Search This Blog

1.10.22

பார்ப்பனர்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதைப் பார்த்துப் படிப்பினையாகக் கொள்ளுங்கள் - பெரியார் அறிக்கை

 

ஓர் அதிசயம் ஆனால் 100க்கு 100 உண்மை!

 


பெரியார் அறிக்கை

 

திரு. காமராசர் அவர்கள் செங்கற்பட்டு இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பேச்சில் ஓர் அதிசயம் காணலாம். அதாவது இவ்வளவு தைரியமாக 35- ஆண்டுகளுக்கு முன் அதே செங்கற்பட்டு மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு செய்தியைப்பற்றிப் பேசி இருக்கின்றார் என்றாலும் அது 100-க்கு 100- உண்மையான செய்தியே ஆகும்.

 

அதாவது: "பெரியார் அந்தக் காலத்தில் காங்கிரஸ் வைதீக வெறியர்கள் கையில் இருந்து வருகிறது என்பதை உணர்ந்து, இதில் இருந்து கொண்டு தம்முடைய மக்களுக்கு ஒரு நலமும் செய்ய முடியாது என்று கருதியே காங்கிரசை விட்டு வெளியேறினார்" என்பது ஆகவும்,

 

"அது போலவே, இன்று இராஜாஜி காங்கிரஸ் - இந்திய காங்கிரஸ் முழுவதுமே இல்லாவிட்டாலும், சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையிலாவது காங்கிரஸ் வைதீக எதிரிகள் ஆதிக்கத்தில் இருந்து வருகின்றது. இதில் இருந்து கொண்டு வைதீக (வேத) தர்மத்தைக் காப்பாற்ற முடியாது என்று தீர்மானம் செய்து கொண்டே (இராஜாஜி) காங்கிரசைவிட்டு வெளியேறி இருக்கிறார்" என்பது ஆகவும் துணிவாக உண்மையினைக் கூறிவிட்டார்.

 

இராஜாஜிக்கு இன்று காங்கிரசில் ஏற்பட்ட குறை என்ன? இரஜாஜி இரண்டு முறை சென்னை இராஜ்ஜியத்தில் முதல் மந்திரியாக இருந்தபோது அவர் செய்யாதது எந்தக் காரியம் இன்று காமராசரை முதல் மந்திரியாகக் கொண்ட ஆட்சியில் செய்யப்பட்டு விட்டது? அல்லது அன்று நடக்காத எந்தக் காரியம் இன்று காமராசர் காலத்தில் நடக்கின்றது அல்லது நடந்து விட்டது?

 

முன்பு காங்கிரஸ் நிலைமை சென்னை இராஜ்ஜியத்தில், தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால்,

 

மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர்-

 

திரு.டி.வி. வெங்கட்ராம அய்யர்,

 

ஜில்லாக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள்:-

 

திருநெல்வேலிக்கு - திரு. மகாதேவ அய்யர்,

 

மதுரைக்கு - திரு. வைத்தியநாத அய்யர்,

 

திருச்சிக்கு - திரு. சாமிநாத சாஸ்திரி,

 

தஞ்சைக்கு - திரு. பந்தலு அய்யர்,

 

கோவைக்கு - திரு. என். எஸ். இராமசாமி அய்யர்,

 

சேலத்துக்கு - திரு. இராமராவ்,

 

வட ஆர்க்காட்டுக்கு - திரு. ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரி,

 

செங்கற்பட்டு

 

தென் ஆர்க்காடு - ஞாபகம் இல்லை

 

மதறாஸூக்கு - திரு. .ரெங்கசாமி அய்யங்கார்,

 

இப்படி சர்வம் (அனைத்தும்) பார்ப்பன மயமாய் அமைந்திருந்தது.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (குழு) தலைமைக்கு முதல் முதலாக திராவிடர் (பார்ப்பனர் அல்லாதார்) என்கின்ற தன்மையில் எனக்குத்தான் கிடைத்தது. உடனே என் மீதும், வா.வே.சு. அய்யர் என்கின்ற "தேசிய"ப் பார்ப்பனர் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்.

 

இரண்டாவது தடவையாக, எனது முயற்சியின் மீது டாக்டர் வரதராஜூலு நாயுடு அவர்களுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி கிடைத்தது. அப்போதும் திரு.சி. இராஜ கோபாலாச்சாரியார் (இராஜாஜி) அவர்கள், வரதராஜூலு நாயுடு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். இதை அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாக (செயலாளராக) இருந்த நான் எதிர்க்க வேண்டி நேரிட்டது. இந்தத் தீர்மானத்திற்கு அனுகூலமாக,

 

சி. இராஜகோபாலாச்சாரியார்,

 

டாக்டர். சாமிநாத சாஸ்திரி,

 

டாக்டர். டி. எஸ்.எஸ். இராஜன் (அய்யங்கார்),

 

கே. சந்தானம் (அய்யங்கார்),

 

ஆலாஸ்யம் (அய்யர்),

 

என்.எஸ். வரதாச்சாரி,

 

சேலம் சுப்பாராவ்,

 

. கிருஷ்ணமாச்சாரி,

 

ஆகிய எல்லா காரியக்கமிட்டிப் பார்ப்பனர்களும் ஓட்டு அளித்தார்கள்.

 

எதிர்ப்பாக,

 

.வெ. இராமசாமி (நான்),

 

திரு.வி. கல்யாண சுந்தர முதலியார்,

 

திருவாளர்கள்

 

எஸ். இராமநாதன்,

 

தங்கப் பெருமாள்,

 

.பி. இராமசாமி ரெட்டியார்

 

புதுப்பாளையம் இரெத்தினசாமி கவுண்டர்

 

தஞ்சை டாக்டர் இராமசந்திரஞ் செட்டியார்

 

சென்னை, சிங்காரவேலு ரெட்டியார்

 

சேலம் ஆதிநாராயண செட்டியார்

 

- என்பது ஞாபகம், ஓட்டளித்தார்கள்.

 

ஆகவே எனது முயற்சியால் ஆச்சாரியாரின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்றது. இதிலிருந்தே ஆரியர் - திராவிடர் பிரிவு காங்கிரசில் வெளிப்படையாய்த் தலை காட்டிவிட்டது.

 

உடனே ஆச்சாரியார் இராஜிநாமா (பதவி விலகல்) செய்துவிட்டார். அவரோடு பல பார்ப்பன அங்கத்தினர்களும் (உறுப்பினர்களும்) இராஜிநாமா செய்துவிட்டார்கள். பிறகு அவர் சிறிது நாள் பொறுத்து காங்கிரசுக்குள்ளே வந்து புகுந்து சென்னை திரு.எஸ். சீனிவாச அய்யங்காரைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஆக்கி, தானும் காரியக் கமிட்டியில் (செயற்குழுவில்) அங்கத்தினராக இடம் பெற்றுக் கொண்டார்.

 

இப்படியாக முதலில் சென்னை காங்கிரஸ் முழுக்க முழுக்க பார்ப்பனரிடம் இருந்து எனது (.வெ. இராமசாமி) (தலைவர் பதவி) காலத்தில் பகுதி பார்ப்பனர், பகுதி திராவிடர்கள் என்று ஆகி, இன்று காமராசர் காலத்தில் முக்காலே அரைக்கால் பங்கு திராவிடர், அரைக்கால் பங்கு (ஒன்றோ, இரண்டோ) ஆரியர் என்று ஆனதுடன், அதுவும் இன்று ஆச்சாரியார் கோஷ்டிக்கு இடமே இல்லை என்ற நிலைமையுடன் ஆச்சாரியார் காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசையே ஒழிக்க காங்கிரசுக்கு எதிர்ப்பாகப் பிரச்சாரம் செய்து கோஷ்டி - கும்பல் சேர்க்கின்றார் என்றால், இன்றைய நிலையில் ஆச்சாரியார் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

 

எப்படியோ ஒருவகையில் பார்ப்பனரைக் காங்கிரசுக்கு எதிர்ப்பாகக் கட்சி கட்டும்படி செய்த தன்மையானது இந்த நாட்டுக்குச் - சிறப்பாகத் திராவிடர்களுக்கு - நல்ல (காலம்) வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும். "தர்மம்" (என்ன தர்மம்? வருணாசிரம தர்மம்) காப்பாற்றப்பட வேண்டுமானால் காங்கிரசை ஒழிக்க வேண்டும்" என்று பார்ப்பனர்கள் முயற்சி செய்வதனால், இந்தச் சமயத்தில் திராவிடர்களின் முக்கிய முழு மூச்சுக் கவனம் அப்பார்ப்பனர்கள் அக்காரியத்தில் வெற்றி பெறாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வதேயாகும். இந்த முயற்சியில் ஆச்சாரியார் - பார்ப்பனர் - பார்ப்பனக் கூலி (அனுமார், விபீஷ்ணனர்) ஆகியவைகளைத் தோல்வி அடையச் செய்யும்படி செய்ய வேண்டுமானால், திராவிடர்கள் கட்டுப்பாடாக, இன உணர்ச்சியுடன், காமராசரை வெற்றி சிம்மாசனத்தில் இருந்து சிறிதும் ஆடவும், அசையவும், நழுவவும் இடம் ஏற்படாமல் கெட்டியாகச் சவுகரியமாய் நிலைத்து இருக்கும் படிப்பார்த்துக் கொள்வதேயாகும்.

 

இன்று திராவிடர் யாராய் இருந்தாலும், அவர் எந்தக் கட்சியாரானாலும் காமராசரை எதிர்க்கிறார்கள் என்றால், அவர்களைத் திராவிடர்களின் (தமிழர்களின்) எதிரிகள், தமிழர்களின் துரோகிகள் - இனத்தைக் காட்டிக் கொடுத்து வாழும், பிறவியில் சந்தேகப்படக் கூடியவர்கள் என்றுதான் கூவேண்டும். பார்ப்பானின் (வருணாசிரம) தர்மம் ஒழிக்கப்பட இது போன்ற வாய்ப்பு இனி தமிழனுக்கு எளிதில் கிடைக்காது. இம் முயற்சியில் தமிழருக்கு இரண்டு நலம் ஏற்படுகின்றன. தர்மம் (சாதி - தர்மம்) ஒழித்தல்; மற்றொன்று தமிழருக்கு இன உணர்ச்சி ஏற்பட ஒரு வாய்ப்பு; ஆதலால் 1960- ஆம் ஆண்டுத் திட்டமாக தமிழ்மக்கள் எல்லாருக்குமே பொதுவாக இதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பார்ப்பனர்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதைப் பார்த்துப் படிப்பினையாகக் கொள்ளுங்கள்.

 

ஒரு சிறு விளக்கம், காஞ்சீபுரம் மாநாட்டில் எனது தீர்மானம் ஜனநாயக முறைப்படி தோல்வி அடைந்துவிட்டது என்றும் அதனால் நான் காங்கிரசிலிருந்து வெளியேறிவிட்டேன் என்பதாகச் செங்கற்பட்டில் காமராசர் பேசி இருப்பதாகப் பத்திரிகையில் பார்த்தேன். நடந்தது அதல்ல; எனது தீர்மானம் "காங்கிரஸ் அடிப்படைக் கொள்கைக்கு மாறானது" என்று கூறி தலைவர் திரு. கல்யாண சுந்திர முதலியார் "டிஸ் அலவ் (அனுமதி மறுப்பு) செய்து விட்டேன்" என்று கூறித் தள்ளிவிட்டார். தலைவர் ஒப்புக் கொண்டு ஓட்டுக்கு விட்டிருந்தால், எனது தீர்மானத்திற்கு 100-க்கு 75- பங்கு ஓட்டு கிடைத்திருக்கும். இது சூழ்ச்சி மீது நடந்தது. அச்சமயம் சீனிவாசய்யங்காரும், இராஜாஜியும் டாக்டர் வரதராஜிலு நாயுடுவையும், திரு.வி. வையும் "எப்படியோ" சரிப்படுத்திக் கொண்டுவிட்டார்கள்; அதை விளக்கினால் நம் இனத்திற்குத்தான் இழிவாகும்.

 

                -------------------- பெரியார் .வெ.ரா. அறிக்கை: 'விடுதலை', 05.01.1960

0 comments: