Search This Blog

2.6.11

பெரியார் சிந்தனையின் தனித்தன்மை

சமுதாயத்திலே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பியவர் பெரியார் பெரியார் மணியம்மை பல்கலையில் வேந்தர் டாக்டர் கி.வீரமணி விளக்கம்

சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று விரும்பியவர் பெரியார் என்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் 8.3.2011 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள்

ஆற்றிய உரை வருமாறு:

உங்களில் ஒருவனாக... இந்த நிகழ்ச்சி ஒரு சிறப்பான நிகழ்ச்சி. ஏதோ நான் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் என்ற முறையிலே இங்கு நான் பேச வந்து நிற்கின்றேன் என்ற ஒரு அறிமுகத்தை சம்பிரதாயப் படி, சடங்கு போல அவர்கள் சொன்னாலும் கூட, முதற்கண் மாணவச் செல்வங்களுக்கு நான் சொல்லுகின்றேன்.

உங்களில் ஒருவனாக இருந்துதான் நான் இங்கு பேசவந்திருக்கிறேனே தவிர, வேறு எந்தத் தகுதியையும் வைத்துக்கொண்டு உங்களை நான் சந்திக்க விரும்பவில்லை.

அதன் காரணமாகத்தான் நீங்கள் இறுக்கமாக இருக்கிறீர்களோ என்ற அய்யம் எனக்கு இருக்கிறது. ரொம்ப அளவுக்கு மீறிய கட்டுப் பாட்டோடு இருந்தீர்கள். கைகூட தட்டாமல் இருந்தீர்கள்.

ஓகோ அளவுக்கு மீறி கட்டுப்பாடு செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது. பேராசிரியர்கள் துணைவேந்தர், போன்றவர்கள். நீங்கள் எல்லாம் எழுதிக்கொண்டிருந்தீர்கள். ஆகவே கைதட்ட வாய்ப்பில்லை என்று எனக்கு விளக்கம் சொன்னார்கள் (கைதட்டல்).

கைதட்டாவிட்டாலும்....

பரவாயில்லை. கைதட்டாவிட்டாலும், கருத்தைத் தட்டிப் பார்க்கக் கூடிய அளவுக்கு எங்கள் செல்வங்கள் ஆளாக வேண்டும் என்பது தான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.

எல்லோரும் உங்களை வரவேற்றார்கள். அதைவிட மிக முக்கியம் நானும் உங்களை வரவேற்கிறேன். ஏனென்றால் முதலாமாண்டு மாணவர்களை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.

ஆகவே உங்கள் எல்லோரையும் ஒட்டு மொத்தமாக நம்முடைய விருந்தினர்களோடு சேர்த்து பார்ப்பதிலே மகிழ்ச்சி அடைகிறேன். ஆசான் பெயரில் அறக்கட்டளை. அறக் கட்டளை சொற்பொழிவு என்றால் பெரிய அளவுக்கு ஆராய்ச்சி சொற்பொழிவாக இருக்கும். ஆனால் மாணவச் செல்வங்களாக இருக்கக் கூடிய உங்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும்.

பெரியாரின் மொழி பற்றிய சிந்தனை

குறிப்பாகத் தமிழ்த்துறையிலே பண்பாட்டுப் பாதுகாப்பைப் பற்றி சொல்ல வேண்டும் என்பதற் காகத்தான் பெரியார் தன்னுடைய மொழி பற்றிய சிந்தனைகளையே வைத்தார். இதுதான் அடிப் படையானது.

நம்முடைய பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலே போராட்டங் கள் இவை எல்லாம் நிகழ்ந்தன.

பெரியார் அவர்களுடைய சிந்தனை என்பது மற்றவர்களுடைய சிந்தனையிலிருந்து மாறு பட்டது. தனித்தன்மையானது. அதற்கு ஒரு அடிப்படை உண்டு.

பள்ளி-கல்லூரிக்குப் போகாத பெரியார்

பெரியார் அவர்கள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ போகாதது தான் முதல் அடிப்படை. அதனால்தான் நாமெல்லாம் படிக்க வேண்டும் என்கிற அவசிய மில்லை.

ஒரு தாஜ்மகால் கட்டடம் இருப்பதால்...

ஒரு தாஜ்மகால் கட்டடம் இருப்பதால் தான் அதற்குத் தனிச்சிறப்பு. ஒரு தஞ்சை கோபுரம் இருக்கின்ற காரணத்தால்தான் அதற்குத் தனிச் சிறப்பு. எல்லா கோபுரங்களும் தஞ்சை கோபுரங்கள் அல்ல. எல்லா கட்டடங்களும் தஞ்சைகோபுரம் தாஜ்மகால் கட்டடங்கள் அல்ல. எல்லா கோட்டைகளும் செஞ்சிக்கோட்டைகள் அல்ல. அது போல தனித்தனிமையோடு பெரியார் அவர்கள் ஒப்பற்ற சுயசிந்தனையாளராக இருந்தார். பெரியார் அவர்கள் மக்களைப் படித்தார். அனுபவங்களையே ஆராய்ச்சிக் கூடமாக ஆக்கிக்கொண்டார். அவருடைய ஆராய்ச்சிக் கூடம் (Laboratary) அனுப வங்கள். அவர் மக்களைப் படித்தார்கள்.

மக்களைப் படித்தார்

மக்களுடைய நிகழ்வுகளைப் பாடங்களாக ஆக்கினார்கள். மக்களுடைய சுபாவங்கள், இயல்புகள், அணுகுமுறைகளைப் பார்த்தே, அவர் ஒரு சமூக விஞ்ஞானியாகவே திகழ்ந்தார்கள்.

மாறுபடுவதற்கு அடிப்படை

இதுதான் மற்றவர்களுடைய சிந்தனைக்கும், பெரியாருடைய சிந்தனைக்கும் வித்தியாசமாகும். அது மொழிப்பிரச்சினையாகட்டும், அரசியல் பிரச்சினையாக இருக்கட்டும், இனப் பிரச்சினையாக இருக்கட்டும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும்,

மாறுபடுவதற்கு அதுதான் அடிப்படை.

மாணவச் செல்வங்களுக்கு நான் விளங்கும் படியாக, புரியும்படியாக சொல்லுகின்றேன். நீங்கள் தாத்தாவை பார்த்திருப்பீர்கள். தாத்தாவுக்கு தாத்தாவைப் பார்த்திருக்கிறீர்களா? தாத்தாவுக்கு தாத்தாவினுடைய பெயர் நமக்குத் தெரியாது. நமது குடும்பங்களிலேயே வரலாறு உணர்வு மிகக்குறைவு. ஆங்கிலேயர்கள் எல்லாம் பாரம்பரியமாக வரலாற்று உணர்வை வைத்திருப்பார்கள்.

மன்னர்களைப் பற்றிப் படிக்கிறோம்

நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம். ஜார்ஜ் மன்னர் என்றால் எத்தனாவது ஜார்ஜ் மன்னர் என்று வரிசையாக கோடு போட்டு சொல்லிக் கொடுக் கின்றார்கள். அதே மாதிரி சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றி எல்லாம் சொல்லுவார்கள். பாடங்களில் பட்டியல் எல்லாம் போட்டு சொல்லிக்கொடுக்கின்றார்கள்.

அதெல்லாம் அப்புறம் இருக்கட்டுமுங்க. உங்களுடைய தாத்தா பெயர் என்ன என்று கேளுங்கள். மாணவர்களைப் பார்த்து ஆசிரியர் கேட்டால் டக்கென்று சொல்லுவார்கள். எங்க ளுடைய அப்பா பெயர் இது. எங்களுடைய தாத்தா பெயர் இது என்று சொல்லுவார்கள்.

என் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியாது

தாத்தாவுக்கு தாத்தா கொள்ளுத் தாத்தா. குதிரை தாத்தா இருக்கிறாரா என்று கேட்காதீர்கள். தாத்தாவுக்கு தாத்தா பெயர் என்ன என்றால் பல பேருக்குத் தெரியாது. எனக்கு என்னுடைய தாத்தா பெயர் தெரியும். என் தாத்தாவின் தாத்தா பெயர் எனக்கே தெரியாது. ஏனென்றால் அது என்னுடைய குறைபாடு அல்ல. குடும்பத்திலேயே அப்படி ஒரு வரலாற்று உணர்வை உருவாக்கிக்கொள்கிறவர்கள் அல்ல. பல செய்திகளை நாம் பதிவு செய்வது இல்லை. வெளிநாட்டிலே உள்ளவர்கள் வரிசையாக அவர்களுடைய குடும்பங்களை பதிவு செய்கி றார்கள். அது மாதிரி தாம் தெரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் ஒரு ஒப்பற்ற சுய சிந்தனையாளர். அவருடைய சிந்தனையின் தனித்தன்மை எங்கேயிருக்கிறதென்றால் அவர் ஒரு ஒப்பற்ற சுய சிந்தனையாளர்.

முழுப்பகுத்தறிவுவாதி

இரண்டாவது அவர் ஒரு முழுப் பகுத்தறிவுவாதி. அவரே சொல்லியிருக்கிறார். அவர் ஒரு பூரண பகுத்தறிவாளர் என்று. எதையுமே பகுத்தறிவு கண்கொண்டு பார்ப்பாரே தவிர, வேறு ஆசாபாசங்களுக்கு அவருடைய உணர்வுகளுக்கு, உணர்ச்சிகளுக்கு அடிப்படையில் செல்வதில்லை.

பகுத்தறிவாளர் என்றால் என்ன? இரட்டை வாழ்க்கை வாழாதவர். எதை நினைக்கிறார்களோ அதைப் பேச வேண்டும். எதைப் பேசுகிறார்களோ அதை செய்ய வேண்டும். அவர்கள்தான் பகுத்தறிவாளர்கள். வேறு ஒன்றும் அல்ல.

இரட்டை வாழ்க்கை வாழாதவர்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அண்ணா அவர்களுடைய பேச்சைப் பற்றி இங்கு சொன்னார்கள். பகுத்தறிவு என்பது வேறு ஒன்றும் இல்லை. அதாவது இரட்டை வாழ்க்கை வாழாதது என்று சொன்னார். பகுத்தறிவு என்பது அடிப்படை உரிமைகளை மறுப்பவர்கள் அல்ல. பகுத்தறி வாளர்கள். கடவுளை இல்லை என்று சொல்லு கின்ற பெரியார், காற்றை இல்லை என்று சொல்லுவதில்லை. சொல்ல முடியாது. காற்றை உணருகிறோம்


ஏனென்று கேட்டால் காற்றை உணகிறோம். காற்றுக்கு வேலி போட முடியாதே தவிர, காற்றை நாம் அடைத்து வைத்துக்காட்ட முடியும். அதே நேரத்தில் கடவுளைக் காட்ட முடியாது.

கண்டவன் என்று சொல்லுகிற ஒவ்வொருத்த னுக்கும், ஒவ்வொரு மாதிரி தெரிந்திருக்கிறான். ஒவ்வொரு காலகட்டத்திலே ஒவ்வொரு மாதிரியாகச் சொல்லியிருக்கின்றார்கள். காரணம் என்ன? உண்மைகள் ஒரே மாதிரி இருக்கும். பொய்கள், கற்பனைகள் ஆளுக்கு ஆள் வேறுபடும். இதுதான் அதற்கு பொருள். அதற்கு மேல் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

அப்பா படம் இருக்கிறது. தாத்தா படம் வேண்டும் என்று நினைத்து ஒருவரிடம் சொல்லி ஓவியம் வரையச் சொல்கிறார்கள். பெரியாருடைய சிந்தனையை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை சொல்லுகிறேன்.

என் தாத்தா என்னைப் போல் இருப்பார்

அய்யா எங்களுடைய தாத்தா படம் வேண்டும் என்று கேட்கிறார். ஓவியர் கேட்கிறார். உங்க ளுடைய தாத்தா எப்படி இருப்பார்? குரூப் போட்டோ வேறு ஏதாவது இருந்தால்கூட காட்டுங்கள் அதைப் பார்த்து பெரிதாக வரைந்து கொடுக்கிறேன். ரொம்ப சிறப்பாக இருக்கும் என்று.

எதுவுமே இல்லிங்க என்று இவர் சொல்லுகிறார். ஓவியர் பின் எப்படிங்க எழுதுவது என்று கேட்கின்றார். எங்க அம்மா சொல்லுவார்கள். எங்கள் அப்பா சொல்லுவார்கள். உன்னை மாதிரியேதான் உங்கள் தாத்தா இருப்பார் என்று என்னைப் பார்த்து சொல்லுவார். ஓ அப்படியா என்று கேட்டார். எங்கள் தாத்தா மாதிரி என்னை நினைத்துக்கொள்ளுங்கள் நீங்கள். தலைசிறந்த ஓவியர்.

அதனால் நீங்கள் அது மாதிரி வரையலாம் என்றவுடன் அவர் அந்த ஓவியத்தை எழுதிக் கொடுப்பார். பேரனை மனதில் வைத்துகொண்டு இவருடைய தாத்தா இப்படித்தான் இருந்திருப்பார் என்று மனதில் நினைத்து ஓவியர் வரைவார். பழைய ராஜாக்களுடைய படத்தையே அப்படித்தான் வரைந்தார்கள். திருவள்ளுவரை யார் பார்த்தார்கள்? திருவள்ளுவருடைய ஓவியம் உண்டா? ஆனால் இப்படி இருந்திப்பீர்கள் என்று வரைந்து வெளி யிட்டிருக்கின்றோம்.

திருவள்ளுவர் குறளிலே சொல்லுகிறார்.

மழித்தலும்-நீட்டலும் வேண்டாவாம் உலகம் பழித்தது ஒழித்துவிடின்
என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். மழித்தல் என்றால் மொட்டை அடிப்பது. நீட்டல் என்றால் தாடி வளர்ப்பது. அவருக்கு தாடி இருக்கிறது. ஒரு வேளை இவர் சொன்னதற்கு நேர் மாறாக நடக்கக்கூடியவரா என்கிற சிக்கலான கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் வள்ளுவர் படம் கூட நிற்காது.

குற்றவாளியைக் கண்டுபிடிக்க...

இன்றைக்குக்கூட குற்றவாளிகளைக் கண்டு பிடித்து இன்னார் இப்படி இருப்பார் என்று கம்ப்யூட்டர்கிராபிக்சில் போட்டுப் போட்டு குற்றவாளியை அடையாளம் காணக்கூடிய அளவுக்கு வந்தார்கள். ஆகவே ஓரளவுக்கு உருவத்தை வைத்துச் சொன்னாலே கண்டுபிடிக்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. வாய்ப்பு இருக்கிறது.
அடுத்த கட்டம் ஒரு ஒளிப்படத்தைக் கொடுக் கிறீர்கள். அது சிறிய ஒளிப்படம். அதை பெரிதாக எடுத்துக்காட்டுங்கள் என்று சொன்னால் என்ன நிலை? ஏனென்றால் இப்பொழுது ஒளிப்படம் என்று சொன்னால்தான் சரியாக இருக்கும்.

ஒளிப்பட நிபுணர் சொல்லுவார்

அந்த ஒளிப்படத்திற்காக கேமராவைத் தேடிக் கொண்டிருந்தோம். இப்பொழுது எல்லோர் கையிலும் கை தொலைப்பேசி இருக்கிறது. செல்ஃபோன் இருக்கிறது. செல்ஃபோனிலேயே எல்லா படங்களையும் எடுக்கக் கூடிய நிலைக்கு வந்தாகி விட்டது.

ஒருவர் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு போய் ஒளிப்பட நிபுணரிடம் கொடுக்கின்றார். என்னங்க, படம் எடுத்துக்கொடுத்திருக்கிறீர்கள் என்ன செய்ய என்று கேட்டால், என்னை மாதிரி இந்த படம் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார். படம் உங்களை மாதிரிதானே இருக்கிறது என்று ஒளிப்பட நிபுணர் சொல்ல, இல்லிங்க என்னை மாதிரி கொஞ்சம் டச் பண்ணிக்கொடுங்கள் என்று சொல்லுகின்றார்.

சரி டச் பண்ணி இன்னும் கொஞ்சம் அழகாகக் கொடுக்கிறேன் என்று ஒளிப்பட நிபுணர் சொல்லுவார். ஒளிப்படத்தில் கொஞ்சம் அழகு குறைந்தவரைக்கூட இன்னும் கொஞ்சம் அழகாக்கலாம். ஒளிப்பட நிபுணருடைய கை வண்ணத்தினாலே அழகாக்கலாம். இது ஒளிப்பட நிபுணருடைய வேலை.

அது ஓவியக்காரருடைய வேலை

ஆளே பார்க்காமல் எழுதிக்கொடுத்தது. ஓவியக்காரருடைய வேலை. இது முதல் கட்டம். அடுத்தது எக்ஸ்ரே எடுப்பதற்காகப் போகிறோம். அதுவும் கேமராதான். ஒருவர் கீழே விழுந்தவுடன் எலும்பு முறிந்து போகிறது. எலும்பு முறிந்தவர், மருத்துவமனைக்குப் போகிறார். உடனே எக்ஸ்ரே எடுத்து வாருங்கள் என்று சொல்லுகிறார்கள். எக்ஸ்ரே எடுக்கிறார்கள். அந்தப் படத்தைக் கொண்டு வந்து டாக்டரிடம் காட்டுகிறார்கள். எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என்று டாக்டர் கூறுகிறார்.

டச் பண்ணிக்கொடுங்கள்

ஒளிப்பட நிபுணரிடம் கேட்டமாதிரி, எக்ஸ்ரே வையும் கொஞ்சம் டச் பண்ணிக்கொடுக்கலாம் என்று கேட்டால் ஒளிப்பட நிபுணர் டச் பண்ணிக்கொடுப்பார். ஆனால் எக்ஸ்ரே எடுத்தவ ரிடம் போய் என்னங்க உடைந்த எலும்பை உடைந்த எலும்பாக காட்டுகிறீர்களே மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆகவே அதைக் கொஞ்சம் டச் பண்ணிக்கொடுத்து நன்றாக இருக்கிறமாதிரி கேட்டால், அவர் சொல்லுவார் இல்லிங்க. இது உடைந்த எலும்பை, உடைந்த எலும்பாகக் காட்டுவதற்காகத்தான் எக்ஸ்ரே இருக்கிறதே தவிர, இது மற்ற ஒளிப்படக் கருவி மாதிரி கிடையாது.

ஆகவே இந்த நாட்டிலே பல வகையான சிந்தனையாளர்கள் உண்டு. ஓவியக்கார சிந்தனை யாளர்கள் உண்டு. ஒளிப்பட நிபுணர்களைப் போன்ற சிந்தனையாளர்கள் உண்டு.

பெரியார் எக்ஸ்ரே நிபுணர்

ஆனால் பெரியார் என்ற சிந்தனையாளர் இருப்பதையே அப்படியே எடுத்துக்காட்டி சமுதாயத்திலே மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை தரவேண்டும் என்று விரும்பியவர் பெரியார். அவர் ஒரு எக்ஸ்ரே நிபுணர் போன்றவர்.

--------------தொடரும் -- “விடுதலை” 2-6-2011

பெண்களுடைய உரிமையைப் பற்றி தந்தைபெரியார் போல் எவரும் சிந்தித்ததுண்டா?

பெரியார் மணியம்மை பல்கலை.யில் வேந்தர் டாக்டர் கி.வீரமணி உரை

பெண்களுடைய உரிமையைப் பற்றி தந்தை பெரியார் போல் எவரும் சிந்தித்த துண்டா? என்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் 8.3.2011 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியார் சிந்தனையின் தனித்தன்மை


அதனால்தான் மொழிப்பிரச்சினை என்றுவரும் பொழுதுகூட ரொம்ப அழகாக சொன்னார், இங்கே கூட அய்யாகேட்டார்.

தொண்டர் நாதனை தூதினை விடுத்ததும்
தொண்டர் நாதனை தூதினை விடுத்ததும்
என்று சொன்னதைப் பற்றி பெரியார் கேட்டார்

தமிழுக்கு என்ன சிறப்பு? தமிழில் எல்லாவற்றை யும் எழுத முடியும். தமிழில் பொருளியல் கருத்தைச் சொல்ல முடியும். மருத்துவ கருத்தைச் சொல்ல முடியும்.

எதை வேண்டுமானாலும் தமிழில் சொல்லலாம். தமிழில் சிறப்பான இசை. தமிழ் இசை மற்றவர் களுக்கெல்லாம் முன்னோடியான இசை. அது பண்பாட்டுப்படை எடுப்பினாலே பின்னாலே தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழுக்கு என்ன பெருமை?


கண்ணுதற் பெருங்கடவுளும் கழக மோட மர்ந்து கடவுள்தான் முதல் என்று அப்பொழுது ஒரு பாடலைப் பாடினார்கள்.

தொண்டர் நாதனை தூதினை விடுத்ததும் முதலை உண்ட பாலனை அழைத்ததும்
என்று சொன்னால் என்ன அர்த்தம்? தமிழ்ப் புலவர்களுக்கு அந்த பாட்டினுடைய பொருள் தெரியும்.

தமிழுக்கு என்ன சிறப்பாம்?


தமிழுக்கு என்ன சிறப்பு என்றால் ஒரு குழந்தையை முக்கால்வாசி முதலை முழுங்கி விட்டதாம். உடனே தமிழ்ப்பாட்டுப் பாடிய வுடனே அதைவிட்டது. கதவு பூட்டியிருந்தது. மறைக்கதவும், திறந்ததுவோ, தமிழுக்கு என்ன பெருமை என்றால் தமிழ்பாட்டுக்கு ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. தமிழ்பாட்டைப் பாடினால் பூட்டிய கதவு திறந்துவிடும் என்று ஒரு பெருமையைச் சொன்னார்கள்.

தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை இருக்கிறது பாருங்கள். அது முற்றிலும் மறான சிந்தனை. அய்யா கேட்டார். மொழி என்பது கருத்துகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வது. அது மட்டுமல்ல. பண்பாட்டினுடைய அடித்தளம் அது. அதில் கையை வைத்தால் பண்பாடு குலையும். இதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டுமே தவிர, இந்த மாதிரி போலித்தனமான, புரட்டுத்தனமான ஒரு தெய்வீக அம்சங்களை எல்லாம் கொண்டு வந்து உள்ளே விட்டு, கற்பனைகளை எல்லாம் கொண்டு வந்து உள்ளே விட்டு இதுதான் தமிழ்மொழியின் சிறப்பு என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா? தமிழ்மொழி முதலை உண்ட பாலகனையும் அழைக்கும் என்று சொல்லுகிறார்கள். அதற்கு பெரியார் சொல்லுகிறார்.

முதலையிடம் குழந்தையை விட்டுவிட்டு


அய்யா கேட்கிறார் சரி. யாராவது ஒரு குழந்தையை முதலையிடம் கொடுத்துவிட்டு ஒரு 50 புலவர்கள் சுற்றி நின்று கொண்டு பாட்டு பாடுங்கள். அந்த முதலைவிட்டு விட்டுப்போய்விடுமா? என்று கேட்டார்.

இந்தத் துணிச்சல் தந்தைபெரியாருக்குத்தான் உண்டே தவிர வேறு யாருக்கும் கிடையாது. காரணம் அவர்கள் மற்றவர்கள் வாழ்த்து கிறார்களா? வைகிறார்களா? அல்லது வசவு பாடுகிறார்களா? என்பதைப்பற்றித் தந்தை பெரியார் அவர்கள் கவலைப்பட்டதே கிடையாது.

தமிழ்பாட்டுப் பாடினால் கதவு திறக்குமா?


அதே மாதிரிதான் மறைக்கதவு திறந்தது என்று தமிழ் புலவர்கள் பாடினார்கள். அதாவது தமிழ் பாட்டுப்பாடினால் பூட்டுபோட்ட கதவு திறந்தது அந்த அளவுக்கு சக்தி கொண்டது தமிழ்மொழி என்று சொன்னார்கள்.

நான் இதை தமிழ்ப்பல்கலைக் கழகத்திலேயே கேட்டேன். அப்படியானால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குப் பூட்டே தேவையில்லையே. பொழுது விடிந்து ஒரு புலவர் பாட்டுப்பாடினால் திறந்து கொண்டு போய்விடுகிறது. இன்னொரு பாட்டு பாடினால் மூடிடப்போகிறது. அவ்வளவு தானே தவிர.

மொழிக்கு என்ன போலிப்பெருமை?


அப்படியானால் பூட்டுக்கும் வேலையில்லை. சாவியை மறந்து வைத்துவிட்டோம் என்கிற வேலையே இல்லையே என்று கேட்டால் இதெல்லாம் இப்பொழுது எங்கங்க நடக்கிறது என்று கேட்பார்கள். இப்படி கேட்கிறது இருக்கிறது பாருங்கள் அதுதான் பகுத்தறிவு

மொழிக்குப் போலிப் பெருமைகள்


ஆனால் மொழிக்கு அப்படிப்பட்ட போலிப் பெருமைகளை உண்டாக்கக் கூடாது. மொழி என்பது ஒரு போர்க்கருவி போல என்றுதான் பெரியார் அவர்கள் சொன்னார்கள். போர்க்கருவி என்றால் இந்த காலத்தில் போய் அம்பையும், வில்லையும் விட முடியுமா? போராட்டத்தில் போய் நிற்க முடியுமா?

நிற்கவே முடியாது. இன்றைக்கு ஏ.கே. 47 கருவிகள் வந்திருக்கின்றன. இன்றைக்கு ஏவுகணைகள் வந்திருக்கின்றன. அதுவும் ஆளே இல்லாத இடத்தி லிருந்து ஏவிக்கொண்டிருக்கக் கூடியவைகள். இப்படி வளர்ச்சி அடையக் கூடிய காலகட்டத்தில் மொழி என்பது சிறந்த கருவியாக இருக்க வேண்டும்.

பள்ளிக்கூடம் போகாத தலைவர்


இன்றைக்கு மகளிர்க்கு ஒரு சிறப்பான நாள். உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். அதனுடைய சிறப்பு எல்லோருக் கும் தெரியும்.

இன்று உலக மகளிர் நாள் பெண்களுடைய சுய மரியாதையைப் பற்றி பெண்களுடைய உரிமையைப் பற்றிய தந்தை பெரியாரைத் தவிர வேறு எவரும் அந்த அளவுக்கு பேசியிருக்க முடியாது.

பல்கலைக் கழகத்திற்குள்ளே போகாத தலைவர். பள்ளிகளுக்குள்ளே நுழையாத பெரியார். பட்டங்கள் பெறாத பெரியார்

பெண்களுக்கு எந்தக் காலத்திலும் சுதந்திரம் கிடையாது


இன்றைக்கு அவர் பெயராலே பல்கலைக் கழகம் இன்றைக்கு அவர் பெயராலே ஆய்வுகள் எல்லாம் நடக்கின்றன. மனுதர்மத்தைப் பற்றி சொன்னார்கள். மனுதர்மத்தில் பெண் என்பவர் எந்த காலட்டத் திலும் சுந்ததிரமாக இருக்கத் தகுதி அற்றவர். பெண் குழந்தை சிறிய வயதில் தகப்பனுடைய கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும். மனுதர்மத்தினுடைய சுலோகம் அது.

பெண் வளர்ந்தால்-திருமணம் ஆன பிற்பாடு அப்பொழுதும் கணவனுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். சுதந்திரம் கிடையாது. பிறகு மகன் வந்த பிற்பாடு என்ன சொல்லுகிறார்களோ அதைக் கேட்டுக்கொண்டு அந்தக் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். ஆகவே பெண் என்பவர் தன் வாழ்நாள் முழுக்க சுந்திரமாக இருக்க முடியாது. கட்டுப்பாடுகளைத் தாண்டி இதுதான் மனுதர்மத்தினுடைய கருத்து.

பண்பாட்டுப்படை எடுப்பு


ஆனால் நம்முடைய பண்பாட்டு அடிப் படையில் அப்படி கிடையாது. இன்னொரு பண்பாட்டுப் படை எடுப்பு நம் மீது நிகழ்ந்த வுடனே அந்த பண்பாட்டுப் படை எடுப்பை எப்படி ஆக்கி வைத்துவிட்டார்கள் என்று சொன்னால் அருமை நண்பர்களே, குறிப்பாக கல்வியியல் துறையிலே இருக்கக் கூடிய மாணவச் செல்வங்கள், மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அய்யா அவர்கள் தான் முதல் முறையாக தனித்த சிந்தனையோடு ஆராய்ச்சி செய்தார். மற்றவர்கள் சொன்னதைவிடு.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?


நம்முடைய நாட்டில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? என்று பெண்களுக்கு ஓர் இலக்கணம். அந்த பெண்களுக்கு ஓர் இலக்கணம் சொல்லும் பொழுது என்ன சொல்லுவார்கள் பெண்களுக்கு?

நல்ல பெண்மணி என்றால் அந்த பெண்ணுக்கு என்ன இலக்கணம்? என்ன குணாம்சங்கள் இருக்க வேண்டும் என்றால் அச்சம்-மடம்-நாணம் அப்புறம் என்ன? (பயிர்ப்பு-மாணவிகளின் குரல்) பார்த்தீர்களா மனப்பாடமாக இருக்கிறது உங்களுக்கு.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு சரி. அச்சம் என்றால் பயம் இல்லையா? நாணம் என்றால் வெட்கம், மடம் என்று சொன்னால் புத்தி சாலித்தனமாக இருக்கக் கூடாது. கேள்வி கேட்கக் கூடாது என்று இருக்கலாம். பெண்கள் எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது. மடமாக இல்லை என்றால் அடிமையாக இருக்கக்கூடாது.

பெண்கள் என்றால் அடிமை


பெண்கள் என்றால் அடிமையாக இருக்க வேண்டும் என்றுதானே சமுதாயத்தில் அடக்கி வைத்திருக்கிறார்கள். அச்சம், மடம், நாணம் வரை சொல்லியாகிவிட்டது. பயிர்ப்பு என்றால் என்ன? பயிர்ப்பு என்பதற்கு என்ன பொருள்? யாராவது சொல்லுங்கள் பார்ப்போம். பயிர்ப்பு பற்றி நீங்கள் யாராவது சொல்லுங்கள்.

நம்முடைய பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் துணிச்சலுக்குப் பெயர் போனவர்கள். அதனாலே இதை வகுப்பறையாகக் கருத வேண்டும். இங்கு மார்க் கூட்டியும் போட மாட்டார்கள். குறைத்தும் போட மாட்டார்கள். துணிச்சலாக நீங்கள் சொல்ல வேண்டும் என்பது தான் மிக முக்கியம். யாராவது ஒருத்தர் சொல்லுங்கள். பயிர்ப்பு என்றால் என்னவென்று சொல்லுங்கள்.

யார் சொன்னது?


அந்தக் காலத்தில் இப்படித்தான் ஒலி பெருக்கி இல்லாத காலம். கடைசியாக ஒருவர் பேசுவார். பத்து பேர் தள்ளி இருப்பவர். மேடையில் இருக்கிறவரிடம் இந்த செய்திக் கேட்டுக்கொண்டு போய் சொல்வார். அதற்கடுத்து அவர் இன் னொருவரிடம் போய் சொல்லுவார். ஒலிபெருக்கி கண்டுபிடிப்பதற்கு முன்னால் இருந்த காலம்.

பயிர்ப்பு என்றால் கல்வி என்று பொருள். (மாணவி பதில்) எதில் இருக்கிறது? அகராதியில் இருக்கிறதா? (தமிழர் தலைவர் கேள்வி).

ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததா? அல்லது எதிலிருந்து சொல்லிக்கொடுத்தார்கள்? (தமிழர் தலைவர்)

கேள்விப்பட்டது (மாணவி) அப்படியானால் சரி. அதாவது எவ்வளவு பெரிய பொய்யை சொல்லியிருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட உதாரணம் வேறு ஒன்றும் கிடையாது. கேள்விப் பட்டதுதான். இன்னொரு மாணவி சொல்கிறார். சந்ததியை பெருக்குவது என்று. எதிலேம்மா இருக்கிறது தப்பாகப் போனால் அதைப் பற்றிக் கவலையே படாதீர்கள்.

நமது பிள்ளைகள்-எல்லாம் வாதம் பண்ணக் கூடிய அளவிற்கு துணிச்சலோடு இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எங்கள் ஆசிரியர் சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்று ஒரு மாணவி கூறுகிறார்.

என்ன சொல்லிக்கொடுத்திருக்கிறார் சந்ததியை உருவாக்குவது. (மாணவியின் பதில்) சரி, குழந்தை பிறக்காமல் இருக்கிறார்களே அவர்களுக்கு என்ன நிலை? எந்த கதி? அதாவது சந்ததியை உருவாக்குவது தான் ஒரு பெண் என்றால் ஆணுக்கு அந்த சக்தி உண்டா? இல்லையா? அப்படியானல் ஆணுக்கும் பயிர்ப்பு இருக்க வேண்டுமா இல்லையா?

ஏன் அதை வைக்கவில்லை? சந்ததியை பெண் மட்டுமே உருவாக்க முடியாது. ஆணும், பெண்ணும் சேர்ந்தால்தான் சந்தியை உருவாக்க முடியும் (சிரிப்பு). நாளை முதற்கொண்டு அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு பெண்களுக்கும் பொதுவானது. ஆண்களுக்குப் பொதுவானது என்று சொல்ல முடியுமா?

தோழியர்களே! தோழியர்களே! உங்களுக்கு நான் சொல்லுகிறேன். தந்தை பெரியார், பல்கலைக் கழகத்திலும் படிக்காதவர். எந்த பல்கலைக் கழகத்திலும் படிக்காதவர், ஆராய்ச்சி செய்யாதவர். அப்படிப்பட்ட தந்தைபெரியார்தான் பத்து அகராதியைப் புரட்டிவிட்டு பத்து அகராதியில் இருக்கின்ற சொற்களைப் பயன்படுத்தியிருக் கின்றார்.

அகராதியைப் பாருங்கள்


மதுரை செந்தமிழ் அகராதி. சைவ சித்தாந்த நூல் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற தமிழ்அகராதி இன்னும் வேறு எந்த அகராதியாக இருந்தாலும் நீங்கள் இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நூலகத்தின் அகராதியை எடுத்துப்பாருங்கள்.

பேராசிரியர் இருக்கிறார்கள். ஒரு பேராசிரியர் அல்ல. இரண்டு பேராசிரியரை சாட்சிக்கு வைத்து சொல்லுகிறோம். நீங்கள் தமிழ், ஆங்கிலம் எல்லாம் படித்தவர்கள்.

இன்று உலக மகளிர் நாள். மொழியோடு இணைத்து இந்த சிந்தனையைப் பார்க்க வேண்டும். பெரியாருடைய சிந்தனை. தனித்த சிந்தனை என்பதற்கு அடையாளம் என்ன? அய்யா சொல்லுகிறார். பயிர்ப்பு என்றால் அருவருப்பு, குர்சிதம், அசிங்கம் என்று அகராதியில் உள்ளதை எடுத்துச்சொல்லுகின்றார். இந்த மூன்று விளக்கச் சொல்தான் அகராதியில் போட்டிருக்கிறது.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால் அசிங்கமாக இருக்க வேண்டும். பெண்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால் அந்த பெண்ணைப் பார்த்தவுடனே ஆசை வரக்கூடாது. அருவருப்பு வரவேண்டும்.

இப்படி ஒருத்தர் சொல்லியிருந்தால்-இப்படி ஒரு சூழல் இருந்தால் அந்த சொல்லை நாம் அகராதியில் வைத்திருக்கலாமா? தயவு செய்து நினைத்துப் பாருங்கள். முதல்வேளை பெண்கள் மாநாட்டில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் முற்போக்கு சிந்தனையாளர்கள் எல்லாம் இந்த பயிர்ப்பு என்பதை முதலில் காலி பண்ண வேண்டும்.

எங்களை அவமானப்படுத்துவதற்கு, அசிங்கப் படுத்துவதற்கு இதைவிட வேறு ஒன்றும் கிடையாது. குர்சிதம் என்றால் அதற்கு என்ன பொருள் என்று அய்யா பார்த்தார். இங்கேயும் தமிழறிஞர்கள் இருக்கிறார்கள். குர்சிதம் என்கிற வார்த்தைக்கும் அருவருப்பு அசிங்கம் என்றுதான் போட்டி ருக்கிறான். அப்படியானால் இது என்ன அர்த்தம் என்று பெரியார் கேட்டார்.

பெண்களையே அவ்வளவு கொச்சைப்படுத்தி, அவ்வளவு கேவலப்படுத்தி வைக்கக் கூடியதற்கு இந்த மொழியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொன்னால் காரணம் அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு ஒரு வழிப்பாதையாக இருக்கக்கூடாது

-----------------தொடரும் -- “விடுதலை” 2-6-2011

1.6.11

சமச்சீர் கல்வியை எதிர்ப்போர் யார்?


குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின்போது (27.5.2011) செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சமச்சீர் கல்வியின் அவசியத்தையும், அரசியல் கண்கொண்டு இதனை அணுகக் கூடாது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்களும்கூட மிகப் பெருந்தன்மையோடு, எனது செம்மொழி பாடல் இடம்பெற்றதுதான் சமச்சீர் கல்வித் திட்டத்தையே நீக்குவதற்குக் காரணம் என்றால், அந்தப் பாடலை நீக்கிவிட்டு, சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்தலாமே என்றும் கூறியிருக்கிறார்.

சமச்சீர் கல்வி திட்டம் என்பது தி.மு.க.வின் திட்டமல்ல; கல்வியாளர்களின் திட்டம்.

பணக்காரருக்கு ஒரு கல்வி, ஏழைக்கு இன்னொரு கல்வி, பார்ப்பானுக்கு ஒரு கல்வி, பஞ்சமருக்கும், சூத்திரருக்கும் இன்னொரு கல்வி என்னும் வருக்க - வருண வேறுபாட்டைக் கெல்லி எறியும் திட்டமாகும்.

எல்லோருக்கும் கல்வியா? அது கூடாது என்று சொல்லும் ஒரு கூட்டம் இந்த நாட்டில் இருந்து வருகிறது. சிரிப்பதுகூட இங்கிலீஷில் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்கள் உண்டு. சமச்சீர் கல்வியில் தமிழ் கட்டாயம் என்ற நிலையும் உருவாக்கப்பட்டு விட்டது.

எங்களவாளின் தரம் வேறு - மற்றவாளின் தரம் வேறு என்று எண்ணுகிறவர்கள் கைகளில் ஊடகங்கள் இருக்கின்றன.

அந்தக் கூட்டம் வழக்கமான தந்திர உபாயத்தைக் கைகொண்டு எழுதுகின்றன. சமச்சீர் கல்வி தவறு என்று நேரிடையாகக் கூறாமல் - இதற்காகத் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டங்கள் சரியில்லை என்று அதனைப் பெரிதுபடுத்துகின்றன.

முன்னாள் கல்வி அமைச்சர் மானமிகு தங்கம் தென்னரசு அவர்கள் பாடத் திட்டங்கள் எந்த வகையில் தரமானதாக இல்லை என்பதை அரசு நிரூபிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

பாடத் திட்டங்களைத் தயாரித்தது யார்? அரசியல்வாதிகளா, அமைச்சர்களா? இல்லையே, பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமரன் கல்வியாளர் இல்லை என்று கூறப் போகிறார்களா? இந்தக் குழுவிற்குப் பல தரப்பினரும் தங்கள் கருத்துகளை, பரிந்துரைகளை எழுத்து மூலமாகக் கொடுத்தது உண்டே! போதிய அவகாசம் கொடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் இதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டதே! கல்வியாளர்கள்தானே பாடங்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளனர்? அவர்கள்மீதும் அரசியல் சாயம் பூசலாமா - அது சரியானதுதானா? தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசர், பாரதிதாசன், எம்.ஜி.ஆர். போன்றவர்களின் பாடங்கள் இடம்பெற்றுள்ளனவே!

இந்து முன்னணி அமைப்பாளர் திருவாளர் இராமகோபால அய்யருக்கு இந்தத் தலைவர்கள் பற்றிப் பாடங்களில் இடம்பெற்றிருப்பது குறித்துக் கோபம் கொப்பளிக்கலாம் - அதனைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கின்போது அரசு சார்பில் வாதிட்ட தலைமை வழக்கறிஞர் தெரிவித்த கருத்து சமச்சீர் கல்வியையே குறைகூறும் ஒலி தொனிக்கிறது. அதனால்தானோ என்னவோ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் வினா ஒன்றை எழுப்பியுள்ளார். சமச்சீர் கல்வி வேண்டுமா - வேண்டாமா? இதில் அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன என்ற வினாவை எழுப்பியிருக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் முன்னணியினருள் ஒருவரான தீக்கதிரின் முன்னாள் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் அவர்கள், மெட்ரிக் பள்ளியின் முதலாளிகள் சமச்சீர் கல்வியைத் தடுப்பதில் ஒரு லாபி வைத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராசன் அவர்களின் கருத்தில் சற்று சுருதி பேதம் காணப்படுகிறது என்றாலும், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளே கூட சமச்சீர்க் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதிலிருந்தே - சமச்சீர் கல்வியை அரசியலாக்கக் கூடாது; அதனைத் தடை செய்யக் கூடாது என்ற கருத்து வலுப்படவில்லையா? 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட ஒரு திட்டத்தை தூசாகத் தட்டிவிடலாமா? அது மக்கள் பணம் அல்லவா? ஓர் அரசு போய் இன்னொரு அரசு ஜனநாயக அமைப்பில் வருவது வழமையான ஒன்றுதானே! ஆட்சி மாறினால் அடிப்படைத் திட்டங்களும் மாற்றப்பட்டுத்தான் தீரவேண்டுமா? உயர்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியின்போது சைக்கிள்கள் வழங்கப்பட்டன; அ.தி.மு.க.விற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு அந்தத் திட்டத்தை நிறுத்திவிடவில்லையே! சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முதலில் ஆதரித்துவிட்டு, பிறகு ராமன் பாலம் என்று காரணம் காட்டி, அந்தத் திட்டமே கூடாது என்ற முடிவை அ.தி.மு.க. எடுத்தது போன்ற நிலை- சமச்சீர் கல்விக்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், பெற்றோர் களுக்கும், கல்வியாளர்களுக்கும் இருந்து வருகிறது. அப்படியல்ல என்று காட்டவேண்டிய பொறுப்பு அ.தி.மு.க. அரசுக்கு உண்டு. மறுபரிசீலனை என்ற ஒன்று எதிலும் உண்டு - தமிழ்நாடு அரசு சிந்திக்கட்டும்!

------------------"விடுதலை” தலையங்கம் 1-6-2011

எம்.ஜி.ஆருக்குக் கோவிலா?



கோவில்கள் எப்படி தோற்றுவிக்கப்பட்டன? பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. திருநின்றவூரில் நடிகர் எம்.ஜி.ஆருக்குக் கோவில் கட்டி விட்ட னர். கோவிலுக்குள் வைக்க 5 அடி உயரத்தில் எம்.ஜி.ஆர். சிலை தயாரிக் கப்படுகிறதாம். ராஜஸ்தான் மாநிலத்தில் கைதேர்ந்த சிற்பிகள் இதனைச் செய் கிறார்களாம்.

இதற்கு முன்புகூட நடிகை குஷ்புவுக்குக் கோவில் கட்டப்பட்டதுண்டு. ஈரோட் டில் காந்தியாருக்குக் கோயில் கட்டி விட்டார்கள்.

வழக்கமாக மற்ற மற்ற கோவில்களில் ஆறு வேளைப் பூஜைகள் நடப்பதுபோல, அபிஷேகங்கள் செய்யப்படுவது போல, படையல்கள் போடப்படுவதுபோல இந்தக் கோவில்களிலும் நடக்கும்; அர்ச்சகனும் நியமிக்கப்பட்டு விடுவான்.

பக்தர்களும் படை திரண்டு வரத்தான் போகிறார்கள். எம்.ஜி.ஆர். கோயி லுக்குச் சென்றால் குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்; நோய்கள் தீர்ந்து போய்விடும் என்று ஆங்காங்கே பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டால் அவ்வளவுதான் பக்திப் பயித்தியம் பிடித்த மக்கள் அலை அலையாகத் திரளமாட்டார்களா? எம்.ஜி.ஆர். கோவிலுக்கு வந்து மொட்டை போட மாட்டார்களா? கோவிலைக் கட்டியவர்கள் உண்டியலை வைக்க மாட்டார்களா? (கோவில் கட்டுபவர்களின் நோக்கமும் அதுதானே?) பக்தர்களும் காணிக்கை செலுத்த மாட்டார்களா?

பெண்கள் அங்கப் பிரதட்சண்யம் செய்யமாட்டார்களா? அடுத்தடுத்து பூக்குழி (தீமிதி) ஏற்பாடு களும் நடக்காதா என்ன?

இன்னும் எம்.ஜி.ஆர். சாகவில்லை. அவர் எப்படி சாவார்? என்று நினைத்துக் கொண்டிருக்கும் பாமரர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

கொள்கை ஏதுமில்லாமல் சினிமாவில் நல்லவர்களாக நடித்துவிட்டால் கஷ்டப்படும் மக்களைக் காப்பாற்றுவது போல காட்டி விட்டால், வில்லனை அடித்து விரட்டிவிட்டு பெண்ணைக் காப்பாற்றி விட்டால் (பிறகு அந்தப் பெண்ணை இவரே திருமணம் செய்துகொண்டு விடுவார் என்பது வேறு பிரச்சினை) அவர்தான் தெய்வம்- அவர்தான் மகான். அப்படித்தானே?

முதலில் இரசிகர் மன்றம் ஆரம்பித்து, பிறகு கோவிலும் கட்டி விடுவார்கள்.

அதற்குப் பிறகு அவர்களை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்க்கவும் ஆசைப்படுவார்களே - அந்தத் தெருப்புழுதிக் கூத்துதானே நாட்டிலும் நடந்துகொண்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட படித்த- படிக்காத பாமரர்கள் இருக்கும்வரை தேர்தலாவது - மண்ணாங்கட்டியாவது!

----------------- மயிலாடன் அவர்கள் 1-6-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

தமிழர் தம் போர்வாளாகிய விடுதலையின் பிறந்த நாள் இந்நாள்

இன்று விடுதலைக்கு 77

1926ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. வருடப் பிறப்புக்காக குடிஅரசு பத்திரிகைக்கு என்ன சன்மானம் செய்யப் போகிறீர்கள்?

குடிஅரசிற்கு நண்பர்கள் ஒவ்வொருவரும் சந்தாதாரரைச் சேர்த்துக் கொடுங்கள். அல்லது நமது சமூகத்திற்குக் கேடு ஆகும்படியான பார்ப்பனப் பத்திரிகையின் ஒரு சந்தாதாரரையாவது குறையுங்கள். இதை நீங்கள் செய்தால் குடிஅரசிற்கு மாத்திரம் அல்லாமல் நாட்டுக்கும், பார்ப்பனர் அல்லாதார் சமூகத்திற்கும் விடுதலையை அளிக்க உங்கள் கடமையைச் செய்தவர்கள் ஆவீர்கள்.(குடிஅரசு, 27.12.1925)

என்று தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு 86 ஆண்டுகளுக்கு முன் எழுதினார். அது இன்றைக்கும் பொருந்தவே செய்கிறது. தமிழர் தம் போர்வாளாகிய விடுதலையின் பிறந்த நாள் இந்நாள் (1935).

76 முடிந்து விடுதலை தன் விவேகமும் - வீரமும் பொருந்திய பொன்னடியை 77ஆம் ஆண்டில் பதிக்கிறது. அன்று 1926 புத்தாண்டுக்கான செய்தியைத் தந்தை பெரியார் வைத்தார். இன்று விடுதலையின் பிறந்தநாள் செய்தியாக அதனையே அட்சரம் பிறழாமல் வைப்பது பொருத்தம்தானே!

இந்த 77 ஆண்டில்தான் அது சந்தித்த சர்ப்பங்கள் எத்தனை - விலாக் குத்துகள் எத்தனை! முதுகு பக்கம் குத்தியவர்கள் எத்தனை எத்தனைப் பேர்!

ஆனால் விடுதலையோ நேர்மையான போரை நடத்தி வந்திருக்கிறது. எதிர்வரும் அம்புகளை தன் மார்புப் புறத்தில் தாங்கி நடந்து வந்திருக்கிறது.

படிக்கக்கூடாது என்று ஆக்கப்பட்ட பஞ்சமர்களை தன் தோளில் தூக்கிச் சென்று கல்விச் சாலைக்குள் நுழைய விட்டு வெளியில் காவல் காத்து நின்றது.

எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கி வைத்திருந்த அந்தப் பழைய ஏற்பாட்டை, மனு தர்மத்தை - சமூக நீதி என்னும் எரிமலையில் போட்டுப் பொசுக்கி, சூத்திரர்களைக் கல்விச் சாலைக்குள் தலை நிமிர்வுடன் நுழைய வைத்த வெற்றி இந்த விடுதலைக்கே சொந்தம்.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கூறிய பத்தாம் பசலித் தனத்தை அந்த அடுப்பில் போட்டுப் பொசுக்கி, ஆண்களுக்கு நிகராகப் பெண் களுக்கும் கல்வி என்னும் கர்ச்சனை ஊர்வலங்களை நடத்தி காரியத்தில் வெற்றிபெற்ற வீரனும் இந்த விடுதலையே!


கல்வி நீரோடையில் ஆரிய முதலைகள் என்னும் விடுதலையின் தலைப்புச் செய்திகள் வாலைச் சுருட்டிக் கொண்டு முதலைகளை ஓடச் செய்த வீர வரலாறும் இந்த விடுதலைக்கே!

குலக்கல்வி கொண்டு வந்த குல்லூகப்பட்டரை ஆத்துக்கு விரட்டியடித்ததும் இந்த வீர வேங்கையே!

பச்சைத் தமிழர் காமராசரை, பராக்குக் கூறிப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு போய் கோட்டையில் அமரவைத்த கொள்கைக்குச் சொந்தக்காரனும் இந்த விடுதலையே!

ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் ஆரிய அடிமைத்தனத்திலிருந்தும், ஆதிக்கத் தனத்திலிருந்தும் தமிழர்கள் விடுதலை பெற்றனர் என்பது இந்த விடுதலையால்தான்!

இது ஒரு கொள்கை நெருப்பு - இலட்சிய ஆசான்! சினிமாவுக்கு இடம் இல்லை. இராசி பலன் கிடையாது. மக்கள் பின்னால் இது போகாது - மக்கள் இதன் பின்னால் தான் வர வேண்டும். மக்களை வழி நடத்துபவன்தான் தலைவனே தவிர, மக்கள் பின் போகிறவன் தலைவனாகான் என்று சொன்ன தலைவரின் போர் ஆயுதமாயிற்றே விடுதலை.

விடுதலையால் பலன் பெற்ற ஒவ்வொருவரும் ஒரு விடுதலை சந்தா என்றால்கூட தமிழ்நாட்டில் முதல் இடத்தில் விடுதலைதான் மின்னிக் கொண்டிருக்கும்.

நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்று தமிழர்களை அடையாளப்படுத்திக் காட்டியுள்ளார் தந்தை பெரியார்.

ஆனாலும் இந்தத் தமிழர்களுக்காகவே உழைத்துத் தீருவது என்ற உதிர ஓட்டத்தில் உறுதியாக இருப்பது விடுதலையே!

அண்ணா ஆசிரியராக இருந்த - திராவிட இயக்கத் தாயான விடுதலை ஒரு அண்ணா தி.மு.க. ஆட்சியில் நூலகங்களுக்குள் நுழையக் கூடாதாம் - அப்படியொரு 144 தடை!

இந்துவும், எக்ஸ்பிரசும், தினமணியும், கல்கியும், துக்ளக்குகளும்தான் நூலகங்களுக்குள் உள்ளே நுழைய அனுமதியாம். இதற்குப் பெயர் திராவிட இயக்க ஆட்சியாம்!

தீண்டாமையை ஒழித்த விடுதலையிடம் அரசு இப்படி ஒரு தீண்டாமையை அனுசரிக்கிறது போலும்!

இருக்கட்டும், அதனால் என்ன? இந்த ஆட்சியின் அடையாளத்தை வரலாறு காணவேண்டாமா? அது எப்படியோ போகட்டும்!

தடைகளைப் படிகட்டுகளாக்கிப் பயணம் செய்யும் வித்தையைக் கற்றவர்கள்தான் கருஞ்சட்டைப் பட்டாளம்.

எதிர்ப்பு என்று வரும் பொழுதுதான் எரிமலையாக எழும் இந்த இலட்சியப்படை என்பதை இதற்கு முன்பும் வரலாற்றில் நிரூபித்துக் காட்டியுள்ளோம்.

தமிழர்களிடம் செல்லுவோம். வீட்டுக்கு வீடு செல்லுவோம் - கடைக்குக் கடை செல்லுவோம் - நம் வீட்டுப்பிள்ளையை நாம் தானே ஊட்டி வளர்க்க வேண்டும்.

படித்துப் பட்டம் பெற்று கை நிறைய சம்பாதிக்கும் தமிழர்களைப் பார்த்து நாம் கேட்டால் என்ன தப்பு? இந்தப் படிப்பும், உத்தியோகமும், சம்பாத்தியமும் இந்த விடுதலையால் வந்தது என்ற வரலாற்றை எடுத்துச் சொல்ல நமக்கு என்ன கூச்சம்?

இரகசிய குறிப்பேடு என்ற ஒரு முறை இருந்தது தெரியுமா? மேல்மட்ட அதிகாரிகள் கீழ்மட்ட அதிகாரிகளைப் பற்றி எழுதும் அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் பதவி உயர்வுகள்.

அன்றைக்கு மேல்மட்ட அதிகாரிகள் யார்? அனைவரும் பார்ப்பனர்கள்தானே. அவர்களிடத்தில் நமது பஞ்சம, சூத்திர அலுவலர்கள் பணியாளர்கள் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா? உரிமையைக் கேட்டால் இரகசிய குறிப்பேட்டில் கை வைத்து விடுவார்களே!

அந்த இரகசியக் குறிப்பேட்டு முறையை ஒழித்துக் கட்ட ஓயாது ஒலி முழக்கம் எழுப்பியது இந்த விடுதலை தானே! மறுக்க முடியுமா? இரகசியக் குறிப்பேட்டு முறை ஒழிக்கப்பட்ட பிறகுதானே நம் மக்கள் தலையெடுக்க முடிந்தது? முதல்வர் கலைஞர்தான் அதனையும் ஒழித்துக் கட்டினார். அதற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களை அழைத்து அல்லவா சால்வை போர்த்தி நன்றிக்கடன் ஆற்றினர் அரசு அலுவலர்கள்.

இந்த வரலாறு இன்றைய தலைமுறையினரிடம் எட்டாமல் இருக்கலாம். எடுத்துச் சொல்ல என்ன தயக்கம்? எளிய வழி ஒன்றை நம் தமிழர் தலைவர் கூறியுள்ளார். கழகத் தோழர்களே, ஆளுக்கு ஒரே ஒரு விடுதலை சந்தாவைச் சேர்ப்பீர் - என்பதுதான் இந்த எளிய வழி. ஒரே மாதத்தில் ஒரே பாய்ச்சலில் ஒரு இலட்சத்தை எட்டியது என்ற நிலையை உருவாக்கிவிட முடியுமே!

நம்மால் முடியாதது வேறு யாரால் முடியும் என்ற முழக்கத்தைக் கொடுத்த தமிழர் தலைவரின் யோசனை நம் சிந்தனையில் கிளர்ந்து எழட்டும். 2012ஆம் ஆண்டு நமது தலைவர் விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் ஆகும் ஒரு கால கட்டம்.


தமிழர்களின் மூச்சுக் காற்றான விடுதலை நிறுத்தப்படாததற்குக் காரணம் நமது மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களே! இதனை நாம் சொல்லவில்லை - அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களே அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார் (விடுதலை, 10.8.1962).

விடுதலையின் ஆசிரியராக 50ஆம் ஆண்டில் அவர் அடி எடுத்து வைக்கும்போது வீட்டுக்கு வீடு விடுதலை வருகை என்ற நிலையை உருவாக்குவோம்!

அதன்மூலம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் விடுதலை பணிமனை திறப்பு விழாவிலே (1965) கூறினார்களே - அதன்படி தமிழன் வீடு என்பதற்கான அடையாளத்தை ஏற்படுத்துவோம். தோல்வியும் நன்மைக்கே என்பார் ஈரோடு ஏந்தல் நம் பெரியார். அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - விடுதலைக்கு ஏற்படுத்திய தடையும் ஒரு வகையில் நல்லதே! - ஓர் எரிமலை கொந்தளிக்கவும், ஒரு உணர்ச்சி வெள்ளம், உத்வேகத்தோடு பொங்கி எழவும், ஒரு எழுச்சிப் புயல் வெடித்துக் கிளம்பவும், கருஞ்சட்டைப் பட்டாளத்துக்கு விடப்பட்ட சவாலைச் சந்தித்து சாதனைச் சிகரத்தில் வெற்றிக் கொடியைப் பொறிக்கவும் கிடைத்திட்ட அரும்பெரும் சந்தர்ப்பமாகக் கருதுவோம் - எழுக; கருஞ்சிறுத்தைப் பட்டாளமே!


களத்தில் இறங்கியது கருஞ்சட்டைச் சேனை

கழகத் தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று சால்வைக்குப் பதில் கழகத் தோழர்கள் சந்தாக்களை அளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக 28 ஆண்டு சந்தா, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் 20 ஆண்டு சந்தா, இராசபாளையம் முருகன் 1 அரையாண்டு சந்தா, இராசபாளையம் எழில்மதி 1 அரையாண்டு சந்தா, சிவகளை பால். இராசேந்திரம் 1 ஆண்டு சந்தா, சென்னை சண்முக சுந்தரம் 1 ஆண்டு சந்தா, கேரளா வீரமணி (மெட்டல்) 1 அரையாண்டு சந்தா, தூத்துக்குடி பி.பழனிச்சாமி 1 ஆண்டு சந்தா, நாகர்கோயில் பி.சங்கரநாராயணன் 2 அரையாண்டு சந்தா, தூத்துக்குடி ஆர். கனகராஜ் 1 அரையாண்டு சந்தா, ஆத்தூர் விஜய் ஆனந்த் 1 ஆயுள் சந்தா, இராமநாதபுரம் எம்.முருகேசன் 5 அரையாண்டு சந்தா, மதுரை எஸ்.மனோகரன் 3 ஆண்டு சந்தா, ஆரல்வாய்மொழி எம்.மணி 1 அரையாண்டு சந்தா, தென்காசி டேவிட் செல்லதுரை 4 ஆண்டு சந்தா, தென்காசி தங்கதுரை 4 அரையாண்டு சந்தா, மதுரை பவுன் ராசா 4 அரையாண்டு சந்தா, திருநெல்வேலி சி. வேலாயுதம் 1 அரையாண்டு சந்தா ஆகியோர் விடுதலை ஆசிரியர் கழகத் தலைவரிடம் விடுதலை சந்தாக்களாக நன்கொடை அளித்தனர்.

தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் திருவள்ளூர் திராவிடமணி 1 அரையாண்டு சந்தா, அரக்கோணம் சுரேஷ் 1 அரையாண்டு சந்தா அளித்தனர்.

இவர்களைப் பின்பற்றுவார்களா - தோழர்கள்?

-------------- மின்சாரம் அவர்கள் 1-6-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

பார்ப்பன ஆட்சி தேவேந்திரன் சபை தேவேந்திரன் - தேவர்கள் சம்பாஷணை


பார்ப்பன ஆட்சி தேவேந்திரன் சபை
தேவேந்திரன் - தேவர்கள் சம்பாஷணை


தேவேந்திரன் கொலுமண்டபத்துக்கு தேவர்கள் வந்து கூடிவிட்டார்கள்.

தேவேந்திரன் வந்து விட்டான். தேவர்கள் எழுந்து ஜெய ஜெயீபவா கூறி அக்ஷதை புஷ்பம் வீசுகிறார்கள். தேவேந்திரன் ஆசனத்தமருகிறான்.

தேவர்கள் வாழ்த்துக்கூறி அமருகிறார்கள்.

தேவேந்திரன்:- தேவர்களே! உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதத்தாலும் எனது அரிய தவத்தாலும் இந்த அரிய தேவேந்திர பதவியை அடைந்திருப்பதோடு இந்திராணியையும் அடைந்து இன்பமாகவும் பெருமையாகவும் வாழ்கிறேன் அல்லவா?

தேவர்கள்:- ஆமாம் பிரபு! எங்களுடைய பூரண ஆசீர்வாதமும் தங்களுடைய அரிய தவ மகிமையும் இருக்கும்போது தங்களுக்கு என்ன குறை ஏற்படப் போகிறது?

தே-ன்:- சபாஷ்! நன்றாய் சொன்னீர்கள். உலகில் எனக்கு மேல் எவன் இருக்கப்போகிறான்? எவனை இருக்க விடுவேன் நான்?

ரம்ப சந்தோஷம். ரம்ப திருப்தி. உலகம் எப்படி நடக்கின்றது?

தே-ர்:- பிரபூ! தங்கள் ஆக்கினை சொர்க்க மத்திய பாதாளம் ஆகிய மூன்று லோகங்களிலும் ராம பாணம் போல் நடந்து வருகிறது. என்றாலும்,

தே-ன்:- உம் என்ன, சங்கதியைச் சொல்லுங்கள்.

தே-ர்:- சொல்லுகிறோம். அதற்கு ஆகவே இன்று தேவரீர் ராஜ சபையை நாடி வந்திருக்கிறோம்.

யுகாந்திர காலமாக தேவர்களாகிய நாங்கள் தங்கள் ஆசயின் கீழ் யாதொரு குற்றமின்றி கவலையற்று உயிர் வாழ்ந்து வந்தோம்.

அவ்வப்போது ஏதாவது ராக்ஷதர்களாலும் அசுரர்களாலும் எங்களுக்கு ஏதாவது சங்கடங்களோ தொல்லைகளோ ஏற்படுமானால் தங்களுடைய உதவியினால் அவர்கள் அடக்கப்பட்டு நசுக்கப்பட்டு ஊழி, ஊழி காலத்துக்கும் தலை எடுக்கவொட்டாமல் செய்து மிகவும் கவலையற்று வாழ்வோம். ஆனால் இந்த காலத்தில் தலை கீழாக மாறிவிட்டது. தர்மம் குன்றிவிட்டது. வர்ணமுறை கெட்டுவிட்டது. தேவர்கள் அசுரர்கள் என்கின்ற பேதம் அழிக்கப்படுகிறது. நாங்கள் என்ன செய்வது என்பது தெரியவில்லை. ராக்ஷதர்கள் ஆதிக்கத்துக்கு வந்துவிட்டார்கள். தேவதாசி முறைகளை கூட ஒழித்து விட்டார்கள் என்றால் வேறு என்ன கொடுமை வேண்டும் பிரபு?

தே-ன்:- அப்படியா? அவர்களை ஒழிக்க நீங்கள் தவம் செய்யக்கூடாதா? யாகம் செய்யக் கூடாதா? கடுமையான சாபங்கள் கொடுக்கும் படியான உங்கள் தவ மகிமை என்ன ஆயிற்று? மித்திர தந்திர சக்தி என்ன ஆயிற்று? கேட்பதற்கே ஆச்சரியமாய் இருக்கிறதே உங்கள் குறைகள்!

தே-ர்:- தேவேந்திர பூபதியே! கலி பிறந்தது என்று கருதி அதை ஒழிக்க ஏதோதோ காரியங்கள் செய்து மனுதர்ம சாஸ்திரம் செய்து புராண இதிகாசங்கள் கற்பித்து அசுரர்களை ஏய்த்து அடக்கி ஒடுக்கி வந்தோம். அசுரர்களில் செல்வர்களாய் இருப்பவர்களின் பொருளை கோவில், குளம், உற்சவம், திதி திவசம், சடங்கு முதலிய காரியங்களால் அவைகளைக் கறந்து அடக்கி அடிமைப்படுத்தி வந்தோம். அவைகளை எல்லாம் ஒழிக்க சுயமரியாதை ராக்ஷதன் தோன்றி மூர்ச்சையாகும்படி செய்து விட்டான். இனி நாங்கள் என்ன செய்ய போகிறோம், எப்படி வாழப் போகிறோம் என்பது தெரியவில்லை. தங்களையே சரண் அடைகின்றோம்.

தே-ன்:- உங்கள் குறைகளைக் கேட்க நானும் பயப்பட வேண்டிய வனாய் விட்டேன். என்கதி என்ன ஆகும் என்பதும் கவலைப்படத் தக்கதாக வல்லவா இருக்கிறது?

தே-ர்:- ஆமாம் பிரபு! சுயமரியாதை இராக்ஷதன் தங்கள் வேகத்தையே அழித்து விட்டான். தங்கள் இருப்பையும் ஒழிக்க ஆரம்பித்து அரைவாசி இடித்தெறிந்து விட்டான்.

தே-ன்:- அப்படியா? ஆனால் நாம் சும்மா இருக்கக் கூடாது. உடனே நாம் எல்லோரும் யோசித்து ஒரு யுக்தி கண்டுபிடிக்க வேண்டும். என்னவென்றால் அசுரர்களிலேயே ஒருவனைப் பிடித்து தேவனாக்கி - ஏன்? தேவேந்திரனாகவே ஆக்கி நாம் எல்லோரும் வியாதிக்கு மருந்து சாப்பிடுவது போல் அவன் அடிபணிந்து நானுள்பட எல்லோரும் அவனுக்கு பல்லக்கு சுமந்து அவனையே தேவேந்திரனாக்கி அவன் மூலமாகவே அசுரர்களைக் கொன்று அழித்து விடலாம் கொண்டு வாருங்கள்; ஒரு நல்ல அடிமையான அசுரனைப் பிடித்து அவனுக்கு தேவேந்திர பட்டம் சூட்டுவதாகத் தெரிவித்துக்கொண்டு வாருங்கள். ஏன் என்றால் முள்ளை முள்ளினால் குத்தித்தான் எடுக்க வேண்டும். அதுபோல் அசுரர்களை அசுரர்களால் தான் ஒழிக்க வேண்டும். இந்த மாதிரிப் போர்களும் தொல்லைகளும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. யுகாந்திரகாலம் தொட்டு இது மாதிரியே அசுரர்கள் செய்து வந்ததாகவும் அதற்கு இதுபோன்ற முறையை கையாடி வெற்றி பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் இருக்கின்றன. போய் ஒரு அசுரனைப் பிடித்து வாருங்கள்.


தே-ர்:- இதோ பிடித்து வந்து விட்டோம். சரியான அடிமை; சற் சூத்திரர். தங்கள் இஷ்டம் போல் இந்த அசுர அடிமையை பயன் படுத்தலாம்.

தே-ன்:- ஏ அசுரனே! நீ உங்கள் சமூகத்தை விட்டு நம்மிடம் சரணடைந்ததாக இந்த தேவர் குழாங்கள் சொல்லுகிறார்கள். உண்மைதானா? பரிசுத்தமான அடிமையாய் இருப்பாயானால் உன்னை மகாத்மாவாக்கி தெய்வீகத்தனம் பொருந்தியவன் என்று சொல்லும்படியாக ஆக்கி 33 கோடி தேவர்களையும் உன்னைப் பணியும்படி ஆக்குவேன். நன்றி விஸ்வாசத்தோடு நம்பிக்கைத்துரோகம் செய்யாமல் நடந்துகொள்வாயா?

அசுரன்:- அப்படியே செய்வேன்.

தே-ன்:- பிரமாணமாக சத்தியமாக சொல்லு.

அ-ன்:- சத்தியமாக நான் நிபந்தனை இல்லாத அடிமையாக இருந்து இந்த தேவர்களுக்கு ஆயுள் காலமெல்லாம் தொண்டுசெய்து வருகிறேன்.

தே-ன்:- சரி, இன்று முதல் இந்த அடிமையை நாம் ஏற்றுக் கொண்டோம். இவனுக்கு மகாத்மா பட்டமளித்து இருக்கிறோம். இன்று முதல் மகாத்மா என்று அழைக்கப்படவேண்டியது. இந்த அடிமையை ஆயுதமாககொண்டு அசுரக் கூட்டங்களை அழித்து நமது மநு ஆசயை புனருத்தாரணம் செய்யக் கடவீர்கள். நான் சென்று வருகிறேன்.

தே-ர்:- பிரபு இனியும் பலர் இப்படிப் பட்டவர்கள் வேண்டுமா?

தே-ன்:- தேவலோகம் பூராவுக்கும் இவனை நியமித்துள்ளோம். மற்றபடி அவரவர்கள் எல்லைக்கு அவரவர்கள் நியமித்துக்கொள்ள வேண்டியது. அந்தப்படி நீங்கள் நியமித்துக்கொள்பவர்களை விபீஷணர் போல் கருதி தேசியவாதிகள் என்னும் பட்டம் கொடுத்து அவர்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தே-ர்:- இப்படிப்பட்ட இவர்கள் தவிர ஆங்காங்கு வீதிவீதியாய் சுற்றி தேவரீருக்கும் எங்களுக்கும் ஜே போடவும் விருதுகள் பிடிக்கவும் ஆள்கள் வேண்டுமே.

தே-ன்:- இதற்குத்தானா ஆள் கிடையாது? தெருவில் சோமாறியாய் திரியும் சோற்றுக்கில்லாத ஆள்களைப் பிடித்து அவர்களுக்கு தேசிய வீரர்கள், ஆஞ்சனேய வீரர்கள் என்று பட்டம் கொடுத்து கையில் கொடி விருதுகள் கொடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தே-ர்:- தாங்கள் சொன்ன யோசனைகள் மிகவும் தங்கமான யோசனைகள். அப்படியே செய்கிறோம். ஆனால் ஒரு குறையை எப்படி நிவர்த்திப்பது? எங்களுக்கு தெரியவில்லையே.

தே-ன்:- என்ன சொல்லுங்கள் அதற்கு தகுந்த உபாயம் சொல்லுகிறேன்.

தே-ர்:- பிரபு! சோமாறி கூட்டங்களை தேசிய வீரர்கள் ஆக்கச்சொன்னீர்கள். ஆனால் அவர்களுக்கு சாப்பாட்டுக்கு வழி?

தே-ன்:- இதுதானா கஷ்டம்? நம் சபையில் உள்ள ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய பெண்களை விட்டு ஆடவும் பாடவும் செய்து அதற்கு ஆக டிக்கட் போட்டு வசூல் செய்யுங்கள். மற்றும் நமது ஸ்பரிசம் பட்டாலே மோக்ஷம் கிடைக்கும் என்று கருதி இருக்கும் நடனப் பெண்கள் அடியார் பெண்கள் ஆகியவர்களை அழைத்துக்காட்டி, அவர்கள் மூலமும் பணம் வசூல் செய்யுங்கள். இவர்களை யாராவது இழிவாய்ப் பேசினால் தேவர்கள் வீட்டு நங்கையர்களை ஆடவும் பாடவும் செய்து வசூல் செய்யுங்கள் - இவ்வளவும் போராவிட்டால் தேவர்களிலேயே உள்ள சங்கீத சிகாமணிகளைக் கொண்டு பாடச்செய்து பணம் வசூல் செய்யுங்கள். இவைகூடவா உங்களுக்கு தெரியாது?

தே-ர்:- பிரபு! இந்தக் கூட்டத்துக்கு வேறு பணம் கொடுக்க வேண்டுமே! அதற்கென்ன செய்வது?

தே-ன்:- இதுதானா மகா கஷ்டம்? வைரக் கற்கள் பதித்த தங்கப் பதக்கம் (மெடல்) தருவதாய் கூப்பிட்டு பாடச் செய்து பிறகு பித்தளைக்கு முலாம் பூசிக்கொடுத்து விரட்டி விடுங்கள்.

தே-ர்:- சரி பிரபுவே! அவன் கூப்பாடு போட்டால் என்ன செய்வது?

தே-ன்:- எவனாவது கூப்பாடு போட்டால் அவனை ஒழிக்கத்தானா தெரியாது. நம்மிடமுள்ள வஜ்ஜிராயுமாகிய "தேசத் துரோகி" என்கின்ற பட்ட ஆயுதம் இருக்கிறதே அதைக்கொண்டு அவர்களை ஒழித்து விடுங்கள்.

தே-ர்:- சரி, பிரபு அப்படியே செய்கிறோம். இன்னும் பல கஷ்டங்கள் இருக்கின்றன. அதையும் தெரிவித்து பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் நித்திய கர்ம அனுஷ்டானங்களுக்கு நேரமாய்விட்டது. மறுபடியும் வருகிறோம். எங்களுக்கு விடை கொடுங்கள்,

தே-ன்:- நல்லது போய்வாருங்கள். அசுரர்களை ஒழிக்க - அழிக்க அவர்களைக் கொண்டே அவர்களை அழிக்க வேண்டும். ஆதலால் நீங்கள் நேரில் கலந்து கொள்ளாதீர்கள் போய் வாருங்கள்.

முதல் காஷி முடிந்தது. அடுத்த காஷி ஒரு நாளைக்கு வரும்.

------------------------ சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய உரையாடல் -குடி அரசு 25.07.1937