங்கள் தேவையற்ற அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள் என்று கருதுகிறார்கள். வால்மீகி ராமாயணத்தை மேற்கோள் காட்டி ராமர் குடித்தார் என்று கூறினீர்கள்.

கலைஞர்: ஆமாம். நான் வால்மீகி ராமாயணத்தைத் தருகிறேன். நீங்கள் தயவு செய்து அதைப் படித்துப் பாருங்கள். எங்களுக்கு அந்தத் திட்டம் (சேது சமுத்திரம்) வேண்டும்! நான் இப்பொழுது முதலமைச்சராக இருக்கிறேன். ஆனாலும், நான் ஒரு சுயமரியாதைக்காரன்! நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்! பெரியாரின் மாணவர்கள்!

சேகர் குப்தா: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?

கலைஞர்: ஆமாம். ஒரே ஒரு கடவுளை நம்புகிறேன்.
சேகர் குப்தா: எந்தக் கடவுளை நம்புகிறீர்கள்?
கலைஞர்: எனது மனச்சாட்சியை.

(என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முதலமைச்சராக கலைஞர் அளித்த பேட்டியிலிருந்து, 130ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் மலரிலிருந்து)

தாய் வீட்டைப் பார்த்து கற்றுக் கொண்டேன்!


நாங்கள் பெரியார் கட்சிக்குக் காரண கர்த்தாக்கள் என்றால், பெரியாருடைய மாட்சிக்குக் காரணகர்த்தாவாக இன்றைக்கு விளங்குபவர் என்னுடைய ஆருயில் இளவல் வீரமணி என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது.

நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். திராவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலே ஊடல் ஏற்பட்டு, ஏன் பேச்சு வார்த்தை இல்லாத சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம் கூட அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தவன். ஏனென்றால், அப்படி எட்டிப் பார்த்தது, சதிக் குணத்தால் அல்ல. துர்குணம் என்பார்களே அந்தக் குணத்தால் அல்ல எட்டிப் பார்த்தது. நாம் அந்த வீட்டைத் தாய் வீடாகக் கொண்டவர்களாயிற்றே. அந்தத் தாய் வீட்டில் நடக்கின்ற காரியங்களை யொட்டித்தானே நம்முடைய வீட்டி லும் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்பதற்காக. சுருக்கமாகச் சொன்னால், புரியும்படி சொன்னால், அதைப் பார்த்து நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வதற்காக எட்டிப் பார்ப்பதுண்டு. அது ஒன்றும் குற்றமல்ல.

(29-9-2007 பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் தொடக்க விழா உரையில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள்)

கருவூலம் வீரமணி நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும் முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள, தந்தை பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்ள, அண்ணாவைப் பற்றித் தெரிந்து கொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன. எப்படியெல்லாம் நம்முடைய வரலாறு முன்னாள் இருந்தது. பின்னாள் அமைந்தது என்பதையெல்லாம் இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும், அதற்கான கருவூலமாக நம்முடைய வீரமணி அவர்கள் விளங்குகிறார்கள் என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது.

இதே என் கையில் உள்ள இந்தப் புத்தகம் செங்கற்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாடு 1929 ஒரு வரலாற் றுத் தொகுப்பு. நான் நிச்சயமாகச் சொல் கிறேன். அவர் மாத்திரம் இன்றைக்கு திராவிடர் கழகத்திலே தந்தை பெரியா ருடைய வழித் தோன்றலாக அமையாமல் இருந்திருப்பாரேயானால் இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்திருக்காது.

இதிலே உண்மைகள், வரலாற்றுச் சான்றுகள், இங்கே நடைபெற்ற மாநாடு, அந்த மாநாட்டிலே கலந்து கொண்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குக் கிடைத்திருக்காது. இதிலே சவுந்தரபாண்டியனா ருடைய உருவத்தைப் பார்க் கிறேன். வி.வி. ராமசாமி நாடார் உருவப் படத்தைப் பார்க்கிறேன். அவ்வளவு ஏன்? இதே செங்கற்பட்டிலே இருந்த வேதாசலம் முதலியார் படத் தையும் அதிலே பார்க்கிறேன். வேதாசல முதலியார் உங் களுக்குத் தெரியும். வேலைக் காரி படத்திலே அறிஞர் அண்ணா அவர்களால் உரு வாக்கப்பட்ட ஒரு கதாபாத் திரம். அந்த வேதாசல முதலி யார் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டார்.

ஒரு முக்கிய பொறுப்பேற்றார் என்கின்ற இந்தச் செய்தியெல்லாம் எங்கள் சிந்தனையைச் செதுக்கச் செய்கின்ற செய்திகளாகும். இந்தச் செய்திகள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இப்படிப்பட்ட புத்தகத் தொகுப்பு மாத்திரம் இல்லாவிட்டால். நான் உலகத்தில் உள்ள எல்லாக் கட்சி களையும் ஒப்பிட்டு இப்படிச் சொல்ல வேண்டுமேயானால், அவர் என்னைப் பாராட்டியதற்காக, நான் அவரைப் பாராட்டுவதாக அர்த்தமல்ல.

உலகத்தில் உள்ள எல்லாக் கட்சி அமைப்புகளைப் பற்றியும் சொல்ல வேண்டு மேயானால் எந்த ஓர் அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களைச் சேகரித்து வைத்து, அதை எதிர் காலத்திற்குத் தரக் கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணியாருக்க இருப்பதைப் போல வேறு யாருக்கம் இருப்பதாக நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அவரி டத்திலே எங்களைப் போன்ற கட்சி களெல்லாம் பாடம் படிக்க வேண்டும் என்று எங்களுடைய முன்னோடிகள் கூட இங்கே வந்திருக்கிறார்கள்.

மூத்த தம்பிமார்கள் எல்லாம் வந்திருக் கிறார்கள். அவர்கள் எல்லாம் கூட இன்று முதல் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அடக்கத் தோடு அவர்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக் கிறேன்.

(செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டின் 80-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அன்றை தமிழக முதல்வர் கலைஞர் 18-2-2008)

எதில் அதிக விருப்பம்?


கேள்வி: அரசியல் தலைவர் கலைஞர், தமிழறிஞர் கலைஞர். இதில் எதை அதிகம் விரும்புகிறீர்கள்?

கலைஞர்: இந்த இரண்டையும் விட அய்யாவின் மாணவர் கலைஞர், அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும்புகின்றவன் நான்.

(தினகரன் பேட்டி 6-5-2006)

------------------ நன்றி: - “விடுதலை” 3-6-2011

பார்ப்பன ஆட்சி இன்னும் என்ன செய்ய வேண்டும்?




"தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து, மனிதனைக் கடிக்க ஆரம்பித்து விட்டது"

என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது போல் பார்ப்பனீயம் அதாவது பார்ப்பன ஆட்சி, அங்கு கை வைத்து இங்கு கை வைத்து அடிமடியில் கையைப் போட்டுவிட்டது என்று சொல்ல வேண்டியதாகிவிட்டது.

காங்கரசைப் பற்றியும், காந்தியைப் பற்றியும் நாம் எதிர்த்தும் மக்களை ஜாக்ரதையாய் இருக்க வேண்டுமென்று எச்சரித்து வந்ததுமானது, அரசியல் ஆதிக்கம் நமக்கு கூடாதென்றோ வெள்ளையர், அன்னியர் இந்நாட்டை விட்டு போகக் கூடாதென்றோ அல்ல என்பதை அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கின்றோம்.

காந்தியையும் காங்கரஸையும் எதிர்ப்பதேன்?

ஆனால் மற்றென்ன காரணம் என்றால் இந்நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து வயிறு பிழைக்க வந்து இந்நாட்டு ஆதி மக்களை பல வழிகளிலும் ஏய்த்தும், கொடுமைப்படுத்தியும் வெற்றி கொண்டு, அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி ஆட்சி புரிந்த 3 - வகையாரில் அதாவது ஆரியர், முஸ்லீம்கள், ஐரோப்பியர் ஆகியவர்களில் ஆரியர்களே மிக மிக கொடுமை செய்து மக்களை காட்டுமிராண்டிகளாக்கி மதத்திலும், சமுதாயத்திலும், அரசியலிலும் அடிமை கொண்டு ஆட்சி புரிகின்றவர்கள். ஆதலால் எந்தக் காரணம் கொண்டும் அதாவது ஐரோப்பியரே இன்னமும் ஆயிரம் வருஷம் ஆட்சி புரிவதாய் இருந்தாலும் முஸ்லிம்களே இன்னம் பதினாயிரம் வருஷம் ஆட்சி புரிவதானாலும் ஆரியப் பூண்டின் ஆதிக்கம் மாத்திரம் கூடவே கூடாது என்று கருதி காங்கரசும், காந்தியும் ஆரிய ஆதிக்கத்துக்கு ஆயுதமாகவும், கூலியாகவும் இருந்து வருவதால் ஆரிய ஆதிக்கம் ஒழிவதற்கு இவ்விரண்டும் அதாவது காங்கரசும், காந்தியும் அடியோடு ஒழிய வேண்டும் என்று சொல்லி எதிர்த்து வந்தோம்.

ஆரியர் பிறவிக் குணம்

ஆரியர்களின் பிறவிக்குணம், ஜாதிக் குணம் இவ்விரண்டும் ஆரியரல்லாதவர்களை ஒழிப்பது அல்லது அடிமை கொண்டு அவர்கள் உழைப்பில் வாழ்வது என்பதேயாகும். இதற்கு உதாரணம் வேண்டுமானால் ஜர்மெணியரை - ஹிட்லரைப் பார்த்தால் விளங்கும். ஆரியரல்லாதவர்கள் ஒழிய வேண்டும் என்பதே ஹிட்லருடையவும், நாசி ஸ்தானத்தினுடையவும் கொள்கையாகும். நம் நாட்டு காங்கரஸ் கொள்கையும், ஆரியர் கூலியாக உபயோகப்படுத்தும் காந்தியின் கொள்கையும் அதுவேயாகும். அதாவது ்காங்கரஸ் மனுதர்மம், வருணாச்சிரம முறை ஆகியவைகளின்படி இந்தியா புதுப்பிக்கப்படவேண்டு" மென்று சொல்லப்படுவதே இந்த நமது கூற்றை மெய்ப்பிக்கும். மற்றும் ஆரியருடைய எந்த ஆதாரங்களை எடுத்துப் பார்த்தாலும் ஆரியரல்லாதார் நாடு மிலேச்ச நாடு, ஆரியரல்லாதார் பாஷை மிலேச்ச பாஷை, ஆரியரல்லாதார் மிலேச்சர், அசுரர், ராக்கதர் என்பதாகக் காணக்கிடப்பதை இன்றும் பார்க்கலாம்.

இவை இந்நாட்டு ஆதி குடிகளுக்கும் ஆரியர் கொள்கைகளை ஒப்புக்கொள்ளாத முஸ்லிம்களுக்கும் அவர்களது பாஷைக்கும் அவர்களது தேசத்துக்கும் தான் பொருந்தக்கூடியதாய் இருக்கிறதே தவிர மற்ற ஜர்மனியர் போன்றவர்களுக்கு பொருத்தப்படுவதில்லை.

ஆரிய சம்பந்தமுடையதெல்லாம் நமக்கு எமனே

ஆகவே இந்த கொள்கைகள் கொண்ட ஆரியர்கள் நமது நாட்டுக்கும் நம் நாட்டு பழங்குடி சமூக மக்களுக்கும் ஆரியம், ஆரிய பாஷை, அவர்களது மத உபதேசங்கள் முதலியவை நமன் என்றும் கூடாது என்றும் கூறி வருகிறோம்.

இதில் நம்மவர்களான அதாவது ஆரியரல்லாதாரான சிலருக்குப் பல காரணங்களால் இக் கொள்கை பிடிக்காததாகக் காணப்படலாம். அவர்கள்"ஆரியரும் நாமும் இந்நாட்டு மக்கள்” என்றும்"உடன் பிறந்த முறை கொண்டவர்கள்” என்றும் நமக்கு உபதேசம் செய்ய வரலாம். இதை அறியாமை என்றும் அல்லாவிட்டால் கூழுக்குப் பாடும் கூலிக் கவி என்றும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

ஏனெனில் இன்று நம் பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடங்களிலும் உயர்தரக் கல்லூரிகளிலும் படிக்கக் கொடுத்திருக்கும் இந்து தேச சரித்திரம் என்னும் புத்தகத்தில் ஆரியர்கள் என்பவர்கள் யார் என்னும் தலைப்பின் கீழும் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து இந்நாட்டுப் பழங்குடி மக்களை அடக்கி ஒடுக்கி வெற்றி பெற்று அடிமை கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் யார், யார் என்பதின் தலைப்பின் கீழும் உள்ள சேதிகளைப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.

ஆரியர் குடிபுகுந்த கதை

ஆரியர்கள் இந்த நாட்டுக்கு மத்திய ஆசியாவில் இருந்து ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு கணவாய் வழியாக வந்தவர்கள் என்றும் ஆரியர் என்றால் உழவர்கள் - பயிரிடுவோர்கள் என்று அர்த்தமென்றும், அவர்கள் வருவதற்கு முன் இந்த நாட்டில் வடக்கில் தஸ்யூக்கள் என்பவர்களும் தெற்கில் திராவிடர்கள் என்பவர்களும் ஆதிகுடிகளாய் இருந்தார்கள் என்றும் இந்த இரு சமூகத்தாரை விட ஆரியர்கள் தந்திரசாலிகளாகவும், பலசாலிகளாகவும் இருந்ததால் இவர்கள்மீது படையெடுத்து அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் கொண்டார்கள் என்றும் பார்ப்பனர்களால் எழுதப்பட்ட சரித்திரங்களிலேயே இருந்து வருகிறது. மேலே குறிப்பிட்டபடி அதை இன்றும் பள்ளிப் பிள்ளைகள் படிக்கிறார்கள்.

வேதத்தில் காணப்படுவதென்ன?

மற்றும் இதை மெய்ப்பிக்க ஆரியர்களின் வேதம் என்று சொல்லப்படும் ஏடுகளைப் பார்த்தாலும் அவற்றுள்ளும் ஆரியர்கள் ஆடுமாடுகளை மேய்த்துப் பயிரிட்டதையும் அதற்கு அனுகூலமானவற்றை கடவுளாக கற்பித்துக்கொண்டு அக்கடவுள்களை மழை பெய்யவும், வெள்ளாமை விளையவும் பிரார்த்தனை செய்வதும், அவர்களுக்கு அக்காலத்தில் எதிரிகளாகக் காணப்பட்ட தஸ்யூக்கள் என்பவர்களையும், திராவிடர்களையும் கண்டபடியெல்லாம் வைது சபித்தும் இவர்கள் அடியோடு அழிந்தொழிய வேண்டுமென்று தங்கள் ஜாதிக் கடவுளாகக் கற்பித்துக் கொண்ட இந்திரன் முதலியவர்களை பிரார்த்திப்பதுமான பல பாசுரங்களைக் காணலாம். இன்றும் ஆரியர்களின் வேதமாக மாத்திரம் அல்லாமல் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒழிந்த, கிறிஸ்தவர்கள் ஒழிந்த மற்ற எல்லா மக்களுக்குமே மத வேதம், புராணம், இதிகாசம் என்று சொல்லப்படும் எல்லா ஆதாரங்களிலும் நூல்களிலும் இவற்றைக் காணலாம்.

ஆனால் இவைகளை சரித்திர மூலமாகவும் பழந்தமிழ் நூல்கள் மூலமாகவும், வடநூல் படித்ததின் மூலமாகவும் படித்தறிந்த சில தமிழ் மக்கள் தங்கள் இழி பிறப்பினாலும் தங்களுக்கு மானத்துடன் பிழைக்க வேறு வழியில்லாத இழி தன்மையினாலும் இவைகளை மறைத்துக்கொண்டு ஆரியர்க்கடிமையாக வாழ்ந்து காலம் கழிக்க ஒருப்பட்டிருக்கிறார்கள்.

இவை எப்படி இருந்தாலும் இந்த ஆரிய ஆட்சி அல்லது ஆதிக்கம் இந்நாட்டு பழங்குடி மக்களுக்கு முஸ்லிம் ஆட்சி செய்ததாய்ச் சொல்லுவதைவிட ஐரோப்பிய ஆங்கில ஆட்சி செய்ததாய்ச் சொல்லுவதை விட மிக மிகக் கொடுமை செய்து வந்திருக்கிறது என்பதல்லாமல் இன்னமும் சகிக்க முடியாத துன்பங்களடையும்படி வதைத்து வருகின்றது என்று சொல்லவேண்டியிருக்கிறது.

ஆரிய அடிமைகள்

நம் நாட்டைப் பொறுத்தவரை ஆரிய ஆதிக்கத்தில் திராவிட மேன்மக்களுக்கு சிறிதும் இடமில்லை. வீணர்கள், ஈனர்கள் ஆரியர்களுக்கு கையாளாக ஆனதினால் அவர்களே இன்று பிரகாசிக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களையே பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களை அடியோடு நசுக்க அதாவது ஆரிய ஆட்சி ஒழிந்து முஸ்லிம்களாலும், ஆங்கிலேயர்களாலும் தமிழ் மக்கள் பெற்ற சமுதாய (பொருளாதார) கல்வி விடுதலையை அடியோடு ஒழித்து மறுபடியும் பழயபடியான அடிமைகளாக்கவே முயற்சிக்கிறார்கள்.

ஆரிய நீதி

ஆரிய ஆட்சியில் மனுதர்ம சாஸ்திரப்படி - வருணாச்சிரம தர்ம முறைப்படி ஆரியரல்லாதவன் கல்வி கற்கக் கூடாது. பொருள் (பணம்) வைத்திருக்கக் கூடாது, சமுதாயத்தில் ஆரியருக்கு சமமாய் இருக்கக் கூடாது. அதாவது கீழ் ஜாதியானாகவும், சூத்திரனாகவும், சண்டாளனாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.

இந்த முறை வெகுகாலம் இந்தியாவில் ஆரியர்களால் கையாளப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஆரியர்களின் புராண இதிகாசங்களின் சாட்சியங்கள் மாத்திரமல்லாமல் இன்றும் கூட இந்த முறை இருந்து வருகிறதை திராவிடர்கள் - தமிழர்கள் சூத்திரர்களாகவும், சண்டாள ஜாதியாகவும் கூப்பிடப்பட்டும் பல விஷயங்களில் நடத்தப்பட்டும் பொது ஓட்டல், சத்திரம், கோவில், இந்து லா சட்டம் ஆகியவைகளில் பேதம் காட்டி தாழ்மைப்படுத்தப்பட்டும் வருவதைப் பார்க்கலாம்.

காந்தியார் உபதேசம்

அவ்வளவோடு மாத்திரமல்லாமல் தோழர் காந்தியார் ஆரியரல்லாதவர்களைப் பார்த்து "நீங்கள் பாடுபட்டு மற்ற மக்களுக்கு உழைத்துப் போட வேண்டுமே ஒழிய உங்கள் பெட்டிகளில் சிறிய வெள்ளி நாணையம் கூட இருக்கக் கூடாது" என்று சொல்லி வருவதும் "பழய வருணாச்சிரம முறையை அமைக்கவே சுயராஜ்ஜியம் கேட்கிறோம்" என்று சொல்வதும் "வருண முறைப்படி அவனவன் தகப்பன் செய்த தொழிலை தான் அவனவன் மகன் செய்ய வேண்டும்" என்று சொல்லுவதும் "அதற்காகவே தான் வார்தா திட்டம் வகுத்திருக்கிறேன்" என்பதும் அதை அனுசரித்தே இன்று மதுவிலக்கு என்கின்ற சாக்கை வைத்து கிராமப் பள்ளிக் கூடங்களை மூடிவிட்டு "ஊர்ச் சாவடியில், கிணற்று மேட்டில் நத்தத்தில் - அட்டையில் வாசகம் எழுதிக் கட்டச் செய்து அதை தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களைக் கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்வதின் மூலம் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று சொல்லுவதும் ஆகும்.

ஆங்கிலம் செய்த நன்மை

"ஆங்கிலத்தினால்தான் மக்களுக்கு அறிவும் சுதந்திர உணர்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் ஏற்பட்டது” என்று அனேக இந்திய கல்விமான்களும் தேசீயவாதிகள் எனப் பெயர் பெற்ற பெரியார்களும் பல காங்கரஸ் மகாசபை தலைவர்களும் உலகம் மதிக்கும் இந்தியக் கல்வியாளர்களும் சொல்லி இருக்க இன்றும் சொல்லிக் கொண்டிருக்க அவைகளை ஆணவமாய் அலட்சியம் செய்துவிட்டு வேறு பாஷையை அதாவது மேற்குறிப்பிட்ட எந்தக் காரியங்களுக்கும் பயன்படாததும் ஆரிய ஆதிக்கத்தை மாத்திரம் வலியுறுத்துவதுமான ஆரிய பாஷையை (இந்தியை) கற்கும்படி இளங் குழந்தைகளை கட்டாயப்படுத்துவது அது கூடாது என்பவர்கள் எவ்வளவு பெரிய மதிப்பு வாய்ந்தவர்களாய் இருந்தாலும் சிறைபிடித்து கடின காவல் கொடுத்து வருஷக்கணக்காய் தண்டித்து துன்புறுத்துவதும் ஆகிய காரியங்கள் இவைகளை மெய்ப்பிக்கிறதா இல்லையா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

தமிழனை ஒடுக்கும் சூழ்ச்சி

மற்றும் ஆங்கில ஆதிக்கத்தில் அரசியலிலும் சமுதாய இயலிலும் பெற்ற சில சம சந்தர்ப்பங்களையும் அழித்து மற்றும் ஆரியரல்லாதவர்கள் என்றென்றும் தலையெடுக்கவே முடியாதபடி கொடுமை செய்வது எவ்வளவு கொடுங்கோன்மையானது என்பதையும் யோசிக்க வேண்டுகிறோம். ஆங்கில ஆட்சியும் ஆதிக்கமும் உள்ள காலத்தில் ஆரியரல்லாதவர்களுக்கு படிப்புக்கு செளகரியம் செய்து கொண்டது, இன்று மறுபடியும் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் படிக்க முடியாத மாதிரி செய்யக் கருதி அந்த சவுகரியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன.

எப்படியெனில் முதலாவது பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் இருந்த இடம் பார்ப்பனர்களாலேயே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இரண்டாவது கல்லூரிகளில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளும் அளவுக் கிரமப்படி சேர்த்துக் கொள்வதற்காக செய்யப்பட்ட முறை ஒழிக்கப்பட்டு விட்டது.

மூன்றாவது பார்ப்பனரல்லாத பிள்ளைகள் சுலபத்தில் படிக்க முடியாதபடி சமஸ்கிருதத்தை (இந்தியை) சிறுவயதிலேயே கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.

நான்காவது சென்னை தவிர வெளியில் பட்டணங்களில் பெரிய கிராமங்களில் இருந்து வருகிற மத்தியதரப் பள்ளிக் கூடங்கள் மூடப்பட சூழ்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அதாவது மேல் படிப்புகளுக்கு சம்பளம் உயர்த்தப்படுகிறது. இன்னும் பல இரகசிய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. (அதாவது வார்தா திட்டம் முதலியன)

உத்தியோகங்களுக்கு முட்டுக்கட்டை

உத்தியோக விஷயத்தில் பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கைக்கு கிரமமாய் கிடைக்க வேண்டிய அளவுக்கு 3-ல் ஒரு பங்கோ 4-ல் ஒரு பங்கோ ஆவது கிடைக்கும்படி செய்திருந்த சில முறைகள் அடியோடு ஒழித்து பார்ப்பனர் தவிர மற்றவர்கள் உத்தியோகம் என்று நினைப்பதற்கு கூட யோக்கியதை இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது. சில செய்தும் ஆய்விட்டன.

அதாவது சர்க்கார் வக்கீல் என்னும் பொறுப்பு வாய்ந்த (பப்ளிக் பிராஸிகூட்டர்) உத்தியோகம் வக்கீல்களின் ஓட்டின்மீது தெரிந்தெடுக்கும் படியான தேர்தல் முறையில் விட்டாய் விட்டது. அத்தேர்தல் முறைப்படி பார்ப்பனரல்லாதாருக்கு அந்த ஸ்தானம் கிடைக்கவே எவ்விதத்திலும் முடியாது.

அல்லாதார் கதி என்னாகும்?

மற்றும் இந்த முறைப்படியே அதாவது வக்கீல் ஓட்டின் மீதே மேஜிஸ்ட்ரேட், பிராசிக்கூஷன், இன்ஸ்பெக்டர்கள் ஆகிய உத்தியோகஸ்தர்கள் தெரிந்தெடுக்கப்படுவார்களாம். ஒரு பிராசிகூட்டிவ் இன்ஸ்பெக்டர் கூட பார்ப்பனராக தெரிந்தெடுக்கப்பட்டாய் விட்டது. ஆகவே கிரிமினல் பவர் என்னும், மக்களை விரட்டி, அடக்கி, தண்டித்து துன்பப்படுத்தும் அதிகாரம் அடியோடு பார்ப்பனர்கள் கையிலேயே இருக்கும்படி செய்துகொள்ளப்பட்டு விட்டால் இனி பார்ப்பனரல்லாதார் சுதந்திரமும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ளவர்கள், யோக்கியர்கள், அப்பாவிகள் ஆகியவர்கள் கதி என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை.

மற்றபடி சர்க்காரால் கொடுக்கப்படும் உத்தியோகங்களிலும் பழைய முறைகள் கூட அழிக்கப்பட்டு விட்டன. பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயர் வேலை 10- காலியானதற்கு 10 -ம் பார்ப்பனருக்கே கொடுக்கப்பட்டுவிட்டன.

மிருக வைத்தியர் வேலை 26-க்கு 19 பார்ப்பனருக்கே கொடுக்கப்பட்டாய் விட்டன.

சப் ரிஜிஸ்டரார் பதவியில் இருந்து ஜில்லா ரிஜிஸ்டரார் பதவிக்கு உயர்த்தும் வேலை 15-ல் 11 - பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன.

ஒரு பார்ப்பனரல்லாதார் ஹைகோர்ட் ஜட்ஜ் வேலை காலியானதும் உடனே ஒரு பார்ப்பனருக்கு கொடுக்கப்பட்டு விட்டது.

புது நியமனங்கள் எல்லாம் பார்ப்பனருக்கே

மற்றும் இப்போது செய்யப்படும் புதிய நியமனங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்பட்டு வருகின்றன என்பதோடு மாத்திரம் அல்லாமல் கலெக்டர் முதலிய மேல் வேலைக்குப் போகத் தகுதியுள்ள பெரிய உத்தியோகஸ்தர் விஷயங்களிலும் தயாராய் அடுத்தபடி லிஸ்ட்டிலுள்ள பார்ப்பனரல்லாதார்களை மட்டம் தட்டி விட்டு அவருக்கும் கீழிருக்கும் பார்ப்பனர்கள் உயர்த்தப்படுகிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி இருக்கும் இடங்களில் உள்ள பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களை மாற்றிவிட்டு பார்ப்பனர்களாகப் போட்டு விடப்படுகிறது.

இவை தவிர இன்னமும் காங்கரஸில் வெறும் சாதாரண காலியாகவும் கூலியாகவும் இருந்த பார்ப்பனர்களுக்கு இன்று பெரிய பொறுப்புள்ள உத்தியோகங்கள் கொடுக்கப்படுகின்றன.

விசுவ பிராமணர் துன்பம்

சமுதாயத் துறையிலோ"பிராமணர்” வேறு பிராமணரல்லாதார் வேறு. அதாவது ஆரியர் தவிர வேறு யாரும் பிராமணர் என்ற தலைப்பில் வரக் கூடாது என்று கருதி இதுவரை சில சமூகங்களுக்கு இருந்து வந்த பிராமணப் பட்டமும் பிரம்ம ஸ்ரீ பட்டமும் ஆச்சாரியார் பட்டமும் சட்டபூர்வமாய் எடுக்கப்பட்டுவிட்டது. சமுதாயத் துறையில் இனியும் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்ய யோசிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வளவும் போதாமல் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் பேரால் இருந்துவரும் தெருவு, பார்க்கு, பள்ளிக்கூடம் முதலிய ஸ்தாபனங்களுக்கும் அப்பெயர்களை மாற்றி ஆரியப் பெயர்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சில நாளைக்கு முன்பு திருநெல்வேலியில் தோழர் ரங்கநாத முதலியார் பேரில் இருந்த ஒரு தெருவுக்கு அப்பெயரை மாற்றி சன்னதி தெருவென்று பெயர் வைக்கப்பட்டு பழைய பெயர் பணச் செலவு செய்து அழிக்கப்பட்டு விட்டது.

தெருப்பெயரிலும் கோபமா?

அது நிலைத்த உடனே சென்னையில் பார்ப்பனரல்லாத சமூகத்தின் ஒரு பிரபலஸ்தர் அச் சமூகத்துக்கு ஆக உழைத்தவரென்று பெரிதும் பாராட்டப் பெற்றவரான காலம் சென்ற தணிகாசலம் செட்டியார் பேரால் இருந்த ஒரு தெருவுக்கு அப்பெயர் எடுக்கப்பட்டு ஒரு பார்ப்பனர் பெயர் அதாவது ரங்கசாமி அய்யங்கார் தெரு என்று பெயர் இடப்பட்டு விட்டது. இது சாதாரண சங்கதி என்று சொல்லிவிட முடியாது. செட்டியாருடைய பெயர் மறைந்துவிட்டதே என்பதற்கு ஆக நாம் இதை பெரிதாக்க வரவில்லை. இதன் கருத்து என்ன என்பதை பொதுமக்கள் உணரவேண்டுமென்பதே நமது நோக்கம். சீனிவாசபுரம், தாசில் சீனிவாசபுரம், முனிசீப்பு சினிவாசபுரம், சிவசாமிபுரம், ராஜகோபாலபுரம் என்பது போன்ற புரங்களும் ராமதாஸ் வீதி, பிரகாசம் வீதி, சுப்பய்யர் வீதி, வரதய்யர் வீதி என்பது போன்ற 100 - கணக்கான அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரி வீதிகள் இருக்க ஒரு பார்ப்பனரல்லாத பிரபலஸ்தருடைய - அதுவும் சாகும் வரை 30 மீ காலம் கவுன்சிலராய் இருந்தவரின் பெயர் ஒரு வீதிக்கு இருந்ததை மாற்றி அதற்கு பதிலாக ஒரு பார்ப்பனர் பெயரை கொடுப்பது என்றால் அதுவும் “ஜனநாயகத்தின் பேரால் அமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தின் மெஜாரட்டி ஓட்டைக் கொண்டு செய்யப்படுகின்ற காரியம்” என்பதே இப்படி இருக்கும்படியாய் இருந்தால் இனி அவர்களது ஆட்சியுள்ள ஸ்தாபனங்களில் நம் மக்கள் கதி என்ன ஆகும் என்று சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றோம். இந்தக் காரியம் இதுவரை பார்ப்பனர்கள் செய்து வந்த கொடுமைகளில் எல்லாம் மிக மிக கொடுமையான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இனி இந்த பார்ப்பன ஆதிக்கத்தால் என்ன ஆபத்து நாம் எதிர்பார்க்க வேண்டியது பாக்கி இருக்கிறது என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதாருக்கு சுயமரியாதை இருந்தால்

பூரண சுயராஜ்யம் என்பது பூரண பார்ப்பன ராஜ்யமாகத்தான் ஆகிவிட்டது.
கார்ப்பரேஷனில் காங்கரஸ் கட்சியில் பார்ப்பனரல்லாத கவுன்சிலர்கள் பலர் இருந்தும் அத்தனை பேரும் இந்த சண்டாளத்தனமான காரியத்துக்கு ஓட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டால் உண்மையிலேயே பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு சுயமரியாதை இருக்கிறதா என்று பார்ப்பனர்களே கேட்க மாட்டார்களா என்று வெட்கப்படுகின்றோம்.

தோழர்கள் சாமி வெங்கடாசாலம் செட்டியார், முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் ஆகியவர்கள் இத்தீர்மானத்தில் பங்கு கொள்ளக்கூடாது என்றுதான் கவுன்சிலர்கள் பதவியிலிருந்து ராஜிநாமாக் கொடுத்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. காங்கிரசின் பேரால் கார்ப்பரேஷனில் உள்ள பார்ப்பனரல்லாத மற்ற மெம்பர்களும் மானமிருந்தால் ராஜிநாமா செய்திருக்க வேண்டாமா என்றுதானே மற்றவர்கள் கேள்ப்பார்கள். எனவே கார்ப்பரேஷனின் இத்தீர்மானத்தால் ஒரு வீதிக்கிருந்த தனிகாசலம் செட்டியாரின் பெயரை எடுத்துவிட்ட அவமானத்தைவிட பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு மானமே இல்லையே என்று அன்னியர் கருதும்படி ஆகிவிட்டதே என்கின்ற துக்கம்தான் நம்மை வாட்டுகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

--------------தந்தைபெரியார் - “குடி அரசு” - தலையங்கம் - 07.08.1938