Search This Blog

1.11.16

பொது சிவில் சட்டம் - சில கேள்விகள்


பொது சிவில் சட்டம் - சில கேள்விகள்



சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற (29.10.2016) பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் தெளிவாக்கப்பட்டுள்ள கருத்துகளும், தகவல்களும் முக்கியத்துவம்வாய்ந்தவையே.

(1) பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட முயற்சிக்கும், பொது சிவில் சட்டத்தை நோக்கிய சில கேள்விகள் உண்டு. மற்ற மதத்தை நோக்கி செலுத்தப்படும் பார்வைக்கு முன்னதாக பி.ஜே.பி. அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரத்துக்கான இந்தச் சட்டத்தில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?


 (அ) பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தும் இந்து மதத்தின் வருணாசிரமம் - ஜாதிக்குத் தடை வருமா?

 (ஆ) சுடுகாடு - இடுகாடுகூட பொதுவாக இல்லாமல் இன்னும் ஜாதி அடிப்படையிலான இடங்கள் இருக்கின்றனவே - அவற்றைத் தடை செய்து இந்துக்கள் அனைவருக்கும் ஒரே சுடுகாடு - இடுகாடு உருவாக்கப்படுமா?

 (இ) இந்து மதத்துக்குள் முரண்பட்ட பல்வேறு பிரிவுகள் இருக்கின்றனவே அவையெல்லாம் அகற்றப்பட்டு ஒரே கோட்பாடு - சீரமைப்புக்குள் கொண்டுவரப்படுமா? எடுத்துக்காட்டாக பல்வேறு திருமண முறைகள் ஒழிக்கப் பட்டு, ஒரே மாதிரியாக ஏற்படுத்தப்படுமா?

 (ஈ) இந்து மதத்துக்குள்ளே சில பிரிவினர்களிடையே பலதார திருமணங்கள் உண்டே - அவையும் தடுக்கப்படுமா?

 (உ) இந்துக்களுக்குள் உணவுப் பழக்கவழக்கங்கள் பலவகைப்பட்ட முறைகளில் உள்ளனவே - வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி, நாய்க்கறி உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியமாக உண்டே! மாட்டுக்கறித் தடை விதிப்பை அப்பகுதிகளிலும் முற்றாகச் செய்யும் நோக்கம் பின்வாங்கப்படுமா?

 (ஊ) இந்து மதக் கோவில்களில் அர்ச்சகர்களாக பார்ப் பனர்கள் மட்டுமே வர முடியும் என்ற நிலை ஒழிக்கப்பட்டு, இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் அதற்குரிய பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகராகும் உரிமை வழங்கப்படுமா?

 (எ) இந்து மத வேதங்கள், சாஸ்திர நூல்கள், (மனுதர்மம் உள்பட)உபநிஷத்துகள்,இதிகாசங்கள்,புராணங்கள்எனப்படு பவைகளில் ஜாதியை ஆதரித்தும், பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் அல்லாதாரை சூத்திர்கள் என்றும், அசுரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், பெண்களைப் பாவ யோனி யில் பிறந்தவர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளதே - இந்த அவமரியாதையை அகற்றும் நோக்கத்திலும், அனைவரும் சமத்துவம் என்ற ஒரே பொது நிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்திலும் அவையெல்லாம் தடை செய்யப்படுமா?

 (ஏ) இந்தியா முழுவதற்கும் மது விலக்குச் சட்டம் கொண்டுவரப்படுமா? (அய்) புதிய கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவதாக உத்தேசித்துள்ளார்களே - அந்தத் திட்டம் பொது சிவில் சட்டத் திற்கு விரோதமான தன்மையில் இருக்குமாதலால் அத்திட்டம் கைவிடப்படுமா? புதிய கல்வித் திட்டத்தின் முகவுரையில் இந்திய நாட்டின் குருகுலக் கல்வி, வேதக் கல்வி அடிப்படையில் குரு - சிஷ்ய உன்னதமான உறவு என்றெல்லாம் கூறப்பட்டுள்ளதே - இப்பொழுது கொண்டுவர உத்தேசித்துள்ள பொது சிவில் சட்டத்துக்கு இந்தக் கல்வி முறை எந்த வகையில் உகந்ததாக இருக்க முடியும்?

 (ஒ) இந்தியாவில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றனவே சி.பி.எஸ்.இ., செகண்டரிஸ்கூல், மெட்ரிகுலேசன், அங்கன்வாடி என்றெல்லாம் பல்வேறு வகையான கல்விக் கூடங்களும், கல்வித் திட்டங்களும் நடைமுறையில் உள்ளனவே இவை யெல்லாம் ஒழிக்கப்பட்டு இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி கொண்டுவரப்படுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் முறையாகப் பதிலும், விளக்கமும் தெளிவோடு சொல்லியதற்குப் பிறகு, பொது சிவில் சட்டம்பற்றிய கருத்துக் கூறுமாறு பொதுமக்களைக் கேட்பதுதானே பொருத்தமாக இருக்க முடியும்? 


இன்னொரு முக்கிய கேள்வி இருக்கிறது. இந்து மதத் துக்குள் தாங்கள் துவிஜாதி (இரு பிறப்பாளர்) தாங்கள் பிர்ம்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் பிர்ம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்பதை அறிவிக்கும் தகவல் பலகையாகக் காட்சியளிக்கும் பூணூலுக்குத் தடை விதிக்கப்படுமா? முஸ்லிம் மதத்தில் பெண்கள் உரிமைப் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் - அவர்களை மீட்டெடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கவலையுடன் கூறியிருப்பதை ‘வரவேற்கிறோம்.’ பெண்கள் எந்த மதத்தின்கீழ், எந்தப் பதாகையின்கீழ் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கவேண் டியதுதான். கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்த ஊக்கப்படுத்த எந்த மதத் தடைகளையும் தகர்த்துக் கொண்டு உரிமை மறுக்கப் பட்டவர்கள் கொந்தளித்து எழவே செய்வார்கள். அந்தக் கல்வி, அறிவுத் திசையை செப்பனிடுவதாகவும் இருக்க வேண்டும்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் பர்தா முக்காடு அணிந்து வருவது அனேக மாக முற்றாக மறைந்துவிட்டது. இந்து மதத்திலும்கூட சில பிரிவுகளில் அது இருந்துதான் வருகிறது. தலாக் முறைகூட சிலநாடுகளில் கடைபிடிக்கவில்லைதான். இந்த முறை இந்தியாவில் இருப்பதால் எல்லா முசுலிம் வீடுகளிலும் இது அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கான விவரங்கள் கிடையாது! நூற்றுக்கு நூறு கல்வியைக் கொடுங்கள்- உரிமைகள் எந்த மதத்தில் மறுக்கப்பட்டாலும் கல்வியின் எழுச்சிக்குமுன் மறுப்புகள் மரித்துப் போய்விடும். 

அடிப்படையைச் செய்யாமல், இலைகளையும், கிளைகளையும் வெட்டிக் கொண்டிருக்கவேண்டாமே! 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகளில் கட்டாய கல்வி, அகில இந்திய அளவில் மதுவிலக்கு என்று கூடத்தான் இந்திய அரசமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், பொது சிவில் சட்டம்தான் முக்கியம் என்று பி.ஜே.பி. சொல்லும்போது, அச்சமும், அய்யமும் கைகோர்க்கின்றன என்பது உண்மையே! 

 ----------------------------------’விடுதலை’ தலையங்கம் 1-11-2016

8 comments:

தமிழ் ஓவியா said...


இந்து சிவில் சட்டமும் பொது சிவில் சட்டமும்


- கவிஞர்.கலி.பூங்குன்றன்



பொது சிவில் சட்டம் என்ற ஒன்றை மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இதனை ஒருமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதா என்று தெரியவில்லை.

இன்றைக்கு இந்தச் சட்டத்தைக் காட்டி இஸ்லாமியர்களை மிரட்டும் பி.ஜே.பி அரசு இந்து சிவில் திருத்தச் சட்டம் ஒன்றினை (Hindu Civil Code) கொண்டு வரவேண்டும் என்று அன்றைய சட்ட அமைச்சரும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பியுமாகிய அண்ணல் ‘பாபாசாகேப்’ டாக்டர் அம்பேத்கர் அவர்களும், அவருக்குத் துணையாக பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களும் முயற்சித்தபோது, இவர்களின் முன்னோர்களான இந்துத்துவாவாதிகள் எப்படியெல்லாம் நடந்து கொண்டனர் என்பது மிகவும் முக்கியமானது.



இந்து சீர்திருத்தச் சட்டம் (Hindu Code Bill)

அரசமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர், பிரதமர் நேரு போன்றோர்களுக்கு நாட்டை சீராக, ஜனநாயக, சமூக மறுமலர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்குக் குறைந்தபட்சத் தேவைகள் என்ன என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இருந்தது.

குறைந்தபட்சத் தேவைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது இந்து சீர்திருத்தச் சட்டம். முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், முகர்ஜி, சர்தார் படேல், இந்துத்துவாவின் முன்னோடி ‘ஜனசங்’கத்துக்காரர் சியாம் பிரசாத் முகர்ஜி, மண்ணுருண்டை மாளவியா போன்றவர்கள் இதற்கு எதிராக இருந்தார்கள்.

இரு தலைவர்கள் இந்துச் சீர்திருத்தச் சட்டம் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இவர்களில் முன்னால் நின்றவர் அம்பேத்கர். அவருக்குப் பின்னால் நின்றவர் நேரு.

தனது இந்து சீர்திருத்த சட்ட அறிக்கையை 1947ஆம் ஆண்டு அரசியல் சட்ட நிர்ணய சபையில் அறிமுகம் செய்த அம்பேத்கர், சட்டத்தின் ஏழு முக்கியப் பகுதிகளைப் பற்றியும் அவற்றில் பரிந்துரை செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்தும் பேசினார்.


தமிழ் ஓவியா said...


சொத்துரிமை, வாரிசுகள் யார் என்பதை நிர்ணயிப்பது, இறந்தவர்களைச் சார்ந்திருப்பவர்களைப் பேணுதல், திருமணம், விவாகரத்து, தத்தெடுத்துக்கொள்ளும் உரிமை என்ற ஆறு பகுதிகளில் மாற்றங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.



இந்தச் சட்டத்திற்கு நாடாளு மன்றத்திலேயே பலத்த எதிர்ப்பு இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் அதை மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிர்த்தவர்கள் பலர் இருந்தனர். எனவே, சட்டம் நிறைவேற்றப்படாமலேயே குப்பைத் தொட்டியில் போடப்பட்டது. இதற்காகவே நான்கு ஆண்டுகள் விடாமல் உழைத்த அம்பேத்கருக்கு இந்தத் தோல்வி ஏமாற்றத்தை அளித்தது. நேரு தன்னைக் கைவிட்டுவிட்டதாக அவர் நினைத்தார். எனவே, பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். சட்டம் வராவிட்டால் தானும் பதவியிலிருந்து விலகுவதாக முன்னால் பயமுறுத்தியிருந்தாலும், காங்கிரஸ் கட்சியை நேருவால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்தச் சட்டம் நிறைவேற-வில்லை என்பதற்காகத் தேர்தல் நடக்கவிருக்கும் தருவாயில் கட்சியைப் பகைத்துக்கொள்ள அவரால் முடியவில்லை. அவர் தேர்தலை எதிர்நோக்கியிருந்தார்.

1951-_52 தேர்தலில் சட்ட மறுப்புவாதிகள் நேருவுக்கு எதிராகக் காவியுடை அணிந்திருந்த பிரபுத் பிரம்மச்சாரி என்பவரை நிறுத்-தினார்கள். அவருக்கு ஜனசங்கம், இந்து மகாசபா, ராம்ராஜ்ய பரிஷத் போன்ற இந்துக் கட்சிகள் ஆதரவளித்தன. பிரம்மச்சாரிக்கு ஆதரவாக அய்ம்பதாயிரத்துக்கும் மேல் ஓட்டுக்கள் விழுந்தன என்ற செய்தி சட்டத்துக்குக் கணிசமான எதிர்ப்பு, குறிப்பாக வட இந்தியாவில் இருந்தது என்பதைத் தெளிவாக்குகிறது. முதல் நாடாளுமன்றம் தொடங்கியதும், நேரு சட்டத்தைப் பல பகுதிகளாக ஆக்கி, திரும்பவும் கொண்டுவந்தார்.



1952_57 நாடாளுமன்றத்தில் நான்கு சட்டங்கள் _ இந்து திருமணச் சட்டம், சொத்துரிமைச் சட்டம், தத்தெடுத்தல் சட்டம், முதிரா வயதினர் பராமரிப்புச் சட்டம் என்று அழைக்கப்பட்டவை நிறைவேறின. அம்பேத்கர் மாநில அவை உறுப்பினராக இருந்தாலும், விவாதங்களில் அவர் பங்கேற்கவில்லை.

1947 முதல் 1951 வரை சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் இந்து சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றப் பாடுபட்டார். திருமணம், வாரிசுரிமை, மணமுறிப்பு ஆகியவற்றில் இந்துப் பெண்களுக்கு இழைக்கப்-பட்ட அநீதிகளை முடிவுக்கு கொண்டு வர நான்கு ஆண்டுகளும் அவர் எடுத்த முயற்சிகள் அளவிடற்கரியது. ஏப்ரல் 11, 1947இல் அறிமுகம் செய்யப்பட்ட சட்ட வரைவு செப்டம்பர் 26, 1951இல் கைவிடப்பட்ட போது அவர் பதிவு செய்த வலி மிகுந்த வார்த்தைகள் இவை. “நான்கு ஆண்டுகளுக்குப் பின்னால் கண்ணீரும் இல்லாமல், ஒப்பாரியும் இல்லாமல் நான்கு சரத்துக்களே நிறைவேற்றப்பட்ட நிலையில் அச்சட்ட வரைவு கொல்லப்பட்டுவிட்டது. அவையின் முன் அது பரிசீலனையில் இருந்தபோதும் வலியும், இம்சையுமாய் அது வாழ்க்கைக்காக அல்லாடிக் கொண்டிருந்தது. அச்சட்ட வரைவு நிறைவேறாததால் கடைசியில் நான் உண்மையாக இருக்க வேண்டும். அது நான் வெளியேறுவதன் வாயிலாகவே அமைய முடியு’’மென்று கூறி பதவி விலகினார். இந்த இந்துச் சீர்திருத்த சட்டத்தை சிதைத்தவர்கள் தான் இப்போது பொது சிவில் சட்டத் திருத்தம் கொண்டுவர சலங்கை கட்டி ஆடுகிறார்கள்.



சிறுபான்மையினரில் எடுத்துக்காட்டாக இஸ்லாமியர்களுக்கு என்று இந்தியாவில் தனிச்சட்டம் எதுவுமே இல்லை. உதாரணத்திற்கு இந்தியக் குடிமகனின் பொது உரிமை சம்மந்தப்பட்ட வழக்குகளில் இஸ்லாமியர்கள் நீதிமன்றத்தை அணுகினால் அல்லது ஒரு இஸ்லாமியருக்கு எதிராக மற்றவர் நீதிமன்றத்தை அணுகினால் அப்போது இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்-படாது. அது இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள விதிகளின்படிதான் வழக்காடி தீர்ப்பு வழங்கும். அதாவது அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்கப்படும்.


தமிழ் ஓவியா said...


இரண்டு இஸ்லாமியர்களுக்கு இடையே பொதுப் பிரச்சினைகளில் சிக்கல் ஏற்பட்டால் அது பொது நீதிமன்றங்களில்தான் வழக்கு தொடரப்படுமே தவிர இஸ்லாமிய சட்டப்படி பார்க்கப்படாது. அப்படி இஸ்லாமிய சட்டப்படி பொதுப் பிரச்சினைகளில் தீர்ப்பு வழங்கப்-படுமேயானால் அது அரசமைப்புச் சட்டப்படி செல்லாததும், சட்ட விரோதமானதுமாகும். பொதுச் பிரச்சினைகளில் இஸ்லாமிய சட்டப்படி பார்க்க வேண்டும் என்று எந்த ஒரு இஸ்லாமியரும் கோரிக்கை வைப்பதில்லை.

தற்போதுள்ள இஸ்லாமிய சட்டப்படி திருமணம், மணவிலக்கு, இறந்தவரின் சொத்துக்களை அவரது உறவினர்கள் பிரித்துக் கொள்ளுதல், வஃக்பு வாரியச் சொத்துக்களை நிர்வகித்தல் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்திலும் பொதுவான சட்டம்தான் இஸ்லாமியர்களுக்கு உள்ளது. இதிலும் சொத்து தொடர்பான பல விவகாரங்களை இஸ்லாமியர்கள் பொது நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், இஸ்லாமியர்-கள் அனைவரும் இஸ்லாமிய சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது.

மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு மதரீதியான சர்ச்சைகளில் சிக்கியதால் அரசு நிர்வாகத்தின் இயக்கம் வெகுவாக பாதித்தது. அதேபோல் பன்னாட்டளவில் இந்தியாவின் மதிப்பும் சீர்குலைய ஆரம்பித்தது. நிர்வாகச் சீர்கேட்டை சீர் செய்யாமல் அனைத்துத் துறைகளிலும் தனியார் மயத்தை மோடி அரசு உருவாக்க ஆரம்பித்தது. சத்தமில்லாமல் வங்கி, ரெயில்வே, பெட்ரோலி-யத்துறை மற்றும் வணிக ரீதியாக நல்ல வருவாயைத் தரும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் தொடர்கதை-யாகி வருகிறது. ஒருபுறம் வேலைவாய்ப்பின்மை பெருக்கம், மறுபுறம் விளைபொருட்கள் வீழ்ச்சி போன்றவை-களால் மத்திய அரசு முழுமையான தோல்வியடைந்த ஓர் அரசாக மாறிவிட்டது.

இந்தத் தோல்வி-களில் இருந்து மக்களை திசைதிருப்ப பிரிவினைவாத அரசியலைக் கையிலெடுத்துள்ளது. அதில் ஒன்று பொதுசிவில் சட்டம். இது பல முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு அரசியல் சூழ்ச்சியே அன்றி வேறில்லை. மேலும் பொதுசிவில் சட்டம் என்பது பிரிவினையைத் தூண்டி சமூக அமைதியைக் கெடுக்கும் செயல்.

தமிழ் ஓவியா said...

“மோடி அரசு கொண்டுவருவோம் என்று பூச்சாண்டி காட்டும் பொதுசிவில் சட்டம் என்பது இந்தியக் குடிமகனின் கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொது சிவில் சட்டம் இந்த நாட்டிற்கு நல்லதல்ல. இந்நாட்டில் பல கலாச்சாரங்கள் உள்ளன. பொது சிவில் சட்டம் மேம்போக்காக பார்த்தால் அனைத்து மக்களையும் ஒரே மாதிரியாக கருத வேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கும். ஆனால் இது பொய்யான அல்லது மாயையான ஒன்றாகும்.



உண்மையில் இச்சட்டம் நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதிக்கும், இந்த அரசு மதம் சார்ந்த அரசாக தன்னை பொதுவில் அறிவித்துள்ளது, அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்று கருதப்படும் மோடி ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவான குரல் எழுப்புகிறார். மேலும் தான் ஒரு இந்து என்றும், எனக்கு அந்தப் பற்று உள்ளது என்றும், இதைக் கூறுவதில் நான் பெருமைப்-படுகிறேன் என்றும், பகிரங்கமாக அறிவிக்கிறார். இப்படிப் பொதுவெளியில் கூறுபவர் கொண்டுவரும் சட்டம் ‘பொது சிவில் சட்டம்’ என்று கூற முடியுமா?

“பொது சிவில் சட்டத்தின் கீழ் தேசிய ஒருமைப்பாடு ஏற்படும் என்பது ஒரு மாயை. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பிரிவினையை உருவாக்கும். மேலும், இது சிறுபான்மையினர் மனதில் தங்களின் உரிமைகளை இழந்த உணர்வை ஏற்படுத்தும், நாட்டின் அமைதியைக் குலைத்து சீரழிவுகளை ஏற்படுத்தும். இங்கே இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், சீக்கியம், தலித்தியம் மற்றும் ஆதிவாசி பழக்கங்கள் என பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றக் கூடியவர்கள் ஒன்றுபட்டு நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி ஆங்கிலேயர்களின் கைகளில் இருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தனர்.

நிர்வாணமாக பொதுவிடத்தில் இருப்பது சட்டப்படி குற்றமாகும், அவர் மனநோயாளி-யாக கருதப்பட்டு காப்பகத்தில் அடைக்கப்-படுவார். ஆனால் இந்து மதத்திலும், சமண மதத்திலும் நிர்வாண சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர். காரணம் இந்து மற்றும் சமணச் சட்டம் இதற்கு அனுமதியளித்துள்ளது. ஆயுதம் ஏந்துவது தவறு என்று இந்திய குற்றவழக்கு மற்றும் பொதுப் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது, குறுவாள் என்ற பெயரில் கத்தியை எப்போதும் வைத்துக்கொள்ள சீக்கியர்களுக்கு தனி அனுமதி வழங்குகிறது.

மது அருந்துவது குற்றம், பெண்களை மதுபான விடுதிகளில் நடனமாட அனுமதி போன்றவை இந்திய சட்டப்படி குற்றமாக கருதப்படும். ஆனால் மாநில அரசுகள் மதுபான கடை வைக்க உரிமங்கள் வழங்குகின்றன. தமிழகம் போன்ற மாநிலங்களில் அரசே மதுபானக் கடைகளைத் திறந்து நடத்துகிறது.

சூதாட்டமும், நைட் கிளப்புகளும், ஆபாச நடனங்களும் தண்டனைக்குரிய குற்றம். ஆனால், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரசின் அனுமதியுடனேயே இவை நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இதற்கு அனுமதி உண்டு. பெண்களின் வாழ்வைச் சீரழிக்கும் ஆபாச நடன மதுபான விடுதிகளை மகாராஷ்டிர அரசே தற்போது திறந்துள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் வரிவிதிப்பில் வித்தியாசங்கள் உள்ளன. மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகளைக் கூட பொதுவில் கொண்டு வரமுடியவில்லை.

தமிழ் ஓவியா said...

முகலாயர்கள் மிகப் பரந்த நாட்டுப் பகுதியை ஆண்டார்கள். அவர்கள் நாடு முழுவதும் பொதுச் சட்டம் கொண்டு-வரவில்லையே! அதேபோல் ஆங்கிலேயர்கள் ஆண்ட போதும் பொதுச் சிவில் சட்டம் கொண்டுவரவில்லை. காரணம் அனைவருக்கும் பொதுவான சட்டம் ஏற்கனவே உள்ளது. நமது அரசமைப்புச் சட்டம் இதை உறுதிசெய்கிறது.

இங்கே வசதிபடைத்தவர்களுக்கு ஒரு நீதி; அதிகார வர்க்கத்திற்கு ஒரு மாதிரி, அடியாள் பலமுள்ளவனுக்கு ஒரு மாதிரி உள்ளது. ஏழைகளுக்கு என்று எந்த சட்டமும் வளைந்துகொடுக்காது.

அப்படியிருக்க பொதுச் சிவில் சட்டம் என்ற போர்வையில் இந்த அரசு எதைக் கொண்டுவரத் துடிக்கிறது?

தமிழ் ஓவியா said...

இந்து மதத்தைப் பொருத்தவரை வைணவர்கள், ஸ்மார்த்தர்கள், லிங்காயத்துக்ள், பிரம்ம, பிராத்தன, ஆரிய சமாஜத்தினர் மட்டுமல்ல, பவுத்த, சமண, சீக்கியர் அனைவரும் கூட இந்துக்கள்தான். இவர்கள் அத்தனைப் பேருக்கும் ஒரே வகையான திருமண முறைகளோ, சடங்குகளோ, சம்பிரதாயங்களோ, பழக்க வழக்கங்களோ உண்டா?

வழிபாட்டிலும் ஒன்றுமை உண்டா? சில கோயில்களில் கருவறைக்குள்ளும் சென்று மூலவிக்கிரகத்தைக் கட்டிப் பிடித்து தழுவலாம். பெரும்பாலான கோயில்களில் பார்ப்பன அர்ச்சகர்கள்தான். மற்றவர்கள் செல்ல முடியாது. அப்படிச் சென்றால் சாமி தீட்டுப்பட்டுவிடும், தோஷப்பட்டுவிடும் என்ற நிலை.

சபரிமலைக் கோயிலுக்கு பெண்கள் செல்லக் கூடாது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற ஜாதி _ தீண்டாமை ஒழிப்பு கருத்தின் அடிப்படையில் தந்தை பெரியார் போர்க்கொடி தூக்கிய நிலையில், தி.மு.க. ஆட்சியில் அதற்கான சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி முறையாக அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டு, அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் ஒரு காலகட்டத்தில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது ஏன்? இதே பி.ஜே.பி.யினர், இந்துத்துவவாதிகள் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக குரலை எழுப்பாததேன்?

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள் என்ற எண்ணம் ஏற்படாதது ஏன்? மாறாக உச்சநீதிமன்றத்தில் ஆகமங்களை எடுத்துக்-காட்டி பார்ப்பன முறையீட்டாளர்கள் விவாதித்தபோது _ இந்த சங்பரிவார்க் கூட்டம் என்ன செய்து கொண்டு இருந்தது?

வைகனாச ஆகமத்தை எடுத்துக்காட்டி, சூத்திரர்கள் சாமி சிலையைத் தொட்டால் சாமி சிலை தீட்டாகிவிடும். (சாமிக்குள்ள சக்தி _ சூத்திரன் தொட்டால் பழுதாகிப் போய்விடுமோ?) அந்தத் தீட்டிலிருந்து விடுவிக்க பல பிராயச்சித்தங்களைச் செய்து சுத்திகரிக்க 108 கலசங்களை வைத்து, முறைப்படி ----வணங்கிய பின் பிம்பங்களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும்! அதனைத் தொடர்ந்து மகா சாந்தி ஹோமமும் பிராமண போஜனமும் செய்யப்பட வேண்டும் என்பதுதானே இந்து மதத்தின் வைகனாச ஆகமம் கூறுவது.

திருமண முறைகளில்கூட இந்து மதத்தில் ஜாதிக்கு ஜாதி வேறுபாடு உண்டு. இவற்றை எல்லாம் என்ன செய்ய உத்தேசம்? ஒரே குடையின்கீழ் இவர்கள் விரும்பும் பொதுச் சட்டத்தைக் கொண்டு வருவார்களா?

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்ற வழக்கு லண்டன் பிரிவி கவின்சில் வரை சென்று சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?

பிறப்பின் அடிப்படையிலேயே உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதியை ஒழிக்க சட்டம் கொண்டு வருவார்களா?

இந்து மதத்தின் பெரும்பாலான மக்களான பார்ப்பனர்கள் அல்லாதாரை சூத்திரர்கள் என்பதும், அவர்கள் இந்து மதத்தின் படைப்புக் கடவுளான பிரம்மாவின் கால்களிலிருந்து பிறந்தவர்கள் என்பதோடு _ சூத்திரர்கள் ஏழு வகைப்படுவர், அதில் ஒன்று விபசாரி மகன் என்று இந்து மதத்தின் மிக முக்கிய சாத்திர நூலான மனுதர்மம் (அத்தியாயம் 8, சுலோகம் 415) கூறுகிறதே, இந்தப் பொது சிவில் சட்டத்தின்படி இந்த நூல் தடைசெய்யப்படுமா?

இந்த மனுதர்ம நூலை ஆர்.எஸ்.எஸ். மாநாட்டையொட்டிய ஊர்வலத்தில் அலங்கரித்து எடுத்துச் செல்லுகிறார்கள் என்பது இந்த இடத்தில் சுட்டிக்காட்டத் தகுந்ததாகும்.

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறதே _ இந்து மதத்தின் புனித நூல் என்று போற்றப்படும் கீதை (அத்தியாயம் 9, சுலோகம் 32) அதனையும் தடை செய்ய இந்தச் சட்டத்தில் இடம் உண்டா?

இதில் என்ன வெட்கக்கேடு என்றால் இந்தக் கீதையைத்தான் புனித நூல் என்று அறிவிப்போம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சொல்லுகிறார்.

ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று இன்னொரு பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறாரே _ அந்த ராமராஜ்ஜியத்தில் என்ன நடந்ததாக ராமாயணம் கூறுகிறது?

அந்த ராமாயண உத்தர காண்டம் என்ன கூறுகிறது? சம்பூகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான் என்று கூறி ராமன் வாளால் வெட்டிக் கொன்றானே _ அதுதான் இந்து தருமத்தின் வருணாசிரமம் கூறுகிறதாம். இந்த ராமாயணத்தையும் தடை செய்வார்களா?

இன்னும் எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகள் _ கேள்விகள் உண்டு!

பொது சிவில் சட்டம் கொண்டுவரப் போகிறோம் என்பவர்கள் முதலில் இதற்குப் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

முஸ்லிம் மதத்தைப் பொருத்தவரை முத்தலாக் முறை பல நாடுகளில் கைவிடப்பட்டது. இதனை எதிர்த்து இந்தியாவில் முஸ்லிம் பெண்களே நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். இது குறித்துக்கூட முஸ்லிம் தலைவர்கள் பல விளக்கங்களைக் கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது. நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அதுவரை பொறுக்காமல் மூக்கை நுழைக்க முண்டா தட்டுவது ஏன்? மாற்றம் என்பதுதான் மாறாதது. இது எல்லோருக்கும் பொருந்தக் கூடியதே!---நவம்பர் 01-15, 2016

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் பேசுகிறார்







“இந்து சட்ட முன்வடிவை’’ நாடாளு-மன்றத்தில் 1949ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி சட்ட அமைச்சர் அம்பேத்கர் முன்மொழிந்து பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

“இந்தச் சட்ட முன்வடிவைப் புரட்சிகரமான நடவடிக்கை எனக் கூற முடியாது. மேலும், இது அடிப்-படையையே மாற்றியமைக்கிற கோட்பாடு என்றும் சொல்ல முடியாது. திருமண உரிமைகள், நீதிமன்ற திருமண ரத்து, தத்து எடுத்தல், வாரிசு நிலை போன்றவற்றில் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. திருமணச் சட்டத்தைப் பொறுத்தவரை எந்த வகையான திணிப்பும் இல்லை. தர்மத்தைப் பின்பற்றும் வைதீகர்களுக்குச் சரியெனப்-படுவதைச் செய்யலாம். ஆனால், தர்மத்தைப் பின்பற்றாமல் மனசாட்சி-யையும், பகுத்தறிவையும் பின்பற்றும் சீர்திருத்தவாதிகள் அவர்களுக்குச் சரி எனத் தோன்றுவதைச் செய்து கொள்ளலாம்.

புதிய பாதையில் நடைபோடு-கிறவர்களே இறுதியாக வெல்வார்கள் என நம்புவோமாக. மாபெரும் அரசியல் அறிஞரான பர்க், பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரான தனது நூல் “பழமையைப் பாதுகாக்க விரும்புபவர்கள் பழுது பார்க்கவும் தயாராக இருக்க வேண்டும்.’’

நான் இந்த அவையில் கூற விரும்புவது என்னவென்றால், “இந்து அமைப்பு, இந்து கலாச்சாரம், இந்து சமுதாயம் ஆகியவற்றைப் பாதுகாக்க விரும்புவீர்-களானால் பழுது பார்க்க வேண்டிய அவசியம் இருந்தால் ஒருபோதும் தயங்காதீர்கள். சீர்குலைந்து போயிருக்கும் இந்து அமைப்பைப் பழுதுபார்க்கவே இச்சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.