Search This Blog

6.10.22

தமிழராட்சி பறிபோகாமல் காப்பதே முக்கியம்! - பெரியார்

 

தமிழராட்சி பறிபோகாமல் காப்பதே முக்கியம்!

 


பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

 

புதுவை மாநாட்டில் நாம் தீர்மானம் செய்தோம். சாதி ஒழிப்புக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் கலந்து பேசினோம்.

 

இந்த நாட்டில் அரசியலானாலும் சரி, கல்வியானாலும் சரி. பொருளாதாரத்துறையானாலும் சரி, ஒன்று சாதி ஒழிப்புக் கருத்துகளை பயன்படுத்த வேண்டும் சாதிப் பிரிவை ஒழிக்கின்ற முறையில் வழிவகை செய்ய வேண்டும் என்பதாகும்.

 

இப்படிப்பட்ட காரியங்களுக்கு - மக்கள் அறிவு பெற்று விடக் கூடாதே என்பதற்காகத் தான் பார்ப்பனர் சாதியும், சாதிப் பிரிவினையும் ஒழிந்து விடாதபடி தடுத்து வருகின்றார்கள்.

 

தோழர்களே! நான் பொதுத் தொண்டில் ஈடுபட்டு சாதி பற்றிப் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்வரை, சாதியைப் பாதுகாக்கும் முயற்சிதான். எதிர்ப்பு இல்லாமல் நடந்து வந்து இருக்கின்றது. புராணங்களில் வேண்டுமானால் இரணியன் - இராவணன் போன்றவர்கள் சாதி ஒழிப்புப் பொருட்டு பார்ப்பனர்களை எதிர்த்து இருக்கின்றார்கள்.

 

அதற்கு அடுத்தபடியாக சாதி ஒழிப்பு முயற்சியானது உலகத்திலே புத்தர் தோன்றித்தான் செய்தார். அவரும் சாதிக்கு ஆதாரமானவை எவை எவையோ அவற்றை எல்லாம் அம்பலப்படுத்திப் பாடுபட்டார்.

 

அவர் சாதியை ஒழிக்கின்றேன் என்றோ, கடவுளை ஒழிக்கின்றேன் என்றோ ஆரம்பிக்கவில்லை. ஆனால் அறிவை - புத்தியை ஆதாரமாகக் கொண்டு மக்கள் நடக்க வேண்டும் என்று அறிவுப் பிரச்சாரம் செய்தார். இதன் மூலம் அவர் தமது கொள்கையில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே கூறலாம்.

 

புத்தருடைய கொள்கை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மட்டும் அல்ல, இலங்கை, சயாம், சீனா, ஜப்பான், இந்தோனேசியா, திபெத் போன்ற நாடுகளிலும் பரவி இருந்தது.

 

இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த மாறுதலைக் கண்டு மனம் சகியாமல் இதை ஒழிக்கப் பார்ப்பனர்கள் எண்ணினார்கள். தந்திரமாகப் புத்த மார்க்கத்திலே சேர்ந்து - அந்த புத்த மடாலயங்களையும் ஒழித்து விட்டார்கள்.

 

புத்த மார்க்கத்தை ஒழித்து மீண்டும் வைதிக மார்க்கத்தை புதுப்பிக்கவும், மக்களை முட்டாள்தனத்தில் ஆழ்த்தவும் ஏற்படுத்தப்பட்டவை தான் இந்தக் கோயில் - குளங்கள் - குட்டிச்சுவர்கள் எல்லாம் ஆகும்.

 

சுமார் ஆயிரம் ஆண்டுகளில் ஆண்டு வந்த அரசர்கள் எல்லாம் சுத்த மடையர்களாகவே இருந்து பார்ப்பான் சொன்னபடி நடந்தவர்கள் தான். இவர்கள் ஆளுகின்றோம் என்ற பெருமைக்காக ஆண்டார்களே ஒழிய, ஆட்சிப் பொறுப்பை பார்ப்பான் கையில்தான் ஒப்படைத்துப் போட்டவர்களாகவே இருந்து இருக்கின்றார்கள். குடியும், கூத்தியுமே கதி என்று கிடந்தார்களே ஒழிய, மக்களைப் பற்றி கவனிக்கவே இல்லை!

 

திருமலைநாயக்கன் பத்தாயிரம் பேர்கள் படிக்கும்படியான பள்ளி ஒன்று கட்டினான். படிக்கின்றவர்களுக்கு ஓசிச் சாப்பாடும் போட்டான் என்று

சரித்திரம் கூறுகின்றது. இப்படி ஏற்படுத்திய பள்ளிக்கூடம் என்ன பள்ளிக்கூடம் என்றால் சமஸ்கிருதப் பள்ளிக்கூடம் ஆகும். படித்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்களே ஆவர். நம்மவர்களைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.

 

இரண்டொரு முஸ்லிம் அரசர்கள் வேண்டுமானால் சில சீர்திருத்தங்கள் செய்து இருக்கின்றார்கள். மார்பில் துணி அணியும் உரிமை ஒருவன் அளித்து இருக்கின்றான்.

 

அடுத்து இந்த நாட்டில் ஏதாவது சமூதாய சம்பந்தமான சீர்த்திருத்தம் நடந்து இருக்கின்றது என்றால் வெள்ளைக்காரனால் உடன்கட்டை ஏறுதல் என்ற அநாகரிகமான வழக்கமானது ஒழிக்கப்பட்டது.

 

வெள்ளைக்காரனுக்கும், இது பற்றிய தைரியம் இல்லை. ராஜாராம் மோகன் ராய் என்ற வங்காளியின் அண்ணன் இறந்தபோது இறந்தவரின் மனைவியையும் உயிருடன் சவத்துடன் வைத்துக் கொளுத்த முற்பட்டனர் வைத்தியப் பார்ப்பனர். அந்த அம்மாள் திமிறிக் கொண்டு தப்புவிக்க முயன்றபோது பார்ப்பனர்கள் பலாத்காரமாக அவரைக் கொண்டு வந்து புருஷன் சவத்துடன் கயிறு போட்டுக் கட்டிக் கொளுத்தியதைக் கண்டு - ராஜாராம் மோகன்ராய் மனம் நொந்து - இந்த அக்கிரமத்துக்கு ஒரு பரிகாரம் காண வேண்டும் என்று முற்பட்டார். அரசாங்கத்துக்கு இந்தக் கொடுமையை எடுத்துச் சொல்லி கிளர்ச்சி செய்தார். சீமைக்கு எல்லாம் போய்க்கூட வற்புறுத்தி உடன்கட்டை ஏறுதலை தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தார். இதுதான் சமூதாய சீர்த்திருத்தப் புரட்சிக்கு முதல் கால்கோளாகும்.

 

அடுத்து வெள்ளைக்காரன் பெண்களுக்குப் பள்ளிக்கூடமும் தொத்து நோய்த் தடுப்புக்கு ஆஸ்பத்திரியும் ஏற்பாடு செய்தான். இதைக் கண்டு பார்ப்பனர்கள் இது மதத்துக்கு - வழக்கத்துக்கு பழக்கத்துக்கு மாறுபாடானது என்று பொது மக்களையும், பட்டாளத்துக்காரனையும் தூண்டிவிட்டு இரகளை பண்ணச் செய்தார்கள்.

 

அன்றைக்கு இராணுவத்தில் மிகுதியாகப் பார்ப்பனர்கள் இருந்தார்கள். பார்ப்பான் தன் நச்சுக் கருத்துகளை புகுத்துவதற்கு மிகவும் சல்லிசாக ஆகிவிட்டது. வெள்ளைக்காரன் கடல் கடந்து சென்று சண்டை போட இராணுவத்தைக் கப்பலில் ஏற்ற முற்பட்ட போது கடத்தல் இந்து மத சம்பிரதாயத்துக்கு விரோதம் என்று கூறி மறுத்து விட்டார்கள்.

 

பார்ப்பனர்கள் சிப்பாய்களுக்குக் கொடுத்துள்ள துப்பாக்கியில் பசுவின் கொழுப்புத் தடவப்பட்டு உள்ளது. அது இந்து தருமத்துக்கு விரோதம் என்று இந்துக்களையும் பன்றிக் கொழுப்புத் தடவப்பட்டு இருக்கின்றது அது முஸ்லிம் தருமத்துக்கு விரோதம் என்று முஸ்லிம்களையும் தூண்டி விட்டுக் கலகம் செய்யச் செய்தார்கள்.

 

மக்கள் கலகம் பண்ணினால் வேண்டுமானால் பட்டாளத்துக்காரனைவிட்டு அடக்கலாம். பட்டாளத்துக்காரனே கலகம் பண்ணினால் யாரைக் கொண்டு அடக்க முடியும்? எனவே வெள்ளைக்காரனுக்கு மிகவும் சிரமமாகப் போய்விட்டது.

 

கலகத்தை அடக்க வெள்ளைக்காரன் பார்ப்பனர்களை அழைத்து யோசனை கேட்டான். பார்ப்பனர்கள் நீங்கள் மத விஷயத்திலும் பழக்க வழக்கத்திலும் தலையிடுவதால் தான் மக்களும், இராணுவத்தினரும் ஆத்திரப்பட்டு விட்டார்கள்.

 

இனி இப்படி மத விஷயத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஈடுபடுவதில்லை என்று உறுதிமொழி கொடுப்பீர்களானால் இப்படி எல்லாம் நடக்காது என்று கூறினார்கள். அதன்படியே விக்டோரியா மகாராணி எழுதிக் கொடுத்தார். அதன்பிறகுதான் கலகத்தை நிறுத்தினார்கள். சமூதாயச் சீர்த்திருத்தக் காரியங்களை எதிர்த்த இந்த முட்டாள்தனமான கிளர்ச்சியைத்தான் சில சரித்திர ஆசிரியர்களும், பார்ப்பனர்களும் உண்மைக்கு மாறாக சுதந்திரக்கிளர்ச்சி என்று திரித்துக் கூறுகின்றார்கள்.

 

அடுத்து இந்த நாட்டில் சமூதாயக் குறைபாடுகளைப் போக்கவும், சமூதாய நன்மைக்காகவும் ஓர் இயக்கம் ஏற்பட்டது என்றால் நமது சுயமரியாதை இயக்கம் தான்.

 

சட்டசபை மெம்பர்கள் இருக்கின்றார்கள் என்றால் 4,5 பார்ப்பனர்கள் தான் சட்டசபை மெம்பர்களாக இருக்கின்றார்கள். தமிழ்நாட்டு மந்திரி சபையில் ஒன்பது மந்திரிகள் இருக்கின்றார்கள் என்றால் ஒரே ஒரு பார்ப்பனர்கள் தான் வர முடிந்தது. அதுவும் காமராசர் தயவில்தான் வர முடிந்தது. இன்று ஜில்லா காங்கிரஸ் தலைவர்களை எடுத்துக் கொண்டால் ஒரு பார்ப்பான்கூட இல்லையே. எல்லாம் தமிழர்கள் தானே. முன்பு எல்லாம் பார்ப்பனர்கள் தான்.

 

இன்றைக்குப் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருந்து வந்த ஆட்சியானது தமிழர்கள் கைக்கு வந்துள்ளதன் காரணமாகத்தான் இன்று நமக்கு கல்வி, உத்தியோகம், தொழில், வசதி முதலியன ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இன்றைக்குக் காமராசர் ஆட்சியில் சாதியை ஒழிக்கும்படியான காரியங்கள் மளமளவென்று நடந்து வருகின்றன. ஆணும், பெண்ணும் எல்லா உரிமைகளையும் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

 

சீனா போராட்டம் இல்லாது இருந்தால், சாதி ஒழிப்பு சம்பந்தமாக சில தீவிர கிளர்ச்சி எல்லாம் செய்து இருப்போம். கிளர்ச்சி என்றால் கம்பத்தின் மீது ஏறி ஆடும் தொம்பன் கீழே இறங்கி வந்ததும் அய்யா காசு கொடுங்கள் என்று கேட்பது போலத்தான், அரசியல் கூழைக் கூத்தாடிகள் அந்தக் கிளர்ச்சி செய்தோம். இந்தக் கிளர்ச்சி செய்தோம். அது செய்தோம் இதைச் செய்தோம். அய்யா ஓட்டுக் கொடுங்கள் என்று கேட்பார்கள். அதுபோல அல்ல நாங்கள். எங்களுக்கு ஓட்டு தேவையில்லை.

 

அரசமைப்புச் சட்டம் சாதியைப் பாதுகாக்கின்றது என்று கருதி அதைத் தீயிட்டுக் கொளுத்தி நான்காயிரம் பேர்கள் சிறை சென்றவர்கள் ஆயிற்றே. நாங்கள் - அதுவும் கொளுத்தினால் மூன்றாண்டு தண்டனை என்று சட்டம் செய்து கொண்ட பிறகுதான் கொளுத்திச் சிறைக்குப் போனோம்.

 

சிறைச் சென்று மீண்ட உடனே அரசாங்கமே சட்டம் ஒருபுறம் இருந்தாலும் சாதியை ஒழித்தே தீருவோம் என்று முன் வந்து இருப்பதைக் காண்கின்றோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலேயே சாதி ஒழிப்பு பற்றிப் பல இடங்களில் வறபுறுத்திக் கூறியுள்ளார்கள்.

 

தோழர்களே! உள்ளபடியே சீன ஆக்கிரமிப்புப் போரில் நமது சர்க்காருக்கு எல்லாவித உதவியும் செய்ய வேண்டும். சர்க்காருக்கு எந்தவித பலக் குறைவும் ஏற்படும்படித் தொந்திரவு கொடுக்கக் கூடாது என்று பாடுபடுவது நமது இயக்கம்தான்.

 

நாம் இரண்டு மூன்று சங்கதிகளில் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஒன்று இந்தி, அடுத்தது நாடு பிரிவினைத் தடைச் சட்டம், உத்தியோகத்துறையில் பார்ப்பனர் ஆதிக்கம்.

 

இதை எதிர்த்தால் அரசாங்கத்திற்கு ஏதாவது தொல்லை ஏற்படுமோ என்று அஞ்சித்தான் சும்மா இருக்கின்றோம்.

 

டெல்லிக்காரனுக்குப் புத்தியே கிடையாது. புத்தி வேண்டுமானால் இங்கு வந்துதான் கற்றுக் கொண்டு போக வேண்டும். புத்தி இல்லாத்தனமாக நமக்குக் கெடுதல் விளை விக்கும்படியான இந்தி, நாட்டுப் பிரிவினைத் தடைச் சட்டம் பொன்ற சில சங்கதிகளைச் செய்து கொண்டே வருகின்றார்கள்.

 

இங்குள்ள பார்ப்பான் சாதி அடிப்படையில் கல்வி - உத்தியோகச் சலுகை கூடாது என்று கூறுகின்றான் என்றால், அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டு கல்விச் சலுகை பொருளாதார அடிப்படையில் தான் செய்ய வேண்டும் என்கின்றார்கள்.

 

தோழர்களே! "உனக்குக் காமராசர் ஆட்சி வேண்டுமா? அல்லது இந்தி ஒழிய வேண்டுமா? என்று கேட்டால் நான் "காமராசர் ஆட்சிதான் வேண்டும்" என்பேன். என்ன அய்யா இப்படி கூறுகின்றாய் என்று கேட்கலாம். காமராசர் ஆட்சியானது நிலைத்து விட்டால், இந்தி தானாகவே ஒழிந்து போகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

 

இந்தி ஒழிய வேண்டும் என்று கிளர்ச்சி செய்தால் அது காமராசர் ஆட்சியினைத் தான் ஒழிக்கப் பயன்படும்.

 

எவரையாவது பிடித்து - எதையாவது பிடித்து மேலே ஏற வேண்டும் என்று கருதுகின்றவர்கள் தான் இந்தச் சாக்கைப் பயன்படுத்தி காமராசரை ஒழிக்க எண்ணுகின்றார்கள்.

 

தோழர்களே! பெரிய மீன் பிடிக்க வேண்டுமானால் சின்ன மீனைப் போட்டுக் கொடுத்துத்தானே ஆகவேண்டும். அது போல நமக்கு ஏற்பட இருக்கும் பெரிய நன்மையினைக் கருதி, சில சில்லரைக் காரியங்களில் சில சந்தர்ப்பங்களில் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டி வரும்.

 

ஒரு காரியம் முக்கியமானதாகக் கருதினால் சில சின்ன விஷயங்களை எல்லாம் விட்டுவிட வேண்டியதுதான்.

 

பார்ப்பனர்களுக்கு இந்தித் திணிப்புப் பற்றி என்ன அக்கறை வந்தது? இந்த இராஜாஜி தானே இந்தியைக் கட்டாயமாக முன்பு கொண்டு வந்தவர். ஆயிரக்கணக்கானவர்கள் நாம் தானே சிறைக்குச் சென்றோம். இன்றைக்கு என்ன வந்தது இந்தி மீது வெறுப்பு ஏற்பட?

 

எந்த ஒரு சிறு பிடி கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு முன்னேறி தங்கள் காரியத்தை - அதாவது காமராசர் ஒழிப்பு என்பதை - சாதித்துக் கொள்ளுவது என்பது தானே. ஆச்சாரியாரின் இலட்சியம் என்ன? எப்படியாவது காமராசரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதானே?

 

சர்க்கார் எனக்கு இந்தியைத் திணிப்பது இல்லை என்று வாக்குறுதி எழுதிக் கொடுத்து இருக்கின்றார்கள். அதன்படி நடப்பார்கள் என்றுதான் கருதுகின்றேன். நம்பிக்கை இழக்கவில்லை.

 

அரசாங்கக் கொடியைக் கொஞத்துவேன் என்ற திட்டத்தைக் கைவிட்டு விடவில்லை. ஒத்தித்தான் வைத்துள்ளேன் என்பதை முன்பே அவர்களுக்குத் தெரிவித்துள்ளேன். ஆனாலும் எப்படிச் செய்வது, எப்போது செய்வது என்பது எனக்குத் தெரியும்.

 

அடுத்து பிரிவினைத் தடைச் சட்டம். இந்தப் பூச்சாண்டியானது நம்மை ஒன்றும் செய்ய முடியாது. நம்முடைய உணர்ச்சியையும் கட்டுப்படுத்த முடியாது.

 

தோழர்களே! சாதியை எதிர்த்தவன் இந்த நாட்டில் யார்? நான் தான்! அது என்னுடைய சொத்து! நான் வேண்டுமானாலும் விட்டுவிடுவேன். எப்படிச்

சரிப்படுத்துவது என்று எனக்குத் தெரியும். 2000- ஆண்டுகளாக சாதியை எதிர்க்க வந்தவர்கள் தான் யார்? எங்கள் முயற்சிக்கு யார் துணை செய்தார்கள்?

 

------------------ 21.04.1963- இல் வல்லம்படுகையில் நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 26.04.1963

0 comments: