Search This Blog

27.8.09

திருப்பதியில் பக்தர்களின் காணிக்கை மாயமா? திருட்டா?






கோயில்களிலேயே பணக்காரக் கோயில் எது?

திருப்பதி ஏழுமலையான் கோயில்தான் என்று யாரைக் கேட்டாலும் தயக்கமில்லாமல் பதில் சொல்லிவிடுவார்கள்!

ஏழை எளிய ஜனங்கள் மட்டுமல்ல; கோடீஸ்வரர்களும் லட்சாதிபதிகளும் கூட திருப்பதி கோயில் உண்டியலில் காணிக்கை என்ற பேரில் நகைகளையும் பணத்தையும் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார்கள்!

இந்த மாதத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த கோடீஸ்வர முதலாளி ஒருவர் திருப்பதி உண்டியலில் ஒண்ணரைக் கிலோ தங்கத்தைக் காணிக்கை யாக்கினார் என்ற செய்தி வந்தது. இப்படி,

எல்லோரும் கடவுள் நம்பிக்கையில் திருப்பதி உண்டியலில் நகைகளாகவும் தங்கமாகவும் ரூபாய் நோட்டுக் கட்டுகளாகவும் செலுத்தும் காணிக்கைகள் திருப்பதி கோயிலில் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன, யாருக்குப் பயன்படுகின்றன என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் அவ்வப்போது ஏடுகளில் வெளி வந்தபடியேதான் இருக்கின்றன! லட்டு தயாரிப்பு - லட்டு வியாபாரத்தில் கூட எத்தனை முறைகேடுகள், மோசடிகள் நடைபெறுகின்றன என்று முன்பு ஒரு முறை செய்தி வந்தது.

இப்போது இன்று (23.8.2009) வந்த செய்தியில் - ஏழுமலையானுக்கு காணிக்கை அளிக்கப்படும் தங்க நகைகள் - வைர மாலைகள் - தங்கக் கிரீடங்கள் - வைரக்கிரீடங்கள் எல்லாம் எப்படி சாமார்த்தியமாகக் களவாடப்படுகின்றன! கண்டுபிடிக்கப்பட்டால் - அது எப்படி சரி செய்யப்படுகிறது என்பது பற்றி ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது! அதிலே கூட

திருப்பதி கோயில் நகைகள் திருட்டு என்று குறிப்பிடப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது!

திருப்பதி கோயிலில் நகைகளைத் திருடுபவர்கள் அல்லது மாயம் செய்தவர்கள் பல லட்சக்கணக்கிலான மதிப்புள்ள நகைகளை மாயம் செய்து விட்டு எப்படி சில நூறு ரூபாய்களை இழப்பீடாக செலுத்திவிட்டு தப்பிவிடுகிறார்கள் என்பதை அந்தச் செய்தி விவரமாகத் தந்திருக்கிறது!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நகைகள் மாயமானதாகக் கூறி, அவற்றுக்கு குறைந்த அளவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களுக்கு சில ஆயிரங்களே ஈடு கட்டியிருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானின் நகைகள் விவரம் குறித்து தகவல் தரவேண்டும் என்ற பொதுநல வழக்கின் அடிப்படையில் தேவஸ்தானத்துக்கு அய்தராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில், தேவஸ்தான அதிகாரிகள், திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட எல்லா கோயில்களில் உள்ள நகைகள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

சுவாமி நகைகள் பாதுகாப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்ப தாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு வரையில் ஏழுமலையான் நகைகள், அர்ச்சகர்களின் பாதுகாப்பில் இருந்தன. அதன்பிறகு விஜிலென்ஸ் அதிகாரிகள், தனி கமிட்டி பொறுப்பாளர்கள் கண்காணிப்பில் நகை விவரங்கள் ஆண்டுதோறும் பதிவு செய்து வந்தனர். விலை உயர்ந்த கோமேதகக் கற்கள் வைரக் கீரிடத்தில் இருந்து உதிர்ந்து காணாமல்போய் விட்டதாகக் கூறி அதற்கு தேவஸ்தான் சார்பில் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மேலும் ஒரு கோமேதக் கல் மாயமாகி விட்டதாகக் கூறி அதற்கு ரூ 200 மட்டுமே செலுத் தப்பட்டுள்ளது. ரத்தினம் பதித்த தங்கச் சங்கிலியில் பதித்திருந்த கோமேதகக் கற்கள் உதிர்ந்துவிட்டதாகக் கூறி, ஒவ்வொன்றுக்கும் ரூ.50 வீதம் செலுத்தியுள்ளனர். மற்றொரு கிரீடத்தில் இருந்த 5 வைரக் கற்கள் மாயமானதாக் கூறி 50 ரூபாய் மட்டுமே செலுத்தப்பட் டுள்ளது. மூலவருக்கு அணிவிக்கப்படும் வைரக் கிரீடத்தில் ஒரு வைரம் மாயமாகிவிட்டதாகக் கூறி, அதற்கு ரூ 10 மட்டுமே செலுத்தியுள்ளனர். மேலும் 13 தங்க நகைகள் தொலைந்து போனதாகக் கூறி 23,850 ரூபாய் மட்டுமே ஈடுகட்டப் பட்டதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மாயமானதாகக் கூறப்படும் இந்த 13 நகைகள் மட்டும் பல லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இவை தவிர 29 கிலோ எடையுள்ள 15 வெள்ளிப் பொருள்கள் காணாமல் போய்விட்டன என கணக்கு காண்பித்துள்ளனர். மேலும் 36 வெள்ளிப் பொருள் கள் உபயோகப்படுத்தாமல் வைத் திருந்ததால் அதன் எடை 411 கிராம் குறைந்துள்ளது எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. மூலவரின் வைரைக் கிரீடத்தில் இருந்த 2 தங்க தாமரைகள் மாய மானதாக ரூ 8 ஆயிரம் ஈடு கட்டி உள்ளனர். கடந்த 2007 மார்ச் 16 ஆம் தேதி 16 பவளம் பொறித்த டாலர் வைத்த தங்க செயினில் டாலர் மட்டும் மாயம் எனக்கூறி ரூ 10 மட்டுமே செலுத்தி உள்ளனர். ரத்தினக் கற்கள் பதித்த சூரியன், சந்திரன் தங்க ஜடை பில்லைகள் மாயமானதாக ரூ 300 ஈடு கட்டி உள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுக்கு சில ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளனர்.

என்கிறது அந்தச் செய்தி.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமாகிவிடுமாம் - 200 ரூபாய், 50 ரூபாய், 60 ரூபாய், 10 ரூபாய் என்று இழப்பீட்டுத் தொகை செலுத்துவார்களாம்!

புனிதமானது என்று கூறப்படும் கோயிலில் நகைத் திருட்டுகூட- நகை மாயம் என்ற பெயரில் புனிதம் அடைந்துவிடும் அதிசயம் அல்லது அருள்மிகு செய்தி இது!

திருப்பதி மகாத்மியம் இத்தோடு முடிந்துவிடவில்லை. இன்னொரு செய்தி - அதுவும் திருப்பதி செய்தி.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோயிலில் 16 கிலோ எடையுள்ள 2 தங்க மாலைகள் காணாமல் போயுள்ளது தெரியவந்தது. (காணாமல் போகும் - மாயமாகும் ஒருபோதும் அது திருட்டு என்று ஆகாது அதுதான் ஏழுமலையானின் சட்டச் சொற்கள்.)

கண்காணிப்பு அதிகாரிகள், கோயிலின் அர்ச்சகர் வெங்கட்ரமண தீட்சிதரிடம் விசாரிக்க முடிவு செய்தார்கள். இது தெரிந்ததும் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

மருத்துவமனையில் விஜிலென்ஸ் அதிகாரிகள் வெங்கட்ராம தீட்சிதரை விசாரித்தார்கள். வெங்கட்ரமண தீட்சிதர் மட்டும் திருடினேன் என்றா வாக்குமூலம் கொடுப்பார்?

திருப்பதி கோயிலின் அகராதியில் காணாமல் போகும், மாயமாகுமே தவிர திருட்டுப்போகுமா?

எனது மகள் திருமணச் செலவுகளுக்காக சுவாமியின் நகைகளை அடகு வைத்தேன் என்றார் அவர்!

காணாமல் போய்விட்டது, மாயமாகி விட்டது என்று சொல்லியிருந்தால் அவரிடம் 50 ரூபாயோ 100 ரூபாயோ இழப்பீட்டுத் தொகை வாங்கிக் கொண்டு கணக்கை நேர் செய்து விட்டிருப்பார்களோ?

அவர் அடகு வைத்தேன் - என்று சொன்னதாலோ என்னவோ அவரைக் கைது செய்துவிட்டார்கள். அவருக்கு உடந்தையாக இருந்ததாக இரு செக்யூரிட்டி ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து விட்டார்கள். திருப்பதி கடையில் அடகு வைக்கப்பட்ட அந்த நகைகளை சென்னையில் உள்ள ஓர் அடகுக் கடையில் இருந்து மீட்டுவிட்டார்கள்காணாமல் போகும், மாயமாகுமே - இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கும் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களுக்கு என்ன தோன்றும்?


திருப்பதி சென்று பக்த கோடிகள் நேர்த்திக் கடன் என்ற பேரால் மொட்டை அடித்துக் கொள்வதுண்டு பட்டை நாமமும் தரித்துக் கொள்வதுண்டு. ஆனால் பக்தர்கள் தந்த காணிக்கைப் பொருள்களை அபகரித்துக் கொண்டு பக்தர்களுக்கு இலவச மொட்டையும் இலவச நாமமும் போடும் காரியங்கள் அல்லவா திருப்பதியில் நடைபெறுகிறது! என்று நினைப்பார்கள் பக்தர்கள். ஆனால்,

இத்தனையையும் பார்த்துக் கொண்டு சகல சக்திகளும் படைத்த திருப்பதி ஏழுமலையான் சும்மாதானே இருக்கிறார். விஜிலென்ஸ் அதிகாரிகளும், போலீசாரும்தான் பிடிக்கிறார்களே தவிர திருப்பதி வெங்கடாசலபதி யாரையும் பிடித்ததாக தண்டித்ததாக செய்தி எதுவும் வருவதில்லையே; ஏன் என்று எந்த ஒரு பக்தராவது நினைப்பாரா?


------------------ நன்றி: "முரசொலி", 24.8.2009 -இல் "சின்னக் குத்தூசி" அவர்கள் எழுதிய கட்டுரை

இந்துக்கள் கலாச்சாரத்தில் ஓரின சேர்க்கைக்கு இடம் இல்லையா?




ஹரிஹரபுத்திரன்

ஓரினச் சேர்க்கையைப்பற்றி நாடெங்கும் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. டில்லி உயர்நீதிமன்றம் இதனை அங்கீகரித்தது என்றவுடன், பிரச்சினை மேலும் சூடாகி, உச்ச கொதி நிலையை அடைந்துவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் பக்பட் மாவட்டம் பாரட் நகரில் உள்ள ஒரு கோயிலில் இரு இளைஞர்கள் சென்று தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், மாங்கல்யம் தந்துனானே என்ற கல்யாண மந்திரத்தைச் சொல்லி கோயில் அர்ச்சகரை கல்யாணத்தை நடத்தி வைக்குமாறும் கேட்டுக்கொண்டனராம்.

அர்ச்சகர் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். வாக்குவாதம் சூடு பிடித்ததாம். அந்த அர்ச்சகரை அடிக்கப் போகும் அளவுக்கு அந்த இளைஞர்கள் நடந்துகொண்டனராம். கூட்டம் கூடவே அந்த இரு இளைஞர்களும் நைசாகத் தப்பி விட்டனராம். இப்படியாக ஒரு தகவல் நேற்றைய மாலை ஏட்டில்.

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. நம் இந்துக் கலாச்சாரம் சீரழிவதை அரசு தடுக்கவேண்டும் என்று கோயில் அர்ச்சகர் குமுறினாராம்.

ஓரினச் சேர்க்கை சரியா, சரியில்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்துக் கலாச்சாரம் அதனால் சீரழிவதாக ரொம்பவும் கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்களே, அது எப்படி?

இந்துக்கள் கலாச்சாரத்தில் ஓரின சேர்க்கைக்கு இடம் இல்லையா? அது என்ன அப்படி ஒரு இந்துக் கலாச்சாரம்?

இந்துக் கடவுளான அய்யப்பன் சங்கதி என்ன? பத்மாசுரன் என்ற அசுரன் சிவனிடம் வரம் கேட்டானாம்; எப்படிப்பட்ட வரம்? நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை பஷ்பமாகிட (எரிந்துவிட) வேண்டும் என்பதுதான் அந்த வரம். சிவனும் வரம் கொடுத்துவிட்டான்; சரி, வரம் வாங்கியாகிவிட்டது. பரீட்சித்துப் பார்க்கவேண்டாமா? வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கையை வைக்க விரும்பினானாம். கடைக்கண் பார்வையால் எரிக்கும் சக்தி வாய்ந்த கடவுள் என்று சொல்லப்படும் சிவன் ஓட்டம் பிடித்தானாம். விடவில்லை பத்மாசுரன்; துரத்தினான்; துரத்திக்கொண்டே ஓடினான்.

தன் மைத்துனன் ஆபத்தில் சிக்கிக்கொண்டதைப் பார்த்த விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து பத்மாசுரன் முன் வந்து நின்றானாம். போன காரியத்தை விட்டு விட்டு மோகினியின் அழகில் மயங்கி நின்றானாம். தன்னை அனுபவிக்கவேண்டுமானால், தலையைத் தேய்த்துக் குளித்துவிட்டு வரவேண்டும் என்று நிபந்தனையாம். பத்மாசுரன் தன் தலையில் கைவைத்தபோது, சிவன் வரத்தின் வலிமைப்படி எரிந்துபோய் விட்டானாம்.

அதன்பின், பத்மாசுரனுக்கு பயந்து அய்வேலங்காயில் ஒளிந்துகொண்டிருந்த சிவனை வெளியில் வர அழைத்தானாம். விஷ்ணுவாகிய அந்த மோகினியின் அழகில் மனதைப் பறிகொடுத்துக் கூடினானாம். ரிஷிப் பிண்டம் இராத்தங்காதாம் உடனே ஒரு குழந்தை பிறந்ததாம். அவன்தான் ஹரிஹரபுத்திரனாகிய அய்யப்பன் (ஹரி என்றால் விஷ்ணு; அரன் என்றால் சிவன்). அடேயப்பா, இந்தக் கடவுள்களுக்கு இந்து மதத்தில் எப்படிப்பட்ட மரியாதை!


சிவனும் ஆண், மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவும் ஆண். இருவரும் கூடி பிள்ளை பெற்றுள்ளார்களே. நாரதன் என்ற ஆணும், கிருஷ்ணன் என்ற ஆணும் கூடி 60 பிள்ளைகள் பெற்ற புராணமும் உண்டே! இந்த யோக்கியதையில் உள்ள இந்து மதத்தின் கலாச்சாரம் ஓரினச்சேர்க்கையால் கெட்டுப் போய்விடுமாம்!

ஹி.... ஹி... வாயால் சிரிக்க முடியவில்லையே!

---------------- மயிலாடன் அவர்கள் 27-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

ஜெயேந்திர சரஸ்வதிகளிலிருந்து சோ வரை யாருக்கும் வெட்கமில்லையே!


திராவிடர் கழகம் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறதா? கிறித்து,இஸ்லாம் மதங்களை விமர்சிக்கவில்லையா?

சங்கராச்சாரிகள் தாழ்த்தப்பட்டவகளுக்காக பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?

சங்கராச்சாரியார் பேச்சைகேட்டு துக்ளக் “சோ” ஆள்காட்டி வேலை பார்த்தது உண்மையா?

சங்கராச்சாரி வேண்டிக் கொண்டதால்தான் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு காய்ச்சல் வந்ததா?

இவ்வளவுக்கும் பிறகும் பெரியார் தொண்டர்களின் பெருந்தன்மை எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளவும்,

இது போல் பல உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ள


("எதிரொலி" நாளேட்டில் அன்றாடம் சுயமரியாதைக் கருத்துக்களை கட்டுரைகளாக வடித்து வரும் சின்னக் குத்தூசி - ஞானி அவர்கள் - கஞ்சி சங்கராச்சாரியை நேரில் கண்ட கருத்தாழ மிக்க பேட்டி)

1983 ஆம் ஆண்டு உண்மை நாடுவோர் வெளியிட்டுள்ள சங்கராச்சரியாரின் முகத்திரையை கிழித்தெறிந்த “சின்ன சங்கராச்சாரி –யார் ?” என்ற நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு பதிவு செய்யப் படுகிறது. நமது வாசகர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிய வேண்டுகிறோம் -

நன்றி


*************************************************************************************
சின்ன சங்கராச்சாரி - யார்?


பகுதி -5




ஞாநியின் பதில்:

("எதிரொலி"யில் வெளியான சங்கராச்சாரி சின்னக்குத்தூசி சந்திப்பு பற்றிய கட்டுரைகள் தொடர்பாக துக்ளக் பத்திரிகையின் 15-4-83 இதழில் ஒருவாசகர் கடிதமும், ஆசிரியர் சோவின் விளக்கமும் வெளியிடப்பட்டிருந்தன. இதில் கூறப்பட்டிருந்த பொய்களை மறுத்து 15-4-83 அன்றே ஞாநி சோவுக்கு ஒருகடிதம் எழுதியும் அதை அவர் துக்ளக்கில் இதுவரை வெளியிடவில்லை. எனவே கடிதவிவரம் இங்கே வெளியிடப்படுகிறது.)

டியர் மிஸ்டர் சோ,

காஞ்சி சங்கராச்சாரியார் சின்னக் குத்தூசி பற்றி "எதிரொலி"யில் வெளியான கட்டுரையை ஒட்டி எழுந்துள்ள ஒரு சர்ச்சை பற்றி 15-4-83துக்ளக்கில் எழுதியிருந்ததைப் படித்தேன்.

இந்த விவகாரத்தில் நீங்கள் நடந்து கொண்டுள்ளவிதம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

சங்கராச்சாரியார் சந்திப்பு பற்றி 3-4-83ல் சின்னக் குத்தூசியும், 4-4-83 அன்று நானும் எதிரொலியில் எழுதிய கட்டுரைகள் வெளிவந்த ஓரிருநாட்கள் கழித்து புகைப்படக்கார நண்பர் சுபா சுந்தரம் போன் செய்ததையும் அதையடுத்து நானும் சின்னக் குத்தூசியும் உங்களுக்கு போன் செய்து பேசியதையும்உங்களுக்கு நினைவுபடுத்தவும் உங்கள் வாசகர்களுக்கு தெரியப்படுத்தவும் விரும்புகிறேன்.

சுபா சுந்தரம் போனில் என்னிடம் "சோ பலமுறைகள் என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டார். 'சுவாமிகள் தியாகராஜனிடமும் (சின்னக் குத்தூசி)ஞாநியிடமும் அப்படித்தான் சொன்னாரா' என்று ரொம்ப அப்செட் ஆகிக் கேட்டார். நீங்கள் அவரோடு பேசுங்கள்" என்று சொன்னார். உடனே நான்போன் செய்து உங்களோடு பேசினேன். அப்போது ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தினேன். ஸ்வாமி சொன்ன மாதிரி நீங்கள் யாரும் தயார் செய்து அனுப்பக் கூடிய ஆளல்ல. உங்களோடு எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் நானும் தியாகராஜனும் நிச்சயம் சுவாமிகள் சொன்னதை இப்போதும் நம்பவில்லை. விநோ அபவுட் யுவர் இண்டிபெண்டண்ட் ஆட்டிட்யூட் என்று நான் சொன்னதற்கு நன்றி தெரிவித்தீர்கள். "இப்போது நான் ஒரு தர்மசங்கடமான நிலையில்இருக்கிறேன். சுவாமிகள் சொன்னது சரியல்ல என நான் மறுத்தே ஆக வேண்டும். பட் அய் ஹேவ் ரெஸ்பக்ட் பார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன்" என்றீர்கள்."என்ன செய்வது? உண்மைதான் முக்கியம்" என்று நான் சொன்னேன். "உங்களையும் தியாகராஜனையும் தவிர யாராவது அதை எழுதியிருந்தால் நான்நம்பியிருக்க மாட்டேன்" என்று நீங்கள் சொன்னீர்கள். பிறகு தியாகராஜனிடமும் இதுபற்றிப் பேசினீர்கள்.

இப்போது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உங்களிடம் தெரிவித்த பொய்யை வெளியிட்டிருக்கிறீர்கள்.

அது அவருடைய ஸ்டேட்மெண்ட். வெளியிடுவது முறைதான். அதைத் தொடர்ந்து, உங்கள் கமெண்ட் வேறு. நானும் தியாகராஜனும் பொய் சொல்லமாட்டோம் என்று நீங்கள் நினைப்பதாக போனில் எங்களிடம் சொல்லிவிட்டு, நாங்கள் பொய் சொல்லியிருப்பதாக அர்த்தம் வரும்படி பத்திரிகையில்எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய ரெஸ்பெக்ட் பார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன் மேலோங்கியதில் உண்மை இரண்டாம் பட்சமாகிவிட்டது.

ஆசாரிய சுவாமிகளைச் சந்தித்தபோதே கட்டுரையை வெளியிடாமல் திடீரென்று கலாச்சார விழாவுக்குப் பிறகு வெளியிடுவானேன் என்று அவர் சார்பில்கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இதற்கான பதிலை அன்றைக்கு நாம் போனில் பேசியபோதே தியாகராஜன் உங்களிடம் தெரிவித்தார். சந்திப்பு முடிந்த ஓரிருதினங்களில் தியாகராஜன் ஏஜென்ஸி விஷயமாக டூர் போய்விட்டார். ஒரு மாத காலம் அவர் சென்னையில் இல்லை. அதனால்தான் அப்போதே வெளியிடமுடியாமல் போயிற்று.

தவிர, சுவாமிகள் நடத்திய விழாவில் பங்கேற்பதாக அழைப்பிதழில் அறிவிக்கப்பட்ட அமைச்சர் காளிமுத்து செல்லவில்லை. இந்த நிலையில் அடுத்த நாளேசுவாமிகள் திடீரென்று மறுநாள் முதலமைச்சர் (அழைப்பிதழில் குறிப்பிடப்படாதவரோ) வரப்போவதாக நிருபர்களிடம் அறிவித்தார். இப்படியாக சுவாமிகள்பாலிடிக்ஸ் செய்கிறார் என்ற நிலையில் அவர் எங்களோடு பேசியவற்றை எம்.ஜி.ஆர். விழாவுக்கு வரும் நாளன்று வெளியிடுவது பொருத்தமென்பதால்3-4-83 அன்று சின்னக்குத்தூசியின் கட்டுரை வெளியிடப்பட்டது. நடத்தது அவ்வளவுதான்.

"பிரசுரத்துக்காக அல்லாமல் சில கருத்துக்களை எதிரொலியின் பிரதிநிதிகளிடம் பேசிக் கொண்டிருந்ததாக சுவாமிகள் கூறினார்" என்றுஎழுதியிருக்கிறீர்கள். இது சுத்தப் பொய். பிரசுரிப்பதற்காக அல்ல என்று எதையும் சுவாமிகள் சொல்லவில்லை. அவருடைய தூதர் கார்ப்பரேஷன் பேங்க்சீனிவாசன் இதை அறிவார்.

குண்டுராவ் அருண்ஷோரியை சாப்பாட்டுக்கு அழைத்தபோது சாப்பிடும் வேளையில் இருவரும் சம்பாஷித்ததை அருண்ஷோரி சண்டே இதழில் வெளியிட்டபோதுயாரும் ப்ரைவேட் கான்வர்சேஷன் என்று எதிர்த்துப் பேசவில்லை. குண்டுராவ் மடாதிபதியாக இருந்தால் பேசி இருப்பார்களோ என்னவோ? அவ்வளவுஏன்? ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளைக் காண திருப்பூர் கிருஷ்ணனும் வலம்புரி ஜானும் பரணீதரனும், மணியனும்(!) போகிற வேளைகளில் யார் யாரோபக்தர்கள் சுவாமிகளைச் சந்திக்க வருவதையும் அவர்கள் தங்கள் பிரச்சனைகளைக் கூறுவதையும் அவற்றுக்கு சுவாமிகள் கூறும் அருளாசிகளையும்அப்படியே கண்டு மெய்சிலிர்த்து, நெகிழ்ந்து நெஞ்சுருகி எழுதுகிறபோது பக்தர்களின் ப்ரைவேட் பிரச்சனைகள் அச்சில் எழுதுவதை யாரும் விமர்சிப்பது இல்லை.சுவாமிகளைப் பாராட்டி அவரது இமேஜை பம்ப் வைத்துக் காற்றடித்து உயர்த்தும்போது வாய்மூடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு மெடர்னிடிடாக்டரும் அபத்தம் என்று உடனடியாகச் சொல்லக் கூடிய விதத்தில் பிறக்கும்போதே கைகளைக் கூப்பியவாறு பிறந்த குழந்தை ஜெயேந்திரசரஸ்வதிகள் என்று உங்கள் சகோதர ஏடு எழுதுவதும் இமேஜூக்கு பம்ப் அடிக்கிற சமாசாரம்தான். இதைப்பற்றி உங்கள் பேனா எழுதாது.ஆனால் சுவாமிகளின் சுயரூபத்தை அம்பலப்படுத்தும்போதும் மட்டும் "பிரசுரத்துக்காக அல்லாமல்" என்று புதுக்கரடி விடுகிறது.

3-4-83 எதிரொலியில் சின்னக் குத்தூசியின் கட்டுரை வெளியான மறுநாள் சுவாமிகளின் தூதர் சீனிவாசன் போன் செய்தார். கட்டுரையாளர் தியாகராஜனுடன் பேசினார். "என்ன இப்படி திடீர்னு பப்ளிஷ் பண்ணீட்டிங்க" என்று கேட்டார். "பேசினதைத்தானே போட்டிருக்கிறது. பேசாததைப்போடவில்லை அல்லவா" என்றார் தியாகராஜன். "ஆமாமா பேசினது தான் வந்திருக்கு. தப்பா எதுவும் இல்லை. மைல்டாதான் இருக்குன்னுபெரியவா சொன்னா. ஞாநியோட கட்டுரை எப்படி இருக்கும்? அதுவும் மைல்டாதானே இருக்கும்?" என்று சீனிவாசன் கேட்டார். "எனக்குத்தெரியாது. நான் அதை இன்னும் படிக்கல" என்று தியாகராஜன் சொன்னார். என் கட்டுரை வந்தபிறகு சீனிவாசன் தொடர்பே கொள்ளவில்லை.

"வீணாக அவருடைய (சுவாமிகளுடைய) பெயரை சர்ச்சைக்குரிய வகையில் இழுத்திருப்பது வருந்தத்தக்க விஷயம்" என்று நீங்கள் தீர்ப்பு வேறு வழங்கிஇருக்கிறீர்கள்.

அவரை நாங்கள் எங்கே சர்ச்சைக்கு இழுத்தோம்?

கடந்த 6 மாத காலமாக எதிரொலி நிர்வாக இயக்குநர் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனிடம் அவர் கணக்கு வைத்துள்ள கார்ப்பரேஷன்பேங்க் மேனேஜர் சீனிவாசன், எதிரொலியில் சங்கராச்சாரியார்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதை தேவராஜன்,சின்னக் குத்தூசியிடம் சொல்லிவிட்டு, "தகவலுக்காகச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்" என்பார். முதல் நான்குமாத காலம் இப்படிநடந்தது. பிறகு சுவாமிகளின் தூதர் சீனிவாசன் தன் அப்ரோச்சை மாற்றினார்.

"சின்னக்குத்தூசியை ஒருதடவை பார்த்து பேசச் சொல்லிப் பெரியவர் கேட்டுண்டார். கொஞ்சம் அவரை கன்வின்ஸ் பண்ணி வரச் சொல்லுங்க" என்று தேவராஜனிடம் சொல்ல ஆரம்பித்தார். இது 2 மாத காலம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. சின்னக்குத்தூசி ஜெயேந்திரரை சந்திக்க ஆர்வம்காட்டவில்லை.

பிறகு தேவராஜன் ஒருநாள், "சார், போய்ப் பார்த்துவிட்டு வந்துடுங்க. பிரஷர் தாங்க முடியலே. நம்ம இருக்கிற இருக்கப் போகிறோம்;பார்க்கிறதுனாலே ஒண்ணும் தப்பில்லே" என்றார். இதன் பிறகே சின்னக் குத்தூசி ஒப்புக் கொண்டார்.

அதன்படி அவரை சீனிவாசன் அழைத்துச் சென்றபோதுதான் நான் தற்செயலாக உடன் சென்றேன்.

ஆக, சர்ச்சைக்கு சுவாமிகளை இழுத்தது யார்? அவர்தான் தன்னைப் பற்றிய விமர்சனங்களை விரும்பாமல் விமர்சகரின் மனதை மாற்ற முயற்சி செய்தார்.

அப்படிப்பட்ட ஒரு துறவிதான், உங்களைப் பற்றிச் சொன்னதை, இப்போது இல்லை என்று மறுக்கிறார். அவர் கூறியவிதம் கூட இன்னும் பசுமையாக எனக்கு நினைவிருக்கிறது.

"மத்த மதங்களை ஏன் டி.கே. விமர்சனம் பண்றது இல்லே? இதைக் கேட்டா மழுப்பிடறீங்க. வீரமணியை சோ பேட்டி கண்டாரோ, இல்லியோ?அப்பவும் அவனால் இதுக்கு பதில் சொல்ல முடியலியே!" இந்த இடத்தில் ஒரு கணம் நிறுத்திவிட்டு, முகத்தில் குதூகலப் புன்னகையோடு, சுவாமிகள் அடுத்துச்சொன்ன வாக்கியங்கள் இவைதான். "நான்தான் சோவை அதுக்கு தயார் பண்ணி அனுப்பிச்சேன். என்னென்ன கேக்கணும்னு ரெடி பண்ணி அனுப்பிச்சேன்.அவனால ஒண்ணுத்துக்கும் பதில் சொல்ல முடியலியே!"

இவ்வாறு தான் சொன்னதை, இல்லை என்று, இப்போது மறுக்கிற சுவாமிகள், 3-4-83 முதல் இன்றுவரை எதிரொலிக்கு மறுப்புஅனுப்பவில்லை. தூதனுப்பத் தெரிந்தவருக்கு நேரடியாக மறுப்பனுப்பத் தெரியாதது ஏன்? உங்களைப் பயன்படுத்திக் கொள்வது ஏன்?


இப்படிப்பட்ட ஒரு மனிதர், உங்களிடம் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வேறு கூறியிருக்கிறார். நீங்கள் அதை அப்படியே வெளியிட்டு, அதன் அடிப்படையில்உங்கள் மேலான தீர்ப்புகளையும் வழங்குகிறீர்கள்.

அவர் சொல்லாதவற்றைச் சேர்த்தோமாம். சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டுவிட்டோமாம். சம்பாஷணைகளின் சில பகுதிகளை முற்றிலும்விட்டுவிட்டோமாம்.

இந்த மூன்றில் முதல் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். அவர் சொல்லாதவை என்னென்னவென்று விவரமாக தெரிவிக்கட்டும். அடுத்தஇரண்டு குற்றங்களை செய்திருப்பது உண்மைதான். ஒப்புக் கொள்ளுகிறேன்.

அவர் சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டுவிட்டது உண்மைதான். அவை என்ன தெரியுமா? மணியனைப் பற்றி அவர் கூறின அசலானவாக்கியங்கள்தான். "அவனைப்பத்தி என்னண்ட கேட்காதீங்கோ. அவனுக்கு ஆத்மாவும் கெடயாது. ஆத்மார்த்தமும் கெடயாது. அவன் வியாபாரி.அவனுக்கும், எனக்கும் ஸ்நானப் பிராப்திகூட கிடையாது" என்றார் சுவாமிகள். மணியனுக்கு சுவாமிகள் அங்கீகாரம் உள்ளதாகப் பலரும் கருதுவதை தவறென்று தெளிவுபடுத்த இதைப் பொது மேடையிலும் சொல்லி விடுங்களேன் என்று நான் கேட்டபோது வெறும் சிரிப்பே பதில்! பொது மேடையில் கூறமறுத்தால் மணியனுக்கு சுவாமிகள் உடந்தை என்றே நான் கருத வேண்டி வரும் என்ற போது அதற்கும் ஒரு சிரிப்பு. பதில் கூற முடியாமல் நழுவுவது யார்?இந்தப் பகுதியை நாங்கள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வெளியிடவில்லைதான்.

இதேபோல, உண்மையான பிராமணன் யார் என்ற சர்ச்சையை சின்னக்குத்தூசி எழுப்பியபோது சுவாமிகள் அருகிலிருந்த சீனிவாசனைக் காட்டிப் பேசியதைநாங்கள் வெளியிடவில்லை. "இவன் மீசையும் கிராப்பும். இவனை யார் பிராமணன்னு ஒத்துப்பா? 20 வருஷம் முன்னாடி இந்த மாதிரி இருந்துண்டு என் முன்னாலவர முடியுமோ? எல்லாம் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா. அப்படித்தான் இருக்கும்" என்றார் சுவாமிகள். உடனே சீனிவாசன் வெட்கத்தோடுநெளிந்தார். இந்தப் பகுதியை நாங்கள் வெளியிடவில்லை.

இதேபோல வெளியிடாமல் விட்ட இன்னொரு பகுதி சின்னக்குத்தூசி தியாகராஜனை சுவாமிகள் எதிரொலி விஸ்வநாதன் என்பவரோடு குழப்பிக் கொண்டதுபற்றியது. தமிழ் எழுத்தாளர்களை, சுவாமிகள் தர்ம பிரகாஷில் சந்தித்தபோது எதிரொலியிலிருந்து ஒருவர் வந்து தம்மிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம்வாங்கிக் கொண்டதாக அவர் சொன்னார். "எதிரொலின்னு விக்கிரமன் மைக்ல சொன்னதும் எல்லோரும் ஒரு செகண்ட் ஆச்சரியமா பார்த்தா" என்றுசுவாமிகள், எதிரொலிக்காரர் ஒருவர் தம்மிடம் ஆசிர்வாதம் வாங்கியது பற்றிய பெருமிதத்தோடுச்சொன்னார். "நீங்கதான் அவர்னு நெனச்சேன். ஆனாஅவர் வேற மாதிரியிருந்தாரே" என்று சின்னக் குத்தூசியிடம் கேட்டார். நானும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். "அப்படி எதிரொலி பத்திரிகைக்காரர்யாரும் அங்கே சுவாமிகள் காலில் விழவில்லையே" என்று சொன்னேன். சுவாமிகள் "எதிரொலி விஸ்வநாதன்" என்று பெயரைச் சொன்னார்.அவருக்கும் எதிரொலி பத்திரிகைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று விளக்கியபோது, சுவாமிகள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.இதெல்லாம்தான் நாங்கள் வெளியிடாத பகுதிகள்.

வெளியிட்ட பகுதிகளில் உங்களைப்பற்றி சொன்னதை சுவாமிகள் இப்போது மறுத்திருக்கிறார்.

இன்னும் எதை எதையெல்லாம் மறுக்கிறார் என்றும் நீங்கள் கேட்டிருந்தீர்களானால் நன்றாயிருந்திருக்கும்.

1. எல்லோரையும் 'அவன் இவன்' என்று பேசியதை மறுக்கிறாரா?

2. கருணாநிதி மீது ஏற்பட்ட கோபத்தால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வெற்றி பெற்றதாகச் சொன்னதைமறுக்கிறாரா?

3. மணியனைப் பற்றிச் சொன்னதை மறுக்கிறாரா?

4. தமிழ் அர்ச்சனை, அரிஜன அர்ச்சகர்கள் இரண்டையும் இவர் ஆதரித்தாலும் இவர் பக்தர்கள் அவற்றை எதிர்த்துக் கோர்ட்டுக்குப் போவதைத்தடுக்காதது ஏனென்று கேட்டபோது, வெறுமே சிரித்தாரே, அதை மறுக்கிறாரா?

5. எல்லா மனிதர்களைப் பற்றியும் கவலைப்படாமல் மத அடிப்படையில் பிரிப்பது சரியல்ல என்று நான் சொன்னபோது, "எனக்கு எல்லா மனுஷனைப்பத்தியும் கவலையில்லை. இந்துக்களைப் பற்றித்தான் கவலை" என்று சொன்னாரே, அதை மறுக்கிறாரா?

6. திராவிடர் கழகம் இந்து மதத்தை விமர்சிப்பதால் முஸ்லீம்கள் பலம் பெருகுவதாகக் கவலை தெரிவித்தாரே. அதை மறுக்கிறாரா?

7. "முஸ்லீம்கள் எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்லை" என்று சொன்னதை மறுக்கிறாரா?

8. ஒரேயடியாக எதிரொலிக்கு சீனிவாசனைத் தூதனுப்பியதையும், சின்னக்குத்தூசியைச் சந்திக்க விரும்பியதையும், அதன்படி அவரும் அவரோடு நானும்சுவாமிகளை வசந்த மண்டபத்தில் சந்தித்ததையும், அப்போது பேசியதையும், கடைசியில் எங்களுக்குப் புரசை இலையில் கல்கண்டு கொடுத்ததையும் எல்லாவற்றையுமே கூட "அப்படி எதுவுமே நடக்கவில்லை. நான் அப்படி யாரையும் பார்க்கவில்லை" என்று மறுக்கிறாரா?


கேட்டுச் சொல்லுங்கள். சுவாமிகளிடம் மட்டுமல்ல; இந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பற்றிச் சம்பந்தப்பட்ட எல்லாரிடமும்போய்க் கேளுங்கள். மனசாட்சியின் நெருடலை காவி உடை சாகடித்து விடலாம். ஆனாலும், சாதாரண மனிதர்களின் மனசாட்சிகள் அவ்வளவு சுலபத்தில்சாவதில்லை என்று நம்புகிறேன்.

"நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூறவேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காதது போல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்குவேண்டுமானால் ஏற்படலாம். ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயமில்லை" என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.

எதிரொலி தி.மு.க. சார்புள்ள பத்திரிகைதான். ஆனால், நான் தி.மு.க.வையோ தி.க.வையோ சார்ந்தவன் அல்ல. அவர்களுடன் எனக்கு சிலவற்றில்உடன்பாடும், சிலவற்றில் மாறுபாடும் உண்டு. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனும் அல்ல. உங்கள் துர்வாசரைப் போல் நானும் (துக்ளக் உட்பட)எல்லா இடங்களிலும் உண்மையைத் தேடுகிறேன். அவ்வளவுதான்.

நீங்கள் கட்சி சார்புள்ளவர். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர். ஸ்ரீசங்கராச்சாரியார் இந்து முன்னணியையும் ஆர்.எஸ்.எஸ்.சையும்ஆதரிப்பவர். முஸ்லீம் லீக்கைப் போல் ஆர்.எஸ்.எஸ்.சும் ஒரு கட்சிதான் என்பதே என் கருத்து. எனவே, கட்சி சார்புள்ளவர்களுக்கு நடந்ததை நடக்காததாகவும், நடக்காததை நடந்ததாகவும் காட்டும் அவசியம் ஏற்படலாம் என்ற உங்களுடைய வியாக்கியானம் உங்கள் இருவருக்கேபொருந்தும். அந்தத் தியரியே எனக்கு உடன்பாடல்ல. (சரியான தத்துவம் உள்ள கட்சிக்கு அந்த அவசியமே வராது.) அந்தத் தியரி எனக்குப்பொருந்தவும் இல்லை.

மனிதர்களை நேசிப்பதும், வாழ்க்கையில் நல்ல நெறிமுறைகளோடு வாழ்வதும், மனிதர்கள் எல்லாரும் சமமாய் வாழும் சுருதி சுத்தமான ஒரு உலகம்அமையக் கண்ட கனவை நனவாக்க உழைப்பதும், இதற்கெல்லாம் எதிரான சக்திகளோடு தொடர்ந்து யுத்தம் செய்வதும்தான் சரியென்று நான்நம்புகிறேன்.

அன்பு, ஆன்மீகம், நெறி, நல்லொழுக்கம் இவற்றைத் தயவுசெய்து கடவுள், காவி, மதம், மடாதிபதிகளோடு இணைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.இரண்டும் வெவ்வேறு. சத்தியத்தைத் தேடுபவர்களில் ஒருவராக, நீங்களும் ஒரு காலத்தில் இருந்தீர்கள் என்பதனால்தான் (தொடர்ந்து ஒருவேளைஇருக்கவும் கூடும் என்ற நம்பிக்கையினாலும் தான்) உங்களுக்கு இதைச் சொல்கிறேன்.

அன்புள்ள, ஞாநி

15-4-83

இந்தக் கடிதத்தை 1.5.83 துக்ளக் இதழில் சோ வெளியிடாததன் வாயிலாக அவருடைய பத்திரிகை தர்மம் என்னவென்று தெரிந்துவிட்டது.

கடந்த மூன்று இதழ்களாக, துக்ளக் பத்திரிகையில் துர்வாசர் என்பவர் தமிழில் மலிந்திருக்கிற தரங்கெட்ட எழுத்துக்களை (சரியாகவே) விமர்சித்து எழுதிவருகிறார். இதுபற்றி 1-5-83 துக்ளக் இதழில் சோ வெளியிட்ட அறிவிப்பைப் பார்க்கலாம்.

"கவலையில்லை

குறிப்பு: திரு. ஹேமா ஆனந்த தீர்த்தன் மீண்டும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதுவும் பிரசுரமாகும். வாசர்களில் மிகச்சிலர் எழுத்தாளர்கள் சிலரைஆதரித்துக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவையும் பிரசுரமாகும். இது பற்றிய எல்லா வாதங்களுக்கும் பதில் தர துக்ளக் தயாராக இருக்கிறது.இன்றைய பத்திரிகை உலகிலும் எழுத்துலகிலும் பலர் சேர்ந்து ஓட விட்டிருக்கும் சாக்கடையைச் சுத்தப்படுத்துவது என்ற முயற்சியில் அச்சாக்கடையில்இறங்குவது என்ற தீர்மானத்தை நன்றாக யோசித்தே செய்தோம். விடுவதாக இல்லை.

- ஆ.ர்."

இவ்வாறு அந்த அறிவிப்பில் சோ தெரிவித்திருக்கிறார். துர்வாசர் கட்டுரைக்கு எத்தனை பேர் பதில் எழுதினாலும் கவலையில்லை. சமாளிக்கலாம்.ஏனென்றால் துர்வாசர் சத்தியத்தின் பக்கம் நிற்பதுதான் அந்த பலத்தைத் தருகிறது.

ஆனால், சங்கராச்சாரி விவகாரம் பற்றி, சோ எழுதியதற்கு எதிராக ஒரு கடிதத்தைக் கூட அவரால் வெளியிட முடியவில்லை. ஏனென்றால், அவருடைய,சங்கராச்சாரியுடைய பொய்கள் அப்போது அம்பலமாகி விடுகின்றன.

ஆபாசப் பத்திரிகைகள் ஆபாசமாகத் தொடர்ந்து இயங்குவதில் ஆச்சரியமில்லை. ஆனால், கருத்துலகில் ஆரோக்யமான மாற்றங்களுக்காக உழைப்பதாகஒரு இமேஜை மூலதனமாக்கிக் கொண்டு இயங்கும் துக்ளக், அந்தக் கருத்துலக நேர்மை இல்லாத பத்திரிகையாக இருப்பது ஒரு சாதாரண விஷயமல்ல.மக்களின் மூளையை இன்னொரு வடிவத்தில் திசை திருப்பும் வேலையாக இதுவும் ஆகிவிடுகிறது.

எல்லாப் பத்திரிகைகளையும் விமர்சித்து சாக்கடையை சுத்தப்படுத்தும் வேலையில் துர்வாசரை இறக்கியுள்ள துக்ளக், தன்னையும் சுய விமர்சனம் செய்துகொள்ளும் நேர்மை அதற்கு இருக்குமா என்பது இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிச்சயம் சந்தேகத்துக்குரியதாகி விட்டது. அப்படி செய்தால் அதுவும் ஒருகண்துடைப்பு வேலையாக மட்டுமே மேற்கொள்ளப்படலாம்.

இங்கேதான் ஜெயேந்திர சரஸ்வதிகளிலிருந்து சோ வரை யாருக்கும் வெட்கமில்லையே!

இந்த சூழ்நிலையில் உண்மையே உன் நிலை, விலை என்ன?

- ஞாநி.



------------------------------------நூல்:-"சின்ன சங்கராச்சாரி - யார்?" - பக்கம்: 33-44

பத்திரிக்கை எப்படி இருக்க வேண்டும்?



26.8.09

1948 இல் ஈரோட்டில் நடந்த தி.க சிறப்பு மாநாடு- ஒரு பார்வை


1948-ஈரோட்டில் தடம் பதித்த வரலாற்றுச்சுவடுகள்!
19ஆவது தி.க சிறப்பு மாநாட்டில் மக்கள் வெள்ளம்
தந்தை பெரியார் தலைமையில் அண்ணா,திரு.வி.க., என்.எஸ்.கே பங்கேற்பு!
ஈரோட்டுப் பாசறையில் இளங்காளைகள் எக்காளம்!


விடுதலையில் அந்த காலத்தில் (ஈரோட்டில்) வெளிவந்த சம்பவங்களை இங்கே தருகின்றோம்.

ஈரோடு, அக். 24 (1948)_ ஈரோட்டில் திராவிடர் கழக 19ஆவது சிறப்பு (ஸ்பெஷல்) மாநாடு நேற்று பிற்பகல் தோழர் சி.என்.அண்ணாதுரை எம்.ஏ, தலைமையில் துவங்கியது.

இம்மாநாட்டில் திராவிடத் தலைவர் பெரியார் அவர்களும் தமிழ்ப்பெரியார் திரு.வி.க அவர்களும், நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் ஏனைய தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

காலையில் ஈரோடு இதுவரை கண்டிராத அளவில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரமாயிரம் தாய்மார்களும், பல்லாயிரக்கணக்கான திராவிட இளங்காளைகளும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு அய்ம்பது ஆயிரத்துக்கு மேற்பட்டு மக்கள் வந்து குழுமியிருந்தனர்.

தலைவராகத் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்களைப் பிரரேபித்ததை ஆதரித்து திராவிடர் தலைவர் பெரியார் அவர்கள் குறிப்பிடுகையில் இளைஞர் வசம் பொறுப்பை ஒப்படைப்பதே தனது கருத்தாகுமெனக் குறிப்பிட்டார்.

மாநாட்டின் நேற்றைய நடவடிக்கை தலைவர் தளபதி அண்ணாதுரை அவர்கள் முன்னுரையுடனும் நகைச்சுவையரசு தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காந்தியார் படத்திறப்பு விழாவுடனும் முடிவடைந்துள்ளது.

பெரியாருடைய இடத்தில் மாநாடு


மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திராவிட நாட்டின் பல நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கழக நிருவாகஸ்தர்களும், தலைவர்களும், தோழர்களுமாக நேற்று காலை முதற்கொண்டே இவண் வந்து குவிந்து கொண்டிருந்தனர். மாநாட்டுத் தொண்டர்கள் ரயிலடியிலும், பஸ் நிலையங்களிலும் இருந்து, தோழர்களை வரவேற்று அவரவர்களுக்-கென்றே மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்டிருந்த இருப்பிடங்களுக்கு அழைத்துச்சென்று வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து உதவிவந்தனர்.

மாநாட்டுப் பந்தல் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகாமையில் வாய்க்காலுக்கு ஓரமாய் அமைந்துள்ள பெரியார் அவர்களுக்குச் சொந்தமான திடலில் அமைக்கப்பட்டிருந்தது. பந்தல் மிகப்பெரியதாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்க வசதியுள்ளதாகவும் அமைக்கப் பெற்றிருந்ததோடு மின்சார விளக்குகளால் நன்கு அழகு செய்யப்பட்டிருந்தது. ஒலிபெருக்கி வசதியும் நன்கு அமைக்கப்பட்டிருந்தது. இடையிடையே மழையினால் தொல்லை ஏற்பட்டுக்கொண்டிருந்தும் பந்தல் வேலை செவ்வனே முடிவு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தலைவர்கள் தங்கி சொற்பொழிவாற்றுவதற்கான மேடையும் கருப்பு துணிகளாலும், கருப்புக்கொடிகளாலும், படங்கள் வரைந்த பலகைகளாலும் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது-.

மாநாட்டுப் பந்தலுக்கு அடுத்தாற்போலவே உணவு விடுதியும் அமைக்கப்பெற்றிருந்தது. மாநாட்டிற்கு வந்திருந்த தோழர்களுக்கு மிகுந்த வசதியாய் இருந்தது.

ஈரோடு கண்டிரா ஊர்வலம்

ஊர்வலத்தில் கலந்துகொள்ளவேண்டி உணவு விடுதியில் சிற்றுண்டி எடுத்துக்கொண்டு தோழர்கள் இன்று அதிகாலையிலேயே முனிசிபல் ரெஸ்ட் ஹவுஸூக்கு முன்னிலையில் வந்து சேர்ந்துவிட்டனர்.

பெரியார் அவர்கள் மற்ற தோழர்களுடன் காலை 9 மணி சுமாருக்கு மேற்படி ரெஸ்ட் ஹவுசை அடையவும் முன்னே மேள வாத்தியம் முழங்க அதைத் தொடர்ந்து கருஞ்சட்டைத் தோழர்கள் இயக்க ஒலி முழக்கம் செய்துகொண்டுபோக பெரியாரவர்கள், அவர்கள் பின் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் புடைசூழ, சிம்மநடை நடந்து செல்ல அவர்கள் பின் பெத்தாம்பாளையம் தோழர் பழனிசாமி, தோழர் சி.என்.அண்ணாதுரை, தோழியர் குஞ்சிதம் அம்மையார், தோழர் குருசாமி, தோழியர் இந்திராணி பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள் இரண்டு செங்காளைகள் பூட்டப்பட்ட சேரியெட்டில் அமர்ந்து செல்ல சுமார் 20 ஆயிரம் தோழர்களைக் கொண்டு ஊர்வலம் காலை 9 மணிக்குப் புறப்பட்டு மணிக்கூண்டு, கருங்கல்பாளையம் வழியாக சுமார் 5மைல் சுற்றி சரியாக 12 மணிக்கு மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது. வழி நெடுக இருமருங்கிலும் தலைவர்களைக் காண பொதுமக்கள் கூடியிருந்து புன்முறுவல் செய்தும் வாழ்த்தொலி முழக்கம் செய்தும் வரவேற்றனர். வீதிகள் முழுவதும் தோரணங்களாலும், அட்டை வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கருங்கல்பாளையத்தில் தலைவர்களுக்கு நேர்த்தியான வரவேற்பு அளிக்கப்பட்டது. (தந்தை பெரியார் ஊர்வலத்தில் நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்துடன் நடந்தே வந்தார்)

பிறகு தோழர்களும் தாய்மார்களும் மாநாட்டு விடுதியில் உணவெடுத்துக்கொண்டு பந்தலில் வந்து அமர்ந்தனர்.

பிற்பகல் நிகழ்ச்சிகள்

சரியாக 3.30 மணி சுமாருக்கு பெரியார் அவர்கள், தமிழ்ப் பெரியார் திரு.வி.க, தோழர் அண்ணாதுரை, தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிவர்களுடன் பந்தலை வந்தடையவும் கூடியிருந்த மக்கள் யாவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்து தமது மகிழ்ச்சியைக் காட்டிக்கொண்டனர்.

சற்றுநேரத்திற்குப் பிறகு அமைதி நிலவும் தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தமது பக்க வாத்தியங்களுடன் திராவிட மாநாடு வாழ்க செல்வத்திருநாடு என்று இன்னிசை பாட மாநாட்டு நிகழ்ச்சி இனிது துவக்கமாகியது-.

கொடியேற்றுவிழா

தோழர் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்கள் தோழியர் இந்திராணிபாலசுப்பிரமணியம் அம்மையார் அவர்களைக் கொடியேற்றுவிக்குமாறு கேட்டுக்கொள்ள அம்மையாரும் எழுந்துவந்து திராவிட நாட்டின் இணையற்ற இருண்ட நிலையையும் எடுத்துக்கூறி, தாய்மார்கள் தம் மூடநம்பிக்கைகளையும் மூட பக்தியையும் விட்டு திராவிட நாட்டிற்கு நற்பணியாற்ற முற்படக்-கேட்டுக்கொண்டு கழகக் கொடியை ஏற்றுவித்தார்கள்.

மாநாடு திறப்பு

பிறகு தோழர் எஸ்.குருசாமி அவர்கள் திராவிடர் கழகத்தின் வளர்ச்சியைப் பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு இம்மாநாட்டில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் இறுதியாக நடைபெற இருக்கும் ஆரியர் திராவிடர் போராட்டத்தில் எல்லா திராவிடத் தோழர்களும் கலந்துகொண்டு மிகுந்த கட்டுப்பாட்டோடும் பொறுப்போடும் பணியாற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு திராவிடனும் ஒவ்வொரு பெரியாராக வேலை செய்ய வேண்டுமென்றும் கூறி மாநாட்டைத் திறந்து வைத்தார்.

பிறகு தோழர் பழனிசாமி அவர்கள் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவர்க்கும் நல்வரவு கூறி மாநாட்டிற்கு வந்துள்ள தோழர்களுக்கு போதிய வசதி செய்து கொடுக்க இயலாமற்போய்விட்டதற்காக தம்மை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிறகு தோழர் ஈ.வி.கே.சம்பத் அவர்கள் தற்கால நெருக்கடியை உத்தேசித்து மாநாடு மிக அவசரமாகவும் போதிய முன்னேற்பாடில்லாமலும் கூறப்பட்டதால் சகிக்க முடியாத சில இடைஞ்சல்கள் ஏற்பட்டுவிட்டதென்றும் இவ்விடைஞ்சல்களை அண்மையில் வர இருக்கும் சிறைச்சாலை அனுபவத்தின் ஒத்திகையாகக் கருதிக்கொண்டு தோழர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு ஏற்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்களை தலைவராகப் பிரரேபித்தார்.

தலைவர் பிரரேபணை

குடந்தை தளபதி தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள் கழகத்தினிடையே இருந்து வந்த சில்லரை அபிப்பிராய பேதங்கள் எல்லாம் நெருப்பிலிடப்பட்டு சுட்டு சாம்பலாக்கப்பட்டதற்காக தாம் உண்மையிலேயே மிகமிக மகிழ்ச்சியடைவதாகவும் அம் மகிழ்ச்சிப் பெருக்கின் காரணமாகவே தாம் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்களைத் தலைவராகப் பிரரேபிக்க முன்வந்திருப்பதாகவும் கூறி தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்களை தலைமையேற்று மாநாட்டைச் சிறப்பாக நடத்திக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிறகு சேலம் தோழர் எ.சித்தையன் அவர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை கிண்டல் செய்து திரியும் காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல படிப்பினை கற்றுக்கொடுக்கும் ரீதியில் காரியம் ஆற்றப்படு-வதற்கான வகையில் இம்மாநாட்டின் கண் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கூறி தலைவர் பிரரேபணையை ஆதரித்துப் பேசினார்.

தள்ளாத நிலையில்

பிரரேபிக்கும் முறையில் பெரியார் அவர்கள் மாநாட்டில் தமிழ்ப்பெரியார் திரு.வி.க அவர்களும், நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் மற்றும் தோழர் எம்.ஆர்.இராதா, தோழர் மு.கருணாநிதி ஆகியவர்கள் தம் குழுவினர்களுடனும் கலந்துகொண்டிருப்பதின் சிறப்பை எடுத்துக்கூறியதோடு,

தமது தள்ளாத நிலையில் இனி ஜெயிலில் நல்ல இடம் பார்த்துக்கொண்டு ஓய்வெடுத்துக்கொள்வது தான் விரும்பத் தக்கதென்றும், இனி இளைஞர்கள் கையிலேயே சகலமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தினால்தான் தோழர் சி.என்.ஏ அவர்களை தலைமை வகிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்கிற வரவேற்புக்கமிட்டியினரின் விருப்பத்திற்கு தாம் ஒப்புக்கொண்டதாகவும் இளைஞர்களின் உள்ளங்களிலெல்லாம் தோழர் அண்ணாதுரை அவர்கள் எவ்வளவு தூரம் குடிகொண்டுள்ளார் என்பது தமக்குத்தெரியு-மென்றும் கூறி மாநாட்டிற்கு வந்திருப்போர் தமக்கு ஏற்படும் சில்லரை இடைஞ்சல்களுக்குத் தம்மை மன்னிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

தலைவர் அண்ணாதுரை

பிறகு தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தலைமை ஏற்று திராவிடர் கழகம், திராவிட நாட்டிற்கு நல்லதோர் திட்டம் வகுத்துத் தரத்தான் பாடுபட்டு வருகிறதே ஒழிய வேறு யாருக்கும் விரோதமாக அது வேலை செய்து வரவில்லையென்றும் திராவிடர் கழகம் எதை நல்ல திட்டமென்று கருதுகிறதோ அதை நிறைவேற்றி வைப்பதற்கு முட்டுக்கட்டைகளாக இருக்கும். மற்ற கட்சியினரை தமது முயற்சிக்கு விரோதமாயிருக்கும் அளவுக்குக் கண்டனம் செய்யத்தான் வேண்டியிருக்கிறதென்றும் விரைவில் அறப்போர் கூடுமானால் நவம்பர் முதல் தேதியே அறப்போர் துவங்கும் என்றும் அதில் எல்லோரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

பிறகு நகைச்சுவையரசு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காந்தியார் படத்தைத் திறந்து வைத்தார்கள்.

இதோடு மாலை நிகழ்ச்சி முடிவுற்றது. இரவு நாடகம் நடைபெறும். விவரம் நாளை. (நமது நிருபர்) விடுதலை 24.10.1948

ஈரோடு தனிமாநாட்டில் உரிமையாளரிடம் கழகச் சாவியை ஒப்படைக்க உறுதிகொண்டேன்- பயணம் சொல்லிக்கொள்ளும் மாநாட்டுச் சிறப்பு பற்றி- பெரியார்! மக்கள் உள்ளத்தின் சாவியைப் பெற்றேன் உவகையுடன் உபயோகிப்பேன் - அண்ணாதுரை!

இன்பத் திராவிடமெய்தப்பெற ஈரோடு காட்டும் பாதை

என்னுடைய பொறுப்பை ஒரு இளைஞரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று நெடு நாளாகவே எனக்கு ஆசையிருந்து வருகிறது. பெட்டிச் சாவி என்னிடமிருந்தால் ஆபத்து ஒன்றுமில்லை யென்றாலும், எத்தனை நாளைக்குத்தான் நாமே வைத்திருப்பதென்று அலுப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே உரிமையாளரிடம் சாவியை ஒப்படைக்க உறுதி கொண்டுவிட்டேனென்பதாகத் தலைவர் பெரியாரவர்கள் ஈரோடு மாநாட்டில் தளபதி அண்ணாதுரையைத் தலைவராக வழி மொழிந்து பேசுகையில் குறிப்பிட்டார்.

பிரசார இயக்கமாகப் பணியாற்றி வந்த திராவிடர் கழகத்தை சர்க்கார் தாமாகவே பெரும் போராட்ட இயக்கமாக மாற்றிவிட்டனரென்பதாக மாநாட்டைத் திறந்து வைத்த ஆசிரியர் குருசாமி அவர்களும், பெரியார் தம் வாழ்விலேயே இன்பத் திராவிடத்தைக் கண்டு களிப்பாராக என்று கொடியேற்று விழாச் சொற்பொழிவாற்றிய இந்திராணி சுப்ரமணியம் அம்மையாரவர்களும், வாழ்வு அல்லது சாவு என்பதாக வரவேற்புக் கழகத்தலைவர் பெத்தாம் பாளையம் தோழர் பழனிசாமியவர்களும் குறிப்பிட்டார்கள்.

ஈரோட்டில் இம்மாதம் 23, 24 தேதிகளில் நடை பெற்ற 19 ஆவது திராவிட கழக தனி மாநாட்டில் தோழியர் இந்திராணி பாலசுப்ரமணியம் அம்மையார் அவர்கள் ஆற்றிய கொடியேற்று விழா சொற்பொழிவின் சுருக்கமாவது:

இம்மாதிரி நமது இயக்க சரித்திரத்திலேயே மிக முக்கிய மாநாடாக இருக்கும் என்று கருதுகிறேன். காங்கிரஸ்காரர்கள் இந்நாட்டுக்கு சுதந்திரம் வந்து விட்டதாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அது உண்மைதானா என்று பரீக்ஷை பார்க்கும் நீதியில் உண்மையில்லை என்று நிரூபிக்கும் ரீதியில் நாம் ஹிந்தி எதிர்ப்பு மறியலை மீண்டும் துவக்கி நடத்த தீர்மானம் செய்யப்போகும் மாநாடு இது. இதன் முக்கியத்தைக் கருதியே நீங்களும் பெருவாரியாக வந்திருக்கிறீர்கள். எங்கு பார்த்தாலும் எப்பக்கம் திரும்பினாலும் ஒரே கருப்பு மயமான காட்சியே கண்ணுக்குப் புலனாகிறது. நான் ஏற்றப்போகும் கொடியும் செங்குருதி தெளிக்கப்பெற்ற கருப்புக் கொடிதான். அக்கருப்பு நம் நாட்டின் இன்றைய நிலையையும், அச்சிகப்பு இவ்விருண்ட நிலையைப் போக்க நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சியையும் காட்டுகிறது. ஒரு காலத்தில் பகுத்தறிவுடைய மக்களாக வாழ்ந்த நாம்இன்று பல ஆரிய மூட நம்பிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அறிவிழந்திருக்கிறோம். ஒரு காலத்தில் இந்நாட்டைத் தவிர்த்த ஏனைய பல நாடுகளையும் புகழுடன் அரசாண்ட நம்மவர்கள் இன்று அதோ வெளிநாடுகளில் கால் வயிற்றுக் கஞ்சிக்கு கங்காணிகளாக, கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள்.

பெரியார் வழி நிற்போம்

சொந்த நாட்டில் சொந்த மொழிக்காக சொந்த மக்களுடனேயே போரிட்டுத் தீரவேண்டிய இழி நிலையில் நாமிருக்கிறோம். இதை விட இருண்ட நிலையையா நாம் காணப்போகிறோம்? இவ்விருண்ட நிலை ஒழிந்து நம்நாட்டில் சுதந்திரம் கமழ நாம் எல்லோரும் பெரியார் வழி நின்று பாடுபட்டு வருவோமாக. பெரியாரும் தம் வாழ்விலேயே நாம் நினைக்கும் இன்பத் திராவிடத்தை செங்கொடி பறக்கும் திராவிடத்தைக் கண்டு களிப்படையட்டும்.

மேற்படி மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசுகையில் தோழர் எஸ். குருசாமி அவர்கள் திறந்து வைத்தார்.

பிறகு மாநாட்டுத் தலைவர் தோழர் சி.என். அண்ணாத்துரை அவர்கள் தலைமையுரையாகப் பேசியதாவது:

மதிப்பிற்குரிய பெரியார் அவர்களே! பெரியார் திரு.வி.க அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இம்மாநாடு கூட்டப்பட்டிருக்கும் நோக்கம் எனக்கு முன்பேசிய தோழர்களாலும், தலைவர் பெரியார் அவர்களாலும் நன்கு எடுத்துக்கூறப்பட்டது. நமது சென்ற மாநாடு தூத்துக்குடியில் பாட்டாளிகளின் விடுதலை சரித்திரத்தில் உலக புரட்சி சரித்திரத்தில் முக்கியமாயமைந்துள்ள மே மாதத்தில் நடைபெற்றது. அதன் பிறகு 5 மாதங்கள் கழித்து அக்டோபர் மாதத்தில் நாம் இன்று இங்கு கூடியுள்ளோம். அக்டோபர் என்பது பாட்டாளி மக்களுடைய புரட்சிப் போராட்டத்தின் மிக பயங்கரமான ஒரு பகுதியை குறிப்பிடும் மாதமாகும். அது எவ்வளவுக் கெவ்வளவு பயங்கரமானதோ அவ்வளவுக்கவ்வளவு முக்கியத்துவமும் வாய்ந்தது. ஏனெனில் அது அவர்களுக்கு வெற்றிகரமாக முடிந்தது. விடுதலை வாங்கித் தந்தது.

அக்டோபர் சிறப்பு

மே மாதம் விடுதலைக்கு வித்திட்ட மாதம் என்றால் அவ்வித்து முளைவிட்டு வளர்ந்து மரமாகி பூத்துக் காய்த்தது போல் அக்டோபர் மாதம் ஒரு மாபெரும் புரட்சிப் புயல் வீசப்பட்ட மாதம் ஆகும். சோவியத் ரஷ்யாவில் அடக்குமுறைக்கு ஆளான பாட்டாளி மக்கள் தம் உடலிலிருந்து ரத்தம் ஒழுக ஒழுக தம் தலைவர் முன் நின்று இனி ஒருபோதும் சகித்திரோம். எப்பாடு பட்டாயினும் எவ்வளவு கஷ்டத்திற்குள்ளாயினும் இவ்வடக்குமுறையை இக்கொடுங்கோன்மையை ஒழித்தே தீருவோம் என்று சூளுரைத்து நின்ற காலம் அது.

நாமும் அதுபோல்தான் நம் தலைவர் தோட்டத்தில் அவர் முன் சூளுரைக்க நிற்கின்றோம். சிறை சென்று அவதிப்பட்டவர்கள், தடியடிக்கு ஆளாகியவர்கள், மற்றும் சர்க்காரின் பல கொடுங்-கோன்மைக்கு ஆளாகியவர்கள் என நாம் அதே அக்டோபரில் கூடியிருப்பது கவனிக்கத்தக்கது.

உரிமைப் போர் துவக்கம்


புரட்சி முழக்கம் செய்ய உரிமை முழக்கம் செய்ய, நாம் இன்று ஈரோட்டில் கூடியுள்ளோம். இவ் உரிமைப் போர் துவக்க நிகழ்ச்சி நம் நாட்டுச் சரித்திரத்தில் ஏன், உலக சரித்திரத்திலேயே கூட பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்ச்சியாய் அமையக் கூடியதாகும்.

இன்று துவங்கும் இவ்வுரிமைப் போர் நம் ஆயுட்காலத்திற்குள்ளாகவே ஆகிவிட்டால் நமது பிள்ளைகள் சந்ததியார் தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட தொடர்ந்து நடத்தப்பட்டு வரவேண்டிய ஒரு தொடர்கதைப் போராட்டமாகும் இது.

எனவே, சர்க்கார் நூலை ஹிந்தியை எடுத்துவிடுவார்களானாலும் அதோடு இப்போராட்டம் நின்றுவிடாது. தொடர்ந்து உரிமை கிடைக்கும் வரை அறப்போர் நடைபெற்றே தீரும்.

இம்மாநாட்டுக்கு நான் தலைமை வகிக்க ஏதேனும் தனிமையான தகுதியோ, தக்க காரணமோ, அவசியமோ உண்டென்றால் இல்லையென்றுதான் கூற வேண்டும்.

மகனிடம் பெட்டிச்சாவி ஒப்படைப்பு

போராட்டம் நடைபெறுமானால் அண்ணாத்துரை நழுவிவிடுவானோ என்று சிலர் கொண்டிருந்த சந்தேகத்தை போக்கும் அளவுக்கு மட்டும் வேண்டுமானால் இது பயன்படலாமென்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன். போராட்ட காலத்தில் அபிப்பிராயம் பேதங்கள் இருக்க இடமேயில்லை. மற்றபடி பெரியார் அவர்கள் பெட்டி சாவியை என்னிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்தார். பொறுப்புள்ள மகனிடம் பெட்டி சாவி ஒப்படைப்பதால் அவன் தாறுமாறாக அதை உபயோகித்து விடமாட்டான். திறக்கும் போது தந்தையைக் கேட்டுக் கொண்டு தான் திறப்பான். தனக்கு வயதுவந்த பிறகும் சாவி தந்தையிடமே இருந்தால் எவ்வளவு சாதுவான மகனுக்கும் கொஞ்சம் அருவருப்பு ஏற்படுவது சகஜம்தான். இருந்தாலும் அப்படியொன்றும் கிளர்ச்சி செய்தவன் அல்ல நான். மேலும் இயக்க பணப்பெட்டியின் சாவியை அவர் என்னிடம் அளித்ததாக நான் கருதிக்கொள்ளவில்லை.

மக்களுடைய உள்ளத்தின் சாவியை, சிறைச்சாலை பூட்டுச்சாவியை, இதைத் தான் என்னிடம் ஒப்படைப்பதாக நான் கருகிதுகிறேன்.

அதை மிக மிக பொறுப்புணர்ச்சியோடு உபயோகித்து வருவேன்.

மேலும் பெரியாரவர்கள் என்னிடம் மக்கள் உள்ளத்தின் சாவியை சிறைச்சாலை பூட்டு சாவியையே ஒப்படைத்ததாகக் கருதுகிறேன். அதை மிக மிக மகிழ்ச்சியாக உபயோகித்து வருவேனென்பதாகத் தளபதி அண்ணாதுரையவர்கள் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

---------------- தகவல்: சிங்.குணசேகரன் - "விடுதலை" 26.10.1948