பெரியாரின் வாரிசு ஜெயலலிதாவா?
தி இந்து (தமிழ்) நாளேட்டில் பெரியா ரின் வாரிசுதான் ஜெயலலிதா - எனும் தலைப்பில் க. திருநாவுக்கரசு (திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநாவுக் கரசு அல்ல இவர்) என்பவர் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார். (22.10.2014)
தலைப்பைப் பார்த்தவுடன் பலருக்கும் பகீர்
என்றாகி விட்டது; ஏராளமான தொலைப் பேசிகள். யார் இந்த திருநாவுக்கரசு?
அபாண்டமாக அள்ளித் தெளித்த கோலமாக, அரை குறைப் பிரசவமாக எழுதப் பட்ட
கட்டுரையின் முகத் திரையைக் கிழியுங்கள்! என்ற அன்பு வேண்டுகோள் வேறு.
சுயமரியாதைக்கென இயக்கம் கண்ட ஒரு
மாநிலத்தில் இப்படி நடைபெறுவது மாபெரும் முரண் நகையாகத் தோன்றக்கூடும்.
ஆனால் சுயமரியாதை அழித் தொழிப்பு இன்று தமிழக அரசியலில் முழுமை
பெற்றிருக்கிறது என்றால், அதற்கான தொடக்கம் பெரியார் உருவாக்கி வளர்த்த
சுயமரியாதை இயக்கத்திலும், திராவிடர் கழகத்திலும் இருக்கிறது. திராவிட
இயக்கத்தின் வரலாறு தெரியாதவர்களுக்கு இது சற்று அதிர்ச்சியாக இருக்கக்
கூடும்.
ஆனால், அதுவே உண்மை. நான் சொல்வது சரியா,
தவறா என்று சிந்தித்துப் பார்த்துச் சரியென்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்
என்று பொது மக்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்ட பெரியார்
ஒருபோதும் அந்தச் சிந்தனைச் சுதந்திரத்தைத் தனது இயக்கத்திலிருந்த பிற
தலைவர்களுக்கோ, தொண்டர்களுக்கோ வழங்கவில்லை என்பது கட்டுரையாளரின் ஒரு
குற்றச்சாற்று.
நம்பு - நம்பினால் நடராஜா; நம்பா விட்டால்
எமராஜா என்று கூறும் மதவாத அச்சுறுத்தல் போன்றதல்ல - தந்தை பெரியார்
அவர்களின் கருத்தோட்டம்.
பொது மக்களின் சிந்தனைச் சுதந்திரத் துக்கு விரிவான இடம் கொடுக்கும் தந்தை பெரியார் தொண்டர்களிடம் கட்டுப்பாடு விதிப்பது ஏன்?
அதைப்பற்றி பெரியாரே சொல்கிறார்:
தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக 18ஆவது மாநில மாநாட்டில் (8.5.1948, 9.5.1948) உரையாற்றிய தந்தை பெரியார் குறிப்பிட்டதாவது:
நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள்
சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல; உங்கள் மனசாட்சி என்பதைக்கூட மூட்டை கட்டி
வைத்து விட வேண்டியதுதான். கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத்
தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து
பார்க்கலாம், என்னுடன் வாதாடலாம்.
ஒரு ஜில்லா சூப்பிரண்டெண்டு சுடு என்று
போலீஸ்காரனுக்கு உத்தரவு போட, அவன் என் மனசாட்சி அதற்கு இடம்
கொடுக்கவில்லையே என்று கூறினால் அந்த சூப்பிரண்டெண்ட்ன்ட் நிலை என்னாவது?
கசாப்புக் கடையில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டவன் அந்த ஆட்டை வெட்டுடா
என்றால், வேலைக் காரன் அய்யோ என் மனசாட்சி மாட்டேன் என் கிறதே; நான் என்ன
செய்யட்டும்? என்று கூறினால் ஏண்டா மடப்பயலே, முன்னாடியே உனக்குத்
தெரியாமல் போன தென்னடா? அப்போது உன் மனசாட்சி எங் கேடா போயிருந்தது? என்று
கேட்பானா இல்லையா?
ஆகவே, மனசாட்சியோ சொந்த பகுத்தறிவோ, கழகக்
கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வதுதான் முறையே
ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது
விஷமத்தனமேயாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப் படுகிறேன் என்று
குறிப்பிட்டார்கள்.
திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற வடமண்டல
திராவிடர் மாணவர் மாநாட் டில் (21.2.1948) மாணவர்கள் மத்தியில் ஆற்றிய
உரையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மாணவர் கழகத்தின் சார்பாக அழைக் கப்படும்
யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
மாணவர்கள் நிலை நிரந்தரமான தல்ல. என்றுமே ஒன்றுபோல் இருப்ப தில்லை. நேற்று
குழந்தைகளாயிருந்த வர்கள் தான் இன்று பள்ளியிலும்; கல்லூரி யிலும்
மாணவர்களாய்ப் படித்து வருகி றீர்கள். நாளை நீங்கள் தான் பெரிய வர்களாய்
வாழ்க்கை நடத்தப் போகிறீர்கள். இந்த நிலையற்ற பருவத்தில், எது நல்ல காரியம்
என்று உங்களால் சிந்தித்து சுலபத்தில் அறிந்து கொள்ள முடியாது. மாணவர்கள்
தாமாகவே ஒரு நல்ல காரியத்தை ஆராய்ந்தறிந்து அதைச் செய்து முடிக்கக் கூடிய
சக்தி படைத்த வர்கள் என்று என்னால் நினைக்க முடிய வில்லை. அவர்களைக்
கொண்டு பல நல்ல காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்றுதான் நான்
அபிப்பிராயப்படுகிறேன். ஆகவே, அவர்கள் தம்மைத் தம்முடைய திரண்ட சக்தியை
நல்ல தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படிக் கூறுவ தற்காக மாணவர்கள்
என்மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. மாணவர்கள், தலைவர் இட்ட கட்டளைப்படி
நடக்கக் கூடிய வர்கள். சொல்லிக் கொடுப்பதைப் படிக்கக் கூடியவர்கள். ஆதலால்
தமக்கு எல்லாம் தெரிந்து விட்டதாக அவர்கள் ஒரு போதும் நினைத்துக் கொள்ளக்
கூடாது.
அப்படி நினைப்பவர்களிடமிருந்துதான்
காலித்தனம் கட்டுப்பாட்டுக்கும் அடங்காத தன்னிச்சைத்தனம் விரைவில்
புறப்படுகிறது. ஆகவே, அவர்கள் மிக ஜாக்கிரதையாக விஷயங்களைச் சிந்திக்க
வேண்டும். தம்மால் கூடுமான அளவுக்கு நல்ல தலைவர்களை அவர்கள் தேடித் திரிதல்
வேண்டும். எந்த அளவுக்குத் தாம் அன்பு செலுத்துகிறார்களோ, அந்த அளவுக்
கேனும் தம்மீது அன்பு செலுத்தக் கூடிய; தம்மை நல் வழிப்படுத்துவதில்
ஆசையும், அக்கறையும் உள்ள தக்க பெரியார் களைத் தேடிப் பிடிக்க வேண்டும்
அவர்கள். அந்த வழியில் நாங்கள் முயற்சி செய்து, அவர் களில் ஒரு சிலரையாவது
எங்களையும், எங்கள் கொள்கைகளையும் நம்பச் செய்து, அப்படிப் பெற்ற சிலரை
நாங்கள் எங்க ளுக்குச் சொந்தமான பெருஞ் சொத்தாக மதித்து நாங்கள் மகிழ்ந்து
வருகிறோம்.
மாணவர்கள் நல்ல ஜோல்ஜர்கள்; நல்ல
ஜெனரல்கள் அல்ல. மாணவர்கள் நல்ல சிப்பாய்கள்; நல்ல கமாண்டர்கள் அல்ல. ஆகவே
நல்ல சிப்பாய்களைப் போல் அவர்கள் பல கட்டுத் திட்டங்களுக்குட் பட்டு நடக்க
வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசினார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களின் மிகவும்
வெளிப்படையான ஒளிவு மறைவிற்கு இடம் இல்லாத இந்த உரைகளில் இழைந் தோடும்
இலட்சியத்தையும், நோக்கத்தை யும், அறிவு நாணயத்தையும் அதனை நிறைவேற்ற
கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்பதையும் பார்க்கத் தவறிய தன் விளைவே
தமிழ் இந்து நாளேட்டில் வெளிவந்த - அந்தக் கட்டுரையாகும்.
தந்தை பெரியார் அவர்களால் உருவாக் கப்பட்ட
திராவிடர் கழகம் ஓர் அரசியல் கட்சியல்ல; மாபெரும் சமூகப் புரட்சி
இயக்கமாகும். அதன் இலட்சியமும், கோட் பாடுகளும், கொள்கைகளும் பல்லாயிரம்
ஆண்டுகாலமாக வேரோடிப் போயிருந்த பழைமைகளை, பிறவிப் பேதங்களை மூடத் தனங்களை,
முரட்டுத்தனமான பிடிவாதங் களை தலைகீழாகப் புரட்டிப் போடும் இயக்கமாகும்.
அதன் தோற்றுநர் தத்துவ கர்த்தா அதற்கான ஒரு இயக்கத்தை உருவாக்கும் நிலையில் வழி நடத்துபவர் அவராகத் தானே இருக்க முடியும்?
அப்படி இந்த இயக்கத்தை வழி நடத்திய தால்தானே இங்கு ஒரு மாபெரும் சமுதாய மாற்றம் நடந்திருக்கிறது.
இந்தியாவில் இரண்டாயிரம் வருடத் தில்
மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது. திரா
விடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட்சியைச் செய்தார் என்பது
அமெரிக்கா விலுள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்து ஆகும்
- பேராசிரியர் ஜான்ரைலி (ஆனந்தவிகடன் 16.7.1972)
இத்தகைய புரட்சியை நடத்துவதற்குத்
தலைவரின் ஆணையை உயிரெனப் போற்றி சர்வ பரித் தியாகங்களையும் செய் யக் கூடிய
தொண்டர்கள் தேவை என்ப தைப் புரிந்து கொள்வதற்கு சமூகப் புரட்சி மீதான
அக்கறை தேவை; அப்படி ஆணை யிடும் தலைவர்தான் அந்தக் களத்தின் முதல் பலி!
திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாதவர்களைப் பற்றி பேனா பிடிக்கும்
தோழருக்கு இந்த வரலாறு தெரியுமா? உதாரணமாக முதல் சுயமரியாதை மாநாட்டின்
தலைவராக சவுந்திரபாண்டி யனைப் பெரியார் முன் மொழிந்தபோது இனிமேல் வந்து
இங்கு அவரை ஒருவர் பிரேரிக்கவோ, ஆட்சேபிக்கவோ உண்மை யாக யாருக்கும்
அதிகாரமும், யோக்கி யதையும் கிடையாது. பிரேரணையோ ஆமோதிப்பதோ, ஆதரிப்பதோ
கொஞ்ச மும் அவசியமே இல்லை என்று பெரியார் சொன்னதைக் குற்றப்படுத்துகிறார்
கட்டு ரையாளர்.
மாநாட்டுக்குத் தலைவர் யார் என்று முடிவு
செய்து அழைப்பிதழும் அச்சிட்டு விளம்பரப்படுத்தியபிறகு பிரேரேணை,
ஆமோதிப்பது என்கிற சடங்கு எதற்கு? தந்தை பெரியார் எழுப்பிய வினாவில்
குற்றம் காண என்ன இருக்கிறது? இன்னும் சொல்லப் போனால் மாநாட்டுத் தலைவரை
மிகவும் உயர்த்திதானே அதில் குறிப்பிட் டுள்ளார். ஒடுக்கப்பட்ட
சமுதாயத்தில் பிறந்த ஒருவரை மாநாட்டின் தலைவராக் கிப்
பெருமையல்லவாபடுத்தியிருக்கிறார். மாநாட்டுக்கு மட்டுமல்ல; தாம் கண்ட
சுயமரியாதை இயக்கத்துக்கும் அவரைத் தலைவராக்கி, தன்னைத் துணைத் தலைவ ராக
ஆக்கிக் கொண்ட அந்த விசால அறிவின் ஊற்றை எடை போட அரைகுறை களால் முடியவே
முடியாது. எதையாவது எழுத வேண்டும் என்ற தினவெடுத்து எழுதியிருப்பதுபோல்
தோன்றுகிறது.
சர்வாதிகாரியாக நடந்து கொள்வதை ஒப்புக்
கொள்ளும் பெரியார் இது கழகத்தின் லட்சியத்துக்காக, பொது நன்மைக்காக
என்கிறார். எல்லா சர்வாதிகாரிகளும் சொல் லும் அதே நியாயத்தைத்தான்
பெரியாரும் சொல்கிறார் என்று பெரிய மேதாவி போல துடுக்குத்தனமாக
எழுதியுள்ளாரே!
பொத்தாம் பொதுவாக எல்லா சர்வாதி காரிகளும் சொல்லக் கூடியதுதான் என்று சொல்லுவது நாணயமானதுதானா?
சர்வாதிகாரி என்று அறியப்பட்ட இட் லரும், முசோலினியும் செய்தது மாதிரி, நடந்து கொண்ட மாதிரி பெரியார் நடந்து கொண்டாரா?
அரசியல், அதிகாரப் பசி எடுத்து ஆட்டம்
போட்ட சர்வாதிகாரிகளோடு பாசிஸ்டுகளோடு அரசியல், பதவிகளைத் துச்சமெனத்
தூக்கி எறிந்து, செல்வச் செழிப்புகளை எல்லாம் உதறித் தள்ளி, எளிமையின்
சின்னமாக 95 ஆண்டு முதுமையிலும் மூத்திர வாளியைத் தூக்கிக் கொண்டு, ஊர்
ஊராய் அலைந்து மக்கள் மத்தியிலே புரட்சி எண்ணங்களை விதைத்த தந்தை பெரியாரை
மற்ற பாசிஸ்டு தலைவர்களோடு ஒப்பிடுவது - ஒழுங் கானது தானா - அறிவு
நாணயமானது தானா? வரலாற்று அறிவை உள்ளடக்கியது தானா?
பெரியார் சொன்ன அந்தக் கட்டுப்படும் தன்மை எத்தகையது தெரியுமா?
ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம்
இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா? என்று வினா
தொடுத்து, அந்த ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப் புச் சட்டப் பிரிவைக்
கொளுத்தும் போராட் டத்தை அறிவித்தாரே - அப்படி கொளுத் தினால் மூன்றாண்டு
கடுங்காவல் தண் டனை என்று பெரியார் அறிவித்த போராட் டத்துக்காகவே - அவசர
அவசரமாக சட்டம் கொண்டு வந்த நிலையிலும், அதனைத் துச்சமாகத் தூக்கி எறிந்து,
தலைவர் பெரியாரின் ஆணை ஒன்றே தலையானதாகக் கொண்டு 10 ஆயிரம் பேர்
அப்போராட்டத்தில் குதித்தார்களே, இந்த வரலாறு எல்லாம் வக்கணை எழுத்
தாளருக்குத் தெரியுமா?
இந்த அதிசயம் எப்படி நடந்தது?
தந்தைபெரியார் தம் தொண்டர்களுக்கு விதித்த அந்தக் கட்டுப்பாடு, தலைவர்
ஆணையை நிறைவேற்றும் அந்த நெருப் பான பத்தியத்தால்தான் இதனைச் சாதிக்க
முடிந்தது. வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று நிதானமின்றி
எழுதுவது நேர்மையன்று.
இன்று கழகங்கள் நிகழ்த்தும் தனி நபர் வழிபாட்டின் ஆரம்பப் புள்ளியே பெரியார் தானாம்!
தந்தை பெரியார்பற்றி அரிச்சுவடி கூடத்
தெரியாதவர் என்று இதன் மூலம் தமக்குத் தாமே நிரூபித்துக் கொண்டுள் ளார்.
மேடைகளில் பொருளில்லாது புகழ்ச்சி மொழிகள் தலைதூக்கினால் பெரியார் பேச
மாட்டார்; அவர் கைத்தடிதான் பேசும்! ஒரு மேசையில் ஒரு தட்டுத் தட்டி னால்
அத்தோடு பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அதற்குப் பொருள். ஒரு
தலைவரைப் பற்றி எழுதும்போது போது மான பொறுப்புணர்ச்சியோடும், தகவல்களைத்
துல்லியமாக தெரிந்து கொண்டும் எழுத வேண்டும் என்ற பால பாடம் கூடத்
தெரியாதவர்கள் எல்லாம் பேனா பிடித்தால் இப்படித்தான்.
காலில் விழும் கலாச்சாரத்தைக் கனலாக
எரித்தவர் பெரியார். ஒருபோது தந்தை பெரியார் வந்தபோது ஒருவர் கால்மேல் கால்
போட்டு உட்கார்ந்திருந்தார்; இதனை இன்னொரு தோழர் குற்றமாகக் கூறியபோது
பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? அவன் காலை அவன் கால்மேல் போட்டுக்
கொண்டுள்ளான் உனக்கு என்ன நோக்காடு? என்று கேட்ட மனித உரிமையின் சிகரம்
பெரியார்.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பெண்கள்
விடுதலை மாநாட்டில் திடீ ரென்று ஒருவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.
வீரமணி அவர்களின் கால் களில் வந்து விழுந்து விட்டார். உரை யாற்றிக்
கொண்டிருந்த தலைவர் அவரை அறியாமலேயேஅனிச்சை செயல் போல் (Reflex Action)
அந்த மனிதரின் முதுகில் ஓர் அறை விட்டார். இதன் பொருள் என்ன? திராவிடர்
கழகத்திலும் ஏதோ ஒரு புள்ளி தொடர்கிறது என்ற கூற்றில் சற்றும் உண்மையில்லை
என்பதற்கு அடையாளம் இது அல்லவா!
ஒரு கட்சித் தலைவரின் பலகீனத்தைப்
புரிந்து கொண்டு, கட்சி அலுவலகத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வரு
வதைக்கூட அதிசயமாக்கி, பதாகைகளைக் கட்டி மேளதாளங்கள் ஏற்பாடு செய்
கிறார்கள் என்றால், பதவிப் பிச்சையை எதிர்பார்த்து. செய்கிறார்கள்.
இதனோடு சமுதாயச் சழக்குகளைச் சாடி, எதிர்
நீச்சல் போட்டு, ஏச்சுப் பேச்சு களைச் சகித்துக் கொண்டு, கல்லடி, சொல்
லடிகளைச் சந்தித்து, பொது வாழ்வை ஒரு தொண்டறமாக, புதிய கலை வண்ணமாக
வடித்துத் தந்த ஒரு தலைவரோடு யாரை ஒப்பிடுவது என்ற விவஸ்தை வேண் டாமா?
சொத்துக்குவிப்பு வழக்கில் - ஊழல்
வழக்கில் நீதிமன்றத்தால் நான்காண்டு தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராத
மும் விதிக்கப்பட்ட ஒருவரை - இந்தச் சூழலில் பெரியாரின் வாரிசுதான் ஜெய
லலிதா என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதுவதன் மூலம் பொது மக்கள் என்ன
உணர்வைப் பெற வேண்டும் என்ற எண் ணத்தில் எழுத்தாணியைப் பிடித்துள்ளார்?
இதில் உள்நோக்கமும் விஷமத்தனமும் கைகோர்க்கவில்லையா?
தந்தை பெரியார் என்னும் அப்பழுக் கற்ற
பொதுத் தொண்டின் இமயத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற கீழ்ப்புத்திதான்
இதன் பின்னணியில் இருக்கிறது என்று சொன்னால் குற்றமா குமா?
கொள்கையில்
ஒட்டை விழுந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில் ஒழுக்கத்தில் தவறு
இருக்கக் கூடாது - அதுதான் நம் கழகத்தின் முக்கிய பலம் (விடுதலை
11.10.1964)
என்று சொன்ன தலைவரின் வாரிசு என்று ஊழல் வழக்கில்
தண்டிக்கப்பட்ட ஒருவரைக் குறிப்பிடுவது போக்கிரித்தனம் அல்லவா!
தந்தை பெரியார் அவர்களைவிட புரட்சிகரமான
போராட்டங்களை நடத்திய வர்கள் யார்? பிள்ளையார் உடைப்பு, ராமன் படம்
எரிப்பு, அரசியல் சட்ட எரிப்பு, தேசியக் கொடி எரிப்பு என்று எவரும்
நினைத்துப் பார்க்கவே தொடை நடுங்கும் போராட்டத்தை நடத்திய போதுகூட ஒரு
துளி வன்முறைக்கு இடம் உண்டா?
போராட்டத்தில் ஈடுபடும் தொண்டர் கள்
எப்படி எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று போராட்டம்
நடைபெறுவதற்கு முன்பாகவே தந்தை பெரியார் விடும் அறிக்கை பொது வாழ் விற்குப்
பெருமை சேர்க்கும் அணிகலன் அல்லவா!
1948 - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்
நள்ளிரவில் கைது செய்து தந்தை பெரியார் அவர்களை லாரியில் அழைத்துச் சென்று
அலைக்கழித்தபோதுகூட தந்தை பெரியார் என்ன அறிக்கை வெளியிட்டார்?
வெளியில் இருக்கும் அண்ணாதுரை
சொல்லுவதுபோல நடவுங்கள்: சாந்தமாய் இருங்கள், நிதானம் தவறினால் கோழைகள்
ஆவார்கள். தோல்வியை ஒப்புக் கொண் டவர்கள் ஆவீர்கள். அமைதி, சாந்தம், கட்
டுப்பாடுடன் சிறிதும் பலாத்கார உணர்ச் சியே இல்லாமல் சகிப்புத் தன்மையுடன்
இருங்கள் கண்டிப்பாய் வெற்றி நமதே! என்று சொன்ன தலைவர் எங்கே?
ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவருக்காக பேருந்துகளையும் பொதுச் சொத்துகளை யும் நாசப்படுத்தும் நிலைப்பாடு எங்கே?
1948இல் கருப்புச் சட்டைப் படை தடை
விதிக்கப்பட்டது! தந்தை பெரியாரும் கைது செய்யப்படக் கூடிய சூழ்நிலை, தொண்
டர்கள் தகத்தக எனக் கனன்று எழுந்த நேரம்! அப்பொழுது தந்தை பெரியார் என்ன
எழுதினார் தெரியுமா?
விரைவில் என்னைக் கைது செய்தா லும்
செய்வார்கள். செய்தால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஜெயிலை இடித்துச்
சிறை மீட்கப் போகிறீர்களா? அதெல்லாம் மகா முட்டாள்தனம்; என்னைப் போலீஸ்
ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றால் நீங்கள் அந்தப் பக்கம் ஒருவர்கூட வரக்
கூடாது! பின் என்ன செய்ய வேண்டும்?
அதற்காக வருந்தும் ஒவ்வொருவரும் உடனே
கருப்புச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும். உங்கள் தோழர் களையும் கருப்புச்
சட்டை அணிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும் என்று எழுதினார் என்றால் அதற்குக்
காரணம் அது இலட்சியப் போராட்டம்! ஊழல் செய்தவர்களை விடுவிக்கப்
பேருந்துகளை எரிக்கும் கூட்டத்தோடு யாரை ஒப்பிடுவது - எதை இணைப்பது?
வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் வேறுபாடு தெரியாத தற்குறிகளா இவர்கள்?
தந்தை பெரியாரை எந்த வகையி லாவது கொச்சைப்படுத்த வேண்டும் என்று ஆத்திரப்படும் இவர்கள் யார்?
கொலைக் குற்றத்திற்காக சிறைக்கூடம் சென்று
வந்தவர் எப்படி ஜெகத் குரு - லோகக் குரு? என்று இவர்களை எழுதச்
சொல்லுங்கள் பார்க்கலாம். அப்படியே வேறு யாராவது எழுதினாலும், அதனை இந்து
ஏட்டிலே வெளியிடச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஒரு விஷக் கிருமி கூட்டம் திராவிட
இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி, தமிழ் மண்ணிலே பார்ப்பனீயத்துக்குப் பல்லக்கு
ஜோடித்து விடலாம்; பா.ஜ.க.வை அரிய ணையில் ஏற்றி விடலாம் இந்து வெறியை
அரங்கேற்றலாம் என்ற திட்டத்தோடு வரிந்து கட்டி புறப்பட்டு இருப்பதாகத்
தெரிகிறது. திராவிட இயக்கத்தின் மூல வேரான பெரியாரை நோக்கியே அதை
ஆரம்பிக்கலாம்; அடி வேரையே அசைத்து விட்டால் மற்றவற்றை ஆட்டம் காண
செய்யலாம் என்ற தீய நோக்கம் இருக்கக் கூடும். திராவிடத்தால் வீழ்ந்தோம்
என்று சொல்லக் கூடிய விபிஷணர்களும் கிடைத் திருக்கிறார்கள் என்ற தெம்பு
வேறு கிடைத்திருக்கிறது.
பெரியார் என்றால் கடவுள் மறுப்பாளர் - மத
எதிர்ப்பாளர் என்பதையும் தாண்டி, திராவிட இயக்கப் போர்வையில் பார்ப் பனீய
ஆன்மிக அக்கிரகார திமுகவாக உருபெற்றுள்ள (அதிமுக) பார்ப்பனரைத் தலைவராகக்
கொண்ட ஒருகட்சி திராவிட இயக்கத்தில் ஊடுருவி தன் வேலையைச் செய்து வரும்
சூழ்நிலை - தங்களுக்குச் சாதகமானது என்று நினைக்கிறார்கள். ஈரோட்டுக்
கண்ணாடிப் போட்டுப் பாருங்கள் - இதன் உண்மை விளங்கும்!
எதிர்ப்பு நெருப்பாற்றினை நீந்தி
வெற்றிகளைக் குவித்தது இந்த இயக்கம்; எதிர்க்க எதிர்க்கத்தான் எங்கள் இளை
ஞர்கள் புலிப் போத்தாய்ப் புறப்படுவார்கள்.
இந்துத்துவா தனது சேட்டையைத் தொடங்கும்
ஒரு வேளையில், பெரியார் இந்தியாவுக்கு தேவைப்படும் ஒரு கால கட்டம் இது!
சேட்டையை ஆரம்பியுங்கள்! எங்கள் இளைஞர்களை சாட்டையோடு கிளப்பிவிட அது
பேருதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
நீதிமன்றத்தில் நின்ற நெடுங்குரல்!
அது 1938 டிசம்பர் 5,6 நாட்கள்; இந்தி
எதிர்ப்புப் போராட்டத்தின் தானைத் தலைவராக குற்றவாளிக் கூண்டில்
நிறுத்தப்படுகிறார் தந்தை பெரியார்.
எதிர் வழக்காட வேண்டும் என்று சர் ஏ.டி.
பன்னீர்செல்வமும், குமாரராஜா முத்தையா செட்டியார் போன்றவர்களும்
மன்றாடுகின்றனர் - தலைவர் பெரியாரிடம் - மசியவில்லை, மாறாக இந்தி
எதிர்ப்புக் கிளர்ச்சியின் நோக்கம், தமது கொள்கைக் கோட்பாடுகளை விளக்கும்
அறிக்கை ஒன்றை வழக்கு மன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இதோ அந்தக் அறிக்கையின் சில வைர வரிகள்!
நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கமும்,
தமிழரியக்கமும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், ஜஸ்டிஸ் இயக்கமும்
எதுவும் சட்டப்படி, சட்டத்திற்குட்பட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிற
கொள்கை கொண்டதேயாகும். இதுவரை அந்தக் கொள்கை மாற்றப்படவேயில்லை. என்னுடைய
பேச்சுப் பூராவையும் படித்துப் பார்த்தால் இது விளங்கும். ஆகவே கோர்ட்டார்
அவர்கள், தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தி
அடையும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனை கொடுக்க முடியுமோ, அவைகளையும், பழி
வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்புக்
கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து
விடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு நியாயமான லட்சியத்தை
அடைய வேண்டுமானாலும், அதற்காகக் கஷ்ட நஷ்டமடைதல் என்னும் விலை கொடுக்க
வேண்டுமாதலால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன் என்ற உலக வரலாறு கண்டிராத
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவரை யாரோடு ஒப்பிடுவது? (இரு குற்றங்கள்
ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒவ்வொரு ஆண்டு கடுங்காவல், ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்
அபராதம், அபராதம் செலுத்தத் தவறினால், மீண்டும் அவ்வாறு மாத சிறைத் தண்டனை
இரண்டு தண்டனைகளையும் இரண்டு தனித் தனிக் காலத்தில் அனுபவிக்க வேண்டும்
என்பது தீர்ப்பு()
நியாயமாக இந்துவில் கட்டுரை எழுதியவர்
என்ன எழுதி இருக்க வேண்டும்? தந்தை பெரியார் தன் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டின்போது நீதிமன்றத்தில் நெஞ்சை நிமிர்த்தி நெடுங் குரல்
கொடுத்தாரே - அதையல்லவா அதிமுக பொதுச் செயலாளர் பின்பற்றி இருக்க வேண்டும்
என்று எழுதியிருந்தால், அந்த எழுத்தில் கொஞ்ச நஞ்சம் யோக்கியதையாவது மிஞ்சி
இருக்கும். தலை கீழாகப் புரட்டும் ஒரு புரட்டு வேலையில் அல்லவா புன்மை
பொங்க எழுதியுள்ளார்.
என்னை இந்த நீதிபதிதான் விசாரிக்க வேண்டும்; அரசு தரப்பில் இந்த வக்கில்தான் வாதாட வேண்டும் என்றா பெரியார் சொன்னார்?
பெரியாரின் வாரிசு என்று எழுத கை நடுங்கி இருக்க வேண்டாமா - அறிவு நாணயம் இருந்திருந்தால்?
பெரியாரின் வாரிசு என்று எழுத கை நடுங்கி இருக்க வேண்டாமா - அறிவு நாணயம் இருந்திருந்தால்?
------------------------------------------------------------------------------------------------------------------------
பெரியாருக்கு வாரிசு யார்?
கடவுள் மறுப்பாளர், மத எதிர்ப்பாளர்,
பகுத்தறிவுச் சிந்தனையாளர், நாத்திகத்தின் எல்லை, ஜாதி ஒழிப்பாளர் அதற்காக
அரசியல் சட்டத்தையே எரித்தவர் மூடநம்பிக்கைகளை முற்றும் ஒழிப்பவர்; பழைமைப்
பாசிகளை மிச்ச சொச்சமின்றி அழித்து முடிப்பவர், இவற்றின் ஒட்டு மொத்த
வடிவமான பார்ப்பனீயத்தைப் பொசுக்கி முடிப்பவர், பெண்ணுரிமைப் போராளி,
வகுப்புரிமைக்காக வகுப்புவாதி என்ற பட்டம் பெற்றவர்! பதவிப் பக்கம்
போகாதவர், வந்த பதவிகளையும் உதறித் தள்ளியவர், உலகத் தலைவர் பெரியார்!
இந்தப் பட்டியலில் கிட்டே நெருங்க
முடியாததோடு மட்டுமல்லாமல், இதற்கு நேர் எதிராக மண் சோறு சாப்பிடும் வரை
சென்றவர்கள் எல்லாம் பெரியாரின் வாரிசா? வாரிசு என்பதை ஏற்காதவராயிற்றே
அந்த வைக்கம் வீரர்! எனது நூல்கள்தான் என் வாரிசு என்று கூறியவராயிற்றே!
அந்த இமயத்துக்கு வாரிசு என்று ஒருவரை அடையாளம் காட்டுவது ஆணவம் அல்லவா?
அடி முட்டாள்தனம் அல்லவா?
வாரிசு என்று வரித்துக் கொள்ள எல்லா
வகையான தகுதிகள் இருந்தும் அதனை ஏற்றுக் கொள்ளாது தந்தை பெரியாரின் மாணவன்
என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுபவர் எங்கள் தலைவர் ஆயிற்றே!
இந்த நிலையில் யாருக்கு யார் வாரிசு? நிதானம் தேவை!
-----------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------

.jpg)

